M’Cheyne Bible Reading Plan
லேவியனான மனிதனும் அவனது வேலைக்காரியும்
19 அக்காலத்தில் இஸ்ரவேலருக்கு அரசன் இருக்கவில்லை. எப்பிராயீம் என்னும் மலைநாட்டில் ஒரு லேவியன் வாழ்ந்து வந்தான். அவனுடன் இருந்த வேலைக்காரி, அவனுக்கு மனைவியைப் போல வாழ்ந்து வந்தாள். அந்த வேலைக்காரி யூதா தேசத்துப் பெத்லெகேமைச் சேர்ந்தவள். 2 அந்த வேலைக்காரி லேவியனோடு ஒரு விவாதம் செய்து அவனை விட்டுவிட்டு, யூதாவிலுள்ள பெத்லேகேமிலிருந்த தனது தந்தையின் வீட்டிற்குத் திரும்பிச் சென்று, அங்கு நான்கு மாதங்கள் தங்கியிருந்தாள். 3 பின்பு அவள் கணவன் அவளிடம் சென்றான். அவள் அவனோடு வரும்படி அழைப்பதற்காக அவளோடு அன்பாகப் பேச விரும்பினான். அவன் தன்னோடு தன் பணியாளையும், இரண்டு கழுதைகளையும் அழைத்துச் சென்றான். லேவியன் அவளது தந்தையின் வீட்டை அடைந்தான். லேவியனைக் கண்ட அவளது தந்தை சந்தோஷம் அடைந்து அவனை வரவேற்பதற்கு வெளியே வந்தான். 4 அப்பெண்ணின் தந்தை லேவியனை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். லேவியனின் மாமானார் அவனைத் தங்கிச் செல்லுமாறு கூறினான். எனவே லேவியன் மூன்று நாட்கள் அங்கு தங்கியிருந்தான். அவன் மாமனார் வீட்டிலேயே உண்டு, பருகித் தூங்கினான்.
5 நான்காம் நாளில் அவர்கள் அதிகாலையில் எழுந்தனர். லேவியன் புறப்படுவதற்குத் தயாரானான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை, தன் மருமகனைப் பார்த்து, “முதலில் ஏதாவது சாப்பிடு. சாப்பிட்டப் பின்னர் புறப்படலாம்” என்றான். 6 எனவே லேவியனும் அவனது மாமனாரும் சாப்பிடவும் குடிக்கவும் உட்கார்ந்தனர். பின் அந்த இளம் பெண்ணின் தந்தை லேவியனை நோக்கி, “இன்றிரவு தயவுசெய்து இங்கேயே தங்கு இளைப்பாறி மகிழ்ச்சியோடு இரு. நடுப்பகல் வரைக்கும் இருந்து போகலாம்” என்றான். எனவே இருவரும் உண்ண ஆரம்பித்தனர். 7 வேவியன் புறப்படுவதற்கு எழுந்தான். ஆனால் அன்றிரவும் அவனைத் தங்கும்படியாக அவனது மாமனார் வேண்டினான்.
8 பின்பு, ஐந்தாம் நாளில், லேவியன் அதிகாலையில் எழுந்தான். புறப்படுவதற்கு அவன் தயாரானான். ஆனால் அப்பெண்ணின் தந்தை மருமகனை நோக்கி, “முதலில் ஏதேனும் சாப்பிடு. களைப்பாறி நடுப்பகல் வரைக்கும் தங்கியிரு” என்றான். எனவே இருவரும் சேர்ந்து உண்டனர்.
9 பின் லேவியனும், அவனது வேலைக்காரியும், அவனது வேலையாளும், புறப்படுவதற்கு எழுந்தனர். ஆனால் அந்த இளம் பெண்ணின் தந்தை, “இருள் சூழ்ந்து வருகிறது. பகல் மறைய ஆரம்பிக்கிறது. எனவே இரவு இங்கே தங்கி களித்திரு. நாளைக் காலையில் சீக்கிரமாக எழுந்து உன் வழியே செல்” என்றான்.
10 மற்றொரு இரவும் தங்கியிருக்க அந்த லேவியன் விரும்பவில்லை. அவன் தன் 2 கழுதைகளோடும், வேலைக்காரியோடும் புறப்பட்டான். அவன் பயணம் செய்து எபூசை நெருங்கினான். (எருசலேமுக்கு மற்றொரு பெயர் எபூசு.) 11 பகல் கழிந்தது. அவர்கள் எபூசு நகரத்திற்கு அருகில் வந்தனர். எனவே பணியாள் எஜமானனாகிய லேவியனை நோக்கி, “இந்த எபூசு நகரத்தில் தங்கி இங்கு இரவைக் கழிப்போம்” என்றான்.
12 ஆனால் லேவியனாகிய அந்த எஜமானன், “இல்லை, இஸ்ரவேல் ஜனங்களில்லாத அந்நிய நகரத்திற்கு நாம் போகவேண்டாம், நாம் கிபியா நகரத்திற்குச் செல்வோம்” என்றான். 13 லேவியன், “வாருங்கள், நாம் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ செல்வோம். அந்த இரண்டு நகரங்களில் ஒன்றில் இரவில் தங்கலாம்” என்றான்.
14 லேவியனும் அவனோடிருந்தோரும் பயணத்தைத் தொடர்ந்தனர். கிபியாவில் அவர்கள் நுழைந்ததும் சூரியன் மறைந்தது. பென்யமீன் கோத்திரத்திற்குரிய பகுதியில் கிபியா இருந்தது. 15 எனவே அவர்கள் கிபியாவில் தங்கினார்கள். இரவை அந்த நகரில் கழிக்க எண்ணினார்கள். அவர்கள் நகர சதுக்கத்திற்கு வந்து அங்கு அமர்ந்தனர். ஆனால் இரவில் தங்குவதற்கு யாரும் அவர்களை அழைக்கவில்லை.
16 அன்று மாலை வயல்களிலிருந்து ஒரு முதியவன் நகரத்திற்குள் வந்தான். அவனுடைய வீடு எப்பிராயீம் மலை நாட்டிலிருந்தது. ஆனால் அவன் கிபியா நகரத்தில் வசித்துக்கொண்டிருந்தான். (கிபியாவின் ஆட்கள் பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள்.) 17 முதிய மனிதன் நகரசதுக்கத்தில் பயணியைப் (லேவியனை) பார்த்தான். முதியவன், “எங்கு போய்க் கொண்டிருக்கிறாய்? எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான்.
18 லேவியன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேம் நகரிலிருந்து பயணம் செய்கிறோம். நாங்கள் கர்த்தருடைய கூடாரத்துக்குப் போகிறோம். நான் எப்பிராயீம் மலை நாட்டில் தொலைவான இடத்தில் வாழ்கிறவன். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமிற்குப் போயிருந்தேன். இப்போது என் வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கிறேன். 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும் தீனியும் உண்டு. எனக்கும், இளம்பெண்ணுக்கும், பணியாளுக்கும் ரொட்டியும் திராட்சைரசமும் உண்டு. எங்களுக்கு எதுவும் தேவையில்லை” என்று கூறினான்.
20 முதியவன், “நீ என் வீட்டில் வந்து தங்கலாம். உனக்குத் தேவையான ஏதாவது நான் கொடுப்பேன். ஆனால் இரவில் நகர சதுக்கத்தில் மட்டும் தங்காதே” என்றான். 21 பின்பு முதியவன் லேவியனையும் அவனோடிருந்தவர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுச் சென்றான். லேவியனின் கழுதைகளுக்குத் தீனி கொடுத்தான். அவர்கள் கால்களைக் கழுவி, உண்ணவும் பருகவும் செய்தனர்.
22 லேவியனும் அவனோடிருந்தவர்களும் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த பொழுது அந்நகர மனிதர்களில் துன்மார்க்கரான சிலர் அந்த வீட்டைச் சூழ்ந்துகொண்டனர். அவர்கள் கதவை பலமாகத் தட்ட ஆரம்பித்தார்கள். அந்த வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் உரக்கப் பேசினார்கள். அவர்கள், “உன் வீட்டிற்கு வந்த மனிதனை வெளியே அழைத்து வா. நாங்கள் அவனோடு பாலின உறவு கொள்ளவேண்டும்” என்றனர்.
23 முதியவன் வெளியே போய், அந்த துன்மார்க்கரிடம் பேசி, “வேண்டாம், எனது நண்பர்களே, அத்தகைய தீயகாரியத்தைச் செய்யாதீர்கள். அவன் என் வீட்டு விருந்தினன். இத்தகைய கொடிய பாவத்தைச் செய்யாதீர்கள். 24 பாருங்கள், இவள் என் மகள். இதற்கு முன் பாலியல் அனுபவத்தை அறிந்ததில்லை. அவளை உங்களிடம் அழைத்து வருவேன். மேலும் எனது விருந்தினனுடைய வேலைக்காரியையும் அழைத்து வருகிறேன். உங்கள் விருப்பம் போல் அவர்களை நடத்தலாம். ஆனால் இம்மனிதனுக்கு அத்தகைய கொடுமை செய்யாதீர்கள்” என்றான்.
25 ஆனால் அந்த துன்மார்க்கர் முதியோன் கூறியதைப் பொருட்படுத்தவில்லை. எனவே லேவியன் வேலைக்காரியை அழைத்து வெளியே அனுப்பினான். அவர்கள் அவளை இராமுழுவதும் கற்பழித்து காயப்படுத்தினார்கள். அதிகாலையில் அவர்கள் அவளைப் போகவிட்டனர்.
26 விடியும்போது அவள் தன் எஜமானன் தங்கியிருக்கும் வீட்டிற்குத் திரும்பிவந்து முன் வாசலில் வந்து விழுந்தாள். வெளிச்சம் உதிக்கும்வரை அங்கேயே கிடந்தாள்.
27 வேவியன் மறுநாள் அதிகாலையில் விழித்து தன் வீட்டிற்குப் போகவிரும்பி வெளியே போவதற்காக கதவைத் திறந்த போது கதவின் நிலையில் ஒரு கை குறுக்கே விழுந்தது. அவன் வேலைக்காரி அங்கே வாசலுக்கெதிரில் விழுந்துகிடந்தாள். 28 லேவியன் அவளிடம், “எழுந்திரு புறப்படலாம்” என்றான். ஆனால் அவள் பதில் தரவில்லை (மரித்து கிடந்தாள்.)
லேவியன் தன் வேலைக்காரியை கழுதையின் மேலேற்றிக் கொண்டு, வீட்டிற்குச் சென்றான்.
29 அவன் வீட்டிற்கு வந்ததும், ஒரு கத்தியை எடுத்து அவளை 12 துண்டுகளாக வெட்டினான். அந்த வேலைக்காரியின் 12 துண்டுகளையும் இஸ்ரவேலர் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் அனுப்பினான். 30 அதைப் பார்த்தவர்கள் எல்லோரும், “இதைப்போன்ற எதுவும் இதுவரைக்கும் இஸ்ரவேலில் நடந்ததில்லை. எகிப்திலிருந்து நாம் வந்த காலத்திலிருந்து இதைப்போன்று எதையும் பார்த்ததில்லை இதை விசாரித்து, என்ன முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்” என்றனர்.
23 யூத சங்கக் கூட்டத்தினரைப் பார்த்துப் பவுல், “சகோதரர்களே! தேவனுக்கு முன்பாக நல்ல வகையில் என் வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறேன். சரியென்று நான் நினைத்ததையே எப்போதும் செய்துகொண்டிருக்கிறேன்” என்றான். 2 தலைமை ஆசாரியனான அனனியா அங்கிருந்தான். பவுல் கூறுவதைக் கேட்ட அனனியா, பவுலின் அருகே நின்ற மனிதரை நோக்கிப் பவுலின் வாயில் அடிக்குமாறு கூறினான். 3 பவுல் அனனியாவைப் பார்த்து, “தேவன் உன்னையும் அடிப்பார்! அழுக்கான சுவர் வெள்ளையடிக்கப்பட்டது போன்று நீ காணப்படுகிறாய்! நீ அங்கு அமர்ந்து மோசேயின் சட்டப்படி என்னை நியாயந்தீர்க்கிறாய். ஆனால் என்னை அடிக்குமாறு அவர்களிடம் கூறிக்கொண்டிருக்கிறாய். அது மோசேயின் சட்டத்திற்கு எதிரானது” என்றான்.
4 பவுலின் அருகில் நின்றிருந்த மனிதர்கள் அவனை நோக்கி, “தேவனுடைய தலைமைஆசாரியனிடம் நீ இவ்வாறு பேசக்கூடாது. நீ அவரை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறாய்!” என்றனர்.
5 பவுல், “சகோதரர்களே, இம்மனிதன் தலைமை ஆசாரியன் என்பது எனக்குத் தெரியாது. வேதவாக்கியங்களில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது, ‘உன் மக்களின் தலைவர்களைக் குறித்துத் தீயவற்றைக் கூறலாகாது’ [a] என்று எழுதப்பட்டள்ளது” என்றான்.
6 அக்கூட்டத்தில் சிலர் சதுசேயராகவும், சிலர் பரிசேயராகவும் இருந்தார்கள். எனவே பவுலுக்கு ஒரு யோசனை ஏற்பட்டது. அவன் அவர்களிடம் உரக்க, “எனது சகோதரரே, நான் ஒரு பரிசேயன். எனது தந்தையும் ஒரு பரிசேயர். மரணத்திலிருந்து மக்கள் எழுவர் என்று நான் நம்புவதால் என்னை இங்கு நியாயந்தீர்க்கின்றனர்!” என்றான்.
7 பவுல் இதைக் கூறியதும், சதுசேயருக்கும் பரிசேயருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. குழுவில் ஒரு பிரிவினை ஏற்பட்டது. 8 (மக்கள் இறந்தபிறகு, மீண்டும் வாழ இயலாது என்று சதுசேயர் நம்புகிறார்கள். தேவதூதர்களோ, ஆவிகளோ இருப்பதில்லை என்று சதுசேயர்கள் போதிக்கிறார்கள். ஆனால் பரிசேயர்கள் இவற்றையெல்லாம் நம்புகிறார்கள்.) 9 எல்லா யூதர்களும் உரக்கச் சத்தமிட ஆரம்பித்தனர். பரிசேயரான சில வேதபாரகர்கள் எழுந்து நின்று, இவ்வாறு விவாதித்தனர், “நாங்கள் இந்த மனிதனிடம் எந்தக் குற்றத்தையும் காணவில்லை. தமஸ்குவுக்கு வரும் வழியில் தேவதூதனோ ஆவியோ அவனோடு பேசியிருக்க வேண்டும்!” என்றனர்.
10 விவாதம் சண்டையாக மாறிற்று. யூதர்கள் பவுலை நார் நாராகக் கிழித்து விடுவார்கள் என்று அதிகாரி அஞ்சினான். எனவே அவன் கீழே சென்று யூதர்களிடமிருந்து பவுலை விலக்கி அழைத்து வந்து படைக் கூடத்தில் வைத்திருக்குமாறு வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.
11 மறுநாள் இரவு கர்த்தர் பவுலின் அருகே வந்து நின்றார். அவர், “தைரியமாக இரு. என்னைக் குறித்து எருசலேமின் மக்களுக்கு நீ கூறியிருக்கிறாய். நீ ரோமுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கு என்னைக் குறித்துச் சொல்லவேண்டும்” என்றார்.
பவுலைக் கொல்ல சில யூதர்களின் திட்டம்
12 மறுநாள் காலையில் சில யூதர்கள் ஒரு திட்டம் வகுத்தனர். அவர்கள் பவுலைக் கொல்ல விரும்பினர். அவர்கள் தங்களுக்குள் பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று ஒரு சபதம் செய்துகொண்டனர். 13 நாற்பது யூதர்களுக்கு மேலாக இச்சதித்திட்டத்தை வகுத்தனர். 14 இந்த யூதர்கள் தலைமை ஆசாரியரிடமும் முதிய யூதத் தலைவர்களிடமும் சென்று பேசினர். யூதர்கள், “நாங்கள் எங்களுக்குள் ஒரு சபதம் செய்துள்ளோம். பவுலைக் கொல்லும் மட்டும் உண்பதோ, உறங்குவதோ இல்லை என்று தீர்மானமாகச் சபதம் பூண்டுள்ளோம்! 15 எனவே நாங்கள் செய்ய விரும்புவது இதுவே, நீங்களும் யூதக் குழுவைச் சேர்ந்த எல்லாத் தலைவர்களும் போர் அதிகாரிக்கு ஒரு செய்தியை அனுப்புங்கள். பவுலை உங்களிடம் அனுப்புமாறு அவ்வதிகாரிக்குக் கூறுங்கள். பவுலிடம் இன்னும் அதிகமான கேள்விகள் கேட்க விரும்புவதாக அவ்வதிகாரிக்குச் சொல்லுங்கள். அவன் இங்கு வரும் வழியில் பவுலைக் கொல்வதற்காக நாங்கள் காத்துக்கொண்டிருப்போம்” என்றனர்.
16 பவுலின் சகோதரியின் மகன் இத்திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்டான். அவன் படைக் கூடத்திற்குச் சென்று, இதைக் குறித்துப் பவுலுக்குக் கூறினான். 17 அப்போது பவுல் படை அதிகாரிகளில் ஒருவரை அழைத்து அவரை நோக்கி, “இவ்விளைஞனை அதிகாரியிடம் அழைத்துச் செல்லுங்கள். இவன் அவருக்கு ஒரு செய்தி சொல்லவேண்டும்” என்றான். 18 எனவே படை அதிகாரி பவுலின் சகோதரியின் மகனை அதிகாரியிடம் அழைத்து வந்தான். அதிகாரி “பவுல் என்ற கைதி இவ்விளைஞனை உங்களிடம் அழைத்து செல்லுமாறு கூறினான். அவன் உங்களிடம் ஏதோ கூற வேண்டுமாம்” என்றான்.
19 அதிகாரி இளைஞனைக் கையைப் பிடித்து தனித்த ஓரிடத்திற்கு அழைத்துச் சென்றான். அவன் இளைஞனை நோக்கி, “நீ என்னிடம் என்ன கூற விரும்புகிறாய்?” என்று கேட்டான்.
20 இளைஞன், “பவுலை நாளையச் சங்கக் கூட்டத்திற்கு அழைத்து வரும்படியாக உங்களைக் கேட்பதற்கு யூதர்கள் முடிவெடுத்துள்ளனர். அவர்கள் பவுலிடம் சில விளக்கங்களைக் கேட்கவிருப்பதாக நீங்கள் நினைக்க வேண்டுமென விரும்புகின்றனர். 21 ஆனால் அவர்களை நம்பாதீர்கள் 40 பேருக்கும் மேலான யூதர்கள் ஒளிந்திருந்து பவுலைக் கொல்லக் காத்திருப்பர். அவனைக் கொல்லும் வரைக்கும் உண்பதோ, பருகுவதோ இல்லை என்று அவர்கள் சபதமிட்டுள்ளனர். உங்கள் சம்மதத்திற்காக இப்போது அவர்கள் தயாராகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்” என்றான்.
22 அதிகாரி இளைஞனை அனுப்பிவிட்டான். அதிகாரி அவனை நோக்கி, “அவர்கள் திட்டத்தை எனக்குக் கூறியதாக யாரிடமும் சொல்லாதே” என்றான்.
செசரியாவிற்குப் பவுல் அனுப்பப்படுதல்
23 பின்பு அதிகாரி இரண்டு படை அதிகாரிகளை அழைத்தான். அவன் அவர்களை நோக்கி, “செசரியாவுக்குப் போவதற்குச் சில மனிதர்கள் வேண்டும். இருநூறு படை வீரர்களை ஆயத்தப்படுத்துங்கள். எழுபது குதிரை வீரர்களையும் இருநூறு ஈட்டியேந்திய வீரர்களையும் தயார்படுத்துங்கள். இன்றிரவு ஒன்பது மணிக்குப் புறப்படத் தயாராக இருங்கள். 24 பவுல் சவாரி செய்வதற்கும் சில குதிரைகளைப் பெறுங்கள். ஆளுநர் பெலிக்ஸிடம் அவன் பாதுகாப்பாக அனுப்பப்பட வேண்டும்” என்றான். 25 அதிகாரி ஒரு கடிதம் எழுதினான். அக்கடிதத்தின் விபரம் வருமாறு.
26 கிளாடியஸ் லைசியஸிடமிருந்து மிக மாட்சிமை மிக்க ஆளுநர் பெலிக்ஸ் அவர்களுக்கு,
வாழ்த்துக்கள்.
27 யூதர்கள் இம்மனிதனைக் கைப்பற்றி அவனைக் கொல்வதற்கு இருந்தார்கள். அவன் ஒரு ரோமக் குடிமகன் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் எனது வீரரோடு சென்று அவனைக் காப்பாற்றினேன். 28 அவர்கள் ஏன் அவனைப் பழிக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள விரும்பினேன். 29 எனவே யூத சங்கத்திற்கு முன்னால் அவனைக் கொண்டு வந்தேன். இதுவே நான் கண்டது. தவறான சில காரியங்களைப் பவுல் செய்ததாக யூதர்கள் கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் அவர்களது சொந்த யூதவிதிகளைப் பற்றியது. இந்த விஷயங்கள் எதுவும் சிறைத் தண்டனைக்கோ மரண தண்டனைக்கோ ஏற்றவை அல்ல. 30 சில யூதர்கள் பவுலைக் கொல்லத் திட்டமிடுகிறார்கள் என்று எனக்குச் சொல்லப்பட்டது. எனவே, தாமதிக்காமல் நான் அவனை உங்களிடம் அனுப்புகிறேன். அவனுக்கெதிரான காரியங்களை உங்களுக்குச் சொல்லுமாறு நான் அந்த யூதர்களுக்குச் சொல்லி இருக்கிறேன் என்பதே.
31 அவர்களுக்குச் சொல்லப்பட்ட காரியங்களை வீரர்கள் செய்தனர். அன்றிரவு அந்திபத்ரி நகரத்திற்கு வீரர்கள் பவுலைக் கூட்டிச் சென்றனர். 32 மறு நாள் குதிரை மேலிருந்த வீரர்கள் பவுலோடு செசரியாவுக்குச் சென்றனர். ஆனால் மற்ற வீரர்களும் ஈட்டியேந்திய வீரர்களும் எருசலேமிலுள்ள படைக்கூடத்துக்குத் திரும்பினர். 33 குதிரை மேலிருந்த வீரர்கள் செசரியாவுக்குள் நுழைந்து ஆளுநரிடம் கடிதத்தைக் கொடுத்தனர். பின் பவுலை அவரிடம் ஒப்படைத்தனர்.
34 ஆளுநர் கடிதத்தைப் படித்தார். பின் அவர் பவுலை நோக்கி, “நீ எந்தப் பகுதியைச் சேர்ந்தவன்?” என்று கேட்டார். பவுல் சிலிசியாவைச் சேர்ந்தவன் என்பதை ஆளுநர் அறிந்தார். 35 ஆளுநர், “உன்மீது குற்றம் சுமத்தியவர்கள் இங்கு வரும்போது வழக்கை விசாரிக்கிறேன்” என்றார். அரண்மனையில் பவுலை வைத்திருக்கும் பொருட்டு ஆளுநர் ஆணைகள் பிறப்பித்தார். (இக்கட்டிடம் ஏரோதால் கட்டப்பட்டது)
தேவனுடைய வாக்குறுதி
33 கர்த்தரிடமிருந்து வார்த்தை இரண்டாவது முறையாக எரேமியாவிற்கு வந்தது. எரேமியா இன்னும் காவல் முற்றத்தில் சிறைபட்டிருக்கிறான். 2 “கர்த்தர் பூமியைச் செய்தார், அவர் அதனைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறார். கர்த்தர் என்பது அவரது நாமம். கர்த்தர் கூறுகிறார்: 3 ‘யூதாவே, என்னிடம் ஜெபம் செய். நான் பதில் கூறுவேன். நான் முக்கியமான இரகசியங்களைக் கூறுவேன். நீ இதற்கு முன் இப்படிப்பட்ட காரியத்தை கேட்டதில்லை.’ 4 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் எருசலேமில் உள்ள வீடுகளைப்பற்றியும் யூதாவிலுள்ள அரசர்களின் அரண்மனைகளைப்பற்றியும் கூறுகிறார்: ‘பகைவர்கள் அவ்வீடுகளை இடித்துத் தள்ளுவார்கள். நகரச்சுவர்களில் உயரமான எடுசுவர்களைக் கட்டுவார்கள். பகைவர்கள் வாள்களைப் பயன்படுத்துவார்கள். இந்நகரங்களில் உள்ள ஜனங்களோடு சண்டையிடுவார்கள்.
5 “‘எருசலேமில் உள்ள ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றனர். நான் அந்த ஜனங்கள் மீது கோபமாக இருக்கிறேன். நான் அவர்களுக்கு எதிராகத் திரும்பியிருக்கிறேன். எனவே நான் அங்கே பலப்பல ஜனங்களைக் கொல்வேன். பாபிலோனிய படை எருசலேமிற்கு எதிராகப் போரிட வரும். எருசலேமின் வீடுகளில் பற்பல மரித்த உடல்கள் கிடக்கும்.
6 “‘ஆனால் பிறகு அந்நகரில் உள்ள ஜனங்களை நான் குணப்படுத்துவேன் (மன்னிப்பேன்). அந்த ஜனங்கள் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அனுபவிக்கும்படிச் செய்வேன். 7 இஸ்ரவேல் மற்றும் யூதா ஜனங்களை மீண்டும் கொண்டுவருவேன். அந்த ஜனங்களை முன்புபோல பலமுள்ளவர்களாகச் செய்வேன். 8 அவர்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தனர். ஆனால் நான் அப்பாவத்தைக் கழுவுவேன். அவர்கள் எனக்கு எதிராகச் சண்டையிட்டனர். ஆனால் அவர்களை நான் மன்னிப்பேன். 9 எருசலேம் ஒரு அற்புதமான இடமாகும். ஜனங்கள் மகிழ்ச்சி அடைவார்கள். மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களும் அதனைப் புகழுவார்கள். அந்த ஜனங்கள் அங்கே நல்லவை நடைபெறுவதைப் பற்றிக் கேள்விப்படும்போது இது நிகழும். எருசலேமிற்காக நான் செய்துக்கொண்டிருக்கும் நல்லவற்றைப்பற்றி அவர்கள் கேட்பார்கள்.’
10 “‘நமது நாடு வெறுமையான வனாந்தரமாக இருக்கிறது. அங்கே ஜனங்களோ மிருகங்களோ வாழவில்லை’ என்று நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். எருசலேம் தெருக்களும் யூதா நகரங்களும் இப்போது அமைதியாக இருக்கின்றன. ஆனால் விரைவில் அங்கு ஆரவாரம் ஏற்படும். 11 அங்கே மகிழ்ச்சிக்கும் சந்தோஷத்திற்கும் உரிய ஓசைகள் கேட்கும். அங்கு மணமகள் மற்றும் மணமகனின் மகிழ்ச்சிகரமான ஓசை கேட்கும். கர்த்தருடைய ஆலயத்திற்கு ஜனங்கள் காணிக்கைகளைக் கொண்டு வரும் ஓசை கேட்கும். அந்த ஜனங்கள், ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தரைத் துதியுங்கள். கர்த்தர் நல்லவர். கர்த்தருடைய தயவு என்றென்றும் தொடரும்’ என்று கூறுவார்கள். ஜனங்கள் இதனைக் கூறுவார்கள். ஏனென்றால் நான் மீண்டும் யூதாவிற்கு நல்லவற்றைச் செய்வேன். இது தொடக்கத்தைப்போன்று இருக்கும்.” கர்த்தர் இவற்றைக் கூறினார்.
12 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “இந்த இடம் இப்போது காலியாக இருக்கிறது. அங்கே மனிதர்களோ மிருகங்களோ வாழவில்லை. ஆனால், யூதாவின் எல்லா நகரங்களிலும் ஜனங்கள் இருப்பார்கள். அங்கு மேய்ப்பர்கள் இருப்பார்கள். மந்தைகள் ஓய்வு கொள்கிற மேய்ச்சல் நிலங்கள் இருக்கும். 13 மேய்ப்பர்கள் தம் ஆடுகளை அவை அவர்கள் முன்பு இருக்கும்போது எண்ணுகின்றனர். ஜனங்கள் தம் ஆடுகளை நாட்டைச் சுற்றிலும் மலைநாட்டிலும் மேற்கு மலை அடிவாரங்களிலும் நெகேவிலும் யூதாவின் மற்ற நகரங்களிலும் எண்ணுவார்கள்” என்று கூறுகிறார்.
நல்ல கிளை
14 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “நான் இஸ்ரவேல் மற்றும் யூதாவின் ஜனங்களுக்கு விசேஷ வாக்குறுதியைச் செய்தேன். நான் வாக்குறுதி அளித்த காரியங்களை நிறைவேற்றும் நேரம் வந்துக்கொண்டிருக்கிறது. 15 அந்த நேரத்தில், தாவீதின் குடும்பத்திலிருந்து ஒரு நல்ல ‘கிளை’ வளரும்படிச் செய்வேன். அந்த நல்ல ‘கிளை’ தேசத்திற்கு நல்லதும் சரியானதுமானவற்றைச் செய்யும். 16 அந்தக் கிளை இருக்கும்போது யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள். ஜனங்கள் எருசலேமில் பாதுகாப்பாக வாழ்வார்கள். அக்கிளையின் பெயர்: ‘கர்த்தர் நல்லவர்’”
17 கர்த்தர் கூறுகிறார், “தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவனே எப்பொழுதும் சிங்காசனத்தில் இருந்து இஸ்ரவேல் குடும்பத்தை ஆள்வான். 18 லேவியின் வம்சத்திலிருந்தே எப்போதும் ஆசாரியர்கள் இருப்பார்கள். அந்த ஆசாரியர்கள் எப்பொழுதும் எனக்கு முன்னால் நின்று தகனபலியையும் தானியக் காணிக்கைகளையும், பலிகளையும் கொடுப்பார்கள்.”
19 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து எரேமியாவிற்கு வந்தது. 20 கர்த்தர் கூறுகிறார்: “பகலோடும் இரவோடும் நான் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறேன். அவை என்றென்றும் தொடர்ந்து இருக்கும் என நான் ஒப்புக்கொண்டேன். அந்த உடன்படிக்கையை உன்னால் மாற்ற முடியாது. இரவும் பகலும் எப்பொழுதும் சரியான நேரத்தில் வரும். நீ அந்த உடன்படிக்கையை மாற்ற முடியுமானால், 21 பிறகு நீ, நான் தாவீது மற்றும் லேவியோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையை மாற்ற முடியும். பிறகு தாவீதின் சந்ததியார் அரசனாகமாட்டார்கள். லேவியின் சந்ததியார் ஆசாரியானாகமாட்டார்கள். 22 ஆனால் நான் எனது வேலையாள் தாவீதிற்கு நிறைய சந்ததிகளைக் கொடுப்பேன். லேவியின் கோத்திரத்திற்கும் கொடுப்பேன். அவர்கள் வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் போன்று நிறைய இருப்பார்கள். அத்தனை நட்சத்திரங்களையும் எவராலும் எண்ண முடியாது. அவர்கள் கடற்கரையில் உள்ள மணலைப்போன்று ஏராளமாக இருப்பார்கள். அம்மணல் துண்டுகளை எவராலும் எண்ண முடியாது” என்கிறார்.
23 கர்த்தரிடமிருந்து எரேமியா இந்த வார்த்தையைப் பெற்றான்: 24 “எரேமியா, ஜனங்கள் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தாயா? அந்த ஜனங்கள் சொல்லுகிறார்கள்: ‘கர்த்தர் இஸ்ரவேல் மற்றும் யூதா என்னும் வம்சங்களை விட்டு திரும்பிவிட்டார். அந்த ஜனங்களை கர்த்தர் தேர்ந்தெடுத்தார். ஆனால், இப்போது அவர் அதனைத் தேசமாக ஏற்றுக்கொள்ளவில்லை நிராகரித்துவிட்டார்.’”
25 கர்த்தர் சொல்லுகிறார்: “இரவுடனும் பகலுடனும் நான் கொண்ட உடன்படிக்கை தொடராவிட்டால், வானத்திற்கும் பூமிக்குமுள்ள சட்டங்களை நான் அமைக்காவிட்டால், பிறகு நான் அந்த ஜனங்களை விட்டு விலகலாம். 26 பிறகு, யாக்கோபின் சந்ததிகளிடமிருந்து நான் ஒருவேளை விலகலாம். ஒருவேளை ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் சந்ததிகளையும் தாவீதின் சந்ததிகளையும் அனுமதிக்கமாட்டேன். ஆனால் தாவீது எனது தாசன். நான் அந்த ஜனங்களிடம் தயவோடு இருப்பேன். அந்த ஜனங்களுக்கு மீண்டும் நல்லவை ஏற்படச் செய்வேன்.”
தன் குமாரனாகிய அப்சலோமிடமிருந்து தப்பிச் சென்றபோது தாவீது பாடிய பாட்டு
3 கர்த்தாவே, எனக்குப் பகைவர்கள் அநேகர்,
பல ஜனங்கள் எனக்கெதிராக எழும்புகின்றனர்.
2 பலர் என்னைக் குறித்து, “தேவன் அவனைத் தொல்லையிலிருந்து மீட்கமாட்டார்!” என்று பேசுகின்றனர்.
3 ஆனால் கர்த்தாவே, நீரே எனக்குக் கேடகம். நீரே என் மகிமை.
கர்த்தாவே, நீர் என்னை பிரதானமானவனாக்குகிறீர்!
4 நான் கர்த்தரிடம் ஜெபிப்பேன்.
அவரது பரிசுத்த மலையிலிருந்து அவர் எனக்குப் பதில் தருவார்.
5 நான் படுத்து ஓய்வெடுக்க முடியும், நான் எழும்புவேன் என்பதும் எனக்குத் தெரியும்.
இதை நான் எப்படி அறிவேன்? கர்த்தர் என்னை மூடிப் பாதுகாக்கிறார்!
6 ஆயிரம் வீரர்கள் என்னைச் சூழக்கூடும்.
ஆனால் நான் அப்பகைவர்களுக்கு அஞ்சேன்!
7 கர்த்தாவே, எழும்பும்!
எனது தேவனே, வந்து என்னைப் பாதுக்காப்பீராக!
நீர் வல்லமையுள்ளவர்!
என் தீய பகைவரைக் கன்னத்தில் நீர் அறைந்தால் அவர்கள் பற்களெல்லாம் நொறுங்கும்.
8 கர்த்தரே தம் ஜனங்களைப் பாதுக்காக்கிறார்.
கர்த்தாவே, உம்முடைய ஜனங்களுக்கு நல்லவராயிரும்.
தாவீதின் சங்கீதம். இசைக்குழுவின் தலைவனுக்கு நரம்புக் கருவிகளால் இசைக்கப்பட்டது
4 என் நல்ல தேவனே, நான் உம்மிடம் ஜெபிக்கையில் ஜெபத்தைக் கேட்டருளும்.
என் விண்ணப்பத்தைக் கேளும், என்னிடம் இரக்கமாயிரும்!
என் தொல்லைகளிலிருந்து எனக்கு சற்று விடுதலை தாரும்!
2 ஜனங்களே, எத்தனை நாள் என்னைக் குறித்து அவதூறு பேசுவீர்கள்?
என்னைப்பற்றிச் சொல்ல புதுப்புதுப் பொய்களைத் தேடிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் அப்பொய்களைச் சொல்ல விரும்புகிறீர்கள்.
3 கர்த்தர் தம் நல்ல ஜனங்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
கர்த்தரை நோக்கி ஜெபிக்கும்போது, எனக்குச் செவிகொடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
4 உங்களை ஏதோ ஒன்று துன்புறுத்துவதினால், நீங்கள் கோபங்கொண்டாலும், பாவம் செய்யாதீர்கள்.
படுக்கைக்குச் செல்கையில் அவற்றைப் பற்றிச் சிந்தியுங்கள், அப்போது அமைதி அடைவீர்கள்.
5 தேவனுக்கு நல்ல பலிகளைக் கொடுத்துக்
கர்த்தர் மேல் நம்பிக்கை வையுங்கள்!
6 “நமக்கு தேவனுடைய நன்மையைக் காட்டுவது யார்?
கர்த்தாவே! பிரகாசமான உமது முகத்தை நாங்கள் காணட்டும்!”
என்று பலர் கூறுகிறார்கள்.
7 கர்த்தாவே! நீர் எனக்கு மகிழ்ச்சியுண்டாக்கினீர்!
தானியமும் திராட்சைரசமும் பெருகிய பண்டிகை நாட்களாகிய அறுவடைக் காலத்தைக் காட்டிலும் இப்போது நான் மகிழ்கிறேன்.
8 நான் படுக்கைக்குச் சென்று சமாதானமாய் உறங்குகிறேன்.
ஏனெனில், கர்த்தாவே, நீர் என்னைப் பாதுகாப்பாய் தூங்கச் செய்கிறீர்.
2008 by World Bible Translation Center