M’Cheyne Bible Reading Plan
மீதியானியர் இஸ்ரவேலரிடம் போரிடுதல்
6 தீயவை என்று கர்த்தர் கூறிய காரியங்களை மீண்டும் இஸ்ரவேலர் செய்தனர். இஸ்ரவேலரை மீதியானியர் 7 ஆண்டுகள் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்.
2 மீதியானியர் மிக வல்லமையுடையவர்களாய் இஸ்ரவேலரைக் கொடுமைப்படுத்தினார்கள். எனவே இஸ்ரவேலர், மலைகளில் ஒளிந்துகொள்வதற்கான இடங்கள் பலவற்றை அமைத்தனர். பார்க்க இயலாத இடங்களிலும், குகைகளிலும் இஸ்ரவேலர் உணவுப்பொருட்களை மறைத்து வைத்தனர். 3 மீதியானியரும், கிழக்கிலுள்ள அமலேக்கியரும் வந்து அவர்கள் பயிர்களை அழித்ததால் இஸ்ரவேலர் அவ்வாறு செய்தனர். 4 அவர்கள் தேசத்தில் முகாமிட்டுத் தங்கி, இஸ்ரவேலர் பயிரிட்ட தானியங்களை அழித்தனர். காசா நகரம் வரைக்கும் உள்ள நிலங்களில் இஸ்ரவேலர் பயிரிட்ட பயிர்களை அந்த ஜனங்கள் பாழாக்கினர். இஸ்ரவேலர் உண்பதற்கு அவர்கள் ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. அவர்களது ஆடுகள், பசுக்கள், கழுதைகள் ஆகியவற்றையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. 5 மீதியானின் ஜனங்கள் வந்து தேசத்தில் முகாமிட்டுத் தங்கினார்கள். அவர்கள் குடும்பத்தினரையும் அவர்களின் விலங்குகளையும் அழைத்து வந்தனர். வெட்டுக்கிளிகளின் கூட்டத்தைப் போல் அவர்கள் மிகுதியாக வந்தனர். எண்ணக் கூடாத அளவிற்கு ஜனங்களையும் ஒட்டகங்களையும் பார்க்க முடிந்தது. அந்த ஜனங்கள் எல்லோரும் தேசத்திற்குள் நுழைந்து அதனைப் பாழாக்கினர். 6 மீதியானியரின் வருகையால் இஸ்ரவேலர் மிக ஏழைகளாயினர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள்.
7 மீதியானியர் எல்லாத் தீயகாரியங்களையும் செய்தனர். எனவே இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிக்காக வேண்டினார்கள். 8 எனவே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார். அத்தீர்க்கதரிசி இஸ்ரவேலரிடம், “இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் கூறுவது இதுவே: ‘நீங்கள் எகிப்தில் அடிமைகளாயிருந்தீர்கள். நான் உங்களை விடுவித்து அந்தத் தேசத்திலிருந்து அழைத்து வந்தேன். 9 நான் எகிப்தின் பலமுள்ள ஜனங்களிடமிருந்து உங்களை மீட்டேன். பின்னர் கானானியர் உங்களைத் துன்புறுத்தினார்கள். நான் மீண்டும் உங்களைக் காப்பாற்றினேன். அத்தேசத்தில் இருந்தே அவர்களைப் போகும்படி செய்தேன். அவர்கள் தேசத்தை நான் உங்களுக்குக் கொடுத்தேன்.’ 10 பின் உங்களிடம், ‘நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், எமோரியரின் தேசத்தில் வாழ்வீர்கள். ஆனால் அவர்களின் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ளாதீர்கள்’ என்றேன். ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை” என்றார்.
கிதியோனை கர்த்தருடைய தூதன் சந்தித்தல்
11 அப்போது கர்த்தருடைய தூதன் கிதியோன் என்னும் பெயருள்ளவனிடம் வந்தான். ஓப்ரா என்னுமிடத்தில் ஒரு கர்வாலி மரத்தின் கீழே கர்த்தருடைய தூதன் வந்து உட்கார்ந்தான். அந்த கர்வாலி மரம் யோவாஸ் என்பவனுக்குச் சொந்தமாயிருந்தது. யோவாஸ் அபியேசேரின் குடும்பத்தைச் சேர்ந்தவன். யோவாஸ் என்பவன் கிதியோனின் தந்தை. திராட்சை ஆலையில் கிதியோன் கோதுமையை அடித்துக்கொண்டிருந்தான். கர்த்தருடைய தூதன், கிதியோனுக்கருகே உட்கார்ந்தான். மீதியானியர் கோதுமையைப் பார்த்துவிடக் கூடாதென்று கிதியோன் மறைத்துவைக்க முயன்றான். 12 கர்த்தருடைய தூதன் கிதியோனுக்குக் காட்சி தந்து, அவனிடம், “பெரும் வீரனே! கர்த்தர் உன்னோடிருக்கிறார்!” என்றான்.
13 அப்போது கிதியோன், “கர்த்தர் எங்களோடிருந்தால் எங்களுக்கு ஏன் இத்தனைத் துன்பங்கள் நேருகின்றன? எங்கள் முற்பிதாக்களுக்கு அவர் அற்புதமானக் காரியங்களைச் செய்தார் என்று நாங்கள் கேள்விப்பட்டோம். கர்த்தர், தங்களை எகிப்திலிருந்து அழைத்து வந்ததாக எங்கள் முற்பிதாக்கள் கூறினார்கள். ஆனால் கர்த்தர் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார். மீதியானியர் எங்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்” என்றான்.
14 கர்த்தர் கிதியோனைப் பார்த்து, “உனது வல்லமையைப் பயன்படுத்து, மீதியானியரிடமிருந்து இஸ்ரவேலரைக் காப்பாற்று. அவர்களைக் காப்பாற்ற நான் உன்னை அனுப்புகிறேன்!” என்றார்.
15 ஆனால் கிதியோன் அவருக்குப் பதிலாக, “என்னை மன்னித்துவிடுங்கள் ஐயா, நான் எவ்வாறு இஸ்ரவேலரை காப்பாற்றுவேன். மனாசே கோத்திரத்தில் எங்கள் குடும்பமே மிகவும் எளியது. எங்கள் குடும்பத்தில் நான் இளையவன்” என்றான்.
16 கர்த்தர் கிதியோனிடம், “நான் உன்னோடிருக்கிறேன்! எனவே மீதியானியரை நீ தோற்கடிக்க முடியும்! ஒரே மனிதனை எதிர்த்துப் போரிடுவது போலவே உனக்குத் தோன்றும்” என்றார்.
17 கிதியோன் கர்த்தரிடம், “உமக்கு என் மேல் கருணை இருந்தால் என்னிடம் பேசுகிறவர் நீர்தான் என்பதற்கு ஏதேனும் சான்று காட்டும். 18 இங்கேயே தயவுசெய்து காத்திரும். நான் திரும்பி வரும்வரை எங்கும் போகாதிரும். நான் எனது காணிக்கையைக் கொண்டுவந்து உம்முன் வைக்க அனுமதியும்” என்றான்.
கர்த்தர், “நீ வரும்வரைக் காத்திருப்பேன்” என்றார்.
19 கிதியோன் உள்ளே சென்று, ஒரு வெள்ளாட்டுக்குட்டியை சமைத்தான். 20 பவுண்டு மாவை எடுத்துப் புளிப்பின்றி அப்பம் செய்தான். இறைச்சியை ஒரு கூடையிலும், அது வேகப் பயன்படுத்திய தண்ணீரை ஒரு பானையிலும் எடுத்துக் கொண்டான். இறைச்சியையும், இறைச்சியை வேகவைத்த தண்ணீரையும், புளிப்பற்ற அப்பத்தையும் கிதியோன் கொண்டு வந்தான். கர்வாலி மரத்தின் கீழே அமர்ந்திருந்த கர்த்தருக்கு அந்த உணவைக் கிதியோன் கொடுத்தான்.
20 தேவனுடைய தூதன் கிதியோனை நோக்கி, “இறைச்சியையும், புளிப்பற்ற அப்பத்தையும் அங்கேயிருக்கும் பாறையில் வைத்து அதன் மீது தண்ணீரை ஊற்று” என்றார். கிதியோனும் அவ்வாறே செய்தான்.
21 கர்த்தருடைய தூதன் இறைச்சியையும் அப்பத்தையும் தன் கையில் வைத்திருந்த கைத்தடியின் முனையால் தொட்டான். பாறையிலிருந்து நெருப்பு தோன்றி இறைச்சியையும், அப்பத்தையும் எரித்துவிட்டது! பின் கர்த்தருடைய தூதனும் மறைந்து போனான்.
22 அப்போது கிதியோன் தான் கர்த்தருடைய தூதனோடு பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்தான். எனவே கிதியோன், “சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே! நான் கர்த்தருடைய தூதனை நேருக்கு நேராகச் சந்தித்தேன்!” என்று சத்தமிட்டான்.
23 ஆனால் கர்த்தர் கிதியோனிடம், “அமைதியாயிரு! பயப்படாதே! நீ மரிக்கமாட்டாய்!” என்றார்.
24 ஆகையால் கிதியோன் அங்கு தேவனை ஆராதிப்பதற்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான். கிதியோன் அப்பலிபீடத்திற்கு “கர்த்தரே சமாதானம்” என்று பெயரிட்டான். ஓப்ரா நகரில் அப்பலிபீடம் இன்றும் உள்ளது. அபியேசர் குடும்பம் வாழும் இடம் ஓப்ரா ஆகும்.
பாகாலின் பலிபீடத்தை கிதியோன் அழித்தல்
25 அதே இரவில் கர்த்தர் கிதியோனிடம் பேசினார். கர்த்தர், “உன் தந்தைக்குச் செந்தமான ஏழு வயதுள்ள முழுமையாக வளர்ந்த காளையை எடுத்துக்கொள். பாகால் என்னும் பொய்த் தெய்வங்களுக்கென்று உன் தந்தை அமைத்த பலிபீடம் ஒன்று உள்ளது. பலிபீடத்தினருகே ஒரு மரத்தூணும் இருக்கிறது. அசேரா என்னும் பொய்த் தேவதையை மகிமைப் படுத்துவதற்காக அத்தூண் அமைக்கப்பட்டது. காளையால் பாகாலின் பலிபீடத்தை வீழ்த்தி, அசேராவின் கோவில் தூணை முறித்துவிடு. 26 அதன் பிறகு உங்கள் தேவனாகிய கர்த்தருக்காக முறைப்படி பலிபீடம் கட்டு. மேடான நிலத்தில் அப்பலிபீடத்தைக் கட்டு. பின்பு முழுமையாக வளர்ந்த காளையை அந்தப் பலிபீடத்தில் தகன பலியாகச் செலுத்து. அசேரா தூணின் விறகை உனது பலியை எரிப்பதற்குப் பயன்படுத்து” என்றார்.
27 ஆகையால் கிதியோன் தன் வேலையாட்களில் 10 பேரை அழைத்துச்சென்று, தன்னிடம் கர்த்தர் கூறியபடியே செய்தான். அவனது குடும்பத்தாரும் நகர ஜனங்களும் அவன் செய்வதைப் பார்க்கக்கூடும் என்று அவன் பயந்தான். தன்னிடம் கர்த்தர் கூறியபடியே கிதியோன் செய்தான். ஆனால் அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்தான்.
28 நகர ஜனங்கள் மறுநாள் காலையில் விழித்தபோது, பாகாலின் பலிபீடம் அழிக்கப்பட்டிருப்பதையும், அசேராவின் தூண் முறிக்கப்பட்டிருப்பதையும் பார்த்தனர். முன்னால் பாகாலின் பீடத்தருகே அசேராவின் தூண் இருந்த இடத்தில் கிதியோன் கட்டிய பலிபீடத்தையும், அதில் பலியிடப்பட்டிருந்த காளையையும் அவர்கள் கண்டனர்.
29 நகர ஜனங்கள் ஒருவரையொருவர் பார்த்து, “பலிபீடத்தை அழித்தவன் யார்? அசேராவின் தூணை உடைத்தவன் யார்? புதிய பலீபீடத்தில் காளையைப் பலியிட்டவன் யார்?” என்று கேட்டனர். அவர்கள் பல கேள்விகளைக் கேட்டு, அக்காரியங்களைச் செய்தவன் யார் என்பதை அறிய விரும்பினார்கள்.
ஒருவன் அவர்களுக்கு, “யோவாஸின் மகனாகிய கிதியோன் இதனைச் செய்தான்” என்றான்.
30 எனவே, நகர ஜனங்கள் யோவாஸிடம் வந்தனர். அவர்கள் யோவாஸிடம், “நீ உனது மகனை வெளியே அழைத்து வா. அவன் பாகாலின் பலிபீடத்தைத் தரைமட்ட மாக்கினான். பலிபீடத்தருகிலுள்ள அசேராவின் தூணை உடைத்தான். எனவே உன் மகன் மரிக்க வேண்டும்” என்றனர்.
31 தன்னைச் சுற்றிலும் கூடியிருந்த ஜனங்களைப் பார்த்து யோவாஸ், “நீங்கள் பாகாலுக்காகப் பரிந்து பேசுகிறீர்களா? பாகாலை மீண்டும் பாதுகாக்கப் போகிறீர்களா? பாகாலைச் சார்ந்திருக்கிறவன் எவனோ, அவன் காலைக்குள் கொல்லப்படக்கடவன். பாகால் உண்மையிலேயே பலமுள்ள தேவனாக இருந்தால் அவனது பலிபீடத்தை ஒருவன் அழிக்கும்போது தன்னை காப்பாற்றிக்கொண்டிருக்கலாமே” என்றான்.
32 யோவாஸ், “கிதியோன் பாகாலின் பலிபீடத்தை அழித்திருந்தால், பாகால் அவனோடு வழக்காடட்டும்” என்றான். அந்நாளில் யோவாஸ் கிதியோனுக்கு ஒரு புதிய பெயரிட்டான். அவனை யெருபாகால் என்று அழைத்தான்.
கிதியோன் மீதியானியரை முறியடித்தல்
33 இஸ்ரவேலரை எதிர்ப்பதற்கு மீதியானியரும் அமலேக்கியரும் கிழக்கிலுள்ள பிற ஜனங்களும் ஒன்றாகக் கூடி வந்தனர். அவர்கள் யோர்தான் நதியைத் தாண்டி யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டுத் தங்கினார்கள். 34 கர்த்தருடைய ஆவி கிதியோனுக்குள் வந்து மிகுந்த வல்லமை பெற்றான். அபியேசர் குடும்பம் தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு கிதியோன் எக்காளம் ஊதி அழைத்தான். 35 மனாசேயின் கோத்திரத்தினரிடம் கிதியோன் செய்தி தெரிவிப்போரை அனுப்பினான். அவர்கள் மனாசேயின் ஜனங்களிடம் ஆயுதங்களை எடுத்துப் போருக்குத் தயாராகும்படி கூறினார்கள். ஆசேர், செபுலோன், நப்தலி கோத்திரத்தினரிடமும் அவன் செய்தி தெரிவிக்கும் ஆட்களை அனுப்பினான். அவர்கள் அதே செய்தியைத் தெரிவிப்பதற்குச் சென்றனர். கிதியோனையும் அவனது ஆட்களையும் சந்திப்பதற்காக அந்தக் கோத்திரத்தினர் சென்றனர்.
36 அப்போது கிதியோன் தேவனிடம், “இஸ்ரவேலரைக் காப்பதற்கு எனக்கு உதவுவதாகக் கூறினீர். அதற்குச் சான்று தாரும். 37 நான் தரையில் ஆட்டுத் தோலைப் போடுவேன். தரையெல்லாம் உலர்ந்திருக்க, தோலில் மட்டும் பனி பெய்திருந்தால், நீர் கூறியபடியே இஸ்ரவேலரை மீட்பதற்கு என்னைப் பயன்படுத்துவீர் என்பதை அறிவேன்” என்றான்.
38 அவ்வாறே நடந்தது. கிதியோன் காலையில் எழுந்து செம்மறியாட்டுத் தோலைப் பிழிந்தான். ஒரு கிண்ணம் நிறைய தண்ணீரைப் பிழிந்தெடுக்க முடிந்தது.
39 அப்போது கிதியோன் தேவனை நோக்கி, “என்னிடம் கோபங்கொள்ளாதிரும். இன்னும் ஒரே ஒரு விஷயம் குறித்து மட்டும் உம்மிடம் கேட்டுவிடுகிறேன். ஆட்டுத்தோலால் உம்மை மீண்டும் ஒருமுறை சோதிப்பேன். இம்முறை தரையெல்லாம் பனியால் ஈரமாயிருக்க, தோல் மட்டும் உலர்ந்திருக்கச் செய்யும்” என்றான்.
40 அன்றிரவு தேவன் அவ்வாறே நடக்கச் செய்தார். செம்மறியாட்டுத் தோல் உலர்ந்திருந்தது. தரையோ பனியால் ஈரமாயிருந்தது.
பேதுருவும் கொர்நேலியுவும்
10 செசரியா நகரில் கொர்நேலியு என்னும் மனிதன் இருந்தான். ரோமப் படையில் “இத்தாலிய” வகுப்பில் அவன் ஒரு படை அதிகாரியாக இருந்தான். 2 கொர்நேலியு நல்ல மனிதன். அவனும் அவன் வீட்டில் வாழ்ந்த எல்லா மக்களும் உண்மையான தேவனை வணங்கினர். தனது பணத்தின் பெரும் பகுதியையும் அவன் ஏழை மக்களுக்குக் கொடுத்தான். கொர்நேலியு தேவனிடம் எப்போதும் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். 3 ஒருநாள் மதியத்திற்குப்பின் மூன்று மணியளவில் கொர்நேலியு ஒரு காட்சியைக் கண்டான். அவன் தெளிவாக அதைக் கண்டான். அக்காட்சியில் தேவனிடமிருந்து ஒரு தூதன் அவனிடம் வந்து “கொர்நேலியுவே!” என்றான்.
4 கொர்நேலியு தேவதூதனைக் கண்டு பயந்து, “ஆண்டவரே, என்ன வேண்டும்?” என்றான்.
தேவதூதன் கொர்நேலியுவிடம், “தேவன் உனது பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்தார். நீ ஏழை மக்களுக்குக் கொடுக்கும் தருமங்களை அவர் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 5 யோப்பா நகரத்திற்குச் சில மனிதரை அனுப்பு, சீமோன் என்னும் மனிதனை அழைத்து வருவதற்கு அம்மனிதர்களை அனுப்பு. சீமோன், பேதுரு எனவும் அறியப்படுகிறான். 6 சீமோன் எனப்படும் தோல் தொழிலாளியோடு சீமோன் பேதுரு தங்கிக்கொண்டிருக்கிறான். கடற்கரையில் உள்ள ஒரு பெரிய வீட்டில் இப்போது இருக்கிறான்” என்றான். 7 கொர்நேலியுவோடு பேசிய தேவதூதன் அகன்றான். பின் கொர்நேலியு இரண்டு வேலைக்காரர்களையும், ஒரு வீரனையும் அழைத்தான். அந்த வீரன் ஒரு நல்ல மனிதன். கொர்நேலியுவின் நெருக்கமான உதவியாளர்களில் அவ்வீரனும் ஒருவன். 8 கொர்நேலியு அம்மூன்று மனிதருக்கும் எல்லாவற்றையும் விளக்கினான். பின் அவன் அவர்களை யோப்பாவிற்கு அனுப்பினான்.
9 மறுநாள் இம்மனிதர்கள் யோப்பா அருகே வந்தனர். அப்போது பேதுரு மாடிக்குப் பிரார்த்தனை செய்வதற்காகப் போய்க்கொண்டிருந்தான். அப்போது மதியமாகிக்கொண்டிருந்தது. 10 பேதுரு பசியடைந்தான். அவன் உண்ண வேண்டுமென நினைத்தான். ஆனால் பேதுரு உண்ணும்படியாக அவர்கள் உணவைத் தயாரித்துக்கொண்டிருக்கும்போது அவனுக்கு ஒரு காட்சி தெரிந்தது. 11 திறந்த வானத்தின் வழியாக ஏதோ ஒன்று இறங்கி வருவதை அவன் கண்டான். அது பூமிக்கு வரும் பெரிய விரிப்பைப் போன்றிருந்தது. அதனுடைய நான்கு மூலைகளிலிருந்து பூமிக்கு அது இறக்கப்பட்டது. 12 ஒவ்வொரு வகை பிராணியும் அதில் இருந்தது. நடப்பன, பூமியில் ஊர்வன, வானில் பறக்கும் பறவைகள் போன்ற யாவும் அதில் இருந்தன. 13 பின் ஒரு குரல் பேதுருவை நோக்கி, “எழுந்திரு பேதுரு, இந்தப் பிராணிகளில் நீ விரும்புகிற யாவையும் சாப்பிடு” என்றது.
14 ஆனால் பேதுரு, “நான் அதை ஒருக்காலும் செய்யமாட்டேன். கர்த்தாவே! தூய்மையற்றதும், பரிசுத்தமற்றதுமான உணவை நான் ஒரு முறைகூடப் புசித்ததில்லை” என்றான்.
15 ஆனால் குரல் மீண்டும் அவனுக்கு, “தேவன் இவற்றைச் சுத்தமாக உண்டாக்கியுள்ளார். அவற்றை தூய்மையற்றவை என்று கூறாதே!” என்றது. 16 இவ்வாறு மூன்று தடவை நிகழ்ந்தது. பிறகு அப்பொருள் முழுவதும் வானத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டது.
17 இந்தக் காட்சியின் பொருள் என்ன என்று பேதுரு ஆச்சரியப்பட்டான். இதற்கிடையில் கொர்நேலியு அனுப்பிய மனிதர்கள் சீமோனின் வீட்டைக் கண்டுபிடித்தனர். அவர்கள் வாசலருகே நின்றுகொண்டிருந்தனர். 18 அவர்கள், “சீமோன் என்று அழைக்கப்படும் பேதுரு இங்கு வசிக்கிறாரா?” என்று கூப்பிட்டுக் கேட்டார்கள்.
19 பேதுரு இப்போதும் அந்தக் காட்சியைப் பற்றியே நினைத்துக்கொண்டிருந்தான். ஆனால் ஆவியானவர் அவனுக்கு, “கவனி! மூன்று மனிதர்கள் உன்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். 20 எழுந்து கீழே போ. அம்மனிதர்களோடு கேள்விகள் எதுவும் கேட்காமல் போ. நான் அவர்களை உன்னிடம் அனுப்பியிருக்கிறேன்” என்றார். 21 எனவே பேதுரு இறங்கி அம்மனிதரிடம் சென்றான். அவன், “நீங்கள் தேடி வந்த மனிதன் நானே. நீங்கள் ஏன் இங்கு வந்தீர்கள்?” என்றான்.
22 அம்மனிதர்கள், “ஒரு தேவதூதன் உம்மைத் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கொர்நேலியுவுக்குக் கூறியுள்ளான். கொர்நேலியு ஒரு படை அதிகாரி. அவன் ஒரு நல்ல நேர்மையான மனிதன். அவன் தேவனை வணங்குகிறான். எல்லா யூத மக்களும் அவனை மதிக்கின்றனர். நீர் கூறும் காரியங்களைக் கொர்நேலியு கேட்கும்படியாக அவனது வீட்டிற்கு உம்மை அழைக்கும்படியாகக் கொர்நேலியுவுக்கு தேவதூதன் கூறியுள்ளான்” என்றனர். 23 பேதுரு அம்மனிதரை உள்ளே கூப்பிட்டு இரவில் அங்கே தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டான்.
மறுநாள் பேதுரு தயாராகி அம்மூன்று மனிதரோடும் சென்றான். யோப்பாவிலிருந்து சில சகோதரர்கள் பேதுருவோடு சென்றனர். 24 அடுத்த நாள் செசரியா நகரத்திற்குள் அவர்கள் வந்தனர். கொர்நேலியு அவர்களுக்காகக் காத்துக்கொண்டிருந்தான். அவனது வீட்டில் உறவினரையும், நெருங்கிய நண்பர்களையும் ஏற்கெனவே வரவழைத்திருந்தான்.
25 பேதுரு வீட்டிற்குள் நுழைந்தபோதுகொர்நேலியு அவர்களைச் சந்தித்தான். கொர்நேலியு பேதுருவின் பாதங்களில் விழுந்து அவனை வணங்கினான். 26 ஆனால் பேதுரு அவனை எழுந்திருக்குமாறு கூறினான். பேதுரு “எழுந்திரும், நானும் உம்மைப் போன்ற ஒரு மனிதனே” என்றான். 27 பேதுரு கொர்நேலியுவோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். பேதுரு உள்ளே சென்று ஒரு பெரிய கூட்டமாகக் கூடியிருந்த மக்களை அங்கே கண்டான்.
28 பேதுரு மக்களை நோக்கி, “யூதரல்லாத எந்த மனிதனோடும் சந்திப்பதோ தொடர்பு கொள்வதோ கூடாது என்பது எங்கள் யூதச் சட்டம் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். ஆனால் நான் எந்த மனிதனையும் ‘தூய்மையற்றவன்’ எனவும், ‘சுத்தமற்றவன்’ எனவும் அழைக்கக் கூடாது என்று தேவன் எனக்குக் காட்டியுள்ளார். 29 அதனால்தான் அம்மனிதர் இங்கு வருமாறு என்னை அழைத்தபோது நான் மறுக்கவில்லை. எதற்காக என்னை இங்கு அழைத்தீர்கள் என்பதை இப்போது தயவு செய்து கூறுங்கள்” என்றான்.
30 கொர்நேலியு, “நான்கு நாட்களுக்கு முன், என் வீட்டில் நான் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தேன். அது இதே வேளை பிற்பகல் மூன்று மணியாயிருந்தது. திடீரென ஒரு மனிதன் எனக்கு முன்பாக நின்றுகொண்டிருந்தான். அவன் ஒளிமிக்க பிரகாசமான ஆடைகளை அணிந்துகொண்டிருந்தான். 31 அம்மனிதன், ‘கொர்நேலியுவே! தேவன் உன் பிரார்த்தனையைக் கேட்டார். நீ ஏழை மக்களுக்கு அளிக்கும் தருமங்களை தேவன் பார்த்தார். தேவன் உன்னை நினைவுகூருகிறார். 32 எனவே சில மனிதர்களை யோப்பா நகரத்திற்கு அனுப்பு. சீமோன் எனப்படும் பேதுருவை வரச்சொல். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயர் கொண்ட ஒருவனின் வீட்டில் பேதுரு தங்கியிருக்கிறான். அவன் வீடு கடற்கரையில் உள்ளது’ என்றான். 33 எனவே உடனேயே உமக்கு வரச்சொல்லியனுப்பினேன். நீர் இங்கு வந்தது நல்லது. இப்போது தேவனுக்கு முன்பாக நாங்கள் அனைவரும் கர்த்தர் எங்களுக்குச் சொல்லும்படியாக உமக்குக் கட்டளையிட்டவற்றைக் கேட்க இங்கு கூடியிருக்கிறோம்” என்றான்.
கொர்நேலியுவின் வீட்டில் பேதுரு
34 பேதுரு பேச ஆரம்பித்தான். “மெய்யாகவே தேவனுக்கு எல்லா மனிதரும் சமமானவர்கள் என்பதை நான் இப்போது புரிந்துகொள்கிறேன். 35 சரியானவற்றைச் செய்து அவரை வழிபடுகிற எந்த மனிதனையும் தேவன் ஏற்றுக்கொள்கிறார். 36 தேவன் யூத மக்களோடு பேசியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் மூலமாக சமாதானம் வந்தது என்ற நற்செய்தியை தேவன் அவர்களுக்கு அனுப்பியுள்ளார். இயேசு எல்லா மக்களின் கர்த்தராவார்.
37 “யூதேயா முழுவதும் நிகழ்ந்த செயல்களை நீங்கள் அறிவீர்கள். யோவான் மக்களுக்கு ஞானஸ்நானத்தைக் குறித்து உபதேசிக்கத் துவங்கியதற்குப் பின் இவை யாவும் கலிலேயாவில் ஆரம்பமாயின. 38 நீங்கள் நாசரேத்தின் இயேசுவைக் குறித்து அறிவீர்கள். பரிசுத்த ஆவியையும், வல்லமையையும் அவருக்குக் கொடுத்து தேவன் அவரைக் கிறிஸ்துவாக்கினார். இயேசு எல்லா இடங்களுக்கும் சென்று மக்களுக்கு நல்லவற்றைச் செய்துகொண்டிருந்தார். பிசாசினால் முடக்கப்பட்ட மக்களை இயேசு குணப்படுத்தினார். தேவன் இயேசுவோடிருந்தார் என்பதை இது காட்டிற்று.
39 “யூதேயாவிலும் எருசலேமிலும் இயேசு செய்த எல்லாவற்றையும் நாங்கள் பார்த்தோம். அதற்கு நாங்கள் சாட்சிகள். ஆனால் இயேசு கொல்லப்பட்டார். மரத்தினால் செய்யப்பட்ட சிலுவையில் அவரை அறைந்தனர். 40 ஆனால் மரணத்திற்குப்பின் மூன்றாவது நாள் தேவன் இயேசுவை உயிரோடு எழுப்பினார். இயேசுவை மக்கள் தெளிவாகப் பார்க்கும் வாய்ப்பை தேவன் கொடுத்தார். 41 ஆனால் எல்லா மக்களும் அவரைப் பார்க்கவில்லை. தேவனால் ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப்பட்ட சாட்சிகள் மட்டும் அவரைப் பார்த்தார்கள். நாங்களே அந்த சாட்சிகள்! இயேசு மரித்து பின்னர் எழுந்த பிறகு அவரோடு உண்டோம், குடித்தோம்.
42 “மக்களுக்குப் போதிக்கும்படியாக இயேசு எங்களுக்குக் கூறினார். உயிரோடிருக்கும் மக்களுக்கும் மரித்த மக்களுக்கும் நீதிபதியாக தேவன் நியமித்தவர் அவரே என்று மக்களுக்குச் சொல்லும்படி எங்களுக்குக் கூறினார். 43 இயேசுவில் நம்பிக்கை வைக்கிற ஒவ்வொரு மனிதனும் தன் பாவங்களிலிருந்து மன்னிக்கப்படுவான். இயேசுவின் பெயரால் தேவன் அம்மனிதனின் பாவங்களை மன்னிப்பார். இது உண்மையென்று எல்லா தீர்க்கதரிசிகளும் கூறுகின்றனர்” என்றான்.
யூதரல்லாதவருக்கும் பரிசுத்த ஆவி
44 பேதுரு இந்த வார்த்தைகளைப் பேசிக்கொண்டிருக்கையிலேயே, பரிசுத்த ஆவியானவர் அப்பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த எல்லா மக்களின் மீதும் வந்திறங்கினார். 45 பேதுருவோடு வந்த யூத விசுவாசிகள் வியந்தனர். யூதரல்லாத மக்களுக்கும் பரிசுத்த ஆவியானவர் அருளப்பட்டதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர். 46 ஏனெனில் அவர்கள் வேற்று மொழிகளைப் பேசுவதையும், தேவனைத் துதிப்பதையும் யூத விசுவாசிகள் கேட்டனர். பின்பு பேதுரு 47 “தண்ணீரின் மூலம் இம்மக்கள் ஞானஸ்நானம் பெறுவதை நாம் மறுக்க முடியாது. நாம் பெற்றதைப் போலவே இவர்களும் பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்!” என்றான். 48 கொர்நேலியுவும் அவன் உறவினரும் நண்பர்களும் இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெறவேண்டும் என்று பேதுரு கட்டளையிட்டான். பின் அம்மக்கள் பேதுருவைச் சில நாட்கள் தங்களோடு தங்கும்படியாகக் கேட்டுக்கொண்டனர்.
உடைந்த ஜாடி
19 கர்த்தர் என்னிடம், “எரேமியா போய் ஒரு குயவனிடமிருந்து மண்ஜாடியை வாங்கிவா. 2 உடைந்த பானைத் துண்டுகளை எரியும் வாசலுக்கு முன்னாலுள்ள பென் இன்னோமுடைய பள்ளத்தாக்குக்குப் போ. உன்னோடு ஜனங்களில் சில மூப்பர்களையும், சில ஆசாரியர்களையும் அழைத்துப் போ என்று சொன்னார். நான் சொல்கிறவற்றை 3 உன்னோடு இருக்கிற அந்த ஜனங்களிடம் சொல், ‘யூதாவின் அரசனே, எருசலேமின் ஜனங்களே, கர்த்தரிடமிருந்து வருகிற இந்த வார்த்தையைக் கேளுங்கள்! இதுதான் சர்வவல்லமையுள்ள கர்த்தரும் இஸ்ரவேல் ஜனங்களின் தேவனுமானவர் கூறுவது: நான் இந்த இடத்தில் விரைவில் ஒரு பயங்கரத்தை நிகழச்செய்வேன். இதைப்பற்றி கேள்விப்படுகிற ஒவ்வொருவனும் அதிர்ச்சியும் அச்சமும் அடைவான். 4 நான் இவற்றைச் செய்வேன். ஏனென்றால் யூதாவின் ஜனங்கள் என்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டனர். அவர்கள் இந்த இடத்தை அயல்நாட்டுத் தெய்வங்களுக்கு உரியதாகச் செய்துவிட்டனர். அவர்கள் இந்த இடத்தில் வேறு தெய்வங்களுக்குத் தகனபலிகளை அளித்தனர். நீண்ட காலத்திற்கு முன்பு அந்தத் தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. அவர்களின் முற்பிதாக்களும் அத்தெய்வங்களைத் தொழுதுகொள்ளவில்லை. இவை அந்நிய நாடுகளிலிருந்து வந்தப் புதிய தெய்வங்கள். யூதாவின் அரசர்கள் ஒன்றுமறியாத குழந்தைகளின் இரத்தத்தால் இந்த இடத்தை நிரப்புகிறார்கள். 5 யூதாவின் அரசர்கள் பாகால் தேவனுக்காக மேடையைக் கட்டினார்கள். அவர்கள் அந்த இடங்களைத் தங்கள் மகன்களை எரிக்கப் பயன்படுத்தினார்கள். பாகால் தெய்வத்திற்குத் தங்கள் மகன்களைத் தகனபலியாகக் கொடுத்தனர். நான் அவ்வாறு செய்யும்படி சொல்லவில்லை. உங்கள் மகன்களைப் பலியாகக் கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நான் அதைப்பற்றி நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. 6 இப்பொழுது, ஜனங்கள் இந்த இடத்தை இன்னோமின் பள்ளத்தாக்கு என்றும் “தோப்பேத்” என்றும் அழைக்கின்றனர். ஆனால், நான் இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறேன். நாட்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது: ஜனங்கள் இந்த இடத்தை “கொலையின் பள்ளத்தாக்கு” என்று அழைக்கும் நாள் வருகிறது. 7 இந்த இடத்தில், யூதா மற்றும் எருசலேம் ஜனங்களின் திட்டங்களை நாசமாக்குவேன். பகைவர்கள் இந்த ஜனங்களைத் துரத்துவார்கள். இந்த இடத்தில் யூதாவின் ஜனங்கள் வாளால் கொல்லப்படுமாறு விடுவேன். அவர்களது மரித்த உடல்களைப் பறவைகளுக்கும் காட்டு மிருகங்களுக்கும் உணவாக்குவேன். 8 இந்நகரத்தை நான் முழுமையாக அழிப்பேன். ஜனங்கள் எருசலேமைக் கடந்துப்போகும்போது பிரமித்து, தலையை அசைப்பார்கள். இந்நகரம் எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறியும்போது, அவர்கள் அதிர்ச்சி அடைவார்கள். 9 பகைவர்கள் நகரத்தைச்சுற்றி தம் படைகளை அழைத்து வருவார்கள். அப்படை ஜனங்கள் வெளியே சென்று உணவு பெறுவதை அனுமதிக்காது. எனவே, நகரத்தில் உள்ள ஜனங்கள் பட்டினியாக இருப்பார்கள். அவர்கள் தம் சொந்த மகன்கள் மற்றும் மகள்களின் உடலை உண்ணும் அளவிற்குப் பசியை அடைவார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் உண்ணத் தொடங்குவார்கள்.’
10 “எரேமியா, நீ இவற்றையெல்லாம் ஜனங்களுக்குச் சொல். அவர்கள் கவனித்துக் கொண்டிருக்கும்போது ஜாடியை உடைத்துவிடு. 11 அப்போது இவற்றைச் சொல்: ‘சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார், நான் யூதா நாட்டையும் எருசலேமையும், ஒருவன் மண்ஜாடியை உடைப்பதுப்போன்று உடைப்பேன். இந்த ஜாடியை மீண்டும் பழையபடி ஆக்கமுடியாது. யூதா நாட்டுக்கும் இதுபோல் ஆகும். வேறு இடமில்லை என்று சொல்லுகிற வரையில் தோப்பேத்தில் மரித்த ஜனங்கள் புதைக்கப்படுவார்கள்.’ இந்த வார்த்தை கர்த்தரிடம் உள்ளது. 12 ‘இவைகளை நான் இந்த ஜனங்களுக்கும் இந்த இடத்துக்கும் செய்வேன். இந்த நகரத்தை தோப்பேத்தைப் போலச் செய்வேன்’ இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது. 13 ‘எருசலேமில் உள்ள வீடுகள் தோப்பேத்தைப்போன்று “அசுத்தமாகும்” அரசர்களின் அரண்மனைகள் தோப்பேத்தைப்போன்று அழிக்கப்படும். ஏனென்றால், அவ்வீடுகளின் கூரையில் பொய்த் தெய்வங்களை வைத்துத் தொழுதுகொள்கிறார்கள். அவர்கள் நட்சத்திரங்களைத் தொழுதுகொள்கின்றனர். அவர்களை மகிமைப்படுத்தத் தகன பலிகளைக் கொடுக்கின்றனர். அவர்கள் பொய்த் தெய்வங்களுக்குப் பானங்களின் காணிக்கை கொடுத்தனர்.’”
14 பிறகு, எரேமியா தோப்பேத்தை விட்டு கர்த்தர் பிரசங்கம் பண்ணுமாறு சொன்ன இடத்துக்குச் சென்றான். எரேமியா கர்த்தருடைய ஆலயத்திற்குச் சென்று, ஆலயத்தின் பிரகாரத்தில் நின்றான். எரேமியா அனைத்து ஜனங்களிடமும் சொன்னான். 15 “இதுதான் சர்வ வல்லமையுள்ள இஸ்ரவேலரின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறது: ‘நான் எருசலேம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பேரழிவைக் கொண்டுவருவேன் என்று சொன்னேன். நான் விரைவில் அவை நிகழுமாறு செய்வேன். ஏனென்றால், ஜனங்கள் மிகவும் பிடிவாதமானவர்கள், அவர்கள் என்னை கவனிக்கவும், எனக்குக் கீழ்ப்படியவும் மறுத்துவிட்டனர்.’”
அசுத்த ஆவி துரத்தப்படுதல்(A)
5 இயேசுவும் அவரது சீஷர்களும் அக்கடலைக் கடந்து அக்கரைக்குச் சென்றார்கள். அங்கு கதரேனர் என்ற மக்கள் வாழ்ந்து வந்தனர். 2 படகிலிருந்து இயேசு இறங்கியதும் இறந்த மக்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்த குகைகளிலிருந்து ஒரு மனிதன் வெளியே வந்தான். அந்த மனிதனை அசுத்த ஆவிகள் பிடித்திருந்தன. 3 அவன் எப்போதும் கல்லறையிலேயே குடியிருந்தான். அவனை எவராலும் கட்டிப்போட முடியவில்லை. 4 பலமுறை மக்கள் அவனது கைகளையும் கால்களையும் விலங்குகளாலும், சங்கிலிகளாலும் கட்டிப்போட்டிருந்தனர். ஆனால் அந்த மனிதன் அச்சங்கிலிகளையும் விலங்குகளையும் அறுத்து எறிந்துவிடுவான். அவனைக் கட்டுப்படுத்தும் பலமுள்ள மனிதன் எவனும் அங்கில்லை. 5 இரவும், பகலும் அவன் கல்லறைக் குகைகளைச் சுற்றியும் மலைப் பகுதிகளிலும் திரிந்துகொண்டிருந்தான். அவன் கூக்குரலிட்டுக்கொண்டும், கற்களால் தன்னைக் காயப்படுத்திக்கொண்டும் இருந்தான்.
6 தொலைவில் இயேசு வந்துகொண்டிருக்கும்போதே அவரைப் பார்த்துவிட்டான் அவன். ஓடி வந்து அவர் முன்னால் பணிந்து நின்றான். 7-8 இயேசு அவனிடம், “அசுத்த ஆவியே, இந்த மனிதனை விட்டு வெளியே போ” என்று சொன்னார். உடனே அவன் உரத்த குரலில் “இயேசுவே! மகா உன்னத தேவ குமாரனே! என்னிடம் என்ன விரும்புகிறீர்? என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று தேவனிடம் ஆணையாய் உம்மைக் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன்” என்றான்
9 பிறகு இயேசு அவனிடம், “உன் பெயர் என்ன?” என்று கேட்டார். “என் பெயர் லேகியோன், [a] ஏனென்றால் எனக்குள்ளே பல ஆவிகள் உள்ளன” என்று அவன் சொன்னான். 10 அத்தோடு அவனுக்குள்ளே இருந்த ஆவிகள் தங்களை அந்தப் பகுதியைவிட்டுத் துரத்தக் கூடாது என்று மீண்டும் மீண்டும் கெஞ்சிக் கேட்டன.
11 அப்பொழுது அந்த மலையருகே பன்றிகள் கூட்டமாக மேய்ந்துகொண்டிருந்தன. 12 அசுத்த ஆவிகள் இயேசுவிடம், “எங்களை அந்தப் பன்றிகளுக்குள்ளே அனுப்பிவிடுங்கள்” எனக் கேட்டுக்கொண்டன. 13 அவ்வாறே போகும்படி இயேசு அனுமதி அளித்தார். அசுத்த ஆவிகள் அந்த மனிதனை விட்டு விட்டு பன்றிகளுக்குள் புகுந்து கொண்டன. அப்பன்றிக் கூட்டம் மேட்டிலிருந்து ஓடி கடலுக்குள் பாய்ந்து கடலில் மூழ்கி இறந்தன. அவை ஏறக்குறைய 2,000 எண்ணிக்கை உடையதாக இருக்கும்.
14 பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் அவ்விடத்தை விட்டு ஓடிவிட்டார்கள். அவர்கள் பட்டணத்துக்கும், வயல்வெளிக்கும் சென்றார்கள். அங்கு சந்தித்த மக்களிடமெல்லாம் இதனைச் சொன்னார்கள். மக்களும் என்ன நடந்தது என்பதை அறிய வந்தனர். 15 அவர்கள் இயேசுவிடம், வந்தார்கள். பல அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டிருந்தவனையும், அவர்கள் பார்த்தார்கள். அவன் ஆடைகள் அணிந்து அமைதியாய் இயேசுவின் காலடியில் உட்கார்ந்துகொண்டிருந்தான். அவனது மனநிலை சரியாக இருந்தது. மக்கள் இவற்றைக் கண்டு அச்சப்பட்டனர். 16 இயேசு செய்தவற்றைப் பார்த்திருந்த சிலரும் அங்கே இருந்தனர். இவர்கள் மற்றவர்களிடம் அசுத்த ஆவிகளால் பிடிக்கப்பட்டவனின் செயல்களையும் இயேசு அவனைக் குணப்படுத்தியதையும் கூறினர். அவர்கள் பன்றிகளுக்கு ஏற்பட்டதையும் சொன்னார்கள். 17 பிறகு அந்த மக்கள், இயேசுவிடம் அவ்விடத்தைவிட்டுப் புறப்பட்டுச் செல்லும்படி வேண்டினர்.
18 படகின் மூலம் அவ்விடத்தை விட்டுச் செல்ல இயேசு தயாரானார். பிசாசுகளிடமிருந்து விடுவிக்கப்பட்ட அந்த மனிதன் தன்னையும் இயேசுவோடு வர அனுமதிக்கும்படி வேண்டிக்கொண்டான். 19 ஆனால் இயேசு அவனுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அவனிடம் இயேசு, “நீ வீட்டுக்குப் போ. உன் குடும்பத்தாரையும், நண்பர்களையும் சென்று பார்த்து உனக்காகக் கர்த்தர் செய்தவற்றை எல்லாம் அவர்களிடம் கூறு. அவர் உனக்குக் கருணை செய்தார் என்றும் கூறு” என்றார்.
20 எனவே அவன் அவ்விடத்தை விட்டுப் போய் தெக்கப்போலி பகுதி மக்களிடம் தனக்கு இயேசு செய்ததைக் கூற ஆரம்பித்தான். மக்கள் அவற்றைக் கேட்டு வியப்பு அடைந்தனர்.
உயிரடைதலும், நோயாளி குணமாகுதலும்(B)
21 படகிலேறி இயேசு கடலின் அக்கரைக்குத் திரும்பிச் சென்றார். அக்கரையில் ஏராளமான மக்கள் கடற்கரையிலிருக்கும்போது இயேசுவைச் சுற்றிக் கூடினர். 22 அப்பொழுது, ஜெப ஆலயத் தலைவர்களுள் ஒருவன் அங்கு வந்தான். அவன் பெயர் யவீரு. அவன் இயேசுவைப் பார்த்ததும் அவரைப் பணிவுடன் குனிந்து வணங்கினான். 23 அவன் இயேசுவை மேலும் மேலும் பணிந்தான். அவன் “என்னுடைய சின்ன மகள் செத்துக்கொண்டிருக்கிறாள். தயவுசெய்து அங்கு வந்து அவள் மீது உங்கள் கைகளை வைக்க வேண்டும். அதனால் அவள் குணம் பெற்று வாழ்வாள்” என்றான்.
24 ஆகையால் இயேசு அவனுடன் சென்றார். ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் அவரை நெருக்கிக்கொண்டு சென்றனர்.
25 அம்மக்களின் நடுவில் ஒரு பெண்ணும் இருந்தாள். அவள் பன்னிரண்டு ஆண்டுகளாக இரத்தப்போக்கால் அவதிப்பட்டு வந்தாள். 26 அவள் மிகவும் துன்பப்பட்டு விட்டாள். ஏராளமான மருத்துவர்கள் அவளுக்கு உதவ முயற்சி செய்தனர். அவளிடமிருந்த செல்வமெல்லாம் செலவழிந்தது. ஆனால் குணமாகவில்லை. அவள் மேலும் நோயால் துன்பப்பட்டாள்.
27 அவள் இயேசுவைப்பற்றி கேள்விப்பட்டிருந்தாள். ஆகையால் அவள் இயேசுவிடம் கூட்டத்திற்குள் வந்தாள். அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டாள். 28 அவளோ, “நான் அவரது ஆடையைத் தொட்டாலே போதும். நான் குணமாகிவிடுவேன்” என்று நம்பினாள். 29 அவள் இயேசுவின் மேலாடையைத் தொட்டதும் அவளது இரத்தப் போக்கு நின்றது. தான் நோயிலிருந்து குணமாகிவிட்டதை அவள் சரீரத்தில் உணர்ந்தாள். 30 இயேசுவும் தன்னிடமிருந்து வல்லமை வெளிப்பட்டதை அறிந்தார். எனவே, அவர் நின்று சுற்றிலும் பார்த்தார். பிறகு அவர், “என் ஆடையைத் தொட்டது யார்?” என்று கேட்டார்.
31 இதனைக் கேட்டதும் சீஷர்கள் “போதகரே, ஏராளமான மக்கள் உங்களை நெருக்கிக்கொண்டு வருகிறார்கள். ‘யார் என்னைத் தொட்டது’ என்று கேட்கிறீரே” என்றனர்.
32 ஆனால் இயேசுவோ தன்னைத் தொட்டவருக்காகத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். 33 அந்தப் பெண்ணும் தான் முழுமையாகக் குணம் பெற்றதை உணர்ந்தாள். எனவே அவள் இயேசுவின் முன்வந்து அவரைப் பணிந்தாள். அவள் பயத்தால் நடுங்கினாள். அவள் தன் கதை முழுவதையும் இயேசுவிடம் கூறினாள். 34 இயேசு அவளிடம், “அன்பான பெண்ணே! உன் விசுவாசத்தினால் நீ சுகமானாய். சமாதானமாகச் செல். இனி மேல் உனக்கு ஒரு துன்பமும் இல்லை” என்றார்.
35 இவ்வாறு இயேசு அங்கே பேசிக்கொண்டிருந்தபோது யவீருவின் வீட்டிலிருந்து சிலர் வந்தனர். அவர்கள் யவீருவிடம், “ஐயா, உங்கள் மகள் இறந்துபோனாள். எனவே, இனிமேல் இந்தப் போதகருக்கு (இயேசுவுக்கு) எந்தத் தொந்தரவும் கொடுக்க வேண்டாம்” என்றனர்.
36 அந்த மக்கள் சொன்னதைப்பற்றி இயேசு கவலைப்படவில்லை. அந்த ஜெப ஆலயத்தலைவரிடம் இயேசு, “பயப்பட வேண்டாம். விசுவாசத்துடன் இரு” என்று கூறினார்.
37 மற்ற அனைவரையும் விட்டு பேதுரு, யாக்கோபு, யாக்கோபுவின் சகோதரனான யோவான் ஆகியோரை மட்டும் தன்னுடன் வர இயேசு அனுமதித்தார். 38 இயேசு இம்மூன்று சீஷர்களோடு மட்டும் யவீருவின் வீட்டுக்குச் சென்றார். அங்கு நிறையப்பேர் கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டார். அந்த இடம் ஒரே குழப்பமாய் இருந்தது. 39 இயேசு அவ்வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம், “ஏன் நீங்கள் இவ்வளவு அழுது சத்தமிடுகிறீர்கள்? இக்குழந்தை சாகவில்லை. இது தூங்கிக் கொண்டுள்ளது” என்றார். 40 இதைக்கேட்ட மக்கள் இயேசுவைப் பார்த்து சிரித்தார்கள்.
இயேசு அம்மக்களை வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டார். பின்னர் அவர் அக்குழந்தை கிடத்தப்பட்டிருந்த அறைக்குள் சென்றார். அவர் தன்னோடு அக்குழந்தையின் தாய், தந்தை, மூன்று சீஷர்கள் ஆகியோரை மட்டும் அனுமதித்தார். 41 அவர் அந்தக் குழந்தையின் கையைப்பிடித்துக்கொண்டு, “தலீத்தாகூமி!” என்று சொன்னார். (அதற்கு, “சிறுமியே, நான் சொல்கிறேன் நீ எழுந்திரு” என்று பொருள்.) 42 அச்சிறு பெண்ணும் உடனே எழுந்து நடக்க ஆரம்பித்தாள். அவளுக்கு அப்போது பன்னிரண்டு வயது. அப்பெண்ணின் தாயும், தந்தையும், சீஷர்களும் வியப்படைந்தனர். 43 இயேசு அப்பெண்ணின் பெற்றோரிடம் இதைப்பற்றி யாரிடமும் எதுவும் கூற வேண்டாம் என்று கண்டிப்பாகக் கூறினார். பிறகு அப்பெண்ணுக்கு உண்ண உணவு அளிக்குமாறு சொன்னார்.
2008 by World Bible Translation Center