M’Cheyne Bible Reading Plan
தாவீதும், நாபால் எனும் முட்டாளும்
25 சாமுவேல் மரித்தான். அவனது மரணத்திற்காக அனைத்து இஸ்ரவேலர்களும் கூடித் தங்கள் வருத்தத்தைத் தெரிவித்துக் கொண்டனர். ராமாவில் உள்ள வீட்டில் அவனை அடக்கம் செய்தனர்.
பின் பாரான் பாலைவனத்துக்கு தாவீது போனான். 2 மாகோனில் ஒரு செல்வந்தன் இருந்தான். அவனிடம் 3,000 ஆடுகளும் 1,000 வெள்ளாடுகளும் இருந்தன. அவன் கர்மேலில் இருந்துக் கொண்டு தன் வியாபாரத்தைக் கவனித்து வந்தான். அவன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிக்க அங்கே போய் வருவான். 3 இவனது பெயர் நாபால். இவன் காலேபின் குடும்பத்தவன். இவனது மனைவி அபிகாயில் புத்திசாலித்தனமும் அழகும் கொண்டவள். ஆனால் நாபால் அற்பனாகவும் கொடூரமானவனாகவும் இருந்தான்.
4 பாலைவனத்தில் நாபால் தன் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பதாக தாவீது அறிந்து கொண்டான். 5 அவனோடு பேச, தாவீது 10 இளைஞர்களை அனுப்பினான். அவர்களிடம், “கர்மேலுக்குப் போங்கள், நாபாலைக் கண்டு எனக்காக வாழ்த்துச் சொல்லுங்கள்” என்றான். 6 தாவீது நாபாலுக்கு இந்த செய்தியையும் சொல்லி அனுப்பினான், “நீயும் உனது குடும்பத்தாரும் நலமென்று நம்புகிறேன். உனக்குரிய அனைத்தும் நலமென்று நம்புகிறேன். 7 நீ மயிர் கத்தரிப்பதாக அறிந்தேன். கொஞ்ச நேரம் உனது மேய்ப்பர்கள் எங்களோடு இருக்கையில், அவர்களுக்கு நாங்கள் தீங்கு செய்யவில்லை. அவர்கள் கர்மேலில் இருக்கும்வரை அவர்களிடமிருந்து எதையும் எடுக்கவில்லை. 8 உன் வேலைக்காரரிடம் கேட்டுப்பார். அவர்கள் உண்மையைக் கூறுவார்கள். என் இளைஞரிடம் கருணையோடு இரு. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் உன்னிடம் வந்திருக்கிறோம். உன்னால் முடிந்ததை இவர்களுக்குக் கொடு. இதை எனக்காகவும் உனது நண்பன் [a] தாவீதிற்காகவும் செய்” என்றான்.
9 தாவீதின் ஆட்கள் நாபாலிடம் சென்றனர். தாவீதின் செய்தியைச் சொன்னார்கள். 10 ஆனால் நாபால் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டான். அவன், “தாவீது யார்? இந்த ஈசாயின் மகன் யார்? இந்நாட்களில் பல அடிமைகள் தம் எஜமானர்களைவிட்டு ஓடிப்போகிறார்கள்! 11 என்னிடம் அப்பமும் தண்ணீரும் உள்ளன. மயிர் கத்தரித்தவர்களுக்காக, நான் ஆட்டைக் கொன்று சமையல் செய்திருக்கிறேன். ஆனால், அதை எனக்கு முன்-பின் அறியாதவர்களுக்காக கொடுக்கமாட்டேன்!” என்றான்.
12 தாவீதின் இளைஞர் திரும்பி வந்து நாபால் சொன்னவற்றை சொன்னார்கள். 13 அதற்கு தாவீது, “உங்கள் பட்டயங்களை எடுத்துக் கொள்ளுங்கள்!” என்றான். தாவீதும் அவனது ஆட்களும் தங்கள் பட்டயங்களை எடுத்தனர். அவனோடு 400 பேர் சென்றனர். மீதி 200 பேர் தங்கள் பொருட்களுக்கருகில் அங்கேயே தங்கினார்கள்.
அபிகாயில் ஆபத்தைத் தவிர்க்கிறாள்
14 நாபாலின் வேலைக்காரரில் ஒருவன் நாபாலின் மனைவியாகிய அபிகாயிலிடம் பேசி, “நமது எஜமானர் நாபாலைப் பாராட்டும்படி தாவீது தன் தூதுவர்களை அனுப்பினார். ஆனால் நாபால் அவர்களிடம் அற்பமாக நடந்துக்கொண்டான். 15 அவர்கள் நமக்கு மிகவும் வேண்டியவர்கள். நாம் வயல்களில் ஊருக்கு வெளியே இருந்தோம். தாவீதின் ஆட்கள் எப்போதும் நம்மோடு தங்கி இருக்கையில் அவர்கள் நமக்கு தீமை செய்யவில்லை! நமக்குரியவற்றை ஒருபோதும் திருடவில்லை! 16 இரவும் பகலும் தாவீதின் ஆட்கள் நம்மைக் காப்பாற்றினார்கள். நம்மைச் சுற்றிலும் அவர்கள் சுவர்களைப் போன்று காவலாக இருந்தார்கள். நாம் மந்தைகளை நடத்திச் செல்லும்போது உதவுவார்கள். 17 இப்போது சிந்தித்துப் பார்த்து நாம் என்ன செய்யலாம் என்று முடிவு செய்யுங்கள். நாபால் தன் காரியங்களைப் பேசினது அறிவீனமாய் இருக்கிறது! இப்போது நமது எஜமானனுக்கும் அவனது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஆபத்து வந்து கொண்டிருக்கிறது” என்றான்.
18 இதைக் கேட்டதும், அபிகாயில் அவசரமாக 200 அப்பத்துண்டுகளையும், 2 திராட்சைரசப்பைகளையும், 5 சமைத்த ஆடுகளையும், 5 படி வறுத்த பயிரையும், வற்றலான 100 திராட்சைக் குலைகளையும், வற்றலான 200 அத்திப்பழ அடைகளையும் எடுத்துக்கொண்டாள். அவற்றைக் கழுதையின் மேல் ஏற்றினாள். 19 பின் அவள் தன் வேலைக்காரனிடம், “நீ போ. நான் உன்னை பின்தொடர்ந்து வருகிறேன்” என்றாள். ஆனால் அவளோ கணவரிடம் அதைச் சொல்லவில்லை.
20 அவள் கழுதையின் மேல் சவாரி செய்து மலையின் அடுத்தப் பகுதிக்கு வந்தாள். எதிர் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த தாவீதையும் அவனது ஆட்களையும் சந்தித்தாள்.
21 தாவீது அபிகாயிலை சந்திக்கும் முன், “நான் இந்தப் பாலைவனத்தில் நாபாலின் சொத்துக்களைக் காப்பாற்றினேன். அவனது ஆடுகள் எதுவும் தவறிப்போகாது என நான் உறுதி செய்தேன். நான் பிரதிபலனை எதிர் பார்த்துச் செய்யவில்லை! அவனுக்கு நன்மைகளைச் செய்தேன். ஆனால் அவன் என்னிடம் தவறாக நடந்துக்கொண்டான். 22 நாளைக் காலைக்குள் நாபாலின் குடும்பத்தில் உள்ள ஒருவரையாவது உயிரோடுவிட்டு வைத்தால் தேவன் என்னைத் தண்டிப்பார்” என்று சொல்லியிருந்தான்.
23 அந்த நேரத்தில் தான் அபிகாயில் வந்து சேர்ந்தாள். அவள் தாவீதைப் பார்த்ததும் கழுதையிலிருந்து இறங்கி தரையில் முகம்படும்படி குனிந்து தாவீதின் முன்பு நின்றாள். 24 அபிகாயில் அவன் காலில் விழுந்து, “ஐயா, உங்களோடு பேச தயவுசெய்து என்னை அனுமதியுங்கள். நான் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். நடந்தவற்றிற்கு என்னைப் பழிவாங்குங்கள். 25 நீங்கள் அனுப்பினவர்களை நான் பார்க்கவில்லை. பயனற்றக் கொடிய மனிதனாகிய நாபாலிடம் கவனம் செலுத்தாதிருங்கள். அவன் தன் பெயரைப் போலவே அறிவீனனாக இருக்கிறான். 26 அப்பாவி ஜனங்களைக் கொல்வதினின்றும் கர்த்தர் உங்களை விலக்கட்டும். கர்த்தருடைய ஜீவன் பேரிலும் உங்கள் ஜீவன் பேரிலும், உங்களுடைய பகைவர்களும், நாபாலைப் போன்று உமக்குத் தீமை செய்பவர்களும் அழிந்து போவார்கள் என நம்புகிறேன். 27 இப்போது, உங்களுக்கு இந்த அன்பளிப்புகளைக் கொண்டு வந்திருக்கிறேன். இவற்றை உங்கள் மனிதர்களுக்கு கொடுங்கள். 28 நான் தவறு செய்தால் மன்னித்துவிடும். உங்கள் குடும்பத்தை கர்த்தர் பெலப்படுத்துவார் என்று எனக்குத் தெரியும். உங்கள் குடும்பத்தில் இருந்து பல அரசர்கள் புறப்படுவார்கள். நீங்கள் கர்த்தருக்காகப் போர் செய்து வருவதால் அவர் இதனை உமக்காகச் செய்வார்! நீங்கள் வாழ்கின்ற காலம் வரை ஜனங்கள் உங்களிடம் எந்தக் குறையும் காணமாட்டார்கள். 29 எவராவது உங்களைக் கொல்வதற்குத் தொடர்ந்து வந்தால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார்! ஆனால் உங்கள் பகைவர்களை கர்த்தர் கவணில் உள்ள கல்லைப் போன்று தூர எறிவார்! 30 உங்களுக்குப் பல நன்மைகளைச் செய்யப்போவதாக கர்த்தர் வாக்கு செய்துள்ளார். கர்த்தர் தமது வாக்கைக் காப்பாற்றுவார்! தேவன் உம்மை இஸ்ரவேலரின் தலைவராக்குவார். 31 அப்பாவிகளைக் கொன்றப்பழி உங்களுக்கு வரக்கூடாது. நீங்கள் அந்த வலையில் விழக்கூடாது. கர்த்தர் உமக்கு வெற்றிகளைத் தரும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.
32 தாவீது அபிகாயிலிடம், “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரைப் போற்று. என்னிடம் உன்னை அனுப்பியதற்காக தேவனைப் போற்று. 33 உனது நல்ல தீர்ப்புக்காக தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும். இன்று அப்பாவிகளைக் கொன்றுப்போடாமல் என்னைக் காப்பாற்றினாய். 34 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக் கொண்டு சத்தியமாகக் கூறுகிறேன். நீ இவ்வளவு விரைவாக வந்து என்னை சந்திக்காமல் இருந்தால் நாளை விடிவதற்குள் நாபாலின் குடும்பத்தில் ஒருவன் கூட உயிரோடு இருந்திருக்கமாட்டார்கள்” என்றான்.
35 பிறகு தாவீது, அபிகாயிலின் அன்பளிப்புகளை ஏற்றுக்கொண்டான். அவளிடம், “வீட்டிற்குச் சமாதானமாகப் போ. உனது வேண்டுகோளை ஏற்று உன் விருப்பபடியே செய்வேன்” என்றான்.
நாபாலின் மரணம்
36 அபிகாயில் நாபாலிடம் திரும்பிப் போனாள். அவன் தன் வீட்டில் ஒரு அரசனைப் போன்று உணவு உண்டு கொண்டிருந்தான். நன்றாக குடித்து போதையில் சுகபோகமாக இருந்தான். எனவே அபிகாயில் விடியும்வரை அவனிடம் எதுவும் சொல்லவில்லை. 37 மறுநாள் காலையில் நாபால் போதை தெளிந்தபோது, அவனது மனைவி அவனிடம் நடந்ததைக் கூறினாள். அவனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு, அவனது உடல் பாறையாக இறுகியது! 38 பத்து நாட்களில் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்.
39 நாபால் மரித்துப்போனதை தாவீது கேள்விப்பட்டு, “கர்த்தரைப் போற்றுங்கள்! நாபால் என்னைப் பற்றி அவதூறு சொன்னான். கர்த்தர் எனக்கு உதவினார். நான் தீமை செய்யாதபடி கர்த்தர் என்னை விலக்கினார். நாபால் கேடு செய்ததால் கர்த்தர் அவனை மரிக்கச் செய்தார்” என்றான்.
பிறகு தாவீது அபிகாயிலிடம் தனது மனைவியாகுமாறு செய்தி அனுப்பினான். 40 தாவீதின் ஆட்கள் கர்மேலுக்குச் சென்று அபிகாயிலிடம், “உங்களை அழைத்துவர தாவீது எங்களை அனுப்பினார். நீங்கள் அவரது மனைவியாக வேண்டுமென்று விரும்புகிறார்” என்றார்கள்.
41 அபிகாயில் தன் முகம் தரையில் படும்படி வணங்கி, “நான் உங்கள் வேலைக்காரி. உங்களுக்கு சேவைசெய்ய தயார். எனது எஜமானனாகிய தாவீதின் வேலைக்காரரின் பாதங்களையும் கழுவ ஆயத்தமாக இருக்கிறேன்” என்றாள்.
42 அவள் உடனே ஒரு கழுதையின் மீது ஏறித் தாவீதின் ஆட்களுடன் புறப்பட்டாள். அவள் தன்னோடு 5 பணிப்பெண்களையும் அழைத்து வந்து, தாவீதின் மனைவி ஆனாள்.
43 யெஸ்ரயேல் ஊரினவளாகிய அகினோவாளையும் தாவீது மணம் செய்துகொண்டான். அகினோவாளும், அபிகாயிலும், தாவீதின் மனைவிகள். 44 தாவீது ஏற்கெனவே சவுலின் மகளான மீகாளையும் மணந்திருந்தான். ஆனால் சவுல் அவளை எடுத்து கல்லீம் ஊரானாகிய லாயீசின் மகனான பல்த்திக்கு மணமுடித்து கொடுத்து விட்டிருந்தான்.
பிரச்சனைகளைத் தீர்த்தல்
6 உங்களில் ஒருவனுக்கு இன்னொருவனுக்கு எதிராக ஏதேனும் பிரச்சனை உருவாகும்போது நீதிமன்றத்திலுள்ள நியாயாதிபதிகளிடம் நீங்கள் போவதென்ன? தேவனோடு சரியானவராக அந்த மனிதர்கள் இருப்பதில்லை. ஆகவே அந்த மனிதர்கள் உங்களுக்கு நீதி வழங்க நீங்கள் அனுமதிப்பதேன்? தேவனுடைய மனிதர்கள் அதனைத் தீர்மானிக்க நீங்கள் சம்மதிக்காதது ஏன்? 2 தேவனுடைய மனிதர்கள் உலகத்திற்கு நீதி வழங்குவர் என்பது கண்டிப்பாக உங்களுக்குத் தெரியும். நீங்கள் உலகத்திற்கு நீதி வழங்கக் கூடுமாயின் இத்தகைய சிறு பிரச்சனைகளையும் நியாயம் தீர்க்கமுடியும். 3 எதிர்காலத்தில் நீங்கள் தேவ தூதர்களையே நியாயம் தீர்ப்பீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். எனவே, இந்த வாழ்க்கையின் காரியங்களை நாம் நியாயம் தீர்க்க முடியும். 4 எனவே நியாயம் தீர்க்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் உங்களிடையே இருக்குமானால், ஏன் அப்பிரச்சனைகளைச் சபையின் அங்கத்தினரல்லாத மனிதர்களிடம் எடுத்துச் செல்கிறீர்கள்? அந்த மனிதர்கள் சபையைப் பொறுத்த அளவில் பொறுப்பற்றவர்கள். 5 நீங்கள் வெட்கப்படும்படியாக இதனைக் கூறுகிறேன். நிச்சயமாய் உங்கள் மத்தியிலேயே இரு சகோதரர்களுக்கு இடையே உருவாகும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கக் கூடிய ஞானமுள்ள சிலர் இருக்கிறார்கள். 6 ஆனால் இப்போதோ ஒரு சகோதரன் மற்றொரு சகோதரனுக்கு எதிராக நீதிமன்றத்துக்குப் போகிறான். இயேசுவை நம்பாதவர்களான மனிதர்கள் அவர்கள் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும்படியாக எதற்காக அனுமதிக்கிறீர்கள்?
7 உங்களிடையே வழக்குகள் இருக்கிறது என்னும் உண்மை தோல்வியின் ஒரு குறியீடு ஆகும். அதைவிட மற்றொருவன் செய்யும் தவறுகளையும் ஏமாற்றுவதையும் பொறுத்துக்கொள்வதுமே மேலானதாகும். 8 ஆனால் நீங்களே உங்களுக்குள் தவறிழைத்து ஏமாற்றுகிறீர்கள். கிறிஸ்துவுக்குள் உங்கள் சொந்த சகோதரர்களுக்கே இதைச் செய்கிறீர்கள்.
9-10 தவறிழைக்கும் மக்களுக்கு தேவனுடைய இராஜ்யத்தில் பங்கு இல்லை என்பது உங்களுக்கு நிச்சயமாய்த் தெரியும். ஏமாற்றப்படாதீர்கள். பாலுறவில் பாவம் செய்யும் மக்களும், உருவங்களை வழிபடும் மக்களும், பிற பெண்களை நாடும் மனிதர்களும் மற்ற மனிதர்கள் தம்மை பாலுறவுக்காப் பயன்படுத்த அனுமதிக்கும் மனிதர்களும், பிற மனிதர்களோடு பாலுறவு கொள்ளும் மனிதர்களும், களவு செய்வோரும், தன்னலம் உடையோரும், குடிப்பழக்கம் உள்ளவர்களும், தீயவற்றை பிறருக்குச் சொல்லும் மனிதர்களும், ஏமாற்றுவோர்களுமாகிய மனிதர்களும் தேவனுடைய இராஜ்யத்தை அடையமாட்டார்கள். 11 முன்னர் உங்களில் சிலரும் அவ்வாறு வாழ்ந்தீர்கள். ஆனால் நீங்கள் தூய்மையாய்க் கழுவப்பட்டீர்கள். நீங்கள் பரிசுத்தமாக்கப்பட்டீர்கள். கர்த்தரின் பெயரால் தேவனோடு சரியானவர்களாக நீங்கள் உருவாக்கப்பட்டீர்கள்.
சரீரம்-தேவ மகிமைக்கு
12 “எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், அனைத்துப் பொருள்களும் நல்லவை அல்ல. “எல்லாப் பொருள்களும் எனக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.” ஆனால், எந்தப் பொருளும் எனக்கு எஜமானனாக நான் விடமாட்டேன். 13 “வயிற்றுக்கு உணவு. உணவுக்காக வயிறு” ஆம். ஆனால் தேவன் இரண்டையும் அழிப்பார். சரீரம் பாலுறவு தொடர்பான பாவத்திற்காக அமைந்ததன்று. ஆனால் சரீரம் கர்த்தருக்குரியது. மேலும் கர்த்தர் சரீரத்துக்குரியவர். 14 தேவனுடைய வல்லமையால் தேவன் கர்த்தராகிய இயேசுவை மரணத்தினின்று எழுப்பினார். தேவன் நம்மையும் மரணத்தினின்று எழுப்புவார். 15 உங்கள் சரீரமும் கிறிஸ்துவின் பாகங்கள் என்பது உங்களுக்குக் கண்டிப்பாய்த் தெரியும். எனவே, நான் கிறிஸ்துவின் பாகங்களை எடுத்து ஒரு வேசியின் பாகங்களோடு சேர்க்கக் கூடாது. 16 “இருவர் ஒன்றாவார்” என்று எழுதப்பட்டிருக்கிறது. அதனால் வேசியோடு உடலுறவு கொண்ட ஒருவன் அவளோடு ஒன்றாகிறான் என்பது உங்களுக்குத் தெரியும். 17 ஆனால் தேவனோடு தன்னை இணைக்கிற மனிதன் ஆவியில் அவரோடு ஒன்றுபடுகிறான்.
18 உடலுறவிலான பாவத்தை விட்டு விலகுங்கள். ஒரு மனிதன் செய்கிற பிற பாவங்கள் அவன் சரீரத்தோடு சம்பந்தப்பட்டவையல்ல. உடலுறவு தொடர்பான பாவம் செய்கிறவன் தன் சரீரத்துக்கு எதிராகப் பாவம் செய்கிறான். 19 பரிசுத்த ஆவியானவர் தங்கும் இடமாக உங்கள் சரீரம் உள்ளது. பரிசுத்த ஆவியானவர் உங்களில் உள்ளார். தேவனிடமிருந்து பரிசுத்த ஆவியை நீங்கள் பெற்றீர்கள். நீங்கள் உங்களுக்குச் சொந்தமல்ல. 20 தேவன் விலை கொடுத்து உங்களை மீட்டுக்கொண்டார். உங்களது சரீரத்தால் அவரை மகிமைப்படுத்துங்கள்.
4 “மனுபுத்திரனே, ஒரு செங்கல்லை எடு. அதன் மீது எருசலேம் நகரத்தின் படத்தை வரை. 2 பிறகு நகரத்தைச் சுற்றி முற்றுகையிடும் படை போல நடி. நகரத்தைத் தாக்க உதவுவதற்கு, அதைச் சுற்றி மதிலைக் கட்டு. நகரத்தின் சுவர்வரை போகும் ஒரு மண் பாதையைப் போடு, இடிக்கும் கருவிகளைக் கொண்டு வா. நகரத்தைச் சுற்றிப் படை முகாம்களை ஏற்படுத்து. 3 பிறகு ஒரு இரும்பு தகட்டினை எடுத்து உனக்கும் நகரத்திற்கும் இடையில் வை, அது உன்னையும் நகரத்தையும் பிரிக்கின்ற இருப்புச் சுவரைப் போன்றது. இவ்வாறு நீ நகரத்திற்கு எதிரானவன் என்பதைக் காட்டுவாய். நீ முற்றுகையிட்டு நகரத்தைத் தாக்குவாய். ஏனென்றால், இது இஸ்ரவேல் குடும்பத்தாருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். நான் (தேவன்) எருசலேமை அழிப்பேன் என்பதை இது காட்டும்.
4 “பின்னர் நீ உனது இடதுபக்கத்தில் படுக்க வேண்டும். உனக்குக் காட்டுகிறபடி நீ செய்ய வேண்டும். இஸ்ரவேல் ஜனங்கள் செய்த பாவத்தை நீயே சுமக்கவேண்டும். நீ இடதுபுறமாக எவ்வளவு நாட்கள் படுத்திருக்கிறாயோ அத்தனை நாட்கள் நீ அவர்களின் குற்றத்தைச் சுமப்பாய். 5 நீ 390 நாட்கள் இஸ்ரவேலரின் குற்றங்களைச் சுமக்கவேண்டும். இவ்வாறு, நான் இஸ்ரவேல் எவ்வளவு காலம் தண்டிக்கப்படும் என்பதை ஒரு நாள், ஒரு ஆண்டுக்குச் சமமாகக் கணக்கிட்டுச் சொல்வேன்.
6 “அதற்குப் பிறகு, 40 நாட்கள் நீ உனது வலதுபுறமாகப் படுப்பாய். இம்முறை நீ யூதாவின் குற்றங்களை சுமப்பாய். ஒரு நாள் ஓராண்டுக்குச் சமம். எவ்வளவு காலத்திற்கு யூதா தண்டிக்கப்படும் என்பதை நான் சொல்கிறேன்” என்றார்.
7 தேவன் மீண்டும் பேசினார். அவர், “இப்பொழுது, நீ உனது சட்டை கைகளைச் சுருட்டிக்கொள், செங்கலுக்கு மேலாக உன் கரத்தை உயர்த்து. எருசலேம் நகரத்தைத் தாக்குவதுபோன்று நடி. நீ ஜனங்களிடம் எனது தூதுவனைப்போன்று பேசுகிறாய் என்பதைக் காட்ட இதனைச் செய். 8 இப்பொழுது பார். நான் உன் மேல் கயிற்றைக் கட்டுகிறேன். நகரத்திற்கு எதிராக உனது தாக்குதல் முடியுமட்டும் உன்னால் ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்திற்கு உருளமுடியாது” என்றார்.
9 தேவன் மேலும் சொன்னார்: “நீ ரொட்டி செய்வதற்கு கொஞ்சம் தானியத்தைப் பெறவேண்டும். கொஞ்சம் கோதுமை, வாற்கோதுமை, மொச்சை, அவரைக்காய், தினை, கம்பு ஆகியவற்றையும் பெறு, ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு கலந்து மாவாக்கு. நீ இதனை ரொட்டி செய்யப் பயன்படுத்து. நீ 390 நாட்கள் ஒரு பக்கமாகப் படுத்திருக்கும்போது இந்த ரொட்டியையே உண்பாய். 10 இம்மாவில் ஒரு நாளைக்கு ஒரு கோப்பை மட்டுமே ரொட்டி செய்யப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவாய். நீ வேளாவேளைக்கு அந்த உணவை உண்பாய். 11 நீ ஒவ்வொரு நாளும் 3 கோப்பை தண்ணீரைமட்டுமே குடிக்க அனுமதிக்கப்படுவாய். இதை நீ ஒவ்வொரு நாளும் வேளாவேளைக்குக் குடிக்க அனுமதிக்கப்படுவாய். 12 உனது உணவை நீயே ஒவ்வொரு நாளும் தயாரிக்கவேண்டும். நீ காய்ந்த மனித மலத்தை எரித்து ரொட்டியைச் சுட வேண்டும். இந்த ரொட்டியை நீ ஜனங்களுக்கு முன்னால் சுட்டு உண்ணவேண்டும்”. 13 பின்னர் கர்த்தர் சொன்னார்: “இஸ்ரவேல் குடும்பத்தார் வெளி நாடுகளில் சுத்தமற்ற ரொட்டியை உண்பார்கள்” என்பதை இது காட்டும். அவர்கள் அத்தகைய நாடுகளுக்குப் போகும்படி நான் பலவந்தப்படுத்தினேன்.
14 பிறகு நான் (எசேக்கியேல்) சொன்னேன் “ஓ, எனது கர்த்தராகிய ஆண்டவரே, நான் என்றைக்கும் அசுத்தமான உணவை உண்டதில்லை. நான் இது வரை நோயால் மரித்த அல்லது காட்டுமிருகத்தால் கொல்லப்பட்ட மிருகத்தின் இறைச்சியைத் தின்றதில்லை. நான் சிறுவனாய் இருந்த நாள் முதல் இன்றுவரை அசுத்தமான இறைச்சியைத் தின்றதில்லை. இத்தகைய மோசமான இறைச்சி என் வாய்க்குள் நுழைந்ததில்லை”.
15 பிறகு தேவன் என்னிடம் சொன்னார் “சரி! நான் உனது அப்பத்தை சுடுவதற்கு உலர்ந்த மாட்டுச் சாணத்தைப் பயன்படுத்த அனுமதிக்கிறேன். நீ காய்ந்த மனிதமலத்தைப் பயன்படுத்த வேண்டாம்.”
16 பிறகு தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, எருசலேமிற்கு விநியோகம் ஆகும் உணவை அழிக்கிறேன். ஜனங்களிடம் உண்பதற்குச் சிறிதளவு உணவு உள்ளது. அவர்கள் தமது உணவு விநியோகத்தைப்பற்றிக் கவலையோடு இருப்பார்கள். அவர்களிடம் குடிப்பதற்குச் சிறிது அளவு தண்ணீர் மட்டுமே இருக்கும். அவர்கள் அந்தத் தண்ணீரைக் குடிக்கும்போது மிகவும் பயப்படுவார்கள். 17 ஏனென்றால், ஜனங்களுக்குப் போதிய அளவு உணவும் தண்ணீரும் இருக்காது. ஜனங்கள் தமது பாவங்களுக்காக, ஒருவருக்கொருவர் பயந்து வாடிப் போவார்கள்.
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்
40 கர்த்தரைக் கூப்பிட்டேன், அவர் என்னைக் கேட்டார்.
அவர் என் கூப்பிடுதலைக் கேட்டார்.
2 அழிவின் குழியிலிருந்து கர்த்தர் என்னைத் தூக்கியெடுத்தார்.
சேற்றிலிருந்து என்னைத் தூக்கினார்.
என்னைத் தூக்கியெடுத்துப் பாறையின் மீது வைத்தார்.
என் பாதங்களை உறுதியாக்கினார்.
3 தேவனை வாழ்த்திப் பாடும் புதுப்பாடலை கர்த்தர் என் வாயில் வைத்தார்.
எனக்கு நிகழ்ந்த காரியங்களைப் பலர் காண்பார்கள்.
அவர்கள் தேவனைத் தொழுதுகொள்வார்கள். அவர்கள் கர்த்தரை நம்புவார்கள்.
4 ஒருவன் கர்த்தரை நம்பினால் அவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
பிசாசுகளிடமும், பொய்த்தெய்வங்களிடமும் உதவி கேட்டு செல்லாத ஒருவன் உண்மையாகவே மகிழ்ச்சியோடிருப்பான்.
5 எனது தேவனாகிய கர்த்தாவே, நீர் அற்புதமான காரியங்கள் பலவற்றைச் செய்திருக்கிறீர்!
எங்களுக்காக அற்புதமான திட்டங்களை வகுத்திருக்கிறீர்!
கர்த்தாவே, உம்மைப் போன்றோர் வேறெவருமில்லை!
நீர் செய்த காரியங்களைக் குறித்து நான் மீண்டும் மீண்டும் கூறுவேன்.
அவை எண்ணிலடங்காதவை.
6 கர்த்தாவே, நீர் இவற்றை எனக்குத் தெளிவாக்கினீர்!
உமக்குப் பலிகளோ, தானியக் காணிக்கைகளோ தேவையில்லை.
உமக்குத் தகன பலிகளோ, பாவப்பரிகார பலிகளோ தேவையில்லை.
7 எனவே நான், “இதோ, நானிருக்கிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும்.
நான் வருகிறேன் புத்தகத்தில் என்னைக் குறித்து இது எழுதப்பட்டிருக்கிறது.
8 என் தேவனே, நீர் விரும்புவதைச் செய்ய நான் விரும்புகிறேன்.
உமது போதனைகளை நான் படித்திருக்கிறேன்.
9 பலர் கூடிய சபையில் உமது நன்மையின் நற்செய்தியை நான் எடுத்துரைப்பேன்.
நான் வாய் மூடி மௌனியாயிருப்பதில்லை.
கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
10 கர்த்தாவே, உமது நன்மைகளை நான் கூறுவேன்.
அவற்றை என் இருதயத்தில் மறைத்து வைக்கமாட்டேன்.
கர்த்தாவே, மீட்படைவதற்கு ஜனங்கள் உம்மை நம்பலாமென நான் அவர்களுக்குக் கூறுவேன்.
சபையின் ஜனங்களுக்கு நான் உமது தயவையும் உண்மையையும் மறைக்கமாட்டேன்.
11 கர்த்தாவே, என்னிடமிருந்து உமது இரக்கத்தை மறைக்காதேயும்.
உமது தயவும் உண்மையும் என்னை எப்பொழுதும் பாதுகாக்கட்டும்” என்றேன்.
12 தீயோர் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
அவர்கள் எண்ணிக்கைக் கடங்காதவர்கள்.
என் பாவங்கள் என்னைப் பிடித்தன, நான் அவற்றினின்று தப்ப இயலாது.
என் தலைமுடியைக் காட்டிலும் அதிக பாவங்கள் என்னில் உள்ளன.
என் தைரியத்தை இழந்துபோனேன்.
13 கர்த்தாவே, என்னிடம் ஓடி வந்து என்னைக் காப்பாற்றும்!
கர்த்தாவே, விரைந்து வந்து எனக்கு உதவும்.
14 அத்தீயோர் என்னைக் கொல்ல முயலுகிறார்கள்.
கர்த்தாவே, அவர்கள் அவமானமும் ஏமாற்றமும் அடையச் செய்யும்.
அவர்கள் என்னைக் காயப்படுத்த விரும்புகிறார்கள்.
அவர்கள் அவமானத்தால் ஓடிப்போகட்டும்.
15 அத்தீயோர் என்னைக் கேலி செய்கிறார்கள்.
அவர்கள் பேசமுடியாதபடி தடுமாறச் செய்யும்.
16 ஆனால் உம்மை நோக்கிப் பார்க்கும் ஜனங்கள் மகிழ்ச்சி அடையட்டும், அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தரைத் துதிப்போம்” என்று கூறட்டும்.
உம்மால் காப்பாற்றப்பட்டதால் அந்த ஜனங்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
17 ஆண்டவரே, நான் ஏழையும் உதவியற்றவனுமான மனிதன்.
எனக்கு உதவும், என்னைக் காப்பாற்றும்.
என் தேவனே, மிகவும் தாமதியாதேயும்.
இராகத் தலைவனுக்கு தாவீதின் பாடல்
41 ஏழைகள் வெற்றிபெற உதவி செய்யும் ஒருவன், பல ஆசீர்வாதங்களைப் பெறுவான்.
தொல்லைகள் வரும்போது கர்த்தர் அவனை மீட்பார்.
2 கர்த்தர் அவனைக் காத்து அவன் வாழ்வை மீட்பார்.
பூமியில் அவன் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பான்.
அவனை அழிக்க அவனுடைய பகைவர்களை தேவன் அனுமதிக்கமாட்டார்.
3 அவன் நோயுற்றுப் படுக்கையில் விழும்போது கர்த்தர் அவனுக்குப் பலமளிப்பார்.
அவன் நோயுற்றுப் படுக்கையில் இருக்கலாம், ஆனால் கர்த்தர் அவனைக் குணப்படுத்துவார்.
4 நான், “கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் உமக்கெதிராகப் பாவம் செய்தேன்.
ஆனால் என்னை மன்னித்து என்னைக் குணப்படுத்தும்!” என்றேன்.
5 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீமையானவற்றைப் பேசினார்கள்.
அவர்கள், “அவன் எப்போது மரித்து, மறக்கப்படுவான்?” என்றார்கள்.
6 சிலர் என்னைச் சந்திக்க வந்தார்கள்.
ஆனால் அவர்கள் உண்மையில் நினைப்பதை என்னிடம் கூறவில்லை.
அவர்கள் என்னைப்பற்றியச் செய்திகளை தெரிந்து கொள்ள வந்தார்கள்.
அதன் பிறகு அவர்கள் சென்று வதந்திகளை பரப்புகிறார்கள்.
7 என்னைப்பற்றிய தீயசொற்களை என் பகைவர்கள் இரகசியமாக முணுமுணுக்கிறார்கள்.
அவர்கள் எனக்கெதிராகத் திட்டமிடுகிறார்கள்.
8 அவர்கள், “அவன் ஏதோ தவுறு செய்தான், எனவே நோயுற்றான்.
அவன் குணப்படப் போவதில்லை” என்கிறார்கள்.
9 என் சிறந்த நண்பன் என்னோடு சாப்பிட்டான்.
நான் அவனை நம்பினேன்.
ஆனால் இப்போது அவனும் எனக்கெதிராகத் திரும்பிவிட்டான்.
10 எனவே கர்த்தாவே, என்னிடம் இரக்கமாயிரும்.
நான் குணமாகி எழுந்திருக்கட்டும், அவர்களுக்குப் பதில் அளிப்பேன்.
11 கர்த்தாவே, என் பகைவர்கள் என்னை காயப்படுத்தாதிருக்கட்டும்.
அப்போது நீர் என்னை ஏற்றுக்கொண்டீர் என்பதை அறிவேன்.
12 நான் களங்கமற்றிருந்தேன். நீர் எனக்கு ஆதரவளித்தீர்.
என்னை எழுந்திருக்கப் பண்ணி, என்றென்றும் உமக்குச் சேவை செய்யப்பண்ணும்.
13 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை வாழ்த்துங்கள்.
இவர் இருந்தவரும் இருக்கிறவருமானவர்.
ஆமென்! ஆமென்!
2008 by World Bible Translation Center