M’Cheyne Bible Reading Plan
7 கீரியாத்யாரீம் ஜனங்கள் வந்து கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். அவர்கள் அதனை பாறைமேல் இருந்த அபினதாபின் வீட்டில் வைத்தனர். கர்த்தருடைய பெட்டியைக் காக்க அபினதாபின் மகன் எலெயாசாருக்கு அவர்கள் சிறப்பான சடங்குகளைச் செய்தார்கள். 2 பெட்டி கீரியாத்யாரீமிலேயே 20 ஆண்டுகள் இருந்தது.
இஸ்ரவேலர்களை கர்த்தர் காப்பாற்றுகிறார்
இஸ்ரவேல் ஜனங்கள் மீண்டும் கர்த்தரைப் பின்பற்ற தொடங்கினார்கள். 3 சாமுவேல் அவர்களிடம், “நீங்கள் உண்மையிலேயே கர்த்தரிடம் மனப்பூர்வமாக திரும்புவீர்கள் என்றால் உங்களிடம் உள்ள அந்நிய தெய்வங்களை தூர எறியுங்கள். அஸ்தரோத் விக்கிரகங்களைத் தூக்கி எறியுங்கள். நீங்கள் உங்களை முழுமையாக கர்த்தருக்கு ஒப்புக் கொடுங்கள். நீங்கள் கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்யவேண்டும்! பின்னரே கர்த்தர் உங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுவார்” என்றான்.
4 எனவே இஸ்ரவேலர் தமது பாகால் மற்றும் அஸ்தரோத் சிலைகளைத் தூர எறிந்தனர். கர்த்தருக்கு மட்டுமே சேவை செய்தனர்.
5 சாமுவேல் “இஸ்ரவேலர் அனைவரும் மிஸ்பாவில் கூடுங்கள். நான் உங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்வேன்” என்றான்.
6 இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடினார்கள். அவர்கள் தண்ணீரை கர்த்தருடைய சந்நிதியில் ஊற்றினார்கள். இவ்விதமாக உபவாசம் இருந்தனர். அன்றைய நாளில் எந்த வகை உணவும் உண்ணாமல், தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்தி அதை அறிக்கையிட்டனர். “நாங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தோம்” என்றனர், எனவே சாமுவேல் இஸ்ரவேலர்களின் நீதிபதியாக மிஸ்பாவில் இருந்தான்.
7 பெலிஸ்தர், இஸ்ரவேலர் மிஸ்பாவில் கூடுகின்றதைப்பற்றி அறிந்துகொண்டனர். பெலிஸ்தியர்களின் அரசர்கள் இஸ்ரவேலருக்கு எதிராகப் போர் செய்யச் சென்றனர். இதையறிந்து இஸ்ரவேலர் பயந்தார்கள். 8 அவர்கள் சாமுவேலிடம், “எங்களுக்காக நமது தேவனாகிய கர்த்தரிடம் ஜெபம் செய்வதை நிறுத்தவேண்டாம்! எங்களை பெலிஸ்தர்களிடமிருந்து காப்பாற்றுமாறு கர்த்தரிடம் கேளுங்கள்!” என்றனர்.
9 சாமுவேல் ஆட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டான். அதனை முழுமையாக கர்த்தருக்கு சர்வாங்க தகன பலியாகச் செலுத்தினான். சாமுவேல் இஸ்ரவேலர்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய்தான். கர்த்தர் அவனுடைய ஜெபத்திற்கு பதில் சொன்னார். 10 சாமுவேல் தகனபலியைச் செலுத்திக் கொண்டிருக்கும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களுடன் போரிட வந்தனர். ஆனால் கர்த்தர் பெலிஸ்தியர்கள் பக்கம் பெரிய இடிமுழங்குமாறு செய்தார். இது பெலிஸ்தரைக் அச்சப்படுத்தியது, மேலும் குழப்பியது. தலைவர்களால் அவர்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே இஸ்ரவேலர்கள் அவர்களைப் போரில் தோற்கடித்தனர். 11 இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களை பெத்கார் வரை துரத்தினார்கள். வழியெல்லாம் பெலிஸ்தர்களைக் கொன்றனர்.
இஸ்ரவேலுக்கு சமாதானம் திரும்புகிறது
12 இதற்குப்பின், சாமுவேல் ஒரு சிறப்பான கல்லை நிறுவினான். அது தேவனுடைய உதவியை ஜனங்கள் நினைவு கூரும்படி இருந்தது. இந்த கல் மிஸ்பாவிற்கும் சேணுக்கும் இடையில் இருந்தது. அதற்கு “எபெனேசர்” (உதவியின் கல்) என்று பேரிட்டான். “இந்த இடம் வரும்வரை கர்த்தர் நமக்கு உதவிச் செய்தார்” என்றான்.
13 பெலிஸ்தர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அவர்கள் மீண்டும் இஸ்ரவேலுக்குள் நுழையவில்லை. சாமுவேலின் மீதியான வாழ்வு முடியுமட்டும் கர்த்தர் பெலிஸ்தியர்களுக்கு எதிராக இருந்தார். 14 பெலிஸ்தர் ஏற்கெனவே இஸ்ரவேலர்களிடம் இருந்து எக்ரோன் முதல் காத் வரை பல நகரங்களைக் கைப்பற்றி இருந்தனர். அவற்றை இஸ்ரவேலர் திரும்பப் பெற்றனர். அவற்றைச் சுற்றியுள்ள நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டனர்.
இஸ்ரவேலர்களுக்கும் எமோரியருக்கும் இடையில் சமாதானம் நிலவியது.
15 சாமுவேல் தம் வாழ்நாள் முழுவதும் இஸ்ரவேலர்களை வழிநடத்திச் சென்றான். 16 இஸ்ரவேல் ஜனங்களை நியாயம் விசாரித்துக் கொண்டு சாமுவேல் இடம்விட்டு இடம் சென்றான். ஒவ்வொரு ஆண்டும் சுற்றுப்பயணம் செய்து, அவன் பெத்தேல், கில்கால், மிஸ்பா போன்ற இடங்களில் நியாயம் விசாரித்து வந்தான். 17 அவனது வீடு ராமாவில் இருந்தது. எனவே எப்போதும் அங்கேயே திரும்பி வருவான். இஸ்ரவேலர்களை அங்கிருந்தே ஆண்டு கொண்டும் நியாயம் விசாரித்தும் வந்தான். சாமுவேல் ராமாவில் கர்த்தருக்காக ஒரு பலிபீடம் கட்டினான்.
இஸ்ரவேலர் ஒரு அரசன் வேண்டும் என்று கேட்கிறார்கள்
8 சாமுவேல் முதுமையடைந்ததும், அவன் தன் ஜனங்களை நியாயம் விசாரிக்க ஏற்பாடு செய்தான். 2 அவனது மூத்த மகனின் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா, அவர்கள் பெயெர்செபாவில் நீதிபதிகளாக இருந்தனர். 3 ஆனால் சாமுவேல் வாழ்ந்த விதத்தில் அவனது மகன்கள் வாழவில்லை. அவர்கள் இரகசியமாகப் பணம் பெற்றுக்கொண்டு நீதிமன்றங்களில் தீர்ப்பை மாற்றினார்கள். அவர்கள் ஜனங்களை நீதிமன்றத்திலே ஏமாற்றினார்கள். 4 எனவே இஸ்ரவேலின் மூப்பர்கள் கூடி, ராமாவிலே சாமுவேலை சந்திக்கும்படி சென்றனர். 5 மூப்பர்கள் சாமுவேலிடம், “உங்களுக்கு வயதாகிவிட்டது. உங்கள் மகன்கள் சத்தியத்தின் வழியில் வாழவில்லை அவர்கள் உங்களைப் போல் இல்லை. இப்போது, மற்ற நாடுகளைப் போன்று எங்களை ஆள்வதற்கு ஒரு அரசனைத் தாருங்கள்” என்று கேட்டனர்.
6 எனவே மூப்பர்கள் தங்களை வழி நடத்த ஒரு அரசனை வேண்டினார்கள். சாமுவேல் இதனை ஒரு கெட்ட திட்டம் என எண்ணினான். எனவே சாமுவேல் கர்த்தரிடம் ஜெபித்தான். 7 கர்த்தர் சாமுவேலிடம், “ஜனங்கள் சொன்னதைப்போல் செய்யவும், அவர்கள் உன்னைத் தள்ளவில்லை. என்னைத் தள்ளியுள்ளார்கள்! என்னை அவர்களுடைய அரசனாக ஏற்றுக்கொள்ள விருப்பமில்லை! 8 அவர்கள் எப்போதும் செய்தது போலவே தொடர்ந்து செய்கிறார்கள். நான் எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்தேன். ஆனால் என்னை விட்டுவிட்டு மற்ற தெய்வங்களுக்குச் சேவை செய்தனர். அவர்கள் அதையே உனக்கும் செய்வார்கள். 9 எனவே அவர்கள் சொன்னதைக் கவனித்து அவர்கள் சொல்வதுபோல் செய்யவும். ஆனால் அவர்களை எச்சரிக்கவும். ஒரு அரசன் அவர்களுக்கு என்ன செய்வான் என்பதையும் கூறு! ஒரு அரசன் எவ்வாறு ஆள்வான் என்பதையும் கூறு” என்றார்.
10 அவர்கள் சாமுவேலிடம் ஒரு அரசன் வேண்டுமெனக் கேட்டிருந்தனர். எனவே சாமுவேல் கர்த்தர் சொன்னவற்றை அவர்களிடம் சொன்னான். 11 அவன் சொன்னது. “உங்களை ஆள்வதற்கு ஒரு அரசன் வந்தால், அவன் செய்வது இதுதான்: அவன் உங்களின் மகன்களை எடுத்துக்கொள்வான். அவர்களைத் தனக்கு சேவை செய்யுமாறு பலவந்தப்படுத்துவான். அவர்களை வீரர்கள் ஆகுமாறு கட்டாயப்படுத்துவான். அவர்கள் அவனது தேரிலிருந்து சண்டையிட வேண்டும். அவனது படையில் குதிரை வீரர்களாக வேண்டும். அவர்கள் காவல்காரர்களாகி அரசனின் இரதத்துக்கு முன்னால் செல்லவேண்டும்.
12 “அரசன் உங்கள் பிள்ளைகளை வீரர்களாகுமாறு வற்புறுத்துவான். சிலர் 1,000 பேருக்கான அதிகாரிகளாகவும், இன்னும் சிலர் 50 பேருக்கான அதிகாரிகளாகவும் ஆவார்கள்.
“அரசன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி தம் வயல்களை உழவும், அறுவடை செய்யவும் ஈடுபடுத்துவான். அவன் உங்கள் பிள்ளைகளைக் கட்டாயப்படுத்தி போருக்கான ஆயுதங்களைச் செய்யச் சொல்வான்! அவர்களது தேருக்கான பொருட்களைச் செய்யுமாறு பலவந்தப்படுத்துவான்!
13 “அரசன் உங்கள் பெண் பிள்ளைகளை எடுத்துக்கொள்வான். தனக்கான வாசனைப் பொருட்களைச் செய்யச் சொல்வான். அவர்களில் சிலரை அவனுக்காக சமைக்கவும், பலகாரம் சுடவும் பலவந்தப்படுத்துவான்.
14 “அரசன் உங்கள் செழிப்பான வயல்களையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவ மரங்களையும் எடுத்துக் கொள்வான். தன் அதிகாரிகளுக்கு அவற்றைக் கொடுப்பான். 15 உங்கள் தானியங்களிலும் திராட்சையிலும் பத்தில் ஒரு பாகத்தை எடுத்துக் கொள்வான். அவற்றைத் தன் அதிகாரிகளுக்குக் கொடுப்பான்.
16 “அரசன் உங்களிலிருந்து வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும், தேர்ந்த வாலிபர்களையும் எடுத்துக் கொள்வான். அவன் உங்கள் கழுதைகளையும் எடுத்து தன் சொந்த உபயோகத்துக்கு வைத்துக்கொள்வான். 17 உங்கள் மந்தையில் பத்தில் ஒரு பாகத்தையும் எடுத்துக்கொள்வான்.
“நீங்களோ அரசர்களுக்கு அடிமையாவீர்கள், 18 காலம் வரும்போது நீங்கள் தேர்ந்தெடுத்த அரசனால் கதறி அழுவீர்கள். அப்போது கர்த்தர் உங்களுக்குப் பதில் சொல்லமாட்டார்” என்றான்.
19 ஆனால் ஜனங்கள் சாமுவேலுக்கு செவி கொடுக்கவில்லை. அவர்கள், “இல்லை! எங்களை ஆள ஒரு அரசன் வேண்டுமென விரும்புகிறோம். 20 அப்போது நாங்கள் மற்ற நாடுகளைப் போன்று இருப்போம், அரசன் எங்களை வழிநடத்துவான். எங்களோடு வந்து எங்களுக்காகப் போர் செய்வான்” என்றனர்.
21 சாமுவேல் ஜனங்கள் சொன்னதைக் கேட்டு கர்த்தரிடம் அவர்கள் வார்த்தைகளைத் திருப்பிச் சொன்னான். 22 கர்த்தரோ, “அவர்கள் சொல்வதைக் கேள்! ஒரு அரசனை ஏற்படுத்து” என்றார்.
பிறகு சாமுவேல் இஸ்ரவேல் ஜனங்களிடம், “நல்லது! நீங்கள் புதிய அரசனை அடைவீர்கள். இப்போது, நீங்கள் அனைவரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என்றான்.
பாவத்தினால் மரணம்; கிறிஸ்துவினால் வாழ்வு
6 எனவே, தேவனுடைய கிருபை நமக்கு மேலும் மேலும் மிகுதியாகக் கிடைக்கும் என்று நினைத்து பாவத்திலேயே ஜீவிக்கலாமா? 2 முடியாது. நமது பழைய பாவங்களுக்காக நாம் ஏற்கெனவே மரணம் அடைந்துவிட்டோம். அதனால் இனி அதிலேயே எப்படிப் பாவம் செய்த வண்ணம் வாழ முடியும்? 3 நாம் அனைவரும் ஞானஸ்நானம் பெற்றதும் கிறிஸ்துவுக்குள் ஒரு பாகமாகிவிட்டோம். நமது ஞானஸ்நானத்தின் மூலம் அவரது மரணத்திலும் பங்குபெற்றுவிட்டோம். 4 ஆகையால் நாம் ஞானஸ்நானம் பெறும்போதே கிறிஸ்துவோடு இறந்து, அடக்கம் செய்யப்பட்டு, மரணத்தைப் பகிர்ந்துகொண்டோம். இந்த வழியில் இயேசுவோடு நாமும் உயிர்த்தெழுந்து புது வாழ்வு வாழத் தொடங்குகிறோம். இதே வழியில் கிறிஸ்து, பிதாவின் மகிமையால் மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார்.
5 கிறிஸ்து இறந்தார். அவர் இறப்பிலும் நாம் கலந்துகொண்டோம். இதனால் அவரது உயிர்த்தெழுதலிலும் நாம் பங்குபெறுகிறோம். 6 நமது பழைய வாழ்வு இயேசுவோடேயே சிலுவையில் கொல்லப்பட்டுவிட்டது என்று நமக்குத் தெரியும். எனவே, நமது பாவத் தன்மைகளுக்கு நம்மீது எவ்வித அதிகாரமும் இல்லை. இதனால் இனிமேலும் நாம் பாவங்களுக்கு அடிமையாக இருக்கமாட்டோம். 7 எனவே, மரணமடைந்தவன் பாவத்திலிருந்தும் விடுதலையடைகிறான்.
8 நாம் கிறிஸ்துவோடு மரித்தால், அவரோடு வாழ்வோம் என்பதும் நமக்குத் தெரியும். 9 கிறிஸ்து மரணத்திலிருந்து உயிர்த்தெழுந்தார். அவர் மீண்டும் மரணமடையமாட்டார். இப்போது மரணம் அவர் மீது எதையும் செய்ய இயலாது! 10 அவர் பாவத்திற்கென்று ஒரே தரம் மரித்தார். இப்போது அவருக்கு தேவனோடு புதிய வாழ்க்கை உள்ளது. 11 அவ்வாறே நீங்களும் உங்களை பாவத்திற்கு மரித்தவர்களாகவும், நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுக்கென்று பிழைத்திருக்கிறவர்களாகவும் எண்ணிக்கொள்ளுங்கள்.
12 ஆகையால் நீங்கள் சரீரங்களின் இச்சைப்படி பாவத்திற்குக் கீழ்ப்படிய அனுமதிக்காதீர்கள். சாவுக்கு ஏதுவான உங்கள் சரீரத்தில் பாவம் ஆளாமல் இருப்பதாக. 13 நீங்கள் உங்கள் சரீரத்தின் பாகங்களை அநீதியின் கருவிகளாகப் பாவத்திற்கு ஒப்புக் கொடுக்காதீர்கள். ஆனால் நீங்கள் உங்களை இறந்தவர்களிடமிருந்து பிழைத்திருக்கிறவர்களாக தேவனுக்கு ஒப்புக்கொடுக்க வேண்டும். உங்கள் சரீர உறுப்புகளை நீதிக்குரிய கருவிகளாக தேவனுக்கு ஒப்புக்கொடுங்கள். 14 பாவம் உங்களது எஜமானன் அல்ல. ஏனென்றால் நீங்கள் சட்ட விதிகளின் கீழ்ப்பட்டவர்கள் அல்லர். நீங்கள் இப்போது தேவனுடைய கிருபைக்குக் கீழ்ப்பட்டவர்களே.
நீதிக்கு அடிமைகள்
15 அதனால் இப்போது என்ன செய்யலாம்? நாம் சட்டவிதிக்குக் கீழ்ப்படாமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருப்பதால் பாவம் செய்யலாமா? 16 கூடாது. ஒருவனுக்குக் கீழ்ப்படிய உங்களை நீங்கள் ஒப்படைப்பீர்கள். எனவே நிஜமாகவே அவனுக்கு அடிமையாவீர்கள் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் கீழ்ப்படியும் அவனே எஜமானன் ஆவான். உங்களால் பாவத்தைப் பின்பற்றலாம் அல்லது தேவனுக்குக் கீழ்ப்படியலாம். ஆத்துமாவின் இறப்புக்கே பாவம் வழிவகுக்கிறது. ஆனால் தேவனுக்குக் கீழ்ப்படிவதால் அவருக்கேற்ற நீதிமான்களாகிறீர்கள். 17 கடந்த காலத்தில் நீங்கள் பாவத்துக்கு அடிமைகளாக இருந்தீர்கள். பாவம் உங்களைக் கட்டுப்படுத்தியது. இப்பொழுது நீங்கள் உங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட உபதேசத்திற்கு முழுமனதோடு கீழ்ப்படிகிறீர்கள். இதற்காக தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். 18 நீங்கள் பாவத்திலிருந்து விடுதலை ஆனீர்கள். இப்போது நீங்கள் நன்மைக்கே அடிமையானீர்கள். 19 இதை நான் மக்களுக்குத் தெரிந்த ஒரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறேன். ஏனென்றால் இதனைப் புரிந்துகொள்வது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கும். முன்பு நீங்கள் உங்கள் சரீரத்தின் உறுப்புகளை அசுத்தத்திற்கும், அக்கிரமத்திற்கும் அடிமைகளாக ஒப்புக்கொடுத்தீர்கள். அதைப் போலவே இப்போது நீங்கள் உங்கள் உடலுறுப்புகளை நீதிக்கு அடிமைகளாக ஒப்புக்கொடுங்கள்.
20 முந்தைய காலத்தில் நீங்கள் பாவத்திற்கு அடிமைகளாக இருந்தீர்கள். அப்போது நல் வாழ்வு உங்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. 21 நீங்கள் பாவம் செய்தீர்கள். இப்போது அவற்றுக்காக வெட்கப்படுகின்றீர்கள். அதனால் உங்களுக்கு என்ன பலன்? அதனால் மரணமே கிடைத்தது. 22 ஆனால் இப்போது பாவத்தில் இருந்து விலகியிருக்கிறீர்கள். தேவனுடைய அடிமையாய் இருக்கிறீர்கள். இதனால் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை உருவாக்குகிறீர்கள். இது இறுதியில் நித்திய வாழ்வைத் தரும். 23 பாவத்தின் சம்பளம் மரணம். பாவம் செய்தவர்களுக்கு அதுவே பலன். ஆனால் தேவன் தம் மக்களுக்கு இலவசமான வரத்தைக் கொடுக்கிறார். அது நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குள்ளான நித்திய வாழ்வே ஆகும்.
எகிப்திலுள்ள யூதா ஜனங்களுக்கு கர்த்தருடைய வார்த்தை
44 கர்த்தரிடமிருந்து எரேமியா ஒரு வார்த்தையைப் பெற்றான். எகிப்தில் வாழுகிற அனைத்து யூதா ஜனங்களுக்கும் இந்த வார்த்தை உரிதானது. இந்த வார்த்தை மிக்தோல், தக்பானேஸ், நோப்பில், பத்ரோன் போன்ற இடங்களில் வாழும் யூதாவின் ஜனங்களுக்கானது. இதுதான் செய்தி: 2 “இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவதாவது, ‘ஜனங்களாகிய நீங்கள் யூதாவின் நகரங்களிலும் எருசலேமிலும் நான் ஏற்படுத்திய பயங்கரமானவற்றைப் பார்த்தீர்கள். அந்த நகரங்கள் எல்லாம் இன்று காலியான கற்தூண்களாக உள்ளன. 3 அந்த இடங்கள் எல்லாம் அழிக்கப்பட்டன. ஏனென்றால், அதில் வாழ்ந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர். அது எனக்குக் கோபத்தைத் தந்தது. கடந்த காலத்தில் நீங்களும் உங்கள் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. 4 மீண்டும் மீண்டும் எனது தீர்க்கதரிசிகளை அவர்களிடம் அனுப்பினேன். அத்தீர்க்கதரிசிகள் எனது வேலைக்காரர்களாக இருந்தனர். அத்தீர்க்கதரிசிகள் எனது செய்திகளைப் பேசினார்கள். அந்த ஜனங்களிடம், “இப்பயங்கரமானவற்றைச் செய்யாதீர்கள். விக்கிரகங்களை நீங்கள் வழிபடுவதை நான் வெறுக்கிறேன்” என்றனர். 5 ஆனால் அந்த ஜனங்கள் தீர்க்கதரிசிகள் சொன்னதைக் கேட்கவில்லை. அவர்கள் அத்தீர்க்கதரிசிகளிடம் தம் கவனத்தைச் செலுத்தவில்லை. அந்த ஜனங்கள் கெட்டவற்றைச் செய்வதை நிறுத்தவில்லை. அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதை நிறுத்தவில்லை. 6 எனவே நான் அந்த ஜனங்களுக்கு எதிராக என் கோபத்தைக் காட்டினேன். நான் யூதாவின் பட்டணங்களையும் எருசலேமின் தெருக்களையும் தண்டித்தேன். எனது கோபம், எருசலேமையும் யூதாவின் பட்டணங்களையும் இன்றைக்குள்ள வெறுமையான கற்குவியல்களாக்கிவிட்டது.’”
7 எனவே, “இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார். ‘தொடர்ந்து விக்கிரகங்களைத் தொழுதுக்கொண்டு நீங்கள் உங்களையே ஏன் காயப்படுத்திக்கொள்கிறீர்கள். நீங்கள் ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் குழந்தைகளையும் யூதாவின் வம்சத்திலிருந்து பிரித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை ஒன்றுமில்லாதவர்களைபோல ஆக்க நீங்களே காரணமாகுகிறீர்கள். 8 ஜனங்களாகிய நீங்கள் விக்கிரகங்களைச் செய்து எனக்கு ஏன் கோபத்தை உண்டுப்பண்ணுகிறீர்கள்? இப்பொழுது நீங்கள் எகிப்தில் வாழ்கிறீர்கள். எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களுக்கு பலிகள் கொடுப்பதன் மூலம் இப்போது நீங்கள் என்னைக் கோபமூட்டிக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்களையே அழிப்பீர்கள். இது உங்களுடைய தவறு. நீங்கள் எல்லா ஜாதிகள் மத்தியிலும் ஒரு சாபச் சொல்லாகவும், அவமானப்பட்டவர்களாகவும் ஆவீர்கள். அடுத்த நாட்டு ஜனங்கள் அதைக் கெட்டதாகப் பேசுவார்கள். பூமியில் உள்ள மற்ற நாட்டினர் உங்களை கேலி செய்வார்கள். 9 உங்கள் முற்பிதாக்கள் செய்த பொல்லாப்புகளை நீங்கள் மறந்துவிட்டீர்களா? யூதாவின் அரசர்களும் அரசிகளும் செய்த பொல்லாப்புகளை மறந்து விட்டீர்களா? யூதாவிலும் எருசலேம் வீதிகளிலும் நீங்களும் உங்கள் மனைவியரும் செய்த பொல்லாப்புகளை மறந்துவிட்டீர்களா? 10 இந்த நாளிலும் கூட யூதாவின் ஜனங்கள் தங்களைத் தாங்கள் தாழ்த்திக்கொள்ளவில்லை. அவர்கள் எனக்கு எவ்வித மரியாதையும் செய்யவில்லை. அந்த ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றவில்லை. நான் உங்களுக்கும் உங்கள் முன்னோர்களுக்கும் கொடுத்த சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை.’
11 “எனவே, இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் சொல்வது: ‘உங்களுக்கு பயங்கரமானவை நிகழவேண்டும் என்று முடிவு செய்து விட்டேன். யூதாவின் வம்சம் முழுவதையும் நான் அழிப்பேன். 12 உயிர் பிழைத்தவர்கள் சிலர் மட்டுமே உள்ளனர். அந்த ஜனங்களும் எகிப்துக்கு வந்தனர். யூதாவின் வம்சத்திலுள்ள அந்த சிலரையும் நான் அழிப்பேன். அவர்கள் வாளால் கொல்லப்படுவார்கள் அல்லது பசியால் மரிப்பார்கள். அவர்களுக்கு நடப்பதைக் கேள்விப்பட்டு மற்ற நாடுகள் அஞ்சும். மற்றவர்கள் அவரை சபித்து நிந்தனைக்குள்ளாக்கிடுவார்கள். அந்த யூதா ஜனங்களை அவர்கள் அவமதிப்பார்கள். 13 எகிப்தில் வாழ்வதற்குப் போன அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். நான் வாள்கள், பசி மற்றும் பயங்கரமான நோய்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி அவர்களைத் தண்டிப்பேன். நான் எருசலேம் நகரத்தைத் தண்டித்ததுபோன்று அந்த ஜனங்களை நான் தண்டிப்பேன். 14 யூதாவிலிருந்து தப்பிப் பிழைத்து எகிப்திற்கு வாழப் போனவர்களில் ஒருவர் கூட எனது தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது. அந்த ஜனங்கள் யூதாவிற்குத் திரும்பி வந்து அங்கே வாழ விரும்புகின்றனர். ஆனால் ஒருவரும் யூதாவுக்குத் திரும்பிப் போகமாட்டார்கள். ஒருவேளை சிலர் மட்டும் தப்பித்துக்கொள்ளலாம்.’”
15 யூதாவின் பெண்களில் பலர் எகிப்தில் வாழும்போது அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களது கணவர்களுக்கு இது தெரியும். ஆனால் அவர்களை தடுத்து நிறுத்தவில்லை. யூதாவின் ஜனங்களில் பெரிய கூட்டத்தினர் ஒன்று கூடுகின்றனர். அவர்கள் எகிப்தின் தென்பகுதியில் வாழுகின்ற யூதா ஜனங்களாவார்கள். மற்ற தெய்வங்களுக்கு பலிகள் கொடுத்துக்கொண்டிருக்கிற அப்பெண்களின் கணவர்கள் எரேமியாவிடம், 16 “நீ எங்களுக்குச் சொன்ன கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்கமாட்டோம். 17 வானராக்கினிக்கு பலிகள் கொடுப்பதாக நாங்கள் வாக்குறுதி கொடுத்திருக்கிறோம். நாங்கள் வாக்குறுதி அளித்தபடி எல்லாவற்றையும் செய்வோம். நாங்கள் அவளைத் தொழுதுகொள்ள பலிகள் கொடுப்போம். பானங்களின் காணிக்கையை ஊற்றுவோம். நாங்கள் இதனைக் கடந்த காலத்தில் செய்தோம். எங்கள் முற்பிதாக்கள், எங்கள் அரசர்கள், எங்கள் அதிகாரிகள் கடந்த காலத்தில் இதனைச் செய்தனர். யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் தெருக்களிலும் நாங்கள் அவற்றைச் செய்தோம். சொர்க்கத்தின் அரசியை நாங்கள் தொழுதுவந்த அந்நேரத்தில் எங்களிடம் நிறைய உணவு இருந்தது. நாங்கள் வெற்றிகரமாக இருந்தோம். கெட்டவை எதுவும் நடக்கவில்லை. 18 ஆனால் நாங்கள் வானராக்கினிக்கு தொழுதுகொள்வதை நிறுத்தினோம். அவளுக்குப் பானப் பலிகள் ஊற்றுவதை நிறுத்தினோம். அவளுக்கு தொழுகைகள் செய்வதை நிறுத்தியதிலிருந்து எங்களுக்குப் பிரச்சனைகள் ஏற்பட்டிருக்கின்றன. எங்களது ஜனங்கள் வாள்களாலும் பசியாலும் கொல்லப்பட்டிருக்கின்றனர்” என்றனர்.
19 பிறகு பெண்கள் பேசினார்கள். அவர்கள் எரேமியாவிடம், “நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்கள் அறிவார்கள். வானராக்கினிக்கு பலிகள் கொடுக்க எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளுக்குப் பானங்களின் காணிக்கை ஊற்ற எங்களுக்கு அவர்களின் அனுமதி இருந்தது. அவளைப் போன்ற அப்பங்களை நாங்கள் செய்துக்கொண்டிருந்ததை எங்கள் கணவர்களும் அறிவார்கள்” என்றனர்.
20 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களுடன் பேசினான். இவற்றையெல்லாம் இப்பொழுதுதான் சொன்ன அவர்களுடன் எரேமியா பேசினான். 21 எரேமியா அந்த ஜனங்களிடம், “யூதாவின் நகரங்களிலும் எருசலேமின் வீதிகளிலும் நீங்கள், பலிகள் செய்ததை கர்த்தர் நினைவுப்படுத்தினார். நீங்களும் உங்கள் முற்பிதாக்களும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், தேசத்தின் ஜனங்களும் இதனைச் செய்தனர். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை கர்த்தர் நினைவுப்படுத்தினார். அதைப்பற்றி நினைத்தார். 22 பிறகு கர்த்தருக்கு உங்களோடு அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. நீங்கள் செய்த பயங்கரமான காரியங்களை கர்த்தர் வெறுத்தார். எனவே கர்த்தர் தேசத்தைக் காலியான வனாந்தரமாக்கினார். இப்பொழுது அங்கே எவரும் வாழவில்லை. மற்றவர்கள் அத்தேசத்தைப் பற்றி அருவருப்பாகப் பேசுகிறார்கள். 23 அந்த தீமையெல்லாம் உங்களுக்கு ஏற்பட்டன. ஏனென்றால், நீங்கள் அந்நிய தெய்வங்களுக்குப் பலிகள் கொடுத்தீர்கள். கர்த்தருக்கு எதிராக நீங்கள் பாவம் செய்தீர்கள். நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரது போதனைகளையும் அவர் உங்களுக்குக் கொடுத்த சட்டங்களையும் பின்பற்றவில்லை. உங்கள் உடன்படிக்கையின் பகுதியை நீங்கள் பாதுகாக்கவில்லை” என்று பதிலளித்தான்.
24 பிறகு எரேமியா எல்லா ஆண்கள் மற்றும் பெண்களிடமும் பேசினான். எரேமியா சொன்னான், “யூதா ஜனங்களாகிய நீங்கள், இப்பொழுது எகிப்தில் இருக்கிறீர்கள். கர்த்தருடைய வார்த்தையை கவனியுங்கள்: 25 இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்: ‘பெண்களாகிய நீங்கள் சொன்னதையே செய்தீர்கள். நீங்கள், “நாங்கள் செய்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவோம். பலிகள் கொடுப்பதாகவும் பானபலி ஊற்றுவதாகவும் வாக்குறுதி அளித்தோம்” என்றீர்கள். எனவே அவ்வாறே செய்யுங்கள். நீங்கள் செய்வதாக வாக்குறுதி கொடுத்தவற்றைச் செய்துவிடுங்கள். உங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.’ 26 ஆனால் கர்த்தரிடமிருந்து வந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற யூதாவிலுள்ள அனைத்து ஜனங்களே! ‘நான் எனது பெரும் பெயரைப் பயன்படுத்தி இந்த வாக்குறுதியைச் செய்கிறேன். யூதாவிலுள்ள ஜனங்களில் எகிப்தில் இப்பொழுது வாழ்ந்துக்கொண்டிருக்கிற எவரும் என் நாமத்தால் மீண்டும் வாக்குறுதி செய்யமாட்டார்கள் என்று நான் வாக்குறுதி அளிக்கிறேன். அவர்கள் மீண்டும் “இதோ கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு…” என்று சத்தியம் செய்யமாட்டார்கள். 27 நான் யூதாவின் ஜனங்கள் மேல் கவனமாயிருக்கிறேன். ஆனால் நான் அவர்களின் மேல் நன்மைக்காக கவனித்துக்கொண்டிருக்கவில்லை. நான் அவர்கள் மேல் தீமை செய்வதற்காகவே கவனித்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் வாழ்கிற யூதாவின் ஜனங்கள் பசியால் மரிப்பார்கள், அவர்கள் பட்டயத்தால் கொல்லப்படுவார்கள். அவர்கள் முடிந்து போகும்வரை தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்பார்கள். 28 யூதா ஜனங்களில் சிலர் வாளால் கொல்லப்படுவதிலிருந்து தப்புவார்கள். அவர்கள் எகிப்திலிருந்து யூதாவிற்குத் திரும்பி வருவார்கள். ஆனால் தப்பி வருகிற யூதாவின் ஜனங்கள் மிகச் சிலராக இருப்பார்கள். பிறகு தப்பிப்பிழைத்த அந்த யூதா ஜனங்கள், எகிப்தில் வாழ்பவர்கள், யாருடைய வார்த்தை உண்மையாகிறது என்பதை அறிந்துக்கொள்வார்கள். எனது வார்த்தையா? அல்லது அவர்களின் வார்த்தையா? எது உண்மையானது என்பதை அவர்கள் அறிவார்கள். 29 நான் உங்களுக்கு அடையாளத்தைத் தருவேன்’ இது கர்த்தருடைய வார்த்தை, ‘எகிப்தில் நான் உங்களைத் தண்டிப்பேன். பிறகு நான் உங்களைத் தண்டிப்பேன் என்ற எனது வாக்கு உண்மையாக நடப்பதை நீங்கள் அறிவீர்கள். 30 நான் என்ன சொன்னேனோ அதைச் செய்வேன் என்பதற்கு இதுவே உங்களது சான்றாகும்’ கர்த்தர் சொல்லுவது என்னவெனில், ‘பார்வோன் ஒப்பிரா எகிப்தின் அரசன். அவனது பகைவர்கள் அவனைக் கொல்ல விரும்புகின்றனர். நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவர்களிடம் கொடுப்பேன். யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்தான். நேபுகாத்நேச்சார் சிதேக்கியாவின் பகைவனாக இருந்தான். நான் சிதேக்கியாவை அவனது பகைவனிடம் கொடுத்தேன். அதே வழியில் நான் பார்வோன் ஒப்பிராவை அவனது பகைவரிடம் கொடுப்பேன்’” என்று சொன்னான்.
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
20 தொல்லைகள் சூழ்ந்திருக்கையில் நீ கர்த்தரை நோக்கிக் கூப்பிடும்போது கர்த்தர் பதிலளிக்கட்டும்.
யாக்கோபின் தேவன் உன் பெயரை முக்கியமாக்கட்டும்.
2 அவரது பரிசுத்த இடத்திலிருந்து தேவன் உதவி அனுப்பட்டும்.
சீயோனிலிருந்து அவர் உனக்குத் துணை நிற்கட்டும்.
3 நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும்.
உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.
4 தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன்.
உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.
5 தேவன் உனக்கு உதவும்போது நாம் மகிழ்வடைவோம்.
நாம் தேவனுடைய நாமத்தைத் துதிப்போம்.
நீ கேட்பவற்றை யெல்லாம் கர்த்தர் தருவார் என்று நான் நம்புகிறேன்.
6 கர்த்தர் தான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு உதவுகிறார் என இப்போது அறிகிறேன்.
தேவன் அவரது பரிசுத்த பரலோகத்தில் இருந்தார்.
அவர் தேர்ந்தெடுத்த அரசனுக்குப் பதில் தந்தார்.
அவனைப் பாதுகாக்க தேவன் தன் உயர்ந்த வல்லமையைப் பயன்படுத்தினார்.
7 சிலர் தங்கள் இரதங்களை நம்புகின்றனர்.
மற்றோர் தங்கள் வீரர்களை நம்புகின்றனர்.
ஆனால் நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தரை நினைக்கின்றோம்.
அவரின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவோம்.
8 அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர்.
அவர்கள் யுத்தத்தில் மடிந்தனர்.
ஆனால் நாங்கள் வென்றோம்!
நாங்கள் வெற்றிபெற்றவர்கள்.
9 கர்த்தர் தாம் தேர்ந்தெடுத்த அரசனை மீட்டார்!
தேவன் தேர்ந்தெடுத்த அரசன் உதவி வேண்டினான். தேவன் பதில் தந்தார்!
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்
21 கர்த்தாவே, உமது பெலன் அரசனை மகிழ்விக்கிறது.
நீர் அவனை மீட்கும்போது அவன் மிகவும் சந்தோஷமடைகிறான்.
2 நீர் அரசனுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தீர்.
அரசன் சிலவற்றைக் கேட்டான்.
கர்த்தாவே, அவன் கேட்டவற்றை நீர் கொடுத்தீர்.
3 கர்த்தாவே, நீர் உண்மையாகவே அரசனை ஆசீர்வதித்தீர்.
அவன் தலையில் பொற்கிரீடத்தைச் சூட்டினீர்.
4 தேவனே அரசன் உம்மிடம், ஆயுளைக் கேட்டான். நீர் அதை அவனுக்குக் கொடுத்தீர்.
நீர் அவனுக்கு என்றென்றும் நிலைத்துத் தொடரும் நீண்ட ஆயுளைக் கொடுத்தீர்.
5 வெற்றிக்கு நேராக நீர் அரசனை வழிநடத்தினீர்.
அவனுக்குப் பெரும் மேன்மையைத் தந்தீர்.
அவனுக்குப் பெருமையையும், புகழையும் தந்தீர்.
6 தேவனே, நீர் உண்மையாகவே என்றென்றைக்கும் தேர்ந்தெடுத்த அரசனை ஆசீர்வதித்தீர்.
உமது உயர்ந்த வல்லமையை உபயோகித்து அரசனைப் பாதுகாத்தீர்.
அரசன் உம்முகத்தைப் பார்க்கும்போது அது அவனை மகிழச் செய்யும்.
7 அரசன் கர்த்தரை நம்புகிறான்.
உன்னதமான தேவனாகிய நீர் அவனை ஏமாற்றமாட்டீர்.
8 தேவனே, உமது பகைவர்க்கு உம் பெலனை உணர்த்துவீர்.
உம்மைப் பகைக்கிற அந்த ஜனங்களை உமது வல்லமை வெல்லும்.
9 கர்த்தாவே, நீர் அரசனோடு இருக்கும் போது, அவர் எல்லாவற்றையும் கொளுத்திவிடும் உலையைப்போல் இருப்பார்.
அவர் தன் பகைவர்களை அழிப்பார்.
10 அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும்.
அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.
11 ஏனெனில் கர்த்தாவே, அந்த ஜனங்கள் தீயவற்றை உமக்கெதிராய் திட்டமிட்டார்கள்.
அவர்கள் தீயன செய்யத் திட்டமிட்டும் வெற்றி பெறவில்லை.
12 கர்த்தாவே, அந்த ஜனங்களை அடிமைகளைப் போலாக்கினீர்.
நீர் அவர்களைக் கயிறுகளால் கட்டினீர்.
அவர்களின் கழுத்துக்களைச் சுற்றி கயிறுகளால் வளைத்தீர்.
அடிமைகளைப் போல் உம்மைக் குனிந்து வணங்கச் செய்தீர்.
13 கர்த்தாவே, உமது மகத்துவத்தில் நீர் உயர்ந்திரும்.
கர்த்தருடைய மேன்மையைப் பாடல்களால் பாடி இசைப்போம்!
2008 by World Bible Translation Center