M’Cheyne Bible Reading Plan
யோராம் இஸ்ரவேலின் அரசனானான்
3 சமாரியாவில் ஆகாபின் மகனாகிய யோராம் இஸ்ரவேலின் அரசன் ஆனான். யூதாவின் அரசனாகிய யோசபாத்தின் பதினெட்டாம் ஆண்டில் அவன் அரசாளத் துவங்கினான். யோராம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆண்டான். 2 தவறு என்று கர்த்தர் சொன்னவற்றையெல்லாம் அவன் செய்தான். ஆனால் அவன் தன் தந்தையைப்போலவும் தாயைப்போலவும் இல்லை. அவன் தந்தை தொழுதுகொள்வதற்காக நிறுவிய பாகாலின் தூணை அகற்றிவிட்டான். 3 ஆனாலும் அவன் நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைத் தொடர்ந்து செய்து வந்தான். யோராம் இஸ்ரவேல் ஜனங்களையும் பாவம் செய்யச் செய்தான். யோராம், யெரொபெயாமின் பாவத்தை நிறுத்தவில்லை.
மோவாப் இஸ்ரவேலிலிருந்து பிரிந்து போனது
4 மேசா மோவாபின் அரசன். அவனுக்கு ஆடு மாடுகள் இருந்தன. அவன் இஸ்ரவேல் அரசனுக்கு 1,00,000 ஆட்டுக்குட்டிகளையும் 1,00,000 செம்மறியாட்டுக் கடாக்களையும் கம்பளிக்காகக் கொடுத்து வந்தான். 5 ஆனால் ஆகாப் மரித்ததும் மோவாபின் அரசன் இஸ்ரவேலுக்கு எதிராகப் புரட்சி செய்து தன் நாட்டைப் பிரித்துக்கொண்டான்.
6 பிறகு யோராம் சமாரியாவிற்கு வெளியே சென்று இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேர்த்தான். 7 அவன் தூதுவர்களை அனுப்பி யூதாவின் அரசனான யோசபாத்திடம் பேசினான். யோராம், “மோவாபின் அரசன் எனக்கு எதிராக என் ஆட்சியிலிருந்து விலகிவிட்டான். அவனோடு போரிட என்னுடன் சேர்ந்து வருவீர்களா?” என்று கேட்டான்.
அதற்கு யோசபாத், “சரி, நான் உன்னோடு வருகிறேன். நான் உன்னைப் போன்றவன். எனது ஜனங்களும் உன் ஜனங்களைப் போன்றவர்கள். என் குதிரைகளும் உனது குதிரைகளைப் போன்றவைதாம்” என்றான்.
மூன்று அரசர்களும் எலிசாவை ஆலோசனைக் கேட்கிறார்கள்
8 யோசாபாத் யோராமிடம், “நாம் எந்த வழியில் போவது?” என்று கேட்டான்.
அதற்கு யோராம், “நாம் ஏதோம் பாலைவனத்தின் வழியாகப் போகவேண்டும்” என்று பதில் சொன்னான்.
9 எனவே இஸ்ரவேல் அரசன் யூதாவின் அரசனோடும் ஏதோமின் அரசனோடும் பயணம் செய்தான். அவர்கள் ஏறக்குறைய ஏழு நாட்கள் பயணம் செய்தனர். பிறகு படைவீரர்களுக்கும் மிருகங்களுக்கும் குடிக்க தண்ணீரில்லை. 10 இறுதியாக இஸ்ரவேலின் அரசன், “ஓ! கர்த்தர் நமது மூன்று அரசர்களையும் ஒன்றுகூடி அழைத்து நம்மை மோவாபியர்களிடம் ஒப்படைத்து நம்மை தோற்கடித்தார்!” என்றான்.
11 ஆனால் யோசபாத், “கர்த்தருடைய ஒரு தீர்க்கதரிசி இங்கே இருக்கவேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தர் சொல்கிறார் என அவரிடமே கேட்போம்” என்றான்.
இஸ்ரவேல் அரசரின் வேலைக்காரர் ஒருவன், “சாப்பாத்தின் மகனான எலிசா இங்கே இருக்கிறார். அவர் எலியாவின் வேலைக்காரர்” என்றான்.
12 யோசபாத்தும், “கர்த்தருடைய வார்த்தை எலிசாவோடு உள்ளது” என்று கூறினான்.
எனவே இஸ்ரவேலின் அரசனும் யோசபாத்தும் ஏதோமின் அரசனும் எலியாவைப் பார்க்கப் போனார்கள்.
13 எலிசா இஸ்ரவேல் அரசனான யோராமிடம், “நான் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தந்தை மற்றும் தாயின் தீர்க்கதரிசிகளிடம் செல்லுங்கள்!” என்றான்.
அதற்கு இஸ்ரவேலின் அரசன், “இல்லை, நாங்கள் உங்களைப் பார்க்கவே வந்துள்ளோம். ஏனென்றால் கர்த்தர் மோவாப் மூலம் எங்களைத் தோற்கடிக்க எங்கள் மூவரையும் ஒன்றாகக் கூட்டியுள்ளார். எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்” என்றான்.
14 அதற்கு எலிசா, “சர்வவல்லமையுள்ள கர்த்தருக்கு நான் ஊழியம் செய்கிறேன். அவர் இருப்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதே அளவுக்கு நான் உம்மிடம் உண்மையைப் பேசுகிறேன். யூதாவின் அரசனாகிய யோசபாத் இங்கே இல்லாவிட்டால் உங்களை நான் பார்த்திருக்கவோ கவனித்திருக்கவோமாட்டேன்! 15 இப்போது சுரமண்டலம் வாசிக்கிற ஒருவனை அழைத்து வாருங்கள்” என்றான்.
அவன் வந்து சுரமண்டலத்தை வாசித்தபோது, கர்த்தருடைய வல்லமை எலிசாவின் மேல் இறங்கியது. 16 பிறகு எலிசா, “இப்பள்ளத்தாக்கிலே துளைகளைப் போடுங்கள். கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்: 17 நீங்கள் காற்றையும் மழையையும் பார்ப்பதில்லை. ஆனால் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிறையும். பின் நீங்களும் உங்கள் பசுக்களும் மற்ற மிருகங்களும் குடிக்க தண்ணீர் கிடைக்கும். 18 இதனை கர்த்தர் எளிதாகச் செய்வார். மோவாப் ஜனங்களை நீங்கள் வெல்லும்படியாகவும் செய்வார்! 19 நீங்கள் பலமுள்ள (கோட்டை அமைந்த) நகரங்களையும், தேர்ந்தெடுத்த (நல்ல) நகரங்களையும் தாக்குவீர்கள். நல்ல மரங்களையெல்லாம் வெட்டுவீர்கள். தண்ணீரின் ஊற்றுகளை அடைப்பீர்கள். வயல்களைக் கற்களால் அழித்துவிடுவீர்கள்” என்றான்.
20 காலையில், பலியைச் செலுத்தும் போது ஏதோம் சாலை வழியாக தண்ணீர் வந்து பள்ளத்தாக்கை நிரப்பிற்று.
21 மோவாபிலுள்ள ஜனங்கள் அரசர்கள் தம்மோடு போரிட வருவதை கேள்விப்பட்டனர். எனவே, ஆயுதம் தரிக்கக்கூடிய வயதுடைய அத்தனை ஆண்களும் கூடினார்கள். அவர்கள் எல்லையில் போரிடத் தயாராகிக் காத்திருந்தனர். 22 அவர்கள் காலையில் விழித்தபோது சூரியன் தண்ணீரில் பிராகாசிப்பதை இரத்தம் நிறைந்திருப்பதைப் போல் கண்டனர். 23 அவர்கள், “இரத்தத்தைப் பாருங்கள், அரசர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் தங்களை அழித்துக்கொண்டனர். மரித்த பிணங்களிலுள்ள விலைமதிப்புள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு செல்லுங்கள்” என்றனர்.
24 மோவாப் ஜனங்கள் இஸ்ரவேலர்களின் முகாம்களுக்கு வந்தனர். அங்கே இஸ்ரவேலர்களால் தாக்கப்பட்டனர். தப்பித்து ஓட முயன்றதும் இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தி மோவாபுக்குள்ளும் புகுந்து தாக்கினார்கள். 25 இஸ்ரவேலர்கள் மோவாப் நகரங்களை நொறுக்கித்தள்ளினார்கள். ஒவ்வொரு நல்ல வயல்களில் கற்களை எறிந்தனர். நீரூற்றுகளை அடைத்தனர், நல்ல மரங்களையெல்லாம் வெட்டி எறிந்தனர். அவர்கள் மோவாபின் தலைநகரத்தின் கிர்கரசேத்தில் உள்ள கற்கள் விடுபட்டு நிற்கும்வரை விரட்டினார்கள். இஸ்ரவேல் வீரர்கள் சுற்றிவளைத்து அவர்களை தாக்கினார்கள்.
26 மோவாபின் அரசனுக்கு இந்த போர் மிகவும் பலமாக (அவனுக்கு எதிராக) இருந்தது. அவன் 700 வாள் வீரர்களைச் சேர்த்துக்கொண்டு ஏதோம் அரசனைத் தாக்கிக் கொல்லச் சென்றான். ஆனால் அவர்களால் ஏதோம் அரசனை நெருங்க முடியவில்லை. 27 பிறகு தன்னைத் தொடர்ந்து ஆட்சியில் அமர இருக்கிற தன் மூத்த மகனை மோவாபின் அரசன் அழைத்தான். நகரைச்சுற்றியுள்ள சுவரில் தன் மகனையே சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினான். இது இஸ்ரவேல் ஜனங்களைப் பெரிதும் பாதித்தது. எனவே அவர்கள் மோவாபை விட்டு விட்டு தங்கள் நாட்டிற்குப் போய்விட்டனர்.
எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்
3 சகோதர சகோதரிகளே! எங்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். கர்த்தரின் போதனை தொடர்ந்து வேகமாகப் பரவவேண்டும். அப்போதனையை மக்கள் ஏற்று கனப்படுத்த வேண்டும். உங்களிடம் அது பரவி இருப்பதுபோன்று மற்றவர்களிடமும் பரவவேண்டும். இதற்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். 2 கெட்ட, தீய மனிதர்களிடமிருந்து நாங்கள் காப்பாற்றப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள். (எல்லா மக்களும் கர்த்தரிடம் விசுவாசம் வைக்கவில்லை)
3 ஆனால் கர்த்தர் உண்மையுள்ளவர், அவர் உங்களுக்கு பலத்தைக் கொடுத்து தீமையினின்று உங்களைப் பாதுகாப்பார். 4 மேலும், நாங்கள் வழி காட்டியபடியே நீங்கள் நடந்துகொள்கிறீர்கள் என்றும், இனி மேலும் நடந்துகொள்வீர்கள் என்றும் உங்களைக் குறித்து கர்த்தருக்குள் நம்பிக்கை வைத்திருக்கிறோம். 5 தேவனுடைய அன்புக்குள்ளும், கிறிஸ்துவின் பொறுமைக்குள்ளும் உங்கள் இதயம் இருக்கக் கர்த்தர் வழிகாட்ட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்கிறோம்.
வேலைக்கான பொறுப்புகள்
6 சகோதர சகோதரிகளே! நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அதிகாரத்தால் உங்களுக்கு ஆணை இடுகிறோம். வேலை செய்ய மறுக்கிற விசுவாசியிடம் இருந்து விலகிச் செல்லுங்கள். வேலை செய்ய மறுக்கிறவர்கள், எங்களிடமிருந்து நீங்கள் பெற்ற போதனையைப் பின்பற்றுகிறவர்கள் அல்ல. 7 நாங்கள் வாழ்வது போன்றே நீங்களும் வாழவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களோடு நாங்கள் இருந்தபோது சோம்பேறிகளாக இருந்ததில்லை. 8 அடுத்தவர்கள் உணவை உண்டபோது அதற்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டோம். நாங்கள் மேலும் மேலும் வேலை செய்தோம். எனவே, எவருக்கும் தொந்தரவு தந்ததில்லை. நாங்கள் இரவும் பகலுமாக உழைத்தோம். 9 எங்களுக்கு உதவும்படி உங்களிடம் கேட்க எங்களுக்கு உரிமை இருந்தது. ஆனால் எங்கள் தேவைக்கு நாங்களே வேலை செய்தோம். எனவே உங்களுக்கு முன்மாதிரியாக நாங்கள் இருந்தோம். இதனை நீங்கள் பின்பற்றவேண்டும். 10 “ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது” என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம்.
11 உங்கள் கூட்டத்தில் உள்ள சிலர் உழைக்க மறுப்பதாகக் கேள்விப்படுகிறோம். அவர்கள் எதுவும் செய்வதில்லை. அவர்கள் ஏனைய மக்களின் வாழ்வில் குறுக்கிடுபவர்களாக இருக்கிறார்கள். 12 மற்றவர்களுக்குத் தொந்தரவு தர வேண்டாம் என்று அவர்களுக்கு ஆணை இடுகிறோம். உழைத்து உங்கள் உணவை சம்பாதித்துக்கொள்ளுங்கள் என்று கூறுகிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பேரில் இதனைக் கேட்டுக்கொள்கிறோம். 13 சகோதர சகோதரிகளே! நல்லவற்றைச் செய்வதில் சோர்வு அடையாதீர்கள்.
14 இந்த நிருபத்தில் சொல்லப்பட்டவற்றிற்கு எவனொருவன் பணிய மறுக்கிறானோ அவன் யாரென்று அறிந்துகொள்ளுங்கள். அவனோடு சேராதீர்கள். பிறகு அதற்காக அவன் வெட்கப்படுவான். 15 ஆனால் அவனை ஒரு பகைவனைப் போல நடத்தாதீர்கள். ஒரு சகோதரனைப் போன்று எச்சரிக்கை செய்யுங்கள்.
இறுதி வார்த்தைகள்
16 சமாதானத்தின் கர்த்தர் உங்களுக்கு எப்பொழுதும் சமாதானத்தைத் தருவாராக. அவர் எப்பொழுதும் எல்லா வழியிலும் சமாதானத்தைத் தரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். கர்த்தர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக.
17 பவுலாகிய நான் என் சொந்தக் கையாலேயே இவ்வாழ்த்துக்களை எழுதி முடிக்கிறேன். என் அனைத்து நிருபங்களிலும் இம்முறையில் தான் நான் கையெழுத்திடுகிறேன். நான் எழுதும் விதம் இதுவே.
18 நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
நான்கு மிருங்களைப் பற்றிய தானியேலின் கனவு
7 பாபிலோனின் அரசனாகிய பெல்ஷாத்சாரின் ஆட்சியின் முதல் ஆண்டில் தானியேல் ஒரு கனவு கண்டான். தானியேல் தனது படுக்கையில் படுத்திருந்தபோது இந்தச் தரிசனங்களைக் கண்டான். தானியேல் தான் கண்ட கனவைப்பற்றி எழுதினான். 2 தானியேல் சொன்னான், “நான் தரிசனத்தை இரவில் கண்டேன். அந்தத் தரிசனத்தில் நான்கு திசைகளிலிருந்தும் காற்றடித்துக் கொண்டிருந்தது. அக்காற்றுகள் கடலைக் கொந்தளிக்கச் செய்தது. 3 நான் நான்கு பெரிய மிருகங்களைப் பார்த்தேன். அவை ஒவ்வொன்றும் இன்னொன்றிலிருந்து வேறுபட்டதாக இருந்தது. அந்த நான்கு மிருகங்களும் கடலிலிருந்து வெளியே வந்தன.
4 “முதல் மிருகம் ஒரு சிங்கத்தைப் போன்றிருந்தது. அதற்குக் கழுகைப்போன்று சிறகுகளும் இருந்தன. நான் இந்த மிருகத்தை கவனித்தேன். பிறகு அதன் சிறகுகள் பிடுங்கப்பட்டன. அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு மனிதனைப்போன்று இரண்டு காலில் நின்றது. மனித இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.
5 “பிறகு நான் எனக்கு முன்னால் இரண்டவாது மிருகத்தைப் பார்த்தேன். இந்த மிருகம் கரடியைப் போன்றிருந்தது. அது ஒரு பக்கமாக சாய்ந்து நின்றது. அது தனது வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலா எலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது. ‘எழுந்திரு, நீ விரும்புகிற எல்லா இறைச்சியையும் சாப்பிடு’ என்று அதற்குச் சொல்லப்பட்டது.
6 “அதன் பிறகு நான் இன்னொரு மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் ஒரு சிவிங்கியைப் போன்றிருந்தது. அதன் முதுகின்மேல் நான்கு சிறகுகள் இருந்தன. அச்சிறகுகள் பறவைகளின் சிறகுகளைப் போன்றிருந்தன. இந்த மிருகத்திற்கு நான்கு தலைகள் இருந்தன. இதற்கு ஆட்சி செய்யும் உரிமை கொடுக்கப்பட்டது.
7 “அதன் பிறகு இரவில் தரிசனத்தில் என் முன்பு நான்காவது மிருகத்தைக் கண்டேன். இந்த மிருகம் மிக பயங்கரமும், பலமும் உடையதாக இருந்தது. இது மிகப் பலமுடையதாகத் தோன்றியது. இதற்கு பெரிய இரும்புப் பற்கள் இருந்தன. இந்த மிருகம் தன் இரையைப் பிடித்து நொறுக்கி தின்றது. இந்த மிருகம் மிச்சமுள்ளவற்றைக் காலால் மிதித்து துவைத்தது. இந்த நாலாவது மிருகம் நான் பார்த்த மற்ற மிருகங்களைவிட வேறுபட்டதாக இருந்தது. இந்த மிருகத்திற்குப் பத்துக் கொம்புகள் இருந்தன.
8 “நான் அந்தக் கொம்புகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். பிறகு அக்கொம்புகளுக்கிடையில் இன்னொரு கொம்பு முளைத்தது. இது சிறிய கொம்பாக இருந்தது. இச்சிறிய கொம்பில் மனித கண்களைப்போன்று கண்கள் இருந்தன. இச்சிறிய கொம்பில் வாயும் இருந்தது. அந்த வாய் பேசியது. சிறு கொம்பானது மற்ற கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது.
நான்காவது விலங்கின் தீர்ப்பு
9 “நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, சிங்காசனங்கள் அவற்றின் இடத்தில் வைக்கப்பட்டன.
நீண்ட ஆயுசுள்ள அரசர் ஒருவர் அவரது சிங்காசனத்தில் அமர்ந்திருந்தார்.
அவரது ஆடைகள் மிகவும் வெண்மையாக இருந்தன.
அவை பனியைப் போன்று வெண்மையாக இருந்தன.
அவரது தலை முடியும் வெண்மையாக இருந்தது.
அது கம்பளியைப் போன்று வெண்மையாக இருந்தது.
அவரது சிங்காசனம் நெருப்பினால் செய்யப்பட்டிருந்தது.
அச்சிங்காசனத்தின் சக்கரங்கள் ஜுவாலைகளால் செய்யப்பட்டிருந்தன.
10 நீண்ட ஆயுசுள்ள அரசருக்கு முன்னால்
ஒரு நெருப்பு ஆறு ஓடிக்கொண்டிருந்தது.
பல லட்சம் பேர் அரசருக்குப் பணிவிடைச் செய்தனர்.
அவருக்கு முன்னால் கோடா கோடிபேர் நின்றார்கள்.
இது செயல்படத் துவங்கும் நீதிமன்றம்போல்,
புத்தகங்களெல்லாம் திறந்துவைக்கப்பட்டிருந்தன.
11 “நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனென்றால் சிறிய கொம்பு வீண்பெருமை பேசிக்கொண்டிருந்தது. நான்காவது மிருகம் கொல்லப்படும்வரை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அதன் உடல் அழிக்கப்பட்டு, அது எரிகின்ற நெருப்பில் வீசி எறியப்பட்டது. 12 மற்ற மிருகங்களின் அதிகாரமும் ஆட்சியும் அவற்றிடமிருந்து பிடுங்கப்பட்டன. ஆனால் அவை குறிப்பிட்ட காலம்வரை வாழ அனுமதிக்கப்பட்டன.
13 “இரவில் என் தரிசனத்தில் நான் பார்த்தபோது எனக்கு முன்னால் மனிதனைப்போல் காணப்பட்ட ஒருவரைப் பார்த்தேன். அவர் வானத்து மேகங்களின்மேல் வந்துகொண்டிருந்தார். அவர் நித்திய ஆயுசுள்ள அரசரிடம் வந்தார். அவர்கள் அவரை அரசருக்கருகில் கொண்டு வந்தனர்.
14 “மனிதனைப்போன்று தோற்றமளித்த அவரிடம் அதிகாரம், மகிமை, ஆட்சி உரிமை கொடுக்கப்பட்டன. எல்லா ஜனங்களும் எல்லா மொழிக்காரர்களும் அவரைத் தொழவேண்டும். அவரது ஆட்சி என்றென்றும் நிலைத்திருக்கும். அவரது இராஜ்யம் என்றென்றும் தொடரும். இது என்றைக்கும் அழிக்கப்படாமல் இருக்கும்.
நான்காவது மிருகத்தைப் பற்றிய கனவின் விளக்கம்
15 “தானியேலாகிய நான் குழம்பி கவலைப்பட்டேன். அத்தரிசனங்கள் என் மனதிற்குள் போய் என்னைத் துன்புறுத்தியது. 16 நான் அங்கே நின்றுகொண்டிருந்த ஒருவன் அருகில் சென்றேன். இதன்பொருள் என்னவென்று நான் அவனிடம் கேட்டேன். அவன் இதன் பொருள் என்னவென்று எனக்கு விளக்கினான். 17 அவன் சொன்னான், ‘நான்கு மிருகங்களும் நான்கு இராஜ்யங்களாகும். இந்த நான்கு இராஜ்யங்களும் பூமியிலிருந்து வந்திருக்கின்றன. 18 ஆனால் தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தைப் பெறுவார்கள். அவர்கள் இந்த இராஜ்யத்தை என்றென்றும் வைத்திருப்பார்கள்’ என்றான்.
19 “பிறகு, நான் நான்காவது மிருகம் எதைக் குறிக்கும்? அதன் பொருள் என்ன? என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். அந்த நான்காவது மிருகமானது மற்ற மிருகங்களிடமிருந்து வித்தியாசமானது. இது மிகப் பயங்கரமானது. இதற்கு இரும்புப் பல்லும் வெண்கல நகங்களும் இருந்தன. அது தன் இரையைப் பிடித்து நொறுக்கி முழுமையாகத் தின்றது. மற்றவர்களை அது காலால் மிதித்துத் துவைத்தது. 20 நான், நான்காவது மிருகத்தின் தலைமீது முளைத்த பத்துக் கொம்புகளைப்பற்றி அறிந்துகொள்ள விரும்பினேன். அதில் முளைத்த சிறிய கொம்பைப்பற்றியும் அறிந்துகொள்ள விரும்பினேன். அச்சிறிய கொம்பு மற்ற பத்துக் கொம்புகளில் மூன்றைப் பிடுங்கியது. அச்சிறு கொம்பிற்கு மனிதக் கண்கள் இருந்தன. அது தொடர்ந்து இறுமாப்பாய்ப் பேசியது. மற்றக் கொம்புகளை விடவும் இது குரூரமானதாகக் காணப்பட்டது. 21 நான் கவனித்துக்கொண்டிருக்கும்போதே, இச்சிறு கொம்பு தேவனுடைய சிறப்பான ஜனங்களுக்கு எதிராகச் சண்டையிடத் துவங்கியது. அக்கொம்பு அவர்களைக் கொன்றது. 22 சிறு கொம்பானது, தேவனுடைய விசேஷமான ஜனங்களை நித்திய ஆயுசுள்ள அரசர் வந்து நியாயம்தீர்க்கும்வரை கொலைசெய்துகொண்டிருந்தது. நித்திய ஆயுசுள்ள அரசர் சிறிய கொம்பினை நியாயந்தீர்த்தார். இத்தீர்ப்பு தேவனுடைய விசேஷ ஜனங்களுக்கு உதவியாக இருந்தது. அவர்கள் இராஜ்யத்தைப் பெற்றனர்.
23 “அவன் இதனை என்னிடம் விளக்கினான்: ‘நான்காவது மிருகம் என்பது பூமியில் வரவிருக்கும் நான்காவது இராஜ்யம். இது மற்ற இராஜ்யங்களைவிட வேறுபட்டது. நான்காவது இராஜ்யமானது உலகில் தன்னைச் சுற்றியுள்ள ஜனங்கள் அனைவரையும் அழிக்கும். அது நடந்து உலகில் தன்னைச் சுற்றியுள்ள நாடுகளை மிதித்து நசுக்கும். 24 இதில் பத்துக் கொம்புகள் என்பது இந்த நான்காவது இராஜ்யத்தில் வரப்போகும் பத்து அரசர்களைக் குறிக்கும். இந்தப் பத்து அரசர்களும் போனபின்பு அடுத்த அரசன் வருவான். அவன் அவனுக்கு முன்பு ஆண்ட அரசர்களைவிட வேறுபட்டவனாக இருப்பான். அவன் மற்ற அரசர்களில் மூன்று பேரைத் தோற்கடிப்பான். 25 இந்த விசேஷ அரசன் மிக உன்னதமான தேவனுக்கு எதிராகப் பேசுவான். அந்த அரசன் தேவனுடைய விசேஷ ஜனங்களைக் காயப்படுத்தவும் கொல்லவும் செய்வான். அந்த அரசன் ஏற்கெனவே அமைக்கப்பட்ட காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற முயல்வான். தேவனுடைய விசேஷ ஜனங்கள் மூன்றரை வருடங்களுக்கு அவன் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள்.
26 “‘ஆனாலும் என்ன நிகழும் என்பதை நியாய சபை முடிவுசெய்யும். அந்த அரசனின் வல்லமை எடுத்துக்கொள்ளப்படும். அவனது இராஜ்யம் முழுமையாக முடிவடையும். 27 பிறகு தேவனுடைய விசேஷ ஜனங்கள் இராஜ்யத்தை ஆளுவார்கள். அவர்கள் பூமியிலுள்ள அனைத்து இராஜ்யங்களையும் ஆள்வார்கள். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். அவர்களுக்கு எல்லா இராஜ்யங்களில் உள்ள ஜனங்களும் மதிப்பளித்து, சேவை செய்வார்கள்.’
28 “அதுதான் கனவின் முடிவாகும், தானியேலாகிய நான் மிகவும் பயந்தேன். எனது முகம் பயத்தால் வெளுத்துப்போனது. நான் கண்டவற்றையும், கேட்டவற்றையும் பற்றி மற்ற ஜனங்களிடம் சொல்லவில்லை” என்றான்.
114 இஸ்ரவேல் எகிப்தை விட்டு நீங்கினான்.
யாக்கோபு அந்நிய நாட்டை விட்டுச் சென்றான்.
2 யூதா தேவனுக்கு விஷேசமான ஜனங்களானார்கள்.
இஸ்ரவேல் அவருடைய இராஜ்யமானது.
3 செங்கடல் இதைக்கண்டு விலகி ஓடிற்று.
யோர்தான் நதியோ திரும்பி ஓடிப்போயிற்று.
4 ஆட்டுக்கடாக்களைப்போல் மலைகள் நடனமாடின.
ஆட்டுக்குட்டிகளைப் போல் மலைகள் நடனமாடின.
5 செங்கடலே, நீ ஏன் ஓடிப்போனாய்?
யோர்தான் நதியே, நீ ஏன் திரும்பி ஓடிப் போனாய்?
6 மலைகளே, நீங்கள் ஏன் ஆட்டுக் கடாக்களைப்போல் நடனமாடினீர்கள்?
மலைகளே, நீங்களும் ஏன் ஆட்டுக் குட்டிகளைப்போல் நடனமாடினீர்கள்?
7 யாக்கோபின் தேவனும் கர்த்தருமாகிய ஆண்டவருக்கு முன்னே
பூமி நடுங்கி அதிர்ந்தது.
8 கன்மலையிலிருந்து தண்ணீர் பெருகி ஓடச் செய்தவர் தேவனேயாவார்.
கெட்டியான பாறையிலிருந்து நீரூற்றின் வெள்ளத்தைப் பாய்ந்தோடச் செய்தவர் தேவனேயாவார்.
115 கர்த்தாவே, நாங்கள் எந்த மகிமையையும் ஏற்றுக்கொள்வதில்லை.
மகிமை உமக்கே உரியது.
உமது அன்பினாலும் நாங்கள் உம்மை நம்பக்கூடும் என்பதாலும் மகிமை உமக்கே உரியது.
2 எங்கள் தேவன் எங்கே என்று
ஏன் தேசங்கள் ஆச்சரியப்பட வேண்டும்?
3 தேவன் பரலோகத்தில் இருக்கிறார்.
அவர் தாம் விரும்புகின்றவற்றையெல்லாம் செய்கிறார்.
4 அத்தேசங்களின் “தெய்வங்கள்” பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட சிலைகள் மட்டுமே.
அவை சில மனிதர்கள் செய்த சிலைகள் மட்டுமே.
5 அச்சிலைகளுக்கு வாய் உண்டு, ஆனால் பேச இயலாது.
அவற்றிற்குக் கண்கள் உண்டு, ஆனால் காண இயலாது.
6 அவற்றிற்குக் காதுகளுண்டு, ஆனால் கேட்க இயலாது.
அவற்றிற்கு மூக்குகள் உண்டு, ஆனால் முகர இயலாது.
7 அவற்றிற்குக் கைகள் உண்டு, ஆனால் உணர இயலாது.
அவற்றிற்குக் கால்கள் உண்டு, ஆனால் நடக்க இயலாது.
அவற்றின் தொண்டையிலிருந்து எந்தவிதமான சத்தமும் வெளிவருவதில்லை.
8 அச்சிலைகளைச் செய்து,
அவற்றில் நம்பிக்கை வைக்கிற ஜனங்களும் அவற்றைப் போலாவார்கள்.
9 இஸ்ரவேலின் ஜனங்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும், கேடகமுமானவர்.
10 ஆரோனின் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
11 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்!
கர்த்தர் அவர்களின் பெலனும் கேடகமுமானவர்.
12 கர்த்தர் நம்மை நினைவுக்கூருகிறார்,
கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பார்.
கர்த்தர் ஆரோனின் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.
13 கர்த்தர் தம்மைப் பின்பற்றும்
உயர்ந்தோரையும் தாழ்ந்தோரையும் ஆசீர்வதிப்பார்.
14 கர்த்தர் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும்
அதிகமதிகமாகக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்.
15 கர்த்தர் பரலோகத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.
கர்த்தர் உங்களை வரவேற்கிறார்!
16 பரலோகம் கர்த்தருக்குச் சொந்தமானது.
ஆனால் பூமியை ஜனங்களுக்குக் கொடுத்தார்.
17 மரித்தவர்களும்,
கல்லறைக்குச் செல்பவர்களும் கர்த்தரைத் துதிப்பதில்லை.
18 நாம் கர்த்தரை துதிப்போம்.
இது முதல் என்றென்றைக்கும் நாம் அவரை துதிப்போம்.
அல்லேலூயா! கர்த்தரைத் துதிப்போம்.
2008 by World Bible Translation Center