M’Cheyne Bible Reading Plan
தாவீதும் யோனத்தானும் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்கள்
20 ராமாவிற்கு அருகில் உள்ள முகாம்களில் இருந்து தாவீது தப்பி ஓடி யோனத்தானிடம் வந்தான். தாவீது, “உன் தந்தை என்னைக் கொல்ல தேடுகிறாரே. நான் என்ன தவறு செய்தேன்? நான் அவருக்குச் செய்த துரோகம் என்ன?” என்று கேட்டான்.
2 அதற்கு யோனத்தான், “அது உண்மையாக இருக்க முடியாது! என் தந்தை உன்னைக் கொல்ல முயலவில்லை. என்னிடம் சொல்லாமல் எந்தக் காரியத்தையும் என் தந்தை செய்வதில்லை. அது சின்ன காரியமோ, பெரிய காரியமோ, எதுவாக இருந்தாலும் சரி, உன்னைக் கொல்லும் திட்டத்தை என்னிடமிருந்து அவர் ஏன் மறைத்தார்? இல்லை, இது உண்மையன்று!” என்றான்.
3 ஆனால் தாவீது, “உன் கண்களில் எனக்கு தயை கிடைத்தது, இதை உன் தந்தை அறிவார். அதனால், என்னிடமுள்ள நட்பினிமித்தம் நீ சஞ்சலம் அடையாதபடிக்கு இதை உன்னிடம் மறைத்தார். கர்த்தர் ஜீவித்திருக்க, நீயும் ஜீவித்திருக்கிற உண்மைபடி கூறுகிறேன், நான் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!” என்று பதிலளித்தான்.
4 யோனத்தான் அப்போது, “நீ சொல்லுகிறபடி நான் செய்வேன்” என்றான்.
5 தாவீது, “கவனி, நாளை அமாவாசை விருந்து, நான் அரச பந்தியில் சாப்பிட வேண்டும். ஆனால் மாலைவரை ஒளிந்திருக்க எனக்கு உத்தரவு வேண்டும்! 6 உன் தந்தை கேட்டால், ‘தன் ஊராகிய பெத்லேகேமில் ஆண்டுக்கு ஒரு தடவை மாதப் பலிச் செலுத்துவதால் அதில் கலந்துகொள்ள தன் குடும்பத்தோடு போயிருப்பதாகச் சொல்.’ 7 அதற்கு அவர், ‘நல்லது’ என்றால் எனக்குச் சமாதானம். அவருக்கு எரிச்சல் வந்தால், அவரால் ஆபத்து என்று அர்த்தம், 8 எனவே தயவுச் செய்யவேண்டும். என்னோடு கர்த்தருக்கு முன்னால் ஒப்பந்தம் செய்துள்ளாய். என் மீது தவறு என்றால் என்னைக் கொல். என்னை உன் தந்தையிடம் மட்டும் அழைத்துப் போகாமல் இருக்க வேண்டும்!” என வேண்டினான்.
9 அதற்கு யோனத்தான், “அந்த நிலை உனக்கு ஏற்படாமல் இருப்பதாக! என் தந்தையால் உனக்கு ஆபத்து என்றால் நான் சொல்லாமல் இருப்பேனா?” என்று கேட்டான்.
10 ஆனால் தாவீது, “உன் தந்தைக் கடுமையான உத்தரவு போட்டால் எனக்கு அதை யார் சொல்வது?” என்று கேட்டான்.
11 அதற்கு யோனத்தான், “வா ஊருக்கு வெளியே வயலுக்குப்போவோம்” என்றான். இருவரும் வெளியே போனார்கள்.
12 யோனத்தான், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தருடைய முன்னிலையில் வாக்களிக்கிறேன், நான் நாளையோ மறுநாளோ என் தந்தையின் மனதை அறிந்துவிடுவேன். அவர் உன்மேல் தயவாக இருந்தாலும், தீங்கு செய்யும் எண்ணமாக இருந்தாலும் 3 நாட்களுக்குள் அறிவிப்பேன். 13 ஒருவேளை, எனது தந்தை உனக்குத் தீமை செய்யத் துடித்துக் கொண்டிருந்தால் அதையும் அறிவிப்பேன். அதோடு அமைதியாக நீ ஒதுங்கிவிட உதவுகிறேன். நான் உனக்கு உண்மையைச் சொல்லாவிட்டால் கர்த்தர் எனக்கு அதற்கு நிகராகவும் அதிகமாகவும் துன்பம் தரட்டும்! கர்த்தர் உன் தந்தையோடு இருந்தது போலவே உன்னோடும் இருப்பாராக. 14 மேலும் நான் உயிரோடு இருக்கும்வரை என் மீது கருணையோடு இரு. 15 நான் மரித்தப் பிறகும் என் குடும்பத்தின் மேலுள்ள கருணையை நிறுத்தாமல் இரு. உன் பகைவரையெல்லாம் கர்த்தர் பூமியில் இருந்து அழிப்பார். 16 யோனத்தான் பெயர் தாவீதின் குடும்பத்திலிருந்து எடுத்துப் போடாமல் இருப்பதாக. தாவீதின் பகைவர்களை கர்த்தர் தண்டிப்பாராக” என்று தாவீதின் குடும்பத்தோடு ஒப்பந்தம் செய்துக்கொண்டான்.
17 யோனத்தான் தாவீதிடம், அவனது அன்பு பற்றிய வாக்குறுதியைத் திருப்பிச் சொல்லும்படி கேட்டான். ஏனென்றால், அவன் தன்னைத் தானே எவ்வளவு நேசித்தானோ அவ்வளவு அதிகமாய் தாவீதையும் நேசித்தான்.
18 யோனத்தான் தாவீதிடம், “நாளை அமாவாசை விருந்து. நீ உட்காரவேண்டிய இடம் காலியாயிருப்பதால் உன்னைக் குறித்து விசாரிக்கப்படும். 19 இந்த சிக்கல் முதலில் ஆரம்பித்தபோது நீ ஒளிந்திருந்த இடத்திற்குப் போ. அங்கேயே காத்திரு 20 மூன்றாவது நாள், ஏஸேல் எனும் கல்லருகில் காத்திரு, பிறகு மூன்றாம் நாளில் ஒரு இலக்கைக் குறிவைத்து எய்வதுபோல், நான் அங்கு போய் அதன் பக்கமாக மூன்று அம்புகளை எய்வேன். 21 ஒரு பிள்ளையை அம்பைத் தேடிவருமாறு அனுப்புவேன். நான் அவனிடம், ‘அதிக தூரம் போனாய் அம்புகள் என் அருகில் உள்ளன,’ என்று சொன்னால் வந்துவிடு. அப்போது ஒன்றும் இல்லை, உனக்கு சமாதானம். இதை கர்த்தருடைய அன்பால் கூறுகிறேன்! 22 ஏதாவது தொந்தரவு இருந்தால் அவனிடம், ‘அம்புகள் ரொம்ப தூரத்தில் கிடக்கிறது, எடுத்து வா’ என்று சத்தமிடுவேன். உடனே நீ விலகவேண்டும். கர்த்தர் உன்னை தூர அனுப்பிகொண்டிருக்கிறார் என்று அர்த்தம். 23 அப்போது நமக்கு இடையேயுள்ள ஒப்பந்தத்தை மறவாமல் இரு. கர்த்தர் தாமே நமக்கு எப்போதும் சாட்சியாக இருப்பார்!” என்றான்.
24 பிறகு தாவீது வயலில் ஒளிந்துக்கொண்டான்.
விருந்தில் சவுலின் போக்கு
அமாவாசை விருந்துக்கு சமயம் வந்தது, அரசன் உணவுண்ண உட்கார்ந்தான். 25 அரசன் வழக்கம் போல் சுவரை அடுத்து உட்கார்ந்தான். யோனத்தான் எதிரே இருந்தான். அப்னேர் சவுலுக்கடுத்து இருந்தான். தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. 26 சவுல் எதுவும் சொல்லவில்லை. அவன், “தாவீதிற்கு ஏதேனும் நடந்து அதனால் தீட்டாக இருப்பான்” என்று எண்ணிக்கொண்டான்.
27 மாதத்தின் இரண்டாம் நாளான மறுநாள் மீண்டும் தாவீதின் இடம் வெறுமையாய் இருந்தது. சவுல் தன் மகனிடம் “எதற்காக ஈசாயின் மகன் நேற்றும் இன்றும் அமாவாசை விருந்து உண்ண வரவில்லை?” என்று கேட்டான்.
28 யோனத்தான், “தாவீது தன்னை பெத்லேகேமுக்குப் போக அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டான். 29 அதனால் என்னிடம், என்னைப் போகவிடு. எங்கள் குடும்பத்திற்குப் பெத்லேகேமில் ஒரு பலியைச் செலுத்த வேண்டியுள்ளது. எனது சகோதரன் அங்கே இருக்கும்படி எனக்கு கட்டளையிட்டிருக்கிறார். இப்பொழுது நான் உனது நண்பனானால், நான் போய் என் சகோதரர்களைப் பார்க்க அனுமதி தா, என்று கேட்டான். அதனால் தாவீது அரசனுடைய பந்திக்கு வரவில்லை” என்று பதிலுரைத்தான்.
30 சவுல் யோனத்தான் மீது கோபமுற்று, “அடிபணிய மறுத்த கலகக்காரப் பெண்ணின் மகன் நீ, நீயும் அவளைப்போல் இருக்கிறாய், நீ தாவீதின் பக்கத்தில் உள்ளாய். நீ உனக்கும் உன் தாய்க்கும் அவமானத்தைத் தந்தாய்! 31 ஈசாயின் மகன் இருக்கும்வரை நீ அரசனாக முடியாது. உனக்கு அரசும் கிடைக்காது. இப்போது தாவீதைக் கொண்டு வா! அவன் ஒரு மரித்தவன்” என்றான்.
32 யோனத்தான் அவனிடம், “தாவீது ஏன் கொல்லப்பட வேண்டும்? அவனது தவறு யாது?” எனக் கேட்டான்.
33 ஆனால் சவுல் ஈட்டியை அவன் மீது எறிந்து கொல்லப் பார்த்தான். எனவே யோனத்தான் தனது தந்தை தாவீதைக் கொன்றுவிட பெரிதும் விரும்புகிறான் என்பதை அறிந்தான். 34 அவன் தந்தை மீது கோபங்கொண்டுப் பந்தியிலிருந்து விலகிக் கொண்டான். விருந்தின் இரண்டாம் நாளில் யோனத்தான் உணவுண்ண மறுத்தான். தனது தந்தை தன்னை அவமானப்படுத்தியதாலும் தாவீதை கொல்ல விரும்பியதாலும் யோனத்தான் கோபமடைந்தான்.
தாவீதும் யோனத்தானும் விடை பெறுகின்றனர்
35 மறுநாள் காலை யோனத்தான் வயலுக்குப் போனான். அவர்கள் ஏற்கெனவே திட்டமிட்ட இடத்தில் தாவீதை சந்திக்க தன்னோடு ஒரு சிறுவனை அழைத்துப் போனான். 36 அவன் சிறுவனிடம், “நான் எறிகிற அம்பைத் தேடி கண்டுபிடித்து வா” என்றான். பையனின் தலைக்கு மேலாக எறிந்த அம்பை அவன் தேடிப்போனான். 37 அம்பு விழுந்த இடத்தில் சிறுவன் தேட, “அம்புகள் இன்னும் தூரத்தில் உள்ளது” என்றான். 38 மீண்டும் அவன், “சும்மா நிற்காதே! போய் அம்பைத் தேடு” என்றான். சிறுவன் அம்பைத்தேடி தன் எஜமானனிடம் எடுத்து வந்தான். 39 என்ன நடைபெறுகிறது என்று அந்தப் பையன் அறியாதிருந்தான். ஆனால் தாவீதிற்கும் யோனத்தானுக்கும் அது புரிந்தது. 40 யோனத்தான் சிறுவனிடம், வில்லையும் அம்பையும் கொடுத்து, “நகரத்திற்குத் திரும்பிப் போ” என்று அனுப்பினான்.
41 பையன் போனதும் தாவீது வெளியே வந்து யோனத்தானைத் தரையில் குனிந்து 3 முறை வணங்கினான். பின் அவர்கள் ஒருவரை ஒருவர் முத்தமிட்டனர். இருவரும் சத்தமிட்டு அழ, தாவீது யோனத்தானைவிட மிகுதியாக அழுதான்.
42 யோனத்தான் தாவீதிடம், “சமாதானமாகப் போ, நாம் கர்த்தருடைய நாமத்தால் நண்பர்களாக இருப்போம் என்று ஆணையிட்டோம் அதன்படியே நமக்கும் நமது சந்ததியினருக்கும் நடுவே உள்ள ஒப்பந்தத்திற்கு கர்த்தரே என்றென்றைக்கும் சாட்சியாக இருப்பார்” என்றான்.
சிலுவையைப் பற்றிய செய்தி
2 அன்பான சகோதர சகோதரிகளே! நான் உங்களிடம் வந்தபோது தேவனுடைய உண்மையை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் அதிகமான ஞானத்தையோ, அழகிய வார்த்தைகளையோ நான் உபயோகிக்கவில்லை. 2 உங்களோடு இருக்கையில் இயேசு கிறிஸ்துவையும் அவரது சிலுவை மரணத்தையும் தவிர பிற அனைத்தையும் மறப்பேன் என முடிவெடுத்தேன். 3 நான் உங்களிடம் வந்தபோது மிகவும் சோர்வாகவும், பயத்தால் நடுங்கிக்கொண்டும் இருந்தேன். 4 எனது போதனையும் பேச்சும் வலியுறுத்திச் சொல்லும் ஆற்றலுள்ள ஞானம் பொருந்திய வார்த்தைகளைக்கொண்டனவாய் இருக்கவில்லை. பரிசுத்தாவி கொடுக்கின்ற வல்லமையே எனது போதனைக்கு நிரூபணம் ஆகும். 5 உங்கள் விசுவாசம் தேவனுடைய வல்லமையில் இருக்க வேண்டும் என்பதற்காகவும், மனிதனின் ஞானத்தில் இருக்கக் கூடாதென்பதற்காகவும் நான் இவ்வாறு செய்தேன்.
தேவனுடைய ஞானம்
6 பக்குவமடைந்த மக்களுக்கே நாம் ஞானத்தைப் போதிக்கிறோம். ஆனால் நாம் போதிக்கும் இந்த ஞானம் இவ்வுலகத்திலிருந்து வருவதல்ல. இந்த உலகத்து ஆட்சியாளர்களின் ஞானமும் இதுவல்ல. அந்த ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை இழந்து வருகின்றனர். 7 ஆனால் நாம் தேவனுடைய இரகசியமான ஞானத்தைப் பேசுகிறோம். மக்களிடமிருந்து இந்த ஞானம் மறைக்கப்பட்டுள்ளது. நமது மகிமைக்காக தேவன் இந்த ஞானத்தைத் திட்டமிட்டார். உலகம் தோன்றுவதற்கு முன்பே தேவன் இதைத் திட்டமிட்டார். 8 இந்த உலகத்தில் எந்த ஆட்சியாளனும் இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டிருக்கவில்லை. அவர்கள் அதனைப் புரிந்துகொண்டிருந்தால் மகிமையின் கர்த்தரை சிலுவையில் கொன்றிருக்கமாட்டார்கள். 9 ஆனால்,
“தேவன் தன்னை நேசிக்கும் மக்களுக்காகச்
செய்த ஏற்பாட்டை எந்த கண்ணும் பார்க்கவில்லை.
எந்தக் காதும் கேட்கவில்லை,
எந்த மனிaதனும் எண்ணிப் பார்த்ததில்லை” (A)
என்று எழுதப்பட்டிருக்கிறது.
10 ஆனால், தேவன் இவற்றை ஆவியானவரின் மூலமாக எங்களுக்குக் காட்டியுள்ளார்.
ஆவியானவர் எல்லாவற்றையும் அறிவார். தேவனுடைய ஆழ்ந்த அந்தரங்கங்களையும் பரிசுத்த ஆவியானவர் அறிவார். 11 அதை இப்படி விளக்கலாம்: ஒருவர் அடுத்தவருடைய எண்ணங்களை அறிய முடியாது. அவனுக்குள்ளிருக்கிற அவனுடைய ஆவியே அறியும். அதுவே தேவனுக்கும் பொருந்தும். தேவனுடைய ஆவியானவர்தான் அந்த எண்ணங்களை அறிவார். 12 நாம் உலகின் ஆவியைக்கொண்டிருக்கவில்லை. நாம் தேவனிடமிருந்து அவரது ஆவியானவரைப் பெற்றோம். தேவன் நமக்குக் கொடுத்துள்ள பொருள்களை அறியுமாறு நாம் ஆவியானவரைப் பெற்றோம்.
13 நாம் இவற்றைப் பேசும்போது மனிதனுக்குள்ள ஞானத்தால் நாம் அறிவிக்கப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துவதில்லை. பரிசுத்த ஆவியானவர் அறிவித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம். ஆன்மீகக் கருத்துகளை விளக்க ஆன்மீகமான சொற்களையே பயன்படுத்துகிறோம். 14 ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடாத மனிதன் தேவனுடைய ஆவியானவரிடமிருந்து வரும் வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதில்லை. அவன் அவற்றை மடமையாகக் கருதுகிறான். அவன் ஆவியானவர் கருதுவனவற்றை புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் அவை ஆன்மீகமாகவே புரிந்துகொள்ளப்படக் கூடும். 15 ஆனால், ஆன்மீக உணர்வுள்ளவனோ எல்லாவற்றைப் பற்றியும் நியாயம் தீர்க்கமுடியும். மற்றவர்கள் அவனை நியாயம் தீர்க்க முடியாது.
16 “யார் தேவனுடைய எண்ணத்தை அறிவார்?
யார் தேவனுக்கு அறிவுறுத்துவார்கள்?” (B)
என்று எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நமக்கு கிறிஸ்துவின் சிந்தனை இருக்கிறது.
கர்த்தருக்கு ஒரு ஜெபம்
5 கர்த்தாவே, எங்களுக்கு என்ன நடந்தது என்று எண்ணிப்பாரும்.
எங்களது அவமானத்தை நோக்கிப்பாரும்!
2 எங்கள் நாடு அந்நியர்களுக்கு உரியதான சொத்தாக மாறிற்று.
எங்கள் வீடுகள் அயல் நாட்டுக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
3 நாங்கள் அநாதைகளாயிருக்கிறோம்.
எங்களுக்குத் தந்தை இல்லை.
எங்கள் தாய்மார்கள் விதவைகளைப்போன்று ஆனார்கள்.
4 நாங்கள் குடிக்கிற தண்ணீரையும் விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது.
நாங்கள் பயன்படுத்துகிற விறகுக்கும் விலை கொடுக்க வேண்டியதிருக்கிறது.
5 எங்கள் கழுத்துகளில் நுகத்தைப் பூட்டிக்கொள்ள வற்புறுத்தப்படுகிறோம்.
நாங்கள் களைத்துப்போகிறோம். எங்களுக்கு ஓய்வில்லை.
6 நாங்கள் எகிப்தோடு ஒரு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
நாங்கள் போதுமான அப்பங்களைப் பெற அசீரியாவோடு ஒப்பந்தம் செய்திருக்கிறோம்.
7 எங்கள் முற்பிதாக்கள் உமக்கு எதிராகப் பாவம் செய்தனர்.
இப்போது அவர்கள் மரித்துப்போனார்கள்.
இப்பொழுது நாங்கள் அவர்கள் செய்த பாவத்துக்காகத் துன்பப்படுகிறோம்.
8 அடிமைகள் எங்களது ஆள்வோர்களாக ஆகியிருக்கின்றனர்.
அவர்களிடமிருந்து எவராலும் எங்களைக் காப்பாற்ற முடியவில்லை.
9 நாங்கள் உணவைப்பெற வாழ்க்கையில் அபாயத்தை எதிர்கொள்கிறோம்.
வனாந்திரத்தில் மனிதர்கள் வாள்களோடு நின்றுக்கொண்டிருக்கின்றனர்.
10 எங்கள் தோல் வறுக்கும் சட்டியைப்போன்று சூடாக உள்ளது.
எங்களுக்கு பசியினால் அதிகமாய் காய்ச்சல் உள்ளது.
11 பகைவர்கள் சீயோன் பெண்களை கற்பழித்தனர்.
யூதாவின் நகரங்களில் அவர்கள் பெண்களை கற்பழித்தனர்.
12 பகைவர்கள் எங்கள் இளவரசர்களை தூக்கிலிட்டனர்.
எங்கள் மூப்பர்களை அவர்கள் கௌரவிக்கவில்லை.
13 பகைவர்கள் எங்கள் இளைஞர்களை
எந்திர ஆலைகளில் தானியத்தை அரைக்கும்படிச் செய்தனர்.
எங்கள் இளைஞர்கள் மரத்தடிகளின் சுமையால்
கீழே இடறி விழுந்தார்கள்.
14 மூப்பர்கள் இனி நகரவாசல்களில் உட்காருவதில்லை.
இளைஞர்கள் இனி இசை எழுப்புவதில்லை.
15 எங்கள் இதயத்தில் இனி மகிழ்ச்சியே இல்லை.
எங்கள் நடனம் மரித்தவர்களுக்கான ஒப்பாரியாக மாறிவிட்டது.
16 எங்கள் தலையிலிருந்து கிரீடம் கீழே விழுந்துவிட்டது.
எங்களுக்கு எங்கள் பாவங்களால் நிலைமை மோசமாகிக்கொண்டிருக்கிறது.
17 இவற்றால் எங்கள் இதயம் நோயுற்றிருக்கிறது.
எங்கள் கண்களால் தெளிவாகப் பார்க்கமுடியவில்லை.
18 சீயோன் மலை வெறு நிலமாகிவிட்டது.
சீயோன் மலையைச் சுற்றி நரிகள் ஓடித் திரிகின்றன.
19 ஆனால் கர்த்தாவே, நீர் என்றென்றும் ஆளுகிறீர்,
உமது இராஜ சிங்காசனம் என்றென்றும் நிலைத்து நிற்கும்.
20 கர்த்தாவே, நீர் என்றென்றைக்கும் எங்களை மறந்துவிட்டது போன்று இருக்கின்றீர்.
எங்களை நெடுங்காலமாக தனியே விட்டுவிட்டதுபோன்று இருக்கின்றீர்.
21 கர்த்தாவே, உம்மிடம் மீண்டும் எங்களைக் கொண்டுவாரும்.
நாங்கள் மகிழ்ச்சியோடு உம்மிடம் திரும்பி வருவோம்.
எங்கள் வாழ்க்கையை முன்பு இருந்ததுபோன்று ஆக்கும்.
22 நீர் எங்கள் பேரில் கடுங்கோபமாக இருந்தீரே.
எங்களை நீர் முழுமையாக நிராகரித்துவிட்டீரா?
இராகத் தலைவனுக்கு, கர்த்தருடைய ஊழியனாகிய தாவீது கொடுத்த பாடல்
36 தீயவன் ஒருவன் தனக்குள், “நான் தேவனுக்கு பயப்படவோ, அவரை மதிக்கவோமாட்டேன்” எனக் கூறும்போது
அவன் மிகத்தீமையான காரியத்தைச் செய்கிறான்.
2 அம்மனிதன் தனக்குத்தானே பொய் பேசுகிறான்.
அம்மனிதன் தனது சொந்த தவறுகளைப் பார்ப்பதில்லை.
எனவே அவன் மன்னிப்பும் கேட்பதில்லை.
3 அவன் வார்த்தைகள் பயனற்ற பொய்களாகும்.
அவன் ஞானம் பெறவுமில்லை, நல்லதைச் செய்யக் கற்றுக்கொள்ளவுமில்லை.
4 இரவில், அவன் தீய செயல்களைத் திட்டமிடுகிறான்.
எழுந்து, நல்லவற்றைச் செய்வதில்லை.
ஆனால் தீயவற்றைச் செய்வதற்கு அவன் மறுப்பதில்லை.
5 கர்த்தாவே, உமது உண்மை அன்பு வானத்திலும் உயர்ந்தது.
உம் நேர்மை மேகங்களிலும் உயர்ந்தது.
6 கர்த்தாவே, உமது நன்மை உயரமான மலைகளைக் காட்டிலும் உயர்ந்தது.
உமது நியாயம் ஆழமான சமுத்திரத்திலும் ஆழமானது.
கர்த்தாவே, நீர் மனிதனையும் மிருகங்களையும் காப்பாற்றுகிறீர்.
7 உமது அன்பான இரக்கத்தைக் காட்டிலும் விலையுயர்ந்தது எதுவுமில்லை.
ஜனங்கள் உம்மிடத்தில் அடைக்கலம் புகுகின்றனர்.
உமது கருணையான பாதுகாப்பில் மகிழ்கிறார்கள்.
8 கர்த்தாவே, உம் வீட்டின் நற்காரியங்களால் அவர்கள் புதுவலிமை பெறுகிறார்கள்.
அற்புதமான நதியிலிருந்து அவர்களைப் பருகப்பண்ணுவீர்.
9 கர்த்தாவே, ஜீவஊற்று உம்மிடமிருந்து புறப்படுகிறது.
உமது வெளிச்சம் நாங்கள் ஒளியைக் காண உதவுகிறது.
10 கர்த்தாவே, உம்மை உண்மையில் அறியும் ஜனங்களைத் தொடர்ந்து நேசியும்.
உமக்கு உண்மையாயிருக்கிற அந்த ஜனங்களுக்கு உமது நன்மை எப்போதும் இருக்கட்டும்.
11 கர்த்தாவே, பெருமை நிரம்பியோர் என்னை அகப்படுத்தாதிருக்கட்டும்.
தீயவர்கள் என்னைப் பிடிக்கவிடாதிரும்.
12 “துன்மார்க்கர் இங்கே விழுந்து நசுக்கப்பட்டனர்.
அவர்கள் மீண்டும் எழுந்திருப்பதில்லை” என்பதை அவர்கள் கல்லறைகளில் பொறித்து வையுங்கள்.
2008 by World Bible Translation Center