Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 10

சமாரியாவின் தலைவர்களுக்கு யெகூ எழுதியது

10 ஆகாபின் 70 மகன்கள் (பேரன்கள்) சமாரியாவில் இருந்தனர். யெகூ, சமாரியாவில் அவர்களை வளர்க்கிறவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும், தலைவர்களுக்கும் கடிதங்களை எழுதி அனுப்பினான். 2-3 அதில் “இக்கடிதம் கண்டதும், உங்கள் எஜமானனுடைய பிள்ளைகளில் மிக நல்லவனும் மிகத் தகுதியானவனுமாகிய ஒருவனைத் தேர்ந்தெடுங்கள். உங்களிடம் இரதங்களும் குதிரைகளும் இருக்கின்றன. நீங்கள் பலப்படுத்தப்பட்ட நகரத்தில் இருக்கின்றீர்கள். உங்களிடம் ஆயுதங்களும் உள்ளன. நீங்கள் தேர்ந்தெடுத்தவனை அவனுடைய தந்தையின் சிங்காசனத்தில் உட்கார வையுங்கள். பின் உங்கள் தந்தையின் குடும்பத்திற்காகப் போராட வாருங்கள்” என்று எழுதப்பட்டிருந்தது.

ஆனால் யெஸ்ரயேலில் உள்ள தலைவர்களும் அதிகாரிகளும் பயந்தனர். அவர்கள் “யெகூவை இரண்டு அரசர்களாலும் தடுக்க முடியவில்லை, எங்களாலும் முடியாது!” என்று சொன்னார்கள்.

ஆகாபின் வீட்டைப் பாதுகாத்தவர்களும் நகரத்தைப் பரிபாலித்தவர்களும் மூப்பர்களும் ஆகாபின் மகன்களைக் கவனிப்பவர்களும் யெகூவிற்குத் தூது அனுப்பி, “நாங்கள் உங்கள் சேவகர்கள். நீங்கள் என்ன சொன்னாலும் நாங்கள் செய்கிறோம். வேறு எவரையும் அரசனாக்கமாட்டோம். நீங்கள் நல்லதென நினைப்பதை செய்யுங்கள்” என்றனர்.

சமாரியாவின் தலைவர்கள் ஆகாபின் மகன்களைக் கொல்கிறார்கள்

பிறகு யெகூ அவர்களுக்கு இரண்டாவது கடிதத்தை எழுதினான். அதில், “நீங்கள் எனக்கு அடிபணிந்து உதவுவதாக இருந்தால், ஆகாப் மகன்களின் தலையை வெட்டிப்போடுங்கள். நாளை இந்நேரத்திற்குள் அவர்களை என் முன்னால் யெஸ்ரயேலுக்கு கொண்டு வாருங்கள்” என்றான்.

ஆகாபுக்கு 70 மகன்கள் இருந்தனர். அவர்கள் நகரத் தலைவர்களால் வளர்க்கப்பட்டனர். அவர்கள் யெகூவின் கடிதத்தைக் கண்டதும், அந்த 70 மகன்களையும் கொன்றுபோட்டனர். தலைகளைக் கூடைகளுக்குள் போட்டு யெஸ்ரயேலிலுள்ள யெகூவிடம் அனுப்பினார்கள். ஒரு தூதுவன் யெகூவிடம் வந்து, “அவர்கள் அரசனது மகன்களின் தலைகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள்!” என்றான்.

யெகூ, “விடியும்வரை நகர வாசலில் இரண்டு குவியலாக அத்தலைகளை வைத்திருங்கள்” என்று கட்டளையிட்டான்.

காலையில், யெகூ வெளியே வந்து ஜனங்கள் முன்பு நின்றான். அவன் ஜனங்களிடம், “நீங்கள் ஏதும் அறியாதவர்கள். நான் என் எஜமானனுக்கு எதிராகத் திட்டங்கள் பல வைத்திருந்தேன். நான் அவனைக் கொன்றேன். ஆனால் அவனது பிள்ளைகளைக் கொன்றது யார்? அவர்களைக் கொன்றவர்கள் நீங்கள் தான்! 10 கர்த்தர் சொன்னபடி எல்லாம் நடக்கிறது என்பதை நீங்கள் அறியவேண்டும். ஆகாபின் குடும்பத்தைப் பற்றி கர்த்தர் எலியாவின் மூலம் கூறியிருக்கிறார். இப்போது கர்த்தர் தான் செய்வதாகச் சொன்னவற்றைச் செய்து முடித்துள்ளார்” என்றான்.

11 இவ்வாறு யெகூ யெஸ்ரயேலில் ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றான். அதோடு முக்கியமான மனிதர்களையும், நெருங்கிய நண்பர்களையும் ஆசாரியர்களையும் கொன்றுப் போட்டான். ஆகாபின் ஆட்கள் யாருமே உயிரோடு விடப்படவில்லை.

அகசியாவின் உறவினர்களை யெகூ கொன்றது

12 யெகூ யெஸ்ரயேலை விட்டு சமாரியாவிற்குப் போனான். வழியில் மேய்ப்பனின் முகாம் என்று அழைக்கப்படும் இடத்தில் நின்றான். பெத்ஏகத்திற்குச் செல்லும் பாதையின் அருகில் உள்ள வீட்டுக்குச் சென்றான். அங்கே மேய்ப்பர்கள் ஆட்டு மயிர் கத்தரித்துக்கொண்டிருந்தார்கள். 13 யூதாவின் அரசனான அகசியாவின் உறவினர்களை அங்கே சந்தித்தான். யெகூ அவர்களைப் பார்த்து, “நீங்கள் யார்?” என்றான்.

அதற்கு அவர்கள் “நாங்கள் அகசியாவின் உறவினர்கள். நாங்கள் அரசனின் மகன்களையும் ராஜ மாதாவின் (யேசபேல்) மகன்களையும் பார்ப்பதற்கு வந்திருக்கிறோம்” என்றனர்.

14 யெகூ (தன் ஆட்களிடம்) “இவர்களை உயிரோடு பிடியுங்கள்!” என்று கூறினான்.

அவனது ஆட்கள் அவர்களை உயிரோடு பிடித்தனர். அவர்கள் மொத்தம் 42 பேர் இருந்தனர். அவர்களில் ஒருவரும் உயிரோடு இராதபடி பெத்ஏகத் கிணறுக்கு அருகில் அவர்களை கொன்றுபோட்டனர்.

யெகூ யோனதாபை சந்தித்தது

15 அவ்விடத்தை விட்டு பிறகு யெகூ, ரேகாபின் மகனான யோனதாபை சந்தித்தான். அவனும் யெகூவை சந்திக்க வந்துக் கொண்டிருந்தான். யெகூ அவனை வாழ்த்தி விட்டு, “நான் உனக்கு இருப்பது போல நீ எனது உண்மையான நண்பன்தானா?” என்று கேட்டான்.

யோனதாபும், “ஆமாம், நான் உனது உண்மையான நண்பன்தான்” என்றான்.

யெகூ, “அப்படியானால் உன் கையைக் கொடு” என்று கேட்டான். அவன் தன் கையைக் கொடுத்தபோது தன் இரதத்திற்குள் இழுத்தான்.

16 யெகூ, “என்னோடு வா, நான் கர்த்தரிடம் எவ்வளவு உறுதியான பக்தி வைத்திருக்கிறேன் என்று அறிந்துகொள்ளலாம்” என்றான்.

எனவே யோனதாப் யெகூவின் இரதத்தில் பயணம் செய்தான். 17 யெகூ சமாரியாவிற்கு வந்து அங்கு உயிரோடுள்ள ஆகாபின் குடும்பத்திலுள்ள அனைவரையும் கொன்றுபோட்டான். கர்த்தர் எலியாவிடம் சொன்னபடியே அவன் செய்து முடித்தான்.

பாகாலின் பக்தர்களை யெகூ அழைத்தது

18 பிறகு யெகூ அனைத்து ஜனங்களையும் சேர்த்துக் கூட்டினான். அவன் அவர்களிடம், “ஆகாப், பாகாலுக்குச் சிறிது சேவைசெய்தான். ஆனால் யெகூ அவனுக்கு மேல் இன்னும் கூடுதலாக சேவை செய்வான்! 19 இப்போது பாகாலின் பக்தர்களையும் ஆசாரியர்களையும் கூப்பிடுங்கள். இக்கூட்டத்திற்கு யாரையும் தவறவிடாதீர்கள். பாகாலுக்குக் கொடுக்க பெரும்பலி இருக்கிறது!. இக்கூட்டத்திற்கு வராதவர்களைக் கொல்வேன்!” என்று ஆணையிட்டான்.

இவ்வாறு யெகூ தந்திரம் செய்தான். அவர்கள் அத்தனை பேரையும் அழிப்பதுதான் அவனது திட்டம். 20 யெகூ, அவர்களிடம், “பாகாலுக்காக ஒரு பரிசுத்த கூட்டத்தை ஏற்பாடு செய்யுங்கள்” என்றான். ஆசாரியர்களும் அறிவித்தனர். 21 பிறகு யெகூ இஸ்ரவேல் நாடுகள் அனைத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பினான். பாகாலின் பக்தர்கள் அனைவரும் வந்தனர். எவரும் வீட்டிலே இல்லாமல் பாகாலின் ஆலயத்திற்கு வந்தனர். ஆலயம் ஜனங்களால் நிரம்பியது.

22 யெகூ மேலாடைகளை வைத்திருந்த வேலைக்காரனிடம், “பாகாலின் பக்தர்களுக்கெல்லாம் மேலாடைகளைக் கொண்டு வா” என்று சொன்னான். எனவே அந்த வேலைக்காரனும் பாகாலின் பக்தர்களுக்கு மேலாடைகளைக் கொண்டு வந்தான்.

23 பிறகு யெகூவும் ரேகாபின் மகனான யோனதாபும் பாகாலின் ஆலயத்திற்குள் நுழைந்தார்கள். பாகாலின் தொண்டர்களிடம், “இங்கே பாகாலின் பக்தர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்பதை சுற்றுமுற்றும் பார்த்து உறுதி செய்துக் கொள்ளுங்கள். கர்த்தருடைய ஊழியர்கள் இருக்கக் கூடாது” என்று ஆணையிட்டான். 24 அதன்படி பாகாலின் பக்தர்கள் காணிக்கைகளையும் தகனபலிகளையும் செலுத்த ஆலயத்திற்குள் சென்றனர்.

வெளியே, யெகூவின் 80 ஆட்கள் காத்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “யாரையும் தப்பித்து போகும்படி விடாதீர்கள். எவனாவது எவனையாவது தப்பிக்கவிட்டால், அவன் தனது உயிரைக் கொடுக்க வேண்டும்” என்றான். 25 பிறகு யெகூ விரைவாகத் தகனபலி கொடுத்தபின், தனது அதிகாரிகளிடமும் தளபதிகளிடமும், “உள்ளே போய் அனைவரையும் கொல்லுங்கள், உயிரோடு எவனையும் வெளியே வரவிடாதீர்கள்” என்றான்.

எனவே தளபதிகள் தம் மெலிந்த வாள்களால் பாகாலின் பக்தர்களைக் கொன்று போட்டு பிணங்களை வெளியே எறிந்தனர். பின் ஆலயத்தின் உள்ளறைக்குள் சென்றனர். 26 ஞாபகக்கற்களை (தூண்கள்) பாகாலின் வீட்டைவிட்டு வெளியே எடுத்துப்போட்டு அவற்றை எரித்தனர். 27 பிறகு பாகாலின் நினைவுக் கற்களையும் பாகாலின் வீட்டினையும் நொறுக்கினார்கள். ஆலயத்தை ஓய்வறையாக ஒதுக்கினார்கள். எப்போதும் அசுத்தமாக வைத்திருந்தனர். ஜனங்கள் அந்த இடத்தை கழிவறையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

28 இவ்வாறு யெகூ பாகால் ஆராதனையை இஸ்ரவேல் நாட்டில் அழித்தான். 29 ஆனால் யெகூ முழுவதுமாக நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களிலிருந்து திரும்பவில்லை. இஸ்ரவேலின் பாவத்துக்குக் காரணமான பெத்தேல், தாண் ஆகிய இடங்களில் உள்ள தங்கக் கன்றுக் குட்டிகளை அவன் அழிக்கவில்லை.

இஸ்ரவேல் மீது யெகூவின் ஆட்சி

30 கர்த்தர் யெகூவிடம், “நல்லது செய்தாய், நான் நல்லவை எனச் சொன்னதைச் செய்தாய். நீ ஆகாபின் குடும்பத்தினரை அழித்துவிட்டாய். எனவே இஸ்ரவேலை உனது சந்ததியார், நான்கு தலை முறைகளுக்கு ஆண்டு வருவார்கள்” என்றார்.

31 ஆனால் யெகூ முழுமனதோடு கர்த்தருடைய சட்டப்படி கவனமாக வாழவில்லை. அவன் யெரொபெயாமின் பாவங்களை விட்டுவிடவில்லை.

ஆசகேல் இஸ்ரவேலைத் தோற்கடித்தது

32 அப்போது கர்த்தர் இஸ்ரவேலின் பகுதிகள் குறைந்துபோகும்படி செய்தார். இஸ்ரவேலின் ஒவ்வொரு எல்லையையும் ஆராமின் அரசனான ஆசகேல் தாக்கி தோல்வியடையச் செய்தான். 33 ஆசகேல் யோர்தான் ஆற்று கிழக்குப் பகுதிகள் அது கீலேயாத்தின் அனைத்து பகுதிகளும் காதியர், ரூபேனியர், மனாசேயர் கோத்திரங்களின் பகுதிகளையும் வென்றான். அவன் ஆரோவேர் முதல் கீலேயாத்திலும் பாசானிலுமுள்ள பகுதிகள் முழுவதையும் வென்றான்.

யெகூவின் மரணம்

34 யெகூ செய்த பிற அருஞ்செயல்களை எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகம் கூறுகிறது. 35 இவன் மரித்ததும் முற்பிதாக்களோடு அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் சமாரியாவில் இவனுடைய முற்பிதாக்களோடு அடக்கம் செய்தனர். இவனுக்குப் பிறகு இவனது மகன் யோவாகாஸ் புதிய அரசன் ஆனான். 36 யெகூ சமாரியாவில் இருந்து இஸ்ரவேலை 28 ஆண்டுகள் ஆண்டு வந்தான்.

2 தீமோத்தேயு 1

இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனான பவுல் எழுதுவது: தேவனின் விருப்பப்படியே நான் அப்போஸ்தலனானேன். கிறிஸ்து இயேசுவிலுள்ள வாழ்க்கையின் வாக்குறுதியைப் பற்றி மக்களிடம் கூறுமாறு தேவன் என்னை அனுப்பினார்.

தீமோத்தேயுவே! நீ எனக்குப் பிரியமுள்ள மகனைப் போன்றவன். கிருபை, இரக்கம், சமாதானம் ஆகியவற்றை நீ பிதாவாகிய தேவனாலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் பெறுவாய் என்று நம்புகிறேன்.

நன்றி செலுத்துதலும் உற்சாகமூட்டுதலும்

இரவிலும் பகலிலும் என் பிரார்த்தனைகளில் உன்னை எப்பொழுதும் நினைத்துக்கொள்ளுகிறேன். என்னுடைய முன்னோர் சேவை செய்த தேவன் அவரே. நான் உனக்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். நான் அறிந்த அளவில் சரியானதை மட்டுமே செய்கிறேன். நீ எனக்காக சிந்திய கண்ணீர்த் துளிகளை நான் நினைத்துப் பார்க்கிறேன். நான் உன்னைக் காண மிகவும் விரும்புகிறேன். அதனால் நான் முழு மகிழ்ச்சியை அடைய முடியும். நான் உனது உண்மையான விசுவாசத்தை நினைத்துப் பார்க்கிறேன். அத்தகைய விசுவாசம் முதலில் உன் பாட்டியான லோவிசாளுக்கும் உன் தாயான ஐனிக்கேயாளுக்கும் இருந்தது. அவர்களைப் போன்றே உனக்கும் விசுவாசம் இருக்கிறது என்று உறுதியாக நம்புகிறேன். ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன். அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார்.

எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார்.

தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார். 10 அக்கிருபை நமக்குத் தெளிவானது. நமது இரட்சகராகிய இயேசு கிறிஸ்து வந்தபோதுதான் அக்கிருபை நமக்குப் புலப்படுத்தப்பட்டது. இயேசு மரணத்தை அழித்து நமக்கெல்லாம் நித்திய வாழ்வுக்குரிய வழியைக் காட்டினார். நற்செய்தியின் மூலமாகவே நமக்கு அவர் நித்திய வாழ்வைப் பெறுவதற்கான வழியைக் காட்டினார்.

11 அந்த நற்செய்தியைச் சொல்வதற்காக நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறேன். நான் அவரது அப்போஸ்தலனாகவும், நற்செய்திக்கான போதகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 12 நற்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால் இப்போது துன் பப்படுத்தப்படுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் நம்புகிற இயேசுவைப்பற்றி எனக்குத் தெரியும். என்னிடத்தில் நம்பி ஒப்படைத்தவற்றை அந்த நாள்வரைக்கும் காத்துக்கொள்ளும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.

13 என்னிடமிருந்து நீங்கள் கேட்ட உண்மையான போதனைகளைப் பின்பற்றுங்கள். கிறிஸ்து இயேசுவுக்குள் அன்பும் விசுவாசமும் கொண்டு அப்போதனைகளைப் பின்பற்றுங்கள். அப்போதனைகள் நீங்கள் போதிக்க வேண்டியவற்றைப் பற்றி உங்களுக்குச் சான்றாகக் காட்டும். 14 உங்களிடம் கொடுக்கப்பட்ட உண்மைகளைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள். பரிசுத்த ஆவியானவர் நம்மில் இருக்கிறார். அவர் அவ்வுண்மைகளைப் பாதுகாக்க உதவுவார்.

15 ஆசிய நாடுகளில் உள்ள பலர் என்னை விட்டு விலகிவிட்டார்கள் என்பதை நீ அறிவாய். பிகெல்லும் எர்மொகெனேயும் கூட என்னைவிட்டு விலகிவிட்டனர். 16 கர்த்தரானவர் ஒநேசிப்போருவின் வீட்டாருக்குக் கிருபை காட்டும்படி நான் பிரார்த்தனை செய்கிறேன். பலமுறை அவன் எனக்கு உதவியிருக்கிறான். நான் சிறையில் இருந்தது பற்றி அவன் வெட்கப்படவில்லை. 17 அவன் ரோமுக்கு வந்தபோது என்னைக் காணும் பொருட்டு பல இடங்களில் கடைசி வரைக்கும் தேடியிருக்கிறான். 18 ஒநேசிப்போரு அந்த நாளில் கர்த்தரிடமிருந்து கிருபை பெறவேண்டும் என்று நான் கர்த்தரிடம் வேண்டுகிறேன். எபேசு நகரில் அவன் எவ்வகையில் உதவியிருக்கிறான் என்று உனக்கு நன்றாகவே தெரியும்.

ஓசியா 2

“பிறகு உங்கள் சகோதரர்களிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பீர்கள். நீங்கள் உங்கள் சகோதரிகளிடம், ‘உங்கள்மேல் அவர் இரக்கம் காட்டியிருக்கிறார்’ என்பீர்கள்.”

“உங்கள் தாயோடு வழக்காடுங்கள். ஏனென்றால் அவள் எனது மனைவியல்ல. நான் அவளது கணவனும் அல்ல. அவளிடம் ஒரு வேசியைப் போன்று நடந்துக் கொள்வதை நிறுத்தவேண்டும் என்று சொல்லுங்கள், அவளது மார்பகங்களில் இருந்து தனது நேசர்களை விலக்கும்படி அவளுக்குச் சொல்லுங்கள். அவள் தனது சோரத்தை நிறுத்தாவிட்டால் நான் அவளை நிர்வாணமாக்குவேன். நான் அவளைத் தனது பிறந்தநாளில் இருந்ததைப் போலாக்குவேன். நான் அவளது ஜனங்களை வெளியேற்றுவேன். அவள் காலியான வறண்ட பாலைவனம் போலாவாள். அவளை நான் தாகத்தால் மரிக்கச் செய்வேன். நான் அவளது பிள்ளைகள் மேல் இரக்கப்படமாட்டேன். ஏனென்றால் அவர்கள் வேசிப் பிள்ளைகள். அவர்களின் தாய் ஒரு வேசியைப் போன்று நடந்துக்கொண்டாள். அவர்களது தாய் தனது செயல்களுக்காக அவமானம் அடையவேண்டும். அவள், ‘நான் என் நேசர்களிடம் செல்வேன். என்னுடைய நேசர்கள் எனக்கு உணவும் தண்ணீரும் கொடுப்பார்கள். அவர்கள் எனக்குக் கம்பளியும் ஆடையும் தருவார்கள். அவர்கள் எனக்குத் திராட்சைரசத்தையும் ஒலிவ எண்ணெயையும் தருவார்கள்’ என்றாள்.

“எனவே, நான் (கர்த்தர்) உங்கள் (இஸ்ரவேலின்) பாதையை முட்களால் அடைப்பேன். நான் சுவர் எழுப்புவேன். பிறகு அவள் தனது பாதையைக் கண்டுகொள்ள முடியாமல் போவாள். அவள் தனது நேசர்களின் பின்னால் ஓடுவாள். ஆனால் அவளால் அவர்களைப் பிடிக்க முடியாது. அவள் தன் நேசர்களுக்காகத் தேடிக்கொண்டிருப்பாள். ஆனால் அவளால் அவர்களைக் கண்டுக்கொள்ள முடியாது. பிறகு அவள், ‘நான் எனது முதல் கணவனிடம் (தேவன்) திரும்பிப்போவேன். நான் அவரோடு இருந்தபோது எனது வாழ்க்கை நன்றாக இருந்தது. இப்பொழுது இருக்கிறதை விட அன்று வாழ்க்கை நன்றாக இருந்தது’ என்பாள்.

“அவள் (இஸ்ரவேல்), நான் (கர்த்தர்) ஒருவர்தான் அவளுக்குத் தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன் என்பதை அறியவில்லை. நான் அவளுக்கு மேலும் மேலும் வெள்ளியும் பொன்னும் கொடுத்துவந்தேன். ஆனால் இஸ்ரவேலர்கள் அந்த வெள்ளியையும் பொன்னையும் பயன்படுத்தி பாகாலுக்கான உருவச் சிலைகளைச் செய்தனர். எனவே நான் (கர்த்தர்) திரும்பி வருவேன். நான், என் தானியத்தை அதன் அறுவடைக் காலத்தில் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் திராட்சை பழங்கள் தயாராக இருக்கும்போது எனது திராட்சைரசத்தைத் திரும்ப எடுத்துக்கொள்வேன். நான் எனது கம்பளியையும், சணலையும் திரும்ப எடுத்துக்கொள்வேன். இவற்றையெல்லாம் நான் அவளது நிர்வாணத்தை மறைப்பதற்காகக் கொடுத்தேன். 10 இப்பொழுது நான் அவளது ஆடைகளை நீக்குவேன். அவள் நிர்வாணமாவாள். எனவே அவளது நேசர்கள் அவளைப் பார்க்க முடியும். எவராலும் எனது அதிகாரத்திலிருந்து அவளைக் காப்பாற்ற முடியாது. 11 நான் (தேவன்) அவளுடைய எல்லா மகிழ்ச்சியையும் எடுத்துக் கொள்வேன். நான் அவளது பண்டிகைகளையும், மாத பிறப்பு நாட்களையும், ஓய்வு நாட்களையும் சபை கூடுகிற எல்லா ஆசரிப்புகளையும் நிறுத்துவேன். 12 நான் அவளது திராட்சைத்தோட்டங்களையும் அத்திமரங்களையும் அழிப்பேன். அவள், ‘எனது நேசர்கள் இவற்றை எனக்குக் கொடுத்தனர்’ என்பாள். ஆனால் நான் அவளது தோட்டத்தைக் காடாக்கும்படி செய்வேன். காட்டுமிருகங்கள் வந்து அவற்றைக் தின்னும்.

13 “அவள் பாகால்களுக்குச் சேவைசெய்தாள். எனவே நான் அவளைத் தண்டிப்பேன். அவள் பாகலுக்கு நறுமணப்பொருட்களை எரித்தாள். அவள் ஆடை அணிவித்தாள், அவள் தனது நகைகளையும், மூக்குத்தியையும் அணிவித்தாள். பிறகு அவள் தனது நேசர்களிடம் போய் என்னை மறந்துவிட்டாள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

14 “எனவே, நான் (கர்த்தர்) அவளிடத்தில் இனிமையான வார்த்தைகளால் பேசுவேன். நான் அவளை வனாந்தரத்திற்கு அழைத்துப் போவேன். நான் அவளிடம் நயமாகப் பேசுவேன். 15 அங்கே நான் அவளுக்குத் திராட்சைத் தோட்டங்களைக் கொடுப்பேன். நான் அவளுக்கு நம்பிக்கையின் வாசலைப் போன்ற ஆகோர் பள்ளத்தாக்கைக் கொடுப்பேன். பிறகு அவள் எகிப்து தேசத்திலிருந்து வந்த சமயத்திலும் தன் வாலிப நாட்களிலும் என்னோடு பேசினதுபோல் பதிலைத் தருவாள்.” 16 கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“அந்த நேரத்தில் நீங்கள் என்னை, ‘என் கணவனே’ என்று அழைப்பீர்கள். நீங்கள் என்னை ‘என் பாகாலே’ என்று அழைக்கமாட்டீர்கள். 17 நான் அவளது வாயிலிருந்து பாகால்களின் பெயர்களை எடுத்துவிடுவேன். பிறகு ஜனங்கள் மீண்டும் பாகால்களின் பெயர்களை பயன்படுத்தமாட்டார்கள்.

18 “அப்போது நான் இஸ்ரவேலர்களுக்காகக் காட்டுமிருகங்களோடும் வானத்துப் பறவைகளோடும், தரையில் ஊரும் உயிர்களோடும், ஒரு உடன்படிக்கைச் செய்துகொள்வேன். நான் போருக்குரியவில், வாள், ஆயுதம் போன்றவற்றை உடைப்பேன். தேசத்தில் எந்த ஆயுதமும் இல்லாதபடிச் செய்வேன். நான் தேசத்தைப் பாதுகாப்பாக இருக்கும்படிச் செய்வேன். எனவே இஸ்ரவேல் ஜனங்களை சமாதானமாகப் படுக்கச் செய்வேன். 19 நான் (கர்த்தர்) உன்னை என்றைக்குமான எனது மணப் பெண்ணாக்குவேன். நான் உன்னை நன்மை, நீதி, அன்பு, இரக்கம், ஆகிய குணங்கள் உள்ள என்னுடைய மணமகளாக்குவேன். 20 நான் உன்னை எனது உண்மைக்குரிய மனமகளாக்குவேன். பிறகு நீ கர்த்தரை உண்மையாகவே அறிந்துகொள்வாய். 21 அப்போது நான் மறுமொழி தருவேன்.” கர்த்தர் இதனைச் சொல்கிறார்.

“நான் வானங்களோடு பேசுவேன்
    அவை பூமிக்கு மழையைக் கொடுக்கும்.
22 பூமி தானியம், திராட்சைரசம், எண்ணெய் ஆகியவற்றை உற்பத்தி செய்யும்.
    அவை யெஸ்ரயேலின் தேவைகளைப் பூர்த்திச்செய்யும்.
23 நான் அவளது தேசத்தில் பல விதைகளை நடுவேன்.
    நான் லோருகாமாவுக்கு இரக்கம் காட்டுவேன்,
நான் லோகம்மியிடம், ‘நீங்கள் எனது ஜனங்கள்’ என்பேன்.
    அவர்கள் என்னிடம், ‘நீர் எங்களது தேவன்’ என்று சொல்வார்கள்.”

சங்கீதம் 119:97-120

மேம்

97 கர்த்தாவே, நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
    எல்லா வேளைகளிலும் நான் அவற்றைக் குறித்துப் பேசுகிறேன்.
98 கர்த்தாவே, உமது கட்டளைகள் என்னை என் பகைவரைக் காட்டிலும் ஞானமுள்ளவனாக்கும்.
    உமது சட்டம் எப்போதும் என்னோடிருக்கும்.
99 உமது உடன்படிக்கையை நான் கற்பதால் என்
    ஆசிரியர்களைக காட்டிலும் நான் ஞானமுள்ளவன்.
100 நான் உமது கட்டளைகளின்படி நடப்பதால்,
    முதியத்தலைவர்களைக் காட்டிலும் அதிகமாகப் புரிந்துக்கொள்கிறேன்.
101 வழியில் ஒவ்வொரு அடியிலும் நான் தவறான பாதையில் செல்லாதபடி காக்கிறீர்.
    எனவே, கர்த்தாவே, நீர் கூறுகின்றவற்றை நான் செய்ய முடிகிறது.
102 கர்த்தாவே, நீரே என் ஆசிரியர்.
    ஆகையால் உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்தமாட்டேன்.
103 என் வாயிலுள்ள தேனைக்காட்டிலும் உமது வார்த்தைகள் சுவையானவை.
104 உமது போதனைகள் என்னை ஞானமுள்ளவனாக மாற்றின.
    எனவே நான் தவறான போதனைகளை வெறுக்கிறேன்.

நூன்

105 கர்த்தாவே, உமது வார்த்தைகள்
    என் பாதைக்கு ஒளி காட்டும் விளக்காகும்.
106 உமது சட்டங்கள் நல்லவை.
    நான் அவற்றிற்குக் கீழ்ப்படிவேனென உறுதியளிக்கிறேன்.
    நான் என் வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
107 கர்த்தாவே, நான் நீண்ட காலம் துன்பமடைந்தேன்.
    தயவுசெய்து நான் மீண்டும் வாழும்படி கட்டளையிடும்.
108 கர்த்தாவே, என் துதியை ஏற்றுக்கொள்ளும்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
109 என் வாழ்க்கை எப்போதும் ஆபத்துள்ளதாயிருக்கிறது.
    ஆனால் நான் உமது போதனைகளை மறக்கவில்லை.
110 தீயோர் என்னைக் கண்ணியில் சிக்க வைக்கப் பார்க்கிறார்கள்.
    ஆனால் நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமலிருந்ததில்லை.
111 கர்த்தாவே, நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் பின்பற்றுவேன்.
    அது என்னை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது.
112 உமது சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதற்கு நான் எப்போதும் கடினமாக முயல்வேன்.

சாமெக்

113 கர்த்தாவே, உம்மிடம் முற்றிலும் நேர்மையாக இராத ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
    ஆனால் நான் உமது போதனைகளை நேசிக்கிறேன்.
114 என்னை மூடிமறைத்துப் பாதுகாத்துக்கொள்ளும்.
    கர்த்தாவே, நீர் கூறுகிற ஒவ்வொன்றையும் நான் நம்புகிறேன்.
115 கர்த்தாவே, தீய ஜனங்கள் என்னருகே வரவிடாதேயும்.
    நான் என் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
116 கர்த்தாவே, நீர் வாக்குறுதியளித்தபடியே என்னைத் தாங்கி உதவும். நானும் வாழ்வேன்.
    நான் உம்மை நம்புகிறேன், நான் ஏமாற்றமடையாதபடிச் செய்யும்.
117 கர்த்தாவே, எனக்கு உதவும், நான் காப்பாற்றப்படுவேன்.
    நான் உமது கட்டளைகளை என்றென்றைக்கும் கற்பேன்.
118 கர்த்தாவே, உமது சட்டங்களை மீறுகிற ஒவ்வொருவரையும் நீர் தள்ளிவிடுகிறீர்.
    ஏனெனில் அந்த ஜனங்கள் உம்மைப் பின்பற்ற சம்மதித்தபோது பொய் கூறினார்கள்.
119 கர்த்தாவே, நீர் பூமியிலுள்ள தீயோரைக் களிம்பைப்போல் அகற்றிவிடுகிறீர்.
    எனவே நான் உமது உடன்படிக்கையை என்றென்றைக்கும் நேசிப்பேன்.
120 கர்த்தாவே, நான் உம்மைக் கண்டு பயப்படுகிறேன்.
    நான் உமது சட்டங்களுக்குப் பயந்து அவற்றை மதிக்கிறேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center