M’Cheyne Bible Reading Plan
நாகமானின் பிரச்சனை
5 நாகமான் என்பவன் ஆராம் அரசனின் படைத் தளபதி ஆவான். அவன் அரசனுக்கு மிகவும் முக்கியமானவன். ஏனெனில் அவன் மூலமாகத்தான் கர்த்தர் ஆராமுக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அவன் மகா பராக்கிரமசாலியாக இருந்தான். ஆனால் தொழுநோயால் துன்புற்றான்.
2 ஆராமிய படை பல பிரிவுகளை அனுப்பி இஸ்ரவேலரோடு சண்டையிட்டது. அவர்கள் ஜனங்களை அடிமைகளாகப் பிடித்துவந்தனர். ஒரு தடவை ஒரு சிறு பெண்ணைப் பிடித்துவந்தனர். அவள் நாகமானின் மனைவிக்கு வேலைக்காரியாக இருந்தாள். 3 அவள் தனது எஜமானியிடம், “சமாரியாவில் வாழும் தீர்க்கதரிசியை (எலிசாவை) நமது எஜமான் (நாகமான்) பார்க்கவேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர் இவரது தொழுநோயைக் குணமாக்குவார்” என்றாள்.
4 நாகமானும் அவனது எஜமானிடம் (அரசனிடம்) போய், இஸ்ரவேலியப் பெண் கூறியதைச் சொன்னான்.
5 ஆராமின் அரசனும், “இப்போதே செல், நானும் இஸ்ரவேல் அரசனுக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்புகிறேன்” என்றான்.
எனவே நாகமான் இஸ்ரவேலுக்குச் சென்றான். தன்னோடு சில அன்பளிப்புகளாக 750 பவுண்டு வெள்ளி, 6,000 தங்கத்துண்டுகள், 10 மாற்றுத்துணிகள் ஆகியவற்றை எடுத்துச் சென்றான். 6 அதோடு அரசனின் கடிதத்தையும் எடுத்துச்சென்றான். அக்கடிதத்தில், “இப்போது, என் சேவகனான நாகமானை நான் அனுப்பியிருக்கிறேன் என்பதை இக்கடிதம் காட்டும். அவனது தொழுநோயைக் குணமாக்கவும்” என்று எழுதப்பட்டிருந்தது.
7 இஸ்ரவேல் அரசன் கடிதத்தை வாசித்ததும் வருத்தப்பட்டு தனது ஆடைகளைக் கிழித்தான். தனது வருத்தத்தை வெளிப்படுத்த அவன், “நான் தேவனா? இல்லை. மரணத்தின் மீதும் வாழ்வின் மீதும் எனக்கு அதிகாரமில்லை. அப்படியிருக்க ஆராம் அரசன் என்னிடம் ஒரு தொழுநோயாளியைக் குணப்படுத்த ஏன் அனுப்பினான்? இதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். இது ஒரு தந்திரம்தான். ஒரு போரை ஆரம்பிக்கவே ஆராம் அரசன் முயற்சி செய்கிறான்” என்றான்.
8 அரசன் வருத்தப்பட்டுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டதைப்பற்றி தேவமனிதனான எலிசா அறிந்தான். உடனே தன் தூதுவனை அனுப்பி, “ஏன் உங்கள் ஆடைகளைக் கிழித்துகொண்டீர்கள், நாகமானை என்னிடம் அனுப்புங்கள். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலில் ஒரு தீர்க்கதரிசி இருக்கிறார் என்பதைத் தெரிந்துக்கொள்வார்கள்!” என்று தெரிவித்தான்.
9 ஆகவே, நாகமான் தனது குதிரைகளோடும் இரதங்களோடும், எலிசாவின் வீட்டிற்கு வந்து கதவிற்கு வெளியே நின்றான். 10 எலிசா நாகமானிடம் ஒரு தூதுவனை அனுப்பினான். அத்தூதுவன் நாகமானிடம், “போய் யோர்தான் ஆற்றில் ஏழுமுறை ஸ்நானம்பண்ணு. பின் உன் தோல் குணமாகும். நீயும் சுத்தமாவாய்” என்று கூறினான்.
11 நாகமான் மிகவும் கோபப்பட்டு வெளியேறினான். அவன், “அவர் (எலிசா) வெளியே வந்து என் முன்னால் நிற்பார். அவரது தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் கூறுவார். எனது உடல் மீது தனது கைகளை அசைத்து நோயைக் குணப்படுத்துவார் என்று நினைத்தேன். 12 இஸ்ரவேலில் கிடைக்கும் எல்லா தண்ணீரையும்விடவும் ஆப்னா, பர்பாரும் ஆகிய தமஸ்குவின் ஆறுகள் சிறந்தவை. அப்படியிருக்க நான் ஏன் அவற்றில் ஸ்நானம் பண்ணி சுத்தமடையக் கூடாது?” என்றவாறு கோபத்தோடு திரும்பிப் போனான்.
13 ஆனால் நாகமானின் வேலைக்காரர்கள் அவனிடம் வந்து, “தந்தையே! தீர்க்கதரிசி உம்மிடம் சில பெருஞ்செயல்களைச் செய்ய வேண்டும் என்று சொல்லியிருந்தால், நீர் செய்திருப்பீரல்லவா? எனவே அவர் எளிதானவற்றைச் சொன்னாலும் அதற்குக் கீழ்ப்படியவேண்டும். அவர் (தீர்க்கதரிசி), ‘ஸ்நானம் பண்ணு நீ சுத்தமடைவாய்’ என்று கூறியிருக்கிறார்” என்றனர்.
14 எனவே நாகமான் தேவமனிதன் (தீர்க்கதரிசி எலிசா) சொன்னவாறு செய்தான். அவன் போய் யோர்தான் ஆற்றில் ஏழு தடவை மூழ்கி சுத்தமானான்! அவனது தோல் குழந்தையின் தோலைப் போன்று மென்மையாயிற்று.
15 நாகமானும் அவனது குழுவும் தேவ மனிதனிடம் (எலிசாவிடம்) திரும்பி வந்தனர். நாகமான் எலிசாவின் முன் நின்று, “உலகம் முழுவதிலும் பாரும், இஸ்ரவேலைத் தவிர வேறெங்கும் தேவன் இல்லை என்பதைத் தெரிந்துக்கொண்டேன்! இப்போது உமது வேலையாளான என்னிடமிருந்து அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளுங்கள்!” என்றான்.
16 ஆனால் எலிசாவோ, “நான் கர்த்தருக்கு ஊழியம் செய்கிறேன். நான் எவ்வித அன்பளிப்புகளையும் ஏற்றுக்கொள்ளமாட்டேன், என்று கர்த்தர் மீது ஆணையிட்டுள்ளேன்” என்றான்.
நாகமான் எவ்வளவோ முயன்று பார்த்தான். எலிசாவோ அன்பளிப்புகளை ஏற்றுக்கொள்ளவில்லை. 17 பிறகு நாகமான், “எனது அன்பளிப்புகளை நீங்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் எனக்காக இதைச் செய்யுங்கள். நான் இரண்டு கோவேறு கழுதைகள் சுமக்கும்படி இஸ்ரவேலிலிருந்து மண் எடுத்துச்செல்ல அனுமதிக்கவேண்டும். ஏனெனில் இனிமேல் நான் கர்த்தரைத் தவிர வேறு எந்த தெய்வங்களுக்கும் காணிக்கையும் பலிகளையும் தகன பலியையும் அளிக்கமாட்டேன்! 18 இதற்காக என்னை மன்னிக்கும்படி இப்போழுது கர்த்தரை வேண்டிக்கொள்கிறேன். என் எஜமான் (அரசன்) போலித் தெய்வமான ரிம்மோனின் ஆலயத்திற்குள் போய் தொழுகைச் செய்யும்போது நானும் அவனோடு போகவேண்டியதிருக்கும். என் மீது சாய்ந்துக்கொள்ள அரசன் விரும்புவான். எனவே அந்த ரிம்மோனின் ஆலயத்திற்குள் வணங்கிக் குனியவேண்டியதிருக்கும் அதற்காக இப்போதே கர்த்தரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றான்.
19 பிறகு எலிசா நாகமானிடம், “சமாதானமாகப் போ” என்றான். எனவே அவன் எலிசாவை விட்டுவிட்டு கொஞ்ச தூரம் போனான். 20 ஆனால் தேவமனிதனின் (எலிசாவின்) வேலைக்காரனான கேயாசி, “பாருங்கள் எனது எஜமானன் (எலிசா) ஆராமியனான, நாகமானிடமிருந்து அவன் கொண்டுவந்த எவ்வித அன்பளிப்புகளையும் பெற்றுக்கொள்ளாமல் போக அனுமதித்திருக்கிறார்! நான் அவன் பின்னால் ஓடிப்போய் கொஞ்சம் பெற்றுக்கொள்ள வேண்டும்!” என்று கூறி, 21 நாகமானின் பின்னால் ஓடினான். இவன் வருவதைக் கவனித்த நாகமான். இரதத்திலிருந்து இறங்கி, “எல்லாம் சரியாய் உள்ளதா?” என்று கேட்டான்.
22 அதற்கு கேயாசி, “எல்லாம் சரியாக உள்ளது. எனது எஜமானர் அனுப்பினார். தீர்க்கதரிசிகளின் குழுவில் இருந்து இரண்டு இளைஞர்கள் எப்பிராயீம் மலைநாட்டிலிருந்து வந்துள்ளனர். அவர்களுக்கு தயவுசெய்து 75 பவுண்டு வெள்ளியும் இரண்டு மாற்று ஆடைகளையும் கொடுக்கவேண்டும்” என்றான்.
23 அதற்கு நாகமான், “தயவு செய்து 150 பவுண்டு வெள்ளியை எடுத்துக்கொள்க” என்றான். பின் அவனை (எடுக்க) அவசரப்படுத்தி இரண்டு பைகளில் இரண்டு தாலந்த வெள்ளியையும் இரண்டு மாற்று ஆடைகளையும் கட்டினான். பிறகு நாகமான் இவற்றை அவனது இரண்டு வேலைக்காரர்களிடம் கேயாசிக்குத் தூக்கி வரும்படி கொடுத்தான். 24 கேயாசி குன்றுக்கருகில் வந்ததும் வேலைக்காரர்களிடம் இருந்து அவற்றை வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டான். தன் வீட்டிற்குள் அவற்றை மறைத்தான்.
25 அவன் வந்து எஜமான் (எலிசாவின்) முன் நின்றதும் எலிசா அவனிடம், “எங்கே போயிருந்தாய் கேயாசி?” எனக் கேட்டான்.
அதற்கு கேயாசி, “எங்கும் போகவில்லையே!” என்றான்.
26 எலிசா அவனிடம், “இது உண்மை இல்லை! நாகமான் இரதத்திலிருந்து இறங்கி உன்னை எதிர்கொண்டபோதே என் மனம் உன்னோடு வந்துவிட்டதே. பணம், ஆடை, ஒலிவ எண்ணெய், திராட்சை, ஆடு, பசுக்கள், ஆண்கள் அல்லது பெண்கள் அடிமைகள் போன்றவற்றை அன்பளிப்பாகப் பெறும் காலம் இதுவல்ல. 27 இப்போது நீயும் உன் பிள்ளைகளும் நாகமானின் நோயைப் பெறுவீர்கள். உனக்கு இனி எப்போதும் தொழுநோய் இருக்கும்!” என்றான்.
கேயாசி எலிசாவை விட்டு விலகியதும் அவனது, தோல் பணியைப்போன்று வெளுத்தது! அவன் தொழுநோயாளியானான்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் சில விதிமுறைகள்
2 எல்லாருக்குமாக பிரார்த்தனை செய்யுங்கள் என்று முதலில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். எல்லாரையும் பற்றி தேவனிடம் பேசுங்கள். அவர்களுக்குத் தேவையானவற்றைப்பற்றிக் கேளுங்கள். அவரிடம் நன்றியுணர்வுடன் இருங்கள். 2 அரசர்களுக்காகவும், அதிகாரம் உள்ளவர்களுக்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும். முழுக்க முழுக்க சேவையும், தேவனைக் குறித்த மரியாதையும் அமைதியும் சமாதானமும் உள்ள வாழ்வை நாம் பெறும்பொருட்டு அத்தலைவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 3 இது நன்று. நம் மீட்பரான தேவனுக்கு இது மிகவும் விருப்பமானது.
4 அனைத்து மக்களும் மீட்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். அனைத்து மக்களும் உண்மையை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் தேவன் ஆசைப்படுகிறார். 5 ஒரே ஒரு தேவனே இருக்கிறார். மனிதர்கள் தேவனை அடைவதற்கும் ஒரே ஒரு வழிதான் உள்ளது. அவ்வழி மனிதனாகப் பிறந்த கிறிஸ்துவாகிய இயேசுவின் மூலம் உருவாகிறது. 6 அனைத்து மக்களின் பாவங்களுக்காகவும் அவர் தன்னையே தந்துவிட்டார். தேவன் எல்லாரையும் மீட்க விரும்புகிறார் என்பதற்கு இயேசுவே சாட்சி. அவர் சரியான நேரத்தில் வந்தார். 7 அதனால்தான் நற்செய்தியைப் பரப்புவதற்காக, நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதனால் தான் நான் அப்போஸ்தலானாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டேன். (நான் உண்மையைத் தான் சொல்கிறேன். பொய் சொல்லவில்லை) யூதர் அல்லாதவர்களுக்கான போதகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் அவர்கள் விசுவாசம் கொள்ளவும், உண்மையை அறிந்துகொள்ளவும் போதிக்கிறேன்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் விசேஷ விதிமுறைகள்
8 ஆண்கள் எல்லா இடத்திலும் பிரார்த்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். கைகளை உயர்த்தி ஜெபம் செய்யும் இவர்கள் தூய்மையானவர்களாக இருக்கவேண்டும். இவர்கள் கோபமும், தர்க்கமும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும்.
9 பெண்கள் தமக்குப் பொருத்தமான ஆடைகளை அணியவேண்டுமென்று விரும்புகிறேன். மரியாதைக்குரிய விதத்தில் அவர்கள் ஆடைகள் இருக்கவேண்டும். எளிமையாகவும், சரியான சிந்தனை உடையவர்களாகவும் அவர்கள் இருக்க வேண்டும். அவர்கள் நவநாகரீகமான தலையலங்காரமும், பொன், முத்து நகையலங்காரங்களும், விலையுயர்ந்த ஆடை அலங்காரங்களும் இல்லாமல் இருப்பார்களாக. 10 ஆனால், அவர்கள் அழகானவர்களாகத் தோன்ற நற்செயல்களைச் செய்ய வேண்டும். தேவனை வழிபடுகிற பெண்கள் அவ்விதத்திலேயே தங்களை அலங்கரித்துக்கொள்ள வேண்டும்.
11 பெண்கள் எல்லாவற்றிலும் அடக்கம் உடையவராய் இருந்து அமைதியோடு கற்றுக்கொள்ள வேண்டும். 12 ஆணுக்கு ஒரு பெண் கற்பிக்க நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். அதோடு ஆண் மீது ஒரு பெண் அதிகாரம் செலுத்தவும் நான் ஒத்துக்கொள்ளமாட்டேன். பெண்கள் தொடர்ந்து எப்போதும் அமைதியாக இருக்கவேண்டும். 13 ஏனெனில் ஆதாமே முதலில் படைக்கப்பட்டான். ஏவாள் பிறகு தான் படைக்கப்பட்டாள். 14 அதோடு, சாத்தானின் தந்திரத்துக்குள் ஆதாம் அகப்படவில்லை. பெண் தான் முதலில் தந்திரத்துக்குள் சிக்கி பாவியானாள். 15 தொடர்ந்து விசுவாசமும் அன்பும் புனிதமும் கொண்டு நல்ல வழியில் கட்டுப்பாட்டோடு பெண்கள் நடந்துகொண்டால், அவர்கள் தம் பிள்ளைப் பேற்றின் மூலம் இரட்சிக்கப்படுவார்கள்.
தானியேலின் ஜெபம்
9 தரியு அரசனான முதலாம் ஆண்டில் இவை நிகழ்ந்தன. தரியு அகாஸ்வேரு என்னும் பெயருடையவனின் மகன். தரியு மேதிய குலத்தை சேர்ந்தவன். அவன் பாபிலோனின் அரசனானான். 2 தரியு அரசனாக இருந்த முதலாம் ஆண்டில் தானியேலான நான், சில புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்புத்தகங்களில், கர்த்தர் எரேமியா தீரிக்கதரிசியிடம் எருசலேம் மீண்டும் கட்டப்படுவதற்கு முன் எத்தனை வருடங்கள் கடந்து செல்லும் என்று சொல்லியிருந்ததை நான் பார்த்தேன். கர்த்தர் 70 ஆண்டுகள் கடந்து செல்லும் என்று கூறினார்.
3 பிறகு நான் என் தேவனாகிய ஆண்டவரிடம் திரும்பி, ஜெபம் செய்து உதவி செய்யுமாறு அவரிடம் வேண்டினேன். நான் எந்த உணவையும் உண்ணவில்லை. நான் துக்கத்தைக் காட்டும் ஆடையை அணிந்தேன். நான் என் தலையில் புழுதியைப் போட்டுக்கொண்டேன்.
4 நான் என் தேவனாகிய கர்த்தரிடம் ஜெபித்தேன். நான் எனது எல்லாப் பாவங்களையும் அவரிடம் சொன்னேன்.
நான், “கர்த்தாவே, நீர் மகத்துவமும் பயங்கரமும் வாய்ந்த தேவன். நீர் உம்மிடம் அன்பு செய்கிற ஜனங்களிடம் உமது அன்பும் கருணையும் உள்ள உடன்படிக்கையைக் கடைப்பிடிக்கிறீர். உமது கற்பனைகளுக்கு அடிபணிகிறவர்களுக்கு உமது உடன்படிக்கையைக் காப்பாற்றுகிறீர்.
5 “ஆனால் கர்த்தாவே, நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் தவறு செய்திருக்கிறோம். நாங்கள் உமக்கு எதிராகத் திரும்பினோம். நாங்கள் உமது கற்பனைகளையும் சரியான நியாயங்களையும் விட்டு விலகிப்போனோம். 6 நாங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் காது கொடுத்து கவனிக்கவில்லை. அவர்கள் உமது ஊழியர்கள். தீர்க்கதரிசிகள் உமக்காகப் பேசினார்கள். அவர்கள் எங்கள் அரசர்களிடமும், எங்கள் தலைவர்களிடமும், எங்கள் தந்தைகளிடமும் பேசினார்கள். அவர்கள் இஸ்ரவேலிலுள்ள எல்லா ஜனங்களிடமும் பேசினார்கள். ஆனால் நாங்கள் அத்தீர்க்கதரிசிகள் சொன்னவற்றைக் கவனிக்கவில்லை.
7 “கர்த்தாவே, நீர் நல்லவர். நீதி உமக்கே உரியது. ஆனால் இன்று வெட்கக்கேடு எங்களுக்கு உரியதாயிற்று. யூதா மற்றும் எருசலேமிலுள்ள ஜனங்களுக்கு அவமானம் உரியதாயிற்று. அவமானம் இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களுக்கும் உமக்கு அருகிலே உள்ள ஜனங்களுக்கும் உமக்குத் தொலைவிலே உள்ள ஜனங்களுக்கும் உரியதாயிற்று. கர்த்தாவே, அந்த ஜனங்களை நீர் பலதேசங்களில் சிதறடித்தீர். அத்தேசங்களிலுள்ள இஸ்ரவேல் ஜனங்கள் அவமானப்படுவார்களாக. கர்த்தாவே, அவர்கள் உமக்கு எதிராகச் செய்த அனைத்து கேடுகளுக்கும் அவமானப்படுவார்களாக.
8 “கர்த்தாவே, நாங்கள் எல்லோரும் அவமானப்படவேண்டும். எங்களது எல்லா அரசர்களும் தலைவர்களும் அவமானப்படவேண்டும். எங்கள் முற்பிதாக்களும் அவமானப்படவேண்டும். ஏனென்றால், நாங்கள் உமக்கு எதிராகப் பாவங்கள் செய்தோம்.
9 “ஆனாலும் கர்த்தாவே, நீர் தயவுடையவர் நீர் ஜனங்கள் செய்த தீமைகளை மன்னித்துவிடுகிறீர். நாங்கள் உண்மையில் உமக்கு எதிராகத் திரும்பினோம். 10 நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு அடிபணியவில்லை. கர்த்தர் தமது ஊழியர்களாகிய தீர்க்கதரிசிகளை அனுப்பி எங்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தார். ஆனால் நாங்கள் அவற்றுக்குக் கீழ்ப்படியவில்லை. 11 இஸ்ரவேலில் உள்ள எந்த ஜனங்களும் உமது போதனைகளுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் அனைவரும் திரும்பிவிட்டனர். அவர்கள் உமக்குக் கீழ்ப்படியவில்லை. மோசேயின் சட்டத்தில் சாபங்களும் வாக்குத்தத்தங்களும் எழுதப்பட்டிருக்கின்றன. (மோசே தேவனுடைய ஊழியன்). அச்சாபங்களும் வாக்குத்தத்தங்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்குரிய தண்டனையைப் பற்றிக் கூறுகிறது. அவையெல்லாம் எங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றன. ஏனென்றால் நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
12 “தேவன், எங்களுக்கும் எங்கள் தலைவர்களுக்கும் இவை ஏற்படும் என்று சொன்னார். அவர் அவை எங்களுக்கு ஏற்படும்படிச் செய்தார். அவர், எங்களுக்குப் பயங்கரமானவை ஏற்படும்படிச் செய்தார். எருசலேம் துன்பப்பட்டது போன்று வேறெந்த நகரமும் துன்பப்பட்டதில்லை. 13 அந்தப் பயங்கரமானவை எல்லாம் எங்களுக்கு ஏற்பட்டன. மோசேயின் சட்டத்தில் எழுதப்பட்டிருந்தபடியே இவை நிகழ்ந்தன. ஆனால் நாங்கள் இன்னும் கர்த்தரிடம் உதவி கேட்கவில்லை. நாங்கள் இன்னும் பாவம் செய்வதை நிறுத்தவில்லை. கர்த்தாவே நாங்கள் உமது சத்தியத்தில் கவனம் செலுத்தவில்லை. 14 கர்த்தர் எங்களுக்காகப் பயங்கரமானவற்றைத் தயார் செய்து வைத்திருந்தார். அவை எங்களுக்கு ஏற்படும்படி அவர் செய்தார். கர்த்தர் இதனைச் செய்தார். ஏனென்றால் அவர் செய்கிற எல்லாவற்றிலும் நியாயமாக இருந்தார். ஆனால் நாங்கள் இன்னும் அவருக்குக் கீழ்ப்படியாமல் இருந்திருக்கிறோம்.
15 “கர்த்தாவே, எங்கள் தேவனே, உமது வல்லமையைப் பயன்படுத்தி எங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தீர். நாங்கள் உமது ஜனங்கள். இதன் மூலம் இன்றும் நீர் புகழ்பெற்று விளங்குகிறீர். கர்த்தாவே நாங்கள் பாவம் செய்திருக்கிறோம். நாங்கள் பயங்கரமானவற்றைச் செய்திருக்கிறோம். 16 கர்த்தாவே, எருசலேம் மீது கொண்ட கோபத்தை நிறுத்தும். எருசலேம் உமது பரிசுத்தமான மலையின் மீது இருக்கிறது. நீர் சரியானவற்றையே செய்கிறீர். எனவே எருசலேம் மீதுள்ள கோபத்தை நிறுத்தும். எங்களைச் சுற்றியுள்ள ஜனங்கள் எங்களை அவமதிக்கிறார்கள். அவர்கள் உமது ஜனங்களைக் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் நாங்களும் எங்கள் முற்பிதாக்களும் உமக்கு எதிராகப் பாவம் செய்தோம்.
17 “இப்பொழுதும், கர்த்தாவே, எனது ஜெபத்தைக் கேளும். நான் உமது ஊழியன். உதவிக்கான என்னுடைய ஜெபத்தைக் கேளும். உமது பரிசுத்தமான இடத்திற்கு நன்மையைச் செய்யும். அந்தக் கட்டிடம் அழிக்கப்பட்டது. ஆனாலும் ஆண்டவரே, உமது பரிசுத்தமான இடத்தினிமித்தம் இந்நன்மையைச் செய்யும். 18 என் தேவனே, என்னைக் கவனித்துக் கேளும்! உமது கண்களைத் திறந்து, எங்களுக்கு ஏற்பட்ட கொடூரங்களைப் பாரும். உமது நாமத்தால் அழைக்கப்பட்ட நகரத்திற்கு என்ன நேரிட்டது என்று பாரும்! நாங்கள் நல்ல ஜனங்கள் என்று நான் சொல்லவில்லை. அதற்காகத்தான் நான் இவற்றையெல்லாம் கேட்கவில்லை. நான் இவற்றைக் கேட்கிறேன். ஏனென்றால் நான் உமது இரக்கத்தை அறிவேன். 19 கர்த்தாவே, என்னைக் கவனித்துக் கேளும். கர்த்தாவே எங்களை மன்னியும். கர்த்தாவே கவனித்து, ஏதாவது செய்யும். காத்திருக்கவேண்டாம். இப்பொழுது ஏதாவது செய்யும். இதனை உமது மகிமைக்காகச் செய்யும். என் தேவனே, இப்பொழுது உமது நாமத்தால் அழைக்கப்படுகிற உமது நகரத்துக்காகவும், உமது ஜனங்களுக்காகவும் ஏதாவது செய்யும்” என்றேன்.
70 வாரங்கள் பற்றிய தரிசனம்
20 நான் எனது ஜெபத்தில் தேவனிடம் இவற்றைச் சொன்னேன். நான் எனது பாவங்களைப் பற்றியும், இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டிருந்தேன். நான் தேவனுடைய பரிசுத்தமான மலைக்காக ஜெபித்துக்கொண்டிருந்தேன். 21 நான் ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, காபிரியேல் என்ற தூதன் என்னிடம் வந்தான். காபிரியேல் நான் தரிசனத்தில் பார்த்த மனிதன். காபிரியேல் விரைவாக என்னிடம் பறந்துவந்தான். அவன் மாலைப் பலி நேரத்தில் வந்தான். 22 காபிரியேல், நான் அறிய விரும்பியவற்றை நான் புரிந்துகொள்ள உதவினான். காபிரியேல் என்னிடம், “தானியேலே, நான் உனக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுக்க வந்திருக்கிறேன். 23 நீ முதலில் ஜெபிக்க ஆரம்பித்தபோதே எனக்குக் கட்டளை கொடுக்கப்பட்டது. நான் உன்னிடம் சொல்ல வந்தேன். தேவன் உன்னை மிகவும் நேசிக்கிறார். இந்தக் கட்டளையை நீ புரிந்துகொள்வாய். நீ இந்தத் தரிசனத்தைப் புரிந்துகொள்வாய்.
24 “தேவன் 70 வாரங்களை உனது ஜனங்களுக்கும் உனது பரிசுத்தமான நகரத்திற்கும் அனுமதித்தார். தீமைகள் செய்வதை நிறுத்துவதற்கும், பாவங்கள் செய்வதை நிறுத்துவதற்கும், ஜனங்களைச் சுத்தப்படுத்துவதற்கும், என்றென்றும் நிலைத்திருக்கிற நன்மையைக் கொண்டு வருவதற்கும், தரிசனங்களையும், தீர்க்கதரிசிகளையும் முத்திரையிடுவதற்கும், மிகப்பரிசுத்தமான இடத்தை அர்ப்பணிப்பதற்கும் இந்த 70 வாரங்கள் நியமிக்கப்பட்டன.
25 “தானியேலே, இவற்றைக் கற்றுக்கொள். இவற்றைப் புரிந்துகொள், எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுவதற்கான கட்டளை தரப்பட்டதுமுதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன் வரும்வரை ஏழு வாரங்களாகும். எருசலேம் மீண்டும் கட்டப்பட்டு கூட்டம் கூடுவதற்கான இடங்கள் ஏற்படுத்தப்படும். பாதுகாப்பிற்காக நகரத்தைச் சுற்றி ஒரு பள்ளம் தோண்டப்படும். எருசலேமானது 62 வாரங்களில் கட்டப்படும். ஆனால் அந்நேரத்தில் அநேக துன்பங்கள் நேரிடும். 26 62 வாரங்கள் சென்றபிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர் கொல்லப்படுவான். அவன் போய்விடுவான். பிறகு வருங்காலத் தலைவனின் ஜனங்கள் நகரத்தையும் பரிசுத்தமான இடத்தையும் அழிப்பார்கள். அம்முடிவானது வெள்ளத்தைப்போன்று வரும். போரானது முடிவுவரை தொடரும். அந்த இடம் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று தேவன் கட்டளை கொடுத்திருக்கிறார்.
27 “பிறகு, வருங்கால அரசன் பல ஜனங்களோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்வான். அந்த ஒப்பந்தம் ஒரு வாரத்திற்கு நீடிக்கும். அரை வாரத்திற்குப் பலிகளும் காணிக்கைகளும் நிறுத்தப்படும். பாழாக்குகிறவன் வருவான். அவன் பயங்கரங்களையும், அழிவுக்குரியக் காரியங்களையும் செய்வான். ஆனால் தேவன், அந்த பாழாக்குகிறவன் முழுமையாக அழிக்கப்படவேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்” என்றான்.
117 எல்லா தேசங்களே, கர்த்தரைத் துதியுங்கள்.
ஜனங்கள் எல்லோரும் கர்த்தரைத் துதியுங்கள்.
2 தேவன் நம்மை அதிகமாக நேசிக்கிறார்!
என்றென்றைக்கும் தேவன் நமக்கு உண்மையாக இருப்பார்.
கர்த்தரைத் துதிப்போம்!
118 கர்த்தரே தேவன் என்பதால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் தொடரும்!
2 இஸ்ரவேலே, இதைக்கூறு,
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
3 ஆசாரியர்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
4 கர்த்தரைத் தொழுதுகொள்கிற ஜனங்களே, இதைக் கூறுங்கள்:
“அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்!”
5 நான் தொல்லையில் உழன்றேன்.
எனவே உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டேன்.
கர்த்தர் எனக்குப் பதிலளித்து என்னை விடுவித்தார்.
6 கர்த்தர் என்னோடிருப்பதால் நான் பயப்படமாட்டேன்.
என்னைத் துன்புறுத்த ஜனங்கள் எதையும் செய்யமுடியாது.
7 கர்த்தர் எனக்கு உதவி செய்கிறவர்.
என் பகைவர்கள் தோல்வியுறுவதை நான் காண்பேன்.
8 ஜனங்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
9 உங்கள் தலைவர்களை நம்புவதைக் காட்டிலும்
கர்த்தரை நம்புவது நல்லது.
10 பல பகைவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்,
ஆனால் கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடிப்பேன்.
11 பகைவர்கள் பலர் என்னை மீண்டும் மீண்டும் சூழ்ந்துகொண்டார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
12 தேனீக்களின் கூட்டத்தைப்போல பகைவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.
ஆனால் வேகமாக எரியும் பதரைப்போல் அவர்கள் சீக்கிரமாக அழிந்துபோனார்கள்.
கர்த்தருடைய வல்லமையால் நான் அவர்களைத் தோற்கடித்தேன்.
13 என் பகைவர்கள் என்னைத் தாக்கி அழிக்க முயன்றனர்.
ஆனால் கர்த்தர் எனக்கு உதவினார்.
14 கர்த்தர் எனக்குப் பெலனும் வெற்றியின் பாடலுமாயிருக்கிறார்.
கர்த்தர் என்னைக் காப்பாற்றுகிறார்!
15 நல்லோரின் வீடுகளில் வெற்றியின் கொண்டாட்டத்தை நீங்கள் கேட்கமுடியும்.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
16 கர்த்தருடைய கரங்கள் வெற்றியால் உயர்த்தப்பட்டன.
கர்த்தர் தமது மிகுந்த வல்லமையை மீண்டும் காட்டினார்.
17 நான் வாழ்வேன், மரிக்கமாட்டேன்.
கர்த்தர் செய்தவற்றை நான் கூறுவேன்.
18 கர்த்தர் என்னைத் தண்டித்தார்,
ஆனால் அவர் என்னை மரிக்கவிடமாட்டார்.
19 நல்ல வாயிற்கதவுகளே, எனக்காகத் திறவுங்கள்,
நான் உள்ளே வந்து கர்த்தரைத் தொழுதுகொள்வேன்.
20 அவை கர்த்தருடைய கதவுகள்,
நல்லோர் மட்டுமே அவற்றின் வழியாகச் செல்ல முடியும்.
21 கர்த்தாவே, என் ஜெபத்திற்குப் பதிலளித்ததற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
நீர் என்னைக் காப்பாற்றியதற்காக நான் உமக்கு நன்றிக் கூறுவேன்.
22 கட்டிடம் கட்டுவோர் வேண்டாமெனத் தள்ளிய
கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.
23 கர்த்தரே இதைச் செய்தார்,
அது அற்புதமானதென நாங்கள் நினைக்கிறோம்.
24 இந்நாள் கர்த்தர் செய்த நாள்.
இன்று நாம் களிப்போடு மகிழ்ச்சியாயிருப்போம்!
25 ஜனங்கள், “கர்த்தரைத் துதிப்போம்!
கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
26 கர்த்தருடைய நாமத்தால் வருகிற மனிதனை வரவேற்றுக்கொள்ளுங்கள்” என்றார்கள்.
ஆசாரியர்கள், “நாங்கள் உங்களைக்
கர்த்தருடைய வீட்டிற்கு வரவேற்கிறோம்!
27 கர்த்தரே தேவன், அவர் எங்களை ஏற்றுக்கொள்கிறார்.
பலிக்காக ஆட்டுக்குட்டியைக் கட்டி, பலிபீடத்தின் கொம்புகளுக்கு சுமந்து செல்லுங்கள்” என்றார்கள்.
28 கர்த்தாவே, நீரே என் தேவன், நான் உமக்கு நன்றிக் கூறுகிறேன்.
நான் உம்மைத் துதிக்கிறேன்.
29 கர்த்தர் நல்லவர், எனவே அவரைத் துதியுங்கள்.
அவரது உண்மை அன்பு என்றென்றைக்கும் நிலைக்கும்.
2008 by World Bible Translation Center