M’Cheyne Bible Reading Plan
ஆகானின் பாவம்
7 இஸ்ரவேலின் ஜனங்கள் தேவனுக்கு கீழ்ப்படியாமலிருந்தனர். சிம்ரி என்பவனின் பேரனும், கர்மீ என்பவனின் மகனுமாகிய யூதா கோத்திரத்தைச் சார்ந்த ஆகான் என்ற பெயருடைய ஒருவன் இருந்தான். அவன் அழிக்கப்பட வேண்டிய சில பொருட்களை எடுத்து வைத்திருந்தான். எனவே இஸ்ரவேல் ஜனங்களிடம் கர்த்தர் மிகுந்த கோபமடைந்தார்.
2 அவர்கள் எரிகோவை தோற்கடித்த பிறகு, யோசுவா சில மனிதரை ஆயீக்கு அனுப்பினான். ஆயீ, பெத்தாவேனுக்கு அருகில், பெத்தேலுக்குக் கிழக்காக உள்ளது. யோசுவா அவர்களிடம், “ஆயீக்குச் சென்று அவ்விடத்தின் பெலவீனங்களைத் தெரிந்து வாருங்கள்” என்றான். அம்மனிதர்களும் அந்த இடத்தை உளவறிந்து வருவதற்கு சென்றனர்.
3 பின்னர் அவர்கள் யோசுவாவிடம் திரும்பி வந்து, “ஆயீ ஒரு பலவீனமான பகுதி. அவ்விடத்தை தோற்கடிக்க நம் ஜனங்கள் அனைவரும் தேவையில்லை. 2,000 அல்லது 3,000 ஆட்களை அங்கு போர்செய்ய அனுப்புங்கள். படை முழுவதையும் பயன்படுத்த வேண்டியிராது. நம்மை எதிர்த்துப் போர் செய்வதற்குச் சில மனிதர்களே உள்ளனர்” என்றார்கள்.
4-5 எனவே சுமார் 3,000 மனிதர் ஆயீக்குப் போனார்கள். ஆனால் ஆயீயின் ஜனங்கள், இஸ்ரவேலரில் சுமார் 36 பேரைக் கொன்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் ஓடிவிட்டனர். நகரவாசலிலிருந்து இஸ்ரவேலரை மலைச் சரிவு வரைக்கும் துரத்தினார்கள். ஆயீயின் ஜனங்கள் அவர்களைப் பயங்கரமாகத் தோற்கடித்தனர்.
இஸ்ரவேல் ஜனங்கள் இதைக் கண்டு அஞ்சி, துணிவிழந்தனர். 6 யோசுவா இதைக் கேட்டபோது, துயரமுற்றுத் தன் ஆடைகளைக் கிழித்துக்கொண்டு, பரிசுத்தப் பெட்டிக்கு முன்பாக விழுந்து வணங்கினான். மாலைவரைக்கும் அங்கேயே இருந்தான். இஸ்ரவேலரின் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். அவர்கள் தங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கு சாம்பலைத் தலையில் தூவிக்கொண்டனர்.
7 யோசுவா, “எனது ஆண்டவராகிய கர்த்தாவே! எங்கள் ஜனங்களை நீர் யோர்தான் நதியைக் கடக்க வைத்தீர். ஏன் எங்களை இத்தனை தூரம் அழைத்து வந்து எமோரியரால் அழிவுற வைக்கிறீர்? நாங்கள் திருப்தியோடு யோர்தானின் அக்கரையில் வாழ்ந்திருக்கலாம்! 8 கர்த்தாவே! எனது உயிரின் மீது ஆணையிடுகிறேன், நான் சொல்லக்கூடியது எதுவுமில்லை. இஸ்ரவேலரைப் பகைவர்கள் சூழ்ந்துள்ளனர். 9 கானானியரும் இந்நாட்டின் எல்லா ஜனங்களும் நடந்ததை அறிவார்கள். அவர்கள் எங்களைத் தாக்கி அழிப்பார்கள்! அப்போது உமது மேலான பெயரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்வீர்” என்றான்.
10 கர்த்தர் யோசுவாவை நோக்கி, “உன் முகத்தைத் தரையில் கவிழ்த்து ஏன் விழுந்துகிடக்கிறாய்? எழுந்து நில்! 11 இஸ்ரவேல் ஜனங்கள் எனக்கு எதிராகப் பாவம் செய்தார்கள். அவர்கள் கீழ்ப்படியுமாறு கட்டளையிட்ட உடன்படிக்கையை மீறினார்கள். அழித்துவிடும்படி நான் கட்டளையிட்ட பொருட்களை எடுத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை திருடிவிட்டனர். அவர்கள் பொய் கூறிவிட்டனர். அப்பொருட்களை அவர்களுக்காக எடுத்துள்ளனர். 12 அதனால்தான் இஸ்ரவேல் படை போரிலிருந்து புறமுதுகு காட்டித் திரும்பிவிட்டது. அவர்கள் தவறு செய்ததாலேயே அவ்விதம் நடந்தது. நான் உங்களுக்கு உதவமாட்டேன். நீங்கள் அழிக்கவேண்டுமென நான் கட்டளையிட்டவற்றை அழிக்காவிட்டால் நான் உங்களோடு இருக்கமாட்டேன்.
13 “இப்போதும் போய், ஜனங்களை பரிசுத்தப்படுத்து. ஜனங்களிடம், ‘உங்களை பரிசுத்தப்படுத்திக்கொள்ளுங்கள், நாளைக்குத் தயாராகுங்கள். இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இங்கு சிலர், கர்த்தர் அழிக்குமாறு கட்டளையிட்ட பொருட்களை வைத்துக்கொண்டிருப்பதாகக் கூறுகிறார். நீங்கள் அவற்றை அப்புறப்படுத்தாவிட்டால் உங்கள் பகைவர்களை ஒருபோதும் வெல்ல முடியாமல் போகலாம்.
14 “‘நானை காலையில் கர்த்தரின் முன்பாக எல்லோரும் வரவேண்டும். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன்பு நிற்கும்போது, கர்த்தர் ஒரு கோத்திரத்தாரைத் தேர்ந்தெடுப்பார். அப்போது அந்தக் கோத்திரத்தினர் கர்த்தரின் முன் நிற்கவேண்டும். கர்த்தர் அந்தக் கோத்திரத்திலிருந்து ஒரு வம்சத்தை தேர்ந்தெடுப்பார். பின் அவ்வம்சத்திலிருந்து கர்த்தர் ஒரு குடும்பத்தைத் தேர்ந்தெடுப்பார். பின் கர்த்தர் அக்குடும்பத்தின் அங்கத்தினர்கள் ஒவ்வொருவரையும் பார்ப்பார். 15 அழிக்க வேண்டிய பொருளை வைத்திருக்கிறவன் அப்போது அகப்படுவான். அம்மனிதனும், அவனுக்குச் சொந்தமானவையெல்லாம் அவனோடு நெருப்பினால் அழிக்கப்படவேண்டும். அம்மனிதன் கர்த்தரோடு செய்த உடன்படிக்கையை மீறினான். அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு மிகுந்த தீமையான காரியத்தைச் செய்தான்!’ என்று சொல்” என்றார்.
16 மறுநாள் அதிகாலையில், யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை கர்த்தரின் முன்னால் நிற்கும்படி செய்தான். எல்லாக் கோத்திரத்தினரும் கர்த்தருக்கு முன் நின்றனர். கர்த்தர் யூதா கோத்திரத்தைத் தேர்ந்தெடுத்தார் 17 எனவே அந்தக் கோத்திரத்தைச் சேர்ந்த எல்லாக் குழுக்களும் கர்த்தருக்கு முன்னே நின்றனர். கர்த்தர் சேரா குழுவினரைத் தேர்ந்தெடுத்தார். பின் சேரா குழுவினரின் எல்லாக் குடும்பத்தாரும் கர்த்தருக்கு முன்னே நின்றார்கள். சிம்ரியின் குடும்பம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
18 யோசுவா அக்குடும்பத்தின் ஆண்களையெல்லாம் கர்த்தருக்கு முன் வருமாறு கூறினான். கர்த்தர் கர்மீயின் மகன் ஆகானைத் தேர்ந்தெடுத்தார். (கர்மீ சிம்ரியின் மகன், சிம்ரி சேராவின் மகன்.)
19 யோசுவா ஆகானை நோக்கி, “மகனே, உனது விண்ணப்பங்களைச் சொல். நீ இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை மகிமைப்படுத்தி, உனது பாவங்களை அவரிடம் கூறு. நீ செய்ததை எனக்குக் கூறு. என்னிடமிருந்து எதையும் மறைக்காதே!” என்றான்.
20 ஆகான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்தது உண்மை. நான் செய்தது இதுவே: 21 நாம் எரிகோவையும் அந்நகரத்தின் பொருட்களையும் கைப்பற்றிக்கொண்டபோது பாபிலோனிலிருந்து கொண்டுவந்த அழகிய மேலாடையையும், சுமார் ஐந்து பவுண்டு வெள்ளியையும், ஒரு பவுண்டு பொன்னையும் கண்டேன். அவற்றை எடுத்துக் கொண்டேன். அப்பொருள்கள் எனது கூடாரத்திற்கடியிலுள்ள நிலத்தில் புதைக்கப்பட்டிருப்பதை நீங்கள் காணலாம். மேலாடையின் கீழே வெள்ளி இருக்கிறது” என்றான்.
22 எனவே யோசுவா சிலரைக் கூடாரத்திற்கு அனுப்பினான். அவர்கள் கூடாரத்திற்கு ஓடிச் சென்று, அப்பொருட்கள் கூடாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டனர். மேலாடையின் கீழே வெள்ளி இருந்தது. 23 அவர்கள் அப்பொருட்களைக் கூடாரத்திற்கு வெளியே எடுத்து வந்து, அவற்றை யோசுவாவிடமும் இஸ்ரவேல் ஜனங்களிடமும் கொண்டு சென்று, கர்த்தருக்கு முன் அவற்றைத் தரையில் போட்டனர்.
24 சேராவின் மகனாகிய ஆகானை யோசுவாவும், ஜனங்களும் ஆகோர் பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றனர். அந்த வெள்ளி, மேலாடை, பொன், ஆகானின் மகன்கள், மகள்கள், அவனது ஆடு மாடுகள், கழுதைகள் கூடாரம், பிற பொருட்களையும் ஆகோர் பள்ளத்தாக்கில் சேர்ப்பித்தனர். 25 அப்போது யோசுவா, “எங்களுக்கு நேர்ந்த தொந்தரவுகளுக்கு நீ காரணமாக இருந்தாய்! இப்போது கர்த்தர் உனக்குத் தொல்லையளிப்பார்!” என்றான். அப்போது ஜனங்கள் ஆகானின் மீதும் அவன் குடும்பத்தினர் மீதும் அவர்கள் மரிக்கும்படி கற்களை வீசினார்கள். பிறகு ஜனங்கள் அவர்களின் உடல்களையும் அவர்களின் பொருட்களையும் எரித்தனர். 26 ஆகானை எரித்த பின், அவன் உடம்பின் மீது கற்களைக் குவித்தனர். அவை இன்னும் அங்கு உள்ளன. தேவன் ஆகானின் குடும்பத்திற்குத் தொல்லை கொடுத்தார். அதனால் அவ்விடம் ஆகோர் (தொல்லை) பள்ளத்தாக்கு எனப்படுகிறது. அதன் பின் கர்த்தர் ஜனங்களிடம் கோபமாயிருக்கவில்லை.
137 பாபிலோனின் நதிகளின் அருகே நாங்கள் அமர்ந்து
சீயோனை நினைத்தவாறே அழுதோம்.
2 அருகேயிருந்த அலரிச்செடிகளில் எங்கள்
கின்னரங்களைத் தொங்கவிட்டோம்.
3 பாபிலோனின் எங்களைப் பிடித்தவர்கள் எங்களைப் பாடச் சொன்னார்கள்.
அவர்கள் எங்களிடம் மகிழ்ச்சியான பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
சீயோனைக் குறித்துப் பாடல்களைப் பாடச் சொன்னார்கள்.
4 ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய
பாடல்களைப் பாட முடியவில்லை!
5 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
நான் என்றும் பாடலை பாடமாட்டேன் என்று நம்புகிறேன்.
6 எருசலேமே, நான் உன்னை எப்போதேனும் மறந்தால்,
நான் என்றும் பாடேன்.
நான் உன்னை ஒருபோதும் மறக்கமாட்டேனென வாக்களிக்கிறேன்.
7 ஆண்டவரே ஏதோமியர்களை நினையும்.
எருசலேம் வீழ்ந்த நாளில் அவர்கள், “அதைத் தரைமட்டமாக இடித்து அழித்துவிடுங்கள்”
என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
8 பாபிலோனே நீ அழிக்கப்படுவாய்!
நீ பெற வேண்டிய தண்டனையை அளிக்கும் மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
எங்களை நீ துன்புறுத்தியதைப்போல் உன்னையும் துன்புறுத்துகிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
9 உனது குழந்தைகளை இழுத்துச்சென்று,
அவர்களைப் பாறையில் மோதி அழிக்கிற மனிதன் ஆசீர்வதிக்கப்பட்டவன்.
தாவீதின் ஒரு பாடல்
138 தேவனே, என் முழு இருதயத்தோடும் உம்மைத் துதிக்கிறேன்.
எல்லா தெய்வங்களின் முன்பாகவும் நான் உமது பாடல்களைப் பாடுவேன்.
2 தேவனே, உமது பரிசுத்த ஆலயத்திற்கு நேராக நான் குனிந்து வணங்குவேன்.
நான் உமது நாமத்தையும், உண்மை அன்பையும் நேர்மையையும் துதிப்பேன்.
உமது வார்த்தையின் வல்லமையால் நீர் புகழ்பெற்றவர். இப்போது நீர் அதை இன்னமும் மேன்மையாகச் செய்தீர்.
3 தேவனே, உதவிக்காக நான் உம்மைக் கூப்பிட்டேன்.
நீர் எனக்குப் பதில் தந்தீர்! நீர் எனக்குப் பெலன் அளித்தீர்.
4 கர்த்தாவே, நீர் சொல்கின்றவற்றைக் கேட்கும்போது
பூமியின் எல்லா அரசர்களும் உம்மைத் துதிப்பார்கள்.
5 அவர்கள் கர்த்தருடைய வழியைக் குறித்துப் பாடுவார்கள்.
ஏனெனில் கர்த்தருடைய மகிமை மிக மேன்மையானது.
6 தேவன் மிக முக்கியமானவர்.
ஆனால் அவர் தாழ்மையான ஜனங்களுக்காக கவலைப்படுகிறார்.
பெருமைக்காரர்கள் செய்வதை தேவன் அறிகிறார். ஆனால் அவர் அவர்களிடமிருந்து வெகுதூரம் விலகியிருக்கிறார்.
7 தேவனே, நான் தொல்லையில் சிக்குண்டால், என்னை உயிரோடு வாழவிடும்.
என் பகைவர்கள் என்னிடம் கோபமாயிருந்தால், அவர்களிடமிருந்து என்னைக் காப்பாற்றும்.
8 கர்த்தாவே, நீர் வாக்களித்தவற்றை எனக்குத் தாரும்.
கர்த்தாவே, உமது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.
கர்த்தாவே, நீர் எங்களை உண்டாக்கினீர், எனவே எங்களை விட்டுவிடாதேயும்!
1 இவை எரேமியாவின் செய்திகள். இல்க்கியா என்ற பெயருள்ள மனிதரின் மகன் எரேமியா. ஆனதோத் என்ற நகரத்தில் வாழ்ந்த ஆசாரியரின் குடும்பத்தைச் சார்ந்தவனாக இருந்தான். அந்நகரமானது பென்யமீனின் கோத்திரத்தினருக்குரிய நாட்டில் இருந்தது. 2 கர்த்தர், யூதா நாட்டின் அரசனாக யோசியா இருந்தபோது அந்நாட்களில் எரேமியாவுடன் பேசத்தொடங்கினார். யோசியா, ஆமோன் என்ற பெயருடைய மனிதரின் மகனாகும். கர்த்தர், யோசியாவின் ஆட்சியில் 13வது ஆண்டில் [a] எரேமியாவுடன் பேச ஆரம்பித்தார். 3 யூதாவின் அரசனாக யோயாக்கீம் இருந்தபோதும் அந்தக் காலத்தில் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். யோயாக்கீம் யோசியாவின் மகன், யூதாவின் அரசனாக சிதேக்கியா இருந்த பதினோறு ஆண்டுகளும் ஐந்து மாதங்களும் கர்த்தர் எரேமியாவுடன் தொடர்ந்து பேசினார். சிதேக்கியாவும் யோசியாவின் மகனாக இருந்தான். சிதேக்கியா அரசனாக இருந்த பதினொன்றாவது ஆண்டின் ஐந்தாவது மாதத்தில் எருசலேமில் வாழ்ந்த ஜனங்கள் சிறையெடுக்கப்பட்டனர்.
தேவன் எரேமியாவை அழைக்கிறார்
4 கர்த்தருடைய வார்த்தை எரேமியாவிற்கு உண்டாகி, அவர்,
5 “உனது தாயின் கருவில் நீ உருவாக்கப்படுவதற்கு முன்பே
நான் உன்னை அறிவேன்.
நீ பிறப்பதற்கு முன்பு
உன்னதமான வேலைக்கு உன்னைத் தேர்ந்தெடுத்தேன்.
நாடுகளுக்குத் தீர்க்கதரிசியாக நான் உன்னைத் தேர்ந்தெடுத்தேன்” என்றார்.
6 பிறகு எரேமியா, “ஆனால் சர்வ வல்லமையுள்ள கர்த்தாவே, எப்படிப் பேசுவது என்று எனக்குத் தெரியாது. நான் ஒரு சிறுவன்” என்றான்.
7 ஆனால் கர்த்தர் என்னிடம்,
“‘நீ சிறுவன்’ என்றுச் சொல்லாதே.
நான் அனுப்புகிற எல்லா இடங்களுக்கும் நீ போகவேண்டும், நான் சொல்லுகிறவற்றை எல்லாம் நீ பேசவேண்டும்” என்றார்.
8 “எவருக்கும் பயப்படவேண்டாம், நான் உன்னோடு இருக்கிறேன்.
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
9 பிறகு கர்த்தர் தனது கரத்தை நீட்டி எனது வாயைத் தொட்டார், கர்த்தர் என்னிடம்,
“எரேமியா, நான் எனது வார்த்தைகளை உனது வாய்க்குள் வைக்கிறேன்.
10 இன்று நான் உன்னை நாடுகளுக்கும், அரசுகளுக்கும் பொறுப்பாளியாக நியமித்திருக்கிறேன்.
நீ வேரோடு பிடுங்கவும், இடிக்கவும்,
அழிக்கவும், கவிழ்க்கவும்,
கட்டவும், நாட்டவும் செய்வாய்” என்றார்.
இரண்டு தரிசனங்கள்
11 மறுபடியும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார்.
நான் கர்த்தருக்கு, “நான் வாதுமை மரத்தின் கிளையால் ஆனக் கம்பைப் பார்க்கிறேன்” என்றேன்.
12 கர்த்தர் என்னிடம், “நீ நன்றாகப் பார்த்தாய். நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். உன்னிடம் வரும் எனது வார்த்தைகளை சீக்கிரமாய் நிறைவேற்றுவேன், என்பதை உறுதி செய்கிறேன்” என்றார்.
13 மீண்டும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர், “எரேமியா, நீ என்ன பார்க்கிறாய்?” என்றார். “நான் ஒரு பானையில் கொதிக்கிற தண்ணீரைப் பார்க்கிறேன், அந்தப் பானையின் வாய் வடக்கேயிருந்து பார்க்கிறது” என்றேன்.
14 கர்த்தர் என்னிடம், “வடக்கிலிருந்து பயங்கரமான ஒன்று வரும்,
இந்த நாட்டில் வாழ்கிற அனைத்து ஜனங்களுக்கும் இது ஏற்படும்.
15 மிகக் குறுகிய காலத்தில் நான், வடநாட்டு அரசுகளில் உள்ள அனைத்து ஜனங்களையும் அழைப்பேன்” என்றார்.
இவற்றையெல்லாம் கர்த்தர் சொன்னார்.
“அந்நாடுகளில் உள்ள அரசர்கள் வந்து எருசலேமின் வாசலருகில்
தங்கள் சிங்காசனங்களை போடுவார்கள்,
அவர்கள் எருசலேமின் நகரச் சுவர்களைத் தாக்குவார்கள்,
மற்றும் அவர்கள் யூதாவிலுள்ள அனைத்து நகரங்களையும் தாக்குவார்கள்.
16 நான் எனது ஜனங்களுக்கு எதிராக என் தீர்ப்பினை அறிவிப்பேன்.
அவர்கள் தீயவர்கள், எனவே நான் இவற்றைச் செய்வேன்.
அவர்கள் எனக்கு எதிராகத் திரும்பியிருந்தார்கள்.
எனது ஜனங்கள் என்னை விட்டு விலகினார்கள்.
அவர்கள் அந்நிய தெய்வங்களுக்கு பலிகளைக் கொடுத்தனர்,
அவர்கள் தமது கைகளால் செய்திருந்த விக்கிரகங்களைத் தொழுதுகொண்டனர்.
17 “ஆகவே எரேமியா, தயாராயிரு,
எழுந்து நில், ஜனங்களோடு பேசு,
நான் உன்னிடம் சொன்னவற்றையெல்லாம் நீ அவர்களுக்குச் சொல்.
ஜனங்களைப் பார்த்து பயப்படாதே,
நீ ஜனங்களுக்குப் பயந்தால்,
பிறகு அவர்களுக்கு நீ பயப்படும்படி நல்ல காரணங்களைத் தருவேன்.
18 என்னைப் பொருத்தவரை, இன்று உன்னை
பாதுகாப்பான நகரத்தைப்போன்று வலிமையானவனாக ஆக்குவேன்,
இரும்புத் தூண் போலவும்,
வெண்கலச்சுவர் போலவும் செய்வேன்.
தேசத்திலுள்ள எல்லாவற்றுக்கும் முன்பும்,
யூதா நாட்டிலுள்ள அரசர்களுக்கு முன்பும்,
யூதாவின் தலைவர்களுக்கு முன்பும்,
யூதாவின் ஆசாரியர்களுக்கு முன்பும்,
யூதாநாட்டின் ஜனங்களுக்கு முன்பும் நிற்க முடிந்த ஒருவனாக ஆவாய்.
19 அந்த ஜனங்கள் அனைவரும் உனக்கு எதிராகப் போரிடுவார்கள்,
ஆனால் அவர்கள் உன்னைத் தோற்கடிக்கமாட்டார்கள்.
ஏனென்றால், நான் உன்னோடு இருக்கிறேன்,
நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இந்த வார்த்தை கர்த்தரிடமிருந்து வருகிறது.
தேவனின் பிரமாணங்களும் மனிதர் விதிமுறைகளும்(A)
15 அப்பொழுது பரிசேயர்கள் சிலரும் நியாயப்பிரமாண போதகர்களில் சிலரும் இயேசுவிடம் வந்தார்கள். எருசலேமிலிருந்து வந்த அவர்கள் இயேசுவிடம், 2 ,“நமக்கு முன்னர் வாழ்ந்த பெரியோர்கள் நமக்கு இட்ட கட்டளைகளை உமது சீஷர்கள் ஏன் பின்பற்றுவதில்லை? உணவு உண்பதற்கு முன் உமது சீஷர்கள் ஏன் கைகளைக் கழுவுவதில்லை?” என்று கேட்டனர்.
3 இயேசு அவர்களுக்கு,, “உங்கள் சட்டங்களைப் பின்பற்றும்படிக்கு நீங்கள் ஏன் தேவனின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிய மறுக்கிறீர்கள்? 4 ‘உன் தாய் தந்தையரை நீ மதிக்க வேண்டும்’ [a] என்று தேவன் சொன்னார். மேலும் ‘தந்தையிடமோ தாயிடமோ தீய சொற்களைக் கூறுகிறவன் கொல்லப்படுவான்’ [b] என்றும் தேவன் சொல்லியுள்ளார். 5 ஆனால் நீங்கள் ஒருவனுக்கு தன் தாய் தந்தையரிடம், ‘நான் உங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். ஆனால், அதை உங்களுக்குச் செய்யமாட்டேன். அதைத் தேவனுக்குக் காணிக்கையாக்குவேன்’ என்று கூறுவதற்குப் போதிக்கிறீர்கள். 6 தந்தையை மதிக்காதிருக்க நீங்கள் போதிக்கிறீர்கள். தேவன் சொன்னதைச் செய்வது முக்கியமல்ல என்று நீங்கள் போதிக்கிறீர்கள். நீங்கள் ஏற்படுத்தியுள்ள சட்டதிட்டங்களைப் பின்பற்றுவதே முக்கியமானதென்று நீங்கள் எண்ணுகிறீர்கள். 7 நீங்கள் மாயமானவர்கள்! உங்களைப்பற்றி ஏசாயா சரியாகவே இவ்வாறு சொல்லியிருக்கிறார்:
8 ,“இவர்கள் என்னை மதிப்பதாகக் கூறுகிறார்கள்.
ஆனாலும் மெய்யாகவே அவர்கள் வாழ்வில் நான் முக்கியமில்லை.
9 என்னை வணங்குவதில் பொருளில்லை.
அவர்கள் போதிப்பதெல்லாம் மனிதர் உண்டாக்கிய சட்டங்களே!” (B)
10 இயேசு மக்களைத் தன்னருகில் அழைத்து,, “நான் சொல்வதைக் கவனமாகக் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். 11 ஒருவன் வாய்க்குள்ளே போகிறது அவனை அசுத்தமாக்காது. மாறாக, ஒருவன் பேசும் சொற்களாலேயே அசுத்தமடைகிறான்” என்று சொன்னார்.
12 பின்னர். அவரது சீஷர்கள் இயேசுவிடம் வந்து,, “நீங்கள் சொல்லியவற்றால் பரிசேயர்கள் கோபமாயுள்ளார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள்.
13 அதற்கு இயேசு,, “பரலோகத்தில் இருக்கும் என் பிதாவால் நடப்படாத செடிகள் ஒவ்வொன்றும் வேருடன் பிடுங்கப்படும். 14 பரிசேயர்களிடமிருந்து விலகியிருங்கள். குருடர்கள் குருடர்களை வழிநடத்துவதுபோல் அவர்கள் மக்களை வழிநடத்துகிறார்கள். ஒரு குருடன் மற்றொரு குருடனை வழிநடத்தினால், இருவருமே பள்ளத்தில் வீழ்வார்கள்” என்றார்.
15 அப்பொழுது பேதுரு,, “நீர் மக்களுக்கு முதலில் சொல்லியதன் பொருளை எங்களுக்கு விளக்கும்” என்று கேட்டான்.
16 அதற்கு இயேசு,, “புரிந்து கொள்வதில் இன்னமுமா சிரமம்? 17 ஒரு மனிதனின் வாய்க்குள் செல்லும் உணவு அனைத்தும் அவனது வயிற்றை அடைவது உனக்குத் தெரியும். பின் அந்த உணவு அவன் உடலை விட்டு வெளியேறுகிறது. 18 ஆனால், ஒருவன் பேசும் தீய சொற்கள் அவன் மனதிலிருந்து தோன்றுகின்றன. இவையே ஒருவனை அசுத்தமாக்குகின்றன. 19 தீய எண்ணங்கள், கொலை, விபச்சாரம், பாலியல் பாவங்கள், திருட்டு, பொய், மற்றவர்களைத் தூற்றுதல் ஆகிய எல்லாத் தீமைகளும் ஒருவனது உள்ளத்திலேயே தோன்றுகின்றன. 20 இவை ஒருவனை அசுத்தமாக்குகின்றன. ஆனால் உணவு உண்பதற்கு முன்பு கைகளைக் கழுவாதிருப்பது ஒருவனை அசுத்தமாக்குவது இல்லை” என்றார்.
யூதரல்லாத பெண்மணிக்கு உதவுதல்(C)
21 இயேசு அவ்விடத்தை விட்டு தீரு மற்றும் சீதோன் பிரதேசங்களுக்குச் சென்றார். 22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்! என் மகளைப் பிசாசு பிடித்திருக்கிறது. அவள் மிகவும் துன்பப்படுகிறாள்” என்றாள்.
23 ஆனால் இயேசு அவளுக்கு மறுமொழி கூறவில்லை. எனவே, இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “அந்தப் பெண்ணைப் போகச் சொல்லும். நம்மைத் தொடந்து வந்து கதறுகிறாள்” என்று கெஞ்சினார்கள்.
24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.
25 அப்போது அப்பெண் இயேசுவின் முன்னர் வந்து மண்டியிட்டு,, “ஆண்டவரே, எனக்கு உதவும்” எனக் கூறினாள்.
26 இயேசு,, “குழந்தைகளின் அப்பத்தை எடுத்து நாய்களுக்குக் கொடுப்பது சரியல்ல” என்று பதில் சொன்னார்.
27 அதற்கு அப்பெண்,, “ஆம் ஆண்டவரே! ஆனால் எஜமானனின் மேஜையிலிருந்து சிதறும் அப்பத்துண்டுகளை நாய்கள் உண்ணுகின்றனவே” என்றாள்.
28 பின்னர் இயேசு அவளை நோக்கி,, “பெண்ணே, உனக்கு மிகுந்த விசுவாசம் இருக்கின்றது! நான் செய்ய வேண்டுமென்று நீ விரும்பியதை நான் செய்கின்றேன்” என்று கூறினார். அதே நேரத்தில் அப்பெண்ணின் மகள் குணப்படுத்தப்பட்டாள்.
இயேசு பலரையும் குணமாக்குதல்
29 பின் இயேசு அவ்விடத்தைவிட்டு விலகி, கலிலேயா ஏரிக்கரைக்குச் சென்றார். இயேசு ஒரு குன்றின்மீதேறி அங்கே அமர்ந்தார்.
30 ஏராளமான மக்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர்கள் நோயாளிகள் பலரையும் அழைத்து வந்து, அவர்களை இயேசுவின் முன் கொண்டு வந்தனர். அங்கு முடவர்களும் குருடர்களும் செவிடர்களும் இன்னும் பலவகை நோயாளிகளும் இருந்தனர். இயேசு அவர்கள் அனைவரையும் குணமாக்கினார். 31 ஊமையர் பேசியதைக் கண்ட மக்கள் வியப்புற்றனர். முடவர்கள் மீண்டும் நடந்தனர். குருடர்கள் பார்வை பெற்றனர். மக்கள் அனைவரும் இஸ்ரவேலின் (யூதர்களின்) தேவனுக்கு அதற்காக நன்றி கூறினார்கள்.
நாலாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு உணவு அளித்தல்(D)
32 இயேசு தம் சீஷர்களை அருகில் அழைத்து,, “இம்மக்களுக்காக நான் வருந்துகிறேன். இவர்கள் மூன்று நாட்களாக என்னுடன் இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது அவர்களுக்கு உணவு ஏதுமில்லை. அவர்களைப் பசியுடன் அனுப்ப எனக்கு விருப்பமில்லை. வீட்டிற்குத் திரும்பும்பொழுது அவர்கள் சோர்வடையலாம்” என்றார்.
33 இயேசுவின் சீஷர்கள் அவரிடம்,, “இவர்கள் அனைவருக்கும் போதுமான அப்பத்துக்கு நாம் எங்கே போக முடியும்? எந்த நகரமும் இங்கிருந்து வெகு தொலைவில் உள்ளது” என்றார்கள்.
34 இயேசு,, “எத்தனை அப்பங்கள் உங்களிடம் உள்ளன?” என்று கேட்டார்.
அதற்கு அவரது சீஷர்கள்,, “எங்களிடம் ஏழு அப்பங்களும் சில மீன்களும் உள்ளன” என்றனர்.
35 இயேசு மக்களைத் தரையில் உட்காரச் சொன்னார். 36 இயேசு ஏழு அப்பங்களையும் மீன்களையும் எடுத்துக் கொண்டார். பின் அவர் அவ்வுணவுக்காகத் தேவனுக்கு நன்றி கூறி, அவ்வுணவைத் தம் சீஷர்களுக்குக் கொடுத்தார். சீஷர்கள் மக்களுக்கு உணவை அளித்தனர். 37 மக்கள் அனைவரும் திருப்தியாய் உண்டனர். அதன் பின்னர், எஞ்சிய உணவைச் சீஷர்கள் ஏழு கூடை நிறைய நிறைத்தார்கள். 38 அங்கு சுமார் 4,000 ஆண்கள் உணவருந்தினர். மேலும் பல பெண்களும் குழந்தைகளும் உணவு உண்டார்கள். 39 அவர்கள் உண்டபின், இயேசு அவர்களைத் திரும்பிச் செல்லப் பணித்தார். இயேசு ஒரு படகில் ஏறி, மக்தலாவின் பிரதேசத்திற்குச் சென்றார்.
2008 by World Bible Translation Center