M’Cheyne Bible Reading Plan
எலியாவும் மழையற்ற காலமும்
17 கீலேயாத்தின் திஸ்பியன் நகரில் எலியா என்ற தீர்க்கதரிசி இருந்தான். இவன் அரசனான ஆகாப்பிடம், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஊழியம் செய்பவன். அவரது வல்லமையால், வருகின்ற சில வருடங்கள் மழையும் பனியும் இல்லாமல் போகும் எனக் கூறுகிறேன். நான் கட்டளையிட்டால்தான் மழைபொழியும்” என்றான்.
2 பிறகு கர்த்தர் எலியாவிடம், 3 “இந்த இடத்தை விட்டு கீழ் நாடுகளுக்குப் போ. கேரீத் ஆற்றருகில் ஒளிந்துக்கொள். அது யோர்தான் ஆற்றிற்குக் கிழக்கே உள்ளது. 4 அந்த ஆற்றின் தண்ணீரைக் குடி. அங்கு காகங்கள் உனக்கு உணவு கொண்டுவரும்படி நான் கட்டளையிட்டிருக்கிறேன்.” என்றார். 5 எனவே எலியா அங்கே போனான். கர்த்தருடைய கட்டளைபடியே கேரீத்தில் ஒளிந்திருந்தான். 6 ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் காகங்கள் இறைச்சியும் அப்பமும் கொண்டுவந்தன. ஆற்று தண்ணீரைக் குடித்தான்.
7 மழை இல்லாமல் போனது. கொஞ்ச நாள் ஆனதும் ஆறும் வறண்டது. 8 கர்த்தர் எலியாவிடம், 9 “சீதோனில் உள்ள சாறிபாத்துக்குப் போ. அங்கே இரு. கணவனை இழந்த ஒருத்தி அங்கே இருக்கிறாள். அவள் உனக்கு உணவு தருமாறு நான் கட்டளையிட்டிருக்கிறேன்” என்றார்.
10 எலியா சாறிபாத்துக்குப் போனான். நகர வாயிலுக்குள் நுழையும்போதே ஒரு பெண்ணைப் பார்த்தான். அவள் கணவன் மரித்துப்போயிருந்தான். அவள் விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள். எலியா அவளிடம், “நான் குடிக்க ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் தண்ணீர் கொண்டுவரமாட்டாயா?” என்ற கேட்டான். 11 அவள் தண்ணீர் கொண்டுவர போனபோது, அவன், “தயவு செய்து அப்பமும் கொண்டு வா” என்றான்.
12 அவளோ, “நான் தேவனாகிய கர்த்தர் மீது ஆணையிட்டுக் கூறுகிறேன். என்னிடம் அப்பம் இல்லை. ஜாடியில் கொஞ்சம் மாவும், கலயத்தில் கொஞ்சம் எண்ணெயும் உள்ளது. நான் விறகு பொறுக்க வந்துள்ளேன். இதனால் எங்கள் கடைசி உணவை சமைத்து உண்டுவிட்டு பிறகு பசியால் நானும் என் மகனும் மரிக்கவேண்டும்” என்றாள்.
13 எலியா அந்தப் பெண்ணிடம், “கவலைப்படாதே, வீட்டிற்குப்போய் நான் சொன்னது போல சமையல் செய். உன்னிடம் உள்ள மாவால் ஒரு சிறு அப்பத்தைச் செய், அதனை எனக்குக் கொண்டு வா. பிறகு உங்களுக்கானதைச் செய்யலாம், 14 இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர், ‘அந்த ஜாடியில் உள்ள மாவு காலியாகாது, கலயத்திலும் எண்ணெய் குறையாது என்று கூறியுள்ளார். இது கர்த்தர் மழையைக் கொண்டு வரும்வரை நிகழும்’ என்கிறார்” என்றான்.
15 எனவே அந்தப் பெண் வீட்டிற்குத் திரும்பிச் சென்று எலியா சொன்னது போல் செய்தாள். எலியாவிற்கும் அந்தப் பெண்ணிற்கும் அவள் மகனுக்கும் பல நாட்களுக்குப் போதுமான உணவு இருந்தது. 16 அவளது ஜாடியும் பானையும் காலியாகாமல் இருந்தன. கர்த்தர் சொன்னபடியே எல்லாம் நடந்தது. கர்த்தர் எலியாவின் மூலம் பேசினார்.
17 கொஞ்ச நாள் ஆனதும் அப்பெண்ணின் மகன் அதிகமாக நோய்வாய்ப்பட்டான். இறுதியில் சுவாசிப்பதை நிறுத்தினான். 18 அப்பெண் எலியாவிடம், “நீர் ஒரு தீர்க்கதரிசி. எனக்கு உதவுவீரா. நீங்கள் இங்கு ஏன் வந்தீர்கள்? உங்களுக்கும் எனக்கும் என்ன தொடர்பு? என் பாவங்களை நினைவூட்டவும் என் மகனைக் கொல்லுவதற்குமா வந்தீர்கள்?” என்று கேட்டாள்.
19 எலியா அவளிடம், “உன் மகனை என்னிடம் கொடு” என்றான். பின் அவனைத் தூக்கிக்கொண்டு மேல் மாடிக்குப் படிவழியே ஏறிப்போனான். தனது அறையிலுள்ள படுக்கையில் அவனைக் கிடத்தினான். 20 பிறகு எலியா, “எனது தேவனாகிய கர்த்தாவே, இந்த விதவை எனக்குத் தங்க இடம் தந்தாள். அவளுக்கு இத்தீமையைச் செய்யலாமா? மகன் மரிக்க காரணம் ஆகலாமா?” 21 பின் அவன் மீது மூன்று முறை குப்புற விழுந்து, “எனது தேவனாகிய கர்த்தாவே! இவனை மீண்டும் பிழைக்கச் செய்வீராக!” என்றான்.
22 எலியாவின் வேண்டுதலுக்குக் கர்த்தர் பதிலளித்தார். அப்பையன் மீண்டும் உயிர் பிழைத்தான்! 23 எலியா அவனைத் தூக்கிக்கொண்டு கீழே வந்தான். அவன் அந்தப் பெண்ணிடம், “இதோ பார் உன் மகன் உயிரோடு இருக்கிறான்!” என்று கூறினான்.
24 அந்தப் பெண், “நீங்கள் உண்மையில் தேவனுடைய மனிதர் என்று நான் இப்போது அறிகிறேன். கர்த்தர் உங்கள் மூலமாக உண்மையில் பேசுகிறார்” என்றாள்.
4 எஜமானர்களே! உங்கள் வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள். பரலோகத்தில் உங்களுக்கு ஒரு எஜமானர் இருக்கிறார் என்பதை நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
கிறிஸ்தவர்களுக்குப் போதித்த கருத்துக்கள்
2 தொடர்ந்து பிரார்த்தனை செய்யுங்கள். நீங்கள் பிரார்த்தனை செய்யும்போது, மனதைத் தயார் நிலையில் வைத்திருங்கள். மேலும் தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். 3 எங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள். தேவனுடைய செய்தியை நாங்கள் மக்களிடம் பரப்பிட வாய்ப்பு அளிக்குமாறு அவரை வேண்டுங்கள். கிறிஸ்துவைப் பற்றி தேவன் வெளிப்படுத்தியிருக்கிற இரகசிய உண்மையை நாங்கள் பிரச்சாரம் செய்ய பிரார்த்தனை செய்யுங்கள். இதனைப் பிரச்சாரம் செய்ததால் நான் சிறையில் இருக்கிறேன். 4 இந்த உண்மையை நான் மக்களிடம் தெளிவுபடுத்த முடியும். இதுவே நான் செய்ய வேண்டியதாகும்.
5 கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களோடு சேர்ந்து வாழும்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதில் ஞானமுடையவர்களாக இருங்கள். உங்களால் முடிந்தவரை நல்வழியில் உங்கள் காலத்தைச் செலவு செய்யுங்கள். 6 நீங்கள் பேசும்போது கருணையுடனும், ஞானத்துடனும் இருங்கள். பிறகு, உங்களால் எவருக்கும் பதில் சொல்ல இயலும்.
பவுலோடிருந்த மக்களைப் பற்றிய செய்தி
7 தீகிக்கு கிறிஸ்துவுக்குள் என் அன்பான சகோதரன். கர்த்தருக்குள் அவன் நம்பிக்கைக்கு உரிய ஊழியன். என்னோடு பணியாற்றும் கர்த்தரின் வேலையாள். என் வாழ்வில் நடைபெற்றுக்கொண்டிருக்கிற எல்லாவற்றையும் அவன் உங்களுக்குக் கூறுவான். 8 அதற்காகத் தான் அவனையும் அனுப்புகிறேன். நாங்கள் எப்படி இருக்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். உங்களை உற்சாகப்படுத்த அவனை அனுப்புகிறேன். 9 ஒநேசிமுவோடு அவனை அனுப்புகிறேன். ஒநேசிமுவும் கிறிஸ்துவுக்குள் எனது அன்பான நம்பிக்கைக்கு உரிய சகோதரன். அவன் உங்கள் கூட்டத்திலிருந்து வந்தவன். எங்களைப் பற்றிய செய்திகளை எல்லாம் தீகிக்குவும், ஒநேசிமுவும் உங்களிடம் கூறுவார்கள்.
10 அரிஸ்தர்க்கு தன் வாழ்த்துக்களை உங்களுக்குத் தெரிவிக்கிறான். அவன் என்னோடு சிறையில் இருக்கிறான். பர்னபாவின் உறவினனான மாற்கும் வாழ்த்து கூறுகிறான். நான் ஏற்கெனவே சொன்ன தகவல்களின்படி இவன் வந்தால் வரவேற்றுக்கொள்ளுங்கள். 11 இயேசுவும் வாழ்த்து கூறுகிறான். (யுஸ்து என்பது அவனது மறு பெயர்) யூதர்களாகிய இவர்கள் தேவனுடைய இராஜ்யத்திற்காக என்னோடு பாடுபடுகிறார்கள். இவர்கள் எனக்கு ஆறுதலாக இருக்கிறார்கள்.
12 எப்பாப்பிராவும் வாழ்த்து கூறுகிறான். அவன் இயேசு கிறிஸ்துவின் ஊழியன். அவனும் உங்கள் கூட்டத்தைச் சேர்ந்தவன். அவன் எப்போதும் உங்களுக்காகவே பிரார்த்தனை செய்கிறான். நீங்கள் ஆன்மீக வாழ்வில் முழுமை பெறவும், தேவன் விரும்புகிறவைகளை நீங்கள் பெற வேண்டும் என்றும் அவன் பிரார்த்திக்கிறான். 13 அவன் உங்களுக்காகவும் லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும் கடுமையாகப் பாடுபட்டான் என அவனுக்காக நான் சான்றுரைக்கிறேன். 14 தேமாவும் நமது அன்பான நண்பனும் மருத்துவனுமான லூக்காவும் உங்களுக்கு வாழ்த்து கூறுகிறார்கள்.
15 லவோதிக்கேயாவில் உள்ள சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்து கூறுங்கள். நிம்பாவுக்கும் அவனது வீட்டில் கூடுகிற சபைக்கும் வாழ்த்து கூறுங்கள். 16 உங்களிடத்தில் இந்த கடிதம் வாசிக்கப்பட்ட பின்பு லவோதிக்கேயா சபைக்கும் வாசிக்க ஏற்பாடு செய்யுங்கள். நான் லவோதிக்கேயா சபைக்கு எழுதிய நிருபத்தையும் வாசியுங்கள். 17 அர்க்கிப்பைக் கண்டு, “கர்த்தர் நமக்குக் கொடுத்த பணியை முழுமையாய் செய்வதில் உறுதியாய் இரு” என்று சொல்லுங்கள்.
18 பவுலாகிய நானே என் கையால் எழுதி உங்களை வாழ்த்துகிறேன். நான் சிறையில் இருப்பதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். தேவனுடைய கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
ஆலயத்திலிருந்து வெளியே வழிந்தோடும் தண்ணீர்
47 அம்மனிதன் என்னை ஆலயத்தின் வாசலுக்குத் திரும்ப வரச்செய்தான். ஆலயத்தின் கிழக்கு வாசலின் கீழிருந்து தண்ணீர் கிழக்கே ஓடுவதைப் பார்த்தேன். ஆலயத்தின் முகப்பு கிழக்கு நோக்கியிருந்தது. அந்தத் தண்ணீர் ஆலயத்தின் வலதுபுறமாய் பலிபீடத்திற்குத் தெற்கே பாய்ந்தது. 2 அம்மனிதன் என்னை வடக்கு வாசல் வழியாக வெளியே நடத்திச் சென்றான். அவன் என்னை வெளியே கீழ்த்திசையின் புறவாசல் வரை சுற்றி நடத்திக் கொண்டு போனான். அங்கே தண்ணீர் வாசலின் தெற்கே பாய்ந்தது.
3 அம்மனிதன் தனது கையில் நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கே நடந்தான். அவன் 1,000 முழம் (1/3 மைல்) அங்கே அளந்தான். பிறகு அவன் என்னிடம் அந்த இடத்தில் தண்ணீரைக் கடக்கச் சொன்னான். அத்தண்ணீர் என் கணுக்கால் அளவுக்கு இருந்தது. 4 அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். அங்கே அவன் என்னைத் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் முழங்கால் அளவாய் இருந்தது. பிறகு, அவன் இன்னொரு 1,000 முழம் (1/3 மைல்) அளந்து, அந்த இடத்தில் என்னிடம் தண்ணீரைக் கடக்கும்படிச் சொன்னான். அங்கே தண்ணீர் என் இடுப்பளவிற்கு இருந்தது. 5 அம்மனிதன் இன்னும் 1,000 முழம் (1/3 மைல்) அளந்தான். ஆனால் அங்கே தண்ணீர் கடக்க முடியாத அளவிற்கு ஆழமாக இருந்தது. அது ஆறு போல இருந்தது. அந்தத் தண்ணீர் நீந்துகிற அளவிற்கு ஆழமாயிருந்தது. 6 பிறகு அம்மனிதன் என்னிடம், “மனுபுத்திரனே, நீ பார்த்ததை உன்னிப்பாகக் கவனித்தாயா?” என்றான்.
பிறகு என்னை, நதியோரமாகத் திரும்ப நடத்திக்கொண்டு போனான். 7 நான் நடந்து வரும்போது இதோ நதியோரத்தில் இக்கரையிலும் அக்கரையிலும் அநேக மரங்கள் இருந்தன. 8 அம்மனிதன் என்னிடம், “இந்தத் தண்ணீர் புறப்பட்டு கிழக்கே போய், கீழே அரபா பள்ளத்தாக்கிற்கு போகிறது. 9 இந்தத் தண்ணீர் சவக்கடலுக்குள் பாயும். அதனால் அக்கடலிலுள்ள தண்ணீர் புத்துயிரும் சுத்தமும் அடையும். இத்தண்ணீரில் ஏராளமான மீன்கள் உள்ளன. இந்த ஆறு போகிற இடங்களில் எல்லாம் எல்லா வகை மிருகங்களும் உள்ளன. 10 என்கேதி முதல் எனெக்லாயிம் வரை மீன் பிடிக்கிறவர்கள் ஆற்றங்கரையில் நிற்பதை நீ பார்க்கமுடியும். அவர்கள் தம் வலையை வீசி பலவகை மீன்கள் பிடிப்பதை நீ பார்க்க முடியும். சவக்கடலிலுள்ள மீன்கள் மத்திய தரைக் கடலில் உள்ள மீன்களைப்போன்று பலவகைகளாகவும் மிகுதியாகவும் இருக்கும். 11 ஆனாலும் அதனுடைய உளையான பள்ளங்களும் மேடுகளும் வளம் பெறாமல் உப்பு நிலமாகவே விடப்படும். 12 எல்லாவகையான பழ மரங்களும் ஆற்றின் இரு கரைகளிலும் வளரும். அவற்றின் இலைகள் காய்ந்து உதிர்வதில்லை. அம்மரங்களில் பழங்கள் பழுப்பது நிற்பதில்லை. ஒவ்வொரு மாதமும் மரங்களில் பழங்கள் வரும். ஏனென்றால், இம்மரங்களுக்கான தண்ணீர் ஆலயத்திலிருந்து வருகின்றது. அம்மரங்களின் கனிகள் உணவாகவும் அவற்றின் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.”
கோத்திரங்களுக்கான நிலப் பாகுபாடுகள்
13 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “இஸ்ரவேலின் 12 கோத்திரங்களுடைய எண்ணிக்கைப்படியே நாட்டில் குறிக்க வேண்டிய எல்லையாவது: யோசேப்பு இரண்டு பங்குகளைப் பெறுவான். 14 நீ தேசத்தை சமமாகப் பங்கிட வேண்டும். நான் இந்தத் தேசத்தை உங்களது முற்பிதாக்களுக்குத் தருவதாக வாக்களித்தேன். ஆகையால் இந்தத் தேசத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
15 “தேசத்தின் எல்லையாவது: வடபுறம் மத்தியதரைக் கடலில் இருந்து தொடங்கி சேதாதுக்குப் போகிற எத்லோன் வழியாய் இருக்கிறது. 16 ஆமாத்தும் பேரொத்தாவும் தமஸ்குவின் எல்லைக்கும் ஆமாத்தின் எல்லைக்கும் நடுவான சிப்ராயிமும் ஆப்ரானின் எல்லையோடே சேர்ந்த ஆத்சார் அத்தீகோனுமானது. 17 அப்படியே எல்லை கடலிலிருந்து தமஸ்குவின் வட எல்லையான ஆத்சார் ஏனான் மற்றும் ஆமாத்திற்குப் போகும். இது வட புறத்தில் இருக்கும்.
18 “கிழக்குப் பக்கத்தில், எல்லையானது ஆத்சார் ஏனானிலிருந்து ஆப்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையில் சென்று யோர்தான் நதியின் ஓரமாக கீலேயாத்துக்கும் இஸ்ரவேல் தேசத்துக்கும் இடையில் கிழக்குக்கடலுக்குச் சென்று தாமார்வரை செல்லுகிறது. இது கிழக்கு எல்லையாக இருக்கும்.
19 “தென் புறத்தில், எல்லையானது, தாமார் தொடங்கி மெரிபா காதேஷின் பாலைவனச் சோலைவரை இருக்கும். பிறகு இது எகிப்து ஆற்றிலிருந்து மத்தியதரை கடல் வரை போகும். இது தென்னெல்லையாக இருக்கும்.
20 “மேற்கு புறத்தில், மத்தியத்தரைக்கடல் லேபோ ஆமாத்தின் முன் இருக்கும் எல்லா நிலப்பரப்புவரையும் மெற்கெல்லையாக இருக்கும்.
21 “எனவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களின்படியே உங்களுக்குள்ளே தேசத்தைப் பங்கிட்டுக்கொள்வீர்களாக. 22 நீங்கள் நிலத்தைச் சொத்தாக, உங்களுக்கும், தங்கள் பிள்ளைகளுடன் உங்கள் மத்தியில் வாழும் அந்நியர்களுக்கும் பங்குபோடுவீர்கள். அந்த அந்நிய ஜனங்கள் இஸ்ரவேலில் பிறந்தவர்கள் போலவே ஜனங்கள் ஆவார்கள். இஸ்ரவேலின் கோத்திரங்களின் மத்தியில் நீங்கள் அவர்களுக்குக் கொஞ்சம் நிலத்தை பங்குபோடுவீர்கள். 23 எந்தக் கோத்திரத்தோடு அந்த அந்நியன் தங்கியிருக்கிறானோ அவர்கள் அவனுக்குரிய கொஞ்சம் நிலத்தைக் கொடுக்க வேண்டும்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
தாவீதின் ஒரு பாடல்
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
நீங்கள் அவரது பணியாட்கள்.
தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
2008 by World Bible Translation Center