M’Cheyne Bible Reading Plan
பெனாதாத்தும் ஆகாபும் போரிடல்
20 பெனாதாத் ஆராமின் அரசன். அவன் தனது படையைத் திரட்டி 32 அரசர்களோடும் குதிரைகளோடும் இரதங்களோடும் சமாரியாவைத் தாக்கி முற்றுகையிட்டான். 2 அவன் இஸ்ரவேலின் அரசனான ஆகாபுக்குத் தூதுவர்களை அனுப்பினான். அவனுடைய செய்தி கீழ்க்கண்டவாறு இருந்தது. 3 “உனது வெள்ளியையும் பொன்னையும் எனக்குக் கொடுக்கவேண்டும். உனது தேர்ந்தெடுக்கப்பட்ட மனைவியரையும் குழந்தைகளையும் எனக்குக் கொடுக்கவேண்டும்.”
4 இஸ்ரவேலரின் அரசனோ, “என் எஜமானனாகிய அரசனே, இப்போது நான் உமக்குரியவன் என்னைச் சார்ந்த அனைத்தும் உமக்கு உரியது ஆகும்” என்றான்.
5 மீண்டும் தூதுவர்கள் ஆகாபிடம் வந்தனர். “நாங்கள் அரசனிடம் நீங்கள் சொன்னவற்றைக் கூறினோம். பெனாதாத், ‘ஏற்கெனவே உங்கள் வெள்ளி, பொன், மனைவி ஜனங்கள் எல்லாவற்றையும் கொடுக்கவேண்டும் என்று கூறியிருந்தேன். 6 நாளை என் ஆட்களை அனுப்புவேன். அவர்கள் உங்கள் வீடுகளுக்கும் அதிகாரிகளின் வீடுகளுக்கும் வருவார்கள். உங்களது மதிப்பிற்குரிய பொருட்களைக் கொடுத்துவிட வேண்டும்’ என்றான்” என்றனர்.
7 எனவே ஆகாப் தன் நாட்டிலுள்ள மூப்பர்களை அழைத்து ஒன்று சேர்த்து ஒரு கூட்டம் போட்டான். அவன், “பாருங்கள், பெனாதாத் தொல்லை தர வந்துள்ளான். முதலில் அவன் எனது வெள்ளி, பொன், மனைவி, ஜனங்கள் அனைத்தையும் கேட்டான். நான் அவற்றைக் கொடுக்க ஒப்புக்கொண்டேன். ஆனால் இப்போது அவன் எல்லாவற்றையும் விரும்புகிறான். நாம் என்ன செய்யலாம்” என ஆலோசித்தான்.
8 ஆனால் மூப்பர்களும் மற்றவர்களும், “அவனுக்குக் கீழ்ப்படிந்து அவன் சொன்னபடி செய்ய வேண்டாம்” என்றனர்.
9 எனவே ஆகாப் பெனாதாத்துக்குத் தூதுவனை அனுப்பி, “நான் உனது முதல் கட்டளைக்குக் கீழ்ப்படிகிறேன். ஆனால் இரண்டாவது கட்டளைக்குக் கீழ்ப்படியமாட்டேன்” என்றான்.
பெனாதாத் செய்தியை அறிந்துக்கொண்டான். 10 அவனது ஒரு தூதுவனை அனுப்பி, “நான் சமாரியா முழுவதையும் அழிக்கப்போகிறேன். நகரத்தில் எதுவும் மீதியாகாது. எனது ஆட்கள் எடுத்துக்கொள்ள எதுவும் இருக்காது! இவ்வாறு நான் செய்யாவிட்டால் தேவன் என்னைத் தண்டிக்கட்டும்!” என்றான்.
11 அதற்கு ஆகாப், “பெனாதாத்திடம் சொல். ஆயுதம் அணிந்திருப்பவன் ஆயுதத்தை உரிந்து போடுபவனைப் போன்று பெருமைபடக்கூடாது” என்று சொல்லி அனுப்பினான்.
12 கூடாரத்தில் பெனாதாத் மற்றவர்களோடு குடித்துக்கொண்டிருந்தான். அப்போது தூதுவர்கள் ஆகாபின் செய்தியைச் சொல்ல, சமாரியாவைத் தாக்கும்படி ஆணையிட்டான். படைகளும் நகர்ந்தன.
13 அப்போது, ஆகாபிடம் ஒரு தீர்க்கதரிசி வந்து, “அரசனே, அந்த பெரும்படையைப் பார். நானே கர்த்தர், என்று நீ அறியும்படி நான் அப்படையை உன் மூலம் தோற்கடிப்பேன்” என்று கர்த்தர் கூறுகிறார்.
14 அதற்கு ஆகாப், “யார் மூலம்?” என்று கேட்டான்.
அதற்கு அத்தீர்க்கதரிசி, “அரசாங்க அதிகாரிகளின் ‘இளம் உதவியாளர்கள் மூலம்’ என்று கர்த்தர் கூறுகிறார்” என்றான்.
மேலும் அரசன், “போரை யார் துவக்க வேண்டும்?” என்று கேட்க,
தீர்க்கதரிசி, “நீ தான்” என்று பதில் சொன்னான்.
15 எனவே ஆகாப் அரசாங்க அதிகாரிகளின் இளம் உதவியாளர்களில் 232 பேரைச் சேர்த்தான். இதனோடு இஸ்ரவேல் படையின் எண்ணிக்கை 7,000 ஆயிற்று.
16 நடுமத்தியான வேளையில் அரசனான பெனாதாத்தும் அவனது உதவிக்கு வந்த 32 அரசர்களும் குடித்துக்கொண்டு தம் கூடாரத்தில் மயங்கிக்கிடந்தார்கள். அப்போது, ஆகாப் அவர்களைத் தாக்கினான். 17 முதலில் இளம் உதவியாளர்கள் தாக்கினர். பெனாதாத்தின் ஆட்கள் அரசனிடம் சென்று இவர்கள் சமாரியாவிலிருந்து வந்திருப்பதாகச் சொன்னார்கள். 18 அதற்கு அவன், “அவர்கள் போரிட வந்திருக்கலாம். அல்லது சமாதானத்திற்கு வந்திருக்கலாம் அவர்களை உயிரோடு பிடியுங்கள்” என்றான்.
19 ஆகாபின் இளைஞர்கள் தீவிரமாகத் தாக்கினார்கள். அவர்களைத் தொடர்ந்து இஸ்ரவேலின் படை சென்றது. 20 எதிரே வருபவர்களைக் கொன்றனர். சீரியாவிலிருந்து வந்தவர்கள் ஓட ஆரம்பித்தனர். இஸ்ரவேல் படை அவர்களை விரட்டியது. பெனாதாத் இரதத்தில் ஏறி தப்பித்து ஓடினான். 21 ஆகாப் அரசன் படையோடு போய் சீரியா நாட்டு குதிரைகளையும் இரதங்களையும் கைப்பற்றிக் கொண்டான். சீரியாவின் படையின் மீது ஆகாப் பெருவெற்றியை பெற்றான்.
22 பிறகு தீர்க்கதரிசி, ஆகாபிடம் போய், “சீரியாவின் அரசனான பெனாதாத் மீண்டும், அடுத்த ஆண்டு போரிட வருவான். எனவே உங்கள் படையைப் பலப்படுத்துங்கள். அவனிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ள கவனமாக திட்டங்களைச் செய்யுங்கள்” என்றான்.
பெனாதாத் மீண்டும் தாக்கினான்
23 பெனாதாத்தின் அதிகாரிகள், “இஸ்ரவேலின் தெய்வங்கள் மலைத் தெய்வங்களாக உள்ளனர். அதனால் வென்றுவிட்டனர். எனவே நாம் சமவெளியில் போர்செய்யவேண்டும். அப்போது தான் வெற்றி கிடைக்கும்! 24 இனிமேல் செய்ய வேண்டியது இதுதான். 32 அரசர்களும் கட்டளையிடும்படி அனுமதிக்காதே. ஒவ்வொரு தளபதியும் தம் படைகளை நடத்தட்டும். 25 இப்போது நீ அழிக்கப்பட்ட ஒரு படையை கூட்ட வேண்டும். இரதங்களையும் குதிரைகளையும் சேர்க்க வேண்டும். சமவெளியில் சண்டையிட வேண்டும். பிறகு வெல்வோம்” என்றனர். அவர்கள் சொன்னபடியே பெனாதாத்தும் செய்தான்.
26 அடுத்த ஆண்டில், அவன் ஆப்பெக்குக்கு இஸ்ரவேலரோடு சண்டையிடச் சென்றான்.
27 இஸ்ரவேலரும் போருக்குத் தயாராக இருந்தனர். அவர்கள் சீரியாவுக்கு எதிராக முகாம்கள் அமைத்தனர். சீரியா படையோடு ஒப்பிடும்போது, இவர்கள் படை சிறிய ஆட்டு மந்தையைப்போல் இருந்தனர். ஆனால் சீரியா, வீரர்கள் முழு பகுதியையும் சூழ்ந்தனர்.
28 இஸ்ரவேல் அரசனிடம் தேவமனிதன் ஒருவன் கீழ்க்கண்ட செய்திகளோடு வந்தான். கர்த்தர் சொன்னார், “‘கர்த்தராகிய நான் மலைகளின் தேவன் என்று ஆராமியர் சொன்னார்கள். சமவெளிப் பிரதேசங்களுக்கு நான் தேவன் அல்ல’ என்று அவர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எனவே இந்த பெரும் படையைத் தோற்கடிக்க உன்னை அனுமதிக்கிறேன். பிறகு நீங்கள் அனைவரும் எல்லா இடங்களுக்கும் நானே கர்த்தர் என்பதை உணர்வீர்கள்.”
29 படைகள் ஒன்றுக்கொன்று எதிராக ஏழு நாட்கள் முகாமிட்டிருந்தன. ஏழாவது நாள் போர் தொடங்கியது, ஒரே நாளில் 1,00,000 பேரை இஸ்ரவேலர்கள் கொன்றனர். 30 பிழைத்தவர்கள் ஆப்பெக் நகருக்குள் ஓடிப் போனார்கள். மீதியுள்ள 27,000 பேர் மீது சுவரிடிந்து விழுந்தது. பெனாதாத்தும் ஓடிப்போனான். ஒரு அறைக்குள் ஒளிந்துக்கொண்டான். 31 அவனிடம் அவனது வேலைக்காரர்கள், “இஸ்ரவேல் மன்னர்கள் இரக்கமுள்ளவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் நாங்கள் இரட்டுகளை இடுப்பிலும் கயிறுகளைத் தலையிலும் கட்டி அவர்களிடம் போய் கெஞ்சினால் உம்மை உயிரோடுவிடுவர்” என்றனர்.
32 பின் அவ்வாறே போய் இஸ்ரவேல் அரசனை சந்தித்தனர். “உங்கள் அடிமையான பெனாதாத் ‘எங்களை உயிரோடு விடுங்கள்’ என்று வேண்டுகிறார்” என்றனர்.
அதற்கு ஆகாப், “அவன் இன்னும் உயிரோடு இருக்கிறானா? அவன் என் சகோதரன்” என்றான். 33 அவர்கள், பெனாதாத்தைக் கொல்லாமல் இருக்க வாக்குறுதிகளைக் கேட்டனர். ஆகாப் பெனாதாத்தைச் சகோதரன் என அழைத்ததும் அவனது ஆலோசகர்களும், “ஆமாம், அவன் உன் சகோதரன்” என்றனர்.
ஆகாப், “என்னிடம் அவனைக் கொண்டு வா” என்றான். எனவே பெனாதாத் அரசனிடம் வந்தான். ஆகாப் அரசன் அவனிடம், அவனோடு இரதத்தில் ஏறுமாறு சொன்னான்.
34 பெனாதாத்தோ, “ஆகாப், என் தந்தை எடுத்துக்கொண்ட உங்கள் நகரங்களைத் திரும்பத்தருவேன். நீங்கள் தமஸ்குவிலே, கடை வீதிகளை என் தந்தை சமாரியாவில் செய்ததுபோன்று வைத்துக்கொள்ளலாம்” என்றான்.
ஆகாபோ, “இதற்கு நீ அனுமதித்தால், நான் உன்னை விட்டுவிடுவேன்” என்றான். இவ்வாறு இருவரும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். பெனாதாத் விடுதலை பெற்றான்.
ஆகாபுக்கு எதிராகத் தீர்க்கதரிசி பேசியது
35 ஒரு தீர்க்கதரிசி இன்னொருவனிடம், “என்னைத் தாக்கு!” என்றான். ஏனென்றால் கர்த்தருடைய கட்டளை என்றான். அவனோ தாக்கவில்லை. 36 அதற்கு அவன், “நீ கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. எனவே உன்னை ஒரு சிங்கம் கொல்லும்” என்றான். அவ்வாறே அவன் அந்த இடத்தை விட்டுப்போனதும் சிங்கம் அவனைக் கொன்றது.
37 அந்த தீர்க்கதரிசி இன்னொருவனிடம் போய், “என்னைத் தாக்கு” என்றான்.
அதற்கு அவன் தாக்கி காயப்படுத்தினான். 38 எனவே, அந்த தீர்க்கதரிசி தன் முகத்திலே சாம்பலைப்போட்டு வேஷம்மாறி அரசனுக்காக வழியில் காத்திருந்தான். 39 அரசன் வந்ததும் அவனிடம், “நான் போரிட சென்றேன். நம்மில் ஒரு மனிதன் பகை வீரனை அழைத்து வந்தான். அவன், ‘இந்த மனிதனைப் பாதுகாப்பாக வைத்திரு. இவன் தப்பினால் இவனுக்காக உன் உயிரைக் கொடுக்கவேண்டும் அல்லது அபராதமாக 75 பவுண்டுகளைத் தரவேண்டும்’ என்றான். 40 நான் வேறு வேலைகளில் இருந்தபோது அவன் தப்பித்துவிட்டான்” என முறையிட்டான்.
அதற்கு இஸ்ரவேல் அரசன், “நீ ஒரு வீரனை தப்பவிட்டதற்கான குற்றவாளி ஆகிறாய். எனவே அவன் சொன்னபடிசெய்” என்றான்.
41 பிறகு அவன் தன் முகத்தில் உள்ள துணியை விலக்கவே, அரசனுக்கு அவன் தீர்க்கதரிசிகளில் ஒருவன் என்பது தெரிந்தது. 42 தீர்க்கதரிசி அரசனிடம், “கர்த்தர் உம்மிடம், ‘நான் உன்னிடம், மரிக்க வேண்டும் என்று சொன்னவனை விடுதலைச் செய்தாய். எனவே நீ அவனது இடத்தை அடுத்து நீ மரிப்பாய்! உனது ஜனங்கள் அவர்களின் பகைவர்களது இடத்தை எடுப்பார்கள். உன் ஜனங்களும் மரிப்பார்கள்!’ என்று சொல்லச்சொன்னார்” என்றான்.
43 இதனால் சலிப்பும் துக்கமும் அடைந்து அரசன் சமாரியாவிற்கு திரும்பினான்.
3 நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆனால் காத்திருப்பது மிகவும் கொடுமையாக இருந்தது. 2 ஆகையால் உங்களிடம் தீமோத்தேயுவை அனுப்பத் தீர்மானித்தேன். நான் மட்டும் அத்தேனேயில் இருந்தேன். தீமோத்தேயு எங்கள் சகோதரன். தேவனுக்காக அவன் எங்களோடு பணியாற்றுகிறான். கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை நாங்கள் கூறிட தேவன் உதவுகிறார். நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலம் பெறவும், உங்களை உற்சாகமூட்டவும் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தோம். 3 எங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களால் நீங்கள் மனம் தவிக்காமல் இருக்கும்பொருட்டு தீமோத்தேயுவை அனுப்பினோம். இத்தகைய துன்பங்களைச் சகித்துக்கொள்ளவே நாம் நியமிக்கப்பட்டிருக்கிறோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். 4 நாங்கள் உங்களோடு இருந்தபோது கூட இப்படி பலவிதமான துன்பங்களை ஏற்க வேண்டும் என்பது பற்றி ஏற்கெனவே கூறியிருக்கிறோம். எனவே இவை நாங்கள் சொன்னபடிதான் நிகழ்ந்துள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். 5 இதற்காகத்தான் நான் உங்களிடம் தீமோத்தேயுவை, உங்கள் விசுவாசத்தைப்பற்றி அறிந்துகொள்ள அனுப்பி வைத்தேன். மேலும் என்னால் காத்திருக்க முடியாத நிலையில் தான் நான் தீமோத்தேயுவை அனுப்பி வைத்தேன். மக்களைத் தீயவற்றினால் இழுத்து கவர்ச்சிக்கும் பிசாசு உங்களைத் தோல்வியுறச் செய்துவிடுவானோ என்றும் எங்களின் உழைப்பு வீணாய்ப் போகுமோ என்றும் நான் பயந்திருந்தேன்.
6 ஆனால் உங்களிடமிருந்து தீமோத்தேயு திரும்பி வந்தான். உங்களது அன்பு மற்றும் விசுவாசம் பற்றிய நல்ல செய்திகளை அவன் கூறினான். நல்வழியில் நீங்கள் எப்போதும் எங்களை நினைத்துக்கொள்வதாகவும் எங்களை நீங்கள் மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினான். அதுபோலத் தான் நாங்களும் உங்களைப் பார்க்க விரும்புகிறோம். 7 எனவே, சகோதர சகோதரிகளே! உங்கள் விசுவாசத்தால் உங்களைப் பற்றி ஆறுதல் அடைந்திருக்கிறோம். எங்களுக்கு துன்பங்களும், சிக்கல்களும் உள்ளன. எனினும், நாங்கள் ஆறுதலடைந்திருக்கிறோம். 8 நீங்கள் உறுதியாகக் கர்த்தருக்குள் இருக்கும்போது எங்கள் வாழ்வு முழுமை பெறுவதாக உணர்கிறோம். 9 உங்களால் தேவனுக்கு முன்பு நாங்கள் பெரும் மகிழ்ச்சியோடு இருக்கிறோம். ஆகவே உங்களுக்காக தேவனுக்கு நன்றி சொல்கிறோம். ஆனால் எங்கள் முழு மகிழ்ச்சிக்கும் எங்களால் போதுமான நன்றி சொல்ல முடியாது. 10 இரவும் பகலுமாக நாங்கள் உங்களுக்காக மிகவும் உறுதியோடு தொடர்ந்து பிரார்த்தனை செய்கிறோம். நாங்கள் அங்கே வந்து உங்களை மீண்டும் பார்க்கவும், உங்கள் விசுவாசத்தை பலப்படுத்துவதற்கான செயல்களைச் செய்யவும் பிரார்த்தனை செய்கிறோம்.
11 பிதாவாகிய தேவனும், கர்த்தராகிய இயேசுவும் எங்களுக்கு உங்களிடம் வருவதற்கான வழியைத் தயார் செய்யட்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 12 உங்கள் அன்பை கர்த்தர் வளரச் செய்ய பிரார்த்திக்கிறோம். ஒருவருக்கொருவர் அன்பு செய்யவும் எல்லா மக்களிடமும் அன்பு செய்யவும் அவர் உங்களுக்கு உதவ பிரார்த்திக்கிறோம். நாங்கள் உங்களை நேசிப்பது போன்று நீங்கள் மற்றவர்களை நேசிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறோம். 13 உங்கள் இதயம் உறுதியாகும்படியாக நாங்கள் இந்தப் பிரார்த்தனையைச் செய்கிறோம். அப்பொழுது கர்த்தராகிய இயேசு தம் பரிசுத்த மக்களோடு வரும்போது நீங்கள் பிதாவாகிய தேவன் முன் பரிசுத்தராகவும், குற்றமற்றவர்களாகவும் நிற்பீர்கள்.
நேபுகாத்நேச்சாரின் கனவு
2 நேபுகாத்நேச்சாரின் ஆட்சியின் இரண்டாவது ஆண்டில் அவனுக்குச் சில கனவுகள் வந்தன. அக்கனவுகள் அவனை மிகவும் துன்புறுத்தின. அவனால் தூங்கமுடியவில்லை. 2 எனவே அரசன், தனது அறிஞர்களைத் தன்னிடம் அழைத்தான். அவர்கள் தங்கள் மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நட்சத்திரங்களைக் கவனித்தனர். அவர்கள் கனவுகளின் பலனைச் சொல்லவும் எதிர்காலத்தில் நடக்கக்கூடியதைத் கூறவுமே இவ்வாறு செய்தனர். தனது கனவைப் பற்றி தனக்குச் சொல்லவேண்டும் என்று அரசன் அவர்களிடம் கேட்டான். எனவே அவர்கள் வந்து அரசனின் முன்னால் நின்றார்கள்.
3 அரசன் அவர்களிடம், “நான் ஒரு கனவு கண்டேன். அது என்னைத் தொல்லைப்படுத்துகிறது. நான் கனவின் பொருளை அறிந்துகொள்ள விரும்புகிறேன்” என்றான்.
4 பிறகு கல்தேயர்கள் அரசனுக்குப் பதில் சொன்னார்கள். அவர்கள் அராமிக் மொழியில் பேசினார்கள். அவர்கள் அரசே, “நீர் என்றென்றும் வாழ்க. நாங்கள் உமது வேலைக்காரர்கள். தயவுசெய்து உமது கனவைக் கூறும். பிறகு அதன் அர்த்தம் என்னவென்று நாங்கள் கூறுவோம்” என்று சொன்னார்கள்.
5 பிறகு அரசன் நேபுகாத்நேச்சார் அவர்களிடம், “இல்லை, நீங்கள் எனது கனவைச் சொல்ல வேண்டும். பிறகு அதன் பொருள் என்னவென்றும் செல்லவேண்டும். நீங்கள் இவற்றைச் சொல்லாவிடால் உங்களைத் துண்டுதுண்டாக வெட்டிப் போடும்படிக் கட்டளையிடுவேன். அதோடு உங்கள் வீடுகள் குப்பைமேடுகளாக அழிக்கும்படிக் கட்டளையிடுவேன். 6 ஆனால் நீங்கள் எனது கனவையும், அதன் பொருளையும் சொல்லிவிட்டால் நான் உங்களுக்கு பரிசுகளையும், அன்பளிப்புகளையும், மரியாதையும் தருவேன். எனவே என் கனவையும், அதன் பொருளையும் கூறுங்கள்” என்றான்.
7 மீண்டும் அந்த ஞானிகள் அரசனிடம், “தயவு செய்து கனவை எங்களுக்குச் சொல்லும். பிறகு நாங்கள் அதன் பொருளைக் கூறுகிறோம்” என்றனர்.
8 பிறகு அரசனான நேபுகாத்நேச்சார், “நீங்கள் காலதாமதம் செய்யப்பார்க்கின்றீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. நான் என்ன சொன்னேன் என்பதின் கருத்தை நீங்கள் அறிவீர்கள். 9 எனது கனவைப்பற்றிச் சொல்லாவிட்டால் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள்! எனவே நீங்கள் அனைவரும் என்னிடம் பொய் சொல்ல உடன்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் காலதாமதம் செய்கின்றீர்கள். நீங்கள் நான் செய்ய விரும்புவதை மறந்துவிடுவேன் என்று நம்புகிறீர்கள். இப்பொழுது எனது கனவைக் கூறுங்கள். உங்களால் எனது கனவைக் கூறமுடியுமானால் அதன் பொருளையும் கூறமுடியும் என்று நான் அறிவேன்” என்றான்.
10 கல்தேயர்கள் அரசனுக்குப் பதிலாக, “அரசர் கேட்பவற்றைச் சொல்லக்கூடிய மனிதன் பூமியில் எவனுமில்லை. இதுவரை எந்த அரசரும் இப்படிப்பட்ட ஒன்றை ஒரு மந்திரவாதியிடமோ, ஒரு ஜோசியனிடமோ, ஒரு கல்தேயனிடமோ, கேட்டதில்லை. மிகச் சிறந்தவனும், வலிமைபொருந்தியவனுமான எந்த அரசனும் இதுவரை இவ்வாறு அறிவாளிகளிடம் கேட்டதில்லை. 11 அரசர் மிகக் கடினமான ஒன்றைச் செய்யும்படிக் கேட்கிறீர். தெய்வங்களால் மட்டுமே அரசரது கனவையும், அக்கனவின் பொருளையும் கூறமுடியும். ஆனால் தெய்வங்கள் மனிதர்களோடு வாழ்வதில்லை”என்றனர்.
12 அரசன் இதனைக் கேட்டபோது மிகவும் கோபமடைந்தான். எனவே அவன் பாபிலோனில் உள்ள எல்லா ஞானிகளையும் கொலை செய்யும்படிக் கட்டளையிட்டான். 13 அரசனான நேபுகாத்நேச்சாரின் கட்டளை அறிவிக்கப்பட்டது. எல்லா ஞானிகளும் கொல்லப்படவிருந்தனர். அரசனது ஆட்கள் தானியேலையும் அவனது நண்பர்களையும் கொலை செய்வதற்காகத் தேடினார்கள்.
14 அரசனது காவலர்களுக்கு ஆரியோகு தலைவனாக இருந்தான். அவன் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்வதற்குப் போனான். ஆனால் தானியேல் அவனிடம் புத்திசாலித்தனமாகவும், சாதுர்யமாகவும் பேசினான். 15 தானியேல் ஆரியோகுவிடம்: “அரசர் எதற்காக, இத்தகைய பயங்கரத் தண்டனையைக் கொடுத்தார்” என்று கேட்டான்.
பிறகு ஆரியோகு அரசனது கனவைப் பற்றிய முழு செய்தியையும் சொன்னான். உடனே தானியேல் புரிந்துகொண்டான். 16 தானியேல் இச்செய்தியை அறிந்ததும் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் சென்றான். தானியேல் அரசனிடம் இன்னும் கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கும்படி கேட்டான். பிறகு அவனால் அரசனது கனவையும் அதன் பொருளையும் சொல்ல முடியும் என்றான்.
17 பின்னர் தானியேல் தனது வீட்டிற்குப் போனான். அவன் தனது நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரிடம் எல்லாவற்றையும் சொன்னான். 18 தானியேல் அவனது நண்பர்களிடம் பரலோகத் தேவனிடம் ஜெபிக்குமாறு வேண்டினான். தானியேல் அவர்களிடம் இந்த இரகசியத்தை அறிந்துகொள்ள உதவ கருணைகாட்டுமாறு தேவனிடம் விண்ணப்பிக்கும்படி வேண்டினான். இதனால் பாபிலோனிலுள்ள ஞானிகளோடு தானியேலும், அவனது நண்பர்களும் கொல்லப்படாமல் இருப்பார்கள்.
19 இரவில், தேவன் தானியேலுக்குத் தரிசனத்தின் மூலம் இரகசியத்தை விளக்கினார். பின்னர் தானியேல் பரலோகத்தின் தேவனைப் புகழ்ந்து போற்றினான்.
20 தானியேல், “என்றென்றும் தேவனுடைய நாமத்தைப் போற்றுங்கள்.
அதிகாரமும் ஞானமும் அவரோடுள்ளன.
21 அவர் காலத்தையும் பருவத்தையும் மாற்றுகிறார்.
அவர் அரசர்களை மாற்றுகிறார்.
அவர் அரசர்களுக்கு அதிகாரத்தைக் கொடுக்கிறார்.
அதோடு அரசர்களின் அதிகாரத்தை எடுத்தும்விடுகிறார். அவர் ஜனங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கிறார்.
எனவே அவர்கள் ஞானம் பெறுகின்றனர். அவர் ஜனங்கள் பலவற்றைக் கற்று ஞானிகளாக அனுமதிக்கிறார்.
22 அவர் புரிந்துகொள்வதற்குக் கடினமான இரகசியங்களைத் தெரிந்திருக்கிறார்.
அவரிடம் ஒளி வாழ்கிறது.
எனவே அவருக்கு இருட்டிலும் இரகசியமான இடத்திலும் இருப்பது தெரிகிறது.
23 என் முற்பிதாக்களின் தேவனே நான் நன்றி சொல்லி உம்மைப் போற்றுகிறேன்.
நீர் எனக்கு ஞானமும் பலமும் கொடுத்தீர்.
நாங்கள் கேட்டவற்றை நீர் சொன்னீர்.
நீர் அரசனது கனவைப் பற்றி எங்களுக்குச் சொன்னீர்” என்றான்.
தானியேல் கனவின் பொருளைக் கூறுகிறான்
24 பின்னர் தானியேல், ஆரியோகுவிடம் சென்றான். அரசனான நேபுகாத்நேச்சார் பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்ல ஆரியோகுவைத் தேர்ந்தெடுத்திருந்தான். தானியேல் ஆரியோகிடம், “பாபிலோனிலுள்ள ஞானிகளைக் கொல்லவேண்டாம். என்னை அரசனிடம் கொண்டுபோங்கள். நான் அவரிடம் அவரது கனவையும் அதன் பொருளையும் கூறுவேன்” என்றான்.
25 எனவே ஆரியோகு தானியேலை மிக விரைவாக அரசனிடம் அழைத்துச் சென்றான். ஆரியோகு அரசனிடம், “நான் யூதாவிலுள்ள கைதிகளில் ஒருவனைக் கண்டுபிடித்திருக்கிறேன். அவன் அரசனிடம் அவரது கனவைப்பற்றிச் சொல்லமுடியும்” என்றான்.
26 அரசன் தானியேலிடம் (பெல்தெஷாத்சார்), “உன்னால் எனது கனவையும் அதன் பொருளையும் பற்றி சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
27 தானியேல்: “அரசரான நேபுகாத்நேச்சாரே, எந்த ஞானிகளாலும், எந்த ஜோசியர்களாலும், எந்த கல்தேயர்களாலும் அரசனின் இரகசியம் குறித்த கேள்விக்குப் பதில் சொல்ல முடியாது. 28 ஆனால் பரலோகத்தில் இரகசியங்களைப் பற்றிச் சொல்ல ஒரு தேவன் இருக்கிறார். தேவன் அரசரான நேபுகாத்நேச்சாருக்கு வருங்காலத்தில் என்ன நடைபெறும் என்பதைக் காட்ட கனவுகளைக் கொடுத்தார். இதுதான் உமது கனவு. உமது படுக்கையில் படுத்துக்கொண்டு நீர் பார்த்தவை இவைதான். 29 அரசரே, நீர் உமது படுக்கையில் படுத்துக்கொண்டிருந்தீர். நீர் வருங்காலத்தைப் பற்றி எண்ணிப் பார்க்கத் தொடங்கினீர். எதிர்காலத்தைக் குறித்த இரகசியங்களைத் தேவன் ஜனங்களுக்குச் சொல்லமுடியும். அவர் உமக்கு வருங்காலத்தில் என்ன நிகழும் என்பதைக் காட்டினார். 30 தேவன் என்னிடம் இந்த இரகசியத்தைச் சொன்னார். ஏன்? நான் மற்றவர்களைவிட ஞானம் கொண்டவன் என்பதற்காக அல்ல. அரசரான நீர் அந்த கனவின் பொருளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தேவன் என்னிடம் சொன்னார். அதே வழியில், உம் மனதில் ஓடிய நினைவுகளையும் நீர் புரிந்துகொள்வீர்.
31 “அரசரே, உமது கனவில் உமக்கு முன்னால் ஒரு பெரிய சிலையைக் கண்டீர். அச்சிலை மிகப் பெரியதும், பளபளப்பானதும், மனதைக் கிளர்ச்சியூட்டக் கூடியதாகவும் இருந்தது. அது ஒருவனின் கண்களை வியப்பால் விரியச்செய்யத்தக்கது. 32 அச்சிலையின் தலையானது சுத்தமான தங்கத்தால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் மார்பும், கைகளும் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தன. அச்சிலையின் வயிறும், கால்களின் மேல்பகுதியும் வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. 33 அச்சிலையின் கால்களின் கீழ்ப்பகுதி இரும்பால் செய்யப்பட்டிருந்தது. அச்சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்தது. 34 நீர் அந்தச் சிலையைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நீர் ஒரு பாறையைப் பார்த்தீர். கைகளால் பெயர்க்கப்படாத அக்கல் பெயர்ந்து உருண்டு வந்தது. அக்கல் காற்று வழியாக உருண்டுவந்து இரும்பாலும் களிமண்ணாலும் ஆன அச்சிலையின் பாதங்ககளில் மோதி அதின் பாதங்களை நொறுக்கியது. 35 பிறகு அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, தங்கம் எல்லாம் ஒரே நேரத்தில் துண்டுத் துண்டாக நொறுங்கியது. அவை, கோடைக் காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போன்று இருந்தன. அவற்றில், எதுவும் மிச்சமில்லாமல் அவை காற்றினால் அடித்துக்கொண்டு போகப்பட்டது. அங்கு ஒரு சிலை இருந்தது என்று எவராலும் சொல்லமுடியாதபடி இருந்தது. பிறகு சிலையைத் தாக்கிய அக்கல் பெரிய மலையாகி அந்தப் பூமி முழுவதையும் நிரப்பியது.
36 “இதுவே உமது கனவு. இப்பொழுது அரசரிடம் அதன் பொருள் என்னவென்று நான் கூறுவேன். 37 அரசரே, நீர் மிக முக்கியமான அரசராக இருக்கிறீர். பரலோத்தின் தேவன் உமக்கு இராஜ்யம், அதிகாரம், பலம், மகிமை எல்லாம் கொடுத்திருக்கிறார். 38 தேவன் உமக்குக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். உமக்கு மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆளும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். அவை எங்கே வாழ்ந்தாலும் அவற்றை ஆளும்படி உம்மை தேவன் செய்திருக்கிறார். அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர்தான் அந்தத் தங்கத்தாலான சிலையின் தலையைப் போன்றவர்.
39 “உமக்குப் பிறகு இன்னொரு இராஜ்யம் வரும். அது வெள்ளியைப் போன்றது. ஆனால் அந்த இராஜ்யம் உமது இராஜ்யத்தைப்போன்று அவ்வளவு உயர்வுடையதாக இராது. அதன் பின்னர் மூன்றாவது இராஜ்யமானது பூமி முழுவதையும் ஆளுகைச் செய்யும். அது வெண்கலப் பகுதி. 40 பிறகு நான்காவது இராஜ்யம் வரும். அது இரும்பைப்போன்று வலிமை உடையதாக இருக்கும். இரும்பானது எவ்வாறு உடைத்து தூள்தூளாக்குமோ அது போன்று நான்காவது இராஜ்யமும் மற்ற இராஜ்யங்களை நொறுக்கிப்போடும்.
41 “சிலையின் பாதங்கள் கொஞ்சம் இரும்பாலும், கொஞ்சம் களிமண்ணாலும் செய்யப்பட்டிருந்ததை நீர் பார்த்தீர். அதன் பொருள் அந்த நான்காவது இராஜ்யம் பிரிக்கப்பட்டதாயிருக்கும். அதில் இரும்பும், களிமண்ணும் கலந்திருப்பதால் இரும்பின் உறுதி கொஞ்சம் இருக்கும். 42 சிலையின் கால்விரல்கள் பாதி இரும்பாகவும், பாதி களிமண்ணாகவும் இருந்தது. எனவே நான்காவது இராஜ்யமும் இரும்பைப்போல கொஞ்சம் பலமுள்ளதாகவும், களிமண்ணைப்போல கொஞ்சம் பலவீனமுள்ளதாகவும் உடையதாக இருக்கும். 43 இரும்பு களிமண்ணோடு கலந்திருந்ததை நீர் பார்த்தீர். ஆனால் இரும்பும், களிமண்ணும் முழுமையாகக் கலக்காது. இதுபோல, நான்காவது இராஜ்யத்தில் ஜனங்கள் கலவையாக இருப்பார்கள். அந்த ஜனங்கள் ஒரே ஜனங்களாக இணையமாட்டார்கள்.
44 “நான்காவது இராஜ்யத்தில் அரசர்கள் இருக்கும்போது, பரலோகத்தின் தேவன் வேறொரு இராஜ்யத்தை உருவாக்குவார். இந்த இராஜ்யம் என்றென்றும் இருக்கும். இது அழிக்கப்படாது. இந்த இராஜ்யம் இன்னொரு ஜனங்கள் கூட்டத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை. இந்த இராஜ்யம் மற்ற இராஜ்யங்களை நொறுக்கும். இது அந்த இராஜ்யங்களை ஒரு முடிவிற்குக் கொண்டுவரும். ஆனால் இந்த இராஜ்யம் என்றென்றும் தொடர்ந்திருக்கும்.
45 “அரசரான நேபுகாத்நேச்சாரே, ஒரு மலையிலிருந்து ஒரு கல் எவராலும் பெயர்க்கப்படாமல் பெயர்ந்து வந்ததை நீர் பார்த்தீர். அக்கல் இரும்பு, வெண்கலம், களிமண், வெள்ளி, தங்கம் ஆகியவற்றைத் தூள்தூளாக்கியது. இதேபோல் தேவன் வருங்காலத்தில் என்ன நிகழும் என்று உமக்குக் காட்டினார். அந்தக் கனவு உண்மையானது. நீர் இந்த விளக்கத்தை நம்பலாம்” என்றான்.
46 அப்போது அரசனான நேபுகாத்நேச்சார் தானியேலின் முன் தரையில் விழுந்து வணங்கினான். அரசன் தானியேலைப் போற்றினான். அரசன் தானியேலைப் பெருமைப்படுத்துவதற்குக் காணிக்கை கொடுக்கவும், தூபம் காட்டவும் கட்டளையிட்டான். 47 பிறகு அரசன் தானியேலிடம், “உனது தேவன் உண்மையிலேயே அதிமுக்கியமானவரும், வல்லமை உடையவருமானவர் என்பதை அறிவேன். அவர் அனைத்து அரசர்களுக்கும் கர்த்தராக இருக்கிறார். ஜனங்கள் அறியாதவற்றை அவர்களுக்கு அவர் கூறுகிறார். இது உண்மை என்பது எனக்குத் தெரியும். ஏனென்றால் நீ இந்த இரகசியத்தை என்னிடம் சொல்லும் தகுதி பெற்றிருக்கிறாய்” என்றான்.
48 பிறகு அரசன் தானியேலுக்கு தனது இராஜ்யத்தில் மிக முக்கியமான ஒரு பதவியைக் கொடுத்தான். அதோடு அரசன் தானியேலுக்கு விலையுயர்ந்த பரிசுகளைக் கொடுத்தான். நேபுகாத்நேச்சார் தானியேலைப் பாபிலோன் மாகாணத்தின் ஆளுநராகவும் உயர்த்தினான். அதோடு அரசன் தானியேலைப் பாபிலோன் தேசத்தின் ஞானிகளுக்கெல்லாம் அதிகாரியாகவும் ஆக்கினான். 49 தானியேல் அரசனிடம் சாத்ராக்கையும், மேஷாக்கையும், ஆபேத்நேகோவையும் பாபிலோன் மாகாணத்தின் காரியங்களை விசாரிக்கும் அதிகாரிகளாக்கும்படி வேண்டினான். தானியேல் வேண்டியபடியே அரசன் செய்தான். தானியேலும் அரசன் அருகிலே இருக்கும் முக்கியமானவர்களில் ஒருவனானான்.
106 கர்த்தரைத் துதியுங்கள்!
கர்த்தர் நல்லவர், எனவே அவருக்கு நன்றி கூறுங்கள்!
தேவனுடைய அன்பு என்றென்றைக்குமுள்ளது!
2 உண்மையாகவே கர்த்தர் எவ்வளவு பெரியவர் என்பதை ஒருவரும் விவரிக்க முடியாது.
ஒருவரும் போதுமான அளவு தேவனை துதித்துவிட இயலாது.
3 தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிகிற ஜனங்கள் மகிழ்ச்சியானவர்கள்.
எப்போதும் அந்த ஜனங்கள் நல்ல காரியங்களையே செய்கிறார்கள்.
4 கர்த்தாவே, உம்முடைய ஜனங்களிடம் இரக்கமாயிருக்கும்போது
என்னை நினைவுகூர்ந்து இரட்சியும்.
5 கர்த்தாவே, நீர் தேர்ந்தெடுத்த உமது ஜனங்களுக்கு
நீர் செய்யும் நன்மைகளை நானும் பகிர்ந்துக்கொள்ளச் செய்யும்.
என்னையும் உம் ஜனங்களோடு மகிழ்ச்சியாய் இருக்கும்படி செய்யும்.
உம்மைப் புகழ்வதில் என்னையும் உம் ஜனங்களோடு இணையச் செய்யும்.
6 எங்கள் முற்பிதாக்கள் பாவம் செய்ததுப்போல் நாங்களும் பாவம் செய்தோம்.
நாங்கள் தவறு செய்தோம், நாங்கள் தீயவற்றைச் செய்தோம்.
7 கர்த்தாவே எகிப்திலுள்ள எங்கள் முற்பிதாக்கள் நீர் செய்த அதிசயங்களிலிருந்து எதையும் கற்கவில்லை.
செங்கடலின் அருகே எங்கள் முற்பிதாக்கள் உமக்கெதிராகத் திரும்பினார்கள்.
8 ஆனால் தேவன் நம் முற்பிதாக்களை அவரது சொந்த நாமத்தின் காரணமாகக் காப்பாற்றினார்.
அவரது மிகுந்த வல்லமையைக் காட்டும் பொருட்டு தேவன் அவர்களைக் காப்பாற்றினார்.
9 தேவன் கட்டளையிட்டார், செங்கடல் வறண்டு போனது.
ஆழமான கடலினூடே, பாலைவனத்தைப் போன்ற உலர்ந்த தரையின்மேல் தேவன் நம் முற்பிதாக்களை வழிநடத்தினார்.
10 தேவன் நமது முற்பிதாக்களை அவர்கள் பகைவர்களிடமிருந்து காப்பாற்றினார்.
அவர்கள் பகைவரிடமிருந்து தேவன் அவர்களைப் பாதுகாத்தார்.
11 தேவன் அவர்கள் பகைவர்களைக் கடலால் மூடினார்.
அவர்கள் பகைவர்களில் ஒருவன் கூட தப்பவில்லை.
12 அப்போது நம் முற்பிதாக்கள் தேவனை நம்பினார்கள்.
அவர்கள் அவருக்குத் துதிகளைப் பாடினார்கள்.
13 ஆனால் நம் முற்பிதாக்கள் தேவன் செய்த காரியங்களை விரைவில் மறந்துபோனார்கள்.
அவர்கள் தேவனுடைய அறிவுரைக்குச் செவிசாய்க்கவில்லை.
14 பாலைவனத்தில் நம் முற்பிதாக்களுக்குப் பசியுண்டாயிற்று.
மனிதர்களில்லாத இடத்தில் அவர்கள் தேவனைப் பரிசோதித்தார்கள்.
15 ஆனால் தேவனோ நம் முற்பிதாக்களுக்கு அவர்கள் கேட்ட பொருள்களைக் கொடுத்தார்.
கொடிய நோயையும் தேவன் அவர்களுக்குக் கொடுத்தார்.
16 ஜனங்கள் மோசேயிடம் பொறாமை கொண்டார்கள்.
அவர்கள் கர்த்தருடைய பரிசுத்த ஆசாரியனாகிய ஆரோனிடம் பொறாமை கொண்டார்கள்.
17 எனவே தேவன் பொறாமையுள்ள அந்த ஜனங்களைத் தண்டித்தார்.
தரை பிளந்து தாத்தானை விழுங்கியது.
தரை ஒன்று சேர்ந்தபோது அபிராமின் கூட்டத்தாரை மூடிக்கொண்டது.
18 பின்பு ஜனங்கள் கூட்டத்தை நெருப்பு எரித்தது.
அத்தீயோரை நெருப்பு எரித்தது.
19 ஓரேப் மலையில் அந்த ஜனங்கள் பொன்னினால் ஒரு கன்றுக்குட்டியைச் செய்தார்கள்.
அவர்கள் ஒரு சிலையைத் தொழுதுகொண்டார்கள்.
20 அந்த ஜனங்கள் புல் தின்னும் காளையின் சிலைக்காக
மகிமைபொருந்திய தங்கள் தேவனை விட்டுவிட்டார்கள்.
21 தேவன் நமது முற்பிதாக்களைக் காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் அவரை முற்றிலும் மறந்துபோனார்கள்.
எகிப்தில் அதிசயங்கள் செய்த தேவனை அவர்கள் மறந்துபோனார்கள்.
22 காமின் தேசத்தில் தேவன் வியக்கத்தக்கக் காரியங்களைச் செய்தார்.
செங்கடலின் அருகே ஆச்சரியமான காரியங்களை தேவன் செய்தார்.
23 தேவன் அந்த ஜனங்களை அழிக்க விரும்பினார்.
ஆனால் அவர் தேர்ந்தெடுத்த மோசே அவரைத் தடுத்தான்.
மோசே தேவன் தேர்ந்தெடுத்த பணியாள்.
தேவன் மிகுந்த கோபங்கொண்டார், ஆனால் மோசே தடுத்து, தேவன் ஜனங்களை அழிக்காதபடி செய்தான்.
24 ஆனால் பின்பு அந்த ஜனங்கள் அற்புதமான கானான் தேசத்திற்குள் நுழைய மறுத்தார்கள்.
தேவன் அத்தேசத்தில் வாழும் ஜனங்களை முறியடிப்பதில் அவர்களுக்கு உதவுவார் என்பதை அவர்கள் நம்பவில்லை.
25 அவர்களின் கூடாரங்களிலிருந்து ஆண்டவருக்கு எதிராகக் குறைகூறி
தேவனுக்குக் கீழ்ப்படிய மறுத்தனர்.
26 எனவே அவர்கள் பாலைவனத்தில் மடிவார்கள்
என்று தேவன் சபதமிட்டார்.
27 அவர்கள் சந்ததியினரை அந்நியர் தோற்கடிக்க அனுமதிப்பதாக தேவன் கூறினார்.
தேசங்களிலெல்லாம் நம் முற்பிதாக்களைச் சிதறடிப்பதாக தேவன் ஆணையிட்டார்.
28 பின்பு பாகால்பேயோரில், தேவனுடைய ஜனங்கள் பாகாலைத் தொழுதுகொள்ள கூடினார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தீய விருந்துகளில் கலந்து மரித்தோரைப் பெருமைப்படுத்தும் பலிகளை உண்டார்கள்.
29 தமது ஜனங்களிடம் தேவன் மிகுந்த கோபமடைந்தார்.
தேவன் அவர்களை மிகவும் நோயுறச் செய்தார்.
30 ஆனால் பினெகாஸ் தேவனிடம் ஜெபம் செய்தான்.
தேவன் அந்நோயைத் தடுத்தார்.
31 பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார்.
தேவன் நோயைத் தடுத்தார்.
தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.
32 மேரிபாவில் ஜனங்கள் கோபமடைந்தனர்.
மோசே தவறு செய்வதற்கு ஜனங்கள் காரணமாயினர்.
33 மோசே மிகவும் குழப்பமடையும்படி அந்த ஜனங்கள் செய்தனர்.
எனவே சரியாக சிந்திக்காமல் மோசே பேசினான்.
34 கானானில் வாழும் பிற தேசத்தினரைத் தோற்கடிக்குமாறு கர்த்தர் ஜனங்களுக்குக் கூறினார்.
ஆனால் இஸ்ரவேல் ஜனங்களோ தேவனுக்குக் கீழ்ப்படியவில்லை.
35 அவர்கள் பிற ஜனங்களோடு கலந்தார்கள்.
அந்த ஜனங்கள் செய்தவற்றையெல்லாம் செய்தார்கள்.
36 தேவனுடைய ஜனங்களுக்கு அவர்கள் கண்ணியாக அமைந்தார்கள்.
பிறஜனங்கள் தொழுதுகொண்ட தெய்வங்களை அவர்களும் தொழுதுகொள்ளத் தொடங்கினார்கள்.
37 தேவனுடைய ஜனங்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையே கொன்று
பிசாசிற்குக் காணிக்கையாக்கினார்கள்.
38 தேவனுடைய ஜனங்கள் களங்கமற்றோரைக் கொன்றார்கள்.
அவர்கள் தங்கள் சொந்த பிள்ளைகளையேக் கொன்று அவர்களைப் பொய் தெய்வங்களுக்குக் காணிக்கையாக்கினார்கள்.
39 எனவே தேவனுடைய ஜனங்கள் பிற ஜனங்களின் பாவங்களால் அழுக்கடைந்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் தங்கள் தேவனிடம் அவநம்பிக்கை கொண்டு, பிறர் செய்த காரியங்களையேச் செய்தார்கள்.
40 தேவன் அவரது ஜனங்களிடம் கோபங்கொண்டார்.
தேவன் அவர்களிடம் வெறுப்படைந்தார்.
41 தேவன் அவரது ஜனங்களைப் பிற தேசத்தாரிடம் கொடுத்தார்.
தேவன் அவர்களது பகைவர்கள் அவர்களை ஆளுமாறு செய்தார்.
42 தேவனுடைய ஜனங்களின் பகைவர்கள் அவர்களை அடக்கியாண்டு
அவர்களின் வாழ்க்கை கடினமாகும்படி செய்தார்கள்.
43 தேவன் அவரது ஜனங்களைப் பலமுறை காப்பாற்றினார்.
ஆனால் அவர்கள் தேவனுக்கெதிராகத் திரும்பி, தாங்கள் விரும்பியவற்றையெல்லாம் செய்தார்கள்.
தேவனுடைய ஜனங்கள் பற்பல தீயகாரியங்களைச் செய்தார்கள்.
44 ஆனால் தேவனுடைய ஜனங்கள் துன்பத்திலிருந்தபோதெல்லாம் தேவனிடம் உதவிக்காக ஜெபித்தனர்.
ஒவ்வொரு முறையும் தேவன் அவர்கள் ஜெபங்களுக்குச் செவிகொடுத்தார்.
45 தேவன் எப்போதும் அவரது உடன்படிக்கையை நினைவுக்கூர்ந்து
தமது மிகுந்த அன்பினால் அவர்களுக்கு ஆறுதல் அளித்தார்.
46 பிற தேசத்தார் அவர்களைச் சிறைவாசிகளாக்கினார்கள்.
ஆனால் தம் ஜனங்களிடம் அவர்கள் இரக்கம் காட்டும்படி தேவன் செய்தார்.
47 நம் தேவனாகிய கர்த்தர் நம்மைக் காப்பாற்றினார்!
தேவன் அத்தேசங்களிலிருந்து மீண்டும் நம்மை அழைத்து வந்தார்.
எனவே நாம் அவரது பரிசுத்த நாமத்தைத் துதிப்போம்,
எனவே நாம் அவருக்குத் துதிகளைப் பாடுவோம்.
48 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் ஆசீர்வதிக்கப்படட்டும், தேவன் எப்போதும் வாழ்கிறவர்.
அவர் என்றென்றும் வாழ்வார்.
எல்லா ஜனங்களும், “ஆமென்!
கர்த்தரைத் துதியுங்கள்” என்று சொல்லக்கடவர்கள்.
2008 by World Bible Translation Center