M’Cheyne Bible Reading Plan
சவுல் மரணத்தை தாவீது அறிதல்
1 அமலேக்கியரை முறியடித்தபின் தாவீது சிக்லாகிற்குத் திரும்பிச் சென்றான். சவுல் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இது நடந்தது. அங்கே தாவீது இரண்டு நாட்கள் தங்கினான். 2 பின்பு, மூன்றாம் நாளில், ஒரு இளம் வீரன் சிக்லாகிற்கு வந்தான். அவன் சவுலின் முகாமிலிருந்து வந்திருந்தான். அம்மனிதனின் ஆடைகள் கிழிந்திருந்தன. அவனுடைய தலையில் புழுதி படிந்திருந்தது [a] அவன் தாவீதிடம் வந்து நிலத்தில் முகங்குப்புற விழுந்து வணங்கினான்.
3 தாவீது அம்மனிதனைப் பார்த்து, “நீ எங்கிருந்து வருகிறாய்?” என்று கேட்டான்.
அம்மனிதன் தாவீதிடம், “நான் இஸ்ரவேலரின் முகாமிலிருந்து வருகிறேன்” என்று பதிலுரைத்தான்.
4 தாவீது அம்மனிதனை நோக்கி, “யார் போரில் வெற்றியடைந்தார் என்பதை தயவு செய்து கூறு” என்றான்.
அம்மனிதன், “நம் வீரர்கள் போரிலிருந்து தப்பி ஓடினார்கள். பலர் யுத்தத்தில் அகப்பட்டு மடிந்தனர். சவுலும் அவனது மகன் யோனத்தானுங்கூட மரித்துவிட்டனர்” என்று பதில் கூறினான்.
5 தாவீது இளைஞனாகிய அந்த வீரனிடம், “சவுலும் யோனத்தானும் மரித்ததைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டான்.
6 அந்த இளம் வீரன், “நான் கில்போவா மலைக்குப் போயிருந்தேன். சவுல் தனது ஈட்டியில் சொருகிச் சாய்ந்துக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். பெலிஸ்தியரின் தேர்களும் குதிரை வீரர்களும் சவுலுக்கு அருகில் நெருங்கிக் கொண்டிருந்தனர். 7 சவுல் திரும்பி என்னைப் பார்த்து அழைத்து 8 என்னை யாரென்று கேட்டார். நான் ஒரு அமலேக்கியன் என்பதை அவருக்குக் கூறினேன். 9 அப்போது சவுல், ‘தயவு செய்து என்னைக் கொன்றுவிடு. நான் மிகவும் காயப்பட்டு மரிக்கும் தருவாயில் உள்ளேன்’ என்றார். 10 அவர் அதிகமாகக் காயப்பட்டிருந்ததால், இனி உயிர் பிழைக்கமாட்டார் என்பதை நான் மிக நன்கு அறிந்தேன். எனவே நான் அவரைக் கொன்றேன். பின்பு அவரது தலையிலிருந்த கிரீடத்தையும் புயங்களில் இருந்த கடகத்தையும் கழற்றினேன். அவற்றை என் ஆண்டவனாகிய உங்களிடம் கொண்டுவந்துள்ளேன்” என்றான்.
11 அப்போது தாவீது தன் துக்கமிகுதியால் ஆடைகளை கிழித்தான். தாவீதோடிருந்த மனிதர்களும் அவ்வாறே செய்தார்கள். 12 அவர்கள் வருத்தமுற்று அழுது மாலை வரைக்கும் ஏதும் உண்ணவில்லை. சவுலும் அவனது மகன் யோனத்தானும் மரித்துப் போனதால் அவர்கள் அழுதார்கள். தாவீதும் அவனது மனிதர்களும் கொல்லப்பட்டிருந்த கர்த்தருடைய ஜனங்களுக்காகவும் இஸ்ரவேலருக்காகவும் அழுதனர். சவுலும், யோனத்தானும் பல இஸ்ரவேலரும் யுத்தத்தில் கொல்லப்பட்டதற்காக அவர்கள் அழுதனர்.
அமலேக்கியனைக் கொல்ல தாவீது கட்டளை
13 சவுலின் மரணத்தைப்பற்றிக் கூறிய இளம் வீரனிடம் தாவீது பேசினான். தாவீது, “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான்.
அந்த இளம் வீரன், “நான் ஒரு அந்நியனின் மகன், நான் ஒரு அமலேக்கியன்” என்றான்.
14 தாவீது அந்த இளம் வீரனிடம், “கர்த்தர் தேர்ந்தெடுத்த, அரசனைக் கொல்வதற்கு நீ ஏன் அச்சம் கொள்ளவில்லை?” என்றான்.
15-16 பின்பு தாவீது அமலேக்கியனை நோக்கி, “உனது மரணத்திற்கு நீயே காரணம். கர்த்தர் தேர்ந்தெடுத்த அரசனைக் கொன்றாய் என்று நீயே கூறினாய். உனது வார்த்தைகளே நீ குற்றவாளி என்று தீர்க்கின்றன” என்று கூறினான். பின்பு தாவீது ஒரு இளம் வேலையாளை அழைத்து அமலேக்கியனைக் கொல்லுமாறு கூறினான். எனவே அந்த இஸ்ரவேல் இளைஞன் அமலேக்கியனைக் கொன்றான்.
சவுல், யோனத்தான் பற்றிய தாவீதின் சோககீதம்
17 சவுலையும் அவனது மகன் யோனத்தானையும் குறித்து துயரம் மிகுந்த பாடலொன்றைத் தாவீது பாடினான். 18 அப்பாடலை யூதா ஜனங்களுக்குக் கற்பிக்குமாறு தாவீது தனது ஆட்களிடம் கூறினான். அப்பாடல் “வில்” எனப்பட்டது. அது யாசேரின் புத்தகத்தில் உள்ளது.
19 “இஸ்ரவேலே, உன் அழகு உன் மேடுகளில் அழிக்கப்பட்டது.
ஓ, அந்த வீரர்கள் எப்படி வீழ்ந்தனர்!.
20 அச்செய்தியைக் காத் [b] நகரில் கூறாதே,
அஸ்கலோனின் தெருக்களில் அதை அறிவிக்காதே.
அதனால் பெலிஸ்திய நகரங்கள் களிப்படையும்!
அந்த அந்நியர்கள் மகிழக்கூடும்.
21 மழையோ பனியோ கில்போவா மலைகளில் பெய்யாதென நம்புகிறேன்.
அவ்வயல்களினின்று பயிர்களின் காணிக்கை இனி வராதென நான் நம்புகிறேன்.
வீரர்களின் கேடயங்கள் அங்குத் துருப்பிடித்தன.
சவுலின் கேடகத்தில் எண்ணெய் பூசப்படவில்லை.
22 வில்லால் பல பகைவரைக் கொன்றான் யோனத்தான்.
வாளால் அவ்வாறே வெற்றி கண்டான், சவுல்.
இவர்கள் மடிந்த பல வீரரின் இரத்தத்தைச் சிந்த வைத்தனர்!
வலியோரில் வலிய வீரரையும் துண்டுத் துண்டாக வெட்டினர்.
23 “சவுலும் யோனத்தானும் தம் வாழ்வில் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி மகிழ்ந்தனர்.
மரணமும் அவர்களைப் பிரிக்கவில்லை!
அவர்கள் கழுகுகளிலும் வேகமானவர்கள்.
அவர்கள் சிங்கங்களிலும் பலசாலிகள்.
24 இஸ்ரவேலின் குமாரத்திகளே, சவுலுக்காக அழுங்கள்!
இரத்தாம்பர ஆடைகளை சவுல் உனக்குத் தந்தான். இன்னும் ஆடைகளில் பொன் வேலைப்பாடுகள் செய்வித்தான்!
25 “போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
கில்போவா மலையில் யோனத்தான் மடிந்தான்.
26 சகோதரன் யோனத்தானே, மறைந்தாய், வெகுவாய் வருந்துகிறேன்.
உனது அன்பு பெருமகிழ்வைத் தந்தது. மங்கையரின் நேசத்தைக் காட்டிலும் மாமேன்மையானது உனது அன்பு.
27 போரில் பலசாலிகள் வீழ்ந்தனர்.
போர்க்கருவி அனைத்தும் அழிந்தனவே.”
பரிசுத்த ஆவியானவரின் வரங்கள்
12 சகோதர சகோதரிகளே, இப்போது நீங்கள் ஆவியின் வரங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென நான் விரும்புகிறேன். 2 நீங்கள் விசுவாசம் உடையவராக மாறும் முன்னர், நீங்கள் வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள். பிறர் உங்கள்மீது செல்வாக்கு செலுத்துவதற்கும் உயிரற்ற விக்கிரகங்களை வணங்குவதற்கும் உங்களை நீங்கள் அனுமதித்தீர்கள். 3 தேவனுடைய ஆவியானவரின் உதவியால் பேசுகிற எவனும் “இயேசு சபிக்கப்படட்டும்” என்று கூறுவதில்லை என்பதை உங்களுக்குக் கூறுகிறேன். பரிசுத்த ஆவியானவரின் உதவியின்றி ஒருவனும் “இயேசுவே கர்த்தர்” என்பதைக் கூற முடியாது.
4 ஆவிக்குரிய வரங்கள் பலவகை உண்டு. ஆனால், அனைத்தும் அதே ஆவியானவரால் வருபவை. 5 ஊழியம் செய்வதற்குப் பல வழிகள் உண்டு. ஆனால் அந்த வழிகள் அனைத்தும் கர்த்தரிடமிருந்தே வருபவை. 6 மனிதரிடம் தேவன் செயல்படும் வழிகள் பல உண்டு. ஆனால் அவை அனைத்தும் நமக்குள் செயல்படுகிற தேவனிடமிருந்து வருபவை. நாம் ஒவ்வொன்றையும் செய்ய தேவன் நம்மில் செயல்படுகிறார்.
7 ஆவியானவரின் வரங்களில் சில ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படும். பிறருக்கு உதவும்படியாய் ஆவியானவர் இதை ஒவ்வொருவருக்கும் அளிப்பார். 8 ஒருவனுக்கு ஞானத்துடன் பேசும் ஆற்றலைப் பரிசுத்த ஆவியானவர் வழங்குகிறார். அதே பரிசுத்த ஆவியானவர் அறிவோடு பேசும் ஆற்றலை இன்னொருவனுக்குக் கொடுக்கிறார். 9 அதே பரிசுத்த ஆவியானவர் விசுவாசத்தை ஒருவனுக்கு அளிக்கிறார். குணப்படுத்தும் வல்லமையை மற்றொருவனுக்கு அதே பரிசுத்த ஆவியானவர் தருகிறார். 10 அதிசயங்களைச் செய்யும் சக்தியை இன்னொரு மனிதனுக்கு ஆவியானவர் கொடுக்கிறார். இன்னொருவனுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லும் திறனையும், மற்றொருவனுக்கு நல்ல, தீய ஆவிகளின் வேறுபாட்டைக் காணும் திறனையும் அளிக்கிறார். பல்வேறு மொழிகளிலும் பேசும் ஆற்றலை ஒருவனுக்கும், அம்மொழிகளை விளக்கியுரைக்கும் திறமையை மற்றொருவனுக்கும் அளிக்கிறார். 11 ஒரே ஆவியானவரே இவற்றையெல்லாம் செய்கிறார். ஒவ்வொருவனுக்கும் எதனைக் கொடுக்க வேண்டும் என்பதை ஆவியானவரே தீர்மானிக்கிறார்!
கிறிஸ்துவின் சரீரம்
12 ஒருவனின் சரீரம் முழுமையான ஒன்றாக இருந்தாலும், அதில் பல உறுப்புகள் உண்டு. ஆம், சரீரம் பல உறுப்புகளால் ஆனது. ஆனால், அத்தனை உறுப்புகளும் ஒரே சரீரத்துக்குரியவை. கிறிஸ்துவும் அதைப் போன்றவர். 13 நம்மில் சிலர் யூதர்கள். மற்றும் சிலர் கிரேக்கர்கள். சிலர் அடிமைகள். சிலர் சுதந்திரமானவர்கள். ஆனால் நாம் எல்லாரும் ஒரே சரீரமாக ஒரே ஆவியானவர் மூலம் ஞானஸ்நானம் பெற்றோம். நாம் எல்லாரும் ஒரே ஆவியைப் பெற்றோம்.
14 ஒருவனின் சரீரம் பல்வேறு உறுப்புக்களைக் கொண்டது. 15 பாதம் சொல்லக்கூடும், “நான் கையல்ல, எனவே நான் சரீரத்துக்குச் சொந்தமானதல்ல.” இப்படிச் சொல்வதால் பாதம் சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 16 காது சொல்லக்கூடும், “நான் கண்ணல்ல. எனவே இந்த சரீரத்தைச் சார்ந்தவன் அல்ல.” இப்படிச் சொல்வதால் காது சரீரத்தின் உறுப்பாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 17 சரீரம் முழுவதும் கண்ணாகச் செயல்படுமேயானால், அது கேட்கமுடியாது. சரீரம் முழுவதும் காதாகச் செயல்படுமேயானால், சரீரத்தால் எதையும் முகர்ந்து பார்க்க முடியாது. 18-19 சரீரத்தின் உறுப்புகள் எல்லாம் ஒரேவகை உறுப்புகளாக இருந்தால் அப்போது சரீரம் இருப்பதில்லை. தேவன் உண்மையாகவே தாம் விரும்பியபடி சரீரத்தின் உறுப்புகளை சரீரத்தில் அமைத்தார். சரீரத்தில் ஒவ்வொரு உறுப்புக்கும் ஓர் இடத்தை அமைத்தார். 20 எனவே, பல உறுப்புகளும் ஒரே சரீரமாக அமைந்தன.
21 கண் கையிடம் “எனக்கு நீ தேவை இல்லை” என்று கூறமுடியாது. தலை பாதத்திடம் “நீ எனக்குத் தேவையில்லை” என்று கூற முடியாது. 22 பலமற்றவையாகத் தோற்றம் தரும் சரீரத்தின் உறுப்புகள் மிக முக்கியமானவை. 23 சரீரத்தின் தகுதி குறைந்த உறுப்புகளாக நாம் கருதுபவற்றிற்கு அதிகமான அக்கறை காட்டுகிறோம். வெளிக்காட்ட விரும்பாத உறுப்புகளுக்குத் தனிப்பட்ட பாதுகாப்பு அளிக்கிறோம். 24 சரீரத்தின் அழகிய உறுப்புகளுக்கு இத்தகைய பாதுகாப்பு தேவையில்லை. ஆனால் கௌரவிக்கத்தக்க உறுப்புகளை கௌரவிக்கிற விதத்தில் சரீரத்தின் உறுப்புக்களை தேவன் ஒழுங்குபடுத்தினார். 25 நம்முடைய சரீரம் பிரிக்கப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்தார். வெவ்வேறு உறுப்புகளும் பிறவற்றையும் பாதுகாக்க வேண்டும் என்று தேவன் இதைச் செய்தார். 26 சரீரத்தின் உறுப்புகளில் ஏதேனும் ஒன்றிற்குத் தொல்லை நேர்ந்தாலும், மற்ற எல்லா உறுப்புக்களும் அதோடு துன்புறும். நம் சரீரத்தின் ஓர் உறுப்புக்குப் பெருமை நேர்ந்தாலும் பிற எல்லா உறுப்புகளும் அப்பெருமையில் பங்கு கொள்ளும்.
27 நீங்கள் எல்லாரும் இணைந்து கிறிஸ்துவின் சரீரமாக இருக்கிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சரீரத்தின் உறுப்பாக அமைகிறீர்கள். 28 முதலில் அப்போஸ்தலராகச் சிலரையும், இரண்டாவதாகத் தீர்க்கதரிசிகளாகவும், மூன்றாவதாகப் போதகர்களாகவும், பிறகு அதிசயங்களைச் செய்கிறவர்களாகவும், மற்றவர்களுக்கு உதவுகிறவர்களாகவும், வழி நடத்த வல்லவர்களாகவும் பல்வேறு மொழிகளைப் பேச வல்லவர்களாகவும் சபையில் நியமிக்கிறார். 29 எல்லா மனிதர்களும் அப்போஸ்தலர்கள் அல்ல. எல்லா மனிதர்களும் தீர்க்கதரிசிகளல்ல. எல்லா மனிதர்களும் போதகர்களுமல்ல. எல்லாரும் அதிசயங்களைச் செய்ய முடியாது. 30 குணப்படுத்தும் ஆற்றலும் எல்லார்க்கும் வாய்ப்பதில்லை. எல்லாருக்கும் வெவ்வேறு வகையான மொழிகளைப் பேசமுடியாது. எல்லாரும் அவற்றை விளக்கவும் முடியாது. 31 ஆவியானவரின் சிறந்த வரங்களைப் பெற நீங்கள் உண்மையாகவே விரும்ப வேண்டும்.
10 பிறகு நான் கேருபீன்களுடைய தலைக்கு மேலிருந்த கிண்ணம் போன்ற வட்டத்தைப் பார்த்தேன். அது இந்திர நீல ரத்தினம் போன்று காணப்பட்டது. அதற்குமேல் ஒரு சிங்காசனம் இருப்பது போலவும் தோன்றியது. 2 பிறகு சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்திருந்தவர் சணல் நூலாடை அணிந்த மனிதனிடம் சொன்னார்; “சக்கரங்களுக்கு இடையில் வா, கேருபீனின் கீழ் உள்ள பகுதிக்கு வா, கேருபீன்களின் நடுவிலே எரிந்துகொண்டிருந்த நெருப்புத் தழலைக் கை நிறைய எடு. அவற்றை எருசலேம் நகரத்தின் மேல் ஏறி.”
அந்த மனிதன் என்னைக் கடந்து போனான். 3 அந்த மனிதன் மேகங்களுக்குள் நடந்துப் போனபோது கேருபீன்கள் ஆலயத்தின் வலது புறத்தில் நின்றன. அந்த மேகம் உட்பிரகாரத்தை நிரப்பியது. 4 பிறகு பிரகாரத்திலும் ஆலயத்தின் வாசலிலும் நின்றுகொண்டிருந்த கேருபீன்களின் மேலிருந்து கர்த்தருடைய மகிமை எழும்பியது. பிறகு மேகம் ஆலயத்தை நிரப்பிற்று. கர்த்தருடைய மகிமையின் பிரகாசத்தினால் ஆலயப் பிரகாரம் நிரம்பியது. 5 பின்னர் நான் கேருபீன்களுடைய சிறகுகளின் சத்தத்தைக் கேட்டேன். அச்சத்தமானது, சர்வ வல்லமையுள்ள தேவன் பேசும்போது ஏற்படும் இடியோசை போன்றிருந்தது. சிறகுகளின் சத்தத்தை வெளிப்பிரகாரம்வரை கேட்கமுடிந்தது.
6 தேவன் சணல் நூலாடை அணிந்திருந்த மனிதனைப் பார்த்து, ஒரு கட்டளையிட்டார். தேவன் அவனிடம் சக்கரத்திற்குள்ளே போய் கேருபீன்களிடையிலுள்ள நெருப்புத் தழலை எடுத்து வரும்படிச் சொல்லியிருந்தார். எனவே அந்த மனிதன் உள்ளே நுழைந்து சக்கரத்தின் அருகிலே நின்றான். 7 அப்போது ஒரு கேருபீன் தன் கையை கேருபீன்களுக்கிடையில் உள்ள நெருப்புவரை நீட்டி எடுத்தது. அம்மனிதனின் கைகளில் நெருப்புத் துண்டுகளை இட்டது. அம்மனிதன் போனான். 8 (கேருபீனின் சிறகுகளுக்கடியில் மனித கையைப்போன்று காணப்பட்டது)
9 பிறகு நான் நான்கு சக்கரங்கள் இருப்பதைக் கவனித்தேன். ஒவ்வொரு கேருபீனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒளிமிக்க மஞ்சள் நிற இரத்தினக்கல் போலிருந்தது. 10 அங்கே நான்கு சக்கரங்கள் இருந்தன. அனைத்து சக்கரங்களும் ஒன்றுபோல காணப்பட்டன. ஒரு சக்கரத்திற்குள் இன்னொரு சக்கரம் இருப்பதுபோல் தோன்றியது. 11 அவை நகரும் போதெல்லாம் நான்கும் ஒரே நேரத்தில் நகர்ந்தன. ஆனால் அவை நகரும்போது கேருபீன் திரும்பாது. தலைபார்க்கும் திசையிலேயே அவை சென்றன. அவை நகரும்போது திரும்பவில்லை. 12 அவற்றின் உடலெல்லாம் கண்கள் இருந்தன. அவற்றின் பின்புறத்திலும், கைகளிலும் சிறகுகளிலும் சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. ஆம், நான்கு சக்கரங்களிலும் கண்கள் இருந்தன. 13 சக்கரங்கள் “சுழலும் சக்கரங்கள்” என்று அழைக்கப்படுவதை நான் கேட்டேன்.
14-15 ஒவ்வொரு கேருபீனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முதல் முகம் கேருபீன் முகமாக இருந்தது. இரண்டாவது முகம் மனிதமுகமாக இருந்தது. மூன்றாவது முகம் சிங்கமுகமாக இருந்தது. நான்காவது முகம் கழுகின் முகமாக இருந்தது. நான் கேபார் ஆற்றருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்கள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன்.
கேருபீன்கள் மேலே எழும்பின. 16 அவற்றோடு சக்கரங்களும் எழும்பின. கேருபீன்கள் மேலே எழும்பிக் காற்றில் பறந்தபோது சக்கரங்கள் திசை மாறவில்லை. 17 கேருபீன்கள் காற்றில் பறக்கும்போது சக்கரங்கள் அவற்றோடு சென்றன. கேருபீன்கள் அசையாமல் நின்றபோது சக்கரங்களும் நின்றன. ஏனென்றால், ஜீவனுடைய ஆவி (வல்லமை) அவற்றில் இருந்தது.
18 பிறகு கர்த்தருடைய மகிமை ஆலயத்தின் வாசற்படியில் இருந்து கேருபீன்களின் மேலிருந்த இடத்திற்குச் சென்று நின்றது. 19 அப்பொழுது கேருபீன்கள் தம் சிறகுகளை விரித்துக் காற்றில் பறந்தன. அவை ஆலயத்தை விட்டுப் போவதைப் பார்த்தேன். சக்கரங்கள் அவற்றோடு சென்றன. பின்னர் அவை கர்த்தருடைய ஆலயத்தின் கிழக்கு வாசலில் நின்றன. இஸ்ரவேல் தேவனுடைய மகிமையானது அவற்றின்மேல் காற்றில் இருந்தது.
20 பிறகு நான், கேபார் ஆற்றின் அருகில் கண்ட தரிசனத்தில் இஸ்ரவேல் தேவனுடைய மகிமைக்கடியில் தெரிந்த ஜீவன்களை நினைத்துப் பார்த்தேன். நான், அவ்விலங்குகள் கேருபீன்கள் என்பதை அறிந்துகொண்டேன். 21 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் சிறகுகளுக்கடியில் மனித கரங்களைப்போன்று மறைந்தும் இருந்தன. 22 கேருபீன்களின் முகங்கள் கேபார் ஆற்றின் அருகில் தரிசனத்தில் கண்ட ஜீவன்களின் முகங்களைப்போன்றிருந்தன. அவை ஒவ்வொன்றும் தமது முகம் இருந்த திசையை நோக்கிச் சென்றன.
கோராகின் புத்திரரின், இராகத் தலைவனுக்கு அளிக்கப்பட்ட ஒரு பாடல்
49 எல்லா தேசங்களே, இதைக் கேளுங்கள்.
பூமியில் வாழும் ஜனங்களே, எல்லோரும் இதைக் கேளுங்கள்.
2 ஏழையும் பணக்காரருமான ஒவ்வொரு வரும் கேட்கவேண்டும்.
3 ஞானமும் புத்திசாலித்தனமுமான சில செய்திகளை நான் உங்களுக்குக் கூறுவேன்.
4 நான் உவமையான கதைகளைக் கேட்டேன்.
இப்போது என் சுரமண்டலத்தை இசைத்து அக்கதைகளின் பாடல்களை உங்களுக்குப் பாடுவேன்.
5 தொல்லைகள் வரும்போது நான் ஏன் அஞ்ச வேண்டும்?
தீயோர் என்னைச் சூழ்ந்து அகப்படுத்த முயலும்போது நான் ஏன் அஞ்சவேண்டும்?
6 பலமும் செல்வமும் தங்களைப் பாதுகாக்கு மென்று சிலர் நினைக்கிறார்கள்.
ஆனால் அந்த ஜனங்கள் மூடர்களே.
7 மனிதனான எந்த நண்பனும் உன்னை மீட்க இயலாது.
நீ தேவனுக்கு லஞ்சம் தர முடியாது.
8 ஒருவன் தனது ஜீவனை மீட்டுக்கொள்வதற்குரிய பணத்தை
ஒருபோதும் சம்பாதித்து விட முடியாது.
9 என்றென்றும் வாழும் உரிமையைப் பெறவும்,
கல்லறையில் தன் உடல் அழியாமல் காக்கவும், தேவையான பணத்தை ஒருவன் ஒருபோதும் அடைய முடியாது.
10 பாருங்கள், மூடரும் அறிவீனரும் மடிவதைப் போலவே, ஞானிகளும் இறக்கிறார்கள்.
பிறர் அவர்களின் செல்வத்தைப் பெறுகிறார்கள்.
11 கல்லறையே என்றென்றும் ஒருவனது புது வீடாகும்.
அவர்களுக்குச் சொந்தமான பல நிலங்கள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.
12 சிலர் செல்வந்தராயிருந்தாலும் இங்கே நிரந்தரமாக வாழ்ந்துவிட முடியாது.
எல்லோரும் மிருகங்களைப்போலவே மடிவார்கள்.
13 மூடரான மனிதருக்கும்,
தங்கள் செல்வங்களினால் திருப்தியடைந்திருக்கிற அனைவருக்கும் இதுவே சம்பவிக்கிறது.
14 எல்லா ஜனங்களும் ஆட்டு மந்தையைப் போன்றே இருக்கின்றனர்.
கல்லறையே அவர்கள் வாசஸ்தலம், மரணமே அவர்கள் மேய்ப்பன்.
அவர்கள் சரீரங்கள் அழிந்து கல்லறைக்குள் நாறும்.
15 ஆனால் தேவன் எனக்காக விலையைக் கொடுத்து என் உயிரை மீட்பார்.
கல்லறையின் வலிமையிலிருந்து என்னை அவர் மீட்பார்!
16 சிலர் செல்வந்தராயிருப்பதினால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
சிலர் பெரிய அழகிய மாளிகைகளில் வசிப்பதால் அவர்களுக்கு அஞ்சாதீர்கள்.
17 அவர்கள் இறக்கும்போது தங்களோடு எந்தப் பொருளையும் எடுத்துச் செல்லமாட்டார்கள்.
அந்த அழகிய பொருட்களில் எதையும் அவர்கள் எடுத்துச் செல்லமுடியாது.
18 மனிதர்கள் வாழ்நாளின்போது தேவனை வாழ்த்தவேண்டும்.
தேவன் மனிதருக்கு நல்லவற்றைச் செய்கையில் அவர்கள் தேவனை வாழ்த்தவேண்டும்.
19 அந்த ஜனங்கள் தங்கள் முற்பிதாக்களோடு சென்று அடையுங்காலம் வரும்.
அவர்கள் மீண்டும் பகலின் ஒளியைக் காண்பதில்லை.
20 ஜனங்கள் செல்வத்தைத் தங்களுக்கென வைத்துக்கொள்ள முடியாது.
மிருகங்களைப் போலவே ஒவ்வொருவனும் மரிப்பான்.
2008 by World Bible Translation Center