Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
யோசுவா 12-13

இஸ்ரவேலரால் தோற்கடிக்கப்பட்ட இராஜாக்கள்

12 யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தில் இஸ்ரவேலரின் ஆதிக்கம் இருந்தது. அர்னோன் நதியிலிருந்து எர்மோன் மலைவரைக்குமுள்ள எல்லா தேசங்களும் யோர்தான் நதியின் கிழக்குக் கரையோரமுள்ள எல்லா தேசங்களும் அவர்களுக்கு உரியதாக இருந்தது. இப்பகுதிகளைக் கைப்பற்றும்பொருட்டு அவர்கள் தோற்கடித்த எல்லா அரசர்களின் பெயர்களும் இங்குத் தரப்படுகின்றன:

அவர்கள் எஸ்போன் நகரில் வாழ்ந்த எமோரியரின் அரசனாகிய சீகோனைத் தோற்கடித்தனர். அவன் அர்னோன் பள்ளத்தாக்கிலுள்ள ஆரோவேரிலிருந்து யாபோக் நதி வரைக்குமுள்ள தேசத்தை ஆண்டு வந்தான். பள்ளத்தாக்கின் நடுவில் அவன் தேசத்தின் எல்லை (தேசம்) ஆரம்பித்தது. இது அம்மோனியரோடு அவர்களின் எல்லையாக இருந்தது. கீலேயாத்தின் பாதிப் பகுதியும் சீகோனின் ஆளுகைக்குட்பட்டிருந்தது. கலிலேயா ஏரியிலிருந்து சவக்கடல் வரைக்கும் யோர்தான் பள்ளத்தாக்கின் கிழக்குப் பகுதிகளை அவன் ஆண்டுவந்தான். பெத்யெசிமோத்திலிருந்து பிஸ்கா மலைகளின் தெற்குப்பகுதி வரைக்கும் அவன் ஆண்டுவந்தான்.

அவர்கள் பாசானின் அரசனாகிய ஓகையும், வென்றார்கள். அவன் ரெபெயத் ஜனங்களைச் சார்ந்தவன். அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலுமிருந்த நிலப் பகுதிகளை ஆண்டான். எர்மோன் மலை, சல்கா, பாசானின் நிலப்பகுதிகள் ஆகியவற்றையெல்லாம் ஓக் அரசாண்டான். கெசூர், மாகா ஆகிய ஜனங்கள் வாழ்ந்த தேசம் வரைக்கும் அவன் தேசம் இருந்தது. கீலேயாத்தின் பாதிப் பகுதியையும் ஓக் ஆண்டு வந்தான். எஸ்போனின் அரசனாகிய, சீகோனின் தேசம் மட்டும் அப்பகுதி பரவியிருந்தது.

கர்த்தருடைய ஊழியனாகிய மோசேயும், இஸ்ரவேல் ஜனங்களும் இந்த அரசர்களை எல்லாம் வென்றார்கள். ரூபன், காத், ஆகிய கோத்திரத்தாருக்கும், மனாசே கோத்திரத்தாரில் பாதி ஜனங்களுக்கும் சொந்தமாக மோசே அத்தேசத்தைக் கொடுத்தான்.

யோர்தான் நதிக்கு மேற்கிலுள்ள தேசங்களின் அரசர்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் வென்றார்கள். இந்நாட்டிற்குள் ஜனங்களை யோசுவா வழி நடத்தினான். இத்தேசத்தை இஸ்ரவேலரின் பன்னிரண்டு கோத்திரங்களுக்கு இடையே யோசுவா பிரித்துக் கொடுத்தான். தேவன் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த தேசம் இதுவேயாகும். லீபனோன் பள்ளத்தாக்கிலுள்ள பால்காத்திலிருந்து சேயீரிலுள்ள ஆலாக் மலைவரைக்குமுள்ள தேசம் இதுவாகும். மலைநாடு, மேற்கு மலையடிவாரம், யோர்தான் பள்ளத்தாக்கு, கிழக்கு மலைகள், பாலைவனம், நெகேவ் யூதாவின் கிழக்கிலுள்ள பாலைப்பிரதேசம், ஆகியவை இப்பகுதியில் அடங்கியிருந்தன. ஏத்தீயரும், எமோரியரும், கானானியரும், பெரிசியரும், ஏவியரும், ஏபூசியரும் வாழ்ந்த தேசம் இதுவாகும். இஸ்ரவேலர் தோற்கடித்த அரசர்களின் பெயர்ப் பட்டியல் பின்வருவதாகும்:

எரிகோவின் அரசன் 1

பெத்தேலுக்கு அருகிலுள்ள

ஆயீயின் அரசன் 1

10 எருசலேமின் அரசன் 1

எப்ரோனின் அரசன் 1

11 யர்மூத்தின் அரசன் 1

லாகீசின் அரசன் 1

12 எக்லோனின் அரசன் 1

கேசேரின் அரசன் 1

13 தெபீரின் அரசன் 1

கெதேரின் அரசன் 1

14 ஒர்மாவின் அரசன் 1

ஆராதின் அரசன் 1

15 லிப்னாவின் அரசன் 1

அதுல்லாமின் அரசன் 1

16 மக்கேதாவின் அரசன் 1

பெத்தேலின் அரசன் 1

17 தப்புவாவின் அரசன் 1

எப்பேரின் அரசன் 1

18 ஆப்பெக்கின் அரசன் 1

லசரோனின் அரசன் 1

19 மாதோனின் அரசன் 1

ஆத்சோரின் அரசன் 1

20 சிம்ரோன் மேரோனின் அரசன் 1

அக்சாபின் அரசன் 1

21 தானாகின் அரசன் 1

மெகிதோவின் அரசன் 1

22 கேதேசின் அரசன் 1

கர்மேலிலுள்ள

யொக்னியாமின் அரசன் 1

23 தோர் மலையிலுள்ள

தோரின் அரசன் 1

கில்காலின் கோயிம் அரசன் 1

24 திர்சாவின் அரசன் 1

மொத்தம் அரசர்களின் எண்ணிக்கை 31

கைப்பற்றப்படாத நாடுகள்

13 யோசுவா வயது முதிர்ந்தவனாக இருக்கும்போது, கர்த்தர் அவனை நோக்கி, “யோசுவா உனக்கு வயது முதிர்ந்துவிட்டது, ஆனால் நீ கைப்பற்றவேண்டிய நாடுகள் இன்னும் பல உள்ளன. கெசூரிம் தேசத்தையோ, பெலிஸ்தியரின் தேசத்தையோ நீ இன்னும் எடுத்துக்கொள்ளவில்லை. எகிப்திலுள்ள சீகேபர் நதியின் தேசங்களையும், வடக்கில் எக்ரோனின் கரையிலுள்ள நாடுகளையும் நீ கைப்பற்றவில்லை. அது இன்னமும் கானானியருக்குரியதாக உள்ளது. காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் ஆகிய இடங்களின் ஐந்து பெலிஸ்திய தலைவர்களையும் நீ தோற்கடிக்க வேண்டியுள்ளது. கானானியரின் நாட்டிற்குக் கிழக்கேயுள்ள ஏவியரையும் நீ வெல்லவேண்டும். கிப்லியரின் தேசத்தையும் நீ இன்னும் வெற்றி கொள்ளவில்லை. எர்மோன் மலையின் கீழேயுள்ள பாகால்காத்திற்குக் கிழக்கில் லீபனோனின் பகுதியிலிருந்து லெபோ ஆமாத் வரைக்கும் நீ கைப்பற்ற வேண்டும்.

“சீதோனின் ஜனங்கள் லீபனோனிலிருந்து மிஸ்ரெபோத்மாயீம் வரையுள்ள மலைநாட்டில் வசித்து வருகின்றனர். இஸ்ரவேலருக்காக இவர்கள் அனைவரையும் நான் துரத்துவேன். இஸ்ரவேலின் ஜனங்களுக்காக தேசத்தைப் பிரிக்கும்போது இத்தேசத்தையும் ஞாபகப்படுத்திக்கொள். நான் உனக்குச் சொன்னபடியே இதைச் செய். இப்போது, தேசத்தை ஒன்பது கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் சரிபாதியினருக்கும் பிரித்துக்கொடு” என்றார்.

தேசத்தைப் பங்கிடுதல்

ரூபன், காத், ஆகிய கோத்திரத்தினருக்கும், மனாசே என்னும் கோத்திரத்தின் பாதிப் பகுதியினரும் அவர்களுக்குரிய தேசத்தை ஏற்கெனவே பெற்றிருந்தார்கள். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள தேசத்தை அவர்களுக்குக் கொடுத்திருந்தான். ஆரோவேர் நதிக்கருகிலுள்ள அர்னோன் நதியில் அத்தேசம் ஆரம்பித்து நதியின் நடுப்பகுதியிலுள்ள ஊர்வரைக்கும் அவர்களது தேசம் இருந்தது. அது மெதபாவிலிருந்து தீபோன்வரைக்குமுள்ள சமவெளியையும் கொண்டிருந்தது. 10 அத்தேசத்தில் எமோரியரின் அரசனாகிய சீகோன் ஆண்டிருந்த எல்லா ஊர்களும் அடங்கியிருந்தன. அந்த அரசன் எஸ்போன் நகரில் ஆண்டு வந்தான். எமோரியர் வாழ்ந்த பகுதி வரைக்கும் அத்தேசம் தொடர்ந்தது. 11 கீலேயாத் என்னும் ஊரும் அத்தேசத்தில் இருந்தது. கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்கள் வாழ்ந்த பகுதியும் அத்தேசத்தில் இருந்தது. எர்மோன் மலைப்பகுதி முழுவதும் சலேகாவரைக்குமான பாசானின் பகுதியும் அந்த நிலப் பகுதியில் அடங்கி இருந்தன. 12 ஓகின் அரசுக்குட்பட்ட நாடு முழுவதும் அதில் அடங்கியிருந்தது. பாசானில் ஓக் என்ற அரசன் ஆண்டு வந்தான். முன்பு அஸ்தரோத்திலும், எத்ரேயியிலும் அவன் ஆட்சிபுரிந்து கொண்டிருந்தான். ஓக் ரெபயத் ஜனங்கள் இனத்தவன், முன்பே மோசே இவர்களை வென்று, அவர்கள் நாட்டைக் கைப்பற்றியிருந்தான். 13 கெசூர், மாகா ஆகியவற்றின் ஜனங்களை, இஸ்ரவேல் ஜனங்கள் துரத்தவில்லை, இன்றும் இஸ்ரவேல் ஜனங்களோடுகூட அவர்களும் வாழ்கின்றனர்.

14 லேவி கோத்திரத்திற்கு எந்த நிலப் பகுதியும் கொடுக்கப்படவில்லை. இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு, தகன பலியாகக் கொடுக்கப்பட்ட மிருகங்கள் அனைத்தும் லேவி கோத்திரத்தினரைச் சார்ந்தவர்களுக்கு உரியனவாயின. கர்த்தர் அவர்களுக்கு வாக்களித்தது அதுவே.

15 ரூபனின் கோத்திரத்திலுள்ள ஒவ்வொரு கோத்திரத்திற்கும் மோசே வழங்கியிருந்த சிறிய நிலப்பகுதியை மட்டுமே அவர்கள் பெற்றிருந்தனர்: 16 அது அர்னோன் நதியருகேயுள்ள ஆரோவேரிலிருந்து மெதெபா என்ற ஊர் வரைக்கும் உள்ள பகுதியாகும். அந்நதியின் மத்தியிலுள்ள ஊரையும், சமவெளிப் பகுதியையும் அது உள்ளடக்கியிருந்தது. 17 எஸ்போன் வரைக்கும் அத்தேசம் இருந்தது. சமவெளியின் எல்லா ஊர்களையும் அது கொண்டிருந்தது. தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால், மெயோன் ஆகியப் பகுதிகளும், 18 யாகாசா, கொதெமோத், மேபாகாத், 19 கீரியாத்தாயீம், சிப்மா, ஆகியவையும், பள்ளத்தாக்கைச் சார்ந்த மலைப் பகுதிகளில் உள்ள செரேத்சகார், 20 பெத்பேயோர், பிஸ்காவின் மலைகள், பெத்யெசிமோத் ஆகிய பகுதிகளும் அந்த ஊர்களில் அடங்கியிருந்தன. 21 அத்தேசம் சமவெளியிலுள்ள எல்லா ஊர்களையும், எமோரியரின் அரசனாகிய சீகோன் அரசாண்ட எல்லாப் பகுதிகளையும் உள்ளடக்கியிருந்தது. எஸ்போன் என்னும் ஊரில் அந்த அரசன் அரசாட்சி செய்தான். ஆனால் மோசே அவனையும், மீதியானியரின் தலைவர்களையும் தோற்கடித்தான். ஏவி, ரெக்கேம், சூர், ஊர், ரேபா ஆகியோர் அத்தலைவர்கள் ஆவார்கள். (இத்தலைவர்கள் எல்லோரும் சீகோனுடன் ஒன்றுசேர்ந்து மோசேயை எதிர்த்துப் போரிட்டனர்.) இத்தலைவர்கள் எல்லோரும் அந்நாட்டில் வசித்தனர். 22 இஸ்ரவேல் ஜனங்கள் பேயோரின் மகனாகிய பாலாமைத் தோற்கடித்தனர். (எதிர்காலம் பற்றி தனது மந்திர சக்தியால் சொல்வதற்குப் பாலாம் முயன்று கொண்டிருந்தான்.) போரின்போது இஸ்ரவேல் ஜனங்கள் பலரைக் கொன்றனர். 23 யோர்தான் நதிக்கரை ரூபனுக்குக் கொடுக்கப்பட்ட நிலத்தின் எல்லையாக அமைந்தது. மேலே கூறப்பட்ட ஊர்களும் அவற்றின் வயல்களும் ரூபனுக்குச் சொந்தமான தேசத்தில் இருந்தன,

24 காத்தின் கோத்திரத்துக்கு அவரவர் வம்சங்களின்படி மோசே இத்தேசத்தைக் கொடுத்திருந்தான்:

25 யாசேரின் தேசமும் கீலேயாத்தின் எல்லா ஊர்களும், ராபாவின் அருகேயுள்ள ஆரோவேர் வரைக்குமான அம்மோனியரின் தேசத்தில் பாதியையும் கொடுத்தான். 26 அத்தேசம் எஸ்போனிலிருந்து ராமாத் மிஸ்பா பெத்தோனீம் வரைக்கும் உள்ள பகுதியைக் கொண்டிருந்தது. அத்தேசம் மக்னாயீமிலிருந்து தெபீர் வரைக்குமுள்ள இடத்தைக் கொண்டது. 27 பெத்ஹராம் பள்ளத்தாக்கு, பெத்நிம்ரா, சுக்கோத், சாப்போன் ஆகியவையும் அத்தேசத்தில் இருந்தன. எஸ்போனின் அரசனாகிய சீகோன் ஆண்ட மீதி நாடும் இந்த நிலத்தில் அடங்கியிருந்தது. யோர்தான் நதியானது அந்த நிலத்தில் கிழக்குப் பகுதியாக அமைந்தது. அந்த நிலம் கலிலேயா ஏரியின் கடைசி வரைக்கும் தொடர்ந்தது. 28 மோசே காத் கோத்திரத்தாருக்குக் கொடுத்த தேசத்தில் இவையெல்லாம் இருந்தன. மேலே தரப்பட்ட எல்லா ஊர்களும் அத்தேசத்தைச் சார்ந்தன. இவற்றை காத் கோத்திரத்தின் வம்சத்தினருக்கு மோசே பிரித்துக் கொடுத்தான்.

29 மனாசேயின் கோத்திரத்துக்கு மோசே கொடுத்த நிலம் பின்வருவதாகும்: மனாசே கோத்திரத்தின் பாதிப் பகுதியினர் இதனைப் பெற்றனர்.

30 மக்னாயீமில் தேசம் ஆரம்பித்தது. பாசான் முழுவதும் பாசானின் அரசனாகிய ஓகினால் ஆளப்பட்ட நாடும், பாசானில் யாவீரின் எல்லா ஊர்களும் அத்தேசத்தில் இருந்தன. (மொத்தம் 60 நகரங்கள் இருந்தன.) 31 கீலேயாத்தின் பாதிபாகம், அஸ்தரோத், எத்ரேயி ஆகிய நகரங்களும் அத்தேசத்தில் இருந்தன. (ஓக் அரசன் வசித்த நகரங்கள் கீலேயாத், அஸ்தரோத், எத்ரேயி ஆகியவை.) மனாசேயின் மகனாகிய மாகீரின் குடும்பத்திற்கு இத்தேசங்கள் எல்லாம் கொடுக்கப்பட்டன. மனாசேயின் மகன்களில் பாதிக்குடும்பத்தினர் அவற்றைப் பெற்றனர்.

32 மோசே இத்தேசத்தை இந்தக் கோத்திரத்தினருக்கு கொடுத்தான். மோவாப் சம வெளியில் ஜனங்கள் பாளையமிட்டிருந்தபோது மோசே இதைச் செய்தான். எரிகோவிற்குக் கிழக்கில் யோர்தான் நதிக்குக் குறுக்காக இது இருந்தது.

33 லேவியின் கோத்திரத்தினருக்கு மோசே எந்த நிலத்தையும் கொடுக்கவில்லை. லேவி கோத்திரத்தினருக்கு, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரே பங்காக அமைவதாக வாக்களித்திருந்தார்.

சங்கீதம் 145

தாவீதின் ஜெபங்களுள் ஒன்று

145 என் தேவனும் அரசருமாகிய உம்மைத் துதிக்கிறேன்.
    உமது நாமத்தை நான் என்றென்றும் எப்போதும் போற்றுகிறேன்.
நான் ஒவ்வொரு நாளும் உம்மைத் துதிக்கிறேன்.
    நான் உமது நாமத்தை என்றென்றும் எப்போதும் துதிக்கிறேன்.
கர்த்தர் பெரியவர்.
    ஜனங்கள் அவரை அதிகம் துதிக்கிறார்கள்.
    அவர் செய்கிற பெருங்காரியங்களை நாம் எண்ணமுடியாது.
கர்த்தாவே, நீர் செய்யும் காரியங்களுக்காக ஜனங்கள் உம்மை என்றென்றும் எப்போதும் துதிப்பார்கள்.
    நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைக் குறித்து அவர்கள் சொல்வார்கள்.
உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை.
    உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.
கர்த்தாவே, நீர் செய்யும் வியக்கத்தக்க காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    நீர் செய்யும் மேன்மையான காரியங்களைப்பற்றி நான் சொல்வேன்.
நீர் செய்யும் நல்ல காரியங்களைப்பற்றி ஜனங்கள் சொல்வார்கள்.
    உமது நன்மையைப்பற்றி ஜனங்கள் பாடுவார்கள்.
கர்த்தர் தயவும் இரக்கமுமுள்ளவர்.
    கர்த்தர் பொறுமையும் மிகுந்த அன்புமுள்ளவர்.
கர்த்தர் எல்லோருக்கும் நல்லவர்.
    தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றிற்கும் அவரது இரக்கத்தைக் காட்டுகிறார்.
10 கர்த்தாவே, நீர் செய்பவை யாவும் உமக்குத் துதிகளைக் கொண்டுவரும்.
    உம்மைப் பின்பற்றுவோர் உம்மை ஆசீர்வதிக்கிறார்கள்.
11 உமது அரசு எவ்வளவு மேன்மையானது என அவர்கள் சொல்வார்கள்.
    நீர் எவ்வளவு மேன்மையானவர் என்பதை அவர்கள் சொல்வார்கள்.
12 கர்த்தாவே, அப்போது பிறர் நீர் செய்யும் உயர்ந்த காரியங்களைப்பற்றி அறிந்துகொள்கிறார்கள்.
    உமது அரசு எவ்வளவு மேன்மையும் அற்புதமுமானது என்பதை அவர்கள் அறிந்துகொள்கிறார்கள்.
13 கர்த்தாவே, உமது அரசு என்றென்றும் தொடரும்.
    நீர் என்றென்றும் அரசாளுவீர்.
14 கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார்.
    கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.
15 கர்த்தாவே, தங்கள் உணவுக்காக எல்லா உயிரினங்களும் உம்மை நோக்கியிருக்கின்றன.
    அவற்றிற்குத் தக்க நேரத்தில் நீர் உணவளிக்கிறீர்.
16 கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து,
    ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.
17 கர்த்தர் செய்கின்ற எல்லாம் நல்லவையே.
    அவர் செய்பவை எல்லாம் அவர் எவ்வளவு நல்லவர் என்பதைக் காட்டும்.
18 கர்த்தரிடம் உதவி கேட்கிற ஒவ்வொருவனிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
    உண்மையாகவே அவரைத் தொழுதுகொள்கிற ஒவ்வொருவரிடமும் அவர் நெருக்கமுள்ளவராயிருக்கிறார்.
19 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோர் விரும்புகின்றவற்றைச் செய்கிறார்.
    கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோருக்குச் செவிகொடுக்கிறார்.
    அவர்களின் ஜெபங்களுக்கு அவர் பதிலளித்து அவர்களைக் காப்பாற்றுகிறார்.
20 கர்த்தர் தம்மை நேசிக்கிற ஒவ்வொருவரையும் காப்பாற்றுகிறார்.
    ஆனால் கர்த்தர் தீயோரை அழிக்கிறார்.
21 நான் கர்த்தரைத் துதிப்பேன்!
    என்றென்றைக்கும் எப்போதும் அவரது பரிசுத்த நாமத்தை ஒவ்வொருவரும் துதிக்கவேண்டுமென நான் விரும்புகிறேன்.

எரேமியா 6

பகைவர் எருசலேமை சுற்றிவளைத்தனர்

பென்யமீன் ஜனங்களே! உங்கள் உயிருக்காக ஓடுங்கள்.
    எருசலேம் நகரத்தை விட்டுத் தூர ஓடுங்கள்!
தெக்கோவா நகரில் போர் எக்காளத்தை ஊதுங்கள்!
    பெத்கேரேம் நகரில் எச்சரிக்கை கொடியை ஏற்றுங்கள்!
நீங்கள் இவற்றை செய்யுங்கள்.
ஏனென்றால், வடக்கிலிருந்து பேரழிவானது வந்துகொண்டிருக்கிறது.
பயங்கரமான பேரழிவு உங்களுக்கு வந்துகொண்டிருக்கிறது.
சீயோனின் மகளே, நீ ஒரு அழகான மென்மையான
    பெண் போன்றுள்ளாய்.
மேய்ப்பர்கள் எருசலேமிற்கு வருகிறார்கள்,
    அவர்கள் தம் ஆட்டு மந்தையைக் கொண்டுவருகிறார்கள்.
எருசலேமைச் சுற்றி தங்கள் கூடாரங்களை அமைத்தனர்.
    ஒவ்வொரு மேய்ப்பனும், அவனது சொந்த மந்தையைக் கவனிக்கின்றனர்.

“எருசலேமிற்கு எதிராகப் போராடத் தயாராகுங்கள்.
    எழுந்திருங்கள்! நாம் மதிய நேரத்தில் நகரத்தைத் தாக்குவோம்;
ஆனால் ஏற்கனவே தாமதமாகிவிட்டது.
    மாலை நிழல் நீளமாக வளர்ந்துக்கொண்டிருக்கின்றது.
எனவே, புறப்படுங்கள்! இரவில் நகரத்தை நாம் தாக்குவோம்!
    எருசலேமைச் சுற்றியிருக்கின்ற உறுதியான சுவர்களை அழிப்போம்.”

சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
    “எருசலேமை சுற்றியுள்ள மரங்களை வெட்டிப்போடுங்கள், அதன் சுவருக்கு எதிராக எடுசுவரை எழுப்புங்கள்.
இந்த நகரம் தண்டிக்கப்படவேண்டும்!
    இந்த நகரத்தின் உட்பகுதியில் கொடுமையைத் தவிர வேறு எதுவுமில்லை.
ஒரு கிணறு தனது தண்ணீரைப் புதிதாக சுரக்கிறது,
    இதுபோலவே எருசலேமும் தனது தீங்கை சுரக்கபண்ணுகிறது,
நகரத்திற்குள் எல்லா நேரத்திலும், கொடுமையும், வன்முறையும் நிகழ்வதை நான் கேள்விப்படுகிறேன்.
    எருசலேமிற்குள் எப்பொழுதும் துன்பமும், நோயும் இருப்பதைப் பார்க்கிறேன்.
எருசலேமே! இந்த எச்சரிக்கையை கவனி!
    நீ கவனிக்காவிட்டால், பிறகு நான் உனக்கு எனது முதுகைத் திருப்புவேன்,
உனது நாட்டை ஒரு வெறும் வனாந்தரமாக நான் செய்வேன்.
    அங்கு எவரும் வாழமுடியாமல் போகும்” என்று கூறுகிறார்.

சர்வ வல்லமையுள்ள கர்த்தர்,
“தங்கள் தேசத்தில் விடப்பட்டிருந்த இஸ்ரவேல் ஜனங்களை ஒன்று சேருங்கள்,
    நீங்கள் திராட்சைத் தோட்டத்தில் இறுதியில்
பழுத்த பழங்களை சேகரிப்பதுபோன்று
    அவர்களை ஒன்று சேருங்கள்.
ஒரு வேலைக்காரன் ஒவ்வொரு திராட்சைப் பழத்தையும் பறிக்குமுன்
    சோதிப்பதுபோன்று சோதியுங்கள்” என்று கூறுகிறார்.
10 நான் யாரோடு பேசுவேன்?
    நான் யாரை எச்சரிக்க முடியும்?
    நான் சொல்வதை யார் கேட்பார்கள்?
இஸ்ரவேல் ஜனங்கள் தம் காதுகளை மூடிக்கொண்டார்கள்.
    எனவே, எனது எச்சரிக்கைகளை அவர்களால் கேட்கமுடியாது.
ஜனங்கள் கர்த்தருடைய போதனைகளை விரும்புகிறதில்லை,
    அவரது செய்தியை அவர்கள் கேட்க விரும்பவில்லை.
11 ஆனால் நான், (எரேமியா) கர்த்தருடைய கோபத்தால் முழுமையாக நிறைந்திருக்கிறேன்!
    நான் அதனைத் தாங்குவதில் சோர்ந்துபோனேன்.
“தெருவில் விளையாடிக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மீது கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
    கூடுகின்ற இளைஞர் மேல் கர்த்தருடைய கோபத்தை ஊற்றுங்கள்.
ஒரு ஆணும் அவனது மனைவியும் சேர்த்து கைபற்றப்படுவார்கள்.
வயதான ஜனங்கள் அனைவரும் கைபற்றப்படுவார்கள்.
12 அவர்களின் வீடுகள் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
    அவர்களின் வயல்களும் மனைவிகளும் மற்றவர்களுக்குக் கொடுக்கப்படும்.
நான் என்னுடைய கையை உயர்த்தி யூதாவின் ஜனங்களைத் தண்டிப்பேன்”

என்று கர்த்தர் சொல்லுகிறார்.

13 “இஸ்ரவேலில் உள்ள அனைத்து ஜனங்களும் மேலும் மேலும் பணத்தை விரும்புகின்றனர்.
    முக்கியத்துவம் குறைந்த ஜனங்களிலிருந்து முக்கியத்துவம் மிகுந்த ஜனங்கள்வரை அனைத்து ஜனங்களும், இதுபோலவே இருக்கின்றனர்.
    தீர்க்கதரிசிகளிலிருந்து ஆசாரியர்கள்வரை, அனைத்து ஜனங்களும் பொய்களைக் கூறுகின்றனர்.
14 என்னுடைய ஜனங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
    தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், அந்தக் காயங்களுக்குக் கட்டுப் போடவேண்டும்.
அவர்கள் சிறிய காயங்களுக்கு, சிகிச்சை செய்வதுபோன்று, அவர்கள் புண்களுக்கு சிகிச்சை செய்கின்றனர்.
    ‘இது சரியாக இருக்கிறது, எல்லாம் சரியாக இருக்கிறது!’
    என்று கூறுகிறார்கள்.
ஆனால் அது சரியாக இல்லை!
15 தீர்க்கதரிசிகளும், ஆசாரியர்களும், தாங்கள் செய்கிற தீயச்செயல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.
    ஆனால், அவர்கள் கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை.
தங்கள் பாவங்களுக்காக வெட்கப்படும் அளவிற்கு அவர்களுக்கு போதிய அறிவில்லை;
    எனவே, அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படுவார்கள்.
    நான் ஜனங்களைத் தண்டிக்கும்போது, அவர்கள் தரையில் வீசியெறியப்படுவார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

16 கர்த்தர் இவற்றைக் கூறுகிறார்:
“வழிகளில் நின்று கவனி.
பழையசாலை எங்கே என்று கேள்.
    நல்ல சாலை எங்கே என்று கேள்.
    அந்தச் சாலையில் நட.
    நீ செய்தால், உனக்குள் நீ ஓய்வைக் கண்டுபிடிப்பாய்.
ஆனால் நீங்களோ, ‘நாங்கள் நல்ல சாலைகளில் நடக்கமாட்டோம்!’ என்று கூறினீர்கள்.
17 உங்களை கவனிக்க காவல்காரர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
    நான் அவர்களிடம், ‘போர் எக்காள சத்தத்தை கவனியுங்கள்’ என்று கூறினேன்.
    ஆனால் அவர்களோ, ‘நாங்கள் கவனிக்கமாட்டோம்!’ என்று கூறினார்கள்.
18 எனவே, தேசத்திலுள்ளவர்களே!
    கேளுங்கள் சபையே,
19 பூமியின் ஜனங்களே,
    யூதா ஜனங்களுக்கு நான் பேரழிவைக் கொண்டுவருவேன்.
    ஏனென்றால், அவர்கள் எல்லா தீயச்செயல்களுக்கும் திட்டமிடுகிறார்கள்.
    அவர்கள் என் வார்த்தையை உதாசினப்படுத்தினார்கள்.
    அந்த ஜனங்கள் என் சட்டங்களுக்கு அடிபணிய மறுத்தனர்.”

20 கர்த்தர் அவர்களிடம், “ஏன் நீங்கள் சேபா நாட்டிலுள்ள நறுமணப் பொருட்களையும்,
    தொலை நாடுகளிலுள்ள சுகந்தப் பட்டைகளையும் எனக்குக் கொண்டு வருகிறீர்கள்?
உங்களது சர்வாங்கத் தகன பலிகள் எனக்கு மகிழ்ச்சியளிப்பதில்லை,
    உங்களது பலிகள் எனக்கு இன்பமாயிராது” என்று கூறினார்.

21 எனவே இதுதான் கர்த்தர் கூறுவது:
“யூதாவிலுள்ள ஜனங்களுக்கு நான் சிக்கல்களை கொண்டு வருவேன்.
    அவை ஜனங்களை விழச் செய்யும் கற்களைப்போன்று இருக்கும்.
தந்தைகளும் மகன்களும் ஒருவர் மேல் ஒருவர் இடறி விழுவார்கள்.
    நண்பர்களும் அருகில் உள்ளவர்களும் மரித்துப்போவார்கள்.”

22 கர்த்தர் சொல்லுகிறதாவது:
“ஒரு படையானது வடக்கிலிருந்து வந்துகொண்டிருக்கிறது.
    பூமியிலுள்ள, தொலைதூர இடங்களிலிருந்து ஒரு பெரிய தேசம் வந்துகொண்டிருக்கிறது.
23 வீரர்கள் வில்லையும் ஈட்டியையும் கொண்டு வருகின்றனர்.
    அவர்கள் கொடுமையானவர்கள்.
அவர்களிடம் இரக்கம் இல்லை.
    அவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள்,
அவர்கள், குதிரைகள் மேல் சவாரி செய்து வரும்போது,
    இரைகின்ற கடலைப்போன்று சத்தம் எழுப்புகிறார்கள்.
சண்டை செய்வதற்கு தயாராக அப்படை வந்துக்கொண்டிருக்கிறது.
    சீயோனின் குமாரத்தியே! அந்தப் படை உங்களை தாக்கிட வந்துகொண்டிருக்கிறது.”
24 அந்தப் படையைப் பற்றியச் செய்தியைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
    எங்களின் துன்ப வலையில் மாட்டிக்கொண்டதாக உணர்கிறோம்.
பயத்தினால் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக இருக்கிறோம்.
    பிரசவிக்கும் பெண்ணைப்போன்று வேதனையில் இருக்கிறோம்.
25 வெளியே வயல்களுக்குப் போகாதீர்கள்.
    சாலைகளில் போகாதீர்கள்,
ஏனென்றால் பகைவர்கள் வாள் வைத்திருக்கின்றனர்.
    எல்லா இடங்களிலும் ஆபத்து இருக்கிறது.
26 என் சாக்கு ஆடையை அணிந்துக்கொள்ளுங்கள்.
    சாம்பலில் புரளுங்கள்.
மரித்த ஜனங்களுக்காக உரக்க அழுங்கள்.
    ஒரே மகனை இழந்ததைப்போன்று அழுங்கள்,
இவற்றையெல்லாம் செய்யுங்கள்;
    ஏனென்றால், நமக்கு எதிரியான, அழிவுக்காரன் மிகவேகமாக வந்துக்கொண்டிருக்கிறான்.

27 “எரேமியா! நான், (கர்த்தர்) உன்னை உலோகத்தை
    சோதித்துப்பார்க்கும் வேலையாளாக வைத்தேன்,
நீ எனது ஜனங்களை சோதிப்பாய்;
    அவர்கள் எவ்வாறு வாழ்கின்றார்கள் என்று கவனிப்பாய்.
28 என்னுடைய ஜனங்களே, எனக்கு எதிராக திரும்பியிருக்கின்றனர்,
    அவர்கள் மிகவும் கடினமானவர்கள்.
    அவர்கள் ஜனங்களைப்பற்றி தவறானவற்றைச் சொல்கிறார்கள், ஜனங்களைப்பற்றி கெட்டவற்றைச் சொல்கிறார்கள்.
துருவும் கறையும் கொண்ட அவர்கள் எல்லோரும் தீயவர்கள்.
    அவர்கள் வெண்கலத்தைப்போன்றும் இரும்பைப் போன்றும் இருக்கின்றனர்.
29 அவர்கள் வெள்ளியை சுத்தப்படுத்த முயலும் வேலைக்காரர்களைப் போன்றுள்ளனர்.
துருத்திகள் பலமாக ஊதப்படுகின்றன.
நெருப்பு மேலும் சூடாகின்றது.
    ஆனால் நெருப்பிலிருந்து ஈயம்மட்டும் வருகின்றது.
அந்த வெள்ளியை சுத்தப்படுத்துவதில் வேலையாள் தனது காலத்தை வீணாக்கிவிட்டான்.
இதுபோலவே, எனது ஜனங்களிடமிருந்து தீயவை விலக்கப்படவில்லை.
30 என்னுடைய ஜனங்கள் ‘தள்ளுபடியான வெள்ளி’ என்று அழைக்கப்படுவார்கள், அவர்களுக்கு அந்தப் பெயர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
    ஏனென்றால், கர்த்தர் அவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை.”

மத்தேயு 20

தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிய உவமை

20 ,“பரலோக இராஜ்யமானது சிறிது நிலம் வைத்திருந்த ஒருவனைப் போன்றது, அவன் தனது நிலத்தில் திராட்சை விளைவித்தான். ஒரு நாள் காலை தன் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடிப் போனான். ஒரு நாள் வேலைக்கு ஒரு வெள்ளிக்காசு கூலி தர அவன் ஒத்துக்கொண்டான். பிறகு வேலை ஆட்களைத் தன் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அனுப்பினான்.

,“சுமார் ஒன்பது மணிக்கு அம்மனிதன் சந்தைப் பக்கமாகப் போனான். அங்கு சிலர் வேலை ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருப்பதைக் கண்டான். எனவே அவன் அவர்களிடம், ‘நீங்கள் சென்று என் தோட்டத்தில் வேலை செய்தால், நீங்கள் செய்யும் வேலைக்குத் தகுந்தாற்போல உங்களுக்கு ஊதியம் தருகிறேன்’ என்றான். எனவே, அவர்களும் அவன் தோட்டத்தில் வேலை செய்யச் சென்றார்கள்.

, “மீண்டும் அவன் பன்னிரண்டு மணி அளவிலும் மூன்றுமணி அளவிலும் வெளியில் சென்று, ஒவ்வொரு முறையும் மேலும் சிலரைத் தன் தோட்டத்தில் வேலை செய்ய அழைத்து வந்தான். மீண்டும் ஐந்து மணி அளவில் சந்தைவெளிக்குச் சென்றான். மேலும் சிலர் அங்கே நின்றிருப்பதைக் கண்டு அவர்களிடம், ‘ஏன் நாள் முழுக்க வேலை எதுவும் செய்யாமல் இங்கே நின்றிருந்தீர்கள்’ என்று கேட்டான்.

,“அதற்கு அவர்கள், ‘எங்களுக்கு யாரும் வேலை தரவில்லை’ என்றார்கள்.

, “அதற்கு அந்த திராட்சைத் தோட்டக்காரன், ‘அப்படியானால், நீங்கள் என் தோட்டத்திற்குச் சென்று வேலை செய்யலாம்’ என்றான்.

,“அன்று மாலை திராட்சைத் தோட்டக்காரன் வேலைக்காரர்களைக் கவனிக்கும் மேற்பார்வையாளனிடம், ‘வேலைக்காரர்கள் அனைவரையும் அழைத்து அவர்களுக்குப் பணம் கொடுத்துவிடு. நான் கடைசியாக அழைத்து வந்தவர்களுக்கு முதலில் பணம் கொடு. இப்படியே அனைவருக்கும் நான் முதலில் அழைத்து வந்தவன் வரைக்கும் பணம் கொடு’ என்றான்.

,“மாலை ஐந்து மணிக்கு அமர்த்தப்பட்ட வேலைக்காரர்கள் தங்கள் கூலியை வாங்க வந்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு வெள்ளி நாணயம் கிடைத்தது. 10 பின்னர் முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆட்கள் தங்கள் கூலியைப் பெற வந்தபொழுது, தங்களுக்கு அதிகக் கூலி கிடைக்கும் என்று எண்ணினார்கள். ஆனால் அவர்களுக்கும் தலைக்கு ஒரு வெள்ளி நாணயமே கிடைத்தது. 11 அவர்கள் ஒரு வௌ்ளி நாணயம் மட்டுமே கூலியாகக் கிடைத்தபொழுது, தோட்டத்துச் சொந்தக்காரனிடம் புகார் செய்தார்கள். 12 அவர்கள், ‘கடைசியாக வேலைக்கு வந்தவர்கள், ஒரு மணி நேரமே வேலை செய்தார்கள். ஆனால், நாங்கள் நாள் முழுவதும் வெயிலில் கடுமையாக உழைத்துள்ளோம். ஆனால், எங்களுக்குச் சமமாக அவர்களுக்கும் கூலி கொடுத்துள்ளீர்கள்’ என்று புகார் கூறினார்கள்.

13 ,“ஆனால் தோட்டக்காரனோ அந்த ஆட்களில் ஒருவனிடம், ‘நண்பனே, நான் உனக்கு சரியாகவே கூலி கொடுத்துள்ளேன். ஒரு வெள்ளி நாணயத்திற்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டாய். சரிதானே? 14 எனவே, உன் கூலியைப் பெற்றுக்கொண்டு செல். நான் கடைசியாக வேலைக்கு அமர்த்தியவர்களுக்கும் உனக்கும் சமமாகவே கூலி கொடுக்க விரும்புகிறேன். 15 நான் என் பணத்தில் என் விருப்பப்படி செய்யலாம். நான் அவர்களிடம் பெருந்தன்மையுடன் நடந்துகொள்கிறேன் என்பதால் உனக்குப் பொறாமையா?’ என்று கூறினான்.

16 ,“ஆகவே, இப்பொழுது கடைசி ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் முதல் ஸ்தானத்திற்குச் செல்வார்கள். மேலும் இப்பொழுது முதல் ஸ்தானத்தில் இருப்பவர்கள் எதிர்காலத்தில் கடைசி ஸ்தானத்திற்குச் செல்வார்கள்” என்றார்.

தமது மரணத்தைப் பற்றி பேசுதல்(A)

17 இயேசு எருசலேமுக்குத் தம் சீஷர்களுடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் நடந்து சென்று கொண்டிருந்தபொழுது, இயேசு தம் சீஷர்களை அழைத்துத் தனியாகப் பேசினார். இயேசு அவர்களிடம், 18 ,“நாம் எருசலேமுக்குப் போய்கொண்டிருக்கிறோம். தலைமை ஆசாரியர்களிடமும் வேதபாரகர்களிடமும் மனித குமாரன் ஒப்படைக்கப்படுவார். அவர்கள் மனித குமாரன் இறக்க வேண்டும் என்பார்கள். 19 யூதர்கள் அல்லாத வேற்று மனிதர்களிடம் மனித குமாரனை ஒப்படைப்பார்கள். அவர்கள் அவரைக் கேலி செய்து சவுக்கால் அடித்து சிலுவையில் அறைந்து கொல்வார்கள். ஆனால், மூன்றாவது நாள் மரணத்திலிருந்து மனித குமாரன் உயிர்த்தெழுவார்” என்று கூறினார்.

ஒரு தாய் விசேஷ உதவி கேட்டல்(B)

20 பின்னர், செபதேயுவின் மகன்களுடன் அவர்களின் தாய் இயேசுவைத் தேடி வந்தாள். அவள் இயேசுவின் முன் மண்டியிட்டு தனக்கு ஒரு உதவி செய்ய வேண்டினாள்.

21 இயேசு அவளிடம்,, “உனக்கு என்னவேண்டும்?” என்று கேட்டார்.

அவள்,, “எனது ஒரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது வலது பக்கம் இருக்கவும், மற்றொரு மகன் உங்கள் இராஜ்யத்தில் உங்களது இடது பக்கம் இருக்கவும் வாக்களியுங்கள்” என்று கேட்டாள்.

22 அதைக் கேட்ட இயேசு அவளது மகன்களிடம்,, “நீங்கள் என்ன வேண்டுகிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளவில்லை. நான் அனுபவிக்கப்போகும் துன்பத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமா?” என்று கேட்டார்.

, “ஆம், எங்களால் முடியும்” என்று அவர்கள் பதில் சொன்னார்கள்.

23 இயேசு அவர்களிடம்,, “மெய்யாகவே எனக்கு ஏற்படும் துன்பம் உங்களுக்கும் ஏற்படும். ஆனால் என் வலது இடது பக்கங்களில் உட்காரப்போகிறவர்களை என்னால் முடிவு செய்ய இயலாது. அந்த இடம் யாருக்கு என்பதை என் பிதா முடிவு செய்துவிட்டார். அவர்களுக்காகவே அந்த இடங்களை அவர் தயார் செய்துள்ளார். அந்த இடங்கள் அவர்களுக்கே உரியவை” என்றார்.

24 இந்த உரையாடலைக் கேட்ட மற்ற பத்து சீஷர்களும் அவ்விரு சகோதரர்களின் மீதும் கோபம் கொண்டார்கள். 25 இயேசு எல்லா சீஷர்களையும் ஒன்றாக அழைத்து, அவர்களிடம், “யூதரல்லாத மக்களின் ஆட்சியாளர்கள் தங்கள் அதிகாரத்தை காட்டிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். அவர்களின் முக்கியமான தலைவர்கள் மக்களின் மீது முழு அதிகாரத்தை செலுத்த விரும்புகிறார்கள். 26 ஆனால், நீங்கள் அப்படி இருக்கக் கூடாது. உங்களில் ஒருவன் பெரியவனாக ஆக விரும்பினால், அவன் உங்களுக்கு ஒரு வேலைக்காரனைப் போல ஊழியம் செய்ய வேண்டும். 27 உங்களில் ஒருவன் முதலாவதாக வர விரும்பினால், அவன் உங்களுக்கு ஓர் அடிமையைப் போல் ஊழியம் செய்ய வேண்டும். 28 மனித குமாரனும் அப்படியே. தனக்கு மற்றவர்கள் ஊழியம் செய்வதற்காக அவர் வரவில்லை. மற்றவர்களுக்கு ஊழியம் செய்யவே மனித குமாரன் வந்தார். பலரது வாழ்வை இரட்சிப்பதற்கு தன் உயிரைக் கொடுக்கவே மனித குமாரன் வந்தார்” என்று கூறினார்.

இரண்டு குருடர்களை இயேசு குணமாகுதல்(C)

29 இயேசுவும் அவரது சீஷர்களும் எரிகோவைவிட்டுச் சென்றபொழுது, ஏராளமான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள். 30 சாலையோரம் அமர்ந்திருந்த இரு குருடர்கள், இயேசு வந்து கொண்டிருக்கிறார் என்பதைக் கேள்விப்பட்டு,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று உரக்கக் கூவினார்கள்.

31 அனைவரும் அக்குருடர்களைக் கடிந்து கொண்டார்கள், அவர்களை அமைதியாயிருக்கக் கூறினார்கள். ஆனால், அக்குருடர்களோ மேலும் மேலும் சத்தமாக,, “ஆண்டவரே, தாவீதின் மகனே, எங்களுக்கு உதவுங்கள்” என்று கூவினார்கள்.

32 இயேசு நின்று, அக்குருடர்களைப் பார்த்து,, “உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார்.

33 அதற்குக் குருடர்கள்,, “ஆண்டவரே, நாங்கள் பார்வை பெற வேண்டும்” என்றார்கள்.

34 அவர்கள் மேல் இயேசு மிகவும் இரக்கம் கொண்டார். இயேசு அவர்களது கண்களைத் தொட்டார். அவர்கள் இருவரும் பார்வை பெற்றார்கள். பின்னர் அவர்கள் இருவரும் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center