M’Cheyne Bible Reading Plan
தேவன் சாமுவேலை அழைக்கிறார்
3 சிறுவனான சாமுவேல், ஏலியின் கீழே கர்த்தருக்கு சேவை செய்து வந்தான். அந்த நாட்களில் கர்த்தர் ஜனங்களோடு நேரடியாக அடிக்கடி பேசுவதில்லை. அங்கே மிகக் குறைந்த தரிசனங்களே இருந்தன.
2 ஏலியின் கண்கள் பலவீனமாகி ஏறக்குறைய அவன் குருடாகிவிட்டான். ஒரு நாள் அவன் படுக்கையில் கிடந்தான். 3 சாமுவேல் தேவனுடைய பரிசுத்தப் பெட்டி இருக்கிற கர்த்தருடைய ஆலயத்தில் படுத்திருந்தான். கர்த்தருடைய விளக்கானது இன்னும் எரிந்துக்கொண்டிருந்தது. 4 கர்த்தர் சாமுவேலை அழைத்தார். சாமுவேலோ, “நான் இங்கே இருக்கிறேன்” என்றான். 5 ஏலி தன்னை அழைப்பதாக சாமுவேல் நினைத்துக்கொண்டான். எனவே சாமுவேல் ஏலியின் அருகில் ஓடிச் சென்றான். “நான் இங்கே இருக்கிறேன். ஏன் என்னை அழைத்தீர்கள்” என்று கேட்டான்.
ஆனால் ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.
சாமுவேல் படுக்கைக்குத் திரும்பி போனான். 6 மீண்டும் கர்த்தர், “சாமுவேலே!” என்று கூப்பிட்டார். மீண்டும் சாமுவேல் ஏலியிடம் ஓடிப் போனான். அவனிடம், “நான் இங்கே இருக்கிறேன். என்னை ஏன் கூப்பிட்டீர்கள்?” என்று கேட்டான்.
ஏலியோ, “நான் உன்னை அழைக்கவில்லை. படுக்கைக்குத் திரும்பிப் போ” என்றான்.
7 சாமுவேல் அதுவரை கர்த்தரைப்பற்றி அறியாமல் இருந்தான். கர்த்தர் அதுவரை அவனிடம் நேரடியாகப் பேசினதில்லை.
8 கர்த்தர் சாமுவேலை மூன்றாவது முறையாக அழைத்தார். மீண்டும் சாமுவேல் எழுந்து ஏலியிடம் ஓடிப்போனான். “நான் இங்கே இருக்கிறேன், என்னை ஏன் அழைத்தீர்கள்” என்றான்.
பின்னர் ஏலி, சாமுவேலை அழைத்தது கர்த்தர் என்பதை அறிந்துக் கொண்டான். 9 ஏலி சாமுவேலிடம், “படுக்கைக்குப் போ, அவர் உன்னை மீண்டும் அழைத்தால், ‘கர்த்தாவே, பேசும். நான் உமது தாசன். நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்று சொல்” என்றான்.
எனவே சாமுவேல் மீண்டும் படுக்கைக்குத் திரும்பிப்போனான். 10 கர்த்தர் வந்து அங்கே நின்றார். அவர் முன்பு போலவே செய்தார். அவர், “சாமுவேலே, சாமுவேலே!” என்று அழைத்தார்.
சாமுவேலோ, “கர்த்தாவே பேசும், நான் உமது தாசன், நான் கவனித்துக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்” என்றான்.
11 கர்த்தர் சாமுவேலிடம், “நான் இஸ்ரவேலில் சில காரியங்களை விரைவில் செய்வேன். அதைப்பற்றி கேள்விப்படுகிற ஜனங்கள் அதிர்ச்சி அடைவார்கள். 12 நான் ஏலிக்கும் அவன் குடும்பத்திற்கும் எதிராகச் செய்வேன் என்று சொன்னப்படியே ஒவ்வொன்றையும் தொடக்கம் முதல் இறுதிவரை செய்வேன். 13 நான் ஏலியிடம் அவனது குடும்பத்தை என்றென்றைக்கும் தண்டிக்கப் போவதாகக் கூறியிருக்கிறேன். அவன் மகன்கள் அவர்களாகவே சாபத்தை வரவழைத்துக் கொண்டனர். அவர்கள் தேவனுக்கு விரோதமாகக் கெட்டவற்றைப் பேசியும் செய்தும் வந்தனர் என்பதை ஏலி அறிந்திருந்தும், ஏலி அவர்களைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டான். 14 அதனால் தான் ஏலியின் குடும்பத்தார் செய்த பாவங்கள் ஒருபோதும், பலிகளாலோ, தானியக் காணிக்கையாலோ தீர்வதில்லை என்று நான் ஆணையிட்டிருக்கிறேன்” என்றார்.
15 விடியும்வரை சாமுவேல் படுக்கையிலேயே படுத்திருந்தான். அதிகாலையிலேயே எழுந்து கர்த்தருடைய ஆலய கதவைத் திறந்தான். ஏலியிடம் கர்த்தருடைய தரிசனத்தைப் பற்றிக் கூற சாமுவேல் பயந்தான்.
16 ஆனால் ஏலியோ சாமுவேலிடம், “என் மகனே சாமுவேல்!” என்று அழைத்தான். அதற்கு சாமுவேல், “ஐயா” என்றான்.
17 ஏலி அவனிடம், “கர்த்தர் உன்னிடம் என்ன சொன்னார்? அதனை என்னிடம் மறைக்கவேண்டாம். தேவன் உன்னிடம் சொன்னச் செய்தியை மறைத்தால் தேவன் உன்னைத் தண்டிப்பார்” என்றான்.
18 அதனால் சாமுவேல் ஏலியிடம் எல்லாவற்றையும் கூறினான். அவன் ஏலியிடம் எதையும் மறைத்து வைக்கவில்லை.
ஏலி, “அவர் கர்த்தர். அவருக்குச் சரியெனத் தோன்றுவதை அவர் செய்யட்டும்” என்றான்.
19 சாமுவேல் வளரும்போது கர்த்தர் அவனோடேயே இருந்தார். சாமுவேலின் எந்தச் செய்தியும் பொய்யாக நிரூபிக்க கர்த்தர் அனுமதிக்கவில்லை. 20 பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் அனைவருக்கும் தாண் முதல் பெயெர்செபா வரைக்கும் சாமுவேல் உண்மையான கர்த்தருடைய தீர்க்கதரிசி என்றறிந்தார்கள். 21 சீலோவில் தொடர்ந்து கர்த்தர் சாமுவேலுக்கு தம்மை காண்பித்து வந்தார், மற்றும் அங்கே தம்முடைய வார்த்தையினாலேயே கர்த்தர் சாமுவேலுக்குத் தம்மை வெளிப்படுத்தி வந்தார்.
3 எனவே மற்றவர்களிடம் இல்லாத உயர்வு யூதர்களிடம் மட்டும் என்ன உள்ளது? அவர்களின் விருத்தசேதனம் என்பதில் அடங்கி இருக்கும் சிறப்பு என்ன? 2 யூதர்களிடம் நிறைய சிறப்புத் தன்மைகள் உள்ளன. தேவன் அவர்களை நம்பியே தம் போதனைகளைக் கொடுத்தார். இதுதான் மிக சிறப்பான மேன்மையாகும். 3 சில யூதர்கள் தேவனுடைய நம்பிக்கைக்கு உரியவர்களாக இல்லை என்பது உண்மையாகும். எனினும் அது தேவனுடைய வாக்குறுதியை மதிப்பற்றதாகச் செய்யாது. 4 உலகில் உள்ள அத்தனை மக்களும் பொய்யராகிப் போனாலும் தேவன் தொடர்ந்து உண்மையுள்ளவராகவே இருப்பார்.
“நீர் உமது வார்த்தைகளில் நீதியுள்ளவராய் விளங்குவீர்.
உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடைவீர்” (A)
என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டுள்ளது.
5 நாம் தவறு செய்யும்போது, தேவன் சரியானவர் என்று தெளிவாக அது காட்டிவிடும். எனவே தேவன் நம்மைத் தண்டிக்கும்போது அவர் நீதியில்லாதவர் என்று கூற முடியுமா? (சிலர் இவ்வாறு கூறுவதாக எண்ணுகிறேன்.) 6 கூடாது நம்மை தேவன் தண்டிக்க முடியாமல் போனால், பின்பு உலகத்தையும் தேவனால் நியாயந்தீர்க்க முடியாமல் போகும்.
7 “நான் பொய் சொல்லும்போது அது தேவனுக்குப் பெருமையே சேர்க்கிறது. ஏனெனில் என் பொய் தேவனுடைய உண்மையை விளங்க வைக்கிறது. அப்படி இருக்கும்போது நான் ஏன் பாவி என்று தீர்ப்பளிக்கப்பட வேண்டும்?” என்று ஒருவன் கேட்கிறான். 8 “நாம் தீமை செய்வோம். அதன் மூலம் நன்மை வரும்” என்று சொல்வதைப் போலாகும் அது. ஆனால் சிலர் அவ்வாறுதான் நாங்கள் போதிக்கிறோம் என்று விமர்சிக்கிறார்கள். அவர்கள் சொல்வது தவறு. அவர்கள் கண்டிக்கப்பட வேண்டும்.
அனைவரும் குற்றவாளிகளே
9 யூதர்களாகிய நாம் மற்றவர்களைக் காட்டிலும் சிறப்பு மிக்கவர்களா? இல்லை. யூதர்களும், யூதரல்லாதவர்களும் சமமானவர்கள் என்று ஏற்கெனவே கூறியிருக்கிறோம். அவர்கள் எல்லாம் குற்றம் உடையவர்களே. 10 எழுதப்பட்டபடி,
“சரியானவன் ஒருவன் கூட இல்லை.
11 புரிந்துகொள்கிறவனும் எவனுமில்லை.
உண்மையில் தேவனோடிருக்க விரும்புகிறவனும் யாரும் இல்லை.
12 எல்லோரும் வழிதப்பியவர்கள்.
எல்லோருமே பயனற்றுப்போனவர்கள்.
நல்லவை செய்பவன் ஒருவனாகிலும் இல்லை.” (B)
13 “அவர்களின் வாய்கள் திறந்த சவக் குழிகள் போன்றவை;
தங்கள் நாக்குகளை பொய் சொல்லவே பயன்படுத்துகிறார்கள்.” (C)
“அவர்கள் சொல்லும் காரியங்கள் பாம்புகளின் விஷத்தைப் போன்றது.” (D)
14 “அவர்களது வாய் சபிப்பினாலும் கசப்பினாலும் நிறைந்துள்ளது.” (E)
15 “அவர்கள் எப்போதும் தாக்கவும் கொலை செய்யவும் தயாராக உள்ளனர்.
16 அவர்கள் செல்லும் வழிகளில் நாசமும் துன்பமும் உள்ளன.
17 அவர்களுக்குச் சமாதானத்தின் வழி தெரியாது.” (F)
18 “அவர்களிடம் தெய்வ பயமில்லை; தேவனிடம் மரியாதையும் இல்லை.” (G)
19 நியாயப்பிரமாணம் சொல்லுவதெல்லாம் அதற்கு உட்பட்டவர்களுக்கே. இது யூதர்களின் வாய்களை அடைத்துவிட்டது. இது உலகத்தார் அனைவரையும் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழ்ப்படியும்படி செய்தது. 20 ஏனென்றால் எந்த மனிதனும் நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை. நியாயப்பிரமாணத்தின் நோக்கம் பாவம் பற்றிய உணர்வைக் கொண்டு வருவதுதான்.
நீதி செய்யும் தேவன்
21 சட்டவிதிகளின் உதவி இல்லாமலேயே தேவன் மக்களைச் சரியான வழியில் நடத்துகிறார். தேவன் இப்போது நமக்குப் புதிய வழியைக் காட்டியுள்ளார். சட்டங்களும், தீர்க்கதரிசிகளும் இப்புதிய வழியைப்பற்றிப் பேசியுள்ளனர். 22 இயேசு கிறிஸ்துவின் மேல் வைத்த விசுவாசத்தின் மூலம் தேவன் மக்களை சரியான வழிப்படுத்துகிறார். கிறிஸ்துவில் விசுவாசம் வைத்திருக்கும் எல்லாருக்கும் தேவன் இதைச் செய்தார். எந்த வேறுபாடும் இல்லை. 23 மக்களனைவரும் பாவம் செய்து தேவனுடைய மகிமையைப் பெறத் தகுதியில்லாதவராகிவிட்டனர். 24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவில் உள்ள இரட்சிப்பைக் கொண்டு நீதிமான்களாக்கப்படுவார்கள். 25 விசுவாசத்தின் மூலம் பாவிகள் மன்னிக்கப்பட தேவன் இயேசுவை ஒரு வழியாக வகுத்தார். இயேசுவின் இரத்தத்தால் தேவன் இதைச் செய்தார். எது சரியானதோ, நியாயமானதோ அதையே தேவன் செய்வார் என்பதை இது காட்டும். கடந்த காலத்தில் தேவன் மிகப் பொறுமையாக இருந்தார். மக்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்காமல் விட்டார். 26 இவ்வாறு தேவன் சரியான வழியில் நியாயம்தீர்ப்பார் என்பதை இன்று இயேசு கிறிஸ்துவின் மூலம் வெளிக் காட்டியுள்ளார். அதே நேரத்தில் இயேசுவில் விசுவாசம் உள்ள எவரையும் தேவன் நீதிமான்களாக்குகிறார்.
27 எனவே நம்மை நாமே மேன்மை பாராட்டிக்கொள்ள ஏதேனும் காரணம் உள்ளதாக இல்லை. எதற்காக இல்லை? சட்ட வழிகளின்படி வாழ்வதால் அல்ல, விசுவாசத்தால் மட்டுமே. நாம் பெருமை பாராட்டுவதை நிறுத்த வேண்டும். எதற்காக? 28 ஏனென்றால் ஒருவன் சட்டவழிகளின்படி வாழ்வதால் நீதிமானாக முடியாது; இயேசுவை விசுவாசிப்பதன் மூலமே நீதிமானாக முடியும். இதுவே நமது நம்பிக்கை. 29 தேவன் என்பவர் யூதர்களுக்கு மட்டும் உரியவர் அல்லர். அவர் யூதர் அல்லாதவர்களுக்கும் உரியவரே. 30 ஒரே ஒரு தேவனே உள்ளார். அவரே யூதர்களையும் அவர்கள் விசுவாசத்தின் மூலம் நீதிமான்களாக்குகிறார். அவ்வாறே யூதரல்லாதவர்களையும் ஆக்குகிறார். 31 விசுவாசத்தின் வழியைப் பின்பற்றுவதன் மூலம் சட்ட விதிகளை அழித்துவிடுகிறோமா? இல்லை. இவ்வாறு நாம் உண்மையாகச் சட்டத்தைக் கைக்கொள்கிறோம்.
41 ஏழாவது மாதத்தில், நெத்தானியாவின் மகனான இஸ்மவேல் அகிக்காமின் மகனான கெதலியாவிடம் வந்தான். (நெத்தானியா எலிசாமாவின் மகன்.) இஸ்மவேல் அவனது பத்து ஆட்களோடு வந்தான். அந்த ஆட்கள் மிஸ்பா பட்டணத்துக்கு வந்தனர். இஸ்மவேல் அரச குடும்பத்தில் ஒரு உறுப்பினன். அவன் யூதா அரசனிடம் ஒரு அதிகாரியாக இருந்தவன். இஸ்மவேலும் அவனது ஆட்களும் கெதலியாவோடு உணவு உண்டனர். 2 அவர்கள் சேர்ந்து உண்ணும்பொழுது, இஸ்மவேலும் அவனோடு வந்த பத்துபேரும் தீடீரென்று எழுந்து அகிக்காமின் மகனான கெதலியாவை வாளால் கொன்றனர். கெதலியா பாபிலோன் அரசனால் யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவன். 3 இஸ்மவேல், கெதலியாவோடு மிஸ்பாவில் இருந்த மற்ற ஜனங்களையும் கொன்றுவிட்டான். இஸ்மவேல் கெதலியாவோடு இருந்த பாபிலோனிய வீரர்களையும் கொன்றான்.
4-5 கெதலியா கொலை செய்யப்பட்ட அந்நாளுக்குப் பிறகு, 80 பேர் மிஸ்பாவுக்கு வந்தனர். அவர்கள் தானியக் காணிக்கைகளையும் நறுமணப் பொருட்களையும் கர்த்தருடைய ஆலயத்திற்குக் கொண்டு வந்தனர். அந்த 80 பேரும் தங்கள் தாடிகளை சிரைத்திருந்தனர், தம் ஆடைகளைக் கிழித்திருந்தனர், தம்மைத்தாமே காயப்படுத்தியிருந்தனர். அவர்கள் சீகேம், சீலோ, சமாரியா ஆகிய இடங்களிலிருந்து வந்தனர். அவர்களில் எவருக்கும் கெதலியா கொலை செய்யப்பட்டது தெரியாது. 6 இஸ்மவேல் மிஸ்பாவை விட்டு அந்த 80 பேரையும் சந்திக்கப் போனான். அவர்களைச் சந்திக்க நடந்துப் போகும்போது அவன் அழுதான். இஸ்மவேல் அந்த 80 பேரையும் சந்தித்து அவர்களிடம், “என்னோடு வந்து அகிக்காமின் மகனான கெதலியாவைச் சந்தியுங்கள்” என்றான். 7 அந்த 80 பேரும் அவனோடு மிஸ்பாவுக்குச் சென்றனர். பிறகு இஸ்மவேலும் அவனது ஆட்களும் அந்த 80 பேரைக் கொன்று அந்த 80 பேரின் உடல்களையும் ஆழமான ஒரு குழிக்குள் போடத் துவங்கினார்கள். 8 ஆனால் அவர்களுள் 10 பேர் இஸ்மவேலிடம், “எங்களைக் கொல்லாதே. எங்களிடம் கோதுமையும் பார்லியும் உள்ளன. எங்களிடம் எண்ணெயும் தேனும் உள்ளன. நாங்கள் அவற்றை வயல்களில் மறைத்து வைத்துள்ளோம். அவற்றை உனக்குக் கொடுக்க விரும்புகிறோம்” என்றனர். எனவே இஸ்மவேல் அந்தப் பத்துப் பேரையும் தனியாக விட்டுவிட்டான். அவன் அவர்களை மற்றவர்களோடு கொல்லவில்லை. 9 (அந்த அகழி மிகப் பெரியது. இது ஆசா என்னும் யூதா அரசனால் கட்டப்பட்டது. ஆசா அரசன் இந்த அகழியைக் கட்டினான். எனவே போர்க் காலங்களில் அதில் தண்ணீர் இருக்கும். இஸ்ரவேல் அரசனான பாஷாவிடமிருந்து நகரத்தைக் காப்பாற்ற இதனைச் செய்தான். இது நிரம்பும்வரை இஸ்மவேல் மரித்த உடல்களைப் போட்டான்.)
10 இஸ்மவேல், மிஸ்பா நகரத்தில் இருந்த அனைத்து ஜனங்களையும் கைப்பற்றினான். பின்னர் அம்மோனியர் வாழ்ந்த நகரத்தை கடக்கப் புறப்பட்டான். அவர்களில் அரசனது மகள்களும் மற்ற விடுபட்ட மனிதர்களும் இருந்தனர். இவர்களை கெதலியா கவனித்துக்கொள்ளும்படி நேபுசாராதானால் தேர்ந்தெடுக்கப்பட்டவன். நேபுசராதான், பாபிலோன் அரசனின் சிறப்புக் காவல் படையின் தளபதி.
11 கரேயாவின் மகனான யோகனானும் அவனோடு இருந்த படை அதிகாரிகளும் இஸ்மவேல் செய்த அனைத்து கெட்டச் செயல்களைப்பற்றியும் கேள்விப்பட்டனர். 12 எனவே யோகனானும் படை அதிகாரிகளும் பல ஆட்களும் நெத்தானியாவின் மகனான இஸ்மவேலோடு சண்டையிடப் போனார்கள். அவர்கள் கிபியோன் நகரத்திலுள்ள பெருங்குளத்து தண்ணீர் அருகில் அவனைப்பிடித்தனர். 13 இஸ்மவேலால் கைது செய்யப்பட்டவர்கள் யோகனானையும் அவனோடு இருந்த படை அதிகாரிகளையும் பார்த்தனர். அந்த ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 14 பிறகு இஸ்மவேலால் சிறை பிடிக்கப்பட்ட அந்த ஜனங்கள் அனைவரும் கரேயாவின் மகனான யோகனானிடம் ஓடிச் சென்றனர். 15 ஆனால் இஸ்மவேலும் அவனது எட்டு ஆட்களும் யோகனானிடமிருந்து தப்பித்துக்கொண்டனர். அவர்கள் அம்மோனிய ஜனங்களிடம் ஓடிப்போனார்கள்.
16 எனவே, கரேயாவின் மகனான யோகனானும் அவனது படையதிகாரிகளும் கைதிகளை விடுவித்தனர். இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்திருந்தான். மிஸ்பாவிலுள்ள ஜனங்களைக் கைப்பற்றியிருந்தான். மீதியிருந்தவர்களில் வீரர்கள், பெண்கள், குழந்தைகள், சபை அதிகாரிகள் என இருந்தனர். யோகனான் அவர்களை கிபியோன் நகரிலிருந்து திரும்பக் கொண்டு வந்தான்.
எகிப்திற்குத் தப்பித்தல்
17-18 யோகனானும் மற்றப் படை அதிகாரிகளும் கல்தேயர்களுக்கு பயந்தனர். பாபிலோனின் அரசன் கெதலியாவை யூதாவின் ஆளுநராகத் தேர்ந்தெடுத்திருந்தான். ஆனால் இஸ்மவேல் கெதலியாவைக் கொலை செய்துவிட்டான். யோகனான், கல்தேயர்கள் கோபமாக இருப்பார்கள் என்று அஞ்சினான். எனவே அவர்கள் எகிப்துக்கு ஓடிப்போக முடிவு செய்தனர். எகிப்துக்குப் போகும் வழியில் அவர்கள் கெருத்கிம்காமினில் தங்கினார்கள். கெருத்கிம்காமின் பெத்லேகம் நகருக்கு அருகில் இருக்கிறது.
தாவீதின் ஒரு ஜெபம்
17 கர்த்தாவே, நியாயத்திற்கான என் ஜெபத்தைக் கேளும்.
எனது ஜெபப் பாடலுக்குச் செவிகொடுத்தருளும்.
எனது நேர்மையான ஜெபத்தைக் கேளும்.
2 என்னைப் பற்றிய சரியான முடிவு எடுப்பீர்.
உம்மால் உண்மையைக் காணமுடியும்.
3 நீர் என் இருதயத்தின் ஆழத்தைப் பார்த்தீர்.
இரவு முழுவதும் என்னோடிருந்தீர்.
என் இருதயத்தை ஆராய்ந்து என்னில் ஒரு குற்றத்தையும் நீர் காணவில்லை.
நான் எந்தத் தீய செயல்களையும் திட்டமிடவில்லை.
4 உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதற்கு என்னால் இயன்றமட்டும் முயன்றேன்.
5 உமது வழிமுறைகளை பின்பற்றினேன்.
உமது வாழ்க்கை வழிகளிலிருந்து என் பாதங்கள் விலகவில்லை.
6 தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர்.
எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
7 தேவனே, உம்மை நம்புகிற உமது வலது பக்கத்திலிருக்கும் ஜனங்களுக்கு உதவுகிறீர்.
உம்மைப் பின்பற்றுகிறவனின் இந்த ஜெபத்திற்குச் செவிகொடும்.
8 கண்ணின் மணியைப்போல என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
உமது சிறகுகளின் நிழலில் என்னை மறைத்துக்கொள்ளும்.
9 கர்த்தாவே, என்னை அழிக்க நினைக்கிற தீயோரிடமிருந்து என்னை மீட்டருளும்.
என்னைத் தாக்க முயல்கிற ஜனங்களிடமிருந்து என்னைப் பாதுகாத்துக்கொள்ளும்.
10 தங்களைப் பற்றிப் பெருமைபாராட்டுகிற அத்தீயோர் தேவனுக்குச் செவிசாய்க்க முடியாதபடி
பெருமையுடையோராய் இருக்கிறார்கள்.
11 அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள்.
இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள்.
என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.
12 பிற விலங்குகளைக் கொன்று சாப்பிடக் காத்திருக்கும் சிங்கத்தைப்போன்று அத்தீயோர் காணப்படுகிறார்கள்.
தாக்கக் காத்திருக்கும் சிங்கத்தைப்போல் மறைந்திருக்கிறார்கள்.
13 கர்த்தாவே, எழுந்து பகைவரிடம் சென்று, அவர்கள் சரணடையச் செய்யும்.
உமது வாளால் அத்தீயோரிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
14 கர்த்தாவே, உயிருள்ளோர் வாழும் தேசத்திலிருந்து அத்தீயோரை
உமது வல்லமையால் அப்புறப்படுத்தும்.
கர்த்தாவே, பலர் உம்மிடம் உதவிக்காக வருவார்கள். இவ்வாழ்க்கையில் அதிகம் பலனில்லை.
அவர்களுக்கு அதிக உணவளியும்.
வேண்டுவனவற்றை அவர்கள் பிள்ளைகளுக்குக் கொடும்.
அவர்களின் பிள்ளைகளுக்கும் மிகுந்திருக்கும்படியாக அப்பிள்ளைகளுக்குத் திருப்தியாய் உணவளியும்.
15 நான் நீதிக்காக ஜெபிக்கிறேன்.
கர்த்தாவே, உமது முகத்தைக் காண்பேன்.
கர்த்தாவே, உம்மைப் பார்ப்பதால் முழுமையான திருப்திகொள்வேன்.
2008 by World Bible Translation Center