M’Cheyne Bible Reading Plan
ஆகாஸ் யூதாவின் அரசன் ஆனது
16 யோதாமின் மகனான ஆகாஸ் என்பவன் யூதாவின் அரசன் ஆனான். அப்போது இஸ்ரவேலில் ரெமலியாவின் மகனான பெக்கா என்பவனின் 17வது ஆட்சியாண்டு நடைபெற்றது. 2 ஆகாஸ் அரசனாகும்போது அவனது வயது 20, அவன் எருசலேமிலிருந்து 16 ஆண்டுகள் அரசாண்டான். நல்லதென்று கர்த்தர் சொன்னவற்றை ஆகாஸ் செய்யவில்லை. தேவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்த தனது முற்பிதாவான தாவீதைப்போன்று இவன் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. 3 இவன் இஸ்ரவேலின் மற்ற அரசர்களைப்போன்று ஆண்டு வந்தான். அவன் தன் மகனையும் தகனபலியாகக் கொடுத்தான். இஸ்ரவேலர்கள் வந்தபொழுது, கர்த்தர் நாட்டை விட்டுத் துரத்திய ஜனங்கள் செய்துவந்ததுபோன்ற பயங்கரமான பாவங்களைச் செய்துவந்தான். 4 ஆகாஸ் மேடைகளில் பலியிட்டும் நறுமணப் பொருட்களை எரித்தும் வந்தான். மேடை, மலைஉச்சி, ஒவ்வொரு மரத்தடி என அனைத்து இடங்களிலும் தொழுதுகொண்டு வந்தான்.
5 பிறகு, ஆராமின் அரசனான ரேத்சீன் என்பவனும், இஸ்ரவேலின் அரசனாகிய ரெமலியாவின் மகனான பெக்கா என்பவனும், எருசலேமிற்கு எதிராகப் போரிட வந்தனர். அவர்கள் ஆகாசை முற்றுகையிட்டனர். ஆனால், தோற்கடிக்க முடியவில்லை. 6 அப்போது ஆராம் அரசனான ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பப் பெற்றான். ஏலாத்திலிருந்து யூதர்கள் அனைவரையும் திரும்ப எடுத்துக் கொண்டான். ஆராமியர்கள் ஏலாத்தில் குடியேறினார்கள். இன்றுவரை அங்கே அவர்கள் இருக்கின்றனர்.
7 ஆகாஸ் அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசரிடம் தூதுவனை அனுப்பினான். “நான் உங்கள் சேவகன். நான் உங்களுக்கு மகனைப் போன்றவன். என்னை ஆராம் அரசனிடமிருந்தும் இஸ்ரவேல் அரசனிடமிருந்தும் வந்து காப்பாற்றுங்கள். அவர்கள் என்னோடு போர் செய்ய வருகிறார்கள்!” என்று தூதுவிட்டான். 8 ஆகாஸ் கர்த்தருடைய ஆலயத்திலும் அரண்மனை கருவூலத்திலும் உள்ள பொன்னையும், வெள்ளியையும் எடுத்து அசீரியாவின் அரசனுக்குக் காணிக்கையாக அனுப்பினான். 9 அசீரியாவின் அரசன், ஆகாஸ் சொன்னதைக் கேட்டு தமஸ்குவுக்குப் போய் அதற்கு எதிராகப் போரிட்டான். அவன் அந்நகரத்தைக் கைப்பற்றி அங்குள்ளவர்களைச் சிறைபிடித்து கீர்க்கு நாடு கடத்தினான் (வெளியேற்றினான்) அவன் ரேத்சீனையும் கொன்றான்.
10 அசீரியாவின் அரசனான திகிலாத்பிலேசரை சந்திக்க அரசன் ஆகாஸ் தமஸ்குவுக்குப்போனான். ஆகாஸ் அங்கே பலி பீடத்தைப் பார்த்தான். அவன் அதனுடைய மாதிரியையும் வடிவத்தையும் ஆசாரியனாகிய உரியாவுக்கு அதேபோல ஒரு பலிபீடம் செய்வதற்காக அனுப்பினான். 11 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பி வருவதற்குள் ஆசாரியன் உரியா அரசனால் அனுப்பப்பட்ட மாதிரியின்படியே ஒரு பலிபீடத்தைக் கட்டிமுடித்தான்.
12 ஆகாஸ் தமஸ்குவிலிருந்து திரும்பியதும், பலிபீடத்தைப் பார்த்தான். அதில் பலிகளைச் செலுத்தினான். 13 அதில் அவன் தகன பலியையும் தானிய காணிக்கைகளையும் செலுத்தினான். அதோடு, பானங்களின் காணிக்கையையும் சமாதானப் பலியின் இரத்தத்தையும் இந்தப் பலிபீடத்தின்மேல் தெளித்தான்.
14 கர்த்தருடைய முன்னிலையில் ஆலயத்தின் முன்னாலிருந்த வெண்கலப் பலி பீடத்தை ஆகாஸ் பெயர்த்தெடுத்தான். அந்த வெண்கலப் பலிபீடம் ஆகாஸின் பலிபீடத்திற்கும் கர்த்தருடைய ஆலயத்திற்கும் இடையில் இருந்தது. அந்த வெண்கலப் பலிபீடத்தைத் தனது பலிபீடத்திற்கு வடக்குப் பக்கத்தில் வைத்தான். 15 ஆசாரியனாகிய உரியாவிற்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “நீ இந்த பெரிய பலிபீடத்தின் மேல் காலைச் சர்வாங்க தகனபலியையும் மாலை தானியக் காணிக்கையையும் தேசத்தின் ஜனங்களின் சர்வாங்கத் தகன பலியையும் அவர்களது தானியக் காணிக்கைகளையும் பானங்களின் காணிக்கையையும் செலுத்தவேண்டும். அதன்மேல் சர்வாங்க தகனபலி மற்றும் உயிர் பலிகளின் இரத்தத்தையும் தெளிப்பாய். நான் என் சொந்தக் காரியத்துக்கு தேவனிடம் கேட்க, (விசாரிக்க), (வழிகாட்ட) மட்டும் வெண்கலப் பலிபீடத்தைப் பயன்படுத்துவேன்” என்று கூறினான். 16 அதன்படியே ஆசாரியன் உரியா அனைத்தையும் ஆகாஸ் அரசன் அவனுக்குக் கட்டளையிட்டபடி செய்தான்.
17 மேலும் ஆகாஸ் அரசன் வண்டிகளில் உள்ள சவுக்குகளை (பீடங்களை) அறுத்தான். அவற்றின் மேலுள்ள கொப்பறைகளை எடுத்தான். வெண்கலக் காளைகளின் மேலிருந்த பெரிய (கடல்) தொட்டியை இறக்கி கற்களின் தள வரிசையில் வைத்தான். 18 ஆலயத்தின் உள்ளே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாள் (மண்டபத்தை) ஆகாஸ் நீக்கினான். மேலும் அரசன் பிரவேசிக்கும் மண்டபத்தையும் கர்த்தருடைய ஆலயத்திலிருந்து நீக்கினான். இவை அனைத்தையும் ஆலயத்திலிருந்து நீக்கி அரசன் அவற்றை அசீரியரின் அரசனுக்குக் கொடுத்தான்.
19 ஆகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்கள் அனைத்தும் யூத அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 20 ஆகாஸ் மரித்ததும் தாவீது நகரத்திலே தனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப் பிறகு அவனது மகனான எசேக்கியா புதிய அரசன் ஆனான்.
உண்மையான போதனையைப் பின்பற்றுதல்
2 பின்பற்ற வேண்டிய உண்மையான போதனையை நீ மக்களுக்குக் கூற வேண்டும். 2 முதியவர்கள் சுயக் கட்டுப்பாடும், கௌரவமும் ஞானமும் உடையவர்களாக இருக்கப் போதனை செய். அவர்கள் விசுவாசத்திலும் அன்பிலும், பொறுமையிலும் உறுதி உடையவர்களாக இருக்க வேண்டும்.
3 மற்றும் வாழும் முறையில் பரிசுத்தமாய் இருக்கும் பொருட்டு முதிய பெண்களிடம் போதனை செய். மற்றவர்களை எதிர்த்து எதையும் பேசவேண்டாம் என்றும், குடிப்பழக்கத்துக்கு அடிமை ஆகவேண்டாம் என்றும் சொல். அப்பெண்கள் நல்லதைப் போதிக்கவேண்டும். 4 அவ்வழியில், அவர்கள் இளம் பெண்களுக்குக் கணவன்மீதும் பிள்ளைகள் மீதும் அன்புகொள்ளுமாறு அறிவுறுத்த முடியும். 5 அவர்களுக்கு ஞானத்தோடும், பரிசுத்தத்தோடும் இருக்கும்படியும், வீட்டைப் பராமரித்தல், கருணை, கணவனுக்குக் கீழ்ப்படிதல் போன்றவற்றையும் அவர்கள் கற்பிக்க முடியும். பிறகு தேவன் நமக்குத் தந்த போதனைகளைப் பற்றி எவரும் விமர்சிக்க முடியாது.
6 அந்தப்படியே இளைஞர்களையும் ஞானமாயிருக்கும்படிக் கூறு. 7 இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும். 8 பேசும்போது உண்மையையே பேசு. அதனால் எவரும் உன்னை விமர்சிக்க முடியாது. நமக்கு எதிராக எதையும் தவறாகச் சொல்ல முடியாத நிலையில் நம்மை எதிர்த்துப் பேச வரும் ஒவ்வொருவரும் வெட்கப்படுவர்.
9 அடிமைகளுக்கும் அறிவுரை கூறு. அவர்கள் எப்பொழுதும் தங்கள் எஜமானர்களுக்குக் கீழ்ப்படியவேண்டும். அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு விருப்பமானதையே செய்ய வேண்டும். அவர்கள் எதிர்வாதம் செய்யக்கூடாது. 10 அவர்கள் எஜமானர்களுக்கு உரியதைத் திருடக்கூடாது. அவர்கள் தம் நடத்தையின் மூலம் முழுக்க முழுக்க தாங்கள் நம்பிக்கைக்குத் தகுதியானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். நமது இரட்சகராகிய தேவனுடைய போதனைகள் நல்லவை எனப் புலப்படும்படி அவர்கள் இப்படி நடந்துகொள்ள வேண்டும்.
11 நாம் வாழவேண்டிய வழி இது தான். ஏனென்றால் தேவனுடைய கிருபை வந்திருக்கிறது. அது அனைவரையும் இரட்சிக்கும். நமக்கும் அது தரப்பட்டிருக்கிறது. 12 தேவனுக்கு எதிராக வாழாமல் இருக்கவும், உலகம் விரும்புகிற தீய காரியங்களைச் செய்யாமல் இருக்கவும் அக்கருணை ஞானத்தையும், நீதியையும் போதிக்கிறது. தேவ பக்தியும் உடையவர்களாக இவ்வுலகில் வாழ அது கற்றுத்தருகிறது. 13 நமது மகா தேவனும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்குக் காத்திருக்கும்போது அவ்விதமாய் நாம் வாழவேண்டும். அவரே நமது பெரும் நம்பிக்கை. அவர் மகிமையுடன் வருவார். 14 நமக்காக அவர் தன்னையே தந்தார். அக்கிரமங்களிலிருந்தும் நம்மை விடுவிக்க அவர் இறந்தார். நற்செயல்களை எப்பொழுதும் செய்ய ஆர்வமாக இருக்கும் அவருக்குச் சொந்தமான மக்களாகிய நம்மைப் பரிசுத்த மனிதர்களாக்க அவர் இறந்தார்.
15 மக்களிடம் இவற்றைக் கூறு. உனக்கு முழு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தால் மக்களைப் பலப்படுத்து. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கூறு. நீ முக்கியமற்றவன் என மற்றவர்கள் உன்னை நடத்தும் அளவுக்கு எவரையும் அனுமதிக்காதே.
நாடு கடத்தலின் துக்கம்
9 இஸ்ரவேலே, பிற நாடுகள் செய்வது போன்று விழா கொண்டாடாதே. மகிழ்ச்சியாய் இராதே. நீ ஒரு வேசியைப்போன்று நடந்து உனது தேவனை விட்டு விலகினாய், தானியம் அடிக்கிற எல்லாக் களங்களிலும் நீ பாலின உறவு பாவத்தைச் செய்தாய். 2 ஆனால் தானியம் அடிக்கிற களத்தில் உள்ள தானியம் இஸ்ரவேலுக்குப் போதுமான உணவாக இருக்காது. இஸ்ரவேலுக்குப் போதுமான திராட்சைரசமும் இருக்காது.
3 இஸ்ரவேலர்கள் கர்த்தருடைய நாட்டில் தங்கமாட்டார்கள். எப்ராயீம் எகிப்திற்குத் திரும்புவான். அசீரியாவில் அவர்கள் உண்ணக்கூடாத உணவை உண்பார்கள். 4 இஸ்ரவேலர்கள் கர்த்தருக்குத் திராட்சைரசத்தைப் பானங்களின் காணிக்கையாக அளிப்பதில்லை. அவருக்கு அவர்கள் பலிகள் கொடுப்பதுமில்லை. அவர்கள் கொடுக்கிற பலிகள் மரித்தவர் வீட்டில் கொடுக்கிற உணவைப்போலிருக்கும். அதைச் சாப்பிடுகிறவர்கள் அசுத்தமடைவார்கள். அவர்கள் அப்பம் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போகாது. அவர்களே அதை உண்ண வேண்டியதிருக்கும். 5 அவர்கள் (இஸ்ரவேலர்கள்) கர்த்தருடைய ஓய்வு நாட்கள் அல்லது பண்டிகைகளைக் கொண்டாட முடியாதவர்களாக இருப்பார்கள்.
6 இஸ்ரவேலர்கள் போய்விட்டார்கள். ஏனெனில் அவர்களுடைய விரோதி அவர்களுக்குண்டான எல்லாவற்றையும் தானாகவே எடுத்துச் சென்றுவிட்டான். ஆனால் எகிப்து அவர்களுடைய ஜனங்களை எடுத்துக்கொள்ளும். மெம்பிஸில் அவர்களைப் புதைப்பார்கள். அவர்களின் வெள்ளிப் பொக்கிஷங்கள் மேல் களைகள் வளரும். அவர்கள் வாழ்ந்த இடங்களில் முட்செடிகள் முளைக்கும்.
இஸ்ரவேல் உண்மையான தீர்க்கதரிசிகளை ஏற்க மறுத்தது
7 தீர்க்கதரிசி, “இஸ்ரவேலே, இவற்றைக் கற்றுக்கொள். தண்டனைக் காலம் வந்துவிட்டது. நீ செய்த பாவங்களுக்கு விலை செலுத்தவேண்டிய காலம் வந்திருக்கிறது” என்கிறார். ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ, “தீர்க்கதரிசி ஒரு முட்டாள். தேவனுடைய ஆவியோடு இருக்கிற இம்மனிதன் பைத்தியக்காரன்” என்று கூறுகிறார்கள். தீர்க்கதரிசி, “நீ உனது கொடிய பாவங்களுக்காகத் தண்டிக்கப்படுவாய். நீ உனது வெறுப்பிற்காகத் தண்டிக்கப்படுவாய்” என்று சொல்கிறார். 8 தேவனும் தீர்க்கதரிசியும் எப்பிராயீமை காவல் காக்கிற காவலர்களைப் போன்றவர்கள். ஆனால் வழியெங்கும் பல கண்ணிகள் உள்ளன. ஜனங்கள் தீர்க்கதரிசியை தேவனுடைய வீட்டில் கூட வெறுக்கின்றனர்.
9 இஸ்ரவேலர்கள் கிபியாவின் நாட்களைப் போன்று அழிவின் ஆழத்திற்குச் சென்றுவிட்டார்கள். கர்த்தர் இஸ்ரவேலர்களின் பாவங்களை நினைவுகொள்வார். அவர் அவர்களது பாவங்களைத் தண்டிப்பார்.
இஸ்ரவேல் அதன் விக்கிரக ஆராதனையால் சேதமடைந்திருக்கிறது
10 நான் இஸ்ரவேலரைக் கண்டுக்கொண்டபோது, அவர்கள் வனாந்திரத்தில் இருக்கும் புதிய திராட்சைப்பழத்தைப்போன்று இருந்தார்கள். அத்திமரத்தில் பருவகாலத்தில் முதல் முதலாகப் பழுத்தப் பழங்களைப் போன்று இருந்தார்கள். ஆனால் அவர்கள் அதன்பிறகு பாகால்பேயேருக்கு வந்தார்கள். அவர்கள் மாறினார்கள். நான் அவர்களை அழுகிப்போன பழங்களை வெட்டுவதைப் போன்று, (அழிப்பதுபோன்று) வெட்ட வேண்டியதாயிருந்தது. அவர்கள் அவர்களால் நேசிக்கப்படுகிற பயங்கரமான பொருட்களை (அந்நிய தெய்வங்கள்) போன்று ஆனார்கள்.
இஸ்ரவேலர்களுக்குக் குழந்தைகள் இருக்காது
11 ஒரு பறவையைப் போன்று, எப்பிராயீமின் மகிமை பறந்துபோகும். இனிமேல் கர்ப்பமுறுதல் இல்லாமல் போகும். பிறப்புகளும் பிள்ளைகளும் இல்லாமல் போகும். 12 ஆனால் இஸ்ரவேலர்கள் தம் பிள்ளைகளை வளர்த்தாலும் அது அவர்களுக்கு உதவாது. நான் அவர்களிடமிருந்து அவர்களது பிள்ளைகளை எடுத்துக்கொள்வேன். நான் அவர்களை விட்டுவிடுவேன். அவர்களுக்குத் தொல்லைகளைத் தவிர வேறு எதுவும் இருக்காது.
13 எப்பிராயீம் தன் குழந்தைகைளைக் கண்ணிகளுக்கு வழிநடத்திச் செல்வதை நான் பார்க்க முடிகிறது. எப்பிராயீம் தன் பிள்ளைகளை கொலைக்காரர்களிடம் அழைத்து வருகிறான். 14 கர்த்தாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும். நீர் அவர்களுக்குக் குழந்தைகளை இழக்கிற கர்ப்பத்தையும் பால்கொடுக்க முடியாத முலைகளையும் கொடும்.
15 அவர்கள் பொல்லாப்பு கில்காலில் இருக்கிறது.
நான் அங்கே அவர்களை வெறுக்கத் தொடங்கினேன்.
நான் அவர்களை என் வீட்டை விட்டுப் போகும்படி வற்புறுத்துவேன்.
ஏனென்றால் அவர்கள் பொல்லாப்புகளைச் செய்துள்ளார்கள்.
நான் இனிமேல் அவர்களை நேசிக்கமாட்டேன்.
அவர்கள் தலைவர்கள் கலகக்காரர்கள்.
அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருக்கின்றார்கள்.
16 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான்.
அவர்கள் வேர் செத்துக்கொண்டிருக்கிறது.
அவர்களுக்கு இனிமேல் குழந்தைகள் இருக்காது.
அவர்கள் குழந்தைகள் பெறலாம்.
ஆனால் நான் அவர்களது உடலிலிருந்து வருகிற குழந்தைகளைக் கொல்வேன்.
17 அந்த ஜனங்கள் என்னுடைய தேவன் சொல்வதைக் கேட்கமாட்டார்கள்.
எனவே அவர் அவர்கள் சொல்வதைக் கேட்க மறுப்பார்.
அவர்கள் வீடு இல்லாமல் தேசங்கள் முழுவதும் அலைந்து திரிவார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
“இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்
127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.
2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.
3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
4 ஒரு இளைஞனின் மகன்கள்
ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
5 தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது மகன்கள் அவனைக் காப்பார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
128 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.
2 நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும்.
3 வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்.
மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
4 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
5 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்.
வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.
6 நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன்.
இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
2008 by World Bible Translation Center