Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 13

யோவாகாசின் ஆட்சி தொடக்கம்

13 சமாரியாவில் யெகூவின் மகனான யோவாகாஸ் இஸ்ரவேலின் புதிய அரசன் ஆனான். இது அகசியாவின் மகனான யோவாசின் 23வது ஆட்சியாண்டின்போது ஏற்பட்டது. யோவாகாஸ் 17 ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

கர்த்தருக்கு வேண்டாதவற்றையே யோவாகாஸ் செய்து வந்தான். இஸ்ரவேலரின் பாவத்துக்குக் காரணமாயிருந்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவச்செயல்களை இவனும் பின்பற்றினான். அதனைச் செய்வதை நிறுத்தவில்லை. அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருக்கு கோபம் வந்தது. எனவே அவர்களை கர்த்தர் ஆராம் அரசன் ஆசகேலின் கையிலும், ஆசகேலின் மகனான பெனாதாத் கையிலும் ஒப்படைத்தார்.

இஸ்ரவேல் ஜனங்கள் மீது கர்த்தர் இரக்கம் காட்டுகிறார்

பிறகு தமக்கு உதவி செய்யும்படி யோவாகாஸ் கர்த்தரிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். கர்த்தரும் செவிசாய்த்தார். கர்த்தர் இஸ்ரவேலரின் துன்பங்களைப் பார்த்தார். ஆராம் அரசன் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்துவதைக் கவனித்தார்.

எனவே கர்த்தர் இஸ்ரவேலரைக் காப்பாற்ற ஒருவனை அனுப்பினார். இஸ்ரவேலர்கள் ஆராமியர்களிடமிருந்து விடுதலை பெற்றனர். முன்பு போல, அவர்கள் தமது கூடாரங்களுக்கு (வீடுகள்) சென்றனர்.

எனினும் அவர்கள் தாம் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. இஸ்ரவேலர்கள் பாவம் செய்வதற்குக் காரணமான யெரொபெயாமின் குடும்பத்தார் பாவங்களை அவர்கள் தொடர்ந்து செய்தனர். அவர்கள் சமாரியாவில் அஷெரா தூண்களையும் வைத்திருந்தனர்.

ஆராமின் அரசன் யோவாகாசின் படையைத் தோற்கடித்தான். படையில் பல வீரர்களைக் கொன்றான். 50 குதிரை வீரர்கள், 10 இரதங்கள், 10,000 காலாட் வீரர்களை மட்டுமே விட்டுவிட்டான். யோவாகாசின் வீரர்கள் காலடியில் மிதிபட்ட தூசியைப்போன்று ஆனார்கள்.

யோவாகாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களைப் பற்றியும் அவனது வலிமைபற்றியும் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. யோவாகாஸ் மரித்ததும் அவனது முற்பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது மகன் யோவாஸ் அரசன் ஆனான்.

யோவாஸ் இஸ்ரவேலை ஆண்டது

10 யோவாகாசின் மகன் யோவாஸ் சமாரியாவில் இஸ்ரவேலரின் அரசன் ஆனான். இது யூதாவின் அரசனாகிய யோவாசின் 37வது ஆட்சியாண்டில் நிகழ்ந்தது. யோவாஸ் 16 ஆண்டுகள் இஸ்ரவேலை ஆண்டான். 11 யோவாசும் கர்த்தருக்குப் பிடிக்காதவற்றைச் செய்தான். இஸ்ரவேலர்களுக்குப் பாவத்தைத் தேடித்தந்த, பாவத்தை உண்டு பண்ணிய நேபாத்தின் மகனான யெரொபெயாமின் பாவச்செயல்களைச் செய்வதை இவனும் நிறுத்தவில்லை. அவன் அவற்றைத் தொடர்ந்து செய்தான். 12 யோவாஸ் செய்த மற்ற அருஞ்செயல்களும் அவனது வலிமையும் அவன் யூதாவின் அரசனான அமத்சியாவோடு செய்த போர்களும் பற்றி இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 13 யோவாஸ் மரித்ததும் இஸ்ரவேல் அரசர்களான அவனது முற்பிதாக்களோடு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். யோவாசின் சிம்மாசனத்தில் யெரொபெயாம் அரசனாக அமர்ந்தான்.

யோவாஸ் எலிசாவை சந்திக்கிறான்

14 எலிசா நோயுற்றான். பின், இந்த நோயாலேயே அவன் மரித்துப்போனான். இஸ்ரவேல் அரசனான யோவாஸ், எலிசாவைப் பார்க்கப் போனான். யோவாஸ் எலிசாவுக்காக அழுதான். அவன் “என் தந்தையே! என் தந்தையே! இது இஸ்ரவேலின் இரதமும் அதன் குதிரைகளுக்கும் ஏற்ற நேரமா?” [a] என்றான்.

15 எலிசா அவனிடம், “ஒரு வில்லையும் சில அம்புகளையும் எடுத்துக்கொள்” என்றான்.

யோவாஸ் ஒரு வில்லையும், சில அம்புகளையும் எடுத்துக்கொண்டான். 16 பிறகு எலிசா இஸ்ரவேல் அரசனிடம், “வில்லில் உனது கையை வை” என்றான். யோவாஸ் அவ்வாறே செய்தான். பிறகு எலிசா தன் கையை அரசனின் கையோடு வைத்தான். 17 எலிசா, “கிழக்கு ஜன்னலைத் திறவுங்கள்” என்றான், யோவாஸ் அவ்வாறே திறந்தான். பிறகு எலிசா “எய்துவிடு” என்றான்.

யோவாஸ் எய்தான். பிறகு எலிசா, “இது கர்த்தருடைய வெற்றி அம்பு! இது ஆராம் மேல் கொள்ளும் வெற்றியாகும்! நீ ஆராமியர்களை ஆப்பெக்கில் வெல்வாய். அவர்களை அழிப்பாய்” என்றான்.

18 எலிசா மேலும், “அம்புகளை எடு” என்றான். யோவாஸ் எடுத்தான். “தரையின் மேல் அடி” என்று இஸ்ரவேல் அரசனிடம் கூறினான்.

யோவாஸ் மூன்று முறை தரையின் மீது அடித்தான். பிறகு நிறுத்தினான். 19 அதனால் தேவமனிதனுக்கு (எலிசாவிற்கு) யோவாசின் மேல் கோபம் வந்தது. அவன், “நீ ஐந்து அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும்! அதனால் ஆராமை அது அழியும்வரை தோற்கடித்திருப்பாய்! ஆனால் இப்போது நீ மூன்றுமுறை மட்டுமே ஆராமை வெல்வாய்!” என்றான்.

எலிசாவின் கல்லறையில் நிகழ்ந்த அதிசயம்

20 எலிசா மரித்தான். ஜனங்கள் அவனை அடக்கம் செய்தனர். அடுத்த ஆண்டில் ஒரு வசந்த காலத்தில் மோவாபிய வீரர்களின் குழு ஒன்று படையெடுத்து தாக்கியது. போருக்கான பொருட்களை எடுப்பதற்காக அவர்கள் வந்தனர். 21 சில இஸ்ரவேலர்கள் மரித்த ஒருவனை அடக்கம் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் வீரர்கள் வருவதைப் பார்த்தார்கள். உடனே (பயந்து) பிணத்தை எலிசாவின் கல்லறைக்குள் வீசிவிட்டு ஓடினார்கள். பிணமானது எலிசாவின் எலும்பின் மீது பட்டது, அதற்கு உயிர் வந்து எழுந்து நின்றான்!

ஆராமியர்களோடு போரிட்டு யோவாஸ் இஸ்ரவேலிய நகரங்களை மீட்டது

22 யோவாகாசின் ஆட்சிகாலம் முழுவதும், ஆராமின் அரசனான ஆசகேல் இஸ்ரவேலர்களுக்குத் துன்பம் கொடுத்துவந்தான். 23 ஆனால் கர்த்தர் இஸ்ரவேலர்கள் மேல் கருணையோடு இருந்தார். அவர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியவர்களோடு செய்த உடன்படிக்கையின் காரணமாக கர்த்தர் இஸ்ரவேலர்களை அழிப்பதில்லை. இன்னும் அவர்களை தூர எறியவில்லை.

24 ஆராமின் அரசனான ஆசகேல் மரித்தான், அவனது மகனான பெனாதாத் புதிய அரசன் ஆனான். 25 அவன் மரிக்கும் முன்னர் ஆசகேல் யோவாசின் தந்தையான யோவகாசுடன் போரிட்டுப் போரில் பல நகரங்களைக் கைப்பற்றினான். ஆனால் இப்போது யோவாஸ் ஆசகேலின் மகனான பெனாதாத்தோடு போரிட்டு அந்நகரங்களை எடுத்துக் கொண்டான். மூன்றுமுறை யோவாஸ் பெனாதாத்தை வெற்றிப்பெற்று இஸ்ரவேல் நகரங்களைத் திரும்ப எடுத்துக்கொண்டான்.

2 தீமோத்தேயு 3

இறுதி நாட்கள்

இதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள், இறுதி நாட்களில் ஏராளமான தொந்தரவுகள் நேரும். அந்தக் காலங்களில் மக்கள் தம்மையும் செல்வத்தையும் மட்டுமே விரும்புவர். அவர்கள் பெருமிதத்தோடும், செருக்கோடும் இருப்பார்கள். அவர்கள் மக்களைப்பற்றி தீயவற்றையே கூறுவர். பிள்ளைகள் பெற்றோருக்கு அடிபணியமாட்டார்கள். அவர்கள் நன்றியில்லாதவர்களாவர். இரக்கமற்றவர்களாயிருப்பர். அடுத்தவர்களிடம் அன்பற்றவர்களாய் மாறிவிடுவார்கள். அவர்கள் மற்றவர்களை மன்னிக்க மறுப்பார்கள். அவர்கள் தீயவற்றையே பேசுவார்கள். அவர்கள் சுயக் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பர். கொடிய வன்முறையாளர்களாய் மாறி நல்லவற்றை வெறுக்கத் தொடங்குவர். இறுதி நாட்களில் மக்கள் தம் நண்பர்களுக்கே எதிராகிப்போவர். அவர்கள் சிந்தனையின்றி முட்டாள்தனமாகச் செயல்படுவர். அவர்கள் வீண்பெருமை கொண்டவர்களாகவும் துரோகிகளாகவும் இருப்பர். அவர்கள் இன்பத்தை விரும்பி, தேவனை நேசிக்காதவர்களாக இருப்பர். அவர்கள் தேவனுக்கு சேவை செய்வதுபோலத் தொடர்ந்து நடிப்பார்கள். ஆனால் அவர்கள் வாழும் வழியோ, தேவனுக்கு அவர்கள் உண்மையிலேயே சேவை செய்யவில்லை என்பதைக் காட்டிக்கொடுத்துவிடும். தீமோத்தேயுவே இவர்களிடமிருந்து விலகி இரு.

சிலர் சில வீடுகளுக்குப் போய் அங்குள்ள பலவீனமும் பாவமும் உள்ள பெண்களை அடைவர். அப்பெண்கள் பாவம் நிறைந்தவர்கள். அவர்கள் செய்ய விரும்பிய பலதீய காரியங்களே அப்பெண்களைப் பாவத்தில் ஈடுபடத் தூண்டும். அப்பெண்கள் எப்போதும் புதிய போதனைகளை விரும்புவர். ஆனால் உண்மை பற்றிய அறிவைப் பெற முடியாதவர்களாக இருப்பர். யந்நேயையும், யம்பிரேயையும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். அவர்கள் மோசேக்கு எதிரானவர்கள். இவர்களும் அவர்களைப் போன்றே உண்மைக்கு எதிரானவர்கள். அவர்கள் குழம்பிய எண்ணமுடையவர்கள். அவர்கள் உண்மையைப் பற்றிய அறிவை அடைய தவறிவிட்டார்கள். ஆனால் அவர்கள் தம் செயலில் மேற்கொண்டு எந்த வளர்ச்சியையும் அடையமாட்டார்கள். அவர்களின் முட்டாள்தனத்தை அனைவரும் பார்ப்பர். இதுவே யந்நேயுக்கும், யம்பிரேயுக்கும் ஏற்பட்டது.

இறுதி அறிவுரைகள்

10 ஆனால் உனக்கு என்னைப்பற்றி எல்லாம் தெரியும். நான் போதனை செய்வது பற்றியும் என் வாழ்க்கைமுறை பற்றியும் நீ அறிவாய். என் வாழ்வின் குறிக்கோள்பற்றியும் நீ அறிவாய். எனது விசுவாசம், பொறுமை, அன்பு ஆகியவற்றையும் நீ அறிவாய். நான் முயற்சியைக் கைவிடமாட்டேன் என்பதையும் அறிவாய். 11 எனது உபத்திரவங்களையும் நான் பட்ட துன்பங்களையும் பற்றி நீ அறிந்திருக்கிறாய். அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா ஆகிய நகரங்களில் எனக்கு ஏற்பட்டவற்றைப் பற்றியும் நீ அறிவாய். ஆனால் நான் அனுபவித்த எல்லா உபத்திரவங்களிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றி விட்டார். 12 தேவன் விரும்புகிறபடி இயேசு கிறிஸ்துவின் வழியில் செல்கிற எவருமே இத்தகைய துன்பங்களைக் கண்டிப்பாக அனுபவிக்கவேண்டி இருக்கும். 13 தீயவர்களும், பிறரை ஏமாற்றுகிறவர்களும் மேலும் மேலும் கெட்டுப்போவார்கள். அவர்கள் மற்றவர்களை முட்டாளாக்குவார்கள். ஆனால் அதே சமயத்தில் தம்மைத் தாமே முட்டாளாக்கிக்கொள்வார்கள்.

14 நீ அறிந்த போதனைகளின்படி தொடர்ந்து செல். அவை உண்மையான போதனைகள் என்பதை அறிந்திருக்கிறாய். ஏனெனில் அவ்விஷயங்களை உனக்குப் போதித்தவர்கள் மீது நம்பிக்கை வைக்கமுடியும் என்பதை நீ அறிவாய். 15 நீ குழந்தைப் பருவம் முதலாகப் பரிசுத்த வேதவாக்கியங்களை அறிந்திருக்கிறாய். அவை உன்னை ஞானவானாக மாற்றும் வல்லமைகொண்டது. அந்த ஞானம் உனக்கு இயேசு கிறிஸ்துவில் கொண்ட விசுவாசம் மூலம் இரட்சிப்பைப்பெற வழிகாட்டும். 16 அனைத்து வேதவாக்கியங்களும் தேவனால் கொடுக்கப்பட்டவை. இவை போதிக்கப் பயன்படும், வாழ்வில் தவறு செய்கின்றவர்களுக்கு வழிகாட்டும். இது தவறுகளைத் திருத்தி நல் வழியில் வாழத் துணை செய்யும். 17 வேதவாக்கியங்களைப் பயன்படுத்தி, தேவனுக்கு சேவை செய்கிறவன், ஆயத்தமுள்ளவனாகவும், ஒவ்வொரு நல்ல வேலைக்கும் தேவையான அனைத்தையும் உடையவனாகவும் இருப்பான்.

ஓசியா 5-6

இஸ்ரவேலும் யூதாவும் பாவஞ்செய்ய தலைவர்களே காரணமாகுதல்

“ஆசாரியர்களே, இஸ்ரவேல் தேசமே, அரச குடும்பத்து ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் குற்றவாளிகளாக நியாய்ந்தீர்க்கப்பட்டுள்ளீர்கள்.

நீங்கள் மிஸ்பாவில் கண்ணியைப் போன்றிருந்தீர்கள். நீங்கள் தாபோரில் தரை மேல் விரிக்கப்பட்ட வலையைப் போன்றிருக்கிறீர்கள். நீங்கள் பல தீமைகளைச் செய்திருக்கிறீர்கள். எனவே நான் உங்கள் அனைவரையும் தண்டிப்பேன். நான் எப்பிராயீமை அறிவேன். இஸ்ரவேல் செய்திருக்கிற செயல்களையும் நான் அறிவேன். எப்பிராயீமே, இப்பொழுது நீ ஒரு வேசியைப்போல் நடந்துக்கொள்கிறாய். இஸ்ரவேல் பாவங்களால் அழுக்கடைந்தது. இஸ்ரவேல் ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றார்கள். அத்தீமைகள் அவர்களை அவர்களுடைய தேவனிடம் மறுபடியும் வராமல் தடுக்கின்றன. அவர்கள் எப்பொழுதும் அந்நிய தெய்வங்களைத் பின்பற்றும் வழிகளையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை அறியாதிருந்தார்கள். இஸ்ரவேலின் அகந்தை அவர்களுக்கு எதிரான சாட்சியாக உள்ளது. எனவே, இஸ்ரவேலும் எப்பிராயீமும் தமது பாவங்களில் இடறி விழுவார்கள். ஆனால் யூதாவும் அவர்களோடு இடறி விழும்.

“ஜனங்களின் தலைவர்கள் கர்த்தரைத் தேடி போவார்கள். அவர்கள் தங்களோடு ஆடுகளையும் பசுக்கைளையும் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவர்கள் கர்த்தரைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர் அவர்களைவிட்டு விலகினார். அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமானவர்களாக இல்லை. அவர்களின் பிள்ளைகள் ஏதோ அந்நியனிடமிருந்து வந்தவர்கள். இப்பொழுது அவர் மீண்டும் அவர்களையும் அவர்களது நாட்டையும் அழிப்பார்.”

இஸ்ரவேலின் அழிவு பற்றிய தீர்க்கதரிசனம்

“கிபியாவிலே பூரிகையை ஊதுங்கள்.
    ராமாவிலே எக்காளத்தை ஊதுங்கள்.
பெத்தாவேனிலே எச்சரிக்கைக் கொடுங்கள்.
    பென்யமீனே, பகைவன் உனக்குப் பின்னால் உள்ளான்.
எப்பிராயீம் தண்டனை காலத்தில் வெறுமையாகிவிடும்.
    நான் (தேவன்)
இஸ்ரவேல் குடும்பங்களுக்கு
    நிச்சயமாக வரப்போவதைக் கூறி எச்சரிப்பேன்.
10 யூதாவின் தலைவர்கள் திருடர்களைப் போன்று
    மற்றவர்களின் சொத்துக்களைத் திருட முயற்சிக்கிறார்கள்.
எனவே நான் (தேவன்) தண்ணீரைப்
    போன்று எனது கோபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்.
11 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான்.
அவன் திராட்சைப் பழத்தைப் போன்று நசுக்கிப் பிழியப்படுவான்.
    ஏனென்றால் அவன் அருவருப்பானவற்றைப் பின்பற்ற முடிவுசெய்தான்.
12 நான் எப்பிராயீமை
    பொட்டரிப்பு துணியை அழிப்பது போன்று அழிப்பேன்.
நான் யூதாவை
    மரத்துண்டை அழிக்கும் உளுப்பைப் போன்று அழிப்பேன்.
13 எப்பிராயீம் தனது நோயைப் பார்த்தான், யூதா தனது காயத்தை பார்த்தான்.
    எனவே அவர்கள் அசீரியாவிடம் உதவிக்குச் சென்றார்கள். அவர்கள் பேரரசனிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொன்னார்கள்.
ஆனால் அந்த அரசன் உங்களைக் குணப்படுத்த முடியாது.
    அவன் உங்கள் புண்களை குணப்படுத்த முடியாது.
14 ஏனென்றால் நான் எப்பிராயீமுக்கு
    ஒரு சிங்கத்தைப் போன்றிருப்பேன்.
நான் யூதா நாட்டிற்கு ஒரு இளம் சிங்கத்தைப் போன்று இருப்பேன்.
நான், ஆம், நான் (கர்த்தர்) அவர்களைத் துண்டு துண்டாக்குவேன். நான் அவர்களை எடுத்துச் செல்வேன்.
    அவர்களை என்னிடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது.
15 அவர்கள் தங்களைக் குற்றவாளிகளென்று ஏற்றுக்கொள்ளும்வரை,
    அவர்கள் என்னைத் தேடும்வரை
    நான் எனது இடத்திற்குத் திரும்பிப்போவேன்.
ஆம், அவர்கள் தம் ஆபத்தில் என்னைத் தேடக் கடுமையாக முயற்சி செய்வார்கள்.”

கர்த்தரிடம் திரும்பி வருவதன் பலன்கள்

“வா, நாம் கர்த்தரிடம் திரும்பிப் போவோம்.
    அவர் நம்மைப் புண்படுத்தினார்.
    ஆனால் அவர் நம்மைக் குணப்படுத்துவார்.
அவர் நம்மைக் காயப்படுத்தினார்.
    ஆனால் அவர் நமக்குக் கட்டுகளைப் போடுவார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு நமக்கு அவர் திரும்பவும் உயிரைக் கொண்டுவருவார்.
    அவர் மூன்றாவது நாள் நம்மை எழுப்புவார்.
    பிறகு நாம் அவரருகில் வாழ முடியும்.
கர்த்தரைப்பற்றி கற்றுக்கொள்வோம்.
    கர்த்தரை அறிந்துக்கொள்ள மிகக் கடுமையாக முயல்வோம்.
அவர் வந்துக்கொண்டிருக்கிறார் என்பதை நாம் காலைநேரம் வந்துக்கொண்டிருக்கிறது என்பதைப் போன்று அறிகிறோம்.
    கர்த்தர் நம்மிடம் பூமியை நனைக்க வரும் மழையைப்போன்று வருவார்.”

ஜனங்கள் விசுவாசமற்றவர்கள்

“எப்பிராயீமே. நான் உன்னை என்ன செய்வது?
    யூதா, நான் உன்னை என்ன செய்வது?
உனது விசுவாசம் காலை மூடுபனியைப் போன்று உள்ளது.
    உனது விசுவாசத் தன்மை காலையில் மறையும் பனித்துளியைப் போன்று உள்ளது.
நான் தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்தி
    ஜனங்களுக்காக சட்டங்களைச் செய்தேன்.
எனது கட்டளைகளால் ஜனங்கள் கொல்லப்பட்டார்கள்.
    ஆனால் அந்த முடிவுகளிலிருந்து நன்மைகள் வரும்.
ஏனென்றால் நான் பலிகளை அல்ல.
    விசுவாசமுள்ள அன்பையே விரும்புகிறேன்.
நான் ஜனங்கள் தகன பலிகளை கொண்டு வருவதையல்ல
    ஜனங்கள் தேவனை அறிந்துகொள்வதையே விரும்புகிறேன்.
ஆனால் ஜனங்கள் ஆதாமைப்போன்று உடன்படிக்கையை உடைத்தார்கள்
    அவர்கள் தமது நாட்டில் எனக்கு விசுவாசம் இல்லாதவர்களாய் இருந்தார்கள்.
கீலேயாத். தீமை செய்கிறவர்களின் நகரமாயிருக்கிறது.
    அங்கு ஜனங்கள் மற்றவர்களைத் தந்திரம் செய்து கொல்லுகிறார்கள்.
வழிப்பறிக்காரர்கள் மறைந்திருந்து மற்றவர்களைத் தாக்கக் காத்திருக்கிறார்கள்.
    அதைப் போலவே, சீகேமுக்குப் போகும் சாலையில் அவ்வழியில் செல்லும்
ஜனங்களைத் தாக்க ஆசாரியர்கள் காத்திருக்கின்றார்கள்.
    அவர்கள் தீமைகளைச் செய்திருக்கிறார்கள்.
10 நான் இஸ்ரவேல் நாட்டில் பயங்கரமானவற்றைப் பார்த்திருக்கிறேன்.
எப்பிராயீம் தேவனுக்கு விசுவாசம் இல்லாமல் போனான்.
    இஸ்ரவேல் பாவத்தால் அழுக்கானது.
11 யூதா, உனக்கும் அறுவடைகாலம் இருக்கிறது.
    நான் எனது ஜனங்களைச் சிறைமீட்டு வரும்போது இது நிகழும்”

சங்கீதம் 119:145-176

கோப்

145 கர்த்தாவே, என் முழு இருதயத்தோடும் உம்மைக் கூப்பிடுகிறேன்.
    எனக்குப் பதில் தாரும்! நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறேன்.
146 கர்த்தாவே, நான் உம்மைக் கூப்பிடுகிறேன். என்னைக் காப்பாற்றும்!
    நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிவேன்.
147 நான் உம்மிடம் ஜெபம் செய்வதற்கு அதிகாலையில் எழுந்தேன்.
    நீர் சொல்பவற்றை நான் நம்புகிறேன்.
148 உமது வார்த்தைகளைக் கற்பதற்கு
    இரவில் வெகுநேரம் நான் விழித்திருந்தேன்.
149 உமது முழு அன்பினாலும் எனக்குச் செவி கொடும்.
    கர்த்தாவே, நீர் சரியெனக் கூறும் காரியங்களைச் செய்து, என்னை வாழவிடும்.
150 ஜனங்கள் எனக்கெதிராக கொடிய திட்டங்களை வகுக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் உமது போதனைகளைப் பின்பற்றவில்லை.
151 கர்த்தாவே, நீர் எனக்கு நெருக்கமானவர்.
    உமது கட்டளைகள் நம்பக்கூடியவை.
152 பல காலத்திற்கு முன்பு நான் உமது உடன்படிக்கையின் மூலம்,
    உமது போதனைகள் என்றென்றும் தொடரும் என்பதை கற்றேன்.

ரேஷ்

153 கர்த்தாவே, என் துன்பங்களைக் கண்டு, என்னை விடுவியும்.
    நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
154 கர்த்தாவே, எனக்காக நீர் போரிட்டு, என்னைக் காப்பாற்றும்.
    நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வாழவிடும்.
155 தீயோர் உமது சட்டங்களைப் பின்பற்றாததால்
    அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள்.
156 கர்த்தாவே, நீர் மிகுந்த தயவுள்ளவர்.
    நீர் சரியென நினைப்பவற்றைச் செய்யும, என்னை வாழவிடும்.
157 என்னைத் துன்புறுத்த முயலும் பல பகைவர்கள் எனக்குண்டு.
    ஆனால் நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
158 நான் அந்தத் துரோகிகளைப் பார்க்கிறேன்.
    கர்த்தாவே, அவர்கள் உமது வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதில்லை.
    நான் அதை வெறுக்கிறேன்.
159 பாரும், நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மிகவும் முயல்கிறேன்.
    கர்த்தாவே, உமது முழுமையான அன்பினால், என்னை வாழவிடும்.
160 கர்த்தாவே, துவக்கம் முதலாகவே உமது வார்த்தைகள் எல்லாம் நம்பக்கூடியவை.
    உமது நல்ல சட்டம் என்றென்றும் நிலைத்திருக்கும்.

ஷீன்

161 எக்காரணமுமின்றி வல்லமையுள்ள தலைவர்கள் என்னைத் தாக்கினார்கள்.
    ஆனால் நான் உமது சட்டத்திற்கு மட்டுமே பயந்து, அதை மதிக்கிறேன்.
162 கர்த்தாவே, மிகுந்த பொக்கிஷத்தைக் கண்டெடுத்த மனிதன் பெறும்
    சந்தோஷத்தைப்போல உமது வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
163 நான் பொய்களை வெறுக்கிறேன்!
    நான் அவற்றை அருவருக்கிறேன்!
    ஆனால் கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
164 உமது நல்ல சட்டங்களுக்காக
    ஒரு நாளில் ஏழுமுறை உம்மைத் துதிக்கிறேன்.
165 உமது போதனைகளை நேசிக்கும் ஜனங்கள் உண்மையான சமாதானத்தைக் காண்பார்கள்.
    அந்த ஜனங்களை வீழ்த்த எதனாலும் முடியாது.
166 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றுவீரெனக் காத்துக்கொண்டிருக்கிறேன்.
    நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தேன்.
167 நான் உமது உடன்படிக்கையைப் பின்பற்றினேன்.
    கர்த்தாவே, நான் உமது சட்டங்களை மிகவும் நேசிக்கிறேன்.
168 நான் உமது உடன்படிக்கைக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிகிறேன்.
    கர்த்தாவே, நான் செய்தவற்றையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர்.

தௌ

169 கர்த்தாவே, என் மகிழ்ச்சியான பாடலுக்குச் செவிகொடும்.
    நீர் வாக்குறுதி தந்தபடியே என்னை ஞானமுள்ளவனாக்கும்.
170 கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும்.
    நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.
171 நான் துதிப் பாடல்களைப் பாடிக் களிப்படைகிறேன்.
    ஏனெனில் நீர் உமது சட்டங்களை எனக்குப் போதித்தீர்.
172 உமது வார்த்தைகளுக்கு மறு உத்தரவு கொடுக்க எனக்கு உதவும், எனது பாடல்களை நான் பாடட்டும்.
    கர்த்தாவே, உமது எல்லா சட்டங்களும் நல்லவை.
173 என்னருகில் வந்து எனக்கு உதவும்.
    ஏனெனில் நான் உமது கட்டளைகளைப் பின்பற்றுவதெனத் தீர்மானித்தேன்.
174 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றவேண்டுமென விரும்புகிறேன்.
    ஆனால் உமது போதனைகள் என்னை மகிழ்விக்கின்றன.
175 கர்த்தாவே, நான் வாழ்ந்து உம்மைத் துதிக்கட்டும்.
    உமது சட்டங்கள் எனக்கு உதவட்டும்.
176 காணாமற்போன ஆட்டைப்போன்று நான் அலைந்து திரிந்தேன்.
    கர்த்தாவே, என்னைத் தேடிவாரும்.
நான் உமது ஊழியன்,
    நான் உமது கட்டளைகளை மறக்கவில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center