Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
2 சாமுவேல் 4-5

சவுலின் குடும்பத்திற்குத் தொல்லைகள்

எப்ரோனில் அப்னேர் மரித்தான் என்பதை சவுலின் மகனான இஸ்போசேத் கேள்விப்பட்டான். இஸ்போசேத்தும் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் மிகவும் அச்சம் கொண்டனர். சவுலின் மகனாகிய இஸ்போசேத்தைப் பார்ப்பதற்கு இருவர் சென்றனர். அவர்கள் படைத்தலைவர்களாக இருந்தனர். அவர்கள் ரிம்மோனின் மகன்களாகிய, ரேகாபும், பானாவும் ஆவார்கள். (ரிம்மோன் பேரோத்தைச் சேர்ந்தவன். பென்யமீன் கோத்திரத்திற்கு உரிய நகரமாக பேரோத் இருந்ததால் அவர்கள் பென்யமீனியர் ஆவார்கள். ஆனால் பேரோத்தின் ஜனங்கள் கித்தாயீமிற்கு ஓடிவிட்டனர். அவர்கள் இன்றும் அங்கேயே வசித்து வருகின்றனர்.)

சவுலின் மகனாகிய யோனத்தானுக்கு மேவிபோசேத் என்னும் பெயருள்ள மகன் இருந்தான். சவுலும் யோனத்தானும் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி யெஸ்ரயேலிலிருந்து வந்தபோது மேவிபோசேத்திற்கு ஐந்து வயது ஆகியிருந்தது. பகைவர்கள் வருவார்கள் என எதிர்பார்த்ததால் மேவிபோசேத்தை வளர்த்த தாதி பெண் அச்சம் கொண்டாள். எனவே அவள் அவனைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். அவ்வாறு ஓடியபோது அவள் குழந்தையைத் தவறி போட்டுவிட்டாள். எனவே அவனது இரண்டு கால்களும் முடமாயின.

பேரோத்திலுள்ள ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்கு நண்பகலில் சென்றார்கள். வெப்பம் மிகுதியாக இருந்ததால் இஸ்போசேத் ஓய்வெடுத்துக்கொண்டிருந்தான். 6-7 கோதுமை எடுக்க வந்தவர்களைப் போன்று ரேகாபும் பானாவும் வீட்டிற்குள் புகுந்தனர். படுக்கையறையில் இஸ்போசேத் சாய்ந்திருந்தான். அவனை ரேகாபும் பானாவும் குத்திக் கொன்றார்கள். பின் அவனது தலையை வெட்டி எடுத்துக் கொண்டு யோர்தான் பள்ளத்தாக்கு வழியாக இரவு முழுவதும் பயணம் செய்தனர். அவர்கள் எப்ரோனை வந்தடைந்தனர். இஸ்போசேத்தின் தலையை தாவீதிடம் கொடுத்தனர்.

ரிம்மோனின் பிள்ளைகளாகிய ரேகாபும் பானாவும் தாவீது அரசனை நோக்கி, “இதோ உம்மைக் கொல்ல முயன்ற உமது பகைவனாகிய சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை, உமக்காக இன்று கர்த்தர் சவுலையும் அவனது குடும்பத்தாரையும் தண்டித்துள்ளார்” என்றனர்.

ஆனால் தாவீது ரேகாபையும் அவனது சகோதரன் பானாவையும் நோக்கி, “கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வாறே அவர் என்னைத் தொல்லைகளிலிருந்து விடுவித்ததும் நிச்சயம். 10 ஆனால் முன்பொருமுறை ஒருவன் எனக்கு ஏதோ நற்செய்தி கொண்டுவருவதாக எண்ணினான். அவன் என்னிடம், ‘பாருங்கள் சவுலை கொன்றதினால் மரித்துவிட்டான்’ என்றான். அச்செய்தியைக் கொண்டு வந்ததற்காக ஏதேனும் பரிசளிப்பேன் என்று அவன் எண்ணினான். ஆனால் அம்மனிதனைப் பிடித்து சிக்லாக் என்னும் இடத்தில் அவனைக் கொன்றேன். 11 எனவே உன்னையும் நான் கொன்று இத்தேசத்திலிருந்து அகற்றவேண்டும். ஏனெனில் துஷ்டராகிய நீங்கள் ஒரு நல்ல மனிதனை வீட்டிற்குள், அவனது படுக்கையில் உறங்கிக்கொண்டிருக்கும்போது கொன்றீர்கள்” என்றான்.

12 எனவே ரேகாபையும் பானாவையும் கொல்லும்படி தனது இளம் வீரர்களுக்கு தாவீது கட்டளையிட்டான். அந்த இளம் வீரர்கள் ரேகாப், பானா ஆகியோரின் கைகளையும் கால்களையும் வெட்டி எப்ரோன் குளத்தருகே தொங்கவிட்டார்கள். பின் அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எடுத்து எப்ரோனில் அப்னேர் புதைக்கப்பட்ட இடத்திலேயே புதைத்தார்கள்.

இஸ்ரவேலர் தாவீதை அரசனாக்குகிறார்கள்

இஸ்ரவேல் கோத்திரங்கள் எல்லோரும் எப்ரோனில் தாவீதிடம் கூடிவந்தார்கள். அவர்கள் தாவீதை நோக்கி, “நாம் எல்லோரும் ஒரே குடும்பத்தார்! [a] சவுல் நமது அரசனாக இருந்தபோதும் யுத்தத்தில் நீர் எங்களை வழி நடத்தினீர். யுத்தத்திலிருந்து இஸ்ரவேலரை அவர்கள் இருப்பிடத்திற்கு நீரே அழைத்து வந்தீர். கர்த்தர் உம்மிடம், ‘எனது ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு மேய்ப்பனாயிருப்பாய். இஸ்ரவேலுக்கு அரசனாக இருப்பாய்!’ என்று சொன்னார்” என்றார்கள்.

எனவே இஸ்ரவேலின் அனைத்து தலைவர்களும் தாவீதைச் சந்திப்பதற்காக எப்ரோன் என்னும் நகருக்கு வந்தார்கள். தாவீது அரசன் இத்தலைவர்களோடு கர்த்தருடைய முன்னிலையில் ஒரு ஒப்பந்தம் செய்துக்கொண்டான். இஸ்ரவேலின் அரசனாக தலைவர்கள் அனைவரும் தாவீதை அபிஷேகம் பண்ணினார்கள்.

தாவீது அரசாள ஆரம்பித்தபோது அவனுக்கு 30 வயது. அவன் 40 ஆண்டுகள் அரசாண்டான். எப்ரோனில் 7 ஆண்டு 6 மாதங்கள் அவன் யூதர்களுக்கு அரசனாக இருந்தான். எருசலேமில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் 33 ஆண்டுகள் அரசனாக இருந்தான்.

எருசலேமில் தாவீதின் வெற்றி

அரசனும் அவனது வீரர்களும் எருசலேமில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற எபூசியரை எதிர்த்துப் போரிடுவதற்குச் சென்றனர். எபூசியர்கள் தாவீதிடம், “எங்கள் நகரத்திற்குள் உங்களால் வரமுடியாது. [b] எங்களில் குருடர்களும் முடவர்களுங்கூட உங்களைத் தடுத்து நிறுத்தமுடியும்” என்றனர். (தாவீது, அவர்கள் நகரத்திற்குள் நுழையமாட்டான் என்று அவர்கள் நினைத்ததால் இவ்வாறு கூறினார்கள். ஆனால் தாவீது சீயோன் கோட்டையைப் பிடித்தான். இக்கோட்டை பின்பு தாவீதின் நகரமாயிற்று.)

அந்த நாளில் தாவீது தனது ஆட்களை நோக்கி, “நீங்கள் எபூசியரை வெல்ல விரும்பினால், தண்ணீர் குகை [c] வழியே சென்று ‘முடவரும், குருடரும்’ ஆகிய பகைவரை நெருங்குங்கள்” என்றான். இதனால்தான் மக்கள், “குருடரும் முடவரும் வீட்டினுள் வரமுடியாது” என்பார்கள்.

கோட்டையினுள் தாவீது வாழ்ந்தான். அதை “தாவீதின் நகரம்” என்று அழைத்தான், மில்லோ என்னும் கோபுர பகுதியையும் தாவீது கட்டினான். நகரத்திற்குள்ளும் பல கட்டிடங்களை கட்டினான். 10 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் தாவீதோடிருந்ததால் அவன் பலம் மிகுந்தவனானான்.

11 தீருவின் அரசனாகிய ஈராம் தாவீதினிடம் தூதுவர்களை அனுப்பினான். கேதுரு மரங்களையும் தச்சரையும், சிற்பிகளையும் அனுப்பினான். அவர்கள் தாவீதுக்கென்று ஒரு வீட்டைக் கட்டினார்கள். 12 அப்போது தாவீது கர்த்தர் தன்னை உண்மையாகவே இஸ்ரவேலின் அரசனாக்கியதை அறிந்தான். தேவனுடைய ஜனங்களாகிய இஸ்ரவேலருக்கு தனது அரசை கர்த்தர் முக்கியமானதாக ஆக்கினார் என்பதை அவன் உணர்ந்தான்.

13 தாவீது எப்ரோனிலிருந்து எருசலேமுக்கு குடி பெயர்ந்தான். எருசலேமுக்கு வந்த பின் தாவீது இன்னும் பல மனைவியரையும் வேலைக்காரிகளையும் சேர்த்துக்கொண்டான். அவனுக்கு மேலும் பிள்ளைகள் பிறந்தனர். 14 எருசலேமில் தாவீதுக்குப் பிறந்த பிள்ளைகளின் பெயர்கள் இவைகளே: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன், 15 இப்பார், எலிசூவா, நெப்பேக், யப்பியா, 16 எலிஷாமா, எலியாதா, எலிப்பேலேத்.

பெலிஸ்தியருக்கு எதிராக தாவீது சண்டையிடுகிறான்

17 இஸ்ரவேலின் அரசனாக தாவீதை இஸ்ரவேலர் அபிஷேகம் செய்தார்கள் என்பதைப் பெலிஸ்தியர் கேள்விப்பட்டனர். தாவீதைக் கொன்றுவிடுவதற்காக பெலிஸ்தியர் அவனைத் தேடிப் புறப்பட்டனர். தாவீது இதையறிந்து எருசலேமில் கோட்டைக்குள் இருந்தான். 18 பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.

19 தாவீது கர்த்தரிடம், “நான் பெலிஸ்தியரை எதிர்த்துப் போரிட வேண்டுமா? பெலிஸ்தியரைத் தோற்கடிக்க நீர் எங்களுக்கு உதவுவீரா?” என்று கேட்டான்.

கர்த்தர் தாவீதிடம், “பெலிஸ்தியரைத் தோற்கடிப்பதற்கு நான் கண்டிப்பாக உதவுவேன்” என்றார்.

20 பின்பு தாவீது பாகால் பிராசீம் என்னும் இடத்துக்கு வந்து அந்த இடத்தில் பெலிஸ்தியரைக் தோற்கடித்தான். தாவீது, “உடைந்த அணையில் வெள்ளம் பெருக்கெடுப்பதைப்போல கர்த்தர் எனது பகைவர்களிடையே பாய்ந்தார்” என்று கூறினான். எனவே அவ்விடத்திற்குப் “பாகால் பிராசீம்” என்று பெயரிட்டான். 21 பெலிஸ்தியர்கள் பாகால் பிராசீமில் தம் தெய்வங்களின் உருவங்களை விட்டுச் சென்றனர். தாவீதும் அவன் ஆட்களும் அவற்றை அப்புறப்படுத்திவிட்டனர்.

22 மீண்டும் பெலிஸ்தியர் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கில் முகாமிட்டு தங்கினார்கள்.

23 தாவீது கர்த்தரிடம் பிராத்தனை செய்தான். இம்முறை கர்த்தர் தாவீதிடம், “நீ அங்குப் போகாதே. அவர்கள் படைக்குப் பின்னே சென்று வளைத்துக்கொள். முசுக்கட்டை செடிகளுக்கு அருகே இருந்து அவர்களைத் தாக்கு. 24 முசுக்கட்டை செடிகளின் உச்சியிலிருந்து பெலிஸ்தியர் போருக்காக அணிவகுத்து வரும் ஒலியைக் கேட்பீர்கள். அப்போது நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். ஏனெனில் அதுவே கர்த்தர் உங்களுக்கு முன்பாக சென்று பெலிஸ்தியரைத் தோற்கடிக்கும் சமயமாகும்” என்றார்.

25 கர்த்தர் கட்டளையிட்டபடியே தாவீது செய்தான். அவன் பெலிஸ்தியரை வென்றான். கேபாவிலிருந்து கேசேர் வரைக்கும் அவர்களைத் துரத்தினான்.

1 கொரி 15

கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி

15 சகோதர சகோதரிகளே, உங்களுக்குக் கூறிய நற்செய்தியை இப்போது நீங்கள் நினைவுகூரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். நீங்கள் இச்செய்தியைப் பெற்றீர்கள். அச்செய்தியில் உறுதியாய்த் தொடருங்கள். நீங்கள் இந்நற்செய்தியால் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள். ஆனால் நான் உங்களுக்குச் சொன்னவற்றை தொடர்ந்து நம்புங்கள். அங்ஙனம் செய்யாத பட்சத்தில் உங்களின் விசுவாசம் வீணாய் போகும்.

நான் பெற்ற செய்தியை உங்களுக்கு அறிவித்தேன். நான் உங்களுக்கு மிக முக்கியமான விஷயங்களைக் கூறினேன். வேத வாக்கியங்கள் கூறியபடியே, கிறிஸ்து நமது பாவங்களுக்காக மரித்தார். வேதவாக்கியங்கள் கூறியபடியே கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட்டார். கிறிஸ்து தன்னைப் பேதுருவுக்கும் பின்னர் பன்னிரண்டு அப்போஸ்தருக்கும் காட்சியளித்தார். அதற்குப் பிறகு கிறிஸ்து 500 சகோதரர்களுக்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே சமயத்தில் தன்னை வெளிப்படுத்தினார். அவர்களில் பலர் இன்னும் உயிரோடு இருக்கிறார்கள். சிலர் மறைந்துவிட்டனர். அதன் பின்னர் கிறிஸ்து யாக்கோபுக்கும் பிறகு மீண்டும் எல்லாச் சீஷர்களுக்கும் காட்சியளித்தார். இறுதியாக வழக்கமற்ற முறையில் பிறந்த ஒருவனைப் போன்ற எனக்கும் கிறிஸ்து தன்னைக் காண்பித்தார்.

மற்ற எல்லா அப்போஸ்தலர்களும் என்னைக் காட்டிலும் சிறந்தவர்கள். நான் தேவனுடைய சபையைத் துன்பப்படுத்தியவன். எனவே அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்கும் நான் தகுதியுடையவன் அல்ல. 10 ஆனால் தேவனுடைய இரக்கத்தினால் இப்போதைய எனது தகுதியைப் பெற்றேன். தேவன் என்னிடம் காட்டிய இரக்கம் வீணாய் போகவில்லை. நான் மற்ற எல்லா அப்போஸ்தலரைக் காட்டிலும் கடினமாய் உழைத்தேன். (ஆனால், உண்மையில் உழைப்பவன் நான் அல்ல. தேவனுடைய இரக்கமே என்னோடு இருந்தது.) 11 நான் உங்களுக்குப் போதித்தேனா, அல்லது மற்ற அப்போஸ்தலர்கள் உங்களுக்குப் போதித்தார்களா என்பது முக்கியமில்லை. நாங்கள் எல்லாரும் ஒரே விஷயத்தையே போதிக்கிறோம். இதையே நீங்களும் நம்பினீர்கள்.

நமது உயிர்த்தெழுதல்

12 கிறிஸ்து மரணத்தில் இருந்து எழுப்பப்பட்டார் என்று போதிக்கிறோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்பட முடியாது என்று உங்களில் சிலர் கூறுவதேன்? 13 மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படமாட்டார்கள் என்றால் கிறிஸ்துவும் ஒருபோதும் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். 14 மரணத்திலிருந்து ஒருபோதும் கிறிஸ்து எழுப்பப்பட்டிருக்கவில்லை எனில், பிறகு எங்கள் போதனை எந்தத் தகுதியுமற்றது. மேலும் உங்கள் விசுவாசம் தகுதியற்றதாகிறது. 15 நாம் தேவனைப் பற்றி பொய்யுரைக்கும் களங்கம் உடையவர்கள் ஆவோம். ஏனென்றால் தேவன் கிறிஸ்துவை மரணத்தில் இருந்து எழுப்பினாரென்று நாம் தேவனைக் குறித்துப் போதித்துள்ளோம். மக்கள் மரணத்திலிருந்து எழுப்பப்படுவதில்லை என்றால் கிறிஸ்துவும் தேவனால் மரணத்திலிருந்து எழுப்பப்படவில்லை எனலாம். 16 இறந்தோர் எழுப்பப்படாவிட்டால் கிறிஸ்துவும் கூட எழுப்பப்பட்டிருக்கவில்லை எனலாம். 17 கிறிஸ்து எழுப்பப்படவில்லை என்றால் உங்கள் விசுவாசம் வீணானது. இன்னும் நீங்கள் அனைவரும் பாவிகளாக இருக்கிறீர்கள். 18 ஏற்கெனவே இறந்துபோன கிறிஸ்துவின் மக்களும் அழிந்துபோயிருப்பார்கள். 19 இவ்வாழ்க்கைக்காக மட்டுமே கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்போமானால் வேறெவரைக் காட்டிலும் நாமே அதிக பரிதாபத்துக்குரியவர்களாகக் காணப்படுவோம்.

20 ஏற்கெனவே மரணமடைந்த விசுவாசிகளில் முதல்வராய் கிறிஸ்து உண்மையாகவே மரணத்திலிருந்து எழுப்பப்பட்டார். 21 ஒரு மனிதனின் (ஆதாமின்) செய்கையினால் மனிதர்களுக்கு மரணம் நேர்கிறது. மரணத்தில் இருந்து எழும்புதலும் ஒரு மனிதனால் (கிறிஸ்துவால்) நேர்கிறது. 22 ஆதாமில் நாம் எல்லாரும் இறக்கிறோம். அதைப்போன்று கிறிஸ்துவில் நாம் அனைவரும் மீண்டும் வாழ அனுமதிக்கப்படுகிறோம். 23 ஆனால் தகுந்த வரிசைப்படியே ஒவ்வொரு மனிதனும் எழுப்பப்படுவான். கிறிஸ்து முதலில் எழுப்பப்பட்டார். கிறிஸ்து மீண்டும் வரும்போது கிறிஸ்துவின் மக்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள். 24 அப்போது முடிவு வரும். எல்லா ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும், சக்திகளையும் கிறிஸ்து அழிப்பார். பிதாவாகிய தேவனிடம் கிறிஸ்து இராஜ்யத்தை ஒப்படைப்பார்.

25 கிறிஸ்துவின் அதிகாரத்துக்குள் எல்லா பகைவர்களும் வரும்வரைக்கும் கிறிஸ்து ஆளவேண்டும். 26 கடைசியில் அழிக்கப்படும் சத்துரு மரணம் ஆகும். 27 “தேவன் அவரது அதிகாரத்துக்குள் எல்லாவற்றையும் வைத்தார்” [a] என்று வேதவாக்கியங்கள் சொல்கின்றன. “எல்லாப் பொருள்களும் அவரது (கிறிஸ்துவின்) அதிகாரத்துக்கு உட்பட்டது” எனும்போது தேவனை உள்ளடக்கிக் கூறவில்லை என்பது தெளிவாகிறது. எல்லாவற்றையும் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தியவர் தேவனே. 28 எல்லாம் கிறிஸ்துவின் அதிகாரத்துக்குட்படுத்தப்பட்டதும் தேவனுடைய அதிகாரத்துக்குள் குமாரனும் (கிறிஸ்துவும்) உட்படுத்தப்படுவார். அனைத்தையும் கிறிஸ்துவின் கட்டுப்பாட்டின் கீழ் தேவனே உட்படுத்துகிறார். தேவன் எல்லாவற்றின்மீதும் முழுமையாக ஆட்சியாளராக இருக்கும் வகையில் கிறிஸ்து தேவனுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறார்.

29 மரணத்திலிருந்து மக்கள் எழுப்பப்படமாட்டார்கள் என்றால், ஞானஸ்நானம் பெற்ற மக்கள் மரணமடைந்தவர்களுக்குச் செய்ய வேண்டியதென்ன? மரணமடைந்த மக்கள் எழுப்பப்படவில்லை என்றால் மக்கள் அவர்களுக்காக ஞானஸ்நானம் பெறுவதேன்?

30 நமது நிலை என்ன? ஒவ்வொரு மணி நேரமும் ஏன் நாம் ஆபத்துக்குள்ளாகிறோம்? 31 நான் தினமும் மரணமடைகிறேன். கிறிஸ்து இயேசுவாகிய நமது கர்த்தருக்குள் நான் உங்களைக் குறித்துப் பெருமை பாராட்டுவது போன்ற உண்மை அதுவாகும். 32 எபேசுவில் கொடிய விலங்குகளோடு என் பெருமையை திருப்திப்படுத்தும் எண்ணத்தோடு போராடினேன் என்று கூறினால் எனக்கு எந்த நன்மையுமில்லை. மக்கள் மரணத்தில் இருந்து எழுப்பப்படுவதில்லை என்றால், “நாம் நாளை மரணம் அடையக் கூடுமென்பதால் உண்டு பருகுவோம்.” [b] என்று சொல்லலாமே.

33 முட்டாளாக்கப்படாதீர்கள். “தீய நண்பர்கள் நல்ல பழக்கங்களைக் கெடுப்பார்கள்.” 34 சரியானபடி சிந்திக்க ஆரம்பியுங்கள். பாவம் செய்யாதீர்கள். உங்களில் சிலர் தேவனை அறியவில்லை. நீங்கள் வெட்கப்படும்படியாக இதைக் கூறுகிறேன்.

மகிமையின் சரீரம்

35 “எப்படி இறந்தோர் எழுப்பப்படுவர்? அவர்களுக்கு எத்தகைய சரீரம் அமையும்?” என்று சிலர் கேட்கக்கூடும். 36 என்ன ஒரு தேவையற்ற கேள்வி! எதையேனும் விதைத்தால் அது மீண்டும் உயிர்பெற்று வளருவதற்கு முன் பூமியில் விழுந்து மடியும். 37 அது பூமியில் இருந்து வளரும்போது பெறுகின்ற “தோற்றத்தை” அதை பூமியில் விதைக்கும்போது பெற்றிருப்பதில்லை. நீங்கள் விதைப்பது கோதுமை அல்லது வேறு ஏதாவது ஒரு தானிய விதை மட்டுமே. 38 ஆனால் தேவன் அதற்கு என வகுக்கப்பட்டுள்ள ஓர் உருவைக் கொடுக்கிறார். ஒவ்வொரு வகையான விதைக்கும் அதற்குரிய உருவத்தை அளிக்கிறார். 39 மாம்சத்திலான உயிர்கள் அனைத்தும் ஒரே வகையான உருவைப் பெற்றிருக்கவில்லை. மனிதர் ஒருவகை உருவையும், விலங்குகள் மற்றொரு வகை உருவத்தையும், பறவைகள் இன்னொரு வகை தோற்றத்தையும் மீன்கள் பிறிதொரு அமைப்பையும் பெற்றிருக்கின்றன. 40 வானத்துக்குரிய சரீரங்களும் உண்டு. மண்ணுக்குரிய சரீரங்களும் உண்டு. வானத்துக்குரிய சரீரங்களின் அழகு ஒருவகையானது. மண்ணுக்குரிய சரீரங்களின் அழகு மற்றொரு வகையானது. 41 சூரியனுக்கு ஒருவகை அழகும், சந்திரனுக்கு மற்றொரு வகை அழகும், நட்சத்திரங்களுக்கு வேறு வகையான அழகும் உண்டு. ஒவ்வொரு நட்சத்திரமும் அழகில் வேறுபட்டது.

42 மரணமடைந்த மக்கள் எழுப்பப்படும்போதும் இவ்வாறே நிகழும். மரணத்தின் பின் “புதைக்கப்பட்ட” சரீரம் கெட்டு அழியும். ஆனால் எழுப்பப்பட்ட சரீரம் அழிவற்ற வாழ்வைக் கொண்டிருக்கும். 43 சரீரம் “புதைக்கப்படுகிறபோது” மரணத்திற்கு எந்த கௌரமும் இல்லை. ஆனால் அது மீண்டும் எழுப்பப்படும்போது அது மகிமையில் எழுப்பப்படுகிறது. புதைக்கப்படுகிறபோது பலவீனமாக இருக்கிறது. ஆனால் அது ஆற்றலில் எழுப்பப்படுகிறது. 44 “அடக்கம் செய்யப்பட்ட” சரீரம் பூத சரீரம். எழுப்பப்படும்போது அது ஆவிக்குரிய சரீரமாகும். பூத சரீரம் ஒன்று உண்டு.

எனவே ஆவிக்குரிய சரீரமும் உண்டு. 45 இதே பொருளில் “முதல் மனிதன் (ஆதாம்) உயிருள்ளவனானான்.” [c] இறுதி ஆதாமாகிய கிறிஸ்துவோ உயிரளிக்கும் ஆவியானவரானார் என்று வேதவாக்கியம் கூறுகிறது. 46 ஆவிக்குரிய சரீரம் முதலில் தோன்றவில்லை. இயற்கையான சரீரத்துக்குரிய மனிதனே முதலில் தோன்றினான். பின்னரே ஆவிக்குரிய மனிதனின் தோற்றம் அமைந்தது. 47 முதல் மனிதன் பூமியின் மண்ணிலிருந்து வந்தவன். இரண்டாம் மனிதன் (கிறிஸ்து) பரலோகத்திலிருந்து வந்தவர். 48 மக்கள் பூமிக்குச் சொந்தமானவர்கள். அவர்கள் பூமியில் இருந்து வந்த முதல் மனிதனைப் போன்றவர்கள். ஆனால் பரலோகத்துக்குரிய மனிதர்கள் பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றவர்கள். 49 நாம் பூமியிலிருந்து வந்த மனிதனைப் போன்று அமைக்கப்பட்டோம். எனவே பரலோகத்திலிருந்து வந்த மனிதனைப் போன்றும் அமைக்கப்படுவோம்.

50 சகோதர சகோதரிகளே! நான் இதை உங்களுக்குக் கூறுகிறேன். மாம்சமும், இரத்தமும் (பூத சரீரம்) தேவனுடைய இராஜ்யத்தில் இருக்கமுடியாது! அழியத்தக்க பொருள் அழிவற்ற பொருளின் பாகமாக மாற முடியாது! 51 ஆனால் நான் கூறும் இரகசியத்தைக் கேளுங்கள். நாம் எல்லாரும் மரணமடைவதில்லை. நாம் மாற்றமுறுவோம். 52 கணத்தில் அது நிகழும். கண்ணிமைக்கும் நேரத்துக்குள் நமது மாற்றம் நிகழும். கடைசி எக்காளம் முழங்கும்போது இது நடக்கும். எக்காளம் முழங்கும், மரித்த விசுவாசிகள் எப்போதும் வாழும்படியாய் எழுப்பப்படுவார்கள். நாமும் கூட முழுமையாய் மாற்றம் அடைவோம். 53 அழியக் கூடிய இந்த சரீரம் என்றும் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். மரணமுறும் இந்த உடம்பு மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ள வேண்டும். 54 எனவே அழியக்கூடிய இந்த சரீரம் அழிவின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். மரணத்திற்குள்ளாகும் இச்சரீரம் மரணமின்மையால் தன்னைப் போர்த்திக்கொள்ளும். இது நடந்தேறும்போது வேத வாக்கியத்தின் வாசகம் உண்மையாகும்.

“மரணம் வெற்றிக்குள் விழுங்கப்பட்டது” (A)

55 “மரணமே, உன் வெற்றி எங்கே?
பாதாளமே, அழிக்கும் உன் வல்லமை எங்கே?” (B)

56 மரணத்தின் ஆற்றலே பாவம். பாவத்தின் ஆற்றலே சட்டமாகும். 57 நாம் தேவனுக்கு நன்றி கூறுவோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக அவர் நமக்கு வெற்றியை அருளினார்.

58 எனவே என் அன்பான சகோதர சகோதரிகளே, உறுதியாய் நில்லுங்கள். எதுவும் உங்களை மாற்றாமல் இருக்கட்டும். எப்போதும் முழுமையாக உங்களைக் கர்த்தரின் பணிக்கு ஒப்புக்கொடுங்கள். கர்த்தருக்கான உங்கள் பணி வீணாகப் போவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.

எசேக்கியேல் 13

13 பிறகு கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எனக்காக இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளிடம் பேச வேண்டும். அத்தீர்க்கதரிசிகள் உண்மையில் எனக்காகப் பேசவில்லை, அவர்கள் தாம் சொல்ல விரும்புவதையே சொல்கிறார்கள். எனவே நீ அவர்களிடம் பேசவேண்டும். அவர்களிடம் இவற்றைப் பேசு, ‘கர்த்தரிடமிருந்து வந்த இச்செய்தியைக் கேளுங்கள்! எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார். மூடத் தீர்க்கதரிசிகளே, உங்களுக்குத் தீயவை ஏற்படும். நீங்கள் உங்களது சொந்த ஆவிகளைப் பின்பற்றுகிறீர்கள். நீங்கள் உண்மையில் எவற்றைத் தரிசிக்கிறீர்களோ அவற்றை ஜனங்களிடம் கூறுவதில்லை.

“‘இஸ்ரவேலே, உங்கள் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலும் பாழடைந்த கட்டிடங்களிலும் வாழும் நரிகளுக்கு ஒப்பானவர்கள். நீங்கள் நகரத்தின் உடைந்த சுவர்களுக்கு அருகில் படை வீரர்களை நிறுத்தி வைக்கவில்லை. நீங்கள் இஸ்ரவேல் வம்சத்தாரைப் பாதுகாப்பதற்காக சுவர்களைக் கட்டியிருக்கவில்லை. எனவே கர்த்தர் உங்களைத் தண்டிக்கும் காலம் வரும்போது நீங்கள் போரை இழப்பீர்கள்!

“‘பொய்த் தீர்க்கதரிசிகள் தரிசனங்களைக் கண்டதாகக் கூறினார்கள். அவர்கள் தம் மந்திரங்களைச் செய்தார்கள். அவர்கள் எதிர்காலத்தைக் குறித்து தீர்க்கதரிசனம் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் தம்மை கர்த்தர் அனுப்பியதாகச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் பொய் சொன்னார்கள். அவர்கள் இன்னும் தாம் கூறிய பொய்கள் உண்மையாவதற்காக காத்திருக்கிறார்கள்.

“‘பொய்த் தீர்க்கதரிசிகளே, நீங்கள் கண்ட தரிசனங்களெல்லாம் உண்மையல்ல. நீங்கள் உங்கள் மந்திரங்களைச் செய்தீர்கள். சில நிகழும் என்றீர்கள். ஆனால் நீங்கள் பொய் சொன்னீர்கள்! கர்த்தர் அவற்றைக் கூறியதாக நீங்கள் சொன்னீர்கள். ஆனால் நான் உங்களிடம் பேசவில்லை!’”

எனவே இப்போது, எனது கர்த்தராகிய ஆண்டவர் உண்மையிலேயே பேசுவார்! அவர் கூறுகிறார்: “நீங்கள் பொய்களைச் சொன்னீர்கள். நீங்கள் உண்மையற்ற தரிசனங்களைப் பார்த்தீர்கள். எனவே நான் (தேவன்) இப்பொழுது உங்களுக்கு எதிராக இருக்கிறேன்.” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைச் சொன்னார். கர்த்தர் கூறுகிறார்: “பொய்த் தரிசனங்களைப் பார்த்து பொய் சொன்ன தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன். அவர்களை என் ஜனங்களிடமிருந்து விலக்குவேன். இஸ்ரவேல் வம்சத்தாரின் பட்டியலில் அவர்களின் பெயர்கள் இருக்காது. அவர்கள் மீண்டும் இஸ்ரவேல் நாட்டிற்கு வரமாட்டார்கள். பிறகு, நான்தான் கர்த்தராகிய ஆண்டவர் என்றும், நீங்கள் அறிவீர்கள்!

10 “மீண்டும் மீண்டும் அந்தப் பொய்த் தீர்க்கதரிசிகள் என் ஜனங்களிடம் பொய் சொல்கிறார்கள். சமாதானம் இருக்கிறது என்று தீர்க்கதரிசிகள் சொன்னார்கள். ஆனால் அங்கே சமாதானம் இல்லை. ஜனங்களுக்கு சுவரை நிர்மாணித்து போர் செய்ய தயாராகிட அவசியம் இருந்தது. ஆனால் அவர்கள் உடைந்த சுவரின் மேல் ஒரு மெல்லிய பூச்சை மட்டுமே பூசினார்கள். 11 நான் கல்மழையையும் பெருமழையையும் (பகைவர் படை) அனுப்புவேன் என்று அம்மனிதர்களிடம் சொல். காற்று கடுமையாக அடிக்கும். புயல் காற்றும் வரும். 12 பிறகு அந்தச் சுவர் கீழே விழும். ஜனங்கள் தீர்க்கதரிசிகளிடம், ‘சுவரில் நீங்கள் பூசிய பூச்சு என்னவாயிற்று?’ என்று கேட்பார்கள்.” 13 எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: “நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பலமான புயல் காற்றை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் உனக்கு எதிராகப் பெருமழையை அனுப்புவேன். நான் கோபமாக இருக்கிறேன். நான் வானத்திலிருந்து பெருங்கல் மழையைப் பொழியச் செய்து உன்னை முழுமையாக அழிப்பேன்! 14 நீங்கள் அவற்றில் பூச்சு பூசினீர்கள். ஆனால் நான் முழுச் சுவற்றையும் அழித்துவிட்டேன். அதைத் தரையிலே விழப்பண்ணுவேன். அச்சுவர் உன்மீது விழும். பிறகு, நான்தான் கர்த்தர் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். 15 நான் சுவருக்கும் சாந்து பூசினவர்களுக்கும் எதிரான எனது கோபத்தை முடிப்பேன். பிறகு நான் சொல்லுவேன்; ‘சுவரும் இல்லை, சாந்து பூசின வேலைக்காரர்களும் இல்லை.’

16 “இஸ்ரவேலில் உள்ள பொய்த் தீர்க்கதரிசிகளுக்கு இவை எல்லாம் ஏற்படும். அத்தீர்க்கதரிசிகள் எருசலேம் ஜனங்களிடம் பேசுகிறார்கள். அத்தீர்க்கதரிசிகள் சமாதானம் உண்டென்று சொல்கிறார்கள். ஆனால் சமாதானம் இல்லை” எனது கர்த்தராகிய ஆண்டவர் அவற்றைச் சொன்னார்.

17 தேவன் சொன்னார்: “மனுபுத்திரனே, இஸ்ரவேலில் உள்ள பெண் தீர்க்கதரிசிகளைப் பாருங்கள். அப்பெண் தீர்க்கதரிசிகள் எனக்காகப் பேசுவதில்லை. அவர்கள் விரும்புவதையே சொல்லுகிறார்கள். எனவே அவர்களுக்கு எதிராக நீ எனக்காக அவர்களிடம் பேச வேண்டும். 18 ‘எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்: பெண்களாகிய உங்களுக்குத் தீமைகள் ஏற்படும். நீங்கள், ஜனங்கள் தம் கையில் அணிந்துகொள்ளத் தாயத்துகளைச் செய்கிறீர்கள். ஜனங்கள், தம் தலையில் அணிந்துக்கொள்ள சிறப்பான முக்காட்டுச் சேலைகளை உண்டாக்குகிறீர்கள். ஜனங்களது வாழ்வை அடக்கி ஆள மந்திரசக்தி இவற்றில் உள்ளதாகக் கூறுகிறீர்கள். உங்களது வாழ்வுக்காக அந்த ஜனங்களை நீங்கள் வேட்டையாடுகிறீர்கள்! 19 நான் முக்கியமானவனில்லை என்று ஜனங்களை நினைக்கும்படிச் செய்கிறீர்கள். சில பிடி வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் அவர்களை எனக்கு எதிராக நீங்கள் திருப்புகிறீர்கள். நீங்கள் என் ஜனங்களிடம் பொய் கூறுகிறீர்கள். அவர்கள் பொய்களைக் கேட்க விரும்புகிறார்கள். வாழவேண்டிய ஜனங்களைக் கொல்லுகிறீர்கள். மரிக்கவேண்டிய ஜனங்களை வாழவைக்கிறீர்கள். 20 எனவே கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: நீங்கள் துணியையும் தாயத்துக்களையும் ஜனங்களை வலைக்குட்படுத்த உருவாக்குகிறீர்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை விடுவிப்பேன். அவர்கள் கைகளிலிருந்து அத்தாயத்துகளைப் பிய்த்து எறிவேன். ஜனங்கள் உங்களிடமிருந்து விடுதலை பெறுவார்கள். அவர்கள் வலையிலிருந்து பறக்கும் பறவைகளைப்போன்று இருப்பார்கள்! 21 நான் உங்கள் முக்காட்டுச் சேலைகளைக் கிழித்து உங்கள் வல்லமையிலிருந்து என் ஜனங்களைக் காப்பேன். அந்த ஜனங்கள் உங்கள் வலைகளிலிருந்து தப்புவார்கள். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

22 “‘தீர்க்கதரிசிகளாகிய நீங்கள் பொய்களைச் சொல்கிறீர்கள். உங்களது பொய்கள் நல்ல ஜனங்களைப் புண்படுத்துகின்றன. அந்த நல்ல ஜனங்கள் புண்படுவதை நான் விரும்புவதில்லை. நீங்கள் கெட்ட ஜனங்களை ஆதரிக்கிறீர்கள், உற்சாகப்படுத்துகிறீர்கள். அவர்களின் வாழ்வை மாற்றும்படி நீங்கள் அவர்களிடம் சொல்வதில்லை. அவர்களின் வாழ்வைக் காப்பாற்ற நீங்கள் முயல்வதில்லை! 23 எனவே இனி நீங்கள் பயனற்ற தரிசனங்களைக் காண்பதில்லை. இனிமேல் நீங்கள் எவ்வித மந்திரமும் செய்யப் போவதில்லை. நான் எனது ஜனங்களை உங்களது சக்திகளிலிருந்து காப்பாற்றுவேன். நானே கர்த்தர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.’”

சங்கீதம் 52-54

இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல், “தாவீது அபிமெலேக்கின் வீட்டில் இருக்கிறான்” என்று ஏதோமியனாகிய தோவேக் சவுலிடம் போய் கூறிய சமயத்தில் பாடப்பட்ட பாடல்.

52 பெரிய மனிதனே, நீ செய்யும் தீய செயல்களைக் குறித்து ஏன் பெருமை கொள்கிறாய்?
    நீ தேவனுக்கு முன் மதிப்பற்றவனாவாய்.
நாள் முழுவதும் தீமை செய்யவே திட்டமிடுகிறாய்.
நீ மூடத்தனமான திட்டங்களை வகுக்கிறாய்.
    உன் நாவு தீட்டப்பட்ட சவரக்கத்தியைப் போன்று ஆபத்தானது.
    நீ எப்போதும் பொய் பேசி, யாரையேனும் ஏமாற்ற முயல்கிறாய்.
நீ நன்மையைப் பார்க்கிலும் தீமையை விரும்புகிறாய்.
    உண்மையைக் காட்டிலும் பொய்பேச முயல்கிறாய்.

நீயும் உனது பொய்கூறும் நாவும் ஜனங்களைத் துன்புறுத்த விரும்பும்.
எனவே தேவன் உன்னை என்றைக்கும் அழிப்பார்!
    அவர் உன்னை உனது வீட்டிலிருந்து [a] இழுத்து எறிவார்.
    அவர் உன்னைக் கொல்வார், உனக்குச் சந்ததி இராது.
நல்லோர் இதனைக் காண்பார்கள்.
    தேவனுக்குப் பயந்து அவரை மதித்து வாழ அவர்கள் கற்பார்கள்.
அவர்கள் உன்னைப் பார்த்து நகைத்து,
    “தேவனைச் சார்ந்து வாழாத மனிதனுக்கு நிகழ்ந்ததைப் பாருங்கள்.
    அம்மனிதன் தனது செல்வமும், பொய்களும் தன்னைக் காக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான்” என்பார்கள்.

ஆனால் நான் தேவனுடைய ஆலயத்தில், நெடுங்காலம் வாழும் பச்சையான ஒலிவ மரத்தைப்போலிருப்பேன்.
    தேவனுடைய அன்பை நான் என்றென்றும் நம்புவேன்.
தேவனே, நீர் செய்த காரியங்களுக்காக நான் உம்மைத் துதிப்பேன்.
    நான் உமது நாமத்தை உம் சீடர்களுக்கு முன்பாகப் பேசுவேன்.
    ஏனெனில் அது மிகவும் நல்லதாக இருக்கிறது.

மகலாத் என்னும் கருவியை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த ஒரு மஸ்கீல் என்னும் பாடல்.

53 தேவன் இல்லை என்று மூடன் மட்டுமே நினைப்பான்.
    அத்தகைய மனிதர்கள் கெட்டவர்களாகவும் தீயவர்களாகவும் அருவருப்பானவர்களாகவும் இருக்கிறார்கள்.
    அவர்கள் நல்ல காரியங்களைச் செய்வதில்லை.
தேவனுக்காக எதிர்நோக்கியிருக்கும் ஞானமுள்ளவர்கள் உண்டோ என்று
    பரலோகத்திலிருந்து தேவன் நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் ஒவ்வொருவரும் தேவனை விட்டு வழி விலகிப் போனார்கள்.
    ஒவ்வொரு மனிதனும் தீயவன்.
நன்மையான காரியத்தைச் செய்பவன்
    ஒருவன் கூட இல்லை.

தேவன்: “அத்தீயோர் நிச்சயமாக உண்மையை அறிவர்!
    ஆனால் அவர்கள் என்னிடம் ஜெபிப்பதில்லை.
    தங்கள் உணவை உண்பதைப் போல் தீயோர் விரைந்து என் ஜனங்களை அழிக்கக் காத்திருக்கிறார்கள்” என்கிறார்.
ஆனால் அந்த தீயோர்கள் முன்பு ஒருபோதும் அஞ்சாத அளவுக்கு அஞ்சுவார்கள்.
    அத்தீயோர் இஸ்ரவேலரின் பகைவர்கள்.
அத்தீயோரை தேவன் தள்ளிவிட்டார்.
    எனவே தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தோற்கடிப்பார்கள்.
அத்தீயோரின் எலும்புகளை தேவன் சிதறடிப்பார்.

சீயோனிலிருந்து இஸ்ரவேலருக்கு வெற்றி வருவதாக.
    தேவன், அவர்கள் வெற்றிபெற உதவுவார்.
அடிமைத்தனத்திலிருந்து தேவன் தமது ஜனங்களை மீட்கும்போது யாக்கோபு களிகூருவான்.
    இஸ்ரவேல் மிகுந்த மகிழ்ச்சிகொள்வான்.

இசைக் கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு தாவீது அளித்த மஸ்கீல் என்னும் பாடல்களுள் ஒன்று. சீப்பூரார் சவுலிடம் வந்து, “எங்கள் ஜனங்கள் மத்தியில் தாவீது ஒளிந்திருக்கிறார்” எனக் கூறிய காலத்தில் பாடியது.

54 தேவனே, உமது வல்லமையான நாமத்தைப் பயன்படுத்தி என்னைக் காப்பாற்றும்.
    உமது வல்லமையை பயன்படுத்தி என்னை விடுதலையாக்கும்.
தேவன், என் ஜெபத்தைக்கேளும்.
    நான் கூறும் காரியங்களைக் கேளும்.
தேவனை தொழுதுகொள்ளாத அந்நியர்கள் எனக்கு எதிராகத் திரும்புகிறார்கள்.
    அந்த பலசாலிகள் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.

பாருங்கள், என் தேவன் எனக்கு உதவுவார்.
    என் ஆண்டவர் எனக்குத் துணை நிற்பார்.
எனக்கு எதிராகத் திரும்பியுள்ள ஜனங்களை என் தேவன் தண்டிப்பார்.
    தேவன் எனக்கு உண்மையானவராக இருப்பார்.
    அவர் அந்த ஜனங்களை அறவே அழிப்பார்.

தேவனே, நான் மனவிருப்பத்தின்படி காணிக்கைகளை உமக்குத் தருவேன்.
    கர்த்தாவே, நான் உமது நாமத்தைத் துதிப்பேன்.
என் எல்லாத் தொல்லைகளிலுமிருந்து என்னை விடுவிக்கும்படி நான் உம்மை வேண்டுகிறேன்.
    எனது பகைவர்கள் தோற்கடிக்கப்படுவதை நான் பார்க்கட்டும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center