M’Cheyne Bible Reading Plan
சாலொமோனின் இராஜ்யம்
4 சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் ஆண்டான். 2 கீழ்க்கண்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவனது ஆட்சிக்கு உதவினார்கள்.
சாதோக்கின் மகனான அசரியா ஆசாரியனாக இருந்தான்.
3 சீசாவின் மகனான ஏலிகோரேப்பும், அகியாவும் எழுத்தாளர்கள்.
அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளர்.
4 யோய்தாவின் மகன் பெனாயா படைத் தலைவன்.
சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்கள்.
5 நாத்தானின் மகன் அசரியா மணியக்காரர்களின் தலைவன்.
நாத்தானின் மகன் சாபூத் அரசனின் அன்புக்குரிய பிரதானியும், ஆசாரியனுமாயிருந்தான்.
6 அகீஷார் அரண்மனை விசாரிப்புக்காரன்.
அப்தாவின் மகன் அதோனிராம் அடிமைகளுக்கு பொறுப்பு அதிகாரி.
7 இஸ்ரவேல் பன்னிரெண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. சாலொமோன் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆள ஆளுநர்களை தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களைச் சேகரித்து அரசனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அளித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர். 8 கீழ்க்கண்டவர்களே அந்தப் பன்னிரண்டு ஆளுநர்களாவார்கள்:
எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர் ஊரின் குமாரன்.
9 தேக்கேரின் குமாரன், மாக்காத்சிலும், சால்பீமிலும் பெத்ஷிமேசிலும், ஏலோன் பெத்தானானிலும் ஆளுநராக இருந்தான்.
10 ஏசேதின் குமாரன் அறுபோத்திலும், சோகோப்பிலும், எப்பேர் சீமையிலும் ஆளுநராக இருந்தான்.
11 அபினதாபின் மகன் இரதத்தின் ஆளுநர்.
இவன் சாலொமோனின் மகளான தாபாத்தை மணந்திருந்தான்.
12 அகிலூதின் மகனான பானா, தானாகு, மெகிதோ, சர்த்தனாவுக்கு அருகிலும் ஆளுநர்.
இது யெஸ்ரயேலுக்கு கீழாகவும் பெத்செயான் முதல் ஆபேல்மெகொல்லா வரையிலும் யக்மெயாமுக்கு அப்புறம் மட்டும் இருந்தது.
13 ராமோத் கீலேயாத்தின் ஆளுநராக கேபேரின் மகன் இருந்தான்.
கீலேயாத் மனாசேயின் மகனான யாவீரின் எல்லா ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
மேலும் பாசானில் அர்கோப் மாவட்டத்திற்கும் அவன் ஆளுநராக இருந்தான்.
இப்பகுதியில் பெரிய மதில்களைக்கொண்ட 60 நகரங்கள் இருந்தன.
இந்த நகரங்களின் வாயில்களில் வெண்கலக்கம்பிகளும் இருந்தன.
14 இத்தோவின் மகனான அகினதாப் மக்னாயீமில் ஆளுநர்.
15 அகிமாஸ் நப்தலியில் ஆளுநர்.
இவன் சாலொமோனின் மகளான பஸ்மாத்தை மணந்திருந்தான்.
16 ஊசாயின் மகனான பானா ஆசேரிலும் ஆலோத்திலும் ஆளுநர்.
17 பருவாவின் மகன் யோசபாத் இசக்காரின் ஆளுநர்.
18 ஏலாவின் மகன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.
19 ஊரியின் மகன் கேபேர் கீலேயாத் நாட்டில் ஆளுநர்.
இங்கு எமோரியரின் அரசனாகிய சீகோனும் பாசானின் அரசனாகிய ஓகு ஜனங்களும் வாழ்ந்தனர்.
எனினும் இவன் மட்டுமே இங்கு ஆளுநராக இருந்தான்.
20 யூதாவிலும், இஸ்ரவேலிலும் ஏராளமான ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தது. அவர்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.
21 சாலொமோன், ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தர் நாடுவரையுள்ள நாடுகளை ஆண்டு வந்தான். அவனது எல்லை எகிப்து வரை விரிந்திருந்தது. இந்நாடுகள் சாலொமோனுக்குப் பரிசுகளை அனுப்பி அவனது வாழ்வு முழுவதும் கட்டுபட்டு வாழ்ந்தது.
22-23 சாலொமோனுக்கும் அவனோடு மேஜையில் உணவைச் சேர்ந்து உண்ணும் மற்றவர்களுக்கும் ஒரு நாளுக்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்பட்டன:
30 மரக்கால் மெல்லியமாவு, 60 மரக்கால் மாவு, 10 கொழுத்த பசுமாடுகள், 2 நன்றாக மேய்ந்த பசுமாடுகள், 100 ஆடுகள், கலைமான்கள், வெளிமான்கள், பறவைகள்.
24 சாலொமோன் ஐபிராத்து ஆற்றின் மேற்கிலுள்ள நாடுகளையும் அரசாண்டான். இது திப்சா முதல் ஆசா மட்டும் இருந்தது. சாலொமோன் தனது இராஜ்யத்தின் எல்லாப் பக்கங்களிலும் சமாதானமாயிருந்தான். 25 சாலொமோனின் வாழ்நாளில் யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள், தாண் முதல் பெயெர்செபா வரை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் இருந்தனர். இவர்கள் தமது அத்திமரத்தின் நிழலிலும், திராட்சைகொடியின் நிழலிலும் சமாதானத்தோடு குடியிருந்தனர்.
26 சாலொமோனிடம் 4,000 இரதக் குதிரை லாயங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தனர். 27 ஒவ்வொரு மாதமும் பன்னிரெண்டு மாவட்டங்களிலும் உள்ள ஆளுநர்களும் அரசனான சாலொமோனுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து வந்தனர். அரசனோடு உணவு அருந்துகின்றவர்களுக்கு இது போதுமானதாக இருந்தது. 28 இரதக் குதிரைகளுக்கும் சவாரிக்குதிரைகளுக்கும் தேவையான வைக்கோல், பார்லி போன்றவற்றையும் அவர்கள் கொடுத்துவந்தனர். ஒவ்வொரு வரும் தங்கள் பொறுப்பின்படி தேவையான தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டுவந்தனர்.
சாலொமோனின் ஞானம்
29 தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது. 30 கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது. 31 பூமியிலுள்ள அனைவரையும்விட புத்திசாலியாக இருந்தான். எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் ஜனங்களைவிடவும் ஞானவானாயிருந்தான். இஸ்ரவேல் மற்றும் யூதாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அவன் புகழ் பெற்றவனாக விளங்கினான். 32 அவனது வாழ்வில் 3,000 நீதிமொழிகளையும் 1,005 பாடல்களையும் எழுதினான்.
33 சாலொமோனுக்கு இயற்கையைப்பற்றி தெரியும். வீபனோனில் உள்ள கேதுரு மரங்கள் முதற் கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டுவரை பலவிதமான தாவரங்கள்பற்றி கற்பித்தான். மேலும் அவன் மிருகங்கள் பறவைகள் ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் கற்பித்தான். 34 அவனது ஞானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல நாடுகளில் உள்ளவர்களும் வந்தனர். பலநாட்டு அரசர்களும் தம் நாட்டிலுள்ள அறிஞர்களை அனுப்பி சாலொமோனைக் கவனிக்க வைத்தனர்.
சாலொமோன் ஆலயத்தைக் கட்டுகிறான்
5 ஈராம் தீரு நாட்டு அரசன். அவன் எப்போதும் தாவீதின் நண்பனாக இருந்தான். தாவீதிற்குப் பிறகு அவனது மகன் சாலொமோன் புதிய அரசனானதை அறிந்து தனது வேலைக்காரர்களை அனுப்பி வைத்தான். 2 சாலொமோன் ஈராம் அரசனுக்கு,
3 “என் தந்தை தாவீது எப்போதும் தன்னைச் சுற்றி உள்ளவர்களோடு போரிட்டுக் கொண்டிருந்தார். அதனால் தன் தேவனாகிய கர்த்தருடைய ஆலயத்தைக் கட்ட நேரம் இல்லாமல் இருந்தது. கர்த்தர் தனது பகைவர்களை எல்லாம் வெல்லும்வரை தாவீது காத்திருந்தார். 4 ஆனால் தேவனாகிய கர்த்தர் எனது நாட்டின் அனைத்து பக்கங்களிலும் அமைதியையும் சமாதானத்தையும் தந்திருக்கிறார். இப்போது எனக்குப் பகைவர்கள் யாரும் இல்லை. என் ஜனங்களுக்கும் ஆபத்தில்லை.
5 “என் தந்தையான தாவீதிற்கு கர்த்தர் ஒரு வாக்குறுதியை அளித்திருக்கிறார். கர்த்தர், ‘உனக்குப் பிறகு உன் மகனை அரசனாக்குவேன். அவன் எனக்குப் பெருமை தரும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவான்’ என்றார். இப்போது நான் என் தேவனாகிய கர்த்தரைப் பெருமைப்படுத்த ஆலயம் கட்ட திட்டமிடுகிறேன். 6 எனவே எனக்கு உதவும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். லீபனோனுக்கு உங்கள் ஆட்களை அனுப்புங்கள். அவர்கள் அங்கே எனக்காக கேதுரு மரங்களை வெட்டவேண்டும். எனது வேலையாட்களும் அவர்களோடு வேலை செய்வார்கள். உங்கள் ஆட்களுக்கு எவ்வளவு கூலிக் கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கூலியை நான் கொடுப்பேன். ஆனால் உங்கள் உதவி எனக்குத் தேவைப்படுகிறது. சீதோனில் உள்ள தச்சர்களைப்போன்று அவ்வளவு சிறந்தவர்களாக இங்குள்ள தச்சர்கள் இல்லை” என்ற செய்தியைச் சொல்லி அனுப்பினான்.
7 சாலொமோனின் வேண்டுகோளை அறிந்து ஈராம் மிகவும் மகிழ்ந்தான். அவனும், “இப்படி ஒரு அறிவு மிக்க மகனை தாவீதிற்குத் தந்து இவ்வளவு அதிகமான ஜனங்களை ஆளவிட்டதற்குக் கர்த்தர் ஸ்தோத்தரிக்கப்படட்டும்!” என்றான். 8 பிறகு ஈராம் சாலொமோனுக்கும் செய்தி அனுப்பினான்.
அதில், “நீங்கள் கேட்டிருந்தவற்றை அறிந்தேன். நான் இங்குள்ள அனைத்து கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும் வெட்டி உங்களுக்குத் தருவேன். 9 எனது ஆட்கள் அவற்றை லீபனோனில் இருந்து கடலுக்குக் கொண்டுவருவார்கள். பிறகு அவற்றைக் கட்டி நீங்கள் விரும்புகின்ற இடத்துக்கு மிதந்து வரும்படி செய்வேன். அங்கே அவற்றைப் பிரித்துத் தருவேன். நீங்கள் எடுத்துச்செல்லலாம்” என்று குறிப்பிட்டிருந்தான்.
10-11 சாலொமோன் ஈராமின் குடும்பத்திற்காக 20,000 கலம் கோதுமையையும் 20 கலம் ஒலிவ மர எண்ணெயையும் கொடுத்தான். இதுவே சாலொமோன் ஈராமிற்கு ஆண்டுதோறும் கொடுப்பது.
12 கர்த்தர் வாக்குறுதி அளித்தபடி சாலொமோனுக்கு ஞானத்தைக் கொடுத்தார். ஈராமும் சாலொமோனும் சமாதானமாக இருந்தனர். இருவரும் தங்களுக்குள் ஒப்பந்தம் செய்துக்கொண்டனர்.
13 சாலொமோன் அரசன் கோவில் வேலைக்காக 30,000 இஸ்ரவேல் ஆண்களைப் பயன்படுத்தினான். 14 சாலொமோன், இவர்களுக்கு மேற்பார்வையாளராக அதோனிராமை நியமித்தான். அரசன் தம் ஆட்களை மூன்று பிரிவாக்கி ஒவ்வொன்றிலும் 10,000 பேரை வகுத்தான். ஒவ்வொரு குழுவும் ஒரு மாதம் லீபனோனிலும், இரு மாதம் தம் வீட்டிலும் இருந்தனர். 15 சாலொமோன் மலைநாட்டில் வேலை செய்ய 80,000 ஆட்களை அனுப்பினான். இவர்கள் கற்பாறைகளை உடைத்தனர். 70,000 ஆட்கள் அவற்றைச் சுமந்து வந்தனர். 16 3,300 பேர் இந்த வேலையை மேற்பார்வை செய்துவந்தனர். 17 ஆலயத்திற்கு அடித்தளக் கல்லாக பெரிய கல்லை வெட்டும்படி ஆணையிட்டான். கற்கள் கவனமாக வெட்டப்பட்டன. 18 சாலொமோன் மற்றும் ஈராமின் கல்தச்சர்கள் கல்லைச் செதுக்கினார்கள். ஆலயத்தைக் கட்டுவதற்குரிய கற்களையும் மரத்தடிகளையும் தயார் செய்துமுடித்தனர்.
இறப்பிலிருந்து வாழ்வுக்கு
2 கடந்த காலத்தில் உங்கள் ஆன்மீகமான வாழ்வு செத்துப்போயிற்று. இதற்கு, உங்களது பாவங்களும், தேவனுக்கு எதிரான உங்களது கெட்ட செயல்களுமே காரணம் 2 ஆம், கடந்த காலத்தில் பாவங்களில் வாழ்ந்தீர்கள். உலகம் வாழ்கிறபடி வாழ்ந்தீர்கள். பூமியில் தீய சக்திகளின் ஆள்வோர்களைப் பின்பற்றினீர்கள். தேவனுக்குக் கீழ்ப்படிய மறந்த அந்த மக்களுக்குள் தீய ஆவி வேலை செய்கிறது. 3 கடந்த காலத்தில் நாம் அனைவரும் அவர்களைப் போலவே வாழ்ந்தோம். நமது மனவிருப்பப்படி பாவத்தில் வாழ்ந்தோம். நமது மனமும் சரீரமும் விரும்பியதையே நாம் செய்தோம். நாம் தீயவர்களாய் இருந்தோம். நமது வாழ்க்கை முறையின் காரணமாக தேவனின் கோபத்தால் நாம் துன்பப்பட வேண்டும். மற்ற அனைத்து மக்களைப் போலவே நாமும் இருந்தோம்.
4 ஆனால் தேவனுடைய இரக்கம் மிகப் பெரியது. தேவன் நம்மை மிகுதியாக நேசித்தார். 5 ஆன்மீகப்படி நாம் இறந்துபோனோம். தேவனுக்கு எதிரான காரியங்களைச் செய்ததால் இறந்து போனோம். தேவன் கிறிஸ்துவுடன் புது வாழ்க்கையைத் தந்தார். தேவனின் கிருபையால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். 6 கிறிஸ்துவோடு நம்மையும் தேவன் உயிர்த்தெழச் செய்தார். பரலோகத்தில் நமக்கென்று இருக்கைகளையும் ஏற்படுத்தினார். இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கிற நமக்காக தேவன் இதைச் செய்தார். 7 தேவன் இதைச் செய்ததால் எதிர்காலம் முழுவதும் அவர் தனது செல்வம் மிக்க இரக்கத்தையும் உயர்ந்த தயவையும் காட்டுவார். அவர் இதையும் கிறிஸ்துவுக்குள் நமக்குச் செய்வார்.
8 தேவனுடைய இரக்கத்தால் நீங்கள் இரட்சிக்கப்பட்டீர்கள். அந்தக் கிருபையை நீங்கள் உங்களது விசுவாசத்தினால் பெற்றீர்கள். உங்களை நீங்களே இரட்சித்துக்கொள்ள முடியாது. இது தேவனிடமிருந்து கிடைக்கும் பரிசு. 9 நீங்கள் செய்த செயல்களால் நீங்கள் இரட்சிக்கப்படவில்லை. எனவே தன்னைத்தானே இரட்சித்துக்கொண்டதாக ஒருவனும் பெருமைப்பட்டுக்கொள்ள முடியாது. 10 நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே தேவன் நம்மைப் படைத்தார். நாம் நற்செயல்கள் செய்யும்படி கிறிஸ்துவுக்குள் நம்மைப் புதிய மக்களாக்கினார். தேவன் ஏற்கெனவே நமக்காக அந்நற்செயல்கள் பற்றித் திட்டமிட்டிருக்கிறார். நமது வாழ்வு அந்நற்செயல்களோடு இணைய வேண்டும் என்றே தேவன் திட்டமிட்டிருக்கிறார்.
கிறிஸ்துவில் ஒன்றாகுதல்
11 நீங்கள் யூதர் அல்லாதவர்களாகப் பிறந்தீர்கள். உங்களை யூதர்கள் “விருத்தசேதனம் செய்யாதவர்கள்” என்று அழைக்கிறார்கள். அவர்கள் தங்களை “விருத்தசேதனம் செய்தவர்கள்” என்று அழைத்துக்கொள்கிறார்கள். இந்த விருத்தசேதனம் என்பது யூதர்கள் தங்கள் சரீரத்தில் செய்துகொள்ளும் ஏதோ ஒன்று தான். 12 கடந்த காலத்தில் கிறிஸ்து இல்லாமல் நீஙகள் இருந்தீர்கள் என்பதை நினைவுகூருங்கள். நீஙகள் இஸ்ரவேலின் மக்கள் அல்ல. தேவன் தம் மக்களுக்குச் செய்து கொடுத்த ஒப்பந்தத்தில் உங்களுக்கு எவ்விதப் பங்கும் இல்லை. உங்களுக்குத் தேவனைப்பற்றித் தெரியாது. அவர் மீது நம்பிக்கையும் இல்லை. 13 ஆமாம், ஒரு முறை தேவனைவிட்டு வெகு தொலைவில் நீங்கள் இருந்தீர்கள். ஆனால் இப்பொழுது தேவனோடு நெருக்கமாக இருக்கிறீர்கள். கிறிஸ்துவின் இரத்தமே உங்களை தேவனின் அருகில் கொண்டு வந்தது.
14 இப்பொழுது கிறிஸ்துவால் நமக்குச் சமாதானம் கிடைத்தது. கிறிஸ்து யூதர்களையும், யூதர் அல்லாதவர்களையும் ஒரே மக்களாக்கினார். இவர்களுக்கு இடையில் ஒரு சுவர் இருப்பது போலப் பிரிக்கப்பட்டிருந்தனர். ஒருவரை ஒருவர் வெறுத்தனர். கிறிஸ்து தமது சரீரத்தைக் கொடுத்து பகை என்னும் சுவரை உடைத்தெறிந்தார். 15 யூதர்களின் சட்டங்கள் ஏராளமான கட்டளைகளையும், விதிகளையும் உடையன. ஆனால் கிறிஸ்து அச்சட்டத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தார். யூதர், யூதர் அல்லாதவர் என்னும் இந்த இரு பிரிவுகளையும் ஒன்றாக்குவது அவர் நோக்கம். இதை அவர் சிலுவையில் இறந்ததன் மூலம் செய்து சமாதானத்தைக் கொண்டு வந்தார். 16 இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பகையைச் சிலுவையின் மூலம் முடிவடையச் செய்தார். 17 தேவனை விட்டு வெகு தொலைவில் இருந்த யூதர் அல்லாத உங்களிடம் கிறிஸ்து வந்து சாமாதானத்தை அறிவித்தார். அவர் தேவனுக்கு மிக நெருக்கமாய் இருந்த யூதர்களுக்கும் சமாதானத்தை அறிவித்தார். 18 ஆமாம்! கிறிஸ்து மூலமாக நாம் அனைவருக்கும் ஒரே ஆவிக்குள் பிதாவாகிய தேவனிடம் வருவதற்கு உரிமை பெற்றோம்.
19 ஆகவே யூதர் அல்லாதவர்களாகிய நீங்கள் இப்பொழுது அந்நிய தேசத்தில் பார்வையாளர்களோ அல்லது தற்காலிக குடிமக்களோ அல்ல. தேவனின் பரிசுத்தமான மக்களோடு நீங்களும் ஒரே குடிமக்களாகிவிட்டீர்கள். 20 விசுவாசிகளான நீங்கள் அவருக்குச் சொந்தமான கட்டிடத்தை போன்றவர்கள். அக்கட்டிடத்தில் அப்போஸ்தலர்களும் தீர்க்கதரிசிகளும் அஸ்திபாரக்கல் [a] போன்றவர்கள். கிறிஸ்து ஒருவர்தான் இக்கட்டிடத்தின் மிக முக்கியமான கல்லாவார். 21 அந்த முழுக் கட்டிடமும் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்து அதனை வளர்த்து கர்த்தருக்குள் புனிதமான ஆலயமாக ஆக்கிவிடுகிறார். 22 கிறிஸ்துவுக்குள் நீங்களும் யூதர்களோடு சேர்ந்து கட்டப்பட்டிருக்கிறீர்கள். ஆவியால் தேவன் வாழும் ஆலயமாக நீங்களும் கட்டப்பட்டு வருகிறீர்கள்.
ஏதோமுக்கு விரோதமான செய்தி
35 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, சேயீர் மலையைப் பார். அதற்கு விரோதமாக எனக்காகப் பேசு. 3 அதனிடம் சொல், எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்.
“‘சேயீர் மலையே, நான் உனக்கு விரோதமானவன்!
நான் உன்னைத் தண்டிப்பேன்.
நான் உன்னை வெறுமையான நிலமாக்குவேன்.
4 நான் உன் நகரங்களை அழிப்பேன்.
நீ வெறுமை ஆவாய்.
பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.
5 “‘ஏனென்றால், நீ எப்பொழுதும் எனது ஜனங்களுக்கு விரோதமாக இருந்தாய். நீ உனது வாளை இஸ்ரவேலுக்கு எதிராக அவர்களின் ஆபத்து காலத்தில் அவர்களின் இறுதித் தண்டனை காலத்தில் பயன்படுத்தினாய்!’” 6 எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரைக்கொண்டு, உனக்கு மரணம் வரும்படி ஆணையிடுகிறேன். மரணம் உன்னைத் துரத்தும். நீ ஜனங்களைக் கொல்லுவதை வெறுப்பதில்லை. எனவே மரணம் உன்னைத் துரத்தும். 7 நான் சேயீர் மலையைப் பாழான இடமாக்குவேன். அந்த நகரத்திலிருந்து வரும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். அந்த நகரத்திற்குள் செல்ல விரும்பும் ஒவ்வொருவரையும் நான் கொல்லுவேன். 8 நான் இதன் மலைகளை மரித்த உடல்களால் நிரப்புவேன். உனது குன்றுகள் முழுவதும் மரித்த உடல்களால் நிரம்பும். உனது பள்ளதாக்குகளிலும், உனது ஆற்றுப் படுக்கைகளிலும், உடல்கள் கிடக்கும். 9 நான் உன்னை என்றென்றும் வெறுமையாக்குவேன். உன் நகரங்களில் எவரும் வாழமாட்டார்கள். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
10 நீ சொன்னாய், “இந்த இரண்டு குலங்களும், நாடுகளும் (இஸ்ரவேலும் யூதாவும்) என்னுடையதாக இருக்கும். நாங்கள் அவர்களைச் சொந்தமாக எடுத்துக்கொள்வோம்.”
ஆனால் கர்த்தர் அங்கே இருக்கிறார்! 11 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நீ என் ஜனங்கள் மேல் பொறாமையோடு இருந்தாய். நீ அவர்கள் மீது கோபத்தோடு இருந்தாய். நீ அவர்களை வெறுத்தாய், எனவே எனது உயிரைக்கொண்டு ஆணையிடுகிறேன், நீ அவர்களைப் புண்படுத்திய அதே முறையில் நான் உன்னைத் தண்டிப்பேன். நான் உன்னைத் தண்டித்து நான் அவர்களோடு இருப்பதை ஜனங்கள் அறியும்படிச் செய்வேன். 12 நான் உனது நிந்தைகளையெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன் என்பதை நீ பிறகு அறிந்துகொள்வாய்.
“இஸ்ரவேல் மலைக்கு விரோதமாகப் பல தீயவற்றை நீ சொன்னாய். நீ சொன்னாய், ‘இஸ்ரவேல் அழிக்கப்பட்டிருக்கிறது! நான் அவர்களை உணவைப்போன்று சுவைப்பேன்!’ 13 நீ பெருமைகொண்டு, எனக்கு விரோதமானவற்றைச் சொன்னாய். நீ பல தடவை சொன்னாய், நீ சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் கேட்டிருக்கிறேன். ஆம், நீ சொன்னதைக் கேட்டேன்.”
14 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “நான் உன்னை அழிக்கும்போது பூமி முழுவதும் மகிழும். 15 இஸ்ரவேல் நாடு அழிக்கப்பட்டபோது நீ மகிழ்ச்சியாக இருந்தாய். நானும் உன்னை அதைப்போலவே நடத்துவேன். சேயீர் மலையும் ஏதோம் நாடு முழுவதும் அழிக்கப்படும்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.”
கோராகின் குடும்பம் இராகத் தலைவனுக்கு அளித்த ஒரு துதிப் பாடல்
85 கர்த்தாவே, உமது தேசத்தின்மேல் தயவாயிரும்.
யாக்கோபின் ஜனங்கள் ஒரு அந்நிய தேசத்தில் அடிமைகளாக இருக்கிறார்கள்.
அடிமைப்பட்டவர்களை மீண்டும் அவர்கள் தேசத்திற்கு அழைத்து வாரும்.
2 கர்த்தாவே, உமது ஜனங்களை மன்னியும்!
அவர்கள் பாவங்களை போக்கிவிடும்!
3 கர்த்தாவே, சினமாயிருப்பதை நீர் நிறுத்தும்.
கடுங்கோபமாக இராதேயும்.
4 எங்கள் தேவனும் இரட்சகருமானவரே,
எங்களிடம் கோபமாயிருப்பதை விட்டு விட்டு எங்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளும்.
5 நீர் என்றென்றும் கோபங்கொள்வீரோ?
6 தயவுகூரும், எங்களை மீண்டும் வாழச் செய்யும்.
உமது ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
7 கர்த்தாவே, எங்களைக் காப்பாற்றும்.
நீர் எங்களை நேசிப்பதை எங்களுக்குக் காட்டும்.
8 தேவனாகிய கர்த்தர் கூறியதை நான் கேட்டேன்.
அவரது ஜனங்களுக்கும், உண்மையான சீடர்களுக்கும் சமாதானம் உண்டாகுமென்று கர்த்தர் கூறினார்.
எனவே மூடத்தனமான வாழ்க்கை முறைக்கு அவர்கள் மீண்டும் திரும்பிச் செல்லக் கூடாது.
9 தேவன் தம்மைப் பின்பற்றுவோரை விரைவில் மீட்பார்.
நமது தேசத்தில் நாம் பெருமையோடு விரைவில் வாழுவோம்.
10 தேவனுடைய உண்மையான அன்பு அவரை பின்பற்றுவோரை வந்தைடையும்.
நன்மையும் சமாதானமும் முத்தமிட்டு அவர்களை வாழ்த்தும்.
11 பூமியின் ஜனங்கள் தேவனிடம் நேர்மையானவர்களாயிருப்பார்கள்.
பரலோகத்தின் தேவனும் அவர்களுக்கு நல்லவராக இருப்பார்.
12 கர்த்தர் நமக்குப் பல நல்ல பொருள்களைத் தருவார்.
நிலம் பல நல்ல பயிர்களை விளைவிக்கும்.
13 நன்மை தேவனுக்கு முன்பாகச் செல்லும்.
அது அவருக்கு வழியை ஆயத்தப்படுத்தும்.
2008 by World Bible Translation Center