M’Cheyne Bible Reading Plan
கேகிலாவில் தாவீது
23 ஜனங்கள் தாவீதிடம், “பாருங்கள் பெலிஸ்தியர்கள் கேகிலாவிற்கு எதிராகப் போரிடுகிறார்கள். அவர்கள் அறுவடை களத்திலிருந்து தானியங்களைக் கொள்ளையிடுகிறார்கள்” என்றனர்.
2 உடனே தாவீது கர்த்தரிடம், “நான் போய் பெலிஸ்தியர்களோடு போரிடட்டுமா?” என்று கேட்டான்.
கர்த்தர், “ஆமாம் நீ பெலிஸ்தியர்களோடு போரிட்டு கேகிலாவைக் காப்பாற்று” என்று பதிலுரைத்தார்.
3 ஆனால் தாவீதைச் சேர்ந்தவர்கள், “பாருங்கள், யூதாவில் உள்ள நாங்களே பயந்து போயுள்ளோம். பெலிஸ்தியர்கள் இருக்கும் இடத்திற்குப் போனால் எவ்வளவு பயப்படுவோம் என எண்ணிப்பாரும்” என்றனர்.
4 தாவீது மீண்டும் கர்த்தரிடம் கேட்டான். கர்த்தர், “கேகிலாவிற்குப் போ, பெலிஸ்தியர்களை வெல்ல நான் உதவுவேன்” என்றார். 5 எனவே, தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவிற்கு சென்றனர். அவர்கள் பெலிஸ்தியரோடு சண்டையிட்டு தோற்கடித்து, அவர்களின் மந்தைகளைக் கவர்ந்துகொண்டனர். இவ்வாறு, தாவீது கேகிலாவைக் காப்பாற்றினான். 6 (அபியத்தார் தாவீதிடம் ஓடிப்போனபோது அவன் தன்னோடு ஏபோத்தையும் கொண்டு சென்றான்.)
7 ஜனங்கள் சவுலிடம் வந்து தாவீது கேகிலாவில் இருப்பதை அறிவித்தனர். அதற்கு சவுல் “தேவன் தாவீதை எனக்குக் கொடுத்தார்! அவன் தானே வலைக்குள் விழுந்திருக்கிறான். அவன் பூட்டிப் போடக்கூடிய கோட்டைக் கதவுகளை உடைய நகரத்திற்குள் போய்விட்டான்” என்றான். 8 சவுல் தனது படை வீரர்களைப் போரிடுவதற்காகக் கூட்டினான். அவர்கள் கேகிலாவிற்கு சென்று தாவீதையும் அவனது ஆட்களையும் தாக்கத் தயாரானார்கள்.
9 தனக்கு எதிரான சவுலின் திட்டங்களைத் தாவீது அறிந்துக்கொண்டான். பிறகு ஆசாரியனாகிய அபியத்தாரிடம், “ஏபோத்தை கொண்டு வா” என்றான்.
10 தாவீது, “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, எனக்காக சவுல் இந்நகரத்திற்கு வந்து அதை அழிக்கப்போவதாக அறிந்தேன். 11 சவுல் கேகிலாவிற்கு வருவாரா? இங்குள்ள ஜனங்கள் என்னை சவுலிடம் ஒப்படைப்பார்களா? இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தாவே! நான் உமது தாசன்! தயவு செய்து சொல்லும்!” என்று வேண்டினான்.
“சவுல் வருவான்” என்று கர்த்தர் பதிலுரைத்தார்.
12 மீண்டும் தாவீது, “என்னையும் எனது ஆட்களையும் கேகிலா ஜனங்கள் சவுலிடம் ஒப்படைத்துவிடுவார்களா?” என்று கேட்டான்.
“அவர்கள் செய்வார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.
13 எனவே தாவீதும் அவனது ஆட்களும் கேகிலாவை விட்டு விலகினார்கள். அவனோடு 600 பேர் சென்றனர். அவர்கள் ஒவ்வொரு இடமாக நகர்ந்தனர். கேகிலாவிலிருந்து தாவீது தப்பிவிட்டதை சவுல் அறிந்தான். எனவே அவன் அந்நகரத்திற்குப் போகவில்லை.
சவுல் தாவீதைத் துரத்துகிறான்
14 பாலைவனத்தின் கோட்டைகளில் தாவீது மறைந்திருந்தான். அவன் சீப் பாலைவனத்தில் உள்ள மலை நகரத்திற்குச் சென்றான். ஒவ்வொரு நாளும் சவுல் தாவீதைத்தேடினான். ஆனால் சவுல் தாவீதைப் பிடிக்கும்படி கர்த்தர் அனுமதிக்கவில்லை.
15 சீப் பாலைவனத்தில் உள்ள ஓரேஷில் தாவீது இருந்தான். சவுல் அவனைக் கொல்ல முயன்றதால் அவன் பயந்தான். 16 ஆனால் சவுலின் மகனான யோனத்தான் ஓரேஷில் தாவீதை சந்தித்தான். தேவனில் உறுதியான நம்பிக்கையை வைக்கும்படி யோனத்தான் தாவீதுக்கு உதவினான். 17 யோனத்தான், “பயப்படாதே என் தந்தையான சவுல் உன்னைக் கொல்லமாட்டார். நீ இஸ்ரவேலின் அரசனாவாய். நான் உனக்கு அடுத்தவனாக இருப்பேன். இதுவும் என் தந்தைக்குத் தெரியும்” என்றான்.
18 யோனத்தானும், தாவீதும் கர்த்தருக்கு முன்னால் ஒரு ஒப்பந்தம் செய்துக் கொண்டனர். யோனத்தான் தன் வீட்டிற்குப் போக, தாவீது ஓரேஷிலேயே தங்கினான்.
சீப்பிலுள்ள ஜனங்கள் தாவீதைப் பற்றி சவுலிடம் சொல்கின்றனர்
19 சீப்பிலுள்ள ஜனங்கள் சவுலைப் பார்க்க கிபியாவிற்குச் சென்றனர். அவர்கள், “எங்கள் பகுதியில் தான் தாவீது ஒளிந்திருக்கிறான். அவன் ஆகிலா மேட்டில் உள்ள, ஓரேஷ் கோட்டைக்குள் இருக்கிறான். அது யெஷிமோனின் தெற்கில் உள்ளது. 20 இப்போது அரசே நீர் விரும்பும் எந்தக் காலத்திலும் இறங்கி வாரும். தாவீதை உங்களிடம் ஒப்படைப்பது எங்கள் கடமை” என்றார்கள்.
21 சவுலோ, “எனக்கு உதவினதற்காக கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். 22 போய், அவனைப்பற்றி அதிகமாகத் தெரிந்துக்கொள்ளுங்கள். தாவீது எங்கே தங்கியிருக்கிறான்? அவனை யார் யார் வந்து சந்திக்கின்றனர். ‘தாவீது தந்திரக்காரன். அவன் என்னை ஏமாற்ற விரும்புகிறான்’ என்று நினைத்தான். 23 தாவீது ஒளிந்துள்ள எல்லா இடங்களையும் அறிந்துகொள்ளுங்கள். பின் என்னிடம் வந்து எல்லாவற்றையும் கூறுங்கள். பின் நான் உங்களோடு வருவேன். தாவீது அந்தப் பகுதியில் இருந்தால் அவனைக் கண்டுபிடிப்பேன். யூதாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களிலும் அவனைத் தேடிக் கண்டுபிடிப்பேன்” என்றான்.
24 பின்னர் சீப்பிலுள்ள ஜனங்கள் திரும்பிப் போனார்கள். சவுல் தாமதமாகப் போனான்.
தாவீதும் அவனது ஆட்களும் மாகோன் பாலைவனத்தில் இருந்தனர். அவர்கள் இருந்த பகுதி எஷிமோனின் தென் பகுதியில் இருந்தது. 25 சவுல் தன் ஆட்களோடு தாவீதைத் தேடிச் சென்றான். சவுல் தேடுவதாக ஜனங்கள் தாவீதை எச்சரித்தனர். அதனால் மாவோனில் உள்ள “கன்மலையில்” தாவீது இறங்கினான். சவுல் இதனை அறிந்து அங்கும் தாவீதைத் தேடிப்போனான்.
26 சவுல் மலையின் ஒரு பகுதியில் இருந்த போது தாவீதும் அவனது ஆட்களும் அடுத்த பகுதியில் இருந்தனர். தாவீது சவுலை விட்டு விரைவாக விலகினான். சவுலும் அவனது ஆட்களும் மலையைச் சுற்றிப் போய் தாவீதையும் அவனது ஆட்களையும் பிடிக்க முயன்றனர்.
27 அப்போது ஒரு தூதுவன் சவுலிடம் வந்து, “வேகமாக வாருங்கள்! பெலிஸ்தியர் நம்மை தாக்கப் போகின்றனர்!” என்றான்.
28 எனவே சவுல் தாவீதைத் துரத்துவதை விட்டு பெலிஸ்தியரோடு சண்டையிடப் போனான். எனவே ஜனங்கள் இந்த மலையை “வழுக்கும் பாறை” அல்லது “சேலா அம்மாலிகோத்” என்று அழைக்கின்றனர். 29 தாவீது அவ்விடத்தை விட்டு என்கேதியிலுள்ள கோட்டைகளுக்குச் சென்றான்.
கிறிஸ்துவின் அப்போஸ்தலர்கள்
4 மக்கள் நம்மைப்பற்றி நினைக்க வேண்டியது இதுவாகும். நாம் கிறிஸ்துவின் பணியாட்களே. தேவன் தமது இரகசியமான உண்மைகளை ஒப்படைத்திருக்கிற மக்கள் நாமே. 2 ஒரு விஷயத்தில் நம்பிக்கைக்கு உரியவனாக இருக்கிற ஒருவன் அந்நம்பிக்கைக்குத் தான் தகுதியானவனே என்று காட்ட வேண்டும். 3 நீங்கள் எனக்கு நீதி வழங்கினால் அதைப் பொருட்படுத்தமாட்டேன். எந்த உலகத்து நீதிமன்றமும் எனக்கு நியாயம் தீர்ப்பதைக் கூடப் பொருட்டாகக்கொள்ளமாட்டேன். நான் எனக்கு நீதி வழங்கமாட்டேன். 4 நான் எந்தத் தவறும் இழைத்ததாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அது என்னைக் களங்கம் அற்றவனாக மாற்றாது. என்னை நியாயம் தீர்க்கிறவர் கர்த்தர் ஒருவரே. 5 எனவே தகுந்த நேரம் வரும் முன்பு நீதி வழங்காதீர்கள். கர்த்தர் வரும்வரை காத்திருங்கள் அவர் இருளில் மறைந்திருப்பவற்றின் மீது ஒளியை அனுப்புவார். மக்களின் மனதிலிருக்கும் இரகசியமான விஷயங்களை அவர் வெளிப்படுத்துவார். ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய கீர்த்தியை அவனவனுக்குக் கிடைக்கும்படியாகச் செய்வார்.
6 சகோதர சகோதரிகளே! அப்பொல்லோவையும், என்னையும் இவற்றில் உதாரணங்களாக நான் உங்களுக்குக் காட்டினேன். எழுதப்பட்டுள்ள சொற்களின் பொருளை எங்களிடமிருந்து நீங்கள் அறிந்துகொள்ளுமாறு இதைச் செய்தேன். “வேத வாக்கியங்களில் எழுதி இருப்பதைப் பின்பற்றி நடவுங்கள்.” அப்போது நீங்கள் ஒருவனைக் குறித்துப் பெருமை பாராட்டி, இன்னொருவனை வெறுக்கமாட்டீர்கள். 7 நீங்கள் பிற மக்களை விட சிறந்தவர்கள் என்று யார் கூறினார்கள்? உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றையே நீங்கள் அனுபவிக்கிறீர்கள். உங்களுக்குத் தரப்பட்டவையே உங்களுக்கு வாய்த்திருக்கையில் அவற்றை உங்கள் வல்லமையால் பெற்றதாக நீங்கள் ஏன் பெருமை அடைய வேண்டும்?
8 உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் நீங்கள் பெற்றிருப்பதாக நினைக்கிறீர்கள். நீங்கள் செல்வந்தர்களென எண்ணுகிறீர்கள். எங்கள் உதவியின்றி நீங்கள் ஆளுபவர்களாக விளங்குவதாகக் கருதுகிறீர்கள். நீங்கள் உண்மையிலேயே மன்னர்களாக விளங்க வேண்டுமென நான் விரும்புகிறேன். அப்போது, நாங்களும் உங்களோடுகூட ஆளுபவர்களாக இருந்திருப்போம். 9 ஆனால் தேவன் எனக்கும் பிற அப்போஸ்தலர்களுக்கும் கடைசியான இடத்தையே கொடுத்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எல்லோரும் பார்த்திருக்க மரண தண்டனை அளிக்கப்பட்ட மனிதர்களைப் போன்றவர்கள் நாங்கள். தேவ தூதர்களும் மனிதர்களும் முழு உலகமும் பார்த்திருக்கும் ஒரு காட்சியைப் போன்றவர்கள் நாங்கள். 10 கிறிஸ்துவுக்கு நாங்கள் மூடர்கள். ஆனால் கிறிஸ்துவுக்குள் ஞானிகளாக நீங்கள் உங்களைக் கருதுகிறீர்கள். நாங்கள் பலவீனர்கள். ஆனால் நீங்கள் பலசாலிகளாக நினைக்கிறீர்கள். மக்கள் உங்களை கௌரவிக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்களை கௌரவப்படுத்துவதில்லை. 11 இப்போதும் குடிப்பதற்கும், உண்பதற்கும் தேவையான பொருள்கள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. எங்களுக்கு வேண்டிய ஆடைகள் இருப்பதில்லை. அவ்வப்போது பிறரால் அடிக்கப்படுகிறோம். எங்களுக்கு வீடுகள் இல்லை. 12 எங்களுக்குத் தேவையான உணவின்பொருட்டு எங்கள் கைகளால் கடினமாக உழைக்கிறோம். மக்கள் எங்களை சபிக்கிறார்கள். ஆனால் நாங்கள் அவர்களை ஆசீர்வதிக்கிறோம். நாங்கள் மோசமான முறையில் நடத்தப்படுகிறபோது பொறுமையுடன் சகித்துக்கொள்கிறோம். மக்கள் குறை கூறுகையில் பொறுத்துக்கொள்கிறோம். 13 மக்கள் எங்களைக் குறித்துத் தீமைகளைப் பேசினாலும், நாங்கள் அவர்களைக் குறித்து நல்லவற்றையே பேசுகிறோம். பூமியின் கழிவுப் பொருள்களாகவும், அழுக்காகவுமே மக்கள் எங்களை இதுவரைக்கும் நடத்தி வந்துள்ளனர்.
14 நீங்கள் வெட்கமடையுமாறு செய்ய நான் முயலவில்லை. உங்களை எனது சொந்தக் குழந்தைகளெனக் கருதி இவற்றையெல்லாம் உங்களுக்கு முன் எச்சரிக்கையாய் எழுதுகிறேன். 15 கிறிஸ்துவில் பதினாயிரம் போதகர்களை நீங்கள் பெற்றிருக்கலாம். ஆனால் உங்களுக்குப் பல தந்தையர் இல்லை. நற்செய்தியின் மூலமாகக் கிறிஸ்து இயேசுவில் நான் உங்களுக்குத் தந்தையானேன். 16 நீங்களும் என்னைப் போலவே இருக்கும்படி நான் உங்களை வேண்டுகிறேன். 17 அதனாலேயே நான் தீமோத்தேயுவை உங்களிடம் அனுப்புகிறேன். கர்த்தருக்குள் அவன் என் மகன் ஆவான். நான் தீமோத்தேயுவை நேசிக்கிறேன். அவன் உண்மையுள்ளவன். கிறிஸ்து இயேசுவில் என் வாழ்வின் நெறியை நீங்கள் நினைவுகூருவதற்கு அவன் உதவி செய்வான். எல்லா சபைகளிலும் அந்த வாழ்க்கை நெறியையே நான் போதிக்கிறேன்.
18 நான் உங்களிடம் மீண்டும் வரமாட்டேன் என எண்ணி உங்களில் சிலர் தற்பெருமையால் நிரம்பி இருக்கிறீர்கள். 19 ஆனால் மிக விரைவில் உங்களிடம் வருவேன். தேவன் நான் வரவேண்டுமென விரும்பினால் நான் வருவேன். அப்போது தற் பெருமை பாராட்டுவோர் சொல்வதை அல்ல, செயலில் காட்டுவதைக் காண்பேன். 20 தேவனுடைய இராஜ்யம் பேச்சல்ல, பெலத்திலே என்பதால் இதைக் காண விரும்புகிறேன். 21 உங்கள் விருப்பம் என்ன? நான் உங்களிடம் தண்டனை தர வருவதா? அல்லது அன்பு, மென்மை ஆகியவற்றோடு வருவதா?
2 குரலானது, மனுபுத்திரனே, [a] எழுந்து நில், நான் உன்னோடு பேசப்போகிறேன் என்று சொன்னது.
2 பிறகு, ஒரு காற்று வந்து என்னை நிற்கும்படி செய்தது. என்னோடு பேசிய அந்த நபருக்கு (தேவன்) செவிசாய்த்தேன். 3 அவர் என்னிடம் “மனுபுத்திரனே, இஸ்ரவேல் குடும்பத்தோடு பேசுவதற்கு நான் உன்னை அனுப்புகிறேன். அந்த ஜனங்கள் எனக்கு எதிராகப் பலமுறை திரும்பினார்கள். அவர்களது முற்பிதாக்களும் எனக்கு எதிராகத் திரும்பினார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பலமுறை பாவம் செய்திருக்கின்றனர். அவர்கள் இன்றும் பாவம்செய்துகொண்டிருக்கின்றனர். 4 அந்த ஜனங்களோடு பேசவே உன்னை நான் அனுப்புகிறேன். ஆனால் அவர்கள் மிகக் கடினமானவர்களாக இருக்கின்றனர். அவர்கள் கடினமான மனதை உடையவர்கள். ஆனால் நீ அந்த ஜனங்களோடு பேசவேண்டும். நமது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார் என்று நீ சொல்லவேண்டும். 5 ஆனால் அந்த ஜனங்கள் நீ சொல்வதைக் கவனிக்கமாட்டார்கள். அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் மோசமான கலகக்காரர்கள். அவர்கள் எப்பொழுதும் எனக்கு எதிராக திரும்புகின்றார்கள். ஆனால் நீ அவற்றைச் சொல்லவேண்டும். எனவே, அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசி இருப்பதை அறிந்துக்கொள்வார்கள்.
6 “மனுபுத்திரனே, அந்த ஜனங்களுக்குப் பயப்படாதே, அவர்கள் சொல்கின்றவற்றுக்கும் பயப்படாதே. இது உண்மை. அவர்கள் உனக்கு எதிராகத் திரும்பி உன்னைக் காயப்படுத்த விரும்புவார்கள். அவர்கள் முட்களைப் போன்றிருப்பார்கள். நீ தேள்களோடு இருப்பதைப்போன்று நினைப்பாய். ஆனால் அவர்கள் சொல்கின்றவற்றுக்கு நீ பயப்படாதே. அவர்கள் கலகக்காரர்கள். அவர்களுக்குப் பயப்படாதே! 7 நான் சொல்கின்றவற்றை நீ அவர்களிடம் சொல்லவேண்டும். அவர்கள், நீ சொல்வதைக் கவனிக்க மாட்டார்கள் என்பதை நான் அறிவேன். எனக்கு எதிராகப் பாவம் செய்வதை நிறுத்தமாட்டார்கள். ஏனென்றால், அவர்கள் கலகக்காரர்கள்.
8 “மனுபுத்திரனே நான் உனக்குச் சொல்கின்றவற்றை நீ கவனிக்கவேண்டும். அக்கலகக்கார ஜனங்களைப்போன்று நீ எனக்கு எதிராகத் திரும்பவேண்டாம். உன் வாயைத் திறந்து நான் தரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள். பின்னர் அவ்வார்த்தைகளை அந்த ஜனங்களிடம் பேசு, இவ்வார்த்தைகளை சாப்பிடு” என்றார்.
9 பின்னர் நான் (எசேக்கியேல்) என்னிடம் ஒரு கை நீட்டப்படுவதைக் கண்டேன். அதனிடம் எழுதப்பட்ட சுருள் ஒன்று இருந்தது. 10 நான் அச்சுருளைத் திறந்து முன்னும் பின்னும், எழுதப்பட்டிருப்பதைப் பார்தேன். அனைத்தும் துக்கப் பாடல்களாகவும் துக்கக் கதைகளாகவும் எச்சரிக்கைகளாகவும் இருந்தன.
நினைவுகூரும் நாளுக்கான தாவீதின் பாடல்.
38 கர்த்தாவே, நீர் கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாதேயும்.
என்னை ஒழுங்குபடுத்துகையில் கோபமடையாதேயும்.
2 கர்த்தாவே, நீர் என்னைத் துன்புறுத்துகிறீர்.
உமது அம்புகள் என்னை ஆழமாகத் தாக்கியுள்ளன.
3 நீர் என்னைத் தண்டித்தீர்.
இப்போது என் உடல் முழுவதும் புண்களாயிருக்கின்றன.
நான் பாவம் செய்ததினால், நீர் என்னைத் தண்டித்தீர்.
என் எலும்புகள் எல்லாம் வலிக்கின்றன.
4 தீய காரியங்களைச் செய்ததினால் நான் குற்ற வாளியானேன்.
என் தோளில் அக்குற்றங்கள் பாரமாக உள்ளன.
5 நான் அறிவில்லாத காரியமொன்றைச் செய்தேன்.
இப்போது ஆறாத காயங்கள் என்னில் உள்ளன.
6 நான் குனிந்து வளைந்தேன்.
நாள் முழுவதும் நான் வருத்தமடைந்திருக்கிறேன்.
7 காய்ச்சலினாலும் வலியினாலும்
என் உடல் முழுவதும் துன்புறுகிறது.
8 நான் பெரிதும் தளர்ந்து போகிறேன்.
வலியினால் முனகவும், அலறவும் செய்கிறேன்.
9 என் ஆண்டவரே, என் அலறலின் சத்தத்தைக் கேட்டீர்.
என் பெருமூச்சு உமக்கு மறைவாயிருக்கவில்லை.
10 என் காய்ச்சலினால் என் பெலன் மறைந்தது.
என் பார்வை பெரிதும் மங்கிப் போயிற்று.
11 என் நோயினிமித்தம் என் நண்பர்களும், அயலகத்தாரும் என்னைச் சந்திப்பதில்லை.
என் குடும்பத்தாரும் என்னை நெருங்குவதில்லை.
12 என் பகைவர்கள் என்னைக் குறித்துத் தீய காரியங்களைச் சொல்கிறார்கள்.
பொய்யையும், வதந்திகளையும் அவர்கள் பரப்புகிறார்கள்.
என்னைக் குறித்து எப்போதும் பேசுகிறார்கள்.
13 நான் கேட்கமுடியாத செவிடனைப் போலானேன்.
நான் பேசமுடியாத ஊமையைப் போலானேன்.
14 நான், ஒருவனைக் குறித்தும் பிறர் கூறுபவற்றைக் கேட்க முடியாத மனிதனைப் போலானேன்.
என் பகைவர்கள் தவறு செய்கிறார்கள் என்பதை நிரூபிக்க என்னால் இயலவில்லை.
15 கர்த்தாவே எனக்கு ஆதரவளியும்.
எனது தேவனாகிய ஆண்டவரே, நீர் எனக்காகப் பேச வேண்டும்.
16 நான் ஏதேனும் பேசினால், என் பகைவர்கள் என்னைப் பார்த்து நகைப்பார்கள்.
நான் நோயுற்றிருப்பதை அவர்கள் காண்பார்கள்.
செய்த தவற்றிற்கு நான் தண்டனை அனுபவிப்பதாக அவர்கள் கூறுவார்கள்.
17 தீயக் காரியங்களைச் செய்த குற்றவாளி நான் என்பதை அறிவேன்.
என் நோவை என்னால் மறக்க இயலாது.
18 கர்த்தாவே, நான் செய்த தீயக் காரியங்களைக் குறித்து உம்மிடம் பேசினேன்.
என் பாவங்களுக்காகக் கவலையடைகிறேன்.
19 என் பகைவர்கள் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் இருக்கிறார்கள்.
அவர்கள் பல பல பொய்களைக் கூறியுள்ளார்கள்.
20 என் பகைவர்கள் எனக்குத் தீயக் காரியங்களைச் செய்தனர்.
ஆனால் நான் அவர்களுக்கு நல்லவற்றையே செய்தேன்.
நான் நல்லவற்றை மட்டுமே செய்ய முயன்றேன், ஆனால் அந்த ஜனங்கள் எனக்கெதிராகத் திரும்பினார்கள்.
21 கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும்.
என் தேவனே, என் அருகே தங்கியிரும்.
22 விரைந்து வந்து எனக்கு உதவும்!
என் தேவனே, என்னை மீட்டருளும்.
2008 by World Bible Translation Center