M’Cheyne Bible Reading Plan
8 எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனிடம் கோபப்பட்டனர். எப்பிராயீம் மனிதர்கள் கிதியோனைச் சந்தித்தபோது, அவர்கள், “ஏன் எங்களை இப்படி நடத்தினீர்கள்? மீதியானியரை எதிர்த்து நீங்கள் போராடச் சென்றபோது ஏன் எங்களை அழைக்கவில்லை?” என்று கேட்டார்கள்.
2 ஆனால் கிதியோன் எப்பிராயீம் ஆட்களைப் பார்த்து, “நீங்கள் சாதித்த அளவுக்கு நான் எதையும் செய்யவில்லை. எனது குடும்பத்தாராகிய அபியேஸரின் குடும்பத்தைக் காட்டிலும் எப்பிராயீம் ஜனங்களாகிய நீங்கள் சிறப்பாக அறுவடை செய்கிறீர்கள். அறுவடைக் காலத்தில் எங்கள் குடும்பத்தினர் சேகரிப்பதைக் காட்டிலும் நீங்கள் உங்கள் வயல்களில் அதிகமான திராட்சைக் கனிகளைவிட்டு வைக்கிறீர்கள். அது உண்மை அல்லவா? 3 அதுபோலவே, உங்களுக்கு இப்போதும் சிறந்த அறுவடை வாய்த்துள்ளது. தேவன் உங்களை மீதியானியரின் தலைவர்களாகிய ஓரேபையும் சேபையும் சிறைப்பிடிக்கச் செய்தார். நீங்கள் செய்வதோடு என் வெற்றியை நான் எவ்வாறு ஒப்பிட்டுப் பார்க்க முடியும்?” என்றான். எப்பிராயீமின் ஆட்கள் கிதியோனின் பதிலைக் கேட்டபோது, அவர்கள் கோபம் அடங்கியது.
மீதியானியரின் இரண்டு அரசர்களையும் கிதியோன் சிறைபிடித்தல்
4 கிதியோனும் அவனது 300 ஆட்களும் யோர்தான் நதியருகே வந்து மறுகரைக்குக் கடந்து சென்றனர். அவர்கள் களைப்புற்றுப் பசியோடு காணப்பட்டனர். 5 கிதியோன் சுக்கோத் நகரத்தின் மனிதர்களைப் பார்த்து, “எனது வீரர்கள் உண்பதற்கு ஏதாவது கொடுங்கள். அவர்கள் களைப்புற்றிருக்கிறார்கள். நாங்கள் மீதியானியரின் அரசர்களாகிய சேபாவையும் சல்முனாவையும் துரத்திக் கொண்டிருக்கிறோம்” என்றான்.
6 ஆனால் சுக்கோத் நகரத்தின் தலைவர்கள் கிதியோனைப் பார்த்து, “ஏன் நாங்கள் உமது வீரர்களுக்கு சாப்பிட உணவு கொடுக்க வேண்டும்? நீங்கள் இன்னும் சேபாவையும் சல்முனாவையும் பிடிக்கவில்லை” என்றார்கள்.
7 அப்போது கிதியோன், “நீங்கள் எங்களுக்கு உணவு தரமாட்டீர்கள். சேபாவையும் சல்முனாவையும் பிடிப்பதற்கு கர்த்தர் எனக்கு உதவுவார். அதன் பின்னர் நான் மீண்டும் இங்கு வருவேன். அப்போது பாலைவனத்திலுள்ள முட்களாலும் நெருஞ்சில்களாலும் அடித்து உங்கள் தோலைக் கிழித்துவிடுவேன்” என்றான்.
8 சுக்கோத் நகரை விட்டு வெளியேறிய கிதியோன் பெனூவேல் நகரத்திற்குச் சென்றான். கிதியோன் பெனூவேலின் ஆட்களிடமும் உணவு கேட்டான். சுக்கோத்தின் மனிதர்களைப் போலவே பெனூவேலின் ஆட்களும் கிதியோனுக்குப் பதில் கூறினார்கள். 9 எனவே கிதியோன் பெனூவேலின் மனிதர்களிடம், “நான் வெற்றி பெற்றபின் இங்குத் திரும்பி வந்து கோபுரத்தைத் தரைமட்டம் ஆக்குவேன்” என்றான்.
10 சேபாவும், சல்முனாவும், அவர்களது சேனைகளும் கர்கோர் நகரத்தில் இருந்தார்கள். அவர்களது சேனையில் 15,000 வீரர்கள் இருந்தனர். இவர்கள் கிழக்கிலிருந்து வந்த ஜனங்களின் சேனையில் மீதியிருந்த படை வீரர்களாவர். அவர்கள் சேனையின் 1,20,000 வலிமைமிக்க படைவீரர்கள் ஏற்கெனவே கொல்லப்பட்டனர்.
11 கிதியோனும் அவனது மனிதர்களும் கூடாரங்களில் வாழ்வோரின் பாதை வழியாகச் சென்றனர். நோபாகு, யொகிபெயா ஆகிய நகரங்களின் கிழக்கில் அப்பாதை இருந்தது. கிதியோன் கர்கோர் நகரம் வரைக்கும் வந்து, பகைவரைத் தாக்கினான். எதிரிகளின் சேனை அந்தத் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. 12 மிதியானியரின் அரசர்களாகிய சேபாவும் சல்முனாவும் ஓடிப்போனார்கள். ஆனால் கிதியோன் அவர்களைத் துரத்திப் பிடித்தான். கிதியோனும் அவனது ஆட்களும் பகைவரின் படையைத் தோற்கடித்தனர்.
13 பின், யோவாஸின் மகனான கிதியோன் போரிலிருந்து திரும்பினான். ஏரேஸ் கணவாய் வழியாகக் கிதியோனும் அவனது ஆட்களும் திரும்பினார்கள். 14 கிதியோன் சுக்கோத் நகரத்து இளைஞன் ஒருவனைப் பிடித்தான். கிதியோன் அந்த இளைஞனைச் சில கேள்விகள் கேட்டான். அந்த இளைஞன் சுக்கோத் நகரத்துத் தலைவர்கள் மற்றும் மூப்பர்களது பெயர்களை எழுதினான். அவன் 77 மனிதர்களின் பெயர்களைத் தந்தான்.
15 பின் கிதியோன் சுக்கோத் நகரத்திற்கு வந்தான். அவன் அந்நகரத்து மனிதர்களைப் பார்த்து, “சேபாவையும், சல்முனாவையும் இதோ பிடித்திருக்கிறோம். நீங்கள் எங்களைப் பார்த்துக் கிண்டலாக, ‘ஏன் உங்கள் களைத்த வீரர்களுக்கு உணவளிக்க வேண்டும்? நீங்கள் இன்னும் சேபாவையும் சல்முனாவையும் பிடிக்கவில்லை’ என்றீர்கள்” என்றான். 16 கிதியோன் சுக்கோத் நகரத்தின் தலைவர்களை அழைத்து வந்து, பாலைவனத்தின் முட்களாலும் நெருஞ்சில்களாலும் அவர்களை அடித்தான். 17 பெனூவேல் நகரத்தின் கோபுரத்தையும் கிதியோன் தரைமட்டம் ஆக்கி, அந்நகரின் மனிதர்களைக் கொன்றான்.
18 பின் கிதியோன் சேபாவையும் சல்முனாவையும் நோக்கி, “தாபோர் மலையில் நீங்கள் சில மனிதர்களைக் கொன்றீர்கள், அவர்கள் யாரைப் போன்றிருந்தார்கள்?” என்று கேட்டான்.
சேபாவும் சல்முனாவும், “அவர்கள் உங்களைப் போன்றிருந்தார்கள். ஒவ்வொருவனும் ஒரு இராஜ குமாரனைப் போல் காணப்பட்டான்” என்று பதில் கூறினார்கள்.
19 கிதியோன், “அவர்கள் என் சகோதரர்கள்! என் தாயின் ஜனங்கள்! கர்த்தர் ஜீவித்திருக்கிறபடியால், நீங்கள் அவர்களைக் கொல்லாமல் விட்டிருந்தால், நானும் இப்போது உங்களைக் கொல்லாமல் விட்டிருப்பேன்” என்றான்.
20 பின்பு கிதியோன் யெத்தேரை ஏறிட்டுப் பார்த்தான். யெத்தேர் கிதியோனின் மூத்த மகன். கிதியோன் அவனை நோக்கி, “இந்த அரசர்களைக் கொன்றுவிடு” என்றான். ஆனால் யெத்தேர் பயம் நிறைந்த ஒரு பையனாக இருந்தான். எனவே அவன் தன் வாளை உருவவில்லை.
21 அப்போது சேபாவும் சல்முனாவும் கிதியோனை நோக்கி, “நீர் எழுந்து எங்களைக் கொன்றுபோடும். இதை நிறைவேற்றும் வலிமை உம்மிடமே உண்டு” என்றனர். எனவே கிதியோன் எழுந்து சேபாவையும் சல்முனாவையும் கொன்றான். பின்பு அவர்களது ஒட்டகங்களின் கழுத்துக்களிலிருந்தச் சந்திரனைப் போன்ற அலங்காரங்களை எடுத்துக்கொண்டான்.
கிதியோன் ஓர் ஏபோதைச் செய்தல்
22 இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, “நீர் எங்களை மீதியானியரிடமிருந்து காப்பாற்றினீர். எனவே எங்களை நீரே ஆட்சி செய்யும். நீரும், உமது மகனும், உமது பேரனும் எங்களை ஆளவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம்” என்றனர்.
23 ஆனால் கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, “கர்த்தர் தாமே உங்கள் அரசராக இருப்பார். நான் உங்களை ஆளமாட்டேன், எனது மகனும் உங்களை ஆளமாட்டான்” என்றான்.
24 இஸ்ரவேலர் வென்ற ஜனங்களில் இஸ்மவேலரும் இருந்தனர். இஸ்மவேலரில் ஆண்கள் பொன்னாலாகிய காதணிகளை அணிந்திருந்தனர். எனவே கிதியோன் இஸ்ரவேலரை நோக்கி, “நான் கேட்கும் இந்த காரியத்தை நீங்கள் எனக்குச் செய்ய வேண்டும். போரில் நீங்கள் எடுத்துக்கொண்ட பொருள்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பொன் காதணியை எனக்குத் தரவேண்டும்! என்று விரும்புகிறேன்” என்றான்.
25 அதற்கு இஸ்ரவேலர் கிதியோனை நோக்கி, “நீர் கேட்பதை நாங்கள் மகிழ்ச்சியோடு தருவோம்” என்றனர். அவர்கள் ஓர் மேலாடையைக் கீழே விரித்தனர். ஒவ்வொருவனும் அதன் மீது ஒரு காதணியைப் போட்டான். 26 அக்காதணிகளைச் சேர்த்து எடைபோட்டபோது 43 பவுண்டு எடையுள்ளதாய் இருந்தது. இஸ்ரவேலர் கிதியோனுக்குக் கொடுத்த மற்றப் பரிசுகள் இங்கு சேர்க்கப்படவில்லை. பிறையைப் போன்றும், மழைத் துளிகளைப் போன்றும் வடிவமைந்த அணிகலன்களையும் அவர்கள் அவனுக்குக் கொடுத்தனர். அவனுக்கு ஊதா நிற அங்கியையும் கொடுத்தனர். மீதியானியரின் அரசர்கள் அவற்றை அணிந்திருந்தனர். மீதியானிய அரசர்களின் ஒட்டகங்களிலுள்ள சங்கிலிகளையும் அவர்கள் அவனுக்குக் கொடுத்தனர்.
27 கிதியோன் ஒரு ஏபோத்தைச் செய்ய, இப்பொன்னைப் பயன்படுத்தினான். ஒப்ரா என்னும் அவனது சொந்த ஊரிலேயே ஏபோத்தை வைத்தான். இஸ்ரவேலர் எல்லோரும் ஏபோத்தை வழிப்பட்டனர். இவ்விதமாக இஸ்ரவேல் ஜனங்கள் தேவனிடம் அவநம்பிக்கைகொண்டு ஏபோத்தை வழிபட்டனர். கிதியோனும் அவனது குடும்பத்தினரும் பாவம் செய்யும்படியான கண்ணியாக இந்த ஏபோத் அமைந்தது.
கிதியோனின் மரணம்
28 இஸ்ரவேலரின் ஆளுகையின் கீழ் மீதியானியர் வந்தனர். மீதியானியர் இஸ்ரவேலருக்கு எந்தப் பிரச்சனையும் மேற்கொண்டு தரவில்லை. கிதியோன் உயிரோடு இருந்தவரைக்கும் தேசம் 40 ஆண்டுகள் அமைதியாக இருந்தது.
29 யோவாஸின் மகனாகிய யெருபாகால் (கிதியோன்) தன் வீட்டிற்குச் சென்றான். 30 கிதியோனுக்கு 70 மகன்கள் இருந்தனர். அவனுக்குப் பல மனைவியர் இருந்ததால் அத்தனை மகன்கள் இருந்தனர். 31 கிதியோனின் வேலைக்காரி சீகேமில் வாழ்ந்து வந்தாள். கிதியோனுக்கு அவள் மூலமாக பிறந்த மகன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அபிமெலேக்கு.
32 யோவாஸின் மகனாகிய கிதியோன் மிக முதிர்ந்த வயதில் மரித்தான். யோவாஸின் கல்லறையில் கிதியோன் அடக்கம்பண்ணப்பட்டான். அபியேஸர் குடும்பம் வாழும் ஒப்ரா நகரில் அந்தக் கல்லறை இருக்கிறது. 33 கிதியோன் மரித்ததும், இஸ்ரவேலர் தேவனிடம் நம்பிக்கை வைக்காமல் பாகாலைப் பின்பற்றினார்கள். அவர்கள் பாகால் பேரீத்தைத் தேவனாக்கினார்கள். 34 சுற்றி வாழ்ந்த பகைவர்களிடம் இருந்தெல்லாம் இஸ்ரவேலர்களைக் காப்பாற்றியும் கூட, இஸ்ரவேலர்கள் தமது தேவனாகிய கர்த்தரை நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 35 எவ்வளவோ நன்மைகளைச் செய்திருந்தும்கூட யெருபாகாலின் (கிதியோன்) குடும்பத்தினருக்கு இஸ்ரவேலர் விசுவாசமுடையவர்களாய் இருக்கவில்லை.
சபையைத் துன்புறுத்துதல்
12 அதே காலத்தில் சபையைச் சார்ந்த சில மக்களை ஏரோது துன்புறுத்த ஆரம்பித்தான். 2 ஏரோது யாக்கோபை வாளால் வெட்டிக் கொல்வதற்கு ஆணையிட்டான். யாக்கோபு யோவானின் சகோதரன். 3 யூதர்கள் இதை விரும்பினர் என்பதை ஏரோது கண்டான். எனவே அவன் பேதுருவையும் கைது செய்ய முடிவெடுத்தான். (இது பஸ்கா பண்டிகை எனப்படும் யூதரின் பண்டிகையின்போது நடந்தது) 4 ஏரோது பேதுருவைக் கைது செய்து சிறையில் வைத்தான். 16 வீரர்களின் கூட்டம் பேதுருவைக் காவல் காத்தது. பஸ்கா பண்டிகை கழியுமட்டும் காத்திருப்பதற்கு ஏரோது விரும்பினான். பின்னர் மக்களின் முன்னால் பேதுருவைக் கொண்டு வர அவன் திட்டமிட்டான். 5 எனவே பேதுரு சிறையில் வைக்கப்பட்டான். ஆனால் சபையினரோ பேதுருவுக்காகத் தொடர்ந்து தேவனிடம் பிரார்த்தித்துக்கொண்டிருந்தனர்.
பேதுரு விடுவிக்கப்படுதல்
6 இரண்டு வீரர்களுக்கு மத்தியில் பேதுரு படுத்து உறங்கிக்கொண்டிருந்தான். அவன் இரண்டு சங்கிலிகளால் கட்டப்பட்டிருந்தான். மேலும் அதிகமான வீரர்கள் சிறைக் கதவைக் காத்துக்கொண்டிருந்தனர். அது இரவுப்பொழுது. மறுநாள் மக்களின் முன்பாகப் பேதுருவை அழைத்துவர ஏரோது திட்டமிட்டிருந்தான்.
7 அறையில் திடீரென ஓர் ஒளி பிரகாசித்தது. தேவ தூதன் ஒருவன் பேதுருவைப் பக்கவாட்டில் தொட்டு எழுப்பினான். தேவ தூதன், “விரைந்து எழு!” என்றான். பேதுருவின் கரங்களிலிருந்து விலங்குகள் கழன்று விழுந்தன. 8 தேவதூதன் பேதுருவை நோக்கி, “ஆடைகளை உடுத்து, செருப்புகளை அணிந்துகொள்” என்றான். அவ்வாறே பேதுருவும் செய்தான். பின் தேவ தூதன் “அங்கியை அணிந்துகொண்டு என்னைத் தொடர்ந்து வா” என்றான்.
9 தேவதூதன் வெளியே சென்றான். பேதுருவும் அவனைத் தொடர்ந்தான். நடந்தவை உண்மையா என்பது பேதுருவுக்குத் தெரியவில்லை. ஏதோ ஒரு காட்சியைக் காண்பதாகவே அவன் எண்ணினான். 10 பேதுருவும் தேவதூதனும் முதல் காவலனையும் இரண்டாம் காவலனையும் கடந்தனர். நகரத்திலிருந்து அவர்களைப் பிரித்த பெரிய இரும்புக் கதவருகே வந்தனர். அந்தக் கதவு தானாகவே அவர்களுக்காகத் திறந்தது. பேதுருவும் தேவ தூதனும் கதவின் வழியாகச் சென்று அடுத்த தெரு வரைக்கும் நடந்தார்கள். அப்போது திடீரென தேவதூதன் மறைந்தான்.
11 நடந்தது என்னவென்பதைப் பேதுரு அப்போது உணர்ந்தான். அவன், “கர்த்தர் உண்மையாகவே தனது தேவதூதனை என்னிடம் அனுப்பினார் என்பதை நான் அறிவேன். ஏரோதிடமிருந்து அவன் என்னை விடுவித்தான். தீமை எனக்கு நேருமென்று யூதர்கள் எண்ணினர். ஆனால் கர்த்தர் இவற்றிலிருந்து என்னைக் காத்தார்” என்று எண்ணினான்.
12 பேதுரு அதை உணர்ந்தபோது அவன் மரியாளின் வீட்டிற்குப் போனான். அவள் யோவானின் தாய். யோவான் மாற்கு என்றும் அழைக்கப்பட்டான். பல மக்கள் அங்கு கூடியிருந்தனர். அவர்கள் எல்லோரும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தனர்.
13 பேதுரு வெளிக் கதவைத் தட்டினான். ரோதை என்னும் பெயருள்ள வேலைக்காரச் சிறுமி பதில் கூற வந்தாள். 14 ரோதை பேதுருவின் குரலை அடையாளம் கண்டுகொண்டாள். அவள் மிகுந்த சந்தோஷம் அடைந்தாள். அவள் கதவைத் திறக்கவும் மறந்துவிட்டாள். அவள் உள்ளே ஓடி, கூட்டத்தினரிடம், “பேதுரு கதவருகே நிற்கிறார்!” என்றாள். 15 விசுவாசிகள் ரோதையை நோக்கி, “நீ ஒரு பைத்தியம்!” என்றனர். ஆனால் தான் கூறியது உண்மையே என்று அவள் வற்புறுத்தினாள். எனவே அவர்கள், “அது பேதுருவின் தூதனாக இருக்க வேண்டும்” என்றனர்.
16 ஆனால் பேதுரு தொடர்ந்து தட்டிக்கொண்டேயிருந்தான். விசுவாசிகள் கதவைத் திறந்தபோது பேதுருவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள். 17 அவர்களை அமைதியாக இருக்கும்படியாகப் பேதுரு தனது கையால் சைகை செய்தான். தேவன் அவனைச் சிறையினின்று எவ்வாறு விடுவித்தார் என்பதை அவன் அவர்களுக்கு விவரித்தான். அவன், “நடந்ததை யாக்கோபுக்கும் பிற சகோதரருக்கும் சொல்லுங்கள்” என்றான். பின் வேறிடத்திற்குப் போவதற்காக அவர்களிடமிருந்து பிரிந்து சென்றான்.
18 மறுநாள் காவலர்கள் மிகவும் நிலைகுலைந்தார்கள். பேதுருவுக்கு என்ன நடந்திருக்குமென்று அவர்கள் அதிசயப்பட்டனர். 19 ஏரோது பேதுருவுக்காக எல்லா இடங்களிலும் தேடியும் அவன் அகப்படவில்லை. எனவே ஏரோது காவலரை வினவினான். பின் காவலரைக் கொல்லும்படியாக ஆணையிட்டான்.
ஏரோது அகிரிப்பாவின் மரணம்
பின்னர் ஏரோது யூதேயாவிலிருந்து சென்றான். அவன் செசரியா நகரத்திற்குச் சென்று அங்கு சில காலம் தங்கினான். 20 தீருவிலும் சீதோன் நகரிலுமுள்ள மக்களோடு ஏரோது மிகவும் சினங்கொண்டான். அம்மக்கள் எல்லோரும் கூட்டமாக ஏரோதுவிடம் வந்தனர். பிலாஸ்துவை அவர்கள் தங்கள் பக்கமாக சேருவதற்குத் தூண்டினார்கள். பிலாஸ்து அரசனின் நேர்முகப் பணியாள். ஏரோதுவின் நாட்டிலிருந்து அவர்கள் நாட்டிற்கு உணவுப் பொருட்கள் வரவேண்டியிருந்ததால் மக்கள் ஏரோதுவிடம் சமாதானத்தை வேண்டினர்.
21 ஏரோது அவர்களை சந்திப்பதற்கென ஒரு நாளைக் குறித்தான். அந்நாளில் ஏரோது, அரசனுக்கான அழகிய மேலங்கியை அணிந்துகொண்டிருந்தான். அவன் சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டு மக்களிடம் பேச ஆரம்பித்தான். 22 மக்கள் உரக்க, “இது தேவனுடைய குரல், மனிதனுடையதல்ல!” என்றனர். 23 ஏரோது இந்த வாழ்த்தைத் தனக்குரியதாக ஏற்றுக்கொண்டு, தேவனுக்குரிய மகிமையை அளிக்கவில்லை. எனவே கர்த்தரின் தூதன் ஒருவன் அவனை நோய்வாய்ப்படச் செய்தான். அவன் உள்ளே புழுக்களால் உண்ணப்பட்டு இறந்தான்.
24 தேவனுடைய செய்தி பரவிக்கொண்டிருந்தது. விசுவாசிகளின் எண்ணிக்கை பெருகிக்கொண்டேயிருந்தது.
25 எருசலேமில் பர்னபாவும் சவுலும் அவர்கள் வேலையை முடித்தபோது, அவர்கள் அந்தியோகியாவுக்குத் திரும்பினர். யோவான் மாற்கு அவர்களோடிருந்தான்.
தேவன் சிதேக்கியா ராஜாவின் வேண்டுக்கோளை ஏற்க மறுக்கிறார்
21 எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வார்த்தை வந்தது. யூதாவின் அரசனான சிதேக்கியா பஸ்கூர் என்ற மனிதனையும், செப்பனியா என்ற ஆசாரியனையும் எரேமியாவிடம் அனுப்பியபோது இந்த வார்த்தை வந்தது. பஸ்கூர் மல்கியா என்ற பெயருள்ளவனின் மகன். செப்பனியா, மாசெயா என்ற பெயருள்ளவனின் மகன். பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிற்கு வார்த்தையைக் கொண்டுவந்தனர். 2 பஸ்கூரும் செப்பனியாவும் எரேமியாவிடம், “எங்களுக்காக கர்த்தரிடம் ஜெபம் செய். என்ன நிகழும் என்று கர்த்தரிடம் கேள். நாங்கள் அறிந்துக்கொள்ள விரும்புகிறோம். ஏனென்றால் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சர் எங்களைத் தாக்கிக்கொண்டிருக்கிறான். கர்த்தர் கடந்த காலத்தில் செய்ததுபோன்று எங்களுக்குப் பெருஞ்செயல்களை ஒருவேளை செய்வார். நேபுகாத்நேச்சார் எங்களைத் தாக்குவதை நிறுத்தி விலகும்படி கர்த்தர் செய்வார்” என்றனர்.
3 பிறகு எரேமியா, பஸ்கூருக்கும் செப்பனியாவிற்கும் பதில் சொன்னான். அவன், “சிதேக்கியா அரசனுக்குச் சொல்லுங்கள். 4 ‘இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்வது இதுதான்: உங்கள் கைகளில் போருக்கான ஆயுதங்கள் உள்ளன. நீங்கள் அந்த ஆயுதங்களை பாபிலோனின் அரசன் மற்றும் பாபிலோனியர்களிடமிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுகிறீர்கள். ஆனால், நான் அந்த ஆயுதங்களைப் பயனற்றுப்போகும்படிச் செய்வேன்.
“‘நகரச்சுவர்களுக்கு வெளியே பாபிலோனியப் படை உள்ளது. அப்படை நகரைச் சுற்றிலும் உள்ளது. நான் விரைவில் அப்படையை எருசலேமிற்குள் கொண்டுவருவேன். 5 யூதாவின் ஜனங்களே, உங்களுக்கு எதிராக நானே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் என் சொந்த வல்லமையான கரத்தினாலேயே போரிடுவேன். உங்களுக்கு எதிராக நான் மிகக் கடுமையாகப் போரிடுவேன். நான் எவ்வளவு கோபமாக உள்ளேன் என்பதைக் காட்டுவேன். 6 எருசலேமில் வாழ்கிற ஜனங்களை நான் கொல்வேன். நான் ஜனங்களையும் மிருகங்களையும் கொல்வேன். நகரம் முழுவதும் பரவும் பயங்கரமான நோயால் அவர்கள் மரிப்பார்கள். 7 அது நிகழ்ந்த பிறகு, நான் யூதாவின் அரசனான சிதேக்கியாவைப் பாபிலோனின் அரசனான நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் சிதேக்கியாவின் அதிகாரிகளையும் நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். எருசலேமில் உள்ள சில ஜனங்கள் பயங்கரமான நோயால் மரிக்கமாட்டார்கள். சில ஜனங்கள் வாளால் கொல்லப்படமாட்டார்கள். சிலர் பசியால் மரிக்கமாட்டார்கள். ஆனால் நான் அந்த ஜனங்களை நேபுகாத்நேச்சாரிடம் கொடுப்பேன். நான் யூதாவின் பகைவர்களை வெல்லவிடுவேன். நேபுகாத்நேச்சாரின் படை யூதாவின் ஜனங்களைக் கொல்ல விரும்புகிறது. எனவே, யூதாவின் ஜனங்களும் எருசலேமின் ஜனங்களும் வாளால் கொல்லப்படுவார்கள். நேபுகாத்நேச்சார் எவ்வித இரக்கமும் காட்டமாட்டான். அவன் அந்த ஜனங்களுக்காக வருத்தப்படமாட்டான்.’”
8 “எருசலேம் ஜனங்களுக்கு இவற்றையும் சொல்லுங்கள். கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்: ‘நீங்கள் வாழ்வதா அல்லது மரிப்பதா என்பதைத் தேர்ந்தெடுக்க நானே அனுமதிப்பேன். 9 எருசலேமில் தங்குகிற எவனும் மரிப்பான். அந்த நபர் வாளால் மரிப்பான் அல்லது பசியால் மரிப்பான் அல்லது பயங்கரமான நோயால் மரிப்பான். ஆனால், எவன் ஒருவன் எருசலேமிற்கு வெளியே போகிறானோ, பாபிலோனில் படையிடம் சரணடைகிறானோ அவன் உயிர் வாழ்வான். நகரத்தைச்சுற்றி படை உள்ளது. எனவே, நகரத்திற்குள் எவனும் உணவைக் கொண்டுவர முடியாது. ஆனால், எவன் ஒருவன் நகரத்தை விட்டுப் போகிறானோ அவனது வாழ்வு பாதுகாக்கப்படும். 10 எருசலேம் நகரத்திற்குத் தொல்லை கொடுக்க நான் முடிவு செய்தேன். நான் நகரத்திற்கு உதவி செய்யமாட்டேன். நான் எருசலேம் நகரத்தைப் பாபிலோன் அரசனிடம் கொடுப்பேன். அவன் அதனை நெருப்பால் எரிப்பான்.’” இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
11 “யூதாவின் அரசக் குடும்பத்தில் இவற்றைக் கூறுங்கள்: ‘கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தையை கவனி. 12 தாவீதின் குடும்பத்தினரே, கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“‘ஒவ்வொரு நாளும் நீங்கள் சரியாக ஜனங்களை நியாயம் தீர்க்கவேண்டும்.
இரக்கமற்ற ஒடுக்குபவர்களிடமிருந்து ஒடுக்கப்படுபவர்களைக் காப்பாற்றுங்கள்.
நீங்கள் இதனைச் செய்யாவிட்டால்
நான் பிறகு கோபம்கொள்வேன்.
எனது கோபம் நெருப்பைப் போன்றது எவரும் அதனை அணைக்கமுடியாது.
இது நிகழும் ஏனென்றால், நீங்கள் தீயவற்றைச் செய்திருக்கிறீர்கள்.’
13 “எருசலேமே, நான் உனக்கு எதிராக இருக்கிறேன்.
நீ மலையின் உச்சியில் உட்கார்ந்து இருக்கிறாய்.
இந்தப் பள்ளத்தாக்கின் மீதுள்ள அரசியைப் போன்று நீ உட்கார்ந்து இருக்கிறாய்.
எருசலேமில் ஜனங்களாகிய நீங்கள்,
‘எவராலும் எங்களைத் தாக்க முடியாது!
எங்கள் பலமான நகரத்திற்குள் எவராலும் வர இயலாது’” என்று கூறுகிறீர்கள்.
ஆனால், கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்.
14 “உங்களுக்கு ஏற்ற தண்டனையை நீங்கள் பெறுவீர்கள்.
உங்கள் காடுகளில் ஒரு நெருப்பைத் தொடங்குவேன்.
அது உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் எரித்துவிடும்.”
பிரமாணங்களும் மனிதரின் விதிமுறைகளும்(A)
7 எருசலேமிலிருந்து சில பரிசேயர்களும், சில வேதபாரகர்களும் வந்தனர். அவர்கள் இயேசுவைச் சுற்றிக் கூடினர். 2 இயேசுவின் சீஷர்களில் சிலர் சுத்தமற்ற கைகளால் உணவு உண்பதை அவர்கள் கவனித்தார்கள். (சுத்தமற்ற கை என்றால் பரிசேயர்கள் முறைப்படி அவர்கள் தம் கைகளைக் கழுவாமல் இருந்தனர்) 3 பரிசேயர்களும், யூதர்களனைவரும் இத்தகு சிறப்பான முறையில் தம் கைகளைக் கழுவுவதற்கு முன்னால் உணவு உண்பதில்லை. அவர்கள் இதனை அவர்களின் முன்னோர் சொன்னபடி தொடர்ந்து செய்து வருகின்றனர். 4 யூதர்கள் சந்தையில் ஏதாவது வாங்கும்போது, அதனைத் தனியான முறையில் கழுவிச் சுத்தப்படுத்தும் முன் அவர்கள் அதை உண்பதில்லை. இதைப்போன்று அவர்கள் பல விதிகளைத் தங்கள் முன்னோரிடமிருந்து பெற்றுக் கடைப்பிடித்தனர். கிண்ணங்கள், குடங்கள், வெண்கலப் பாத்திரங்கள் போன்றவற்றைக் கழுவுவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தனர்.
5 பரிசேயர்களும், வேதபாரகர்களும் இயேசுவிடம், “உம்முடைய சீஷர்கள் நமக்கு முன்பு வாழ்ந்த முன்னோர்களின் விதிமுறைகளைக் கைக்கொள்ளவில்லையே? உம்முடைய சீஷர்கள் சுத்தமற்ற கைகளால் தம் உணவை உண்டு வருகிறார்கள். ஏன் இவ்வாறு செய்கிறார்கள்?” என்று கேட்டனர்.
6 இயேசு அவர்களிடம் “நீங்கள் எல்லாரும் போலித்தனமானவர்கள். உங்களைப் பற்றி ஏசாயா சரியாகவே எழுதியிருக்கிறான். அவன் எழுதியிருப்பது:
“‘இந்த மக்கள் என்னை மதிப்பதாய்ச் சொல்கிறார்கள்,
ஆனால் உண்மையில் அவர்கள் தம் வாழ்வில் எனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
7 அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது.
அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’ (B)
8 நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார்.
9 மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள். 10 ‘உங்கள் தாய்க்கும் தந்தைக்கும் மதிப்பு கொடுங்கள்’ [a] என்று மோசே சொல்லி இருக்கிறான். மேலும் அவன் ‘எவன் ஒருவன் தன் தந்தையிடமோ அல்லது தாயிடமோ கெட்டவற்றைப் பேசுகிறானோ அவன் கொலை செய்யப்படத்தக்கவன்’ [b] என்று கூறி இருக்கிறான். 11 ஒருவன் தன் தந்தையையோ தாயையோ நோக்கி ‘நான் உங்களுக்கு உதவக்கூடியவற்றைச் செய்ய முடியும். ஆனால் நான் உங்களுக்குச் செய்யமாட்டேன். நான் அதனைத் தேவனுக்குத் தருவேன்’ என்று சொல்ல நீங்கள் கற்றுத் தருகிறீர்கள். 12 அவன் தன் தந்தைக்கோ தாய்க்கோ எதுவும் செய்யத் தேவையில்லை என்று கற்பிக்கிறீர்கள். 13 ஆகையால் தேவன் சொன்னவற்றைச் செய்வது அவ்வளவு முக்கியமில்லை என்று சொல்லித்தருகிறீர்கள். நீங்கள் சொல்பவற்றை மக்கள் செய்தால் போதும் என்று நினைக்கிறீர்கள். நீங்கள் இது போன்று பல செயல்களைச் செய்து வருகின்றீர்கள்” என்றார்.
14 மக்களை மீண்டும் இயேசு தன்னிடம் அழைத்தார். அவர் “ஒவ்வொரு மனிதனும் எனக்குச் செவிகொடுக்க வேண்டும். நான் சொல்பவற்றைப் புரிந்துகொள்ள வேண்டும். 15 வெளியே இருந்து மனிதனுக்குள்ளே போகும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது. அவனது உள்ளத்தில் இருந்து வெளியே வருவதுதான் அவனைத் தீட்டுப்படுத்தும். 16 நான் சொல்வதைக் கேட்பவர்களே, கவனியுங்கள்” என்றார்.
17 பின்னர் இயேசு அந்த மக்களிடமிருந்து விலகி வீட்டிற்குள் சென்றார். இந்த உவமையைப்பற்றி அவரது சீஷர்கள் இயேசுவிடம் கேட்டனர். 18 “உங்களுக்கு புரிந்துகொள்வதில் இன்னும் சிரமங்கள் உள்ளனவா? வெளியே இருந்து மனிதனுக்குள் செல்லும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்தாது என்பது புரியவில்லையா? 19 உணவானது மனிதனின் மூளைக்குள் செல்வதில்லை. உணவு வயிற்றுக்குள் தான் செல்லும். பிறகு அந்த உணவு உடம்பைவிட்டு வெளியேறிவிடும்” என்றார் இயேசு. (இயேசு இதனைக் கூறும்போது, அவர் மக்கள் உண்ணும் எந்த உணவும் அவர்களைத் தீட்டுப்படுத்தாது என்று உணர்த்தினார்.)
20 மேலும் இயேசு, “மனிதனுக்குள்ளே இருந்து வெளிவரும் எதுவும் அவனைத் தீட்டுப்படுத்திவிடுகிறது. 21 கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் பிறக்கின்றன. அவன் மனத்தில் கெட்ட எண்ணங்கள், பாலியல் குற்றங்கள், களவு, கொலை 22 விபசாரம், சுயநலம், தீயசெயல்கள், பொய், பொறாமை, புறங்கூறுதல், பெருமை பேசுதல், மூடவாழ்க்கை போன்றவை தோன்றும். 23 இத்தகைய கெட்டவை எல்லாம் மனிதனுக்குள்ளே இருந்துதான் வருகின்றன. இத்தீயவையே மனிதனை மாசுபடுத்துபவை” என்றார்.
யூதரல்லாத பெண்ணுக்கு உதவி(C)
24 இயேசு அந்த இடத்தைவிட்டு தீரு பகுதிக்குச் சென்றார். அங்கிருந்த ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்குதான் அவர் இருக்கிறார் என்பதை அங்குள்ள மக்கள் அறிந்துகொள்ளக்கூடாது என்று இயேசு விரும்பினார். ஆனால் அவர் மக்களின் கவனத்திலிருந்து தப்பிக்க முடியவில்லை. 25 அவர் அங்கு இருப்பதை ஒரு பெண் கேள்வியுற்றாள். அவளது சிறு மகள், அசுத்த ஆவியை உடையவள். எனவே, அவள் இயேசுவிடம் வந்து அவரது பாதத்தில் விழுந்து வணங்கினாள். 26 அவள் யூதர்குலத்துப் பெண் அல்ல. அவள் கிரேக்கப் பெண். சீரோபேனிக்கேயாவில் பிறந்தவள். அவள் தன் மகளைப் பிடித்த பிசாசை விரட்டுமாறு கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.
27 அந்தப் பெண்ணிடம் இயேசு, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்களிடம் கொடுப்பது சரியன்று. முதலில் பிள்ளைகள் தேவையான அளவு உண்ணட்டும்” என்றார்.
28 “அது உண்மை தான் ஆண்டவரே. பிள்ளைகள் உண்ணாத உணவுத் துணுக்குகளை மேசைக்கடியில் உள்ள நாய்கள் உண்ணலாமே” என்று அவள் பதில் சொன்னாள்.
29 பிறகு அந்தப் பெண்ணிடம் இயேசு, “இது நல்ல பதில். நீ போகலாம். பிசாசு உன் மகளை விட்டுப் போய்விட்டது” என்றார்.
30 அந்தப் பெண் வீட்டுக்குப் போனாள். தன் குழந்தை படுக்கையில் படுத்திருப்பதைக் கண்டாள். பிசாசு அவளை விட்டு நீங்கி இருந்தது.
செவிட்டு மனிதனைக் குணமாக்குதல்
31 பிறகு இயேசு தீரு பகுதியை விட்டு விலகி சீதோன் பகுதிக்குச் சென்றார். அங்கிருந்து அவர் கலிலேயா கடற்கரைக்குச் சென்றார். அங்கு இயேசு தெக்கப்போலி வழியாக வந்தார். 32 அங்கே அவர் இருக்கும்போது மக்கள் ஒரு மனிதனை அவரிடம் அழைத்து வந்தனர். அவன் ஒரு செவிடன். அவனால் பேசவும் முடியாது. அவனைக் குணப்படுத்தும் பொருட்டு அவன்மீது இயேசு தன் கையை வைக்குமாறு அவரிடம் அவர்கள் கெஞ்சிக் கேட்டனர்.
33 இயேசு அவனை அந்த மக்களிடமிருந்து விலக்கி தனியாய் அழைத்துச் சென்றார். அவர் தனது விரல்களை அவன் காது மீது வைத்தார். பிறகு இயேசு உமிழ்ந்து அவனது நாவையும் தொட்டார். 34 இயேசு ஆகாயத்தைப் பார்த்து பெருமூச்சுவிட்டார். பிறகு அந்த மனிதனிடம் இயேசு, “எப்பத்தா” என்றார். (அதற்குத் “திறக்கப்படுவாயாக” என்று பொருள்) 35 இயேசு இதனைச் செய்ததும் அந்த மனிதனால் கேட்க முடிந்து. பிறகு அவனால் நாவைப் பயன்படுத்தித் தெளிவாகப் பேசவும் முடிந்தது.
36 நடந்ததைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று இயேசு மக்களைக் கேட்டுக்கொண்டார். இயேசு எப்போதும் தன்னைப்பற்றி எவரிடமும் கூறவேண்டாம் என்றே கட்டளையிடுவார். ஆனால் இது மக்களை இயேசுவைப்பற்றி மற்றவர்களிடம் மேலும் மேலும் சொல்ல வைத்தது. 37 மக்கள் அவரைப்பற்றி மிகவும் பிரமித்துப் போனார்கள். அவர்கள், “இயேசு எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்கிறார். அவர் செவிடர்களைக் கேட்க வைக்கிறார். ஊமைகளைப் பேச வைக்கிறார்” என்று பேசிக்கொண்டனர்.
2008 by World Bible Translation Center