Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
1 சாமுவேல் 5-6

பரிசுத்தப் பெட்டியினால் பெலிஸ்தர்களுக்குத் தொல்லை

பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எபெனேசரிலிருந்து அஸ்தோத்திற்குக் கொண்டுப் போனார்கள். பெலிஸ்தர் தேவனுடைய பரிசுத்த பெட்டியை தாகோனின் கோவிலுக்குள் கொண்டுப் போய் தாகோனின் சிலைக்கு அருகில் வைத்தனர். மறுநாள் காலை, அஸ்தோத் ஜனங்கள் எழுந்ததும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர். தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்னால் விழுந்துகிடந்தது.

அஸ்தோத் ஜனங்கள் தாகோனின் சிலையைப் பழைய இடத்தில் வைத்தனர். ஆனால் மறுநாள் காலையில், மீண்டும் தாகோனின் சிலை முகம்குப்புற விழுந்து கிடப்பதைக் கண்டனர்! கர்த்தருடைய பரிசுத்த பெட்டிக்கு முன்னால் தாகோன் சிலை விழுந்துகிடந்தது. இந்தமுறை தாகோனின் தலையும், கைகளும் உடைந்து கோவில் வாசற்படியிலேகிடந்தன. தாகோனின் உடல் மாத்திரம் அப்படியே கிடந்தது. அதனால்தான் இன்றும் கூட, தாகோனின் பூசாரிகளும், அஸ்தோத்தில் உள்ள தாகோனின் கோவிலுக்குள் நுழைகிற ஒருவனும் கோவில் வாசற்படியை மிதிப்பதில்லை.

அஸ்தோத்து ஜனங்களுக்கும், அவர்களது அக்கம் பக்கத்தினருக்கும் வாழ்க்கைச் சிரமமாகும்படி கர்த்தர் செய்தார். கர்த்தர் அவர்களுக்கு பல துன்பங்களைத் தந்தார். அவர்களை தோல் கட்டிகளினால் வாதித்தார். அவர்களுக்கு சுண்டெலிகளையும் அனுப்பினார். அவை அவர்களின் கப்பல்களுக்கும், நிலப்பகுதிகளுக்கும் பரவியது. நகர ஜனங்கள் அஞ்சினார்கள். அஸ்தோத் ஜனங்கள் நடப்பதை எல்லாம் கண்டனர். அவர்கள், “இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியானது இங்கே இருக்கக் கூடாது! அவர் நம்மையும் நமது தெய்வமான தாகோனையும் தண்டித்திருக்கிறார்” என்றனர்.

அஸ்தோத் ஜனங்கள் பெலிஸ்தியரின் 5 ஆளுனர்களையும் வரவழைத்தனர். அவர்களிடம், “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை நாம் என்னச் செய்யவேண்டும்?” என்று கேட்டனர்.

ஆளுனர்களோ, “இஸ்ரவேலின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை இங்கிருந்து காத் பட்டணத்திற்கு எடுத்துப்போக வேண்டும்” என்றனர். ஆகவே பெலிஸ்தர்கள் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர்.

ஆனால் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை காத் நகரம் வரைக்கும் பெலிஸ்தர்கள் எடுத்துச் சென்றதும், காத் நகரை கர்த்தர் தண்டித்தார். ஜனங்கள் மிகவும் கலக்கமுற்றனர். இளைஞர் முதியவர் என அனைவருக்கும் தேவன் தொல்லைகளை ஏற்படுத்தினார். தேவன் அங்குள்ளவர்களுக்கும் தோல் கட்டிகளை தந்தார். 10 எனவே, பெலிஸ்தியர் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியை எக்ரோனுக்கு அனுப்பினர்.

ஆனால் அங்குள்ள ஜனங்கள் தேனுடைய பரிசுத்தப் பெட்டியைக் கண்டதும், முறையிட்டார்கள். “எங்களது எக்ரோன் நகரத்திற்கு இஸ்ரவேலருடைய தேவனின் பரிசுத்தப் பெட்டியை ஏன் கொண்டு வந்தீர்கள்? நீங்கள் எங்களையும் எங்கள் ஜனங்களையும் கொல்ல விரும்புகிறீர்களா?” எனக் கேட்டனர். 11 எக்ரோன் ஜனங்கள் பெலிஸ்திய ஆளுனர்களைக் கூட்டி, “இஸ்ரவேலருடைய தேவனின் பெட்டி நம்மை கொன்றுப் போடுவதற்கு முன் இதனை அதன் பழைய இடத்திற்கே அனுப்பிவிடுவோம்!” என்றனர்.

எக்ரோன் ஜனங்கள் மிகவும் பயமடைந்தனர்! அங்குள்ள ஜனங்களை தேவன் மிகவும் கஷ்டப்படுத்தினார். 12 பலர் மரித்தனர். மரிக்காதவர்களுக்கு தோல் கட்டி இருந்தது. எக்ரோன் ஜனங்களின் கூக்குரல் பரலோகம்வரை எட்டியது.

தேவனுடைய பரிசுத்தப் பெட்டி திருப்பி அனுப்பப்படுகிறது

பெலிஸ்தர் தம் நாட்டில் பரிசுத்தப் பெட்டியை ஏழு மாதங்கள் வைத்திருந்தனர். பெலிஸ்தர் தங்கள் பூசாரிகளையும், மந்திரவாதிகளையும் அழைத்து, “கர்த்தருடைய பெட்டியை என்னச் செய்யலாம்? பெட்டியை எவ்வாறு திருப்பி அனுப்பலாம்” என்று கேட்டனர்.

அதற்கு அவர்கள், “நீங்கள் இஸ்ரவேலரின் தேவனுடைய பரிசுத்தப் பெட்டியைத் திருப்பி அனுப்புவதானால் வெறுமையாக அனுப்பவேண்டாம். அன்பளிப்போடு அனுப்புங்கள். அப்போது உங்கள் பாவங்களையும் இஸ்ரவேலின் தேவன் எடுத்துப் போடுவார். பின் நீங்களும் குணம் பெறுவீர்கள். நீங்களும் பரிசுத்தம் அடைவீர்கள். இதனைச் செய்தால் தேவன் உங்களைத் தண்டிப்பதையும் நிறுத்துவார்” என்றனர்.

பெலிஸ்தர்கள், “நம்மை மன்னிப்பதற்காக நாம் எத்தகைய காணிக்கைகளை இஸ்ரவேலரின் தேவனுக்குக் கொடுக்கவேண்டும்?” எனக்கேட்டனர்.

அதற்கு பூசாரிகளும், மந்திரவாதிகளும் பதில் சொன்னார்கள். “ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆளுநராக, 5 பெலிஸ்திய ஆளுநர்கள் இருக்கிறார்கள். உங்களுக்கும் உங்கள் ஆளுநர்களுக்கும் ஒரேவிதமானப் பிரச்சனைதான். எனவே தங்கத்தால் 5 உருவங்களை தோல் கட்டியின் சாயலிலும், 5 சுண்டெலி சாயலிலும் செய்து அனுப்பவேண்டும். எனவே, உங்களை அழித்துக்கொண்டிருக்கும் தோல்கட்டி மற்றும் எலியின் உருவங்களை செய்யுங்கள். அத்தங்க உருவங்களை இஸ்ரவேல் தேவனுக்குக் காணிக்கையாக்குங்கள். பின் இஸ்ரவேலின் தேவன், உங்களையும் உங்கள் தெய்வங்களையும், உங்கள் நாட்டையும் தண்டிப்பதை நிறுத்துவார். எகிப்தியர்களையும் பார்வோனையும் போன்று கடினமனம் உடையவர்களாக இராதீர்கள். தேவன் எகிப்தியர்களைத் தண்டித்தார். எனவேதான் எகிப்தியர்கள் இஸ்ரவேலர்களை எகிப்தை விட்டுப் போகும்படி அனுமதித்தனர்.

“இப்போது நீங்கள் ஒரு புது வண்டியைச் செய்யவேண்டும். நுகம்பூட்டாத இரண்டு இளைய பசுக்களைப் பிடித்து வண்டியில் கட்டவேண்டும். அவற்றின் கன்றுக்குட்டிகளை அவற்றின் பின் போகவிடாமல் வீட்டில் கட்டவேண்டும். கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை அவ்வண்டியில் வைக்கவும். தங்க உருவங்களையும் சிலைகளையும் பெட்டியின் அருகில் பக்கத்தில் பையில் வைக்கவும். இவை உங்கள் பாவங்களை மன்னிக்கும் தேவனுக்கான அன்பளிப்புகளாகும். வண்டியை நேரான வழியில் போகவிடுங்கள். வண்டியைக் கவனியுங்கள். அது நேராக இஸ்ரவேலரின் சொந்த இடமான பெத்ஷிமேசுக்குப் போனால், நமக்கு இந்த நோய்களைத் தந்தவர் கர்த்தர் தான் என அறியலாம். ஒருவேளை பெத்ஷிமேசுக்கு அப்பசுக்கள் நேராகச் செல்லவில்லை என்றால், இஸ்ரவேலரின் தேவன் நம்மைத் தண்டிக்கவில்லை, இந்த நோய் தற்செயலாக வந்தது என்று அறிந்துகொள்ளலாம்” என்றனர்.

10 பெலிஸ்தியர் பூசாரிகளும் மந்திரவாதிகளும் சொன்னபடிச் செய்தனர். அப்போது தான் கன்றுகளை ஈன்ற இரண்டு பசுக்களைக் கண்டார்கள். அந்த இரண்டு பசுக்களை வண்டியில் பூட்டி அதன் கன்று குட்டிகளை வீட்டுத் தொழுவில் கட்டினார்கள். 11 பின் பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை வண்டியில் வைத்தனர். தங்க உருவங்களால் செய்யப்பட்ட தோல்கட்டியையும், சுண்டெலிகளையும் அதன் பக்கத்தில் வைத்தனர். 12 பசுக்கள் நேராக பெத்ஷிமேசுக்குச் சென்றன. அவை நேராகச் சாலையில் வலது பக்கமோ இடது பக்கமோ திரும்பாமல் சென்றன. பெலிஸ்தர்கள் தொடர்ந்து நகர எல்லைவரை பின் சென்றனர்.

13 பெத்ஷிமேசின் ஜனங்கள் தங்கள் கோதுமையை பள்ளத்தாக்கிலே அறுவடை செய்து கொண்டிருந்தனர். அவர்கள் பரிசுத்தப் பெட்டியைக் கண்டனர். அவர்கள் பெட்டியை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ந்தனர். அதைப் பெற்றுக்கொள்ள ஓடினார்கள். 14-15 பெத்ஷிமேசில் யோசுவாவின் வயலுக்கு வண்டி வந்து பாறைக்கருகில் நின்றது. ஜனங்கள் வண்டி மரங்களைப் பிளந்தனர், பசுக்களைக் கொன்று கர்த்தருக்கு பலியாக செலுத்தினார்கள்.

லேவியர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியை எடுத்துச் சென்றனர். தங்க உருவங்கள் இருந்தப் பையையும் எடுத்துக்கொண்டனர். அவர்கள் அவற்றைப் பெரியப் பாறைமீது வைத்தனர். அந்த நாளில் பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருக்கு தகன பலிகளை அளித்தனர்.

16 ஐந்து பெலிஸ்திய அரசர்களும் பெத்ஷிமேசின் ஜனங்கள் செய்வதை எல்லாம் கவனித்தனர். அன்றே அவர்கள் எக்ரோனுக்குத் திரும்பினார்கள்.

17 இவ்வாறு பெலிஸ்தர் தோல் கட்டிகளின் தங்க உருவங்களை தம் பாவங்களுக்கு பரிகாரமாக கர்த்தருக்குக் கொடுத்தனர். ஒவ்வொரு பெலிஸ்திய நகரத்திற்கும் ஒரு உருவம் வீதம் கொடுத்தனர். அவை அஸ்தோத்து, அஸ்கலோன், காத், காசா, எக்ரோன் ஆகியவையாகும். 18 பெலிஸ்தர் சுண்டெலியின் தங்க உருவங்களையும் அனுப்பினார்கள். அவையும் நகர எண்ணிக்கையைப் போலவே இருந்தன. இந்நகரங்களைச் சுற்றிலும் சுவர்களும், நகரங்களைச் சுற்றிலும் கிராமங்களும் இருந்தன.

பெத்ஷிமேசின் ஜனங்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பாறையின் மேல் வைத்தனர். அப்பாறை இன்றும் யோசுவாவின் வயலில் உள்ளது.

19 ஆனால் அவர்கள் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைப் பார்த்தபோது அங்கே ஆசாரியர்கள் இல்லாமல் இருந்தனர். எனவே தேவன் பெத்ஷிமேசில் 70 பேரை கொன்றார். பெத்ஷிமேசில் உள்ள ஜனங்கள் இக்கொடுமையான தண்டனைக்காகக் கதறி அழுதனர். 20 அவர்கள் “பரிசுத்தப் பெட்டியைப் பராமரிக்கும் ஆசாரியன் எங்கே இருக்கிறான்? இங்கிருந்து அந்த பெட்டி எங்கே செல்லவேண்டும்?” என்றனர்.

21 கீரியாத்யாரீம் என்ற இடத்தில் ஒரு ஆசாரியன் இருந்தான். அங்குள்ள ஜனங்களுக்கு பெத்ஷிமேசின் ஜனங்கள் தூது அனுப்பினார்கள். தூதுவர்கள், “பெலிஸ்தர் கர்த்தருடைய பரிசுத்தப் பெட்டியைத் திரும்பக் கொண்டு வந்துவிட்டனர். இதனை உங்கள் நகரத்திற்கு எடுத்துச் செல்லுங்கள்” என்றனர்.

ரோமர் 5

தேவனுக்கேற்ற நீதிமான்

நமது விசுவாசத்தால் நாம் தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கப்பட்டோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம். நமது விசுவாசத்தின் மூலமாக நாம் இன்று மகிழ்கிற தேவனுடைய கிருபைக்குள் நம்மை கர்த்தர் கொண்டு வந்திருக்கிறார். தேவனுடைய மகிமையைப் பங்கிட்டுக்கொள்வதில் உள்ள நம்பிக்கையால் நாம் மிகவும் மகிழ்கிறோம். நமக்கு ஏற்படுகிற துன்பங்களுக்காகவும் நாம் மகிழ்கிறோம். துன்பங்களுக்காக நாம் ஏன் மகிழ்கிறோம்?ஏனென்றால் இத்துன்பங்கள் தான் நம்மைப் பொறுமை உடையவர்களாக ஆக்குகிறது. நாம் பலமுடையவர்கள் என்பதற்கு இப்பொறுமையே சான்று. இச்சான்று நமக்கு நம்பிக்கையைக் கொடுக்கிறது. இந்நம்பிக்கை எப்போதும் நம்மை ஏமாற்றத்துக்குள்ளாக்காது. தோற்கவும் செய்யாது. ஏனென்றால் தேவன் நமது இதயங்கள் நிறைய தன் அன்பைப் பொழிந்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவரின் மூலமாகத் தன் அன்பைக் கொடுத்தார். தேவனிடமிருந்து வந்த பெரிய வரமே பரிசுத்த ஆவியானவர்Ԕ

நாம் பலவீனர்களாக இருக்கும்போதே கிறிஸ்து நமக்காக மரித்தார். நாம் தேவனுக்கு எதிராக வாழ்ந்துகொண்டிருந்த காலத்தில் சரியான நேரத்தில் கிறிஸ்து நமக்காக மரித்தார். ஒருவன் எவ்வளவுதான் நீதிமானாக இருந்தாலும், மிகச் சிலரே அவனது வாழ்வைப் பாதுகாப்பதற்காக தம் உயிரைக் கொடுப்பர். ஒருவன் மிக நல்லவனாக இருந்தால்தான் இன்னொருவன் அவனுக்காக உயிரைக் கொடுக்கிறான். ஆனால் நாம் பாவிகளாக இருக்கும்போதே நமக்காக கிறிஸ்து உயிரைவிட்டார். இதன் மூலம் தேவன் நம்மீதுகொண்ட பேரன்பை நிரூபித்துவிட்டார்.

கிறிஸ்துவின் இரத்தத்தால் நாம் தேவனுக்கேற்ற நீதிமான்களாகிவிட்டோம். எனவே, மிக உறுதியாகக் கிறிஸ்துவின் மூலம் நாம் தேவனுடைய கோபத்திலிருந்து இரட்சிக்கப்படுவோம். 10 நாம் தேவனுக்குப் பகைவர்களாக இருந்தபோது, தேவனோ கிறிஸ்துவின் மரணத்தின் மூலம் நம்மை நண்பர்களாக்கிக் கொண்டார். எனவே, இப்போது உறுதியாக நாமனைவரும் அவரது நண்பர்களே. தேவன் தனது குமாரனின் உயிர் மூலம் நம்மை இரட்சிப்பார். 11 இப்போது நாம் இரட்சிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம். நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமே தேவனிடம் நாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். ஏனென்றால் இயேசுவின் மூலமே நாம் தேவனுடைய நண்பர்களானோம்.

ஆதாமும்-கிறிஸ்துவும்

12 ஆதாம் என்கிற மனிதனின் செயலால்தான் உலகத்துக்குப் பாவம் வந்தது. பாவத்தோடு மரணமும் வந்தது. அதனால்தான் அனைவரும் தம் பாவத்தால் இறந்து போகிறார்கள். 13 மோசேயின் சட்டங்களுக்கு முன்னரே உலகில் பாவம் ஏற்பட்டுவிட்டது. சட்டம் இல்லாததால் தேவன் மக்களை அவர்கள் பாவங்களுக்காகக் குற்றவாளி ஆக்கவில்லை. 14 ஆனால் ஆதாம் காலத்திலிருந்து மோசே வரைக்கும் மரணமானது எல்லோரையும் ஆட்கொண்டது. தேவனுக்குக் கீழ்ப்படியாது பாவம் செய்ததால் ஆதாம் மரணமுற்றான், ஆனாலும் ஆதாமைப்போல பாவம் செய்யாமலிருந்தும் பலர் மரணமடைந்தனர்.

பின்னால் வந்த இயேசுவைப் போன்றவனே ஆதாம். 15 ஆனால் தேவனுடைய வரமானது ஆதாமின் பாவத்தைப் போன்றதல்ல. அந்த ஆதாமின் பாவத்தால் பலர் மாண்டு போனார்கள். ஆனால் தேவனிடமிருந்து பெற்ற கிருபையானது மிகவும் உயர்ந்தது. இயேசு கிறிஸ்து என்கிற ஒருவரின் கிருபையின் மூலமாகவே பலரும் தேவனுடைய வரத்தைப் பெற்றனர்.

16 ஒருமுறை ஆதாம் பாவம் செய்த பிறகு, அவன் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டான். ஆனால் தேவனுடைய கிருபையோ வேறு தன்மையானது. இந்த வரம் மக்களை தேவனுக்கேற்ற நீதிமான்களாக்கிற்று. 17 ஒருவன் செய்த பாவத்தால் மரணம் அனைவருக்கும் விதிக்கப்பட்டது. ஆனால் இப்போது சிலர் தேவனுடைய கிருபையை பெற்றார்கள். தேவனுடைய வரம் அவர்களை தேவனுக்கு வேண்டியவர்களாக்கியது. நிச்சயமாக அவர்கள் ஒரு மனிதரான இயேசு கிறிஸ்துவினாலே உண்மையான வாழ்வைப் பெற்று ஆளுவார்கள்.

18 எனவே ஆதாம் செய்த ஒரு பாவமானது மரணம் எனும் தண்டனையை அனைவருக்கும் தந்தது. அதுபோல் ஒரு மனிதரான இயேசுவின் நீதியானது அனைவரையும் நீதிமான்களாக்கும். அதோடு உண்மையான வாழ்வையும் அவர்களுக்குத் தந்தது. 19 ஒருவன் தேவனுக்குக் கீழ்ப்படியாததால் அனைவரும் பாவிகளாயினர். இது போல் ஒருவர் தேவனுக்குக் கீழ்ப்படிந்ததால் பலர் நீதிமான்களாகுவர். 20 நியாயப்பிரமாணம் வந்த பிறகு பாவங்களும் அதிகரித்தன. மக்கள் மிகுதியாகப் பாவம் செய்யும்போது தேவனும் தமது கிருபையை அதிகமாகக் காட்டுகிறார். 21 ஒரு முறை பாவம் ஆட்சி செய்து மரணத்துக்கு ஏதுவாயிற்று. இதே வழியில் கிருபையானது நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீதியினாலே நித்திய ஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

எரேமியா 43

43 எனவே எரேமியா ஜனங்களுக்கு அவர்களது தேவனாகிய கர்த்தர் சொன்ன வார்த்தையைச் சொல்லி முடித்தான். கர்த்தர் ஜனங்களுக்குச் சொல்லும்படி எரேமியாவை அனுப்பியவாறு எல்லாவற்றையும் சொன்னான்.

ஓசாயாவின் மகனாகிய அசரியாவும் கரேயாவின் மகனான யோகனானும் மற்றும் சிலரும் இறுமாப்போடும் பிடிவாதமானவர்களாகவும் இருந்தனர். அவர்கள் எரேமியாவிடம் கோபம் கொண்டனர். அவர்கள் எரேமியாவிடம், “எரேமியா, நீ பொய் சொல்லுகிறாய். எங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னை, ‘நீங்கள் எகிப்துக்கு வாழ போகவேண்டாம்’ என்று எங்களிடம் சொல்ல அனுப்பவில்லை. எரேமியா, நேரியாவின் மகனான பாருக் எங்களுக்கு எதிராக உன்னை ஏவியிருக்கிறான் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களை பாபிலோனிய ஜனங்களிடம் கொடுக்குமாறு அவன் விரும்புகிறான். நீ இதனைச் செய்யுமாறு அவன் விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கொல்ல முடியும். அல்லது நீ இதனைச் செய்யுமாறு விரும்புகிறான். அதனால் அவர்கள் எங்களைக் கைதிகளாக்கி பாபிலோனுக்குக் கொண்டுபோகமுடியும்” என்று சொன்னார்கள்.

எனவே யோகனான், படை அதிகாரிகள் மற்றும் அனைத்து ஜனங்களும் கர்த்தருடைய கட்டளைக்கு அடிபணியவில்லை. கர்த்தர் அவர்களுக்கு யூதாவில் தங்கும்படி கட்டளையிட்டிருந்தார். ஆனால் கர்த்தருக்கு அடிபணிவதற்குப் பதிலாக, யோகனான் மற்றும் படை அதிகாரிகளும் தப்பியவர்களை யூதாவில் இருந்து எகிப்துக்குக் கொண்டு சென்றனர். கடந்த காலத்தில் பகைவர் பிற நாடுகளுக்கு அவர்களை எடுத்துச் சென்றனர். ஆனால் அவர்கள் யூதாவிற்குத் திரும்பினார்கள். இப்பொழுது யோகனான் மற்றும் அனைத்து படையதிகாரிகளும் எல்லா ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோரை எகிப்துக்கு வழி நடத்திக் கொண்டு சென்றனர். அந்த ஜனங்களுடன் அரசனின் மகள்களும் இருந்தனர். (நேபுசராதான் அவர்களை கவனித்துக்கொள்ளும்படி கெதலியாவை நியமித்தான். நேபுசராதான் பாபிலோனிய அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதியாக இருந்தான்.) யோகனான் தீர்க்கதரிசி எரேமியாவையும் நேரியாவின் மகனான பாருக்கையும் அழைத்துப் போனான். அந்த ஜனங்கள் கர்த்தர் சொன்னவற்றைக் கேட்கவில்லை. எனவே அனைத்து ஜனங்களும் எகிப்துக்குச் சென்றனர். அவர்கள் தக்பானேஸ் எனும் நகரத்திற்குச் சென்றனர்.

தக்பானேஸ் நகரத்தில், கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான். “எரேமியா, சில பெரிய கற்களை எடுத்து தக்பானேஸ் நகரத்தில், அவற்றைப் பார்வோனுடைய அரண்மனைக்கு முன்னால் ஒலிமுக வாசலில் செங்கல் நடைபாதையில் களிமண்ணுக்குள் புதைத்துவை. யூதாவின் ஆட்கள் எல்லோரும் பார்க்கும்போதே நீ இவற்றைச் செய். 10 பிறகு, உன்னை கவனித்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஆட்களிடம் கூறு: ‘இதுதான் இஸ்ரவேலின் தேவனாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுவது. நான் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரை இங்கே வர அனுப்புவேன். அவன் எனது வேலைக்காரன். நான் புதைத்து வைத்த இக்கல்லின் மேல் அவனது சிங்காசனத்தை வைக்கச் செய்வேன். அவன் தனது இராஜ கூடாரத்தை அதன் மேல் விரிப்பான். 11 நேபுகாத் நேச்சார் இங்கே வந்து எகிப்தைத் தாக்குவான். மரிக்க வேண்டியவர்களுக்கு அவன் மரணத்தைக் கொண்டுவருவான். அவன் அடிமைத்தனத்திற்கு ஏதுவானவர்களை சிறையிருக்கச் செய்வான். வாளால் கொல்லப்படத்தக்கவர்களைக் கொல்ல வாளை அவன் கொண்டு வருவான். 12 நேபுகாத்நேச்சார் எகிப்திலுள்ள பொய்த் தெய்வங்களின் கோயிலில் நெருப்பை மூட்டுவான். அவன் அக்கோயில்களை எரிப்பான். அவன் அந்த விக்கிரகங்களை வெளியே எடுத்துப் போடுவான். ஒரு மேய்ப்பன் தனது ஆடையைச் சுத்தப்படுத்துவதற்கு அதில் உள்ள மூட்டைப்பூச்சிகளையும் ஓட்டுப்பூச்சிகளையும் எடுப்பான். அதே வழியில் நேபுகாத்நேச்சார் எகிப்தைச் சுத்தப்படுத்துவான். பிறகு அவன் பத்திரமாக எகிப்தை விடுவான். 13 நேபுகாத்நேச்சார் எகிப்தின் சூரியத்தேவன் ஆலயத்திலுள்ள நினைவுக் கற்களை அழிப்பான். எகிப்தில் உள்ள பொய்த் தெய்வங்களின் ஆலயங்களை அவன் எரித்துப்போடுவான்.’” என்றான்.

சங்கீதம் 19

இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

19 வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன.
    தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.
ஒவ்வொரு புதுநாளும் அந்தக் கதையை மேலும் கூறும்.
    ஒவ்வொரு இரவும் தேவனுடைய வல்லமையை மேலும் மேலும் உணர்த்தும்.
உண்மையில் பேச்சையோ, வார்த்தையையோ கேட்கமுடியாது.
    நாம் கேட்கவல்ல சத்தத்தை அவை எழுப்புவதில்லை.
ஆனால் அவற்றின் “குரல்” உலகமெங்கும் செல்கிறது.
    அவற்றின் “வார்த்தைகள்” பூமியின் இறுதியை எட்டுகின்றன.

    ஆகாயம் சூரியனின் வீட்டைப் போன்றிருக்கும்.
படுக்கையறையிலிருந்து வெளிவரும் மகிழ்ச்சியான மணமகனைப்போல் சூரியன் வெளிப்படும்.
    பந்தயத்திற்கு ஆசையாய் காத்திருக்கும் ஓட்ட வீரனைப் போல் சூரியன் வானத்தின் குறுக்கே தன் வழியில் செல்லும்.
ஆகாயத்தின் ஒருமுனையில் தொடங்கி அதன் மறுமுனை வரைக்கும் சூரியன் எங்கும் ஓடும்.
    அதன் வெப்பத்திற்கு எதுவும் தப்ப இயலாது. கர்த்தருடைய போதனைகளும் அப்படிப்பட்டவையே.

கர்த்தருடைய போதனைகள் குறையற்றவை.
    அவை தேவனுடைய ஜனங்களுக்குப் பெலனைக் (ஆற்றலை) கொடுக்கும்.
கர்த்தருடைய உடன்படிக்கை நம்பத்தக்கது.
    அறிவற்றோர் ஞானமடைவதற்கு அது உதவும்.
கர்த்தருடைய சட்டங்கள் நியாயமானவை.
    அவை ஜனங்களை சந்தோஷப்படுத்தும்.
கர்த்தருடைய கட்டளைகள் நல்லவை.
    வாழத்தக்க வழியை அவை ஜனங்களுக்குக் காட்டும்.

கர்த்தரைத் தொழுதுகொள்வது எப்போதும் வெளிச்சமாய் பிரகாசிக்கிற ஒளி போன்றது.
    கர்த்தருடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவை, செம்மையானவை. அவை முற்றிலும் சரியானவை.
10 கர்த்தருடைய போதனைகள் சுத்தமான பொன்னைக்காட்டிலும் பெருமதிப்புடையவை.
    தேனடையிலிருந்து வரும் உயர்ந்த தேனைக் காட்டிலும் அவை இனிமையானவை.
11 கர்த்தருடைய போதனைகள் அவர் வேலையாளை எச்சரிக்கின்றன.
    அவருக்குக் கீழ்ப்படிவதால் நல்லவை நிகழும்.

12 கர்த்தாவே, ஒருவனும் தன் எல்லா பிழைகளையும் காணமுடியாது.
    எனவே மறைவான பாவங்கள் நான் செய்யாதிருக்க உதவும்.
13 கர்த்தாவே, நான் செய்ய விரும்பும் பாவங்களிலிருந்து என்னை விலக்கும்.
    அப்பாவங்கள் என்னை ஆள அனுமதியாதிரும்.
நீர் உதவினால்
    நான் பாவங்களிலிருந்து விலகி தூயவனாய் இருக்க முடியும்.
14 என் வார்த்தைகளும் எண்ணங்களும் உமக்கு ஏற்றதாய் இருக்கட்டும்.
    கர்த்தாவே, நீர் என் பாறை. நீரே என்னை விடுவிப்பவர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center