M’Cheyne Bible Reading Plan
தாவீது போருக்குத் தயாராகிறான்
18 தாவீது தன் ஆட்களை எண்ணிப் பார்த்தான். 1,000 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் 100 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் ஜனங்களை வழி நடத்துவோரை நியமித்தான். 2 ஜனங்களை மூன்று பிரிவினராகப் பிரித்தான். பின்பு ஜனங்களை வெளியே அனுப்பினான். மூன்றில் ஒரு பகுதி ஜனங்களை யோவாப் வழி நடத்தினான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினரை செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாய் வழி நடத்தினான். காத்திலிருந்து வந்த ஈத்தாயி மூன்றாவது பிரிவு ஜனங்களை வழி நடத்தினான்.
தாவீது அரசன் ஜனங்களிடம், “நானும் உங்களோடு வருவேன்” என்று கூறினான்.
3 ஆனால் ஜனங்கள், “இல்லை, நீங்கள் எங்களோடு வரக்கூடாது. ஏனெனில் நாங்கள் (யுத்தத்தில்) ஓடிவிட்டால் அப்சலோமின் ஆட்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நம்மில் பாதி பேர் கொல்லப்பட்டாலும் அப்சலோமின் ஆட்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களில் 10,000 பேருக்கு ஒப்பானவர்கள்! நீங்கள் நகரத்தில் தங்கியருப்பதே நல்லது. பின்பு எங்களுக்கு உதவி தேவையானால், நீங்கள் எங்களுக்கு உதவ முடியும்” என்றார்கள்.
4 அரசன் ஜனங்களை நோக்கி, “நீங்கள் சிறந்ததென முடிவெடுக்கும் காரியத்தையே நான் செய்வேன்” என்றான்.
பின்பு அரசன் வாயிலருகே வந்து நின்றான். படை வெளியே சென்றது. அவர்கள் 100 பேராக மற்றும் 1,000 பேராக அணிவகுத்துச் சென்றனர்.
“அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்!”
5 யோவாப், அபிசாயி, ஈத்தாய் ஆகியோருக்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “இதை எனக்காகச் செய்யுங்கள் அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்” என்றான்.
ஜனங்கள் எல்லாரும் அப்சலோமைக் குறித்து படைத் தலைவர்களுக்கு அரசன் இட்ட கட்டளையைக் கேட்டார்கள்.
தாவீதின் படை அப்சலோமின் படையைத் தோற்கடிக்கிறது
6 அப்சலோமின் இஸ்ரவேலருடைய படையைத் தாவீதின் படை களத்தில் சந்தித்தது. அவர்கள் எப்பிராயீமின் காட்டில் சண்டையிட்டனர். 7 தாவீதின் படை இஸ்ரவேலரைத் தோற்கடித்தது. அன்றைக்கு 20,000 ஆட்கள் கொல்லப்பட்டனர். 8 அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.
9 அப்சலோம் தாவீதின் அதிகாரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்சலோம் தனது கோவேறு கழுதையின் மேலேறிக்கொண்டு, தப்பித்துச்செல்ல முயன்றான். ஒரு பெரிய கர்வாலி மரத்தின் கீழே அந்தக் கோவேறு கழுதைச் சென்றது. அதன் கிளைகள் அடர்த்தியாக இருந்தன. அப்சலோமின் தலை மரத்தில் அகப்பட்டுக்கொண்டது, அவன் ஏறி வந்த கோவேறு கழுதை ஓடிவிட்டதால், அப்சலோம் நிலத்திற்கு மேலாகத் [a] தொங்கிக்கொண்டிருந்தான்.
10 ஒரு மனிதன் நிகழ்ந்தது அனைத்தையும் பார்த்தான். அவன் யோவாபிடம், “ஓர் கர்வாலி மரத்தில் அப்சலோம் தொங்கிக்கொண்டிருப்பதை நான் கண்டேன்” என்றான்.
11 யோவாப் அம்மனிதனை நோக்கி, “ஏன் அவனைக் கொன்று நிலத்தில் விழும்படியாகச் செய்யவில்லை? நான் உனக்கு ஒரு கச்சையையும் 10 வெள்ளிக் காசையும் கொடுத்திருப்பேன்!” என்றான்.
12 அம்மனிதன் யோவாபை நோக்கி, “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக்காசைக் கொடுத்தாலும் நான் அரசனின் மகனைக் காயப்படுத்த முயலமாட்டேன். ஏனெனில் உங்களுக்கும், அபிசாயிக்கும், ஈத்தாயிக்கும் அரசன் இட்ட கட்டளையை நாங்கள் கேட்டோம். அரசன், ‘இளைய அப்சலோமைக் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றான். 13 நான் அப்சலோமைக் கொன்றால் அரசன் கண்டு பிடித்துவிடுவான். அப்போது நீங்களே என்னைத் தண்டிப்பீர்கள்” என்றான்.
14 யோவாப், “நான் உன்னோடு இங்குப் பொழுதை வீணாக்கமாட்டேன்!” என்றான்.
அப்சலோம் உயிரோடு இன்னும் ஓக் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். யோவாப் மூன்று ஈட்டிகளை எடுத்தான். அவற்றை அப்சலோமை நோக்கி எறிந்தான். அவை அப்சலோமின் இருதயத்தை துளைத்தன. 15 யோவாபுக்கு யுத்தத்தில் உதவிய பத்து இளம் வீரர்கள் இருந்தனர். அந்த பத்து பேரும் அப்சலோமைச் சூழ்ந்து நின்று அவனைக் கொன்றனர்.
16 யோவாப் எக்காளம் ஊதி அப்சலோமின் இஸ்ரவேலரைத் துரத்துவதை நிறுத்துமாறு அறிவித்தான். 17 பின்பு அப்சலோமின் உடலை யோவாபின் ஆட்கள் எடுத்துக் காட்டிலிருந்த ஒரு பெரிய குழியில் இட்டனர். அக்குழியைப் பெரிய கற்களால் மூடினார்கள்.
அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் ஓடிப்போய், தங்கள் வீடுகளை அடைந்தனர்.
18 அப்சலோம் உயிரோடிருந்தபோது அரசனின் பள்ளதாக்கில் ஒரு தூணை நிறுவினான். அப்சலோம், “எனது பெயரை நிலைநிறுத்துவதற்கு எனக்கு மகன் இல்லை” என்றான். எனவே அத்தூணுக்கு தனது பெயரிட்டான். அத்தூண் இன்றைக்கும் “அப்சலோமின் ஞாபகச் சின்னம்” என்று அழைக்கப்படுகிறது.
யோவாப் தாவீதுக்கு செய்தியனுப்புகிறான்
19 சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை நோக்கி, “நான் ஓடிப்போய் தாவீது அரசனுக்குச் செய்தியைத் தெரிவிப்பேன். அவருக்காக பகைவனை கர்த்தர் தாமே அழித்தார் என்று சொல்வேன்” என்றான்.
20 யோவாப் அகிமாசிடம், “வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில், அரசனின் மகன் மரித்துவிட்டான்” என்றான்.
21 பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை அரசனிடம் போய்ச் சொல்” என்றான்.
கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.
22 ஆனால் சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான்.
யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.
23 அகிமாஸ் பதிலாக, “எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்” என்றான்.
யோவாப் அகிமாசிடம், “ஓடு!” என்றான்.
அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.
தாவீது செய்தியை அறிகிறான்
24 நகர வாயில்கள் இரண்டிற்கும் நடுவே தாவீது உட்கார்ந்திருந்தான். வாயில் மதிலின் கூரையில் காவலன் போய் நின்றான். ஒரு மனிதன் தனித்து ஓடிவருகிறதைக் காவலன் கண்டான். 25 காவலன் தாவீது அரசனிடம் உரக்கச் சொன்னான்.
தாவீது அரசன், “அம்மனிதன் தனித்து வந்தால் அவன் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.
அம்மனிதன் அருகே வந்துக்கொண்டிருந்தான். 26 காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம், “பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!” என்றான்.
அரசன், “அவனும் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.
27 காவலன், “சாதோக்கின் மகன் அகிமாசைப் போல் முதல் மனிதன் ஓடிவருகிறான்” என்றான்.
அரசன், “அகிமாஸ் நல்ல மனிதன். அவன் நற்செய்தியைக் கொண்டு வரக்கூடும்” என்றான்.
28 அகிமாஸ் அரசனிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் அரசனை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது அரசனாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களை கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.
29 அரசன், “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான்.
அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.
30 அப்போது அரசன், “இங்கே வந்து நின்று காத்திரு” என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.
31 கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய அரசனுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.
32 அரசன் கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான்.
கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.
33 அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை அரசன் அறிந்தான். அரசன் நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது மகன் அப்சலோமே, என் மகன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.
பவுலும்-போலி அப்போஸ்தலர்களும்
11 நான் கொஞ்சம் முட்டாளாக இருந்தாலும் என்னை நீங்கள் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று விரும்புகிறேன். ஏற்கெனவே என்னை நீங்கள் பொறுத்துக்கொண்டிருக்கிறீர்கள். 2 நான் உங்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். இது தேவனிடமிருந்து வந்த பெருமை ஆகும். நான் உங்களைக் கிறிஸ்துவுக்குத் தருவதாய் வாக்குறுதி கொடுத்தேன். கிறிஸ்துவே உங்களது ஒரே மணவாளன். அவரது தூய மணப் பெண்ணாக உங்களை அவருக்குக் கொடுக்க விரும்புகிறேன். 3 எனினும் கிறிஸ்துவிடமுள்ள உங்கள் முழு அர்ப்பணிப்பில் இருந்து விலகும்படி உங்கள் மனம் கெடுக்கப்படுமோ என்று அஞ்சுகிறேன். பாம்பின் (சாத்தான்) தந்திர வழிகளின் மூலம் ஏவாள் வஞ்சிக்கப்பட்டதைப்போல உங்களுக்கும் நேரும். 4 நாங்கள் சொன்னதற்கு மாறாக இயேசுவைப் பற்றி போதிக்க வரும் எவரையும் நம்பி சகித்துக்கொள்கிறீர்கள். நீங்கள் எங்களிடமிருந்து பெற்ற ஆவிக்கும் நற்செய்திக்கும் மாறுபட்ட ஆவியையும் நற்செய்தியையும் ஏற்றுக்கொள்கிறீர்கள். ஆகவே என்னையும் சகித்துக்கொள்ளுங்கள்.
5 மகாபிரதான அப்போஸ்தலரைவிட நான் ஒன்றிலும் குறைவு உள்ளவன் அல்லன் என எண்ணுகிறேன். 6 நான் பயிற்சி பெற்ற பேச்சாளன் இல்லை என்பது உண்மைதான். ஆனால் எனக்குப் போதிய ஞானம் உண்டு. நாங்கள் அவற்றை உங்களுக்கு எல்லா வழிகளிலும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளோம்.
7 நான் உங்களுக்கு இலவசமாக தேவனுடைய நற்செய்தியைப் போதித்திருக்கிறேன். உங்களை உயர்த்துவதற்காக நான் பணிந்துபோயிருக்கிறேன். அதனைத் தவறு என்று எண்ணுகிறீர்களா? 8 உங்களைக் கவனித்துக்கொள்ளும் பொருட்டு மற்ற சபைகளிடம் இருந்து பணத்தைப் பெற்றேன். 9 நான் உங்களோடு இருக்கும்போது, எனது தேவைகளுக்காக உங்களைத் துன்புறுத்தியதில்லை. எனக்கு தேவையானவற்றையெல்லாம் மக்கதோனியாவிலிருந்து வந்த சகோதரர்கள் கொடுத்தனர். எந்த வகையிலும் நான் உங்களுக்குப் பாரமாக இருக்கவில்லை. இனிமேலும் பாரமாக இருக்கமாட்டேன். 10 இதைப் பற்றி நான் பெருமைபட்டுக்கொள்வதை அகாயாவிலுள்ள [a] எவரும் என்னைத் தடுத்து நிறுத்த முடியாது. இதனை நான் என்னோடு இருக்கிற கிறிஸ்துவின் சத்தியத்தைக்கொண்டு கூறுகிறேன். 11 உங்களுக்குப் பாரமாயிருக்க விரும்பவில்லை என்று ஏன் கூறுகிறேன். உங்கள் மீது எனக்கு அன்பில்லையா? உண்டு. அதைப்பற்றி தேவன் நன்கு அறிவார்.
12 நான் இப்பொழுது செய்வதைத் தொடர்ந்து செய்வேன். ஏனென்றால் எங்கள் மீது குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் தேடுகிறவர்களுக்குக் காரணம் கிடைக்கக் கூடாது. தம் வேலையைப் பற்றிப் பெருமை பேசுகிறவர்கள் தம் வேலையை நம் வேலையைப் போன்ற ஒன்றாகச் சொல்லிக்கொள்ள விரும்புவார்கள். 13 அப்படிப்பட்டவர்கள் உண்மையான அப்போஸ்தலர்கள் அல்லர்; பொய் நிறைந்த பணியாளர்கள். அவர்கள் கிறிஸ்துவினுடைய அப்போஸ்தர்களின் வேடத்தைத் தரித்துக்கொள்ளுகிறார்கள். 14 இது எங்களை வியப்படையச் செய்யவில்லை. ஏனென்றால், சாத்தானே ஒளியின் தூதனாக [b] மாறுவேடம் அணிந்திருக்கிறான். 15 எனவே சாத்தானின் வேலைக்காரர்கள் நீதியின் வேலைக்காரர்களைப் போன்று வேடமிடுவது வியப்புக்குரியதல்ல. ஆனால் இவர்கள் இறுதியில் தங்கள் செயலுக்காகத் தண்டிக்கப்படுவர்.
பவுலும்-அவரது துன்பங்களும்
16 நான் மீண்டும் கூறுகிறேன். நான் அறிவற்றவன் என்று எவரும் எண்ண வேண்டாம். ஆனால் நீ என்னை அறிவற்றவன் என்று எண்ணினால் ஒரு அறிவற்றவனை ஏற்றுக்கொள்வது போல் என்னையும் ஏற்றுக்கொள். பின்பு இதைப் பற்றி நானும் பெருமைப்பட்டுக்கொள்ளுவேன். 17 ஏனென்றால் என்னைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன். நான் கர்த்தரைப் போன்று பேசுபவன் அல்லன். நான் அறிவற்றவன் போன்றே பெருமை பாராட்டுகிறேன். 18 உலகத்தில் ஏராளமானவர்கள் தம்மைப் பற்றிப் பெருமைபட்டுக்கொள்ளுகிறார்கள். நானும் பெருமைப்பட்டுக்கொள்கிறேன். 19 நீங்கள் புத்திசாலிகள். எனவே புத்தியற்றவர்களோடு நீங்கள் சகிப்புத் தன்மையோடு நடந்துகொள்ளுங்கள். 20 நீங்கள் சகித்துக்கொள்வீர்கள் என்று எனக்குத் தெரியும். ஒருவன் உங்களைக் கட்டாயப்படுத்தி காரியங்களைச் செய்யச் சொன்னாலும், ஒருவன் உங்களை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டாலும், ஒருவன் உங்களை ஏமாற்றினாலும், ஒருவன் தன்னை உயர்த்திக்கொண்டாலும், ஒருவன் உங்கள் முகத்தில் அறைந்தாலும் நீங்கள் அனைத்தையும் பொறுத்துக்கொள்வீர்கள். 21 இதனைச் சொல்லவே வெட்கமாக இருக்கிறது. ஆனால் இவற்றையெல்லாம் செய்வதற்கு நாம் பலவீனம் உள்ளவர்களாய் இருக்கிறோம்.
எவனாவது தன்னைப் பாராட்டிப் பேச தைரியம் உள்ளவனாய் இருந்தால் நானும் தைரியம் உள்ளவனாய் இருப்பேன். (நான் அறிவற்றவனைப் போன்று பேசிக்கொண்டிருக்கிறேன்.) 22 அவர்கள் எபிரேயர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் தேசத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். அவர்கள் ஆபிரகாமின் குடும்பத்தில் உள்ளவர்களாக இருந்தால் நானும் அவ்வாறே இருக்கிறேன். 23 அவர்கள் கிறிஸ்துவுக்குச் சேவை செய்பவர்களானால் நான் அவர்களை விட மிகுதியாகச் செய்துகொண்டே இருக்கிறேன். (நான் பைத்தியக்காரனைப் போன்று பேசுகிறேன்) நான் அவர்களைவிடக் கடினமாக உழைத்திருக்கிறேன். நான் பல முறைகள் சிறைபட்டிருக்கிறேன். நான் மிக அதிகமாக அடி வாங்கி இருக்கிறேன். நான் பலமுறை மரணத்தின் அருகில் சென்று வந்திருக்கிறேன்.
24 நான் யூதர்களால் சவுக்கால் முப்பத்தொன்பது அடிகளை ஐந்து தடவை பெற்றிருக்கிறேன். 25 மூன்று முறை மிலாறுகளால் அடிபட்டேன். ஒருமுறை நான் கல்லால் எறியப்பட்டு ஏறக்குறைய சாகும் தருவாயில் இருந்தேன். மூன்று முறை கப்பல் விபத்தில் சிக்கிக்கொண்டேன். ஒரு முறை கடலிலேயே ஒரு இராப்பகல் முழுவதையும் கழித்தேன். 26 நான் பலமுறை பயணங்கள் செய்திருக்கிறேன். நான் ஆறுகளாலும், கள்ளர்களாலும், யூத மக்களாலும், யூதரல்லாதவர்களாலும் ஆபத்துக்குட்பட்டிருக்கிறேன். நகரங்களுக்குள்ளும், மக்களே வசிக்காத இடங்களிலும், கடலுக்குள்ளேயும், ஆபத்துகளில் சிக்கியிருக்கிறேன். சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு உண்மையில் சகோதரர்களாக இல்லாத சிலராலும் நான் ஆபத்துக்குள்ளானேன்.
27 நான் பலமுறை கடினமாக உழைக்க, கடினமான சோர்வூட்டத்தக்கவற்றைச் செய்ய நேர்ந்தது. பல தடவை நான் தூங்காமல் இருந்திருக்கிறேன். பல முறை நான் உணவில்லாமல் பட்டினியாகவும், தாகத்தோடும் இருந்திருக்கிறேன். பல சமயங்களில் உண்ணுவதற்கு எதுவுமேயற்ற நிலையில் இருந்திருக்கிறேன். குளிரில் ஆடையில்லாமல் நிர்வாணமாகவும் இருந்திருக்கிறேன். 28 இவற்றைத் தவிர மேலும் பல பிரச்சனைகளும் எனக்குண்டு. குறிப்பாக எல்லா சபைகளைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறேன். 29 ஒருவன் பலவீனமடைவதைக் கண்டால் நானும் பலவீனனாகி விடுகிறேன். ஒருவன் பாவம் செய்வதைப் பார்த்தால் கோபத்தால் நான் எரிச்சலாகிவிடுகிறேன்.
30 நான் என்னையே பாராட்டிக்கொள்ள வேண்டுமானால் என் பலவீனத்தை வெளிப்படுத்தும் காரியங்களைக் குறித்தே பெருமை பாராட்டிக்கொள்ள வேண்டும். 31 நான் பொய் சொல்வதில்லையென்று தேவனுக்குத் தெரியும். அவரே தேவன். அவரே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதா. அவர் எக்காலத்திலும் பாராட்டுக்கு உரியவர். 32 நான் தமஸ்குவில் இருந்தபோது, அரேத்தா அரசனுடைய படைத் தளபதி என்னைக் கைது செய்ய விரும்பினான். அதற்காக நகரைச் சுற்றிக் காவலர்களை நிறுத்தினான். 33 ஆனால் சில நண்பர்கள் என்னைக் கூடைக்குள் வைத்து சுவரில் ஒரு சிறிய துளை செய்து அதன் வழியே என்னை இறக்கிவிட்டனர். எனவே நான் அந்த படைத் தளபதியிடமிருந்து தப்பினேன்.
அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம்
25 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, அம்மோன் ஜனங்களை நோக்கி அவர்களுக்கு எதிராக எனக்காகப் பேசு. 3 அம்மோன் ஜனங்களிடம் சொல்: ‘எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: எனது பரிசுத்தமான இடங்கள் அழிக்கப்பட்டபோது நீங்கள் மகிழ்ச்சி அடைந்தீர்கள். இஸ்ரவேல் தேசம் பாழாக்கப்படுகிறபோது அதற்கு விரோதமாக இருந்தீர்கள். யூதாவின் குடும்பத்தினர் சிறைபிடிக்கப்பட்டபோது, அவர்களுக்கு விரோதமாக இருந்தீர்கள். 4 எனவே கிழக்கே உள்ள ஜனங்களிடம் உன்னைக் கொடுப்பேன். அவர்கள் உன் தேசத்தை எடுத்துக்கொள்வார்கள். அவர்களது படைவீரர்கள் உனது நாட்டில் தம் கூடாரங்களை அமைப்பார்கள். அவர்கள் உங்களிடையே வாழ்வார்கள். அவர்கள் உங்கள் பழங்களைத் தின்று உங்கள் பாலைக் குடிப்பார்கள்.
5 “‘நான் ரப்பா நகரத்தை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும் நாட்டை ஆட்டுக் கிடையாகவும் ஆக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிந்துகொள்வாய். 6 கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்: இஸ்ரவேல் அழிக்கப்பட்டதற்காக நீ மகிழ்ச்சி அடைந்தாய். நீ உன் கைகளைத் தட்டி கால்களால் மிதித்தாய். நீ இஸ்ரவேல் தேசத்தை கேலி செய்து அவமதித்தாய். 7 எனவே, நான் உன்னைத் தண்டிப்பேன். நீ, போரில் வீரர்கள் கைப்பற்றத்தக்க விலை மதிப்புள்ள பொருட்களாவாய். நீ உனது நிலத்தை இழப்பாய். தொலைதூர நாடுகளில் நீ மரித்துப்போவாய். நான் உனது நாட்டை அழிப்பேன்! பிறகு நானே கர்த்தர் என்பதை நீ அறிவாய்.’”
மோவாப் மற்றும் சேயீருக்கு எதிரான தீர்க்கதரிசனம்
8 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “மோவாபும் சேயீரும் (ஏதோம்) சொல்கின்றன, ‘யூத வம்சமானது மற்ற நாடுகளைப் போன்றது.’ 9 மோவாபின் தோள்களை நான் வெட்டுவேன். அதன் எல்லையோரங்களில் உள்ள நகரங்களை நான் எடுத்துக்கொள்வேன். தேசத்தின் மகிமையையும் பெத்யெசிமோத்தையும், பாகால் மெயோனையும் கீரியாத்தாயீமையும் எடுத்துக்கொள்வேன். 10 பிறகு நான் இந்நகரங்களை கிழக்கே உள்ள ஜனங்களுக்குக் கொடுப்பேன். அவர்கள் உன் நாட்டைப் பெற்றுக்கொள்வார்கள். கிழக்கே உள்ள ஜனங்கள் அம்மோன் ஜனங்களை அழிக்கும்படி நான் அனுமதிப்பேன். அம்மோன் என்று ஒரு தேசம் இருந்ததை எல்லோரும் மறந்துவிடுவார்கள். 11 எனவே, நான் மோவாபைத் தண்டிப்பேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
ஏதோமிற்கு விரோதமான தீர்க்கதரிசனம்
12 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “ஏதோம் ஜனங்கள் யூதா வம்சத்தாருக்கு விரோதமாகத் திரும்பினார்கள். அவர்கள் பழி வாங்கினார்கள். ஏதோம் ஜனங்கள் குற்றவாளிகள்.” 13 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் ஏதோமைத் தண்டிப்பேன். நான் ஏதோமிலுள்ள மனிதர்களையும் விலங்குகளையும் அழிப்பேன். நான் தேமான் முதல் தேதான் வரையுள்ள ஏதோம் நாடு முழுவதையும் அழிப்பேன். ஏதோமியர்கள் போரில் கொல்லப்படுவார்கள். 14 நான் இஸ்ரவேலர்களாகிய என் ஜனங்களைப் பயன்படுத்தி, ஏதோமைப் பழிவாங்குவேன். இவ்வாறு இஸ்ரவேல் ஜனங்கள் ஏதோமிற்கு விரோதமாக என் கோபத்தைக் காட்டுவார்கள், பிறகு ஏதோம் ஜனங்கள், அவர்களை நான் தண்டித்ததை அறிவார்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.
பெலிஸ்தியர்களுக்கு விரோதமான தீர்க்கதரிசனம்
15 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “பெலிஸ்தியர்கள் பழிவாங்க முயன்றனர். அவர்கள் மிகவும் கொடூரமானவர்கள். அவர்கள் தமக்குள் கோபத்தை நீண்ட காலமாக எரியவிட்டனர்!” 16 எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார்: “நான் பெலிஸ்தியர்களைத் தண்டிப்பேன், ஆம், நான் கிரேத்தாவிலிருந்து வந்த அந்த ஜனங்களை அழிப்பேன். கடற்கரையோரமாக வாழ்கிற அனைவரையும் நான் அழிப்பேன். 17 நான் அந்த ஜனங்களைத் தண்டிப்பேன். நான் பழிவாங்குவேன். எனது கோபம் அவர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்கும்படி நான் செய்வேன். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்!”
புத்தகம் 3
(சங்கீதம் 73-89)
ஆசாபின் துதிப்பாடல்
73 தேவன் உண்மையாகவே இஸ்ரவேலுக்கு நல்லவர்.
பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
2 நான் தவறி வீழ்ந்து,
பாவம் செய்யத் தொடங்கும் நிலையில் இருந்தேன்.
3 கெட்ட ஜனங்கள் வெற்றியடைந்ததைக் கண்டேன்.
பெருமைபாராட்டும் அந்த ஜனங்களைக் கண்டு பொறாமைகொள்ள ஆரம்பித்தேன்.
4 அந்த ஜனங்கள் ஆரோக்கியமுள்ளவர்கள்.
வாழ்வதற்கு அவர்கள் போராட வேண்டாம்.
5 எங்களைப்போல அந்தப் பெருமைக்காரர்கள் தொல்லைப்படுவதில்லை.
பிறரைப்போன்று அவர்களுக்குத் தொல்லைகள் இல்லை.
6 எனவே அவர்கள் பெருமைமிக்கவர்களாய், வெறுக்கத்தக்கவர்களாய் உள்ளனர்.
அவர்கள் அணியும் அணிகலன்களையும் அழகிய ஆடைகளையும் போன்று அது விரைவில் கண்டுகொள்ளத்தக்கது.
7 தாங்கள் பார்க்கும் எதையும் அந்த ஜனங்கள் விருப்பினால் போய் தங்களுக்கென அதை எடுத்துக்கொள்கின்றனர்.
தாங்கள் செய்ய நினைப்பவற்றை அவர்கள் செய்து முடிக்கிறார்கள்.
8 பிறரைப்பற்றிக் கொடிய, தீய காரியங்களை அவர்கள் கூறுகிறார்கள்.
அவர்கள் பெருமையும் பிடிவாதமும் உடையவர்கள்.
அவர்கள் எப்போதும் மற்றவர்களிடமிருந்து அனுகூலம் பெறும் வழிகளைத் திட்டமிடுகிறார்கள்.
9 தங்களைத் தெய்வங்களென்று அப்பெருமைக்காரர்கள் நினைத்துக்கொள்கிறார்கள்.
பூமியின் அரசர்களென்று அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கிறார்கள்.
10 எனவே தேவஜனங்கள் கூட அவர்களிடம் சென்று
அவர்கள் கூறுபவற்றைச் செய்கிறார்கள்.
11 அத்தீயோர், “நாங்கள் செய்து கொண்டிருப்பவற்றை தேவன் அறியார்!
உன்னதமான தேவன் அறியார்! என்கிறார்கள்.
12 அப்பெருமைக்காரர்கள் துர்க்குணம் மிக்கவர்கள்.
ஆனால் அவர்கள் செல்வந்தராகவும், நாளுக்கு நாள் செல்வத்தை பெறுவோராகவும் காணப்படுகிறார்கள்.
13 எனவே நான் ஏன் என் இருதயத்தைத் தூயதாக்க வேண்டும்?
ஏன் நான் எனது கைகளைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும்?
14 தேவனே, நான் நாள் முழுவதும் துன்புறுகிறேன்,
ஒவ்வொரு நாள் காலையிலும் நீர் என்னைத் தண்டிக்கிறீர்.
15 தேவனே, நான் இவற்றைக் குறித்துப் பிறரிடம் பேச விரும்பினேன்.
அப்படிச் செய்தால் உமது ஜனங்களுக்கு நான் துரோகம் செய்தவனாவேன்.
16-17 இக்காரியங்களைப் புரிந்துகொள்ள நான் மிகவும் முயன்றேன்.
ஆனால் நான் உமது ஆலயத்திற்குச் செல்லும்வரை இவையனைத்தும் எனக்கு மிகவும்கடினமாயிருந்தன.
நான் தேவனுடைய ஆலயத்திற்குப் போனேன்,
அப்போது அதை நான் உணர்ந்துக்கொண்டேன்.
18 தேவனே, நீர் அந்த ஜனங்களை ஆபத்தான நிலையில் வைத்திருக்கிறீர்.
விழுந்து அழிவதென்பது அவர்களுக்கு மிகவும் சுலபமானது.
19 தொல்லைகள் திடீரென நேரும், அப்போது அப்பெருமைக்காரர்கள் அழிந்துவிடுவார்கள்.
கொடியக் காரியங்கள் அவர்களுக்கு நேரிடும், அப்போது அவர்கள் அழிந்துப்போவார்கள்.
20 கர்த்தாவே, நாங்கள் விழித்தெழும்போது மறந்துவிடும் கனவைப்போல அந்த ஜனங்கள் இருப்பார்கள்.
எங்கள் கனவில் வரும் பெரும் விலங்குகளைப்போல் அந்த ஜனங்கள் மறைந்துபோகும்படி நீர் செய்வீர்.
21-22 நான் மூடனாக இருந்தேன்.
நான் செல்வத்தைக் குறித்தும் கெட்ட ஜனங்களைக் குறித்தும் எண்ணிக் கலங்கினேன்.
தேவனே, நான் மனங்கலங்கி, உம்மிடம் கோபங்கொண்டேன்.
மூடத்தனமும் அறியாமையுமுள்ள மிருகத்தைப் போல் நடந்து கொண்டேன்.
23 எனக்குத் தேவையானவை எல்லாம் என்னிடம் உள்ளன.
நான் எப்போதும் உம்மோடிருக்கிறேன்.
தேவனே, நீர் என் கையைப் பிடித்துக்கொண்டிருக்கிறீர்.
24 தேவனே, நீர் என்னை வழிநடத்தி, எனக்கு நல்ல போதனையைத் தருவீர்.
பின்பு என்னை மகிமைக்கு நேராக வழி நடத்துவீர்.
25 தேவனே, பரலோகத்தில் நீர் எனக்காக இருக்கிறீர்.
நான் உம்மோடிருக்கையில் இப்பூமியில் எனக்கு என்ன வேண்டும்?
26 என் மனமும் சரீரமும் அழிந்துப்போகலாம்,
ஆனால் நான் நேசிக்கும் கன்மலையாகிய தேவன் எனக்காக இருக்கிறீர்.
என்றென்றும் எனக்காக தேவன் இருக்கிறீர்.
27 தேவனே, உம்மை விட்டு விலகும் ஜனங்கள் அழிந்துபோவார்கள்.
உமக்கு உண்மையாயில்லாத ஜனங்களை நீர் அழித்துவிடுவீர்.
28 என்னைப் பொருத்தமட்டும், நான் தேவனிடம் வந்திருக்கிறேன், அதுவே எனக்கு நலமானது.
என் ஆண்டவராகிய கர்த்தரை என் பாதுகாப்பிடமாக வைத்திருக்கிறேன்.
தேவனே, நீர் செய்துள்ள எல்லாவற்றையும் குறித்துக் கூற நான் வந்துள்ளேன்.
2008 by World Bible Translation Center