M’Cheyne Bible Reading Plan
நியாயாதிபதியாகிய தோலா
10 அபிமெலேக்கு மரித்தபின், தேவன் மற்றொரு நியாயாதிபதியை இஸ்ரவேலரை காப்பாற்றும்படி எழுப்பினார். அந்த மனிதனின் பெயர் தோலா. தோலா, பூவா என்பவனின் மகன். பூவா தோதோவின் மகன். தோலா இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். தோலா சாமீர் நகரத்தில் வசித்து வந்தான். சாமீர் நகரம் எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது. 2 தோலா இஸ்ரவேலருக்கு 23 ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான். பின்பு அவன் மரித்தபோது சாமீர் நகரத்தில் புதைக்கப்பட்டான்.
நியாயாதிபதியாகிய யாவீர்
3 தோலா மரித்தபின், தேவனால் மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டான். அவன் பெயர் யாவீர். யாவீர் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்து வந்தான். யாவீர் இஸ்ரவேலருக்கு 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தான். 4 யாவீருக்கு 30 மகன்கள் இருந்தனர். அந்த 30 மகன்களும் 30 கழுதைகளின் மீது சவாரி செய்தனர். அவர்கள் கீலேயாத் தேசத்தில் உள்ள 30 நகரங்களைத் தம் அதிகாரத்துக்குட்படுத்திக் கொண்டனர். அவை இன்றும் யாவீரின் நகரங்கள் எனப்படுகின்றன. 5 யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான்.
அம்மோனியர் இஸ்ரவேலரைஎதிர்த்துப் போரிடுதல்
6 தீமையானவைகள் என கர்த்தரால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அஸ்தரோத்தையும் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் தொழுதுகொண்டனர். இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து அவரை ஆராதிப்பதை நிறுத்தினர்.
7 எனவே கர்த்தர் இஸ்ரவேலர் மீது கோபமடைந்தார். பெலிஸ்தரையும் அம்மோனியரையும் இஸ்ரவேலரைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். 8 அதே ஆண்டில் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதியில் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரையும் அழித்தனர். எமோரியர் வாழ்ந்த தேசம் அதுவே. இஸ்ரவேலர் அங்கு 18 ஆண்டுகள் தொல்லையடைந்தனர். 9 அம்மோனியர் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன், எப்பிராயீம் ஜனங்களோடு போரிடச் சென்றனர். அம்மோனியர் இஸ்ரவேலருக்கு மிகுந்த தொல்லைகள் அளித்தனர்.
10 இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிவேண்டி அழுதார்கள். அவர்கள், “தேவனே, உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தேவனை விட்டுப் பொய்த் தெய்வமாகிய பாகாலை நாங்கள் தொழுதுகொண்டோம்” என்றனர்.
11 கர்த்தர் இஸ்ரவேலரை நோக்கி, “எகிப்தியரும், எமோரியரும், அம்மோனியரும், பெலிஸ்தியரும் உங்களைத் துன்புறுத்தும்போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றினேன். 12 சீதோனியரும், அமலேக்கியரும், மீதியானியரும் உங்களைத் துன்புறுத்திய போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் உங்களை அவர்களிடமிருந்தும் காத்தேன். 13 ஆனால் நீங்கள் என்னை விட்டு விட்டு பிற தெய்வங்களை தொழுதுகொள்ளத் தொடங்கினீர்கள். எனவே உங்களைக் காப்பாற்ற மறுக்கிறேன். 14 நீங்கள் அந்த தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். எனவே அவர்களிடம் போய் உதவி வேண்டுங்கள். அந்தத் தெய்வங்கள் உங்கள் தொல்லைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றட்டும்” என்று பதில் கூறினார்.
15 ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம், “நாங்கள் பாவம் செய்தோம். உமது விருப்பம்போல எங்களுக்குச் செய்யும். ஆனால் இன்று எங்களைக் காப்பாற்றும்” என்றார்கள். 16 பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வீசியெறிந்து விட்டு, கர்த்தரை மீண்டும் ஆராதிக்க ஆரம்பித்தனர். எனவே கர்த்தர் அவர்கள் துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
யெப்தா தலைவனாக தேர்ந்தெடுக்கப்படுதல்
17 அம்மோன் மக்கள் போருக்காக ஒன்றாகக் கூடினார்கள். அவர்களின் முகாம் கீலேயாத் தேசத்தில் இருந்தது. இஸ்ரவேலர் ஒன்றாகக் கூடினார்கள். மிஸ்பாவில் அவர்களின் முகாம் இருந்தது. 18 கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த ஜனங்களின் தலைவர்கள், “அம்மோன் ஜனங்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தலைமை தாங்கும் மனிதன் கீலேயாத்தில் வாழும் ஜனங்களுக்குத் தலைவன் ஆவான்” என்றனர்.
11 கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் யெப்தா, அவன் சிறந்த வீரன். ஆனால் யெப்தா ஒரு வேசியின் மகன். அவன் தந்தை கிலேயாத் என்பவன். 2 கிலேயாத்தின் மனைவிக்குப் பல மகன்கள் இருந்தனர். அவர்கள் வளர்ந்தபோது யெப்தாவை விரும்பவில்லை. அவனது சொந்த ஊரைவிட்டுச் செல்லுமாறு அம்மகன்கள் யெப்தாவைக் கட்டாயப்படுத்தினார்கள். அவர்கள் அவனை நோக்கி, “நீ நம் தந்தையின் சொத்தில் எதையும் பெறமாட்டாய். நீ வேறொரு பெண்ணின் மகன்” என்றனர். 3 எனவே தன் சகோதரர்களினிமித்தமாக யெப்தா அங்கிருந்து போய் தோப் தேசத்தில் வாழ்ந்து வந்தான். தோப் தேசத்தில் சில முரட்டு மனிதர்கள் அவனைப் பின்பற்றத் தொடங்கினார்கள்.
4 கொஞ்சக் காலத்திற்குப் பின் அம்மோனிய ஜனங்கள் இஸ்ரவேலரோடு போர் செய்தனர். 5 அம்மோனிய ஜனங்கள் இஸ்ரவேலரை எதிர்த்துப் போரிட்டதால் கீலேயாத்தின் தலைவர்கள் யெப்தாவிடம் சென்றனர். தோப் தேசத்தை விட்டுக் கீலேயாத்திற்கு யெப்தா திரும்பிவர வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.
6 தலைவர்கள் யெப்தாவை நோக்கி, “வா, வந்து எங்கள் சேனாதிபதியாக அம்மோனியர்களை எதிர்த்துப் போரிடு” என்றனர்.
7 ஆனால் யெப்தா கீலேயாத் தேசத்து மூப்பர்களிடம் (தலைவர்களிடம்), “எனது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறும்படி கட்டாயப்படுத்தினீர்கள். நீங்கள் என்னைப் பகைக்கிறீர்கள்! உங்களுக்குத் துன்பம் வந்தபோது என்னிடம் ஏன் வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
8 கீலேயாத்தின் தலைவர்கள் யெப்தாவிடம், “அதனாலேயே நாங்கள் உன்னிடம் வந்துள்ளோம். எங்களோடு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போராடு. கீலேயாத்தில் வாழும் ஜனங்கள் எல்லோருக்கும் நீ அதிபதியாவாய்” என்றனர்.
9 அப்போது யெப்தா கீலேயாத்தின் தலைவர்களிடம், “நான் கீலேயாத்திற்கு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போரிட வேண்டுமென்றால் அவ்வாறே செய்வேன். ஆனால் கர்த்தர் எனக்கு வெற்றி பெற உதவினால், நான் உங்கள் புதியத் தலைவனாக இருப்பேன்” என்றான்.
10 கீலேயாத்தின் மூப்பர்கள் (தலைவர்கள்) யெப்தாவை நோக்கி, “நாம் கூறுகின்ற எல்லாவற்றையும் கர்த்தர் கேட்டுக்கொண்டிருக்கிறார். நீ கூறுகின்றபடியே செய்வதாக நாங்கள் வாக்களிக்கிறோம்” என்றார்கள்.
11 எனவே யெப்தா கீலேயாத்தின் மூப்பர்களோடு (தலைவர்களோடு) சென்றான். அவர்கள் யெப்தாவைத் தங்கள் தலைவனாகவும், அதிபதியாகவும் நியமித்தனர். மிஸ்பா நகரத்தில் கர்த்தருக்கு முன்பாக யெப்தா தனது வார்த்தைகளையெல்லாம் மீண்டும் கூறினான்.
இக்கோனியத்தில் ஊழியம்
14 பவுலும் பர்னபாவும் இக்கோனியம் நகரத்திற்குச் சென்றனர். அவர்கள் யூத ஜெப ஆலயத்திற்குச் சென்றனர். (இதைத் தான் அவர்கள் ஒவ்வொரு நகரத்திலும் செய்தனர்) அவர்கள் அங்குள்ள மக்களிடம் பேசினர். பவுலும் பர்னபாவும் பேசின விதத்தில் பல யூதர்களும், கிரேக்கர்களும் அவர்கள் கூறியதை முழுமையாக நம்பினர். 2 ஆனால் மனந்திரும்பாத யூதர்கள், யூதரல்லாத சகோதரரைக் குறித்துத் தீமையானவற்றை எண்ணும்படியாகச் செய்தனர்.
3 எனவே பவுலும் பர்னபாவும் இக்கோனியத்தில் நீண்ட காலம் தங்கினர். கர்த்தருக்காகத் துணிவோடு பேசினர். தேவனுடைய கிருபையைக் குறித்து பவுலும், பர்னபாவும் பேசினர். அற்புதங்களையும் அதிசயங்களையும் நிகழ்த்துவதற்கு அப்போஸ்தலர்களுக்கு உதவி செய்து அவர்கள் கூறியதை உண்மையென்று தேவன் நிரூபித்தார். 4 ஆனால் நகர மக்களில் சிலர் யூதர்கள் கூறியதை ஒப்புக்கொண்டனர். நகரத்தின் மற்ற மக்களோ பவுலையும் பர்னபாவையும் நம்பினர். எனவே நகரம் பிரிவுபட்டது.
5 சில யூதரல்லாத மக்களும், சில யூதர்களும் அவர்களின் யூத அதிகாரிகளும் பவுலையும் பர்னபாவையும் துன்புறுத்த முயன்றனர். இந்த மக்கள் அவர்களைக் கற்களால் எறிந்துகொல்ல எண்ணினர். 6 பவுலும் பர்னபாவும் இதை அறிந்தபோது, நகரிலிருந்து சென்றனர். அவர்கள் லிஸ்தீராவுக்கும், தெர்பைக்கும் லிக்கோனியாவின் நகரங்களுக்கும், அந்த நகரங்களைச் சூழ்ந்த கிராமப்புறப் பகுதிகளுக்கும் சென்றனர். 7 அவர்கள் அங்கும் கூட நற்செய்தியைக் கூறினர்.
லிஸ்திரா, தெர்பை நகர ஊழியம்
8 பாதங்களில் ஊனமுற்ற மனிதன் ஒருவன் லிஸ்தீராவில் இருந்தான். அவன் பிறவியிலேயே ஊனமுற்றவன். 9 அவன் அங்கு உட்கார்ந்துகொண்டு பவுல் பேசுவதைக் கேட்டுக்கொண்டேயிருந்தான். பவுல் அவனைப் பார்த்தான். தேவன் அவனைக் குணப்படுத்த முடியும் என்பதை அம்மனிதன் நம்பியதைப் பவுல் கண்டான். 10 எனவே பவுல் உரக்க, “எழுந்து உன் கால்களால் நில்” என்றான். அம்மனிதன் குதித்தெழுந்து சுற்றிலும் நடக்க ஆரம்பித்தான்.
11 பவுல் செய்ததை மக்கள் கூட்டத்தினர் கண்டபோது, அவர்கள் லிக்கோனிய மொழியில் சத்தமிட்டனர். அவர்கள், “தேவர்கள் மனிதரைப்போன்று மாறியுள்ளனர்! அவர்கள் நம்மிடம் இறங்கி வந்துள்ளனர்!” என்றனர். 12 மக்கள் பர்னபாவை “சீயெஸ்” என அழைக்கத் தொடங்கினர். பவுல் முக்கிய பேச்சாளராக இருந்ததால், அவர்கள் பவுலை “ஹெர்ம்ஸ்” என்றழைத்தனர். 13 சீயஸின் தேவாலயம் நகரத்தினருகில் இருந்தது. தேவாலயத்தின் பூசாரி சில காளைகளையும் மாலைகளையும் நகரக் கதவுகளுக்கருகே கொண்டுவந்தான். பவுலையும் பர்னபாவையும் வழிபடுவதற்கு பூசாரிகளும் மக்களும் பலி செலுத்த விரும்பினர்.
14 அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் மக்கள் செய்துகொண்டிருப்பதைப் புரிந்துகொண்டதும் அவர்கள் தங்கள் ஆடைகளைக் கிழித்தனர். [a] பின் அவர்கள் கூட்டத்தினர் மத்தியில் ஓடி, அவர்களிடம் உரத்த குரலில், 15 “மனிதரே ஏன் இவற்றையெல்லாம் செய்கிறீர்கள்? நாங்கள் தேவர்கள் அல்ல. உங்களைப்போன்ற மனிதர்கள்தான். எங்களுக்கும் உணர்வுகள் உங்களைப்போலவே உண்டு. உங்களுக்கு நற்செய்தியைச் சொல்ல நாங்கள் வந்தோம். பயனற்ற இந்தக் காரியங்களை விட்டுவிலகும்படியாக நாங்கள் உங்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். உண்மையான ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்புங்கள். அவரே வானம், பூமி, கடல், அவற்றிலுள்ள பொருட்கள் அனைத்தையும் உண்டாக்கியவர்.
16 “முன்பு எல்லா தேசங்களும் அவை விரும்பியவற்றைச் செய்வதற்கு தேவன் அனுமதித்தார். 17 ஆனால் அதே சமயம் தேவன் உண்மையானவர் என்பதை நிறுவும் காரியங்களையே தேவன் செய்தார். அவர் உங்களுக்கு நல்லவற்றையே செய்கிறார். அவர் வானிலிருந்து உங்களுக்கு மழையைத் தருகிறார். அவர் தக்க காலங்களில் உங்களுக்கு நல்ல அறுவடையைக் கொடுக்கிறார். அவர் மிகுதியான உணவை உங்களுக்குத் தருகிறார். அவர் உங்கள் இருதயங்களை மகிழ்ச்சியால் நிரப்புகிறார்” என்றனர்.
18 பவுலும் பர்னபாவும் மக்களுக்கு இவற்றைக் கூறினர். ஆனாலும் அவர்களை வழிபடுவதற்காக அவர்கள் இட்ட பலியை அநேகமாக பவுலும் பர்னபாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை.
19 பின் அந்தியோகியாவிலிருந்தும், இக்கோனியத்திலிருந்தும் சில யூதர்கள் வந்தனர். அவர்கள் பவுலை எதிர்க்கும்படியாக மக்களை ஏவினர். எனவே மக்கள் பவுலின்மீது கற்களை வீசி, அவன் இறந்துவிட்டானென்று நினைத்து அவனை ஊருக்குப் புறம்பே இழுத்து வந்தனர். 20 இயேசுவின் சீஷர்கள் பவுலைச் சுற்றிலும் கூடினர். பின் அவன் எழுந்து ஊருக்குள் மீண்டும் சென்றான். மறுநாள் அவனும் பர்னபாவும் புறப்பட்டு தெர்பை நகரத்துக்குச் சென்றனர்.
அந்தியோகியாவுக்குத் திரும்புதல்
21 பவுலும் பர்னபாவும் தெர்பை நகரத்திலும் நற்செய்தியைக் கூறினர். பல மக்கள் இயேசுவின் சீஷராயினர். லிஸ்திரா, இக்கோனியம், அந்தியோகியா நகரங்களுக்குப் பவுலும் பர்னபாவும் திரும்பினர். 22 அந்நகரங்களில் இயேசுவின் சீஷர்களை பவுலும் பர்னபாவும் வலிமைமிக்கவர்களாக ஆக்கினர். நம்பிக்கையில் நிலைத்திருப்பதற்கு அவர்கள் உதவினர். பவுலும் பர்னபாவும், “தேவனுடைய இராஜ்யத்துக்குள் செல்லும் நம் பாதையில் நாம் பல துன்பங்களை அனுபவிக்க வேண்டும்” என்றனர். 23 பவுலும் பர்னபாவும் ஒவ்வொரு சபைக்கும் மூப்பர்களை அமர்த்தினார்கள். அவர்கள் உபவாசமிருந்து அம்மூப்பர்களுக்காகப் பிரார்த்தனை செய்தனர். அம்மூப்பர்கள் கர்த்தராகிய இயேசுவில் நம்பிக்கை வைத்த மனிதராயிருந்தார்கள். எனவே பவுலும் பர்னபாவும் கர்த்தரின் பாதுகாப்பில் அவர்களை விட்டனர்.
24 பவுலும் பர்னபாவும் பிசிதியா நாட்டின் வழியாகச் சென்றனர். பின் அவர்கள் பம்பிலியா நாட்டிற்கு வந்தனர். 25 அவர்கள் பெர்காவில் தேவனுடைய செய்தியைக் கூறினார்கள். பின் அவர்கள் அத்தாலியா நகரத்திற்குச் சென்றனர்.
26 அங்கிருந்து பவுலும் பர்னபாவும் சிரியாவிலுள்ள அந்தியோகியாவிற்குக் கடல் வழியாகப் பயணமாயினர். இந்நகரில்தான் விசுவாசிகள் அவர்களை தேவனுடைய கண்காணிப்பில் ஆட்படுத்தி இவ்வேலை செய்ய அனுப்பியிருந்தனர். இப்போது அவர்கள் தங்கள் வேலையை முடித்திருந்தனர்.
27 பவுலும் பர்னபாவும் வந்துசேர்ந்தபோது அவர்கள் சபையைக் கூட்டினர். தேவன் அவர்களோடு செய்த எல்லாக் காரியங்களையும் குறித்துப் பவுலும் பர்னபாவும் அவர்களுக்குக் கூறினர். அவர்கள், “வேறு தேசங்களின் மக்களும் நம்பும்படிக்கு தேவன் ஒரு வாசலைத் திறந்தார்” என்றார்கள். 28 கிறிஸ்துவின் சீஷர்களோடு பவுலும் பர்னபாவும் நீண்டகாலம் அங்கேயே தங்கினர்.
23 “இது யூதா ஜனங்களின் மேய்ப்பர்களுக்கு (தலைவர்களுக்கு) மிகவும் கெட்டதாகும். அம்மேய்ப்பர்கள் ஆடுகளை அழித்துக்கொண்டிருக்கிறார்கள். எல்லா திசைகளிலும் என் மேய்ச்சல் நிலத்திலிருந்து ஆடுகளை ஓட வைக்கிறார்கள்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
2 எனது ஜனங்களுக்கு அம்மேய்ப்பர்களே பொறுப்பானவர்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அம்மேய்ப்பர்களுக்கு இதனைச் சொல்கிறார்: “மேய்ப்பர்களாகிய நீங்கள் எனது ஆடுகளை எல்லாத் திசைகளிலும் ஓடச்செய்கிறீர்கள். அவை போகுமாறு நீங்கள் பலவந்தப்படுத்துகிறீர்கள். நீங்கள் அவற்றைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், நான் உங்களைப்பற்றி அக்கறை எடுத்துக்கொள்வேன். நீங்கள் செய்த தீமைக்காக நான் உங்களைத் தண்டிப்பேன்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. 3 “நான் எனது ஆடுகளை வேறு நாடுகளுக்கு அனுப்பினேன். ஆனால், விடுபட்ட ஆடுகளை நான் சேகரிப்பேன். நான் அவற்றை மீண்டும் அவற்றின் மேய்ச்சல் நிலத்திற்குக் கொண்டுவருவேன். எனது ஆடுகள் தம் மேய்ச்சல் நிலத்திற்குத் திரும்பியதும், அவற்றுக்கு நிறைய குட்டிகள் வர அவை எண்ணிக்கையில் பெருகும். 4 நான் எனது ஆடுகளுக்குப் புதிய மேய்ப்பர்களை ஏற்படுத்துவேன். அம்மேய்ப்பர்கள் எனது ஆடுகளை அக்கறையோடு பார்த்துக்கொள்வார்கள். எனது ஆடுகள் பயப்படவோ, கலங்கவோ செய்யாது. எனது ஆடுகள் எதுவும் காணாமல் போகாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
நீதியுள்ள “துளிர்”
5 இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது:
“காலம் வந்துக்கொண்டு இருக்கிறது.
நான் ஒரு நல்ல ‘துளிரை’ எழுப்புவேன்.
அவன் அரசன் ஆவான்.
அவன் ஞான வழியில் ஆள்வான்.
நாட்டில் எது சரியோ நியாயமானதோ, அதைச் செய்வான்.
6 நல்ல ‘துளிருள்ள’ காலத்தில், யூதாவின் ஜனங்கள் காப்பாற்றப்படுவார்கள்.
இஸ்ரவேலர்கள் பாதுகாப்பாக வாழ்வார்கள்.
இது அவரது நாமமாக இருக்கும்:
கர்த்தர் நமது நன்மை.
7 “எனவே, காலம் வந்துக்கொண்டிருக்கிறது” இச்செய்தி கர்த்தரிடமிருந்து வந்தது. “ஜனங்கள் பழைய வாக்குறுதியை எப்பொழுதும் சொல்லமாட்டார்கள். பழைய வாக்குறுதியானது: ‘கர்த்தர் உயிரோடு இருப்பது எவ்வளவு உறுதியானதோ அவ்வளவு உறுதியாக, கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து நாட்டிலிருந்து வெளியே கொண்டு வந்தவர்….’ 8 ஆனால் ஜனங்கள் புதிதாகச் சொல்வார்கள்: ‘கர்த்தர் உயிரோடிருப்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாக, இஸ்ரவேல் ஜனங்களை வட நாட்டிலிருந்து கொண்டுவந்தார். ஏற்கனவே, அவர்களை அனுப்பிய அனைத்து நாடுகளிலிருந்தும் அழைத்துக்கொண்டுவந்தார்….’ பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் தம் சொந்த நாட்டில் வாழ்வார்கள்.”
கள்ள தீர்க்கதரிசிகளுக்கு எதிரான தீர்ப்பு
9 தீர்க்கதரிசிகளுக்கான ஒரு செய்தி:
நான் மிகவும் சோகமாக இருக்கிறேன்.
என் இருதயம் உடைந்திருக்கிறது.
எனது அனைத்து எலும்புகளும் அசைகின்றன.
நான் (எரேமியா) குடிக்காரன் போல் இருக்கிறேன்.
கர்த்தரினிமித்தமும் அவரது பரிசுத்த வார்த்தைகளினிமித்தமும்.
10 யூதா நாடு முழுவதும் வேசித்தனம் என்னும் பாவம் செய்த ஜனங்களால் நிறைந்துள்ளது.
அவர்கள் பல வழிகளில் விசுவாசமற்றவர்களாக இருக்கிறார்கள்.
கர்த்தர் அந்த நாட்டை சபித்தார்.
அது மிகவும் வறண்டுபோயிற்று.
செடிகள் வாடி மேய்ச்சல் நிலங்கள் செத்துப்போயின.
வயல்கள் வனாந்தரங்களைப்போன்று ஆயின.
தீர்க்கதரிசிகள் எல்லாம் தீயவர்கள்.
அத்தீர்க்கதரிசிகள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி தவறான வழிகளில் அதிகாரத்தைச் செலுத்தினார்கள்.
11 “தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும் கூடத் தீயவர்கள் ஆனார்கள்.
அவர்கள் எனது சொந்த ஆலயத்தில் தீயவற்றைச் செய்வதைப் பார்த்திருக்கிறேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
12 “எனது செய்தியை அவர்களுக்கு கொடுப்பதை நான் நிறுத்துவேன்.
இது அவர்கள் இருட்டில் நடப்பதைப்போன்றது.
இது அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் ஆசாரியர்களுக்கும் வழுக்குகின்ற சாலையைப்போன்றது.
அவர்கள் அந்த இருளில் விழுவார்கள்.
அவர்களுக்கு நான் துரதிர்ஷ்டம் கொண்டு வருவேன்.
நான் அந்தத் தீர்க்கதரிசிகளையும் ஆசாரியர்களையும் தண்டிப்பேன்”
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது.
13 “சமாரியா தீர்க்கதரிசிகள் தவறுகள் செய்வதை நான் பார்த்தேன்.
பொய்த் தெய்வமாகிய பாகாலின் பெயரால் அத்தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனம் சொல்வதைப் பார்த்தேன்.
அத்தீர்க்கதரிசிகள் இஸ்ரவேல் ஜனங்களை, கர்த்தரைவிட்டு வெளியே வழிநடத்திச் சென்றனர்.
14 இப்போது நான் யூதாவிலுள்ள தீர்க்கதரிசிகள்
எருசலேமில் பயங்கரமான செயல்கள் செய்வதைப் பார்க்கிறேன்.
இத்தீர்க்கதரிசிகள் வேசித்தனம் என்னும் பாவத்தைச் செய்கின்றனர்.
அவர்கள் பொய்களைக் கேட்கின்றனர்.
அவர்கள் பொய்யான போதனைகளுக்கு அடிபணிகிறார்கள்.
அவர்கள் தீயவர்கள் தொடர்ந்து
தீயச் செயல்களைச் செய்ய ஊக்குவிக்கிறார்கள்.
எனவே, ஜனங்கள் பாவம் செய்வதை நிறுத்தவில்லை.
அவர்கள் சோதோமின் ஜனங்களைப்போன்று இருக்கிறார்கள்.
இப்போது எருசலேம் எனக்கு கொமோராபோன்று உள்ளது.”
15 எனவே, தீர்க்கதரிசிகளைப்பற்றி சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறது இதுதான்:
“நான் அத்தீர்க்கதரிசிகளை தண்டிப்பேன்.
தண்டனையானது விஷமுள்ள உணவை உண்பது போலவும், விஷத்தண்ணீரை குடிப்பதுபோன்றும் இருக்கும்.
தீர்க்கதரிசிகளுக்கு ஆன்மீக நோய் ஏற்பட்டது.
அந்நோய் நாடு முழுவதும் பரவியது.
எனவே, அத்தீர்க்கதரிசிகளை நான் தண்டிப்பேன்.
அந்நோய் எருசலேமிலிருக்கும் தீர்க்கதரிசிகளிடமிருந்து வந்தது.”
16 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“உங்களில் அத்தீர்க்கதரிசிகள் சொல்பவற்றில் கவனம் செலுத்தாதீர்கள்.
அவர்கள் உங்களை முட்டாளாக்க முயல்கிறார்கள்.
அத்தீர்க்கதரிசிகள் தரிசனங்களைப்பற்றி பேசுகிறார்கள்.
ஆனால் அவர்கள் என்னிடமிருந்து அத்தரிசனங்களைப் பெறவில்லை.
அவர்களின் தரிசனங்கள் அவர்களது சொந்த மனதிலிருந்தே வருகின்றன.
17 கர்த்தரிடமிருந்து வந்த உண்மையான செய்தியைச் சிலர் வெறுக்கிறார்கள்.
எனவே, அத்தீர்க்கதரிசிகள் ஜனங்களுக்கு வேறுபட்டச் செய்தியைக் கூறுகிறார்கள்.
அவர்கள், ‘உங்களுக்கு சமாதானம் இருக்கும்’ என்று கூறுகிறார்கள்.
சில ஜனங்கள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
அவர்கள் தாங்கள் செய்யவிரும்புவதை மட்டுமே செய்கிறார்கள்.
எனவே அத்தீர்க்கதரிசிகள், ‘உங்களுக்கு எந்தத் தீமையும் ஏற்படாது!’ என்று கூறுகிறார்கள்.
18 ஆனால் அத்தீர்க்கதரிசிகளில் எவரும் பரலோகச் சபையில் நின்றிருக்கமாட்டார்கள்.
அவர்களில் எவரும் கர்த்தருடைய செய்தியைப் பார்த்திருக்கவோ கேட்டிருக்கவோமாட்டார்கள்.
அவர்கள் எவரும் கர்த்தருடைய செய்தியை கூர்ந்து கவனமாகக் கேட்டிருக்கமாட்டார்கள்.
19 இப்பொழுது கர்த்தருடைய தண்டனை புயலைப் போன்று வரும்.
கர்த்தருடைய கோபம் கொடிய புயலைப்போன்றிருக்கும்.
கெட்ட மனிதர்களின் தலைகளை மோதித் தள்ளவரும்.
20 கர்த்தருடைய கோபம், அவர் என்ன செய்ய வேண்டும் என்று
திட்டமிட்டிருந்தாரோ அவற்றைச் செய்து முடிக்கும்வரை நிற்காது.
அந்த நாட்களின் முடிவில்
நீங்கள் தெளிவாக அறிந்துக்கொள்வீர்கள்.
21 அத்தீர்க்கதரிசிகளை நான் அனுப்பவில்லை.
ஆனால், அவர்கள் செய்தியைச் சொல்ல ஓடினார்கள்.
நான் அவர்களோடு பேசவில்லை.
ஆனால் அவர்கள் என் நாமத்தில் பிரசங்கம் செய்தனர்.
22 அவர்கள் எனது பரலோகச்சபையில் நின்றிருந்தால்,
பிறகு யூதாவின் ஜனங்களுக்கு என் செய்தியைச் சொல்லியிருப்பார்கள்.
அவர்கள் தீயசெயல் செய்யாமல் ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.
அவர்கள் பாவம் செய்யாதபடி ஜனங்களைத் தடுத்திருப்பார்கள்.”
23 “நான் தேவன்! நான் எப்பொழுதும் அருகில் இருக்கிறேன்!”
இந்த வார்த்தை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது.
“நான் தூரத்தில் இல்லை.
24 சில மறைவிடங்களில் ஒருவன் என்னிடமிருந்து ஒளிய முயலலாம்.
ஆனால், அவனைப் பார்ப்பது எனக்கு எளிதாகும்.
ஏனென்றால், நான் பரலோகம் பூமி என்று எல்லா இடங்களிலும் இருக்கிறேன்!”
கர்த்தர் இவற்றைச் சொன்னார்.
25 “என் நாமத்தில் பொய்யைப் பிரசங்கம் செய்யும் தீர்க்கதரிசிகள் இருக்கிறார்கள். அவர்கள், ‘எனக்கு ஒரு கனவு வந்தது. எனக்கு ஒரு கனவு வந்தது’ என்றார்கள். அவர்கள் இவற்றைச் சொல்வதை நான் கேட்டேன். 26 இது இன்னும் எவ்வளவு காலம் செல்லும்? அத்தீர்க்கதரிசிகள் பொய்களை நினைக்கின்றனர். பிறகு அப்பொய்களை ஜனங்களுக்குப் போதிக்கிறார்கள். 27 இத்தீர்க்கதரிசிகள் ஜனங்கள் என் நாமத்தை மறக்கச் செய்ய முயற்சி செய்துக்கொண்டிருக்கிறார்கள். இப்பொய்யான கனவுகளை அவர்கள் ஒருவருக்கொருவர் சொல்லி இதனைச் செய்கிறார்கள். அவர்களது முற்பிதாக்கள் என்னை மறந்தது போலவே, எனது ஜனங்கள் என்னை மறக்கும்படி அவர்கள் செய்ய முயல்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் என்னை மறந்துவிட்டு பொய்யான பாகால் தெய்வத்தை தொழுதனர். 28 வைக்கோல் கோதுமையைப்போன்று ஆகாது. இது போலவே, அத்தீரிக்கதரிசிகளின் கனவுகள் எல்லாம் என்னிடமிருந்து வரும் செய்திகள் ஆகாது. ஒருவன் தனது கனவுகளைப்பற்றிச் சொல்ல விரும்பினால், அவன் சொல்லட்டும். ஆனால், எனது நற்செய்தியை கேட்கட்டும். நற்செய்தியைக் கேட்கிற மனிதன் எனது செய்தியை உண்மையுடன் கூறட்டும்.” 29 “எனது செய்தி அக்கினியைப் போன்றது இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. இது பாறையை நொறுக்கும் சம்மட்டியைப் போன்றது.”
30 “எனவே நான் கள்ளதீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வந்தது. “இத்தீர்க்கதரிசிகள் ஒருவரிடமிருந்து ஒருவர் என் வார்த்தைகளைத் திருடுகிறார்கள். 31 நான் பொய்யான தீர்க்கதரிசிகளுக்கு எதிரானவர்” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் தம் சொந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் அச்செய்தியை என்னிடமிருந்து வருவதாக நடிக்கின்றனர். 32 பொய்க் கனவுகளைப் பரப்பும் பொய்த் தீர்க்கதரிகளுக்கு நான் எதிரானாவர்.” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. “அவர்கள் எனது ஜனங்களைப் பொய்யாலும், பொய் போதனைகளாலும் தவறாக வழிகாட்டுகின்றனர். ஜனங்களுக்குப் போதிக்க நான் இத்தீர்க்கதரிசிகளை அனுப்பவில்லை. எனக்காக எதையும் செய்யும்படி நான் அவர்களுக்குக் கட்டளை இடவில்லை. யூதாவின் ஜனங்களுக்கு அவர்களால் உதவி செய்யவே முடியாது” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
கர்த்தரிடமிருந்து வரும் சோகச் செய்தி
33 “யூதாவின் ஜனங்களே, ஒரு தீர்க்கதரிசியோ, ஒரு ஆசாரியரோ உன்னிடம் ‘கர்த்தருடைய அறிக்கை என்ன என்று கேட்கும்போது’ நீ அவர்களுக்கு, ‘நீங்கள் கர்த்தருக்குப் பெரும் பாரமாக இருக்கிறீர்கள். நான் இப்பாரத்தைத் தூக்கிப் போடுவேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது என்று சொல்.
34 “ஒரு தீர்க்கதரிசி அல்லது ஆசாரியன், அல்லது ஜனங்களில் ஒருவன் சொல்லலாம். ‘இது தான் கர்த்தருடைய அறிக்கை…’ அம்மனிதன் பொய் சொன்னான். அவனையும் அவனது குடும்பத்தையும் நான் தண்டிப்பேன். 35 இதைத்தான் ஒருவரிடம் ஒருவர் நீங்கள் கேட்கவேண்டும். ‘கர்த்தருடைய பதில் என்ன?’ அல்லது ‘கர்த்தர் என்ன பதில் சொன்னார்?’ 36 ‘கர்த்தருடைய அறிவிப்பு’ பெருஞ்சுமையானது என்று ஒருபோதும் மீண்டும் சொல்லமாட்டாய். ஏனென்றால், கர்த்தருடைய நற்செய்தி யாருக்கும் பெருஞ்சுமையாக இருக்கக்கூடாது. ஆனால் நீ எங்கள் தேவனுடைய வார்த்தையை மாற்றினாய். அவரே ஜீவனுள்ள தேவன். சர்வ வல்லமையுள்ள கர்த்தர்!
37 “நீ தேவனுடைய வார்த்தையைக் கற்றுக்கொள்ளவேண்டுமென்று விரும்பினால் ஒரு தீர்க்கதரிசியைக் கேள். ‘கர்த்தர் என்ன பதிலைக் கொடுத்தார்?’ அல்லது ‘கர்த்தர் என்ன சொன்னார்?’ 38 ஆனால் ‘கர்த்தரிடமிருந்து வந்த அறிக்கை (பெருஞ்சுமை) என்ன’ என்று சொல்ல வேண்டாம். நீங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினால் பிறகு, கர்த்தர் இவற்றை உனக்குச் சொல்வார், ‘எனது செய்தியைக் “கர்த்தரிடமிருந்து வந்த அறிவிப்பு” பாரமானது என்று சொல்ல வேண்டாம். இவ்வார்த்தைகளைச் சொல்லவேண்டாம் என்று நான் உனக்குச் சொன்னேன். 39 ஆனால், நீ எனது செய்தியை பெருஞ்சுமை என்று அழைத்தாய். எனவே, நான் உன்னைப் பெருஞ்சுமையைப் போன்று தூக்கித் தூர எறிவேன். உங்கள் முற்பிதாக்களுக்கு எருசலேம் நகரத்தைக் கொடுத்தேன். ஆனால், நான் உன்னையும் அந்நகரத்தையும் என்னை விட்டுத் தூர எறிவேன். 40 உன்னை முடிவற்ற அவமானத்திற்கு உள்ளாக்குவேன். உன் அவமானத்தை ஒருபோதும் நீ மறக்கமாட்டாய்.’”
9 பிறகு இயேசு “நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன். இங்கே நிற்கின்ற மக்களில் சிலர், அவர்கள் மரணத்துக்கு முன் தேவனுடைய இராஜ்யம் வருவதைப் பார்ப்பார்கள். தேவனுடைய இராஜ்யம் வல்லமையோடு வரும்” என்றார்.
மோசே, எலியாவுடன் இயேசு(A)
2 ஆறு நாட்களுக்குப் பின், பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை இயேசு அழைத்துக்கொண்டு உயரமான மலை உச்சிக்குச் சென்றார். அவர்கள் அங்கே தனியே இருந்தனர். சீஷர்கள் இயேசுவைப் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் புதிய ரூபம் அடைந்தார். 3 இயேசுவின் ஆடைகள் வெண்ணிறமாய் மின்னியது. அவை எவராலும் சுத்தம் செய்ய முடியாத அளவுக்கு வெண்மையாய் இருந்தது. 4 அப்போது இரண்டு மனிதர்கள் அங்கே தோன்றி இயேசுவோடு பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் மோசே, எலியா என்னும் இருவரே.
5 பேதுரு இயேசுவிடம், “போதகரே நாம் இங்கே இருப்பது நல்லதாயிற்று. நாங்கள் கூடாரங்கள் அமைக்கப் போகிறோம். ஒன்று உமக்கு, மற்றொன்று மோசேக்கு, இன்னொன்று எலியாவுக்கு” என்றான். 6 பேதுருவுக்குத் தான் என்ன சொல்கிறோம் என்றே புரியாமல் சொன்னான். ஏனென்றால் அவனும் மற்ற இரு சீஷர்களும் மிகவும் பயந்திருந்தனர்.
7 பிறகு ஒரு மேகம் வந்து அவர்களை மறைத்தது. அந்த மேகத்திலிருந்து ஓர் ஒலி வந்தது. அது, “இவர் என் மகன். நான் இவரிடம் அன்பாய் இருக்கிறேன். இவருக்குக் கீழ்ப்டியுங்கள்” என்று சொன்னது.
8 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் சுற்றிலும் பார்த்தனர். ஆனால் இயேசுவைத் தவிர வேறு ஒருவரையும் காணவில்லை.
9 இயேசுவும், அவரது சீஷர்களும் மலையிலிருந்து இறங்கி வந்தனர். இயேசு தன் சீஷர்களிடம், “மலை மேலே பார்த்ததை நீங்கள் யாரிடமும் சொல்லாதீர்கள். மனித குமாரன் மரணத்திலிருந்து உயிர்த்தெழும்வரை காத்திருங்கள். பிறகு நீங்கள் பார்த்ததை மக்களுக்குச் சொல்லலாம்” என்று கட்டளையிட்டார்.
10 ஆகையால் சீஷர்களும் இயேசுவுக்குக் கீழ்ப்படிந்து தாங்கள் பார்த்ததைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. ஆனால் மரணத்திலிருந்து எழுவதன் பொருளைப்பற்றித் தமக்குள் விவாதித்துக் கொண்டனர். 11 சீஷர்கள் இயேசுவிடம், “எலியா முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர் ஏன் கூறுகின்றனர்?” என்று கேட்டனர்.
12 “எலியாதான் முதலில் வர வேண்டும் என்று வேதபாரகர்கள் கூறுவது சரிதான். அவன் எல்லாவற்றையும் இருக்க வேண்டிய முறைப்படி சீர்ப்படுத்துவான். மனித குமாரன் மிகவும் கஷ்டப்படுவார் என்றும், உபயோகமற்றவர் என மக்களால் எண்ணப்படுவார் என்றும் வேதவாக்கியங்களில் எழுதி இருப்பது எதற்காக? 13 எலியா ஏற்கெனவே வந்துவிட்டான் என நான் சொல்கிறேன். அவனைப்பற்றி எழுதி இருக்கிறபடி, மக்கள் தங்களுக்கு விருப்பமானபடி அவனுக்குத் தீமை செய்தனர்” என்றார்.
சிறுவன் குணமாக்கப்படுதல்(B)
14 பிறகு பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியவர்களோடு இயேசு சென்று மற்ற சீஷர்களோடு சேர்ந்து கொண்டார். அங்கு அவர்கள் ஏராளமான மக்களால் சூழப்பட்டனர். வேதபாரகர்கள் அங்கு சீஷர்களோடு வாதம் செய்து கொண்டிருந்தனர். 15 இயேசு வருவதைப் பார்த்து அவர்கள் ஆச்சரியத்தால் நிறைந்தனர். அவர்கள் ஓடிவந்து அவரை வரவேற்றனர்.
16 இயேசு சீஷர்களிடம் “வேதபாரகர்களிடம் நீங்கள் எதைப்பற்றி விவாதம் செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
17 “ஆண்டவரே! நான் என் மகனை அழைத்து வந்தேன். அவன் பிசாசினால் பிடிக்கப்பட்டிருக்கிறான். அது அவனைப் பேசவிடாமல் செய்துவிட்டது. 18 பிசாசு என் மகனைத் தாக்கித் தரையில் தள்ளுகிறது. அவன் வாயில் நுரைதள்ளி பல்லைக் கடித்து சோர்ந்து போகிறான். நான் உம்முடைய சீஷர்களிடம் அப்பிசாசைத் துரத்தும்படி வேண்டினேன். அவர்களால் அது முடியவில்லை,” என்றான் கூட்டத்திலுள்ள ஒருவன்.
19 அவர் அவர்களிடம், “ஓ! விசுவாசமில்லாத மக்களே! நான் உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பது? உங்களோடு இன்னும் எவ்வளவு காலம் பொறுமையாய் இருப்பது? அந்தப் பையனை என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்றார்.
20 ஆகையால் இயேசுவிடம் சீஷர்கள் பையனைக் கொண்டு வந்தனர். பிசாசு இயேசுவைப் பார்த்ததும் பையனைத் தாக்கியது. அவன் தரையில் விழுந்து உருண்டான். அவன் வாயில் நுரை தள்ளிற்று.
21 இயேசு அப்பையனின் தந்தையிடம், “எவ்வளவு காலமாக இது இவனுக்கு ஏற்பட்டு வருகிறது?” என்று கேட்டார்.
அதற்கு அவன் தந்தை, “அவன் சிறுவனாக இருந்த சமயத்தில் இருந்தே இது உள்ளது. 22 பிசாசு பலமுறை இவனைக் கொல்வதற்காக நீரிலும், நெருப்பிலும் தள்ளியிருக்கிறது. உங்களால் ஏதாவது செய்ய முடியுமானால் எங்கள் மீது இரக்கம் கொண்டு எங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கேட்டான்.
23 இயேசு அப்பையனின் தந்தையிடம், “‘உங்களால் முடியுமானால் செய்யுங்கள்’ என்கிறாய். விசுவாசம் கொண்டவர்களுக்கு எல்லாக் காரியங்களும் செய்து முடிக்கத் தக்கவையே” என்றார்.
24 அப்பையனின் தந்தை பரவசமானான். “நானும் விசுவாசிக்கிறேன். எனக்கு உதவி செய்து என் விசுவாசத்தைப் பெருகச் செய்யுங்கள்” என்றான்.
25 எல்லா மக்களும் நடப்பதை அறிந்துகொள்ள ஓடி வருவதைப் பார்த்தார் இயேசு. ஆகையால் இயேசு அசுத்த ஆவியிடம் பேசினார். இயேசு, “அசுத்த ஆவியே! நீ இந்தச் சிறுவனைச் செவிடாகவும், பேச முடியாமலும் ஆக்கிவிட்டாய். இவனை விட்டு வெளியே வா என்றும் மீண்டும் இவனுள் செல்லாதே என்றும் உனக்கு கட்டளையிடுகிறேன்” என்றார்.
26 அந்த அசுத்த ஆவி கதறிற்று. மீண்டும் அப்பையனைத் தரையிலே விழும்படி செய்து, அவனை விட்டு வெளியேறிற்று. அச்சிறுவன் இறந்தவனைப் போன்று கிடந்தான். பலர் “அவன் இறந்துபோனான்” என்றே சொன்னார்கள். 27 ஆனால் இயேசு அவனது கையைப் பிடித்து அவன் எழுந்திருக்க உதவினார்.
28 இயேசு வீட்டுக்குள் சென்றார். அவரது சீஷர்களும் அவரோடு தனியே இருந்தார்கள். அவர்கள், “எங்களால் ஏன் இந்த அசுத்த ஆவியை வெளியேற்ற முடியவில்லை?” என்று கேட்டனர்.
29 இயேசுவோ, “இந்த வகையான ஆவியைப் பிரார்த்தனையைப் பயன்படுத்தித்தான் வெளியேற்ற முடியும்” என்றுரைத்தார்.
தன் மரணத்தைப் பற்றிப் பேசுதல்(C)
30 பிறகு இயேசுவும், அவரது சீஷர்களும் அந்த இடத்தைவிட்டுச் சென்றார்கள். அவர்கள் கலிலேயா வழியே சென்றனர். தாம் இருக்கும் இடத்தை மக்கள் தெரிந்துகொள்ளக் கூடாது என்று இயேசு விரும்பினார். 31 இயேசு தன் சீஷர்களுக்குத் தனியே உபதேசிக்க விரும்பினார். அவர்களிடம் இயேசு, “மனித குமாரன் மக்களிடம் ஒப்படைக்கப்படுவார். அவரை அவர்கள் கொலை செய்வார்கள். மூன்று நாட்களுக்குப்பின் அவர் மரணத்தில் இருந்து உயிர்த்தெழுவார்” என்றார். 32 இயேசு என்ன பொருளில் கூறுகிறார் என்பதை சீஷர்கள் புரிந்துகொள்ளவில்லை. அவர் என்ன பொருள் கொள்கிறார் என்பதை விசாரிக்கவும் அவர்கள் அஞ்சினர்.
யார் உயர்ந்தவர்?(D)
33 இயேசுவும், அவரது சீஷர்களும் கப்பர்நகூமுக்குச் சென்றனர். அங்கே அவர்கள் ஒரு வீட்டுக்குள் நூழைந்தனர். பிறகு இயேசு தன் சீஷர்களிடம், “இன்று சாலையில் நீங்கள் எதை விவாதித்தீர்கள்?” என்று கேட்டார். 34 ஆனால் சீஷர்கள் பதில் சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அன்று அவர்களில் யார் மிகவும் உயர்ந்தவர் என்பது பற்றியே விவாதம் செய்தனர்.
35 ஓரிடத்தில் இயேசு உட்கார்ந்துகொண்டு பன்னிரண்டு சீஷர்களையும் அருகில் அழைத்தார். அவர்களிடம் இயேசு, “எவனாவது மிக முக்கியமானவனாக விரும்பினால் அவன் தன்னைவிட மற்ற அனைவரையும் மிக முக்கியமானவர்களாகக் கருதி அவன் அனைவருக்கும் வேலைக்காரனாக இருக்க வேண்டும்” என்றார்.
36 பிறகு இயேசு ஒரு குழந்தையைத் தூக்கினார். சீஷர்கள் முன்பு அக்குழந்தையை நிறுத்தினார். தன் கைகளால் குழந்தையைத் தாங்கியபடி, 37 “இத்தகைய குழந்தைகளை என் பெயரில் ஏற்றுக்கொள்கிற எந்த மனிதனும், என்னையும் ஏற்றுக்கொண்டவனாகிறான். என்னை ஏற்றுக்கொள்கிற எவனும் என்னை அனுப்பினவரையும் ஏற்றுக்கொள்கிறான்” என்றார்.
இயேசுவைச் சேர்ந்தவன் யார்?(E)
38 பிறகு யோவான் இயேசுவைப் பார்த்து, “போதகரே, உங்கள் பெயரைப் பயன்படுத்தி ஒருவன் பிசாசைத் துரத்திக்கொண்டிருப்பதை நாங்கள் பார்த்தோம். அவன் நம்மைச் சார்ந்தவன் அல்ல. நம்மவர்களில் ஒருவனும் அல்ல. எனவே அவ்வாறு செய்வதை நிறுத்தச் சொன்னோம்” என்றான்.
39 இயேசுவோ, “அவனை நிறுத்தாதீர்கள், எவனொருவன் என் பெயரைப் பயன்படுத்தி வல்லமையான செயல்களைச் செய்கிறானோ அவன் எனக்கு எதிராகத் தீயவற்றைச் செய்யமாட்டான். 40 எனக்கு எதிராகத் தீமை செய்யாதவன் எனக்கு வேண்டியவன். 41 நான் உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், நீங்கள் கிறிஸ்துவைச் சேர்ந்தவர்கள் என்பதால் எவனாவது ஒருவன் என்பேரின் நிமித்தம் உங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் தருவானேயானால் அவன் அதற்குரிய பலனை அடையாமல் போகமாட்டான்.
பாவத்திற்குக் காரணமானவர்களை இயேசு எச்சரித்தல்(F)
42 “இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும். 43 உங்கள் கைகளில் ஒன்று நீங்கள் பாவம் செய்யக் காரணமாக இருக்குமானால் அதனை வெட்டி எறியுங்கள். உன் உயிரை எப்போதைக்கும் இழப்பதைவிட உன் சரீரத்தின் ஒரு பகுதியை இழப்பது பரவாயில்லை. இரண்டு கையோடு நரகத்துக்குப் போவதை விட இது நல்லது. அங்கு நெருப்பு அடங்காமல் எரியும். 44 [a] 45 உன் கால் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனை வெட்டிப் போடு. நீ உன் வாழ்க்கையை இழந்துபோவதைவிட காலைமட்டும் இழப்பது பரவாயில்லை. இரண்டு கால்களோடு நரகத்துக்குப் போவதைவிட இது பரவாயில்லை. 46 [b] 47 உனது கண் நீ பாவம் செய்யக் காரணமானால் அதனைப் பிடுங்கிப் போடு. உனது வாழ்வு முழுவதையும் இழப்பதைவிட ஒரு கண்ணை உடையவனாய் இருப்பது பரவாயில்லை. இரண்டு கண்ணுடையவனாய் நரகத்தில் தள்ளப்படுவதை விட ஒரு கண்ணை உடையவனாய் தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைவது பரவாயில்லை. 48 நரகத்தில் மனிதரை சாப்பிடும் புழுக்கள் ஒருபோதும் சாவதில்லை. அங்கே நெருப்பானது எப்போதும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கும்.
49 “ஒவ்வொருவரும் நெருப்பால் தண்டிக்கப்படுவார்கள்.
50 “உப்பு நல்லதுதான். ஆனால் உப்பு தனது சுவையை இழந்துபோனால் நீ மீண்டும் அச்சுவையை அதில் ஊட்டமுடியாது. அதனால் நல்ல குணமுடையவர்களாய் இருங்கள். ஒருவருக்கொருவர் சமாதானமாய் இருங்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center