M’Cheyne Bible Reading Plan
தாவீது முன் சவுலின் அவமானம்
24 சவுல் பெலிஸ்தியரை விரட்டின பின்பு, “தாவீது என்கேதி அருகிலுள்ள பாலைவனப்பகுதியில் இருக்கிறான்” என்று ஜனங்கள் அறிவித்தனர்.
2 எனவே சவுல் இஸ்ரவேலரில் 3,000 பேரைத் தேர்ந்தெடுத்தான். அவர்களை கூட்டிக்கொண்டு தாவீதையும் அவனது ஆட்களையும் காட்டு ஆடுகள் உள்ள பாறைப் பகுதிகளில் தேடினான். 3 சவுல் சாலையோரத்தில் இருந்த ஆட்டுத் தொழுவத்திற்கு வந்தான். அதன் அருகில் ஒரு குகை இருந்தது. சவுல் அதனுள்ளே தீட்டுக்கழிக்கச் சென்றான். அதன் பின் பகுதியில் தாவீதும் அவனது ஆட்களும் ஒளிந்திருந்தனர். 4 தாவீதிடம் அவனது ஆட்கள், “கர்த்தர் சொன்ன நாள் இதுவே! கர்த்தர், ‘நான் உனது பகைவனை உன்னிடம் தருவேன். நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்துக்கொள்’ என்று சொல்லியிருக்கிறார்” என்றார்கள்.
தாவீது சவுலின் அருகில் ஊர்ந்து சென்றான். சவுலின் சால்வை நுனியை அறுத்தான். அதனைச் சவுல் கவனிக்கவில்லை. 5 பின்னர் இதற்காக தாவீது வருத்தப்பட்டான். 6 தாவீது தன் ஆட்களிடம், “மீண்டும் நான் என் எஜமானனுக்கு இதுபோல் செய்துவிடாமல் கர்த்தர்தான் தடுக்க வேண்டும், சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன். அவருக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன்!” என்றான். 7 தாவீது தனது ஆட்களையும் சவுலுக்குத் தீமை செய்துவிடாமல் பார்த்துக்கொண்டான்.
சவுலும் அந்தக் குகையை விட்டு வெளியேறிச் சென்றான். 8 தாவீது வெளியே வந்து சவுலைப் பார்த்து, “என் ஆண்டவனாகிய அரசனே” என்று சத்தமிட்டான்.
தாவீது தரையில் முகம் குப்புற வணங்குவதை சவுல் திரும்பிப் பார்த்தான். 9 தாவீது சவுலிடம், “‘உமக்குத் தீங்கிழைக்க தாவீது திட்டமிடுகிறான்’ என்று ஜனங்கள் சொல்வதை ஏன் காது கொடுத்துக் கேட்கிறீர்? 10 “நான் உமக்குத் தீமை செய்ய விரும்பவில்லை! இதனை உமது கண்களாலேயே பார்க்கலாம்! இன்று கர்த்தர் உம்மைக் குகைக்குள் அனுப்பினார். ஆனால் நான் உம்மைக் கொல்ல மறுத்து விட்டேன். உம் மீது இரக்கம் கொண்டேன். நானோ, ‘நான் என் எஜமானனுக்குத் தீமை செய்யமாட்டேன்! சவுல் கர்த்தரால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசன்!’ என்று கூறினேன். 11 என் கையிலுள்ள இந்தத் துண்டுத் துணியை பாரும். இதனை உமது சால்வை நுனியில் இருந்து வெட்டி எடுத்தேன். நான் உம்மை கொன்றிருக்கலாம்! நான் அப்படிச் செய்யவில்லை. இதனை நீர் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் உமக்கு எதிராக எந்த தீமையும் செய்யவில்லை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்! நான் உமக்கு எதிராக எதுவும் செய்யவில்லை. ஆனால் நீர் என்னை வேட்டையாடிக் கொல்லப்பார்க்கிறீர். 12 கர்த்தர் தாமே இதில் தீர்ப்பளிக்கட்டும்! நீர் எனக்குச் செய்த தீமைக்குத் தக்கதாக கர்த்தர் உம்மை தண்டிக்கக் கூடும். ஆனால் நான் உமக்கு எதிராகச் சண்டையிடமாட்டேன்.
13 “‘கெட்ட ஜனங்களிடமிருந்தே கெட்டவை வருகின்றன என்பது பழமொழி.’
“நான் எவ்வித தீமையும் செய்யவில்லை! நான் கெட்டவன் அல்ல! நான் உமக்குத் தீமை செய்யமாட்டேன்! 14 நீர் யாரைத் தேடுகிறீர்? இஸ்ரவேல் அரசன் யாரோடு சண்டையிட அலைகிறார்? உமக்குத் தீமை செய்யும் உமது எதிரியைத் தேடவில்லை! ஒரு மரித்த நாயை, தெள்ளுப்பூச்சியைத் தேடி அலைகிறீர்கள். 15 கர்த்தர் தாமே தீர்ப்பளிக்கட்டும். நம் இருவரையும் பற்றி அவர் முடிவு செய்யட்டும், நான் சொல்வது சரி என்று கர்த்தருக்குத் தெரியும். அவர் எனக்கு உதவுவார். கர்த்தர் உம்மிடமிருந்து என்னைக் காப்பாற்றுவார்” என்றான்.
16 தாவீது பேசி முடித்ததும் சவுல், “இது உன் குரல்தானா என் மகனாகிய தாவீதே?” என்று சொல்லி கதறி அழுதான். 17 அவன், “நீ சரியானவன். நான் தவறானவன். நீ என்னிடம் நல்லபடியாக இருக்க நான் உன்னிடம் தவறாக நடந்துக்கொண்டேன். 18 நீ எனக்குச் செய்த நன்மைகளைப்பற்றிக் கூறினாய். கர்த்தர் என்னை உன்னிடம் ஒப்படைத்தார். நீ என்னைக் கொல்லவில்லை. 19 இது நான் உன் எதிரி அல்ல என்பதைக் காட்டும். எவனும் தன் எதிரியைப் பிடித்தால் எளிதில் விடமாட்டான். இன்று எனக்கு நீ செய்த நன்மைக்காக கர்த்தர் உனக்குப் பதிலளிப்பார்! 20 நீ புதிய அரசனாவாய் என்பது எனக்குத் தெரியும். நீ இஸ்ரவேல் சாம்ராஜ்யத்தை ஆளுவாய் 21 இப்போது எனக்கொரு சத்தியம் செய்துக் கொடு. எனது சந்ததியாரைக் கொல்லமாட்டேன் என்று கர்த்தருடைய பேரில் சத்தியம் செய். என் தந்தையின் குடும்பத்திலிருந்து என் பெயரையும் அழிக்காமல் இருக்கவேண்டும்” எனக்கேட்டுக் கொண்டான்.
22 எனவே தாவீதும் தான் சவுலின் குடும்பத்தாரைக் கொல்லமாட்டேன் என்று சவுலிடம் சத்தியம் செய்தான். சவுல் தன் வீட்டிற்குத் திரும்பினான். தாவீதும் அவனது ஆட்களும் கோட்டைக்குப் போனார்கள்.
சபையின் ஒரு தார்மீகச் சிக்கல்
5 பாலுறவு தொடர்பான பாவங்கள் உங்களிடம் உள்ளன, என்று மக்கள் உண்மையாகவே கூறுகின்றனர். அவை தேவனை அறியாத மக்களிடம் கூட இல்லாத தீய வகையான பாலுறவு தொடர்பான பாவங்கள் ஆகும். ஒருவன் அவனது தந்தையின் மனைவியுடன் உறவு கொண்டிருக்கிறான் என்று மக்கள் கூறுகின்றனர். 2 எனினும் நீங்கள் உங்களைக் குறித்துப் பெருமையடைகின்றீர்கள். அதற்குப் பதிலாக, ஆழ்ந்த வருத்தம் கொண்டிருக்க வேண்டும். அந்தப் பாவத்தைச் செய்தவனை உங்களிடமிருந்து விலக்கி வைக்கவேண்டும். 3 என்னுடைய சரீரம் உங்களோடு இருக்கிறதில்லை. ஆனால் ஆவியில் நான் உங்களோடு இருக்கிறேன். உங்களோடு நான் அங்கே இருந்திருந்தால் எப்படிச் செய்திருப்பேனோ, அதே போல இப்பாவத்தைச் செய்த மனிதனை நான் ஏற்கெனவே நியாயம் தீர்த்துவிட்டேன். 4 நம் கர்த்தராகிய இயேசுவின் பெயரால் ஒன்று கூடுங்கள், நான் ஆவியில் உங்களோடு இருப்பேன். நம் கர்த்தராகிய இயேசுவின் வல்லமை உங்களோடு இருக்கும். 5 இந்த மனிதனை சாத்தானிடம் ஒப்படையுங்கள். அப்போது பாவம் நிரம்பிய அவனது சுயம் அழிக்கப்படும். அவனது ஆவியோ கர்த்தர் வரும் நாளில் காக்கப்படும்.
6 நீங்கள் தற்பெருமை பாராட்டுவது நல்லதல்ல. உங்களுக்கு இந்தப் பழமொழி தெரியும். “சிறிது புளிப்பு மாவானது எல்லா மாவையும் புளிக்கவைக்கும்.” 7 புளித்த பழைய மாவை அகற்றுங்கள். இதனால் புதிய மாவாக நீங்கள் ஆகமுடியும். நீங்கள் புளிக்காத அப்பமாக ஏற்கெனவே இருக்கிறீர்கள். ஆம் நமது பஸ்கா ஆட்டுக் குட்டியாகிய [a] கிறிஸ்துவோ ஏற்கெனவே நமக்காகக் கொல்லப்பட்டுள்ளார். 8 எனவே நமது பஸ்கா விருந்தை உண்போமாக. ஆனால் புளித்த பழைய மாவைக்கொண்ட அப்பத்தை உண்ணக் கூடாது. புளித்த மாவு பாவத்தையும் தவறுகளையும் குறிக்கும். ஆனால் நாம் புளிக்காத மாவுடைய அப்பத்தை உண்போம். அது நன்மை, உண்மை ஆகியவற்றைக் குறிக்கும் அப்பமாகும்.
9 பாலுறவில் பாவம் செய்யும் மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது என்று என் கடிதத்தில் எழுதி இருந்தேன். 10 உலக இயல்பின்படி வாழ்கின்ற மக்களோடு நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாது என்று நான் கருதவில்லை. உலக இயல்பின்படியான வாழ்வை உடைய அம்மக்களும் பாலுறவுரீதியாகப் பாவச் செயல்களைச் செய்கின்றனர். அவர்கள் சுயநலம் உள்ளவர்களாகவோ, பிறரை ஏமாற்றுபவராகவோ உள்ளனர். அவர்கள் உருவங்களை வணங்குகின்றனர். அவர்களைவிட்டு விலக வேண்டுமானால் நீங்கள் இந்த உலகத்தை விட்டுப் போக வேண்டியதிருக்கும். 11 நீங்கள் தொடர்புகொள்ளக்கூடாத மக்களை உங்களுக்கு இனம் காட்டுவதற்காகவே இதை எழுதுகிறேன். தன்னைக் கிறிஸ்துவுக்குள் உங்கள் சகோதரனாகக் கூறியும் பாலுறவில் பாவம் செய்கின்றவனுடனும், தன்னலம் பொருந்தியவனுடனும், உருவங்களை வணங்குபவனோடும், மற்றவர்கள் மீது களங்கம் சுமத்துபவனோடும், மது அருந்துபவனோடும், மக்களை ஏமாற்றுகின்றவனோடும் நீங்கள் தொடர்புகொள்ளக் கூடாது. அப்படிப்பட்டவர்களோடு அமர்ந்து உணவு உட்கொள்ளுதலும் கூடாது.
12-13 சபையின் அங்கம் அல்லாத அந்த மனிதர்களைப் பற்றித் தீர்ப்புக் கூறுவது எனது வேலையல்ல. தேவன் அவர்களுக்குத் தீர்ப்பளிப்பார். சபையின் அங்கத்தினருக்கு நீங்கள் தீர்ப்பு வழங்கவேண்டும். “தீயவனை உன்னிடமிருந்து விலக்கிவிடு” என்று எழுதப்பட்டிருக்கிறது.
3 தேவன் என்னிடம் சொன்னார்: “மனுபுத்திரனே, நீ எதைப் பார்க்கிறாயோ அதை சாப்பிடு. இச்சுருளையும் சாப்பிடு. பின்னர் போய் இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் இவற்றைச் சொல்.”
2 எனவே, நான் எனது வாயைத் திறந்தேன். அவர் என் வாய்க்குள் சுருளைப் போட்டார். 3 பின்னர் தேவன், “மனுபுத்திரனே, நான் இந்தச் சுருளைக் கொடுக்கிறேன், இதை விழுங்கு. இது உன் உடலை நிரப்பட்டும்” என்றார்.
எனவே நான் சுருளைச் சாப்பிட்டேன். அது வாயிலே தேனைப்போன்று சுவையாக இருந்தது.
4 பின்னர் தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் செல். என் வார்த்தைகளை அவர்களிடம் பேசு. 5 நீ புரிந்துகொள்ள இயலாத அந்நிய நாட்டுக்காரர்களிடம் உன்னை அனுப்பவில்லை. நீ இன்னொரு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை. நான் உன்னை இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அனுப்புகிறேன்! 6 நான் உன்னை உன்னால் புரிந்துகொள்ள முடியாத மொழிகளைப் பேசுகிற பல்வேறு நாடுகளுக்கு அனுப்பவில்லை. நீ அந்த ஜனங்களிடம் சென்று அவர்களோடு பேசினால் அவர்கள் நீ சொல்வதைக் கவனிப்பார்கள். ஆனால் நீ அந்த கடினமான மொழியைக் கற்க வேண்டியதில்லை. 7 இல்லை! நான் உன்னை இஸ்ரவேல் குடும்பத்தாரிடம் அனுப்புகிறேன். இந்த ஜனங்கள் மட்டுமே கடினமான மனங்களை உடையவர்கள். அவர்கள் மிகவும் பிடிவாதமுள்ளவர்கள். இஸ்ரவேல் ஜனங்கள் நீ சொல்வதை கவனிக்க மறுப்பார்கள். அவர்கள் என்னைக் கவனிக்க விரும்புவதில்லை. 8 ஆனால் அவர்களைப்போன்று உன்னையும் அவ்வளவு கடினமுள்ளவனாகச் செய்வேன். அவர்களுடையதைப் போன்றே உனது மனமும் அவ்வளவு கடினமானதாக இருக்கும். 9 வைரமானது கன்மலையைவிடக் கடினமானது. அதைப்போலவே உனது மனமானது அவர்களைவிடக் கடினமாகும். நீ அதைவிட மிகக்கடினமாக இருப்பாய். எனவே, அந்த ஜனங்களுக்கு நீ பயப்படமாட்டாய். எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகிற அந்த ஜனங்களுக்குப் பயப்படமாட்டாய்” என்றார்.
10 பின்னர் தேவன் என்னிடம், “மனுபுத்திரனே, நான் உன்னிடம் சொல்லுகிற ஒவ்வொரு வார்த்தையையும் நீ கவனிக்கவேண்டும். நீ அவ்வார்த்தைகளை நினைவுகொள்ளவேண்டும். 11 பிறகு, நீ நாடு கடத்தப்பட்ட உனது ஜனங்களிடம் சென்று, ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்’ என்று சொல்லவேண்டும். அவர்கள் நீ சொல்வதைக் கேட்கமாட்டார்கள். அவர்கள் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஆனால், நீ அவர்களிடம் இவற்றைச் சொல்லவேண்டும்” என்றார்.
12 பிறகு காற்று என்னைத் தூக்கியது. பிறகு நான் எனக்குப் பின்னால் ஒரு சத்தத்தைக் கேட்டேன். அது இடியைப்போன்று பெருஞ்சத்தமாக இருந்தது. அது “கர்த்தருடைய மகிமை ஆசீர்வதிக்கப்படுவதாக” என்று சொன்னது. 13 பின்னர் ஜீவன்களின் சிறகுகள் நகரத் தொடங்கின. சிறகுகள் ஒன்றை ஒன்று தொட்டு விடுவதுபோன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின. அவற்றின் முன்னால் இருந்த சக்கரங்கள் இடியைப்போன்று பெருஞ்சத்தத்தை எழுப்பின. 14 காற்று என்னைத் தூக்கிக்கொண்டு போய்விட்டது. நான் அந்த இடத்தை விட்டுவிலகினேன். எனது ஆவி மிகவும் துக்கமும் கலக்கமுமடைந்தது. கர்த்தருடைய வல்லமை என்மீது மிகவும் பலமாக இருந்தது. 15 இஸ்ரவேலை விட்டு கட்டாயமாக, தெலாபீபிலே, கேபார் கால்வாய் அருகில் வாழச் சென்ற ஜனங்களிடம் போனேன். அவர்களுடன் நான் ஏழு நாட்கள் தங்கினேன். அந்த நாட்களில் நான் அதிர்ச்சி அடைந்த நிலையில் பேச முடியாதவனாக இருந்தேன்.
16 ஏழு நாட்கள் ஆன பிறகு, கர்த்தருடைய வார்த்தை என்னிடம் வந்தது. அவர், 17 “மனுபுத்திரனே, நான் உன்னை இஸ்ரவேலின் காவல்காரனாக ஆக்கினேன். அவர்களுக்கு ஏற்படப்போகும் தீயவற்றைப்பற்றி நான் உனக்குச் சொல்வேன். நீ அவற்றைப்பற்றி இஸ்ரவேலை எச்சரிக்க வேண்டும். 18 ‘இந்தக் கெட்ட மனிதன் மரிப்பான்!’ என்று நான் சொன்னால் பிறகு, நீ அவனை எச்சரிக்க வேண்டும். அவன் தனது வாழ்வை மாற்றி தீமை செய்வதை நிறுத்தவேண்டும். நீ அவனை எச்சரிக்காவிட்டால் அவன் மரிப்பான். அவன் தனது பாவத்தால் மரிப்பான்! ஆனால் நான் அவனது மரணத்திற்கு உன்னையும் பொறுப்பாளி ஆக்குவேன். ஏனென்றால், நீ அவனிடம் சென்று அவனது வாழ்க்கையைக் காப்பாற்றவில்லை.
19 “ஒருவேளை அந்த மனிதனை நீ எச்சரித்து அவன் தனது வாழ்வை மாற்றிக்கொண்டு தீயவற்றைச் செய்வதை நிறுத்தும்படிச் சொல்லியிருக்கலாம். அவன் நீ சொல்வதைக் கவனிக்க மறுத்ததால் அவன் மரிப்பான். அவன் பாவம் செய்ததால் மரிப்பான். நான் அவன் மரணத்திற்கு உன்னைப் பொறுப்பாளியாக்கமாட்டேன். ஏனென்றால், நீ அவனை எச்சரித்தாய், நீ உனது வாழ்க்கையைக் காப்பாற்றினாய்.
20 “அல்லது ஒரு நல்லவன் தனது நற்செயலை நிறுத்திவிடலாம். அவனுக்கு முன்னால் நான் சில தடைகளை வைப்பேன். அது அவன் விழக் (பாவஞ்செய்ய) காரணமாகலாம். அவன் தீயவற்றைச் செய்யத் தொடங்கலாம். அவன் பாவம் செய்வதால் மரிப்பான். நீ அவனை எச்சரிக்கவில்லை. அவனது மரணத்திற்கு உன்னைப் பொறுப்பாளியாக்குவேன். ஜனங்கள் அவன் செய்த நன்மைகளை நினைக்கமாட்டார்கள்.
21 “ஆனால், நீ ஒரு நல்ல மனிதனை எச்சரித்து பாவத்தை நிறுத்தும்படிச் சொல்ல அவனும் பாவம் செய்வதை நிறுத்திவிட்டால் பின்னர் அவன் மரிக்கமாட்டான். ஏனென்றால், நீ அவனை எச்சரித்தாய், அவனும் உன்னைக் கவனித்தான். இவ்வழியில் நீ உனது சொந்த உயிரைக் காப்பாற்றினாய்” என்றார்.
22 பின்னர் கர்த்தருடைய வல்லமை என்னிடம் அங்கு வந்தது. அவர் என்னிடம், “எழுந்து பள்ளத்தாக்குக்குப் போ, அங்கே நான் உன்னிடம் பேசுவேன்” என்றார்.
23 எனவே, நான் எழுந்து பள்ளத்தாக்குக்குப் போனேன். கர்த்தருடைய மகிமை அங்கே இருந்தது. கேபார் ஆற்றங்கரையில் இருந்தது போன்றிருந்தது. எனவே, நான் தரையில் என் முகம் படும்படிக் குனிந்தேன். 24 ஆனால் காற்று வந்து நான் நிற்குமாறு என்னைத் தூக்கியது. அவர் என்னிடம் “உன் வீட்டிற்குப் போய் உனது வீட்டிற்குள் அங்கே உன்னைப் பூட்டிகொள். 25 மனுபுத்திரனே, ஜனங்கள் கயிறுகளோடு வந்து உன்னைக் கட்டிப்போடுவார்கள். ஜனங்களிடம் போக உன்னை அனுமதிக்கமாட்டார்கள். 26 நான் உனது நாக்கை மேல் அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்படிச் செய்வேன். உன்னால் பேசமுடியாமல் போகும். எனவே அந்த ஜனங்கள், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று கற்றுத் தர ஆள் இல்லாமல் போவார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர். 27 ஆனால் நான் உன்னிடம் பேசுவேன். பின்னர் நான் உன்னைப் பேச அனுமதிப்பேன். ஆனால் நீ அவர்களிடம் பேச வேண்டும். ‘நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொல்கிறார்.’ ஒருவன் இதனைக் கேட்க விரும்பினால் நல்லது. ஒருவன் கேட்க விரும்பாவிட்டாலும் நல்லது. ஆனால் அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர்.
எதுதூன் என்னும் தலைவனுக்கு தாவீதின் பாடல்
39 நான், “நான் கூறும் காரியங்களில் கவனமாக இருப்பேன்.
என் நாவினால் நான் பாவம் செய்யாதபடி நான் தீய ஜனங்களின் அருகே இருக்கையில் வாய்மூடி மௌனமாக இருப்பேன்” என்றேன்.
2 நான் பேச மறுத்தேன்.
நான் எதையும் கூறவில்லை.
ஆனால் உண்மையில் கலங்கிப் போனேன்.
3 நான் மிகவும் கோபமடைந்தேன்.
அதை நினைக்கும்போதெல்லாம் என் கோபம் பெருகியபடியால், நான் ஏதோ கூறினேன்.
4 கர்த்தாவே, எனக்கு என்ன நேரிடும்?
எத்தனை காலம் நான் வாழ்வேன் என எனக்குச் சொல்லும்.
என் ஆயுள் எவ்வளவு குறுகியதென எனக்குத் தெரியப்படுத்தும்.
5 கர்த்தாவே, எனக்கு அற்ப ஆயுளைக் கொடுத்தீர்.
என் ஆயுள் உமக்குப் பொருட்டல்ல.
ஒவ்வொருவனின் ஆயுளும் மேகத்தைப் போன்றது.
ஒருவனும் நிரந்தரமாக வாழ்வதில்லை!
6 நாம் வாழும் வாழ்க்கை கண்ணாடியில் காணும் தோற்றத்தைப் போன்றது.
நமது தொல்லைகளுக்குக் காரணமேதுமில்லை.
நாம் பொருள்களைச் சேர்த்து வைக்கிறோம்.
ஆனால் யார் அதை அனுபவிப்பாரென்பதை நாம் அறியோம்.
7 எனவே, ஆண்டவரே, நான் வேறு எதிலும் நம்பிக்கை வைக்கவில்லை.
நீரே என் நம்பிக்கை!
8 கர்த்தாவே, நான் செய்த தீய செயல்களிலிருந்து என்னைக் காப்பாற்றும்.
ஒரு துன்மார்க்கனைப் போல நான் நடத்தப்பட அனுமதியாதிரும்.
9 நான் என் வாயைத் திறந்து, எதையும் கூறப்போவதில்லை.
கர்த்தாவே, செய்ய வேண்டியதை நீர் செய்தீர்.
10 தேவனே, என்னைத் தண்டிப்பதை நிறுத்தும்.
நீர் நிறுத்தாவிட்டால் நான் அழிந்துபோவேன்.
11 கர்த்தாவே, ஜனங்கள் தவறு செய்வதனால் நீர் தண்டிக்கிறீர்.
நேர்மையான வாழ்க்கை வாழ போதிக்கிறீர்.
பூச்சி துணியை அரிப்பதுபோல் ஜனங்கள் நேசிக்கிறவற்றை அழிக்கிறீர்.
எங்களுடைய வாழ்க்கை விரைவில் மறையும் சிறு மேகம் போன்றது.
12 கர்த்தாவே, என் ஜெபத்தைக் கேளும்.
நான் உம்மை நோக்கிக் கூப்பிடும் வார்த்தைகளைக் கவனியும்.
என் கண்ணீரைப் பாரும்.
உம்மோடு வாழ்க்கையைத் தாண்டிச் செல்கிற ஒரு பயணியாகவே நான் இருக்கிறேன்.
என் முற்பிதாக்களைப்போல சில காலம் மட்டுமே இங்கு நான் வாழ்கிறேன்.
13 கர்த்தாவே, என்னிடம் பொருமையாயிரும்,
நான் மரிக்கும் முன்பு மகிழ்ச்சியாக இருக்கட்டும்.
2008 by World Bible Translation Center