M’Cheyne Bible Reading Plan
பஸ்கா
16 “ஆபிப் மாதம் வருவதைக் கவனித்து, அந்த மாதத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு பஸ்காவை நீங்கள் கொண்டாட வேண்டும். ஏனென்றால், ஆபிப் மாதத்திலேயே இரவு நேரத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார். 2 நீங்கள் எல்லோரும் கர்த்தர் தமக்குச் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்திற்கு, அந்தக் கொண்டாட்ட தினத்தில் செல்லவேண்டும். அங்கே, உங்கள் கர்த்தருக்குப் பஸ்காவின் பலியாகிய ஆடு, மாடுகளைப் பலியிடுவாயாக. 3 அந்த நாளில் புளிப்புள்ள அப்பத்தை நீங்கள் உண்ணக்கூடாது. புளிப்பில்லாத அப்பங்களையே ஏழு நாட்களுக்கு உண்ண வேண்டும், இந்த அப்பங்கள் ‘துன்பத்தின் அப்பங்கள்’ என்று அழைக்கப்படும்! இவை எகிப்தில் நீங்கள் அடைந்த துன்பங்களை நினைவூட்டுவதாக இருக்கும். எவ்வளவு விரைவாக நீங்கள் அந்த தேசத்திலிருந்து வெளியேறினீர்கள் என்பதை பஸ்காதோறும் நீங்கள் உயிரோடு இருக்கின்ற நாளெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டும். 4 ஏழு நாட்களுக்கு உங்களுடைய தேசத்தில் யார் வீட்டிலும் பளிப்புள்ள அப்பங்கள் இருக்ககூடாது. நீங்கள் முதல்நாள் மாலையில் பலியிட்ட இறைச்சியில் எதையும் மறுநாள் காலைவரை மீதி வைக்காமல் உண்டுவிட வேண்டும்.
5 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்கு வழங்கிய எந்த நகரத்திலும் நீங்கள் பஸ்காவைப் பலியிடக்கூடாது. 6 உங்கள் தேவனாகிய கர்த்தர் தமக்கென்று சிறப்பாக தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்காவைப் பலியிடவேண்டும். அங்கே நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்ட நேரமாகிய சூரியன் மறையும் மாலைப் பொழுதில் பஸ்காவைப் பலியிடவேண்டும். அந்த நாள் உங்களுக்கு விடுமுறை நாள். 7 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்திலேயே பஸ்கா இறைச்சியை சமைத்து அன்று இரவே உண்ணவேண்டும். பின் மறுநாள் விடியற் காலையில் நீங்கள் உங்கள் வீடுகளுக்குத் திரும்பிவிடுங்கள். 8 ஆறு நாட்கள் புளிப்பில்லாத அப்பத்தையே நீங்கள் உண்ண வேண்டும். ஏழாவது நாளில் நீங்கள் எந்த வேலையும் செய்யக்கூடாது. அந்த நாளில் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும் பொருட்டு நீங்கள் அனைவரும் ஒன்று கூட வேண்டும்.
வாரங்களின் பண்டிகை (பெந்தெகோஸ்தே)
9 “உங்களது அறுவடைக்காலம் துவங்குவதிலிருந்து ஏழு வாரங்களை எண்ணிக்கொள்ளுங்கள். 10 பின் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கான வாரங்களின் பண்டிகையைக் கொண்டாடுங்கள். நீங்கள் தேவனுக்குக் கொடுக்க விரும்புகின்ற சிறப்பான அன்பளிப்பைக் கொண்டு வருவதின் மூலம் இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்ப உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள். 11 கர்த்தர் சிறப்பாகத் தேர்ந்தெடுத்த இடத்துக்குச் செல்லுங்கள். நீஙகளும் உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதானத்தில் மகிழ்ச்சியாய் இருங்கள். அனைவரையும் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் மகன்கள், மகள்கள், உங்களது வேலையாட்கள், லேவியர்கள், உங்களிடத்தில் இருக்கின்ற அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், ஆகிய எல்லோரையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள். 12 எகிப்தில் நீங்கள் அடிமைகளாக இருந்ததை எண்ணிப் பாருங்கள். ஆகையால் இந்தக் கட்டளைகளுக்கு நீங்கள் கீழ்ப்படிய வேண்டும்
அடைக்கலக் கூடாரப் பண்டிகை
13 “நீங்கள், உங்கள் தானியக் களத்தின் பலனையும், உங்கள் திராட்சைரச ஆலைகளின் பலனையும் சேர்த்தபின்பு, ஏழு நாட்கள் உங்கள் அடைக்கலக் கூடாரப் பண்டிகையைக் கொண்டாடவேண்டும். 14 இந்தப் பண்டிகையை உங்களுக்குள் மகிழ்வாகக் கொண்டாடுங்கள். நீங்கள், உங்கள் மகன்கள், உங்கள் மகள்கள், உங்கள் வேலையாட்கள், உங்களை சார்ந்த பகுதியில் வசிக்கும் லேவியர்கள், அந்நியர்கள், அநாதைகள், உங்கள் நகரங்களில் வாழும் விதவைகள், எல்லோருமாகச் சேர்ந்து கொண்டாடுங்கள், 15 இந்தப் பண்டிகையை உங்கள் கர்த்தர் தேர்ந்தெடுத்த இடத்தில் ஏழு நாட்கள் கொண்டாடி மகிழுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு மரியாதை செலுத்தும்படி இதைச் செய்யுங்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களது விளைச்சல்களையும், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளையும் ஆசீர்வதித்துள்ளார். ஆகவே நீங்கள் மிக்க மகிழ்ச்சி அடைவீர்களாக!
16 “வருடத்திற்கு மூன்றுமுறை உங்களது ஆண் ஜனங்கள் அனைவரும் தவறாது உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் கூடவேண்டும். அவர்கள் அனைவரும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகைக்கும், வாரங்களின் பண்டிகைக்கும், அடைக்கல கூடாரங்களின் பண்டிகைக்கும் கண்டிப்பாக வரவேண்டும். ஒவ்வொருவரும் வரும் பொழுது, கர்த்தருக்குரிய அன்பளிப்புகளை எடுத்துவர வேண்டும். 17 ஒவ்வொருவரும் தன் தகுதிக்கு ஏற்றவாறு காணிக்கையைச் செலுத்தவேண்டும். கர்த்தர் உங்களை எந்த அளவிற்கு ஆசீர்வதித்தாரோ அதற்கேற்றவாறு உங்கள் காணிக்கையைச் செலுத்துங்கள்.
ஜனங்களுக்கான நீதிபதிகளும், தலைவர்களும்
18 “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் அனைத்துப் பட்டணங்களிலும் நீங்கள் நீதிபதிகளையும், தலைவர்களையும் தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு கோத்திரமும் இவ்வாறு செய்ய வேண்டும். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும். 19 நீங்கள் அனைவரும் நேர்மையாக இருக்க வேண்டும். நீங்கள் மற்ற ஜனங்களை மீறி சிலரை மாத்திரம் ஆதரித்துப் பேசாதீர்கள். நியாயத்தில் உங்கள் மனது புரளாதபடி நீங்கள் லஞ்சம் வாங்காமல் இருங்கள். பணமானது ஞானிகளின் கண்களைக் குருடாக்கி, நல்லவன் சொல்லக் கூடிய சரியான தீர்ப்பை மாற்றிவிடும். 20 நல்லவற்றையும், நேர்மையானவற்றையுமே நீங்கள் செய்ய வேண்டும்! நீங்கள் எப்போதும் நல்லவராக, நேர்மையானவராக இருப்பதற்குப் பாடுபட வேண்டும்! பின் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுத்த தேசத்தில் வாழ்வையும், சுதந்திரத்தையும் பெறுவீர்கள்.
தேவன் விக்கிரகங்களை வெறுக்கிறார்
21 “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு உண்டாக்கும் பலிபீடத்தின் அருகில் அஷெரா தேவதைக்கென்று எந்த ஸ்தம்பத்தையும் வைக்கக் கூடாது. 22 அதுமட்டுமின்றி பொய்யான தெய்வங்களைத் தொழுதுகொள்வதற்கான சிற்ப கற்களையும் அங்கே வைக்ககூடாது. உங்கள் தேவனாகிய கர்த்தர் இவற்றையெல்லாம் வெறுக்கின்றார்.
தாவீதின் ஒரு பாடல்
103 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
என் ஒவ்வொரு அவயவங்களே அவரது பரிசுத்த நாமத்தைத் துதியங்கள்.
2 என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி!
அவர் உண்மையிலேயே தயவுள்ளவர் என்பதை மறக்காதே.
3 நாம் செய்யும் பாவங்களையெல்லாம் தேவன் மன்னிக்கிறார்.
அவர் நமது நோய்களையெல்லாம் குணமாக்குகிறார்.
4 தேவன் கல்லறையிலிருந்து நம் உயிரை மீட்கிறார்.
அவர் நமக்கு அன்பையும் தயவையும் தருகிறார்.
5 தேவன் நமக்கு மிகுதியான நல்ல பொருட்களைத் தருகிறார்.
அவர் நம்மைக் கழுகைப் போன்று இளமையாக்குகிறார்.
6 கர்த்தர் நியாயமானவர்.
பிறரால் புண்படுத்தப் பட்டிருக்கிறவர்களுக்கு தேவன் நியாயத்தைக் கொண்டு வருகிறார்.
7 தேவன் அவரது சட்டங்களை மோசேக்குக் கற்பித்தார்.
அவர் செய்யத்தக்க வல்லமையுள்ள காரியங்களை இஸ்ரவேல் காணுமாறு தேவன் செய்தார்.
8 கர்த்தர் தயவும் இரக்கமும் உள்ளவர்.
தேவன் பொறுமையும் மிகுந்த அன்பும் உடையவர்.
9 கர்த்தர் எப்போதும் குற்றங்காண்பதில்லை.
கர்த்தர் என்றென்றும் நம்மிடம் கோபங்கொண்டிருப்பதில்லை.
10 நாங்கள் தேவனுக்கு எதிராகப் பாவம் செய்தோம்,
ஆனால், நமக்குரிய தண்டனையை தேவன் வழங்கவில்லை.
11 வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ,
அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.
12 மேற்கிலிருந்து கிழக்கு எவ்வளவு தூரமோ
அந்த அளவு தேவன் நமது பாவங்களை நம்மை விட்டு வெகுதூரத்திற்கு விலக்கிவிட்டார்.
13 தந்தை தனது பிள்ளைகளிடம் இருப்பதைப் போன்று
கர்த்தரும், அவரைப் பின் பற்றுவோரிடம் இரக்கமாக இருக்கிறார்.
14 தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார்.
நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
15 நம் வாழ்க்கை குறுகியது என்பதை தேவன் அறிகிறார்.
நம் வாழ்க்கை புல்லைப்போன்றது என்பதை அவர் அறிகிறார்.
16 நாம் சிறிய காட்டுப் பூக்களைப் போன்றவர்கள் என்பதை தேவன் அறிகிறார்.
அம்மலர் சீக்கிரம் மலர்கிறது.
வெப்பமான காற்று வீசும்போது, அம்மலர் மடிகிறது.
பின்னர் அம்மலர் இருந்த இடத்தைக் கூட உன்னால் கூற முடியாது.
17 ஆனால் தேவன் எப்போதும் தம்மைப் பின் பற்றுவோரை நேசிக்கிறார்.
என்றென்றைக்கும் எப்போதும் அவர் தம்மைப் பின்பற்றுவோரை நேசிப்பார்.
தேவன் அவர்களுடைய பிள்ளைகளுக்கும், அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் நல்லவர்.
18 அவரது உடன்படிக்கைக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற ஜனங்களுக்கு தேவன் நல்லவர்.
19 பரலோகத்தில் தேவனுடைய சிங்காசனம் உள்ளது.
அவர் எல்லாவற்றின் மீதும் அரசாள்கிறார்.
20 தேவதூதர்களே, கர்த்தரைத் துதியுங்கள்!
தேவ தூதர்களாகிய நீங்கள் தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிற வல்லமை வாய்ந்த வீரர்களாவீர்கள்.
நீங்கள் தேவனுக்குச் செவி கொடுத்து அவர் கட்டளைகளுக்குக் கீழ்ப்படியங்கள்.
21 அவரது எல்லா சேனைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
நீங்கள் அவரது பணியாட்கள்.
தேவன் விரும்புகிற காரியங்களை நீங்கள் செய்யுங்கள்.
22 எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் உண்டாக்கினர்.
எல்லா இடத்திலுமுள்ள எல்லாவற்றையும் தேவன் ஆளுகிறார்.
அவை அனைத்தும் கர்த்தரைத் துதிக்கவேண்டும்.
என் ஆத்துமாவே, கர்த்தரைத் துதி.
தேவன் எப்போதும் தமது ஜனங்களோடு இருக்கிறார்
43 யாக்கோபே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இஸ்ரவேலே! கர்த்தர் உன்னைப் படைத்தார்! இப்போது கர்த்தர் கூறுகிறார் “அஞ்சாதே! நான் உன்னைக் காப்பாற்றினேன். நான் உனக்குப் பெயரிட்டேன். நீ என்னுடையவன். 2 உனக்குத் தொல்லைகள் இருக்கும்போது நான் உன்னோடு இருக்கிறேன். நீ ஆறுகளைக் கடக்கும்போது, நீ பாதிக்கப்படமாட்டாய். நீ நெருப்பினூடே நடக்கும்போது, நீ எரிக்கப்படமாட்டாய். நெருப்புச் ஜூவாலைகள் உன்னைப் பாதிக்காது. 3 ஏனென்றால், கர்த்தராகிய நான் உனது தேவன். இஸ்ரவேலின் பரிசுத்தரான நான் உனது மீட்பர். உன்னை மீட்கும் பொருளாக எகிப்தைக் கொடுத்தேன். உன்னை என்னுடையவனாக்க எத்தியோப்பியாவையும், சேபாவையும் கொடுத்தேன். 4 நீ எனக்கு மிகவும் முக்கியமானவன். எனவே, நான் உன்னைப் பெருமைப்படுத்துவேன். நான் உன்னை நேசிக்கிறேன். நான் (உன் ஜீவனுக்குப் பதிலாக) அனைத்து ஜனங்களையும் தேசங்களையும் கொடுப்பேன். எனவே நீ வாழலாம்”.
5 “அஞ்ச வேண்டாம்! நான் உன்னோடு இருக்கிறேன். நான் உனது பிள்ளைகளைச் சேர்த்து அவர்களை உன்னிடம் அழைத்து வருவேன். நான் அவர்களைக் கிழக்கிலிருந்தும் மேற்கிலிருந்தும் ஒன்று சேர்ப்பேன். 6 நான் வடக்குக்குச் சொல்வேன், எனது ஜனங்களை எனக்குக் கொடு. தெற்குக்கு நான் சொல்லுவேன், எனது ஜனங்களைச் சிறையில் வைக்காதீர்கள். தொலைதூர இடங்களில் இருந்து எனது மகன்களையும், மகள்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள். 7 எனக்குரிய அனைத்து ஜனங்களையும், என்னிடம் கொண்டு வாருங்கள். எனது நாமத்தை வைத்திருக்கிற ஜனங்களையும் என்னிடம் கொண்டு வாருங்கள்! அவர்களை நான் எனக்காக படைத்தேன். அவர்களை நான் படைத்தேன். அவர்கள் என்னுடையவர்கள்”.
8 தேவன் கூறுகிறார், கண்களிருந்தும் குருடாக இருக்கிற ஜனங்களை என்னிடம் அழைத்து வா, காதுகளிருந்தும் கேட்காதவர்களை என்னிடம் அழைத்து வா.
9 அனைத்து ஜனங்களும் அனைத்து நாடுகளும் ஒன்றுசேர வேண்டும். அவர்களது பொய்த் தெய்வங்களில் ஒன்று தொடக்கத்தில் என்ன நடந்தது என்பதைச் சொல்லட்டும். அவர்கள் தங்கள் சாட்சிகளை அழைத்து வரட்டும். சாட்சிகள் உண்மையைப் பேச வேண்டும். அவர்கள் சரியானவர்கள் என்பதை இது காட்டும்.
10 கர்த்தர் கூறுகிறார், “நீங்களே எனது சாட்சிகள். நீயே நான் தேர்ந்தெடுத்த தாசன். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, ஜனங்கள் என்னை நம்புவதற்கு நீங்கள் உதவவேண்டும். நான் உங்களைத் தேர்ந்தெடுத்தேன். எனவே, நான்தான் அவர் என்பதையும் நான் உண்மையான தேவன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எனக்கு முன்பாக வேறு தேவன் இருந்ததில்லை, எனக்குப் பிறகும் வேறு தேவன் இருக்கப்போவதில்லை. 11 நான், நானே கர்த்தர்! என்னைத்தவிர வேறு இரட்சகர் இல்லை! நான் ஒருவர் மட்டுமே! 12 உங்களோடு பேசியவர் நான் ஒருவரே. நான் உங்களைக் காப்பாற்றினேன். நான் இவற்றை உங்களிடம் சொன்னேன். உங்களோடு இருப்பது வேறு யாரும் அந்நியர் அல்ல. நீங்கள் என்னுடைய சாட்சிகள், நான் தேவன்!” (கர்த்தர் தாமாகவே இதனைச் சொன்னார்). 13 “நான் எப்பொழுதும் தேவனாக இருக்கிறேன். நான் ஏதாவது செய்யும்போது, நான் செய்ததை எவராலும் மாற்றமுடியாது. எனது வல்லமையிலிருந்து எவரும் ஜனங்களைக் காப்பாற்றமுடியாது”.
14 இஸ்ரவேலின் பரிசுத்தமானவரான கர்த்தர் உங்களைக் காப்பாற்றுகிறார். கர்த்தர் சொல்கிறார், “நான் உங்களுக்காகப் படைகளை பாபிலோனுக்கு அனுப்புவேன். பலர் சிறைப்பிடிக்கப்படுவார்கள். கல்தேயர்களான அவர்கள் தங்கள் படகுளில் எடுத்துச் செல்லப்படுவார்கள். (அப்படகுகளைப்பற்றிக் கல்தேயர்களுக்குப் பெருமை உண்டு). 15 நானே பரிசுத்தரான கர்த்தர். நான் இஸ்ரவேலைப் படைத்தேன். நானே உங்கள் இராஜா”.
மீண்டும் தேவன் அவரது ஜனங்களைக் காப்பாற்றுவார்
16 கர்த்தர் கடலின் வழியே சாலை அமைப்பார். அது வலிமையான தண்ணீராக இருந்தாலும், அவர் தமது ஜனங்களுக்காகப் பாதை அமைப்பார். கர்த்தர் சொல்கிறார், 17 “எனக்கு எதிராகத் தங்கள் இரதங்களோடும், குதிரைகளோடும், படைகளோடும் போரிடுகிற ஜனங்கள் தோற்கடிக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் எழமாட்டார்கள். அவர்கள் அழிக்கப்படுவார்கள். ஒரு மெழுகின் திரி அணைக்கப்படுகிறதுபோல் அவை அணைந்துபோகும். 18 எனவே, தொடக்கத்தில் நிகழ்ந்ததை எண்ணவேண்டாம். வெகு காலத்திற்கு முன்னால் நடந்ததைப்பற்றி நினைக்கவேண்டாம். 19 ஏனென்றால், நான் புதியவற்றைச் செய்வேன். இப்போது நீங்கள் புதிய செடியைப்போல வளருவீர்கள். இது உண்மை என்பதை நீங்கள் உறுதியாக அறிந்தீர்கள். நான் உண்மையில் இந்த வனாந்திரத்தில் சாலை அமைப்பேன். நான் உண்மையில் இந்த வறண்ட நிலத்தில் ஆறுகளை உருவாக்குவேன். 20 காட்டு மிருகங்களும் எனக்கு நன்றியுடையவையாக இருக்கும். பெரிய மிருகங்களும் பறவைகளும் என்னைப் பெருமைப்படுத்தும். நான் வனாந்திரத்திலே தண்ணீரை ஊற்றும்போது அவை என்னை பெருமைப்படுத்தும். வறண்ட நிலத்தில் ஆறுகளைக் கொண்டுவரும்போது அவை என்னைப் பெருமைப்படுத்தும். எனது ஜனங்களுக்காக, என்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனங்களுக்காகத் தண்ணீர் கொடுக்கும்படி நான் இதனைச் செய்வேன். 21 நான் சிருஷ்டித்த ஜனங்கள் இவர்கள்தான். இவர்கள் என்னைத் துதித்துப் பாடுவார்கள்.
22 “யாக்கோபே! நீ என்னிடம் ஜெபம் செய்யவில்லை. ஏனென்றால், இஸ்ரவேலாகிய நீ என்னிடத்தில் சோர்வடைந்து விட்டாய். 23 நீ உனது ஆடுகளை தகன பலிகளாக எனக்குச் செலுத்தவில்லை. நீ என்னை மகிமைப்படுத்தவுமில்லை. நீ எனக்குப் பலிகளும் கொடுக்கவில்லை. நீ எனக்குப் பலிகள் கொடுக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. நீ சோர்ந்து போகும்வரை நறுமணப் பொருட்களை எரிக்கும்படி நான் உன்னை வற்புறுத்தவில்லை. 24 என்னைக் கனப்படுத்தும்படி படைக்கும் பொருட்களை நீ வாங்கவில்லை. உனது அடிமையைப்போல இருக்கும்படி நீ என்னை பலவந்தப்படுத்தினாய். அதே சமயம், உனது பாவங்களால் நீ என்னைப் பாரப்படுத்தினாய்.
25 “நான், நான் ஒருவரே உனது பாவங்கள் அனைத்தையும் துடைத்துப்போடுகிறவர். என்னைத் திருப்திப்படுத்திக்கொள்ளவே நான் இதனைச் செய்கிறேன். நான் உனது பாவங்களை நினைத்துப்பார்க்கமாட்டேன். 26 ஆனால், நீ என்னை நினைக்க வேண்டும். நாம் சந்தித்து எது சரியென்று முடிவு செய்யலாம். நீ செய்திருப்பதைச் சொல்லி நீ சரியென்று காட்ட வேண்டும். 27 உங்கள் முதல் தந்தை பாவம் செய்தான். உங்களது வழக்கறிஞர்களும் எனக்கு எதிராகச் செய்தார்கள். 28 உங்களது பரிசுத்தமான தலைவர்களைப் பரிசுத்தமில்லாமல் ஆக்குவேன். யாக்கோபை முழுமையாக என்னுடையவனாக ஆக்குவேன். இஸ்ரவேலுக்குத் தீயவை நிகழும்.
இரண்டு மிருகங்கள்
13 பின்பு கடலுக்குள் இருந்து ஒரு மிருகம் வெளிவருவதைக் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும் ஏழு தலைகளும் இருந்தன. அதன் ஒவ்வொரு கொம்பின் மேலும் ஒரு கிரீடம் இருந்தது. அதன் ஒவ்வொரு தலைமீதும் ஒரு கெட்ட பெயர் எழுதப்பட்டிருந்தது. 2 அந்த மிருகம் பார்ப்பதற்கு ஒரு சிறுத்தையைப் போன்று இருந்தது. அதன் கால்கள் கரடியின் கால்களைப்போலவும் அதன் வாய் சிங்கத்தின் வாயைப்போலவும் இருந்தன. இராட்சசப் பாம்பானது அம்மிருகத்துக்குத் தன் முழு பலத்தையும், சிம்மாசனத்தையும், அதிகாரத்தையும் கொடுத்தது. 3 அம்மிருகத்தின் தலைகளில் ஒன்று சாவுக்கேதுவாகக் காயம்பட்டதுபோல காணப்பட்டது. சாவுக்கேதுவான அக்காயம் குணப்படுத்தப்பட்டது. உலகில் உள்ள அத்தனை பேரும் அதனைக் கண்டு ஆச்சரியப்பட்டு அம்மிருகத்தைப் பின்பற்றினர். 4 இராட்சசப் பாம்பு அந்த மிருகத்துக்கு அனைத்து பலத்தையும் கொடுத்ததால் மக்கள் அப்பாம்பை வழிபடத் தொடங்கினர். மக்கள் அம்மிருகத்தையும் வழிபட்டனர். அவர்கள், “இம்மிருகத்தைப்போன்று பலமிக்கது வேறு என்ன இருக்கிறது? அதனை எதிர்த்து யாரால் போரிடமுடியும்?” என்று பேசிக்கொண்டனர்.
5 அம்மிருகம் பெருமையானவற்றையும், தீய வார்த்தைகளையும் பேச அனுமதிக்கப்பட்டது. நாற்பத்திரண்டு மாதங்கள் தன் அதிகாரத்தைச் செலுத்த அம்மிருகம் அனுமதிக்கப்பட்டது. 6 அம்மிருகம் தன் வாயைத் திறந்து தேவனுக்கு எதிரானவற்றைப் பேசியது. அது தேவனுடைய பெயருக்கு எதிராகவும், தேவன் வாழும் இடத்துக்கு எதிராகவும், பரலோகத்தில் வாழ்பவர்களுக்கு எதிராகவும் பேசியது. 7 தேவனுடைய பரிசுத்த மக்களுக்கு எதிராகப் போரிட்டு வெற்றி பெறும் அதிகாரமும் அந்த மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. உலகில் உள்ள ஒவ்வொரு குல, இன, மொழி, நாட்டின் மீதும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 8 உலகில் வாழும் அத்தனை மக்களும் அந்த மிருகத்தை வழிபடுவார்கள். இவர்கள், உலகத்தின் துவக்கக்காலம் முதல் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புத்தகத்தில் பெயர்கள் எழுதப்படாத மக்கள் ஆவார்கள்.
9 கேட்கிற சக்தி உள்ளவன் எவனும் இதனைக் கேட்பானாக.
10 எவனொருவன் சிறைப்படுத்திக்கொண்டு போகிறானோ
அவன் சிறைபட்டுப் போவான்.
எவனொருவன் வாளால் கொல்பவனாக இருக்கிறானோ
அவன் வாளால் கொல்லப்பட்டுப் போவான்.
இதன் பொருள், “தேவனுடைய பரிசுத்தவான்கள் பொறுமையும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும்” என்பதாகும்.
பூமியிலிருந்து வெளிவரும் மிருகம்
11 பிறகு வேறொரு மிருகம் பூமிக்குள் இருந்து வெளிவருவதைப் பார்த்தேன். அதற்கு ஆட்டுக்குட்டியைப்போன்று இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் அது இராட்சச பாம்பினைப் போன்று பேசியது. 12 இது முதல் மிருகத்தின் முன்னே நிற்கிறது. முதல் மிருகம் பயன்படுத்திய அதே சக்தியை இதுவும் பயன்படுத்துகிறது. அது பூமியில் வாழ்கிற மக்கள் அனைவரையும் அந்த முதல் மிருகத்தை வழிபடுமாறு தன் ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அந்த முதல் மிருகமே குணப்படுத்தப்பட்ட மரணக் காயத்தைக் கொண்டிருந்தது. 13 இந்த இரண்டாம் மிருகம் மாபெரும் அற்புதங்களைச் செய்கிறது. மக்கள் கவனித்துக்கொண்டிருக்கும்போதே வானத்திலிருந்து பூமிக்கு நெருப்பை வரச் செய்கிறது.
14 அந்த முதல் மிருகத்தின் முன்னிலையில் தனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற ஆற்றலினால் அற்புதங்களை நிகழ்த்தி, பூமியில் வசிக்கிற மக்களை இம்மிருகம் வஞ்சிக்கிறது. முதல் மிருகத்தை கௌரவிக்க ஒரு விக்கிரகத்தைச் செய்யுமாறு இரண்டாவது மிருகம் மக்களுக்கு ஆணையிட்டது. வாளால் காயம் அடைந்தாலும் கூட இறக்காத மிருகம் இதுவாகும். 15 முதல் மிருகத்தின் உருவச் சிலைக்கு உயிர் கொடுக்கிற வல்லமை இரண்டாவது மிருகத்துக்குக் கொடுக்கப்பட்டது. பிறகு அந்த உருவச் சிலையால் பேசவும், அதை வணங்காதவரைக் கொல்லும்படி மக்கள் அனைவருக்கும் ஆணையிடவும் முடிந்தது. 16 இரண்டாவது மிருகமும் மக்கள் அனைவரையும் அவர்கள் பெரியவர்களாக இருந்தாலும் சரி, சிறியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, ஏழைகளாக இருந்தாலும் சரி, அவர்கள் சுதந்தரமானவர்களாக இருந்தாலும் சரி, அடிமைகளாக இருந்தாலும் சரி அவர்களின் வலக்கையிலாவது நெற்றியிலாவது முத்திரை பெறும்படியும் வலியுறுத்தியது. 17 எந்த ஒரு மனிதனுக்கும் அந்த அடையாளக்குறி இல்லாமல் விற்கவோ, வாங்கவோ முடியவில்லை. அந்த அடையாளம் என்பது மிருகத்தின் பெயர் அல்லது பெயரின் எண்ணாகும்.
18 புரிந்துகொள்ளக் கூடிய அறிவுள்ளவன் எவனும் அம்மிருகத்தின் எண்ணைப் புரிந்துகொள்ள முடியும். அந்த எண் ஒரு மனிதனின் எண்ணாகும். அவனது எண் 666 ஆகும்.
2008 by World Bible Translation Center