M’Cheyne Bible Reading Plan
சவுலின் குடும்பம் தண்டிக்கப்படுகிறது
21 தாவீது அரசனாக இருந்தபோது ஒரு பஞ்சம் வந்தது. இம்முறை பஞ்சம் மூன்று ஆண்டுகள் நீடித்தது. தாவீது கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தரும் அவனுக்குப் பதில் தந்தார். கர்த்தர், “சவுலும் கொலைக்காரரான அவனது குடும்பத்தாரும் இப்பஞ்சத்திற்குக் காரணமானார்கள். இப்பஞ்சம் சவுல் கிபியோனியரைக் கொன்றதால் வந்ததாகும்” என்றார். 2 (கிபியோனியர் இஸ்ரவேலர் அல்ல. அவர்கள் எமோரியர் குழுவினராகும். இஸ்ரவேலர் கிபியோனியரைத் துன்புறுத்துவதில்லை என்று வாக்களித்திருந்தனர். ஆனால் சவுல் கிபியோனியரைக் கொல்ல முயன்றான். அவன் இஸ்ரவேலர் மீதும் யூதா ஜனங்கள் மீதும் அளவு கடந்த பாசம் வைத்திருந்ததால் இப்படிச் செய்தான்.)
அரசனாகிய தாவீது கிபியோனியரை அழைத்து அவர்கள் எல்லோரிடமும் பேசினான். 3 தாவீது கிபியோனியரிடம், “நான் உங்களுக்கு என்ன செய்யக்கூடும்? இஸ்ரவேலின் பாவத்தைப் போக்குவதற்கு நான் என்ன செய்ய முடியும்? எனவே நீர் கர்த்தருடைய ஜனங்களை ஆசிர்வதிக்கலாம்” என்றான்.
4 கிபியோனியர் தாவீதிடம், “தாம் செய்த காரியத்திற்கு ஈடாக கொடுப்பதற்கு சவுலின் குடும்பத்தினரிடம் போதிய அளவு வெள்ளியோ, தங்கமோ இல்லை. ஆனால் இஸ்ரவேலரைக் கொல்வதற்கு எங்களுக்கு உரிமை கிடையாது” என்றனர்.
தாவீது, “அப்படியெனில், நான் உங்களுக்காக என்ன செய்யமுடியும்?” என்று கேட்டான்.
5 அதற்கு கிபியோனியர் அரசன் தாவீதிடம், “எங்களுக்கெதிராக சவுல் திட்டங்கள் தீட்டினான். இஸ்ரவேலில் வாழும் எங்கள் அத்தனைபேரையும் அழிப்பதற்கு அவன் முயன்றான். 6 சவுலின் ஏழு மகன்களையும் எங்களிடம் ஒப்படையுங்கள். சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். ஆகையால் நாங்கள் கிபியா மலையில் கர்த்தரின் முன்னால் சவுலின் மகன்களைத் தூக்கில் இடுவோம்” என்றார்கள்.
அரசனாகிய தாவீது, “நல்லது, அவர்களை நான் உங்களிடம் ஒப்படைப்பேன்” என்றான். 7 ஆனால் அரசன் யோனத்தானின் மகனாகிய மேவிபோசேத்தைப் பாதுகாத்தான். யோனத்தான் சவுலின் மகன். ஆனால் கர்த்தருடைய பெயரில் யோனத்தானுக்கு தாவீது ஒரு வாக்குறுதி அளித்திருந்தான். [a] ஆகையால் அரசன் மேவிபோசேத்தை அவர்கள் துன்புறுத்தாதபடி பார்த்துக்கொண்டான். 8 சவுலுக்கும் அவன் மனைவி ரிஸ்பாவுக்கும் பிறந்தவர்கள் அர்மோனியும் மேவிபோசேத்தும் [b] ஆவார்கள். சவுலுக்கு மீகாள் என்னும் மகள் இருந்தாள். அவளை மேகோலாவிலுள்ள பர்சிலாவின் மகன் ஆதரியேலுக்கு மணம் புரிந்து வைத்தனர். ஆதரியேலுக்கும் மீகாளுக்கும் பிறந்த ஐந்து மகன்களைத் தாவீது அழைத்தான். 9 இவ்வாறு தாவீது ஏழுபேரைக் கிபியோனியருக்குக் கொடுத்தான். கிபியோனியர் கர்த்தருக்கு முன்பாக அவர்களை கிபியா மலையில் தூக்கிலிட்டனர். ஏழு பேரும் ஒரே சமயத்தில் மடிந்தனர். அறுவடையின் ஆரம்ப நாட்களில் அவ்வாறு அவர்கள் கொல்லப்பட்டனர். இது வசந்தக் காலத்தில் பார்லி அறுப்புக்கு முன் நடந்தது.
தாவீதும் ரிஸ்பாவும்
10 ஆயாவின் மகளான ரிஸ்பாள் துக்கத்திற்கு அறிகுறியான துணியை எடுத்து பாறை மீது வைத்தாள். அந்த ஆடை அறுவடை தொடங்கியக் காலத்திலிருந்து மழை வரும்வரை பாறை மீதே இருந்தது. ரிஸ்பாள் மரித்தவர்களின் உடலை இரவும் பகலும் காத்தாள். காட்டுப் பறவைகள் பகலிலும், காட்டு விலங்குகள் இரவிலும் உடலை நெருங்கி விடாத வண்ணம் கண்காணித்தாள்.
11 ஜனங்கள் தாவீதிடம் சென்று சவுலின் வேலைக் காரியான ரிஸ்பாவின் செயலைப் பற்றிக் கூறினார்கள். 12 பின்பு தாவீது யாபேஸ் கீலேயாத்திலுள்ள ஜனங்களிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளை எடுத்தனர். (கிலேயாத்திலுள்ள யாபேசின் ஆட்கள் கில்போவாவில் சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்ட பிறகு இந்த எலும்புகளை எடுத்தார்கள். பெலிஸ்தர்கள் சவுல், மற்றும் யோனத்தானின் உடல்களை பெத்சானிலுள்ள ஒரு சுவரில் தொங்கவிட்டனர். ஆனால் யாபேஸ் கீலேயாத்தின் ஆட்கள் அங்குச்சென்று பொது இடத்திலிருந்து உடல்களைத் திருடினார்கள்.)
13 தாவீது கீலேயாத்திலுள்ள யாபேசிலிருந்து சவுல் மற்றும் யோனத்தானின் எலும்புகளைக் கொண்டு வந்தான். அவர்கள் தூக்கிலிடப்பட்ட ஏழு பேரின் உடல்களையும் கொண்டுவந்தனர். 14 அவர்கள் பென்யமீன் பகுதியில் சவுல் மற்றும் யோனத்தானின் எலும்பைப் புதைத்தனர். அவர்கள் சவுலின் தந்தையாகிய கீசின் கல்லறையில் அவர்களைப் புதைத்தனர். அரசன் சொன்னபடி ஜனங்கள் செய்தனர். ஆகையால் தேவன் அந்த ஜனங்களின் வேண்டுதல்களை ஏற்றுக்கொண்டார்.
பெலிஸ்தரோடு போர்
15 பெலிஸ்தர் இஸ்ரவேலருடன் இன்னொரு போரை ஆரம்பித்தனர். தாவீதும் அவனது ஆட்களும் பெலிஸ்தரோடு போரிடச் சென்றனர். தாவீது சோர்வாகவும் பலவீனமாகவும் இருந்தான். 16 இஸ்பிபெனோப் இராட்சதர்களில் ஒருவன். இஸ்பிபெனோபின் ஈட்டி 71/2 பவுண்டு எடையுள்ளதாக இருந்தது. அவனிடம் புதிய வாள் ஒன்றும் இருந்தது. அவன் தாவீதைக் கொல்ல முயன்றான். 17 ஆனால் செருயாவின் மகனாகிய அபிசாய் பெலிஸ்தனைக் கொன்று தாவீதைக் காப்பாற்றினான்.
பின்பு தாவீதின் ஆட்கள் தாவீதிற்கு சிறப்பான ஒரு வாக்குறுதி அளித்தனர். அவர்கள் தாவீதிடம், “இனி நீங்கள் எங்களோடு சேர்ந்து போருக்கு வர வேண்டாம். அவ்வாறு வந்தால் இஸ்ரவேல் தனது சிறந்த தலைவரை இழக்கக்கூடும்” என்றனர்.
18 பின்பு கோப் என்னுமிடத்தில் பெலிஸ்தரோடு மற்றொரு போர் நடந்தது. ஊசாத்தியனாகிய சீபேக்காய் இன்னொரு இராட்சதனான (ரஃபா குடும்பத்தவனான) சாப் என்பவனைக் கொன்றான்.
19 மீண்டும் பெலிஸ்தருக்கு எதிராக கோப் என்னுமிடத்தில் போர் நடந்தது. யாரெயொர்கிமின் மகனான எல்க்கானான் பென்யமீன் குடும்பத்திலிருந்து வந்தவன். அவன் காத்தியனாகிய (காத் ஊரானாகிய) கோலியாத்தைக் கொன்றான். அவனது ஈட்டி நெய்கிறவர்களின் படைமரம் போன்று பெரியதாக இருந்தது.
20 மற்றொரு போர் காத் என்னுமிடத்தில் நடந்தது. அங்கு மிகப்பெரிய மனிதன் ஒருவன் இருந்தான். அவனுக்கு ஒவ்வொரு கையிலும் ஆறு விரல்களும், ஒவ்வொரு பாதத்திலும் ஆறு விரல்களும் காணப்பட்டன. இவ்வாறு அவனுக்கு மொத்தம் 24 விரல்கள் இருந்தன. இவனும் ரஃபா (இராட்சதக்) குடும்பத்தைச் சார்ந்தவன். 21 அவன் இஸ்ரவேலை சவாலுக்கு அழைத்தான். இஸ்ரவேலரை பார்த்து நகைத்தான். ஆனால் யோனத்தான் அவனைக் கொன்றான். (யோனத்தான் தாவீதின் சகோதரனான சீமேயின் மகன்.)
22 இவ்வாறு மரித்த நான்கு பேரும் காத் ஊரைச் சார்ந்த ரஃபாவின் ஜனங்களாவார்கள். அவர்கள் தாவீதினாலும் அவனது ஆட்களாலும் கொல்லப்பட்டார்கள்.
1 அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவதாவது: நான் மனிதர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அப்போஸ்தலன் அல்ல. நான் மனிதர்களிடமிருந்து அனுப்பப்படவில்லை. இயேசு கிறிஸ்துவும், பிதாவாகிய தேவனும் என்னை அப்போஸ்தலனாக ஆக்கினார்கள். தேவன் ஒருவரே இயேசுவை மரணத்தில் இருந்து உயிர்த்தெழும்படி செய்தவர். 2 இந்த நிருபம் என்னோடு இருக்கிற என் சகோதரர்கள் அனைவரும் கலாத்தியா [a] நாட்டில் உள்ள சபைகளுக்கு அனுப்புவது,
3 பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாகட்டும். 4 இயேசு நமது பாவங்களுக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார். நாம் வாழ்ந்துகொண்டிருக்கிற கெட்ட உலகில் இருந்து விடுதலை பெறுவதற்காக அவர் இதைச் செய்தார். இதனையே பிதாவாகிய தேவனும் விரும்பினார். 5 தேவனுடைய மகிமை எல்லா காலங்களிலும் இருப்பதாக. ஆமென்.
ஒரே ஒரு உண்மையான நற்செய்தி
6 கொஞ்சக் காலத்துக்கு முன்பு தேவன் தன்னைப் பின்பற்றும்படி உங்களை அழைத்தார். அவர் உங்களைத் தன் கிருபையால் கிறிஸ்துவின் மூலமாக அழைத்தார். ஆனால் இப்பொழுது உங்களைக் கண்டு நான் ஆச்சரியப்படுகிறேன். ஏற்கெனவே நீங்கள் அவர் வழியில் இருந்து மாறிவிட்டீர்கள். 7 உண்மையில் வேறு ஒரு நற்செய்தி என்பது இல்லை. ஆனால் சிலர் உங்களைக் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் நற்செய்தியை மாற்றிவிட விரும்புகிறார்கள். 8 நாங்கள் உங்களுக்கு உண்மையான நற்செய்தியைக் கூறினோம். எனவே நாங்களோ அல்லது வானத்திலிருந்து வந்த ஒரு தேவதூதனோ வேறொரு நற்செய்தியை உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும். 9 நான் ஏற்கெனவே இதனைச் சொன்னேன். அதனை இப்போது மறுபடியும் கூறுகின்றேன். நீங்கள் ஏற்கெனவே உண்மையான நற்செய்தியை ஏற்றுக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இரட்சிக்கப்படுவதற்கு வேறு வழியை எவரேனும் உங்களுக்குக் கூறினால் அவன் கடிந்துகொள்ளப்பட வேண்டும்.
10 என்னை ஏற்றுக்கொள்ளும்படி செய்ய நான் மக்களிடம் முயற்சி செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா? இல்லை. நான் தேவனுக்கு வேண்டியவனாக இருக்க மட்டுமே முயற்சி செய்கிறேன். நான் மனிதர்களை திருப்திப்படுத்தவா முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்? அவ்வாறு நான் மனிதர்களை திருப்திப்படுத்திக்கொண்டிருந்தால் இயேசு கிறிஸ்துவின் ஊழியனாக நான் இருக்க முடியாது.
பவுலின் அதிகாரம் தேவனிடமிருந்து வந்தது
11 சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தியானது மனிதர்களால் உருவாக்கப்பட்டதல்ல. இதனை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். 12 நான் இந்த நற்செய்தியை மனிதர்களிடம் இருந்து பெறவில்லை. எந்த மனிதனும் நற்செய்தியை எனக்குக் கற்பிக்கவில்லை. இயேசு கிறிஸ்து இதனை எனக்குக் கொடுத்தார். மக்களிடம் நான் சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவர் எனக்கு வெளிப்படுத்தினார்.
13 நீங்கள் எனது கடந்த கால வாழ்வைப் பற்றி அறிந்திருக்கிறீர்கள். நான் யூதர்களின் மதத்தில் இருந்தேன். தேவனுடைய சபையை நான் மிகவும் துன்புறுத்தினேன். அதனை அழித்துவிட முயன்றேன். 14 நான் யூதர்களின் மதத்தில் தலைவனாக இருந்தேன். என் வயதுள்ள மற்ற யூதர்களைவிட நான் அதிகச் செயல்கள் செய்தேன். மற்றவர்களைவிட நான் பழைய மரபு விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க முயன்றேன். அவ்விதிகள் நமது முன்னோர்களிடமிருந்து நாம் பெற்றவை ஆகும்.
15 ஆனால் நான் பிறப்பதற்கு முன்னரே தேவன் எனக்காக வேறு ஒரு தனித் திட்டம் வைத்திருந்தார். அதனால் அவர் கிருபையாக என்னை அழைத்தார். அவரிடம் எனக்காக வேறு திட்டங்கள் இருந்தன. 16 நான் யூதர் அல்லாதவர்களிடம் போய் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைப் போதிக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார். எனவே அவர் தமது குமாரனை எனக்கு வெளிப்படுத்தினார். தேவன் என்னை அழைத்த போது, வேறு எந்த மனிதரிடமிருந்தும் நான் ஆலோசனையோ, அறிவுரையோ கேட்கவில்லை. 17 எருசலேமில் உள்ள அப்போஸ்தலர்களையும் நான் போய்ப் பார்க்கவில்லை. அவர்கள் எல்லாம் எனக்கு முன்னரே அப்போஸ்தலர்களாய் இருக்கிறவர்கள். ஆனால் நான் யாருக்காகவும் காத்திருக்காமல் அரேபியாவுக்குப் போனேன். பிறகு அங்கிருந்து தமஸ்கு என்ற நகருக்குத் திரும்பிவந்தேன்.
18 மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, நான் எருசலேமுக்குப் போனேன். நான் பேதுருவைச் [b] சந்திக்க விரும்பினேன். அவரோடு பதினைந்து நாட்கள் நான் தங்கி இருந்தேன். 19 வேறு எந்த அப்போஸ்தலர்களையும் அங்கு நான் சந்திக்கவில்லை. இயேசுவின் சகோதரனான யாக்கோபை மட்டும் சந்தித்தேன். 20 நான் எழுதுபவை எல்லாம் பொய் அல்ல என்று தேவனுக்குத் தெரியும். 21 பிறகு சீரியா, சிலிசியா போன்ற பகுதிகளுக்கு நான் சென்றேன்.
22 யூதேயாவில் இருக்கிற சபைகளில் உள்ளவர்கள் என்னை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. 23 அவர்கள் என்னைப்பற்றி சிலவற்றைக் கேள்விப்பட்டிருந்தார்கள். அதாவது, “முன்பு நம்மைத் துன்பப்படுத்தியவனே தான் அழிக்க நினைத்த விசுவாசத்தைக் குறித்து இப்பொழுது பிரசங்கம் செய்கிறான்.” 24 எனவே விசுவாசிகள் என்னைக் குறித்து தேவனைப் புகழ்ந்தனர்.
தீரு தன்னைத்தானே ஒரு தேவன் என்று நினைக்கிறது
28 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, தீருவின் அரசனிடம் கூறு: ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘நீ மிகவும் பெருமைகொண்டவன்!
நீ சொல்கிறாய்: “நான் தெய்வம்!
கடல்களின் நடுவே தெய்வங்கள் வாழும் இடங்களில்
நான் அமருவேன்.”
“‘நீ ஒரு மனிதன். தெய்வம் அல்ல!
நீ தேவன் என்று மட்டும் நினைக்கிறாய்.
3 நீ தானியேலைவிட புத்திசாலி என்று நினைக்கிறாய்!
உன்னால் எல்லா இரகசியங்களையும் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறாய்!
4 உனது ஞானத்தாலும், புத்தியினாலும்
நீ உனது செல்வத்தை பெற்றாய்.
நீ பொன்னையும் வெள்ளியையும்
உன் செல்வத்தில் சேர்த்துக்கொண்டாய்.
5 உன் ஞானத்தாலும் வியாபாரத்தாலும்
செல்வத்தை வளரச்செய்தாய்.
அச்செல்வத்தால்
இப்பொழுது பெருமைகொள்கிறாய்.
6 “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
தீரு, நீ ஒரு தேவனைபோன்று உன்னை நினைத்தாய்.
7 உனக்கு எதிராகச் சண்டையிட நான் அந்நியரை அழைப்பேன்.
அவர்கள், நாடுகளிலேயே மிகவும் கொடூரமானவர்கள்!
அவர்கள் தம் வாளை உருவி,
உனது ஞானத்தால் கொண்டுவந்த அழகிய பொருட்களுக்கு எதிராகப் பயன்படுத்துவார்கள்.
அவர்கள் உன் சிறப்பைக் குலைப்பார்கள்.
8 அவர்கள் உன்னைக் குழியிலே விழத் தள்ளுவார்கள்.
நீ கடலின் நடுவே கொலையுண்டு மரிக்கிற பயணிகளைப்போன்று மரிப்பாய்.
9 அம்மனிதன் உன்னைக் கொல்வான்.
“நான் ஒரு தேவன்” என்று இனியும் சொல்வாயா?
இல்லை! அவன் தனது வல்லமையால் உன்னை அடைவான்.
நீ தேவனில்லை, மனிதன் என்பதை நீ அறிவாய்.
10 அந்நியர்கள் உன்னை வெளிநாட்டவரைப்போல நடத்தி கொலை செய்வார்கள்!
அவை நிகழும், ஏனென்றால், நான் கட்டளையிட்டேன்!’”
எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “மனுபுத்திரனே, தீரு அரசனைப்பற்றிய சோகப் பாடலை நீ பாடு. அவனிடம் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘நீ உயர்ந்த (இலட்சிய) மனிதனாக இருந்தாய்.
நீ ஞானம் நிறைந்தவன்.
நீ முழுமையான அழகுள்ளவன்.
13 நீ ஏதேனில் இருந்தாய்.
அது தேவனுடைய தோட்டம்.
உன்னிடம் எல்லா விலையுயர்ந்த கற்களும் பத்மராகம், புஷ்பராகம், வைரம், படிகப்பச்சை, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் ஆகியவற்றை வைத்திருந்தாய்.
இவை அனைத்தும் பொன்னில் வைக்கப்பட்டிருந்தன.
நீ படைக்கப்பட்ட நாளிலேயே இவ்வழகுகள் உனக்குக் கொடுக்கப்பட்டன.
தேவன் உன்னை பலமுள்ளதாகச் செய்தார்.
14 நீ தேர்ந்தெடுக்கப்பட்ட கேரூப்களில் ஒருவன் உனது
சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
நான் உன்னை தேவனுடைய பரிசுத்த மலையில் வைத்தேன்.
நீ அந்த இடத்திற்குப் பொறுப்பாளியாயிருந்தாய்.
நீ நெருப்பைப்போன்று ஒளிவீசும் நகைகளின் மத்தியில் நடந்தாய்.
15 நான் உன்னைப் படைக்கும்போது நீ நல்லவனாகவும் நேர்மையானவனாகவும் இருந்தாய்.
ஆனால் பிறகு கெட்டவனானாய்.
16 உனது வியாபாரம் உனக்குப் பெருஞ் செல்வத்தைத் தந்தது.
ஆனால் அவை உனக்குள் கொடூரத்தை வைத்தன. நீ பாவம் செய்தாய்.
எனவே நான் உன்னைச் சுத்தமற்ற ஒன்றாக நடத்தினேன்.
நான் உன்னைத் தேவனுடைய மலையில் இருந்து அப்பால் எறிந்தேன்.
நீ சிறப்புக்குரிய கேருபீன்களில் ஒருவன்.
உனது சிறகுகள் என் சிங்காசனத்தின்மேல் விரிந்தன.
ஆனால் நான் உன்னை நெருப்பைபோன்று ஒளிவீசும்
நகைகளைவிட்டு விலகச் செய்தேன்.
17 உனது அழகு உன்னைப் பெருமைகொள்ளச் செய்தது.
உனது மகிமை உன் ஞானத்தை அழித்தது.
எனவே உன்னைத் தரையில் எறிவேன்.
இப்பொழுது மற்ற அரசர்கள் உன்னை முறைத்துப் பார்க்கின்றனர்.
18 நீ பல பாவங்களைச் செய்தாய்.
நீ அநீதியான வியாபாரியாக இருந்தாய்.
இவ்வாறு நீ பரிசுத்தமான இடங்களை அசுத்தமாக்கினாய்.
எனவே உனக்குள்ளிருந்து நெருப்பை நான் கொண்டுவந்தேன்.
இது உன்னை எரித்தது!
நீ தரையில் எரிந்து சாம்பலானாய்.
இப்பொழுது ஒவ்வொருவரும் உன் அவமானத்தைப் பார்க்கமுடியும்.
19 “‘மற்ற நாடுகளில் உள்ள ஜனங்கள் அனைவரும் உனக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து திகைத்தார்கள்.
உனக்கு நடந்தது ஜனங்களை அஞ்சும்படிச் செய்யும்.
நீ முடிவடைந்தாய்!’”
சீதோனுக்கு எதிரான செய்தி
20 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 21 “மனுபுத்திரனே, சீதோனுக்கு எதிராகத் திரும்பி எனக்காகத் தீர்க்கதரிசனம் சொல். 22 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: என்று சொல்.
“‘சீதோனே நான் உனக்கு எதிராக இருக்கிறேன்!
உன் ஜனங்கள் என்னை மதிக்க கற்பார்கள்.
நான் சீதோனைத் தண்டிப்பேன்.
பிறகு, நானே கர்த்தர் என்பதை ஜனங்கள் அறிவார்கள்.
பிறகு, நான் பரிசுத்தமானவர் என்று அறிவார்கள்.
அவ்வாறே என்னை அவர்கள் மதிப்பார்கள்.
23 நான் சீதோனுக்கு நோயையும் மரணத்தையும் அனுப்புவேன்.
நகரத்தில் பலர் மரிப்பார்கள்.
பலர் (பகைவீரர்) வாளால் நகரத்திற்கு வெளியில் கொல்லப்படுவார்கள்.
பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!’”
இஸ்ரவேலைக் கேலி செய்வதை நாடுகள் நிறுத்தும்
24 “‘இஸ்ரவேலைச் சுற்றிலுள்ள நாடுகள் அவளை வெறுத்தனர். ஆனால் அந்நாடுகளுக்குத் தீமைகள் ஏற்படும். பிறகு அங்கே இஸ்ரவேல் வம்சத்தாரைப் புண்படுத்தும் முட்களும் துன்புறுத்தும் நெருஞ்சிலும் இல்லாமல் போகும். அப்பொழுது நானே அவர்களுடைய கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்ளுவார்கள்.’”
25 கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “நான் இஸ்ரவேல் ஜனங்களை மற்ற நாடுகளில் சிதறடித்தேன். ஆனால் மீண்டும் இஸ்ரவேல் வம்சத்தாரை ஒன்று சேர்ப்பேன். பிறகு அந்நாடுகள் நான் பரிசுத்தமானவர் என்பதை அறிந்து அவ்வாறு என்னை மதிப்பார்கள். அந்நேரத்தில், இஸ்ரவேலர்கள் தம் நாட்டில் வாழ்வார்கள், நான் அந்த நாட்டை என் தாசனாகிய யாக்கோபுக்குக் கொடுத்தேன். 26 அவர்கள் தம் நாட்டில் பாதுகாப்பாக இருப்பார்கள். அவர்கள் வீடுகட்டுவார்கள். திராட்சை தோட்டங்களை அமைப்பார்கள். அதனை வெறுக்கிற, சுற்றிலும் உள்ள அனைத்து நாட்டினரையும் நான் தண்டிப்பேன். பிறகு இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள். நானே அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்.”
எதுதூன் என்னும் இராகத் தலைவனுக்கு ஆசாபின் பாடல்களுள் ஒன்று
77 தேவனே நோக்கி உதவிக்காக நான் உரக்கக் கூப்பிடுகிறேன்.
தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கிறேன்.
நான் சொல்வதைக் கேளும்.
2 என் ஆண்டவரே, தொல்லைகள் வரும்போது நான் உம்மிடம் வருகிறேன்.
இரவு முழுவதும் நான் உம்மை நெருங்க முயன்றேன்.
என் ஆத்துமா ஆறுதல் அடைய மறுத்தது.
3 நான் தேவனைப்பற்றி நினைக்கிறேன்,
நான் உணரும் விதத்தை அவருக்குச் சொல்ல முயல்கிறேன், ஆனால் என்னால் முடியவில்லை.
4 நீர் என்னை உறங்கவொட்டீர்.
நான் ஏதோ சொல்ல முயன்றேன், ஆனால் மிகவும் வருத்தமடைந்தேன்.
5 நான் நீண்ட காலத்தில் நடந்ததைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
முற்காலத்தில் நிகழ்ந்தவற்றைப்பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்.
6 இரவில், எனது பாடல்களைப்பற்றி நினைக்க முயல்கிறேன்.
நான் என்னோடு பேசி, புரிந்துகொள்ள முயல்கிறேன்.
7 நான், “எங்கள் ஆண்டவர் என்றைக்கும் எங்களை விட்டு விலகிவிட்டாரா?
மீண்டும் அவர் எப்போதும் நம்முடன் மகிழ்ச்சியோடு இருப்பாரா?
8 தேவனுடைய அன்பு என்றென்றும் விலகிவிட்டதா?
அவர் நம்மோடு மீண்டும் பேசுவாரா?
9 இரக்கம் என்னெவென்பதை தேவன் மறந்துவிட்டாரா?
அவரது நீடிய பொறுமை கோபமாயிற்றா?” என்று வியக்கிறேன்.
10 பின்பு நான், “என்னை உண்மையிலேயே பாதிப்பது இது.
‘மிக உன்னதமான தேவன்’ அவரது வல்லமையை இழந்துவிட்டாரா?” என எண்ணினேன்.
11 கர்த்தர் செய்தவற்றை நான் நினைவுகூருகிறேன்.
தேவனே, நீர் முற்காலத்தில் செய்த அற்புதமான காரியங்களை நான் நினைவுகூருகிறேன்.
12 நீர் செய்தவற்றைக்குறித்து யோசித்தேன்.
அக்காரியங்களை நான் நினைத்தேன்.
13 தேவனே, உமது வழிகள் பரிசுத்தமானவை.
தேவனே, உம்மைப்போன்று உயர்ந்தவர் (மேன்மையானவர்) எவருமில்லை.
14 அற்புதமானக் காரியங்களைச் செய்த தேவன் நீரே.
நீர் ஜனங்களுக்கு உமது மிகுந்த வல்லமையைக் காண்பித்தீர்.
15 உமது வல்லமையால் உமது ஜனங்களைக் காத்தீர்.
நீர் யாக்கோபையும் யோசேப்பின் சந்ததியினரையும் காத்தீர்.
16 தேவனே, தண்ணீர் உம்மைக் கண்டு பயந்தது.
ஆழமான தண்ணீர் பயத்தால் நடுங்கிற்று.
17 கருமேகங்கள் தண்ணீரைப் பொழிந்தன.
உயர்ந்த மேகங்களில் உரத்த இடிமுழக்கத்தை ஜனங்கள் கேட்டார்கள்.
அப்போது மின்னல்களாகிய உமது அம்புகள் மேகங்களினூடே பிரகாசித்தன.
18 உரத்த இடிமுழக்கங்கள் உண்டாயின.
உலகத்தை மின்னல் ஒளியால் நிரப்பிற்று.
பூமி அதிர்ந்து நடுங்கிற்று.
19 தேவனே, நீர் ஆழமான தண்ணீரில் (வெள்ளத்தில்) நடந்து சென்றீர்.
நீர் ஆழமான கடலைக் கடந்தீர்.
ஆனால் உமது பாதச்சுவடுகள் அங்குப் பதியவில்லை.
20 உமது ஜனங்களை மந்தைகளைப்போல் வழி நடத்துவதற்கு
நீர் மோசேயையும் ஆரோனையும் பயன்படுத்தினீர்.
2008 by World Bible Translation Center