M’Cheyne Bible Reading Plan
பெலிஸ்தர்களோடு தாவீது வாழ்கிறான்
27 தாவீது தனக்குள், “என்றாவது சவுல் என்னைப் பிடித்துக் கொல்லுவான். எனவே பெலிஸ்தரின் நாட்டிற்குத் தப்பிச் செல்வதுதான் நான் இப்போது செய்ய வேண்டியது. பிறகு சவுல் என்னை இஸ்ரவேலில் தேடுவதை விட்டுவிடுவான். இவ்வாறுதான் இவனிடமிருந்து தப்பிக்கவேண்டும்” என்று நினைத்துக்கொண்டான்.
2 எனவே தாவீதும் அவனது 600 ஆட்களும் இஸ்ரவேலை விட்டு மாயோகின் மகனான ஆகீஸிடம் சென்றனர். ஆகீஸ் காத்தின் அரசன். 3 தாவீதும் அவனது குடும்பமும், ஆட்களும் காத்தில் ஆகீஸோடு வாழ்ந்தனர். தாவீதுடன் அவனது இரு மனைவியரும் இருந்தனர். அவர்கள் யெஸ்ரேலின் அகினோவாளும், கர்மேலின் அபிகாயிலும் ஆவார்கள். அபிகாயில் நாபாலின் விதவை. 4 தாவீது காத்துக்கு ஓடிப் போனதாக ஜனங்கள் வந்து சவுலிடம் சொல்லவே, அவனும் தாவீதைத் தேடுவதை விட்டுவிட்டான்.
5 ஆகீஸிடம் தாவீது, “என்னை உங்களுக்கு பிடிக்குமானால், எனக்கு நாட்டிலுள்ள ஒரு நகரத்தில் ஓரிடத்தைக் கொடுங்கள். நான் உங்கள் வேலைக்காரன். நான் அங்கே வாழ்வேன். உங்களோடு இத்தலைநகரத்தில் வாழமாட்டேன்” என்றான். 6 அன்றைய தினம் ஆகீஸ் தாவீதிற்கு சிக்லாக் நகரத்தைக் கொடுத்தான். அன்று முதல் அந்நகரம் யூதாவின் அரசர்களுக்கு உரியதாய் இருந்தது. 7 அங்கே தாவீது பெலிஸ்தர்களோடு ஓராண்டும் நான்கு மாதமும் வாழ்ந்தான்.
அரசனான ஆகீஸை தாவீது ஏமாற்றுகிறான்
8 தாவீதும் அவனது ஆட்களும் கெசூரியர், கெர்சியர் மற்றும் அமலேக்கியர் ஆகியோர்க்கு எதிராக படையெடுத்தனர். பழங்காலம் முதல் இவர்கள் தேலீம் அருகிலுள்ள சூர் முதல் எகிப்துவரை பரந்துள்ள நாட்டில் வாழ்ந்தனர். அவர்களைத் தோற்கடித்து செல்வங்களை அபகரித்தான். 9 தாவீது அப்பகுதியில் உள்ளவர்களையெல்லாம் தோற்கடித்தான். அவர்களின் ஆடுகள், மாடுகள், கழுதைகள், ஒட்டகங்கள், ஆடைகள் போன்றவற்றைப் பறித்து ஆகீஸிடம் கொண்டு வந்தான். யாரையும் அவன் உயிரோடு விடவில்லை.
10 தாவீது இவ்வாறு பலமுறைச் செய்தான். ஆகீஸ் அவனிடம், “யாரோடு எங்கே போரிட்டு இவற்றை எடுத்து வருகிறாய்?” என்று கேட்டான். அதற்கு தாவீது, “நான் யூதாவின் தென்பகுதியில் சண்டையிட்டு வருகிறேன்” என்பான். அல்லது, “நான் யெராமியேலின் தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். அல்லது “நான் கேனியருடைய தென்பகுதியில் சண்டையிட்டேன்” என்பான். 11 தாவீது காத்திலிருந்து உயிரோடு ஆண் பெண் யாரையும் ஒரு நாளும் கொண்டு வந்ததில்லை. “யாரையாவது உயிரோடு கொண்டு வந்தால் அவர்கள் உண்மையைச் சொல்லிவிடலாம்” என்று நினைத்தான்.
பெலிஸ்தர்களின் நாட்டில் இருக்கும்வரை தாவீது இப்படி செய்து வந்தான். 12 ஆகீஸும் தாவீதை நம்பினான். அவன் தனக்குள்ளே, “இப்போது தாவீதின் சொந்த ஜனங்கள் அவனை வெறுப்பார்கள். இஸ்ரவேலரும் தாவீதை மிகவும் வெறுப்பார்கள். எனவே தாவீது என்றும் எனக்கே சேவைச் செய்வான்” என்று நினைத்துக்கொண்டான்.
விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்ட உணவு
8 விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி குறித்து இப்போது எழுதுவேன். “நாம் அறிவுடையவர்கள்” என்பது நம் அனைவருக்கும் தெரியும். “அறிவு” உங்களைப் பெருமை உடையவர்களாக மாற்றும். ஆனால், அன்பு பிறருக்கு உதவி செய்யுமாறு உங்களை மாற்றும். 2 தனக்கு ஏதோ தெரியுமென எண்ணுகிற ஒருவனுக்கு, இருக்க வேண்டிய அளவுக்கு ஞானம் இருப்பதில்லை. 3 ஆனால், தேவனை நேசிக்கிற மனிதனோ தேவனால் அறியப்பட்டவன்.
4 எனவே விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட இறைச்சி உண்பதைப் பற்றி நான் கூறுவது இதுவே: விக்கிரகமானது இவ்வுலகத்தில் ஒரு பொருட்டல்ல என்பது நமக்குத் தெரியும். ஒரே ஒரு தேவனே உள்ளார் என்பதையும் நாம் அறிவோம். 5 பரலோகத்திலும் பூலோகத்திலும் தேவர்களாக அழைக்கப்படும் பல பொருள்கள் இருக்கின்றன. எனினும் அவை நமக்கு முக்கியமல்ல. “தேவனென்றும்,” “கர்த்தரென்றும்” மனிதர்கள் கருதுகின்ற பல பொருள்கள் உண்டு. 6 ஆனால் நமக்கோ ஒரே ஒரு தேவன் உள்ளார். அவர் நமது பிதாவே. எல்லாம் அவரிலிருந்தே வந்தன. நாம் அவருக்காக வாழ்கிறோம். ஒரே ஒரு கர்த்தரே உண்டு. அவர் இயேசு கிறிஸ்து ஆவார். எல்லாப் பொருள்களும் இயேசுவின் மூலமாக உண்டாக்கப்பட்டன. நாம் அவர் மூலமாகவே உயிரைப் பெறுகிறோம்.
7 ஆனால் எல்லோரும் இதனை அறியார். விக்கிரக வழிபாட்டுக்குப் பழகிப்போன சிலர் இருக்கிறார்கள். எனவே இறைச்சி உண்ணும்போது அது விக்கிரகத்துக்குரியது என்ற எண்ணம் அவர்களுக்கு உண்டாகிறது. இந்த இறைச்சியைச் சாப்பிடுவது சரியா என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே அதனைச் சாப்பிடும்போது அவர்கள் குற்றமனப்பான்மை உடையவர்களாக இருக்கிறார்கள். 8 ஆனால், இறைச்சியுண்பது தேவனுக்கு நெருக்கமாக நம்மை அழைத்துச் செல்லாது. இறைச்சியுண்ணாமையும் தேவனுக்குக் குறைவான மகிழ்ச்சியைத் தருபவர்களாக நம்மை ஆக்காது.
9 ஆனால், உங்கள் சுதந்திரத்தைக் குறித்துக் கவனமாக இருங்கள். விசுவாசத்தில் வலிமையற்ற மக்களை உங்கள் சுதந்திரம் பாவத்தில் விழக் காரணமாக இருக்கும். 10 உங்களுக்குப் புரிந்துகொள்ளும் திறமை இருக்கிறது. எனவே விக்கிரகங்களுக்குரிய கோயிலில் உண்பதை நீங்கள் இயல்பானதாகக் கருதலாம். ஆனால் விசுவாசம் குறைவுள்ள மனிதன் உங்களை அங்கு பார்க்கக் கூடும். விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதற்கு அவன் முற்பட இது வழி வகுக்கும். ஆனால், அது சரியானதல்ல என்றும் அவன் நினைப்பான். 11 உங்கள் அறிவினால் பலவீனமான இந்தச் சகோதரன் அழிக்கப்படுவான். ஆனால் இந்தச் சகோதரனுக்காகவும் இயேசு மரித்தார். 12 கிறிஸ்துவுக்குள்ளான உங்கள் சகோதர சகோதரிகளுக்கு எதிராக நீங்கள் இவ்வாறு பாவம் செய்தாலும் அவர்கள் தவறென நினைக்கிற காரியங்களைச் செய்யும்படியாகத் தூண்டி அவர்களைத் துன்புறுத்தினாலும் நீங்கள் கிறிஸ்துவுக்கு எதிராக பாவம் செய்கின்றீர்கள். 13 நான் உண்ணும் உணவு எனது சகோதரனைப் பாவம் செய்யத் தூண்டினால் நான் மீண்டும் இறைச்சி சாப்பிடவேமாட்டேன். எனது சகோதரன் மீண்டும் பாவம் செய்யாதபடி இறைச்சி உண்ணுவதை விட்டுவிடுவேன்.
6 பின்னர் கர்த்தருடைய வார்த்தை மீண்டும் என்னிடம் வந்தது. 2 அவர் சொன்னார், “மனுபுத்திரனே, இஸ்ரவேலின் மலைகளை நோக்கித் திரும்பு! எனக்காக அவற்றுக்கு எதிராகப் பேசு. 3 அம்மலைகளிடம் இவற்றைக் கூறு: ‘இஸ்ரவேலின் மலைகளே, எனது கர்த்தராகிய ஆண்டவரிடமிருந்து வந்த செய்தியைக் கேளுங்கள். எனது கர்த்தராகிய ஆண்டவர் இந்த மலைகளிடமும், குன்றுகளிடமும் மலைச்சந்துகளிடமும் பள்ளதாக்கிடமும் கூறுவது இதுதான். பாருங்கள்! தேவனாகிய நான், உனக்கு எதிராகச் சண்டையிட பகைவரைக் கொண்டுவருகிறேன். நான் உனது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். 4 உனது பலிபீடங்கள் துண்டு துண்டாக உடைக்கப்படும்! உனது நறுமணப் பீடங்கள் நொறுக்கப்படும்! நான் உனது மரித்த உடல்களை நரகலான சிலைகளுக்கு முன்னால் எறிவேன். 5 நான் இஸ்ரவேல் ஜனங்களின் மரித்த உடல்களை உங்களது நரகலான சிலைகளுக்கு முன்னால் போடுவேன். உங்களது பலிபீடங்களைச் சுற்றிலும் உங்கள் எலும்புகளைப் போடுவேன். 6 உங்களது ஜனங்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தீமை ஏற்படும். அவர்களது நகரங்கள் கற்களின் குவியலாகும். அவர்களது மேடைகள் அழிக்கப்படும். ஏனென்றால், வழிபாட்டிற்குரிய அவ்விடங்கள் மீண்டும் பயன்படக் கூடாது. அப்பலிபீடங்கள் எல்லாம் அழிக்கப்படும். ஜனங்கள் நரகலான அச்சிலைகளை மீண்டும் வழிபடமாட்டார்கள். அச்சிலைகள் தகர்க்கப்படும். நீ செய்த அனைத்தும் அழிக்கப்படும்! 7 உங்கள் ஜனங்கள் கொல்லப்படுவார்கள். பிறகு, நான் கர்த்தர் என்று நீ அறிவாய்!’”
8 தேவன் கூறினார்: “ஆனால் நான் உங்கள் ஜனங்களில் சிலரைத் தப்பிக்க வைப்பேன், அவர்கள் கொஞ்சக் காலத்திற்கு வெளிநாட்டில் வாழ்வார்கள். அவர்களை வேறுநாடுகளில் சிதறி வாழும்படி நான் வற்புறுத்துவேன். 9 பின்னர் தப்பிப்போன அவர்கள் சிறைபிடிக்கப்படுவார்கள். அவர்கள் வேறு நாடுகளில் வாழும்படி கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆனால் தப்பிப்போன அவர்கள் என்னை ஞாபகப்படுத்திக்கொள்வார்கள். நான் அவர்களின் ஆத்துமாவை உடைத்தேன். அவர்கள் தாம் செய்த தீமைக்காகத் தம்மையே வெறுப்பார்கள். கடந்த காலத்தில், அவர்கள் என்னைவிட்டு விலகிப் போனார்கள். அவர்கள் தம் நரகலான சிலைகளைத் துரத்திச் சென்றனர். அவர்கள் தம் கணவனை விட்டு விட்டு இன்னொருவனோடு சோரம்போகிற பெண்களைப் போன்றவர்கள். அவர்கள் பல பயங்கரமானவற்றைச் செய்தனர். 10 ஆனால் நான்தான் கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்! நான் சொன்னால் சொன்னபடி செய்வேன் என்பதை அவர்கள் அறிவார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட எல்லாத் தீமைகளுக்கும் நானே காரணம் என்பதை அறிவார்கள்.”
11 பிறகு, எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறினார், “உங்கள் கைகளைத் தட்டுங்கள், கால்களை உதையுங்கள். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த கொடூரமான காரியங்களைப்பற்றிப் பேசுங்கள். அவர்கள் நோயாலும் பசியாலும் கொல்லப்படுவார்கள் என்று எச்சரிக்கை செய். அவர்கள் போரில் கொல்லப்படுவார்கள் என்று சொல். 12 தொலை தூரங்களில் ஜனங்கள் நோயால் மரிப்பார்கள். இந்த இடத்திற்கு அருகில் உள்ள ஜனங்கள் வாள்களால் கொல்லப்படுவார்கள். இந்நகரத்தில் மீதியாக தங்கும் ஜனங்கள் பட்டினியால் மரிப்பார்கள். பிறகுதான் நான் என் கோபத்தை நிறுத்துவேன். 13 பிறகுதான், நான் கர்த்தர் என்பதை நீ அறிவாய். உங்களது மரித்த உடல்கள் நரகலான சிலைகளுக்கு முன்னாலும் பலிபீடங்களுக்கு அருகிலும் கிடக்கும்போது நீ அறிவாய். அந்த உடல்கள், உங்களது ஒவ்வொரு வழிபாட்டு இடங்களிலும், உயர்ந்த குன்றுகளிலும், மலைகளிலும், ஒவ்வொரு பச்சை மரங்கள் மற்றும் இலைகளுடனுள்ள ஓக் மரங்களின் அடியிலும், கிடக்கும். அந்த இடங்களில் எல்லாம் நீ பலிகளைச் செலுத்தினாய். அங்கே, அவை உன்னுடைய, நரகலான சிலைகளுக்கு இனிய வாசனையை வெளிப்படுத்தியது. 14 ஆனால் ஜனங்களாகிய உங்கள்மேல் என் கரத்தை உயர்த்தி நீங்கள் எங்கு குடியிருந்தாலும் தண்டிப்பேன்! உங்கள் நாட்டை அழிப்பேன்! அது திப்லாத் வனாந்தரத்தைவிட மிகவும் வெறுமையாக இருக்கும். பிறகு நானே கர்த்தர் என்பதை அவர்கள் அறிவார்கள்!”
கோராகின் குடும்பத்தைச் சேர்ந்த இராகத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட ‘மஸ்கீல்’ என்னும் பாடல்
44 தேவனே, நாங்கள் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
எங்கள் முற்பிதாக்கள் அவர்களுடைய வாழ்நாளில் நீர் செய்தவற்றை எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
கடந்தகாலத்தில் நீர் செய்தவற்றை அவர்கள் எங்களுக்குக் கூறியிருக்கிறார்கள்.
2 தேவனே, உமது மிகுந்த வல்லமையினால்
பிறரிடமிருந்து இந்த தேசத்தை எடுத்து எங்களுக்கு நீர் கொடுத்தீர்.
அந்நியர்களை அழித்தீர்.
இத்தேசத்தினின்று அவர்களைத் துரத்தி விலக்கினீர்.
3 எங்கள் முற்பிதாக்களின் வாள்கள் தேசத்தைக் கைப்பற்றவில்லை.
அவர்களின் பலமான கரங்கள் அவர்களை வெற்றி வீரர்களாக்கவில்லை.
நீர் எங்கள் முன்னோரோடிருந்ததால் அவ்வாறு நிகழ்ந்தது.
தேவனே, உமது பெரிய வல்லமை எங்கள் முற்பிதாக்களைக் காத்தது. ஏனெனில் நீர் அவர்களை நேசித்தீர்.
4 என் தேவனே, நீர் என் அரசர்.
நீர் கட்டளையிடும், யாக்கோபின் ஜனங்களை வெற்றிக்கு நேராக வழிநடத்தும்.
5 என் தேவனே, உமது உதவியால் பகைவர்களைத் துரத்துவோம்.
உமது பெயரின் உதவியோடு பகைவர்கள்மீது நடப்போம்.
6 நான் என் வில்லுகளையும், அம்புகளையும் நம்பமாட்டேன்.
என் வாள் என்னைக் காப்பாற்றாது.
7 தேவனே, நீர் எங்களை எகிப்திலிருந்து மீட்டீர்.
எங்கள் பகைவர்களை வெட்கமடையச் செய்தீர்.
8 தேவனை நாங்கள் எப்பொழுதும் துதிப்போம்.
உமது நாமத்தை எந்நாளும் துதிப்போம்!
9 ஆனால், தேவனே, நீர் எங்களை விட்டு விலகினீர்.
நீர் எங்களை வெட்கமடையச் செய்கிறீர்.
யுத்தத்திற்கு நீர் எங்களோடு வரவில்லை.
10 எங்கள் பகைவர்கள் எங்களைத் துரத்தச் செய்தீர்.
எங்கள் பகைவர்கள் எங்கள் செல்வத்தை எடுத்துக்கொண்டனர்.
11 உணவாகும் ஆடுகளைப்போல் எங்களைக் கொடுத்துவிட்டீர்.
தேசங்களில் எல்லாம் எங்களைச் சிதறடித்தீர்.
12 தேவனே, உமது ஜனங்களை எந்தப் பயனுமின்றி விற்றுப்போட்டீர்.
நீர் எங்களை விலை பேசவுமில்லை.
13 எங்கள் அயலாரிடம் எங்களை நிந்தையாக்கினீர்.
அயலார்கள் எங்களைப் பார்த்து நகைத்து எங்களைக் கேலி செய்கிறார்கள்.
14 ஜனங்கள் கூறும் வேடிக்கைக் கதைகளில் ஒன்றானோம்.
தங்களுக்கென நாடற்ற ஜனங்கள் கூட எங்களைப் பார்த்து நகைத்துத் தலையைக் குலுக்குகிறார்கள்.
15 நான் நாணத்தால் மூடப்பட்டேன்.
நான் முழுவதும் வெட்கத்தால் நாணுகிறேன்.
16 என் பகைவர்கள் என்னை அவமானப்படச் செய்தனர்.
என் பகைவர்கள் என்னைக் கேலி செய்வதின் மூலம் பழிவாங்க முயற்சி செய்கிறார்கள்.
17 தேவனே, நாங்கள் உம்மை மறக்கவில்லை.
ஆயினும் நீர் இவற்றையெல்லாம் எங்களுக்குச் செய்கிறீர்.
உம்மோடு உடன்படிக்கை செய்து கொண்டபோது நாங்கள் பொய்யுரைக்கவில்லை.
18 தேவனே, நாங்கள் உம்மை விட்டு விலகிச் செல்லவில்லை.
உம்மைப் பின்பற்றுவதை நிறுத்தவில்லை.
19 ஆனால் தேவனே, ஓநாய்கள் வாழும் இடத்தில் எங்களைத் தள்ளினீர்.
மரண இருளைப் போன்ற இடத்தில் எங்களை வைத்தீர்.
20 தேவனுடைய நாமத்தை நாங்கள் மறந்தோமா?
பிற தெய்வங்களிடம் ஜெபித்தோமா? இல்லை!
21 உண்மையாகவே, தேவன் இவற்றை அறிகிறார்.
எங்கள் ஆழ்ந்த இரகசியங்களையும் அவர் அறிந்திருக்கிறார்.
22 தேவனே, உமக்காக ஒவ்வொரு நாளும் நாங்கள் கொல்லப்படுகிறோம்.
கொல்லப்படுவதற்கு அழைத்துச்செல்லப்படும் ஆடுகளைப் போலானோம்.
23 என் ஆண்டவரே, எழுந்திரும்!
ஏன் நித்திரை செய்கிறீர்? எழுந்திரும்!
எப்பொழுதும் எங்களைக் கைவிட்டு விடாதேயும்.
24 தேவனே, எங்களிடமிருந்து ஏன் ஒளிந்து கொண்டிருக்கிறீர்?
எங்கள் வேதனைகளையும், தொல்லைகளையும் நீர் மறந்து விட்டீரா?
25 நாங்கள் புழுதியில் தள்ளப்பட்டோம்,
தரையின்மேல் தலைகுப்புறப் படுத்துக்கொண்டிருக்கிறோம்.
26 தேவனே, எழுந்திருந்து எங்களுக்கு உதவும்.
உமது உண்மையான அன்பினால் எங்களைப் பாதுகாத்தருளும்.
2008 by World Bible Translation Center