M’Cheyne Bible Reading Plan
வடக்குப் பகுதியின் பட்டணங்களைத் தோற்கடித்தல்
11 ஆத்சோரின் அரசனாகிய யாபீன், நடந்த எல்லா காரியங்களையும் குறித்துக் கேள்விப்பட்டான். எனவே பல அரசர்களின் சேனைகளையும் திரட்ட முடிவு செய்தான். மாதோனின் அரசனாகிய யோபாபிடத்திற்கும், சிம்ரோனின் அரசனிடத்திற்கும், அக்சாபாவின் அரசனிடத்திற்கும், 2 வடக்கிலும், மலைநாடுகளிலும், பாலைவனங்களிலும் உள்ள மற்ற அரசர்களுக்கும் செய்தியனுப்பினான். கின்னரோத், நெகேவ், மேற்கிலுள்ள மலையடிவாரங்களிலுள்ள அரசர்களுக்கும் யாபீன் செய்தியனுப்பினான். மேற்கிலுள்ள நாபோத், தோரின் அரசனுக்கும் யாபீன் செய்தி அனுப்பினான். 3 கிழக்கிலும் மேற்கிலும் உள்ள கானானியரின் அரசர்களுக்கும் யாபீன் செய்தியைத் தெரிவித்தான். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், எர்மோன் மலைக்குக் கீழே மிஸ்பாவிற்கு அருகிலுள்ள ஏவியர் ஆகியோருக்கும் செய்தி கூறினான். 4 எனவே இந்த அரசர்களின் படைகள் அனைத்தும் ஒன்று கூடி போர் வீரர்களும், குதிரைகளும், இரதங்களும் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தபடியால், அது மிகவும் பெரிய படையாக இருந்தது. கடற்கரையின் மணலைப் போன்று ஆட்கள் ஏராளமாக இருந்தனர்.
5 மோரோம் என்கிற சிறு நதிக்கருகே எல்லா அரசர்களும் சந்தித்தனர். அவர்கள் தங்கள் படைகளை எல்லாம் ஒன்றிணைத்து இஸ்ரவேலுக்கு எதிராகப் போர் செய்யத் திட்டமிட்டனர்.
6 அப்போது கர்த்தர் யோசுவாவை நோக்கி, “அப்படையைக் கண்டு அஞ்சாதே. நீ அவர்களைத் தோற்கடிக்கச் செய்வேன். நாளை இதே வேளையில், நீ அவர்களையெல்லாம் கொன்றிருப்பாய். நீங்கள் குதிரையின் கால்களை வெட்டி, அவர்களின் இரதங்களை எரித்துப் போடுவீர்கள்” என்று சொன்னார்.
7 யோசுவாவும் அவனது படையினரும் பகைவரை வியப்படையச் செய்தனர். மேரோம் நதிக்கரையில் அவர்கள் பகைவர்களைத் தாக்கினார்கள். 8 பிறகு இஸ்ரவேலர் அவர்களைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார். இஸ்ரவேல் படையினர் அவர்களைத் தோற்கடித்து பெரிய சீதோன், மிஸ்ர போத்மாயீம், கிழக்கேயுள்ள மிஸ்பா பள்ளத்தாக்கு வரைக்கும் துரத்தினார்கள். பகைவரில் ஒருவரும் உயிரோடிராதபடிக்கு இஸ்ரவேல் படையினர் போர் செய்தார்கள். 9 கர்த்தர் செய்யும்படியாகக் கூறியவற்றையெல்லாம் அவன் செய்தான். யோசுவா அவர்களது குதிரைகளின் கால்களை வெட்டி, அவர்களது தேர்களை எரித்தான்.
10 பின் யோசுவா திரும்பிச் சென்று ஆத்சோரைக் கைப்பற்றினான். ஆத்சோரின் அரசனைக் கொன்றான். (இஸ்ரேவலுக்கு எதிராகப் போர் செய்த எல்லா அரசுகளுக்கும் ஆத்சோர் தலைமை தாங்கி இருந்தான்.) 11 இஸ்ரவேல் படை நகரிலிருந்த ஒவ்வொருவரையும் கொன்றழித்தது. எல்லா ஜனங்களையும் அவர்கள் அழித்துப்போட்டனர். எதுவும் உயிரோடு விடப்பட்டிருக்கவில்லை. பிறகு அவர்கள் அந்த நகரை எரித்தனர்.
12 யோசுவா எல்லா நகரங்களையும் கைப்பற்றினான். அவற்றின் அரசர்களையும், நகரங்களில் இருந்த எல்லாவற்றையும் அழித்தான். கர்த்தருடைய ஊழியனாகிய மோசே, கட்டளையிட்டபடியே யோசுவா செய்தான். 13 ஆனால் இஸ்ரவேல் படை மலைகளின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களை எரிக்கவில்லை. மலையின் மேல் கட்டப்பட்டிருந்த நகரங்களில் அவர்கள் எரித்தழித்த ஒரே நகரம் ஆத்சோர் ஆகும். யோசுவா இந்நகரத்தை எரித்தான். 14 நகரங்களில் கிடைத்த எல்லாப் பொருட்களையும் இஸ்ரவேல் ஜனங்கள் தங்களுக்காக வைத்துக்கொண்டனர். நகரத்திலிருந்த மிருகங்களையும் அவர்களுக்காக எடுத்துக்கொண்டனர். ஆனால் மனிதர்கள் எல்லோரையும் கொன்றுவிட்டனர். அவர்கள் ஒருவரையும் உயிரோடிருக்க அனுமதிக்கவில்லை. 15 வெகு நாட்களுக்கு முன்னரே கர்த்தர் அவரது ஊழியனாகிய மோசேக்கு இவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டார். பின் மோசே யோசுவாவிற்கு இவ்வாறு செய்யக் கட்டளை தந்தான். ஆகையால் யோசுவா தேவனுக்குக் கீழ்ப்படிந்தான். மோசேக்கு கர்த்தர் கட்டளையிட்டவற்றையெல்லாம் யோசுவா செய்தான்.
16 அந்நாடு முழுவதிலுமுள்ள ஜனங்கள் எல்லாரையும் யோசுவா தோற்கடித்தான். மலை நாடுகள், பாலைவனங்கள், கோசேனின் பகுதிகள், மேற்கு மலையடிவாரத்தின் பகுதிகள், யோர்தான் பள்ளத்தாக்கு, இஸ்ரவேலின் பர்வதங்கள், அருகேயுள்ள மலைகள் அனைத்தையும் தன் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தினான். 17 சேயீருக்கு அருகிலுள்ள ஆலாக் மலையிலிருந்து லீபனோனின் பள்ளத்தாக்கில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால் காத்வரைக்குமுள்ள இடங்களிலும் யோசுவாவுக்கு அதிகாரம் செலுத்த முடிந்தது. அங்குள்ள எல்லா அரசர்களையும் பிடித்து அவர்களைக் கொன்றான். 18 நீண்டகாலம் அந்த அரசர்களோடு யோசுவா போர் செய்தான். 19 அப்பகுதியில் இருந்த ஒரே ஒரு நகரம் மட்டுமே இஸ்ரவேலரோடு சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. கிபியோனிலுள்ள ஏவியரின் நகரமே அது. மற்ற நகரங்களெல்லாம் போரில் தோல்வி கண்டன. 20 அந்த ஜனங்கள் தங்களை வலியவர்களாக கருதும்படி கர்த்தர் செய்தார். அப்போதுதான் அவர்கள் இஸ்ரவேலரோடு போர் செய்யக் கருதக்கூடும், இரக்கமின்றி அந்த ஜனங்களை அழிப்பதற்கு யோசுவாவிற்கு வழியுண்டாகும். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவன் அவர்களை அழிக்கமுடியும்.
21 எபிரோன், தெபீர், ஆனாப், யூதா ஆகிய மலை நாடுகளில் ஏனாக்கியர் வாழ்ந்து வந்தனர். யோசுவா அவர்களோடு போர் தொடுத்து அவர்களையும், அவர்களது ஊர்களையும் முற்றிலும் அழித்தான். 22 இஸ்ரவேல் நாட்டில் ஏனாக்கியர் ஒருவரும் வாழவில்லை. காசா, காத், ஆஸ்தோத் நாடுகளில் மட்டுமே ஏனாக்கியர் உயிரோடு விடப்பட்டனர். 23 முன்பே கர்த்தர் மோசேக்குக் கூறியிருந்தபடி, யோசுவா இஸ்ரவேல் நாட்டின் மீது ஆதிக்கம் உடையவனானான். வாக்களித்தபடியே கர்த்தர் இஸ்ரவேலருக்கு அத்தேசத்தைக் கொடுத்தார். இஸ்ரவேலின் கோத்திரங்கள் அனைத்திற்கும் அத்தேசத்தை யோசுவா பிரித்துக் கொடுத்தான். இறுதியில் போர் முடிந்து, அத்தேசத்தில் அமைதி நிலவிற்று.
தாவீதின் ஒரு பாடல்
144 கர்த்தர் என் கன்மலை.
கர்த்தரைப் போற்றுங்கள்.
கர்த்தர் என்னைப் போருக்குப் பழக்கப்படுத்துகிறார்.
கர்த்தர் என்னை யுத்தத்திற்குப் பழக்குவிக்கிறார்.
2 கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார்.
மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம்.
கர்த்தர் என்னை விடுவிக்கிறார்.
கர்த்தர் எனது கேடகம்.
நான் அவரை நம்புகிறேன்.
நான் என் ஜனங்களை ஆள்வதற்கு கர்த்தர் உதவுகிறார்.
3 கர்த்தாவே, நீர் ஏன் ஜனங்களை முக்கியமானவர்களாகக் கருதுகிறீர்?
நீர் ஏன் அவர்களைக் கண்ணோக்கிக்கொண்டு இருக்கிறீர்?
4 ஊதும் காற்றைப்போன்று ஒருவனின் வாழ்க்கை உள்ளது.
மறையும் நிழலைப் போன்றது மனித வாழ்க்கை.
5 கர்த்தாவே, வானங்களைக் கிழித்துக் கீழே வாரும்.
மலைகளைத் தொடும், அவற்றிலிருந்து புகை எழும்பும்.
6 கர்த்தாவே, மின்னலை அனுப்பி என் பகைவர்களை ஓடிவிடச் செய்யும்.
உமது “அம்புகளைச்” செலுத்தி அவர்கள் ஓடிப்போகச் செய்யும்.
7 கர்த்தாவே, பரலோகத்திலிருந்து இறங்கி வந்து என்னைக் காப்பாற்றும்!
பகைவர்களின் கடலில் நான் அமிழ்ந்துபோக விடாதேயும்.
இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
9 கர்த்தாவே, நீர் செய்யும் அற்புதமான காரியங்களைப்பற்றி நான் ஒரு புதிய பாடலைப் பாடுவேன்.
நான் உம்மைத் துதிப்பேன். பத்து நரம்பு வீணையை நான் மீட்டுவேன்.
10 அரசர்கள் போர்களில் வெற்றி காண, கர்த்தர் உதவுகிறார்.
பகைவர்களின் வாள்களிலிருந்து கர்த்தர் அவரது ஊழியனாகிய தாவீதைக் காப்பாற்றினார்.
11 இந்த அந்நியர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
இப்பகைவர்கள் பொய்யர்கள்.
அவர்கள் உண்மையில்லாதவற்றைக் கூறுகிறார்கள்.
12 நம் இளமகன்கள் பலத்த மரங்களைப் போன்றவர்கள்.
நம் இளமகள்கள் அரண்மனையின் அழகிய அலங்கார ஒப்பனைகளைப் போன்றிருக்கிறார்கள்.
13 நம் களஞ்சியங்கள் பலவகை தானியங்களால் நிரம்பியிருக்கின்றன.
நம் வயல்களில் ஆயிரமாயிரம் ஆடுகள் உள்ளன.
14 நம் வீரர்கள் பாதுகாப்பாயிருக்கிறார்கள்.
எந்தப் பகைவனும் உள்ளே நுழைய முயலவில்லை.
நாங்கள் போருக்குச் செல்லவில்லை.
ஜனங்கள் நம் தெருக்களில் கூக்குரல் எழுப்பவில்லை.
15 இத்தகைய காலங்களில் ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
கர்த்தர் அவர்கள் தேவனாக இருக்கும்போது ஜனங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
யூதாவின் ஜனங்களின் தீமை
5 “எருசலேம் தெருக்களில் நடவுங்கள். சுற்றிப் பார்த்து இவற்றைப்பற்றி எண்ணுங்கள். நகரத்தின் பொது சதுக்கங்களைத் தேடுங்கள். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் பாருங்கள். அவன் நேர்மையான காரியங்களைச் செய்கிறவனாகவும் உண்மையைத் தேடுகிறவனாகவும் இருக்கவேண்டும். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் நான் எருசலேமை மன்னிப்பேன்! 2 ஜனங்கள் வாக்குறுதிச் செய்து ‘ஜீவனுள்ள கர்த்தரைக் கொண்டுசொல்லுகிறோம்’ என்கிறார்கள், ஆனால் நடைமுறையில் தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றும் எண்ணம் அவர்களிடம் இல்லை” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
3 கர்த்தாவே! உமது ஜனங்கள் உமக்கு உண்மையாக இருக்கவேண்டும்
என்று நீர் விரும்புவதை நான் அறிகிறேன்.
நீர் யூதா ஜனங்களைத் தாக்குகிறீர்.
ஆனால், அவர்கள் எவ்வித வலியையும் உணர்ந்துக்கொள்வதில்லை.
அவர்களை நீர் அழித்தீர்.
ஆனால் அவர்கள் தங்கள் பாடத்தைக் கற்றுக்கொள்ளவில்லை.
அவர்கள் மிகவும் பிடிவாதமாகிவிட்டனர்.
அவர்கள் தாம் செய்த கெட்ட செயல்களுக்கு, வருத்தப்பட மறுத்தனர்.
4 ஆனால் நான் (எரேமியா) எனக்குள் சொன்னேன்.
“ஏழைகள் மட்டுமே முட்டாளாக இருக்க வேண்டும்.
கர்த்தருடைய வழியை ஏழை ஜனங்கள் கற்றுக்கொண்டிருக்கவில்லை.
ஏழை ஜனங்கள் அவர்களது தேவனுடைய போதனைகளை அறியாமல் இருக்கிறார்கள்.
5 ஆகவே நான் யூதாவின் தலைவர்களிடம் போவேன்.
நான் அவர்களோடு பேசுவேன்.
அந்தத் தலைவர்களுக்கு நிச்சயமாக கர்த்தருடைய வழி தெரியும்.
அவர்களுக்கு தமது தேவனுடைய சட்டங்கள் தெரியும், என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.”
ஆனால், அந்தத் தலைவர்கள், அனைவரும் கர்த்தருக்கு
சேவைசெய்வதிலிருந்து விடுபட ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
6 அவர்கள் தேவனுக்கு எதிராகத் திரும்பினார்கள்.
எனவே காட்டிலிருந்து ஒரு சிங்கம் வந்து அவர்களைத் தாக்கும்.
வனாந்தரத்திலிருந்து ஒரு நரி வந்து அவர்களைக் கொல்லும்.
அவர்களின் நகரங்களுக்கு அருகில், சிறுத்தை ஒளிந்துக்கொண்டிருக்கிறது.
நகரத்திலிருந்து வெளியே வரும் எவரையும்
அந்த சிறுத்தை துண்டுத் துண்டாகக் கிழித்துப்போடும்.
இது நிகழும் ஏனென்றால், யூதா ஜனங்கள் மீண்டும், மீண்டும், பாவம் செய்திருக்கிறார்கள்.
அவர்கள் பலமுறை கர்த்தரிடமிருந்து விலகி, அலைந்திருக்கிறார்கள்.
7 “யூதாவே! உன்னை நான் எதற்காக மன்னிக்க வேண்டும்? என்று ஒரு நல்ல காரணத்தை எனக்குக் கொடு,
உனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டார்கள்.
அவர்கள் விக்கிரகங்களுக்கு, வாக்குறுதி செய்தனர்.
அந்த விக்கிரகங்கள் உண்மையில் தெய்வங்கள் அல்ல!
நான் உனது பிள்ளைகளுக்குத் தேவையான அனைத்தையும் கொடுத்தேன்.
ஆனால் அவர்கள் இன்னும் எனக்கு உண்மையில்லாதவர்களாக இருக்கிறார்கள்!
அவர்கள் வேசிகளோடு மிகுதியான காலத்தைச் செலவழிக்கிறார்கள்.
8 அவர்கள் குதிரைகளைப்போன்று இருக்கிறார்கள்.
அவர்கள் மிகுதியாக உணவு உண்கின்றனர்.
துணையோடு உறவுகொள்ள தயாராகின்றனர்.
அவர்கள் அயலானின் மனைவியை இச்சையோடு அழைக்கிற குதிரைகளைப்போன்று, இருக்கிறார்கள்.
9 இவற்றைச் செய்வதற்காக யூதா ஜனங்களை நான் தண்டிக்கவேண்டாமா?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“ஆம்! இதுபோல வாழ்கிற ஒரு நாட்டை நான் தண்டிக்கவேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நான் அவர்களுக்கு ஏற்ற தண்டனையையே கொடுப்பேன்.
10 “யூதாவின் திராட்சைத் தோட்ட வரிசைகளுக்குச் செல்லுங்கள்,
கொடிகளை வெட்டிப் போடுங்கள், (ஆனால் முழுவதுமாக அவற்றை அழிக்காதீர்கள்)
அவற்றின் கிளைகளையெல்லாம் வெட்டுங்கள்.
ஏனென்றால், இந்தக் கிளைகள் கர்த்தருக்கு உரிமை உடையவை அல்ல.
11 ஒவ்வொரு வழியிலும் இஸ்ரவேல் குடும்பமும் யூதா குடும்பமும்
எனக்கு உண்மையற்றவர்களாக இருந்திருக்கிறார்கள்”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 “அந்த ஜனங்கள் கர்த்தரைப்பற்றி பொய்யுரைத்திருக்கின்றனர்.
அவர்கள், ‘கர்த்தர் எங்களுக்கு எதுவும் செய்யமாட்டார்.
தீமை எதுவும் நமக்கு ஏற்படாது.
ஒரு படை நம்மைத் தாக்குவதை நாம் எப்பொழுதும் காண்பதில்லை.
நாம் எப்பொழுதும் பட்டினியாக இருப்பதில்லை.’
13 கள்ளத்தீர்க்கதரிசிகள் வெறுமையான காற்றைப் போன்றவர்கள்.
தேவனுடைய வார்த்தை அவர்களில் இல்லை.
அவர்களுக்குத் தீயவை ஏற்படும்.”
14 அந்த ஜனங்கள், “நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன் என்று கூறினார்கள்.
ஆகையால் எரேமியாவே, நான் உனக்குக் கொடுத்த வார்த்தைகள் நெருப்பைப் போன்றிருக்கும்.
அந்த ஜனங்கள் மரத்துண்டுகளைப் போன்றிருப்பார்கள்.
அந்த நெருப்பு அவர்களை முழுமையாக எரித்துப் போடும்!”
என்று சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
15 இஸ்ரவேல் குடும்பத்தாரே!
“நான் உங்களைத் தாக்குவதற்காகத், தொலை தூரத்திலிருந்து, விரைவில் ஒரு தேசத்தைக் கொண்டுவருவேன்.
அது ஒரு வல்லமை மிக்க ஜனமாக இருக்கிறது.
இது பழமையான தேசமாக இருக்கிறது.
அந்தத் தேசத்தின் ஜனங்கள் நீங்கள் அறியாத ஒரு மொழியைப் பேசுகிறார்கள்.
அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாது.
16 அவர்களின் அம்புப் பைகள் திறந்த சவக்குழிகளைப் போன்றிருக்கும்.
அவர்களது ஆண்கள் எல்லாம் வலிமையான வீரர்களாக இருக்கிறார்கள்.
17 நீங்கள் சேகரித்து வைத்த விளைச்சலை எல்லாம் அந்தப் படைவீரர்கள் உண்பார்கள்.
உங்கள் உணவு முழுவதையும் அவர்கள் உண்பார்கள்.
அவர்கள் உங்களது மகன்களையும் மகள்களையும் உண்பார்கள் (அழிப்பார்கள்).
அவர்கள் உங்கள் ஆடுகளையும் உங்கள் மாடுகளையும் உண்பார்கள்.
அவர்கள் உங்கள் திராட்சைப் பழங்களையும், அத்திப் பழங்களையும் உண்பார்கள்.
அவர்கள் தமது வாள்களால் உங்களது பலமான நகரங்களை அழிப்பார்கள்.
நீங்கள் நம்பிக்கை வைத்த உங்களது பலமான நகரங்களை அவர்கள் அழிப்பார்கள்!”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
18 “ஆனால் அந்தப் பயங்கரமான நாட்கள் வரும்போது யூதாவே, நான் உன்னை முழுவதுமாக அழிக்கமாட்டேன்” என்று கர்த்தர் சொல்லுகிறார். 19 “யூதாவிலுள்ள ஜனங்கள் உன்னிடம், ‘நமது தேவனாகிய கர்த்தர் இந்தத் தீயச்செயல்களை நமக்கு ஏன் செய்திருக்கிறார்?’ என்று கேட்டால், நீ அவர்களிடம், ‘யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் கர்த்தரை விட்டு விலகினீர்கள். உங்கள் சொந்த நாட்டில், அந்நிய நாட்டு விக்கிரகங்களுக்கு சேவை செய்திருக்கிறீர்கள். நீங்கள் அச்செயல்களைச் செய்தபடியால், இப்பொழுதும், உங்களுக்கு சொந்தமில்லாத நாட்டில் அந்நியருக்கு சேவைசெய்வீர்கள்’” என்று சொல்.
20 கர்த்தர் என்னிடம், “யாக்கோபின் குடும்பத்தாரையும்,
யூதா நாட்டினரையும் நோக்கி:
21 நீங்கள் மதிகேடர்கள்,
உங்களுக்குக் கண்கள் இருக்கின்றன,
ஆனால் நீங்கள் பார்க்கிறதில்லை!
உங்களுக்குக் காதுகள் இருக்கின்றன ஆனால் நீங்கள் கேட்கிறதில்லை!
22 நிச்சயமாக நீங்கள் எனக்குப் பயப்படுகிறீர்கள்” என சொல் என்றார்.
“எனக்கு முன்னால் நீங்கள் பயத்தால் நடுங்கவேண்டும்.
கடலுக்குக் கரைகளை எல்லையாக உண்டாக்கியவர் நானே.
இந்த வழியில் என்றென்றைக்கும் தண்ணீரானது அதனுடைய இடத்தில் இருக்குமாறு செய்தேன்.
கரையை அலைகள் தாக்கலாம்.
ஆனால் அவை அதனை அழிக்க முடியாது.
அலைகள் இரைந்துக்கொண்டு வரலாம்.
ஆனால் அது கரையைக் கடந்து போக முடியாது.
23 மறுபடியும் யூதாவின் ஜனங்கள் பிடிவாதமாக இருக்கிறார்கள்.
எனக்கு எதிராகத் திரும்ப அவர்கள் எப்பொழுதும் திட்டம் தீட்டுகிறார்கள்.
அவர்கள் என்னிடமிருந்து திரும்பி என்னை விட்டு விலகிவிட்டார்கள்.
24 யூதாவின் ஜனங்கள் தங்களுக்குள் இவ்வாறு சொல்லமாட்டார்கள்.
‘எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பயப்படுவோம், மரியாதை செய்வோம்.
நமக்கு அவர் சரியான காலங்களில் மழையையும், முன்மாரியையும், பின்மாரியையும் கொடுக்கிறார்.
நாம் சரியான காலத்தில் அறுவடையைப் பெறுவோம்’ என்று அவர் உறுதி செய்கிறார்.
25 யூதாவின் ஜனங்களே! நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள்.
எனவே மழையும் அறுவடையும் வரவில்லை.
கர்த்தரிடமிருந்து வரும் அந்த நன்மையை அனுபவிக்க உங்கள் பாவங்கள் தடுத்துவிட்டன.
26 என்னுடைய ஜனங்களிடையில் கெட்ட மனிதரும் இருக்கின்றனர்.
அந்தக் கெட்ட மனிதர்கள் பறவைகளைப் பிடிக்க வலைகளைச் செய்பவர்களை போன்றவர்கள்.
இந்த மனிதர்கள் தமது கண்ணிகளை வைப்பார்கள்.
ஆனால் அவர்கள் பறவைகளுக்குப் பதிலாக மனிதர்களைப் பிடிப்பார்கள்.
27 கூண்டுக்குள்ளே பறவைகள் இருப்பதுபோன்று,
இத்தீய ஜனங்களின் வீடுகளில் கபடங்கள் நிறைந்திருக்கும்.
அவர்களின் கபடங்கள் அவர்களை செல்வந்தர்களாகவும், வலிமையுள்ளவர்களாகவும் ஆக்கின.
28 அவர்கள் தாம் செய்த தீமைகளால் பெரிதாக வளர்ந்து கொழுத்துப்போயிருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் தீமைகளுக்கு முடிவே இல்லை.
பெற்றோர்கள் இல்லாதிருக்கிற பிள்ளைகளின் வழக்கில் பரிந்து பேசுவதில்லை.
அந்த அனாதைகளுக்கு அவர்கள் உதவுவதில்லை.
ஏழை ஜனங்கள் நியாயமான தீர்ப்புப்பெற விடுவதில்லை.
29 இவற்றையெல்லாம் செய்துக்கொண்டிருக்கிற யூதாவின் ஜனங்களை நான் தண்டிக்கவேண்டுமா?”
என்று கர்த்தர் சொல்லுகிறார்.
“இது போன்ற ஒரு தேசத்தாரை நான் தண்டிக்கவேண்டும், என்று உங்களுக்குத் தெரியும்.
அவர்களுக்குப் பொருத்தமான தண்டனைகளையே நான் தரவேண்டும்.”
30 கர்த்தர், “யூதா நாட்டிலே ஒரு பயங்கரமான
நடுங்கத்தக்க செயல் நடந்திருக்கிறது.
31 தீர்க்கதரிசிகள், பொய்களைக் கூறுகிறார்கள்.
ஆசாரியர்கள் எதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்களோ அச்செயல்களைச் செய்வதில்லை.
என்னுடைய ஜனங்கள் இந்நிலையை விரும்புகிறார்கள்!
ஆனால், உங்கள் தண்டனை வரும்போது
நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று சொல்லுகிறார்.
விவாகரத்தைப்பற்றி போதனை(A)
19 இவை அனைத்தையும் கூறிய பின்னர், இயேசு கலிலேயாவிலிருந்து புறப்பட்டுச் சென்றார். யோர்தான் நதிக்கு மறுகரையில் உள்ள யூதேயாவிற்கு இயேசு சென்றார். 2 மக்கள் பலர் அவரைத் தொடர்ந்தனர். அங்கு நோயாளிகளை இயேசு குணமாக்கினார்.
3 இயேசுவிடம் வந்த பரிசேயர்கள் சிலர் இயேசுவைத் தவறாக ஏதேனும் சொல்ல வைக்க முயன்றனர். அவர்கள் இயேசுவை நோக்கி,, “ஏதேனும் ஒரு காரணத்திற்காகத் தன் மனைவியை விவாகரத்து செய்வது சரியானதா?” என்று கேட்டனர்.
4 அவர்களுக்கு இயேசு,, “தேவன் உலகைப் படைத்தபொழுது மனிதர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் [a] என்று வேதவாக்கியங்களில் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் நிச்சயமாய் படித்திருப்பீர்கள். 5 தேவன் சொன்னார், ‘ஒருவன் தன் தாய் தந்தையரை விட்டு விலகி தன் மனைவியுடன் இணைவான், கணவனும் மனைவியும் ஒன்றாவார்கள்.’ [b] 6 எனவே, கணவனும் மனைவியும் இருவரல்ல ஒருவரே. அவர்களை இணைத்தவர் தேவன். எனவே, எவரும் அவர்கள் இருவரையும் பிரிக்கக் கூடாது” என்று பதில் கூறினார்.
7 அதற்குப் பரிசேயர்கள்,, “அப்படியெனில் எதற்காக ஒருவன் விவாகரத்து பத்திரம் எழுதிக் கொடுத்துத் தன் மனைவியை விவாகரத்து செய்யலாம் என மோசே ஒரு கட்டளையைக் கொடுத்துள்ளான்?” என கேட்டார்கள்.
8 அதற்கு இயேசு,, “மோசே உங்கள் மனைவியை நீங்கள் விவாகரத்து செய்ய அனுமதியளித்தார். எனென்றால் நீங்கள் தேவனின் வார்த்தைகளை ஏற்க மறுத்தீர்கள். ஆனால், ஆதியில் விவாகரத்து அனுமதிக்கப்படவில்லை. 9 நான் கூறுகிறேன், தன் மனைவியை விவாகரத்து செய்து பின் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்கிறவன் விபச்சாரம் என்னும் குற்றத்திற்கு ஆளாகிறான். ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய ஒரே தகுதியான காரணம் அவள் வேறொரு ஆணுடன் கள்ளத் தொடர்பு கொண்டிருப்பதே ஆகும்” என்றார்.
10 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “ஒருவன் தன் மனைவியை விவாகரத்து செய்ய அது ஒன்று மட்டுமே தக்க காரணமெனில், திருமணம் செய்யாமலிருப்பதே நன்று” என்றார்கள்.
11 அதற்கு இயேசு,, “திருமணம் குறித்த இவ்வுண்மையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால், தேவன் சிலரை அப்படிப்பட்ட கருத்தை ஒப்புக்கொள்ள ஏதுவாக்கியுள்ளார். 12 சிலர் ஏன் திருமணம் செய்துகொள்ள முடியாது என்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலர் குழந்தைகளை பெறச் செய்ய இயலாதவாறு பிறந்தார்கள். சிலர் அவ்வாறு மற்றவர்களால் ஆக்கப்பட்டார்கள். மேலும் சிலர் பரலோக இராஜ்யத்திற்காக திருமணத்தைக் கைவிட்டார்கள். ஆனால் திருமணம் செய்துகொள்ளக் கூடியவர்கள் திருமண வாழ்வைக் குறித்த இந்தப் போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தார்.
இயேசுவும் குழந்தைகளும்(B)
13 பிறகு, இயேசு தம் குழந்தைகளைத் தொடுவார் என்பதற்காகவும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார் என்பதற்காகவும் மக்கள் தம் குழந்தைகளை அவரிடம் அழைத்து வந்தனர். இதைக் கண்ட சீஷர்கள் இயேசுவிடம் குழந்தைகளை அழைத்து வருவதை நிறுத்துமாறு மக்களிடம் கூறினார்கள். 14 ஆனால் இயேசு,, “குழந்தைகளை என்னிடம் வரவிடுங்கள். அவர்களைத் தடுக்க வேண்டாம், ஏனென்றால் பரலோக இராஜ்யம் இக்குழந்தைகளைப் போன்ற மக்களுக்கே உரியது” என்று கூறினார். 15 அதன் பின் குழந்தைகளைத் தொட்டு ஆசீர்வதித்தார். பின்னர் இயேசு அவ்விடத்தை விட்டுச் சென்றார்.
பணக்காரனும் இயேசுவும்(C)
16 ஒரு மனிதன் இயேசுவை அணுகி,, “போதகரே நித்திய ஜீவனைப் பெற நான் என்ன நல்ல செயலைச் செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
17 இயேசு அவனிடம்,, “எது நல்லது என்பதை பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? தேவன் மட்டுமே நல்லவர். நீ நித்திய ஜீவனைப் பெற விரும்பினால், கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து நட” என்று பதிலுரைத்தார்.
18 ,“எந்தக் கட்டளைகளை” என்று கேட்டான் அம்மனிதன்.
அதற்கு இயேசு,, “நீ யாரையும் கொலை செய்யக்கூடாது. விபசாரம் செய்யக் கூடாது. திருடக்கூடாது. பொய் சாட்சி சொல்லக் கூடாது. 19 உன் தாய் தந்தையரை மதிக்க வேண்டும். [c] ‘தன்னைப் போலவே மற்றவர்களையும் நேசிக்க வேண்டும்’” [d] என்று பதில் சொன்னார்.
20 அதற்கு அந்த இளைஞன்,, “இவை அனைத்தையும் கீழ்ப்படிந்து நடந்திருக்கிறேன். வேறென்ன செய்ய வேண்டும்?” என்றான்.
21 இயேசு அவனிடம்,, “நீ நேர்மையாய் இருக்க விரும்பினால், (போய்) உன் உடமைகள் எல்லாவற்றையும் விற்றுவிடு. இதனால் கிடைக்கும் பணத்தை ஏழைகளுக்குத் தானம் செய்துவிடு. நீ இதைச் செய்தால், நீ பரலோகத்தில் மதிப்பு வாய்ந்த செல்வத்தைப் பெறுவாய். பின் என்னிடம் வந்து, என்னைப் பின்பற்றி நட,” என்றார்.
22 ஆனால், இதைக் கேட்ட அம்மனிதன் மிகுந்த வருத்தமடைந்தான். மிகச் செல்வந்தனான அவன், தன் செல்வத்தை இழக்க விரும்பவில்லை. எனவே, அவன் இயேசுவை விட்டு விலகிச் சென்றான்.
23 பிறகு, இயேசு தம் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன். பரலோக இராஜ்யத்திற்குள் செல்வந்தர்கள் நுழைவது மிகக் கடினம். 24 ஆம் பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது” என்று கூறினார்.
25 இதைக் கேட்டபோது சீஷர்கள் வியப்புற்றனர். அவர்கள்,, “பின் யார் தான் இரட்சிக்கப்படுவார்கள்?” என்று கேட்டனர்.
26 இயேசு தம் சீஷர்களைப் பார்த்து,, “மனிதர்களால் ஆகக் கூடியதல்ல இது. ஆனால், எல்லாம் வல்ல தேவனால் ஆகும்” என்று சொன்னார்.
27 பேதுரு இயேசுவிடம்,, “நாங்கள் பெற்றிருந்த அனைத்தையும் துறந்து உம்மைப் பின்பற்றினோம். எங்களுக்கு என்ன கிடைக்கும்?” என்று வினவினான்.
28 இயேசு தன் சீஷர்களிடம்,, “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், புதிய உலகம் படைக்கப்படும்பொழுது, மனிதகுமாரன் தம் பெருமைமிக்க அரியணையில் அமர்வார். என்னைப் பின்பற்றிய நீங்கள் அனைவரும் அரியணைகளில் அமர்வீர்கள். பன்னிரெண்டு அரியணைகளில் நீங்கள் அமர்ந்து, இஸ்ரவேலின் [e] பன்னிரெண்டு இனங்களுக்கும் நீதி செய்வீர்கள். 29 மேலும் என்னைப் பின்பற்றுவதற்காக வீடு, தாய், தந்தை, சகோதரன், சகோதரி, பிள்ளைகள் அல்லது நிலம் ஆகியவற்றைத் துறந்தவன், தான் துறந்ததை விடப் பல மடங்கு பலன் பெறுவான். அவன் நித்திய ஜீவனைப் பெறுவான். 30 உயர்ந்த வாழ்க்கை வாழும் பலர் எதிர்காலத்தில் மிகத் தாழ்ந்த வாழ்வை அடைவார்கள். மிகத் தாழ்ந்த வாழ்வை வாழும் பலர் மிக உயர்ந்த வாழ்வை அடைவார்கள்” என்றார்.
2008 by World Bible Translation Center