Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 6

தேவனுடைய பரிசுத்தப்பெட்டி எருசலேமுக்கு வருதல்

இஸ்ரவேலின் மிகச்சிறந்த வீரர்களையெல்லாம் தாவீது ஒன்றாகக் கூட்டினான். மொத்தம் 30,000 பேர் இருந்தனர். தாவீதும் அவனது ஆட்களும் யூதாவிலுள்ள பாலாவிற்குச் சென்றனர். அவர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எருசலேமுக்குக் கொண்டு வந்தனர். கர்த்தரைத் தொழுதுகொள்ளும்படி ஜனங்கள் பரிசுத்தப் பெட்டியருகே வருவார்கள். பரிசுத்தப் பெட்டியானது கர்த்தருடைய சிங்காசனமாக இருந்தது. கேருபீன்களின் உருவங்கள் பரிசுத்தப் பெட்டியின் மேலே இருந்தன. கேருபீன்கள் மேல் கர்த்தர் ராஜாவாக வீற்றிருக்கிறார். மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிற்கு வெளியே அவர்கள் பரிசுத்த பெட்டியைக் கொண்டு வந்தார்கள். பின்பு தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஒரு புதிய வண்டியில் ஏற்றினார்கள். அந்த வண்டியை அபினதாபின் மகன்களாகிய ஊசாவும் அகியோவும் ஓட்டினார்கள்.

மேட்டிலிருந்த அபினதாபின் வீட்டிலிருந்து அவர்கள் பரிசுத்தப் பெட்டியைச் சுமந்துவந்தனர். தேவனுடைய பரிசுத்தப் பெட்டியோடு ஊசா வண்டியின் மீது அமர்ந்திருந்தான். பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக அகியோ நடந்துக்கொண்டிருந்தான். கர்த்தருக்கு முன் தாவீதும் இஸ்ரவேலரும் நடனமாடினார்கள். இரட்டைவால் வீணை, சுரமண்டலம், தம்புரு, மேளம், வீணை, தாளம் ஆகிய மருதகட்டையில் செய்த இசைக்கருவிகளை இசைத்தப்படி சென்றனர். நாகோனுக்குச் சொந்தமான போரடிக்கும் களத்தை அடைந்தபோது வண்டியில் பூட்டப்பட்ட பசுக்கள் இடறின. எனவே தேவனுடைய பரிசுத்த பெட்டி வண்டிக்கு வெளியே விழலாயிற்று. ஊசா பரிசுத்த பெட்டியை பிடித்தான். ஆனால் கர்த்தர் ஊசாவின் மீது கோபங்கொண்டு அவனைக் கொன்றார். [a] ஊசா பரிசுத்த பெட்டியைத் தொட்டபோது அவன் தேவனுக்கு மரியாதை கொடுக்காமல் செயல்பட்டான். ஆகவே தேவனுடைய பரிசுத்தப் பெட்டியருகில் ஊசா அங்கே மரித்தான். கர்த்தர் ஊசாவைக் கொன்றதால் தாவீது கலக்கமுற்றான். தாவீது அந்த இடத்தை “பேரேஸ் ஊசா” என்று அழைத்தான். இன்றும் அந்த இடம் “பேரேஸ் ஊசா” என்றே அழைக்கப்படுகிறது.

தாவீது அந்த நாளில் கர்த்தரிடம் பயப்பட்டான். தாவீது, “நான் இங்கு இப்போது தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எவ்வாறு கொண்டுவர முடியும்?” என்றான். 10 ஆகையால் தாவீதின் நகரத்திற்குள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைக் கொண்டு வரவில்லை. காத் ஊரானாகிய ஓபேத் ஏதோமின் வீட்டில் தாவீது பரிசுத்தப் பெட்டியை வைத்தான். போரடிக்கும் களத்திலிருந்து ஓபேத் ஏதோமின் வீடுவரைக்கும் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை தாவீது சுமந்து வந்தான். 11 ஓபேத் ஏதோமின் வீட்டில் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி மூன்று மாதங்கள் இருந்தது. ஓபேத் ஏதோமையும் அவனது குடும்பத்தாரையும் கர்த்தர் ஆசீர்வதித்தார்.

12 பின்னர், ஜனங்கள் தாவீதிடம், “ஓபேத் ஏதோமின் குடும்பத்தையும் அவனுக்குச் சொந்தமான எல்லாவற்றையும், தேவனுடைய பரிசுத்தப் பெட்டி அங்கிருந்ததால் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” என்றார்கள். தாவீது போய் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை ஓபேத் ஏதோம் வீட்டிலிருந்து கொண்டு வந்தான். அதனை தாவீதின் நகரத்திற்கு கொண்டு போனான். தாவீது மகிழ்ச்சியும் உற்சாகமும் அடைந்தான். 13 கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைச் சுமந்து சென்றவர்கள் ஆறு அடி எடுத்து வைத்ததும் நின்றார்கள். தாவீது ஒரு காளையையும் கொழுத்த கன்று குட்டியையும் பலியிட்டான். 14 பின்பு தாவீது கர்த்தருக்கு முன்பாகத் தன் முழு பலத்தோடு நடனமாடினான். தாவீது மெல்லிய பஞ்சாலாகிய ஏபோத்தை அணிந்திருந்தான்.

15 தாவீதும் இஸ்ரவேலரும் களிப்படைந்தனர். அவர்கள் ஆரவாரம் செய்து எக்காளம் ஊதியபடி கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை நகரத்திற்குள் கொண்டு வந்தார்கள். 16 சவுலின் மகள் மீகாள் ஜன்னல் வழியாய் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டி நகரத்திற்குள் கொண்டு வரப்பட்டபோது, கர்த்தருக்கு முன்பாக தாவீது பாடி நடனம் ஆடிக்கொண்டிருந்தான். மீகாள் தாவீதைப் பார்த்து தன் மனதிற்குள் அவனை இகழ்ந்தாள். அவன் தன்னைத் தானே தரக்குறைவாக்கிக்கொள்கிறான் என்று அவள் நினைத்தாள்.

17 தாவீது பரிசுத்தப் பெட்டிக்காக ஒரு கூடாரம் அமைத்தான். இஸ்ரவேலர் கூடாரத்தினுள்ளே கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அதற்குரிய இடத்தில் வைத்தார்கள். பின்பு தாவீது தகனபலியையும் சமாதான பலியையும் கர்த்தருக்கு முன்பாகச் செலுத்தினான்.

18 தகன பலியையும் சமாதான பலியையும் செலுத்திய பிறகு தாவீது சர்வ வல்லைமையுள்ள கர்த்தருடைய நாமத்தில் ஜனங்களை ஆசீர்வதித்தான். 19 தாவீது இஸ்ரவேலின் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் அவரவர் பங்காகிய ரொட்டியும், முந்திரிப்பழ அடையும், பேரீச்சம்பழ அடையும் கொடுத்தான். பின்பு எல்லோரும் தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

மீகாள் தாவீதை திட்டுதல்

20 தாவீது தன் வீட்டை ஆசீர்வதிப்பதற்காகத் திரும்பிச் சென்றான். ஆனால் சவுலின் மகளாகிய மீகாள் அவனைச் சந்தித்து, “இஸ்ரவேலின் அரசன் தன்னைத்தான் இன்று மதிக்கவில்லை! பணிப்பெண்களின் முன்னே உமது ஆடைகளை நீக்கி வெட்கமின்றி ஆடுகின்ற மூடனைப்போல் நடந்துக்கொண்டீர்!” என்றாள்.

21 அதற்கு தாவீது மீகாளை நோக்கி, “உனது தந்தையையோ, அவரது குடும்பத்தின் எந்த மனிதனையோ தேர்ந்தெடுக்காமல் கர்த்தர், என்னைத் தேர்ந்தெடுத்தார். அவரது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்குத் தலைவனாக கர்த்தர் என்னைத் தேர்ந்தெடுத்தார். எனவே நான் கர்த்தருக்கு முன்பாக தொடர்ந்து ஆடிப்பாடிக் கொண்டாடுவேன்! 22 இதைக்காட்டிலும் அவமரியாதையான செயல்களையும் நான் செய்யக்கூடும்! நீ என்னை மதியாமலிருந்தாலும் நீ குறிப்பிடும் பெண்கள் என்னை உயர்வாக மதிக்கிறார்கள்!” என்றான்.

23 சவுலின் மகளான மீகாள் தனது மரண நாள்வரை குழந்தை இல்லாமல் இருந்து மரித்தாள்.

1 கொரி 16

பிற விசுவாசிகளின் காணிக்கை

16 தேவனுடைய மக்களுக்காகப் பணத்தை வசூலிப்பதுப்பற்றி இப்போது உங்களுக்கு எழுதுவேன். கலாத்திய சபைகளுக்கு நான் கூறியுள்ளபடியே நீங்களும் செய்யுங்கள். ஒவ்வொரு வாரத்தின் முதல் நாளிலும் உங்களில் ஒவ்வொருவனும் தங்கள் வரவுக்கேற்ப எவ்வளவு பணத்தைச் சேமிக்க முடியுமோ அத்தனையையும் சேமித்து வையுங்கள். நீங்கள் இந்தப் பணத்தை ஒரு விசேஷமான இடத்தில் பாதுகாப்பாக வையுங்கள். அவ்வாறாயின் நான் வந்த பின் நீங்கள் பணத்தைத் திரட்டும் சிரமம் உங்களுக்கு இருக்காது. நான் வரும்போது உங்கள் வெகுமதியை எருசலேமிற்கு எடுத்துச் செல்வதற்காகச் சில மனிதர்களை அனுப்புவேன். நீங்கள் அனுப்புவதற்கு இசைந்த மனிதர்களையே உங்களிடம் அனுப்புவேன். அறிமுகக் கடிதம் கொடுத்து அவர்களை அனுப்புவேன். நானும் அவர்களோடு போவது நல்லது எனத் தோன்றினால், அந்த மனிதரை என்னோடு அழைத்துச் செல்வேன்.

பவுலின் திட்டங்கள்

நான் மக்கதோனியாவின் வழியாகப் போகத் திட்டமிட்டுள்ளேன். நான் மக்கதோனியா வழியாகப் போனபின் உங்களிடம் வருவேன். நான் உங்களிடம் சில காலம் இருக்கக் கூடும். பனிக் காலம் முழுவதும் நான் தங்கக்கூடும். பிறகு நான் எங்கெங்கு சென்றாலும் என் பயணத்திற்கு நீங்கள் உதவமுடியும். நான் இந்தச் சமயத்தில் மட்டும் போகிற வழியில் உங்களைப் பார்க்க விரும்பவில்லை. கர்த்தர் விரும்பினால் உங்களோடு நீண்ட காலம் தங்க விரும்புகிறேன். பெந்தெகோஸ்து வரைக்கும் எபேசுவில் தங்கி இருப்பேன். பெரிய வளர்ச்சியுறும் பணி எனக்கு இப்போது தரப்பட்டுள்ளதால் அந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்தும்படிக்கு இங்கு தங்குவேன். அதற்கு எதிராக வேலை செய்வோர் பலர் உள்ளனர்.

10 தீமோத்தேயு உங்களிடம் வரக்கூடும். அவன் உங்களோடு பயமில்லாமல் இருக்க உதவுங்கள். என்னைப்போலவே அவனும் கர்த்தருக்காகப் பணியாற்றுகிறான். 11 எனவே உங்களில் ஒருவரும் தீமோத்தேயுவை ஏற்றுக்கொள்ள மறுக்கக் கூடாது. என்னிடம் அவன் வரமுடியும் வகையில் அவனது பயணம் அமைதி நிரம்பியதாக இருப்பதற்கு உதவுங்கள். சகோதரர்களுடன் சேர்ந்து அவன் என்னிடம் வருவதை எதிர்ப்பார்க்கிறேன்.

12 இப்போது நமது சகோதரன் அப்பொல்லோவைக் குறித்து எழுதுகிறேன். பிற சகோதரர்களுடன் சேர்ந்து அவன் உங்களைச் சந்திக்க வேண்டுமென மிகவும் ஊக்கமூட்டினேன். அவன் இப்போது உங்களிடம் வருவதில்லை என உறுதியாகக் கூறினான். அவனுக்கு வாய்ப்புக் கிடைக்கும்போது அவன் உங்களிடம் வருவான்.

பவுல் கடிதத்தை முடிக்கிறார்

13 கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிவுறுங்கள். தைரியம் கொள்ளுங்கள். வன்மையுடன் இருங்கள். 14 அன்பினால் ஒவ்வொன்றையும் செய்யுங்கள்.

15 அகாயாவில் ஸ்தேவானும் அவனது குடும்பத்தாரும், முதன் முதலில் விசுவாசம் கொண்டவர்கள் என்பதை அறிவீர்கள். அவர்கள் தங்களை தேவனுடைய மக்களுக்குச் செய்யும் சேவைக்காக ஒப்புவித்துள்ளார்கள். சகோதர சகோதரிகளே! 16 இத்தகையோரின் தலைமையை ஒத்துக்கொள்ளும்படியும் அவர்களோடு சேவை செய்கிற ஒவ்வொருவரையும் ஒப்புக்கொள்ளும்படியும் நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

17 ஸ்தேவான், பொர்த்துனாத்து, அகாயுக்கு ஆகியோர் வந்ததை அறிந்து சந்தோஷப்பட்டேன். நீங்கள் இங்கு இல்லை. ஆனால் அவர்கள் உங்கள் இடத்தை நிரப்பியுள்ளார்கள். 18 எனது ஆவிக்கும் உங்கள் ஆவிக்கும் அவர்கள் ஓய்வளித்துள்ளார்கள். இத்தகைய மனிதரின் மதிப்பை நீங்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

19 ஆசியாவின் சபையினர் உங்களை வாழ்த்துகிறார்கள். ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறார்கள். அவர்களின் வீட்டில் சந்திக்கிற சபையும் உங்களை வாழ்த்துகிறது. 20 இங்குள்ள எல்லா சகோதர சகோதரிகளும் உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்கள். நீங்கள் சந்திக்கையில் பரிசுத்த முத்தத்தின் மூலம் ஒருவரையொருவர் வாழ்த்திக்கொள்ளுங்கள்.

21 பவுல் ஆகிய நான் இந்த வாழ்த்துதலை என் சொந்தக் கையினால் எழுதுகிறேன்.

22 கர்த்தரை நேசிக்காத எவனொருவனும் தேவனிடமிருந்து எந்நாளும் பிரிந்தவனாக முற்றிலும் அழிந்துபோனவனாக இருப்பானாக.

கர்த்தரே, வாரும்.

23 கர்த்தராகிய இயேசுவின் கிருபை உங்களோடு இருப்பதாக!

24 கிறிஸ்து இயேசுவில் என் அன்பு உங்கள் அனைவரோடும்கூட இருப்பதாக!

எசேக்கியேல் 14

14 இஸ்ரவேலின் மூப்பார்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் என்னோடு பேச உட்கார்ந்தார்கள். கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்; “மனுபுத்திரனே, இம்மனிதர்கள் உன்னோடு பேச வந்திருக்கிறார்கள். என்னிடம் ஆலோசனை கேட்க அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அம்மனிதர்கள் இன்னும் தங்கள் அசுத்தமான விக்கிரகங்களை வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் பாவத்தை உண்டுபண்ணுபவற்றை வைத்திருக்கிறார்கள். அவர்கள் அந்தச் சிலைகளை இன்னும் வழிபடுகிறார்கள். எனவே, என்னிடம் ஆலோசனை கேட்க எதற்காக அவர்கள் வரவேண்டும்? அவர்களது கேள்விகளுக்கு நான் பதில் சொல்வேனா? இல்லை! ஆனால் நான் ஒரு பதிலைச் சொல்வேன். நான் அவர்களைத் தண்டிப்பேன்! நீ அவர்களிடம் இவற்றைக் கூறவேண்டும். ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்; எந்த இஸ்ரவேலராவது ஒரு தீர்க்கதரிசியிடம் வந்து என்னிடம் ஆலோசனை கேட்டால், அவனுக்கு அத்தீர்க்கதரிசி பதில் சொல்லமாட்டான். அவனது கேள்விக்கு நானே பதில் கூறுவேன். இன்னும் அவனிடம் அந்த அசுத்தமான விக்கிரகங்கள் இருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கி வந்தாலும், இன்னும் அவர்கள் பாவத்தைச் செய்யத் தூண்டும் பொருட்களை வைத்திருந்தாலும் நான் பதில் சொல்வேன். அவனுடைய அசுத்த விக்கிரகங்கள் இன்னும் இருந்தபொழுதும் நான் அவனுடன் பேசுவேன். ஏனென்றால், நான் அவர்களின் இதயத்தைத் தொட விரும்புகிறேன். என்னத்தான் அவர்கள் அசுத்தமான விக்கிரகங்களை வணங்க என்னை விட்டு விலகினாலும், நான் அவர்களை நேசிக்கிறேன் என்பதைக் காட்டவேண்டும்.’

“எனவே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல், ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: என்னிடம் திரும்பி வாருங்கள், உங்கள் அசுத்த விக்கிரகங்களை விட்டுவிடுங்கள். அப்பொய்யான தெய்வங்களை விட்டு விலகிப்போங்கள். இஸ்ரவேலில் வாழும் இஸ்ரவேலனோ அல்லது அயல்நாட்டுக்காரனோ என்னிடம் ஆலோசனை கேட்க வந்தால், நான் அவனுக்குப் பதில் சொல்வேன். அவன் இன்னும் அந்த அசுத்த விக்கிரகங்களை வைத்திருந்தாலும், இன்னும் அவன் பாவத்தை உண்டுபண்ணுகின்றவற்றை வைத்திருந்தாலும், இன்னும் அவன் அச்சிலைகளை வணங்கினாலும், நான் அவனுக்கு பதில் சொல்வேன். அவனுக்கு நான் தரும் பதில் இதுதான். நான் அவனுக்கு எதிராகத் திரும்புவேன். நான் அவனை அழிப்பேன். அவன் மற்ற ஜனங்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பான். ஜனங்கள் அவனைப் பார்த்துச் சிரிப்பார்கள். நான் அவனை எனது ஜனங்களிலிருந்து விலக்குவேன். பிறகு நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்! ஒரு தீர்க்கதரிசி முட்டாளைப்போன்று தன் சொந்தமாக ஒரு பதிலைச் சொன்னால், அப்பொழுது நான் அவன் எவ்வளவு மதியீனன் என்பதை அவனுக்குக் காட்டுவேன். நான் அவனுக்கு எதிராக எனது வல்லமையைக் காட்டுவேன்! நான் அவனை அழித்து எனது இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து விலக்குவேன். 10 எனவே, ஆலோசனைக்கு வருபவன் பதில் சொல்லும் தீர்க்கதரிசி, என இருவரும் ஒரே தண்டனையைப் பெறுவார்கள். 11 ஏன்? எனது ஜனங்களை என்னிடமிருந்து வழிதப்பிப் போக அந்தத் தீர்க்கதரிசிகள் தூண்டுவதை உற்சாகப்படுத்தவேண்டும். எனவே எனது ஜனங்கள் அவர்கள் பாவங்களால் அசுத்தமாகாமல் தடுக்கப்படுவார்கள். பின்னர் அவர்கள் எனது சிறப்புக்குரிய ஜனங்களாவார்கள். நான் அவர்களின் தேவனாய் இருப்பேன்.’” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

எருசலேம் தண்டிக்கப்படும்

12 பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: 13 “மனுபுத்திரனே, என்னை விட்டு விலகி எனக்கு எதிராகப் பாவம் செய்யும் எந்த நாட்டையும் நான் தண்டிப்பேன். நான் அவர்களுக்கு உணவு கொடுக்கப்படுவதை நிறுத்துவேன். நான் பசி காலத்திற்குக் காரணம் ஆவேன். அந்நாட்டை விட்டு மனிதர்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 14 நான் அந்நாட்டை அங்கு நோவா, தானியேல், யோபு போன்றவர்கள் வாழ்ந்தாலும் கூடத் தண்டிப்பேன். தங்கள் நற்குணத்தினால் அம்மனிதர்கள் தம் சொந்த உயிரைக் காப்பாற்றமுடியும். ஆனால் அவர்களால் முழு நாட்டையும் காப்பாற்ற முடியாது.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

15 தேவன் சொன்னார்: “அல்லது நான் காட்டு விலங்குகளை அந்நாட்டிற்கு அனுப்புவேன். அவ்விலங்குகள் அனைத்து ஜனங்களையும் கொல்லும், அக்காட்டு விலங்குகளால் எவரும் அந்நாட்டின் வழியாகப் பயணம் செய்ய முடியாது. 16 நோவா, தானியேல், யோபு ஆகியோர் வாழ்ந்தால் நான் அம்மூன்று பேரையும் காப்பாற்றுவேன். அம்மூன்று பேரும் தம் சொந்த உயிரைக் காப்பாற்றுவார்கள். ஆனால் நான் என் வாழ்வில் வாக்களித்தபடி, அவர்களால் மற்றவர்களின் உயிரை காப்பாற்றமுடியாது. அது அவர்களது சொந்த மகன்கள் அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

17 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டுக்கு எதிராகப் போரிட ஒரு பகைப்படையை அனுப்பலாம். அவ்வீரர்கள் அந்நாட்டை அழிக்கலாம். நான் அந்நாட்டிலுள்ள அனைத்து ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 18 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கே வாழ்ந்தாலும் நான் அம்மூன்று நல்லவர்களை மட்டுமே காப்பாற்றுவேன். அம்மூன்றுபேராலும் தங்கள் உயிரைத்தான் காப்பாற்ற முடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் அளித்த வாக்குறுதிப்படி அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாக அல்லது மகள்களாக இருந்தாலும் காப்பாற்றமுடியாது! அத்தீய நாடு அழிக்கப்படும்!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

19 தேவன் சொன்னார்: “அல்லது அந்நாட்டிற்கு எதிராக நான் கொள்ளை நோயை அனுப்பலாம். நான் என் கடுங்கோபத்தை அதன் மீது இரத்தச் சிந்துதலுடன் ஊற்றுவேன். நான் அந்நாட்டிலுள்ள எல்லா ஜனங்களையும் விலங்குகளையும் விலக்குவேன். 20 நோவா, தானியேல், யோபு ஆகியோர் அங்கு வாழ்ந்தாலும், நான் அம்மூன்று பேரை மட்டும் காப்பாற்றுவேன். ஏனென்றால் அவர்கள் நல்லவர்கள். அம்மூன்று பேராலும் தங்கள் உயிரை மட்டுமே காப்பாற்றமுடியும். ஆனால் நான் என் உயிரின்மேல் வாக்களிக்கிறேன், அவர்களால் மற்றவர்களின் உயிரை, அது அவர்களது மகன்களாகவோ, மகள்களாகவோ இருந்தாலும் காப்பாற்றமுடியாது!” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவ்வாறு கூறினார்.

21 பிறகு எனது கர்த்தராகிய ஆண்டவர் மேலும் சொன்னார். “எனவே எருசலேமிற்கு இது எவ்வளவு கேடானது என்று எண்ணிப்பார். நான் இந்த நகரத்திற்கு எதிராக இந்நான்கு தண்டனைகளையும் அனுப்புவேன். நான் பகைவரின் படை, பசி, நோய், காட்டுமிருகங்கள் ஆகியவற்றை நகருக்கெதிராக அனுப்புவேன். நான் அந்நாட்டிலுள்ள ஜனங்களையும் விலங்குளையும் வெளியே அனுப்புவேன்! 22 ஜனங்களில் சிலர் அந்நாட்டிலிருந்து தப்பித்துக்கொள்வார்கள். அவர்கள் உதவிக்காகத் தம் மகன்களையும் மகள்களையும் உன்னிடம் அழைத்து வருவார்கள். பின்னர் அவர்கள் உண்மையில் எவ்வளவு மோசமானவர்கள் என்பதை நீ அறிவாய். நான் எருசலேமிற்குக் கொடுத்த துன்பங்கள் எல்லாம் பரவாயில்லை என்று நீ உணர்வாய். 23 அவர்கள் வாழும் வாழ்வையும் செய்யும் தீமையையும் நீ பார்ப்பாய். பிறகு, நான் அவர்களைத் தண்டித்ததற்குச் சரியான காரணம் உண்டென்று நீ அறிவாய்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.

சங்கீதம் 55

இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்குத் தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்.

55 தேவனே, என் ஜெபத்தைக் கேளும்.
    இரக்கத்திற்கான என் ஜெபத்தை ஒதுக்காதிரும்.
தேவனே, எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்.
    என் குறைகளை உம்மிடம் நான் முறையிடுவேன்.
என் பகைவன் என்னிடம் தீய காரியங்களைக் கூறினான்.
    கெட்ட மனிதர்கள் என்னை நோக்கிக் கூக்குரலிட்டார்கள்.
என் பகைவர்கள் கோபங்கொண்டு என்னைத் தாக்கினார்கள்.
    என்னை வீழ்த்தும்படி தொல்லைகளை எனக்குச் செய்தார்கள்.
என் இருதயம் எனக்குள் நடுங்கித் துன்புறுகிறது.
    நான் மரணபயம் அடைந்தேன்.
நான் அஞ்சி நடுங்கினேன்.
    பயத்தால் தாக்குண்டேன்.
ஒரு புறாவைப்போல் சிறகுகள் எனக்கு வேண்டுமென விரும்பினேன்.
    அப்போது நான் பறந்துபோய் ஓய்வுகொள்ளும் இடத்தைத் தேடியிருப்பேன்.
    நான் தூரத்திற்குப் போய், பாலைவனத்திற்குச் செல்வேன்.

நான் ஓடி தப்பித்துக்கொள்வேன்.
    துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
9-10 என் ஆண்டவரே, அவர்கள் பொய்களை நிறுத்தும்.
    இந்நகரில் அதிகமான கொடுமைகளையும், சண்டைகளையும் நான் காண்கிறேன்.
என்னைச் சுற்றிலும் இரவும் பகலும் ஊரின் ஒவ்வொரு பகுதியிலும் குற்றங்களும், கொடுமைகளும் நிரம்பியுள்ளன.
    இந்த ஊரில் பயங்கரமான காரியங்கள் நிகழ்கின்றன.
11 தெருக்களில் பெருங்குற்றங்கள் நேரிடுகின்றன.
    ஜனங்கள் பொய்களைக்கூறி, எங்கும் ஏமாற்றுகிறார்கள்.

12 ஒரு பகைவன் என்னைத் தாக்கினால் நான் பொறுத்துக்கொள்வேன்.
    என் பகைவர்கள் என்னைத் தாக்கினால் நான் ஒளிந்துக்கொள்வேன்.
13 ஆனால் எனக்குச் சமமானவனும், என்னுடன் வாழ்பவனும்,
    என் நண்பனுமாகிய நீயே எனக்குத் தொல்லைகளைத் தந்துகொண்டிருக்கிறாய்.
14 நாங்கள் எங்கள் இரகசியங்களைப் பகிர்ந்து கொண்டோம்.
    தேவனுடைய ஆலயத்தில் நாங்கள் ஒருமித்து வழிப்பட்டோம்.

15 என் பகைவர்கள் அவர்கள் காலத்திற்கு முன்னே மரிப்பார்கள் என நம்புகிறேன்.
    அவர்கள் உயிரோடே புதைக்கப்படுவார்கள் என நம்புகிறேன்!
    ஏனெனில் அவர்கள் தங்கள் வீடுகளில் மிகப் பயங்கரமான காரியங்களைத் திட்டமிடுகிறார்கள்.

16 உதவிக்காக நான் தேவனைக் கூப்பிடுவேன்.
    கர்த்தர் எனக்குப் பதில் தருவார்.
17 நான் தேவனோடு மாலை, காலை, நடுப்பகல் வேளைகளில் பேசுவேன்.
    என் முறையீடுகளை தேவனுக்குச் சொல்வேன். அவர் நான் கூறுபவற்றைக் கேட்கிறார்!
18 நான் பல யுத்தங்களில் போரிட்டுள்ளேன்.
    ஆனால் தேவன் எல்லாவற்றிலும் என்னைக் காப்பாற்றி, என்னைப் பத்திரமாகத் திரும்பவும் அழைத்து வந்தார்.
19 தேவன் நான் கூறுவதைக் கேட்கிறார்.
    நித்திய அரசர் எனக்கு உதவுவார்.

20 என் பகைவர்கள் தங்கள் வாழ்க்கையை மாற்றமாட்டார்கள்.
    அவர்கள் தேவனுக்குப் பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டார்கள்.
21 என் பகைவர்கள் தங்கள் சொந்த நண்பர்களைத் தாக்குகிறார்கள்.
    அவர்கள் செய்வதாக ஒப்புக்கொள்ளும் காரியங்களைச் செய்யமாட்டார்கள்.
என் பகைவர்கள் மென்மையாகப் பேசுகிறார்கள்.
    அவர்கள் சமாதானத்தைக் குறித்துப் பேசுகிறார்கள்.
ஆனால் உண்மையில் யுத்தங்களுக்குத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் சொற்கள் எண்ணெயைப் போல் மிருதுவானவை.
    ஆனால் அவை கத்தியைப்போல் ஊடுருவக் கூடியவை.

22 உங்கள் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படைத்துவிடுங்கள்.
    அவர் உங்களை ஆதரிப்பார். நல்ல ஜனங்கள் தோல்வி காண்பதற்கு கர்த்தர் அனுமதியார்.
23 உடன்படிக்கையின் உமது பங்காக, தேவனே அந்தப் பொய்யர்களையும், கொலைக்காரர்களையும் அவர்களின் பாதி வாழ்க்கை கழியும் முன்பே அவர்களைக் கல்லறைக்கு அனுப்பிவிடும்!
    உடன்படிக்கையின் எனது பங்காக நான் உம்மேல் நம்பிக்கை வைப்பேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center