M’Cheyne Bible Reading Plan
ஏசேக்கியா நோயுற்று மரணத்தை நெருங்குதல்
20 அப்போது, எசேக்கியா நோயுற்று மரண நிலையை நெருங்கினான். ஆமோத்சின் மகனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி எசேக்கியாவிடம் சென்று, “நீ உனது வீட்டை ஒழுங்குப்படுத்திவிடு. ஏனெனில், நீ மரிக்கப்போகிறாய். நீ வாழப் போவதில்லை! என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
2 எசேக்கியா தனது முகத்தைச் சுவரின் பக்கம் திருப்பிக்கொண்டான். அவன் கர்த்தரிடம் ஜெபம் செய்து, 3 “கர்த்தாவே! நான் உண்மையாக என் முழு மனதோடு உமக்கு சேவை செய்திருக்கிறேன் என்பதை நினைத்துப்பாரும். நீர் நல்லதென்று சொன்ன செயல்களை மட்டுமே நான் செய்திருக்கிறேன்” என்றான். பிறகு ஏசேக்கியா மிகப்பலமாக அழுதான்.
4 ஏசாயா பாதி முற்றத்தை விட்டு விலகு முன், கர்த்தருடைய செய்தி அவனுக்கு வந்தது. கர்த்தர் அவனிடம், 5 “திரும்பிப் போய் எசேக்கியாவிடம் பேசு. எனது ஜனங்களின் தலைவனான அவனிடம், ‘கர்த்தரும் உனது முற்பிதாவான தாவீதின் தேவனும் சொல்லுவதாவது: நான் உனது ஜெபத்தைக் கேட்டேன். உனது கண்ணீரைப் பார்த்தேன். எனவே நான் உன்னைக் குணப்படுத்துவேன். மூன்றாவது நாள் நீ கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவாய். 6 நான் உனது வாழ்நாளில் 15 ஆண்டுகளை அதிகரித்திருக்கிறேன். நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனின் வல்லமையிலிருந்து காப்பாற்றியிருக்கிறேன். நான் இந்த நகரத்தைப் பாதுகாப்பேன். நான் இவற்றை எனக்காகவே செய்வேன். ஏனென்றால் எனது தொண்டன் தாவீதுக்கு வாக்குறுதியளித்திருக்கிறேன்.’ என்று சொல்” என்று கூறினார்.
7 பிறகு ஏசாயா அரசனிடம், “அத்திப் பழத்தின் அடையைப் பிசைந்து புண்களின் மேல் பற்று போடுங்கள்” என்றான்.
அவ்விதமாகவே அத்திப்பழத்தின் அடையைப் பிசைந்து எசேக்கியாவின் புண்ணின் மேல் பூசினார்கள். பிறகு எசேக்கியா குணமானான்.
எசேக்கியாவிற்கு ஒரு அடையாளம்
8 எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தர் என்னைக் குணப்படுத்துவார் என்பதற்கான அடையாளம் எது? மூன்றாவது நாள் நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போவதற்கான அடையாளமும் எது?” என்று கேட்டான்.
9 ஏசாயாவோ, “நீ என்ன விரும்புகிறாய்? நிழல் பத்தடி முன்னே போகவேண்டுமா, பத்தடி பின்னே போகவேண்டுமா? [a] இதுதான், கர்த்தர் தான் சொன்னபடியே செய்வார் என்று நிரூபிப்பதற்கான அடையாளமாகும்” என்றான்.
10 “நிழல் பத்தடி முன்னே போவது என்பது எளிதானது. அதைவிட நிழல் பத்தடிபின்னே போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.
11 பிறகு ஏசாயா, கர்த்தரிடம் வேண்டுதல் செய்தான். கர்த்தரும் ஆகாசுடைய (சூரிய கடியாரத்தில்) காலடிக்கு முன்போன நிழல் பின்னிட்டுத் திரும்பும்படி செய்தார்.
எசேக்கியாவும் பாபிலோன் ஆண்களும்
12 அப்போது, பாபிலோனின் அரசனான பலாதானின் மகனான பெரோதாக் பலாதான் என்பவன் இருந்தான். அவன் எசேக்கியாவிற்காக சில அன்பளிப்புகளையும் கடிதங்களையும் கொடுத்து அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டே அவன் இவ்வாறு செய்தான். 13 எசேக்கியா, பாபிலோனிலிருந்து வந்த ஜனங்களை வரவேற்றான். தன் வீட்டில் உள்ள விலைமதிப்புள்ள பொருட்களையெல்லாம் அவர்களுக்கு காட்டினான். அவன் பொன், வெள்ளி, வாசனைப் பொருட்கள் விலைமதிப்புள்ள தைலங்கள், ஆயுதங்கள், கருவூலத்திலுள்ள மற்ற பொருட்கள் எல்லாவற்றையும் காட்டினான். தனது அரண்மனையிலும் அரசாங்கத்திலும் அவன் அவர்களுக்குக் காட்டாத பொருள் எதுவுமில்லை.
14 பிறகு ஏசாயா தீர்க்கதரிசி அரசன் எசேக்கியாவிடம் வந்து, “இவர்கள் என்ன சொன்னார்கள்? இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள்?” என்று கேட்டான்.
எசேக்கியா, “இவர்கள் வெகுதூரத்திலுள்ள நாடான பாபிலோனிலிருந்து வருகிறார்கள்” என்று பதிலுரைத்தான்.
15 “இவர்கள் உன் வீட்டில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள்?” என்று ஏசாயா கேட்டான்.
அதற்கு எசேக்கியா, “இவர்கள் என் வீட்டிலுள்ள அனைத்தையும் பார்த்துவிட்டார்கள், நான் அவர்களுக்குக் காட்டாதது என் கருவூலத்தில் எதுவும் இல்லை” என்று சொன்னான்.
16 பிறகு ஏசாயா எசேக்கியாவிடம், “கர்த்தரிடமிருந்து வார்த்தையைக் கேள். 17 உன்னாலும் உன் முற்பிதாக்களாலும் சேமித்து வைக்கப்பட்ட உன் வீட்டிலும் கருவூலத்திலுமுள்ள பொருட்கள் எல்லாம் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லும் காலம் வந்துக்கொண்டிருக்கிறது. எதுவும் மீதியாக வைக்கப்படாது. இதனைக் கர்த்தர் கூறுகிறார். 18 பாபிலோனியர்கள் உனது மகன்களையும் எடுத்துச்செல்வார்கள். பாபிலோனிய அரசனின் அரண்மனையில் உனது மகன்கள் அலிகளாக இருப்பார்கள்” என்றான்.
19 பிறகு எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த இந்த செய்தி நல்லது தான்” என்றான். மேலும் எசேக்கியா, “என் வாழ்நாளிலேயே உண்மையான சமாதானம் இருப்பது நல்லதுதான்” என்றான்.
20 எசேக்கியா செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வல்லமையும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன. அதில் அவன் ஒரு குளத்தை உருவாக்கி, குழாய் மூலம் நகரத்திற்கு தண்ணீர் கொண்டு வந்ததும் சொல்லப்பட்டுள்ளன. 21 எசேக்கியா மரித்ததும் தன் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். எசேக்கியாவின் மகனான மனாசே என்பவன் புதிய அரசன் ஆனான்.
நமது இரட்சிப்பானது சட்டங்களைவிடப் பெரியது
2 ஆகையால், நமக்குச் சொல்லித்தரப்பட்ட விஷயங்களைப் பின்பற்றுவதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். அவ்வாறு இருந்தால் உண்மை வழியில் இருந்து விலகாமல் இருப்போம். 2 தேவ தூதர்கள் மூலமாக தேவனால் சொல்லப்பட்ட அப்போதனைக்கு எதிராக யூதர்கள் செயல்பட்டபோதும், அதற்கு கீழ்ப்படியாமல் போனபோதும், ஒவ்வொரு முறையும் அதற்காக தண்டிக்கப்பட்டனர். 3 நமக்கு அளிக்கப்பட்ட இரட்சிப்பு மிக உயர்ந்தது. எனவே நாம் இந்த இரட்சிப்பை முக்கியமானதாகக் கருதாமல் வாழும் பட்சத்தில் நாமும் தண்டிக்கப்படுவோம். இந்த இரட்சிப்பு கர்த்தராலேயே முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. இந்த இரட்சிப்பு உண்மையானது என்பதை அவரிடத்தில் கேட்டவர்கள் நிரூபித்துள்ளனர். 4 அதிசயங்கள், பெரிய அடையாளங்கள், பலவகையான அற்புதங்கள் மூலம் தேவனும் கூட அதை நிரூபித்துள்ளார். பரிசுத்த ஆவியானவரிடமிருந்து மக்களுக்கு வரங்களைக் கொடுப்பதன் மூலமும் நிரூபித்துள்ளார். அவர் விரும்பிய விதத்திலேயே அந்த வரங்களை அவர் கொடுத்தார்.
மனிதர்களை இரட்சிக்க மனிதர்களைப் போலானார் கிறிஸ்து
5 வரப்போகிற புதிய உலகத்தை ஆள்பவர்களாக தேவன் தேவதூதர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. நாம் பேசிக்கொண்டிருக்கிற உலகம் அதுதான். 6 சில இடத்தில்
“தேவனே! நீர் ஏன் மனிதரைப் பற்றி அக்கறை கொள்கிறீர்?
மனிதகுமாரனைப் பற்றியும்
ஏன் அக்கறை கொள்கிறீர்?
அவர் அவ்வளவு முக்கியமானவரா?
7 கொஞ்ச நேரத்திற்கு தேவ தூதர்களைவிடஅவரைச் சிறியவர் ஆக்கிவிட்டீர்.
அவரை மகிமையாலும் கனத்தாலும் முடிசூட்டினீர்.
8 நீர் எல்லாவற்றையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தீர்” (A)
என்று எழுதப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டுக்குள் தேவன் கொண்டு வந்துவிட்டதால் அவருக்குக் கட்டுப்படாதது எதுவுமில்லை எனலாம். ஆனால் அவர் அனைத்தையும் ஆள்வதை நாம் இன்னும் பார்க்கவில்லை. 9 சிறிது காலத்திற்கு இயேசு தேவதூதர்களுக்கும் தாழ்ந்தவராக்கப்பட்டிருந்தார். ஆனால் இப்போது துன்பப்பட்டு மரித்ததால் மகிமையாலும், கனத்தாலும் முடிசூடிக்கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். தேவனுடைய கிருபையினால் ஒவ்வொரு மனிதனுக்காகவும் இயேசு மரித்தார்.
10 தேவனே அனைத்தையும் படைத்தவர். அனைத்தும் அவரது மகிமைக்காகவே உள்ளன. தன் மகிமையைப் பகிர்ந்துகொள்ள ஏராளமான மக்களை அவர் விரும்பினார். எனவே, தமக்குத் தேவையானவற்றை அவர் செய்தார். மக்களை இரட்சிப்புக்கு வழி நடத்திச் செல்ல பூரணமானவராக தேவன் இயேசுவை ஏற்படுத்தினார். இயேசு தன் துன்பத்தால் ஒரு பூரண இரட்சகரானார்.
11 மக்களைப் பரிசுத்தமாக்குகிறவரும் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். எனவே அவர்களைத் தம் சகோதரர்களாகவும் சகோதரிகளாகவும் அழைக்க இயேசு வெட்கம் கொள்ளவில்லை.
12 “தேவனே உம்மைப்பற்றி நான் என் சகோதர சகோதரிகளிடம் கூறுவேன்.
உம்முடைய மக்கள் கூட்டத்தின் நடுவில் உம்மைப் புகழ்ந்து பாடுவேன்” (B)
என்று அவர் கூறுகிறார்.
என்றும் அவர் சொல்கிறார்.
“தேவன் எனக்களித்த பிள்ளைகளோடு நான் இங்கே இருக்கிறேன்” என்று அவர் சொல்கிறார். (D)
14 மாம்சீகமான உடலைக்கொண்ட மக்களே அந்தப் பிள்ளைகள். ஆகவே இயேசுவும், அவர்களைப் போன்றே மாறி அவர்களைப் போன்றே அனுபவத்தையும் பெற்றார். மரண அதிகாரத்தைத் தன்னோடு வைத்திருக்கிற பிசாசை தனது மரணத்தின் மூலம் அழிக்கும்பொருட்டு இயேசு இப்படிச் செய்தார். 15 அவர்களை விடுதலை செய்யும் பொருட்டே இயேசு தம் பிள்ளைகளைப் போலாகி மரித்தார். மரண பயத்தின் காரணமாக தம் வாழ்க்கை முழுக்க அவர்கள் அடிமையாக இருந்தார்கள். 16 இயேசு தேவதூதர்களுக்கு உதவி செய்ய வரவில்லை என்பது வெளிப்படை. அவர் ஆபிரகாமின் வழிவந்த மக்களுக்கே உதவ வந்தார். 17 இதனால் இயேசு, எல்லா வகையிலும் அவர்களுக்கு சகோதரரைப் போல் இருப்பது அவருக்கு முக்கியமாக இருந்தது. இவ்வழியில் தேவனுக்கான சேவையில் அவர்களுடைய இரக்கமும் நம்பிக்கையும் உள்ள பெரிய போதகராக இருக்கவும், மக்களின் பாவங்களுக்கு மன்னிப்பை வழங்கவும் அவரால் முடிந்தது. 18 இப்போது சோதனைகளை எதிர்கொள்கிற மக்களுக்கு இயேசுவால் உதவி செய்ய முடியும். இயேசுவும் துன்பங்களுக்கு உள்ளாகி சோதனைகளுக்கு ஆட்பட்டவர் என்பதால், அவரால் உதவி செய்ய முடியும்.
இஸ்ரவேல் தன்னைத்தானே அழித்திருக்கிறான்
13 “எப்பிராயீம் இஸ்ரவேலில் தன்னைத் தானே முக்கிமானவனாகச் செய்துக் கொண்டான். எப்பிராயீம் பேசினான். ஜனங்கள் பயந்து நடுங்கினார்கள். ஆனால் எப்பிராயீம் பாவம் செய்தான். பாகாலை தொழத் தொடங்கினான். 2 இப்பொழுது இஸ்ரவேலர்கள் மேலும் மேலும் பாவம் செய்கிறார்கள். அவர்கள் தாங்களாகவே விக்கிரகங்களைச் செய்துக்கொள்கிறார்கள். வேலைக்காரர்கள் வெள்ளியால் அந்த அழகான சிலைகளைச் செய்கிறார்கள். பிறகு அவர்கள் தம் சிலைகளோடு அடிக்கடி பேசுகிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளுக்குப் பலி கொடுக்கிறார்கள். அவர்கள் அந்தத் தங்கக் கன்றுகுட்டிச் சிலைகளை முத்தமிடுகிறார்கள். 3 அதனால்தான் அந்த ஜனங்கள் விரைவில் மறைந்துவிடுகிறார்கள். அவர்கள் காலையில் காணும் மூடுபனியைப் போன்றும், விரைவில் மறையும் பனியைப் போன்றும் மறைவார்கள். இஸ்ரவேலர் காற்று வீசும்போது களத்திலிருந்து பறக்கிற பதரைப் போன்றும், ஒரு புகைக் கூண்டிலிருந்து எழும்பி மறைந்து போகும் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
4 “நீங்கள் எகிப்து தேசத்திலிருந்த நாள் முதலாக நான் உன் தேவனாகிய கர்த்தராக இருக்கிறேன். நீங்கள் என்னைத் தவிர வேறு தெய்வங்களை அறியவில்லை. நானே உங்களை இரட்சித்தவர். 5 நான் உங்களை வனாந்தரத்திலேயே அறிவேன். நான் உங்களை வறண்ட நிலத்திலும் அறிவேன். 6 நான் இஸ்ரவேலர்களுக்கு உணவு கொடுத்தேன். அவர்கள் அந்த உணவை உண்டார்கள். அவர்கள் தம் வயிறு நிறைந்து திருப்தி அடைந்தார்கள். அவர்கள் வீண் பெருமை அடைந்தார்கள். அவர்கள் என்னை மறந்தார்கள்!
7 “அதனால்தான் நான் அவர்களுக்கு ஒரு சிங்கத்தைப் போலிருப்பேன். நான் சாலையில் காத்திருக்கிற சிறுத்தையைப் போன்று இருப்பேன். 8 நான் தன் குட்டிகளை இழந்த கரடியைப் போன்று அவர்களைத் தாக்குவேன். நான் அவர்களின் நெஞ்சைப் பிளப்பேன். நான் ஒரு சிங்கம் அல்லதுவேறொரு காட்டுமிருகம் தன் வேட்டையின் உணவைக் கிழித்துத் தின்பதுபோல் இருப்பேன்.”
தேவ கோபத்திலிருந்து இஸ்ரவேலை எவராலும் காப்பாற்ற முடியாது
9 “இஸ்ரவேலே, நான் உனக்கு உதவினேன். ஆனால் நீ எனக்கு எதிராகத் திரும்பினாய். எனவே, இப்போது நான் உண்னை அழிப்பேன். 10 உங்களது அரசன் எங்கே? அவன் உங்களது நகரங்கள் எதிலும் உங்களைக் காப்பாற்றமுடியாது. உங்களது நீதிபதிகள் எங்கே? நீ அவர்களுக்காக, ‘ஒரு அரசனையும் தலைவர்களையும் தாரும்’ என்று கேட்டாய். 11 நான் என் கோபத்திலே உங்களுக்கு ஒரு ராஜவைக் கொடுத்தேன். மிகவும் கோபமடைந்தபோது அவனை எடுத்துக்கொண்டேன்.
12 “எப்பிராயீம் தனது குற்றங்களை மறைக்க முயன்றான்.
அவன் தனது பாவங்கள் இரகசியமானவை என்று எண்ணினான்.
ஆனால் அவற்றுக்காகத் தண்டிக்கப்படுவான்.
13 அவனது தண்டனை ஒரு பெண் பிரசவ காலத்தில் உணரும் வலியைப் போன்றது.
அவன் அறிவுள்ள மகனாக இருக்கமாட்டான்.
அவனது பிறப்புக்கான காலம் வரும்.
அவன் பிழைக்கமாட்டான்.
14 “நான் அவர்களைக் கல்லறையிலிருந்து காப்பாற்றுவேன்.
நான் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்றுவேன்.
மரணமே, உனது நோய்கள் எங்கே?
கல்லறையே, உனது வல்லமை எங்கே?
நான் பழிவாங்கப் பார்க்கவில்லை.
15 இஸ்ரவேல் தனது சகோதரர்களுக்கிடையில் வளர்கிறான்.
ஆனால் வல்லமை மிக்க கிழக்குக் காற்று வரும்.
கர்த்தருடைய காற்று வனாந்தரத்திலிருந்து வீசும்.
பிறகு இஸ்ரவேலின் கிணறுகள் வறண்டுபோகும்.
அதன் நீரூற்றுகள் வற்றிப்போகும்.
இஸ்ரவேலின் விலைமதிப்புள்ள எல்லாவற்றையும்
காற்று அடித்துக்கொண்டு போகும்.
16 சமாரியா தண்டிக்கப்பட வேண்டும்.
ஏனென்றால், அவள் தன் தேவனுக்கு எதிராகத் திரும்பினாள்.
இஸ்ரவேலர்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். அவர்களது பிள்ளைகள் துண்டுகளாகக் கிழிக்கப்படுவார்கள்.
அவர்களது கர்ப்பமுற்ற பெண்கள் கீறி கிழிக்கப்படுவார்கள்.”
137 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து
சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
2 அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள்
கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
3 பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள்.
அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
4 ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய
பாடல்களைப் பாட முடியவில்லை!
5 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
6 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
நான் என்றும் பாடேன்.
நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.
7 ஆண்டவரே ஏதோமியர்களை நினையும்.
எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்”
என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
8 பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்!
நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
9 உனது குழந்தைகளை இழுத்துச்சென்று,
அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
தாவீதின் ஒரு பாடல்
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
2008 by World Bible Translation Center