M’Cheyne Bible Reading Plan
யோர்தான் நதியில் நடந்த அற்புதம்
3 மறுநாள் காலையில் யோசுவாவும், இஸ்ரவேல் ஜனங்களும் எழுந்து, அகாசியாவை (சித்தீமை) விட்டு புறப்பட்டு யோர்தான் நதிக்கரைக்கு வந்தார்கள். அவர்கள் நதியைக் கடக்கும் முன்னர், அங்கே நதிக்கரையில் முகாமிட்டார்கள். 2 மூன்று நாட்களுக்குப் பிறகு, தலைவர்கள் முகாமிற்குள் சுற்றிப் பார்த்தார்கள். 3 அவர்கள் ஜனங்களிடம், “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியரும், லேவியரும் சுமந்து செல்வதைக் காண்பீர்கள். அப்போது, நீங்கள் அவர்களைப் பின்தொடர வேண்டும். 4 ஆனால் மிகவும் நெருங்கிச் செல்லாதீர்கள். 2,000 முழ தூரத்தில் அவர்களைப் பின்தொடர்ந்து செல்லுங்கள். நீங்கள் இதற்கு முன் ஒருபோதும் இவ்வழியாக வந்ததில்லை. ஆனால் அவர்களைப் பின்தொடர்ந்தால், எங்கு செல்வதென்பதை அறிவீர்கள்” என்று ஆணைகள் கொடுத்தார்கள்.
5 அப்போது யோசுவா ஜனங்களிடம், “நீங்கள் உங்களைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளுங்கள். நாளை கர்த்தர் அதிசயமான காரியங்களைச் செய்வார்” என்றான்.
6 பின் யோசுவா ஆசாரியர்களை நோக்கி, “உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஜனங்களுக்கு முன்பாக நதியைக் கடந்து செல்லுங்கள்” என்றான். அவ்வாறே ஆசாரியர்களும் பெட்டியைச் சுமந்தவாறு ஜனங்களுக்கு முன்பாகச் சென்றார்கள்.
7 அப்போது கர்த்தர் யோசுவாவிடம், “இன்று இஸ்ரவேலின் எல்லா ஜனங்களும் பார்க்கும்படியாக உன்னை உயர்ந்த மனிதனாக்கினேன். அப்போது, நான் மோசேயோடு இருந்ததுபோலவே உன்னோடும் இருக்கிறேன் என்பதை ஜனங்கள் அறிவார்கள். 8 உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்து செல்கிற ஆசாரியர்களிடம், ‘யோர்தான் நதியின் கரைவரைக்கும் நடந்து தண்ணீரினுள் இறங்கும் முன்பாக அங்கு சற்று நில்லுங்கள் என்று சொல்’” என்றார்.
9 அப்போது யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி, “உங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளை வந்து கேளுங்கள். 10 உயிருள்ள தேவன் உங்களோடிருக்கிறார் என்பதற்கும், அவர் பகைவரைத் தோற்கடிப்பார் என்பதற்கும் சான்றாக கானானியரையும், ஏத்தியரையும், ஏவியரையும், பெரிசியரையும், கிர்காசியரையும், எமோரியரையும், எபூசியரையும் அவர் தோற்கடித்து இத்தேசத்தை விட்டுப் போகுமாறு செய்வார். 11 இதுவே அதற்கு சான்று. முழு உலகத்துக்கும் ஆண்டவராயிருப்பவரின் உடன்படிக்கைப் பெட்டி, நீங்கள் யோர்தான் நதியைத் தாண்டும்போது, உங்களுக்கு முன்னே செல்லும். 12 இப்போது, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களில் இருந்தும், குழுவுக்கு ஒருவர் வீதம் பன்னிரண்டு மனிதரைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். 13 கர்த்தருடைய பெட்டியை ஆசாரியர் சுமந்து செல்வார்கள். உலகத்தின் ஆண்டவர் கர்த்தரே. அவர்கள் அப்பெட்டியை உங்களுக்கு முன்பாக யோர்தான் நதியில் சுமந்து செல்வார்கள். அவர்கள் தண்ணீருக்குள் கால் வைத்ததும், யோர்தான் நதியில் தண்ணீர் ஓடாமல் நின்று, அணைபோல் தேங்கியிருக்கும்” என்றான்.
14 உடன்படிக்கைப் பெட்டியை ஆசாரியர் சுமந்து சென்றனர். முகாமிட்டிருந்த இடத்திலிருந்து ஜனங்கள் புறப்பட்டு, யோர்தான் நதியைக் கடக்க ஆரம்பித்தனர். 15 (அறுவடைக் காலத்தில் யோர்தான் நதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். எனவே நதியில் தண்ணீர் பெருகியிருந்தது.) பெட்டியைச் சுமந்து வந்த ஆசாரியர்கள் நதிக்கரையை அடைந்தனர். அவர்கள் கரையோரத்தில் தண்ணீரில் கால் வைத்தனர். 16 உடனே, தண்ணீர் ஓடாமல் நின்று ஒரு அணைப்போல் தேங்கிக்கொண்டது. (யோர்தான் அருகிலுள்ள ஊராகிய) ஆதாம் வரைக்கும் நதியின் தண்ணீர் குவிந்து நின்றது. எரிகோ அருகே ஜனங்கள் நதியைக் கடந்தனர். 17 அவ்விடத்தில் நிலம் வறண்டது, ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமந்தவாறே நதியின் நடுப்பகுதிவரைக்கும் சென்று அங்கே நின்றனர். இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் யோர்தான் நதியை உலர்ந்த நிலத்தின் வழியாக கடக்கும் மட்டும் ஆசாரியர்கள் அங்கேயே நின்றனர்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
126 கர்த்தர் நம்மை மீண்டும் விடுவிக்கும்போது
அது ஒரு கனவைப் போன்றிருக்கும்.
2 நாம் சிரித்துக்கொண்டும் மகிழ்ச்சியுடன் பாடல்களைப்
பாடிக்கொண்டும் இருப்போம்! பிற தேசத்து ஜனங்கள்,
“இஸ்ரவேலின் ஜனங்களுக்கு கர்த்தர் ஒரு அற்புதமான காரியத்தைச் செய்தார்!” என்பார்கள்.
3 ஆம், கர்த்தர் அந்த அற்புதமான காரியத்தை நமக்குச் செய்ததால்
நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
4 கர்த்தாவே, பாலைவன நீரூற்றுக்கள் மீண்டும் ஓடிவரும் வெள்ளத்தின்
தண்ணீரால் நிரம்புவதைப்போல எங்களை மீண்டும் விடுவியும்.
5 ஒருவன் விதைகளை விதைக்கும்போது துக்கமாயிருக்கலாம்.
ஆனால் அவன் பயிர்களின் பலனை அறுவடை செய்யும்போது மகிழ்ச்சியோடிருப்பான்.
6 அவன் விதைகளை வயலுக்கு எடுத்துச் செல்லும்போது அழக்கூடும்,
ஆனால் அறுவடையைக் கொண்டுவரும்போது அவன் மகிழ்ச்சியோடிருப்பான்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடுவதற்கான சாலொமோனின் பாடல்
127 கர்த்தர் ஒரு வீட்டைக் கட்டாவிட்டால் அதைக் கட்டுகிறவன் காலத்தை வீணாக்குகிறான்.
கர்த்தர் ஒரு நகரத்தைக் கண்காணிக்காவிட்டால் அதைக் காப்போர் காலத்தை வீணாக்குகிறார்கள்.
2 வாழ்க்கை வாழ்வதற்காக காலையில் எழுவதும் இரவில் வெகுநேரம் விழித்திருப்பதும் பொழுதை வீணாக்குவதாகும்.
தேவன் தாம் நேசிக்கிற ஜனங்களை அவர்கள் உறங்கும்போது கவனித்துக் காக்கிறார்.
3 பிள்ளைகள் கர்த்தரால் வரும் பரிசாகும்.
குழந்தைகள் ஒரு தாயின் சரீரத்திலிருந்து வரும் வெகுமதியாகும்.
4 ஒரு இளைஞனின் மகன்கள்
ஒரு வீரன் அம்புகளை வைத்திருக்கும் பையிலுள்ள அம்புகளுக்கு ஒப்பாவார்கள்.
5 தன் அம்புகள் வைக்கும் பையை மகன்களால் நிரப்பும் மனிதன் மிகவும் மகிழ்ச்சியடைவான்.
அம்மனிதன் ஒரு நாளும் தோற்கடிக்கப்படமாட்டான்.
அவனது பகைவர்களுக்கு எதிராகப் பொது இடங்களில் போராடி அவனது மகன்கள் அவனைக் காப்பார்கள்.
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்
128 கர்த்தரைப் பின்பற்றுகிறவர்கள் எல்லோரும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள்.
தேவன் விரும்புகிறபடியே அவர்கள் வாழ்கிறார்கள்.
2 நீங்கள் உழைத்துப்பெறுகிற பொருள்களால் களிப்படைவீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாயிருப்பீர்கள், உங்களுக்கு நல்லவை நிகழும்.
3 வீட்டில் உன் மனைவி பலன்தரும் திராட்சைக் கொடியைப்போல் இருப்பாள்.
மேசையைச் சுற்றிலும் உன் பிள்ளைகள் நீ வளர்க்கும் ஒலிவ மரங்களைப்போன்று இருப்பார்கள்.
4 கர்த்தர் தம்மைப் பின்பற்றுவோரை உண்மையாகவே இவ்வாறு ஆசீர்வதிப்பார்.
5 கர்த்தர் உங்களை சீயோனிலிருந்து ஆசீர்வதிப்பார்.
வாழ்க்கை முழுவதும் எருசலேமின் ஆசீர்வாதங்களால் நீ களிப்படைவாய் என நான் நம்புகிறேன்.
6 நீ உன் பேரப்பிள்ளைகளை காணும்படி வாழ்வாய் என நான் நம்புகிறேன்.
இஸ்ரவேலில் சமாதானம் நிலவட்டும்!
கர்த்தர் தம் ஜனங்களை நியாயந்தீர்க்கிறார்
63 ஏதோமிலிருந்து வந்துகொண்டிருக்கிற இவன் யார்?
அவன் போஸ்றாவிலிருந்து வருகிறான்.
அவனது ஆடைகள் கட்டிச் சிவப்பாக உள்ளது.
அவனது ஆடைகள் மகத்துவமாய் உள்ளது.
அவன் பெரும் வல்லமையோடு உயரமாக நடந்துகொண்டிருக்கிறான்.
அவன், “உன்னைக் காக்கும் வல்லமை என்னிடம் உள்ளது. நான் உண்மையைப் பேசுகிறேன்” என்கிறான்.
2 “உனது ஆடைகள் ஏன் சிவப்பாக உள்ளன?
அவை, திராட்சையை ரசமாக்குகிற இடத்தில் நடந்து வந்தவனைப்போன்றுள்ளன.”
3 அவன் பதில் கூறுகிறான், “நான் திராட்சைரச ஆலை வழியாக நடந்தேன்.
எவரும் எனக்கு உதவவில்லை.
நான் கோபமாக இருக்கிறேன். நான் திராட்சைகளுக்குமேல் நடந்தேன்.
அதன் சாறு என் ஆடைகள் மேல் தெளித்தது. எனவே, எனது ஆடைகள் அழுக்காக உள்ளன.
4 ஜனங்களைத் தண்டிக்க நான் ஒரு காலத்தைத் தேர்ந்தெடுக்கிறேன்.
இப்போது, எனது ஜனங்களைக் காப்பாற்றவும், பாதுகாக்கவும் உரிய நேரம் வந்துள்ளது.
5 நான் சுற்றிலும் பார்த்தேன். ஆனால் எவரும் எனக்கு உதவுவதைக் காணவில்லை.
எவரும் எனக்கு உதவவில்லை என்று நான் ஆச்சரியப்பட்டேன்.
எனவே, என் ஜனங்களைக் காப்பாற்ற
என் சொந்த வல்லமையைப் பயன்படுத்தினேன், என் கோபம் என்னைத் தாங்கினது.
6 நான் கோபமாக இருக்கும்போது, நான் ஜனங்களை மிதித்தேன்.
என் கோபம் அதிகமானபடியால் அவர்களைத் தண்டித்தேன்.
நான் அவர்களது இரத்தத்தைத் தரையில் ஊற்றினேன்.”
கர்த்தர் அவரது ஜனங்களிடம் தயவோடு இருக்கிறார்
7 கர்த்தர் தயவாக இருக்கிறார் என்று நினைவுகொள்வேன்.
கர்த்தரைத் துதிக்க நான் நினைவுகொள்வேன்.
கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்திற்குப் பல நல்லவற்றைக் கொடுத்தார்.
கர்த்தர் எங்களோடு மிகத் தயவோடு இருந்திருக்கிறார். கர்த்தர் எங்களிடம் இரக்கம் காட்டினார்.
8 கர்த்தர், “இவர்கள் என்னுடைய ஜனங்கள்.
இவர்கள் என்னுடைய மெய்யான பிள்ளைகள்” என்றார்.
எனவே கர்த்தர் அந்த ஜனங்களைக் காப்பாற்றினார்.
9 ஜனங்களுக்கு நிறைய துன்பங்கள் இருந்தன.
ஆனால் கர்த்தர் அவர்களுக்கு எதிராக இல்லை.
கர்த்தர் ஜனங்களை நேசித்தார். அவர்களுக்காக வருத்தப்பட்டார்.
எனவே கர்த்தர் அவர்களைக் காப்பாற்றினார்.
அவர் தமது சிறப்பான தூதனை அவர்களைக் காப்பாற்ற அனுப்பினார்.
கர்த்தர் என்றென்றும் அவர்களிடம் அக்கறைகொண்டார்.
கர்த்தர் அந்த ஜனங்களுக்காக அக்கறைகொள்வதை நிறுத்த விரும்பவில்லை.
10 ஆனால், அந்த ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகத் திரும்பினார்கள்.
ஜனங்கள் அவரது பரிசுத்த ஆவியை வருந்தும்படி செய்தனர்.
எனவே, கர்த்தர் அவர்களின் பகைவரானார்.
கர்த்தர் அவர்களுக்கு எதிராகப்போராடினார்.
11 ஆனால், கர்த்தர் நீண்ட காலத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பதை இப்போதும் நினைவுகொள்கிறார்.
அவர் மோசேயையும் அவரது ஜனங்களையும் நினைவுகொள்கிறார்.
கடல்வழியாக ஜனங்களைக் கொண்டுவந்தவர் கர்த்தர் ஒருவரே.
கர்த்தர் தம் மந்தைகளை (ஜனங்கள்) வழிநடத்த மேய்ப்பர்களைப் (தீர்க்கதரிசிகளை) பயன்படுத்தினார்.
ஆனால் இப்போது, மோசேயில் தன் ஆவியை வைத்தவர் எங்கே இருக்கிறார்?
12 கர்த்தர் மோசேயை அவரது வலது கையால் வழி நடத்தினார்.
கர்த்தர் மோசேயை வழிநடத்த அவரது அற்புத வல்லமையைப் பயன்படுத்தினார்.
கர்த்தர் தண்ணீரைப் பிரித்தார்.
அதனால் ஜனங்கள் கடல் வழியாக நடக்கமுடிந்தது.
கர்த்தர் இப்பெருஞ் செயலைக் செய்ததின் மூலமாக தனது நாமத்தை நித்திய புகழுக்குரியதாக்கினார்.
13 கர்த்தர் ஜனங்களை ஆழமான கடல் வழியாக நடத்தினார்.
ஜனங்கள் கீழே விழாமல் பாலைவனத்தின் வழியாக ஒரு குதிரை செல்வதுபோல் சென்றனர்.
14 ஒரு பசு வயலில் நடந்து செல்லும்போது அது கீழே விழாது.
அதேபோன்று ஜனங்கள் கடல் வழியாகப்போகும்போது கீழே விழவில்லை.
கர்த்தருடைய ஆவி ஜனங்களை ஒரு ஓய்விடத்திற்கு அழைத்துச் சென்றது.
ஜனங்கள் முழுநேரமும் பாதுகாப்பாக இருந்தனர்.
கர்த்தாவே, அதுதான் நீர் உமது ஜனங்களை நடத்திய வழி.
நீர் ஜனங்களை வழிநடத்தினீர். நீர் உமது நாமத்தை அற்புதமாக்கினீர்!
அவரது ஜனங்களுக்கு உதவ தேவனிடம் ஒரு ஜெபம்
15 கர்த்தாவே! வானத்திலிருந்து கீழே பாரும்!
இப்பொழுது, நிகழ்ந்துகொண்டிருப்பவற்றைப் பாரும்!
பரலோகத்திலுள்ள உமது பெருமையும். பரிசுத்தமும் கொண்ட வீட்டிலிருந்து என்னைப் பாரும்!
என் மீதிருந்த உமது பலமான அன்பு எங்கே? உமது ஆழத்திலிருந்து வரும் வல்லமையான உமது வேலைகள் எங்கே?
எனக்கான உமது இரக்கம் எங்கே?
என்னிடமிருந்து உமது கருணையை ஏன் மறைத்தீர்?
16 பாரும். நீர் எமது தந்தை!
எங்களை ஆபிரகாம் அறியமாட்டார்.
இஸ்ரவேல் (யாக்கோபு) எங்களை அடையாளம் காணவில்லை.
கர்த்தாவே, நீர் எமது தந்தை.
எங்களை எப்போதும் காப்பாற்றுகிறவர் நீர் ஒருவரே.
17 கர்த்தாவே, எங்களை நீர் ஏன் உம்மிடமிருந்து தள்ளுகிறீர்.
உம்மைப் பின்தொடர்வதை நீர் ஏன் கடினமாக்கினீர்?
கர்த்தாவே எங்களிடம் திரும்பி வாரும்.
நாங்கள் உமது ஊழியர்கள்.
எங்களிடம் வந்து எங்களைக் காப்பாற்றும்.
எங்கள் குடும்பங்களும் உம்மைச் சார்ந்தது.
18 உமது பரிசுத்தமான ஜனங்கள் அவர்களின் நாடுகளில் கொஞ்சம் காலமே வாழ்ந்தார்கள்.
பிறகு எங்கள் பகைவர்கள் உமது பரிசுத்தமான ஆலயத்தை மிதித்தனர்.
19 சிலர் உம்மைப் பின்பற்றவில்லை.
அந்த ஜனங்கள் உமது நாமத்தால் அழைக்கப்படவில்லை.
நாங்களும் அந்த ஜனங்களைப்போல் இருந்தோம்.
இயேசுவும் யோவான் ஸ்நானகனும்(A)
11 இயேசு தமது பன்னிரண்டு சீடர்களுக்கும் இவற்றைக் கூறி முடித்தார். பின்னர் அங்கிருந்து கலிலேயாவின் நகரங்களுக்குப் போதனை செய்வதற்காகச் சென்றார்.
2 யோவான் ஸ்நானகன் சிறையிலிருந்தான். கிறிஸ்து செய்து கொண்டிருந்த பணிகளை யோவான் கேள்வியுற்றான். எனவே, யோவான் தனது சீஷர்கள் சிலரை இயேசுவிடம் அனுப்பினான். 3 யோவானின் சீஷர்கள் இயேசுவைக்கண்டு,, “யோவான் வருவதாகக் கூறிய மனிதர் நீங்கள்தானா அல்லது நாங்கள் வேறொருவரின் வருகைக்குக் காத்திருக்க வேண்டுமா?” என்று கேட்டனர்.
4 இயேசு அவர்களிடம்,, “யோவானிடம் திரும்பிச் சென்று நீங்கள் கேள்வியுறுவனவற்றையும் காண்பவற்றையும் கூறுங்கள். 5 குருடர்கள் பார்வை பெறுகிறார்கள். முடவர்கள் நடக்கிறார்கள். தொழு நோயாளிகள் குணமாகிறார்கள். செவிடர்கள் கேட்கும் சக்தி பெறுகிறார்கள். இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்கள். ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. 6 என்னை ஏற்றுக்கொள்கிறவன் ஆசீர்வதிக்கப்படுகிறான்” என்று பதில் சொன்னார்.
7 யோவானின் சீஷர்கள் புறப்பட்டுப் போன பின்பு, இயேசு அங்கிருந்த மக்களிடம் யோவானைப் பற்றிப் பேசலானார். இயேசு அவர்களிடம்,, “வானாந்திரத்திற்கு எதைக் காண்பதற்குப் போனீர்கள்? காற்றில் அசையும் நாணலைக் காண்பதற்காகவா? இல்லை. 8 உண்மையில் எதைக் காணச் சென்றீர்கள்? சிறந்த ஆடைகளை உடுத்திய மனிதனைக் காண்பதற்கா? இல்லை சிறந்த ஆடைகளை உடுத்திக்கொள்கிறவர்கள் அரண்மனைகளில்தான் வசிக்கிறார்கள். 9 அப்படியானால் எதைக் காண வனாந்திரத்திற்குப் போனீர்கள்? தீர்க்கதரிசியையா? ஆம், நான் சொல்லுகிறேன், தீர்க்கதரிசியைக் காட்டிலும் யோவான், மேலானவன். 10 ஏற்கெனவே வேதவாக்கியங்களில் யோவானைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது:
, “‘கவனியுங்கள்! நான் என் உதவியாளை உங்களுக்கு முன்பாக அனுப்புவேன்.
உங்களுக்கான பாதையை அவன் தயார் செய்வான்.’” என்று கூறினார். (B)
11 ,“நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன், ஞானஸ்நானம் வழங்கும் யோவான் இவ்வுலகில் வாழ்ந்த எந்த மனிதனைக் காட்டிலும் மேலானவன். ஆனால், பரலோக இராஜ்யத்தில் மிகவும் அற்பமான மனிதன் கூட யோவானைக் காட்டிலும் முக்கியமானவன். 12 யோவான் வந்த காலந்தொட்டு இன்றுவரை பரலோக இராஜ்யம் வலுவடைந்து வருகிறது. மக்கள் வலிமையைப் பயன்படுத்திப் பரலோக இராஜ்யத்தை அடைய முயன்று வந்திருக்கிறார்கள். 13 எல்லாத் தீர்க்கதரிசனங்களும் மோசேயின் நியாயப்பிரமாணமும் யோவானின் வருகை வரைக்கும் தீர்க்கதரிசனம் உரைத்தன. நடக்கவிருந்த செயல்களை அவை கூறின. 14 நியாயப்பிரமாணம் கூறியவற்றையும் தீர்க்கதரிசிகள் கூறியவற்றையும் நீங்கள் நம்பினால், யோவானே எலியா [a] என்பதையும் நீங்கள் நம்புவீர்கள். நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களும் அவன் வருவான் எனச் சொல்கின்றன. 15 என் பேச்சைக் கேட்பவர்களே, கவனியுங்கள்.
16 ,“இன்றைக்கு வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களைக் குறித்து நான் என்ன சொல்ல முடியும்? எப்படிப்பட்டவர்கள் அவர்கள்? கடை வீதியில் அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் போன்றவர்கள் இன்றைய மக்கள். ஒரு கூட்ட பிள்ளைகள் மற்றொன்றைப் பார்த்து,
17 ,“‘உங்களுக்காக இசைத்தோம்,
ஆனாலும், நீங்கள் நடனமாடவில்லை.
சோகப் பாடல் ஒன்றைப் பாடினோம்,
ஆனாலும், நீங்கள் சோகம் கொள்ளவில்லை’
என்று அழைக்கிறது.
18 ,“மக்கள் அப்படிப்பட்டவர்கள் என்று நான் ஏன் கூறுகிறேன்? யோவான் மற்றவர்களைப்போல உண்ணவில்லை. திராட்சை இரசம் குடிக்கவில்லை. ஆனால் மக்கள் ‘யோவானுக்குள் ஒரு பிசாசு இருக்கிறது’, என்று சொல்கிறார்கள். 19 மனிதகுமாரன் வந்திருந்து மற்றவர்களைப் போலவே உண்ணுகிறார்: திராட்சை இரசமும் குடிக்கிறார். மக்களோ, ‘அவரைப் பாருங்கள்!’ அதிகமாக உண்ணுகிறார். அதிகமாக திராட்சை இரசமும் குடிக்கிறார். வரி வசூலிப்பவர்களுக்கும் தீயவர்களுக்கும் அவர் நண்பர் என்று சொல்கிறார்கள். ஆனால் ஞானம் அதன் செயல்களால் தீர்மானிக்கப்படுகிறது.”
நம்பிக்கையற்றோருக்கு எச்சரிப்பு(C)
20 பிறகு, தாம் பெரும்பாலான அற்புதங்களை நிகழ்த்திய நகரங்களை இயேசு விமர்சித்தார். ஏனென்றால் அந்நகரங்களிலுள்ள மக்கள் அதற்குப்பின் தமது வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு பாவம் செய்வதை நிறுத்தவில்லை. 21 இயேசு,, “கோராசின் நகரமே, பெத்சாயிதா நகரமே, இது உங்களுக்கு மிகவும் கொடுமையானது. உங்களுக்கு நான் பல அற்புதங்களை நிகழ்த்தினேன். அதே அற்புதங்களைத் தீரு மற்றும் சீதோன் நகரங்களில் நடத்தியிருந்தால், அம்மக்கள் வெகு நாள் முன்பே மனந்திருந்தியிருப்பார்கள். தங்கள் பாவங்களுக்காகத் தம் வருத்தத்தைத் தெரிவிக்க சாக்குத்துணி ஆடையை அணிந்து சாம்பல் பூசிக் கொண்டிருப்பார்கள். 22 நியாயத்தீர்ப்பு வழங்கும் நாளன்று தீரு மற்றும் சீதோன் மக்களைவிடவும் உங்களுக்கு மிகத் துன்பம் ஏற்படும் என்று நான் சொல்கிறேன்.
23 ,“கப்பர்நகூம் மக்களாகிய நீங்கள் வானம் வரை உயர்த்தப்படுவீர்களோ? இல்லை! நீங்கள் மரணக் குழியில் தள்ளப்படுவீர்கள். உங்களிடம் பல அற்புதங்களைச் செய்தேன் நான். அந்த அற்புதங்களைச் சோதோம் நகரில் நிகழ்த்தியிருந்தால், அந்நகர மக்கள் பாவம் செய்வதை நிறுத்தியிருப்பார்கள். இன்னும் ஒரு நகரமாகவே அது இருந்திருக்கும். 24 ஆனால் நியாயத்தீர்ப்பு வழங்கப்படுகிற நாளன்று சோதோம் நகர மக்களைக் காட்டிலும் மிகத் துன்பம் உங்களுக்கு ஏற்படும் என்று சொல்கிறேன்” என்று கூறினார்.
இயேசு தரும் இளைப்பாறுதல்(D)
25 பிறகு இயேசு,, “பரலோகத்திற்கும் பூலோகத்திற்கும் ஆண்டவராகிய பிதாவே! உமக்கு நான் நன்றி கூறுகிறேன். ஏனென்றால், இவற்றை நீர் ஞானவான்களிடமிருந்து மறைத்துள்ளீர். ஆனால் இவற்றைக் குழந்தையைப் போன்ற மக்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறீர். 26 ஆம். பிதாவே, நீர் மெய்யாகவே இவை நடைபெற வேண்டும் என விரும்பியதால் இப்படிச் செய்தீர்” என்றார்.
27 ,“என் பிதா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளார். குமாரனை வேறு யாரும் அறியார்; பிதாவே குமாரனை அறிவார். அதைப் போலவே, பிதாவைக் குமாரன் மட்டுமே அறிவார்; வேறு யாரும் அறியார். மேலும், பிதாவானவரைப்பற்றி அறிந்தவர்களையே குமாரனும் போதனை செய்யத் தேர்ந்தெடுக்கிறார்.
28 ,“களைப்படைந்து மிகுந்த பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு ஓய்வு அளிப்பேன். 29 என் பணிகளை ஏற்றுக்கொண்டு என்னிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள். நான் சாந்தமும் பணிவும் கொண்டவன். உங்கள் ஆத்துமாவிற்கு ஓய்வைக் கண்டடைவீர்கள். 30 நான் உங்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லும் வேலை எளிதானது. நான் உங்களைச் சுமக்கச் சொல்லும் பளு இலேசானது” என்று இயேசு கூறினார்.
2008 by World Bible Translation Center