M’Cheyne Bible Reading Plan
தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்க்கப் போகிறான்
21 பின்பு தாவீது வெளியே போனான். யோனத்தான் நகரத்திற்குத் திரும்பிப் போனான். 2தாவீது நோப் எனும் நகரத்திற்கு ஆசாரியனான அகிமெலேக்கைப் பார்க்கப் போனான்.
அகிமெலேக்கு தாவீதை சந்திக்க வெளியே வந்தான். அவன் பயத்தால் நடுங்கினான். அவன், “ஏன் தனியாக வந்தீர்கள்? உங்களோடு ஏன் யாரும் வரவில்லை?” என்று கேட்டான்.
3 அதற்கு தாவீது, “அரசன் எனக்கு விசேஷ கட்டளையை இட்டிருக்கிறான். அவர் என்னிடம், ‘எவரும் இதனைப் பற்றித் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும். நீ செய்ய வேண்டுமென்று நான் சொன்னதை ஒருவரும் தெரிந்துக்கொள்ளாமல் இருக்கட்டும்’ என்றார். நான் என் ஜனங்களிடம் என்னை சந்திக்கிற இடத்தைப் பற்றி கூறியிருக்கிறேன். 4 இப்போது உன்னோடு என்ன உணவை வைத்திருக்கிறாய்? எனக்கு 5 அப்பங்களையோ அல்லது உன்னிடம் உள்ள எதையேனும் புசிக்கக் கொடு” என்றான்.
5 ஆசாரியன் தாவீதிடம், “என்னிடம் சாதாரணமான அப்பங்கள் இல்லை. பரிசுத்த அப்பங்கள் மட்டுமே உள்ளன. உங்கள் ஆட்கள் எந்தப் பெண்ணோடும் பாலின உறவு கொள்ளாமல் இருந்தால், அவர்கள் அவற்றை உண்ணலாம்” என்றான்.
6 அதற்கு தாவீது, ஆசாரியனிடம், “எங்களோடு பெண்கள் இல்லை. எங்கள் வீரர்கள் போருக்குப் போகும்போது தங்கள் உடலை பரிசுத்தமாக வைத்திருப்பார்கள். எங்கள் வேலை மிகவும் சிறப்பானது. எனவே, விசேஷமாக இன்று இது உண்மை” என்றான்.
7 பரிசுத்த அப்பங்களைத் தவிர வேறு அப்பங்கள் இல்லாததால் ஆசாரியன் அவற்றை தாவீதுக்கு கொடுத்தான். அவை கர்த்தருக்கு முன்பு பரிசுத்தமான மேஜையின் மேல் வைக்கப்பட்டவை. ஒவ்வொரு நாளும் ஆசாரியர் புதிய அப்பங்களை வைப்பர்கள்.
8 சவுலின் அதிகாரிகளில் ஒருவன் அவர்களோடு இருந்தான். அவன் பெயர் ஏதோமியனான தோவேக்கு ஆகும். அவன் சவுலின் ஒற்றர் தலைவனாவான். கர்த்தருக்கு முன்பாக அவன் காவலில் அடைக்கப்பட்டிருந்தான்.
9 தாவீது அகிமெலேக்கிடம், “இங்கு ஈட்டியாவது பட்டயமாவது உள்ளதா? அரசனது வேலை முக்கியமானது, அது விரைவாக நடக்கவேண்டும். நான் சடுதியில் புறப்பட்டதால் பட்டயமாவது எந்தவித ஆயுதங்களையாவது எடுத்து வரவில்லை” என்றான்.
10 அதற்கு ஆசாரியன், “இங்கே பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம் மட்டுமே உள்ளது. அது உன்னால் அவனிடமிருந்து எடுக்கப்பட்டது. துணியில் சுற்றி ஏபோத்தின் பின்னால் வைக்கப்பட்டுள்ளது. உனக்கு விருப்பமானால் எடுத்துக்கொள்ளலாம்” என்றான்.
தாவீதோ, “அதனை எனக்குக் கொடு. கோலியாத்தின் வாளைப்போன்று வேறு நல்ல வாள் இல்லை!” என்றான்.
காத்தில் உள்ள எதிரிகளிடத்தில் தாவீது ஓடுகிறான்
11 அன்று தாவீது சவுலிடமிருந்து ஓடினான். அவன் காத்தின் அரசனான ஆகீஸிடம் சென்றான். 12 ஆகீஸின் வேலைக்காரர் அவனிடம் சொன்னார்கள், “இவன் இஸ்ரவேல் நாட்டின் அரசனான தாவீது, இஸ்ரவேலரால் போற்றப்படுபவன். அவர்கள் ஆடிக்கொண்டே,
‘சவுல் ஆயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்.
ஆனால் தாவீதோ பதினாயிரம் வீரர்களைக் கொன்றிருக்கிறான்!’
என்று பாடுகின்றனர்.
13 அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை தாவீது உற்று கவனித்தான். அவன் காத்தின் அரசனான ஆகீஸுக்கு மிகவும் பயந்தான். 14 எனவே, அவன் ஆகீஸ் அதிகாரிகளுக்கு முன்பு பைத்தியக்காரனைப் போல் நடித்தான். வாசற்படிகளில் கீறிக் கொண்டான். வாயில் நுரைதள்ளி தாடியில் ஒழுகவிட்டான்.
15 ஆகீஸ் தனது அதிகாரிகளிடம், “இவனைப் பாருங்கள்! இவன் பைத்தியமடைந்தவன்! என்னிடம் ஏன் அழைத்து வந்தீர்கள்? 16 என்னிடம் இப்படிபட்டவர்கள் போதுமானப் பேர் உள்ளனர். இவனை மீண்டும் என் வீட்டுக்குள் வர அனுமதிக்காதீர்கள்!” என்றான்.
பல இடங்களுக்கு தாவீது போகிறான்
22 தாவீது காத்தை விட்டு அதுல்லாம் குகைக்கு ஓடினான். தாவீது அதுல்லாமில் இருப்பதாக அவனது சகோதரர்களும் உறவினர்களும் அறிந்துக்கொண்டனர். அவனைப் பார்க்க அங்கே சென்றார்கள். 2 பலர் தாவீதோடு சேர்ந்துகொண்டார்கள். சிலர் சிலவிதமான பிரச்சனைகளில் இருந்தனர். சிலர் கடன்பட்டவர்கள். சிலர் தம் வாழ்வில் விரக்தியடைந்தவர்கள். இவர்கள் அனைவரும் தாவீதோடு சேர்ந்து, அவனை தலைவன் ஆக்கினார்கள். இப்போது அவன் 400 பேர்களோடு இருந்தான்.
3 தாவீது அதுல்லாமை விட்டு மோவாபிலுள்ள மிஸ்பாவிற்கு சென்றான். மோவாபின் அரசனிடம், “எனக்காக தேவன் என்ன செய்யப்போகிறார் என்று தெரியும்மட்டும் என் தாயும் தந்தையும் இங்கு வந்து தங்கி இருக்க தயவு செய்து அனுமதிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். 4 அவ்வாறே அவர்களை அங்கே அடைக்கலமாக இருக்கச் செய்தான். தாவீது கோட்டையில் இருக்கும்வரை அவர்களும் இருந்தார்கள்.
5 ஆனால் காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதிடம், “கோட்டையில் தங்க வேண்டாம். யூதா நாட்டிற்குப் போ” என்று சொன்னான். எனவே அவன் விலகி ஏரேத் எனும் காட்டிற்குச் சென்றான்.
சவுல் அகிமெலேக்கின் குடும்பத்தை அழிக்கிறான்
6 ஜனங்கள் தாவீது மற்றும் அவனது ஆட்கள் மூலம் சேர்ந்து வருவதை சவுல் கேள்விப்பட்டான். அவன் கிபியா மேட்டில் ஒரு மரத்தடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது கையில் ஈட்டி இருந்தது. அதிகாரிகள் அவனைச் சுற்றிலும் நின்றுகொண்டிருந்தனர். 7 அவன் அவர்களிடம், “பென்யமீனின் ஜனங்களே! கவனியுங்கள். தாவீது உங்களுக்கு வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும் தருவான் என்று நினைக்கிறீர்களா? அவன் உங்களை 1,000 பேருக்கும் 100 பேருக்கும் அதிகாரிகளாக்குவான் என்று எண்ணுகிறீர்களா? 8 நீங்கள் எனக்கு எதிராகச் சூழ்ச்சி செய்கிறீர்கள்! இரகசியத் திட்டங்களைப் போடுகிறீர்கள். என் மகன் யோனத்தானைப் பற்றி எனக்குச் சொல்லவில்லை. அவன் தாவீதோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறான் என்று யாரும் சொல்லவில்லை. என் மகன் தாவீதை உற்சாகப்படுத்தி, அவனிடம் மறைந்திருந்து என்னைத் தாக்கச் சொல்கிறான் என்பதை யாரும் எனக்குக் கூறவில்லை. நீங்கள் யாரும் என் மீது அக்கறை கொள்ளவில்லை! யோனத்தான் தாவீதுடன் சேர்ந்து அதையே இப்போது செய்துக்கொண்டிருக்கிறான்!” என்றான்.
9 அப்போது ஏதோமியனாகிய தோவேக்கு, சவுலின் அதிகாரிகளோடு நின்று கொண்டிருந்தான். அவன், “நான் தாவீதை நோப்பில் பார்த்தேன். அவன் அகிதூபின் மகனான அகிமெலேக்கைப் பார்க்க வந்தான். 10 அகிமெலேக்கும் தாவீதிற்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான், உணவளித்தான், கோலியாத்தின் பட்டயத்தைக் கொடுத்தான்” என்றான்.
11 பிறகு சவுல் சிலரை அனுப்பி ஆசாரியனை அழைத்துவரக் கட்டளையிட்டான். நோப்பில் ஆசாரியர்களாக இருந்த அகிமெலேக்கின் உறவினர்களையும் அழைத்து வர கட்டளையிட்டான். அகிமெலேக்கின் உறவினர்களும் நோப்பில் ஆசாரியர்களாக இருந்தார்கள். அனைவரும் அரசனிடம் வந்தார்கள். 12 சவுல் அகிமெலேக்கிடம், “அகிதூபின் மகனே! கவனி” என்றான்.
அவன், “சரி ஐயா” என்றான்.
13 சவுல் அகிமெலேக்கிடம், “நீயும் ஈசாயின் மகனான தாவீதும் சேர்ந்து எனக்கு எதிராக ஏன் இரகசிய திட்டமிட்டீர்கள்? நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்திருக்கிறாய்! அவனுக்காக தேவனிடம் ஜெபம் செய்திருக்கிறாய்? இப்போது தாவீது என்னை தாக்குவதற்குத் தயாராக இருக்கிறான்!” என்றான்.
14 அதற்கு அகிமெலேக்கு, “உங்களிடம் தாவீது உண்மையுள்ளவனாக இருக்கிறான். உங்கள் அதிகாரிகளில் எவரும் அவனைப் போன்றவர்கள் இல்லை. அவன் உமது சொந்த மருமகன் அவன் உமது கட்டளைகளுக்கு விசுவாசத்தோடு அடிபணிகிறான். உமது குடும்பம் அவனை மதிக்கிறது. 15 நான் தாவீதிற்காக தேவனிடம் ஜெபம் செய்வது முதல் முறையன்று, இல்லவே இல்லை, என்னையோ, என் உறவினர்களையோ இதற்காகப் பழி சுமத்த வேண்டாம். நாங்கள் உமது சேவகர்கள், நீர் சொல்லும் காரியங்கள் நடந்து கொண்டிருப்பதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.
16 ஆனால் அரசனோ, “அகிமெலேக்கே, நீயும் உனது உறவினர்களும் மரிக்க வேண்டும்!” என்றான். 17 பிறகு அவன் தன் காவலர்களைப் பார்த்து, “போய் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்லுங்கள். ஏனென்றால், அவர்கள் தாவீதின் பக்கம் இருக்கிறார்கள். அவன் தப்பித்துப்போனதை அறிந்தும், அவர்கள் என்னிடம் சொல்லவில்லை” என்றான்.
ஆனால் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொல்ல அதிகாரிகள் மறுத்துவிட்டனர். 18 எனவே, அரசன் தோவேக்கிற்கு கட்டளையிட்டான். தோவேக், “நீ போய் ஆசாரியர்களைக் கொன்றுவிடு” என்றான். எனவே, அவன் போய் ஆசாரியர்களைக் கொன்றான். அன்று 85 ஆசாரியர்கள் அவனால் கொல்லப்பட்டனர். 19 நோவாப் ஆசாரியர்களின் நகரமாக இருந்தது. அங்குள்ள அனைவரையும் கொன்றான். அவன் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், கைப்பிள்ளைகள் என அனைவரையும் வாளால் கொன்றுப் போட்டான். அதோடு அவன் பசுக்கள், கழுதைகள், ஆடுகள் ஆகியவற்றையும் கொன்றான்.
20 ஆனால், அபியத்தார் தப்பித்தான். அவன் அகிதூபின் மகனான அகிமெலேக்கின் மகன். இவன் ஓடிப்போய் தாவீதோடு சேர்ந்துக்கொண்டான். 21 அவன் தாவீதிடம் சவுல் கர்த்தருடைய ஆசாரியர்களைக் கொன்றுப்போட்டதைக் கூறினான். 22 பின் தாவீது அவனிடம், “நான் ஏதோமியனாகிய தோவேக்கை அன்று பார்த்தேன். அவன் சவுலிடம் சொல்வான் என்றும் தெரியும்! எனவே உன் தந்தையும் மற்றவர்களும் மரித்துப் போனதற்கு நானே பொறுப்பு. 23 சவுல் உன்னை மட்டுமல்ல என்னையும் கொல்ல விரும்புகிறான். பயப்படாதே, என்னோடு பாதுகாப்பாக இருக்கலாம்” என்றான்.
மனிதனைப் பின்பற்றுவது தவறு
3 சகோதர சகோதரிகளே, கடந்த காலத்தில்ஆன்மீகமானவர்களிடம் பேசுவதைப் போல நான் உங்களிடம் பேச முடியாமல் போயிற்று. கிறிஸ்துவில் குழந்தைகளைப் போன்று, உலகின் சாதாரண மக்களிடம் பேசுவதைப் போன்று உங்களிடம் பேச வேண்டியதாயிற்று. 2 நான் உங்களுக்குக் கற்பித்தவை பாலைப் போன்றது, திட உணவைப் போன்றவை அல்ல. ஏனெனில் திட உணவை உட்கொள்ளுமளவிற்கு நீங்கள் பக்குவம் பெறவில்லை. இப்போதும்கூட திட உணவை ஏற்கும் தகுதியை நீங்கள் பெறவில்லை. 3 நீங்கள் இன்னும் ஆன்மீகமான மக்கள் அல்ல. உங்களுக்குப் பொறாமையும், வாதாடுகிற குணமும் உண்டு. இது நீங்கள் ஆன்மீகமானவர்கள் அல்ல என்பதைக் காட்டுகிறது. உலகின் சாதாரண மக்களைப் போலவே நீங்களும் நடந்துகொள்கின்றீர்கள். 4 உங்களில் ஒருவன் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்”எனவும், இன்னொருவன் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” எனவும் கூறுகிறீர்கள். நீங்கள் அப்படிப்பட்டவற்றைக் கூறும்போது நீங்களும் உலகின் சாதாரண மக்களைப் போல நடந்துகொள்கிறீர்கள்.
5 அப்பொல்லோ முக்கியமானவனா? இல்லை. பவுல் முக்கியமானவனா? இல்லை. நீங்கள் விசுவாசிப்பதற்கு உதவிய தேவனுடைய பணியாட்களே நாங்கள். தேவன் எங்களுக்கு இட்ட பணியையே நாங்கள் ஒவ்வொருவரும் செய்தோம். 6 நான் விதையை விதைத்தபோது, அப்பொல்லோ நீரூற்றினான். ஆனால் தேவன் ஒருவரே விதையைத் துளிர்த்து வளரும்படியாகச் செய்தார். 7 எனவே விதையை விதைக்கின்ற மனிதன் முக்கியமானவன் அல்ல. அதற்கு நீரூற்றுகின்ற மனிதனும் முக்கியமானவன் அல்ல. எல்லாவற்றையும் வளர்ச்சியுறும்படி செய்கின்றவராகிய தேவன் ஒருவரே முக்கியமானவர். 8 விதையை விதைப்பவனுக்கும், நீரூற்றிப் பேணுபவனுக்கும் குறிக்கோள் ஒன்றே. தன் வேலைக்குரிய வெகுமதியை ஒவ்வொருவனும் பெறுவான். 9 நாங்கள் தேவனுக்காக ஒருமித்து உழைக்கிற வேலையாட்கள். நீங்களே தேவனுக்குரிய ஒரு நிலத்தைப் போன்றவர்கள்.
நீங்களே தேவனுக்குரிய ஒரு வீட்டைப் போன்றவர்கள். 10 சிறந்த வீட்டைக் கட்டும் வேலையாளைப் போன்று நான் வீட்டின் அஸ்திபாரத்தைக் கட்டினேன். தேவன் எனக்கு அளித்த வரத்தை நான் அதற்குப் பயன்படுத்தினேன். மற்றவர்கள் அந்த அஸ்திபாரத்தின் மீது கட்டுகிறார்கள். ஆனால் ஒவ்வொருவனும் அதனை எவ்வாறு கட்டுகிறான் என்பதில் கவனம் செலுத்தவேண்டும். 11 அஸ்திபாரம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது. வேறெந்த அஸ்திபாரத்தையும் ஒருவரும் அமைக்க முடியாது. ஏற்கெனவே கட்டப்பட்ட அஸ்திபாரம் இயேசு கிறிஸ்துவாகும். 12 பொன், வெள்ளி, மணிகள், மரம், புல், வைக்கோல் போன்றவற்றை பயன்படுத்தி ஒருவன் அந்த அஸ்திபாரத்தின்மீது கட்டமுடியும். 13 ஒவ்வொருவனின் வேலையும் இறுதியில் (கிறிஸ்து மக்களை நியாயம் தீர்க்கிற நாளில்) பகிரங்கப்படுத்தப்படும். அந்த நாளில் ஒவ்வொருவனின் பணியையும் அக்கினி சோதிக்கும். 14 அஸ்திபாரத்தில் ஒருவன் கட்டிய கட்டிடம் நிலைக்குமாயின் அவன் தகுந்த நற்பலன் பெறுவான். 15 ஆனால், ஒருவனின் கட்டிடம் எரிந்து போகுமானால் அவன் நஷ்டம் அடைவான். அந்த மனிதன் காப்பாற்றப்படுவான். எனினும் அக்கினியினின்று தப்பி வந்தாற்போன்று ஒரு நிலையை அவன் அடைவான்.
16 நீங்களே தேவனுடைய ஆலயம் என்பதை நீங்கள் அறிவீர்கள். தேவனுடைய ஆவியானவர் உங்களில் வாழ்கிறார். 17 தேவனுடைய ஆலயத்தை அழிக்கும் ஒருவனை தேவன் அழிப்பார். ஏன்? தேவனுடைய ஆலயம் பரிசுத்தமானது. நீங்கள் தேவனுடைய ஆலயமாவீர்கள்.
18 உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ளாதீர்கள். உங்களில் ஒருவன் தன்னை இவ்வுலகில் ஞானமுள்ளவனாக நினைத்தால் அவன் முட்டாளாக வேண்டும். இந்த வகையில் அவன் உண்மையான ஞானியாகிறான். 19 ஏன்? ஏனெனில் இந்த உலகத்து ஞானத்தை தேவன் மடமையானதாகவே கருதுகிறார். அது வேத வாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது. “அவர் ஞானிகள் தங்கள் தந்திர வழிகளைப் பயன்படுத்துகையில் அவர்களை மடக்கிப் பிடிக்கிறார்” [a] என்று எழுதப்பட்டிருக்கிறது. 20 தேவன் ஞானிகளின் எண்ணத்தை அறிவார். அவர்களுடைய எண்ணங்கள் பயனற்றவை என்பதை தேவன் அறிவார். [b] 21 எனவே, நீங்கள் மனிதரைப்பற்றி பெருமைப் பாராட்டாதீர்கள். எல்லாப் பொருள்களும் உங்களுக்கு உரியனவே. 22 பவுல், அப்பொல்லோ, கேபா, உலகம், வாழ்வு, மரணம், நிகழ்காலம், எதிர்காலம் இவை எல்லாம் உங்களுடையவையே. 23 நீங்கள் கிறிஸ்துவுக்குரியவர்கள். கிறிஸ்து தேவனுக்கு உரியவர்.
முன்னுரை
1 நான் ஆசாரியன், பூசியின் மகனான எசேக்கியேல், நான் நாடு கடத்தப்பட்டு பாபிலோனின் கேபார் ஆற்றின் அருகில் இருந்தபோது வானங்கள் திறந்தன. நான் தேவதரிசனங்களைக் கண்டேன். இது முப்பதாம் ஆண்டின் நான்காம் (ஜூலை) மாதத்தில் ஐந்தாம் தேதியாக இருந்தது. யோயாக்கீன் அரசன் சிறையிலிருந்து ஐந்தாவது ஆண்டில் ஐந்தாவது மாதத்தில் கர்த்தருடைய வார்த்தை எசேக்கியேலிடம் வந்தது. அந்த இடத்தில் கர்த்தருடைய வல்லமை அவன் மேல் வந்தது.
கர்த்தருடைய இரதம் தேவனுடைய சிங்காசனம்
4 நான் (எசேக்கியேல்) வடக்கிலிருந்து பெரிய புயல் வருவதைப் பார்த்தேன். அது பெரும் மேகமாய் பலமான காற்றையுடையதாய் இருந்தது. அதிலிருந்து நெருப்பு பளிச்சிட்டது. அதைச் சுற்றிலும் வெளிச்சமும் இருந்தது. இது நெருப்புக்குள்ளே பழுத்துக்கொண்டிருக்கும் உலோகம்போல் இருந்தது. 5 அதற்குள்ளே நான்கு ஜீவன்கள் இருந்தன. அவை மனிதர்களைப்போன்று காணப்பட்டன. 6 ஆனால், ஒவ்வொரு ஜீவன்களுக்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. 7 அவற்றின் கால்கள் நேராக இருந்தன. அவற்றின் பாதங்கள் பசுக்களின் பாதங்களைப்போன்றிருந்தன. அவை துலக்கப்பட்ட வெண்கலத்தைப்போன்று பளபளப்பாக இருந்தன. 8 அவற்றின் சிறகுகளுக்கடியில் மனித கைகள் இருந்தன. அங்கே நான்கு ஜீவன்கள் இருந்தன. ஒவ்வொன்றிற்கும் நான்கு முகங்களும் நான்கு சிறகுகளும் இருந்தன. 9 ஒவ்வொரு ஜீவனின் இறக்கைகளும் மற்ற ஜீவனின் இறக்கைகளை ஒவ்வொரு பக்கமும் தொட்டன. ஜீவன்கள் அசையும்போது அவை திரும்பவில்லை. அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அத்திசையிலேயே சென்றன.
10 ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. முன்பக்கத்தில் ஒவ்வொன்றுக்கும் மனித முகம் இருந்தது. வலது பக்கத்தில் உள்ளவை சிங்கங்களின் முகங்களாக இருந்தன. இடது பக்கத்தில் உள்ளவை காளைகளின் முகங்களாக இருந்தன. பின்பக்கத்தில் அவற்றிற்கு கழுகின் முகங்களாக இருந்தன. 11 ஜீவன்கள் தம்மை சிறகுகளால் மூடிக்கொண்டன. அவை இரண்டு சிறகுகளால் தம் அருகிலிருக்கும் ஜீவனைத் தொட நீட்டின. இரண்டு சிறகுகளால் தம் உடலை மறைத்துக்கொண்டன. 12 அவை எந்தத் திசையைப் பார்த்துக்கொண்டிருந்தனவோ அந்தச் திசையிலேயே சென்றன. காற்று அவற்றை எத்திசையில் செலுத்துகின்றதோ அத்திசையிலேயே சென்றன. அந்த ஜீவன்கள் நகரும்போது திரும்புவதில்லை. 13 அந்த ஜீவன்கள் அப்படித்தான் காணப்பட்டன.
ஜீவன்களுக்குள் இருந்த இடைவெளியில் ஏதோ எரிகின்ற நெருப்பு கரிதுண்டுகளைப் போலிருந்தது. இந்த நெருப்பானது சிறு தீபங்களைப்போல ஜீவன்களைச் சுற்றி அசைந்துகொண்டிருந்தது. அது பிரகாசமாக மின்னலைப்போன்று ஒளியைப் பரப்பிக்கொண்டிருந்தது! 14 அந்த ஜீவன்கள் மின்னலைப்போன்று ஓடித்திரிந்தன!
15-16 நான் அந்த ஜீவன்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே நான்கு சக்கரங்களைக் கண்டேன். ஒவ்வொரு ஜீவனுக்கும் ஒரு சக்கரம் இருந்தது. அச்சக்கரங்கள் தரையைத் தொட்டுக்கொண்டிருந்தன. அச்சக்கரங்கள் மஞ்சள் நகையால் செய்யப்பட்டதுப்போன்று தோன்றின. சக்கரத்திற்குள் சக்கரம் இருப்பதுப்போன்று அவை தோன்றின. 17 சக்கரங்கள் எத்திசையிலும் (திரும்ப) அசைய முடிந்தது, ஆனால் ஜீவன்களோ அவை அசைந்தபோது திரும்பவில்லை.
18 இப்பொழுது நான் அவற்றின் பின்பாகத்தைப்பற்றி சொல்லுவேன்! சக்கரங்களின் ஓரங்கள் உயரமாகவும் பயங்கரமாகவும் இருந்தன. நான்கு சக்கரங்களின் ஓரங்கள் முழுவதிலும் கண்கள் இருந்தன.
19 அச்சக்கரங்கள் எப்பொழுதும் ஜீவன்களோடேயே நகர்ந்தன. ஜீவன்கள் காற்றில் மேலேறிப் பறந்தால் அச்சக்கரங்களும் அவற்றோடு சென்றன. 20 காற்றானது அவற்றை எங்கெங்கு செலுத்த விரும்புகிறதோ அங்கே அவற்றோடு சக்கரங்களும் சென்றன. ஏனென்றால், ஜீவன்களின் வல்லமையானது அவற்றின் சக்கரத்தில் உள்ளன. 21 எனவே, ஜீவன்கள் நகர்ந்தால் சக்கரங்களும் நகர்ந்தன. ஜீவன்கள் நின்றால் சக்கரங்களும் நின்றன. சக்கரங்கள் காற்றில் பறந்து போனால் ஜீவன்களும் அவற்றோடு போயின. ஏனென்றால், சக்கரங்களுக்குள் காற்று இருந்தது.
22 ஜீவன்களின் தலைகளின்மேல் வியப்படையச்செய்யும் ஒன்று இருந்தது. அது தலை கீழாகத் திருப்பப்பட்ட ஒரு கிண்ணம்போல் இருந்தது. அப்பாத்திரம் படிகக்கட்டியைப்போன்று தெளிவாக இருந்தது. இது ஜீவன்களின் தலைக்குமேல் காற்றில் தொங்கிக்கொண்டிருந்தது! 23 பாத்திரத்திற்குக் கீழே, ஒவ்வொரு ஜீவனுக்கும் நான்கு நேரான சிறகுகள் இருந்தன. இரண்டு சிறகுகள் விரிக்கபட்டு அருகிலிருக்கும் ஜீவனின் சிறகுகளை நோக்கி நீட்டப்பட்டிருந்தன. இரண்டு சிறகுகள் மற்ற திசையில் விரிக்கப்பட்டு ஜீவனின் உடலை மூடியிருந்தன.
24 பிறகு, நான் சிறகுகளின் சத்தம் கேட்டேன். ஜீவன்கள் ஒவ்வொருமுறை நகரும்போதும் அதன் சிறகுகள் பெருஞ்சத்தத்தை எழுப்பின. அச்சத்தம் வெள்ளப்பெருக்கின் சத்தத்தைப் போன்றிருந்தது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய குரல் போல் இருந்தது. அது ஒரு படை அல்லது ஜனங்கள் கூட்டத்தின் சத்தத்தைப் போலவும் இருந்தது. ஜீவன்கள் நகர்வதை நிறுத்தும்போது தம் சிறகுகளை பக்கவாட்டில் வைத்துக்கொள்ளும்.
25 ஜீவன்கள் நகர்வதை நிறுத்தின. தமது சிறகுகளைத் தாழ்த்தின. இன்னொரு பெருஞ்சத்தம் கேட்டது, அது அவற்றின் தலைக்கு மேலிருந்த கிண்ணத்திலிருந்து கேட்டது. 26 பாத்திரத்திற்கு மேலே ஏதோ இருந்தது. அது சிங்காசனத்தைப்போல் இருந்தது. அது நீல வண்ணத்தில் ரத்தினம்போல் இருந்தது. அந்தச் சிங்காசனத்தில் யாரோ ஒரு மனிதர் உட்கார்ந்திருப்பதுபோன்று தோன்றியது. 27 நான் அவரை இடுப்பிலிருந்து மேல்நோக்கிப் பார்த்தேன். அவர் சூடான உலோகத்தைப்போன்று இருந்தார். அவரைச் சுற்றிலும் நெருப்பு இருப்பதைப் போன்றிருந்தது. நான் அவரை இடுப்பிலிருந்து கீழ் நோக்கிப் பார்த்தேன். அது நெருப்பைப் போன்றிருந்தது. அவரைச் சுற்றிலும் அது மின்னியது. 28 அவரைச் சுற்றிலும் மின்னிக்கொண்டிருந்த வெளிச்சமானது வானவில்லைப் போன்றிருந்தது. அது கர்த்தருடைய மகிமை. அதைப் பார்த்த உடனே நான் தரையிலே விழுந்தேன். என் முகம் தரையிலே படும்படிக் குனிந்தேன். பின்னர் ஒரு குரல் என்னோடு பேசுவதைக் கேட்டேன்.
தாவீதின் பாடல்
37 தீயோரைக் கண்டு கலங்காதே,
தீய காரியங்களைச் செய்வோரைக்கண்டு பொறாமைகொள்ளாதே.
2 விரைவில் வாடி மடிந்துபோகும் புல்லைப்போன்று
தீயோர் காணப்படுகிறார்கள்.
3 கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்தால்,
பூமி கொடுக்கும் பல நற்பலன்களை நீங்கள் அனுபவித்து வாழுவீர்கள்.
4 கர்த்தருக்குச் சேவைசெய்வதில் மகிழுங்கள்.
அவர் உங்களுக்குத் தேவையானவற்றைக் கொடுப்பார்.
5 கர்த்தரைச் சார்ந்திருங்கள், அவரை நம்புங்கள்,
செய்யவேண்டியதை அவர் செய்வார்.
6 நண்பகல் சூரியனைப்போன்று
உன்னுடைய நற்குணத்தையும் நீதியையும் பிரகாசிக்க செய்வாராக.
7 கர்த்தரை நம்பு, அவர் உதவிக்காகக் காத்திரு.
தீயோர் வெற்றியடையும்போது கலங்காதே.
தீய ஜனங்கள் கொடிய திட்டங்களை வகுக்கும்போதும், அதில் அவர்கள் வெற்றியடையும்போதும் கலங்காதே.
8 கோபமடையாதே!
மனக்குழப்பமடையாதே. தீய காரியங்களைச் செய்ய முடிவெடுக்குமளவிற்கு நீ கலக்கமடையாதே!
9 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தருடைய உதவியை நாடும் ஜனங்கள் தேவன் வாக்களித்த தேசத்தைப் பெறுவார்கள்.
10 இன்னும் சில காலத்திற்குப்பின் தீயோர் இரார்.
அந்த ஜனங்களைத் தேடிப் பார்க்கையில் அவர்கள் அழிந்துபோயிருப்பார்கள்.
11 தேவன் வாக்களித்த தேசத்தை தாழ்மையான ஜனங்கள் பெறுவார்கள்.
அவர்கள் சமாதானத்தை அனுபவிப்பார்கள்.
12 தீயோர் நல்லோருக்கெதிராக தீய காரியங்களைத் திட்டமிடுவார்கள்.
நல்லோரை நோக்கிப் பற்கடித்து தங்கள் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.
13 ஆனால் நம் ஆண்டவர் அத்தீயோரைக் கண்டு நகைப்பார்.
அவர்களுக்கு நேரிடவிருப்பதை அவர் காண்கிறார்.
14 தீயோர் வாளை எடுக்கிறார்கள், வில்லைக் குறிபார்க்கிறார்கள்,
இயலாத ஏழைகளையும், நேர்மையானவர்களையும் கொல்ல விரும்புகிறார்கள்.
15 அவர்கள் வில் முறியும்.
அவர்கள் வாள்கள் அவர்கள் இதயங்களையே துளைக்கும்.
16 ஒரு கூட்டம் தீயோரைக்காட்டிலும்
நல்லோர் சிலரே சிறந்தோராவர்.
17 ஏனெனில் தீயோர் அழிக்கப்படுவார்கள்.
கர்த்தர் நல்லோரைத் தாங்குகிறார்.
18 தூய்மையுள்ளோரின் வாழ்நாள் முழுவதையும் கர்த்தர் பாதுகாக்கிறார்.
கர்த்தர் அவர்களுக்குத் தரும் பரிசு என்றென்றும் தொடரும்.
19 தொல்லை நெருங்குகையில் நல்லோர் அழிக்கப்படுவதில்லை.
பஞ்ச காலத்தில் நல்லோருக்கு மிகுதியான உணவு கிடைக்கும்.
20 ஆனால் தீயோர் கர்த்தருடைய பகைவர்கள்.
அவர்களின் பள்ளத்தாக்குகள் வறண்டு எரிந்து போகும்.
அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள்.
21 தீய மனிதன் பணத்தைக் கடனாகப் பெற்றுத் திரும்பச் செலுத்துவதில்லை.
ஆனால் ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
22 நல்லவன் ஒருவன் பிறரை ஆசீர்வதித்தால் தேவன் வாக்களித்த நிலத்தை அவர்கள் பெறுவார்கள்.
ஆனால் அவன் தீமை நிகழும்படி கேட்டால் அந்த ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
23 ஒரு வீரன் கவனமாக நடப்பதற்கு கர்த்தர் உதவுகிறார்.
அவன் விழாதபடி கர்த்தர் வழி நடத்துகிறார்.
24 வீரன் ஓடி பகைவனை எதிர்த்தால்
கர்த்தர் வீரனின் கைகளைப் பிடித்து அவன் விழாதபடி தாங்கிக் கொள்கிறார்.
25 நான் இளைஞனாக இருந்தேன்.
இப்போது வயது முதிர்ந்தவன்.
நல்லோரை தேவன் கைவிடுவிடுவதை நான் பார்த்ததில்லை.
நல்லோரின் பிள்ளைகள் உணவிற்காக பிச்சையெடுப்பதை நான் பார்த்ததில்லை.
26 ஒரு நல்ல மனிதன் பிறருக்குத் தாராளமாகக் கொடுக்கிறான்.
நல்ல மனிதனின் பிள்ளைகள் ஆசீர்வாதமாக இருப்பார்கள்.
27 தீமை செய்ய மறுத்து நல்லவற்றையே நீ செய்தால்
என்றென்றும் நீ வாழ்வாய்.
28 கர்த்தர் நீதியை விரும்புகிறார்.
அவரைப் பின்பற்றுவோரை உதவியின்றிக் கைவிட்டதில்லை.
கர்த்தர் அவரைப் பின்பற்றுவோரை எப்போதும் பாதுகாக்கிறார்.
ஆனால் கெட்ட ஜனங்களை அவர் அழித்துவிடுவார்.
29 தேவன் வாக்களித்த தேசத்தை நல்லோர் பெறுவார்கள்.
அங்கு அவர்கள் எந்நாளும் வாழ்வார்கள்.
30 ஒரு நல்ல மனிதன் நல்ல போதனையை கொடுக்கிறான்.
அவன் முடிவுகள் ஒவ்வொருவருக்கும் நியாயமுள்ளவைகள்.
31 கர்த்தருடைய போதனைகள் அவன் இருதயத்தில் இருக்கும்.
அவன் நல்வழியில் வாழ்வதை விட்டு விலகான்.
32 தீயோர் நல்லோரைத் துன்புறுத்தும் வழிகளை நாடுவார்கள்.
தீயோர் நல்லோரைக் கொல்ல முனைவார்கள்.
33 அவர்கள் அவ்வாறு செயல்பட தேவன் விடார்.
நல்லோர் தீயோரென நியாயந்தீர்க்கப்பட கர்த்தர் விடார்.
34 கர்த்தருடைய உதவிக்காகக் காத்திருங்கள், கர்த்தரைப் பின்பற்றுங்கள்.
தீயோர் அழிக்கப்படுவார்கள்.
ஆனால் கர்த்தர் உனக்கு முக்கியத்துவமளிப்பார், தேவன் வாக்களித்த தேசத்தை நீ பெறுவாய்.
35 வல்லமைமிக்க தீயோரை நான் கண்டேன்.
அவன் பசுமையான, வலிய மரத்தைப் போலிருந்தான்.
36 ஆனால் அவன் மடிந்தான்,
அவனை நான் தேடியபோது அவன் காணப்படவில்லை.
37 தூய்மையாகவும், உண்மையாகவும் இருங்கள். ஏனெனில் அது சமாதானத்தைத் தரும்.
சமாதானத்தை விரும்பும் ஜனங்களுக்கு பல சந்ததியினர் இருப்பார்கள்.
38 சட்டத்தை மீறுகிற ஜனங்கள் அழிக்கப்படுவார்கள்.
அவர்களின் சந்ததி நாட்டை விட்டு வெளியேற நேரிடும்.
39 கர்த்தர் நல்லோரை மீட்கிறார்.
நல்லோர் வேதனைப்படும்போது கர்த்தர் அவர்களின் பெலனாவார்.
40 கர்த்தர் நல்லோருக்கு உதவிசெய்து அவர்களைப் பாதுகாக்கிறார்.
நல்லோர் கர்த்தரைச் சார்ந்திருப்பார்கள்.
அவர் அவர்களைத் தீயோரிடமிருந்து காக்கிறார்.
2008 by World Bible Translation Center