M’Cheyne Bible Reading Plan
அகசியாவிற்கு ஒரு செய்தி
1 ஆகாப் மரித்ததும் இஸ்ரவேலின் ஆட்சியில் இருந்து இஸ்ரவேலுக்கு எதிராக மோவாப் பிரிந்துவிட்டது.
2 ஒரு நாள், அகசியா தன் வீட்டின் மேல்மாடியில் இருந்தான். அப்போது மரச் சட்டங்களாலான கிராதியின் வழியாகக் கீழே விழுந்துவிட்டான். அவனுக்கு பலமாக அடிபட்டுவிட்டது. அவன் தன் வேலையாட்களை அழைத்து அவர்களிடம், “எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் போய், அவர்கள் ஆசாரியர்களிடம், இந்த காயங்களில் இருந்து குணமடைவேனா” என்று விசாரித்து வரும்படி சொன்னான்.
3 ஆனால் கர்த்தருடைய தூதன் திஸ்பியனாகிய எலியாவிடம், “சமாரியாவில் இருந்து தூதுவர்களை அரசன் அகசியா அனுப்பி இருக்கிறான். நீ சென்று அவர்களைச் சந்திப்பாயாக. அவர்களிடம், ‘இஸ்ரவேலில் ஒரு தேவன் இருக்கிறார்! ஆனால் நீங்கள் அனைவரும் எதற்காக எக்ரோனின் தேவனாகிய பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கச் செல்கிறீர்கள்? 4 அரசன் அகசியாவிடம் இவ்விஷயங்களைச் சொல்லுங்கள்: பாகால்சேபூபிடத்தில் கேள்விகள் கேட்கத் தூதுவர்களை அனுப்பினாய். இக்காரியத்தை நீ செய்ததால், நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையிலேயே மரித்துப்போவாய் என கர்த்தர் சொல்கிறார்!’ என்று சொல்” என்றான். பிறகு அங்கிருந்து கிளம்பி எலியா இவ்விதமாகவே அகசியாவின் ஆட்களிடம் சொன்னான்.
5 தூதுவர்கள் அகசியாவிடம் திரும்பிப் போக, அவனோ “ஏன் இவ்வளவு விரைவில் வந்தீர்கள்?” என்று கேட்டான்.
6 அவர்கள் அவனிடம், “ஒருவன் எங்களைச் சந்தித்தான். உங்களை அனுப்பிய அரசனிடமே திரும்பிச்சென்று, கர்த்தர் சொல்லும் வார்த்தைகளை சொல்லுங்கள் என்று அவன் திருப்பி அனுப்பினான். கர்த்தர் சொல்கிறார்: ‘இஸ்ரவேலுக்குள் தேவன் இருக்க, எக்ரோனின் தேவனாகிய பாகால் சேபூபிடம் ஏன் கேள்வி கேட்க அரசன் தூதுவர்களை அனுப்பினான்? இவ்வாறு செய்ததால் நீ உடல் நலம் தேறாமல் படுத்தபடுக்கையிலேயே மரித்துவிடுவாய்’” என்றனர். 7 அகசியா அவர்களிடம், “உங்களைச் சந்தித்து இதைச் சொன்னவன் எப்படி இருந்தான்?” என்று கேட்டான்.
8 அவர்களோ, “அவன் ரோமத்தாலான மேலாடையை அணிந்திருந்தான். இடுப்பில் தோல் கச்சை இருந்தது” என்றனர்.
பின் அகசியா, “அவன் திஸ்பியனாகிய எலியா தான்!” என்றான்.
அகசியாவால் அனுப்பப்பட்ட தளபதிகளை அக்கினி அழித்தது
9 அகசியா ஒரு தளபதியையும் 50 ஆட்களையும் எலியாவிடம் அனுப்பினான். அவர்கள் வந்தபோது, எலியா மலையுச்சியில் இருந்தான். தளபதி அவனிடம், “தேவமனிதனே, உங்களைக் கீழே வருமாறு அரசர் சொல்கிறார்” என்றான்.
10 எலியா அவனிடம், “நான் தேவமனிதன் என்றால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும் உன்னுடைய 50 ஆட்களையும் அழிக்கட்டும்!” என்றான்.
அவ்வாறே வானிலிருந்து அக்கினி வந்து தளபதியையும் அவனுடன் வந்த 50 பேர்களையும் அழித்தது.
11 அகசியா இன்னொரு தளபதியையும் 50 பேரையும் அனுப்பிவைத்தான். அத்தளபதியும், “தேவமனிதனே! நீங்கள் விரைவாக கீழே இறங்கவேண்டும் என்று அரசர் சொல்கிறார்!” என்றான்.
12 அதற்கு எலியா, “நான் தேவ மனிதனானால் பரலோகத்திலிருந்து அக்கினி வந்து உன்னையும், உன் 50 வீரர்களையும் அழிக்கட்டும்!” என்றான்.
பின் தேவனுடைய அக்கினி பரலோகத்திலிருந்து வந்து அந்த தளபதியையும் 50 வீரர்களையும் அழித்தது.
13 அகசியா மூன்றாவதாக ஒரு தளபதியை 50 ஆட்களுடன் அனுப்பிவைத்தான். அவர்களும் எலியாவிடம் வந்தனர். பின் தளபதி, “தேவமனிதனே, என்னுடைய உயிரையும், உங்கள் ஊழியர்களாகிய இந்த 50 பேருடைய உயிர்களையும் காப்பாற்றுங்கள். 14 பரலோகத்தில் இருந்து வந்த அக்கினி ஏற்கெனவே வந்த இரண்டு தளபதிகளையும் அவர்களுடன் வந்த 50 வீரர்களையும் அழித்துவிட்டது. இப்போது எங்கள் மேல் இரக்கம் வைத்து எங்கள் உயிர்களைக் காப்பாற்றுங்கள்!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.
15 கர்த்தருடைய தூதன் எலியாவிடம், “தளபதியோடு செல், அவனைக்கண்டு பயப்படவேண்டாம்” என்றான்.
எனவே எலியா அரசனான அகசியாவைப் பார்க்கத் தளபதியோடு போனான்.
16 எலியா அகசியாவிடம், “தேவன் இப்படிக் கூறுகிறார். அதாவது: இஸ்ரவேலில் தேவன் இருக்கிறார். அவரிடம் கேட்காமல் ஏன் எக்ரோனின் தேவனான பாகால் சேபூபிடத்தில் தூதுவர்களை அனுப்புகிறாய். நீ இவ்வாறு செய்ததால் நோய் குணமாகாமல் படுத்தப்படுக்கையிலேயே மரித்துவிடுவாய்!” என்றான்.
யோராம் அகசியாவின் இடத்தைப் பெறல்
17 எலியாவின் மூலமாக, கர்த்தர் சொன்னது போல அகசியா மரித்தான். அவனுக்கு மகன் இல்லாததால் யோராம் புதிய அரசனானான். இது அவன் தந்தை யோசபாத்தின் இரண்டாம் ஆட்சியாண்டில் நடந்தது.
18 அகசியா செய்த பிறச்செயல்கள் எல்லாம் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.
1 தெசலோனிக்கேயாவில் இருக்கும் சபைக்கு பவுல், சில்வான், தீமோத்தேயு ஆகியோர் எழுதிக்கொள்வது, பிதாவாகிய தேவனுக்குள்ளும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளும் நீங்கள் இருக்கிறீர்கள்.
2 உங்களுக்கு நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 உங்களுக்காக எப்பொழுதும் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். அதுவே செய்வதற்கு உரியது என்பதால் நாங்கள் அதனைச் செய்கின்றோம். உங்கள் விசுவாசம் மேலும் மேலும் வளருவதால் அப்படிச் செய்கிறோம். உங்களில் ஒருவருக்கொருவரிடம் உள்ள அன்பும் வளர்கின்றது. 4 தேவனுடைய ஏனைய சபைகளில் உங்களைப்பற்றி நாங்கள் பெருமையாய்ப் பேசிக்கொள்கிறோம். விசுவாசத்திலும், பலத்திலும் நீங்கள் தொடர்ந்து இருப்பது குறித்து மற்ற சபைகளுக்கு நாங்கள் கூறுகிறோம். நீங்கள் பல உபத்திரவங்களையும். துன்பங்களையும் அடைந்தீர்கள். எனினும் தொடர்ந்து விசுவாசமும் பலமும் உடையவர்களாய் நீங்கள் இருக்கிறீர்கள்.
தேவனுடைய தீர்ப்பு
5 தேவன் தன் தீர்ப்பில் சரியாக உள்ளார் என்பதற்கு அதுவே நிரூபணமாக இருக்கிறது. தேவன் தன் இராஜ்யத்துக்கு ஏற்றவர்களாக நீங்கள் இருக்கவேண்டும் என விரும்புகிறார். உங்கள் துன்பங்கள் கூட அந்த இராஜ்யத்துக்காகத்தான். 6 எது சரியானதோ அதையே தேவன் செய்வார். உங்களுக்கு யார் துன்பம் தருகிறார்களோ அவர்களுக்கு தேவன் துன்பம் தருவார். 7 துன்பப்படுகிற உங்களுக்கு தேவன் இளைப்பாறுதலைத் தருவார். எங்களுக்கும் சமாதானத்தைத் தருவார். கர்த்தராகிய இயேசுவின் வருகையின்போது தேவன் எங்களுக்கு இந்த உதவியைச் செய்வார். இயேசு பரலோகத்தில் இருந்து வல்லமை வாய்ந்த தம் தேவதூதர்களோடு வருவார். 8 பரலோகத்திலிருந்து அவர் வரும்போது, தேவனை அறியாதவர்களைத் தண்டிப்பதற்காக எரிகின்ற அக்கினியோடும் வருவார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்கள் எல்லாரையும் அவர் தண்டிப்பார். 9 என்றென்றும் நித்திய அழிவுகள் நேரும் வகையில் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் கர்த்தரோடு இருக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். அவருடைய பெரும் வல்லமையிடம் இருந்து அவர்கள் விலக்கி வைக்கப்படுவார்கள். 10 தம் பரிசுத்த மக்களோடு மகிமைப்படுத்தப்படவும், எல்லா விசுவாசிகளுக்கும் தம் மகிமையைப் புலப்படுத்தவும் கர்த்தராகிய இயேசு வரும் நாளில் இவை நிகழும். விசுவாசம் உள்ளவர்களெல்லாம் இயேசுவோடு சேர்ந்துகொண்டு மகிழ்ச்சி அடைவார்கள். அந்த விசுவாசிகளின் கூட்டத்தில் நீங்களும் இருப்பீர்கள். ஏனென்றால் நாங்கள் சொன்னவற்றை நீங்கள் விசுவாசித்தீர்கள்.
11 அதற்காகத்தான் நாங்கள் எப்பொழுதும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்கிறோம். உங்களை நல்வழியில் வாழச் செய்யுமாறு நாங்கள் தேவனை வேண்டுகிறோம். இதற்காகவே தேவனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். நல்லதைச் செய்ய வேண்டும் என்னும் ஆவல் உங்களிடம் இருக்கிறது. உங்களது விசுவாசம் உங்களைப் பணியாற்ற வைக்கும். மேலும் மேலும் இத்தகைய செயலைச் செய்ய தேவன் உங்களுக்கு உதவுமாறு நாங்கள் அவரை வேண்டுகிறோம். 12 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமம் உங்களில் மகிமை அடையும் பொருட்டே இவை அனைத்திற்காகவும் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம். உங்களில் அவர் மகிமையடைவார். அவரில் நீங்கள் மகிமையடைவீர்கள். அம்மகிமை நம் தேவனும், கர்த்தருமான இயேசு கிறிஸ்துவின் கிருபையிலிருந்து வருகிறது.
சுவரின் மேல் எழுதிய கை
5 அரசனான பெல்ஷாத்சார் தனது அதிகாரிகளில் 1,000 பேருக்கு விருந்து கொடுத்தான். அரசன் அவர்களோடு திராட்சைரசம் குடித்துக் கொண்டிருந்தான். 2 பெல்ஷாத்சார் திராட்சைரசம் குடித்துக்கொண்டிருக்கும்போதே அவன் தனது வேலைக்காரர்களுக்குத் தங்கத்தாலும் வெள்ளியாலுமான கிண்ணங்களைக் கொண்டுவரக் கட்டளையிட்டான். இந்தக் கிண்ணங்கள் அவனது தந்தையான நேபுகாத்நேச்சாரால் எருசலேமின் ஆலயத்திலிருந்து எடுத்துக் கொண்டு வரப்பட்டவை. அரசனான பெல்ஷாத்சார், தனது பிரபுக்களும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அந்தக் கிண்ணங்களிலிருந்து குடிக்க வேண்டும் என்று விரும்பினான். 3 எனவே அவர்கள் எருசலேமின் தேவாலயத்திலிருந்து கொண்டுவரப்பட்டக் கிண்ணங்களைக் கொண்டு வந்தனர். அரசனும், அவனது அதிகாரிகளும், மனைவிகளும், அடிமைப் பெண்களும் அவற்றில் குடித்தனர். 4 அவர்கள் குடித்துக்கொண்டே தங்கள் விக்கிரக தெய்வங்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மண் போன்றவற்றால் செய்யப்பட்ட வெறும் சிலைகளைப் போற்றினார்கள்.
5 பிறகு திடீரென்று ஒரு மனிதக் கை தோன்றி சுவரில் எழுதத் தொடங்கியது. விரல்கள் சுவரிலுள்ள சாந்துபூச்சின் மீது எழுதிற்று. அந்தக் கை அரசனது அரண்மனையில் விளக்குக்கு எதிராயிருந்த சுவரில் எழுதியது. அரசன் அந்தக் கை எழுதும்போது கவனித்துக்கொண்டிருந்தான்.
6 அரசனான பெல்ஷாத்சார் மிகவும் பயந்தான். அவனது முகம் பயத்தால் வெளிறிற்று. அவனது முழங்கால்கள் நடுங்கி இடித்துக்கொண்டன. அவனால் எழுந்து நிற்க முடியவில்லை. ஏனென்றால் அவனது கால்கள் அவ்வளவு பலவீனமாக இருந்தன. 7 அரசன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் தன்னிடம் வருமாறு அழைத்தான். அவன் அந்த ஞானிகளிடம், “இந்த எழுத்தை வாசித்து இதன் பொருளை எனக்கு விளக்கும் எவருக்கும் நான் பரிசளிப்பேன். அவனுக்கு இரத்தாம்பர ஆடை அணிவித்து, அவன் கழுத்தில் பொன்மாலை அணிவிப்பேன். நான் அவனை எனது இராஜ்யத்தில் மூன்றாவது நிலையில் உள்ள ஆளுநராக ஆக்குவேன்” என்றான்.
8 எனவே, அரசனின் எல்லா ஞானிகளும் உள்ளே வந்தனர். அவர்களால் அந்த எழுத்துக்களை வாசிக்கமுடியவில்லை. 9 பெல்ஷாத்சாரின் அதிகாரிகள் குழப்பம் அடைந்தனர். அதோடு அரசன் மேலும் பயந்து கவலைப்பட்டான். அவனது முகம் அச்சத்தால் வெளிறியது.
10 பிறகு அரசனின் தாய் விருந்து நடைபெற்ற அந்த இடத்திற்கு வந்தாள். அவள் அரசன் மற்றும் அவனது அதிகாரிகளின் குரல்களைக் கேட்டபின்: “ஓ அரசரே நீர் என்றென்றும் வாழ்க. நீர் பயப்பட வேண்டாம். உனது முகம் பயத்தால் வெளிறவேண்டாம். 11 உனது இராஜ்யத்தில் ஒருவன் இருக்கிறான். அவனிடம் பரிசுத்தமான தேவர்களின் ஆவி உள்ளது. உன் தந்தையின் நாட்களில் அவனால் பல இரகசியங்களைச் சொல்லமுடிந்தது. அவன் தன்னைச் சுறுசுறுப்பும் ஞானமும் உள்ளவனாகக் காட்டினான். அவன் இவ்விஷயங்களில் தேவர்களைப் போன்றிருந்தான். உன் தந்தையான நேபுகாத்நேச்சார் அந்த மனிதனை ஞானிகளுக்கெல்லாம் பொறுப்பதிகாரியாக வைத்திருந்தார். அவன் ஜோசியர்களையும், கல்தேயர்களையும் ஆண்டான். 12 நான் சொல்லிக்கொண்டிருக்கிற அவனுடைய பெயர் தானியேல். அரசர் அவனுக்கு பெல்தெஷாத்சார் என்று பெயரிட்டார். பெல்தெஷாத்சார் மிக சுறுசுறுப்புடையவன். அவனுக்குப் பல செய்திகள் தெரியும். அவனால் கனவின் பலன்களும், இரகசியங்களின் விளக்கமும், கடினமான விஷயங்களுக்குத் தீர்வுகளும் தெரியும். தானியேலைக் கூப்பிடு, அவனால் சுவர் மேல் எழுதியுள்ளவற்றுக்கு விளக்கம் சொல்லமுடியும்” என்றாள்.
13 எனவே அவர்கள் தானியேலை அரசனிடம் அழைத்துவந்தனர். அரசன் தானியேலிடம் உனது பெயர் தானியேல்தானா? யூதாவிலிருந்து என் தந்தையால் சிறை பிடிக்கப்பட்டு கொண்டுவரப்பட்டவர்களில் நீ ஒருவனா? 14 தேவர்களின் ஆவி உன்னிடம் இருப்பதாக நான் அறிந்தேன். அதோடு நீ இரகசியங்களைப் புரிந்துகொள்ளக் கூடியவன், வெளிச்சமும், புத்தியும், ஞானமும் கொண்டவன் என்றும் உன்னைப்பற்றி நான் கேள்விப்பட்டேன். 15 ஞானிகளும், சோதிடர்களும் என்னிடம் அழைத்துவரப்பட்டு சுவரில் எழுதப்பட்டவற்றை வாசிக்கச் சொன்னேன். இந்த எழுத்துக்களின் பொருள் என்னவென்று அம்மனிதர்கள் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவர்களால் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றுக்கான விளக்கத்தை எனக்குச் சொல்ல முடியவில்லை. 16 ஒவ்வொரு பொருளின் அர்த்தத்தையும் உன்னால் விளக்க முடியும் என்றும் மிகச் கடினமான பிரச்சனைகளுக்கும் உன்னால் பதில் சொல்ல முடியும் என்றும் நான் உன்னைப்பற்றிக் கேள்விப்பட்டேன். உன்னால் இச்சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசித்து அதன் பொருளை எனக்கு விளக்க முடியுமானால் நான் உனக்கு இரத்தாம்பர ஆடையைக் கொடுப்பேன். நான் உனது கழுத்தில் பொன் மாலையை அணிவிப்பேன். பிறகு நீ இந்த இராஜ்யத்தின் மூன்றாவது உயர் ஆளுநராக ஆகலாம் என்றான்.
17 தானியேல் அரசனிடம், “பெல்ஷாத்சார் அரசரே, உமது அன்பளிப்புகளை நீர் உம்மிடமே வைத்துக்கொள்ளும். அல்லது நீர் உமது பரிசுகளை வேறு யாருக்காவது கொடும். ஆனால் நான் உமக்காகச் சுவரில் எழுதப்பட்டுள்ளவற்றை வாசிப்பேன். நான் அதன் பொருள் என்னவென்றும் உமக்கு விளக்குவேன்.
18 “அரசே, உன்னதமான தேவன், உமது தந்தையான நேபுகாத்நேச்சாரை சிறப்பும், வல்லமையும் கொண்ட அரசராக ஆக்கினார். தேவன் அவரை மிக முக்கியமானவராக ஆக்கினார். 19 பல நாடுகளில் உள்ள ஜனங்களும், பலமொழி பேசும் ஜனங்களும் நேபுகாத்நேச்சாருக்கு அஞ்சினார்கள். ஏனென்றால் உன்னதமான தேவன் அவரை மிக முக்கியமான அரசராக்கினார். நேபுகாத்நேச்சார் ஒருவன் மரிக்கவேண்டும் என்று விரும்பினால் உடனே அவனைக் கொன்றுவிடுவார். அவர் ஒருவன் வாழவேண்டும் என்று விரும்பினால், அவனை வாழவிடுவார். அவர் ஜனங்களை முக்கியப்படுத்த வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியப்படுத்துவார். அவர் ஜனங்களை முக்கியமற்றவர்களாக்க வேண்டும் என்று விரும்பினால் அவர்களை முக்கியமற்றவர்களாக்குவார்.
20 “ஆனால் நேபுகாத்நேச்சார் அகந்தையும் கடின மனமும் கொண்டவரானர். எனவே, அவரது வல்லமை அவரிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டது. அவரது இராஜ சிங்காசனம் பறிக்கப்பட்டது. அவருடைய மகிமை அகற்றப்பட்டது. 21 பிறகு நேபுகாத்நேச்சார் ஜனங்களைவிட்டு வெளியேறும்படி வற்புறுத்தப்பட்டார். அவருடைய மனது மிருகத்தின் மனது போலாயிற்று. அவர் காட்டுக் கழுதைகளோடு வாழ்ந்து பசுவைப்போன்று புல்லைத் தின்றார். அவர் பனியில் நனைந்தார். அவர் தனது பாடத்தைக் கற்றுக்கொள்ளும்வரை இவை நிகழ்ந்தன. பின்னர் அவர் உன்னதமான தேவன் மனிதர்களின் இராஜ்யங்களை ஆளுகிறார். அதோடு உன்னதமான தேவன் தான் விரும்புகிற எவரையும் இராஜ்யத்தை ஆளவைப்பார் என்பதைக் கற்றுக்கொண்டார்.
22 “ஆனால் பெல்ஷாத்சாரே, உமக்கு ஏற்கெனவே இவை தெரியும். நீர் நேபுகாத்நேச்சாரின் மகன். ஆனாலும் நீர் உம்மை இன்னும் பணிவுள்ளவராக்கிக்கொள்ளவில்லை. 23 இல்லை, நீர் பணிவுள்ளவராகவில்லை. அதற்குப் பதிலாக பரலோகத்தின் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினீர். கர்த்தருடைய ஆலயத்திலுள்ள கிண்ணங்களைக் குடிப்பதற்குக் கொண்டுவரும்படிக் கட்டளையிட்டீர். நீரும், உமது அரசு அதிகாரிகளும், உமது மனைவியரும், அடிமைப்பெண்களும், அக்கிண்ணங்களில் திராட்சைரசத்தைக் குடித்தீர்கள். நீர் பொன்னாலும், வெள்ளியாலும், வெண்கலத்தாலும், இரும்பாலும், மரத்தாலும், கல்லாலும் ஆன தெய்வங்களைப் போற்றினீர். அவை உண்மையில் தெய்வங்கள் அல்ல. அவற்றால் பார்க்கவோ, கேட்கவோ, புரிந்துகொள்ளவோ முடியாது. ஆனால் உமது வாழ்க்கை மீதும், உமது செயல்கள் மீதும் அதிகாரம் படைத்த தேவனை நீர் மகிமைப்படுத்தவில்லை. 24 அதனால், தேவன் சுவர்மேல் எழுதுகிற கையை அனுப்பினார். 25 சுவரில் எழுதப்பட்டுள்ள வார்த்தைகள் இவைதான்:
மெனே, மெனே, தெக்கேல், உப்பார்சின்.
26 “இதுதான் அவ்வார்த்தைகளின் பொருள்:
“மெனே:
உன் ஆளுகை முடியும் நாட்களைத் தேவன் எண்ணி வைத்திருக்கிறார்.
27 தெக்கேல்:
நீ தராசிலே நிறுக்கப்பட்டுக் குறைவாய் காணப்பட்டாய்.
28 உப்பார்சின்:
உன் ஆளுகை உன்னிடமிருந்து எடுக்கப்பட்டு,
அது மேதியருக்கும் பெர்சியருக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படும்” என்றான்.
29 பின்னர் பெல்ஷாத்சார் தானியேலுக்கு இரத்தாம்பரத்தை அணிவித்து, அவனது கழுத்தில் பொன் மாலையைப் போட்டான். அவன் இராஜ்யத்தின் மூன்றாம் ஆளுநராக உயர்த்தப்பட்டான். 30 அதே இரவில் பாபிலோனின் அரசனான பெல்ஷாத்சார் கொல்லப்பட்டான். 31 தரியு என்னும் மேதியன் புதிய அரசனானான். தரியு 62 வயதுடையவனாக இருந்தான்.
தாவீதின் துதிப் பாடல்களுள் ஒன்று
110 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி,
“என் வலது பக்கத்தில் அமரும், நான் உமது பகைவர்களை உமது ஆளுகையின் கீழ் வைப்பேன்” என்றார்.
2 உமது அரசு பெருக கர்த்தர் உதவுவார்.
உமது அரசு சீயோனில் ஆரம்பிக்கும்.
பிற நாடுகளிலும் நீர் உமது பகைவர்களை ஆளும்வரைக்கும் அது பெருகும்.
3 நீர் உமது படையை ஒன்று திரட்டும்போது,
உமது ஜனங்கள் தாங்களே விருப்பத்துடன் வருவார்கள்.
அவர்கள் சிறப்பு ஆடைகளை அணிவார்கள்.
அவர்கள் அதிகாலையில் சந்திப்பார்கள்.
அந்த இளைஞர்கள்
தரைமேல் உள்ள பனித்துளியைப்போல் உம்மைச் சுற்றி இருப்பார்கள்.
4 கர்த்தர் ஒரு வாக்குறுதி அளித்தார்.
அவர் மனம் மாறமாட்டார்.
“நீர் என்றென்றும் ஆசாரியராயிருப்பீர்.
மெல்கிசேதேக்கைப் போன்ற ஆசாரியராயிருப்பீர்.”
5 என் ஆண்டவர் உமது வலது பக்கம் இருக்கிறார்.
அவர் கோபமடையும்போது மற்ற அரசர்களைத் தோற்கடிப்பார்.
6 தேவன் தேசங்களை நியாயந்தீர்ப்பார்.
பூமி பிரேதங்களால் நிரப்பப்படும்.
தேவன் வல்லமையுள்ள நாட்டின் தலைவர்களை தண்டிப்பார்.
7 வழியின் நீரூற்றில் அரசர் தண்ணீரை பருகுகிறார்.
அவர் உண்மையாகவே அவரது தலையை உயர்த்தி, மிகுந்த ஆற்றலோடு காணப்படுவார்!
111 கர்த்தரைத் துதியங்கள்!
நல்லோர் கூடிச் சந்திக்கும் கூட்டங்களில் நான் கர்த்தருக்கு முழு இருதயத்தோடும் நன்றி செலுத்துவேன்.
2 கர்த்தர் அற்புதமான காரியங்களைச் செய்கிறார்.
தேவனிடமிருந்து வரும் நல்ல காரியங்களை ஜனங்கள் விரும்புகிறார்கள்.
3 உண்மையிலேயே மகிமையும் அற்புதமுமான காரியங்களை தேவன் செய்கிறார்.
அவரது நன்மை என்றென்றைக்கும் தொடருகிறது.
4 கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர் என்பதை நாம் நினைவுக்கூரும்படி
தேவன் வியக்கத்தக்க காரியங்களைச் செய்கிறார்.
5 தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு உணவளிக்கிறார்.
அவரது உடன்படிக்கையை தேவன் என்றென்றும் நினைவுகூருகிறார்.
6 அவர் தமது தேசத்தைத் தமது ஜனங்களுக்குக் கொடுக்கப்போகிறார் என்பதை
தேவன் செய்த வல்லமையான காரியங்கள் காட்டும்.
7 தேவன் செய்பவை ஒவ்வொன்றும் நல்லவையும் நியாயமுள்ளவையும் ஆகும்.
அவரது கட்டளைகள் நம்பத்தக்கவை.
8 தேவனுடைய கட்டளைகள் என்றென்றும் தொடரும்.
அக்கட்டளைகளை தேவன் கொடுப்பதற்கான காரணங்கள் நேர்மையும் தூய்மையானவையுமாகும்.
9 தேவன் தம் ஜனங்களைக் காப்பாற்ற ஒருவரை அனுப்புகிறார்.
தேவன் அவர்களுடன் உடன்படிக்கை என்றென்றும் தொடருமாறு செய்தார். தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கதும் பரிசுத்தமானதுமாகும்.
10 தேவனுக்குப் பயப்படுவதும் அவரை மதிப்பதுமே ஞானத்தின் தொடக்கமாயிருக்கிறது.
தேவனுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்கள் மிகுந்த ஞானமுள்ளவர்கள்.
என்றென்றும் தேவனுக்குத் துதிகள் பாடப்படும்.
2008 by World Bible Translation Center