Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 11

11 ஒரு மாதத்திற்குப்பின் நாகாஸ் தன் சேனையோடு யாபேஸ் கீலேயாத்தின் நகரை முற்றுகையிட்டான். யாபேஸ் ஜனங்கள், நாகாஸை நோக்கி, “நீங்கள் எங்களோடு ஒரு ஒப்பந்தத்தைச் செய்துக்கொண்டால் உங்களுக்குச் சேவை செய்வோம்” என்றனர்.

ஆனால் அம்மோனியனான நாகாஸ் “நான் ஒவ்வொரு மனிதனின் வலது கண்ணையும் பிடுங்கிய பிறகுதான் ஒப்பந்தத்தைச் செய்து கொள்வேன். அதுதான் எல்லா இஸ்ரவேலரையும் அவமானப்படுத்தும்!” என்றான்.

யாபேசின் தலைவர்கள் நாகாசிடம், “எங்களுக்கு 7 நாட்கள் அவகாசம் கொடுங்கள். அனைத்து இஸ்ரவேலருக்கும் தூது அனுப்புகிறோம். யாரும் உதவிக்கு வரவில்லை என்றால், உங்களிடம் வந்து சரணடைந்து விடுகிறோம்” என்று கூறினார்கள்.

சவுல் யாபேஸ் கீலேயாத்தைக் காப்பாற்றுகிறான்

சவுல் வசித்த கிபியாவுக்கு தூதுவர்கள் வந்தார்கள். அவர்கள் செய்தியை ஜனங்களிடம் சொன்னார்கள். ஜனங்கள் மிகவும் சத்தமாக அழுதார்கள். அச்சமயம் சவுல் தன் பசுக்களோடு வயல் வெளியில் இருந்தான். அவன் உள்ளே வந்தபோது அவர்களின் கூக்குரலைக் கேட்டான். அவன் அவர்களிடம், “ஏன் அழுகிறீர்கள்? உங்களுக்கு என்ன நடந்தது?” என்று கேட்டான்.

அதற்கு அவர்கள் யாபேஸில் இருந்து வந்த தூதுவர்கள் சொன்ன செய்தியைச் சொன்னார்கள். சவுல் அவர்கள் சொன்னதைக் கேட்டான். பின் தேவனுடைய ஆவியானவர் அவன் மீது மிகுந்த வல்லமையோடு இறங்கினார். அவன் சீறி எழுந்தான். அவன் இரண்டு பசுக்களைத் துண்டுத் துண்டாக வெட்டி அத்துண்டுகளைத் தூதுவர்களிடம் கொடுத்து அனுப்பினான். அவர்கள் அதனை இஸ்ரவேல் முழுவதும் எடுத்துச் செல்லுமாறு கூறினான். இஸ்ரவேல் ஜனங்களிடம், “சவுலையும் சாமுவேலையும் பின்பற்றி வாருங்கள். யாராவது இதைக் கேட்டு கூடி வந்து உதவாவிட்டால் அவர்களின் பசுவுக்கும் இப்படியே செய்யப்படும்!” எனச் சொல்லி அனுப்பினான்.

கர்த்தரிடமிருந்து பெரும் பயம் ஜனங்கள் மேல் வந்தது. அவர்கள் ஒன்று கூடினார்கள். சவுல் ஆண்களை பேசேக்கில் கூட்டினான். அவர்களில் இஸ்ரவேல் ஜனங்களிலிருந்து 3,00,000 பேரும், யூதாவின் ஜனங்களிலிருந்து 30,000 பேரும் கூடி இருந்தனர்.

சவுலும் அவனது படையும் யாபேசிலிருந்து வந்த தூதர்களிடம், “நாளை மதியத்தில் நீங்கள் காப்பற்றப்படுவீர்கள் என கீலேயாத்திலுள்ள யாபேசியர்களுக்குக் கூறுங்கள்” என்றான்.

தூதுவர்கள் சவுலின் செய்தியை யாபேசியர்களுக்குக் கூறினார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷப்பட்டனர். 10 பின் அவர்கள் அம்மோனியனான நாகாசிடம், “நாளை நாங்கள் உங்களிடம் வருவோம், அப்போது உங்கள் விருப்பம்போல் செய்யலாம்” என்றனர்.

11 மறுநாள் தனது வீரர்களை சவுல் மூன்று குழுக்களாக பிரித்தான். சூரிய உதயத்தின் போது, சவுலும், அவனது வீரர்களும் அம்மோனிய கூடாரங்களுக்குள் புகுந்து மதியத்திற்குள் அம்மோனியர்களைத் தோற்கடித்தனர். இரண்டு பேராகிலும் சேர்ந்து ஓடிப்போகாதபடி அவர்கள் பல திசைகளிலும் சிதறிப்போனார்கள்.

12 பின் ஜனங்கள் சாமுவேலிடம், “சவுலை அரசன் ஆக்கவேண்டாம் எனக் கூறியவர்கள் எங்கே? இழுத்து வாருங்கள், அவர்களைக் கொல்வோம்!” என்றனர்.

13 ஆனால் சவுலோ, “இல்லை இன்று யாரையும் கொல்லக்கூடாது! கர்த்தர் இன்று இஸ்ரவேலரைக் காப்பாற்றினார்!” என்றான்.

14 பின்பு சாமுவேல் ஜனங்களிடம், “வாருங்கள், கில்காலுக்குப் போவோம், அங்கே சவுலை மீண்டும் அரசனாக்குவோம்” என்றார்.

15 அனைவரும் கில்காலுக்குப் போனார்கள். அங்கே கர்த்தருடைய முன்னிலையில் ஜனங்கள் சவுலை அரசனாக்கினார்கள். கர்த்தருக்கு சமாதான பலிகளை கொடுத்தனர். சவுலும் இஸ்ரவேலரும் அதனை சிறப்பாக கொண்டாடினார்கள்.

ரோமர் 9

தேவனும் யூதமக்களும்

நான் கிறிஸ்துவுக்குள் இருக்கிறேன். நான் உண்மையைக் கூறுகிறேன். நான் பொய் சொல்வதில்லை. என் உணர்வுகள் பரிசுத்த ஆவியானவரால் ஆளப்படுகின்றன. அந்த உணர்வுகள் நான் பொய்யானவனில்லை என்று கூறுகின்றன. எனக்குப் பெருந்துக்கம் உண்டு. யூதமக்களுக்காக எப்பொழுதும் நான் மிகவும் கவலைப்படுகிறேன். அவர்கள் எனது சகோதர சகோதரிகளுமாகவும், மண்ணுலகக் குடும்பமுமாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ விரும்புகிறேன். அவர்களுக்கு உதவியாக இருக்குமானால் நான் பழிக்கப்படவும், கிறிஸ்துவிலிருந்து துண்டித்துக்கொள்ளவும் தயாராக இருக்கிறேன். அவர்கள் இஸ்ரவேல் மக்கள். யூதர்கள் தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிள்ளைகள். தேவனுடைய மகிமை அவர்களுக்கு உண்டு. தேவனுக்கும் அவர்களுக்கும் இடையில் உடன்படிக்கைகள் உண்டு. தேவன் அவர்களுக்கு மோசேயின் நியாயப்பிரமாணத்தையும், வழிபாட்டு முறைகளையும் கொடுத்தார். தனது வாக்குறுதிகளை யூதர்களுக்கு தேவன் கொடுத்திருக்கிறார். அவர்கள் நமது மூதாதையர்களின் வழி வந்தவர்கள். அவர்கள் வழியில் கிறிஸ்துவும் மண்ணுலகில் பிறந்தார். கிறிஸ்துவே எல்லாவற்றுக்கும் மேலான தேவன். அவரை எப்பொழுதும் துதியுங்கள். ஆமென்.

நான் யூதர்களுக்காக வருத்தப்படுகிறேன். அவர்களிடம் தேவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தவறிவிட்டார் என்று எண்ணுகிறதில்லை. ஆனால் இஸ்ரவேல் மக்களில் ஒரு சிலரே தேவனுடைய உண்மையான மக்களாய் இருக்கிறார்கள். ஆபிரகாமின் சில மரபுவழியினரே ஆபிரகாமின் உண்மையான மக்களாக இருக்கின்றனர். இதையே ஆபிரகாமிடம் தேவன் “ஈசாக்கு உனது சட்டபூர்வமான மகன்” [a] என்று கூறினார். ஆபிரகாமின் அனைத்து சந்ததியினருமே தேவனுடைய பிள்ளைகள் இல்லை என்பது தான் இதன் பொருள். ஆபிரகாமுக்கு அவர் வாக்குறுதி செய்தார். ஆனால் ஆபிரகாமின் உண்மையான பிள்ளைகள் எல்லாம் தேவனுக்கும் உண்மையான பிள்ளைகள் ஆகின்றனர். ஏனென்றால் “சரியான நேரத்தில் நான் திரும்ப வருவேன். சாராள் ஒரு மகனைப் பெற்றெடுப்பாள்” [b] என்பது தான் தேவனுடைய வாக்குறுதி.

10 அது மட்டுமல்ல, ரெபேக்காவும் பிள்ளைகளைப் பெற்றாள். ஒரே தந்தையை இப்பிள்ளைகள் கொண்டிருந்தார்கள். அவரே நமது தந்தையான ஈசாக்கு. 11-12 இரு மகன்களும் பிறப்பதற்கு முன்பே தேவன் ரெபேக்காவிடம், “மூத்த மகன் இளையவனுக்கு சேவை செய்வான்” [c] என்றார். அவர்கள் நல்லதோ தீயதோ எதுவாக இருந்தாலும் செய்வதற்கு முன்னரே தேவன் இவ்வாறு சொன்னார். இத்திட்டம் ஏற்கெனவே தேவனால் உருவாக்கப்பட்டது என்பதுதான் காரணம். தேவன் அவனைத் தேர்ந்தெடுக்க விரும்பினார். அதனால் தேர்ந்தெடுத்தார். அதுதான் காரணமே தவிர பிள்ளைகள் ஏதோ செய்ததற்காக அல்ல. 13 “நான் யாக்கோபை நேசித்தேன். ஏசாவை வெறுத்தேன்” [d] என்று எழுதப்பட்டிருக்கிறது.

14 எனவே இதைப்பற்றி நாம் என்ன சொல்ல முடியும்?தேவன் அநீதியாய் இருக்கிறார் என்று சொல்ல முடியுமா? முடியாதே. 15 “நான் யாரிடம் இரக்கம் காட்டவேண்டும் என்று விரும்புகிறேனோ அவனிடம் இரக்கம் காட்டுவேன்.” [e] என்று தேவன் மோசேயிடம் சொல்லி இருக்கிறார். 16 எனவே கருணை காட்டப்படத் தகுதியான ஒருவனை தேவன் தேர்ந்தெடுக்கிறார். அவரது தேர்ந்தெடுப்பு மனித விருப்பங்களுக்கும் முயற்சிகளுக்கும் அப்பாற்பட்டது. 17 “நான் உன்னை அரசனாக்கினேன். நீ எனக்காக இதைச் செய். எனது பலத்தை நான் உனக்குக் காட்டும்படியாக எனது பெயர் உலகமெங்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன்” [f] என தேவன் பார்வோனிடம் கூறியதாக எழுதப்பட்டிருக்கிறது. 18 எனவே, தேவன் இரக்கத்துக்குரியவர்களாகத் தேர்ந்தெடுத்தவர்களிடம் இரக்கமாய் இருக்கிறார். கடினமாக இருக்கத் தேர்ந்தெடுத்தவர்களிடத்தில் கடினமாக இருக்கிறார்.

19 “நமது செயல்களையெல்லாம் தேவனால் கட்டுப்படுத்த முடியுமானால் பிறகு ஏன் அவர் நமது பாவங்களுக்காக நம்மைக் குற்றம் சாட்டுகிறார்” என்று உங்களில் ஒருவர் கேட்கலாம். 20 அதைக் கேட்காதீர்கள். நீங்கள் மானிடர். மானிடர்களுக்கு தேவனைக் கேள்வி கேட்கும் அதிகாரம் இல்லை. ஒரு மண்ஜாடி தன்னைச் செய்தவனிடம் கேள்வி எதுவும் கேட்கக்கூடாது. “என்னை ஏன் இவ்வாறு செய்தாய்?” என்று மண்ஜாடி கேட்கலாமா? 21 ஜாடியைச் செய்கிறவன் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் செய்யலாம். அதே களிமண்ணால் அவன் வேறு எந்தப் பொருளை வேண்டுமானாலும் செய்திருக்கலாம். ஒரு பொருளை அவன் சிறப்பான பயனுக்காகவும், மற்றொன்றை அவன் அன்றாட பயனுக்காகவும் செய்யலாம்.

22 இதைப் போன்றுதான் தேவனும் செய்கின்றார். அவர் தமது கோபத்தை வெளிக்காட்டவும் தனது வல்லமையை வெளிப்படுத்தவும் விரும்பினார். தன் கோபத்தைத் தூண்டிய மக்களை அழிக்கத் தயாராய் இருந்த நிலையில் தேவன் அவர்களை மிகப் பொறுமையுடன் சகித்துக்கொண்டார். 23 தன் உயர்வும் சிறப்பும் வெளிப்படும் காலம் வரைக்கும் தேவன் பொறுமையோடு காத்திருந்தார். அவரது இரக்கத்தைப் பெறுவோரிடம் அவர் தனது மகிமையைக் கொடுத்தார். அவர் அதற்குரியவர்களாக அவர்களைத் தயார்படுத்தினார். 24 நாங்களே தேவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். நாங்களே தேவனால் அழைக்கப்பட்டவர்கள். அவர் எங்களை யூதர்களிடமிருந்தும் யூதர் அல்லாதவர்களிடமிருந்தும் தேர்ந்தெடுத்தார்.

25 “எனக்கு உரியவர்கள் அல்ல என்னும் மக்களையும்
    ‘என் மக்களே’ என்றும்,
நேசிக்கப்படாது இருந்தவர்களையும்,
    ‘என்னால் நேசிக்கப்படும் மக்கள்’
    என்று நான் அழைப்பேன். (A)

26 “நீங்கள் என்னுடைய மக்கள் அல்லவென்று
    அவர்களுக்குச் சொல்லப்பட்ட அதே இடத்திலே
    அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” (B)

என்று ஓசியாவின் நூலில் எழுதப்பட்டுள்ளது.

27 ஏசாயா இஸ்ரவேலைப்பற்றிக் கதறினார்.

“இஸ்ரவேல் மக்களின் எண்ணிக்கை கடற்கரையில் உள்ள மணலைப் போன்றிருக்கிறது.
    எனினும் சிலரே இரட்சிக்கப்படுவார்கள்.
28 ஆமாம். மண்ணில் வாழும் மக்களை தேவன் விரைவாக நியாயம்தீர்த்து முடிப்பார்.”.(C)

29 “கர்த்தருக்கு அனைத்து வல்லமையும் உண்டு.
    எங்களுக்காக அவர் சிலரைக் காப்பாற்றினார்.
அவர் அதனைச் செய்திருக்காவிட்டால்
    இப்போது நாங்கள் சோதோமைப் போலாகி கொமோராவுக்கு ஒத்தவராய் இருப்போம்” (D)

என்று ஏசாயா சொன்னார்.

30 இவற்றுக்கெல்லாம் என்ன பொருள்? யூதரல்லாதவர்கள் தேவன் முன் நீதிமான்களாக விளங்க முயற்சி செய்யவில்லை. எனினும் நீதிமான்களாக ஆனார்கள். காரணம் அவர்களது விசுவாசமே. 31 ஆனால் இஸ்ரவேல் மக்கள் சட்டவிதிகளின்படி வாழ்ந்து தேவனுக்கேற்ற நீதிமான்களாக விரும்பினார்கள். ஆனால் அவர்கள் வெல்லவில்லை. 32 காரணம் அவர்கள் அதனை தேவனில் நம்பிக்கை வைக்காமல், தங்கள் செயல்கள் மூலம் தேடினர். தடுக்கி விழத்தக்க கல்லிலேயே தடுக்கி விழுந்தார்கள். 33 அந்தக் கல்லைப் பற்றியும் எழுதப்பட்டிருக்கிறது.

“பாருங்கள்! நான் கல்லை சீயோனில் வைத்திருக்கிறேன்.
    அது மக்களைத் தடுக்கி விழச் செய்யும்.
    அந்தப் பாறை மக்களைத் தடுமாறி விழ அனுமதிக்கும்.
ஆனால் அக்கல்லிடம் நம்பிக்கைக்கொண்ட எவனும் அவமானம் அடைவதில்லை.” (E)

எரேமியா 48

மோவாப் பற்றிய செய்தி

48 இது மோவாபைப் பற்றிய செய்தி. இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்கிறது:

“நேபோ மலைக்கு கேடு வரும்.
    நேபோ மலை அழிக்கப்படும்.
கீரியாத் தாயீம் தாழ்மைப்படும்.
    இது கைப்பற்றப்படும்.
பலமான இடம் தாழ்மைப்படும்.
    இது நொறுக்கப்படும்.
மோவாப் மீண்டும் பாராட்டப்படாது.
    மோவாபின் தோல்விக்கு எஸ்போனின் ஆட்கள் திட்டமிடுவார்கள்.
அவர்கள், ‘வா, அந்த நாட்டிற்கு ஒரு முடிவு செய்வோம்’ என்று சொல்வார்கள்.
மத்மேனே, நீ மௌனமாக்கப்படுவாய்.
    பட்டயம் உன்னைத் துரத்தும்.
ஒரோனாயிமிலிருந்து வரும் கதறல்களைக் கேள்.
    அவை குழப்பமும் பேரழிவுமுள்ள கதறல்களாக இருக்கும்.
மோவாப் அழிக்கப்படும்.
    அவளது சிறு குழந்தை உதவிக்காக அழும்.
மோவாபின் ஜனங்கள் லூகித்துக்குச் செல்லும் பாதையில் செல்வார்கள்.
    அவர்கள் போகும் போது மிக மோசமாக அழுதுக்கொண்டிருப்பார்கள்.
ஒரோனாயிமுக்குச் செல்லும் இறக்கமான பாதையில்
    வேதனை மற்றும் துன்பத்தின் அழுகையொலி கேட்கலாம்.
ஓடுங்கள்! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்!
    வனாந்தரத்தில் காற்றில் அடித்துச்செல்லும் முட்செடியைப் போல ஓடுங்கள்!

“நீங்கள் உங்களால் செய்யப்பட்ட பொருளின் மீதும், உங்கள் செல்வத்தின்மீதும் நம்பிக்கை வைத்தீர்கள்.
    எனவே, நீங்கள் கைப்பற்றப்படுவீர்கள்.
கேமோஷ் தெய்வம் சிறையெடுக்கப்படும்.
    அதனோடு அதன் ஆசாரியர்களும் அதிகாரிகளும் கொண்டு செல்லப்படுவார்கள்.
ஒவ்வொரு பட்டணத்துக்கு எதிராகவும் அழிக்கிறவன் வருவான்.
    ஒரு பட்டணம் கூட தப்பிக்காது.
பள்ளத்தாக்கு அழிக்கப்படும்.
    மேட்டு நிலமும் அழிக்கப்படும்.
இது நிகழும் என்று கர்த்தர் சொன்னார்.
    எனவே, இது நடக்கும்.
மோவாபின் வயல்களின் மேல் உப்பைத் தூவுங்கள்.
    அந்நாடு காலியான வனாந்தரமாகும்.
மோவாபின் பட்டணங்கள் காலியாகும்.
    அவற்றில் ஜனங்கள் எவரும் வாழமாட்டார்கள்.
10 கர்த்தர் சொல்வதின்படி ஒருவன் செய்யாவிட்டால்,
    அவரது பட்டயத்தைப் பயன்படுத்தி அந்த ஜனங்களைக் கொல்லாவிட்டால் பிறகு அந்த மனிதனுக்கு தீயக் காரியங்கள் நிகழும்.

11 “மோவாப் என்றைக்கும் துன்பங்களை அறிந்ததில்லை.
    மோவாப் அடியில் தங்கும் படிவிட்ட திராட்சைரசத்தைப் போன்றது.
அது ஒரு பாத்திரத்தில் இருந்து இன்னொரு பாத்திரத்திற்கு ஊற்றப்படாமல் இருந்தது.
    அது சிறைபிடிக்கப்படாமல் இருந்தது.
அது முன்புப் போலவே சுவைக்கப்பட்டது.
    அதன் வாசனை மாறாமல் இருக்கிறது.”
12 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்,
“ஆனால் நான் விரைவில் உங்களை
    உங்கள் பாத்திரத்திலிருந்து ஊற்றி ஆட்களை அனுப்புவேன்.
பிறகு அவர்கள் அப்பாத்திரங்களைக் காலிச் செய்து
    உடைத்துப் போடுவார்கள்.”

13 பிறகு மோவாப் ஜனங்கள் தம் கேமோஷ் எனும் அந்நிய தெய்வத்துக்காக அவமானம் அடைவார்கள். இஸ்ரவேல் ஜனங்கள் அந்த அந்நிய தெய்வத்தை பெத்தேலில் நம்பினார்கள். அந்த அந்நிய தெய்வம் உதவி செய்யவில்லை என்று இஸ்ரவேல் ஜனங்கள் வெட்கப்பட்டனர். மோவாபும் அது போலாகும்.

14 “உங்களால், ‘நாங்கள் நல்ல வீரர்கள்.
    போரில் நாங்கள் தைரியமான ஆட்கள்’ என்று சொல்ல முடியாது.
15 பகைவர்கள் மோவாபைத் தாக்குவார்கள்.
    பகைவர்கள் அப்பட்டணங்களுக்குள் நுழைந்து அவற்றை அழிப்பார்கள்.
அவளது சிறந்த இளைஞர்கள் வெட்டப்படுவார்கள்”
இந்த வார்த்தை அரசரிடமிருந்து வந்தது.
    அந்த அரசனின் நாமம் சர்வ வல்லமையுள்ள கர்த்தர்.
16 “மோவாபின் முடிவு அருகில் உள்ளது.
    மோவாப் விரைவில் அழிக்கப்படும்.
17 மோவாபைச் சுற்றியுள்ள இடங்களில் வாழ்கின்ற ஜனங்களாகிய நீங்கள் அந்நாட்டிற்காக அழுவீர்கள்.
    மோவாப் எவ்வளவு புகழுடையதாக இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்.
    எனவே அதற்காக அழுங்கள்.
‘ஆள்வோனின் வல்லமை உடைக்கப்பட்டது.
    மோவாபின் வல்லமையும் மகிமையும் போய்விட்டன’ என்று சோகப் பாட்டைப் பாடுங்கள்.

18 “தீபோனில் வாழ்கின்ற ஜனங்களே,
    உங்களது மகிமையுள்ள இடத்தைவிட்டு கீழே இறங்கி வாருங்கள்.
புழுதித் தரையில் உட்காருங்கள்.
    ஏனென்றால், மோவாபை அழித்தவன் வந்துக் கொண்டிருக்கிறான்.
அவன் உங்களது பலமான நகரங்களை அழிப்பான்.”

19 கர்த்தர், “ஆரோவேரில் வாழ்கின்ற ஜனங்களே
    சாலையிலே நின்று கவனித்துக்கொண்டிருங்கள்.
மனிதன் வெளியே ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
    பெண்கள் ஓடிக்கொண்டிருப்பதைப் பாருங்கள்.
    என்ன நடந்தது என்று அவர்களைக் கேளுங்கள்.

20 “மோவாப் அழிக்கப்படும். வெட்கத்தால் நிறையும்.
    மோவாப் மேலும் மேலும் அழும்.
மோவாப் அழிக்கப்படுகிறது என்று ஆர்னோன்
    நதிக்கரையில் அறிவியுங்கள்.
21 மேட்டுச் சமவெளியில் வாழ்கின்ற ஜனங்கள் தண்டிக்கப்படுவார்கள்.
    ஓலோன், யாத்சா, மேப்காத் ஆகிய பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
22 தீபோன், நேபோ, பெத்லாத்தாயீம் ஆகிய
    பட்டணங்களுக்குத் தீர்ப்பு வந்திருக்கிறது.
23 கீரியாத்தாயீம், பேத்கமூல், பெத்மெயோன் ஆகிய
    பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
24 கீரியோத் மற்றும் போஸ்றா
    பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
மோவாபின் பக்கத்திலும் தூரத்திலுமுள்ள அனைத்து
    பட்டணங்களுக்கும் தீர்ப்பு வந்திருக்கிறது.
25 மோவாபின் பலம் வெட்டப்பட்டிருக்கிறது.
    மோவாபின் கை உடைந்திருக்கிறது” என்று சொன்னார்.

26 “மோவாப் தன்னை கர்த்தரை விட முக்கியமானவனாக நினைத்தான்.
எனவே அவன் குடிக்காரனைப்போன்று தடுமாறுகிறவரை தண்டியுங்கள்.
    மோவாப் விழுந்து தனது வாந்தியிலேயே உருளட்டும்.
ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்யட்டும்.

27 “மோவாபே, ஒரு திருடர் கூட்டத்தால் இஸ்ரவேல்
    சிறைபிடிக்கப்பட்டபோது நீ அதனால் சந்தோஷப்பட்டு இஸ்ரவேலைக் கேலிசெய்தாய்.
நீ இஸ்ரவேலைப்பற்றி ஒவ்வொரு முறையும் பேசும்போது,
    உன் தலையை உதறி இஸ்ரவேலைவிட நீ சிறந்தவன் என்பதுபோல நடித்தாய்.
28 மோவாபின் ஜனங்களே, உங்கள் பட்டணங்களை விட்டு விலகுங்கள்.
    பாறைகளுக்கு இடையில் வாழப் போங்கள்.
குகைப் பிளவுகளில் புறாக்கள் கூடு கட்டியிருப்பதுப் போல
    அமைத்துக்கொள்ளுங்கள்.”

29 “நாங்கள் மோவாபின் பெருமையைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.
    அவன் மிகப் பெருமிதம் உடையவனாக இருந்தான்.
அவன் தன்னை முக்கியமானவன் என்று நினைத்தான்.
    அவன் எப்பொழுதும் பெருமை பேசினான்.
    அவன் மிகமிகப் பெருமை உடையவன்.”

30 கர்த்தர் கூறுகிறார்: “எந்தக் காரணமுமில்லாமல் மோவாப் கோபங்கொண்டு வீம்பு பேசுகிறது என்று நான் அறிவேன்.
    ஆனால் அவன் வீண் பெருமைகள் பொய்யானவை.
    அவன் சொல்வதை அவனால் செய்ய முடியாது.
31 எனவே, நான் மோவாபிற்காக அழுகிறேன்.
    நான் மோவாபிலுள்ள ஒவ்வொருவருக்காகவும் அழுகிறேன்.
    நான் கீராரேஸ்ஸிலிருந்து வந்தவர்களுக்காகவும் அழுகிறேன்.
32 நான் யாசேருக்காக யாசேர் ஜனங்களோடு சேர்ந்து அழுகிறேன்.
    சிப்மாவூர் கடந்தகாலத்தில் உனது திராட்சைக் கொடிகள் கடலைக் கடந்து பரவின.
    அது வெகு தொலைவிலுள்ள நகரமான யாசேரை அடைந்தது.
ஆனால் அழிக்கிறவன் உனது பழங்களையும் திராட்சைகளையும் எடுத்திருக்கிறான்.
33 மகிழ்ச்சியும், சந்தோஷமும் மோவாபின் பெரிய திராட்சைத் தோட்டங்களிலிருந்து முடிவடைந்தன.
திராட்சை ஆலைகளில் இருந்து திராட்சைரசம் பாய்வதை நான் நிறுத்தினேன்.
அங்கே திராட்சை ரசத்துக்காகத் திராட்சை ஆலையை மிதிக்கிறவர்களின் பாடலும் ஆடலும் இல்லை.
மகிழ்ச்சியின் சத்தங்கள் இல்லை.”

34 கர்த்தர், “எஸ்போன், எலெயாலே நகரங்களில் உள்ள ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அழுகை வெகு தொலைவில் உள்ள யாகாஸ் வரைக்கும் கேட்கிறது. அவர்களின் அழுகை சோவாரிலிருந்து கேட்கிறது. அது வெகு தொலைவில் உள்ள ஒரோனாயிம் மற்றும் எக்லாத்செலிஷியாத் வரைக்கும் கேட்கிறது. நிம்ரீமின் தண்ணீரும் வற்றிப்போகும். 35 மோவாப் தேசத்து மேடைகளில் தகனபலிகள் இடுவதை நான் தடுப்பேன். அவர்கள் தம் தெய்வங்களுக்குப் பலிகள் கொடுப்பதை நான் நிறுத்துவேன்” என்று கூறினார்.

36 “நான் மோவாபிற்காக மிகவும் வருந்துகிறேன். மரணப் பாடலில் புல்லாங்குழலில் சோக ஒலியைப்போன்று எனது இதயம் அழுகின்றது. கீராரேஷ் ஜனங்களுக்காக நான் வருத்தப்படுகிறேன். அவர்களது பணமும் செல்வமும் எல்லாம் எடுக்கப்பட்டன. 37 ஒவ்வொருவரும் தலையை மழித்திருந்தார்கள். ஒவ்வொருவரின் தாடியும் வெட்டப்பட்டிருந்தது. ஒவ்வொருவரின் கைகளும் வெட்டப்பட்டு இரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் தங்கள் இடுப்பைச் சுற்றி சோகத்தின் ஆடையை அணிந்துக்கொண்டிருக்கின்றனர். 38 ஜனங்கள், மோவாபின் ஒவ்வொரு இடங்களிலும் அனைத்து வீடுகளின் மேலும் தெருச்சதுரங்களிலும் மரித்துப்போனவர்களுக்காக அழுதுக்கொண்டிருந்தனர். அங்கே துயரம் இருந்தது. ஏனென்றால், ஒரு காலியான ஜாடியை உடைப்பதுப்போன்று நான் மோவாபை உடைத்துள்ளேன்” என்று கர்த்தர் சொன்னார்.

39 “மோவாப் சிதறடிக்கப்படுகிறது. ஜனங்கள் அழுதுக்கொண்டிருக்கிறார்கள். மோவாப் சரணடைந்தது. இப்பொழுது மோவாப் அவமானப்படுகிறது. ஜனங்கள் மோவாபைக் கேலிசெய்கிறார்கள். ஆனால் நடந்தவைகள் அவர்களிடம் பயத்தை நிரப்பியுள்ளன.”

40 கர்த்தர் கூறுகிறார், “பார் ஒரு கழுகு வானத்திலிருந்து கீழே பறந்து வந்துக்கொண்டிருக்கிறது.
    அது மோவாபின் மேல் தன் இறக்கைகளை விரித்துக்கொண்டிருக்கிறது.
41 மோவாபின் பட்டணங்கள் கைப்பற்றப்படும்.
    பலமான மறைவிடங்கள் தோற்கடிக்கப்படும்.
அப்போது மோவாபின் வீரர்கள் ஒரு ஸ்திரீ பிள்ளையை பெறுகிற சமயத்தில் பயப்படுவதுபோல பயப்படுவார்கள்.
42 மோவாப் தேசம் அழிக்கப்படும்.
    ஏனென்றால், அவர்கள் தம்மை கர்த்தரைவிட முக்கியமானவர்களாக நினைத்தனர்.”

43 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்.
    “மோவாபின் ஜனங்களே, பயமும், ஆழமான குழிகளும், கண்ணிகளும் உனக்காகக் காத்திருக்கின்றன.
44 ஜனங்கள் பயந்து வெளியே ஓடுவார்கள்.
    அவர்கள் ஆழமான குழிகளில் விழுவார்கள்.
எவராவது ஆழமான குழிகளில் இருந்து
    வெளியே ஏறி வந்தால் அவன் கண்ணிகளில் சிக்குவான்.
நான் மோவாபிற்குத் தண்டனை ஆண்டைக் கொண்டு வருவேன்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.

45 “ஜனங்கள் வல்லமை மிக்க பகைவரிடமிருந்து ஓடினார்கள்.
    அவர்கள் பாதுகாப்புக்காக எஸ்போனுக்கு ஓடினார்கள்.
(ஆனால் அங்கே பாதுகாப்பு இல்லை.)
    எஸ்போனில் நெருப்பு பற்றியது.
சீகோனில் பட்டணத்திலும் நெருப்பு பிடித்தது.
    மோவாபின் தலைவர்களையும் அது அழிக்கிறது.
இது அந்த வீண்பெருமையுள்ள ஜனங்களையும் அழித்துக்கொண்டிருக்கிறது.
46 மோவாபே, இது உனக்குக் கேடாகும்.
    கேமோஷின் ஜனங்கள் அழிக்கப்படுகின்றனர்.
உனது மகன்களும் மகள்களும் கைதிகளாகச் சிறைபிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்கு கொண்டுப்போகப்படுகின்றனர்.
47 மோவாபின் ஜனங்கள் கைதிகளாகச் சிறைப் பிடிக்கப்பட்டு அவர்களை அடிமைகளாக அழைத்துச் செல்வார்கள். ஆனால் நாட்கள் வரும்போது நான் மோவாபின் ஜனங்களைத் திரும்பக் கொண்டு வருவேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

மோவாபின் தீர்ப்பு இத்துடன் முடிந்தது.

சங்கீதம் 25

தாவீதின் பாடல்

25 கர்த்தாவே, நான் என்னை உமக்கு அளிக்கிறேன்.
என் தேவனே, நான் உம்மை நம்புகிறேன். நான் வெட்கப்பட்டுப் போகமாட்டேன்.
    என் பகைவர்கள் என்னைக் கண்டு நகைப்பதில்லை.
ஒருவன் உம்மை நம்பினால் அவன் வெட்கப்பட்டுப் போகமாட்டான்.
    ஆனால் வஞ்சகர் ஏமாந்து போவார்கள்.
    அவர்களுக்கு எதுவும் கிடைப்பதில்லை.

கர்த்தாவே, உமது வழிகளைக் கற்றுக் கொள்ள உதவும்.
    உமது வழிகளை எனக்குப் போதியும்.
எனக்கு வழிகாட்டி உமது உண்மைகளைப் போதியும்.
    நீரே என் தேவன், என் மீட்பர்.
    அனுதினமும் நான் உம்மை நம்புகிறேன்.
கர்த்தாவே, என்னிடம் தயவாயிருக்க நினைவு கூரும்.
    எப்போதுமுள்ள உமது மென்மையான அன்பை எனக்குக் காட்டும்.
எனது பாவங்களையும் என் சிறுவயதின் தீய செயல்களையும் நினைவில் கொள்ளாதேயும்.
    கர்த்தாவே, உமது நல்ல நாமத்திற்கேற்ப, என்னை அன்பிலே நினைத்தருளும்.

கர்த்தர் உண்மையாகவே நல்லவர்.
    பாவிகளுக்கு வாழ்வதற்குரிய வழியை அவர் போதிக்கிறார்.
தாழ்மைப்பட்டவர்களுக்கு அவர் தம் வழியைப் போதிக்கிறார்.
    அவர் அந்த ஜனங்களை நியாயமாக நடத்துகிறார்.
10 அவரது உடன்படிக்கையையும், வாக்குறுதிகளையும் பின்பற்றும் ஜனங்களுக்குக்
    கர்த்தர் தயவுள்ளவரும், உண்மையுமானவர்.
11 கர்த்தாவே, நான் பிழையான காரியங்கள் பலவற்றைச் செய்தேன்.
    ஆனால் உம் நன்மை வெளிப்படும் பொருட்டு நான் செய்தவற்றையெல்லாம் மன்னித்தீர்.

12 கர்த்தரைப் பின்பற்றுவதை ஒருவன் தெரிந்துகொண்டால்
    அவன் வாழ்வதற்குரிய நல் வழியை தேவன் காட்டுவார்.
13 அம்மனிதன் நல்லவற்றை அனுபவிப்பான்.
    தேவன் வாக்களித்த தேசத்தை அவன் பிள்ளைகள் பெறுவார்கள்.
14 தன்னைப் பின்பற்றுவோருக்கு கர்த்தர் தன் இரகசியங்களைச் சொல்வார்.
    அவரைப் பின்பற்றுவோருக்குத் தமது உடன்படிக்கையைக் கற்பிக்கிறார்.
15 உதவிக்காக நான் எப்போதும் கர்த்தரை நோக்கியிருக்கிறேன்.
    தொல்லைகளிலிருந்து அவர் எப்போதும் முடிவு உண்டாக்குகிறார்.

16 கர்த்தாவே, நான் காயமுற்றுத் தனித்திருக்கிறேன்.
    என்னிடம் திரும்பி எனக்கு இரக்கத்தைக் காட்டும்.
17 என் தொல்லைகளிலிருந்து என்னை விடுவியும்.
    என் சிக்கல்களைத் தீர்க்க எனக்கு உதவும்.
18 கர்த்தாவே, என் தொல்லைகளையும், துன்பத்தையும் பாரும்.
    நான் செய்த பாவங்களையெல்லாம் மன்னியும்.
19 என் பகைவர்களையெல்லாம் பாரும்.
    அவர்கள் என்னைப் பகைத்துத் தாக்க விரும்புகிறார்கள்.
20 தேவனே, என்னைப் பாதுகாத்து மீட்டருளும்.
    நான் உம்மை நம்புகிறேன், என்னை ஏமாற்றமடையச் செய்யாதேயும்.
21 தேவனே, நீர் உண்மையாகவே நல்லவர்.
    நான் உம்மை நம்புவதால் என்னைப் பாதுகாத்தருளும்.
22 தேவனே, இஸ்ரவேல் ஜனங்களை
    அவர்களது பகைவர்கள் எல்லோரிடமிருந்தும் மீட்டுக்கொள்ளும்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center