M’Cheyne Bible Reading Plan
தாவீதின் ஆட்களுக்கு ஆனூனால் அவமானம்
10 அதற்குப் பிறகு அம்மோன் அரசனாகிய நாகாஸ் மரித்தான். அவனது மகனாகிய ஆனூன் அவனுக்குப் பிறகு அரசனானான். 2 தாவீது, “நாகாஸ் என்னிடம் இரக்கத்தோடு நடந்துக்கொண்டான். எனவே நானும் அவனது மகன் ஆனூனுக்கு இரக்கம் காட்டுவேன்” என்றான். எனவே ஆனூனின் தந்தையின் மறைவிற்குத் துக்கம் விசாரிப்பதற்காக தாவீது தனது அதிகாரிகளை அனுப்பினான்.
தாவீதின் அதிகாரிகள் அம்மோன் தேசத்திற்குச் சென்றார்கள். 3 ஆனால் அம்மோனின் அதிகாரிகள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனை நோக்கி, “உங்களுக்கு ஆறுதல் கூறுவதற்குச் சில அதிகாரிகளை அனுப்புவதால் தாவீது உங்களைப் பெருமைப்படுத்துவதாக நீர் நினைக்கிறீரா? இல்லை! உங்கள் நகரத்தைக் குறித்து உளவறிந்து கொள்வதற்காக தாவீது இந்த ஆட்களை அனுப்பியிருக்கிறான். உங்களுக்கு எதிராக போரிடுவதற்கான திட்டம் இதுவாகும்” என்றார்கள்.
4 எனவே ஆனூன் தாவீதின் அதிகாரிகளைப் பிடித்து அவர்கள் தாடியின் ஒரு பகுதி மயிரைச் சிரைத்தான். அவர்கள் ஆடைகளை இடுப்புப் பகுதி வரைக்கும் நடுவே கிழித்துவிட்டப் பின் அவர்களை அனுப்பிவிட்டான்.
5 இச்செய்தியை ஜனங்கள் தாவீதிடம் தெரிவித்தபோது அவன் தனது அதிகாரிகளைச் சந்திக்கும் பொருட்டு அவர்களிடம் தூதுவர்களை அனுப்பினான். தனது அதிகாரிகள் அவமானப்படுத்தப்பட்டதால் தாவீது அரசன் செய்தியனுப்பி, “உங்கள் தாடி மீண்டும் வளரும்மட்டும் எரிகோவில் தங்கியிருங்கள். பின்பு எருசலேமுக்குத் திரும்பி வாருங்கள்” என்றான்.
அம்மோனியருக்கு எதிராகப் போர்
6 அம்மோனியர் தாவீதிடம் பகை வளர்த்தனர். எனவே அவர்கள் பெத்ரேகோப், ஸோபா ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரை அழைத்தனர். காலாட் படைகளில் 20,000 ஆராமியர் தேறினார்கள். அம்மோனியர் மாக்கா அரசனையும் அவனது 1,000 வீரர்களையும் தோபிலிருந்து 12,000 வீரர்களையும் வரவழைத்தார்கள்.
7 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எனவே அவன் யோவாபையும், வலிமை மிகுந்த தனது முழு சேனையையும் அனுப்பினான். 8 அம்மோனியர் புறப்பட்டு போருக்குத் தயாராயினர். அவர்கள் நகர வாயிலருகே நின்றுக்கொண்டனர். சோபா, ரேகோப் ஆகிய இடங்களிலுள்ள ஆராமியரும் தோப், மாக்கா ஆகிய இடங்களிலுள்ள வீரர்களும் யுத்தக் களத்தில் அம்மோனியரோடு சேர்ந்து நிற்கவில்லை.
9 அம்மோனியர் முன்னணியிலும் பின் பகுதியிலும் தனக்கு எதிரே நிற்பதை யோவாப் கண்டான். எனவே அவன் இஸ்ரவேலரில் திறமை மிகுந்த வீரர்களைத் தெரிந்துக்கொண்டான். ஆராமியருக்கு எதிராகப் போர் செய்வதற்காக இவர்களை அனுப்பினான். 10 பின் தனது சகோதரனாகிய அபிசாயின் தலைமையில் யோவாப் மற்ற வீரர்களை அம்மோனியருக்கு எதிராகப் போரிடுவதற்கு அனுப்பினான். 11 யோவாப் அபிசாயியை நோக்கி, “ஆராமியர் மிகுந்த பலசாலிகளாக இருந்தால் நீ எனக்கு உதவுவாய். அம்மோனியர்களின் பலம் மிகுந்திருந்தால் நான் உனக்கு உதவுவேன். 12 துணிவாயிரு. நமது ஜனங்களுக்காகவும் நமது தேவனுடைய நகரங்களுக்காகவும் நாம் வீரத்தோடு போரிடுவோம். கர்த்தர் தாம் சரியெனக் கண்டதைச் செய்வார்” என்றான்.
13 பின்பு யோவாபும் அவனது வீரர்களும் ஆராமியரைத் தாக்கினார்கள். ஆராமியர்கள் யோவாபிடமிருந்தும் அவனது ஆட்களிடமிருந்தும் தப்பி ஓடினார்கள். 14 ஆராமியர் ஓடிப்போவதை அம்மோனியர் பார்த்தனர். எனவே அவர்கள் அபிசாயிடமிருந்து தப்பி ஓடிப்போய் தங்கள் நகரத்தை அடைந்தனர்.
எனவே யோவாப் அம்மோனியரோடு போர் செய்வதை நிறுத்தி திரும்பி வந்து, எருசலேமிற்கு போனான்.
ஆராமியர் மீண்டும் போரிட முடிவெடுக்கின்றனர்
15 இஸ்ரவேலர் தங்களைத் தோற்கடித்ததை ஆராமியர்கள் கண்டார்கள். எனவே அவர்கள் ஒரு பெரும்படையைத் திரட்டினார்கள். 16 ஐபிராத்து நதியின் மறுகரையில் வாழ்ந்த ஆராமியரை அழைத்து வருவதற்கு ஆதாதேசர் ஆட்களை அனுப்பினான். இந்த ஆராமியர் ஏலாமுக்கு வந்தார்கள். அவர்களின் தலைவனாக ஆதாதேசரின் படைத் தலைவனாகிய சோபாக் சென்றான்.
17 தாவீது இதைக் கேள்விப்பட்டான். எல்லா இஸ்ரவேலரையும் ஒன்றாகக் கூட்டினான். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி ஏலாமுக்குச் சென்றனர்.
ஆராமியர் போருக்குத் தயாராகித் தாக்கினார்கள். 18 ஆனால் தாவீது ஆராமியரை முறியடித்தான். இஸ்ரவேலரிடமிருந்து ஆராமியர் தப்பித்து ஓடினார்கள். தாவீது 700 தேரோட்டிகளையும் 40,000 குதிரை வீரர்களையும் கொன்றான். தாவீது ஆராமியரின் படைத்தலைவனாகிய சோபாக்கைக் கொன்றான்.
19 ஆதாதேசருக்கு உதவ வந்த அரசர்கள் இஸ்ரவேலர் வென்றதைக் கண்டார்கள். எனவே அவர்கள் இஸ்ரவேலரோடு சமாதானம் செய்து அவனுக்குப் பணிவிடைச் செய்தனர். அம்மோனியருக்கு மீண்டும் உதவுவதற்கு ஆராமியர்கள் அஞ்சினார்கள்.
புதிய உடன்படிக்கை
3 நாங்கள் மீண்டும் எங்களைப்பற்றியே பெருமையாகப் பேசிக்கொள்ள ஆரம்பித்து விட்டோமா? மற்றவர்களைப் போன்று எனக்கோ அல்லது என்னிடமிருந்தோ அறிமுக நிருபங்கள் தேவையா? 2 எங்கள் நிருபம் நீங்கள் தான். எங்கள் இதயங்களில் நீங்கள் எழுதப்பட்டிருக்கிறீர்கள். அனைவராலும் அறியப்படுகிறவர்களாகவும், வாசிக்கப்படுகிறவர்களாகவும் இருக்கிறீர்கள். 3 கிறிஸ்துவிடமிருந்து எங்கள் மூலம் அனுப்பிய நிருபம் நீங்கள் தான் என்று காட்டிவிட்டீர்கள். இந்நிருபம் மையால் எழுதப்படவில்லை. ஜீவனுள்ள தேவனுடைய ஆவியால் எழுதப்பட்டுள்ளது. இது கற்பலகையின் [a] மீது எழுதப்படவில்லை. மனித இதயங்களின் மீது எழுதப்பட்டுள்ளது.
4 கிறிஸ்துவின் மூலம் தேவனுக்கு முன்னால் உறுதியாக நம்புவதால் எங்களால் இவற்றைச் சொல்ல முடிகிறது. 5 எங்களால் நல்லதாக எதனையும் செய்ய முடியும் என்று நாங்கள் கருதுவதாக அர்த்தம் இல்லை. செய்யவேண்டிய எல்லாக் காரியங்களுக்குமான வல்லமையை எங்களுக்குத் தருபவர் தேவனே ஆவார். 6 புது உடன்படிக்கை ஊழியராக இருக்கும்படி அவரே எங்களைத் தகுதியுள்ளவர் ஆக்கினார். இந்தப் புதிய ஒப்பந்தம் வெறும் எழுத்துப் பூர்வமான ஒப்பந்தமாய் இராமல் ஆவிக்குரியதாக இருக்கிறது. எழுத்துப் பூர்வமான சட்டம் மரணத்தைக் கொண்டு வருகிறது. ஆவியோ வாழ்வைத் தருகிறது.
புதிய உடன்படிக்கையும் மகிமையும்
7 மரணத்துக்கு வழி வகுக்கும் சேவைக்குரிய பிரமாணங்கள் கற்களில் எழுதப்பட்டன. அது தேவனுடைய மகிமையோடு வந்தது. அதனால் மோசேயின் முகம் ஒளி பெற்றது. அந்த ஒளி இஸ்ரவேல் மக்களைப் பார்க்க இயலாதபடி செய்தது. அந்த மகிமை பிறகு மறைந்துபோனது. 8 எனவே ஆவிக்குரிய சேவை நிச்சயமாக மிகுந்த மகிமையுடையதாக இருக்கும். 9 மக்களை நியாயம் தீர்க்கிற சேவைகள் மகிமையுடையதாக இருக்கும்போது தேவனுக்கும் மனிதனுக்குமிடையே சீரான உறவுக்கு உதவும் சேவைகளும் மிகுந்த மகிமை உடையதாக இருக்கும். 10 பழைய சேவைகளும் மகிமைக்குரியதே. எனினும் புதிய சேவைகளால் வரும் மகிமையோடு ஒப்பிடும்போது அதன் பெருமை அழிந்துபோகிறது. 11 மறைந்து போகிறவை மகிமையுடையதாகக் கருதப்படுமானால் என்றென்றும் நிலைத்து இருப்பவை மிகுந்த மகிமையுடையதே.
12 எங்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதால் நாங்கள் தைரியமாக இருக்கிறோம். 13 நாங்கள் மோசேயைப் போன்றில்லை. அவர் தன் முகத்தை முக்காடிட்டு மூடி மறைத்துக்கொண்டார். அவரது முகத்தை இஸ்ரவேல் மக்களால் பார்க்க முடியவில்லை. அந்த வெளிச்சமும் மறைந்து போயிற்று. அவர்கள் அதன் மறைவைப் பார்ப்பதை மோசே விரும்பவில்லை. 14 ஆனால் அவர்கள் மனமும் அடைத்திருந்தது. அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இப்பொழுதும் கூட அந்த முக்காடு அவர்கள் பழைய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள முடியாதபடி செய்கின்றது. அந்த முக்காடு கிறிஸ்துவால்தான் விலக்கப்படுகிறது. 15 ஆனாலும் கூட இன்று, மக்கள் மோசேயின் சட்டத்தை வாசிக்கும்போது அவர்களின் மனம் மூடிக்கொண்டிருக்கிறது. 16 ஆனால் எவனொருவன் மாற்றம் பெற்று, கர்த்தரைப் பின்பற்றுகிறானோ அவனுக்கு அந்த முக்காடு விலக்கப்படுகிறது. 17 கர்த்தரே ஆவியாய் இருக்கிறார். எங்கெல்லாம் அந்த ஆவியானவர் உள்ளாரோ அங்கெல்லாம் விடுதலை உண்டு. 18 நமது முகங்கள் மூடப்பட்டில்லை. நாமெல்லாரும் தேவனுடைய மகிமையைக் காட்டுகிறோம். நாம் அவரைப்போன்று மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறோம். நம்முள் எழும் இம்மாற்றம் மேலும் மேலும் மகிமையைத் தருகிறது. இம்மகிமை ஆவியாக இருக்கிற கர்த்தரிடமிருந்து வருகிறது.
17 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 2 “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இக்கதையைக் கூறு. இதன் பொருள் என்னவென்று கேள். 3 அவர்களிடம் சொல்:
“‘ஒரு பெரிய கழுகு (நேபுகாத்நேச்சார்) பெருஞ் சிறகுகளுடன் லீபனோனுக்கு வந்தது.
அக்கழுகு புள்ளிகளைக்கொண்ட இறகுகளை கொண்டிருந்தது.
4 அக்கழுகு பெரிய கேதுரு மரத்தின் உச்சியை (லீபனோன்) உடைத்தது;
கானானுக்குக் கொண்டுவந்தது.
கழுகு வியாபாரிகளின் பட்டணத்திற்கு கிளையைக் கொண்டுவந்தது.
5 பிறகு கழுகு கானானிலிருந்து சில விதைகளை (ஜனங்கள்) எடுத்தது.
அது அவற்றை நல்ல மண்ணில் நட்டுவைத்தது.
அது நல்ல ஆற்றங்கரையில் நட்டது.
6 அவ்விதைகள் வளர்ந்து திராட்சை கொடியானது.
இது ஒரு நல்ல கொடி.
இக்கொடி உயரமாக இல்லை.
ஆனால் அது படர்ந்து பெரும் இடத்தை அடைத்தது.
அக்கொடிகளுக்கு வேர்கள் வளர்ந்தன.
சிறு கொடிகள் மிக நீளமாக வளர்ந்தன.
7 இன்னொரு பெரிய கழுகு தன் பெருஞ் சிறகுடன் இக்கொடியைப் பார்த்தது.
அக்கழுகுக்கு நிறைய இறகுகள் இருந்தன.
அத்திராட்சைக் கொடி,
இக்கழுகு தன்னைப் பராமரிக்க வேண்டும் என்று விரும்பியது.
எனவே இக்கழுகை நோக்கித் தன் வேர்களை வளர்த்தது.
அதன் கிளைகளும் இக்கழுகை நோக்கி நீண்டன.
கிளைகள் தன்னை நட்டுவைத்த நிலத்தை விட்டு வெளியே வளர்ந்தன.
திராட்சைக் கொடி இக்கழுகு தனக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டும் என விரும்பியது.
8 திராட்சைக் கொடியானது நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
ஏராளமான தண்ணீரின் அருகில் இது நடப்பட்டிருந்தது.
அதில் கிளைகளும் பழங்களும் வளர்ந்திருந்தன.
அது நல்ல திராட்சைக் கொடியாக இருந்திருக்கலாம்.’”
9 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்:
“அக்கொடி தொடர்ந்து செழித்து வளரும் என்று நினைக்கிறாயா?
இல்லை! புதிய கழுகு திராட்சைக் கொடியைப் பூமியில் இருந்து பிடுங்கும்.
அப்பறவை கொடியின் வேர்களை உடைக்கும்.
அது எல்லா திராட்சைகளையும் உண்ணும்.
பிறகு புதிய இலைகள் வாடி உதிரும்.
அக்கொடி மிகவும் பலவீனமாகும்.
பலம் வாய்ந்த புயத்தோடும் வல்லமை வாய்ந்த ஜனங்களோடும் வந்து
அதனைப் பிடுங்கிப்போடத் தேவையில்லை.
10 கொடியை நட்ட இடத்தில் அது வளருமா?
இல்லை! சூடான கிழக்குக் காற்று வீசும்.
அதில் அது வாடி உலர்ந்துபோகும்.
அது நட்டுவைத்த இடத்திலேயே வாடிப் போகும்.”
சிதேக்கியா அரசன் தண்டிக்கப்படுதல்
11 கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 12 “இஸ்ரவேல் ஜனங்களிடம் இக்கதையைக் விவரித்துக் கூறு. அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள். அவர்களிடம் இவற்றைச் சொல். முதல் கழுகு என்பது பாபிலோனிய அரசனான நேபுகாத்நேச்சார். அவன் எருசலேமிற்கு வந்தான். அரசனையும் தலைவர்களையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோனுக்குக் கொண்டு போனான். 13 பிறகு நேபுகாத்நேச்சார் அரச குடும்பத்திலுள்ள ஒருவனிடம் ஒப்பந்தம் செய்துகொண்டான். நேபுகாத்நேச்சார் அம்மனிதனை வற்புறுத்தி ஒரு வாக்குறுதியைச் செய்ய வைத்தான். எனவே அவன் நேபுகாத்நேச்சாருக்கு உண்மையாக இருப்பதாக வாக்களித்தான். நேபுகாத்நேச்சார் அவனை யூதாவின் புதிய அரசனாக ஆக்கினான், பிறகு அவன் ஆற்றல்மிக்க மனிதர்களையெல்லாம் யூதாவை விட்டு வெளியேற்றினான். 14 எனவே யூதா ஒரு பலவீனமான அரசானது. நேபுகாத்நேச்சாருக்கு எதிராகத் திரும்ப முடியாதுபோயிற்று. புதிய அரசனோடு செய்த ஒப்பந்தத்தை ஜனங்கள் பின்பற்றும்படி வற்புறுத்தப்பட்டனர். 15 ஆனால் புதிய அரசன் எப்படியாவது நேபுகாத்நேச்சாருக்கு எதிராகக் கலகம் செய்ய விரும்பினான்! அவன் உதவி வேண்டி எகிப்துக்குத் தூதுவர்களை அனுப்பினான். புதிய அரசன் ஏராளமான குதிரைகளையும், வீரர்களையும் கேட்டான். இப்பொழுது, யூதாவின் புதிய அரசன் வெற்றி பெறுவான் என்று நினைக்கிறீர்களா? இப்புதிய அரசன் போதிய ஆற்றலைப்பெற்று ஒப்பந்தத்தை உடைத்து தண்டனையில் இருந்து தப்புவான் என்று நினைக்கின்றீர்களா?”
16 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “என் உயிரின்மேல் உறுதியாகச் சொல்கிறேன்! புதிய அரசன் பாபிலோனில் மரிப்பான். நேபுகாத்நேச்சார் இப்புதியவனை யூதாவின் அரசனாக ஆக்கினான். ஆனால் இவன் தான் நேபுகாத்நேச்சாரோடுச் செய்த வாக்குறுதியை உடைத்தான். இப்புதிய அரசன் ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். 17 எகிப்தின் அரசன் யூதாவின் அரசனைக் காப்பாற்ற முடியாது. அவன் வேண்டுமானால் ஏராளமான வீரர்களை அனுப்பலாம். ஆனால் எகிப்தின் பெரும் பலம் யூதாவைக் காப்பாற்றாது. நேபுகாத்நேச்சாரின் படை நகரத்தைக் கைப்பற்றுவதற்காக மண் சாலைகளையும், முற்றுகைச் சுவர்களையும் கட்டுவார்கள். ஏராளமானவர்கள் மரிப்பார்கள். 18 ஆனால் யூதாவின் அரசன் தப்பிக்கமாட்டான். ஏனென்றால் அவன் தன் ஒப்பந்தத்தை அசட்டை செய்தான். அவன் நேபுகாத்நேச்சாரோடு செய்த வாக்குறுதியை உடைத்தான்.” 19 எனது ஆண்டவரான கர்த்தர் இந்த வாக்குறுதியைச் செய்கிறார்: “எனது உயிரின்மேல், நான் யூதாவின் அரசனைத் தண்டிப்பதாக வாக்குரைத்தேன். ஏனென்றால் அவன் எனது எச்சரிக்கையை அசட்டை செய்தான். அவன் எங்கள் ஒப்பந்தத்தை உடைத்தான். 20 நான் எனது வலையைப் போடுவேன். அவன் அதில் அகப்படுவான். நான் அவனை பாபிலோனுக்குக் கொண்டு வருவேன். அவன் அங்கே தண்டிக்கப்படுவான். ஏனென்றால் அவன் எனக்கு எதிராகத் திரும்பினான். 21 நான் அவனது படையை அழிப்பேன். நான் அவனது சிறந்த போர் வீரர்களை அழிப்பேன், தப்பிப் பிழைப்பவர்களை நான் காற்றில் சிதறடிப்பேன். பிறகு நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள். நான் இவற்றை உங்களுக்குச் சொன்னேன். 22 எனது கர்த்தராகிய ஆண்டவர் இதைக் கூறினார்:
“நான் உயர்ந்த கேதுரு மரத்திலிருந்து ஒரு கிளையை எடுப்பேன்.
நான் மர உச்சியிலிருந்து ஒரு சிறு கிளையை எடுப்பேன்.
நானே அதனை உயரமான மலையில் நடுவேன்.
23 நானே அதனை இஸ்ரவேலின் மலையில் நடுவேன்.
அக்கிளை மரமாக வளரும்.
அது கிளைகளாக வளர்ந்து கனிதரும்.
அது அழகான கேதுரு மரமாகும்.
பல பறவைகள் அதன் கிளைகளில் அமரும்.
பல பறவைகள் அதன் கிளைகளின் அடியிலுள்ள நிழலில் தங்கும்.
24 “பிறகு மற்ற மரங்கள்,
நான் உயரமான மரங்களைத் தரையில் வீழ்த்துவேன்,
குட்டையான மரங்களை உயரமாக வளர்ப்பேன் என்பதை அறியும்.
நான் பச்சைமரங்களை உலரச் செய்வேன்.
உலர்ந்த மரங்களைத் தளிர்க்கச் செய்வேன்.
நானே கர்த்தர்.
நான் சிலவற்றைச் செய்வதாகச் சொன்னால் செய்வேன்!”
“உடன்படிக்கையின் லில்லி” என்ற பாடலின் இசைத்தலைவனுக்கு தாவீது அளித்த பாடல். இது போதிப்பதற்குரியது. தாவீது ஆராம் நகராயீம், ஆராம் சோபா ஆகிய நாட்டினரோடு யுத்தம் பண்ணிய காலத்தில், யோவாப் திரும்பிவந்து 12,000 ஏதோமிய வீரர்களை உப்புப் பள்ளத்தாக்கில் வெட்டிக் கொன்றபோது பாடியது.
60 தேவனே, எங்களோடு சினங்கொண்டீர், எனவே எங்களை நிராகரித்து அழித்தீர்.
தயவாய் எங்களிடம் திரும்பி வாரும்.
2 நீர் பூமியை அசைத்து அதைப் பிளக்கப் பண்ணினீர்.
நம் உலகம் பிரிந்து விழுந்தது.
அருள் கூர்ந்து அவற்றை ஒன்றாக இணைத்து விடும்.
3 நீர் உமது ஜனங்களுக்குப் பல தொல்லைகளை அனுமதித்தீர்.
நாங்களோ தள்ளாடி விழுகின்ற குடிவெறியர்களைப் போலானோம்.
4 உம்மைத் தொழுதுகொள்ளும் ஜனங்களை நீர் எச்சரித்தீர்.
அவர்கள் இப்போது பகைவனிடமிருந்து தப்பிச்செல்ல முடியும்.
5 உமது மிகுந்த வல்லமையைப் பயன்படுத்தி எங்களைக் காப்பாற்றும்!
என் ஜெபத்திற்குப் பதில் தாரும், நீர் நேசிக்கிற ஜனங்களைக் காப்பாற்றும்.
6 தேவன் அவரது ஆலயத்தில் பேசினார்:
“நான் யுத்தத்தில் வென்று, அவ்வெற்றியால் மகிழ்வேன்!
இந்நாட்டை எனது ஜனங்களோடு பகிர்ந்துகொள்வேன்.
அவர்களுக்கு சீகேமைக் கொடுப்பேன்.
அவர்களுக்கு சுக்கோத் பள்ளத்தாக்கையும் கொடுப்பேன்.
7 கீலேயாத்தும், மனாசேயும் என்னுடையவை.
எப்பிராயீம் எனது தலைக்குப் பெலன்.
யூதா என் நியாயத்தின் கோல்.
8 மோவாப் என் பாதங்களைக் கழுவும் பாத்திரம்.
ஏதோம் என் மிதியடிகளைச் சுமக்கும் அடிமை.
நான் பெலிஸ்தரை வென்று என் வெற்றியை முழக்கமிடுவேன்!”
9-10 தேவனே நீர் எங்களை விட்டு விலகினீர்!
வலிய, பாதுகாவலான நகரத்திற்குள் யார் என்னை அழைத்துச் செல்வார்?
ஏதோமிற்கு எதிராகப் போர் செய்ய யார் என்னை வழி நடத்துவார்?
தேவனே, நீர் மட்டுமே எனக்கு உதவக்கூடும்.
ஆனால் நீரோ எங்களை விட்டு விலகினீர்!
நீர் எங்கள் சேனையோடு செல்லவில்லை.
11 தேவனே, எங்கள் பகைவரை வெல்ல எங்களுக்கு உதவும்!
மனிதர்கள் எங்களுக்கு உதவ முடியாது!
12 தேவன் மட்டுமே எங்களைப் பலப்படுத்த முடியும்.
தேவன் எங்கள் பகைவர்களை வெல்ல முடியும்.
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
61 தேவனே, என் ஜெபப் பாடலைக் கேட்டருளும்.
என் ஜெபத்தைக் கேளும்.
2 நான் எங்கிருந்தாலும், எப்படிச் சோர்ந்து போனாலும் நான் உம்மை உதவிக்குக் கூப்பிடுவேன்.
எட்டாத உயரத்தின் பாதுகாவலான இடத்திற்கு என்னைச் சுமந்து செல்லும்.
3 நீரே எனக்குப் பாதுகாப்பான இடம்!
நீரே என் பகைவரிடமிருந்து என்னைக் காக்கும் பலமான கோபுரம்.
4 நான் என்றென்றும் உம்முடைய கூடாரத்தில் வாழ்ந்திருப்பேன்.
நீர் என்னைப் பாதுகாக்கத்தக்க இடத்தில் நான் ஒளிந்திருப்பேன்.
5 தேவனே, நான் உமக்குப் பண்ணின பொருத்தனையைக் கேட்டீர்.
உம்மைத் தொழுதுகொள்வோரின் ஒவ்வொரு பொருளும் உம்மிடமிருந்து வருவதேயாகும்.
6 அரசனுக்கு நீண்ட ஆயுளைக் கொடும்.
அவர் என்றென்றும் வாழட்டும்!
7 அவர் என்றென்றும் தேவனோடு வாழட்டும்!
உமது உண்மையான அன்பால் அவரைப் பாதுகாத்துக்கொள்ளும்.
8 நான் என்றைக்கும் உமது நாமத்தைத் துதிப்பேன்.
நான் உமக்குக் கூறிய உறுதி மொழியின்படியே, ஒவ்வொரு நாளும் செய்வேன்.
2008 by World Bible Translation Center