Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 31

சவுலின் மரணம்

31 பெலிஸ்தியர் இஸ்ரவேலுக்கு எதிராகப் போரிட்டனர். இஸ்ரவேலர் தோற்று ஓடினார்கள். கில்போவா மலைப்பகுதியில் பல இஸ்ரவேலர் கொல்லப்பட்டனர். சவுலுக்கும் அவனது மகன்களுக்கும் எதிராகக் கடுமையாய் பெலிஸ்தியர் போரிட்டனர். அவர்கள் சவுலின் மகன்களான யோனத்தான், அபினதாப், மற்றும் மல்கிசூகா ஆகியோரைக் கொன்றனர்.

சவுலுக்கு எதிராக போரானது மேலும் மேலும் வலுத்தது. வில் வீராகள் சவுலின் மீது அம்பு எய்ததால், சவுல் பயங்கரமாக காயப்பட்டான். தன்னோடு ஆயுதம் தூக்கி வருபவனிடம் சவுல், “உனது பட்டயத்தை எடுத்து என்னைக் கொன்று போடு. அதனால் அந்நியர் என்னை காயப்படுத்தி கேலிச் செய்யாமல் இருப்பார்கள்” என்றான். அவன் பயந்து அவ்வாறு செய்ய மறுத்துவிட்டான். எனவே சவுல் தனது வாளை உருவி தற்கொலை செய்து கொண்டான். சவுல் மரித்துப்போனதை, ஆயுதங்களை எடுத்து வரும் அவனது உதவியாளன் அறிந்து, தனது வாளால் தானும் மடிந்தான். எனவே சவுலும் அவனது மூன்று மகன்களும், சவுலின் ஆயுதம் தாங்கும் வீரனும் அனைத்துப் படை வீரர்களும் அதே நாளில் மரித்தார்கள்.

சவுலின் மரணத்தால் பெலிஸ்தியர் மகிழ்ச்சியடைகின்றனர்

பள்ளத்தாக்கின் மறு பக்கத்தில் இருந்த இஸ்ரவேலர் தங்கள் சேனை பயந்து ஓடுவதைக் கண்டனர். சவுலும் அவனது மகன்களும் மரித்துப்போனதை அறிந்தனர். எனவே அவர்கள் தங்கள் நகரங்களைவிட்டு ஓடிப்போனார்கள். பெலிஸ்தியர் அந்நகரங்களை ஆக்கிரமித்துக் கொண்டனர்.

மறுநாள், பெலிஸ்தியர் பிணங்களின் மேலுள்ள பொருட்களை கவரச் சென்றனர். கில்போவா மலையில் சவுலும், அவனது மூன்று மகன்களும் மரித்துக் கிடப்பதைக் கண்டனர். அவர்கள் சவுலின் தலையை வெட்டி, அவனது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் இச்செய்தியைப் பெலிஸ்தருக்கும், தங்கள் விக்கிரகங்களின் ஆலயத்திற்கும் எடுத்துச் சென்றனர். 10 சவுலின் ஆயுதங்களை அவர்கள் அஸ்தரோத் கோவிலில் வைத்தனர். சவுலின் உடலை அவர்கள் பெத்ஸானின் சுவரில் தொங்கவிட்டனர்.

11 இது குறித்து யாபேஸ் கீலேயாத் நகரத்தார் கேள்விப்பட்டனர். 12 எனவே, எல்லா வீரர்களும் பெத்ஸானுக்கு இரவு முழுவதும் பயணம் செய்து, சவுலின் உடலையும் அவனது மகன்களின் பிணங்களையும் எடுத்து வந்தனர், அவற்றை யாபேசில் எரித்தனர். 13 பின்பு சவுல் மற்றும் அவனது மகன்களின் எலும்புகளை எடுத்து யாபேசில் பெரிய மரத்தடியில் புதைத்தனர். யாபேஸின் குடிகள் 7 நாட்களுக்கு உணவு உண்ணாமல் துக்கம் கொண்டாடினர்.

1 கொரி 11

11 நான் கிறிஸ்துவை உதாரணமாகப் பின்பற்றுவதுபோல, என்னை உதாரணமாகப் பின்பற்றுங்கள்.

தலைமைக்குக் கீழ்ப்படிதல்

நீங்கள் எல்லாவற்றிலும் என்னை நினைவுகூருவதால் உங்களைப் புகழ்கிறேன். நான் உங்களுக்கு வழங்கியிருக்கிற போதனைகளை நீங்கள் பின்பற்றிக்கொண்டுள்ளீர்கள். ஆனால் நீங்கள், இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதனின் தலைவரும் கிறிஸ்துவே. பெண்ணின் தலைவன் ஆணாவான். கிறிஸ்துவின் தலைவர் தேவனே.

தீர்க்கதரிசனம் சொல்கிறவனோ அல்லது பிரார்த்திக்கிறவனோ தலையை மூடியிருந்தால் அது அவன் தலைக்கு இழுக்கைத் தரும். தீர்க்கதரிசனம் சொல்கிறவளும் பிரார்த்தனை செய்கிறவளும் தலையை மூடிக்கொண்டிருக்க வேண்டும். அவ்வாறு தலையை மூடியிராவிட்டால் அது அவள் தலைக்கு இழுக்கைத் தரும். தலைமயிரை மழித்துக்கொண்ட பெண்ணுக்கு அவள் ஒப்பாவாள். ஒரு பெண் தனது தலையை மூடியிராவிட்டால் அவள் தலை மயிரை மழிப்பதற்கு ஒப்பாகும். தலை மயிரைக் குறைப்பதோ, மழிப்பதோ பெண்ணுக்கு இழிவைத் தரும். எனவே அவள் தனது தலையை மூடியிருக்க வேண்டும்.

ஆனால், ஓர் ஆண் தனது தலையை மூடக்கூடாது. ஏனெனில் அவன் தேவனைப் போல அமைக்கப்பட்டவன். அவன் தேவனுக்கு மகிமையாய் அமைபவன். ஆனால் பெண்ணோ ஆணுக்கு மகிமையாய் அமைபவள். பெண்ணிலிருந்து ஆண் தோன்றவில்லை. ஆணிலிருந்து பெண் தோன்றினாள். ஆண் பெண்ணுக்காகப் படைக்கப்படவில்லை. பெண்ணோ ஆணுக்காகப் படைக்கப்பட்டாள். 10 அதனால்தான் பெண் ஒருவனுக்கு அடங்கியவள் என்பதைக் காட்டும்படியாக தனது தலையை மூடியிருக்க வேண்டும். தேவதூதர்களுக்காகவும் அவள் இதைச் செய்தல்வேண்டும்.

11 ஆனால் கர்த்தருக்குள் பெண் ஆணுக்கு முக்கியமானவள். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். அவ்வாறே ஆணும் பெண்ணுக்கு முக்கியமானவன். 12 ஆணிடமிருந்து பெண் தோன்றியதால் இது உண்மையாகிறது. ஆனால் பெண்ணிடம் இருந்து ஆண் பிறக்கிறான். உண்மையாகவே ஒவ்வொன்றும் தேவனிடம் இருந்து வருகிறது.

13 இதை நீங்களே முடிவு செய்யுங்கள். தனது தலையை மறைக்காமல் தேவனிடம் பிரார்த்தனை செய்வது ஒரு பெண்ணுக்கு உகந்ததா? 14 நீளமான மயிரோடு இருப்பது ஆணுக்கு இழுக்கானது என்பதை இயற்கையே உணர்த்துகிறது. 15 ஒரு பெண்ணுக்கு நீளமான கூந்தலிருப்பது அவளுக்கு கௌரவமாகும். ஏனெனில் ஒரு மகிமையாகவே அது அவளுக்குத் தரப்பட்டிருக்கிறது. 16 இதைக் குறித்துச் சிலர் இன்னும் விவாதிக்க விரும்பலாம். ஆனால் நாங்களும், தேவனுடைய சபைகளும் அம்மக்கள் இதைப்பற்றி வாக்குவாதம் செய்வதை ஏற்பதில்லை.

கர்த்தரின் திருவிருந்து

17 இப்போது உங்களுக்குச் சொல்பவற்றில் நான் உங்களைப் புகழமாட்டேன். நீங்கள் ஒன்று சேர்வது உங்களுக்குத் தொல்லை உருவாகுவதில் முடிகிறது. 18 முதலில், ஒரு சபையாக நீங்கள் சேரும்போது உங்களுக்குள் பிரிவினைகள் உண்டு என்று நான் கேள்விப்பட்டேன். அதில் சிலவற்றை நான் நம்புகிறேன். 19 பிரிவினைகள் இருப்பது தேவைதான். உங்களில் யார் சரியான காரியத்தைச் செய்கிறவர் என்பதைத் தெளிவுபடுத்த அது உதவும்.

20 நீங்கள் ஒன்று கூடுகையில் கர்த்தரின் திருவிருந்தை [a] உண்மையாகப் புசிப்பதில்லை. 21 ஏன்? ஏனெனில் நீங்கள் சாப்பிடும்போது இன்னொருவருக்காகக் காத்திராது உண்ணுகிறீர்கள். சிலருக்குப் போதுமான அளவு சாப்பிடக் கிடைப்பதில்லை. ஆனால் மற்றும் சிலர் போதைக்கு ஆளாகும் அளவுக்கு உட்கொள்கிறார்கள். 22 உங்கள் வீடுகளில் நீங்கள் சாப்பிடவும், குடிக்கவும் செய்யலாம். தேவனுடைய சபையினர் முக்கியமற்றவரென நீங்கள் நினைப்பதாக எனக்குப் படுகிறது. நீங்கள் ஏழைகளை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குகிறீர்கள். நான் என்ன கூறமுடியும்? உங்களை இதற்காகப் புகழ்வதா? நான் உங்களைப் புகழேன்.

23 நான் உங்களுக்குச் சொன்ன போதனை உண்மையில் கர்த்தரால் எனக்குக் கொடுக்கப்பட்டது ஆகும். இயேசு கொலை செய்யப்படுவதற்காக ஒப்புவிக்கப்பட்ட இரவில் அவர் அப்பத்தை எடுத்து நன்றி கூறினார். 24 அந்த அப்பத்தைப் பகிர்ந்து அவர் “இதை புசியுங்கள். இது எனது சரீரமாகும். இது உங்களுக்குரியது. என்னை நினைவுகூருவதற்காக இதைச் செய்யுங்கள்” என்றார். 25 அவர்கள் அதைச் சாப்பிட்டபின், இயேசு திராட்சை இரசக் கோப்பையை எடுத்து பகிர்ந்தளித்தார். “தேவனிடமிருந்து அவரது மக்களுக்கு அளிக்கப்பட்ட புது உடன்படிக்கையை இந்த இரசக் கோப்பை காட்டுகிறது! எனது இரத்தத்தில் இந்த உடன்படிக்கை ஆரம்பமாகிறது. நீங்கள் இதைப் பருகும்போது, என்னை நினைப்பதற்காக அவ்வாறு செய்யுங்கள்” என்றார். 26 ஒவ்வொரு முறையும் அப்பத்தைச் சாப்பிடும்போதும் இந்த பானத்தைப் பருகும்போதும், கர்த்தர் வரும்வரையில் கர்த்தருடைய மரணத்தைப் பிறருக்கு அறிவிக்கிறீர்கள்.

27 எனவே தகுதியற்ற வகையில் இந்த அப்பத்தை உண்டாலோ, அல்லது கர்த்தரின் இந்தப் பாத்திரத்தில் பருகினாலோ, அப்போது அந்த மனிதன் கர்த்தரின் சரீரத்துக்கும், இரத்தத்துக்கும் எதிராகப் பாவம் செய்தவனாகிறான். 28 இந்த அப்பத்தை பகிர்ந்துகொள்வதற்கு முன்னரும், இந்த பாத்திரத்தில் இருந்து பருகும் முன்னரும் ஒவ்வொருவனும் தன் இதயத்தைப் பரீட்சித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். 29 கர்த்தருடைய சரீரத்தின் பொருளை நிதானித்து அறியாமல் ஒருவன் இந்த அப்பத்தை உண்ணவோ இந்த பானத்தைப் பருகவோ செய்தால் அந்த மனிதன் உண்பதாலும் பருகுவதாலும் குற்றவாளியாக நியாயம் தீர்க்கப்படுவான். 30 எனவே தான், உங்களில் பலர் நோயுற்றவராகவும் பலவீனராகவும் காணப்படுகிறீர்கள். பலர் இறந்தும் போய்விட்டார்கள். 31 நாமே நம்மைச் சரியான வழியில் நியாயம் தீர்த்திருந்தோமானால் தேவன் நம்மை நியாயம் தீர்த்திருக்கமாட்டார். 32 ஆனால், தேவன் நம்மை நியாயம் தீர்க்கும்போது, நமக்குச் சரியான வழியைக் காட்டும்படி நமக்குத் தண்டனை அளிக்கிறார். நாம் இந்த உலகத்திலுள்ள பிற மனிதரோடு குற்றம் சாட்டப்படாதபடிக்கு தேவன் இதைச் செய்கிறார்.

33 சகோதர சகோதரிகளே! எனவே, நீங்கள் ஒன்று சேர்ந்து உண்ணுவதற்கு வருகையில் பிறருக்காகக் காத்திருங்கள். 34 ஒருவன் மிகுந்த பசியால் வாடினால், அவன் வீட்டில் உண்ணட்டும். தேவனுடைய நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் வராதபடிக்கு நீங்கள் ஒன்று கூடுகையில் இதைச் செய்யுங்கள். நான் வரும்போது நீங்கள் செய்யவேண்டிய பிற காரியங்களைக் குறித்து உங்களுக்குக் கூறுவேன்.

எசேக்கியேல் 9

பின்னர் தேவன், தண்டனைக்குப் பொறுப்பாக இருந்த தலைவர்களிடம் சத்தமிட்டார். ஒவ்வொரு தலைவரும் தமது கையில் கொலைக்குரிய ஆயுதங்களை வைத்திருந்தனர். பிறகு உயர்ந்த வாசலிலிருந்து ஆறு மனிதர்கள் சாலையில் நடந்து வருவதை நான் பார்த்தேன். அவ்வாசல் வடபகுதியில் இருக்கிறது. ஒவ்வொருவரும் தமது கையில் வெட்டுகிற ஆயுதத்தை வைத்திருந்தனர். ஒரு மனிதன் சணல் நூல் ஆடை அணிந்திருந்தான். அவன் தன் இடுப்பில் நகலரின் எழுது கோலையும் மைக்கூட்டையும் வைத்திருந்தான். அம்மனிதர்கள் ஆலயத்தில் உள்ள வெண்கல பலிபீடத்தின் அருகில் நின்றனர். பிறகு இஸ்ரவேலின் தேவனுடைய மகிமை கேருபீன் மேலிருந்து எழும்பியது. பிறகு அந்த மகிமை ஆலயத்தின் வாசலுக்குச் சென்றது. அங்கே நின்று, அம்மகிமை சணல் நூலாடை அணிந்து மைக்கூடும் எழுதுகோலும் வைத்திருக்கிற மனிதனைக் கூப்பிட்டது.

பிறகு அவனிடம் கர்த்தர் (மகிமை) சொன்னார்: “எருசலேம் நகரத்தின் வழியாகப் போ. நகரில் ஜனங்கள் செய்யும் எல்லா பயங்கரமான காரியங்களையும் பற்றி பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களின் நெற்றிகளில் அடையாளம் போடு.”

5-6 பிறகு தேவன் மற்றவர்களிடம் கூறுகிறதைக் கேட்டேன்: “நீங்கள் முதல் மனிதனைப் பின்பற்ற வேண்டும் என நான் விரும்புகிறேன். தன் நெற்றியில் அடையாளம் இல்லாத ஒவ்வொருவரையும் நீங்கள் கொல்லவேண்டும். நீங்கள் யார் மேலும் பரிதாபப்படவேண்டாம். நெற்றியில் அடையாளம் இல்லாத மூப்பர்கள் (தலைவர்கள்) இளைஞர்கள், இளம் பெண்கள், குழந்தைகள், பிள்ளைகள் தாய்மார்கள் உள்பட எல்லோரையும் கொல்லுங்கள். உங்கள் ஆயுதங்களால் அவர்களைக் கொல்லவேண்டும். அவர்களிடம் இரக்கம் காட்டவேண்டாம். எவருக்காகவும் வருத்தப்படவேண்டாம். எனது ஆலயத்திலிருந்தே தொடங்குங்கள்.” எனவே, ஆலயத்தின் முன்னாலிருந்து மூப்பர்களோடு ஆரம்பித்தார்கள்.

தேவன் அவர்களிடம் சொன்னார்: “இந்த ஆலயத்தை தீட்டுப்படுத்துங்கள். இப்பிரகாரங்களை மரித்த உடல்களால் நிரப்புங்கள்! இப்பொழுது போங்கள்!” எனவே, அவர்கள் நகருக்குள் போய் ஜனங்களைக் கொன்றார்கள்.

அம்மனிதர்கள் போய் ஜனங்களைக் கொல்லும்போது நான் அங்கே தங்கினேன். நான் என் முகம் தரையில் படும்படிக் குனிந்து வணங்கிச் சொன்னேன். “எனது கர்த்தராகிய ஆண்டவரே, எருசலேமின் மீது தனது கோபத்தைக் காட்டுகிறவரே, இஸ்ரவேலில் தப்பிப் பிழைத்த அனைவரையும் கொல்லப் போகிறீரா?”

தேவன் சொன்னார்: “இஸ்ரவேல் வம்சத்தாரும் யூதா வம்சத்தாரும் மிகவும் மோசமான பாவங்களைச் செய்திருக்கின்றனர்! நாட்டில் ஒவ்வொரு இடங்களிலும் ஜனங்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். நகரம் குற்றங்களால் நிறைந்திருக்கின்றது. ஏனென்றால், ஜனங்கள் தங்களுக்குள் ‘கர்த்தர் நாட்டை விட்டு விலகினார். நாம் செய்கின்றவற்றை அவரால் பார்க்க முடியாது’ என்று கூறுகின்றனர். 10 நான் எவ்வித இரக்கமும் காட்டமாட்டேன். நான் இந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டேன். அவர்கள் இதனைத் தாமாகவே கொண்டுவந்தனர். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுக்கிறேன்!”

11 பிறகு சணல் நூலாடை அணிந்து நகலரின் எழுது கோலும் மைக்கூடும் வைத்திருந்தவன் பேசினான். அவன், “நீர் கட்டளையிட்டபடி நான் செய்திருக்கிறேன்” என்றான்.

சங்கீதம் 48

கோராகின் புத்திரருக்கு அளிக்கப்பட்ட ஒரு துதியின் பாடல்

48 கர்த்தர் மேன்மையானவர்.
    தேவன் தமது பரிசுத்த நகரில் துதிக்குரியவர்.
தேவனுடைய பரிசுத்த நகரம் அழகானது.
    அது உலகை சுற்றியுள்ள அனைத்து ஜனங்களையும் மகிழ்ச்சியடைச் செய்யும்.
சீயோன் மலை உயர்ந்த, பரிசுத்த மலை.
    அதுவே பேரரசரின் நகரமாகும்.
அந்நகரத்து அரண்மனைகளில்
    தேவனே கோட்டை என்று எண்ணப்படுவார்.
ஒருமுறை, சில அரசர்கள் சந்தித்து,
    இந்நகரைத் தாக்கத் திட்டமிட்டார்கள்.
அவர்கள் ஒருமித்து நகரை நோக்கி அணிவகுத்தார்கள்.
    அவ்வரசர்கள் அந்நகரைக் கண்டதும், ஆச்சரியமடைந்து, பயந்து, திரும்பி ஓடினார்கள்.
அச்சம் அவர்களை ஆட்கொண்டது.
    அவர்கள் பயத்தால் நடுங்கினார்கள்.
தேவனே, நீர் வலிய கிழக்குக் காற்றால்
    பெருங்கப்பல்களை உடைத்தீர்.
ஆம், உமது வல்லமையான காரியங்களை நாங்கள் கேள்விப்பட்டோம்.
    ஆனால், சர்வ வல்லமையுள்ள கர்த்தருடைய நகரில், எங்கள் தேவனுடைய நகரில் அது நிகழக்கண்டோம்.
    தேவன் அந்நகரை என்றும் வலிமையுள்ள நகராக்கினார்.

தேவனே, உமது ஆலயத்தில் உமது அன்பான தயவைக் கவனமாக நினைத்துப் பார்த்தோம்.
10 தேவனே, நீர் புகழ் வாய்ந்தவர்,
    பூமியெங்கும் ஜனங்கள் உம்மைத் துதிக்கின்றனர்.
    நீர் மிக நல்லவர் என்பதை அனைவரும் அறிவோம்.
11 தேவனே, உமது நல்ல முடிவுகளால் சீயோன் மலை மகிழ்கிறது.
    யூதாவின் ஊர்கள் களிகூருகின்றன.
12 சீயோனைச் சுற்றி நட.
    நகரைப் பார். கோபுரங்களை எண்ணிப்பார்.
13 அந்த உயர்ந்த சுவர்களைப் பார்.
    சீயோனின் அரண்மனைகளை வியப்புடன் பார்.
    வரும் தலைமுறைக்கு அதைப்பற்றி நீ கூறலாம்.
14 இந்த தேவன் என்றென்றும் உண்மையாகவே நமது தேவன்.
    அவர் என்றென்றும் நம்மை வழி நடத்துவார்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center