M’Cheyne Bible Reading Plan
தாவீதும் யோனத்தானும் நெருங்கிய நண்பர்களாகிறார்கள்
18 சவுல் தாவீதோடு பேசி முடிந்ததும்,
யோனத்தானும் தாவீதும் நெருங்கிய நண்பர்களானார்கள். அவன் தன்னைப் போலவே தாவீதையும் நேசித்தான்.
2 சவுல் அன்று முதல் தாவீதை தன்னோடு வைத்துக்கொண்டான். அவனைத் தன் தந்தையிடம் திரும்பிச் செல்ல அனுமதிக்கவில்லை. 3 யோனத்தான் தாவீதை அதிகம் நேசித்து அவனோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டான். 4 யோனத்தான் தான் அணிந்திருந்த மேலாடையை கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். அவன் தன் சீருடையையும் கழற்றி தாவீதுக்குக் கொடுத்தான். மேலும் தனது வில், பட்டயம் மற்றும் கச்சையையும் கூட தாவீதுக்கே கொடுத்தான்.
தாவீதின் வெற்றிகளை சவுல் கவனிக்கிறான்
5 பல யுத்தங்களுக்கு தாவீதை சவுல் அனுப்பினான். தாவீதும் மிகப் பெரிய வெற்றிகளை அடைந்தான். பின்பு அவனை படைவீரருக்கு தலைவன் ஆக்கினான். சவுலின் தளபதிகள் உட்பட அனைவரும் இதை ஏற்றுக்கொண்டனர்! 6 தாவீது பெலிஸ்தியர்களோடு சண்டையிட வெளியேறினான். போரிலிருந்து வெற்றிபெற்று திரும்பியபோது, இஸ்ரவேலின் ஒவ்வொரு நகரப் பெண்மணிகளும் தாவீதைப் பாராட்ட வந்தனர். சிரித்து நடனமாடி மேளமும் யாழும் வாசித்தனர். சவுல் எதிரில் இதனைச் செய்தனர். 7 பெண்கள்,
“சவுல் ஆயிரம் பகைவர்களை கொன்றிருக்கிறான்.
ஆனால் தாவீதோ பதினாயிரம் பகைவர்களை கொன்றான்!”
என்று பாடினார்கள்.
8 இதனால் சவுல் கோபம் அடைந்தான். பெண்கள் சொன்னதை நினைத்து விசனப்பட்டான். 9 அன்று முதல் தாவீதை நெருக்கமாகப் பின்தொடர ஆரம்பித்தான்.
தாவீதைக் கண்டு சவுல் பயப்படுகிறான்
10 மறுநாள், தேவனிடமிருந்து ஒரு கெட்ட ஆவி சவுலை ஆட்கொண்டது. தாவீது வழக்கம்போல் சுரமண்டலத்தை எடுத்து மீட்டிக்கொண்டிருக்கும்போது, சவுல் தன் வீட்டில் தீர்க்கதரிசனம் சொல்லிக் கொண்டிருந்தான். 11 சவுலிடம் ஈட்டி இருந்தது. சவுல், “சுவரோடு சேர்த்து தாவீதைக் குத்திக் கொன்றுவிடலாம்” என எண்ணினான். அதன்படியே இரண்டு முறை ஈட்டியை வீசினான். ஆனால் இரண்டு முறையும் தாவீது தப்பிவிட்டான்.
12 தாவீதோடு கர்த்தர் இருந்தார். சவுலிடமிருந்து கர்த்தர் விலகிவிட்டார். எனவே சவுல் தாவீதைக் கண்டு பயந்தான். 13 தன்னிடமிருந்து வெகுதொலைவான இடத்துக்குத் தாவீதை சவுல் அனுப்பினான். 1,000 வீரர்களுக்கு அதிகாரியாக தாவீதை ஆக்கினான். வீரர்களை போருக்கு வழி நடத்துகிறவனாயிருந்தான். 14 கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான். 15 சவுல் தாவீதின் வெற்றிகளைக் கண்டபோது அவனுக்கு மேலும் மேலும் பயம் வந்தது. 16 ஆனால் யூதாவிலும் இஸ்ரவேலிலும் உள்ளவர்கள் தாவீதை நேசித்தனர். போரில் தங்களுக்காகப் போராடுவதால் அனைவரும் தாவீதை நேசித்தனர்.
தாவீதுக்கு தன் மகளை திருமணம் செய்துவைக்க சவுல் விரும்புகிறான்
17 ஆனால், சவுல் தாவீதைக் கொல்ல விரும்பி தந்திரமான ஒரு வழியை யோசித்தான். அவன், “என் மூத்த மகள் மேராப்பை உனக்கு மணமுடித்துத் தருவேன், பின் நீ வலிமை மிக்க வீரனாகலாம். என் மகன் போல இருக்கலாம்! பிறகு நீ போய் கர்த்தருடைய யுத்தங்களை நடத்தலாம்!” என்றான். மேலும் சவுல், “இவனை நான் கொல்லாமல், எனக்காக பெலிஸ்தியர்களால் கொல்லச்செய்வேன்” என்று எண்ணினான்.
18 தாவீதோ, “நான் பெரிய குடும்பத்தவனும் அல்ல! முக்கியமானவனும் அல்ல! என்னால் அரசனின் மகளை மணந்துகொள்ள முடியாது!” என்றான்.
19 எனவே மேராப் தாவீதை மணக்கவேண்டிய காலம் வந்தபோது, அவளை மேகோலத்தியனாகிய ஆதரியேலுக்கு மணமுடித்துக் கொடுத்தான்.
20 சவுலின் அடுத்த மகள் மீகாள் தாவீதை நேசித்தாள். இவ்விஷயத்தைப் பற்றி சவுலிடம் ஜனங்கள் சொன்னார்கள். இது சவுலுக்கு மகிழ்ச்சி தந்தது. 21 எனவே, “மீகாளைப் பயன்படுத்தி தாவீதை சூழ்ச்சிக்குட்படுத்த வேண்டும். அவள் அவனை மணக்கட்டும். பிறகு அவன் பெலிஸ்தியர்களால் கொல்லப்படுவான்” என்று நினைத்த சவுல் இரண்டாம் தடவையாக, “இன்று என் மகளை மணமுடிக்கலாம்” என்றான்.
22 சவுல் தன் அதிகாரிகளுக்கு கட்டளையிட்டு, “தனியாக தாவீதிடம் கூறுங்கள், பார், அரசனும் உன்னை விரும்புகிறான். அவரது அதிகாரிகளும் உன்னை விரும்புகின்றனர். நீ அவனுடைய மகளை மணக்க வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றான்.
23 அதிகாரிகள் இதை அவனிடம் கூற, அவனோ, “அரசனுக்கு மருகமகனாவது அவ்வளவு எளிதா? அரசனின் மகளுக்குத் தருகிற அளவிற்கு என்னிடம் செல்வமில்லை! நான் சாதாரண ஏழை” என்றான்.
24 தாவீது சொன்னதை சவுலிடம் அதிகாரிகள் சொன்னார்கள். 25 சவுல் அவர்களிடம், “அரசன் உன்னிடம் பணத்தை எதிர்பார்க்கவில்லை. பணத்திற்கு பதிலாக 100 பெலிஸ்தியர்களின் நுனித்தோல் போதும் என தாவீதிடம் கூறுங்கள்” என்றான். இதுதான் சவுலின் சூழ்ச்சி. பெலிஸ்தியர்கள் தாவீதை நிச்சம் கொல்வார்கள் என சவுல் நம்பியிருந்தான்.
26 அதிகாரிகள் தாவீதிடம் இதனைக் கூறினார்கள். அரசனின் மருமகனாக வாய்ப்புக் கிடைத்ததற்காய் மகிழ்ச்சியடைந்தான். 27 எனவே, தாவீதும் அவனது வீரர்களும் உடனே பெலிஸ்தரியர்களோடு சண்டைக்குப் போய் 200 பெலிஸ்தியரைக் கொன்று, அவர்களின் நுனித்தோலை வெட்டி கொண்டு வந்து சமர்ப்பித்தான். அரசனின் மருமகனாக விரும்பினபடியால் தாவீது இதைச் செய்தான்.
தன் மகள் மீகாளை தாவீது மணந்துக்கொள்ள சவுல் அனுமதித்தான். 28 தாவீதோடு கர்த்தர் இருப்பதைச் சவுல் அறிந்துக் கொண்டான். அதோடு அவனது மகள் மீகாள் தாவீதை நேசித்தாள் என்பதையும் அறிந்துக்கொண்டான். 29 எனவே, சவுலுக்கு தாவீது மீது மேலும் பயம் வந்தது. அவனைத் தனது எதிரியாக எப்போதும் எண்ணி வந்தான்.
30 பெலிஸ்திய தளபதிகள் தொடர்ந்து இஸ்ரவேலருக்கு எதிராக சண்டையிட்டனர். ஆனால், ஒவ்வொரு முறையும் தாவீது அவர்களைத் தோற்கடித்தான். தாவீது மிகச் சிறந்த அதிகாரி என்று புகழ் பெற்றான்.
பவுலின் இறுதி வார்த்தைகள்
16 நம்முடைய சகோதரி பெபெயாளைக் கிறிஸ்துவுக்குள் பரிசுத்தவான்களுக்கு ஏற்றபடி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். கெங்கிரேயா ஊர் சபையில் அவள் விசேஷ ஊழியக்காரி. 2 கர்த்தரில் அவளை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். தேவனுடைய பிள்ளைகளின் வழியில் அவளையும் ஏற்றுக்கொள்க. உங்களிடமிருந்து அவளுக்கு உதவிகள் தேவையென்றால் செய்யுங்கள். அவள் எனக்குப் பலமுறை உதவி செய்திருக்கிறாள். அவள் மற்றவர்ளுக்கும் உதவியாக இருந்திருக்கிறாள்.
3 பிரிஸ்கில்லாவுக்கும்Ԕஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்கள் இருவரும் என்னோடு பணியாற்றினர். 4 எனது உயிரைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்தனர். நான் அவர்களுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன். யூதரல்லாதவர்களின் அனைத்து சபைகளுக்கும் நன்றிக் கடன்பட்டுள்ளேன்.
5 அவர்களுடைய வீட்டிலே கூடும் சபையையும் வாழ்த்துங்கள்.
ஆசியாவிலே முதலில் கிறிஸ்துவைப் பின்பற்றியவனாகிய எப்பனெத் என்ற அந்த நண்பனையும் வாழ்த்துங்கள்.
6 மரியாளையும் வாழ்த்துங்கள். அவள் உங்களுக்காகப் பெரிதும் உழைத்தாள்.
7 அன்றோனீக்கையும் யூனியாவையும் வாழ்த்துங்கள். அவர்கள் எனது உறவினர்கள். என்னோடு சிறையில் இருந்தவர்கள். தேவனுடைய மிக முக்கியமான தொண்டர்களுள் எனக்கு முன்னரே கிறிஸ்துவை நம்பியவர்கள்.
8 அம்பிலியாவை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் எனக்கு மிகவும் அன்பானவன். 9 உர்பானை வாழ்த்துங்கள். அவன் என்னோடு கிறிஸ்துவுக்காகப் பணி செய்தவன்.
எனது அன்பான நண்பனாகிய ஸ்தாக்கியை வாழ்த்துங்கள். 10 அல்பெல்லேயை வாழ்த்துங்கள். அவனது உண்மையான கிறிஸ்தவ பக்தி சோதிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
அரிஸ்தோபூலுவின் குடும்பத்திலிலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். 11 எரோதியோனை வாழ்த்துங்கள். அவன் எனது உறவினன்.
நர்கீசுவின் குடும்பத்திலுள்ள அனைவரையும் வாழ்த்துங்கள். அவர்கள் கிறிஸ்துவுக்குட்பட்டவர்கள். 12 திரிபேனாளையும், திரிபோசாளையும் வாழ்த்துங்கள். ஏனெனில் அவர்கள் கர்த்தருக்காகக் கடினப்பட்டு உழைத்துக்கொண்டிருக்கின்றனர்.
எனது அன்புமிக்க தோழியாகிய பெர்சியாளை வாழ்த்துங்கள். அவளும் கர்த்தருக்காகக் கஷ்டப்பட்டு உழைத்தாள்.
13 ரூபஸை வாழ்த்துங்கள். அவன் கர்த்தருக்குள் சிறந்த மனிதன். அவனது தாயையும் வாழ்த்துங்கள். அவள் எனக்கும் தாய்தான்.
14 அசிங்கிரீத்து, பிலெகோன், எர்மே, பத்திரொபா, எர்மா மற்றும் அவர்களோடு இருக்கிற சகோதரர்களையும் வாழ்த்துங்கள்.
15 பிலொலோகஸ், ஜூலியா, நேரெஸ், அவனது சகோதரி, மற்றும் ஒலிம்பாஸ் ஆகியோரையும் வாழ்த்துங்கள். அவர்களோடிருக்கிற விசுவாசிகள் அனைவரையும் வாழ்த்துங்கள்.
16 ஒருவரையொருவர் பார்க்கும்பொழுது பரிசுத்தமான முத்தத்தால் வாழ்த்துங்கள்.
கிறிஸ்துவின் சபையார் உங்களை வாழ்த்துகின்றனர்.
17 சகோதர சகோதரிகளே! பிரிவினைகளை உண்டாக்குகிற மக்களைப் பற்றி நீங்கள் மிகவும் எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அடுத்தவர்களின் விசுவாசத்தை குலைப்பவர்களிடமும் எச்சரிக்கையாய் தூர இருங்கள். நீங்கள் கற்ற உண்மையான போதனைக்கு அவர்கள் எதிரானவர்கள். 18 அத்தகையவர்கள் இயேசு கிறிஸ்துவுக்கு சேவை செய்ய விரும்புவதில்லை. அவர்கள் தங்களைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே விரும்புகிறார்கள். அவர்கள் தங்கள் நாகரிகமான பேச்சுக்களாலும், இச்சகத்தாலும் நயவஞ்சகமாக சாதாரண அப்பாவி மக்களை தவறான வழியில் நடத்தி விடுகின்றனர். 19 உங்களது கீழ்ப்படிதல் அனைத்து விசுவாசிகளாலும் அறியப்பட்டுள்ளது. ஆகவே உங்களைப் பற்றி நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் நன்மையைப் பற்றி அறிந்துகொள்வதில் ஞானிகளாக இருக்க வேண்டும். தீமையைப் பற்றி அறிந்துகொள்வதில் அப்பாவிகளாய் இருக்கவேண்டும்.
20 சமாதானத்தைத் தருகிற தேவன் விரைவில் சாத்தானைத் தோற்கடித்து அவனை உங்கள் கால்களில் கீழே நசுக்கிப் போடுவார்.
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்களோடு இருப்பதாக. ஆமென்.
21 என்னோடு ஊழியம் செய்கிற தீமோத்தேயு உங்களுக்கு வாழ்த்துதல் கூறுகிறான். லூகியும், யாசோன், சொசிபத்தர் போன்ற எனது உறவினர்களும் உங்களை வாழ்த்துகிறார்கள்.
22 பவுல் சொல்லுகிற அக்காரியங்களை எழுதுகிற தெர்தியு ஆகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகிறேன்.
23 என்னையும், எல்லா சபைகளையும் கண்காணித்து வரும் காயுவும் உங்களை வாழ்த்துகிறான். நகரத்துப் பொருளாளரான எரஸ்துவும் சகோதரனான குவர்த்தும் உங்களை வாழ்த்துகின்றனர். 24 [a]
25 தேவனுக்கு மகிமை உண்டாவதாக. அவரே உங்களது விசுவாசத்தைப் பலப்படுத்துகிறார். நான் கற்றுத்தரும் நற்செய்தியின் மூலம் தேவன் உங்களைப் பலப்படுத்துகிறார். தேவனால் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமான உண்மையே கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி. இது தொடக்க கால முதல் மறைக்கப்பட்டிருந்தது. 26 ஆனால் இப்போது அந்த இரகசியம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி தீர்க்கதரிசிகளும் எழுதினர். இது தேவனுடைய கட்டளை. இது அனைவருக்கும் வெளிப்பட்டால்தான் அவர்கள் தேவனை நம்பி அவருக்குப் பணிவார்கள். தேவன் என்றென்றும் இருக்கிறார். 27 தாம் ஒருவரே ஞானம் உள்ளவராய் இருக்கிற தேவனுக்கு இயேசு கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.
துன்பங்களின் அர்த்தம்
3 நான் அதிகமான துன்பங்களைப் பார்த்திருக்கிற மனிதன்.
கர்த்தர் கம்பால் எங்களை அடித்தார்.
நான் இது நிகழ்ந்ததைப் பார்த்தேன்!
2 கர்த்தர் என்னை வெளிச்சத்தில் அல்ல
இருட்டில் வழிநடத்தி கொண்டுவந்தார்.
3 கர்த்தர் தனது கையை எனக்கு எதிராகத் திருப்பினார்.
அவர் நாள்முழுதும் இதனை மீண்டும் மீண்டும் செய்தார்.
4 அவர் எனது சதையையும் தோலையும் முற்றலாக்கினார்.
அவர் எனது எலும்புகளை உடைத்தார்.
5 கர்த்தர் எனக்கு எதிராகக் கசப்பையும் வருத்தத்தையும் ஏற்படுத்தினார்.
அவர் கசப்பையும் வருத்தத்தையும் என்னைச் சுற்றிலும் வரும்படி செய்தார்.
6 அவர் என்னை இருட்டில் இருக்கும்படிச் செய்தார்.
நீண்ட காலமாகச் செத்துக் கிடக்கிற சிலரைப் போல என்னை அவர் செய்தார்.
7 கர்த்தர் என்னை உள்ளே வைத்து பூட்டினார்.
என்னால் வெளியே வரமுடியவில்லை.
அவர் என்மீது கனமான சங்கிலிகளைப் போட்டார்.
8 நான் கதறினாலும் உதவி கேட்டாலும்
கர்த்தர் எனது ஜெபத்தைக் கேட்பதில்லை.
9 அவர் எனது பாதையைக் கற்களால் அடைத்துவிட்டார்.
அவர் எனது பாதையைக் கோணலாக்கினார்.
10 கர்த்தர் என்னைத் தாக்க வரும் கரடியாய் இருக்கிறார்.
அவர் மறைவிடத்திலுள்ள சிங்கம் போலவும் இருக்கிறார்.
11 கர்த்தர் என் பாதையின் மீது முட்களைப் பரப்பினார்.
அவர் என்னைத் துண்டு துண்டாகக் கிழித்துப்போட்டார்.
அவர் என்னை பாழாக்கினார்.
12 அவர் தனது வில்லை தயார் செய்தார்.
அவரது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
13 அவர் தனது அம்பை என்னுடைய
வயிற்றில் எய்தார்.
14 நான் எனது ஜனங்கள் அனைவருக்கும் ஒரு வேடிக்கையாகிப் போயிருக்கிறேன்.
நாள் முழுவதும் அவர்கள் என்னைப்பற்றி பாடல் பாடி என்னைக் கேலிச் செய்கிறார்கள்.
15 கர்த்தர் இந்த விஷத்தை (தண்டனையை) நான் குடிக்கும்படி கொடுத்திருக்கிறார்.
அவர் என்னை இந்தக் கசப்பான பானத்தால் நிரப்பினார்.
16 கர்த்தர் பாறை நிலத்தில் என் பற்களைத் தள்ளினார்.
அவர் என்னைத் தூசியில் தள்ளினார்.
17 நான் மீண்டும் அமைதி பெறப்போவதில்லை என்று நினைத்தேன்.
நான் நல்லவற்றைப் பற்றி மறந்துவிட்டேன்.
18 நான் எனக்குள், “கர்த்தர் எனக்கு உதவி செய்வார் என்ற நம்பிக்கையை
நான் இழந்து விட்டேன்” என்றேன்.
19 கர்த்தாவே, நான் மிகவும் வருத்தமாய் இருக்கிறேன் என்னை நினைத்தருளும்.
எனக்கு வீடு இல்லை.
நீர் எனக்குக் கொடுத்த கசப்பான விஷத்தை (தண்டனையை) நினைத்துப்பாரும்.
20 நான் எனது எல்லாத் துன்பங்களையும் நினைத்துப் பார்க்கிறேன்.
நான் மிகவும் துக்கமாய் இருக்கிறேன்.
21 ஆனால் பிறகு, ஏதோ சிலதைப் பற்றி நினைக்கிறேன்.
பின்னர் நான் நம்பிக்கை பெறுகிறேன்.
நான் என்ன நினைக்கிறேன் என்பது இதுதான்:
22 கர்த்தருடைய அன்பு மற்றும் கருணைக்கு முடிவில்லை.
கர்த்தருடைய இரக்கம் எப்பொழுதும் முடிவதில்லை.
23 ஒவ்வொரு காலையிலும் அவர் அதை புதிய வழிகளில் காண்பிக்கிறார்!
கர்த்தாவே, உமது உண்மையும், பற்றுதலும் மிகப் பெரியது!
24 நான் எனக்குள், “கர்த்தரே எனது தேவனாயிருக்கிறார்,
ஆகவே நான் அவரை நம்புவேன்” என்கிறேன்.
25 கர்த்தர் தனக்காகத் காத்திருக்கும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
கர்த்தர் அவரைத் தேடும் ஜனங்களுக்கு நல்லவராய் இருக்கிறார்.
26 ஒருவன் தன்னை இரட்சித்துக்கொள்ள
கர்த்தருக்காக அமைதியாகக் காத்திருப்பது நல்லது.
27 ஒருவன் கர்த்தருடைய நுகத்தை அணிந்துகொள்ளுவது நல்லது.
ஒருவன், தன் இளமை காலத்திலிருந்தே அந்த நுகத்தடியைச் சுமப்பது நல்லது.
28 கர்த்தர் நுகத்தை அவன் மீது வைக்கும்போது,
அந்த மனிதன் தனியாகவும் அமைதியாகவும் இருப்பான்.
29 அம்மனிதன் கர்த்தருக்கு முன் தன் முகம் தரையில் படும்படி குப்புற விழுந்து வணங்க வேண்டும்.
அதில் இன்னும் நம்பிக்கை இருக்கலாம்.
30 அம்மனிதன் தன் ஒரு கன்னத்தில் அடிக்கிறவனுக்கு மறு கன்னத்தைத் திருப்பவேண்டும்.
அம்மனிதன் ஜனங்கள் தன்னை நிந்திக்கும்படி அனுமதிக்கவேண்டும்.
31 கர்த்தர் என்றென்றும் ஜனங்களை புறக்கணிக்கமாட்டார் என்பதை
அம்மனிதன் நினைவில்கொள்ளவேண்டும்.
32 கர்த்தர் தண்டிக்கும்போது
அவனுக்கும் இரக்கத்தையும் வெளிபடுத்துகிறார்.
அவரது பேரன்பாலும் கருணையாலும் அன்பாலும்
அவனுக்கு இரக்கம் வெளிப்படுகிறது.
33 கர்த்தர் ஜனங்களைத் தண்டிக்க விரும்புவதில்லை.
அவர் ஜனங்கள் மகிழ்ச்சியற்று இருப்பதை விரும்புவதில்லை.
34 கர்த்தர் இவற்றை விரும்புவதில்லை.
யாரோ ஒருவன் பூமியிலுள்ள அனைத்து சிறைக் கைதிகளையும் தன் காலுக்கடியில் நசுக்குவதை அவர் விரும்புவதில்லை.
35 யாரோ ஒருவன் இன்னொருவனுக்கு அநியாயமானவனாக இருப்பதை அவர் விரும்புவதில்லை.
ஆனால் சில ஜனங்கள் உன்னதமான தேவனுக்கு முன்பாக அத்தீயவற்றைச் செய்கிறார்கள்.
36 கர்த்தர், ஒருவன் இன்னொருவனை ஏமாற்றுவதை விரும்புவதில்லை.
கர்த்தர் இத்தகைய எவற்றையுமே விரும்புவதில்லை.
37 ஏதாவது நிகழவேண்டும் என்று கர்த்தர் கட்டளையிட்டால் எவராலும் சொல்லவும் முடியாது,
நிகழச் செய்யவும் முடியாது.
38 உன்னதமான தேவனே
நல்லதும் தீயதும் நிகழும்படி கட்டளையிடுகிறார்.
39 ஒருவனது பாவங்களுக்காகக் கர்த்தர் தண்டிக்கும்போது
உயிரோடுள்ள எவனும் புகார் கூற முடியாது.
40 நாம் நம்முடைய செயல்களைச் சோதித்து ஆராய்வோம்.
பிறகு கர்த்தரிடம் திரும்புவோம்.
41 பரலோகத்தின் தேவனிடம்
நமது கைகளோடு இதயத்தையும் ஏறெடுப்போம்.
42 நாம் அவரிடம், “நாங்கள் பாவம் செய்தோம், பிடிவாதமாயிருந்தோம்.
இதனால் எங்களை நீர் மன்னிக்காமல் இருந்தீர்.
43 நீர் கோபத்தால் மூடப்பட்டு
எங்களைத் துரத்தினீர்.
நீர் எங்களை இரக்கமில்லாமல் கொன்றீர்!
44 ஜெபம் எதுவும் வந்து சேராதபடி
நீர் உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
45 மற்ற நாட்டு ஜனங்களுக்கிடையே எங்களை குப்பையாகவும்
அருவருக்கத்தக்கவர்களாகவும் ஆக்கினீர்.
46 எங்களது பகைவர்கள் எல்லாம்
எங்களுடன் கோபத்தோடு பேசுகிறார்கள்.
47 நாங்கள் பயந்திருக்கிறோம்.
நாங்கள் குழியில் விழுந்திருக்கிறோம்.
நாங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.
நாங்கள் உடைந்திருக்கிறோம்!” என்கிறேன்.
48 எனது கண்களில் கண்ணீர் ஓடை பாய்கின்றது!
எனது ஜனங்களின் அழிவினால் நான் அழுகிறேன்.
49 எனது கண்களில் கண்ணீர் நிறுத்தப்படாமல் பாய்ந்துக்கொண்டிருக்கின்றன!
நான் அழுதுகொண்டேயிருக்கிறேன்!
50 கர்த்தாவே, நீர் என்னைக் கீழே பார்க்கிறவரை,
நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
நீர் பரலோகத்திலிருந்து பார்க்கிறவரை
நான் தொடர்ந்து அழுதுகொண்டிருப்பேன்!
51 எனது நகரத்தில் பெண்களுக்கு என்ன ஏற்பட்டது என்று பார்க்கும்போது
என் கண்கள் என்னைத் துக்கமுறச் செய்தன.
52 அந்த ஜனங்கள் காரணம் இல்லாமலேயே எனக்குப் பகைவர்கள் ஆனார்கள்.
ஆனால் அவர்கள் என்னைப் பறவையைப்போன்று வேட்டையாடினார்கள்.
53 நான் உயிரோடு இருக்கும்போதே என்னைப் பள்ளத்தில் போட்டார்கள்.
அவர்கள் என்மீது கல்லையும் எறிந்தார்கள்.
54 என் தலைக்கு மேலே தண்ணீர் வந்தது.
“நான் முடிந்து போனேன்” என்று எனக்குள் சொன்னேன்.
55 கர்த்தாவே, நான் உமது நாமத்தை அழைத்தேன்.
நான் பள்ளத்திற்குள்ளிருந்து உமது நாமத்தைச் சொல்லி அழைத்தேன்.
56 நீர் எனது சத்தத்தைக் கேட்டீர்.
நீர் உமது காதுகளை மூடவில்லை.
நீர் என்னை மீட்பதற்கு மறுக்கவில்லை.
57 நான் உம்மை அழைத்த நாளன்று நீர் என்னிடம் வந்தீர்.
“பயப்படாதே” என்று நீர் என்னிடம் சொன்னீர்.
58 கர்த்தாவே, நீர் என்னைக் காப்பாற்றினீர்.
நீர் எனது உயிரை மீண்டும் எனக்காக மீட்டுக் கொண்டு வந்தீர்.
59 கர்த்தாவே, நீர் எனது துன்பங்களைப் பார்த்தீர்.
இப்பொழுது எனக்காக எனது வழக்கை நியாயந்தீரும்.
60 எனது பகைவர்கள் எவ்வாறு
என்னைக் காயப்படுத்தியிருக்கிறார்கள் என்பதைப் பார்த்திருக்கிறீர்.
அவர்கள் எனக்கு எதிராகச் செய்த
அனைத்து தீயத் திட்டங்களையெல்லாம் நீர் பார்த்திருக்கிறீர்.
61 கர்த்தாவே, அவர்கள் என்னை நிந்தித்ததைக் கேட்டீர்.
அவர்கள் எனக்கு எதிராகச் செய்த அனைத்து தீயத் திட்டங்களைப்பற்றி கேள்விப்பட்டீர்.
62 எல்லா நேரத்திலும்
எனது பகைவர்களின் வார்த்தைகளும் எண்ணங்களும் எனக்கு எதிராக இருக்கின்றன.
63 கர்த்தாவே, அவர்கள் உட்காரும்போதும், எழுந்திருக்கும் போதும்,
என்னை எவ்வாறு பரிகாசம் செய்கிறார்கள் என்று பாரும்!
64 கர்த்தாவே, அவர்கள் கைகள் செய்ததிற்கு ஏற்ற தண்டனையை அவர்களுக்கு கொடும்!
அவர்கள் செய்திருப்பதை அவர்களுக்குத் திருப்பிக்கொடும்!
65 அவர்களுக்கு கடினமான இதயத்தைக் கொடும்!
பிறகு, அவர்கள் மீது உமது சாபத்தைக் கொடும்!
66 அவர்களைக் கோபத்தோடு துரத்தும்! அழியும்!
கர்த்தாவே, வானத்தின் கீழே அவர்களை அழித்துவிடும்!
தாவீதின் வேஷத்தைக் கண்டு அபிமெலேக்கு அவனைத் துரத்தியபோது தாவீது பாடியது. இவ்வாறு தாவீது அவனை விட்டுப் பிரிந்தான்.
34 நான் எந்த காலத்திலும் கர்த்தரை ஸ்தோத்தரிப்பேன்.
என் உதடுகள் எப்போதும் அவரைத் துதிக்கும்.
2 தாழ்மையான ஜனங்களே, செவிக்கொடுத்து மகிழுங்கள்.
என் ஆத்துமா கர்த்தரைக் குறித்துப் பெருமைகொள்ளும்.
3 தேவனுடைய மேன்மையை எனக்குக் கூறுங்கள்.
அவரது நாமத்தை என்னோடு சேர்ந்து துதியுங்கள்.
4 உதவிவேண்டி தேவனிடம் போனேன்.
அவர் கேட்டார், நான் அஞ்சிய எல்லாக் காரியங்களிலிருந்தும் அவர் என்னை மீட்டார்.
5 உதவிக்காக தேவனை நாடுங்கள்.
அவர் உங்களை ஏற்றுக்கொள்ளுவார். வெட்க மடையாதீர்கள்.
6 இந்த ஏழை உதவிக்காக கர்த்தரைக் கூப்பிட்டான்.
கர்த்தர் எனக்குச் செவிகொடுத்தார்.
என் தொல்லைகளிலிருந்து என்னை மீட்டார்.
7 கர்த்தரை நம்புவோரைச் சுற்றிலும் கர்த்தருடைய தூதன் ஒரு பாளையமிடுகிறான்.
கர்த்தருடைய தூதன் அவர்களைக் காத்து அவர்களுடைய துன்பங்களிலிருந்து விடுதலை அளிக்கிறான்.
8 கர்த்தரை நல்லவர் என்று ருசித்து அறியுங்கள்.
கர்த்தரைச் சார்ந்து வாழும் மனிதன் உண்மையாகவே சந்தோஷமடைவான்.
9 கர்த்தருடைய பரிசுத்த ஜனங்கள் அவரைத் தொழுதுகொள்ளட்டும்.
கர்த்தரைப் பின்பற்றுவோருக்கு வேறெந்த அடைக்கலமும் தேவையில்லை.
10 வல்லமையுள்ள ஜனங்கள் சோர்ந்து பசியடைவார்கள்.
ஆனால் தேவனிடம் உதவி வேண்டிச் செல்வோர் நல்லவற்றையெல்லாம் அடைவார்கள்.
11 பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்.
கர்த்தரை எப்படி மதிக்கவேண்டுமென்று உங்களுக்குப் போதிப்பேன்.
12 தன் வாழ்க்கையை நேசித்து, நீண்ட ஆயுளை விரும்பும்,
13 மனிதன் தீயவற்றைப் பேசக்கூடாது.
அம்மனிதன் பொய் பேசக்கூடாது.
14 தீமை செய்வதை அவன் விட்டுவிட வேண்டும்.
நல்லவற்றைச் செய். சமாதானத்திற்காகப் பாடுபடு.
அதை அடையும்வரை அதற்கென முயற்சி செய்.
15 நல்லோரை கர்த்தர் பாதுகாக்கிறார்.
அவர்கள் ஜெபங்களை அவர் கேட்கிறார்.
16 கர்த்தர் தீயோருக்கு எதிரானவராயிருந்து
அவர்களை முற்றிலும் அழிக்கிறார்.
17 கர்த்தரிடம் ஜெபியுங்கள்.
அவர் உங்கள் விண்ணப்பங்களைக் கேட்பார்.
உங்கள் எல்லாத் தொல்லைகளிலிருந்தும் உங்களைக் காப்பார்.
18 சிலருக்குத் தொல்லைகள் மிகுதியாகும்பொழுது அவர்கள் பெருமையை விட்டொழிப்பர்.
கர்த்தர் அவர்களருகே இருந்து தாழ்மையான அந்த ஜனங்களைக் காக்கிறார்.
19 நல்லோருக்குத் தொல்லைகள் பல நேரிட்டாலும்
அவர்கள் தொல்லைகளிலிருந்து கர்த்தர் அவர்களை மீட்பார்.
20 அவர்கள் எலும்புகளில் ஒன்றும் முறிந்து போகாதபடி
கர்த்தர் அவற்றைப் பாதுகாப்பார்.
21 தீயோரைத் தொல்லைகள் கொல்லும்.
நல்லோரின் பகைவர்கள் அழிக்கப்படுவார்கள்.
22 தமது ஊழியர்களின் ஆத்துமாக்களை கர்த்தர் மீட்கிறார்.
அவரைச் சார்ந்திருக்கும் ஜனங்களை அழியவிடமாட்டார்.
2008 by World Bible Translation Center