M’Cheyne Bible Reading Plan
தாவீதுக்கு எதிராக இஸ்ரவேலரை சேபா வழிநடத்துகிறான்
20 பிக்கிரியின் மகனாகிய சேபா என்னும் மனிதன் அந்த இடத்தில் இருந்தான். சேபா எல்லோருக்கும் தொல்லை விளைவிக்கும் பயனற்ற மனிதன். சேபா பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஜனங்களைக் கூட்டுவதற்காக அவன் ஒரு எக்காளம் ஊதினான். பின்பு அவன்,
“நமக்கு தாவீதிடம் பங்கெதுவும் இல்லை.
ஈசாயின் மகனிடத்தில் நமக்கு எந்தப் பாகமும் இல்லை.
இஸ்ரவேலே, நாம் நமது கூடாரங்களுக்குத் திரும்புவோம்” என்றான்.
2 எனவே இஸ்ரவேலர் எல்லோரும் தாவீதை விட்டு பிக்கிரியின் மகனாகிய சேபாவைப் பின்பற்றினார்கள். ஆனால் யூதா ஜனங்கள் யோர்தான் ஆற்றிலிருந்து எருசலேம்வரைக்கும் வருகிற வழியில் எல்லாம் அவர்களுடைய அரசனோடு தங்கியிருந்தனர்.
3 தாவீது எருசலேமிலுள்ள தன் வீட்டிற்குச் சென்றான். தாவீது தன் 10 மனைவியரை வீட்டைக் கவனித்துக்கொள்வதற்காக விட்டுச் சென்றிருந்தான். தாவீது அவர்களை ஒரு தனித்த வீட்டில் வைத்தான்.
அந்த வீட்டைச் சுற்றிலும் காவலாளரை நியமித்தான். அவர்கள் மரிக்கும்வரைக்கும் அந்த வீட்டில் தங்கியிருந்தார்கள். தாவீது அப்பெண்களைப் பராமரித்து அவர்களுக்கு உணவளித்தான். ஆனால் அவர்களோடு பாலின உறவுக்கொள்ளவில்லை. அவர்கள் மரிக்கும்வரைக்கும் விதவைகளைப்போல் வாழ்ந்தார்கள்.
4 அரசன் அமாசாவை நோக்கி, “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா ஜனங்கள் என்னை வந்து சந்திக்க வேண்டுமென அவர்களுக்குக் கூறு, நீயும் இங்கிருக்க வேண்டும்” என்றான்.
5 உடனே யூதா ஜனங்களை அழைத்து வருவதற்காக அமாசா சென்றான். ஆனால் அரசன் கொடுத்த கால அவகாசத்தைக் காட்டிலும் அதிகமாக எடுத்துக் கொண்டான்.
சேபாவைக் கொல்லும்படி அபிசாயிடம் தாவீது கூறுகிறான்
6 தாவீது அபிசாயிடம், “பிக்கிரியின் மகனாகிய சேபா அப்சலோமைக் காட்டிலும் அதிகம் ஆபத்தானவன். எனவே என் அதிகாரிகளை அழைத்துச் சென்று சேபாவைத் துரத்து, மதிலுள்ள நகரங்களுக்குள் அவன் நுழையும்முன் விரைந்து செல். பாதுகாப்பான நகரங்களுக்குள் சேபா சென்றுவிட்டால் பிறகு அவனைப் பிடிக்க முடியாது” என்றான்.
7 எனவே யோவாப் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்துவதற்காக எருசலேமை விட்டுச் சென்றான். கிரேத்தியர் பிலேத்தியர் மற்ற வீரர்கள் ஆகியோரோடுகூட யோவாப் தன் ஆட்களையும் அழைத்துக் கொண்டான்.
யோவாப் அமாசாவைக் கொல்கிறான்
8 கிபியோனிலுள்ள பெரும்பாறை அருகே யோவாபும் அவனது படையும் வந்தபோது, அவர்களை சந்திப்பதற்கு அமாசா அங்கு வந்தான். யோவாப் சீருடை அணிந்திருந்தான். யோவாப் கட்டியிருந்த கச்சைக்குள் உறையில் தன் வாளை வைத்திருந்தான். யோவாப் அமாசாவை சந்திக்க நடந்து சென்றபோது யோவாபின் வாள் உறையிலிருந்து வெளியே விழுந்தது. யோவாப் வாளை எடுத்துக் கையில் ஏந்தியிருந்தான். 9 யோவாப் அமாசாவை நோக்கி, “சகோதரனே, எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டான்.
பின்பு யோவாப் தனது வலது கையை நீட்டி அமாசாவின் தாடியைப் பிடித்து முத்தமிடுவதுபோல் இழுத்தான். 10 யோவாபின் இடது கையிலிருந்த வாளை அமாசா கவனிக்கவில்லை. ஆனால் உடனே யோவாப் தன் வாளால் அமாசாவை வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் நிலத்தில் சரிந்தது. யோவாப் மீண்டும் அமாசாவைக் குத்த வேண்டியிருக்கவில்லை. அவன் மரித்துப் போயிருந்தான்.
தாவீதின் ஆட்கள் சேபாவைத் தேடிக் கொண்டிருக்கின்றனர்
பின்பு யோவாபும், அவனது சசோதரன் அபிசாயியும் பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தத் தொடங்கினர். 11 யோவாபின் இளம் வீரர்களில் ஒருவன் அமாசாவின் உடல் அருகே நின்றான். இந்த இளம் வீரன், “யோவாபையும் தாவீதையும் ஆதரிக்கின்ற வீரர்களே, நாம் யோவாபைப் பின் தொடர்வோம்” என்றான். 12 பாதையின் நடுவே அமாசாவின் உடல் அவனது குருதியினூடே கிடந்தது. எல்லா ஜனங்களும் அதைப் பார்ப்பதற்கு நின்றதை அந்த இளம் வீரன் கவனித்தான். எனவே அவன் அந்த உடலைப் பாதையிலிருந்து வயலுக்குள் புரட்டித் தள்ளினான். பின் உடலை ஒரு துணியால் மூடினான். 13 அமாசாவின் உடல் பாதையிலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட பிறகு, ஜனங்கள் அதைத் தாண்டிச்சென்று யோவாபைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் யோவாபோடு சேர்ந்து பிக்கிரியின் மகனாகிய சேபாவைத் துரத்தினார்கள்.
ஆபேல் பெத்மாக்காவிற்கு சேபா தப்பிக்கிறான்
14 ஆபேல் பெத்மாக்காவை அடையும்வரை வழியில் எல்லா இஸ்ரவேல் கோத்திரங்களையும் பிக்கிரியின் மகனாகிய சேபா கடந்து சென்றான். பேரீமின் ஜனங்களும் சேபாவைப் பின்தொடர்ந்து சென்றனர்.
15 யோவாபும் அவனது ஆட்களும் ஆபேல் பெத்மாக்காவிற்கு வந்தனர். யோவாபின் படை நகரத்தைச் சூழ்ந்தது. நகரத்து மதிலின் மேல் அவர்கள் புழுதி வீசினார்கள். அவர்கள் மதிலில் ஏறுவதற்கு வசதியாக இதைச் செய்தார்கள். யோவாபின் மனிதர் மதில் கீழே விழும்படியாக மதிலின் கற்களை உடைக்க ஆரம்பித்தார்கள்.
16 ஆனால் அந்நகரத்தில் ஒரு புத்திசாலியானப் பெண் இருந்தாள். அவள், “நான் சொல்வதைக் கேளுங்கள்! யோவாபை இங்கு வரும்படி கூறுங்கள். நான் அவனோடு பேசவேண்டும்” என்றாள்.
17 யோவாப் அப்பெண்ணை சந்தித்துப் பேசுவதற்குச் சென்றான். அப்பெண் அவனிடம், “நீர் யோவாபா?” என்று கேட்டாள்.
யோவாப், “ஆம் நானே” என்று பதில் கூறினான்.
அப்போது அப்பெண்மணி, “நான் கூறுவதைக் கேள்” என்றாள்.
யோவாப், “நான் கேட்கிறேன்” என்றான்.
18 அப்போது அப்பெண்மணி, “முன்பு ஜனங்கள் ‘ஆபேலில் யாரேனும் உதவி வேண்டினால் தேவையானது கிடைக்கும்’ என்று சொல்லிக்கொள்வார்கள். 19 நான் இவ்வூரின் சமாதானமான, உண்மையான ஜனங்களுள் ஒருத்தி. இஸ்ரவேலின் ஒரு முக்கிய நகரத்தை நீ அழிக்கப்போகிறாய். கர்த்தருக்குச் சொந்தமான ஒன்றை நீ ஏன் அழிக்க விரும்புகிறாய்?” என்று கேட்டாள்.
20 யோவாப் பதிலாக, “நான் எதையும் அழிக்க விரும்பவில்லை! உங்கள் ஊரை அழிக்க, நான் விரும்பமாட்டேன். 21 ஆனால் மலைநாடாகிய எப்பிராயீமைச் சார்ந்த ஒரு மனிதன் உங்கள் நகரில் இருக்கிறான். அவன் பிக்கிரியின் மகன் சேபா. அவன் தாவீது அரசனை எதிர்க்கிறான். அவனை என்னிடம் கொண்டு வாருங்கள். நான் நகரை ஒன்றும் செய்யமாட்டேன்” என்றான்.
அப்பெண் யோவாபிடம், “சரி அவனது தலை மதிலின் மேலாக உங்களிடம் வீசப்படும்” என்றாள்.
22 அந்நகரின் ஜனங்களிடம் அப்பெண் மிகவும் புத்திசாதுரியத்தோடு பேசினாள். பிக்கிரியின் மகனாகிய சேபாவின் தலையை ஜனங்கள் வெட்டினார்கள். சேபாவின் தலையை மதிலுக்கு மேலாக யோவாபுக்கு அந்த ஜனங்கள் வீசினார்கள்.
ஆகையால் யோவாப் எக்காளம் ஊதினான். படை நகரைவிட்டு நீங்கிச் சென்றது. ஒவ்வொருவரும் தத்தம் கூடாரத்திற்குச் சென்றார்கள். யோவாப் எருசலேமில் அரசனிடம் சென்றான்.
தாவீதின் ஆளுகையின் கீழ் மக்கள்
23 இஸ்ரவேல் படைக்கு யோவாப் தலைவனாக இருந்தான். கிரேத்தியரையும் பிலேத்தியரையும் யோய்தாவின் மகன் பெனாயா வழி நடத்தினான். 24 அதோனிராம் கடும் உழைப்பாளிகளுக்குத் தலைவனானான். அகிலூதின் மகன் யோசபாத் வரலாற்றாசிரியனாக இருந்தான். 25 சேவா செயலாளரானான். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்களாக இருந்தார்கள். 26 யயீரியனாகிய ஈரா தாவீதுக்குப் பிரதானியாக [a] இருந்தான்.
இறுதி எச்சரிக்கைகளும் வாழ்த்துக்களும்
13 மூன்றாவது முறையாக நான் மீண்டும் வருவேன். “எல்லா குற்றச் சாட்டுகளும் இரண்டு மூன்று சாட்சிகளால்தான் உறுதிப்படவேண்டும்.” [a] என்பதை நினைத்துக்கொள்ளுங்கள். 2 நான் இரண்டாவது முறை உங்களோடு இருந்தபோது பாவம் செய்தவர்களை எச்சரித்திருந்தேன். இப்பொழுது உங்களிடம் இருந்து விலகி இருக்கிறேன். பாவம் செய்த மற்ற எல்லாரையும் எச்சரிக்கிறேன். நான் உங்களிடம் மீண்டும் வரும்போது உங்கள் பாவங்களுக்காக உங்களைத் தண்டிப்பேன். 3 கிறிஸ்து என் மூலம் பேசுகிறார் என்பதற்கு உங்களுக்கு ஆதாரம் வேண்டுமா? (உங்களை நான் தண்டிக்கு போது, நீங்கள் அதைப் பார்ப்பீர்கள்.) அவர் உங்களிடத்தில் பலவீனராக இல்லை; வல்லவராய் இருக்கிறார். 4 சிலுவையில் அறையப்படும்போது கிறிஸ்து பலவீனமானவராயிருந்தார் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் இப்போது வாழ்கிறார். நாமும் கிறிஸ்துவுக்குள் பலவீனராக இருக்கிறோம் என்பது உண்மை. ஆனால் தேவனுடைய வல்லமையால் நாங்கள் உங்களுக்காக கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருப்போம்.
5 நீங்கள் உங்களையே பாருங்கள். விசுவாசத்தில் வாழ்கிறீர்களா என உங்களை நீங்களே சோதித்துப் பாருங்கள். இயேசுகிறிஸ்து உங்களுக்குள் இருக்கிறாரா, இல்லையா என்று உங்களுக்குத் தெரியும். நீங்கள் சோதனையில் தோற்றுவிட்டால் கிறிஸ்து உங்களோடு இல்லை. 6 நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் இல்லை என்பதை நீங்கள் அடையாளம் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறேன். 7 நீங்கள் தவறாக எதுவும் செய்யக் கூடாது என்பதே தேவனிடம் எங்கள் பிரார்த்தனை. நாங்கள் சோதனையில் வெற்றி பெற்றோமா இல்லையா என்பது முக்கியமல்ல. நாங்கள் சோதனையில் தோற்றவர்கள் என மக்கள் நினைக்க நேர்ந்தாலும் கூட நீங்கள் நேர்மையானதைச் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியம். 8 உண்மைக்கு எதிரானவற்றை எங்களால் செய்ய முடியாது. எங்களால் உண்மைக்குரியதை மட்டுமே செய்ய முடியும். 9 நீங்கள் பலமுள்ளவர்களாய் இருக்கும்வரை நாங்கள் பெலவீனராய் இருப்பதைக் குறித்து எங்களுக்கு மகிழ்ச்சியே. நீங்கள் மென்மேலும் பலமுள்ளவர்களாகும்படிக்கு பிரார்த்தனை செய்கிறோம். 10 நாங்கள் உங்களோடு இல்லாததால் இதை எழுதுகிறேன். எனவே உங்களிடம் வரும்போது என்னிடம் உள்ள ஆற்றலைப் பயன்படுத்தி உங்களைத் தண்டிக்கமாட்டேன். கர்த்தர் எனக்கு உங்களைப் பலப்படுத்தவே வல்லமை கொடுத்துள்ளார். உங்களை அழிக்க அல்ல.
11 சகோதர, சகோதரிகளே, மகிழ்ச்சியோடு இருங்கள். முழுமை பெற முயலுங்கள். நான் செய்யச் சொன்னவற்றைச் செய்யுங்கள். ஒருவருக்கொருவர் மனதார ஒத்துப் போங்கள். சமாதானத்தோடு வாழுங்கள். அப்பொழுது அன்புக்கும் சமாதனத்திற்கும் உரிய தேவன் உங்களோடு இருப்பார்.
12 ஒருவரையொருவர் பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள். தேவனுடைய பரிசுத்தவான்களெல்லாரும் உங்களுக்கு வாழ்த்துக்களைக் கூறுகிறார்கள்.
13 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும், தேவனின் அன்பும், பரிசுத்த ஆவியானவரின் ஐக்கியமும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
கடல் வியாபாரத்தின் மையமாக இருந்த தீரு
27 கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. அவர் சொன்னார். 2 “மனுபுத்திரனே, தீருவைப்பற்றிய இச்சோகப் பாடலைப் பாடு. 3 தீருவைப்பற்றி இவற்றைக் கூறு: ‘தீரு, நீ கடல்களுக்குக் கதவாக இருக்கிறாய், பல நாடுகளுக்கு நீ வியாபாரி. கடற்கரையோரமாக உள்ள பல நாடுகளுக்குப் பயணம் செய்கிறாய். எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
“‘தீருவே, நீ மிக அழகானவள் என்று எண்ணுகிறாய்.
நீ முழுமையான அழகுடையவள் என்று எண்ணுகிறாய்!
4 உனது நகரைச் சுற்றி மத்திய தரைக்கடல்
எல்லையாக இருக்கிறது.
உன்னைக் கட்டினவர்கள் உன்னிடமிருந்து புறப்படும்
கப்பலைப்போன்று முழு அழகோடு கட்டினார்கள்.
5 சேனீர் மலைகளிலிருந்து வந்த தேவதாரு மரங்களால்
உன் கப்பலின் தளத்திற்கான பலகைகளைச் செய்தார்கள்.
லீபனோனிலிருந்து கொண்டுவந்த கேதுரு மரங்களால்
பாய்மரங்களைச் செய்தார்கள்.
6 பாசானின் கர்வாலி மரங்களினால்
உன் துடுப்புகளைச் செய்தார்கள்.
சீப்புரு தீவுகளிலிருந்து கொண்டு வந்த பைன்மரத்தால்
உன் கப்பல் தளத்தை செய்தார்கள்.
அதனை அவர்கள் தந்தங்களால் அலங்காரம் செய்தனர்.
7 உன் பாய்க்காக எகிப்திலிருந்து வந்த சித்திரத்தையல் உள்ள
சணல் நூல் புடவையைப் பயன்படுத்தினார்கள்.
அந்தப் பாய் தான் உன் கொடியாக இருந்தது.
உன் அறையின் திரைச் சீலை நீலமும் சிவப்புமாக இருந்தது.
அவை சீப்புரு தீவிலிருந்து வந்தது.
8 உனது படகுகளை சீதோன் அர்வாத் என்னும் நகரங்களின் ஜனங்கள் உங்களுக்காக ஓட்டினார்கள்.
தீரு, உன் ஞானிகள் உனது கப்பலில் மாலுமிகளாக இருப்பார்கள்.
9 கேபாரின் நகரத்து மூப்பர்களும் ஞானிகளும்
கப்பலில் உள்ள பலகைகளை ஒன்றோடொன்றை ஓட்டிக்கொண்டிருந்தார்கள்.
கடலில் உள்ள அனைத்து கப்பல்களும் அவற்றிலுள்ள மாலுமிகளும்
உன்னுடன் வியாபாரம் செய்வதற்காக உன்னிடத்தில் இருந்தார்கள்.
10 “‘உனது படையில் பெர்சியரும் லூதியரும் பூத்தியரும் இருந்தனர். அவர்கள் உனது போர் வீரர்கள். அவர்கள் தமது கேடயங்களையும் தலைக்கவசங்களையும் உன் சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உன் நகரத்திற்கு பெருமையும், மகிமையும் கொண்டுவந்தனர். 11 அர்வாத் மற்றும் சிலிசியாவின் ஆண்கள் உனது சுவரைச் சுற்றிலும் காவல் காத்தார்கள். கம்மாத் ஆண்கள் உன் கோபுரங்களில் இருந்தனர். அவர்கள் தம் கேடயங்களை உனது நகரைச் சுற்றியுள்ள சுவர்களில் தொங்கவிட்டனர். அவர்கள் உனது அழகை முழுமையாக்கினர்.
12 “‘தர்ஷீஸ் ஊரார் உன்னுடைய சிறந்த வாடிக்கையாளர்கள். அவர்கள் வெள்ளி, இரும்பு, தகரம், ஈயம் மற்றும் நீ விற்பனை செய்த சிறந்த பொருட்களை வியாபாரம் செய்தனர். 13 கிரீஸ், துருக்கி, கருங்கடலைச் சுற்றியுள்ள பகுதி ஜனங்கள் உன்னோடு வணிகம் செய்தனர். அவர்கள் அடிமைகளையும் வெண்கலப் பாத்திரங்களையும் வியாபாரம் செய்தனர். 14 தொகர்மா சந்ததியினர் நீ விற்ற பொருள்களுக்காக போர்க் குதிரைகளையும் கோவேறு கழுதைகளையும் கொண்டுவந்தனர். 15 தேதான் ஜனங்கள் உன் வியாபாரிகளாய் இருந்தார்கள். நீ உன் பொருட்களைப் பல இடங்களில் விற்றாய். ஜனங்கள் யானைத் தந்தங்களையும் கருங்காலி மரங்களையும் அவற்றுக்குப் பதிலாகக் கொண்டுவந்தனர். 16 அராம் உன்னோடு வியாபாரம் செய்ய வந்தது. ஏனென்றால், உன்னிடம் பல நல்ல பொருட்கள் இருந்தன. அராம் ஜனங்கள் மரகதங்களையும். இரத்தாம்பரங்களையும், சித்திரத்தையலாடைகளையும், உயர்ந்த ஆடைகளையும், பவளங்களையும், பளிங்கையும், உன் சந்தைகளில் விற்க வந்தார்கள்.
17 “‘யூதா ஜனங்களும், இஸ்ரவேல் ஜனங்களும் உன்னுடன் வியாபாரம் செய்யவந்தனர். கோதுமை, தேன், எண்ணெய், பிசின் தைலம் ஆகியவற்றை உன்னிடம் வாங்க வந்தனர். 18 தமஸ்கு சிறந்த வாடிக்கையாளர். உன்னிடமிருந்த அற்புதமான பொருட்களுக்காக உன்னோடு வியாபாரம் செய்ய வந்தார்கள். கெல்போனின் திராட்சைரசத்தையும், வெண்மையான ஆட்டு மயிரையும் உனக்கு விற்றார்கள். 19 தமஸ்கு உசேரில் உள்ள திராட்சை ரசத்தை உன் பொருட்களுக்காகக் கொடுத்தனர். அவர்கள் துலக்கப்பட்ட இரும்பையும், இலவங்கத்தையும், வசம்பையும் உன் சந்தைகளில் விற்றார்கள். 20 தேதானின் ஆட்கள் நல்ல வியாபாரம் செய்தனர். அவர்கள் இரதங்களுக்குப் போடுகிற இரத்தினக் கம்பளங்களை உன்னோடு வியாபாரம் பண்ணினார்கள். 21 அரபியரும் கேதாரின் எல்லா தலைவர்களும் வாடிக்கையாளர்கள். அவர்கள் ஆட்டுக்குட்டிகளையும், ஆட்டுக் கடாக்களையும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 22 சேபா, ராமா நகரங்களில் உள்ளவர்கள் உன்னுடன் வியாபாரம் செய்தனர். மேல்தரமான எல்லா மணப்பொருட்களையும், எல்லா இரத்தினக் கற்களையும், பொன்னையும் உன் சந்தைக்குக் கொண்டுவந்தார்கள். 23 ஆரான், கன்னே, ஏதேன் என்னும் பட்டணத்தார்களும் சேபாவின் வியாபாரிகளும், அசீரியரும், கில்மாத் பட்டணத்தாரும் உன்னோடு வியாபாரம் செய்தனர். 24 இவர்கள் எல்லாவித உயர்ந்த சரக்குகளையும், இளநீலப் பட்டுகளும் விசித்திரத் தையலாடைகளும் அடங்கிய புடவைக் கட்டுக்களையும் விலை உயர்ந்த துணிகள் வைக்கப்பட்டு கயிறுகளால் கட்டியிருக்கும் கேதுருமரப் பெட்டிகளையும் கொண்டுவந்து உன்னோடு வியாபாரம் செய்தனர். இவைகளையே அவர்கள் உன்னோடு வியாபாரம் செய்தனர். 25 தர்ஷீசின் கப்பல்கள் நீ விற்றப் பொருட்களைக் கொண்டுபோனார்கள்.
“‘தீரு, நீயும் ஒரு சரக்குக் கப்பலைப்போன்றவள்.
நீ கடலில் செல்வங்கள் ஏற்றப்பட்ட கப்பல்.
26 கப்பலைச் செலுத்துகிறவர்கள் ஆழமான தண்ணீரில் உன்னை அழைத்துக்கொண்டு போனார்கள்.
ஆனால் கடலில் உன் கப்பலை பலமான கிழக்குக் காற்று அழித்தது.
27 உனது செல்வங்கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கும்.
நீ விற்க வைத்திருந்த செல்வமும் வாங்கிய செல்வமும் கடலுக்குள் மூழ்கும்.
உனது கப்பலாட்களும், மாலுமிகளும், கப்பலைச் செப்பனிடுகிறவர்களும் உன் வியாபாரிகளும்
உன்னில் உள்ள எல்லாப் போர் வீரர்களும்
கடலுக்குள் மூழ்குவார்கள்.
இது, நீ அழியும் நாளில் நிகழும்!
28 “‘நீ உனது வியாபாரிகளைத் தொலை தூர நாடுகளுக்கு அனுப்பினாய்.
அந்த இடங்கள் உனது மாலுமியின் அழுகுரலைக் கேட்டு அச்சத்தால் நடுங்கும்!
29 கப்பலைச் செலுத்தும் முழுக் குழுவும் கப்பலை விட்டுக் குதிக்கும்.
கப்பலாட்களும் கடல் மாலுமிகள் அனைவரும் தம் கப்பல்களை விட்டுக் குதித்து கரையை அடைவார்கள்.
30 அவர்கள் உன்னைப்பற்றி துக்கப்படுவார்கள்.
அவர்கள் அழுவார்கள்.
அவர்கள் தம் தலையில் மண்ணை வாரிப்போடுவார்கள்.
அவர்கள் சாம்பலில் புரளுவார்கள்.
31 அவர்கள் உனக்காகத் தம் தலையை மொட்டையடிப்பார்கள்.
அவர்கள் துக்கத்தின் ஆடையை அணிவார்கள்.
அவர்கள் உனக்காக மரித்துப்போனவர்களுக்காக அழுவதுபோன்று அழுவார்கள்.
32 “‘அவர்கள் தம் பலத்த அழுகையில், உன்னைப்பற்றிய இந்தச் சோகப் பாடலைப் பாடி உனக்காக அழுவார்கள்.
“‘தீருவைப்போன்று யாருமில்லை!
தீரு கடல் நடுவில் அழிக்கப்படுகிறது!
33 உன் வியாபாரிகள் கடல் கடந்து போனார்கள்.
உனது பெருஞ்செல்வம் மற்றும் உன் சந்தையின் மூலம் நீ பலரைத் திருப்திப்படுத்தினாய்.
நீ பூமியின் அரசர்களைச் செல்வர்கள் ஆக்கினாய்!
34 ஆனால் இப்பொழுது கடல் அலைகளால்
ஆழங்களில் உடைக்கப்பட்டாய்.
நீ விற்ற அனைத்துப் பொருட்களும்
உனது ஆட்களும் விழுந்துவிட்டனர்!
35 கடலோரங்களில் வாழும் ஜனங்கள்
உன்னைப்பற்றி அறிந்து திகைக்கிறார்கள்.
அவர்களின் அரசர்கள் மிகவும் பயந்திருக்கிறார்கள்.
அவர்களின் முகங்கள் அதிர்ச்சியை காண்பிக்கின்றன.
36 பிற நாடுகளில் உள்ள வியாபாரிகள்
உனக்காக பரிகசிப்பார்கள்.
உனக்கு நிகழ்ந்தவை ஜனங்களைப் பயப்படச் செய்யும், ஏனென்றால்,
நீ முடிந்துபோனாய்.
நீ இனி இருக்கமாட்டாய்.’”
“அழிக்காதே” என்னும் பாடலின் இசைத்தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்களுள் ஒன்று
75 தேவனே, நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நாங்கள் உம்மைத் துதிக்கிறோம்.
நீர் அருகாமையில் இருக்க, ஜனங்கள் நீர் செய்யும் அற்புதமான காரியங்களைக் குறித்து கூறுகிறார்கள்.
2 தேவன் கூறுகிறார்:
“நியாயத்தீர்ப்பின் காலத்தை நான் தெரிந்தெடுத்திருக்கிறேன்.
நான் தகுந்தபடி நியாயந்தீர்ப்பேன்.
3 பூமியும் அதிலுள்ள அனைத்தும் நடுங்கி விழும் நிலையில் இருக்கும்.
ஆனால் நான் அதைத் திடமாக இருக்கச் செய்வேன்”.
4-5 “சிலர் அதிகமாக பெருமையுள்ளவர்கள், தாங்கள் வலிமை மிக்கவர்கள் என்றும் முக்கியமானவர்கள் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால் நான் அவர்களிடம் ‘வீம்பு பேசாதீர்கள்!’
‘பெருமை பாராட்டாதீர்கள்!’ என்று கூறுவேன்” என்கிறார்.
6 ஒருவனை முக்கியமானவனாக்கும் வல்லமை
எதுவும் இப்பூமியில் இல்லை.
7 தேவனே நீதிபதி, யார் முக்கியமானவர் என்பதை தேவன் முடிவெடுக்கிறார்.
தேவன் ஒருவனை உயர்த்தி அவனை முக்கியமானவனாக்குகிறார்.
தேவன் மற்றொருவனைத் தாழ்த்தி அவனை முக்கியமற்றவனாக்குகிறார்.
8 தேவன் தீயோரைத் தண்டிக்கத் தயாராய் இருக்கிறார்.
கர்த்தர் கையில் ஒரு கோப்பை உள்ளது, அக்கோப்பை விஷம் கலந்த திராட்சைரசத்தால் நிரம்பியுள்ளது.
அவர் அத்திராட்சைரசத்தை (தண்டனையை) ஊற்றுவார்,
கடைசித் துளிமட்டும் கெட்டஜனங்கள் அதனைக் குடிப்பார்கள்.
9 நான் எப்போதும் ஜனங்களுக்கு இவற்றைப்பற்றிக் கூறுவேன்.
இஸ்ரவேலரின் தேவனுக்கு நான் துதிப்பாடுவேன்.
10 கெட்ட ஜனங்களிடமிருந்து நான் வல்லமையை அகற்றிவிடுவேன்.
நான் நல்ல ஜனங்களுக்கு வல்லமையை அளிப்பேன்.
இசைக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு ஆசாப் அளித்த துதிப்பாடல்
76 யூதாவின் ஜனங்கள் தேவனை அறிவார்கள்.
இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுடைய நாமத்தை மதிக்கிறார்கள்.
2 தேவனுடைய ஆலயம் சாலேமில் [a] இருக்கிறது.
தேவனுடைய வீடு சீயோன் மலையில் இருக்கிறது.
3 அவ்விடத்தில் தேவன் வில்கள், அம்புகள், கேடயங்கள், வாள்கள்,
மற்றும் போர்க்கருவிகளையெல்லாம் உடைத்தெறிந்தார்.
4 தேவனே, நீர் உமது பகைவர்களை முறியடித்த போது
மலைகளிலிருந்து மகிமை பொருந்தியவராய் வெளிப்பட்டீர்.
5 அவர்கள் வலிமையுள்ளவர்கள் என அந்த வீரர்கள் நம்பினார்கள்.
ஆனால் இப்போது அவர்கள் களங்களில் (வயல்களில்) மரித்துக்கிடக்கிறார்கள்.
அவர்கள் அணிந்திருந்தவையெல்லாம் அவர்கள் உடம்பிலிருந்து அகற்றப்பட்டன.
அவ்வலிய வீரர்களில் எவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியவில்லை.
6 யாக்கோபின் தேவன் அவ்வீரர்களிடம் குரல் உயர்த்திக் கண்டித்தார்.
இரதங்களோடும் குதிரைகளோடும் கூடிய அப்படையினர் மரித்து வீழ்ந்தனர்.
7 தேவனே, நீர் பயங்கரமானவர்!
நீர் சினமடையும்போது ஒருவனும் உமக்கெதிராக நிற்க முடிவதில்லை.
8-9 கர்த்தர் நீதிபதியாக இருந்து, அவரது முடிவை அறிவிக்கிறார்.
தேசத்தின் எளிய ஜனங்களை தேவன் மீட்டார்.
பரலோகத்திலிருந்து அவர் இம்முடிவைத் தந்தார்.
பூமி முழுவதும் அமைதியாகப் பயத்தோடு காணப்பட்டது.
10 தேவனே, நீர் தீயோரைத் தண்டிக்கும்போது ஜனங்கள் உம்மை மதிக்கிறார்கள்.
நீர் உமது கோபத்தை வெளிப்படுத்தும்.
தப்பித்து வாழ்பவர்கள் வலிமையுள்ளோராவர்கள்.
11 ஜனங்களே, உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு வாக்குறுதிப் பண்ணினீர்கள்.
இப்போது, வாக்குறுதிப் பண்ணினவற்றை நீங்கள் அவருக்குக் கொடுங்கள்.
எல்லா இடங்களிலும் ஜனங்கள் தேவனுக்குப் பயந்து அவரை மதிக்கிறார்கள்.
அவர்கள் அவருக்குப் பரிசுகளைக் கொண்டு வருகிறார்கள்.
12 தேவன் பெருந்தலைவர்களைத் தோற்கடிக்கிறார்.
பூமியின் எல்லா அரசர்களும் அவருக்குப் பயப்படுகிறார்கள்.
2008 by World Bible Translation Center