Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 22

மூன்று கோத்திரங்கள் சொந்த இடத்திற்குச் செல்லுதல்

22 ரூபன், காத், மனாசே கோத்திரங்களிலிருந்த ஜனங்கள் அனைவரையும் யோசுவா ஒரு கூட்டத்திற்கு அழைத்தான். யோசுவா அவர்களை நோக்கி, “மோசே கர்த்தருடைய ஊழியன். மோசே செய்யும்படி கூறியவற்றிற்கு நீங்கள் கீழ்ப்படிந்தீர்கள். எனது எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நடந்தீர்கள். இஸ்ரவேலரின் எல்லா ஜனங்களுக்கும் நீங்கள் உதவியாக இருந்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் இட்ட கட்டளைகளுக்குக் கவனமாகக் கீழ்ப்படிந்தீர்கள். இஸ்ரவேலருக்கு அமைதி வழங்குவதாக உங்கள் தேவனாகிய கர்த்தர் வாக்களித்தார். இப்போது, கர்த்தர் தமது வாக்குறுதியை நிறைவேற்றினார். இப்போது உங்கள் வீடுகளுக்கு திரும்பிப் போகலாம். யோர்தான் நதியின் கிழக்குப் புறத்திலுள்ள நிலத்தை கர்த்தருடைய ஊழியனாகிய மோசே உங்களுக்குக் கொடுத்தார். அந்நிலத்தை உங்கள் இருப்பிடமாகக் கொண்டு நீங்கள் போகலாம். ஆனால் மோசே கொடுத்த சட்டத்தைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென்பதை நினைவில் வையுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தரை நேசித்து அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். அவரைப் பின்பற்றி முழு இதயத்துடனும் முழு ஆத்துமாவுடனும் சிறப்பாக அவருக்கு சேவை செய்வதைத் தொடர்ந்து செய்து வாருங்கள்” என்றான்.

பின் யோசுவா அவர்களை ஆசீர்வதித்தான். அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பிப் போனார்கள். பாசான் தேசத்தை, மோசே மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்குக் கொடுத்திருந்தான். யோர்தான் நதியின் மேற்குப் பகுதியிலுள்ள தேசத்தை யோசுவா மனாசே கோத்திரத்தின் மற்ற பாதிக் குடும்பங்களுக்கு கொடுத்தான். யோசுவா அவர்களை ஆசீர்வதித்து அவர்களை வீட்டிற்கு அனுப்பினான். அவன், “நீங்கள் செல்வந்தர்கள் ஆனீர்கள். உங்களுக்கு மிருக ஜீவன்கள் பல உள்ளன. உங்களிடம் பொன்னும், வெள்ளியும், விலையுயர்ந்த நகைகளும் உள்ளன. உங்களிடம் அழகிய ஆடைகள் இருக்கின்றன. உங்கள் எதிரிகளிடமிருந்து பல பொருட்களைக் கொள்ளையடித்திருக்கிறீர்கள். உங்கள் இருப்பிடத்திற்குச் சென்று அவற்றை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக் கொள்ளுங்கள்” என்றான்.

எனவே ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் பிற இஸ்ரவேலரைப் பிரிந்து சென்றனர். அவர்கள் கானானிலுள்ள சீலோவில் இருந்தனர். அவர்கள் அவ்விடத்தை விட்டு கீலேயாத்திற்குத் திரும்பிச் சென்றார்கள். மோசே அவர்களுக்குக் கொடுத்த அவர்கள் சொந்த இடத்திற்குப் போனார்கள். இந்நிலத்தை அவர்களுக்குக் கொடுக்கும்படியாக கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டிருந்தார்.

10 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரும் கீலேயாத் என்னும் இடத்திற்குச் சென்றார்கள். இந்த இடம் கானான் தேசத்தில் யோர்தான் நதிக்கு அருகே இருந்தது. அவ்விடத்தில் ஜனங்கள் ஓர் அழகிய பலிபீடத்தைக் கட்டினார்கள். 11 இந்த மூன்று கோத்திரங்களும் கட்டிய பலிபீடத்தைக் குறித்து சீலோவிலுள்ள பிற இஸ்ரவேலர் கேள்விப்பட்டனர். கானானின் எல்லையில் கீலேயாத் என்னுமிடத்தில் அப்பலிபீடம் இருந்தது என்பதை அறிந்தனர். அப்பலிபீடம் இஸ்ரவேலரின் நாட்டில் யோர்தான் நதிக்கருகே இருந்தது. 12 இம்மூன்று கோத்திரத்தினரிடமும் இஸ்ரவேல் ஜனங்கள் மிகுந்த கோபம் கொண்டனர். அவர்கள் ஒன்று சேர்ந்து, அவர்களுக்குகெதிராகப் போர் செய்ய முடிவெடுத்தனர்.

13 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினரிடமும் பேசுவதற்கு இஸ்ரவேலர் சில ஆட்களை அனுப்பினார்கள். ஆசாரியனாகிய எலெயாசாரின் மகன் பினெகாஸ் அவர்களுக்குத் தலைவனாகச் சென்றான். 14 அவர்கள் கோத்திரத்தின் தலைவர்கள் பத்து பேரை அவனோடே கூட அனுப்பினார்கள். சீலோவிலிருந்த இஸ்ரவேல் கோத்திரங்களிலிருந்து ஒவ்வொன்றிற்கும் ஒரு மனிதன் வீதம் சென்றான்.

15 எனவே பதினொருவர் கீலேயாத்திற்கு ரூபன், காத், மனாசே கோத்திரத்தினரிடம் பேசுவதற்காகச் சென்றனர். பதினொருவரும் அவர்களை நோக்கி: 16 “இஸ்ரவேலரின் தேவனுக்கெதிராக இக்காரியத்தை ஏன் செய்தீர்கள்? கர்த்தருக்கு எதிராக ஏன் திரும்பினீர்கள்? உங்களுக்காக ஏன் ஒரு பலிபீடத்தைக் கட்டினீர்கள்? இது தேவனின் போதனைக்கு எதிரானது என்பதை நீங்கள் அறிவீர்கள்! 17 பேயோரில் என்ன நேர்ந்தது என்பதை நினைத்துப்பாருங்கள். அப்பாவத்தால் நாம் இன்றும் துன்புறுகிறோம். அப்பெரும் பாவத்தால் இஸ்ரவேலரில் பலர் நோயுறுமாறு தேவன் செய்தார். அந்நோயால் இன்றும் நாம் துன்புறுகிறோம், 18 இப்போது நீங்களும் அதையே செய்கிறீர்கள்! கர்த்தருக்கு எதிராகத் திரும்புகிறீர்கள்! கர்த்தரை பின்பற்ற மறுப்பீர்களா? நீங்கள் செய்வதை நிறுத்தாவிட்டால், கர்த்தர் இஸ்ரவேல் ஜனம் முழுவதின் மேலும் கோபம்கொள்வார்.

19 “உங்கள் நிலம் ஆராதனைக்குச் சிறந்ததல்ல வென்றால், எங்கள் நிலத்திற்குள் வாருங்கள். கர்த்தருடைய கூடாரம் எங்கள் நிலத்தில் உள்ளது. எங்கள் நிலத்தில் சில பகுதிகளை எடுத்துக்கொண்டு இங்கு வாழலாம். ஆனால் கர்த்தருக்கு எதிராகத் திரும்பாதீர்கள். இன்னொரு பலிபீடம் கட்டாதீர்கள். ஆசரிப்புக் கூடாரத்தினருகே கர்த்தருடைய பலிபீடம் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ளது.

20 “சேராவின் மகனாகிய ஆகான் என்ற மனிதனை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அழிக்கப் படவேண்டிய பொருட்களைப் பற்றிய கட்டளைக்குக் கீழ்ப்படிய அவன் மறுத்தான். அந்த ஒரு மனிதன் தேவனின் கட்டளையை மீறினான், ஆனால் இஸ்ரவேலர் எல்லோரும் தண்டிக்கப்பட்டனர். ஆகான் தன் பாவத்திற்காக மரித்தான். ஆனால் மற்றும் பலரும் மரிக்க நேரிட்டது” என்று எல்லா இஸ்ரவேலரும் உங்களிடம் கேட்கிறார்கள் என்றனர்.

21 ரூபன், காத் மனாசே கோத்திரத்தினர், அந்தப் பதினொரு ஆட்களுக்கும் பதிலளித்தனர். அவர்கள், 22 “கர்த்தர் எங்கள் தேவன்! கர்த்தரே எங்கள் தேவன் என்று மீண்டும் சொல்கிறோம்! நாங்கள் இதைச் செய்த காரணத்தையும் தேவன் அறிவார். நீங்களும் அதை அறிய வேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் செய்ததை நீங்கள் நியாயந்தீர்க்கலாம். நாங்கள் தவறேனும் செய்ததாக நீங்கள் நம்பினால், நீங்கள் எங்களைக் கொல்லலாம். 23 நாங்கள் தேவனின் சட்டங்களை மீறினால், கர்த்தரே எங்களைத் தண்டிக்கட்டும். 24 தகன பலி, தானிய காணிக்கை, சமாதான பலி ஆகியவற்றைக் கொடுப்பதற்காக நாங்கள் இந்தப் பலிபீடத்தைக் கட்டியதாக நீங்கள் நினைக்கிறீர்களா? இல்லை! அதற்காக நாங்கள் இதைக் கட்டவில்லை. நாங்கள் ஏன் இந்தப் பலிபீடத்தைக் கட்டினோம்? உங்கள் தேசத்தின் ஜனங்கள் எதிர்காலத்தில் எங்களை இஸ்ரவேலின் ஒரே பகுதியாக ஏற்றுக் கொள்ளமாட்டார்களோ என்று எண்ணி பயந்தோம். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நாங்கள் ஆராதிக்கக் கூடாது என்று உங்கள் ஜனங்கள் கூறுவார்கள் என நினைத்து பயந்தோம். 25 யோர்தான் நதிக்கு மறு பக்கத்தில் தேவன் எங்களுக்கு நிலத்தைக் கொடுத்தார். யோர்தான் நதி நம்மைப் பிரிக்கிறது. உங்கள் பிள்ளைகள் வளர்ந்து தேசத்தை ஆளும்போது, நாங்களும் உங்களைச் சார்ந்தவர்களே என்று அவர்கள் எண்ணமாட்டார்கள். அவர்கள் எங்களை நோக்கி, ‘ரூபன், காத் ஜனங்கள் இஸ்ரவேல் ஜனங்கள் அல்ல!’ என்று சொல்லக்கூடும். அப்போது எங்கள் பிள்ளைகள் கர்த்தரை ஆராதிக்க உங்கள் பிள்ளைகள் தடை செய்யக்கூடும்.

26 “எனவே இப்பலிபீடத்தைக் கட்டமுடிவெடுத்தோம். தகன பலிகளுக்கோ, மற்ற பலிகளுக்கோ இதைப் பயன்படுத்த நினைக்கவில்லை. 27 நீங்கள் ஆராதிக்கும் தேவனையே நாங்களும் ஆராதிக்கிறோம் என்பதை எங்கள் ஜனங்களுக்கு உணர்த்துவதே இப்பலிபீடத்தைக் கட்டியதன் உண்மையான காரணமாகும். கர்த்தரை நாம் ஆராதிக்கிறோம் என்பதற்குச் சான்றாக உங்களுக்கும் எங்களுக்கும், எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கும், இப்பலிபீடம் அமையும். நமது பலிகள், தானிய காணிக்கைகள், சமாதான பலிகள் ஆகியவற்றை கர்த்தருக்கே கொடுப்போம். உங்கள் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆகும்போது நாங்களும் உங்களைப் போலவே இஸ்ரவேல் ஜனங்கள் என்பதை அறிந்துகொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். 28 வருங்காலத்தில், உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளைப் பார்த்து. அவர்கள் இஸ்ரவேலரல்ல என்று கூறினால், அப்போது எங்கள் பிள்ளைகள், ‘பாருங்கள்! எங்கள் பிதாக்கள் ஒரு பலிபீடத்தைக் கட்டியிருக்கிறார்கள். பரிசுத்த கூடாரத்தின் அருகேயுள்ள கர்த்தருடைய பலிபீடத்தைப் போலவே இப்பலிபீடமும் அமைந்துள்ளது. நாங்கள் இப்பலிபீடத்தைப் பலி செலுத்துவதற்குப் பயன்படுத்துவதில்லை. நாங்களும் இஸ்ரவேலரில் ஒரு பங்குடையவர்கள் என்பதற்கு இது சான்றாகும்!’ என்று சொல்லமுடியும்.

29 “உண்மையாகவே, கர்த்தருக்கு எதிராக இருப்பதற்கு எங்களுக்கு விருப்பமில்லை. அவரைப் பின்பற்றுவதை நிறுத்தும் விருப்பமும் இப்போது எங்களுக்குக் கிடையாது. பரிசுத்த கூடாரத்தின் முன்னே இருப்பது மட்டுமே உண்மையான பலிபீடம் என்பதை நாங்கள் அறிவோம். அப்பலிபீடம் நமது தேவனாகிய கர்த்தருக்கு உரியது” என்றார்கள்.

30 ரூபன், காத், மனாசே கோத்திரத்தினர் கூறியவற்றை ஆசாரியனாகிய பினெகாசும் அவனோடு வந்த தலைவர்களும் கேட்டார்கள். அந்த ஜனங்கள் உண்மையே கூறுகிறார்கள் என்று அவர்கள் திருப்தி அடைந்தார்கள். 31 எனவே ஆசாரியனாகிய பினெகாஸ், “கர்த்தர் நம்மோடிருக்கிறார் என்பதை அறிகிறோம். அவருக்கு எதிராக நீங்கள் திரும்பவில்லை என்பதையும் நாங்கள் அறிகிறோம். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களைக் தண்டிக்கமாட்டார், என்பதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்கள்.

32 பிறகு பினெகாசும், தலைவர்களும் அங்கிருந்துԔ தங்கள் இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர். ரூபன், காத் ஜனங்களைக் கீலேயாத் தேசத்தில் விட்டு கானானுக்குப் போனார்கள் இஸ்ரவேல் ஜனங்களிடம் அவர்கள் திரும்பிப் போய் நடந்தவற்றைக் கூறினார்கள். 33 இஸ்ரவேல் ஜனங்களும் திருப்தி கொண்டனர். அவர்கள் சந்தோஷமடைந்து தேவனுக்கு நன்றி தெரிவித்தனர். ரூபன், காத், மனாசே ஆகிய ஜனங்களுக்கெதிராகப் போர் செய்ய வேண்டாமென முடிவெடுத்தனர். அந்த ஜனங்கள் வாழும் இடத்தை அழிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்தனர்.

34 ரூபன், காத், ஜனங்கள் பலிபீடத்திற்கு ஒரு பெயரிட்டனர். அவர்கள் அதை, “கர்த்தரே தேவன் என்ற எங்கள் நம்பிக்கைக்கு இது சான்று” என்று அழைத்தார்கள்.

அப்போஸ்தலர் 2

பரிசுத்த ஆவியானவரின் வருகை

பெந்தெகோஸ்தே நாளில் அப்போஸ்தலர் அனைவரும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். திடீரென வானிலிருந்து ஓசை ஒன்று எழுந்தது. பெருங்காற்று அடித்தாற்போல அது ஒலித்தது. அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதையும் அவ்வொலி நிரப்பிற்று. நெருப்புக் கொழுந்து போன்றவற்றை அவர்கள் கண்டனர். அக்கொழுந்துகள் பிரிந்து சென்று அங்கிருந்த ஒவ்வொருவர் மேலும் நின்றன. அவர்கள் எல்லோரும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டார்கள். பல்வேறு மொழிகளில் அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். இப்படிப்பட்ட வல்லமையை பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தார்.

அக்காலத்தில் எருசலேமில் மிக பக்திமான்களாகிய யூதர்கள் சிலர் தங்கியிருந்தனர். உலகத்தின் எல்லா தேசத்தையும் சார்ந்தவர்களாக இந்த மனிதர்கள் இருந்தனர். ஒலியைக் கேட்டு இம்மனிதர்கள் பெருங்கூட்டமாக அங்கு வந்தனர். அப்போஸ்தலர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ஒவ்வொரு மனிதனும் தனது சொந்த மொழியில் கேட்டதால் அம்மனிதர்கள் வியப்புற்றனர்.

யூதர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர். அப்போஸ்தலர்கள் எவ்வாறு இதைச் செய்ய முடிந்தது என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. அவர்கள், “பாருங்கள்! பேசிக்கொண்டிருக்கும் இந்த மனிதர்கள் எல்லோரும் கலிலேயாவைச் சேர்ந்தவர்கள்! ஆனால் நமது மொழிகளில் அவர்கள் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்கிறோம். எப்படி இது இயலும்? நாம் பார்த்தியா, மேதியா, ஏலாம், மெசொபொதாமியா, யூதேயா, கப்பதோகியா, பொந்து, ஆசியா, 10 பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேனே நகரங்களிற்கு அருகேயுள்ள லிபியா நாட்டுப் பகுதிகள், 11 கிரேத்தா, ரோமிலிருந்து வந்த மக்கள் மற்றும் அரேபியா ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள். நம்மில் சிலர் யூதர்களாகப் பிறந்தவர்கள் மற்றவர்கள் யூதர்களாக மதம் மாறியவர்கள். நாம் வெவ்வேறு நாட்டினர். ஆனால் இவர்கள் நம் மொழிகளில் பேசுவதைக் கேட்கிறோமே! அவர்கள் தேவனைக் குறித்துக் கூறும் மேன்மையான காரியங்களை நம்மெல்லோராலும் புரிந்துகொள்ள முடிகிறதே” என்றார்கள்.

12 மக்கள் அனைவரும் வியப்புற்றவர்களாகவும் குழப்பமடைந்தவர்களாகவும் காணப்பட்டனர். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி, “என்ன நடந்துகொண்டிருக்கிறது?” என்று வினவினர். 13 பிற மக்கள் அப்போஸ்தலர்களைப் பார்த்துச் சிரித்தனர். அம்மக்கள் அப்போஸ்தலர் மிகுதியான மதுவைப் பருகியிருந்தனர் என நினைத்தனர்.

பேதுரு மக்களிடம் பேசுதல்

14 அப்பொழுது பேதுரு மற்ற அப்போஸ்தலர் பதினொருவரோடும் எழுந்து நின்றான். எல்லா மக்களும் கேட்கும்படியாக உரக்கப் பேசினான். அவன், “எனது யூத சகோதரர்களே, எருசலேமில் வசிக்கும் மக்களே, நான் கூறுவதைக் கவனியுங்கள். நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில கருத்துக்களை உங்களுக்குக் கூறுவேன். கவனமாகக் கேளுங்கள். 15 நீங்கள் நினைக்கிறது போல் இம்மனிதர்கள் மது பருகியிருக்கவில்லை. இப்போது காலை ஒன்பது மணிதான். 16 இங்கு இன்றைக்கு நிகழ்ந்துகொண்டிருப்பதைக் குறித்து யோவேல் என்னும் தீர்க்கதரிசி எழுதியிருக்கிறார். யோவேல் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்:

17 “‘தேவன் கூறுகிறார், கடைசி நாட்களில் நான் எனது ஆவியை எல்லா மக்களுக்கும் அள்ளி வழங்குவேன்.
    ஆண் மக்களும், பெண்மக்களும் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
உங்கள் இளைஞர் தரிசனம் காண்பார்கள்.
    உங்கள் முதியோர் விசேஷக் கனவுகள் காண்பர்.
18 அந்நேரத்தில் எனது ஆவியை எனது ஊழியர்களாகிய ஆண்களுக்கும் பெண்களுக்கும் கொடுப்பேன்.
    அவர்கள் தீர்க்கதரிசனம் உரைப்பர்.
19 மேலே வானில் வியப்புறும் காட்சிகளைக் காண்பிப்பேன்.
    கீழே பூமியிலும் சான்றுகள் தருவேன்.
    அங்கு இரத்தம், நெருப்பும், புகை மண்டலமும் இருக்கும்.
20 சூரியன் இருளாக மாறும்.
    நிலா இரத்தம் போல் சிவப்பாகும்.
அப்போது கர்த்தருடைய மகத்தான மகிமை மிக்க நாள் வரும்.
21 கர்த்தர் மேல் நம்பிக்கை வைக்கும் ஒவ்வொரு மனிதனும் இரட்சிக்கப்படுவான்.’ (A)

22 “எனது யூத சகோதரர்களே, இந்த வார்த்தைகளைக் கவனியுங்கள். நாசரேத்தின் இயேசு மிகச் சிறப்பான மனிதர். தேவன் இதைத் தெளிவாக உங்களுக்குக் காட்டினார். இயேசுவின் மூலமாக அவர் செய்த வல்லமை மிக்க வியப்பான காரியங்களால் தேவன் இதை நிரூபித்தார். நீங்கள் எல்லோரும் இந்தக் காரியங்களைப் பார்த்தீர்கள். எனவே இது உண்மையென்பது உங்களுக்குத் தெரியும். 23 இயேசு உங்களுக்குக் கொடுக்கப்பட்டார். நீங்கள் அவரைக் கொன்றீர்கள். தீயவர்களின் உதவியோடு இயேசுவைச் சிலுவையில் அறைந்தீர்கள். ஆனால் இவையெல்லாம் நடக்குமென்பதை தேவன் அறிந்திருந்தார். இது தேவனுடைய திட்டமாக இருந்தது. வெகுகாலத்திற்கு முன்னரே தேவன் இந்தத் திட்டத்தை வகுத்திருந்தார். 24 மரணத்தின் வேதனையை இயேசு அனுபவித்தார். ஆனால் தேவன் அவரை விடுவித்தார். தேவன் இயேசுவை மரணத்திலிருந்து எழுப்பினார். மரணம் இயேசுவைத் தொடர்ந்து தன் பிடிக்குள் வைத்திருக்க முடியவில்லை. 25 தாவீது இயேசுவைக் குறித்து இவ்வாறு கூறினான்:

“‘நான் ஆண்டவரை எப்போதும் என்முன் காண்கிறேன்.
    என்னைப் பாதுகாப்பதற்கு எனது வலப்புறத்தே உள்ளார்.
26 எனவே என் உள்ளம் மகிழுகிறது,
    என் வாய் களிப்போடு பேசுகிறது.
ஆம், எனது சரீரமும் கூட நம்பிக்கையால் வாழும்.
27     ஏனெனில் மரணத்தின் இடத்தில் [a] எனது ஆத்துமாவை நீர் விட்டு விடுவதில்லை.
    உமது பரிசுத்தமானவரின் சரீரத்தைக் கல்லறைக்குள் அழுகிவிட நீர் அனுமதிப்பதில்லை.
28 வாழும் வகையை எனக்குப் போதித்தீர்.
    என்னருகே நீர் வந்து அளவற்ற ஆனந்தம் தருவீர்.’ (B)

29 “எனது சகோதரர்களே, நமது முன்னோராகிய தாவீதைக் குறித்து உண்மையாகவே உங்களுக்கு என்னால் சொல்லமுடியும். அவன் இறந்து புதைக்கப்பட்டான். அவன் புதைக்கப்பட்ட இடம் இங்கேயே நம்மிடையே இன்றும் உள்ளது. 30 தாவீது ஒரு தீர்க்கதரிசி. தேவன் கூறிய சில செய்திகளை அவன் அறிந்திருந்தான். தாவீதின் குடும்பத்திலுள்ள ஒருவரை தாவீதைப்போன்று மன்னனாக்குவேன் என்று தேவன் தாவீதுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். 31 அது நடக்கும் முன்பே தாவீது அதனை அறிந்திருந்தான். எனவேதான் அவரைக் குறித்து தாவீது இவ்வாறு கூறினான்.

“‘அவர் மரணத்தின் இடத்தில் விடப்படவில்லை.
அவர் சரீரம் கல்லறையில் அழுகவில்லை.’ (C)

தாவீது மரணத்தின்று எழும்பும் கிறிஸ்துவைக் குறித்துப் பேசினான். 32 எனவே தாவீதை அல்ல, இயேசுவையே தேவன் மரணத்தினின்று எழுப்பினார். நாங்கள் எல்லோரும் இதற்கு சாட்சிகள். நாங்கள் அவரைக் கண்டோம். 33 இயேசு பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார். இப்போது இயேசு தேவனோடு, தேவனுடைய வலது பக்கத்தில் இருக்கிறார். பிதா பரிசுத்தாவியை இயேசுவுக்குக் கொடுத்துள்ளார். பிதா கொடுப்பதாக வாக்குறுதி அளித்தது பரிசுத்த ஆவியேயாகும். எனவே இயேசு அந்த ஆவியை இப்பொழுதுகொடுத்துக்கொண்டிருக்கிறார். இதையே நீங்கள் பார்க்கவும், கேட்கவும் செய்கிறீர்கள். 34-35 தாவீது பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவரல்ல. பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டவர் இயேசுவே. தாவீது கூறினான்,

“‘தேவன் என் கர்த்தரிடம் சொன்னார்,
உம் எதிரிகள் அனைவரையும் உம்
    அதிகாரத்தின் கீழ் கொண்டு வரும்வரை என் வலதுபுறத்தில் உட்கார்ந்துகொள்ளும்.’ (D)

36 “எனவே எல்லா யூத மனிதர்களும் இதை உண்மையாகத் தெரிந்திருக்க வேண்டும். ஆண்டவராகவும் கிறிஸ்துவாகவும் இருக்கும்படியாக இயேசுவை தேவன் உண்டாக்கினார். அவரே நீங்கள் சிலுவையில் அறைந்த மனிதர்” என்றான்.

37 மக்கள் இதைக் கேட்டபோது அவர்கள் தங்கள் இதயத்தில் மிகவும் வருத்தம் அடைந்தார்கள். அவர்கள் பேதுருவையும் பிற அப்போஸ்தலரையும் நோக்கி, “நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்கள்.

38 பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இருதயத்தையும் வாழ்க்கையையும் மாற்றி, இயேசு கிறிஸ்துவின் பெயரில் ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள். அப்போது தேவன் உங்கள் பாவங்களை மன்னிப்பார். நீங்களும் பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். 39 இந்த வாக்குறுதி உங்களுக்குரியது. அது உங்கள் பிள்ளைகளுக்கும் தொலைவில் வாழ்கின்ற எல்லா மக்களுக்கும் கூட உரியது. ஆண்டவராகிய நமது தேவன் தன்னிடம் அழைக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் அது உரியது” என்று கூறினான்.

40 வேறு பல வார்த்தைகளையும் கூறி பேதுரு அவர்களை எச்சரித்தான். அவன் அவர்களை, “இன்று வாழ்கின்ற மக்களின் தீமைகளிலிருந்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்” என்று வேண்டினான். 41 பேதுரு கூறியவற்றை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டனர். அந்த நாளில் விசுவாசிகளின் கூட்டத்தில் சுமார் 3,000 மக்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.

விசுவாசிகளின் ஒருமனம்

42 விசுவாசிகள் தொடர்ந்து ஒன்றாக சந்தித்தனர். அப்போஸ்தலரின் போதனையைக் கற்பதற்குத் தங்கள் நேரத்தைச் செலவிட்டனர். விசுவாசிகள் ஒருவரோடொருவர் பகிர்ந்துகொண்டனர். அவர்கள் ஒருமித்து உண்டு, ஒருமித்து பிரார்த்தனை செய்தார்கள். 43 பல வல்லமை மிக்க, வியப்பான காரியங்களை அப்போஸ்தலர்கள் செய்துகொண்டிருந்தனர். ஒவ்வொருவரும் தேவனை மிகவும் மரியாதையாக உணர்ந்தனர். 44 எல்லா விசுவாசிகளும் ஒருமித்து வசித்தனர். அவர்கள் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டனர். 45 விசுவாசிகள் அவர்களது நிலங்களையும் அவர்களுக்குச் சொந்தமான பொருட்களையும் விற்றனர். பின்னர் பணத்தைப் பங்கிட்டு, தேவைப்பட்ட ஒவ்வொருவருக்கும் அவர்களது தேவைக்கேற்பக் கொடுத்தனர். 46 ஒவ்வொரு நாளும் விசுவாசிகள் தேவாலயத்தில் சந்தித்தனர். அவர்களது குறிக்கோள் ஒன்றாகவே இருந்தது. அவர்களுடைய வீடுகளில் ஒருமித்து உண்டனர். அவர்கள் உணவைப் பங்கிட்டுக்கொள்வதிலும் களிப்புமிக்க உள்ளங்களோடு உண்பதிலும் மகிழ்ச்சியடைந்தனர். 47 விசுவாசிகள் தேவனை வாழ்த்தினர். எல்லா மக்களும் அவர்களை விரும்பினர். ஒவ்வொரு நாளும் அதிகமதிகமான மக்கள் இரட்சிக்கப்பட்டனர். விசுவாசிகளின் கூட்டத்தில் கர்த்தர் அம்மக்களைச் சேர்த்துக்கொண்டிருந்தார்.

எரேமியா 11

உடன்படிக்கை உடைக்கப்படுகிறது

11 எரேமியாவிற்கு வந்த கர்த்தருடைய வார்த்தை இதுதான். “எரேமியா, இந்த உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேள். யூதாவின் ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. எருசலேமில் வாழ்ந்துக்கொண்டிருக்கிற ஜனங்களிடம் இவற்றைப்பற்றி கூறு. இதைத்தான், இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்: ‘இந்த உடன்படிக்கைக்கு அடிபணியாத எந்தவொரு நபருக்கும் கெட்டவை ஏற்படும். நான் உங்கள் முற்பிதாக்களோடு செய்துக்கொண்ட உடன்படிக்கையைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறேன். நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு வந்தபோது அவர்களோடு இந்த உடன்படிக்கையைச் செய்துக்கொண்டேன். எகிப்து பல துன்பங்களுக்குரிய இடமாக இருந்தது. அது இரும்பை இளகச் செய்யும் அளவிற்கு சூடான வாணலியைப்போன்று இருந்தது.’ அந்த ஜனங்களிடம், ‘எனக்குக் கீழ்ப்படியுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிடுகின்றவற்றைச் செய்யுங்கள். நீங்கள் இவற்றைச் செய்தால் நீங்கள் என்னுடைய ஜனங்களாகவும், நான் உங்களது தேவனாகவும் இருப்பேன்’ என்று சொன்னேன்.

“நான் உங்களது முற்பிதாக்களுக்குச் செய்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காகவே இதனைச் செய்தேன். மிகவும் செழிப்பான பாலும் தேனும் ஓடுகிற பூமியைத் தருவதாக நான் அவர்களுக்கு உறுதி செய்தேன். நீங்கள் இன்று அத்தகைய நாட்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறீர்கள்.”

நான் (எரேமியா) “ஆமென் கர்த்தாவே” என்றேன்.

கர்த்தர் என்னிடம், “எரேமியா எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் நகரங்களிலும் இச்செய்தியைப் பிரச்சாரம் செய் என்று சொன்னார். அவர், ‘இந்த உடன்படிக்கையின் வார்த்தையை கவனியுங்கள். அதன் சட்டங்களுக்கு அடிபணியுங்கள். உங்களது முற்பிதாக்களுக்கு நான் அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தபோது, ஒரு எச்சரிக்கைக் கொடுத்தேன். இந்நாள்வரை நான் அவர்களை மீண்டும், மீண்டும், எச்சரிக்கை செய்தேன், எனக்கு கீழ்ப்படியுமாறு நான் அவர்களுக்குச் சொன்னேன். ஆனால் உங்களது முற்பிதாக்கள் எனக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் பிடிவாதமாக இருந்து அவர்களது தீயமனம் விரும்புகிறபடி செய்தனர். அவர்கள் எனக்கு அடிபணியாவிட்டால் கெட்டவை ஏற்படும், என்று உடன்படிக்கைக் கூறுகிறது, எனவே, நான் அவர்களுக்கு அனைத்து கெட்டவற்றையும் ஏற்படும்படிச் செய்கிறேன். உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியும்படி நான் அவர்களுக்கு கட்டளையிட்டேன். ஆனால் அவர்கள் செய்யவில்லை.’”

கர்த்தர் என்னிடம், “எரேமியா! யூதாவின் ஜனங்களும் எருசலேமில் வாழ்கிற ஜனங்களும் இரகசியமாக திட்டங்கள் போடுகிறார்கள் என்று தெரியும். 10 அந்த ஜனங்கள் தம் முற்பிதாக்கள் செய்த அதே பாவங்களைச் செய்கிறார்கள். அவர்களின் முற்பிதாக்கள் எனது செய்தியை கேட்க மறுத்தனர். அவர்கள் அந்நிய தெய்வங்களை தொழுதுகொள்ளவும், பின்பற்றவும் செய்தனர். நான் அவர்களது முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை இஸ்ரவேலின் குடும்பத்தாரும், யூதாவின் குடும்பத்தாரும், உடைத்துவிட்டனர்” என்று கூறினார்.

11 எனவே கர்த்தர், “யூதாவின் ஜனங்களுக்கு விரைவில் பயங்கரமான சில காரியங்கள் ஏற்படும்படி செய்வேன். அவர்களால் அவற்றிலிருந்து தப்பிக்க முடியாது. அவர்கள் வருத்தப்படுவார்கள். அவர்கள் என்னிடம் உதவிக்காக அழுவார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன். 12 யூதாவில் உள்ள ஜனங்களும், எருசலேமில் உள்ள ஜனங்களும், தங்கள் விக்கிரகங்களிடம் போய் உதவிக்காக ஜெபிப்பார்கள். அந்த விக்கிரகங்களுக்கு முன் நறுமணப் பொருட்களை எரிக்கின்றனர். அந்தப் பயங்கரமான காலம் வரும்போது அந்த விக்கிரகங்களால் யூதாவின் ஜனங்களுக்கு உதவி செய்யமுடியாது.

13 “யூதாவின் ஜனங்களே! உங்களிடம் ஏராளமான விக்கிரகங்கள் உள்ளன, யூதாவில் உள்ள நகரங்களைப் போன்றே, உங்களிடம் பல விக்கிரகங்கள் உள்ளன. பொய்யான பாகால் தெய்வத்திற்கு நீங்கள் பல பலிபீடங்களை தொழுதுகொள்வதற்காகக் கட்டியிருக்கிறீர்கள். அவை எருசலேமிலுள்ள, தெருக்களின் எண்ணிக்கைபோன்று, அதிக எண்ணிக்கையாக உள்ளன என்று சொல்லுகிறார்.

14 “எரேமியா, யூதாவின் இந்த ஜனங்களுக்காக நீ ஜெபம் செய்யவேண்டாம். அவர்களுக்காக கெஞ்சவேண்டாம். அவர்களுக்காக ஜெபம் செய்யவேண்டாம். நான் கேட்கமாட்டேன். அந்த ஜனங்கள் துன்பப்படத் தொடங்குவார்கள். பிறகு அவர்கள் என்னை உதவிக்காக அழைப்பார்கள். ஆனால் நான் அவர்களை கவனிக்கமாட்டேன்.

15 “ஏன் எனது பிரியமானவள் (யூதா) எனது வீட்டில் (ஆலயத்தில்) இருக்கிறாள்?
    அங்கே இருக்க அவளுக்கு உரிமை இல்லை.
    அவள் பல தீய செயல்களைச் செய்திருக்கிறாள்.
யூதாவே, சிறப்பான வாக்குறுதிகளும் மிருகபலிகளும் உன்னை அழிவிலிருந்து காப்பாற்றும் என்று நினைக்கிறாயா?
    எனக்குப் பலிகள் கொடுப்பதன் மூலம் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறாயா?”

16 கர்த்தர் உனக்கு ஒரு பெயரைக் கொடுத்தார்.
    உன்னை அழைத்து, “பசுமையான ஒலிவமரம்.
    பார்க்க அழகானது” என்றார்.
ஆனால் ஒரு பெரும் புயலுடன், கர்த்தர் அந்த மரத்தை நெருப்பில் தள்ளிவிடுவார்.
    அதன் கிளைகள் எரிக்கப்படும்.

17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் உன்னை நட்டுவைத்தார். அழிவு உனக்கு வருமென்று அவர் சொன்னார். ஏனென்றால், இஸ்ரவேலின் குடும்பமும், யூதாவின் குடும்பமும், கெட்ட செயல்களைச் செய்திருக்கின்றன. அவர்கள் பாகலுக்குப் பலிகளைக் கொடுத்தனர் அது அவருக்குக் கோபத்தை உண்டுப்பண்ணியது!

எரேமியாவிற்கு எதிராக தீய திட்டங்கள்

18 ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எனக்கு எதிராக திட்டங்கள் போடுவதை, கர்த்தர் எனக்குக் காட்டினார். அவர்கள் செய்துகொண்டிருந்த செயல்களை எனக்கு கர்த்தர் காட்டினார். எனவே நான், அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்தேன். 19 அந்த ஜனங்கள் எனக்கு எதிராக இருந்தார்கள் என்று கர்த்தர் எனக்குக் காட்டுமுன் நான் அடிக்கப்படுவதற்காகக் கொண்டுப்போகப்படும் சாதுவான ஆட்டுக் குட்டியைப்போன்று இருந்தேன். அவர்கள் எனக்கு எதிரானவர்கள் என்பதை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் என்னைப்பற்றி இவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்கள், “இந்த மரத்தையும், அதன் கனிகளையும் அழித்து, அவனைக் கொல்லலாம் வாருங்கள். பிறகு ஜனங்கள் அவனை மறப்பார்கள்.” 20 ஆனால் கர்த்தாவே! நீர் நியாயமான நீதிபதி, மனிதர்களின் மனதையும், இதயத்தையும், எப்படி சோதிக்க வேண்டும் என்பதை அறிவீர். என்னுடைய வாதங்களை நான் உமக்குச் சொல்வேன். நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையைக் கொடுக்கும்படி உம்மை அனுமதிப்பேன்.

21 ஆனதோத்திலுள்ள மனிதர்கள் எரேமியாவைக் கொல்லத் திட்டம் போட்டனர். அந்த மனிதர்கள் எரேமியாவிடம் சொன்னார்கள், “கர்த்தருடைய நாமத்தால் தீர்க்கதரிசனம் சொல்லாதே. அல்லது நாங்கள் உன்னைக் கொல்வோம்” ஆனதோத்திலிருக்கும், மனிதர்களைப்பற்றி கர்த்தர் ஒரு முடிவு செய்தார். 22 சர்வ வல்லமையுள்ள கர்த்தர், “ஆனதோத்திலுள்ள மனிதர்களை நான் விரைவில் தண்டிப்பேன். அவர்களின் இளைஞர்கள் போரில் மரிப்பார்கள். அவர்களது மகன்களும் மகள்களும் பசியில் மரிப்பார்கள். 23 ஆனதோத் நகரத்தில் உள்ள எவரும் விடப்படுவதில்லை. எவரும் உயிர் வாழமாட்டார்கள். நான் அவர்களைத் தண்டிப்பேன். அவர்களுக்குத் தீயவை நேரும்படி நான் காரணமாவேன்” என்றார்.

மத்தேயு 25

பத்துப் பெண்கள் பற்றிய உவமை

25 ,“மணமகனுக்காக காத்திருந்த பத்துப் பெண்களுக்கு ஒப்பாக பரலோக இராஜ்யம் இருக்கும். அப்பெண்கள் தங்களுடன் விளக்குகளைக் கொண்டுவந்தனர். அவர்களில் ஐந்து பெண்கள் முட்டாள்கள்; ஐந்து பெண்கள் புத்திசாலிகள். ஐந்து முட்டாள் பெண்களும் தம்முடன் விளக்குகளைக் கொண்டு வந்திருந்தனர். ஆனால் அவற்றுக்குத் தேவையான அதிக எண்ணெயைக் கொண்டு வரவில்லை. புத்திசாலிப் பெண்களோ விளக்குகளையும் தேவையான அதிக எண்ணெயை ஜாடிகளிலும் கொண்டு வந்திருந்தனர். மணமகன் வர நேரமானதால் அப்பெண்கள் களைப்பு மிகுதியால் தூங்க ஆரம்பித்தனர்.

,“நள்ளிரவில் யாரோ, ‘மணமகன் வந்தாயிற்று! வந்து மணமகனை சந்தியுங்கள்!’ என்று அறிவித்தார்கள்.

,“பின் பெண்கள் அனைவரும் விழித்தெழுந்தார்கள். தம் விளக்குகளைத் தயார் செய்தார்கள். முட்டாள் பெண்கள் புத்திசாலிப் பெண்களிடம் ‘எங்களிடம் விளக்குகளிலிருந்த எண்ணெய் தீர்ந்துவிட்டது. உங்களிடமுள்ள எண்ணெயிலிருந்து சிறிது கொடுங்கள்’ என்று கேட்டார்கள்.

,“அதற்கு புத்திசாலிப் பெண்கள், ‘இல்லை. எங்களிடமுள்ள எண்ணெய் எங்களுக்கே போதாது, எண்ணெய் விற்பவர்களிடம் சென்று உங்களுக்கு எண்ணெய் வாங்கி வாருங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

10 ,“ஆகவே, முட்டாள் பெண்கள் எண்ணெய் வாங்கச் சென்றார்கள். அவர்கள் வெளியில் சென்றிருந்தபொழுது மணமகன் வந்தான். தயாராக இருந்த பெண்கள் மணமகனுடன் விருந்துண்ண சென்றார்கள். உடனே, கதவு மூடப்பட்டு பூட்டப்பட்டது.

11 ,“பின்னர், வெளியில் சென்ற பெண்கள் திரும்பினார்கள். அவர்கள், ‘ஐயா! ஐயா! கதவைத் திறந்து எங்களை உள்ளே விடுங்கள்’ என்றார்கள்.

12 ,“ஆனால் மணமகனோ, ‘உண்மையாகவே நீங்கள் யாரென்று எனக்குத் தெரியாது’ என்று சொல்லிவிட்டான்.

13 ,“எனவே நீங்கள் எப்பொழுதும் தயாராக இருங்கள். மனித குமாரன் வரப்போகும் நாளோ நேரமோ உங்களுக்குத் தெரியாது.

மூன்று வேலைக்காரர்களைப் பற்றிய உவமை(A)

14 ,“பரலோக இராஜ்யம், தன் வீட்டை விட்டு வேறொரு இடத்திற்குப் பயணமான ஒருவனுக்கு ஒப்பாகும். புறப்பட்டுச் செல்வதற்கு முன் அவன் தனது மூன்று வேலைக்காரர்களுடன் பேசினான். தான் புறப்பட்டுச் சென்றபின் தனது உடமைகளைப் பார்த்துக் கொள்ளுமாறு அவர்களுக்குச் சொன்னான். 15 ஒவ்வொரு வேலைக்காரனும் எதைப் பார்த்துக் கொள்ள முடியுமென அவன் தீர்மானித்தான். அதற்கேற்ப ஒருவனிடம் ஐந்து பை நிறையப் பணமும் [a] மற்றொருவனிடம் இரண்டு பை நிறையப் பணமும் மூன்றாவது வேலைக்காரனிடம் ஒரு பை நிறையப் பணமும் கொடுத்தான். பின் அவன் புறப்பட்டுப் போனான். 16 ஐந்து பை பணம் பெற்றவன் விரைந்து அப்பணத்தை முதலீடு செய்தான். அது மேலும் ஐந்து பை பணத்தை ஈட்டித் தந்தது. 17 அதே போல இரண்டு பை பணம் பெற்றவனுக்கும் நடந்தது. அவன் தான் பெற்ற இரண்டு பை பணம் முதலிட்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டினான். 18 ஆனால், ஒரு பை பணம் பெற்றவனோ நிலத்தில் ஒரு குழி தோண்டி தன் எஜமானின் பணத்தைப் புதைத்து வைத்தான்.

19 ,“நீண்ட காலம் கழித்து எஜமானன் வீட்டிற்குத் திரும்பி வந்தான். தன் பணத்தை என்ன செய்தார்கள் எனத் தன் மூன்று வேலைக்காரர்களிடமும் கேட்டான். 20 ஐந்து பை பணம் பெற்ற வேலைக்காரன் மேலும் ஐந்து பை பணத்தைக் கொண்டு வந்து தன் எஜமானிடம் சொன்னான், ‘எஜமானே! நீர் என்னை நம்பி ஐந்து பை பணம் தந்தீர்கள். ஆகவே, நான் அதை முதலிட்டு மேலும் ஐந்து பை பணம் ஈட்டியுள்ளேன்!’ என்றான்.

21 ,“அதற்கு எஜமானன், ‘நீ செய்தது சரி. நம்பிக்கையுள்ள நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிது பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய், மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்குகொள்!’ என்றான்.

22 ,“பின்னர் இரண்டு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீங்கள் என்னிடம் இரண்டு பை பணம் தந்தீர்கள். நான் அதைக்கொண்டு மேலும் இரண்டு பை பணம் ஈட்டியுள்ளேன்’ என்றான்.

23 ,“அவனுக்கு எஜமான், ‘நீ செய்தது சரி. நீ நம்பிக்கைக்கு உரிய நல்ல வேலைக்காரன். நான் கொடுத்த சிறிய பணத்தைக் கொண்டு நன்கு செயல்பட்டாய். ஆகவே, மேலும் பெரிய பொறுப்புக்களை உன்னிடம் ஒப்படைப்பேன். நீயும் என் மகிழ்ச்சியில் பங்கு கொள்!’ என்றான்.

24 ,“பின் ஒரு பை பணம் பெற்ற வேலைக்காரன் தன் எஜமானிடம் வந்து, ‘எஜமானே, நீர் மிகவும் கடினமானவர் என்பது எனக்குத் தெரியும். விதைக்காமலேயே அறுவடை செய்கிறவர் நீர். செடி நடவாமலேயே தானியங்களை சேர்க்கிறவர் நீர். 25 எனவே, நான் பயம்கொண்டேன். நீர் தந்த பணத்தை நிலத்தில் குழி தோண்டிப் புதைத்தேன். இதோ நீங்கள் தந்த ஒரு பை பணம்’ என்றான்.

26 ,“எஜமான் அவனை நோக்கி, ‘நீ ஒரு மோசமான சோம்பேறி வேலைக்காரன். நான் விதைக்காமலேயே அறுவடை செய்வதாகவும்; நடாமலேயே தானியங்களை சேகரிப்பதாகவும் கூறுகிறாய். 27 எனவே நீ என் பணத்தை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், நான் திரும்பி வரும்பொழுது, என் பணமும் எனக்குக் கிடைத்திருக்கும். அதற்கான வட்டியும் கிடைத்திருக்கும்’ என்றான்.

28 ,“ஆகவே, எஜமானன், தன் மற்ற வேலைக்காரர்களைப் பார்த்து, ‘அந்த வேலைக்காரனிடமிருந்து அந்த ஒரு பை பணத்தை வாங்கி அதை பத்து பை பணம் வைத்திருப்பவனிடம் கொடுங்கள். 29 தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்துகிற ஒவ்வொருவனும் மேலும் அதிகம் பெறுவான். அவனுக்குத் தேவையானதை விட மிக அதிகமாகக் கிடைக்கும். ஆனால் தான் பெற்றிருப்பதைப் பயன்படுத்தாதவனிடமிருந்து அனைத்தும் பறிக்கப்படும்.’ என்றான். 30 பிறகு அந்த எஜமானன், ‘பயனற்ற அந்த வேலைக்காரனைத் தூக்கி வெளியே இருளில் எறியுங்கள். அவ்விடத்தில் மக்கள் கூக்குரலிட்டு பற்களைக் கடித்துக் கொண்டு வேதனையால் அழுது கொண்டிருப்பார்கள்’ என்றான்.

மனிதகுமாரனின் நியாயத்தீர்ப்பு

31 ,“மனித குமாரன் மீண்டும் வருவார். அவர் மாட்சிமையுடன் தேவதூதர்கள் சூழ வருவார். அரசராகிய அவர் தன் மாட்சிமை மிக்க அரியணையில் வீற்றிருப்பார். 32 உலகின் எல்லா மக்களும் மனித குமாரன் முன்னிலையில் ஒன்று திரள்வார்கள். மனித குமாரன் அவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிப்பார். ஓர் ஆட்டிடையன் தன் ஆடுகளை வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் என பிரிப்பதைப் போல அவர் பிரிப்பார். 33 மனித குமாரன் செம்மறியாடுகளை (நல்லவர்களை) வலது பக்கமும், வெள்ளாடுகளை (தீயவர்களை) இடது பக்கமும் நிறுத்துவார்.

34 ,“பின் அரசனானவர் தன் வலது பக்கமுள்ள நல்லவர்களிடம், ‘வாருங்கள். என் பிதா உங்களுக்குப் பெரும் ஆசீர்வாதத்தை வழங்கியுள்ளார். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட தேவனுடைய இராஜ்யத்தை அடையுங்கள். உலகம் தோன்றியது முதலே அந்த இராஜ்யம் உங்களுக்காகத் தயாராக உள்ளது. 35 நீங்கள் அந்த இராஜ்யத்தை அடையலாம். ஏனென்றால் நான் பசித்திருந்தபொழுது நீங்கள் எனக்கு உணவளித்தீர்கள். எனக்குத் தாகமேற்பட்டபோது தண்ணீர் கொடுத்தீர்கள். நான் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்த பொழுது, என்னை உங்கள் வீட்டிற்கு அழைத்தீர்கள். 36 நான் ஆடையின்றி இருந்தபோது, நீங்கள் உடுக்க ஆடை அளித்தீர்கள். நான் நோயுற்றபோது, என்னைக் கவனித்துக் கொண்டீர்கள். நான் சிறைப்பட்டபோது நீங்கள் என்னைக் காண வந்தீர்கள்’ என்று சொன்னார்.

37 ,“அதற்கு நல்லவர்கள் பதில் சொல்வார்கள், ‘ஆண்டவரே, எப்பொழுது நீர் பசித்திருந்ததைக் கண்டு நாங்கள் உமக்கு உணவளித்தோம்? எப்பொழுது உங்களுக்குத் தாகமேற்பட்டு நாங்கள் தண்ணீர் தந்தோம்? 38 எப்பொழுது நீர் வீட்டைவிட்டு வெளியேறி தனித்திருந்ததைக் கண்டு நாங்கள் உம்மை எங்கள் வீட்டிற்கழைத்தோம்? எப்போது நீர் ஆடையின்றி இருக்கக் கண்டு நாங்கள் உம்மை உடுத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தோம்? 39 எப்பொழுது நாங்கள் உம்மை நோயுற்றோ சிறையிலோ இருக்க கண்டோம்?’ என்பார்கள்.

40 ,“பின்னர் மன்னவர், ‘உங்களுக்கு உண்மையைக் கூறுகிறேன், இங்குள்ள என் மக்களில் மிகவும் சாதாரணமான யாருக்கேனும் நீங்கள் ஒன்றைச் செய்திருந்தால் நீங்கள் அதை எனக்கே செய்ததாகும்’ என்று கூறினார்.

41 ,“பின் அரசர் தன் இடது பக்கமுள்ள தீயவர்களைப் பார்த்து, ‘என்னைவிட்டு விலகுங்கள். நீங்கள் தண்டிக்கப்பட வேண்டுமென தேவன் ஏற்கனவே தீர்மானித்து விட்டார். என்றென்றும் எரிகிற அக்கினியில் விழுங்கள். பிசாசுக்காகவும் அவனது தூதர்களுக்காகவும் ஆயத்தமாக்கப்பட்டது, அந்த அக்கினி. 42 நீங்கள் அதிலே சேரவேண்டும். ஏனென்றால், நான் பசித்திருந்தபொழுது நீங்கள் புசிக்க எதுவும் தரவில்லை. நான் தாகமாயிருந்தபொழுது, நீங்கள் குடிக்க எதுவும் கொடுக்கவில்லை. 43 நான் வீட்டிலிருந்து தூரமாய் தனித்திருந்தபொழுது, நீங்கள் என்னை உங்கள் வீட்டிற்கழைக்கவில்லை. நான் ஆடையின்றி இருந்தபொழுது, நீங்கள் உடுக்கத் துணியேதும் தரவில்லை. நான் நோயுற்றபொழுதும் சிறையிலிருந்தபொழுதும் நீங்கள் என்னைக் கவனித்து கொள்ளவில்லை’ என்று கூறுவார்.

44 ,“அதற்கு அத்தீயவர்கள், ‘ஆண்டவரே எப்பொழுது நீர் பசித்தும் தாகத்துடனுமிருந்ததை நாங்கள் கண்டோம்? எப்பொழுது நீர் வீட்டிலிருந்து தூரமாய்த் தனித்திருந்ததைக் கண்டோம்? அல்லது எப்பொழுது உம்மை ஆடையின்றியோ நோயுற்றோ அல்லது சிறைப்பட்டோ கண்டோம்? எப்பொழுது இவைகளையெல்லாம் கண்டு உமக்கு உதவாமல் போனோம்?’ என்பார்கள்.

45 ,“அப்போது அரசர், ‘நான் உண்மையைச் சொல்லுகிறேன், இங்குள்ளவர்களில் சாதாரணமான யாருக்கேனும் எதையேனும் செய்ய நீங்கள் மறுத்தால், நீங்கள் எனக்கு மறுத்ததற்கு சமமாகும்!’ என்பார்.

46 ,“பிறகு அத்தீயவர்கள் விலகிச் செல்வார்கள். அவர்களுக்கு நித்தியமான தண்டனை கிடைக்கும். ஆனால் நல்லவர்களுக்கு நித்திய ஜீவன் கிடைக்கும்.”

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center