Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 இராஜாக்கள் 6

எலிசாவும் கோடரியும்

தீர்க்கதரிசிகளின் குழு எலிசாவிடம், “நாங்கள் அங்கிருக்கும் இடத்தில் தங்கியிருக்கிறோம், ஆனால் அது மிகவும் சிறியது. நாம் யோர்தான் ஆற்றுவெளிக்குப் போய் கொஞ்சம் மரங்களை வெட்டிவருவோம். ஒவ்வொருவரும் ஒரு மரத்தடி கொண்டுவந்தால் வசிப்பதற்கு ஒரு இடம் அமைக்கலாம்” என்றனர்.

எலிசாவும், “நல்லது, போய் செய்யுங்கள்” என்றான்.

அவர்களில் ஒருவன், “எங்களோடு வாரும்” என்று அழைத்தான்.

எலிசாவும், “நல்லது நான் உங்களோடு வருகிறேன்” என்றான்.

எனவே எலிசாவும் தீர்க்கதரிசிகளின் குழுவோடு சென்றான். அவர்கள் யோர்தான் ஆற்றை அடைந்ததும் சில மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். ஆனால் ஒரு மனிதன் மரத்தை வெட்டும்போது, அவனது கோடரியின் தலை கழன்று தண்ணீருக்குள் விழுந்துவிட்டது. அதற்கு அவன், “ஐயோ என் எஜமானனே! அது கடனாக வாங்கியதாயிற்றே!” என்று கூறினான்.

தேவமனுஷனோ, (எலிசா) “எங்கே அது விழுந்தது?” என்று கேட்டான்.

அந்த மனிதன் எலிசாவிற்குக் கோடரி விழுந்த இடத்தைக் காட்டினான். அவன், (எலிசா) ஒரு கொம்பை வெட்டி அதை தண்ணீருக்குள் எறிந்தான். அது (மூழ்கிவிட்ட) இரும்புக்கோடரியை மிதக்கச் செய்தது. எலிசா, “கோடரியை எடுத்துக்கொள்” என்றான். பிறகு அவன் கை வைத்து அதனை எடுத்துக்கொண்டான்.

ஆராமின் அரசன் இஸ்ரவேல் அரசனைத் தந்திரமாகப் பிடிக்க முயற்சிக்கிறான்

ஆராமின் அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரை ஆரம்பித்தான். வேலைக்காரர்களோடும் படை அதிகாரிகளோடும் ஆலோசனை கூட்டம் நடத்தினான். அரசன், “இந்த இடத்தில் ஒளிந்திருங்கள். இஸ்ரவேலின் படைகள் வரும்போது தாக்க வேண்டும்” என்றான்.

ஆனால் தேவமனிதனோ (எலிசாவோ) இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு தூதுவனை அனுப்பி, “எச்சரிக்கையாய் இரு! அந்த வழியாகப் போகாதே! ஆராமியப் படை வீரர்கள் ஒளிந்திருக்கிறார்கள்!” என்று சொல்லச் செய்தான்.

10 உடனே அரசன் எலிசாவின் எச்சரிக்கைச் செய்தியை தன் படைவீரர்களுக்கு அந்த இடத்திற்கு அனுப்பி பெரும் எண்ணிக்கையில் அவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றினான்.

11 இதை அறிந்ததும் ஆராமின் அரசன் மிகவும் குலைந்து போனான். அவன் தன் அதிகாரிகளை அழைத்து, “நம் திட்டத்தை இஸ்ரவேல் அரசனுக்கு வெளிப்படுத்திய ஒற்றன் உங்களில் யார்?” என்று கேட்டான்.

12 ஒரு அதிகாரி, “எங்கள் அரசனும் ஆண்டவனுமானவரே! நம்மில் எவரும் ஒற்றராகவில்லை. நீங்கள் உங்களுடைய படுக்கையறையில் பேசுகின்ற பல இரகசியங்களையும் கூட, இஸ்ரவேலில் இருக்கிற தீர்க்கதரிசி எலிசாவால் இஸ்ரவேல் அரசனிடம் சொல்ல முடியும்!” என்றான்.

13 அதற்கு அரசன், ஆட்களை அனுப்பி “போய் எலிசாவை கண்டுபிடியுங்கள். நான் அவனைப் பிடித்துக்கொண்டுவர ஆட்களை அனுப்புவேன்” என்றான்.

வேலைக்காரர்களோ, “எலிசா தோத்தானில் இருக்கிறார்” என்றனர்.

14 பிறகு அரசன் குதிரைகள், இரதங்கள், பெரும் படை ஆகியோரைத் தோத்தானுக்கு அனுப்பினான். அவர்கள் இரவில் அந்நகரை முற்றுகை இட்டனர். 15 தேவ மனிதனின் (எலிசாவின்) வேலைக்காரன் காலையில் விரைவில் எழுந்து, வெளியே சென்றபோது படைவீரர்கள், குதிரைகள், மற்றும் இரதங்கள் ஆகியவற்றைக் கண்டான். எலிசாவின் வேலைக்காரன் (அவரிடம் ஓடி வந்து), “எஜமானரே! நாம் என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.

16 எலிசாவோ, “பயப்படவேண்டாம், ஆராம் அரசனுக்காகப் போரிடும் வீரர்களை விட நமக்காக போரிடும் வீரர்கள் அதிகம்” என்றான்.

17 பிறகு அவன் ஜெபம் செய்து “கர்த்தாவே! என் வேலைக்காரனின் கண்ணை திறந்துவிடும். அதனால் அவன் கண்டுகொள்வான்” என்று வேண்டிக்கொண்டான்.

அந்த வேலைக்காரனின் கண்களை கர்த்தர் திறந்தார். அவன் பார்த்தபோது, மலை முழுவதும் படை வீரர்களும் குதிரைகளும் இரதங்களும் நிற்பதைப் பார்த்தான் அவர்கள் எலிசாவை சுற்றியிருந்தனர்!

18 பின் அவர்கள் (ஆராமியர்கள்) கீழே இறங்கி எலிசாவிடம் வந்து நின்றதும், அவன் கர்த்தரிடம், “இம்மனிதர்கள் குருடாகப் போகும்படி உம்மை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பிறகு கர்த்தர் எலிசா வேண்டிக்கொண்டபடியே ஆராமியர்களை குருடாக்கினார். 19 எலிசா அவர்களைப் பார்த்து, “இது சரியான வழியல்ல. இது சரியான நகரமும் அல்ல. என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை நீங்கள் தேடுகிறவரிடம் அழைத்துப் போவேன்” என்றான். பிறகு அவர்களை சமாரியாவிற்கு அழைத்துப்போனான்.

20 அவர்கள் சமாரியாவை அடைந்ததும் எலிசா “கர்த்தாவே, இப்போது இந்த மனிதர்களின் கண்களைத் திறக்கச்செய்யும். எனவே அவர்கள் பார்க்க முடியும்” என்றான்.

பிறகு கர்த்தர் அவர்களின் கண்களைத் திறந்தார். அவர்கள் சமாரியாவின் நடுவே இருப்பதை பார்த்தனர்! 21 இஸ்ரவேலின் அரசன் ஆராமிய படைகளைக் கண்டதும் எலிசாவிடம் “என் தந்தையே, இவர்களைக் கொல்லட்டுமா? இவர்களைக் கொல்லட்டுமா?” என்று கேட்டான்.

22 அதற்கு எலிசா, “இவர்களைக் கொல்ல வேண்டாம். இவர்கள் உன் வாளாலும் வில்லாலும் போரில் கைப்பற்றிய வீரர்கள் அல்ல! இவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடு. அவர்களை உண்ணவும் குடிக்கவும்விடு. பின் எஜமானனிடம் செல்லவும் அனுமதிகொடு” என்றான்.

23 ஆராமியப் படைக்காக இஸ்ரவேல் அரசன் நிறைய உணவைத் தயாரித்தான்.. ஆராமியப்படை உண்டு குடித்தது. பிறகு, இஸ்ரவேல் அரசன் ஆராமியப்படையை ஆராமுக்கு அனுப்பினான். ஆராமியப் படையினர் தங்களது எஜமானனிடம் திரும்பச் சென்றார்கள். பறிமுதல் செய்வதற்காக இஸ்ரவேலுக்குள் ஆராமியர்கள் அதற்குமேல் படைகளை அனுப்பவில்லை.

சமாரியாவைப் பஞ்சம் தாக்கிய கொடிய காலம்

24 இதற்குப் பிறகு, ஆராமிய அரசனான பெனாதாத்தும் முழுப்படைகளையும் சேர்த்து சமாரியாவைத் தாக்கினான். சமாரியாவைக் கைப்பற்றினான். 25 வீரர்கள் நகருக்குள் உணவு வராதபடி தடுத்து விட்டனர். எனவே சமாரியாவில் பஞ்சமும் பட்டினியும் அதிகரித்தது. அங்கு ஒரு கழுதையின் தலை எண்பது வெள்ளிக்காசுகளுக்கும், புறாக்களுக்குப் போடும் கால்படி புறா-புழுக்கை ஐந்து வெள்ளி காசுகளுக்கும் மிக மோசமாக விற்கப்பட்டன.

26 ஒரு நாள் இஸ்ரவேல் அரசன் நகரச்சுவரின் மேல் நடந்துக்கொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் அவனிடம், “எனது அரசனாகிய ஆண்டவனே, என்னைக் காப்பாற்றும்!” என்று சத்தமிட்டாள்.

27 அதற்கு அரசன் அவளிடம், “கர்த்தரே உன்னைக் காப்பாற்றாவிட்டால் நான் எவ்வாறு உன்னைக் காப்பாற்றமுடியும்? உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. தூற்றி சுத்தம் செய்த தானியத்திலிருந்து செய்த மாவு அல்லது திராட்சையை நசுக்கும் இடத்திலிருந்து எடுக்கப்பட்ட திராட்சை ரசம் என எதுவுமில்லை” என்றான் 28 பிறகு அரசன் அவளிடம், “உனது பிரச்சனை என்ன?” என்றான்.

அதற்கு அவள், “நானும் அந்தப் பெண்ணும் ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டோம். அதன்படி என்னிடம் இவள், ‘நீ உன் மகனை தா. நாம் அவனைக் (கொன்று) தின்போம். பிறகு நான் என் மகனைத் தருவேன். அவனை நாளைத் தின்னலாம் என்றாள்.’ 29 அதன்படி என் மகனை வேகவைத்து தின்றுவிட்டோம். பிறகு மறுநாள் நான் அவளிடம், ‘எனக்கு உன் மகனைத் தா நாம் அவனைக் கொன்றுத் தின்போம்’ என்றேன். ஆனால் தன் மகனை ஒளித்து வைத்திருக்கிறாள்!” என்றாள்.

30 அரசன் அந்த பெண்ணின் வார்த்தைகளைக் கேட்டதும், தன் துக்கத்தை வெளிப்படுத்தும் பொருட்டு தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டான். அரசன் சுவர் வழியாகச் செல்லும்பொழுது, அரசன் தனது உடைகளுக்கடியில் சாக்குத்துணியை அணிந்திருந்ததை ஜனங்கள் பார்த்தார்கள். அது அரசன் துக்கமாயிருப்பதைக் காண்பித்தது.

31 அரசன் எலிசாவின் மீது கோபங்கொண்டு, “சாப்பாத்தின் மகனான எலிசாவின் தலையானது அவனது உடலில் இன்றைக்கும் தொடர்ந்து இருந்தால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.

32 எலிசாவிடம் அரசன் ஒரு தூதுவனை அனுப்பினான். எலிசா தன் வீட்டில் சில மூப்பர்களோடு இருந்தான். தூதுவன் வருமுன் அவன் (எலிசா), “கொலைக்காரனின் மகன் (இஸ்ரவேல் அரசன்) என் தலையை வெட்ட ஆட்களை அனுப்பியுள்ளான்! தூதுவன் வருகிறபோது கதவுகளை அடையுங்கள்! அவனுக்கு எதிராக சென்று அவனை வேகமாகப் பிடியுங்கள்! அவனை உள்ளே விடாதீர்கள்! அவனுக்குப் பின்னால் அவனது எஜமானின் காலடி சத்தம் கேட்கிறது!” என்றான்.

33 இவ்வாறு எலிசா மூப்பர்களோடு பேசிக் கொண்டிருக்கும்போதே தூதுவன் வந்தான். அவன், “கர்த்தரிடமிருந்தே இந்த பிரச்சனை வந்துள்ளது. எதற்காக இனி கர்த்தருக்காக காத்திருக்கவேண்டும்?” எனக் கேட்டான்.

1 தீமோத்தேயு 3

சபையில் தலைவர்கள்

நான் சொல்வதெல்லாம் உண்மையே, மூப்பரின் சேவையை விரும்புகிறவன் நல்ல வேலையைச் செய்வதையே விரும்புகிறான். ஒரு மூப்பன் நல்லவனாகவே இருக்க வேண்டும். அவன் தன்னைக் குற்றம் சாட்டப்படாதவனாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அவன் ஒரே ஒரு மனைவியை உடையவனாகவும், சுயக்கட்டுப்பாடும், ஞானமும் கொண்டவனாகவும் இருக்க வேண்டும். மற்றவர்களால் மதிக்கப்படவேண்டும் மக்களை உபசரிப்பவனாக இருக்க வேண்டும். நல்ல போதகனாகவும் இருக்க வேண்டும். அவன் மது அருந்துபவனாகவும், சண்டையிட விரும்புகிறவனாகவும் இருக்கக் கூடாது. அவன் பொறுமையும், சமாதானமும் உடையவனாக இருக்கவேண்டும். அதோடு அவன் பண ஆசை இல்லாதவனாகவும் இருக்க வேண்டும். அவன் தன் குடும்பத்தில் சிறந்த தலைவனாக இருக்க வேண்டும். அதாவது அவனது பிள்ளைகள் அவனிடம் முழு மரியாதையோடு கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தில் நல்லதொரு தலைவனாக இருக்க தெரியாவிட்டால், பிறகு எப்படி அவனால் தேவனுடைய சபைப்பொறுப்பை ஏற்று நடத்த முடியும்?

ஆனால் மூப்பராக வருகிற ஒருவன் புதிதாக விசுவாசம் கொண்டவனாக இருக்கக்கூடாது. இதில் அவன் பெருமைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவ்வாறு செய்தால் அவன் தற்பெருமைக்காகத் தண்டிக்கப்படுவான். அது சாத்தான் பெற்ற தண்டனையைப்போன்று இருக்கும். சபையில் இல்லாதவர்களின் மரியாதையையும் பெற்றவனாக மூப்பர் இருக்க வேண்டும். பிறகு அவன் மற்றவர்களால் விமர்சிக்கப்படாமல் இருப்பான். சாத்தானின் தந்திரத்துக்கும் பலியாகாமல் இருப்பான்.

சபையில் உள்ள உதவியாளர்கள்

இதே விதத்திலேயே மக்களின் மரியாதைக்கு உரியவர்களாக சிறப்பு உதவியாளர்களும் இருக்க வேண்டும். அவர்கள் நினைப்பொன்றும் சொல்லொன்றுமாக இல்லாமலும், மதுக்குடியர்களாக இல்லாமலும் இருக்கவேண்டும். மற்றவர்களை ஏமாற்றி செல்வம் சேர்ப்பவர்களாகவும் இருக்கக் கூடாது. அவர்கள், தேவன் நமக்கு வெளிக்காட்டிய உண்மைகளைக் கடைப்பிடிக்கிறவர்களாகவும் சரியெனப்படுவதை மட்டுமே செய்பவர்களாவும் இருக்க வேண்டும். 10 முதலில் நீங்கள் அவர்களைச் சோதனை செய்யுங்கள். அவர்களில் எதுவும் குற்றம் இல்லாவிட்டால் பிறகு அவர்கள் விசேஷ உதவியாளர்களாக சேவைசெய்ய முடியும்.

11 இதைப்போலவே மற்றவர்கள் மதிக்கத்தக்கவர்களாக பெண்கள் இருக்க வேண்டும். பிறர்மேல் அவதூறு பேசாதவர்களாகவும் இருக்கவேண்டும். அவர்கள் சுயக்கட்டுப்பாடு உள்ளவர்களாகவும், எல்லாவற்றிலும் உண்மை உள்ளவர்களாகவும் இருக்கவேண்டும்.

12 விசேஷ உதவியாளர்களாக இருப்பவர்கள் ஒரே ஒரு மனைவி உடையவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் தம் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் நல்ல தலைவர்களாக இருக்க வேண்டும். 13 இவ்வாறு நல்ல வழியில் சேவை செய்கிறவர்கள் ஒரு மரியாதைக்குரிய நிலையை அடைவார்கள். இயேசு கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தில் மேலும் உறுதி பெறுவார்கள்.

நம் வாழ்க்கையின் இரகசியம்

14 விரைவில் நான் உங்களிடம் வருவேன் என நம்புகிறேன். ஆனால் இப்பொழுது இதை உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். 15 பிறகு நான் விரைவில் வராவிட்டாலும் தேவனுடைய குடும்பத்தில் என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து நீங்கள் தெரிந்துகொள்வீர்கள். தேவனுடைய குடும்பம் என்பது ஜீவனுள்ள தேவனின் சபைதான். உண்மையின் தூணாகவும் அடித்தளமாகவும் சபை இருக்கிறது. 16 நம் வழிபாட்டு வாழ்வின் இரகசியம் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லாமல் மிக உயர்ந்தது ஆகும்.

“கிறிஸ்து மனித சரீரத்துடன் காட்சியளித்தார்.
அவர் நீதியானவர் என்பதை ஆவியானவர் நிரூபித்தார்.
தேவதூதர்களால் காணப்பட்டார்.
யூதர் அல்லாதவர்களின் தேசங்களில் அவரைப் பற்றிய நற்செய்தி பரப்பப்பட்டது.
உலகெங்கிலுமுள்ள மக்கள் அவர்மேல் விசுவாசம் கொண்டனர்.
அவர் மகிமையுடன் வானுலகிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்.”

தானியேல் 10

இதெக்கேல் நதிக்கரையில் தானியேலின் தரிசனம்

10 கோரேசு பெர்சியாவின் அரசன். கோரேசின் மூன்றாவது ஆட்சியாண்டில், தானியேல் இவற்றைக் கற்றுக்கொண்டான். (தானியேலின் இன்னொரு பெயர் பெல்தெஷாத்சார்). இவை உண்மையானவை, ஆனால் இவை புரிந்துகொள்வதற்குக் கடினமானது. ஆனால் தானியேல் இவற்றைப் புரிந்துகொண்டான். இவையெல்லாம் அவனுக்கு ஒரு தரிசனத்தில் விளக்கப்பட்டது.

தானியேல் சொல்கிறதாவது, “அந்தக் காலத்தில், தானியேலாகிய நான் மூன்று வாரங்களுக்குத் துக்கமாக இருந்தேன். அந்த மூன்று வாரங்களில் நான் எவ்வித ருசிகரமான உணவையும் உண்ணவில்லை. நான் எவ்வித இறைச்சியையும் உண்ணவில்லை. நான் எவ்வித திராட்சைரசத்தையும் குடிக்கவில்லை. நான் என் தலையில் எவ்வித எண்ணெயையும் தடவவில்லை. நான் இவ்விதச் செயல்கள் எவற்றையும் மூன்று வாரங்களுக்குச் செய்யவில்லை.

அந்த ஆண்டின் முதல் மாதத்தின் 28வது நாளில் நான் இதெக்கேல் நதிக்கரையில் நின்று கொண்டிருந்தேன். நான் அங்கே நின்று கொண்டிருந்தபோது, ஏறிட்டுப் பார்த்தேன். எனக்கு முன்னால் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் மெல்லிய சணல் ஆடை அணிந்திருந்தார். அவரது இடுப்பில் சுத்தமான தங்கக் கச்சையைக் கட்டியிருந்தார். அவரது உடலானது ஒளிவீசும் மிருதுவான கல்லைப் போன்றிருந்தது. அவரது முகம் மின்னலைப்போன்று ஒளி வீசியது. அவரது கண்கள் தீயின் நாவுகள் போன்றிருந்தன. அவரது கைகளும் கால்களும் துலக்கப்பட்ட வெண்கலம் போன்று இருந்தது. அவரது குரலானது ஜனங்கள் கூட்டத்தின் ஆரவாரம்போல் இருந்தது.

தானியேலாகிய நான் ஒருவன் மட்டும்தான் அந்தத் தரிசனத்தைப் பார்த்தேன். என்னோடு இருந்த மனிதர்கள் அந்தத் தரிசனத்தைப் பார்க்கவில்லை. ஆனாலும் அவர்கள் பயந்தார்கள். அவர்கள் அவ்வளவாகப் பயந்ததால் ஓடி ஒளிந்து கொண்டனர். எனவே நான் தனியாக விடப்பட்டேன். நான் இந்தத் தரிசனத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இது எனக்கு அச்சமூட்டியது. நான் என் பலத்தை இழந்தேன். எனது முகம் செத்தவனின் முகத்தைப்போன்று வெளுத்தது. நான் உதவியற்றவன் ஆனேன். பிறகு நான் தரிசனத்தில் அம்மனிதன் பேசுவதைக் கேட்டேன். அவரது குரலைக் கேட்டதும் நான் ஆழ்ந்த உறக்கத்தில் விழுந்தேன். நான் முகம் குப்புற தரையில் விழுந்து கிடந்தேன்.

10 பிறகு ஒரு கை என்னைத் தொட்டது. அது நடந்ததும் என் முழங்கால்களும், என் உள்ளங்கைகளும் தரையை ஊன்றியிருக்க என்னைத் தூக்கியது. நான் மிகவும் பயந்து நடுங்கினேன். 11 தரிசனத்தில் அம்மனிதன் என்னிடம் சொன்னான், “தானியேலே, தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். நான் உன்னிடம் பேசும் வார்த்தைகளை மிகவும் கவனமாகச் சிந்தனை செய் எழுந்து நில், நான் உன்னிடம் அனுப்பப்பட்டிருக்கிறேன்.” அவன் இதைச் சொன்னதும் நான் எழுந்து நின்றேன். நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருந்தேன். ஏனென்றால் நான் பயந்தேன். 12 பிறகு அந்த மனிதன் தரிசனத்தில் மீண்டும் பேசத்தொடங்கினான். அவன், “தானியேலே, பயப்படாதே. முதல் நாளிலேயே நீ ஞானம்பெற முடிவுச் செய்தாய். தேவனுக்கு முன்னால் பணிவாக இருக்க முடிவுசெய்தாய். அவர் உனது ஜெபங்களைக் கேட்டிருக்கிறார். நான் உன்னிடம் வந்தேன். ஏனென்றால் நீ ஜெபம் செய்திருக்கிறாய். 13 ஆனால் பெர்சியாவின் அதிபதி (சாத்தானின் தூதன்) இருபத்தொரு நாள் எனக்கு எதிராக போரிட்டு எனக்குத் தொந்தரவு கொடுத்தான். பிறகு முக்கியமான தேவ தூதர்களில் ஒருவனான மிகாவேல் உதவி செய்ய என்னிடம் வந்தான். ஏனென்றால் நான் ஒருவன்தான் அங்கு பெர்சியா அரசனிடமிருந்து வரமுடியாமல் இருந்தேன். 14 இப்பொழுதும் தானியேலே, உன்னிடம் வருங்காலத்தில் உன் ஜனங்களுக்கு என்ன ஏற்படும் என்று சொல்ல நான் உன்னிடம் வந்திருக்கிறேன். தரிசனமானது நிறைவேற இன்னும் நாளாகும்” என்றான்.

15 அவன் என்னோடு இதனைப் பேசிக்கொண்டிருக்கும்போது என் முகம் தரையைத் தொடும்படி நான் தலை கவிழ்ந்து குனிந்தேன். என்னால் பேச முடியவில்லை. 16 பிறகு மனிதனைப்போன்று தோற்றமளித்த ஒருவன் என் உதடுகளைத் தொட்டான். நான் வாயைத்திறந்து பேச ஆரம்பித்தேன். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவனிடம் நான், “ஐயா, நான் கலக்கமடைந்தேன், பயப்படுகிறேன். ஏனென்றால், நான் பார்த்த தரிசனம் இத்தகையது. நான் உதவியற்றவனாக உணருகிறேன். 17 ஐயா, நான் உமது ஊழியனான தானியேல். நான் உம்மோடு எப்படிப் பேசமுடியும்? எனது பலம் போய்விட்டது. எனக்கு மூச்சுவிடவே கடினமாக இருக்கிறது” என்றேன்.

18 மனிதனைப் போன்று தோற்றமளித்தவன் என்னை மீண்டும் தொட்டான். அவன் என்னைத் தொட்ட பின் நான் திடமாக உணர்ந்தேன். 19 பிறகு அவன் என்னிடம், “தானியேலே, பயப்படாதே தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். சமாதானம் உன்னுடன் இருப்பதாக. இப்போதும் திடங்கொள்” என்றான்.

அவன் என்னோடு பேசியபோது நான் பலமடைந்தேன். பிறகு நான் “ஐயா, நீர் எனக்குப் பலத்தைக் கொடுத்தீர். இப்பொழுது நீர் பேசலாம்” என்றேன்.

20 அவன், என்னிடம், தானியேலே, நான் உன்னிடம் எதற்காக வந்தேன் என்று உனக்குத் தெரியுமா? நான் பெர்சியா அதிபதிக்கு எதிராகச் சண்டையிட விரைவில் திரும்பிப் போகவேண்டும். நான் போகும்போது, கிரேக்க அதிபதி வருவான். 21 ஆனால் தானியேலே, நான் போகும்முன், சத்தியமாகிய புத்தகத்திலே என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதை முதலில் உனக்குச் சொல்லவேண்டும். மிகாவேலைத் தவிர வேறுயாரும் அத்தீய தூதர்களுக்கெதிராக என்னுடன் நிற்பதில்லை. மிகாவேல் உன் ஜனங்களின் அதிபதியாக ஆளுகை செய்கிறான்.

சங்கீதம் 119:1-24

ஆலெப

119 பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அந்த ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளைப் பின்பற்றுகிறார்கள்.
கர்த்தருடைய உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
    அவர்கள் தங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
அந்த ஜனங்கள் தீயவற்றைச் செய்வதில்லை.
    அவர்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறார்கள்.
கர்த்தாவே, நீர் எங்களுக்கு உமது கட்டளைகளைக் கொடுத்தீர்.
    அந்தக் கட்டளைகளுக்கு முற்றிலுமாகக் கீழ்ப்படியுமாறு கூறினீர்.
கர்த்தாவே, நான் எப்போதும் உமது சட்டங்களுக்குக்
    கீழ்ப்படிந்தால் ஒருபோதும் அவமானப்படமாட்டேன்.
நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது
    நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.
உமது நியாயத்தையும் நன்மையையும் குறித்துப் படிக்கும்போது
    உம்மை உண்மையாகவே மகிமைப்படுத்தமுடியும்.
கர்த்தாவே, நான் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவேன்.
    எனவே தயவுசெய்து என்னை விட்டு விலகாதேயும்!

பேத்

ஒரு இளைஞன் எவ்வாறு பரிசுத்த வாழ்க்கை வாழமுடியும்?
    உமது வழிகாட்டுதலின்படி நடப்பதால் மட்டுமே.
10 நான் என் முழு இருதயத்தோடும் தேவனுக்கு சேவைசெய்ய முயல்வேன்.
    தேவனே, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய எனக்கு உதவும்.
11 நான் மிகவும் கவனமாக உமது போதனைகளைக் கற்றுக்கொள்ளுகிறேன்.
    ஏனெனில் அப்போது நான் உமக்கெதிராகப் பாவம் செய்யமாட்டேன்.
12 ஆண்டவரே நீர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்.
    உமது சட்டங்களை எனக்குப் போதியும்.
13 உமது ஞானமான முடிவுகளைப்பற்றி நான் பேசுவேன்.
14 வேறெதைக் காட்டிலும் உமது உடன்படிக்கையைக்
    கற்பதில் களிப்படைவேன்.
15 நான் உமது சட்ட விதிகளை கலந்து ஆலோசிப்பேன்.
    உமது வாழ்க்கை முறைகளைப் பின்பற்றுவேன்.
16 நான் உமது சட்டங்களில் களிப்படைகிறேன்.
    உமது வார்த்தைகளை நான் மறக்கமாட்டேன்.

கிமெல்

17 உமது ஊழியனாகிய என்னிடம் நல்லவராயிரும்.
    அதனால் நான் வாழ்ந்து உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
18 கர்த்தாவே, எனது கண்களைத் திறவும்.
    நான் உமது போதனைகளைப் பார்க்கட்டும்,
    நீர் செய்த அற்புதமான காரியங்களைப்பற்றிப் படிக்கட்டும்.
19 நான் இத்தேசத்தில் ஒரு அந்நியன்.
    கர்த்தாவே, என்னிடமிருந்து உமது போதனைகளை மறைக்காதேயும்.
20 நான் எப்போதும் உமது நியாயங்களைக்
    கற்க விரும்புகிறேன்.
21 கர்த்தாவே, நீர் பெருமைக்காரர்களைக் குறை கூறுகிறீர்.
    அவர்களுக்குத் தீமைகள் நேரிடும்.
    அவர்கள் உமது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறார்கள்.
22 நான் வெட்கமுற்று அவமானப்படச் செய்யாதேயும்.
    நான் உமது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிறேன்.
23 தலைவர்களும்கூட என்னைப்பற்றித் தீயவற்றைக் கூறினார்கள்.
    ஆனால் கர்த்தாவே, நான் உமது பணியாள், நான் உமது சட்டங்களைக் கற்றுக்கொள்கிறேன்.
24 உமது உடன்படிக்கை என் நல்ல நண்பனைப் போல உள்ளது.
    அது நல்ல அறிவுரையை எனக்குத் தருகிறது.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center