M’Cheyne Bible Reading Plan
தெபோராளின் பாடல்
5 சிசெராவை இஸ்ரவேலர் தோற்கடித்த நாளில், தெபோராளும், அபினோகாமின் மகனாகிய பாராக்கும் பாடிய பாடல் இது:
2 “இஸ்ரவேலர் போருக்குத் தயாராயினர்.
அவர்கள் போருக்குச் செல்ல தாமாகவே முன் வந்தனர்!
கர்த்தரை வாழ்த்துங்கள்!
3 “அரசர்களே, கேளுங்கள்.
ஆளுவோரே, கேளுங்கள். நான் பாடுவேன்.
நான் கர்த்தருக்குப் பாடுவேன்.
இஸ்ரவேல் ஜனங்களின் தேவனாகிய கர்த்தருக்குப் பாட்டு இசைப்பேன்.
4 “கர்த்தாவே, முன்பு சேயீரிலிருந்து வந்தீர். ஏதோமிலிருந்து அணிவகுத்துச் சென்றீர்.
நீர் அணிவகுத்துச் சென்றபோது, பூமி அதிர்ந்தது. வானம் பொழிந்தது. மேகம் தண்ணீர் தந்தது.
5 மலைகள் கர்த்தருக்குமுன் நடுங்கின,
சீனாய் மலையின், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் முன்னிலையில் நடுங்கின.
6 “ஆனாத்தின் மகனாகிய சம்காரின் காலத்தில்
யாகேலின் நாட்களில் பெருஞ்சாலைகள் வெறுமையாய் கிடந்தன.
வணிகரும் வழி நடப்போரும் பக்கவழியாய்ச் சென்றார்கள்.
7 “அங்கு வீரர்கள் இல்லை.
தெபோராள், நீ வரும்வரைக்கும் அங்கு வீரர்கள் இல்லை.
இஸ்ரவேலின் தாயாக நீ திகழும்வரைக்கும் இஸ்ரவேலின் வீரர்கள் இருந்ததில்லை.
8 “நகரத்தின் வாசல்களில் போர் புரிவதற்கே
தேவன் புது தலைவர்களைத் தேர்ந்தெடுத்தார்.
இஸ்ரவேலில் 40,000 வீரர்களில் ஒருவனிடத்திலும் கேடயத்தையோ,
ஈட்டியையோ யாரும் காணவில்லை.
9 “இஸ்ரவேலின் படைத்தலைவர்களை என் நெஞ்சம் நினைக்கிறது.
அவர்கள் போருக்குத் தாமாகவே முன்வந்தார்கள்.
கர்த்தரை வாழ்த்துங்கள்!
10 “வெள்ளைக் கழுதைகளின்மேல் சவாரி செய்வோரும்,
சேண விரிப்பில் அமர்ந்திருப்போரும், பாதை வழியே நடப்போரும் கவனமாய்க் கேளுங்கள்!
11 கால்நடைகள் தண்ணீர் பருகும் இடங்களிலே,
கைத்தாளங்களின் இசையைக் கேட்கிறோம்.
கர்த்தரும், அவரது போர் வீரரும் பெற்ற வெற்றிகளை
ஜனங்கள் பாடுகின்றனர்.
நகரவாசல்களினருகே கர்த்தருடைய ஜனங்கள் போரிட்டனர்.
அவர்களே வென்றனர்!
12 “எழுக, எழுக, தெபோராளே!
எழுக, எழுக, பாடலைப் பாடுக!
எழுந்திரு, பாராக்!
அபினோகாமின் மகனே, உன் பகைவரை நீ மேற்கொள்!
13 “இப்போதும், மீதியாயிருக்கும் ஜனங்களே, தலைவர்களிடம் செல்லுங்கள்.
கர்த்தருடைய ஜனங்களே! எனக்காக வீரரோடு செல்லுங்கள்!
14 “எப்பிராயீமின் மனிதர்கள் அமலேக்கின் மலை நாட்டினின்று வந்தனர்.
பென்யமீனே, அவர்கள் உன்னையும் உன் ஜனங்களையும் பின்தொடர்ந்தனர்.
மாகீரின் குடும்பத்தில் படைத்தலைவர்கள் இருந்தனர்.
வெண்கலக் கைத்தடியேந்திய தலைவர்கள் செபுலோன் கோத்திரத்திலிருந்து வந்தனர்.
15 இசக்காரின் தலைவர்கள் தெபோராளோடிருந்தனர்.
இசக்காரின் குடும்பம் பாராக்கிற்கு உண்மையாய் நடந்தது. பள்ளத்தாக்கிற்கு அவர்கள் கால்நடையாய் நடந்தனர்.
“ரூபனே உனது படைகளின் கூட்டத்தில் துணிவுமிக்க வீரர்கள் பலருண்டு.
16 தொழுவங்களின் சுவரருகே நீ எதற்காக அமர்ந்திருக்கிறாய்?
ரூபனின் துணிவான வீரர்கள் போரைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தனர்.
அவர்கள் வீட்டில் அமர்ந்து மந்தைகளுக்காய் இசைத்த இசையைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.
17 யோர்தான் நதியின் மறுகரையில் கீலேயாத்தின் ஜனங்கள் தம் முகாம்களில் தங்கி இருந்தனர்.
தாணின் ஜனங்களே, நீங்கள் கப்பல்களில் தங்கியிருந்ததேன்?
ஆசேர் குடும்பம் கடற்கரையில்
பாதுகாப்பான துறைமுகத்தில் முகாமிட்டு தங்கினர்.
18 “ஆனால் செபுலோனின் ஆட்களும், நப்தலியின் ஆட்களும் தம் உயிர்களைப் பணயம் வைத்து
மலைகளின் மேல் போரிட்டனர்.
19 அரசர்கள் போரிட வந்தனர்.
கானானின் அரசர்கள் தானாக் நகரத்தில்
மெகிதோவின் கரையில் போரிட்டனர்.
ஆனால், பொக்கிஷத்தைத் தங்கள் நாட்டிற்கு எடுத்துச் செல்லவில்லை!
20 வானிலிருந்து நட்சத்திரங்கள் போரிட்டன.
அவைகள் வான வீதியிலிருந்து சிசெராவோடு போர் செய்தன.
21 பழைய நதியாகிய கீசோன்,
சிசெராவின் ஆட்களை அடித்துச் சென்றது.
எனது ஆத்துமாவே, ஆற்றலோடு புறப்படு!
22 குதிரையின் குளம்புகள் பூமியில் மோதின.
சிசெராவின் பலமான குதிரைகள் ஓடின, மேலும் ஓடின.
23 “கர்த்தருடைய தூதன், ‘மேரோஸ் நகரை சபியுங்கள்.
அதன் குடிகளை சபியுங்கள்!
கர்த்தருக்கு உதவுவதற்காக அவர்கள் வீரரோடு சேரவில்லை’ என்றான்.
24 கேனியனாகிய ஏபேரின் மனைவி யாகேல்.
அவள் பெண்களெல்லாரிலும் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
25 சிசெரா தண்ணீரைக் கேட்டான்.
யாகேல் பாலைக் கொடுத்தாள்.
அரசனுக்கான கிண்ணத்தில்
அவள் பாலாடையைக் கொண்டு வந்தாள்.
26 யாகேல் தன் கையில் ஒரு கூடார ஆணியை எடுத்தாள்.
வேலையாள் பயன்படுத்தும் சுத்தியை அவள் வலதுகையில் பிடித்தாள்.
பின் சிசெராவின் தலைமீது சுத்தியால் அடித்தாள்!
அவன் நெற்றிப் பொட்டின் உள்ளே துளையிட்டாள்!
27 அவன் யாகேலின் பாதங்களினிடையே வீழ்ந்தான்.
அவன் மடிந்தான்.
அங்கு கிடந்தான்.
அவன் அவள் பாதங்களினிடையே வீழ்ந்தான்.
அவன் மடிந்தான்.
சிசெரா வீழ்ந்த இடத்திலேயே மடிந்தான்.
அங்கு மரித்து கிடந்தான்!
28 “சிசெராவின் தாய் ஜன்னலினூடே பார்த்து அழுதாள்.
சிசெராவின் தாய் திரைச் சீலைகளினூடே பார்த்தாள்.
‘ஏன் சிசெராவின் இரதம் தாமதிக்கிறது?
அவன் இரத ஒலியை நான் கேளாதது ஏன்?’ என்று புலம்பினாள்.
29 “அவளின் புத்திசாலியான வேலைக்காரப் பெண் அவளுக்கு பதில் அளித்தாள்.
ஆம், பணிப்பெண் அவளுக்குப் பதில் சொன்னாள்.
30 ‘அவர்கள் போரில் வென்றிருப்பார்கள்.
தோற்கடித்த ஜனங்களிடமிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அவற்றைத் தம்மிடையே பங்கிட்டுக் கொண்டிருக்கிறார்கள்!
ஒவ்வொரு வீரனும் ஓரிரு பெண்களை எடுத்துக்கொள்கிறான்.
சிசெரா சாயம்தீர்த்த ஆடையைக் கண்டெடுத்தான்.
அதுவே அவன் முடிவாயிற்று!
சிசெரா அழகான ஆடை ஒன்றைக் கண்டெடுத்தான்.
வெற்றி வேந்தன் சிசெரா தான் அணிவதற்காக இரண்டு ஆடைகளையும் தேர்ந்தெடுத்திருக்கலாம்.’
31 “கர்த்தாவே, உமது பகைவர்கள் அனைவரும் இவ்வாறு மடியட்டும்.
உமது அன்பான ஜனங்கள் உதய சூரியனைப்போல வலிமை பெறட்டும்!”
இதன் பின்பு 40 ஆண்டுக் காலத்திற்கு தேசத்தில் அமைதி நிலவியது.
சவுல் மனம் மாறுதல்
9 சவுல் கர்த்தரின் சீஷரைப் பயமுறுத்தவும், கொல்லவும் எப்பொழுதும் முயன்று கொண்டிருந்தான். எனவே அவன் தலைமை ஆசாரியனிடம் சென்றான். 2 தமஸ்கு நகரத்தில் ஜெப ஆலயங்களிலுள்ள யூதர்களுக்குக் கடிதங்களை எழுதுமாறு அவரைக் கேட்டான். தமஸ்குவில் கிறிஸ்துவின் வழியைப் பின்பற்றுகிற சீஷர்களைக் கண்டுபிடிக்கும் அதிகாரத்தை அவனுக்குக் கொடுக்குமாறு தலைமை ஆசாரியரைக் கேட்டான். அங்கு ஆணோ, பெண்ணோ, விசுவாசிகள் எவரையேனும் கண்டால் அவன் அவர்களைக் கைதுசெய்து எருசலேமிற்குக் கொண்டு வர விரும்பினான்.
3 எனவே சவுல் தமஸ்குவிற்கு புறப்பட்டுச் சென்றான். அவன் நகரத்திற்கு அருகே வந்தபோது, அவனைச் சுற்றிலும் மிகுந்த பிரகாசமான ஒளி வானிலிருந்து திடீரென வெளிச்சமிட்டது. 4 சவுல் தரையில் விழுந்தான். அவன் தன்னோடு பேசுகிற ஒரு சத்தத்தைக் கேட்டான். “சவுலே, சவுலே! நீ ஏன் புண்படுத்தும் காரியங்களை எனக்குச் செய்துகொண்டிருக்கிறாய்?” என்றது அச்சத்தம்.
5 சவுல், “ஆண்டவரே, நீர் யார்?” என்று கேட்டான்.
அந்தச் சத்தம் பதிலாக, “நான் இயேசு, 6 நீ புண்படுத்த நினைப்பது என்னையே. நீ எழுந்து நகரத்துக்குள் போ. அங்கிருக்கும் ஒருவர் நீ செய்ய வேண்டியதை உனக்குக் கூறுவார்” என்றது.
7 சவுலோடு பயணம் செய்த மனிதர் நின்றனர். அவர்கள் எதுவும் சொல்லவில்லை. அம்மனிதர் சத்தத்தைக் கேட்டனர். ஆனால் யாரையும் பார்க்கவில்லை. 8 சவுல் தரையிலிருந்து எழுந்தான். அவன் கண்களைத் திறந்தபோது அவனால் பார்க்க முடிய வில்லை. எனவே சவுலோடு வந்த மனிதர்கள் அவன் கையைப் பிடித்து, அவனைத் தமஸ்குவுக்கு அழைத்துச் சென்றனர். 9 மூன்று நாட்கள் சவுலால் பார்க்க முடியவில்லை. அவன் எதையும் உண்ணவோ, எதையும் பருகவோ இல்லை.
10 தமஸ்குவில் இயேசுவின் சீஷன் ஒருவன் இருந்தான். அவன் பெயர் அனனியா. கர்த்தர் ஒரு தரிசனத்தில் அவனிடம் வந்து பேசினார். கர்த்தர், “அனனியாவே!” என்று அழைத்தார்.
அனனியா பதிலாக, “ஆண்டவரே, இதோ இருக்கிறேன்” என்றான்.
11 கர்த்தர் அனனியாவை நோக்கி, “எழுந்து நெடும்வீதி எனப்படும் தெருவுக்குப் போ. யூதாஸின் [a] வீட்டைக் கண்டுபிடி. தர்சு நகரத்தின் சவுல் என்ற மனிதனுக்காக விசாரி. அவன் அங்குப் பிரார்த்தனை செய்துகொண்டிருக்கிறான். 12 சவுல் ஒரு காட்சி கண்டான். அக்காட்சியில் அனனியா என்றொரு மனிதன் அவனிடம் வந்து கரங்களை அவன்மீது வைத்தான். அப்போது சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது” என்றார்.
13 ஆனால் அனனியா பதிலாக, “ஆண்டவரே பல மக்கள் இம்மனிதனைக் குறித்து எனக்குக் கூறியிருக்கிறார்கள். எருசலேமிலுள்ள உமது தூய மக்களுக்கு இந்த மனிதன் செய்த தீமைகளை அவர்கள் எனக்குச் சொன்னார்கள். 14 இப்போது அவன் இங்கு தமஸ்குவுக்கு வந்துள்ளான். உம்மில் விசுவாசம் வைக்கிற எல்லோரையும் கைது செய்யும் அதிகாரத்தைத் தலைமைப் போதகர்கள் அவனுக்கு அளித்துள்ளனர்” என்றான்.
15 ஆனால் கர்த்தர் அனனியாவிடம், “போ! நான் சவுலை ஒரு முக்கிய வேலைக்காகத் தேர்ந்துள்ளேன். அவன் மன்னருக்கும், யூத மக்களுக்கும் பிற நாடுகளுக்கும் என்னைப்பற்றிச் சொல்லவேண்டும். 16 என் பெயருக்காக அவன் படவேண்டிய துன்பங்களை நான் சவுலுக்குக் காட்டுவேன்” என்றார்.
17 எனவே அனனியா புறப்பட்டு, யூதாஸின் வீட்டிற்குச் சென்றான். அவன் தனது கைகளைச் சவுலின் மீது வைத்து, “சவுலே, எனது சகோதரனே, கர்த்தர் இயேசு என்னை அனுப்பினார். நீ இங்கு வந்துகொண்டிருந்தபொழுது வழியில் நீ பார்த்தவரும் அவரே. நீ மீண்டும் பார்வை அடையவும், பரிசுத்த ஆவியால் நிரம்பவும் இயேசு என்னை இங்கு அனுப்பினார்” என்றான். 18 உடனே மீன் செதில்கள் போன்றவை சவுலின் கண்களிலிருந்து விழுந்தன. சவுலால் மீண்டும் பார்க்க முடிந்தது. சவுல் எழுந்து ஞானஸ்நானம் பெற்றான். 19 அவன் ஆகாரம் உண்டு, பலம் பெற்றவனாக உணர்ந்தான்.
சவுல் தமஸ்குவில் போதித்தல்
சில நாட்கள் தமஸ்குவில் சவுல் இயேசுவின் சீஷர்களோடு இருந்தான். 20 ஜெப ஆலயங்களில் இயேசுவைக் குறித்துப் போதிக்க ஆரம்பித்தான். மக்களுக்கு, “இயேசு தேவனுடைய குமாரன்!” என்று கூறினான்.
21 சவுலைக் கேட்ட எல்லா மக்களும் வியப்புற்றனர். அவர்கள், “இவன் எருசலேமிலிருந்த அதே மனிதன். இந்தப் பெயரை நம்பிய மக்களை அழிக்க முற்பட்டுக் கொண்டிருந்தான்! அவன் இங்கும் அதைச் செய்வதற்காகவே வந்தான். இயேசுவின் சீஷர்களைக் கைது செய்து எருசலேமிலுள்ள தலைமை ஆசாரியர்களிடம் அழைத்துச் செல்வதற்கு வந்தான்” என்றனர்.
22 ஆனால் சவுலோ மென்மேலும் வல்லமையில் பெருகினான். அவன் இயேசுவே கிறிஸ்து என நிரூபித்தான். தமஸ்குவில் அவன் சான்றுகள் வலுவாக இருந்தபடியால் யூதர்கள் அவனோடு வாக்குவாதம் செய்ய இயலவில்லை.
சவுல் தப்பிச் செல்லுதல்
23 பல நாட்களுக்குப் பிறகு, யூதர்கள் சவுலைக் கொல்லத் திட்டமிட்டனர். 24 சவுலுக்காக நகரத்தின் கதவுகளை இரவும் பகலும் யூதர்கள் காவல் செய்துகொண்டிருந்தனர். அவர்கள் அவனைக் கொல்ல விரும்பினர். ஆனால் சவுல் அவர்களின் சதித்திட்டத்தைக் குறித்துச் சொல்லப்பட்டிருந்தான். 25 ஒரு நாள் இரவில் சில சீஷர்கள் அவன் நகரத்திலிருந்து வெளியேறுவதற்கு உதவினர். சீஷர்கள் அவனை ஒரு கூடையில் வைத்தனர். நகரக் கோட்டையிலிருந்த ஒரு துவாரத்தின் வழியாக கூடையை இறக்கி அவனை வெளியே விட்டனர்.
எருசலேமில் சவுல்
26 பிறகு சவுல் எருசலேமுக்குச் சென்றான். சீஷர் குழுவில் சேர்ந்துகொள்ள அவன் முயற்சித்தான். ஆனால் அவர்கள் எல்லோரும் அவனைக் கண்டு பயந்தனர். சவுல் உண்மையாகவே இயேசுவைப் பின்பற்றுகிறவன் என்பதை அவர்கள் நம்பவில்லை. 27 ஆனால் பர்னபா சவுலை ஏற்றுக் கொண்டு அவனை அப்போஸ்தலரிடம் அழைத்து வந்தான். பர்னபா அப்போஸ்தலருக்கு, தமஸ்குவுக்குச் செல்லும் பாதையில் சவுல் கர்த்தரை தரிசித்ததைச் சொன்னான். கர்த்தர் சவுலிடம் பேசிய வகையை பர்னபா அப்போஸ்தலருக்கு விளக்கினான். பின் அவன் அப்போஸ்தலர்களுக்கு இயேசுவுக்காக பயமின்றி தமஸ்குவில் மக்களுக்கு சவுல் போதித்ததையும் சொன்னான்.
28 சவுலும் சீஷரோடு தங்கினான். பயமின்றி கர்த்தரைப் பற்றி எருசலேமின் எல்லா பகுதிகளுக்கும் சென்று போதித்தான். 29 கிரேக்கமொழி பேசிய யூதரிடம் சவுல் அவ்வப்போது பேசினான். அவர்களோடு விவாதங்கள் நடத்தினான். ஆனால் அவனைக் கொல்வதற்கு அவர்கள் முயற்சி செய்துகொண்டிருந்தார்கள். 30 சகோதரர்கள் இதைப்பற்றி அறிந்தபோது அவர்கள் சவுலை செசரியா நகரத்திற்கு அழைத்துச் சென்றனர். செசரியாவிலிருந்து தர்சு நகரத்திற்கு அவர்கள் சவுலை அனுப்பினர்.
31 யூதேயா, கலிலேயா, சமாரியா, ஆகிய இடங்களிலுள்ள சபையினர் அமைதியுடன் வாழ்ந்தார்கள். பரிசுத்த ஆவியானவரின் உதவியால் வலிமையூட்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். தாங்கள் வாழ்ந்த வகையால் கர்த்தரை அவர்கள் மதித்தனர் என்பதை விசுவாசிகள் காட்டினர். ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் உதவியினால் விசுவாசிகள் குழு பெருகி வளர்ந்தது.
லித்தா மற்றும் யோப்பாவில் பேதுரு
32 எருசலேமைச் சுற்றிலுமிருந்த எல்லா ஊர்கள் வழியாகவும் பேதுரு பயணமானான். லித்தாவில் வாழ்ந்த விசுவாசிகளை [b] அவன் சந்தித்தான். 33 அங்கு பக்கவாத வியாதியால் பீடிக்கப்பட்ட ஐனேயா என்ற பெயருள்ள ஒருவனை அவன் கண்டான். கடந்த எட்டு ஆண்டுகளாக ஐனேயாவால் அவனது படுக்கையை விட்டு நகர முடியவில்லை. 34 பேதுரு அவனிடம், “ஐனேயாவே, இயேசு கிறிஸ்து உன்னைக் குணமாக்குகிறார். எழுந்து உன் படுக்கையை மடக்கு. உன்னால் இப்போது இதனைச் செய்ய முடியும்!” என்றான். ஐனேயா உடனே எழுந்து நின்றான். 35 லித்தாவில் வாழ்ந்த எல்லா மக்களும் சாரோனின் மக்களும் அவனைக் கண்டனர். இம்மக்கள் கர்த்தரிடம் திரும்பினார்கள்.
36 யோப்பா நகரில் தபித்தா என்னும் பெயருள்ள இயேசுவின் சீஷப் பெண் இருந்தாள். (அவளது கிரேக்க பெயரான, தொர்காள், “மான்” எனப் பொருள்பட்டது) அவள் மக்களுக்கு எப்போதும் நன்மையையே செய்தாள். தேவைப்பட்ட மக்களுக்குப் பண உதவியும் செய்து வந்தாள். 37 பேதுரு லித்தாவிலிருக்கும்போது, தபித்தா நோய்வாய்ப்பட்டு இறந்தாள். அவர்கள் அவளது சரீரத்தைக் கழுவி மாடியில் ஓர் அறையில் வைத்திருந்தனர். 38 யோப்பாவில் சீஷர்கள் பேதுரு லித்தாவில் இருப்பதைக் கேள்விப்பட்டனர். (லித்தா யோப்பாவுக்கு அருகிலுள்ளது). எனவே அவர்கள் இரண்டு மனிதர்களைப் பேதுருவிடம் அனுப்பினர். அவர்கள் அவனிடம் “விரைந்து எங்களிடம் சீக்கிரம் வாரும்!” என்று வேண்டினர்.
39 பேதுரு தயாராகி அவர்களோடு போனான். அவன் வந்து சேர்ந்தபொழுது அவனை மாடிக்கு அழைத்துச் சென்றார்கள். விதவைகள் எல்லோரும் பேதுருவைச் சூழ்ந்து நின்றனர். அவர்கள் அழுதுகொண்டிருந்தனர். தொர்காள் உயிரோடிருந்தபோது செய்த அங்கிகளையும் பிற ஆடைகளையும் பேதுருவுக்குக் காட்டினர். 40 பேதுரு எல்லா மக்களையும் அறைக்கு வெளியே அனுப்பினான். அவன் முழங்காலில் நின்று பிரார்த்தனை செய்தான். பின் அவன் தபித்தாவின் சரீரத்துக்கு நேராகத் திரும்பி, “தபித்தாவே, எழுந்து நில்!” என்றான். அவள் கண்களைத் திறந்தாள். அவள் பேதுருவைக் கண்டபோது, எழுந்து அமர்ந்தாள். 41 அவன் அவளுக்கு நேராகக் கையை நீட்டி, அவள் எழுந்திருக்கும்படி உதவினான். பின் அவன் விசுவாசிகளையும், விதவைகளையும் அறைக்குள் அழைத்தான். அவர்களுக்குத் தபித்தாவைக் காட்டினான். அவள் உயிரோடிருந்தாள்!
42 யோப்பாவிலுள்ள மக்கள் எல்லோரும் இதனை அறிந்தனர். அவர்களில் பலர் கர்த்தரை நம்பினர். 43 பேதுரு யோப்பாவில் பல நாட்கள் தங்கினான். தோல் தொழிலாளியான சீமோன் என்னும் பெயருள்ள ஒரு மனிதனோடு அவன் தங்கினான்.
குயவனும் களிமண்ணும்
18 இந்தச் வார்த்தை எரேமியாவிற்கு கர்த்தரிடமிருந்து வந்தது: 2 “எரேமியா, குயவனின் வீட்டிற்குப் போ. அந்தக் குயவனின் வீட்டில் எனது வார்த்தையை உனக்குக் கொடுப்பேன்.”
3 எனவே, நான் கீழே குயவனின் வீட்டிற்குப் போனேன். குயவன் சக்கரத்தில் களிமண்ணை வைத்து வேலை செய்துகொண்டிருப்பதை நான் பார்த்தேன். 4 அவன் களிமண்ணிலிருந்து ஒரு பானையை செய்துகொண்டிருந்தான். ஆனால் அந்தப் பானையில் ஏதோ தவறு இருந்தது. எனவே, அந்தக் குயவன் அக்களிமண்ணை மீண்டும் பயன்படுத்தி வேறொரு பானை செய்தான். தான் விரும்பின வகையில் அந்தப் பானையை வடிவமைக்கும்படி அவன் தனது கைகளைப் பயன்படுத்தினான்.
5 அப்போது கர்த்தரிடமிருந்து எனக்கு வார்த்தை வந்தது: 6 “இஸ்ரவேல் குடும்பத்தினரே! உங்களோடு தேவனாகிய நானும் அதே செயலைச் செய்யமுடியும் என்பது உங்களுக்குத் தெரியும். குயவனின் கைகளில் இருக்கிற களிமண்ணைப்போன்று நீங்கள் இருக்கிறீர்கள். நான் குயவனைப் போன்றுள்ளேன். 7 ஒரு காலம் வரும். அப்போது, நான் ஒரு தேசத்தையோ அல்லது ஒரு அரசாட்சியையோ குறித்து பேசுவேன். அத்தேசத்தை உயர்த்துவேன் என்று நான் சொல்லலாம். அத்தேசத்தைக் கீழே இழுத்துப் போடுவேன். அத்தேசத்தை அல்லது அரசாங்கத்தை அழிப்பேன் என்று சொல்லலாம். 8 ஆனால், அத்தேசத்து ஜனங்கள் தங்கள் இதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றலாம். அத்தேசத்து ஜனங்கள் தங்கள் தீயச் செயல்களை நிறுத்தலாம். பிறகு என் மனதை நான் மாற்றுவேன். அத்தேசத்திற்கு அழிவைக் கொண்டுவரும் எனது திட்டத்தை நான் பின்பற்றமாட்டேன். 9 இன்னொரு காலம் வரலாம். அப்போது ஒரு தேசத்தைப்பற்றிப் பேசுவேன். நான் அத்தேசத்தைக் கட்டி எழுப்புவேன் என்று சொல்லலாம். 10 ஆனால், அத்தேசம் தீயவற்றைச் செய்து எனக்குக் கீழ்ப்படியாமல் போவதை நான் பார்க்கலாம். பிறகு, நான் அத்தேசத்திற்கு நன்மை செய்ய வேண்டும் என்று போட்டிருந்த திட்டங்களுக்காக வருந்தி அவற்றை எதிராக மாற்றிப்போடுவேன்.
11 “எனவே, எரேமியா, யூதாவின் ஜனங்களிடமும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களிடமும் கூறு. ‘இதுதான் கர்த்தர் கூறுவது: நான் இப்போதிருந்தே உங்களுக்குத் தொல்லைகளை தயாரித்துக்கொண்டிருக்கிறேன். நான் உங்களுக்கு எதிராகத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறேன். எனவே, நீங்கள் செய்துகொண்டிருக்கிற தீயச்செயல்களை நிறுத்துங்கள். ஒவ்வொரு நபரும் மாறவேண்டும், நல்லவற்றைச் செய்யத் தொடங்கவேண்டும்!’ 12 ஆனால் யூதாவின் ஜனங்கள் பதில் கூறுவார்கள், ‘மாற்றம் செய்வதற்கான முயற்சி எடுப்பதால் பயனில்லை. நாங்கள் விரும்புகிறபடியே தொடர்ந்து செய்வோம். எங்களில் ஒவ்வொருவரும் தங்கள் பிடிவாதத்தின்படியே தீய இருதயம் விரும்புகிறபடியே செய்யப் போகிறோம்.’”
13 கர்த்தர் சொல்கிறவற்றை கவனியுங்கள்.
“மற்ற தேசத்தாரிடம் இந்தக் கேள்வியைக் கேளுங்கள்.
‘இஸ்ரவேல் செய்திருக்கிற தீயச் செயல்களை எவராவது செய்ததாக நீங்கள் எப்பொழுதாவது கேள்விபட்டிருக்கிறீர்களா?’
தேவனுக்கு இஸ்ரவேலர் சிறப்புக்குரியவர்கள்.
இஸ்ரவேலர் தேவனுடைய மணமகளைப் போன்றவள்!
14 லீபனோனில் உள்ள மலை உச்சியில் படிந்த பனி உருகுவதில்லை என்பது உங்களுக்குத் தெரியும்.
குளிர்ச்சியாக பாய்கின்ற நீரோடைகள் வறண்டுவிடுவதில்லை என்பது உங்களுக்கு தெரியும்.
15 ஆனால் எனது ஜனங்கள் என்னைப் மறந்திருக்கிறார்கள்.
பயனற்ற விக்கிரகங்களுக்கு அவர்கள் பலிகளைக் கொடுக்கிறார்கள்.
எனது ஜனங்கள் தாம் செய்கின்றவற்றில் தடுமாற்றமாக இருக்கிறார்கள்.
அவர்களின் தடுமாற்றம் தமது முற்பிதாக்களின் பழைய வழிகளைப் பற்றியதாக உள்ளது.
எனது ஜனங்கள் என்னைப் பின்பற்றி நல்ல சாலைகளில் வருவதைவிட,
பின் சாலைகளிலும் மோசமான நெடும் பாதைகளிலும் நடப்பார்கள்.
16 எனவே, யூதாவின் நாடு காலியான வனாந்தரம் போன்றதாகும்.
அதைக் கடந்து செல்லும் ஜனங்கள் பிரமித்து தங்கள் தலைகளை அசைப்பார்கள்.
இந்நாடு எவ்வாறு அழிக்கப்பட்டது என்று அதிர்ச்சி அடைவார்கள்.
17 நான் யூதாவின் ஜனங்களைச் சிதறும்படி செய்வேன்.
அவர்கள் பகைவர்களிடமிருந்து ஓடிப் போவார்கள்.
கிழக்குக் காற்று பொருட்களைச் சிதறடிப்பதுபோன்று
நான் யூதா ஜனங்களைச் சிதறடிப்பேன்.
நான் அந்த ஜனங்களை அழிப்பேன், நான் அவர்களுக்கு உதவி செய்ய வருவதைப் பார்க்கமாட்டார்கள்.
இல்லை நான் விலகிச் செல்வதை அவர்கள் பார்ப்பார்கள்.”
எரேமியாவின் நான்காவது முறையீடு
18 பிறகு, எரேமியாவின் பகைவர்கள் சொன்னார்கள், “வாருங்கள் எரேமியாவிற்கு எதிராகத் திட்டங்கள் தீட்ட எங்களை அனுமதியுங்கள். ஆசாரியரால் இயற்றப்படும் சட்டம் பற்றிய போதனைகள் தொலைந்து போகாது. ஞானமுள்ள மனிதரின் ஆலோசனைகள் நம்மோடு கூட இருக்கும். தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளை நாம் இன்னும் வைத்திருப்போம். எனவே அவனைப்பற்றிய பொய் சொல்ல எங்களை விடுங்கள். அது அவனை அழிக்கும். அவன் சொல்லுகிற எதையும் நாங்கள் கவனிக்கமாட்டோம்.”
19 கர்த்தாவே என்னைக் கேட்டருளும்!
என் வாதங்களைக் கேளும் யார் சரியானவர் என்பதை முடிவு செய்யும்.
20 ஜனங்கள் நன்மைக்கு தீமையை செய்வார்களா? இல்லை.
நீர் அவர்களை தண்டிக்கக்கூடாது என்பதற்காக
நான் உம் முன் நின்று அவர்களைப் பற்றி நல்ல காரியங்களை கூறியதை நினைவுகூரும்.
ஆனால், அவர்கள் எனக்குத் தீமையைச் செலுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்னை வலைக்குட்படுத்தி கொல்ல முயற்சி செய்கிறார்கள்.
21 அவர்களது பிள்ளைகள் பஞ்சத்தால் துன்புறும்படிச் செய்யும்.
அவர்களின் பகைவர்களால் அவர்கள் கொல்லப்படும்படிச் செய்யும்.
அவர்களது மனைவிகள், குழந்தைகள் இழந்துபோகட்டும்.
யூதாவின் ஆண்கள் மரணத்தில் விழட்டும்.
அவர்களது மனைவியர் விதவைகள் ஆகட்டும்.
யூதாவில் உள்ள ஆண்கள் மரணத்தில் விழட்டும். இளைஞர்கள் போரில் கொல்லப்படட்டும்.
22 அவர்களது வீடுகளில் அழுகை வரட்டும்.
அவர்களுக்கு எதிராகத் திடீரென்று எதிரியை வர வழைக்கும்போது அவர்கள் கதறட்டும்.
எனது பகைவர்கள் என்னை (வலைக்குள்) சிக்க வைக்க முயன்றனர்.
எனவே, இவையெல்லாம் நிகழட்டும்.
23 கர்த்தாவே, அவர்கள் என்னைக் கொல்வதற்குயிட்ட திட்டங்களை நீர் அறிவீர்.
அவர்களது பொல்லாங்குகளை மன்னியாதிரும்.
அவர்களது பாவங்களை அழிக்காதிரும்.
எனது பகைவர்கள் உமக்கு முன்பாக இடறி விழட்டும்.
நீர் கோபமாக இருக்கும்போது அந்த ஜனங்களைத் தண்டியும்.
உழவன்-விதை பற்றிய உவமை(A)
4 இயேசு மறுபடியும் கடற்கரையோரத்தில் போதிக்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆகையால் இயேசு படகில் ஏறி ஏரிக்குள் சென்றார். எல்லா மக்களும் ஏரிக்கரையில் நின்றுகொண்டனர். 2 இயேசு படகில் இருந்த வண்ணம் மக்களுக்குப் போதிக்கத் தொடங்கினார். அவர் மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு பல உவமைகளைப் பயன்படுத்தினார்.
3 அவர் சொன்னார், “கேளுங்கள், ஓர் உழவன் தன் விதையை விதைக்கச் சென்றான். 4 உழவன் விதைத்துக் கொண்டு இருக்கும்போது சில விதைகள் பாதையில் விழுந்தன. பறவைகள் வந்து அவற்றைத் தின்றுவிட்டுச் சென்றன. 5 சில விதைகள் பாறை போன்ற நிலத்தில் விழுந்தன. அதில் போதிய ஆழமான மண்ணில்லை. அதனால் அந்த விதைகள் வேகமாக முளைத்தன. 6 ஆனால் சூரியன் ஏற வெப்பத்தால் அவை கருகிவிட்டன. அவற்றுக்கு ஆழமான வேர் இல்லாததால் பிழைக்கவில்லை. 7 சில விதைகள் முட்புதர்களில் விழுந்தன. முட்புதர்கள் வளர்ந்து, விதைகள் முளைத்து வளராதபடி முடக்கிவிட்டன. எனவே, விதைகள் தானியங்களைத் தரவில்லை. 8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தன. விதைகள் அவற்றில் நன்றாக வளர ஆரம்பித்தன. அவை வளர்ந்து பலன் தர ஆரம்பித்தது. சில செடிகள் முப்பது தானியங்களையும், சில அறுபது தானியங்களையும், சில நூறு தானியங்களையும் தந்தன,”
9 பிறகு இயேசு, “நான் சொல்வதைக் கேட்கத்தக்கவர்கள் கவனிக்கட்டும்” என்றார்.
உவமைகள் ஏன்-விளக்கம்(B)
10 பிறகு இயேசு மக்களைவிட்டுத் தொலைவாகச் சென்றார். பன்னிரண்டு சீஷர்களும் மற்றும் அவரைச் சுற்றி இருந்தவர்களும் அவர் பயன்படுத்தும் உவமைகளைப் பற்றிக் கேட்டார்கள்.
11 இயேசு, “உங்களால் மட்டுமே தேவனின் இராஜ்யத்தைப் பற்றிய இரகசிய உண்மைகளை அறிந்து கொள்ளமுடியும். ஆனால் மற்ற மக்களால் அறிந்துகொள்ள இயலாது. எனவே நான் அவர்களுக்கு உவமைகளின் மூலம் கூறுகிறேன். 12 நான் இதனைச் செய்கிறேன். ஏனென்றால்:
“‘அவர்கள் பார்ப்பார்கள், பார்ப்பார்கள். ஆனால் உண்மையில் ஒருபோதும் பார்க்க முடியாது.
அவர்கள் கேட்பார்கள், கேட்பார்கள். ஆனால் ஒருபோதும் புரிந்துகொள்ளமாட்டார்கள்.
அவர்கள் பார்த்துப் புரிந்துகொண்டிருப்பார்களேயானால் அவர்கள் மாறி இருக்கக்கூடும்,
மன்னிக்கப்பட்டிருக்கவும்கூடும்’” (C)
என்றார்.
விதைபற்றிய உவமை-விளக்கம்(D)
13 இயேசு தன் சீஷர்களிடம், “உங்களால் இந்த உவமையைப் புரிந்துகொள்ள முடிகிறதா? முடியாவிடில் மற்ற உவமைகளை நீங்கள் எப்படி புரிந்துகொள்ளப் போகிறீர்கள்? 14 இதில் உழவன் என்பவன் தேவனுடைய போதனைகளை மக்களிடம் நடுபவனே. 15 சில நேரங்களில் அப்போதனை வழிப்பாதையில் விழும். சிலர் தேவனின் போதனைகளைக் கேட்பார்கள். ஆனால் சாத்தான் வந்து அப்போதனை வளராதபடி எடுத்துச் சென்றுவிடுவான்.
16 “பாறைகளில் விழுந்த விதைகளைப்போலச் சிலர் காதில் போதனை விழுகின்றன. அவர்கள் அவற்றை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்வர். 17 ஆனால் அவர்கள் அப்போதனைகள் அவர்களது வாழ்வில் ஆழமாகச் செல்ல அனுமதிக்கமாட்டார்கள். அவர்கள் அவற்றைக் கொஞ்ச காலமே வைத்திருப்பர். ஆனால் அந்தப் போதனையை ஏற்றதால் கஷ்டமோ, பிறர் மூலம் துன்பமோ வரும்போது அவர்கள் அவற்றை உடனே கைவிட்டு விடுவர்.
18 “இன்னும் சிலரோ, முட்செடிகளில் விழுந்த விதைகளைப்போன்று போதனையைக் கேட்டுக்கொள்கின்றனர். 19 வாழ்க்கைத் துன்பங்களும், பண ஆசைகளும் பிற எல்லாவிதமான காரியங்களின் மீதுள்ள விருப்பங்களும் இவர்களிடம் போதனைகள் வளராமல் செய்துவிடுகின்றன. எனவே இவர்கள் வாழ்க்கையில் போதனை எந்தவிதமான பலனையும் உண்டாக்குவதில்லை.
20 “மற்றவர்கள் நல்ல நிலத்தில் விழுந்த விதைகளைப் போன்று இருக்கின்றனர். அவர்கள் போதனையைக் கேட்டு, ஏற்றுக்கொள்கின்றனர். அவர்கள் முப்பது மடங்காகவும், சிலர் அறுபது மடங்காகவும், சிலர் நூறு மடங்காகவும் பலன் தருகின்றனர்” என்றார்.
இருப்பதைப் பயன்படுத்துதல்(E)
21 மேலும் இயேசு, “நீங்கள் விளக்கை எடுத்து மரக்காலுக்கு (பாத்திரத்துக்கு) அடியிலோ, படுக்கையின் அடியிலோ மறைத்து வைப்பீர்களா? இல்லை. நீங்கள் விளக்கை மேஜையின் மீதே வைப்பீர்கள். 22 மறைக்கப்படுகிற எந்தக் காரியமும் வெளியே வரும். எல்லா இரகசியங்களும் தெரிவிக்கப்படும். 23 கேட்க முடிந்தவர்கள், நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். 24 நீங்கள் கேட்கிறவற்றைப் பற்றிக் கவனமாய் சிந்தியுங்கள். நீங்கள் எப்படிக் கொடுக்கிறீர்களோ அந்தப்படியே தேவன் உங்களுக்குக் கொடுப்பார். ஆனால் நீங்கள் கொடுப்பதைக் காட்டிலும் அதிகமாக தேவன் உங்களுக்குக் கொடுப்பார். 25 ஏற்கெனவே உள்ளவன் மேலும் பெற்றுக்கொள்வான். எவனிடம் மிகுதியாக இல்லையோ அவனிடமிருந்து இருக்கும் சிறு அளவும் எடுத்துக்கொள்ளப்படும்.”
விதை பற்றிய உவமை
26 பிறகு இயேசு, “தேவனுடைய இராஜ்யமானது ஒரு மனிதன் நிலத்தில் விதைக்கும் ஒரு விதையைப் போன்றது. 27 விதையானது வளரத்தொடங்கும். அது இரவும் பகலும் வளரும். அந்த மனிதன் விழித்திருக்கிறானா அல்லது தூங்குகிறானா என்பது முக்கியமல்ல. விதை வளர்ந்து கொண்டே இருக்கும். விதை எவ்வாறு வளர்கிறது என்பதும், அந்த மனிதனுக்குத் தெரியாது. 28 எவ்வித உதவியும் இல்லாமல் அந்த நிலம் விதையை வளர்க்கிறது. முதலில் விதையில் இருந்து செடி முளைக்கிறது. பிறகு கதிர், அதன் பிறகு கதிர் முழுதும் தானியங்கள். 29 தானியம் விளைந்ததும் மனிதன் அவற்றை அறுவடை செய்கிறான். இது அறுவடைக் காலம்” என்றார்.
கடுகு விதையின் உவமை(F)
30 மேலும் இயேசு, “தேவனுடைய இராஜ்யம் எத்தகையது என்று உங்களுக்குப் புரிய வைக்க நான் எந்த உவமையைப் பயன்படுத்துவேன்? 31 தேவனுடைய இராஜ்யம் ஒரு கடுகு விதையைப் போன்றது. கடுகு மிகச் சிறிய விதைதான். அதை நிலத்தில் விதைக்கிறீர்கள். 32 ஆனால் இதை நீங்கள் விதைத்த பிறகு அது வளர்ந்து, உங்கள் தோட்டத்தில் உள்ள அனைத்துச் செடிகளையும் விட பெரியதாகும். அதன் கிளைகள் மிகப் பெரிதாக விரியும். காட்டுப் பறவைகள் அதன் கிளைகளில் கூடுகட்டித் தங்கமுடியும். அத்தோடு அவைகளை வெயிலில் இருந்தும் பாதுகாக்கும்” என்றார்.
33 மக்களுக்குப் போதிக்கும் பொருட்டு இது போன்ற பல உவமைகளையும் இயேசு பயன்படுத்தினார். அவர்களுக்குப் புரிகிற வகையில் அவர் கற்றுத்தந்தார். 34 இயேசு எப்பொழுதும் உவமைகளை உபயோகித்து மக்களுக்குப் போதித்தார். தன் சீஷர்களோடு தனியாக இருக்கும்போது, எல்லாவற்றையும் அவர்களுக்கு விவரித்துச் சொன்னார்.
புயலை அமர்த்துதல்(G)
35 அன்று மாலையில் இயேசு தன் சீஷர்களிடம், “என்னோடு வாருங்கள். இக்கடலைக் கடந்து அக்கரைக்குச் செல்வோம்” என்றார். 36 இயேசுவும் அவரது சீஷர்களும் அங்கே மக்களை விட்டுவிட்டுச் சென்றனர். இயேசு ஏற்கெனவே இருந்த படகிலேயே அவர்கள் ஏறிச் சென்றனர். அவர்களோடு வேறு பல படகுகளும் இருந்தன. 37 மோசமான காற்று வீச ஆரம்பித்தது. அதனால் பெரும் அலைகள் எழும்பி, படகின் வெளியேயும், உள்ளேயும், தாக்க ஆரம்பித்தன. படகில் நீர் நிறையத் தொடங்கியது. 38 இயேசு கப்பலின் பின்பகுதியில் தலையணையில் தலை வைத்துப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார். சீஷர்கள் அவரிடம் போய் அவரை எழுப்பினார்கள். அவர்கள், “போதகரே, உங்களுக்கு எங்களைப் பற்றிய அக்கறை இல்லையா? நாங்கள் மூழ்கும் நிலையில் உள்ளோம்” என்றனர்.
39 இயேசு எழுந்து புயலுக்கும், அலைகளுக்கும் ஆணையிட்டார். “இரையாதே, அமைதியாய் இரு” என்று இயேசு ஆணையிட்டார். உடனே புயல் நின்றது. கடலும் அமைதியானது.
40 இயேசு தம் சீஷர்களிடம், “நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்? உங்களுக்கு இன்னும் விசுவாசம் இல்லையா?” என்று கேட்டார்.
41 சீஷர்கள் பெரிதும் அஞ்சினர். அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து, “இவர் எத்தகைய மனிதர்? காற்றும் கடலும் கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே” என்றனர்.
2008 by World Bible Translation Center