M’Cheyne Bible Reading Plan
சவுல் அமலேக்கியரை அழித்துப்போடுகிறான்
15 ஒரு நாள் சாமுவேல் சவுலிடம், “உன்னை அபிஷேகித்து அவருடைய ஜனங்கள் இஸ்ரவேலருக்கு அரசனாக்கும்படி கர்த்தர் என்னை அனுப்பினார். இப்போது கர்த்தருடைய செய்தியைக் கேள். 2 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், ‘இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வரும்போது கானானுக்குப் போகாமல் அமலேக்கியர்கள் தடுத்தனர். அவர்கள் செய்தவற்றை நான் பார்த்தேன். 3 இப்போது அவர்களோடு போரிடு, அவர்களையும் அவர்கள் உடமையையும் முழுவதுமாக அழி, எதையும் உயிரோடு விடாதே. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், கைக்குழந்தைகள், பசுக்கள், ஆடுகள், ஒட்டகங்கள், கழுதைகள் எதையும் விடாதே என்கிறார்’” என்றான்.
4 சவுல் தன் படையை தெலாயிமில் கூட்டினான். 2,00,000 காலாட்படையும் யூதாவிலுள்ள 10,000 சேனையாட்களும் இருந்தனர். 5 பிறகு சவுல் அமலேக்கு நகருக்குப் போய் பள்ளத்தாக்கில் காத்திருந்தான். 6 அங்கு கேனியரிடம், “அமலேக்கியரை விட்டுப் போங்கள், நான் உங்களை அழிக்கமாட்டேன். இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வெளியேறும்போது நீங்கள் கருணை காட்டினீர்கள்” என்றான். எனவே கேனியர் அமலேக்கியரை விட்டு வெளியேறினார்கள்.
7 சவுல் அமலேக்கியரைத் தோற்கடித்தான். அவர்களை, ஆவிலாவில் இருந்து சூர் வரை துரத்தியடித்தான். 8 ஆகாக் அமலேக்கியரின் அரசன். சவுல், அவனை உயிருடன் பிடித்தான். மற்றவர்களைக் கொன்றான். 9 எல்லாவற்றையும் அழிக்க சவுலும் வீரர்களும் தயங்கினார்கள். ஆகாக் என்பவனை உயிருடன்விட்டனர். மேலும் கொழுத்த பசுக்களையும் நல்ல ஆடுகளையும் சிறந்த பொருட்களையும் கூட அழிக்காமல் விட்டுவிட்டனர். பயனுள்ள எல்லாவற்றையும் வைத்துக் கொண்டனர். அவற்றை அழிக்க அவர்கள் விரும்பவில்லை, பயனற்றவற்றையே அவர்கள் அழித்தார்கள்.
சவுலின் பாவத்தைப்பற்றி சாமுவேல் சொன்னது
10 பிறகு சாமுவேல், கர்த்தரிடமிருந்து ஒரு செய்தியைப் பெற்றான். 11 அதற்கு கர்த்தர், “சவுல் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டான், அவனை அரசனாக்கியதற்காக வருந்துகிறேன். நான் சொல்வதை அவன் செய்வதில்லை” என்றார். சாமுவேலும் கோபங்கொண்டு இரவு முழுவதும் அழுது கர்த்தரை நினைத்து ஜெபம் செய்தான்.
12 சாமுவேல் அடுத்த நாள் அதிகாலையில் எழுந்து சவுலை சந்திக்க சென்றான். ஆனால் ஜனங்கள் அவனிடம், “கர்மேல் என்ற பேருள்ள யூதேயாவின் நகருக்கு சவுல் போயிருக்கிறான். அங்கே தன்னை பெருமைப்படுத்தும் நினைவு கல்லை எழுப்புகிறான். அவன் பல இடங்களை சுற்றிவிட்டு கில்காலுக்கு வருவான்” என்றனர்.
எனவே சாமுவேல் அவனிருக்கும் இடத்துக்கே சென்று சவுலைத் தேடிப் பிடித்தான். சவுல் அப்போதுதான் கர்த்தருக்கு அமலேக்கியரிடம் இருந்து எடுத்த முதல் பாகங்களை தகனபலி செலுத்திக்கொண்டிருந்தான். 13 சவுல் சாமுவேலை வரவேற்றான், “கர்த்தர் உம்மை ஆசீர்வதிக்கிறார்! கர்த்தருடைய கட்டளைகளை நிறைவேற்றினேன்” என்றான்.
14 ஆனால் சாமுவேலோ, “அப்படியானால் நான் கேட்ட சத்தம் எத்தகையது? ஆடுகளின் சத்தத்தையும், மாடுகளின் சத்தத்தையும் நான் எதற்காகக் கேட்டேன்?” என்று கேட்டான்.
15 அதற்கு சவுல், “இவை அமலேக்கியரிடமிருந்து வீரர்கள் எடுத்தவை. உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும் பொருட்டு சிறந்த ஆடுகளையும், மாடுகளையும் பிடித்து வந்தனர். மற்றபடி நாங்கள் அனைத்தையும் அழித்துவிட்டோம்” என்றான்.
16 சாமுவேலோ, “நிறுத்து! நேற்று இரவு கர்த்தர் சொன்னதை நான் சொல்லட்டுமா” என சவுலிடம் கேட்டான்.
சவுல், “நல்லது சொல்லுங்கள்” என்றான்.
17 சாமுவேல், “முக்கியமானவன் இல்லை என்று கடந்த காலத்தில் நீ உன்னை நினைத்திருந்தாய். பின்பு இஸ்ரவேல் ஜனங்களின் தலைவன் ஆனாய். கர்த்தர் உன்னை அரசனாக்கினார். 18 கர்த்தருக்கு உன்னை சிறப்பான கடமை நிறைவேற்ற அனுப்பினார். கர்த்தர் சொன்னார், ‘போய் அமலேக்கியரை முழுமையாக அழி! அவர்கள் தீயவர்கள். எல்லோரும் கொல்லப்படும்வரை போரிடு!’ என்றார். 19 ஆனால் நீ கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை! ஏன்? தீயவை என்று கர்த்தர் எதை ஒதுக்கினாரோ அவற்றை சேகரித்துக்கொள்ள நீ விரும்பிவிட்டாய்!” என்றான்.
20 சவுலோ, “கர்த்தருக்கு நான் கீழ்ப்படிந்தேன். அவர் சொன்ன இடத்திற்குப் போனேன். அமலேக்கியரை எல்லாம் அழித்தேன்! அவர்களின் அரசன் ஆகாக்கை மட்டுமே கொண்டுவந்தேன். 21 வீரர்கள் நல்ல ஆட்டையும், மாட்டையும் கொண்டு வந்தனர். அவை கில்காலில் உள்ள உமது தேவனாகிய கர்த்தருக்கு பலியிட காத்திருக்கின்றன!” என்றான்.
22 ஆனால் சாமுவேல், “கர்த்தருக்குப் பிடித்தமானது எது? தகனபலியா? அன்பளிப்பா? அல்லது கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிவதா? கர்த்தருக்குக் கீழ்ப்படிவதுதான் அனைத்திலும் சிறந்தது. 23 கீழ்ப்படிய மறுப்பது தவறு, அது பில்லிசூனியத்திற்கு இணையான பெரும் பாவம். நீ கீழ்ப்படிய மறுப்பது பிடிவாதமாக பிற விக்கிரகங்களை தொழுதுகொள்வதற்கு சமம் ஆகும். நீ கர்த்தருக்குக் கீழ்ப்படிய மறுத்தாய். அதனால் கர்த்தர் உன்னை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
24 அதற்கு சவுல், “நான் பாவம் செய்துவிட்டேன். நான் கர்த்தருடைய கட்டளைக்குக் கீழ்ப்படியவில்லை. நீர் சொன்னதையும் செய்யவில்லை. ஜனங்களுக்கு பயந்தேன். அவர்கள் சொன்னபடி செய்தேன். 25 இப்போது கெஞ்சுகிறேன். என் பாவத்தை மன்னியுங்கள். என்னுடன் மீண்டும் வாருங்கள் எனவே கர்த்தரை நான் தொழுதுக்கொள்வேன்” என்றான்.
26 ஆனால் சாமுவேலோ, “நான் உன்னோடு வரமாட்டேன். நீ கர்த்தருடைய கட்டளையை ஒதுக்கிவிட்டாய். இப்போது கர்த்தர் உன்னை அரசனாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்” என்றான்.
27 சாமுவேல் திரும்பியபோது சவுல் அவரது சால்வை நுனியைப் பிடித்தான். அது கிழிந்தது. 28 சாமுவேலோ, “என் சால்வையைக் கிழித்துவிட்டாய். இதுபோல் இன்று கர்த்தர் உன்னிடமிருந்து இஸ்ரவேலின் இராஜ்யத்தைக் கிழிப்பார். உன் நண்பன் ஒருவனுக்கு கர்த்தர் அரசைக் கொடுப்பார். அவன் உன்னைவிட நல்லவனாக இருப்பான். 29 கர்த்தரே இஸ்ரவேலரின் தேவன். கர்த்தர் என்றென்றும் ஜீவிப்பவர். கர்த்தர் பொய் சொல்லவோ மனதை மாற்றவோமாட்டார். அவர் மனிதனைப் போன்று மனதை மாற்றுபவர் அல்ல” என்றான்.
30 சவுலோ, “சரி நான் பாவம் செய்தேன்! எனினும் என்னுடன் திரும்பி வாருங்கள். இஸ்ரவேலின் தலைவர்கள் மற்றும் ஜனங்களின் முன்னால் எனக்கு மரியாதைக் காட்டுங்கள். என்னுடன் திரும்பி வாருங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நான் தொழுதுகொள்வேன்” என்றான். 31 சாமுவேல் சவுலோடு திரும்பிப் போனான். சவுல் கர்த்தரை தொழுதுகொண்டான். 32 “அமலேக்கியரின் அரசனான ஆகாகை என்னிடம் கொண்டு வா” என்றான் சாமுவேல்.
ஆகாக் சாமுவேலிடம் வந்தான். அவன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தான். “நிச்சயம் நம்மை இவர் கொல்லமாட்டார்” என்று ஆகாக் எண்ணினான்.
33 ஆனால் சாமுவேலோ, “உனது வாள் குழந்தைகளை தாயிடமிருந்து எடுத்துக் கொண்டது. எனவே இப்போது உன் தாய் பிள்ளையற்றவள் ஆவாள்” எனக் கூறி அவன் ஆகாகை கில்காலில் கர்த்தருக்கு முன்பாக துண்டுகளாக வெட்டிப்போட்டான்.
34 பிறகு சாமுவேல் ராமாவிற்குத் திரும்பிப் போனான். சவுல் கிபியாவிலுள்ள தன் வீட்டிற்குப் போனான். 35 இதற்குப் பின் சாமுவேல் தன் வாழ்நாளில் சவுலைப் பார்க்கவில்லை. சவுலுக்காக வருத்தப்பட்டான். சவுலை அரசனாக்கியதற்கு கர்த்தரும் வருத்தப்பட்டார்.
அரசு அதிகாரத்திற்கு அடிபணியவும்
13 நீங்கள் அனைவரும் ஆட்சியாளர்களுக்கு அடிபணிய வேண்டும். ஆட்சி செய்யும் ஒவ்வொருவருக்கும் ஆட்சி புரியும் அதிகாரத்தை தேவன் கொடுத்திருக்கிறார். இப்பொழுது அதிகாரம் செய்கின்றவர்களுக்கு தேவனாலேயே அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 எனவே அரசு அதிகாரத்திற்கு எதிராக இருப்பவன் உண்மையில் தேவனுடைய கட்டளைக்கு எதிராக இருக்கிறான் என்றே பொருளாகும். அரசுக்கு எதிராகச் செயல்படுபவன் உண்மையில் தண்டிக்கப்படத்தக்கவன். 3 நன்மை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டிய தேவையில்லை. ஆனால் தீமை செய்கிறவர்கள் ஆள்வோர்களிடம் அச்சப்படவேண்டும். நீங்கள் ஆள்வோர்களைக் கண்டு அச்சம்கொள்வதில் இருந்து விடுதலை பெறவேண்டுமா? அப்படியானால் நன்மையை மட்டும் செய்யுங்கள். நீங்கள் நன்மையைச் செய்தால் அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.
4 ஒரு ஆள்வோன் என்பவன் உங்களுக்கு உதவி செய்வதற்காக தேவனால் நியமிக்கப்பட்டவன். ஆனால் நீங்கள் தப்பு செய்தால் அஞ்சவேண்டும். உங்களைத் தண்டிக்கிற அதிகாரம் அவர்களுக்குண்டு. அதை அவர்கள் பயன்படுத்துவார்கள். தேவனுடைய பணியாளாகவே அவர்கள் தண்டனை வழங்குவார்கள். 5 எனவே நீங்கள் அரசாங்கத்திற்கு அடிபணியுங்கள். நீங்கள் பணியாவிட்டால் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் செய்யத்தக்க நல்ல காரியமே அரசுக்குப் பணிவதுதான்.
6 இதற்காகத்தான் நீங்கள் வரிகளைச் செலுத்துகிறீர்கள். அவர்கள் தேவனுக்காகவும் உங்களுக்காகவும் உழைத்து வருகிறார்கள். தம் நேரமனைத்தையும் ஆட்சி செலுத்துவதிலேயே செலவழிக்கிறார்கள். 7 அனைவருக்கும் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யுங்கள். கொடுக்க வேண்டிய வரிகளையும் கொடுத்துவிடுங்கள். மரியாதை செலுத்த வேண்டியவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். எவருக்கு பயப்பட வேண்டுமோ அவர்களுக்கு பயப்படுங்கள்.
பிறரை நேசிப்பதே பிரமாணம்
8 எதற்காகவும் மற்றவர்களிடம் கடன் படாதிருங்கள். அன்புக்கு மட்டும் கடன்படுங்கள். மற்றவர்களிடம் அன்பு செலுத்துகிற ஒருவன் உண்மையில் சட்டமுழுவதிற்கும் அடிபணிந்தவனாய் இருப்பான். 9 இவற்றையெல்லாம் நான் எதற்காகக் கூறுகிறேன் என்றால் “விபசாரம் செய்யாதிருங்கள். கொலை செய்யாதிருங்கள். களவு செய்யாதிருங்கள். அடுத்தவர்க்கு உரிய பொருட்களை விரும்ப வேண்டாம்.” [a] சட்டவிதி இவற்றைச் சொல்கிறது. இவை எல்லா கட்டளைகளும், “தன்னை தானே நேசித்துக்கொள்வது போலவே ஒருவன் அடுத்தவனையும் நேசிக்க வேண்டும்” [b] என்று ஒரு விதியையே சொல்கின்றன. 10 அன்பானது மற்றவர்களுக்குத் தவறு செய்யாதது. எனவே, அன்பு சட்டவிதியின் நிறைவேறுதலாய் இருக்கிறது.
11 நாம் மிக முக்கியமான காலத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதால் இவற்றைக் கூறுகிறேன். நீங்கள் தூக்கத்திலிருந்து எழ வேண்டிய நேரம் இதுதான். நாம் முதலில் நம்பியதைக் காட்டிலும் இரட்சிப்பின் காலம் நெருங்கிவிட்டது. 12 “இரவு” ஏறக்குறைய முடிந்து போனது. “பகல்” அநேகமாக முளைக்கத் தொடங்கி விட்டது. எனவே இருட்டுக்குச் சொந்தமான செயல்களை விட்டுவிடுவோம். வெளிச்சத்தின் ஆயுதங்களை அணிந்துகொள்வோம். 13 பகலுக்குரியவர்கள் செய்யத்தக்க செயல்களைச் சீராய் நாம் செய்வோம். களியாட்டமும், குடிவெறியும், வேசித்தனமும், காமவிகாரமும், வாக்குவாதமும், பொறாமையும் உள்ளவர்களாக நாம் இருக்கக் கூடாது. 14 கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையே ஆடையாக அணிந்துகொள்ளுங்கள். உங்கள் பாவ ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வது பற்றியும் தீய காரியங்களை செய்வது பற்றியும் யோசிக்காதீர்கள்.
எருசலேமின் வீழ்ச்சி
52 சிதேக்கியா யூதாவின் அரசனானபோது அவனது வயது 21. சிதேக்கியா எருசலேமை பதினோரு ஆண்டுகள் ஆண்டான். அவனது தாயின் பெயர் அமுத்தாள். அவள் எரேமியாவின் மகள். அவனது குடும்பம் லீப்னா ஊரிலிருந்து வந்தது. 2 சிதேக்கியா பொல்லாப்புகளை யோயாக்கீம் போலச் செய்தான். சிதேக்கியா பொல்லாப்புகளைச் செய்வதை கர்த்தர் விரும்பவில்லை. 3 எருசலேமுக்கும் யூதாவுக்கும் பயங்கரமானவை நேர்ந்தது. ஏனென்றால் கர்த்தர் அவர்களுடன் கோபமாக இருந்தார். இறுதியாக, கர்த்தர் அவரது பார்வையிலிருந்து எருசலேம் மற்றும் யூதா ஜனங்களைத் தூர எறிந்தார்.
சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராகத் திரும்பினான். 4 எனவே, சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகப் படையெடுத்தான். நேபுகாத்நேச்சாரோடு அவனது முழுப்படையும் இருந்தது. பாபிலோனின் படையானது எருசலேமிற்கு வெளியே முகாமிட்டது. நகரச் சுவரைச் சுற்றிலும் அவர்கள் மதிற்சுவர்களைக் கட்டினார்கள். எனவே அவர்களால் சுவரைத் தாண்ட முடிந்தது. 5 எருசலேம் நகரமானது பாபிலோன் படையால் சிதேக்கியாவின் பதினோராவது ஆட்சியாண்டுவரை முற்றுகையிடப்பட்டது. 6 அந்த ஆண்டின் நாலாவது மாதத்தின் ஒன்பதாவது நாளில் நகரில் பசியானது மிக அதிகமாக இருந்தது. நகர ஜனங்கள் உண்பதற்கு உணவு எதுவும் மீதியில்லை. 7 அந்த நாளில் பாபிலோனின் படை எருசலேமிற்குள் நுழைந்தது. எருசலேமிலுள்ள வீரர்கள் வெளியே ஓடினார்கள். அவர்கள் இரவில் நகரைவிட்டு ஓடினார்கள். இரண்டு சுவர்களுக்கு இடையில் உள்ள வாசல் வழியாக அவர்கள் போனார்கள். அந்த வாசல் அரசனின் தோட்டத்திற்கு அருகில் இருந்தது. பாபிலோனின் படை நகரை முற்றுகையிட்டிருந்தபோதிலும் எருசலேம் வீரர்கள் மேலும் ஓடிக்கொண்டிருந்தனர். அவர்கள் வனாந்தரத்தின் வழியாக ஓடிப்போனார்கள்.
8 ஆனால் பாபிலோனியப்படை அரசன் சிதேக்கியாவைத் துரத்தியது. எரிகோ சமவெளியில் அவர்கள் அவனைப் பிடித்தனர். அவனோடு வந்த வீரர்கள் ஓடிப்போய்விட்டனர். 9 பாபிலோன் படை அரசன் சிதேக்கியாவைக் கைப்பற்றினர். அவர்கள் அவனை ரிப்லா நகரத்திற்குக் கொண்டுபோயினர். ரிப்லா, ஆமாத் நாட்டில் இருக்கிறது. ரிப்லாவில் பாபிலோன் அரசன் சிதேக்கியா பற்றிய தீர்ப்பை அறிவித்தான். 10 ரிப்லா நகரத்தில் சிதேக்கியாவின் மகன்களை பாபிலோன் அரசன் கொன்றான். தன் மகன்கள் கொல்லப்படுவதை கவனிக்கும்படி சிதேக்கியா வற்புறுத்தப்பட்டான். பாபிலோன் அரசன் யூதாவின் எல்லா அதிகாரிகளையும் கொன்றான். 11 பிறகு பாபிலோன் அரசன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கினான். அவன் அவனுக்கு வெண்கல சங்கிலிகளைப் போட்டான். பிறகு அவன் பாபிலோனுக்கு சிதேக்கியாவைக் கொண்டுப் போனான். பாபிலோனில் அவன் சிறையில் சிதேக்கியாவை அடைத்தான். சிதேக்கியா மரித்துப் போகும்வரை சிறையிலேயே இருந்தான்.
12 நேபுசராதான், பாபிலோன் அரசனது சிறப்பு காவல் படையின் தளபதி. அவன் எருசலேமிற்கு வந்தான். நேபுகாத்நேச்சாரின் 19வது ஆட்சியாண்டின் ஐந்தாவது மாதத்தின் 10வது நாளில் இது நடந்தது. பாபிலோனில் நேபுசராதான் ஒரு முக்கியமான தலைவன். 13 நேபுசராதான் கர்த்தருடைய ஆலயத்தை எரித்தான். அவன் எருசலேமில் அரசனது அரண்மனையையும் இன்னும் பல வீடுகளையும் எரித்தான். எருசலேமில் உள்ள ஒவ்வொரு முக்கிய கட்டிடத்தையும் எரித்தான். 14 பாபிலோனியப் படை முழுவதும் எருசலேமைச் சுற்றியுள்ள சுவர்களை உடைத்தது. அப்படை அரசரது சிறப்புப் படையின் தளபதியின்கீழ் இருந்தது. 15 நேபுசராதான், தளபதி, எருசலேமில் மீதியாக இருந்த ஜனங்களைக் கைதிகளாகச் சிறைபடுத்தினான். பாபிலோன் அரசனிடம் சரணடைந்தவர்களையும் அவன் அழைத்துக் கொண்டுப்போனான். எருசலேமில் மீதியாக இருந்த கைவினைக் கலைஞர்களையும் அவன் அழைத்துக்கொண்டுப்போனான். 16 ஆனால் நேபுசராதான் அந்நாட்டில் சில ஏழைகளை மட்டும் விட்டுவிட்டுப் போனான். திராட்சைத் தோட்டத்திலும் வயல்களிலும் வேலை செய்யுமாறு அவர்களை விட்டுவிட்டுப் போனான்.
17 பாபிலோனியப்படை ஆலயத்தில் உள்ள வெண்கலத்தூண்களை உடைத்தார்கள். கர்த்தருடைய ஆலயத்தில் உள்ள தாங்கிகளையும் வெண்கலத்தொட்டியையும் உடைத்தார்கள். அவர்கள் பாபிலோனுக்கு அவ்வெண்கலத்தைக் கொண்டுப் போனார்கள். 18 பாபிலோனியப்படை ஆலயத்திலிருந்து கீழ்க்கண்டவற்றைக் கொண்டுப்போனது. செப்புச் சட்டிகள், சாம்பல் எடுக்கும் கரண்டிகள், வெட்டுக்கத்திகள், கலங்கள், கலயங்கள்,ஆராதனைக்குரிய சகல வெண்கலப் பணிமுட்டுகள், 19 அரசனது சிறப்புக் காவல் படையின் தளபதி இவற்றையும் கொண்டுபோனான். கிண்ணங்கள், நெருப்புத்தட்டுகள், கலங்கள், சட்டிகள், விளக்குத் தண்டுகள், கலயங்கள், கரகங்கள், பான பலிகளின் காணிக்கை மற்றும் வெள்ளியாலும் பொன்னாலுமான எல்லாவற்றையும் அவன் எடுத்தான். 20 இரண்டு தூண்கள், கடல் தொட்டியும் அதனடியில் உள்ள பன்னிரெண்டு வெண்கல காளைகளும் நகரும் தாங்கிகளும் மிக கனமானவை. சாலொமோன் அரசன் கர்த்தருடைய ஆலயத்திற்காக செய்தான். எடை பார்க்க முடியாத அளவுள்ள வெண்கலத்தை இப்பொருட்கள் செய்ய பயன்படுத்தினான். 21 ஒவ்வொரு வெண்கலத் தூணும் 31 அடி உயரமுடையது. ஒவ்வொரு தூணும் 21 அடி சுற்றளவு உள்ளது. ஒவ்வொரு தூணும் உள்ளே வெற்றிடம் கொண்டது. ஒவ்வொரு தூணிண் சுவரும் 3 அங்குலம் உடையது. 22 முதல் தூணின் மேலிருந்த குமிழின் உயரம் 8 அடி உயரம் உடையது. அதைச்சுற்றிலும் வலைப் பின்னல்களாலும் மாதளம் பழங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அடுத்தத் தூணிலும் மாதளம்பழ அலங்காரம் உண்டு. அது முதல் தூணைப்போன்றிருந்து. 23 மொத்தம் 96 மாதுளம்பழங்கள் தூணின் பக்கங்களில் தொங்கின. ஆக மொத்தம் 100 மாதுளம்பழங்கள் வலைப் பின்னலில் தூண்களைச் சுற்றி இருந்தன.
24 அரசனின் சிறப்புக் காவல்படை தளபதி செராயா மற்றும் செப்பனியாவை கைதிகளாகச் சிறைப்பிடித்தான். செராயா தலைமை ஆசாரியன், செப்பனியா அடுத்த ஆசாரியன். மூன்று வாயில் காவலர்களும் சிறைப்பிடிக்கப்பட்டனர். 25 அரசனின் சிறப்புக் காவல் படைத் தளபதி சண்டையிடுவோரின் மேலதிகாரியைச் சிறைப்பிடித்தான். அவர் அரசனின் ஏழு ஆலோசகர்களையும் சிறைப்பிடித்தான். எருசலேமில் அவர்கள் அப்பொழுதும் இருந்தனர். படையில் சேர்க்கின்ற எழுத்தாளனையும் அவன் பிடித்தான். அவன் நகரில் இருந்த சாதாரண ஆட்கள் 60 பேரையும் பிடித்தான். 26-27 நேபுசராதான் தளபதி இந்த அதிகாரிகள் எல்லோரையும் பிடித்தான். அவன் அவர்களை பாபிலோன் அரசனிடம் கொண்டு வந்தான். பாபிலோன் அரசன் ரிப்லா நகரில் இருந்தான். ரிப்லா ஆமாத் நாட்டில் இருக்கிறது. அந்த ரிப்லா நகரில், அரசன் அதிகாரிகளையெல்லாம் கொல்லும்படி கட்டளையிட்டான்.
எனவே யூதா ஜனங்கள் தமது நாட்டிலிருந்து பிடித்துச்செல்லப்பட்டனர். 28 நேபுகாத்நேச்சார் எத்தனை ஜனங்களைக் கைது செய்தான் என்னும் பட்டியல் இது:
நேபுகாத்நேச்சாரின் ஏழாவது ஆட்சியாண்டில் யூதாவிலிருந்து 3,023 ஆண்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
29 நேபுகாத்நேச்சாரின் 18வது ஆட்சியாண்டில் 832 ஜனங்கள் கொண்டு செல்லப்பட்டனர்.
30 நேபுகாத்நேச்சாரின் 23வது ஆட்சியாண்டில் நேபுசராதான் 745 பேரைக் கைது செய்து கொண்டுப்போனான்.
நேபுசராதான் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
மொத்தம் 4,600 ஜனங்கள் சிறை செய்யப்பட்டனர்.
யோயாக்கீன் விடுதலை செய்யப்படுகிறான்
31 யோயாக்கீன் யூதாவின் அரசன். இவன் பாபிலோனில் 37 ஆண்டுகள் சிறையில் இருந்தான். பாபிலோனின் அரசனான ஏவில் மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமாயிருந்தான். அவ்வாண்டில் யோயாக்கீனை சிறையைவிட்டு விடுவித்தான். இதே ஆண்டில்தான் ஏவில்மெரொதாக் பாபிலோனின் அரசன் ஆனான். ஏவில்மெரொதாக் 12வது மாதத்தின் 25ஆம் நாளன்று யோயாக்கீனை சிறையிலிருந்து விடுவித்தான். 32 ஏவில்மெரொதாக் யோயாக்கீனுடன் இரக்கமான வழியில் பேசினான். பாபிலோனில் தன்னோடு இருந்த மற்ற அரசர்களுக்குரியதைவிட கௌரவமான இடத்தைக் கொடுத்தான். 33 எனவே யோயாக்கீன் தனது சிறை உடையை நீக்கினான். மீதியுள்ள வாழ்நாளில், அரசனின் மேசையில் ஒழுங்காகச் சாப்பிட்டான். 34 ஒவ்வொரு நாளும் பாபிலோன் அரசன் யோயாக்கீனுக்கு உதவித் தொகை கொடுத்தான். யோயாக்கீன் மரிக்கும்வரை இது தொடர்ந்தது.
இசைத்தலைவனுக்காக தாவீது பாடிய பாடல்
31 கர்த்தாவே, நான் உம்மை நம்பியிருக்கிறேன்.
என்னை ஏமாற்றாதேயும். என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்.
2 தேவனே, எனக்குச் செவிகொடும்.
விரைந்து வந்து என்னைக் காப்பாற்றும்.
எனது பாறையாய் இரும். எனக்குப் பாதுகாப்பான இடமாயிரும்.
எனக்குக் கோட்டையாயிரும். என்னைப் பாதுகாத்தருளும்.
3 தேவனே, நீரே என் பாறை.
எனவே, உமது நாமத்தின் நன்மையால் என்னை நடத்தி, வழி காட்டும்.
4 என் பகைவர்கள் எனக்கு முன்னே கண்ணியை வைத்தார்கள்.
அவர்கள் கண்ணிக்கு என்னைக் காப்பாற்றும். நீரே என் பாதுகாப்பிடம் ஆவீர்.
5 கர்த்தாவே, நான் நம்பவல்ல தேவன் நீரே.
என் உயிரை உமது கரங்களில் நான் வைத்தேன். என்னைக் காப்பாற்றும்!
6 பொய்த் தெய்வங்களைத் தொழுது கொள்ளும் ஜனங்களை நான் வெறுக்கிறேன்.
கர்த்தரை மட்டுமே நான் நம்புகிறேன்.
7 தேவனே, உமது தயவு எனக்கு மிகுந்த களிப்பூட்டுகிறது.
நீர் எனது தொல்லைகளைக் கண்டுள்ளீர்.
என் தொல்லைகளை நீர் அறிகிறீர்.
8 எனது பகைவர்கள் என்னை வெற்றிகொள்ள விடமாட்டீர்.
அவர்கள் கண்ணிகளிலிருந்து என்னை விடுவியும்.
9 கர்த்தாவே, எனக்குத் தொல்லைகள் பல உண்டு, எனவே என்னிடம் தயவாயிரும்.
என் மனத் துன்பத்தினால் என் கண்கள் நோகின்றன.
என் தொண்டையும் வயிறும் வலிக்கின்றன.
10 என் வாழ்க்கைத் துயரத்தில் முடிந்து கொண்டிருக்கிறது.
பெருமூச்சால் என் வயது கழிந்து போகிறது.
என் தொல்லைகள் என் வலிமையை அழிக்கின்றன.
என் ஆற்றல் என்னை விட்டு விலகிக் கொண்டிருக்கிறது.
11 என் பகைவர்கள் என்னை வெறுக்கிறார்கள்.
என் அக்கம் பக்கத்தாரும் என்னை வெறுக்கிறார்கள்.
என் உறவினர்கள் தெருவில் என்னைப் பார்க்கிறார்கள்.
அவர்கள் எனக்குப் பயந்து என்னை விட்டு விலகுகிறார்கள்.
12 காணாமற்போன கருவியைப் போலானேன்.
ஜனங்கள் என்னை முற்றிலும் மறந்தார்கள்.
13 ஜனங்கள் என்னைக்குறித்துப் பேசும் கொடிய காரியங்களை நான் கேட்டேன்.
அந்த ஜனங்கள் எனக்கு எதிராகத் திரும்பினார்கள்.
அவர்கள் என்னைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள்.
14 கர்த்தாவே, நான் உம்மை நம்புகிறேன்.
நீரே என் தேவன்.
15 என் உயிர் உமது கைகளில் உள்ளது.
என் பகைவரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
சில ஜனங்கள் என்னைத் துரத்துகிறார்கள்.
அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
16 உமது வேலையாளை வரவேற்று ஏற்றுக்கொள்ளும்.
என்னிடம் தயவாயிருந்து என்னைக் காப்பாற்றும்!
17 கர்த்தாவே, உம்மிடம் ஜெபித்தேன்.
எனவே நான் ஏமாந்து போகமாட்டேன்.
தீயோர் ஏமாந்து போவார்கள்.
அமைதியாக கல்லறைக்குச் செல்வார்கள்.
18 அத்தீயோர் நல்லோரைக் குறித்துத் தீமையும் பொய்யும் உரைப்பார்கள்.
அத்தீயோர் பெருமைக்காரர்.
ஆனால் அவர்களின் பொய் கூறும் உதடுகள் அமைதியாகிவிடும்.
19 தேவனே, உம்மைப் பின்பற்றுவோருக்காக பல அதிசயமான காரியங்களை நீர் மறைவாய் வைத்திருக்கிறீர்.
உம்மை நம்பும் ஜனங்களுக்கு எல்லோர் முன்பாகவும் நற்காரியங்களைச் செய்கிறீர்.
20 தீயோர் நல்லோரைத் தாக்க ஒருமித்துக் கூடுகிறார்கள்.
அத்தீயோர் சண்டையிட முயல்கிறார்கள்.
ஆனால் அந்நல்லோரை மறைத்து அவர்களைக் காப்பாற்றும்.
உமது அடைக்கலத்தில் வைத்து அவர்களைப் பாதுகாத்தருளும்.
21 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
நகரம் பகைவர்களால் சூழப்பட்டபோது அவர் தம் உண்மையான அன்பை அதிசயமாக எனக்கு வெளிப்படுத்தினார்.
22 நான் அஞ்சினேன், “தேவன் பார்க்கமுடியாத இடத்தில் நான் இருக்கிறேன்” என்றேன்.
ஆனால் தேவனே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
உதவிக்கான என் உரத்த ஜெபங்களை நீர் கேட்டீர்.
23 தேவனைப் பின்பற்றுவோரே, நீங்கள் கர்த்தரை நேசியுங்கள்.
தம்மிடம் விசுவாசமுள்ள ஜனங்களை கர்த்தர் காக்கிறார்.
ஆனால் தங்கள் வல்லமையைக் குறித்துப் பெருமை பாராட்டுவோரை கர்த்தர் தண்டிக்கிறார்.
அவர்களுக்கான தண்டனையை தேவன் அளிக்கிறார்.
24 கர்த்தருடைய உதவிக்காகக் காத்துக் கொண்டிருக்கிற ஜனங்களே,
வலிமையும் துணிவும் உடையோராயிருங்கள்!
2008 by World Bible Translation Center