Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 11-12

யூதா அரசனின் அனைத்து மகன்களையும் அத்தாலியாள் கொன்றது

11 அத்தாலியாள் என்பவள் அகசியாவின் தாயார் ஆவாள். தன் மகன் மரித்துப் போனதைப் பார்த்ததும், எழுந்து அரச குடும்பத்தினரையெல்லாம் கொன்றாள்.

அரசனான யோராமின் மகள் யோசேபாள் ஆவாள். இவள் அகசியாவிற்குச் சகோதரி ஆவாள். யோவாஸ் அகசியா அரசனின் மகன்களுள் ஒருவன். மற்றவர்கள் கொல்லப்பட்டபோது அவள் அவனைக் காப்பற்றி ஒளித்து வைத்தாள். தன் படுக்கையறையிலேயே யோவாசையும் அவனது தாதியையும் மறைத்து வைத்தாள். இவ்வாறு யோவாஸ் அத்தாலியாவால் கொல்லப்படாமல் தப்பித்தான்.

பிறகு கர்த்தருடைய ஆலயத்தில் யோவாசும் யோசேபாவும் ஆறு ஆண்டுகள் மறைந்து இருந்தனர். அத்தாலியா யூதாவை ஆண்டு வந்தாள்.

ஏழாவது ஆண்டில், தலைமை ஆசாரியனான யோய்தா 100 பேருக்கு அதிகாரிகளையும் தலைவர்களையும் காவலர்களையும் ஒருங்கே அழைத்தான். கர்த்தருடைய ஆலயத்தில் கூடச்செய்து அவர்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். அவர்களை ஆலயத்தில் வாக்குறுதி கொடுக்கச் செய்து அரசனின் மகனைக் காட்டினான்.

பின் அவன் அவர்களுக்கு ஆணையிட்டு, “நீங்கள் செய்யவேண்டிய காரியம் இதுதான். உங்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஒவ்வொரு ஓய்வு நாளில் முறைப்படி வரவேண்டும். அரசனின் வீட்டை கவனித்து வரவேண்டும். இன்னொரு மூன்றில் ஒரு பங்கினர் சூர் வாசலில் இருக்க வேண்டும். மூன்றில் மற்றொரு பங்கினர் காவலர்களுக்குப் பின்னாலுள்ள வாசலில் இருக்க வேண்டும். இவ்வாறு நீ அரசனின் வீட்டைச் சுற்றி சுவர்போல இருக்க வேண்டும. ஒவ்வொரு ஓய்வுநாளும் முடியும்போது, மூன்றில் இரண்டு பங்கினர் கர்த்தருடைய ஆலயத்தையும் அரசன் யோவாசையும் பாதுகாத்து நிற்பார்கள். நீங்கள் அரசன் யோவாசோடு தங்கி அவன் எங்கு போனாலும் போகவேண்டும். அவர்கள் எப்போதும் அவனைச் சுற்றியே இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் கையில் ஆயுதம் வைத்திருக்கவேண்டும். உங்களை நெருங்குகிற எவரையும் கொன்று விடவேண்டும்” என்றான்.

ஆசாரியன் யோய்தாவின் ஆணைப்படி தளபதிகள் செயல்பட்டார்கள். ஒவ்வொரு வரும் தம் ஆட்களை அழைத்தனர். சனிக்கிழமை ஒரு குழு யோவாசை பாதுகாத்தது. மற்ற குழுக்கள் மற்ற நாட்களில் காவல் காத்துவந்தனர். எல்லோரும் ஆசாரியன் யோய்தாவிடம் வந்தனர். 10 ஆசாரியனோ தளபதிகளுக்கு ஈட்டி கேடயம் போன்றவற்றைக் கொடுத்தான். இவை அனைத்தும் அரசன் தாவீதால் ஒரு காலத்தில் கர்த்தருடைய ஆலயத்திற்குள் வைக்கப்பட்டிருந்தன. 11 இக்காவலர்கள் ஆயுதங்களோடு வலது மூலையிலிருந்து ஆலயத்தின் இடது மூலைவரை நின்றனர். பலிபீடம், ஆலயம் போன்றவற்றைச் சுற்றிலும் நின்றனர். அரசன் ஆலயத்திற்குப் போகும்போதும் அவனைச் சுற்றி நின்றனர். 12 அவன் (யோய்தா) யோவாசை வெளியே அழைத்து வந்தான். அவன் தலையில் மகுடத்தைச் சூடி அரசனுக்கும் தேவனுக்கும் இடையில் ஒப்பந்தத்தை கொடுத்தனர். அவனுக்கு அபிஷேகம் செய்து புதிய அரசனாக நியமித்தனர். அவர்கள் கைகளைத் தட்டி, ஓசையெழுப்பி “அரசன் பல்லாண்டு வாழ்க!” என்று வாழ்த்தினார்கள்.

13 அரசி அத்தாலியாள் காவலர்களிடமிருந்தும், ஜனங்களிடமிருந்தும் எழுந்த இச்சத்தத்தை கேட்டாள். அவள் கர்த்தருடைய ஆலயத்திற்குள் போனாள். 14 அரசன் வழக்கமாக நிற்கும் தூணருகில் நின்றுகொண்டிருப்பதைக் கண்டாள். அரசனுக்காக அதிகாரிகள் எக்காளம் வாசிப்பதையும் கண்டாள். ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பதையும் பார்த்தாள். அத்தாலியாள் அவள் நிலை குலைந்ததைக் காட்ட தன் ஆடைகளைக் கிழித்துக் கொண்டாள். பின் அவள் “துரோகம்! துரோகம்!” என்று கத்தினாள்.

15 படைவீரர்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தளபதிகளுக்கு ஆசாரியன் யோய்தா கட்டளையிட்டான். யோய்தா, “ஆலயத்தை விட்டு வெளியே அத்தாலியாளைக் கொண்டு வாருங்கள். அவளைச் சார்ந்தவர்களைக் கொல்லுங்கள். ஆனால் கர்த்தருடைய ஆலயத்தில் கொல்லவேண்டாம்” என்றான்.

16 எனவே அவளை ஆலயத்தைவிட்டு வெளியே “குதிரை வாசலுக்கு” இழுத்து வந்து அங்கே அவளைக் கொன்றனர்.

17 பிறகு கர்த்தருக்கும் அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் யோய்தா ஒரு ஒப்பந்தம் செய்தான். இதன்படி அரசனும் ஜனங்களும் கர்த்தருக்கு உரியவர்கள். பின் யோய்தா அரசனுக்கும் ஜனங்களுக்கும் இடையில் ஓர் ஒப்பந்தம் செய்தான். அதன்படி அரசன் ஜனங்களுக்கு நன்மை செய்ய வேண்டும், ஜனங்களும் அரசனுக்குக் கீழ்ப்படிந்து வாழவேண்டும்.

18 பிறகு அனைவரும் பொய்த் தெய்வமான பாகாலின் ஆலயத்திற்குச் சென்றனர். பாகாலின் உருவச்சிலைகளையும் பலிபீடங்களையும் தூள் தூளாக நொறுக்கினர். பாகாலின் ஆசாரியனான மாத்தனையும் பலிபீடத்தின் முன்னர் கொன்றனர்.

கர்த்தருடைய ஆலயத்தின் பொறுப்பாளராகச் சில மனிதரை ஆசாரியன் (யோய்தா) நியமித்தான். 19 ஆசாரியன் ஜனங்களை வழிநடத்தினான். அவர்கள் கர்த்தரின் ஆலயத்திலிருந்து அரசனின் வீட்டிற்குச் சென்றனர். அரசனோடு சிறப்பு காவலர்களும் அதிகாரிகளும் சென்றனர். அவன் அரசனது வீட்டின் வாசலுக்குச் சென்றான். பிறகு (அரசன் யோவாஸ்) அவன் சிங்காசனத்தில் அமர்ந்தான். 20 ஜனங்கள் அனைவரும் மகிழ்ந்தனர். நகரம் சமாதானமாயிருந்தது. வாளால் கொல்லப்பட்ட அரசி அத்தாலியாள் அரண்மனைக்கருகில் கொல்லப்பட்டாள்.

21 யோவாஸ் அரசனாகும்போது அவனுக்கு ஏழு வயது.

யோவாஸ் தன் ஆட்சியைத் தொடங்கியது

12 இஸ்ரவேலில் யெகூ தன் ஆட்சியை ஏழாம் ஆண்டில் நடத்திக்கொண்டிருக்கும்போது, யோவாஸ் ஆட்சி செய்யத் தொடங்கினான். அவன் எருசலேமில் 40 ஆண்டுகள் ஆண்டான். பெயெர்செபாவிலுள்ள சிபியாள் என்பவள்தான் யோவாசின் தாயார். கர்த்தர் சொன்ன நல்ல செயல்களை மட்டுமே யோவாஸ் செய்தான். அவன் தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு அடிபணிந்து வந்தான். யோய்தா எனும் ஆசாரியன் அவனுக்கு கற்றுத் தந்ததையே கடைபிடித்தான். ஆனால் அவன் மேடைகளை அழிக்கவில்லை. ஜனங்கள் பொய்த் தெய்வங்களை தொழுதுக்கொள்ளும் இடங்களில் பலிகொடுப்பதும் நறுமணப் பொருட்களை எரிப்பதுமாக இருந்தனர்.

ஆலயத்தைச் செப்பனிட யோவாஸ் ஆணையிட்டான்

4-5 யோவாஸ் ஆசாரியர்களிடம், “கர்த்தருடைய ஆலயத்தில் அதிக பணம் இருக்கிறது. ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்கு பரிசுத்தக் காணிக்கையாகப் பணம் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆலயவரி மற்றும் தம் விருப்பம்போல் கணக்குப் பார்க்கப்படும்பொழுதெல்லாம் அவர்கள் அதை செலுத்தியுள்ளார்கள். மற்றும் தம் விருப்பம்போலவும் பணம் தருகின்றனர். ஆசாரியர்களாகிய நீங்கள் உங்களுக்கு அறிமுகமான ஒவ்வொருவரிடமிருந்தும் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அப்பணத்தைக் கொண்டுத் தேவையான இடத்தில் ஆலயப்பணி செய்யவேண்டும்” என்றான்.

ஆனால் ஆசாரியர்கள் பழுது பார்க்கவில்லை. யோவாஸ் தனது 23வது ஆட்சியாண்டில் கூட அவர்கள் ஆலயப்பணி செய்யவில்லை. எனவே யோவாஸ் அரசன் யோய்தா ஆசாரியனையும் மற்ற ஆசாரியர்களையும் அழைத்து, “ஏன் நீங்கள் ஆலயத் திருப்பணிகள் செய்யவில்லை? ஜனங்களிடமிருந்து பணம் பெற்றுக்கொள்வதையும், அவற்றை பயன்படுத்துவதையும் நிறுத்துங்கள். ஜனங்களின் பணம் ஆலயத் திருப்பணிக்கே பயன்பட வேண்டும்” என்றான்.

ஜனங்களிடமிருந்து பணம் பெறுவதை நிறுத்திவிடுவதாக ஆசாரியர்கள் ஒப்புக்கொண்டனர். அதோடு ஆலயத்தைச் செப்பனிடும் பணியைச் செய்வதில்லை என்றும் முடிவுச்செய்தனர். எனவே, ஆசாரியனான யோய்தா ஒரு பெட்டியை எடுத்து அதன் மேல் பகுதியில் துவாரமிட்டான். அதனைப் பலிபீடத்தின் தென்பகுதியில் வைத்தான். அப்பெட்டி கர்த்தருடைய ஆலயத்திற்குள் நுழையும் கதவுக்கருகில் இருந்தது. சில ஆசாரியர்கள் வாசலைக் காவல் செய்தனர். அவர்கள் கர்த்தருக்காக ஜனங்கள் தரும் பணத்தை வாங்கி பெட்டிக்குள் போட்டனர்.

10 பிறகு ஜனங்களே ஆலயத்திற்குப் போகும்போதெல்லாம் பணத்தைப் பெட்டிக்குள் போட ஆரம்பித்தனர். பெட்டியில் ஏராளமான பணம் இருப்பதை அரசனின் எழுத்தரும் (செயலாளர்) தலைமை ஆசாரியரும் பார்த்தால் அவர்கள் வந்து பெட்டியைத் திறந்து பணத்தை எடுப்பார்கள். அவர்கள் அப்பணத்தை பைகளில் போட்டு எண்ணினார்கள். 11 அப்பணம் எடை போடப்பட்டவுடன் அப்பணத்தை கர்த்தருடைய ஆலயத்தில் வேலை செய்பவர்களுக்குக் கொடுத்தனர். ஆலயத்தில் பணியாற்றும் தச்சர்கள், கட்டிட வேலைக்காரர்கள் போன்றோருக்கு அப்பணத்தைக் கொடுத்தனர். 12 அப்பணத்தைக் கல்வேலை செய்பவர்களும் பெற்றனர். இப்பணத்தின் மூலம் மரங்கள், கற்கள், கர்த்தருடைய ஆலய கட்டிடத்திற்கு பழுதுபார்க்கத் தேவையான மற்ற பொருட்களையும் வாங்கினார்கள்.

13-14 ஜனங்கள் கர்த்தருடைய ஆலயத்திற்காகப் பணத்தைக் கொடுத்தனர். வெள்ளிக் கிண்ணங்கள், இசைக்கருவிகள், எக்காளங்கள், பொன் பாத்திரங்கள், வெள்ளிப் பாத்திரங்கள் போன்றவற்றைச் செய்ய ஆசாரியர்களால் அப்பணத்தை உபயோகிக்க முடியாமல் போனது. வேலைக்காரர்களுக்குச் சம்பளம் கொடுக்கவே இப்பணம் உபயோகமானது. அந்த வேலைக்காரர்கள் கர்த்தருடைய ஆலயத்தைப் பழுதுபார்த்தார்கள். 15 எவரும் பணமுழுவதையும் எண்ணிப் பார்க்கவில்லை. பணத்தை என்ன செய்தார்கள் என வேலைக்காரர்களை வற்புறுத்தவும் இல்லை. ஏனெனில் அவ்வேலைக்காரர்கள் அனைவரும் நம்பிக்கைக்கு உரியவர்கள்!

16 குற்றப்பரிகாரப் பலியாகவும், பாவப்பரிகாரப் பலியாகவும் ஜனங்கள் பணம் கொடுத்தார்கள். ஆனால் அப்பணத்தை ஆலயத் திருப்பணி செய்யும் வேலைக்காரர்களுக்குச் சம்பளம் தர பயன்படுத்தவில்லை. அது ஆசாரியர்களுக்கு உரியதாக இருந்தது.

ஆசகேலிடமிருந்து எருசலேமை யோவாஸ் காப்பாற்றுகிறான்

17 ஆசகேல் ஆராம் நாட்டு மன்னன். அவன் காத்தூர் நகரத்தோடு போரிடச் சென்றான். அதனைத் தோற்கடித்த பின் எருசலேமோடு போரிடத் திட்டமிட்டான்.

18 யோசபாத், யோராம், அகசியா ஆகியோர் முன்பு யூதாவை ஆண்டனர். இவர்கள் யோவாசின் முற்பிதாக்கள். அவர்கள் கர்த்தருக்கு நிறைய பொருட்களைக் கொடுத்திருந்தனர். அவை ஆலயத்தில் இருந்தன. யோவாசும் ஆலயத்திற்குப் பொருட்களைக் கொடுத்திருந்தான். யோவாஸ் தன் அரண்மனை வீட்டிலும் ஆலயத்திலும் இருந்த பொன்னையும் பொருளையும் சேர்த்து ஆராம் (சீரியா) அரசன் ஆசகேலுக்குக் கொடுத்தனுப்பினான். ஆசகேல் எருசலேமுக்கு எதிராகப் போரிடவில்லை. அவன் வெளியேப் போனான்.

யோவாசின் மரணம்

19 யோவாஸ் செய்த பெருமைக்குரிய செயல்களெல்லாம் யூதா அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.

20 யோவாசின் வேலைக்காரர்கள் (அதிகாரிகள்) அவனுக்கெதிராகச் சதி செய்தனர். அவர்கள் அவனை சில்லாவுக்குப் போகும் வழியில் உள்ள மில்லோ வீட்டிலே கொன்றனர். 21 சிமியாதின் மகனான யோசகாரும் சோமேரின் மகனான யோசபாத்தும் யோவாசின் அதிகாரிகள். இவர்களே யோவாசைக் கொன்றனர்.

தாவீது நகரத்தில் ஜனங்கள் யோவாசை அவனது முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். யோவாசின் மகனான அமத்சியா அடுத்த புதிய அரசன் ஆனான்.

2 தீமோத்தேயு 2

நம்பிக்கைக்குரிய வீரன்

தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு. நீ கேட்ட என் போதனைகள் மற்றவர்களுக்கும் கூட போதிக்கப்பட வேண்டும். நீ விசுவாசம் வைத்திருக்கிற மக்களிடம் எல்லாம் அதனைப் போதிப்பாயாக. பிறகு அவர்களாலும் அவற்றை ஏனைய மக்களுக்குப் போதிக்க முடியும். நாம் அனுபவிக்க நேரும் துன்பங்களைப் பகிர்ந்துகொள்வோம். அவற்றை ஒரு உண்மையான போர் வீரனைப்போன்று ஏற்றுக்கொள்வோம். போர் வீரனாயிருக்கும் ஒருவன் எப்பொழுதும் தனது மேலதிகாரியைத் திருப்திப்படுத்தவே விரும்புவான். எனவே அவன் மற்றவர்களைப் போன்று தன் பொழுதை வேறுவகையில் போக்கமாட்டான். விதிமுறைகளின்படி போட்டியிடாமல் எந்த விளையாட்டு வீரனாலும் வெற்றிக் கிரீடத்தை அடைய முடியாது. பாடுபட்டு விளைய வைக்கிற விவசாயியே, விளைச்சலின் முதல் பகுதி உணவை உண்பதற்குத் தகுதியானவன். நான் சொல்லிக்கொண்டிருக்கிற விஷயங்களைப் பற்றி எண்ணிப்பார். இவை பற்றிய முழுமையான அறிவை கர்த்தர் உனக்குத் தருவார்.

இயேசு கிறிஸ்துவை ஞாபகப்படுத்திக்கொள். அவர் தாவீதின் குடும்பத்திலிருந்து வந்தவர். இறந்த பிறகு அவர் மரணத்திலிருந்து எழுந்தார். இதுதான் நான் சொல்லும் நற்செய்தி. நான் இதனைச் சொல்வதால் பலவித துன்பங்களுக்கு உட்படுகிறேன். நான் ஒரு குற்றவாளியைப் போல் சங்கிலிகளால் பிணைத்துக் கட்டப்பட்டிருக்கிறேன். ஆனால் தேவனுடைய போதனைகள் கட்டப்படவில்லை. 10 ஆகையால் நான் பொறுமையோடு அனைத்துத் துன்பங்களையும் ஏற்றுக்கொள்கிறேன். தேவனால் தேர்ந்தெடுக்கபட்ட அனைவருக்கும் உதவும் பொருட்டே நான் இதனைச் செய்தேன். இதனால் மக்கள் இயேசு கிறிஸ்துவில் இரட்சிப்பைப் பெறுவார்கள். அதனால் முடிவற்ற மகிமையைப் பெறுவர்.

11 இந்தப் போதனை உண்மையானது:

நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம்.
12 நாம் துன்பங்களை ஏற்றுக்கொண்டால் பிறகு அவரோடு ஆட்சியும் செய்வோம்.
நாம் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தால் பிறகு அவரும் நம்மை ஏற்க மறுப்பார்.
13 நாம் உண்மையுள்ளவராக இல்லாதிருந்தாலும் அவர் தொடர்ந்து உண்மைக்குரியவராக இருப்பார்.
    ஏனென்றால் அவர் தனக்குத்தானே உண்மையற்றவராக இருக்க முடியாது.

அங்கீகரிக்கப்பட்ட வேலையாள்

14 மக்களிடம் இவற்றைத் தொடர்ந்து சொல்லுங்கள். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாதபடி தேவனுக்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். அது எவருக்கும் உதவாது. அதைக் கவனிப்பவர்களையும் அழித்து விடும். 15 தேவன் உங்களை ஏற்றுக்கொள்கிறவகையில் அவரிடம் உங்களை ஒப்படைக்க உங்களால் முடிந்த நல்லதைச் செய்யுங்கள். தன் வேலையைப்பற்றி வெட்கப்படாத வேலையாளாக இருங்கள். கிறிஸ்துவின் உண்மையான போதனைகளைச் சரியான வழியில் போதியுங்கள்.

16 தேவனிடமிருந்து பெறப்படாத, பயன் இல்லாத காரியங்களைப் பேசுவோரிடமிருந்து விலகி இருங்கள். அவ்வகை பேச்சுகள் ஒருவனை மேலும் தேவனுக்கு எதிராக்கும். 17 அவர்களின் தீய போதனைகள் சரீரத்துக்குள் நோய் பரவுவது போன்று பரவும். இமெநேயுவும், பிலேத்துவும் இத்தகையவர்ளே. 18 அவர்களின் போதனைகள் உண்மையிலிருந்து வெகு தொலைவில் இருக்கின்றன. மரணத்திலிருந்து எழுங்காலம் ஏற்கெனவே நடந்து முடிந்துபோனது என்று அவர்கள் போதிக்கிறார்கள். அந்த இருவரும் சில மனிதர்களின் விசுவாசத்தை அழித்துவிட்டார்கள்.

19 ஆனால் தேவனின் பலமான அஸ்திபாரம் அப்படியே தொடர்ந்து உள்ளது. அஸ்திபாரத்தின்மீது, “கர்த்தருக்குத் தன்னைச் சேர்ந்தவர்கள் எவரென்று தெரியும்.” “கர்த்தரில் விசுவாசம் கொள்கிற ஒவ்வொருவரும் தவறு செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” [a]என்னும் வாசகம் எழுதப்பட்டுள்ளது.

20 ஒரு பெரிய வீட்டில் பொன்னாலும், வெள்ளியாலும் செய்யப்பட்ட பொருட்கள் உள்ளன. அதோடு மரத்தாலும், மண்ணாலும் செய்யப்பட்ட பொருட்களும் உள்ளன. சில பொருட்கள் சில விசேஷ நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. மற்றவை பிற காரியங்களுக்காக பயன்படுத்தும் பொருட்டு உள்ளன. 21 எவனொருவன் தீய காரியங்களில் ஈடுபடாமல் விலகி தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்கிறானோ அவன் சிறப்பான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவான். அவன் பரிசுத்தமாக்கப்பட்டு எஜமானுக்குப் பயன்படுபவனாக இருப்பான். அவன் எவ்வித நற்பணி செய்யவும் தயாராக இருப்பான்.

22 ஓர் இளைஞன் செய்ய விரும்புகிற தீய செயல்களில் இருந்து விலகி இருங்கள். சரியான வழியில் வாழவும், விசுவாசம், அன்பு, சமாதனம் ஆகியவற்றைப் பெறவும் கடுமையாக முயற்சியுங்கள். 23 இவற்றை நீங்கள் சுத்தமான இதயம் உள்ளவர்களோடும் கர்த்தரிடம் நம்பிக்கை உள்ளவர்களோடும் சேர்ந்து செய்யுங்கள். முட்டாள்தனமான அறிவற்ற விவாதங்களில் இருந்தும் விலகி நில்லுங்கள். இப்படிப்பட்ட விவாதங்கள் வளர்ந்து பெரிதாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள். 24 கர்த்தருடைய ஊழியன் சண்டைக்காரனாக இருக்கக் கூடாது. அவன் எல்லோரிடமும் இரக்கத்துடன் இருத்தல் வேண்டும். அவன் நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் பொறுமையுள்ளவனாக இருக்க வேண்டும். 25 தன் போதனையை எதிர்க்கிறவர்களோடு கர்த்தரின் ஊழியன் மென்மையாகப் பேச வேண்டும். அவர்களும் உண்மையை ஒப்புக்கொள்ளும் வகையில் தேவன் அவர்களின் மனத்தையும் மாற்றுவார். 26 பிசாசானவன் இத்தகைய மக்களை வலை போட்டுப்பிடித்து தன் விருப்பப்படி செயல்பட வைப்பான். எனினும் அவர்கள் விழித்தெழுந்து, பிசாசு தன்னைப் பயன்படுத்துவதை அறிந்து, தம்மைப் பிசாசின் வலைக்குள் இருந்து விடுவித்துக்கொள்வர்.

ஓசியா 3-4

ஓசியா கோமேரை அடிமைத்தனத்திலிருந்து திரும்ப வாங்குகிறான்

பிறகு கர்த்தர் மீண்டும் என்னிடம், “கோமேருக்குப் பல நேசர்கள் இருக்கின்றார்கள். ஆனால் நீ தொடர்ந்து அவளை நேசி. ஏனென்றால் அதுவே கர்த்தருடைய அன்புக்கு ஒப்பானது. கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்கள் மீது தொடர்ந்து அன்பு செலுத்தி வருகின்றார். ஆனால் அவர்கள் தொடர்ந்து அந்நியத் தெய்வங்களை தொழுகின்றனர். அவர்கள் (உலர்ந்த) திராட்சை அப்பத்தை உண்ண விரும்புகின்றனர்” என்றார்.

எனவே நான் கோமேரைப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றைரைக் கலம் வாற்கேதுமைக்கும் வாங்கினேன், பிறகு நான் அவளிடம், “நீ என்னுடன் பல நாட்கள் வீட்டில் தங்கவேண்டும். நீ ஒரு வேசியைப்போன்று இருக்கக்கூடாது. நீ இன்னொருவனோடு இருக்கக்கூடாது. நான் உனது கணவனாக இருப்பேன்” என்று சொன்னேன்.

இவ்வாறே, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு அரசனோ தலைவரோ இல்லாமல் இருப்பார்கள். அவர்கள் பலி இல்லாமலும், நினைவுக் கற்கள் இல்லாமலும் இருப்பார்கள். அவர்கள் ஏபோத் ஆடை இல்லாமலும் வீட்டுத் தெய்வங்கள் இல்லாமலும் இருப்பார்கள். இதற்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் திரும்பி வருவார்கள். பிறகு அவர்கள் தம் தேவனாகிய கர்த்தரையும் அரசனாகிய தாவீதையும்காண வருவார்கள். இறுதி நாட்களில் அவர்கள் கர்த்தரையும் அவரது நன்மைகளையும் பெருமைப்படுத்த வருவார்கள்.

கர்த்தர் இஸ்ரவேலுக்கு எதிராகக் கோபமாயிருக்கிறார்

இஸ்ரவேல் ஜனங்களே கர்த்தருடைய செய்தியைக் கேளுங்கள். கர்த்தர் இந்த நாட்டில் வாழ்கிற ஜனங்களுக்கு எதிராகத் தன் வாதங்களைச் சொல்லுவார். “இந்நாட்டிலுள்ள ஜனங்கள் உண்மையில் தேவனை அறிந்துகொள்ளவில்லை. தேவனுக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இல்லை. ஜனங்கள் பொய்யாணையும், பொய்யும், கொலையும், திருட்டும் செய்கின்றார்கள். அவர்கள் விபச்சாரமும் செய்கின்றனர். அதனால் குழந்தைகளையும் வைத்திருக்கின்றார்கள். ஜனங்கள் மீண்டும் மீண்டும் கொலை செய்கின்றனர். எனவே. அந்த நாடானது ஒரு மனிதன் செத்தவர்களுக்காக புலம்புவதுபோல் இருக்கிறது, அதன் ஜனங்கள் அனைவரும் பலவீனமுடையவர்களாக இருக்கின்றனர். காடுகளில் உள்ள மிருகங்களும் வானத்து பறவைகளும்கடலிலுள்ள மீன்களும் மரித்துக்கொண்டிருக்கின்றன. எவனொருவனும் இன்னொருவனோடு வாதம் செய்வதோ அல்லது பழி சொல்லவோ கூடாது, ஆசாரியரே, எனது வாதம் உங்களோடு உள்ளது, நீங்கள் (ஆசாரியர்கள்) பகல் நேரத்தில் இடறி விழுவீர்கள். இரவில் தீர்க்கதரிசியும் உங்கேளாடு விழுவான். நான் உங்கள் தாயை அழிப்பேன்.

“எனது ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள். ஏனென்றால் அவர்களுக்கு அறிவில்லை. நீ கற்றுக்கொள்ள மறுத்திருக்கிறாய். எனவே, நீ எனக்கு ஆசாரியனாக இருக்கிறதை நான் மறப்பேன். நீ உனது தேவனுடைய சட்டங்களை மறந்திருக்கிறாய். எனவே நான் உன் பிள்ளைகளை மறப்பேன். அவர்கள் தற்பெருமை கொண்டார்கள். அவர்கள் எனக்கு எதிராக மேலும் மேலும் பாவங்கள் செய்தார்கள். எனவே நான் அவர்களது மகிமையை அவமானமாக்குவேன்.

“ஆசாரியர்கள் ஜனங்களின் பாவத்தில் சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் அப்பாவங்களை மேலும் மேலும் விரும்பினார்கள். எனவே, ஆசாரியர்கள் எவ்விதத்திலும் ஜனங்களை விட வித்தியாசமானவர்களாக இல்லை. நான் அவர்களை அவர்கள் செய்த தவற்றுக்காகத் தண்டிப்பேன். அவர்கள் செய்த தீயச்செயல்களுக்காக அதற்குரிய பலனை அளிப்பேன். 10 அவர்கள் உண்பார்கள். ஆனால் அது அவர்களுக்குத் திருப்தியைத் தராது. அவர்கள் பாலினஉறவு பாவத்தை செய்வார்கள். ஆனால் குழந்தைகள் பெறமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கர்த்தரை விட்டு விலகி விபச்சாரிகளைப் போன்று ஆகிவிட்டார்கள்.

11 “வேசித்தனமும், பலமான குடியும். புதிய திராட்சைரசமும் ஒருவனின் சிந்தனைச் சக்தியை அழித்துவிடும், 12 எனது ஜனங்கள் மரக்கட்டைகளிடம் ஆலோசனை கேட்கின்றார்கள், அவர்கள் அக்கட்டைகள் பதில் சொல்லும் என்று எண்ணுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் வேசிகளைப்போன்று அந்நியத் தெய்வங்களை துரத்திக்கொண்டு போயிருக்கிறார்கள், அவர்கள் தமது தேவனை விட்டு விட்டு வேசிகளைப் போன்று ஆனார்கள். 13 அவர்கள் மலைகளின் உச்சியில் பலிகளைக் கொடுக்கிறார்கள். அவர்கள் கர்வாலி மரங்கள், புன்னைமரங்கள், அரசமரங்கள் ஆகியவற்றின் கீழே நறுமணத்தூபங்களை எரிக்கிறார்கள் அம்மரங்களின் நிழல்கள் பார்க்கையில் அழகாக இருக்கின்றன. எனவே உங்கள் மக்கள் விபச்சாரிகளைப்போன்று அம்மரங்களுக்கு அடியில் படுத்துக்கொள்கின்றனர். உங்கள் மருமகள்களும் விபச்சாரம் செய்கின்றார்கள்.

14 “நான் உங்கள் மகள்கள் வேசிகளைப் போன்று நடந்துக்கொள்வதையும் உங்கள் மருமகள்கள் விபச்சாரம் செய்வதையும் குற்றம் சொல்லமாட்டேன். ஆண்கள் போய் வேசிகளோடு படுத்துக்கொள்கின்றார்கள். அவர்கள் கோவில் வேசிகளோடு பலிகள் இடுகின்றார்கள். எனவே அம்முட்டாள் ஜனங்கள் தம்மைத்தாமே அழித்துகொள்கின்றார்கள்.

இஸ்ரவேலர்களின் அவமானத்துக்குரிய பாவங்கள்

15 “இஸ்ரவேலே, நீ ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொள்கிறாய். ஆனால் யூதாவை அக்குற்றத்துக்கு ஆளாக்காதே. கில்காலுக்குப் போகாதே. பெத்தாவேனுக்கும் போகாதே. ஆணையிடுவதற்குக் கர்த்தருடைய நாமத்தைப் பயன்படுத்தாதே. ‘கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு...’ என்று ஆணையிடாதே. 16 கர்த்தர் இஸ்ரவேலுக்கு ஏராளமானவற்றைக் கொடுத்திருக்கிறார். அவர் தம் ஆடுகளை ஏராளம் புல்லுள்ள சமவெளிக்குக் கூட்டிப்போகும் நல்ல மேய்ப்பனைப் போன்றவர். ஆனால் இஸ்ரவேல் பிடிவாதமாக இருக்கிறது. இஸ்ரவேல் அடங்காமல் மீண்டும் மீண்டும் ஓடும் கன்றுக் குட்டியைப் போன்றிருக்கிறது.

17 எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். எனவே அவனைத் தனியே விட்டுவிடு. 18 “எப்பிராயீம் குடித்தவர்களோடு சேர்ந்துகொண்டு விபசாரிகளைப்போல செயல்படுகிறான். அவர்கள் தங்கள் நேசர்களுடன் இருக்கட்டும். 19 அவர்கள் அத்தேவர்களிடம் பாதுகாப்புக்காகச் சென்றார்கள். அவர்கள் தம் சிந்தனையின் வலிமையை இழந்துவிட்டார்கள். அவர்களது பலிகள் அவர்களுக்கு அவமானத்தைக் கொண்டு வருகின்றன”.

சங்கீதம் 119:121-144

ஆயின்

121 நான் நியாயமும் நல்லதுமானவற்றைச் செய்கிறேன்.
    கர்த்தாவே, என்னைத் துன்புறுத்த விரும்புவோரிடம் என்னை ஒப்புவியாதேயும்.
122 என்னிடம் நல்லவராக இருக்க உறுதியளியும்.
    நான் உமது ஊழியன். கர்த்தாவே, அந்தப் பெருமைக்காரர்கள் என்னைத் துன்புறுத்தவிடாதேயும்.
123 கர்த்தாவே, உம்மிடமிருந்து உதவியை எதிர் நோக்கியும், ஒரு நல்ல வார்த்தையை எதிர்பார்த்தும்,
    என் கண்கள் தளர்ந்து போய்விட்டன.
124 நான் உமது ஊழியன்.
    உமது உண்மை அன்பை எனக்குக் காட்டும்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
125 நான் உமது ஊழியன்.
    உமது உடன்படிக்கையை நான் அறிந்துகொள்ளும்படியான புரிந்துகொள்ளுதலைப் பெற எனக்கு உதவும்.
126 கர்த்தாவே, நீர் ஏதேனும் செய்வதற்கு இதுவே தக்கநேரம்.
    ஜனங்கள் உமது சட்டத்தை மீறிவிட்டார்கள்.
127 கர்த்தாவே, மிகவும் தூய்மையான பொன்னைக் காட்டிலும்
    நான் உமது கட்டளைகளை நேசிக்கிறேன்.
128 நான் உமது கட்டளைகளுக்கெல்லாம் கவனமாகக் கீழ்ப்படிகிறேன்.
    தவறான போதனைகளை நான் வெறுக்கிறேன்.

பே

129 கர்த்தாவே, உமது உடன்படிக்கை அற்புதமானது.
    அதனால் நான் அதைப் பின்பற்றுகிறேன்.
130 ஜனங்கள் உமது வார்த்தையைப் புரிந்துகொள்ளத் தொடங்கும்போது அது சரியானபடி வாழ்வதற்கு வழிகாட்டும் ஒளியைப் போன்றிருக்கிறது.
    உமது வார்த்தை சாதாரண ஜனங்களையும் ஞானமுள்ளோராக்கும்.
131 கர்த்தாவே, நான் உண்மையாகவே உமது கட்டளைகளைக் கற்க விரும்புகிறேன்.
    நான் சிரமமாய் மூச்சுவிட்டுக்கொண்டு பொறுமையின்றிக் காத்திருக்கும் மனிதனைப் போல் இருக்கிறேன்.
132 தேவனே, என்னைப் பாரும், என்னிடம் தயவாயிரும்.
    உமது நாமத்தை நேசிக்கும் ஜனங்களுக்குத் தகுந்தவையான காரியங்களைச் செய்யும்.
133 கர்த்தாவே, நீர் வாக்குறுதி அளித்தபடி என்னை வழிநடத்தும்.
    தீமையேதும் எனக்கு நிகழாதபடி பார்த்துக்கொள்ளும்.
134 கர்த்தாவே, என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
    நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
135 கர்த்தாவே, உமது ஊழியனை ஏற்றுக் கொள்ளும்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
136 ஜனங்கள் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியாததால்
    என் கண்ணீர் ஆற்றைப்போல பெருக்கெடுத்து ஓடுகிறது.

த்சாதே

137 கர்த்தாவே, நீர் நல்லவர்,
    உமது சட்டங்கள் நியாயமானவை.
138 நீர் உமது உடன்படிக்கையில் எங்களுக்கு நல்ல சட்டங்களைத் தந்தீர்.
    நாங்கள் அவற்றை உண்மையாகவே நம்பமுடியும்.
139 என் ஆழமான உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்கின்றன.
    என் பகைவர்கள் உமது கட்டளைகளை மறந்தபடியால் நான் மிகவும் கலங்கியிருக்கிறேன்.
140 கர்த்தாவே, உமது வார்த்தைகளை நாங்கள் நம்பமுடியும் என்பதற்கு சான்றுகள் இருக்கிறது.
    நான் அதை நேசிக்கிறேன்.
141 நான் ஒரு இளைஞன், ஜனங்கள் என்னை மதிப்பதில்லை.
    ஆனால் நான் உமது கட்டளைகளை மறக்கமாட்டேன்.
142 கர்த்தாவே, உமது நன்மை என்றென்றைக்கும் இருக்கும்.
    உமது போதனைகள் நம்பக் கூடியவை.
143 எனக்குத் தொல்லைகளும் கொடிய காலங்களும் இருந்தன.
    ஆனால் நான் உமது கட்டளைகளில் களிப்படைகிறேன்.
144 உமது உடன்படிக்கை என்றென்றைக்கும் நல்லது.
    நான் வாழும்படி, அதைப் புரிந்துக்கொள்ள எனக்கு உதவும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center