Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 19

யோனத்தான் தாவீதுக்கு உதவுகிறான்

19 சவுல் தன் அதிகாரிகளிடமும் யோனத்தானிடமும் தாவீதைக் கொல்லுமாறு கூறினான். ஆனால் யோனத்தான் தாவீதை அதிகமாக விரும்பினான். 2-3 எனவே யோனத்தான் தாவீதை எச்சரித்து, “கவனமாக இரு, சவுல் உன்னைக் கொல்லப் பார்க்கிறார். இன்று காலை, வயலில் ஒளிந்துக்கொள், நான் என் தந்தையோடு அங்கு வந்து பேசுவதை கேட்டுக்கொள்” என்றான்.

யோனத்தான் தனது தந்தை சவுலிடம் சம்பாஷித்தான். தாவீதைப் பற்றி நல்லவற்றை அவன் எடுத்துக் கூறினான். அவன், “நீங்கள் ஒரு அரசன், தாவீது ஒரு சேவகன், அவன் உங்களுக்கு எதிராக எதுவும் செய்யமாட்டான். எனவே அவனுக்கு எதிராக எதுவும் செய்யாதீர்கள், அவன் உங்களுக்கு நன்மையே செய்வான். அவன் கோலியாத்தைக் கொல்ல தன் உயிரையே பணயம் வைத்தான். கர்த்தர் இஸ்ரவேலுக்காக பெரிய வெற்றியைத் தந்தார். நீங்கள் பார்த்து மகிழ்ந்தீர்கள். அவன் அப்பாவி! அவனைக் கொல்ல காரணமே இல்லை” என்றான்.

யோனத்தான் சொல்வதை சவுல் கேட்டு, “கர்த்தர் ஜீவிப்பது உண்மை, தாவீது கொல்லப்படமாட்டான்” என்றான்.

எனவே, யோனத்தான் தாவீதை அழைத்து நடந்த எல்லாவற்றையும் சொன்னான். பிறகு தாவீதை சவுலிடம் அழைத்து வந்தான். ஆகையால் முன்பு போலவே தாவீதை சவுலோடேயே இருக்கச் செய்தான்.

சவுல் தாவீதை மீண்டும் கொல்ல முயற்சிக்கிறான்

மறுபடியும் போர் தொடங்கியது. தாவீது புறப்பட்டு சென்று பெலிஸ்தியரோடு போர் செய்தான். பெலிஸ்தியரை தாவீது தோற்கடித்தான். அங்கிருந்து அவர்கள் ஓடிப் போனார்கள். சவுல் வீட்டில் இருக்கும் போது, கர்த்தரிடமிருந்து ஒரு தீய ஆவி அவன் மீது வந்தது. அவன் தனது கையில் ஈட்டி ஒன்றை வைத்திருந்தான். தாவீது சுரமண்டலம் வாசித்துக்கொண்டிருதான். 10 சவுல் ஈட்டியால் அவனைச் சுவரோடு சேர்த்து குத்திக் கொல்லப் பார்த்தான். ஆனால் தாவீது அப்புறம் குதித்துத் தப்பினான். சவுல் தன் ஈட்டியைச் சுவரில் பதிய குத்தினான். தாவீது அன்றிரவு தப்பிவிட்டான்.

11 தாவீதின் வீட்டுக்கு சவுல் ஆட்களை அனுப்பினான். அவர்கள் தாவீதின் வீட்டைக் கண்காணித்தார்கள். அன்றிரவு முழுக்க அவர்கள் அங்கேயே தங்கி இருந்தார்கள். அதிகாலையில் தாவீதைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டார்கள். தாவீதின் மனைவியான மீகாள் அவனை எச்சரித்து, “இந்த இரவே இங்கே இருந்து தப்பி ஓடி, உன் உயிரைக் காப்பாற்றிக்கொள். இல்லையென்றால் நாளை கொல்லப்படுவீர்” என்று சொன்னாள். 12 அவள் அவனை ஜன்னல் வழியாக இறக்கிவிட, அவன் தப்பினான். 13 மீகாள் கட்டில் மேல் ஒரு சிலையை வைத்து, தலை மாட்டில் வெள்ளாட்டுத் தோலைப் போட்டு ஆடையால் மூடி வைத்தாள்.

14 தாவீதைக் கைது செய்து அழைத்து வரும்படி சவுல் ஆட்களை அனுப்பினான். மீகாள் அவர்களிடம், “தாவீது நோயுற்றிருக்கிறான்” என்று சொன்னாள்.

15 தூதுவர்கள் சவுலிடம் சங்கதியைச் சொன்னார்கள். ஆனால் அவர்களை மீண்டும் சவுல் திருப்பி அனுப்பினான். அவர்களிடம், “தாவீதை என்னிடம் அழைத்து வாருங்கள். முடிந்தால் அவன் படுத்துக்கிடக்கும் கட்டிலோடு அவனைத் தூக்கி வாருங்கள், அவனை நான் கொல்வேன்” என்றான்.

16 தாவீதின் வீட்டுக்குத் தூதுவர்கள் சென்றார்கள். தாவீதைத் தூக்கி வர வீட்டிற்குள் நுழைந்தார்கள். ஆனால் படுக்கையில் வெறும் சிலையைத்தான் பார்த்தார்கள், ஆட்டு மயிர் அதன் போர்வையாக இருக்க கண்டனர்.

17 சவுல், மீகாளிடம், “ஏன் என்னிடம் நீ தந்திரம் செய்கிறாய்? நீ எனது எதிரியை தப்பிக்கவிட்டாய்!” என்று கேட்டான்.

அவள், “தாவீது தப்பிக்க நான் உதவி செய்யாவிட்டால் அவர் என்னை கொன்றுவிடுவதாகச் சொன்னார்!” என்றாள்.

தாவீது ராமாவில் உள்ள முகாமிற்குப் போதல்

18 தாவீது தப்பித்து ராமாவில் தங்கியிருந்த சாமுவேலிடம் போனான். தனக்கு சவுல் செய்தக் காரியங்கள் அனைத்தையும் சாமுவேலிடம் சொன்னான். பிறகு இருவரும் தீர்க்கதரிசிகள் தங்கி இருக்கிற முகாம்களுக்குச் சென்றனர். தாவீது அங்கேயே தங்கினான்.

19 ராமாவில் உள்ள முகாமில் தாவீது இருக்கும் செய்தியைப் பற்றி சவுல் கேள்விப்பட்டான். 20 தாவீதை கைது செய்து அழைத்து வர சேவகர்களை அனுப்பினான். அவர்கள் வந்து தீர்க்கதரிசனம் சொல்கிற தீர்க்கதரிசிகளின் குழு மத்தியில் சாமுவேல் குழுத்தலைவனாக நிற்பதைக் கண்டனர். அப்போது சேவகர் மேல் தேவனுடைய ஆவியானவர் இறங்க அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள்.

21 இதை அறிந்த சவுல், வேறு சேவகர்களை அனுப்பினான். அவர்களும் அங்கு போய் தீர்க்கதரிசனம் சொல்ல, மூன்றாவது குழுவை அனுப்பினான். அவர்களும் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். 22 சவுலும் ராமாவுக்குப் போய் சேக்குவிலுள்ள கிணற்றருகில் நின்று, “சாமுவேலும் தாவீதும் எங்கே?” என்று கேட்டான்.

ஜனங்கள், “ராமாவின் முகாமில் உள்ளனர்” என்று சொன்னார்கள்.

23 அவனும் ராமாவுக்கு அருகில் உள்ள முகாம்களுக்குப் போனான். அவன் மேலும் தேவனுடைய ஆவியானவர் இறங்கவே அவனும் தீர்க்கதரிசனம் சொல்ல ஆரம்பித்தான். முகாமிற்குச் செல்லும் வரை அப்படியேச் சொல்லிக்கொண்டே சென்றான். 24 சவுலும் தன் ஆடைகளை கழற்றிப் போட்டு சாமுவேலுக்கு முன்பாக தீர்க்கதரிசனம் சொல்லி இரவும் பகலும் ஆடையில்லாமல் கிடந்தான்.

எனவேதான், “சவுலும் தீர்க்கதரிசிகளில் ஒருவனா?” என்று ஜனங்கள் கூறுகின்றனர்.

1 கொரி 1

கிறிஸ்து இயேசுவின் ஒரு அப்போஸ்தலனாக இருக்கும்பொருட்டு பவுலாகிய நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். நான் ஒரு அப்போஸ்தலனாக வேண்டுமென தேவன் விரும்பினார். என்னிடமிருந்தும், நம் சகோதரர் சொஸ்தெனேயிடமிருந்தும் இந்தக் கடிதம் அனுப்பப்படுகிறது.

கொரிந்து பட்டணத்தின் சபைக்கும் கிறிஸ்து இயேசுவில் பரிசுத்தமாக்கப்பட்ட அனைவருக்கும் இந்தக் கடிதம் எழுதப்படுகிறது. தேவனுடைய பரிசுத்த மக்களாக நீங்கள் அழைக்கப்பட்டீர்கள். அவர்களுக்கும் நமக்கும் கர்த்தராய் இருக்கிற இயேசு கிறிஸ்துவின் பெயரில் நம்பிக்கை வைத்து எங்கெங்கும் இருக்கிற மக்களுடன் இணைந்து நீங்களும் அழைக்கப்பட்டிருக்கிறீர்கள்.

நம் பிதாவாகிய தேவனிடமிருந்தும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் கிருபையும், சமாதானமும் உங்களுக்கு உண்டாவதாக.

பவுல் தேவனுக்கு நன்றி கூறுதல்

கிறிஸ்து இயேசு மூலமாக தேவன் உங்களுக்கு அளித்த கிருபைக்காக நான் எப்போதும் என் தேவனுக்கு உங்களுக்காக நன்றி சொல்வேன். இயேசுவில் எல்லா வகையிலும் நீங்கள் ஆசி பெற்றிருக்கிறீர்கள். உங்கள் எல்லா பேச்சிலும், எல்லாவகை அறிவிலும் நீங்கள் ஆசி பெற்றுள்ளீர்கள். கிறிஸ்துவைப் பற்றிய உண்மை உங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மறு வருகைக்காக நீங்கள் காத்திருக்கையில் தேவனிடமிருந்து பெற வேண்டிய வெகுமதி யாவும் பெற்றுள்ளீர்கள். இயேசு இறுதி வரைக்கும் உங்களை பலமுடையவர்களாக ஆக்குவார். அவர் உங்களை பலசாலிகளாக மாற்றுவதால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வருகை தரும் அந்நாளில் உங்களிடம் எந்தத் தவறும் காணப்படாது. தேவன் நம்பிக்கைக்குரியவர். தேவனாகிய ஒருவரே உங்களைத் தம் குமாரானாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவோடு வாழ்வைப் பகிர்ந்துகொள்ளும்படியாக அழைத்தார்.

கொரிந்து சபையில் பிரச்சனைகள்

10 சகோதர சகோதரிகளே! கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பெயரினால் உங்களை ஒன்று வேண்டுகிறேன். நீங்கள் ஒருவரோடு ஒருவர் கருத்தொற்றுமையுடன் வாழ வேண்டுகிறேன். அப்போது உங்களுக்குள் பிரிவினைகள் ஏற்படாது. ஒரே விதமான சிந்தனையும், ஒரே நோக்கமும் கொண்டு முழுக்க இணைந்தவர்களாய் நீங்கள் வாழ வேண்டுமென வேண்டுகிறேன்.

11 எனது சகோதர சகோதரிகளே! குலோவேயாளின் குடும்பத்தினர் சிலர் உங்களைப்பற்றி என்னிடம் கூறினர். உங்களுக்கிடையில் வாக்குவாதங்கள் இருக்கின்றன என நான் கேள்விப்பட்டேன். 12 நான் கூற விரும்புவது இது தான்: உங்களில் ஒருவர் “நான் பவுலைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். மற்றொருவர் “அப்பொல்லோவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னொருவர் “நான் கேபாவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். இன்னும் ஒருவர் “நான் கிறிஸ்துவைப் பின்பற்றுகிறேன்” என்கிறார். 13 கிறிஸ்துவைப் பலவகைக் குழுக்களாகப் பிரித்துப் பார்க்கமுடியாது! சிலுவையில் பவுல் உங்களுக்காக மரித்தானா? இல்லை. பவுலின் பெயரால் நீங்கள் ஞானஸ்நானம் அடைந்தவர்களா? இல்லை. 14 கிறிஸ்பு மற்றும் காயு தவிர வேறு எவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்பதில் தேவனுக்கு நன்றியுடைவனாயிருக்கிறேன். 15 எனது பெயரில் நீங்கள் ஞானஸ்நானம் பெற்றீர்கள் என எவரும் இப்போது கூற முடியாது என்பதால் நான் தேவனுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன். 16 ஸ்தேவான் குடும்பத்தினருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்தேன். ஆனால் வேறெவருக்கும் நான் ஞானஸ்நானம் கொடுத்ததாக எனக்கு நினைவில்லை. 17 மக்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும் வேலையைக் கிறிஸ்து எனக்குத் தரவில்லை. நற்செய்தியை மக்களுக்குக் கூறும் வேலையையே கிறிஸ்து எனக்கு அளித்தார். ஆனால் உலகத்து ஞானத்தைக் காட்டும் சொற்களைப் பயன்படுத்தாமல் நற்செய்தியை மட்டும் சொல்லவே இயேசு கிறிஸ்து என்னை அனுப்பினார். நற்செய்தியைக் கூற உலக ஞானத்தை நான் பயன்படுத்தினால், அப்போது கிறிஸ்துவின் சிலுவை அர்த்தமற்றதாகிவிடும்.

கிறிஸ்துவில் காணப்படும் ஞானம்

18 கெட்டுப்போகிற மக்களுக்குச் சிலுவை பற்றிய போதனை முட்டாள்தனமாகத் தோன்றுகிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ, அது தேவனுடைய வல்லமையாகும்.

19 “நான் ஞானிகளின் ஞானத்தை அழிப்பேன்.
    நான் மேதைகளின் அறிவைப் பயனற்றதாக்குவேன்.” (A)

என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டு இருக்கிறது.

20 தற்காலத்தின் ஞானி எங்கே? கல்வியில் தேர்ந்தவன் எங்கே? இன்றைய தத்துவஞானி எங்கே? உலகத்து ஞானத்தை தேவனே மடமையாக மாற்றினார். 21 தேவன் தனது ஞானத்தினால் விரும்பியது இதுவே: உலகத்தின் ஞானத்தால், உலகம் தேவனைக் கண்டுகொள்ள முடியவில்லை. தேவனை விசுவாசிக்கிற மக்களைக் காக்கும்பொருட்டு மடமையாய்த் தோன்றும் தனது செய்தியை தேவன் பயன்படுத்தினார்.

22 யூதர்கள் அதிசயங்களைச் சாட்சியாகக் கேட்கின்றனர். கிரேக்கர்கள் ஞானத்தை வேண்டுகின்றனர். 23 ஆனால் நாங்கள் போதிப்பது இதுவே. கிறிஸ்து சிலுவையின் மேல் கொல்லப்பட்டார். இது யூதர்களுக்கு, நம்பிக்கைக்கு ஒரு பெரிய தடையாகும். யூதர்களைத் தவிர பிறருக்கு இது மடமையாகத் தோன்றும். 24 ஆனால், தேவன் தேர்ந்துள்ள யூதருக்கும், கிரேக்கருக்கும் கிறிஸ்துவே தேவனின் வல்லமையும், தேவஞானமும் ஆவார். 25 தேவனுடைய மடமை கூட மனிதரின் ஞானத்திலும் சிறந்தது. தேவனுடைய சோர்வும் கூட மனிதரின் பலத்தைக் காட்டிலும் வலிமை உடையது.

26 சகோதர சகோதரிகளே! தேவன் உங்களைத் தெரிந்துள்ளார். அது பற்றிச் சிந்தியுங்கள். உலகத்தார் ஞானத்தைப் பற்றி வைத்திருக்கும் கணிப்பின்படி உங்களில் பலர் ஞானிகள் அல்லர். உங்களில் பலருக்கு மிகப் பெரிய செல்வாக்கு எதுவும் கிடையாது. உங்களில் பலர் பிரபலமான குடும்பங்களிலிருந்தும் வந்தவர்கள் அல்லர். 27 ஞானிகளுக்கு வெட்கத்தைத் தரும்படியாக தேவன் உலகத்தின் முட்டாள்தனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். பலவான்களான மனிதர்களை அவமதிக்க உலகத்தின் பலவீனமான பொருள்களைத் தேர்ந்தெடுத்தார். 28 உலகம் முக்கியமற்றதென்று நினைப்பதை தேவன் தேர்ந்துகொண்டார். உலகம் வெறுப்பதையும், பயனற்றதெனக் கருதுவதையும் அவர் தேர்ந்தெடுத்தார். முக்கியமென உலகம் பார்க்கிறவற்றை அழிப்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார். 29 எந்த மனிதனும் தேவனுக்கு முன்பு தற் பெருமை அடையாதபடிக்கு தேவன் இப்படிச் செய்தார். 30 உங்களைக் கிறிஸ்து இயேசுவின் ஒரு பாகமாகும்படி செய்தவர் தேவனே, தேவனிடம் இருந்து கிறிஸ்து நமக்கு ஞானமாக இருக்கிறார். பாவத்தில் இருந்து விடுதலை அடையவும், தேவனோடு இணக்கமாக இருக்கவும் கிறிஸ்துவே காரணமாவார். நாம் பரிசுத்தமாய் இருப்பதற்கும் கிறிஸ்துவே காரணமாவார். 31 எனவே எழுதப்பட்டுள்ளபடி “ஒருவர் பெருமைப்படுவதாக இருந்தால், தேவனில் மட்டுமே பெருமைப்பட வேண்டும்.” [a]

புலம்பல் 4

எருசலேம் மீதான தாக்குதலின் பயங்கரங்கள்

தங்கம் எவ்வளவு ஒளி மங்கி இருக்கிறது என்று பார்.
    நல்ல தங்கமானது எப்படி மாறியிருக்கிறது எனப் பார்.
எல்லா இடங்களிலும் நகைகள் சிதறி கிடக்கின்றன.
    ஒவ்வொரு தெருமுனையிலும் அவை சிதறி கிடக்கின்றன.
சீயோனின் ஜனங்கள் மிகுதியான நன்மதிப்புள்ளவர்களாயிருந்தார்கள்.
    அவர்கள் தங்கத்தின் எடைக்குச் சமமான எடையுள்ளவர்களாக இருந்தனர்.
ஆனால் இப்பொழுது பகைவர்கள் அந்த ஜனங்களை பழைய மண்பாத்திரங்களைப்போன்று கருதுகின்றனர்.
    பகைவர்கள், குயவனால் செய்யப்பட்ட மண்பாத்திரங்களைப்போன்று இவர்களைக் கருதுகிறார்கள்.
காட்டுநாய்கூடத் தன் குட்டிகளுக்கு உணவூட்டுகின்றன.
    ஓநாய் கூடத் தன் குட்டிகள் மார்பில் பால் குடிக்கும்படிவிடும்.
ஆனால் எனது ஜனங்களின் குமாரத்தியோ கொடூரமானவள்.
    அவள் வனாந்தரத்தில் வாழும் நெருப்புக் கோழியைப் போன்றவள்.
சிறு குழந்தைகளின் நாக்கானது,
    தாகத்தால் வாயின்மேல் அன்னத்தோடு ஒட்டிக் கொள்கிறது.
சிறு குழந்தைகள் அப்பம் கேட்கிறார்கள்.
    ஆனால் அவர்களுக்கு எவரும் அப்பம் கொடுக்கவில்லை.
ஒரு காலத்தில், செல்வமான உணவை உண்ட ஜனங்கள் இப்போது,
    வீதிகளில் மரித்துக் கிடக்கின்றனர்.
மென்மையான சிவப்பு ஆடைகளை அணிந்த ஜனங்கள்
    இப்போது குப்பைமேடுகளை பொறுக்குகிறார்கள்.
எனது ஜனங்களின் மகள் [a]
    செய்த பாவம் மிகப்பெரியது.
அவளின் பாவம் சோதோமும் கொமோராவும் [b]
    செய்த பாவத்தை விடப் பெரியது.
சோதோமும் கொமோராவும் திடீரென அழிக்கப்பட்டது.
    எந்த மனிதனின் கையும் அழிவுக்கு காரணமாயிருக்க முடியவில்லை.
யூதாவிலுள்ள சில புருஷர்கள்
    விசேஷ முறையில் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டனர்.
அம்மனிதர் மிகவும் பரிசுத்தமானவர்கள்.
    அவர்கள் பனியைவிட வெள்ளையானவர்கள்.
    அவர்கள் பாலைவிட வெண்மையானவர்கள்.
அவர்களின் உடல்கள் பவளத்தைப்போன்று சிவந்தவை.
    அவர்களின் தாடிகள் இந்திர நீலக் கற்களாயிருந்தன.
ஆனால் இப்பொழுது, அவர்களின் முகங்கள் கரியைவிட கருத்துப்போயின.
    வீதியில் எவராலும் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.
அவர்களின் தோல் எலும்புகளோடு ஒட்டிக் கொண்டது.
    அவர்களின் தோல் மரத்தைப் போலுள்ளது.
வாளால் கொல்லப்பட்ட ஜனங்கள் பஞ்சத்தால் கொல்லப்பட்ட ஜனங்களைவிடச் சிறந்தவர்கள்.
    பட்டினியாக இருந்த ஜனங்கள் மிக துக்கமாக இருந்தார்கள்.
அவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
    அவர்கள் வயலிலிருந்து எந்த உணவையும் பெறாததால் மரித்தனர்.
10 அப்பொழுது, மிக மெல்லிய இயல்புடைய பெண்களும்கூடத்
    தம் சொந்த குழந்தைகளைச் சமைத்தனர்.
அக்குழந்தைகள் தம் தாய்மார்களின் உணவாயிற்று.
    என் ஜனங்கள் எல்லாம் அழிக்கப்பட்டபோது இது நிகழ்ந்தது.
11 கர்த்தர் தனது கோபம் அனைத்தையும் பயன்படுத்தினார்.
    அவர் தனது கோபம் முழுவதையும் கொட்டித் தீர்த்தார்.
அவர் சீயோனில் ஒரு நெருப்பை உண்டாக்கினார்.
    அந்த நெருப்பு சீயோனை அதன் அஸ்திபாரம்வரைக்கும் எரித்துபோட்டது.
12 பூமியிலுள்ள அரசர்கள் என்ன நிகழ்ந்தது
    என்பதைப்பற்றி நம்ப முடியவில்லை.
உலகில் உள்ள ஜனங்களால் என்ன நடந்தது என்பதை
    நம்ப முடியவில்லை.
பகைவர்களால் எருசலேமின் நகர வாசல்கள் மூலமாக
    நுழைய முடியும் என்பதை அவர்களால்
    நம்ப முடியவில்லை.
13 எருசலேமில் உள்ள தீர்க்கதரிசிகள் செய்த
    பாவத்தால் இது நிகழ்ந்தது.
எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் செய்த
    தீயச்செயல்களால் இது நிகழ்ந்தது.
எருசலேம் நகரில் அந்த ஜனங்கள் இரத்தம் வடித்துக்கொண்டிருந்தார்கள்.
    நல்ல ஜனங்களின் இரத்தத்தை அவர்கள் சிந்திக்கொண்டிருந்தார்கள்.
14 தீர்க்கதரிசிகளும் ஆசாரியர்களும் வீதிகளில்
    குருட்டு மனிதர்களைப்போன்று நடந்து திரிந்துகொண்டிருந்தார்கள்.
அவர்கள் இரத்தத்தினால் அழுக்காயிருந்தார்கள்.
    அவர்களது அழுக்கால் எவரும் அவர்களுடைய ஆடையை தொடமுடியாதபடி இருந்தனர்.
15 “வெளியே போ! வெளியே போ!
    எங்களைத் தொடவேண்டாம்” என்று ஜனங்கள் சத்தமிட்டனர்.
அந்த ஜனங்கள் சுற்றி அலைந்தனர்.
அவர்களுக்கு வீடு இல்லை.
    மற்ற நாடுகளிலுள்ள ஜனங்கள், “அவர்கள் எங்களோடு வாழ்வதை நாங்கள் விரும்பவில்லை” என்றனர்.
16 கர்த்தர் தாமே அந்த ஜனங்களை அழித்தார்.
    அதற்குப் பிறகு அவர்களை அவர் பாதுகாக்கவில்லை.
அவர் ஆசாரியர்களை மதிக்கவில்லை.
    யூதாவிலுள்ள மூப்பர்களுடன் அவர் சிநேகம் வைக்கவில்லை.
17 நாங்கள் உதவிக்காகக் காத்திருந்து எங்கள் கண்கள் களைத்துப் பழுதாயிற்று.
    ஆனால் எந்த உதவியும் வரவில்லை.
எங்களைக் காப்பாற்றப் போகிற ஒரு தேசத்திற்காக நாங்கள் காத்திருந்தோம்.
    நாங்கள் பார்வை கோபுரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தோம்.
    ஆனால் எந்தத் தேசமும் எங்களுக்கு உதவ வரவில்லை.
18 எங்கள் பகைவர்கள் எப்பொழுதும் எங்களை வேட்டையாடினார்கள்.
    எங்களால் வீதிகளுக்குக் கூடப் போகமுடியவில்லை.
எங்கள் முடிவு அருகில் நெருங்கி வந்தது. எங்கள் காலம் போய்விட்டது.
    எங்கள் முடிவு வந்தது!
19 எங்களைத் துரத்துகிற மனிதர்கள் வானத்தில் பறக்கும் கழுகுகளைவிட விரைவாக இருந்தனர்.
    அம்மனிதர்கள் எங்களை மலைகளுக்குத் துரத்தினார்கள்.
எங்களைப் பிடிப்பதற்காக
    அவர்கள் வனாந்தரத்தில் மறைந்திருந்தனர்.
20 அரசன் எங்களுக்கு மிக முக்கியமானவனாக இருந்தான்.
எங்கள் நாசியின் சுவாசத்தைப் போல் இருந்தான்.
    ஆனால் அரசன் அவர்களால் வலைக்குட்படுத்தப்பட்டிருந்தான்.
இந்த அரசன் கர்த்தராலேயே தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தான்.
    அரசனைப் பற்றி நாம், “நாங்கள் அவனது நிழலில் வாழ்வோம்.
    அவன் எங்களை பிற தேசங்களிடமிருந்து காப்பாற்றுகிறான்” என்று சொல்லியிருந்தோம்.
21 ஏதோம் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
    ஊத்ஸ் நாட்டில் வாழும் ஜனங்களே, மகிழ்ச்சியாய் இருங்கள்.
ஆனால் நினைத்துக்கொள், கர்த்தருடைய கோபமாகிய கிண்ணம் உங்களைச் சுற்றிலும் கூட வரும்.
நீ கிண்ணத்திலிருந்து (தண்டனை) குடிக்கும் போது நீ குடிகாரனாவாய்.
    உன்னை நீயே நிர்வாணமாக்கிக்கொள்வாய்.
22 சீயோனே, உனது தண்டனை முடிந்தது.
    நீ மீண்டும் சிறைகைதியாகமாட்டாய்.
ஆனால் ஏதோம் ஜனங்களே கர்த்தர் உனது பாவங்களைத் தண்டிப்பார்.
    அவர் உனது பாவங்களை வெளிப்படுத்துவார்.

சங்கீதம் 35

தாவீதின் பாடல்

35 கர்த்தாவே, என் யுத்தங்களையும்
    என் போர்களையும் நீரே நடத்தும்.
கர்த்தாவே, சிறியதும் பெரியதுமான கேடகத்தை எடுத்துக்கொள்ளும்.
    எழுந்திருந்து எனக்கு உதவும்.
ஈட்டியை எடுத்து என்னைத் துரத்தும் ஜனங்களோடு போரிடும்.
    கர்த்தாவே, என் ஆத்துமாவை நோக்கி, “நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறும்.

சிலர் என்னைக் கொல்ல முயல்கிறார்கள்.
    அவர்கள் ஏமாறவும் வெட்கமடையவும் செய்யும். அவர்கள் திரும்பி ஓடிவிடச் செய்யும்.
அவர்கள் என்னைக் காயப்படுத்தத் திட்டமிடுகிறார்கள்.
    அவர்களை வெட்கமடையச் செய்யும்.
காற்றால் பறக்கடிக்கும் பதரைப்போல் அவர்களை மாற்றும்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
கர்த்தாவே, அவர்களின் பாதை இருளாகவும், வழுக்கலுடையதாகவும் ஆகட்டும்.
    கர்த்தருடைய தூதன் அவர்களைத் துரத்தட்டும்.
நான் பிழையேதும் செய்யவில்லை.
    ஆனால் அவர்கள் என்னைத் தங்கள் கண்ணியில் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
    காரணமின்றி அவர்கள் என்னைச் சிக்கவைக்க முயல்கிறார்கள்.
எனவே கர்த்தாவே, அவர்களே தங்கள் கண்ணிகளில் விழட்டும்.
    அவர்கள் தங்கள் வலைகளில் தடுமாறட்டும்.
    அறியாத தீங்கு அவர்களைப் பிடிக்கட்டும்.
அப்போது நான் கர்த்தரில் களிகூருவேன்.
    அவர் என்னை மீட்கும்போது நான் சந்தோஷம்கொள்வேன்.
10 “கர்த்தாவே, உம்மைப் போன்றோர் யாருமில்லை.
    கர்த்தாவே, பலமான ஜனங்களிடமிருந்து நீர் ஏழையைக் காப்பாற்றுகிறீர்.
ஏழையினும் கீழ்ப்பட்ட ஏழைகளின் பொருள்களைக் கவரும் கயவர்களிடமிருந்து
    அவர்களைக் காப்பாற்றுகிறீர்” என்று என் முழு மனதோடும் கூறுவேன்.
11 சாட்சிகள் சிலர் என்னைத் துன்புறுத்தத் திட்டமிடுகின்றனர்.
    அந்த ஜனங்கள் கேள்விகள் எழுப்புகின்றனர்.
    அவர்கள் பேசுவதைக் குறித்து நான் அறியேன்.
12 நான் நற்காரியங்களையே செய்திருக்கிறேன்.
    ஆனால் அந்த ஜனங்கள் எனக்குத் தீய காரியங்களைச் செய்கின்றனர்.
    கர்த்தாவே, தகுதியான நற்காரியங்களை எனக்குத் தாரும்.
13 அந்த ஜனங்கள் நோயுற்றபோது, அவர்களுக்காக வருந்தினேன்.
    உணவு உண்ணாமல் என் துக்கத்தை வெளிப்படுத்தினேன்.
    அவர்களுக்காக ஜெபித்ததினால் நான் பெறும் பலன் இதுவா?
14 அந்த ஜனங்களுக்காகத் துக்கத்தின் ஆடைகளை உடுத்திக்கொண்டேன்.
    அந்த ஜனங்களை என் நண்பர்களைப் போலவும், என் சகோதரர்களைப்போலவும் நடத்தினேன்.
தாயை இழந்த மனிதன் அழுவதைப்போன்று நான் துக்கமுற்றேன்.
    அந்த ஜனங்களுக்காக என் துக்கத்தை வெளிப்படுத்துவதற்குக் கறுப்பு நிற ஆடைகளை உடுத்திக் கொண்டேன்.
    துக்கத்தால் தலை குனிந்து நடந்தேன்.
15 ஆனால் என் தவற்றுக்கு அந்த ஜனங்கள் நகைத்தனர்.
    அந்த ஜனங்கள் உண்மை நண்பர்கள் அல்ல.
ஜனங்களை நான் அறிந்திருக்கவில்லை.
    அந்த ஜனங்கள் என்னைச் சூழ்ந்து தாக்கினார்கள்.
16 அவர்கள் தீய மொழிகளைப் பேசி என்னைப் பரிகசித்தார்கள்.
    அவர்கள் பற்களைக் கடித்துத் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினார்கள்.

17 என் ஆண்டவரே, அத்தீய காரியங்கள் நடப்பதை எத்தனைக் காலம் பொறுத்திருப்பீர்?
    அந்த ஜனங்கள் என்னை அழிக்க முயலுகிறார்கள்.
    கர்த்தாவே, என் உயிரைக் காப்பாற்றும் குரூரமான சிங்கம் போன்றவர்களாகிய அத்தீயோரிடமிருந்து என் ஆருயிரைக் காப்பாற்றும்.

18 கர்த்தாவே, பெரும் சபையில் உம்மைத் துதிப்பேன்.
    வல்லமைமிக்க ஜனங்கள் மத்தியில் உம்மைத் துதிப்பேன்.
19 பொய் பேசுகிற என் பகைவர்கள் எப்போதும் நகைத்துக்கொண்டிருக்க முடியாது.
    தங்களின் இரகசிய திட்டங்களுக்காக என் பகைவர்கள் கண்டிப்பாகத் தண்டனை பெறுவார்கள்.
20 என் பகைவர்கள் சமாதானத்திற்கான திட்டங்களை நிச்சயமாக வகுக்கவில்லை.
    இந்நாட்டிலுள்ள சமாதானமான ஜனங்களுக்குத் தீமைகள் செய்வதற்கு இரகசிய திட்டங்களை அவர்கள் வகுக்கிறார்கள்.
21 என் பகைவர்கள் என்னைக்குறித்துத் தீய காரியங்களையே பேசுகிறார்கள்.
    அவர்கள் மகிழ்ச்சியடைந்து “ஆஹா!
    நீ என்ன செய்கிறாய் என்பதை நாங்கள் அறிவோம்” என்கிறார்கள்.
22 கர்த்தாவே, உண்மையில் நடப்பவற்றை நீர் நிச்சயமாகப் பார்க்கமுடியும்.
    எனவே சும்மா இராதேயும்.
    என்னை விட்டு விலகாதேயும்.
23 கர்த்தாவே விழித்தெழும், எழுந்திரும்.
    என் தேவனே, என் ஆண்டவரே, எனக்காகப் போரிட்டு நியாயமளியும்.
24 எனது தேவனாகிய கர்த்தாவே, தக்க முறையில் என்னை நியாயந்தீரும்.
    அந்த ஜனங்கள் என்னைப் பார்த்து நகைக்கவிடாதேயும்.
25 அந்த ஜனங்கள், “ஆஹா!
    எங்களுக்கு வேண்டியதைப் பெற்றோம்” எனக் கூறவிடாதேயும்.
    கர்த்தாவே, “நாங்கள் அவனை அழித்தோம்!”
    என அவர்கள் கூறவிடாதேயும்.
26 என் பகைவர்கள் வெட்கி, நாணுவார்கள் என நம்புகிறேன்.
    எனக்குத் தீயக் காரியங்கள் நிகழ்ந்தபோது அந்த ஜனங்கள் மகிழ்ச்சியடைந்தார்கள்.
என்னைக் காட்டிலும் தாங்கள் சிறந்தவர்கள் என்று அவர்கள் எண்ணினார்கள்.
    எனவே அந்த ஜனங்கள் வெட்கத்தினாலும் இழிவினாலும் மூடப்படட்டும்.
27 எனக்கு நல்ல காரியங்கள் நிகழட்டுமென்று சில ஜனங்கள் விரும்புகிறார்கள்.
    அந்த ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு வாழுவார்கள் என நான் நம்புகிறேன்.
அந்த ஜனங்கள் எப்போதும், “கர்த்தர் மேன்மையானவர்!
    அவரது வேலையாளுக்கு நல்லது எதுவோ அதையே அவர் விரும்புவார்” என்று கூறுகிறார்கள்.

28 எனவே கர்த்தாவே, நீர் எவ்வளவு நல்லவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுவேன்.
    ஒவ்வொரு நாளும் நான் உம்மைத் துதிப்பேன்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center