M’Cheyne Bible Reading Plan
தாவீதைக் குறித்த அகித்தோப்பேலின் அறிவுரை
17 அகிதோப்பேல் மேலும் அப்சலோமிடம், “நான் இப்போது 12,000 ஆட்களைத் தேர்ந்தெடுப்பேன். இன்றிரவு தாவீதை நான் துரத்துவேன். 2 அவன் தளர்ந்து சோர்வுற்றிருக்கும்போது அவனைப் பிடிப்பேன். நான் அவனைக் கலக்கமடையச் செய்வேன். அவனது ஆட்கள் ஓடிவிடுவார்கள். ஆனால் தாவீது அரசனை மட்டும் கொல்வேன். 3 பின்பு ஜனங்களையெல்லாம் உங்களிடம் அழைத்து வருவேன். தாவீது மரித்துவிட்டால், எல்லா ஜனங்களும் சமாதானத்தோடு திரும்புவார்கள்” என்றான்.
4 இத்திட்டம் அப்சலோமுக்கும் இஸ்ரவேலின் தலைவர்களுக்கும் நல்லதெனப்பட்டது. 5 ஆனால் அப்சலோம், “அற்கியனாகிய ஊசாயைக் கூப்பிடுங்கள். அவன் கூறுவதைக் கேட்கவேண்டும்” என்றான்.
அகித்தோப்பேலின் அறிவுரையை ஊசாய் பாழாக்குகிறான்
6 ஊசாய் அப்சலோமிடம் வந்தான். அப்சலோம் ஊசாயிடம், “இதுதான் அகித்தோப்பேல் வகுத்தளித்த திட்டம். நாம் இதைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையெனில் சொல்லும்” என்றான்.
7 ஊசாய் அப்சலோமிடம், “இம்முறை அகிப்தோப்பேலின் அறிவுரை சரியாக இல்லை” என்றான். 8 மேலும் ஊசாய், “உன் தந்தையும் அவரது ஆட்களும் வலியவர்கள் என்பது உனக்குத் தெரியும், தன் குட்டிகளைக் களவு கொடுத்த கரடிகள் போல் அவர்கள் கோபங்கொண்டிருக்கிறார்கள். உன் தந்தை பயிற்சிப் பெற்ற வீரர். அவர் ஜனங்களோடு இரவில் தங்கமாட்டார். 9 அவர் ஒருவேளை குகையிலோ, வேறெங்கோ ஒளிந்திருக்க வேண்டும். அவர் முதலில் உன் ஆட்களைத் தாக்கினால், ஜனங்கள் அச்செய்தியை அறிவார்கள். அவர்கள், ‘அப்சலோமின் ஆட்கள் தோற்கிறார்கள்’ என்று நினைப்பார்கள். 10 பின்பு சிங்கம் போல் தைரியம்கொண்ட ஆட்களும் பயப்படுவார்கள். ஏனென்றால் எல்லா இஸ்ரவேலரும் உங்கள் தந்தை சிறந்த வீரர் என்றும், அவரது ஆட்கள் தைரியமானவர்கள் என்றும் அறிவார்கள்.
11 “இதுவே நான் சொல்ல விரும்புவதாகும்: நீ தாண் முதல் பெயெர்செபா மட்டும் உள்ள இஸ்ரவேலரை ஒன்று திரட்ட வேண்டும். அப்போது கடலின் மணலைப் போல் பலர் இருப்பார்கள். பின்பு நீ போருக்குச் செல்லவேண்டும். 12 நாம் தாவீதை அவர் ஒளிந்திருக்குமிடத்திலிருந்து பிடிக்கலாம். பனித்துளி நிலத்தில் விழுவதுபோல், நாம் தாவீதின் மீது விழுந்து பிடிக்கலாம். தாவீதையும் அவரது ஆட்களையும் கொல்லலாம். யாரும் உயிரோடு இருக்கமாட்டார்கள். 13 ஒருவேளை நகரத்திற்குள் தாவீது தப்பிச் சென்றால் எல்லா இஸ்ரவேலரும் அங்குக் கயிறுகளைக் கொண்டுவருவர். நகரத்தின் மதில்களை தகர்ப்போம். நகரம் பள்ளத்தாக்காக மாறும்படி செய்வர். ஒரு கல்கூட முன்பு போல் நகரத்தில் இராது” என்றான்.
14 அப்சலோமும் இஸ்ரவேலர் எல்லோரும், “அற்கியனாகிய ஊசாயின் அறிவுரை அகித்தோப்பேலுடையதைக் காட்டிலும் சிறந்தது” என்றனர். இது கர்த்தருடைய திட்டமானதால் அவர்கள் அவ்வாறு கூறினார்கள். அகித்தோப்பேலின் நல்ல அறிவுரை பயனற்றுப்போகும்படி கர்த்தர் திட்டமிட்டார். அப்சலோமை கர்த்தர் இவ்வாறு தண்டிப்பார்.
தாவீதுக்கு ஊசாய் ஒரு எச்சரிக்கை அனுப்புகிறான்
15 இவ்விஷயங்களையெல்லாம் ஆசாரியர்களாகிய சாதோக்குக்கும் அபியத்தாருக்கும் ஊசாய் கூறினான். அகித்தோப்பேல் அப்சலோமுக்கும் இஸ்ரவேல் தலைவர்களுக்கும் கூறிய காரியங்களை அவன் அவர்களுக்குத் தெரிவித்தான். சாதோக்குக்கும், அபியத்தாருக்கும் ஊசாய் தான் கூறிய ஆலோசனை பற்றிய செய்தியையும் தெரிவித்தான். ஊசாய், 16 “விரையுங்கள்! தாவீதுக்குச் செய்தி அனுப்புங்கள். இன்றிரவில் ஜனங்கள் பாலைவனத்திற்குக் கடந்து செல்லுமிடங்களில் தங்கவேண்டாமெனக் கூறுங்கள். ஆனால் உடனே யோர்தான் நதியைக் கடக்க வேண்டும். நதியைக் கடந்துவிட்டால் அரசனும் அவனுடைய ஜனங்களும் பிடிபடமாட்டார்கள்” என்று கூறினான்.
17 ஆசாரியர்களின் மகன்களாகிய யோனத்தானும் அகிமாசும், இன்றோகேல் என்னுமிடத்தில் காத்திருந்தார்கள். ஊருக்குள் போவதைப் பிறர் காணவேண்டாமென விரும்பினார்கள், எனவே ஒரு வேலைக்காரப் பெண்மணி அவர்களிடம் வந்தாள். அவள் அவர்களுக்குச் செய்தியைத் தெரிவித்தாள். பின்பு யோனத்தானும் அகிமாசும் அரசன் தாவீதிடம் சென்று இவ்விஷயங்களைப்பற்றித் தெரிவித்தனர்.
18 ஆனால் ஒரு சிறுவன் யோனத்தானையும் அகிமாசையும் பார்த்துவிட்டான். அவன் அதைச் சொல்வதற்கு அப்சலோமிடம் ஓடினான். யோனத்தானும் அகிமாசும் விரைவாக ஓடிவிட்டார்கள். அவர்கள் பகூரிமில் உள்ள ஒரு மனிதனின் வீட்டை அடைந்தனர். அவன் முற்றத்தில் ஒரு கிணறு இருந்தது. யோனத்தானும் அகிமாசும் கிணற்றினுள் இறங்கினார்கள். 19 அம்மனிதனின் மனைவி ஒரு விரிப்பை எடுத்துக் கிணற்றின் மீது விரித்தாள். பின்பு அவள் அதன் மீது தானியங்களைப் பரப்பினாள். தானியத்தைக் குவித்து வைத்திருந்தாற்போல் அக்கிணறு காணப்பட்டது. யாரும் யோனத்தனும் அகிமாசும் அங்கு ஒளிந்திருப்பதைக் கண்டுபிடிக்க முடியாது. 20 அப்சலோமின் பணியாட்கள் வீட்டிலிருந்த பெண்ணிடம் வந்தார்கள். அவர்கள், “யோனத்தானும் அகிமாசும் எங்கே?” என்று கேட்டார்கள்.
அப்பெண் அப்சலோமின் வேலையாட்களிடம், அவர்கள் ஏற்கெனவே நதியைக் கடந்துவிட்டார்கள் என்று கூறினாள்.
அப்சலோமின் வேலைக்காரர்கள் பின்பு யோனத்தானையும் அகிமாசையும் தேடினர், ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அப்சலோமின் வேலைக்காரர்கள் எருசலேமுக்குத் திரும்பினார்கள்.
21 அப்சலோமின் வேலைக்காரர்கள் போன பிறகு, யோனத்தானும் அகிமாசும் கிணற்றிற்கு வெளியே வந்தார்கள். அவர்கள் போய் தாவீது அரசனிடம் சொன்னார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “விரைந்து நதியைக் கடந்து போய்விடுங்கள். அகித்தோப்பேல் உங்களுக்கு எதிராக இந்த காரியங்களைத் திட்டமிட்டுள்ளான்” என்றார்கள்.
22 அப்போது தாவீதும் அவனோடிருந்த எல்லா ஜனங்களும் யோர்தான் நதியைக் கடந்தார்கள். சூரியன் தோன்றும் முன்னர் தாவீதின் ஜனங்கள் யோர்தான் நதியைக் கடந்துவிட்டிருந்தனர்.
அகித்தோப்பேல் தற்கொலை செய்துக்கொள்கிறான்
23 இஸ்ரவேலர் தனது அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை என்று அகித்தோப்பேல் கண்டான். அகித்தோப்பேல் கழுதையின் மேல் சுமைகளை ஏற்றிக்கொண்டான். அவன் நகரத்திலிருந்த தன் வீட்டிற்குச் சென்றான். அவன் தன் குடும்பக் காரியங்களை ஒழுங்குப்படுத்தி, தூக்கு போட்டுக்கொண்டான். அகித்தோப்பேல் மரித்தபிறகு, ஜனங்கள் அவனை அவனது தந்தையின் கல்லறைக்குள் புதைத்தார்கள்.
அப்சலோம் யோர்தான் நதியைக் கடக்கிறான்
24 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார்.
அப்சலோமும் இஸ்ரவேலரும் யோர்தான் நதியைக் கடந்தனர். 25 அப்சலோம் அமாசாவைப் படைக்குத் தலைவனாக்கினான். அமாசா யோவாபின் பதவியை வகித்தான். அமாசா இஸ்மவேலனாகிய எத்திராவின் மகன். செருயாவின் சகோதரியாகிய நாகாசின் மகளாகிய அபிகாயில் அமாசாவின் தாய். (செருயா யோவாபின் தாய்)
26 கீலேயாத் தேசத்தில் அப்சலோமும் இஸ்ரவேலரும் பாளயமிறங்கினார்கள்.
சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர்
27 தாவீது மக்னாயீமை வந்தடைந்தார். அந்த இடத்தில் சோபி, மாகீர், பர்சிலா ஆகியோர் இருந்தனர். (அம்மோனியரின் ஊராகிய ரப்பாவைச் சார்ந்தவன் சோபி நாகாசின் மகன் லோதேபாரிலிருந்து அம்மியேலின் மகனாகிய மாகீர் வந்தான். கீலேயாத்திலுள்ள ரோகிலிமிலிருந்து வந்தவன் பர்சிலா) 28-29 அவர்கள், “பாலைவனத்தில் ஜனங்கள் சோர்வோடும், பசியோடும், தாகத்தோடும் இருக்கிறார்கள்” என்றார்கள். தாவீதும் அவரின் ஜனங்களும் உண்பதற்காகவும் குடிப்பதற்காகவும் அவர்கள் பல பொருட்களைக் கொண்டு வந்தார்கள். படுக்கைகள், குவளைகள், மண்பாண்டங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொண்டு வந்தனர். அவர்கள் கோதுமை, பார்லி, மாவு, வறுத்த தானியங்கள், பெரும்பயிறு, சிறும் பயிறு, உலர்ந்த கொட்டைகள், தேன், வெண்ணெய், ஆடுகள், பால்கட்டிகள் ஆகியவற்றைக் கொண்டு வந்தார்கள்.
பவுலும்-தேவசபையும்
10 நான் பவுல். உங்களை வேண்டிக்கொள்கிறேன். கிறிஸ்துவின் கருணையோடும், சாந்தத்தோடும் கேட்டுக்கொள்கிறேன். நான் உங்களோடு இருக்கும்போது தாழ்மையுடையவனாகவும் உங்களைவிட்டுத் தூரமாயிருக்கும்போது உங்கள் மேல் கண்டிப்புடனும் இருப்பதாகச் சிலர் என்னிடம் கூறுகிறார்கள். 2 நாங்கள் உலக நடைமுறைப்படி வாழ்ந்துகொண்டிருப்பதாகச் சிலர் நினைக்கின்றனர்.அங்கு வரும்போது அவர்களிடம் நான் தைரியமாக இருக்கவேண்டும். நான் அங்கு வரும்போது, உங்களிடம் கண்டிப்பாய் அந்த தைரியத்தைப் பயன்படுத்தாதபடிக்கு இருக்க நான் பிரார்த்திக்கிறேன். 3 நாம் மனிதர்கள். ஆனால் உலகம் போரிடும் முறையைப் போலவே போரிடுவதில்லை. 4 உலகத்தார் பயன்படுத்தும் ஆயுதங்களிருந்து முற்றிலும் மாறான வேறுவகையான ஆயுதங்களைப் பயன்படுத்துகிறோம். நமது ஆயுதங்களுக்கான சக்தியைத் தேவனிடமிருந்து பெறுகிறோம். இவை பகைவர்களின் வலிமையான இடங்களை அழித்துவிடும். நாம் மக்களின் விவாதங்களை அழிக்கிறோம். 5 தேவனுடைய ஞானத்திற்கு எதிராகத் தோன்றும் பெருமிதங்களையெல்லாம் நாம் அழித்து வருகிறோம். அவர்களின் சிந்தனைகளைக் கவர்ந்து கிறிஸ்துவுக்கு அடிபணியுமாறு செய்கிறோம். 6 அடிபணியாத எவரையும் தண்டிக்கத் தயாராக இருக்கிறோம். முதலில் நீங்கள் முழுமையாக அடிபணியுமாறு விரும்புகிறோம்.
7 உங்களுக்கு முன்னாலுள்ள உண்மைகளை நீங்கள் கவனித்துகொள்ள வேண்டும். ஒருவன் தன்னைக் கிறிஸ்துவுக்கு உரியவன் என்று நம்புவானேயானால் பிறரைப் போலவே நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 8 கர்த்தர் எங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைப் பற்றி நாங்கள் இன்னும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம் என்பது உண்மை. ஆனால் உங்களைத் தூக்கியெறிய இந்த அதிகாரத்தை எங்களுக்குக் கொடுக்கவில்லை. உங்களை பலப்படுத்தவே கொடுத்திருக்கிறார். அதனால் அதுபற்றி பெருமைப்பட்டுக்கொள்ள நான் வெட்கப்படவில்லை. 9 இந்த நிருபத்தின் மூலம் உங்களைப் பயமுறுத்துகிறவனாய் நான் தோன்றாதபடிக்கு இதைச் சொல்லுகிறேன். 10 ஆனால் சிலரோ, “பவுலின் நிருபங்கள் பலமுள்ளவை; மிகவும் முக்கியமானவை. ஆனால் அவன் எங்களோடு இருக்கும்போது பலவீனனாக இருக்கிறான். அவன் பேச்சு எந்தப் பயனையும் விளைவிப்பதில்லை” என்று சொல்கிறார்கள். 11 “நாங்கள் இப்பொழுது அங்கே உங்களோடு இல்லை. அதனால் நிருபத்தின் மூலம் பேசுகிறோம். ஆனால் நாங்கள் உங்களோடு இருக்கும்போதும் நிருபத்தில் உள்ளது போலவே செயல்படும் அதிகாரத்துடன் இருப்போம்” என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.
12 தம்மைத் தாமே முக்கியமானவர்கள் என்று பெருமை பேசிக்கொள்ளும் குழுவுடன் சேர நாங்கள் விரும்பவில்லை. எங்களை அவர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க விரும்பமாட்டோம். அவர்களைப் போன்று ஆகவும் விரும்பமாட்டோம். அவர்கள் தங்களைக்கொண்டே தங்களை அளக்கிறார்கள். தங்களைக்கொண்டே தங்களை ஒப்பிடுகின்றனர். அவர்கள் அறிவுள்ளவர்கள் அல்ல.
13 எங்களுக்குத் தரப்பட்ட வேலைகளின் அளவை மீறி எப்போதும் பெருமைபேசிக்கொள்ளமாட்டோம். தேவன் எங்களுக்குக் கொடுத்த பணியின் அளவிற்கே பெருமை கொள்ளுகிறோம். உங்கள் நடுவில் இதுவும் எங்கள் வேலைகளுள் ஒன்றாக இருக்கிறது. 14 அளவுமீறி பெருமை பேசித் திரிபவர்கள் அல்ல நாங்கள். நாங்கள் உங்களிடம் வராமல் இருந்திருந்தால் எங்களைப் பற்றி அளவுக்கு மீறி பெருமை பேசி இருப்போம். ஆனால் நாங்கள் கிறிஸ்துவின் நற்செய்தியோடு உங்களிடம் வந்தோம். 15 மற்றவர்களுடைய வேலைக்குட்பட்டு எங்கள் அளவைக் கடந்து பெருமை பாராட்டமாட்டோம். உங்கள் விசுவாசம் வளர்ந்துகொண்டே இருக்கும் என்றும் உங்களிடையே எங்கள் வேலையானது மென்மேலும் வளர்ச்சியடைய நீங்கள் உதவுவீர்கள் என்றும் நம்புகிறோம். 16 உங்கள் இருப்பிடத்துக்கு அப்பாலும் நாங்கள் நற்செய்தியைப் பரப்ப விரும்புகிறோம். மற்றவர்களால் ஏற்கெனவே செய்து முடிக்கப்பட்டதை எங்களால் செய்யப்பட்டதாகக் கூறி பெருமைப்படமாட்டோம். 17 ஆனால், “பெருமை பாராட்டுகிற ஒருவன் கர்த்தரில் பெருமை பாராட்டுவானாக.” [a] 18 தன்னைத் தானே நல்லவன் என்று கூறிக்கொள்கிறவன் நல்லவன் அல்ல. கர்த்தரால் நல்லவன் என்று ஏற்றுக்கொள்ளப்படுகிறவனே நல்லவன்.
பானையும் இறைச்சியும்
24 எனது கர்த்தராகிய ஆண்டவருடைய வார்த்தை என்னிடம் வந்தது. இது சிறைப்பட்ட ஒன்பதாம் ஆண்டின் பத்தாம் மாதத்தின் (டிசம்பர்) பத்தாம் நாளில் நடந்தது, அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, இந்த நாளின் தேதியையும் இந்தக் குறிப்பையும் நீ எழுதிவை. ‘இந்த நாளில் பாபிலோன் அரசனது படை எருசலேமை முற்றுகையிட்டது.’ 3 இந்தக் கதையைக் கீழ்ப்படிய மறுக்கும் குடும்பத்தாரிடம் (இஸ்ரவேல்) கூறு. அவர்களிடம் இவற்றைக் கூறு, ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறுகிறார்:
“‘பாத்திரத்தை அடுப்பிலே வை,
பாத்திரத்தை வைத்து அதில் தண்ணீரை ஊற்று.
4 அதில் இறைச்சித் துண்டுகளைப் போடு.
தொடை மற்றும் தோள்களில் உள்ள நல்ல கறிகளைப் போடு,
நல்ல எலும்புகளாலும் பாத்திரத்தை நிரப்பு.
5 மந்தையில் நல்ல ஆடுகளை பயன்படுத்து,
பாத்திரத்திற்குக் கீழே விறகுகளை அடுக்கு,
இறைச்சித் துண்டுகளைக் கொதிக்க வை.
எலும்புகளும் வேகும்வரை பொங்கக் காய்ச்சு!
6 “‘எனவே எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
இது எருசலேமிற்குக் கேடாகும்.
கொலைக்காரர்களின் நகரத்திற்கு இது கேடாகும்.
எருசலேம் துரு ஏறிய ஒரு பாத்திரத்தைப் போன்றது.
அத்துரு நீக்க முடியாதது!
அப்பாத்திரம் சுத்தமானதாக இல்லை,
எனவே நீ அப்பாத்திரத்திலுள்ள எல்லாக் கறித் துண்டுகளையும் வெளியே எடுத்துப் போடவேண்டும்!
அக்கெட்டுப்போன இறைச்சியில் ஆசாரியர்கள் எதையும் தேர்ந்தெடுக்க, தின்ன அனுமதிக்கவேண்டாம்.
7 எருசலேம் துருவோடுள்ள பாத்திரத்தைப் போன்றது.
ஏனென்றால் கொலைகளினால் ஏற்பட்ட இரத்தம் இன்னும் உள்ளது!
அவள் வெறும் பாறையில் இரத்தத்தைப் போட்டாள்!
அவள் இரத்தத்தை நிலத்தில் ஊற்றி அதைப் புழுதியினால் மூடவில்லை.
8 நான் அவள் இரத்தத்தை வெறும் பாறையில் வைத்தேன்.
எனவே இது மறைக்கப்படாது.
நான் இதனைச் செய்தேன், எனவே ஜனங்கள் கோபப்படுவார்கள்,
அப்பாவி ஜனங்களைக் கொன்றதற்காக அவளைத் தண்டிப்பார்கள்.’”
9 “‘எனவே, எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்:
கொலைக்காரர்கள் நிறைந்த இந்நகரத்துக்கு இது கேடாகும்!
நான் நெருப்புக்காக நிறைய விறகுகளை அடுக்குவேன்.
10 பாத்திரத்திற்குக் கீழே நிறைய விறகுகளை அடுக்கு.
நெருப்பு வை,
இறைச்சியை நன்றாக வேகவை!
மசாலாவைக் கலந்து வை.
எலும்புகளையும் எரித்துவிடு!
11 பிறகு பாத்திரத்தைக் காலியாக்கி நெருப்பின் மேல் வை.
அதன் கறைகள் உருகத் தொடங்கும் வரை சூடாக்கு.
அதன் கறைகள் உருகிவிடும்,
துருவும் அழிக்கப்படும்.
12 “‘எருசலேம், அழுக்கினை போக்க
கடுமையாக வேலை செய்யவேண்டும்.
ஆனாலும் “துரு” போகாது!
நெருப்பு (தண்டனை) மட்டுமே துருவை அகற்றும்!
13 “‘நீ எனக்கு எதிராகப் பாவம் செய்தாய்.
அதனால் பாவக்கறையோடு உள்ளாய்.
நான் உன்னைக் கழுவிச் சுத்தமாக்க விரும்பினேன்.
ஆனால் அழுக்கு வெளியேறவில்லை.
எனது கோபநெருப்பு தணியும்வரை
நான் மீண்டும் உன்னைக் கழுவ முயற்சி செய்யமாட்டேன்!
14 “‘நானே கர்த்தர், உனது தண்டனை வரும் என்று நான் சொன்னேன். நான் அது வரும்படிச் செய்வேன். நான் தண்டனையை நிறுத்தி வைப்பதில்லை. நான் உனக்காக வருத்தப்படுவதில்லை. நீ செய்த பாவங்களுக்காக நான் உன்னைத் தண்டிப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.
எசேக்கியேல் மனைவியின் மரணம்
15 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 16 “மனுபுத்திரனே, நீ உன் மனைவியைப் அதிகமாய் நேசிக்கிறாய். ஆனால் நான் அவளை உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப் போகிறேன். உன் மனைவி திடீரென்று மரிப்பாள். ஆனால் உனது துக்கத்தை நீ காட்டக்கூடாது. நீ உரக்க அழவேண்டாம். நீ அழுவாய். உன் கண்ணீர் கீழே விழும். 17 ஆனால் உனது துயரத்தை அமைதியாக வெளிப்படுத்தவேண்டும். உனது மரித்த மனைவிக்காக நீ உரக்க அழாதே. நீ வழக்கமாக அணிகிற ஆடையையே அணியவேண்டும். உனது தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணியவேண்டும். உனது துயரத்தைக் காட்ட மீசையை மறைக்க வேண்டாம். உறவினர் மரித்துப்போனால் வழக்கமாக மற்றவர்கள் உண்ணும் உணவை நீ உண்ண வேண்டாம்.”
18 மறுநாள் காலையில் ஜனங்களிடம் தேவன் சொன்னதைச் சொன்னேன். அன்று மாலையில் எனது மனைவி மரித்தாள். மறுநாள் காலையில் தேவனுடைய கட்டளைபடி நான் செய்தேன்: 19 பிறகு ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள்; “ஏன் இவ்வாறு செய்கிறீர்? இதன் பொருள் என்ன?”
20 பிறகு நான் அவர்களிடம் சொன்னேன்: “கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் 21 இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் சொல்லச் சொன்னார். எனது கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார்: ‘பார், நான் எனது பரிசுத்தமான இடத்தை அழிப்பேன். அந்த இடத்தைப்பற்றி பெருமைப்படுகிறீர்கள். அதைப்பற்றிப் புகழ்ந்து பாடுகிறீர்கள். அந்த இடத்தைப் பார்க்க ஆசைப்படுகிறீர்கள். நீங்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறீர்கள். ஆனால் நான் அந்த இடத்தை அழிப்பேன். நீங்கள் விட்டுச்செல்லும் உங்கள் பிள்ளைகளைப் போரில் கொல்வேன். 22 ஆனால், நான் என் மனைவிக்குச் செய்ததையே நீங்கள் செய்வீர்கள். உங்கள் துக்கத்தைக் காட்ட மீசையை மறைக்கமாட்டீர்கள். ஒருவன் மரித்ததற்காக வழக்கமாக உண்ணும் உணவை நீங்கள் உண்ணமாட்டீர்கள். 23 நீங்கள் உங்கள் தலைப் பாகையையும் பாதரட்சைகளையும் அணிந்து கொள்வீர்கள். நீங்கள் உங்கள் துக்கத்தைக் காட்டமாட்டீர்கள். நீங்கள் அழமாட்டீர்கள். ஆனால் உங்களது பாவங்களால் நீங்கள் வீணாக்கப்படுவீர்கள். நீங்கள் உங்களது துயர ஒலிகளை ஒருவருக்கொருவர் அமைதியாக வெளிப்படுத்திக்கொள்வீர்கள், 24 எனவே எசேக்கியேல் உங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு, அவன் செய்ததை எல்லாம் நீங்கள் செய்வீர்கள். அந்தத் தண்டனைக் காலம் வரும். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.’”
25-26 “மனுபுத்திரனே, நான் ஜனங்களிடமிருந்து அப்பாதுகாப்பான இடத்தை (எருசலேம்) எடுத்துக்கொள்வேன். அந்த அழகிய இடம் அவர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது. அவர்கள் அந்த இடத்தைப் பார்க்க அதிகமாக விரும்புகின்றனர். அவர்கள் உண்மையில் அந்த இடத்தை நேசிக்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் நான் அந்த நகரத்தையும் அவர்களது பிள்ளைகளையும் எடுத்துக்கொள்வேன். தப்பிப் பிழைத்த ஒருவன் எருசலேம் பற்றிய கெட்ட செய்தியைச் சொல்வதற்கு வருவான். 27 அப்பொழுது அவனோடு பேச உன்னால் முடியும். நீ இனிமேலும் மௌனமாய் இருக்கமாட்டாய். இதுபோலவே நீ அவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பாய். பிறகு அவர்கள் நானே கர்த்தர் என்பதை அறிவார்கள்.”
சாலொமோனுக்கு
72 தேவனே, அரசனும் உம்மைப்போன்று ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவருக்கு உதவும்.
உமது நல்லியல்பை அரசனின் மகனும் அறிந்துகொள்ள உதவும்.
2 அரசன் உமது ஜனங்களுக்குத் தகுதியான நீதி வழங்க உதவும்.
உமது ஏழை ஜனங்களுக்காக ஞானமுள்ள முடிவுகளை எடுக்க அவனுக்கு உதவும்.
3 தேசம் முழுவதும் சமாதானமும் நீதியும் நிலவட்டும்.
4 ஏழைகளுக்கு அரசன் நல்லவனாக இருக்கட்டும்.
திக்கற்றோருக்கு அவன் உதவட்டும்.
அவர்களைத் தாக்குவோரை அவன் தண்டிக்கட்டும்.
5 சூரியன் ஒளிவிடும் மட்டும், சந்திரன் வானிலுள்ள மட்டும் ஜனங்கள் அரசனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
என்றென்றும் ஜனங்கள் அவனுக்குப் பயந்து அவனை மதிப்பார்கள் என நான் நம்புகிறேன்.
6 வயலில் விழும் மழையைப்போன்றிருக்க அரசனுக்கு உதவும்.
பூமியில் விழும் தூறலைப் போன்றிருக்க அவனுக்கு உதவும்.
7 அவன் அரசனாக இருக்கும்போது நன்மை மலரட்டும்.
சந்திரன் இருக்கும்மட்டும் சமாதானம் நிலவட்டும்.
8 ஐபிராத்து நதியிலிருந்து பூமியின் தூரத்து எல்லை வரைக்கும்,
கடலிலிருந்து கடல் வரைக்கும் அவன் அரசு பெருகட்டும்.
9 பாலைவனத்தில் வாழும் எல்லா ஜனங்களும் அவனுக்குத் தலை வணங்குவார்கள்.
புழுதியில் முகத்தைப் புதைத்து அவன் பகைவர்கள் அவனுக்கு முன்பாக விழுந்து வணங்கட்டும்.
10 தர்ஷீசின் அரசர்களும் தூரத்துத் தேசங்களின் அரசர்களும் அவனுக்குப் பரிசுகளைக் கொண்டுவரட்டும்.
ஷேபாவிலும், சேபாவிலுமுள்ள அரசர்கள் தங்கள் கப்பத்தை அவனுக்குக் கொண்டுவரட்டும்.
11 எல்லா அரசர்களும் நமது அரசனை விழுந்து வணங்கட்டும்.
எல்லா தேசங்களும் அவனுக்குச் சேவை செய்யட்டும்.
12 நமது அரசன் திக்கற்றோருக்கு உதவுகிறார்.
ஏழையான திக்கற்ற ஜனங்களுக்கு நம் அரசன் உதவுகிறார்.
13 ஏழையான திக்கற்ற ஜனங்கள் நம் அரசனைச் சார்ந்திருப்பார்கள்.
அரசன் அவர்களை உயிரோடு வாழச் செய்கிறார்.
14 அவர்களைத் துன்புறுத்த முயலும் கொடியோரிடமிருந்து அரசன் அவர்களைக் காப்பாற்றுகிறார்.
அந்த ஏழை ஜனங்களின் உயிர்கள் அரசனுக்கு மிக முக்கியமானவை.
15 அரசன் நீடூழி வாழ்க!
அவர் சேபாவின் பொன்னைப் பெறட்டும்.
எப்போதும் அரசனுக்காக ஜெபம் செய்யுங்கள்.
ஒவ்வொரு நாளும் அவரை ஆசீர்வதியுங்கள்.
16 வயல் நிலங்கள் மிகுதியான தானியத்தை விளைவிக்கட்டும்.
மலைகளும் பயிர்களால் நிரம்பட்டும்.
நிலங்களில் புல் வளர்வது போன்று
நகரங்கள் ஜனங்களால் நிரம்பட்டும்.
17 அரசன் என்றென்றும் புகழ்பெறட்டும்.
சூரியன் ஒளிவிடும்மட்டும் ஜனங்கள் அவர் நாமத்தை நினைவுகூரட்டும்.
ஜனங்கள் அவரால் ஆசீர்வதிக்கப்படட்டும்.
அவர்கள் எல்லோரும் அவரை வாழ்த்தட்டும்.
18 இஸ்ரவேலரின் தேவனாகிய, கர்த்தராகிய தேவனைத் துதியுங்கள்.
தேவன் ஒருவரே அத்தகைய அற்புதமான காரியங்களைச் செய்யமுடியும்.
19 அவரது மகிமைபொருந்திய நாமத்தை என்றென்றும் துதியுங்கள்!
அவரது மகிமை முழு உலகத்தையும் நிரப்பட்டும்! ஆமென், ஆமென்!
20 ஈசாயின் மகனாகிய தாவீதின் ஜெபங்கள் இங்கு முடிகின்றன.
2008 by World Bible Translation Center