M’Cheyne Bible Reading Plan
சீனாய் மலையில் எலியா
19 எலியா செய்ததை எல்லாம் ஆகாப் அரசன் தன் மனைவி யேசபேலுக்கு கூறினான். அவன் எவ்வாறு அனைத்து தீர்க்கதரிசிகளையும் வாளால் கொன்றான் என்றும் கூறினான். 2 எனவே அவள் எலியாவிடம் ஒரு தூதுவனை அனுப்பி, “நாளை இதே நேரத்திற்குள், நீ தீர்க்கதரிசிகளைக் கொன்றது போன்று உன்னைக்கொல்வேன். இல்லாவிட்டால் என்னைத் தெய்வங்கள் கொல்லட்டும்” என்று சொல்லச்செய்தாள்.
3 எலியா இதைக் கேட்டதும், பயந்தான். தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடினான். தன்னோடு வேலைக்காரனையும் அழைத்துப்போனான். யூதாவிலுள்ள பெயெர்செபாவிற்குப் போய். அங்கே அவனை விட்டுவிட்டான். 4 பிறகு நாள் முழுவதும் பாலைவனத்தில் அலைந்தான். ஒரு புதரின் அருகில் உட்கார்ந்தான். “இது போதும், கர்த்தாவே! என்னை மரிக்கவிடும். என் முற்பிதாக்களைவிட நான் நல்லவன் அல்ல” என்று வேண்டினான்.
5 பிறகு அவன் ஒரு மரத்தடியில் படுத்து தூங்கினான். ஒரு தேவதூதன் வந்து அவனைத் தொட்டான். “எழுந்திரு, சாப்பிடு!” என்றான். 6 எலியா தன்னருகில் தழலில் சுடப்பட்ட அடையும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் இருப்பதைப் பார்த்தான். அவன் உண்டு குடித்து திரும்பத் தூங்கப்போனான்.
7 மீண்டும் தேவதூதன் வந்து, “எழுந்திரு! சாப்பிடு! இல்லாவிட்டால், நீண்ட பயணம் செய்யமுடியாது” என்றான். 8 எனவே எலியா எழுந்து சாப்பிட்டுவிட்டு தண்ணீர் குடித்தான். 40 நாட்கள் இரவும் பகலும் நடப்பதற்கான பெலத்தை அது கொடுத்தது. அவன் தேவனுடைய மலையான ஓரேப்புக்குச் சென்றான். 9 அங்கு ஒரு குகையில் இரவில் தங்கினான்.
அப்போது கர்த்தர், “இங்கே ஏன் இருக்கிறாய்?” என்று எலியாவிடம் பேசினார்.
10 அதற்கு எலியா, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, நான் எப்போதும் உமக்கு ஊழியம் செய்திருக்கிறேன். நான் எப்பொழுதும் என்னால் முடிந்தஅளவு சிறப்பாக சேவை செய்திருக்கிறேன். ஆனால் இஸ்ரவேலர்கள் தம் உடன்படிக்கையை முறித்துவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை அழித்தனர். உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். இப்பொழுது ஒரே தீர்க்கதரிசியான என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்!” என்று முறையிட்டான்.
11 கர்த்தர் எலியாவிடம், “எனக்கு முன்னால் மலையின் மேல் நில் அப்பொழுது நான் உன்னை கடந்து செல்வேன்” என்றார். பிறகு ஒரு பலமான காற்று அடித்தது. அது மலைகளை உடைப்பதுபோல் இருந்தது. ஆனால் அது கர்த்தர் அல்ல! பிறகு நில அதிர்ச்சி உண்டாயிற்று. அதுவும் கர்த்தர் அல்ல! 12 அதற்குப்பின், நெருப்பு உருவானது. அதுவும் கர்த்தர் அல்ல. நெருப்புக்குப்பின், அமைதியான மென்மையான சத்தம் வந்தது.
13 எலியா அந்தச் சத்தத்தைக் கேட்டதும் தன் முகத்தை சால்வையால் மூடிக்கொண்டான். குகையின் வாசலுக்கு வந்து நின்றான். பிறகு அந்தச் சத்தம் அவனிடம், “எலியா, ஏன் இங்கிருக்கிறாய்?” என்று கேட்டது.
14 எலியாவோ, “சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, என்னால் முடிந்தவரை உமக்கு எப்போதும் சேவை செய்து வருகிறேன். ஆனால் இஸ்ரவேல் ஜனங்கள் தமது உடன்படிக்கையில் இருந்து நழுவி மீறிவிட்டனர். உம்முடைய பலிபீடங்களை உடைத்தனர். அவர்கள் உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். நான் மட்டுமே ஒரே தீர்க்கதரிசியாக உயிரோடு இருக்கிறேன். இப்போது என்னையும் கொல்லப்பார்க்கிறார்கள்” என்றான்.
15 கர்த்தர், “சாலைக்குப் போ, அது தமஸ்குவிற்கு போகும். அங்குப்போய் ஆசகேலை சீரியாவின் அரசனாக அபிஷேகம் செய், 16 பிறகு, இஸ்ரவேலின் அரசனாக நிம்சியின் மகனான யெகூவை அபிஷேகம் செய். பிறகு, ஆபேல்மேகொலா ஊரானாகிய சாப்பாத்தின் மகன் எலிசாவை உனது இடத்தில் தீர்க்கதரிசியாக அபிஷேகம் செய். 17 ஆசகேல் பல தீயவர்களைக் கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை யெகூ கொன்றுவிடுவான். இவனது வாளுக்குத் தப்பியவர்களை எலிசா கொன்றுவிடுவான். 18 எலியா, நீ மட்டும் இஸ்ரவேலில் உண்மையானவன் என்றில்லை. இன்னும் பலர் இருக்கிறார்கள். நான் 7,000 பேரின் உயிரை மீதியாக வைப்பேன். 7,000 இஸ்ரவேலர் பாகாலை வணங்காதவர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் பாகாலின் விக்கிரகத்தை முத்தமிடுவதில்லை” என்றார்.
எலிசா தீர்க்கதரிசியாகிறான்
19 எலியா அந்த இடத்தை விட்டுப்போய் சாப்பாத்தின் மகனான எலிசாவைக் கண்டு பிடித்தான். எலிசா 12 ஏக்கர் நிலத்தை உழுதுக்கொண்டிருந்தான். எலியா போகும்போது அவன் உழவை முடிக்கிற நிலையில் இருந்தான். பிறகு எலியா அவனிடம் சென்று, அவன் மீது தன் போர்வையை எறிந்தான். 20 உடனே அவன் தன் மாடுகளை விட்டு விட்டு, எலியாவின் பின்னால் போனான். எலிசா, “நான் என் தந்தையிடமும் தாயிடமும் முத்தமிட்டு விடைபெற்று வரட்டுமா?” எனக் கேட்டான். எலியாவோ, “நல்லது போ, என்னால் அதைத் தடுக்க முடியாது” என்றான்.
21 எலிசா தன் குடும்பத்துடன் சிறப்பான உணவை உண்டான். எலிசா தன் பசுக்களைக் கொன்றான். நுகத்தடியை ஒடித்து விறகாக்கினான். பிறகு இறைச்சியை சமைத்து அனைவருக்கும் உண்ண உணவளித்தான். பின்னர் அவன் எலியாவிற்குப் பின்னால் போய் அவனுக்கு சேவைசெய்தான்.
தெசலோனிக்கேயாவில் பவுலின் பணி
2 சகோதர சகோதரிகளே! உங்களை நாடி நாங்கள் வந்தது வீணாகவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். 2 உங்களிடம் வரும் முன்பு நாங்கள் பிலிப்பியில் துன்புற்றோம். அங்குள்ள மக்கள் எங்களுக்கு எதிராகக் கெட்டதாகப் பேசினார்கள். உங்களுக்கு அவை பற்றித் தெரியும். நாங்கள் உங்களிடம் வந்தபோது பலர் எதிர்த்தார்கள். ஆனால் தைரியமாக இருக்க தேவன் உதவினார். நற்செய்தியை உங்களிடம் கூறவும் உதவி செய்தார். 3 நாங்கள் மக்களுக்கு ஊக்கமூட்டுகிறோம். ஒருவரும் எங்களை முட்டாளாக்கவில்லை. நாங்கள் தீயவர்கள் அல்லர். மக்களிடம் நாங்கள் தந்திரம் செய்ய முயற்சிக்கவில்லை. 4 நாங்கள் நற்செய்தியைப் பரப்புகிறோம். ஏனென்றால் எங்களை சோதித்து அறிந்த பின் நற்செய்தியைச் சொல்லும் பொருட்டு தேவன் எங்கள் மேல் நம்பிக்கை வைத்துள்ளார். ஆகவே நாங்கள் மனிதர்களை திருப்பதிப்படுத்த விரும்பவில்லை. தேவனை திருப்திப்படுத்தவே விரும்புகிறோம். தேவன் ஒருவரே நம் இதயங்களைத் தொடர்ந்து சோதனை செய்ய வல்லவர்.
5 உங்களைப் பற்றி உங்களுக்குப் பிடித்த வகையில் முகஸ்துதி செய்து திருப்திப்படுத்த நாங்கள் ஒருபோதும் முயலவில்லை என்பது உங்களுக்குத் தெரியும். நாங்கள் உங்கள் பணத்தையும் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யவில்லை. உங்களிடம் மறைக்கத்தக்க சுயநலம் எதுவும் எங்களிடம் இருந்ததில்லை. இது உண்மை என்பது தேவனுக்குத் தெரியும். 6 எவ்வித பாராட்டையும் மக்களிடம் நாங்கள் எதிர்பார்க்கவில்லை. உங்களிடமிருந்தோ வேறு யாரிடமிருந்தோ நாங்கள் எந்தப் பாராட்டையும் எதிர்பார்க்கவில்லை.
7 நாங்கள் கிறிஸ்துவின் அப்போஸ்தலர். எனவே நாங்கள் உங்களோடு இருக்கும்போது சில காரியங்களை நீங்கள் செய்யும் பொருட்டு உங்கள் மீது அதிகாரம் செலுத்தி இருக்ககூடும். எனினும் நாங்கள் மென்மையாகவே நடந்துகொண்டோம். ஒரு தாய் தன் குழந்தையைப் பாதுகாப்பது போன்று இருந்தோம். 8 உங்களை நாங்கள் பெரிதும் நேசித்தோம். எனவே, தேவனுடைய நற்செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைந்தோம். அதோடு மட்டுமல்லாமல், எங்கள் வாழ்க்கையையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ந்தோம். 9 சகோதர சகோதரிகளே! நாங்கள் எவ்வளவு கடுமையாக உழைத்தோம் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருப்பதை நான் அறிவேன். இரவும் பகலுமாக நாங்கள் பணியாற்றினோம். தேவனுடைய நற்செய்தியைப் பரப்பும்பொழுது உங்களில் எவர்மீதும் எவ்விதமான பொருளாதார பாரத்தையும் சுமத்த விரும்பவில்லை.
10 விசுவாசிகளாகிய உங்களோடு நாங்கள் இருந்தபோது தூய்மையும் நீதியும் உள்ள வழியில் குற்றமற்று வாழ்ந்தோம். இது உண்மை என உங்களுக்குத் தெரியும். தேவனுக்கும் இது உண்மை எனத் தெரியும். 11 ஒரு தந்தை தன் பிள்ளைகளை நடத்துவது போன்று நாங்கள் உங்களை நடத்தினோம் என்பது உங்களுக்குத் தெரியும். 12 நாங்கள் உங்களைப் பலப்படுத்தினோம். உங்களுக்கு ஆறுதல் அளித்தோம். தேவனுக்கான நல்வாழ்க்கையை வாழுமாறு கூறினோம். தேவன் தமது இராஜ்யத்திற்கும் மகிமைக்கும் உங்களை அழைக்கிறார்.
13 நீங்கள் நற்செய்தியை ஏற்றுக்கொண்ட விதத்திற்காக நாங்கள் தேவனுக்குத் தொடர்ந்து நன்றி செலுத்துகிறோம். எங்களிடமிருந்து நீங்கள் நற்செய்தியைக் கேட்டீர்கள். அது மனிதர்களின் வார்த்தையன்று. தேவனுடைய வார்த்தை என்றும் ஏற்றுக்கொண்டீர்கள். அது உண்மையில் தேவனுடைய செய்திதான். அது விசுவாசமுள்ள உங்களிடம் பலன் தருகிறது. 14 சகோதர சகோதரிகளே! நீங்கள் யூதேயாவில் உள்ள கிறிஸ்துவுக்குள் இருக்கும் சபைகளைப் போன்றிருக்கிறீர்கள். யூதேயாவில் உள்ள தேவனுடைய மக்கள் மற்ற யூதர்களால் மிகவும் துன்புறுத்தப்பட்டார்கள். நீங்களும் உங்கள் சொந்த நாட்டு மக்களால் அதேவிதமாக துன்புறுத்தப்பட்டீர்கள் 15 அந்த யூதர்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைக் கொன்றார்கள். மேலும் அவர்கள் தீர்க்கதரிசிகளையும் கொன்றார்கள். எங்களை யூதேயாவை விட்டு வெளியேறும்படி அவர்கள் வற்புறுத்தினார்கள். தேவன் அவர்களுடன் மகிழ்ச்சியாயில்லை. அவர்கள் மக்களனைவருக்கும் எதிராக உள்ளனர். 16 யூதர்கள் அல்லாதவர்களுக்கு நாங்கள் போதனை செய்வதை அவர்கள் தடுக்க முயற்சிக்கிறார்கள். யூதர் அல்லாதவர்கள் இரட்சிக்கப்படும்பொருட்டு நாங்கள் அவர்களுக்குப் போதிக்கிறோம். ஆனால் அந்த யூதர்களோ தாம் ஏற்கெனவே செய்த பாவங்களோடு மேலும் மேலும் பாவம் செய்துகொண்டிருக்கிறார்கள். இப்போது தேவனுடைய கோபம் முழுமையாக அவர்கள் மீது வந்துள்ளது.
மீண்டும் அவர்களைப் பார்க்க விருப்பம்
17 சகோதர சகோதரிகளே! கொஞ்ச காலமாக நாங்கள் உங்களிடம் இருந்து பிரிக்கப்பட்டிருந்தோம். (அங்கே நாங்கள் உங்களோடு இல்லாவிட்டாலும் எங்கள் நினைவுகள் உங்களோடு இருந்தன.) உங்களைப் பார்க்க நாங்கள் மிகவும் விரும்பினோம். அதற்காக மிகவும் கடுமையாய் முயற்சி செய்தோம். 18 ஆம், உங்களிடம் வர நாங்கள் விரும்பினோம். உண்மையில் பவுலாகிய நான் பலமுறை வர முயன்றேன். ஆனால் சாத்தான் எங்களைத் தடுத்துவிட்டான். 19 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது நாங்கள் பெருமைப்படக் கூடிய எங்களது நம்பிக்கையும், மகிழ்ச்சியும், கிரீடமும் நீங்கள் தானே. 20 உண்மையில் நீங்களே எங்கள் மகிழ்ச்சியும் மகிமையும் ஆவீர்கள்.
தானியேல் பாபிலோனுக்குக் கொண்டு செல்லப்படுதல்
1 நேபுகாத்நேச்சார் பாபிலோனின் அரசனாக இருந்தான். நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சார் அவனது படையுடன் எருசலேமை முற்றுகையிட்டான். யூதாவின் அரசனாகிய யோயாக்கீமின் ஆட்சியின் மூன்றாம் ஆண்டில் இது நடந்தது. 2 கர்த்தர் யூதாவின் அரசனான யோயாக்கீமை, நேபுகாத்நேச்சார் தோற்கடிக்கும்படி அனுமதித்தார். தேவனுடைய ஆலயத்திலிருந்து நேபுகாத்நேச்சார் அனைத்துப் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் எடுத்துக்கொண்டான். நேபுகாத்நேச்சார் அவற்றைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். நேபுகாத்நேச்சார் அப்பொருட்களை அவனது விக்கிரக தெய்வங்களின் ஆலயத்தில் வைத்தான்.
3 பிறகு அரசனான நேபுகாத்நேச்சார் அஸ்பேனாஸ் என்பவனுக்கு ஒரு கட்டளை கொடுத்தான். (அஸ்பேனாஸ், அரசனுக்குப் பணிவிடை செய்யும் அலிகளில் மிக முக்கியமான தலைவன்). அரசன், அஸ்பேனாசிடம் அவனது வீட்டிற்கு சில யூதர்களை அழைத்துவரும்படி சொன்னான். நேபுகாத்நேச்சார் முக்கியமான குடும்பங்களிலிருந்தும் இஸ்ரவேல் அரசகுடும்பங்களிலிருந்தும், யூதர்களை விரும்பினான். 4 அரசனான நேபுகாத்நேச்சார் ஆரோக்கியமான இளம் யூதர்களை மட்டுமே விரும்பினான். தம் உடம்பில் தழும்போ, காயமோ, குறைபாடுகளோ இல்லாத இளைஞர்களை அரசன் விரும்பினான். அரசன் அழகான சுறுசுறுப்பான இளைஞர்களை விரும்பினான். இளைஞர்களில் எல்லாவற்றையும் எளிதாகவும், வேகமாகவும், கற்றுக்கொள்ளும் ஆற்றலுடையவர்களை அரசன் விரும்பினான். அரசன், தன் வீட்டில் வேலை செய்யத் தகுதியுள்ள இளைஞர்களை விரும்பினான். அரசன் அஸ்பேனாசிடம், அந்த இஸ்ரவேல் இளைஞர்களுக்குக் கல்தேயரின் எழுத்தையும், மொழியையும் கற்றுக்கொடுக்கும்படி கூறினான்.
5 அரசனான நேபுகாத்நேச்சார் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள உணவையும் திராட்சைரசத்தையும் இளைஞர்களுக்குக் கொடுத்தான். அது அரசன் உண்ணும் உணவின் தரத்தில் இருந்தது. அரசன் இஸ்ரவேலிலிருந்து கொண்டுவரப்பட்ட இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் பயிற்சிபெற வேண்டும் என விரும்பினான். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்த இளைஞர்கள் பாபிலோன் அரசனது பணியாட்களாக இருக்கவேண்டும். 6 அந்த இளைஞர்களுள் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா என்பவர்கள் இருந்தார்கள். இந்த இளைஞர்களெல்லாம் யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர். 7 அஸ்பேனாஸ் அந்த இளைஞர்களுக்கு வேறு பெயர்களைக் கொடுத்தான். தானியேலுக்குப் பெல்தெஷாத்சார் என்றும், அனனியாவுக்குச் சாத்ராக் என்றும், மீஷாவேலுக்கு மேஷாக் என்றும், அசரியாவுக்கு ஆபேத்நேகோ என்றும் புதிய பெயர்கள் கொடுக்கப்பட்டன.
8 தானியேல் அரசனது வளமான உணவையும், திராட்சைரசத்தையும் உண்ண விரும்பவில்லை. தானியேல் அந்த உணவினாலும் திராட்சைரசத்தாலும் தன்னைத்தானே அசுத்தப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை. எனவே, அவன் அஸ்பேனாசிடம் தன்னைத் தானே அசுத்தப்படுத்திக்கொள்ளாமல் இருக்க அனுமதி கேட்டான்.
9 தேவன், அஸ்பேனாஸ் தானியேலிடம் தயவும் இரக்கமும் கொள்ளும்படி செய்தார். 10 ஆனால் அஸ்பேனாஸ் தானியேலிடம், “நான் என் அரசரான எஜமானருக்குப் பயப்படுகிறேன். அரசர் இந்த உணவையும், திராட்சைரசத்தையும் உனக்குத் தரும்படி கட்டளையிட்டிருக்கிறார். நீ இந்த உணவை உண்ணாவிட்டால், பலவீனமுடையவனாகவும், நோயாளியாகவும் ஆவாய். நீ உன் வயதுள்ள மற்ற இளைஞர்களைவிட மோசமான நிலையில் இருப்பாய். அரசர் இதனைப் பார்த்து என் மீது கோபங்கொள்வார். அவர் என் தலையை வெட்டிவிடலாம், ஆனால் இதற்கு உனது தவறே காரணமாகும்” என்று சொன்னான்.
11 பிறகு தானியேல் அவர்களது காவலனிடமும் பேசினான். அஸ்பேனாசு அந்தக் காவலனிடம் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைக் கவனித்துக் கொள்ளும்படி கட்டளையிட்டிருந்தான். 12 தானியேல் காவலனிடம் “தயவுசெய்து பின் வரும் சோதனையைப் பத்து நாட்களுக்கு எங்களுக்குத் தாரும். எங்களுக்கு உண்ண காய்கறிகளும், குடிக்கத் தண்ணீரும் தவிர வேறு எதுவும் தரவேண்டாம். 13 பத்து நாட்களுக்குப் பின்னர் அரசனது உணவை உண்ணும் மற்றவர்களோடு எங்களை ஒப்பிட்டுப் பார்த்து, யார் ஆரோக்கியமாக இருக்கிறார்கள் எனப் பாரும். பிறகு நீர் எங்களை எவ்வாறு நடத்துவது என்று முடிவு செய்யலாம். நாங்கள் உமது பணியாளர்கள்” என்று சொன்னான்.
14 எனவே, காவலன் பத்து நாட்களுக்குத் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோரைச் சோதிக்க ஒப்புக்கொண்டான். 15 பத்து நாட்களுக்குப் பிறகு, தானியேலும் அவனது நண்பர்களும் அரசனது உணவை உண்டுவந்த மற்றவர்களைவிட ஆரோக்கியமாகக் காணப்பட்டனர். 16 எனவே, காவலன் அரசனது உணவையும் திராட்சைரசத்தையும் தொடர்ந்து கொடுப்பதை நிறுத்தினான். அதற்குப் பதிலாக அவன் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்குக் காய்கறிகளைக் கொடுத்தான்.
17 தேவன்,தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியோருக்கு ஞானத்தையும், பலவித எழுத்துக்களையும், அறிவியலையும் கற்றுக்கொள்ளும் திறமையையும் கொடுத்தார். தானியேல், பலவித தரிசனங்களையும், கனவுகளையும் புரிந்துகொள்ள முடிந்தது.
18 அரசன் அனைத்து இளைஞர்களும் மூன்று ஆண்டுகளுக்குப் பயிற்சி பெறவேண்டும் என்று விரும்பினான். அக்கால முடிவில் அரசனான நேபுகாத்நேச்சாரின் முன்பு எல்லா இளைஞர்களையும் அஸ்பேனாஸ் கொண்டுவந்தான். 19 அரசன் அவர்களோடு பேசினான். அரசன் அந்த இளைஞர்களில் எவரும் தானியேல், அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களைப்போன்று சிறந்தவர்களாக இல்லை என்பதைக் கண்டுகொண்டான். எனவே அந்த நான்கு இளைஞர்களும் அரசனின் பணியாட்கள் ஆயினர். 20 ஒவ்வொரு முறையும் அரசன் அவர்களிடம் கேட்கும் முக்கியமான கேள்விகளுக்கு அவர்கள் மிகுந்த ஞானத்தையும் புத்தியையும் காட்டினார்கள். அரசன் அவனது அரசாங்கத்தில் உள்ள மந்திரவாதிகளையும், ஞானிகளையும்விட இவர்கள் பத்து மடங்கு சிறந்தவர்கள் என்று கண்டான். 21 எனவே தானியேல் தெடார்ந்து அரசனது பணியாளாக கோரேஸ் ஆண்ட முதலாம் ஆண்டு மட்டும் இருந்தான்.
105 கர்த்தருக்கு நன்றி கூறுங்கள்.
அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்.
அவர் செய்யும் அற்புதங்களைத் தேசங்களுக்குக் கூறுங்கள்.
2 கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்.
அவருக்குத் துதிகளைப் பாடுங்கள்.
அவர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைக் குறித்துக் கூறுங்கள்.
3 கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைக் குறித்துப் பெருமைகொள்ளுங்கள்.
ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரைத் தேடிவந்தீர்கள். சந்தோஷமாயிருங்கள்!
4 வல்லமைக்காக கர்த்தரிடம் போங்கள்.
உதவிக்காக எப்போதும் அவரிடம் போங்கள்.
5 அவர் செய்யும் வியப்பிற்குரிய காரிங்களை நினைவுகூருங்கள்.
அவர் செய்த அதிசயங்களையும் ஞானமுள்ள முடிவுகளையும் எண்ணிப் பாருங்கள்.
6 நீங்கள் அவரது பணியாளாகிய ஆபிரகாமின் சந்ததியினர்.
நீங்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாக்கோபின் சந்ததியினர்.
7 கர்த்தரே நமது தேவன்.
கர்த்தர் உலகம் முழுவதையும் ஆளுகிறார்.
8 தேவனுடைய உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருங்கள்.
ஆயிரம் தலைமுறை வரையிலும் அவரது கட்டளைகளை நினைவுகூருங்கள்.
9 தேவன் ஆபிரகாமோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
தேவன் ஈசாக்கோடு ஒரு வாக்குறுதியைச் செய்தார்.
10 பின்பு அவர் அதனை யாக்கோபிற்கு ஒரு சட்டமாகச் செய்தார்.
தேவன் இஸ்ரவேலோடு ஒரு உடன்படிக்கை செய்தார்.
அது என்றென்றும் தொடரும்!
11 தேவன்: “நான் கானானின் தேசத்தை உனக்குக் கொடுப்பேன்.
அத்தேசம் உனக்குச் சொந்தமாகும்” என்றார்.
12 ஆபிரகாமின் குடும்பம் சிறியதாயிருந்தபோது தேவன் அவ்வாக்குறுதியை அளித்தார்.
அவர்கள் அங்கு அந்நியராகச் சில காலத்தைக் கழித்தனர்.
13 அவர்கள் ஒரு அரசிலிருந்து மற்றோர் அரசிற்கும்,
ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்கும் பயணம் செய்தார்கள்.
14 ஆனால் ஜனங்கள் அவர்களைத் தகாதபடி நடத்த தேவன் அனுமதிக்கவில்லை.
அவர்களைத் துன்புறுத்தாதபடிக்கு தேவன் அரசர்களை எச்சரித்தார்.
15 தேவன், “நான் தேர்ந்தெடுத்த ஜனங்களுக்குத் தீமை செய்யாதீர்கள்.
எனது தீர்க்கதரிசிகளுக்கு எந்தத் தீமையும் செய்யாதீர்கள்” என்றார்.
16 தேவன் தேசத்தில் பஞ்சம் வரப்பண்ணினார்.
ஜனங்களுக்கு உண்பதற்குத் தேவையான உணவு இருக்கவில்லை.
17 ஆனால் அவர்களுக்கு முன்னே தேவன் யோசேப்பு என்ற மனிதனை அனுப்பினார்.
யோசேப்பு ஒரு அடிமையாக விற்கப்பட்டான்.
18 யோசேப்பின் கால்களை அவர்கள் ஒரு கயிற்றால் கட்டினார்கள்.
அவன் கழுத்தைச் சுற்றிலும் ஒரு இரும்பு வளையத்தை அணிவித்தார்கள்.
19 அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான்.
யோசேப்பு நேர்மையானவன் என்பதை கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.
20 எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான்.
தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.
21 அவர் அவனுக்குத் தமது வீட்டின் பொறுப்பைக் கொடுத்தார்.
அவருக்குச் சொந்தமான அனைத்தையும் யோசேப்பு கண்காணித்து வந்தான்.
22 பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான்.
யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.
23 பின்பு இஸ்ரவேல் எகிப்திற்கு வந்தான்.
யாக்கோபு காமின் நாட்டில் வாழ்ந்தான்.
24 யாக்கோபின் குடும்பம் பெருகிற்று.
அவர்களின் பகைவர்களைக் காட்டிலும் அவர்கள் பலவான்களானார்கள்.
25 எனவே எகிப்தியர்கள் யாக்கோபின் குடும்பத்தைப் பகைக்கத் தொடங்கினார்கள்.
அவர்களின் அடிமைகளுக்கு எதிரான திட்டங்கள் வகுத்தார்கள்.
26 எனவே தேவன் தமது தாசனாகிய மோசேயை அனுப்பினார்.
தேவன் தேர்ந்தெடுத்த ஆசாரியனாக ஆரோன் இருந்தான்.
27 காமின் நாட்டில் பல அதிசயங்களைச் செய்வதற்கு
தேவன் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினார்.
28 தேவன் மிகக் கடும் இருளை அனுப்பினார்.
ஆனால் எகிப்தியர்கள் அவருக்குச் செவி சாய்க்கவில்லை.
29 எனவே தேவன் தண்ணீரை இரத்தமாக்கினார்.
எல்லா மீன்களும் மடிந்தன.
30 அவர்கள் நாடு தவளைகளால் நிரம்பிற்று.
அரசனின் படுக்கையறையில் கூட தவளைகள் இருந்தன.
31 தேவன் கட்டளையிட்டார்.
ஈக்களும் பேன்களும் வந்தன.
அவை எங்கும் நிரம்பின.
32 தேவன் கல்மழையைப் பெய்யப்பண்ணினார்.
நாடு முழுவதையும் மின்னல் பாதித்தது.
33 தேவன் அவர்களது திராட்சைக் கொடிகளையும் அத்திமரங்களையும் அழித்தார்.
அந்நாட்டின் ஒவ்வொரு மரத்தையும் தேவன் அழித்தார்.
34 தேவன் கட்டளையிட்டார், வெட்டுக்கிளிகளும் புல்புழுக்களும் வந்தன.
அவை எண்ணமுடியாத அளவு இருந்தன!
35 வெட்டுக்கிளிகளும் பச்சைப்புழுக்களும் நாட்டின் எல்லா தாவரங்களையும்,
வயலின் எல்லா பயிர்களையும் தின்றன.
36 பின்பு தேவன் நாட்டின் முதற்பேறான ஒவ்வொன்றையும் கொன்றார்.
தேவன் முதலில் பிறந்த மகன்களைக் கொன்றார்.
37 பின்பு தேவன் தமது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றார்.
அவர்கள் பொன்னையும் வெள்ளியையும் எடுத்துச் சென்றனர்.
தேவனுடைய ஜனங்கள் எவரும் தடுக்கிவிழவில்லை.
38 தேவனுடைய ஜனங்கள் செல்வதைக் கண்டு எகிப்து மகிழ்ந்தது.
ஏனெனில் அவர்கள் தேவனுடைய ஜனங்களுக்கு அஞ்சினார்கள்.
39 தேவன் தமது மேகத்தை ஒரு போர்வையாகப் பரப்பினார்.
தமது ஜனங்களுக்கு இரவில் ஒளி தரும்படி ஒரு நெருப்புத்தூணை தேவன் பயன்படுத்தினார்.
40 ஜனங்கள் உணவுக்காக வேண்டினார்கள், தேவன் காடைகளைக் கொணர்ந்தார்.
தேவன் பரலோகத்திலிருந்து மிகுதியான உணவைக் கொடுத்தார்.
41 தேவன் கன்மலையைப் பிளந்தார், தண்ணீர் கொப்பளித்து வெளியேறிற்று.
பாலைவனத்தில் ஒரு நதி ஓட ஆரம்பித்தது.
42 தேவன் அவரது பரிசுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
தேவன் அவரது தாசனாகிய ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுக்கூர்ந்தார்.
43 தேவன் அவரது ஜனங்களை எகிப்திலிருந்து வெளியே வரவழைத்தார்.
மகிழ்ச்சியான பாடல்களைப் பாடிக்கொண்டு ஜனங்கள் களிப்போடு எகிப்தைவிட்டுப் புறப்பட்டு வந்தார்கள்!
44 பிற ஜனங்கள் வாழ்ந்துகொண்டிருந்த நாட்டை தேவன் தமது ஜனங்களுக்குக் கொடுத்தார்.
பிற ஜனங்கள் உழைத்துப் பெற்ற பொருட்களை தேவனுடைய ஜனங்கள் பெற்றனர்.
45 ஏன் தேவன் இதைச் செய்தார்?
அப்போதுதான் அவரது ஜனங்கள் அவரளித்த சட்டங்களுக்குக் கீழ்ப்படிய முடியும்.
அவர்கள் கவனமாக அவரது போதனைகளுக்குக் கீழ்ப்படிய முடியும்.
கர்த்தரைத் துதியுங்கள்!
2008 by World Bible Translation Center