M’Cheyne Bible Reading Plan
தேசத்தின் பிறபகுதிகளைப் பங்கிடுதல்
18 சீலோவில் இஸ்ரவேலர் எல்லோரும் ஒன்றாகக் கூடினார்கள், அங்கு ஆசரிப்புக் கூடாரத்தை நிறுவினர். இஸ்ரவேலர் தேசத்தில் ஆட்சி செலுத்தினர். அத்தேசத்தின் பகைவர்களை எல்லாம் அவர்கள் வென்றனர். 2 அப்போது இஸ்ரவேலின் ஏழு கோத்திரங்கள் இன்னும் தேவன் வாக்களித்த தங்களுக்குரிய நிலத்தின் பாகத்தைப் பெறாமலிருந்தனர்.
3 எனவே யோசுவா இஸ்ரவேலரை நோக்கி, “நீங்கள் உங்கள் நிலங்களைப் பெற ஏன் இவ்வளவு காலம் காத்திருந்தீர்கள்? உங்கள் பிதாக்களின், தேவனாகிய கர்த்தர், இத்தேசத்தை உங்களுக்குத் தந்தார். 4 எனவே உங்களில் ஒவ்வொரு கோத்திரத்தினரும் மும்மூன்று ஆட்களைத் தெரிந்துகொள்ளுங்கள் தேசத்தைப் பற்றித் தெரிந்து வருவதற்கு நான் அவர்களை அனுப்புவேன் அவர்கள் திரும்பி வந்து என்னிடம் அந்த தேசத்தை பற்றி விவரிப்பார்கள். 5 அவர்கள் தேசத்தை ஏழு பாகங்களாகப் பிரிப்பார்கள். யூதாவின் ஜனங்களுக்குத் தெற்கிலுள்ள தேசம் உரியதாகும். யோசேப்பின் ஜனங்கள் வடக்கிலுள்ள தேசத்தை வைத்துக்கொள்வார்கள். 6 ஆனால் நீங்கள் தேசப்படத்தை வரைந்து அதை ஏழாகப் பிரிக்க வேண்டும். அப்படத்தை என்னிடம் கொண்டு வாருங்கள். எந்தெந்த கோத்திரத்தாருக்கு, எந்தெந்த பகுதி என்பதை நமது தேவனாகிய கர்த்தர் தீர்மானிப்பதற்கு [a] விட்டுவிடுவோம். 7 லேவியர் தேசத்தில் எந்தப் பாகத்தையும் பெறவில்லை. கர்த்தருக்கு ஆசாரியர்களாக சேவை செய்வதே அவர்களுக்குரிய பங்காகும். வாக்களிக்கப்பட்ட தேசத்தில் தங்களுக்குரிய பாகத்தை காத், ரூபன் ஆகிய கோத்திரங்களும், மனாசே கோத்திரத்தின் பாதிக் குடும்பங்களும் பெற்றுக்கொண்டனர். யோர்தான் நதியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் வசித்தனர். கர்த்தருடைய, ஊழியனாகிய மோசே, அவர்களுக்கு அத்தேசத்தைக் கொடுத்திருந்தான்” என்றான்.
8 தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்கள் தேசத்தைப் பார்க்கவும், பின்னர் அதைப் படமாக வரைந்து யோசுவாவிடம் கொண்டுவரவும் திட்டமிட்டனர். யோசுவா அவர்களை நோக்கி, “போய் தேசத்தை ஆராய்ந்து, அதன் படங்களை வரையுங்கள். பிறகு சீலோவில் என்னிடம் வாருங்கள். பின் சீட்டுப் போட்டு, கர்த்தர் உங்களுக்கான பாகத்தைத் தேர்ந் தெடுக்கும்படியாகச் செய்வேன்” என்றான்.
9 எனவே அந்த ஆட்கள் தேசத்திற்குள் சென்றார்கள். அவர்கள் தேசத்தைச் சுற்றி ஆராய்ந்து, படங்கள் தயாரித்தனர். அவர்கள் அந்தத் தேசத்தை ஏழு பகுதிகளாகப் பிரித்தனர். அவர்கள் படங்களை வரைந்த பின்னர் சீலோவிற்கு யோசுவாவிடம் திரும்பிச் சென்றனர். 10 சீலோவில் கர்த்தருடைய முன்னிலையில் யோசுவா சீட்டுகளைக் குலுக்கிப் போட்டுத் தேர்ந்தெடுத்தான். இவ்வாறு, யோசுவா தேசத்தைப் பிரித்து ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் அவரவருக்குரிய பாகத்தைக் கொடுத்தான்.
பென்யமீனுக்குரிய நிலம்
11 யூதா, யோசேப்பு கோத்திரங்களுக்கு மத்தியிலுள்ள நிலம், பென்யமீன் கோத்திரத்தினருக்குக் கிடைத்தது. பென்யமீன் கோத்திரத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்களுக்குரிய பங்கைப் பெற்றனர். பென்யமீனுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் இதுவே: 12 யோர்தான் நதியருகே அதன் வடக்கெல்லை ஆரம்பித்தது. எரிகோவின் வடக்குக் கரையோரமாக எல்லை தொடர்ந்தது. பெத்தாவேனின் கிழக்குப் பகுதிவரைக்கும் அவ்வெல்லை சென்றது. 13 லூசின் (பெத்தேலின்) தெற்கே எல்லை சென்றது. அதரோத் அதார் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. கீழ்பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையின் மேல் அதரோத் அதார் இருந்தது. 14 பெத்தொரோனின் தெற்கிலுள்ள மலையிலிருந்து எல்லை தெற்கே திரும்பி, மலைக்கு மேற்குப்புறமாக சென்றது. கீரியாத் பாகாலுக்கு (“கீரியாத் யெயாரீம்” என்றும் அழைக்கப்பட்டது.) எல்லை சென்றது. இவ்வூர் யூதா ஜனங்களுக்குச் சொந்தமானது. இது மேற்கெல்லை ஆகும்.
15 தெற்கெல்லை கீரியாத்யெயாரீமுக்கருகே தொடங்கி நெப்தோவா நதிக்குச் சென்றது. 16 ரெபாயீம் பள்ளத்தாக்கின் வடக்கிலிருந்த இன்னோம் பள்ளத்தாக்கிற்கு, அருகேயுள்ள மலைக்குக் கீழே எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை நீண்டது. எபூசியின் நகரத்திற்குத் தெற்கே இன்னோம் பள்ளத்தாக்கு வரைக்கும் எல்லை தொடர்ந்தது. பின் என்ரொகேல் வரை சென்றது. 17 அங்கு, எல்லை வடக்கே திரும்பி என்சேமேசுவரை போனது. கெலிலோத் வரைக்கும் எல்லை தொடர்ந்தது. (மலைத் தொடர்களிலிருந்து அதும்மீம் வழி அருகே கெலிலோத் இருந்தது.) ரூபனின் மகனான போகனுக்காக குறிக்கப்பட்ட “பெருங்கல்” வரைக்கும் எல்லை நீண்டது. 18 பெத்அரபாவின் வடக்குப் பாகம் வரைக்கும் எல்லை சென்றது. பின் எல்லை அராபா வரைக்கும் போயிற்று. 19 பின்பு எல்லை பெத் ஓக்லாவின் வடக்குப் பகுதிவரைக்கும் சென்று சவக் கடலின் வடக்கெல்லையில் முடிவுற்றது. இங்கேதான் யோர்தான் நதி கடலில் சென்று சேர்ந்தது. அதுவே தெற்கெல்லை.
20 யோர்தான் நதி கிழக்கெல்லையாக இருந்தது. இதுவே பென்யமீன் கோத்திரத்தினருக்காக கொடுக்கப்பட்ட நிலமாக இருந்தது. எல்லாப் பக்கத்து எல்லைகளும் அவையே. 21 எல்லாக் குடும்பங்களும் அவற்றிற்குரிய நிலத்தைப் பெற்றன. இவையே அவர்களின் பட்டணங்கள்: எரிகோ, பெத்ஒக்லா, ஏமேக்கேசீஸ், 22 பெத்அரபா, செமாராயிம், பெத்தேல், 23 ஆவீம், பாரா, ஓப்ரா, 24 கேப்பார் அமோனாய், ஓப்னி, காபா ஆகியவை ஆகும். மொத்தம் 12 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் அவர்களுக்கு உரியவையாயின.
25 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கிபியோன், ராமா, பேரோத், 26 மிஸ்பே, கெப்பிரா, மோத்சா, 27 ரெக்கேம், இர்பெயேல், தாராலா, 28 சேலா, ஏலேப், எபூசி நகரம் (எருசலேம்), கீபெயாத், கீரேயாத் ஆகியவற்றையும் பெற்றனர். 14 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த ஊர்களும் இருந்தன. இவற்றை எல்லாம் பென்யமீன் கோத்திரத்தினர் பெற்றனர்.
சிமியோனின் நிலம்
19 பின்பு யோசுவா, சிமியோன் கோத்திரத்தை சார்ந்த எல்லா குடும்பங்களுக்கும் அவர்களுக்குரிய பாகத்தைக் கொடுத்தான். யூதாவிற்குரிய இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. 2 இதுவே அவர்கள் பெற்ற பகுதியாகும்: பெயர் செபா (சேபா எனவும் அழைக்கப்பட்டது.) மொலாதா, 3 ஆசார் சூகால், பாலா, ஆத்சேம். 4 எல்தோலாத், பெத்தூல், ஒர்மா, 5 சிக்லாக், பெத்மார் காபோத், ஆத்சார்சூசா, 6 பெத்லெபாவோத், சருகேன் ஆகியவை ஆகும். மொத்தம் 13 ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் அமைந்தன.
7 அவர்கள் ஆயின், ரிம்மோன், எத்தேர், ஆசான் ஆகிய ஊர்களையும் பெற்றனர். நான்கு ஊர்களும் அவற்றைச் சுற்றிலுமுள்ள வயல்களும் கிடைத்தன. 8 பாலாத் பெயேர் (நெகேவின் ராமா) வரைக்குமுள்ள நகரங்களைச் சுற்றிலுமிருந்த வயல்கள் கிடைத்தன. அதுவே சிமியோன் கோத்திரத்தினருக்குக் கிடைத்த நிலமாகும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேசத்தில் பாகம் கிடைத்தது. 9 யூதாவிற்குக் கிடைத்த இடத்திற்குள் சிமியோனின் நிலம் இருந்தது. யூதா ஜனங்களுக்கு அவர்களின் தேவைக்கதிகமான நிலம் இருந்தது. எனவே அவர்கள் நிலத்தில் ஒரு பகுதி சிமியோன் ஜனங்களுக்குக் கிடைத்தது.
செபுலோனின் நிலம்
10 தங்கள் நிலத்தைப் பெற்ற அடுத்த கோத்திரம், செபுலோன் ஆகும். அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலங்களைச் செபுலோனின் குடும்பங்கள் பெற்றன. செபுலோனின் எல்லை சாரீத்வரை நீண்டது. 11 அது மாராலாவின் மேற்கே சென்று தாபசேத்தைத் தொட்டது. யெக்கினேயாமின் கரையோரமாக எல்லை நீண்டது. 12 பின் எல்லை கிழக்கே திரும்பியது. சாரீதிலிருந்து கிஸ்லோத்தாபோர் வரை சென்றது. பிறகு எல்லை தாபாராத்திற்கும் யப்பியாவிற்கும் சென்றது. 13 கித்தாஏபேர், இத்தா காத்சீன் ஆகியவற்றின் கிழக்கு வரைக்கும் எல்லை நீண்டு பின் ரிம்மோனில் முடிவுற்றது. பிறகு எல்லை திரும்பி நியாவிற்குச் சென்றது. 14 நியாவில் எல்லை திரும்பி அன்னத்தோனின் வடக்கே சென்று இப்தா ஏல் பள்ளத்தாக்கு வரை தொடர்ந்தது. 15 இவ்வெல்லையின் உள்ளே கத்தாத், நகலால், சிம்ரோன், இதாலா, பெத்லகேம் நகரங்கள் இவ்வெல்லைக்குள் இருந்தன. மொத்தம் 12 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களுமிருந்தன.
16 செபுலோனுக்குக் கொடுக்கப்பட்ட ஊர்களும் வயல்களும் இவையே. செபுலோனின் குடும்பங்கள் நிலத்தில் பங்கைப் பெற்றன.
இசக்காரின் நிலம்
17 இசக்காரின் கோத்திரத்திற்கு நிலத்தின் நான்காவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் பங்கைப் பெற்றன. 18 அந்தக் கோத்திரத்தினருக்குக் கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: யெஸ்ரயேல், கெசுல்லோத், சூனேம், 19 அப்பிராயீம், சீகோன், அனாகராத், 20 ராப்பித், கிஷியோன், அபெத்ஸ், 21 ரெமேத், என்கன்னீம், என்காதா, பெத்பாத்செஸ் ஆகியவை அடங்கிய பகுதி ஆகும்.
22 அவர்கள் நிலத்தின் எல்லை தாபோர், சகசீமா, பெத்ஷிமேசு ஆகியவற்றைத் தொட்டது. யோர்தான் நதியில் எல்லை நின்றது. மொத்தம் 16 ஊர்களும் அவற்றைச் சுற்றியிருந்த வயல்களும் இருந்தன. 23 இந்த நகரங்களும் ஊர்களும் இசக்கார் கோத்திரம் பெற்ற நிலத்தில் இருந்தன. ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது.
ஆசேரின் நிலம்
24 ஆசேர் கோத்திரத்தினருக்கு நிலத்தின் ஐந்தாவது பாகம் கொடுக்கப்பட்டது. அந்தக் கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தின் ஒரு பங்கைப் பெற்றது. 25 அந்தக் கோத்திரத்தினருக்கு கொடுக்கப்பட்ட நிலம் இதுவே: எல்காத், ஆலி, பேதேன், அக்சாப், 26 அலம்மேலெக், ஆமாத், மீஷயால் ஆகியவை.
கர்மேல் மலை, சிகோர்லிப்னாத் வரைக்கும் மேற்கெல்லை தொடர்ந்தது. 27 பிறகு எல்லை கிழக்கே திரும்பியது. பெத்தாகோனுக்கு எல்லை சென்றது. செபுலோனையும், இப்தாவேல் பள்ளத்தாக்கையும் அவ்வெல்லை தொட்டது. பின்னர் மேற்கே பெத்தேமோக்கிற்கும், நேகியேலுக்கும் அவ்வெல்லை சென்றது. கபூலின் வடக்குப் பகுதியை எல்லை தாண்டியது. 28 பின் எல்லை எபிரோன் என்ற அப்தோன் ரேகோப், அம்மோன், கானா வரைக்கும் சென்றது பெரிய சீதோன் பகுதி வரைக்கும் எல்லை நீண்டது. 29 அந்த எல்லை ராமாவிற்குத் தெற்கே போய், தீரு என்னும் வலிய நகருக்கு நேராக சென்றது. பின் அது திரும்பி ஓசாவை அடைந்து, 30 உம்மா, ஆஃபெக், ரேகோப், அத்சீப் அருகில் கடலில் முடிவுற்றது.
மொத்தத்தில் 22 நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்நிலங்களும் இருந்தன. 31 இந்நகரங்களும் வயல்களும் ஆசேரின் கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்த கோத்திரத்தின் குடும்பங்களில் உள்ள எல்லாருக்கும் அந்த நிலத்தில் பங்கு கிடைத்தது.
நப்தலியின் நிலம்
32 ஆறாவது பகுதியின் நிலம் நப்தலி கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதில் பங்கு கிடைத்தது. 33 சானானீமிற்கு அருகிலுள்ள பெரிய மரத்தினருகே அவர்கள் நிலத்தின் எல்லை ஆரம்பித்தது. இது ஏலேபிற்கு அருகே இருந்தது. ஆதமி நெகேபிற்கும், யாப்னீயேலுக்கும் ஊடாக எல்லை தொடர்ந்து லக்கூம் வழியாக யோர்தான் நதியில் முடிவுற்றது. 34 அஸ்னோத் தாபோர் வழியாக எல்லை மேற்கே சென்றது. உக்கோக்கில் எல்லை நின்றது. தெற்கெல்லை செபுலோனையும், மேற்கெல்லை ஆசேரையும் தொட்டது. எல்லை யோர்தான், நதிக்கு கிழக்கே யூதாவிற்குச் சென்றது. 35 இவ்வெல்லைகளின் உள்ளே பலமுள்ள நகரங்கள் சில இருந்தன. அந்நகரங்கள் சீத்திம், சேர், அம்மாத், ரக்காத், கின்னரேத், 36 ஆதமா, ராமா, ஆத்சோர், 37 கேதேஸ், எத்ரேயி, என்ஆத்சோர், 38 ஈரோன், மிக்தாலேல், ஓரேம், பெதானாத், பெத்ஷிமேஸ் ஆகியவை ஆகும். மொத்தம் 19 ஊர்களும், அவற்றைச் சூழ்ந்த வயல்களும் இருந்தன.
39 இந்த நகரங்களும் வயல்களும் நப்தலி கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்டன. அந்தக் கோத்திரத்தில் ஒவ்வொரு குடும்பமும் நிலத்தில் பங்கைப் பெற்றன.
தாணின் நிலம்
40 பின்பு தேசத்தின் ஏழாவது பகுதி தாண் கோத்திரத்திற்கு கொடுக்கப்பட்டது. அந்த கோத்திரத்தின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் பங்கு கிடைத்தது. 41 கீழ்க்கண்ட பகுதிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்ட நிலமாகும் சோரா, எஸ்தாவோல், இர்சேமேஸ், 42 சாலாபீன், ஆயலோன், யெத்லா, 43 ஏலோன், திம்னாதா, எக்ரோன், 44 எல்தெக்கே, கிபெத்தோன், பாலாத், 45 யேகூத், பெனபெராக், காத்ரிம்மோன், 46 மேயார்கோன், ராக்கோன், யாப்போவிற்கு அருகிலுள்ள பகுதிகள் ஆகியவை ஆகும்.
47 தாணின் ஜனங்கள் அவர்களுக்குரிய தேசத்தைப் பெறுவதில் தொல்லை நேர்ந்தது. பலமான பகைவர்கள் அங்கே இருந்தனர். தாண் ஜனங்களால் அவர்களை எளிதில் வெல்ல முடியவில்லை. லேசேமின் ஜனங்களுக்கு எதிராக தாண் ஜனங்கள் போர் செய்தனர். லேசேமைத் தோற்கடித்து அங்கு வாழ்ந்த ஜனங்களைக் கொன்றனர். லேசேம் என்னும் ஊரில் தாண் ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்கள் கோத்திரத்தின் தந்தையாகிய தாண் என்ற பெயரை அதற்குக் கொடுத்தனர். 48 அந்த எல்லா நகரங்களும் அவற்றைச் சூழ்ந்த வயல்களும் தாண் கோத்திரத்தினருக்கு உரியனவாயின. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதற்குரிய பங்கு கிடைத்தது.
யோசுவாவின் நிலம்
49 தலைவர்கள் தேசத்தைப் பங்கிட்டு வெவ்வேறு கோத்திரங்களுக்கு கொடுத்து முடித்தனர். அதன் பிறகு, நூனின் குமாரனாகிய யோசுவாவிற்கும் கொஞ்சம் நிலத்தை பங்காகக் கொடுப்பதென இஸ்ரவேல் ஜனங்கள் முடிவெடுத்தனர். அது அவனுக்கு வாக்களிக்கப்பட்ட நிலம் ஆகும்.
50 கர்த்தர் கட்டளையிட்டபடி எப்பிராயீம் மலை நாட்டிலுள்ள திம்னாத் சேரா நகரத்தை அவர்கள் யோசுவாவிற்குக் கொடுத்தனர். அவ்வூரையே தனக்கு வேண்டுமென யோசுவா கேட்டான். யோசுவா அவ்வூரைப் பலமாகக் கட்டி அங்கு வாழ்ந்தான்.
51 இஸ்ரவேலின் வெவ்வேறு கோத்திரங்களுக்கும் இந்த தேசப் பகுதிகள் முழுவதும் பிரித்து கொடுக்கப்பட்டன. நிலத்தைப் பங்கிட ஆசாரியனாகிய எலெயாசார், நூனின் மகனாகிய யோசுவா, ஒவ்வொரு கோத்திரத்தின் தலைவர்கள் ஆகியோர் சீலோவில் ஒருமித்துக் கூடினார்கள். ஆசரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் கர்த்தருக்கு முன்னர் அவர்கள் சந்தித்து, தேசத்தைப் பங்கிட்டு முடித்தனர்.
149 கர்த்தரைத் துதியுங்கள்.
கர்த்தர் செய்த புதிய காரியங்களுக்காக ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
அவரைப் பின்பற்றுவோர் ஒருமித்துக் கூடும் சபையில் அவரைத் துதித்துப்பாடுங்கள்.
2 தங்களைப் படைத்தவரோடு இஸ்ரவேல் களிப்படைவார்களாக.
சீயோனின் ஜனங்கள் அவர்களின் அரசரோடு மகிழ்ந்து களிப்பார்களாக.
3 தம்புருக்களையும் வீணைகளையும் மீட்டுவதோடு ஆடிப்பாடி
அந்த ஜனங்கள் தேவனைத் துதிக்கட்டும்.
4 கர்த்தர் அவரது ஜனங்களோடு மகிழ்ச்சியாயிருக்கிறார்.
அவரது எளிய ஜனங்களுக்கு தேவன் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்.
அவர் அவர்களை மீட்டார்!
5 தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்!
படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.
6 ஜனங்கள் தேவனைத் துதித்துக் குரலெழுப்பட்டும்.
அவர்களது கைகளில் வாள்களை ஏந்தட்டும்.
7 அவர்கள் போய் பகைவர்களைத் தண்டிக்கட்டும்.
அந்த ஜனங்களிடம் சென்று அவர்களைத் தண்டிக்கட்டும்.
8 தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான
ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
9 தேவன் கட்டளையிட்டபடி தேவனுடைய ஜனங்கள் அவர்களைத் தண்டிப்பார்கள்.
தேவனைப் பின்பற்றுவோர் எல்லோரும் அவரை மகிமைப்படுத்துவார்கள்.
கர்த்தரைத் துதியுங்கள்!
150 கர்த்தரைத் துதியுங்கள்!
தேவனை அவரது ஆலயத்தில் துதியுங்கள்!
பரலோகத்தில் அவரது வல்லமையைத் துதியுங்கள்!
2 அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்!
அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
3 எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்!
வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!
4 தேவனைத் தம்புருக்களோடும் நடனத்தோடும் துதியுங்கள்!
நரம்புக் கருவிகளோடும் புல்லாங் குழலோடும் அவரைத் துதியுங்கள்!
5 ஓசையெழுப்பும் தாளங்களோடும் தேவனைத் துதியுங்கள்!
பேரோசையெழுப்பும் தாளங்களோடும் அவரைத் துதியுங்கள்!
6 எல்லா உயிரினங்களும் கர்த்தரைத் துதிக்கட்டும்!
கர்த்தரைத் துதிப்போம்!
9 எனது தலை தண்ணீரால் நிறைக்கப்பட்டால்,
எனது கண்கள் கண்ணீரின் ஊற்றாக இருந்தால் நான் இரவும் பகலும்,
அழிந்துப்போன எனது ஜனங்களுக்காக அழ முடியும்!
2 வழிபோக்கர்கள் இரவிலே தங்குவதற்கு,
வனாந்தரத்திலே எனக்கென்றொரு வீடு இருந்திருக்குமானால் நல்லது.
அப்பொழுது நான் எனது ஜனங்களை விட்டுப்போவேன்.
நான் அந்த ஜனங்களிலிருந்து தூரப் போய்விடுவேன்.
ஏனென்றால், அவர்கள் தேவன் மேல் விசுவாசம் இல்லாதவர்கள்.
அவர்கள் அனைவரும் அவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்கள்.
3 “அந்த ஜனங்கள் தங்களது நாக்குகளை வில்லைப்போன்று பயன்படுத்துகின்றனர்.
அவர்களது வாய்களிலிருந்து பொய்கள் அம்புகளைப்போன்று பறக்கின்றன.
இந்த நாட்டில் உண்மைகளல்ல பொய்கள் மிகப் பலமாக வளர்ந்திருக்கின்றன.
ஜனங்கள் ஒரு பாவத்திலிருந்து இன்னொரு பாவத்திற்குப் போகிறார்கள்.
அவர்களுக்கு என்னைத் தெரியாது”
கர்த்தர் இவற்றைச் சொல்கிறார்.
4 கர்த்தர், “உனது அண்டை வீட்டாரை கவனியுங்கள்!
உனது சொந்தச் சகோதரர்களையும் நம்பாதீர்கள்!
ஏனென்றால், ஒவ்வொரு சகோதரனும் ஏமாற்றுக்காரனாய் இருக்கிறான்.
ஒவ்வொரு அண்டைவீட்டானும், உனது முதுகுக்குப் பின்னால் பேசுகிறான்.
5 ஒவ்வொருவனும் தனது அண்டை வீட்டானுக்கு பொய்யனாக இருக்கிறான்.
எவனும் உண்மையைப் பேசுவதில்லை.
யூதாவின் ஜனங்கள் தம் நாக்குகளுக்கு
பொய்யையே கற்றுக் கொடுத்திருக்கின்றனர்.
சோர்ந்துபோகிற அளவுக்கு
பாவம் செய்தார்கள்.
6 ஒரு கெட்டச் செயலை இன்னொன்று தொடர்கிறது.
பொய்கள், பொய்களைத் தொடர்கின்றன.
ஜனங்கள் என்னை அறிய மறுக்கின்றனர்”
என்று கர்த்தர் கூறினார்.
7 எனவே, சர்வ வல்லமையுள்ள கர்த்தர் கூறுகிறார்:
“ஒரு வேலையாள், ஒரு உலோகத்தை அது சுத்தமாயிருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக நெருப்பிலே சூடுபடுத்துகிறான்.
அதுபோல நான் யூதா ஜனங்களை சோதனைச் செய்கிறேன்.
எனக்கு வேறுவழி தெரிந்திருக்கவில்லை.
எனது ஜனங்கள் பாவம் செய்திருக்கிறார்கள்.
8 யூதா ஜனங்கள் அம்புகளைப் போன்ற கூர்மையான நாக்குகளை வைத்திருக்கிறார்கள்.
அவர்களது வாய்கள் பொய்யைப் பேசுகின்றன.
ஒவ்வொரு நபரும் தனது அயலானிடம் சமாதானமாய் பேசுகிறான்.
ஆனால், அவன் இரகசியமாக தனது அயலானைத் தாக்குவதற்குத் திட்டமிட்டுக்கொண்டிருக்கிறான்.
9 யூதா ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“அந்த வகையான ஜனங்களை நான் தண்டிக்க வேண்டும் என்று நீ அறிவாய்.
அவர்களுக்கு ஏற்ற தண்டனையை நான் அவர்களுக்கு கொடுக்க வேண்டும்.”
10 நான் (எரேமியா) மலைகளுக்காக உரக்க அழுவேன்.
காலியான வயல்களுக்காக நான் ஒப்பாரிப் பாடலைப் பாடுவேன்.
ஏனென்றால், உயிர் வாழ்வன அனைத்தும் எடுக்கப்பட்டுவிடும்.
இப்பொழுது எவரும் அங்கு பயணம் செய்யமாட்டார்கள்.
ஆடுமாடுகளின் சத்தத்தை அங்கே கேட்கமுடியாது.
பறவைகள் பறந்து போயிருக்கின்றன.
மிருகங்கள் போய்விட்டன.
11 “நான் (கர்த்தர்) எருசலேம் நகரத்தை குப்பை மேடாக்குவேன்.
அது ஓநாய்களின் வீடாகும்.
யூதா நாட்டிலுள்ள நகரங்களை நான் அழிப்பேன்,
அதனால் அங்கே எவரும் வாழமுடியாது.”
12 இவற்றையெல்லாம் அறிந்துக்கொள்ளுகிற அளவிற்கு ஒரு ஞானமுள்ள மனிதன் அங்கே இருக்கிறானா?
கர்த்தரால் கற்பிக்கப்பட்டிருக்கிற சிலர் அங்கே இருக்கிறார்களா?
கர்த்தருடைய செய்தியை எவரொருவராலும் விளக்கமுடியுமா?
அந்தப் பூமி ஏன் வீணாயிற்று?
எந்த மனிதரும் போகமுடியாத அளவிற்கு அது ஏன் வெறுமையான வனாந்தரமாயிற்று?
13 கர்த்தர் இந்த வினாக்களுக்கு விடை சொன்னார்.
அவர் கூறினார்:
“இது ஏனென்றால், யூதாவின் ஜனங்கள் எனது போதனைகளைப் பின்பற்றுவதை விட்டுவிட்டார்கள்.
நான் எனது போதனைகளைக் கொடுத்தேன்.
ஆனால், அவர்கள் நான் சொல்வதைக் கேட்க மறுத்துவிட்டனர்.
14 யூதாவின் ஜனங்கள் தங்கள் சொந்த வழியிலேயே வாழ்ந்தார்கள்.
அவர்கள் பிடிவாதக்காரர்கள்,
அவர்கள் பொய்த் தெய்வமான பாகாலைத் தொழுதுகொள்கிறார்கள்.
அவர்களின் தந்தைகள் அந்தப் பொய்த் தெய்வங்களைத் தொழுதுகொள்ள சொல்லித் தந்தனர்.”
15 “எனவே, இஸ்ரவேலின் சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் கூறுகிறார்:
நான் விரைவில் யூதா ஜனங்களைத் தண்டிப்பேன்.
16 நான் யூதாவின் ஜனங்களை பல நாடுகளிலும் சிதறும்படி செய்வேன்.
அவர்கள் புற ஜாதிகளுக்குள் வாழ்வார்கள்.
அவர்களும் அவர்களது தந்தைகளும் அந்த நாடுகளைப்பற்றி எப்பொழுதும் அறிந்திருக்கமாட்டார்கள்.
நான் பட்டயங்களுடன் ஆட்களை அனுப்புவேன்.
அவர்கள் யூதாவின் ஜனங்களைக் கொல்வார்கள்.
ஜனங்கள் முடிந்து போகுமட்டும் அவர்கள் அவர்களைக் கொல்வார்கள்.”
17 சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதைத்தான் கூறுகிறார்:
“இப்பொழுது, இவற்றைப்பற்றி எண்ணுங்கள்!
நீங்கள், சாவில் கூலிக்காக அழுவதில் திறமைவாய்ந்த பெண்களைக் கூப்பிடுங்கள்.
அந்த வேலையில் கெட்டிக்காரிகளை ஜனங்களுக்காக சொல்லி அனுப்புங்கள்.
18 ஜனங்கள் சொல்கிறார்கள்,
‘அந்தப் பெண்கள் விரைவாக வந்து, நமக்காக அழட்டும், பிறகு நமது கண்கள் கண்ணீரால் நிறையும்.
நமது கண்களிலிருந்து நீரோடை வரும்.’
19 “சீயோனிலிருந்து உரத்த அழுகையின் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
‘நாம் உண்மையிலேயே அழிக்கப்பட்டிருக்கிறோம்.
நாம் உண்மையிலேயே வெட்கப்படுகிறோம்!
நாம் நமது நாட்டைவிட்டு விலக வேண்டும்.
ஏனென்றால், நமது வீடுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன.
இப்பொழுது நமது வீடுகள் கற்குவியல்களாக இருக்கின்றன.’”
20 யூதாவின் ஸ்திரீகளே! இப்பொழுது, கர்த்தரிடமிருந்து வரும் செய்தியைக் கேளுங்கள்.
கர்த்தருடைய வாயிலிருந்து வருகிற வார்த்தைகளைக் கேளுங்கள்.
கர்த்தர், “உங்கள் பெண்பிள்ளைகளுக்கு எவ்வாறு உரக்க அழுவது என்று கற்றுக் கொடுங்கள்.
ஒவ்வொரு பெண்ணும் ஒப்பாரிப் பாடலை பாடக் கற்றுக்கொள்ள வேண்டும்.
21 “மரணம் வந்திருக்கிறது.
நமது ஜன்னல்கள் வழியாக மரணம் ஏறியிருக்கிறது.
நமது அரண்மனைகளுக்குள் மரணம் வந்திருக்கிறது.
தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும், நமது பிள்ளைகளிடம் மரணம் வந்திருக்கிறது.
பொது இடங்களில் நாம் சந்திக்கிற இளைஞர்களிடம் மரணம் வந்திருக்கிறது.”
22 “கர்த்தர் எரேமியாவை நோக்கி,
மரித்த உடல்கள் வயல் வெளிகளின்மேல் எருவைப் போன்று கிடக்கும்.
அவர்களின் உடல்கள், விவசாயி அறுத்துப் போட்ட அரியைப்போன்று தரையில் கிடக்கும்.
ஆனால் அவற்றை சேகரிக்க எவரும் இருக்கமாட்டார்கள்” என்று சொல் என்றார்.
23 கர்த்தர், “ஞானம் உள்ளவர்கள்
தமது ஞானத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
பலம் உள்ளவர்கள்
தமது பலத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
செல்வம் உடையவர்கள்
தமது செல்வத்தைப்பற்றி பெருமை பேசவேண்டாம்.
24 ஆனால் எவராவது பெருமைபேச விரும்பினால், அவன் இதைப்பற்றி பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்.
என்னைப்பற்றி அவன் அறிந்துக்கொண்டதைக் குறித்து பெருமைப்படட்டும்.
நானே கர்த்தர் என்றும்,
நான் தயவும் நியாயமும் கொண்டவர் என்றும்,
நான் பூமியில் நன்மையைச் செய்கிறவர் என்றும்
புரிந்துகொண்டவன் பெருமைப்படட்டும்.
நான் அவற்றை நேசிக்கிறேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
25 “சரீரத்தில் மட்டும் விருத்தசேதனம் பண்ணிக் கொண்டவர்களை நான் தண்டிக்கப்போகிற காலம் வந்துகொண்டிருக்கிறது. 26 எகிப்து, யூதா, ஏதோம், அம்மோன், மோவாப் மற்றும் வனாந்திரத்தில் வாழ்கிற அனைத்து ஜனங்களையும்பற்றி நான் பேசிக்கொண்டிருக்கிறேன், பாலைவனக் குடிகள் தங்கள் தாடி ஓரங்களை வெட்டினார்கள். இந்த நாடுகளில் உள்ள அனைத்து ஜனங்களும் சரீரத்தில் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளாதவர்கள். ஆனால், இஸ்ரவேல் குடும்பத்தில் வந்த ஜனங்களோ, தங்கள் இதயத்தில் விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இயேசு யூத ஆசாரியர்களை விமர்சித்தல்(A)
23 பின் இயேசு மக்களையும் தம் சீஷர்களையும் பார்த்துப் பேசலானார். 2 ,“வேதபாரகரும், பரிசேயர்களும் மோசேயின் சட்டங்கள் என்ன சொல்லுகின்றன என்பதை உங்களுக்குக் கூறும் அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார்கள். 3 ஆகவே அவர்கள் சொற்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். அவர்கள் செய்யச் சொல்கிறவற்றை நீங்கள் செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் வாழ்க்கை நீங்கள் பின்பற்றத் தக்கதல்ல. அவர்கள் உங்களுக்கு உபதேசிக்கிறார்கள். ஆனால், அவர்கள் அதன்படி நடப்பதில்லை. 4 மக்கள் பின்பற்றி நடப்பதற்குக் கடினமான சட்டங்களை ஏற்படுத்துகிறார்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்றுமாறு மிகவும் வற்புறுத்துகின்றனர். ஆனால் அச்சட்டங்களில் யாதொன்றையும் தாங்கள் பின்பற்ற முயலுவதில்லை.
5 ,“அவர்கள் நற்செயல்களைச் செய்வதற்கான ஒரே காரணம் மற்றவர்கள் அவற்றைக் காண வேண்டும் என்பதே. அவர்கள் வேத வாக்கியங்களில் வாசகங்களைக் கொண்ட தோல் பைகளை அணிந்து செல்கிறார்கள். அவற்றை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். மேலும் மக்கள் காணும்படியாகப் பிரார்த்தனைக்கான சிறப்பு உடையை மிக நீண்டதாக அணிகிறார்கள். 6 அத்தகைய பரிசேயர்களும் வேதபாரகர்களும் விருந்துகளின்போது முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். மேலும் ஜெப ஆலயங்களில் முக்கியமான இருக்கைகளில் அமர விரும்புகிறார்கள். 7 கடைவீதிகளில் மக்கள் தங்களுக்கு மரியாதை செய்யவும் மக்கள் தங்களை ‘போதகரே’ என அழைக்கவும் விரும்புகிறார்கள்.
8 ,“ஆனால் நீங்கள் ‘போதகர்’ என அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் சகோதர சகோதரிகள். 9 உங்களுக்கு ஒரு போதகரே உண்டு. மேலும், பூமியில் உள்ள எவரையும் ‘தந்தையே’ என அழைக்காதீர்கள். உங்களுக்கு ஒருவரே தந்தை. அவர் பரலோகத்தில் உள்ளார். 10 நீங்கள் ‘எஜமானே’ என்றும் அழைக்கப்படக் கூடாது. ஏனென்றால், உங்கள் எஜமான் ஒருவர் மட்டுமே. அவர் தான் கிறிஸ்து. 11 உங்களுக்கு வேலைக்காரனைப்போல ஊழியம் செய்கிறவனே உங்களில் பெரியவன். 12 தன்னை மற்றவரிலும் உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான். தன்னைத் தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
13 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடுகாலம். நீங்கள் மாயமானவர்கள். பரலோக இராஜ்யத்தின் நுழைவாயிலை நீங்கள் அடைக்கிறீர்கள். நீங்களும் நுழைவதில்லை, நுழைய முயற்சிக்கும் மற்றவர்களையும் தடுக்கிறீர்கள். 14 [a]
15 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். கடல் கடந்தும் பல நாடுகளில் பயணம் செய்தும் உங்களுக்கு ஒரு சீஷனைத் தேடுகிறீர்கள். நீங்கள் அவனைக் கண்டடைந்து அவனை உங்களை விட மோசமானவனாக மாற்றுகிறீர்கள். மேலும் நரகத்திற்கு உரிய நீங்கள் மிகவும் பொல்லாதவர்களே.
16 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். மற்றவர்களை வழி நடத்தும் நீங்கள் குருடர்கள். நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை ஆனால், தேவாலயத்தில் உள்ள தங்கத்தின் பெயராலே சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 17 நீங்கள் அறிவற்ற குருடர்கள். தங்கம் பெரிதா தேவாலயம் பெரிதா? தங்கத்தைப் பரிசுத்தமாக்குவது தேவாலயமே! எனவே, தேவாலயமே பெரியது.
18 ,“மேலும், நீங்கள் கூறுகிறீர்கள், ‘ஒருவன் தேவாலயத்திலுள்ள பலிபீடத்தின் பெயரால் சத்தியம் செய்தால் அதனால் ஒன்றுமில்லை. ஆனால், ஒருவன் பலிபீடத்திலுள்ள பலிப்பொருளின் பெயரால் சத்தியம் செய்தால், அவன் அதைக் காப்பாற்ற வேண்டும்!’ 19 நீங்கள் குருடர்கள், உங்களுக்கு எதுவும் புரிவதில்லை. படைத்த பொருள் பெரிதா? பலிபீடம் பெரிதா? படைத்த பொருளை பரிசுத்தப்படுத்துவது பலிபீடமே. ஆகவே பலிபீடமே பெரியது. 20 பலிபீடத்தின் பெயராலே சத்தியம் செய்கிறவன் உண்மையில் பலிபீடத்தையும் அதில் உள்ள அனைத்துப் பொருளையும் பயன்படுத்துகிறான். 21 மேலும் தேவாலயத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன், உண்மையில் தேவாலயத்தையும் அதில் வாசம் செய்பவரையும் பயன்படுத்துகிறான். 22 பரலோகத்தின் பெயரால் சத்தியம் செய்கிறவன் தேவனின் அரியாசனத்தின் பெயராலும் அதில் அமர்கிறவரின் பெயராலும் சத்தியம் செய்கிறான்.
23 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். உங்கள் உடமைகள் அனைத்திலும் பத்தில் ஒரு பாகம் கர்த்தருக்குக் காணிக்கையாக்குகிறீர்கள். புதினா, வெந்தயம் மற்றும் சீரகத்திலும் கூட. ஆனால் கட்டளைகளில் மிக முக்கியமானவற்றை நீங்கள் பின்பற்றுவதில்லை. அதாவது, நியாயமாகவும் கருணையுடனும் நேர்மையாகவும் விளங்கவேண்டும் என்பதை விட்டுவிடுகிறீர்கள். இவைகளே நீங்கள் செய்ய வேண்டிய முக்கிய செயல்கள். மேலும் மற்ற நற்செயல்களையும் தொடர்ந்து செய்து வர வேண்டும். 24 நீங்கள் மற்றவர்களை வழிநடத்துகிறீர்கள். ஆனால், நீங்களோ குருடர்கள். பானத்திலிருந்து ஒரு சிறு ஈயை எடுத்து எறிந்துவிட்டு, ஒட்டகத்தை விழுங்குகிறவனைப் போன்றவர்கள் நீங்கள்.
25 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! நீங்கள் மாயமானவர்கள். உங்கள் கோப்பைகளையும் பாத்திரங்களையும் வெளிப்புறம் நன்கு கழுவுகிறீர்கள். (சுத்தம் செய்கிறீர்கள்) ஆனால் அவற்றின் உள்ளே நீங்கள் மற்றவர்களை ஏமாற்றி உங்கள் விருப்பத்தின்படி சேர்த்த பொருட்களால் நிரம்பியுள்ளது. 26 பரிசேயர்களே, நீங்கள் குருடர்கள். முதலில் கோப்பையின் உள்ளே சுத்தம் செய்யுங்கள், பின், கோப்பையின் வெளிப்புறம் உண்மையிலேயே சுத்தமாகும்.
27 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மாயமானவர்கள். நீங்கள் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளைப் போன்றவர்கள். அக்கல்லறைகளின் வெளிப்புறம் நன்றாக இருக்கிறது. ஆனால், உள்ளே முழுவதும், இறந்தவர்களின் எலும்புகளும், அசுத்தங்கள் பலவும் இருக்கின்றன. 28 அதே போலத்தான் நீங்களும், உங்களைக் காண்கிறவர்கள் உங்களை நல்லவர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உள்ளுக்குள் நீங்கள் (முழுக்கவும்) மாயமும் தீமையும் நிறைந்தவர்கள்.
29 ,“வேதபாரகர்களே! பரிசேயர்களே! உங்களுக்குக் கேடு வரும். நீங்கள் மிகவும் மாயமானவர்கள். நீங்கள் தீர்க்கதரிசிகளுக்குக் கல்லறை கட்டுகிறீர்கள். நல்லவர்களின் கல்லறைகளுக்கு பெருமை சேர்க்கிறீர்கள். 30 மேலும் நீங்கள், ‘நாங்கள் எங்கள் முன்னோர்களின் காலத்தில் வாழ்ந்திருந்தால், இத்தீர்க்கதரிசிகளைக் கொல்ல அவர்களுக்குத் துணை போயிருக்க மாட்டோம்’ என்று கூறுகிறீர்கள். 31 அத்தீர்க்கதரிசிகளைக் கொன்றவர்களின் வழிவந்தவர்கள் நீங்கள் என்பதை நிரூபணம் செய்கிறீர்கள். 32 உங்கள் முன்னோர்கள் தொடங்கி வைத்த பாவத்தை நீங்கள் முடித்து வைப்பீர்கள்.
33 ,“நீங்கள் பாம்புகள். கொடிய விஷம் கொண்ட பாம்புக் கூட்டத்தில் தோன்றியவர்கள் நீங்கள்! தேவனிடமிருந்து நீங்கள் தப்ப முடியாது. நீங்கள் அனைவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு நரகத்திற்குச் செல்வீர்கள். 34 ஆகவே, நான் உங்களுக்கு இதைச் சொல்லிக் கொள்கிறேன். தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் போதகர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன். நீங்கள் அவர்களில் சிலரைச் சாகடிப்பீர்கள். சிலரைச் சிலுவையில் அறைவீர்கள். சிலரை ஜெப ஆலயங்களில் கட்டிவைத்து அடிப்பீர்கள். அவர்களை நகருக்கு நகர் துரத்திச் செல்வீர்கள்.
35 ,“ஆகவே, நேர்மையான வாழ்வை நடத்திய சிலரைக் கொன்ற குற்றத்திற்கு நீங்கள் ஆளாவீர்கள். நல்லவனான ஆபேல் முதல் சகரியா ஆகியோரைக் கொன்ற பழிக்கும் உட்படுவீர்கள். ஆபேல் முதல் பரகியாவின் மகனும் ஆலயத்திற்கும் பலிபீடத்திற்கும் இடையில் கொல்லப்பட்டவனான சகரியா வரையில் வாழ்ந்த நல்லவர்களைக் கொன்ற பழிக்கும் ஆளாவீர்கள். 36 நான் உண்மையைச் சொல்கிறேன், இவை அனைத்தும் தற்பொழுது வாழும் உங்களுக்கு உண்டாகும்.
எருசலேம் மக்களுக்கு எச்சரிப்பு(B)
37 ,“எருசலேமே! எருசலேமே! நீ தீர்க்கதரிசிகளைக் கொல்கின்றாய். தேவன் உன்னிடம் அனுப்பியவர்களைக் கற்களால் அடித்துக் கொல்கிறாய். பற்பலமுறை உன் மக்களுக்கு உதவ நான் விரும்பினேன். ஒரு (தாய்க்) கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைகளுக்குக் கீழே சேர்த்துக் கொள்வதைப்போல நானும் உன் மக்களை ஒன்று சேர்க்க நினைத்தேன். ஆனால், நீயோ அதைச் செய்ய என்னை விடவில்லை. 38 இப்பொழுதோ, உன் வீடு முற்றிலும் வெறுமையடையும். 39 நான் உனக்கு உண்மையைச் சொல்கிறேன், ‘கர்த்தரின் பெயராலே வருகிறவருக்கு தேவனின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும்! அவர் வரவு நல்வரவு!’ [b] என்று நீ கூறுகிறவரைக்கும் நீ என்னைக் காணமாட்டாய்” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center