M’Cheyne Bible Reading Plan
யூதாவின் அரசனான அபியா
15 நேபாத் என்பவனின் மகனான யெரொபெயாம் என்பவன் இஸ்ரவேலின் அரசனாக ஆண்டான். அவனது 18வது ஆட்சியாண்டில், அவனது மகன் அபியா யூதாவின் அரசன் ஆனான். 2 அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் மகளான மாகாள்.
3 அவன் தன் தந்தையைப்போலவே அனைத்து பாவங்களையும் செய்தான். அபியா தன் தாத்தாவாகிய தாவீதைப்போன்று தேவனாகிய கர்த்தருக்கு உண்மையானவனாக இல்லை. 4 கர்த்தர் தாவீதை நேசித்தார். அதனால், கர்த்தர் அபியாவிற்கு எருசலேமின் ஆட்சியைக் கொடுத்தார். அவனுக்கு ஒரு மகனையும் எருசலேமிற்குப் பாதுகாப்பையும் தாவீதிற்காக கர்த்தர் கொடுத்தார். 5 கர்த்தருக்குப் பிடித்த சரியான காரியங்களை மட்டுமே எப்பொழுதும் தாவீது செய்துவந்தான். அவன் எப்பொழுதும் கர்த்தருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தான். அவன் ஒரே ஒருமுறைமட்டும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. அது ஏத்தியனான உரியாவிற்கு செய்ததாகும்.
6 ரெகொபெயாமும் யெரொபெயாமும் எப்பொழுதும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். 7 அபியா செய்த பிற செயல்களெல்லாம் யூதாவின் அரசர்கள் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
அபியா அரசனாக இருந்த காலம்வரை அவன் யெரொபெயாமோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான். 8 அவன் மரித்ததும் தனது முற்பிதாக்களோடு தாவீது நகரதத்தில் அடக்கம்பண்ணப்பட்டான். அபியாவிற்குப் பின் அவனது மகனான ஆசா அரசனானான்.
யூதாவின் அரசனான ஆசா
9 யெரொபெயாமின் 20வது ஆட்சி ஆண்டின் போது, ஆசா யூதாவின் அரசனானான். 10 ஆசா 41 ஆண்டுகள் யூதாவை எருசலேமிலிருந்து ஆண்டு வந்தான். அவனது பாட்டியின் பெயர் மாகாள். இவள் அப்சலோமின் மகள்.
11 ஆசா அவனது முற்பிதாவான தாவீதைப் போன்றே கர்த்தருக்குச் சரியான செயல்களை மட்டுமே செய்துவந்தான். 12 அப்போது ஆண்கள் பாலின உறவுக்காக தம் உடலைவிற்று அந்நியதெய்வங்களுக்குச் சேவைசெய்து வந்தனர். இத்தகையவர்களை ஆசா நாட்டை விட்டுத் துரத்தினான். அவன் முற்பிதாக்களால் செய்யப்பட்ட பொய்த் தெய்வங்களின் விக்கிரகங்களையும் எடுத்தெறிந்தான். 13 அவன் தனது பாட்டியான மாகாவையும், அரசி என்ற பதவியிலிருந்து விலக்கினான். ஏனென்றால் அவள் அஷரா பொய்த் தெய்வத்தின் உருவத்தை செய்தாள். ஆசா இந்தப் பயங்கரமான உருவத்தை உடைத்துப்போட்டான். கீதரோன் பள்ளத்தாக்கில் அதனை எரித்துவிட்டான். 14 அவன் பொய்த் தெய்வங்களை தொழுவதற்கான மேடைப் பகுதிகளை அழிக்கவில்லை. ஆனால், தன் வாழ்நாள் முழுவதும் கர்த்தருக்கு நம்பிக்கையாளனாக இருந்தான். 15 ஆசாவும் அவனது தந்தையும் தேவனுக்கு பொன், வெள்ளி போன்ற பொருட்களை அன்பளிப்பாக ஆலயத்தில் கொடுத்திருந்தனர்.
16 அப்போது, இஸ்ரவேலின் அரசனாக இருந்த பாஷாவோடு, ஆசா அடிக்கடி சண்டையிட்டான். 17 பாஷா யூதாவிற்கு எதிராக, இஸ்ரவேல் ஜனங்களை அங்கே போகவோ வரவோ அனுமதிக்காமல் சண்டையிட்டான். அவன் ராமா நகரத்தைப் பலம் பொருந்தியதாக ஆக்கினான். 18 எனவே ஆசா, கர்த்தருடைய ஆலயம் மற்றும் அரண்மனை பொக்கிஷங்களிலிருந்து பொன்னையும், வெள்ளியையும் எடுத்து வேலைக்காரர்களுக்குக் கொடுத்து பெனாதாத்திடம் அனுப்பினான். அவன் ஆராமின் அரசன் பெனாதாத் தப்ரிமோனின் மகன். தப்ரிமோன் எசியோனின் மகன். தமஸ்கு பெனாதாத்தின் தலைநகரம். 19 ஆசா அவனுக்கு, “என் தந்தையும் உங்கள் தந்தையும் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டனர். நான் இப்போது உங்களோடு ஒரு சமாதான ஒப்பந்தம் செய்துக்கொள்ள விரும்புகிறேன். இப்பொன்னையும் வெள்ளியையும் உமக்கு அன்பளிப்பாக அனுப்புகிறேன். நீங்கள் இஸ்ரவேலின் அரசனான பாஷாவிடம் கொண்டுள்ள ஒப்பந்தத்தை ரத்து செய்யுங்கள். அப்போதுதான் அவன் எங்கள் நாட்டை விட்டு விலகுவான்” என்று தூது அனுப்பினான்.
20 அரசனான பெனாதாத் ஒப்பந்தத்தின்படி ஆசாவோடு ஒரு படையை அனுப்பி இஸ்ரவேல் நகரங்களான ஈயோன், தாண், பெத்மாக்கா எனும் ஆபேல், கின்னரோத், நப்தலி ஆகியவற்றில் போர் செய்து வென்றான். 21 பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான். 22 பிறகு ஆசா தம் ஜனங்கள் அனைவருக்கும் ஒரு கட்டளையிட்டான். அதன்படி ஒவ்வொருவரும் உதவவேண்டும் என்றும் அவர்கள் ராமாவிற்குப் போய் கல்லையும் மரத்தையும் எடுத்து வரவேண்டும் என்றும் ஆணையிட்டான். அதனால் கேபாவில் உள்ள பென்யமீன் மற்றும் மிஸ்பா ஆகிய நகரங்களை பலமுள்ளதாகக் கட்டினான்.
23 ஆசாவைப் பற்றிய, அவன் செய்த மற்ற பெரும் செயல்களையெல்லாம் யூதா அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதில் நகரங்கள் கட்டப்பட்டதும் உள்ளன. அவன் முதுமையடைந்ததும் பாதத்தில் ஒரு நோய் வந்தது. 24 அவன் மரித்ததும் தனது முற்பிதாவான தாவீதின் நகரத்தில் அடக்கம் செய்யப்பட்டான். பின் இவனது மகனான யோசபாத் அரசனானான்.
இஸ்ரவேல் அரசனான நாதாப்
25 ஆசாவின் இரண்டாம் ஆட்சி ஆண்டில் யெரொபெயாமின் மகனான நாதாப் இஸ்ரவேலின் அரசனானான். அவன் 2 ஆண்டுகள் ஆண்டான். 26 இவன் கர்த்தருக்கு எதிராகக் கெட்ட காரியங்களை தந்தையைப்போலவே செய்தான். ஜனங்களையும் பாவம் செய்யவைத்தான்.
27 அகியா என்பவனின் மகன் பாஷா ஆவான். இவன் இசக்கார் கோத்திரத்தில் உள்ளவன். இவன் நாதாப்பைக் கொல்லதிட்டமிட்டான். இது நாதாப்பும் இஸ்ரவேலர்களும் கிப்பெத்தோனுக்கு எதிராகச் சண்டையிடும்போது நிகழ்ந்தது. இது பெலிஸ்தியரின் நகரம். இங்கே பாஷா நாதாப்பைக் கொன்றான். 28 இது யூதாவின் அரசனான ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆனான்.
பாஷா இஸ்ரவேலின் அரசன்
29 இவன் அரசன் ஆனதும், யெரொபெயாமின் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொன்றான். எவரையும் உயிரோடு விடவில்லை. கர்த்தர் சொன்னபடியே நடந்தது. இதனைக் கர்த்தர் சீலோவில் அகியா மூலம் சொன்னார். 30 இவ்வாறு நிகழ யெரொ பெயாம் செய்த பாவங்களும் ஜனங்களைப் பாவம் செய்ய வைத்ததும் காரணமாயிற்று, இவையே இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருக்கு கோபத்தைத் தந்தது.
31 நாதாப் செய்த மற்ற செயல்கள் இஸ்ரவேல் அரசர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. 32 பாஷாவின் ஆட்சிகாலம் முழுவதும் யூதாவின் அரசனான ஆசாவோடு போரிட்டான்.
33 ஆசாவின் மூன்றாவது ஆட்சி ஆண்டில்தான் இஸ்ரவேலின் அரசனாக அகியாவின் மகனான பாஷா அரசன் ஆனான். திர்சாவில் அவன் 24 ஆண்டுகள் ஆட்சிசெய்தான். 34 பாஷா கர்த்தருக்கு விரோதமான செயல்களைச் செய்தான். யெரொபெயாமைப்போல் தானும் பாவம்செய்து ஜனங்களையும் பாவம்செய்யத் தூண்டினான்.
2 உங்களுக்கு உதவ நான் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறேன். லவோதிக்கேயா மக்களுக்கும், என்னை இதுவரை காணாத ஏனைய மக்களுக்கும் நான் உதவி செய்ய முயல்கிறேன். 2 அவர்களை பலப்படுத்தவும், அன்புடன் ஒன்று சேர்த்துக்கொள்ளவும் விரும்புகிறேன். உறுதியான விசுவாசம் என்னும் செல்வத்தை அவர்கள் பெறவேண்டும் என்று விரும்புகிறேன். அந்த விசுவாசம் சரியான அறிவில் இருந்து பிறக்க வேண்டும் என்றும் விரும்புகிறேன். தேவன் வெளிப்படுத்திய இரகசிய உண்மையை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன். அந்த உண்மை கிறிஸ்து தான். 3 கிறிஸ்துவுக்குள் ஞானத்தின் எல்லாக் கருவூலங்களும், அறிவும் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
4 தோற்றத்தில் உண்மை போன்ற பொய்களைச் சொல்லி உங்களை யாரும் முட்டாளாக்கிவிடக் கூடாது என்பதற்காக இவ்வளவையும் உங்களுக்கு எழுதுகிறேன். 5 அங்கே நான் உங்களோடு இல்லை. எனினும் எனது இதயம் உங்களோடு உள்ளது. உங்களது நல்ல வாழ்வைக் காணும்போதும் கிறிஸ்துவுக்குள் உறுதியான விசுவாசத்தைக் காணும்போதும் நான் மகிழ்வடைகிறேன்.
கிறிஸ்துவில் தொடர்ந்து வாழுங்கள்
6 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் அடைந்துள்ளீர்கள். எனவே எதையும் மாற்றிக்கொள்ளாமல் தொடர்ந்து அவரைப் பின்பற்றி வாழுங்கள். 7 கிறிஸ்துவை மட்டும் நீங்கள் சார்ந்திருங்கள். வாழ்க்கையும், பலமும் அவரிடமிருந்து வருகின்றன. உங்களுக்கு அந்த உண்மை கற்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த உண்மையான போதனையில் நீங்கள் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும். எப்பொழுதும் நன்றி உள்ளவர்களாய் இருங்கள்.
8 பொய்யான எண்ணங்களாலும், பொருளற்ற சொற்களாலும் எவரும் உங்களை வழி நடத்திச் செல்லாதபடி உறுதியாய் இருங்கள். இத்தகைய எண்ணங்கள் கிறிஸ்துவிடமிருந்து வராது. மக்களிடமிருந்தே வருகிறது. இவை உலக மக்களின் பயனற்ற எண்ணங்கள். 9 தேவனுடைய முழுமை கிறிஸ்துவிடம் வாழ்கிறது. 10 கிறிஸ்துவுக்குள் நீங்கள் முழுமையாக இருக்கிறீர்கள். உங்களுக்கு வேறு எதுவும் தேவை இல்லை. அனைத்து அதிகாரங்களையும் ஆள்வோர்களையும் ஆளுபவர் கிறிஸ்து ஆவார்.
11 கிறிஸ்துவுக்குள் நீங்கள் வித்தியாசமான விருத்தசேதனத்தைப் பெற்றிருக்கிறீர்கள். இதுவேறு எவரின் கையாலும் செய்யப்பட்டதன்று. உங்களுடைய பழைய பாவம் மிக்க சுபாவத்தின் சக்தியிலிருந்து கிறிஸ்துவின் விருத்தசேதனம் வழியாக விடுதலையாக்கப்பட்டீர்கள். இது கிறிஸ்துவின் விருத்தசேதனமாகும். 12 நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது உங்கள் பழைமை இறந்து கிறிஸ்துவோடு புதைக்கப்பட்டது. அந்த ஞானஸ்நானத்தில் கிறிஸ்துவுடன் நீங்களும் உயிர்த்தெழுந்தீர்கள். ஏனென்றால் நீங்கள் தேவனுடைய சக்தியில் விசுவாசமாய் இருந்தீர்கள். கிறிஸ்துவை மரணத்திலிருந்து உயிர்த்தெழச் செய்ததன்மூலம் தேவன் தன் வல்லமையை வெளிப்படுத்திவிட்டார்.
13 உங்களது பாவங்களாலும் பாவம் மிக்க சுயசுபாவத்தின் சக்தியிலிருந்தும் விடபட முடியாததாலும் ஆன்மீக நிலையில் இறந்திருந்தீர்கள். ஆனால், தேவன் உங்களைக் கிறிஸ்துவுடன் உயிருடன் இருக்கச் செய்தார். அவர் நமது பாவங்களையும் மன்னித்துவிட்டார். 14 தேவனுடைய சட்டங்களை நாம் மீறிவிட்டதால் நாம் கடன்பட்டிருந்தோம். எந்தெந்த சட்டங்களை நாம் மீறினோம் என்பதை அக்கடன் பட்டியலிட்டது. ஆனால் தேவன் அந்தக் கடனை நமக்கு மன்னித்துவிட்டார். தேவன் அக்கடனை அப்புறப்படுத்தி ஆணிகளால் சிலுவையில் அறைந்துவிட்டார். 15 தேவன் ஆன்மீக நிலையில் ஆள்வோர்களையும் அதிகாரங்களையும் தோற்கடித்தார். இவ்வெற்றியை அவர் சிலுவையின் மூலம் பெற்றார். அவை பலமற்றவை என்பதை தேவன் உலகுக்குக் காட்டினார்.
மனிதனின் சட்டத்தைப் பின்பற்றாதீர்கள்
16 ஆகையால், உண்பதைப் பற்றியும், குடிப்பதைப் பற்றியும், பண்டிகைகள், பௌர்ணமிகள், ஓய்வு நாட்கள் ஆகிய யூதர்களின் பழக்க வழக்கங்களைக் குறித்தும் எவரும் சட்டங்கள் உருவாக்க நீங்கள் அனுமதிக்காதீர்கள். மனித விதிமுறைகளைப் பின்பற்றாதீர்கள் 17 கடந்த காலத்தில், இவை நிழலாக இருந்து எதிர்காலத்தில் வருவதைச் சுட்டிக் காட்டியது. ஆனால் புதிதாக வந்தவை கிறிஸ்துவில் காணப்படுகின்றன. 18 சிலர் தாழ்மையுள்ளவர்கள் போல் நடிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்கள். அவர்கள் தேவ தூதர்களை வழிபட விரும்புவர். அவர்கள் எப்பொழுதும் தாங்கள் கண்ட தரிசனங்களையும், கனவுகளையும் பற்றியே பேசிக்கொண்டிருப்பர். அவர்கள் “நீங்கள் தவறானவர்கள், உங்களால் எதுவும் செய்ய முடியாது” என்று கூறுவர். எனவே அவர்களை எதுவும் சொல்ல அனுமதிக்காதீர்கள். அவர்களுக்கு எப்பொழுதும் முட்டாள்தனமான பெருமிதமே இருக்கிறது. ஏனென்றால் அவர்கள் மனிதர்களின் எண்ணங்களைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்களே ஒழிய தேவனுடைய எண்ணங்களைப் பற்றி சிந்திப்பதில்லை. 19 அவர்கள், தலையாகிய கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் தம்மைக் கட்டுப்படுத்திக்கொள்வதில்லை. முழு சரீரமும் கிறிஸ்துவைச் சார்ந்துள்ளது. அவரால் நம் சரீரத்தின் எல்லா உறுப்புகளும் ஒன்றுக்கொன்று அக்கறை கொள்கிறது. மேலும் அவை ஒன்றுக்கொன்று உதவியும் செய்கிறது. இது சரீரத்தை வலிமைப்படுத்தி ஒன்றாய்ச் சேர்க்கிறது. தேவன் விரும்புகிற விதத்திலேயே சரீரம் வளருகின்றது.
20 நீங்கள் கிறிஸ்துவோடு இறந்தீர்கள். உலகத்தின் பயனற்ற சட்டதிட்டங்களில் இருந்தும் விடுதலை பெற்றீர்கள். எனினும் நீங்கள் இந்த உலகத்தைச் சார்ந்தவர்களைப் போன்று நடித்து வருகிறீர்கள். 21 “இதனை உண்ணக்கூடாது.” “அதனைச் சுவைபார்க்கக்கூடாது” “அதனைத் தொடக்கூடாது” என்கிறீர்கள். 22 ஏன் இன்னும் இது போன்ற சட்ட திட்டங்களைப் பின்பற்றுகிறீர்கள்? இவை பயன்படுத்தப்பட்டவுடன் போய்விடும். இச்சட்டதிட்டங்கள் பூலோகத்தைப் பற்றியவை. இவை மனிதர்களின் கட்டளைகளும், போதனைகளுமேயாகும். தேவனுடையவை அல்ல. 23 இவை புத்திசாலித்தனமாய்த் தோன்றலாம். ஆனால் இச்சட்டங்கள் போலிப் பணிவும் சரீரத்தைத் தண்டிக்கக் கூடியதுமான மனிதரால் உருவாக்கப்பட்ட மதத்தின் சட்டங்கள் மட்டுமே ஆகும். ஆனால் இவை மக்கள் பாவத்தில் இருந்து விடுபட உதவாது.
பரிசுத்த பயன்பாட்டிற்காக நிலம் பிரிக்கப்படுதல்
45 “நீங்கள் சீட்டுப்போட்டு இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நிலங்களைப் பங்கு வைத்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நிலத்தின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும். இது கர்த்தருக்குரிய பரிசுத்தமான பகுதியாகும். அந்நிலம் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். இந்நிலம் முழுவதும் பரிசுத்தமானதாக இருக்கும். 2 500 முழம் (875’) சதுரமுள்ள இடம் ஆலயத்துக்குரியது, 50 முழம் (875’) அகலமுடைய திறந்த வெளி இடம் ஆலயத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். 3 பரிசுத்தமான இடத்தில் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் கொண்ட இடம் அளந்தெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டும். ஆலயப் பகுதி மிகவும் பரிசுத்தமான இடமாக இருக்கும்.
4 “நிலத்தின் பரிசுத்தமான பகுதியானது, ஆசாரியர்களுக்கும் கர்த்தருக்கு அருகில் போய் ஆராதனை செய்யும் ஆலயப் பணியாளர்களுக்கும் உரியது. இது ஆசாரியர்களின் வீடுகளுக்கும் ஆலயத்திற்கும் உரியது. 5 இன்னொரு பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையதாக ஆலயத்தில் பணிபுரியும் லேவியர்களுக்காக இருக்கவேண்டும். இந்த நிலமும் லேவியர்கள் வாழ்வதற்குரிய இடமாக இருக்கும்.
6 “நீங்கள் நகரத்துக்கென்று 5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட இடம் தரவேண்டும். இது பரிசுத்தமான பகுதிக்கு அருகிலேயே இருக்கவேண்டும். இது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் உரியதாக இருக்கும். 7 அதிபதி பரிசுத்தமான பகுதியின் இருபக்கங்களிலுள்ள நிலத்தையும் நகரத்திற்குச் சொந்தமான நிலத்தையும் பெறுவான். இது பரிசுத்தமான பகுதிக்கும் நகரப்பகுதிக்கும் இடையில் இருக்கும். இது வம்சத்தாருக்குரிய பகுதியின் பரப்பைப் போன்ற அளவுடையதாக இருக்க வேண்டும். இதன் நீளம் மேல் எல்லை தொடங்கி கீழ் எல்லை மட்டும் இருக்கும். 8 இது இஸ்ரவேலில் அதிபதியின் சொத்தாக இருக்கும். எனவே அதிபதி எனது ஜனங்களை என்றைக்கும் துன்பப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களின் கோத்திரங்களுக்குத் தக்கதாகக் கொடுப்பார்கள்!”
9 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “போதும் இஸ்ரவேல் அதிபதிகளே! கொடூரமாக இருப்பதை நிறுத்துங்கள்! ஜனங்களிடம் கொள்ளையடிப்பதை நிறுத்துங்கள்! நேர்மையாக இருங்கள். நன்மையைச் செய்யுங்கள். என் ஜனங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தாதீர்கள்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
10 “ஜனங்களை ஏமாற்றுவதை விடுங்கள். சரியான படிக்கற்களையும் அளவு கோல்களையும் பயன்படுத்துங்கள்! 11 மரக்காலும் அளவு குடமும் ஒரே அளவாய் இருக்கட்டும். மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் அளவுக்குடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிடிக்கட்டும். கலத்தின்படியே அதன் அளவு நிர்ணயிக்கப்படட்டும். 12 ஒரு சேக்கல் இருபது கேரா, ஒரு மினா 60 சேக்கலுக்கு இணையாக வேண்டும். 20 சேக்கலுடன் 25 சேக்கலைச் சேர்த்து, அதோடு 15 சேக்கலைச் சேர்த்தால், அதற்கு இணையாக வேண்டும்.
13 “இது நீங்கள் கொடுக்கவேண்டிய சிறப்புக் காணிக்கை.
ஒரு கலம் (6 சேக்கல்) கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கையும் (14 கோப்பைகள்),
ஒரு கலம் (6 சேக்கல்) வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கைப் (14 கோப்பைகள்) படைக்க வேண்டும்:
14 அளவு குடத்தால் அளக்கவேண்டிய எண்ணெயின் கட்டளை:
பத்து குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி (55 கேலன்) எண்ணெயில் 1/10 பங்கை (1/2 கேலன்) படைக்க வேண்டும்.
15 இஸ்ரவேல் நாட்டிலே நல்ல மேய்ச்சல் மேய்கிற மந்தையிலே 200 ஆடுகளில் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.
“இச்சிறப்பு காணிக்கை தானிய காணிக்கைக்காகவும் தகனபலியாகவும் சமாதான பலியாகவும் அமையும். இக்காணிக்கைகள் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த உதவும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறினார்.
16 “நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் அதிபதிக்கு இக்காணிக்கைகளைக் கொடுக்கவேண்டும். 17 ஆனால் அதிபதி சிறப்பான பரிசுத்த விடுமுறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கவேண்டும். அதிபதி தகனபலிகள், தானியக் காணிக்கைகள், பானங்களின் காணிக்கைகள் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். இவற்றைப் பண்டிகை நாட்களிலும் அமாவாசை (மாதப் பிறப்பு) நாட்களிலும், ஓய்வு நாட்களிலும், இஸ்ரவேல் குடும்பத்தாரின் மற்ற எல்லாச் சிறப்புப் பண்டிகை நாட்களிலும் கொடுக்கவேண்டும். அதிபதி பாவப்பரிகாரக் பலிகளையும், தானியக் காணிக்கைகளையும், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் இஸ்ரவேல் வம்சத்தாரை பரிசுத்தப்படுத்துவதற்காகக் கொடுக்கவேண்டும்.”
18 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “முதல் மாதத்தின், முதல் நாளில், பழுதற்ற ஒரு இளங்காளையை எடுக்கவேண்டும். நீங்கள் அதனை ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தவேண்டும். 19 ஆசாரியன் பாவப் பரிகார இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆலயத்தின் வாசல் தூண்களிலும் பலிபீடத்தின் சட்டத்து நான்கு மூலைகளிலும் உட்பிரகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். 20 நீங்கள் இதேபோன்று மாதத்தின் ஏழாவது நாளிலும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ பாவம் செய்த ஒருவனுக்காகச் செய்யலாம். இவ்வாறு நீங்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தலாம்.
பஸ்கா பண்டிகையின்போது கொடுக்கவேண்டிய காணிக்கைகள்
21 “முதல் மாதத்தின் 14வது நாளன்று நீங்கள் பஸ்காவைக் கொண்டாடவேண்டும். இந்த நேரத்தில் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தொடங்கும். அப்பண்டிகை ஏழுநாட்கள் தொடரும். 22 அந்த நேரத்தில் அதிபதி தானே ஒரு இளங்காளையை அவனுக்காகவும், எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் பாவப்பரிகாரம் செய்வதற்காகக் கொடுப்பான். 23 ஏழு நாள் பண்டிகையின்போது அதிபதி ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பழுதற்றதாகக் கொடுக்க வேண்டும். அவை கர்த்தருக்குரிய தகனபலியாக அமையும். ஏழு நாள் பண்டிகையில் ஒவ்வொரு நாளும் ஒரு இளங்காளையைக் கொடுப்பான். அவன் ஒவ்வொரு நாளும் ஒரு ஆட்டுக்கடாவை பாவப் பரிகார பலியாக கொடுப்பான். 24 ஒவ்வொரு காளையோடும் ஒரு மரக்கால் மாவையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடு ஒரு எப்பா வாற் கோதுமை மாவையும் கொடுப்பான். அதிபதி ஒருபடி (1 கேலன்) எண்ணெயையும் கொடுப்பான். 25 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் தொடங்குகிற கூடாரப் பண்டிகையிலே அவன் அப்படியே ஏழு நாளும் அதற்குச் சரியானபடிச் செய்ய வேண்டும். அப்பலிகள் பாவப்பரிகாரப் பலியாகவும் தகனபலியாகவும் தானியக் காணிக்கையாகவும் எண்ணெய் காணிக்கையாகவும் அமைய வேண்டும்.”
99 கர்த்தர் அரசர்.
எனவே தேசங்கள் அச்சத்தால் நடுங்கட்டும்.
கேருபீன் தூதர்களுக்கு மேலே தேவன் அரசராக வீற்றிருக்கிறார்.
எனவே உலகம் அச்சத்தால் நடுங்கட்டும்.
2 சீயோனில் கர்த்தர் மேன்மையானவர்.
ஜனங்கள் எல்லோருக்கும் அவர் பெரிய தலைவர்.
3 எல்லா ஜனங்களும் உமது நாமத்தைத் துதிக்கட்டும்.
தேவனுடைய நாமம் அஞ்சத்தக்கது.
தேவன் பரிசுத்தர்.
4 வல்லமையுள்ள அரசர் நீதியை நேசிக்கிறார்.
தேவனே, நீரே நன்மையை உண்டாக்கினீர்.
யாக்கோபிற்கு (இஸ்ரவேல்) நீர் நன்மையையும் நியாயத்தையும் தந்தீர்.
5 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த பாதப்படியில் தொழுதுகொள்ளுங்கள்.
6 மோசேயும் ஆரோனும் அவரது ஆசாரியர்களில் இருவர்.
அவர் நாமத்தை அழைத்த மனிதர்களில் சாமுவேலும் ஒருவன்.
அவர்கள் கர்த்தரிடம் ஜெபித்தபோது
அவர் அவர்களுக்குப் பதில் தந்தார்.
7 உயர்ந்த மேகத்திலிருந்து தேவன் பேசினார்.
அவர்கள் அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்தார்கள்.
தேவன் அவர்களுக்குச் சட்டத்தைக் கொடுத்தார்.
8 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்கள் ஜெபங்களுக்குப் பதில் தந்தீர்.
ஜனங்கள் செய்யும் தீய காரியங்களுக்கு அவர்களைத் தண்டிப்பவர் என்பதையும்,
மன்னிக்கும் தேவன் நீரே என்பதையும் அவர்களுக்கு நீர் காட்டினீர்.
9 நமது தேவனாகிய கர்த்தரைத் துதியுங்கள்.
அவரது பரிசுத்த மலையை நோக்கி விழுந்து வணங்கி அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
நமது தேவனாகிய கர்த்தர் உண்மையிலேயே பரிசுத்தர்.
நன்றி கூறும் பாடல்
100 பூமியே, கர்த்தரைப் பாடு.
2 கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்போது மகிழுங்கள்!
மகிழ்ச்சியான பாடல்களோடு கர்த்தருக்கு முன்பாக வாருங்கள்!
3 கர்த்தரே தேவனென்று அறியுங்கள்.
அவரே நம்மை உண்டாக்கினார்.
நாம் அவரது ஜனங்கள். நாம் அவரது ஆடுகள்.
4 நன்றி நிறைந்த பாடல்களோடு அவரது நகரத்தினுள் நுழையுங்கள்.
துதிப் பாடல்களோடு அவரது ஆலயத்திற்குள் வாருங்கள்.
அவரைப் பெருமைப்படுத்தி, அவர் நாமத்தைத் துதியுங்கள்.
5 கர்த்தர் நல்லவர்.
அவர் அன்பு என்றென்றும் உள்ளது.
என்றென்றைக்கும் எப்போதும் நாம் அவரை நம்பமுடியும்.
தாவீதின் ஒரு சங்கீதம்
101 நான் அன்பையும் நியாயத்தையும் பற்றிப் பாடுவேன்.
கர்த்தாவே, நான் உம்மை நோக்கிப் பாடுவேன்.
2 நான் கவனமாகப் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
என் வீட்டில் நான் பரிசுத்த வாழ்க்கை வாழுவேன்.
கர்த்தாவே, நீர் எப்போது என்னிடம் வருவீர்.
3 என் முன்னால் நான் விக்கிரகங்களை வைக்கமாட்டேன்.
ஜனங்கள் அப்படி உமக்கு எதிராகத் திரும்புவதை நான் வெறுக்கிறேன்.
நான் அதைச் செய்யமாட்டேன்!
4 நான் நேர்மையாக இருப்பேன்.
நான் தீயக் காரியங்களைச் செய்யமாட்டேன்.
5 யாராவது ஒருவன் தனது அயலானைக் குறித்து இரகசியமாகத் தீயக் காரியங்களைக் கூறினால் நான் அவனைத் தடுத்துவிடுவேன்.
நான் பிறரைப் பெருமைப்படவோ, தாங்கள் பிறரை காட்டிலும் சிறந்தவர்கள் என்று எண்ணவோ விடமாட்டேன்.
6 நம்பத்தக்க ஜனங்களைத் தேசம் முழுவதும் தேடிப்பார்ப்பேன்.
அவர்கள் மட்டுமே எனக்கு சேவைச் செய்ய அனுமதிப்பேன்.
பரிசுத்த வாழ்க்கை வாழும் ஜனங்கள் மட்டுமே என் பணியாட்களாக முடியும்.
7 பொய்யர்கள் என் வீட்டில் வாழ நான் அனுமதிக்கமாட்டேன்.
என் அருகே பொய்யர்கள் தங்கவும் அனுமதியேன்.
8 இந்நாட்டில் வாழும் தீயோரை நான் எப்போதும் அழிப்பேன்.
கர்த்தருடைய நகரை விட்டுத் தீயோர் நீங்குமாறு நான் வற்புறுத்துவேன்.
2008 by World Bible Translation Center