Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 11

கர்த்தரை நினை

11 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது

நீங்கள் அன்பு கொள்ளவேண்டும். நீங்கள் பின்பற்றுவதற்காக தேவன் உங்களுக்குக் கூறியவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் நீங்கள் அவரது சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த பெருஞ் செயல்களை நினைத்துப் பாருங்கள். அந்த மகா காரியங்களைக் கண்டு, அவற்றைக் கடந்து வந்தவர்கள் நீங்களே, உங்கள் குழந்தைகளல்ல. உங்களுக்குத்தான் தெரியும், கர்த்தருடைய மகத்துவத்தைப் பார்த்தவர்கள் நீங்கள், கர்த்தருடைய வலிமையைக் கண்ணாரப் பார்த்துள்ளீர்கள். கர்த்தருடைய ஆற்றல் நிறைந்த செயல்களைப் பார்த்தவர்கள் நீங்கள். கர்த்தருடைய அற்புதங்களைப் பார்த்தவர்கள் நீங்கள் தான், உங்கள் பிள்ளைகள் அல்ல. எகிப்தின் இராஜாவாகிய பார்வோனுக்கும் அவனது நாடு முழுவதிற்கும் கர்த்தர் செய்த அடையாளங்களையும், செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். எகிப்தின் படையும், அவர்களது குதிரைகளும், இரதங்களும் போரில் உங்களைத் தொடர்ந்து வரும்போது, கர்த்தர் அவர்களைச் செங்கடலின் தண்ணீரில் மூடியதை உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்கள்தான் பார்த்தீர்கள். அவர்களை முழுவதுமாக அழித்ததை நீங்கள் பார்த்தீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இன்று இவ்விடத்திற்கு வரும் வரைக்கும், அன்றும் பாலைவனத்தில் உங்களுக்காகச் செய்த எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நீங்கள்தான். உங்கள் பிள்ளைகள் அல்ல. ரூபன் குடும்பத்தைச் சார்ந்த எலியாப் என்பவனின் மகன்களான தாத்தான், அபிராம் இருவருக்கும் கர்த்தர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள், அவ்விருவரின் குடும்பங்களையும், கூடாரங்களையும் அவர்களது விலங்குகள், வேலையாட்கள் எல்லாவற்றையும் பூமி விழுங்கியது. கர்த்தர் செய்த இந்தப் பெரிய செயல்களை எல்லாம் உங்களுடைய பிள்ளைகளல்ல, நீங்களே கண்டீர்கள்.

“ஆகவே நான் இன்று உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பின் நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆவீர்கள். அதனால், யோர்தான் ஆற்றினைக் கடந்து, நீங்கள் நுழையத் தயாராகவுள்ள இந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்வீர்கள். பின் நீங்கள் அந்தத் தேசத்தில் நீண்ட வாழ்க்கை வாழலாம். இந்த தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்துள்ளார். இந்த தேசம் பாலும் தேனும் ஓடக் கூடிய செழிப்பும், எல்லா வளங்களும் நிறைந்த நாடாகவும் இருக்கும். 10 நீங்கள் சுதந்திரமாக வசிக்கப்போகும் இந்த தேசம் நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போல் இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்தீர்கள். தண்ணீர்ப் பாய்ச்சும்படி உங்கள் கால்களால் மிதித்து, வாய்க்காலில் இருந்து உங்கள் தோட்டங்களுக்கு நீங்கள் தண்ணீர்ப் பாய்ச்சினதுபோல உங்கள் வயல்களுக்கும் தண்ணீர் இறைத்து வந்தீர்கள். 11 ஆனால், இப்போது வசிக்கப்போகின்ற இந்த நிலம் அப்படிப்பட்டது அல்ல. இஸ்ரவேலில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. அந்த நிலம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம். 12 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிக்கப்போகும் நிலத்தைக் காத்து வருகிறார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ஆண்டு முழுவதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கவனித்து வருகிறார்.

13 “கர்த்தர், ‘நான் இன்று உங்களுக்குத் தரும் கட்டளைகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு அடி பணிந்து, முழு மனதோடு ஆத்ம திருப்தியுடன் சேவை செய்யவேண்டும். நீங்கள் அப்படிச் செய்தீர்களென்றால், 14 உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையை ஏற்ற பருவத்தில் பெய்யச் செய்வேன். நீங்கள் உங்கள் தானியங்களைச் சேர்க்கவும், எண்ணெய் வித்துக்களைப் பெருக்கவும், புதிய திராட்சைரசத்தைப் பெறவும், அதற்கான காலத்தில் உங்கள் தேசத்தில் இலையுதிர் காலத்தில் முன்மாரியையும் வசந்த காலத்தில் பின்மாரியையும் நான் அனுப்புவேன். 15 உங்கள் கால் நடைகளுக்குத் தேவையான புல்வெளிகளை செழிப்படையச் செய்வேன். உங்களுக்கு உண்ணும்படி எராளமான ஆகாரம் இருக்கும்’ என்று கூறுகிறார்.

16 “ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் இருதயம் சந்தேகப்பட்டு விலகாதபடி இருங்கள். உங்களின் வழியிலிருந்து விலகி அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்யாதீர்கள். 17 அப்படிச் செய்தீர்களானால், பின் கர்த்தர் உங்கள் மீது கடுங்கோபம் கொள்வார். மழை பெய்யாது, உங்கள் நிலம் எவ்வித விளைச்சலையும் தராதபடி வானத்தை அடைத்துவிடுவார். அதனால் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த நல்ல தேசத்திலேயே நீங்கள் விரைவில் மரித்து போவீர்கள்.

18 “நான் இன்று உங்களுக்குத் தருகிற இந்தக் கட்டளைகளை எப்போதும் உங்கள் உள்ளங்களில் வையுங்கள். அவற்றை எழுதுங்கள், கட்டுங்கள், அணிந்துகொண்டு, அல்லது உங்கள் கண்களில் படும்படி எப்போதும் உங்களின் ஞாபகத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும். 19 இந்தச் சட்டங்களை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும்போதும், வீதிகளில் நடக்கும்போது, தூங்குவதற்கு முன்பும், எழுந்தப் பின்பும், எப்போதும் இவற்றைப் பற்றியேப் பேச வேண்டும். 20 உங்கள் வீட்டுக் கதவுகள் மீதும், வாசல்களிலும் இந்தக் கட்டளைகளை எழுதி வையுங்கள். 21 அப்போது உங்கள் முற்பிதாக்களிடம் கர்த்தர் கொடுத்த வாக்கின்படி உங்களுக்குச் சுதந்திரமாக வாழக் கொடுத்த நிலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழலாம். இந்த பூமியின்மேல் வானம் உள்ளளவும் நீங்கள் நீண்டகாலம் வாழலாம்.

22 “நான் உங்களிடம் கூறியவற்றைப் பின்பற்றுவதிலும், ஒவ்வொரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்துங்கள். அவரது எல்லா வழிகளையும் பின்பற்றுங்கள். அவருக்கு உண்மையானவர்களாய் இருங்கள். 23 பின் உங்கள் தேசத்திற்குள் செல்லும்போது கர்த்தர் உங்களுக்கு எதிரான மற்ற இனத்தவர்களை வெளியே துரத்திவிடுவார். உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்தவர்களிடமிருந்து அந்த நிலத்தை நீங்கள் கைப்பற்றிவிடலாம். 24 உங்கள் பாதங்கள் படும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்களின் நிலமானது தெற்கே பாலைவனம் முதல் வடக்கே லீபனோன் வரை விரிந்து செல்லும். கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி மத்தியதரைக் கடல் வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லையாக இருக்கும். 25 உங்களை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த நிலத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் அந்த ஜனங்களைப் பயமடையச் செய்வார். அதைத்தான் கர்த்தர் உங்களுக்கு ஏற்கெனவே வாக்களித்திருக்கிறார்.

இஸ்ரவேலர் தெரிந்துகொள்ள வேண்டிய ஆசீர்வாதங்கள் அல்லது சாபங்கள்

26 “நீங்கள் தெரிந்துகொள்ள நான் இன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறேன். இதோ! ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். இவற்றில் நீங்கள் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். 27 நான் இன்று உங்களுக்குக் கூறியிருக்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தர் தந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து, அவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஆசீர்வாதம் பெறுவீர்கள். 28 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும், பின்பற்றுவதையும் மறுத்தால் சாபத்தைப் பெறுவீர்கள். ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டபடி வாழ்வதை நிறுத்திவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அந்நிய பொய்த் தெய்வங்ளைப் பின்பற்றாதிருங்கள். கர்த்தரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.

29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும். 30 இந்த மலைகள் யோர்தான் நதியின் மறுபக்கத்தில் கானானியர் குடியிருக்கின்ற நாட்டில் உள்ளன. இந்த மலைகள் மேற்கு நோக்கி ஓக் மரங்களுக்கு அதிக தொலைவில் இல்லாமல் கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமவெளிக்கு அருகே இருக்கின்றன. 31 நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற நிலத்தைச் சென்றடைவீர்கள். அங்கு சுதந்திரமாகக் குடியிருப்பீர்கள். இந்த நிலத்தில் நீங்கள் வாழும்போது, 32 நான் இன்று உங்களுக்குத் தருகின்ற சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து எச்சரிக்கையுடன் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.

சங்கீதம் 95-96

95 வாருங்கள், நாம் கர்த்தரைத் துதிப்போம்!
    நம்மைக் காப்பாற்றுகின்ற பாறையை நோக்கி துதிகளை உரக்கக் கூறுவோம்.
கர்த்தருக்கு நன்றி கூறும் பாடல்களைப் பாடுவோம்.
    அவருக்கு மகிழ்ச்சியான துதி பாடல்களைப் பாடுவோம்.
ஏனெனில் கர்த்தர் மேன்மையான தேவன்!
    பிற “தெய்வங்களை” எல்லாம் ஆளுகின்ற பேரரசர் ஆவார்.
ஆழமான குகைகளும் உயரமான பர்வதங்களும் கர்த்தருக்கு உரியவை.
சமுத்திரம் அவருடையது. அவரே அதைப் படைத்தார்.
    தேவன் உலர்ந்த நிலத்தைத் தமது சொந்த கைகளால் உண்டாக்கினார்.
வாருங்கள், நாம் தாழ்ந்து குனிந்து அவரைத் தொழுதுகொள்வோம்.
    நம்மை உண்டாக்கின தேவனை நாம் துதிப்போம்.
அவரே நமது தேவன்!
    நாம் அவரது ஜனங்கள்.
    அவரது சத்தத்திற்கு நாம் செவிகொடுத்தால் இன்று நாம் அவரது ஆடுகளாயிருப்போம்.
    தேவன்: “பாலைவனத்தில் மேரிபாவில் செய்தது போலவும், மாசாவில் செய்தது போலவும் அடம்பிடிக்காதீர்கள்” என்று கூறினார்.
உங்கள் முற்பிதாக்கள் என்னை சோதித்தார்கள்.
    அவர்கள் என்னை சோதித்தபோது நான் செய்யக்கூடியவற்றைக் கண்டார்கள்.
10 நாற்பது ஆண்டுகள் அந்த ஜனங்களிடம் நான் பொறுமையாக இருந்தேன்.
    அவர்கள் உண்மையில்லாதவர்கள் என நான் அறிவேன்.
    அந்த ஜனங்கள் என் போதனைகளைப் பின்பற்ற மறுத்தார்கள்.
11 எனவே நான் கோபமடைந்தேன்,
    எனது இளைப்பாறுதலின் தேசத்தில் அவர்கள் நுழைவதில்லை என ஆணையிட்டேன்.

96 கர்த்தர் செய்த புதுகாரியங்களைப்பற்றி ஒரு புதுப்பாடலைப் பாடுங்கள்!
    உலகம் முழுவதும் கர்த்தரை நோக்கிப் பாடட்டும்.
கர்த்தரை நோக்கிப் பாடுங்கள்!
    அவரது நாமத்தை ஸ்தோத்தரியுங்கள்!
    ஒவ்வொரு நாளும் அவர் நம்மை பாதுகாப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்!
தேவன் உண்மையிலேயே அற்புதமானவர் என்பதை ஜனங்களுக்குக் கூறுங்கள்.
    தேவன் செய்கிற வியப்பிற்குரிய காரியங்களை எங்குமுள்ள ஜனங்களுக்குச் சொல்லுங்கள்.
கர்த்தர் மேன்மையானவர், துதிகளுக்குரியவர்.
    வேறெந்த “தெய்வங்களைக்” காட்டிலும் அவர் அஞ்சத்தக்கவர்.
பிற தேசங்களின் “தெய்வங்கள்” எல்லாரும் வெறும் சிலைகளே.
    ஆனால் கர்த்தரோ வானங்களை உண்டாகினவர்.
அவருக்கு முன்னே அழகிய மகிமை ஒளி வீசும்.
    தேவனுடைய பரிசுத்த ஆலயத்தில் பெலனும் அழகும் விளங்கும்.
குடும்பங்களும் தேசங்களும்
    கர்த்தருக்கு மகிமையும், துதியும் நிரம்பிய பாடல்களைப் பாடுவார்கள்.
கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்.
    உங்கள் காணிக்கைகளோடு ஆலயத்திற்குச் செல்லுங்கள்.
    கர்த்தருடைய அழகான ஆலயத்தில் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
கர்த்தரைப் பூமியிலுள்ள ஒவ்வொருவரும் தொழுதுகொள்ளுங்கள்.
10     கர்த்தரே அரசரென்று தேசங்களுக்கெல்லாம் அறிவியுங்கள்!
அதனால் உலகம் அழிக்கப்படுவதில்லை.
    கர்த்தர் ஜனங்களை நியாயமாக அரசாளுவார்.
11 விண்ணுலகங்களே!
    மகிழ்ச்சிகொள்ளுங்கள்.
பூமியே! களிகூரு.
    கடலும் அதிலுள்ளவையும் களிப்பால் குரல் எழுப்பட்டும்!
12 வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்!
    வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
13 கர்த்தர் வருகிறார், ஆதலால் மகிழ்ச்சியடையுங்கள்.
    கர்த்தர் உலகை ஆளுகை செய்ய வந்துகொண்டிருக்கிறார்.
நீதியோடும் நியாயத்தோடும்
    அவர் உலகை ஆளுகை செய்வார்.

ஏசாயா 39

பாபிலோனிலிருந்து தூதுவர்கள்

39 அந்த நேரத்தில், பலாதானின் மகனான மெரோதாக் பலாதான் பாபிலோனின் அரசனாக இருந்தான். எசேக்கியாவிற்கு மெரோதாக் கடிதங்களையும், அன்பளிப்புகளையும் அனுப்பினான். எசேக்கியா நோயுற்றிருந்து குணம் பெற்றதை மெரோதாக் கேள்விப்பட்டே அன்பளிப்புகளை அனுப்பினான். இந்த அன்பளிப்புகள் எசேக்கியாவை மிகவும் மகிழ்ச்சியடைய வைத்தது. எனவே, எசேக்கியா தனது பொக்கிஷ சாலையிலுள்ள விலையுயர்ந்தவற்றை மெரோதாக்கின் ஆட்கள் பார்வையிட அனுமதித்தான். அந்த ஆட்களிடம் எசேக்கியா தனது செல்வங்களான வெள்ளி, தங்கம், எண்ணெய்வளம், விலைமதிப்புள்ள வாசனைப் பொருட்கள் என அனைத்தையும் காட்டினான். பிறகு அவன் போருக்குப் பயன்படுத்தும் வாள்கள் மற்றும் கேடயங்களையும் காட்டினான். தான் பாதுகாத்து வைத்திருந்த அனைத்தையும் அவன் அவர்களுக்குக் காட்டினான். அவன் தனது வீட்டிலும், தனது நாட்டிலும் உள்ள எல்லாவற்றையும் அவர்களுக்குக் காட்டினான்.

தீர்க்கதரிசியான ஏசாயா, அரசனான எசேக்கியாவிடம் சென்று, “இந்த ஆட்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்?” என்று கேட்டான்.

எசேக்கியா, “வெகு தொலைவிலுள்ள நாட்டிலிருந்து இவர்கள் வந்தார்கள். இவர்கள் பாபிலோனிலிருந்து வந்தார்கள்” என்று கூறினான்.

எனவே ஏசாயா அவனிடம் கேட்டான், “உனது வீட்டில் இவர்கள் என்ன பார்த்தார்கள்?” என்று கேட்டான்.

எசேக்கியா, “இவர்கள் எனது அரண்மனையில் உள்ள எல்லாவற்றையும் பார்த்தார்கள். நான் எனது செல்வம் முழுவதையும் காட்டினேன்” என்று கூறினான்.

ஏசாயா எசேக்கியாவிடம், “சர்வ வல்லமையுள்ள கர்த்தரிடமிருந்து வரும் வார்த்தைகளைக் கவனி. எதிர்காலத்தில், உன் அரண்மனையிலுள்ள அனைத்தும், இன்றுவரை உன் முற்பிதாக்கள் சேகரித்த உன்னிடமுள்ள அனைத்தும் பாபிலோனுக்கு எடுத்துச் செல்லப்படும். எல்லா செல்வமும் வெளியே எடுக்கப்படும். எதுவும் விடுபடாது! சர்வ வல்லமையுள்ள கர்த்தர் இதனைக் கூறினார். பாபிலோனின் அரசன் உனது சொந்த மகன்களை எடுத்துச் செல்வான்! பாபிலோன் அரசனின் அரண்மனையில் உனது மகன்கள் வேலைக்காரர்களாக இருப்பார்கள்” என்றான்.

எசேக்கியா ஏசாயாவிடம், “கர்த்தரிடமிருந்து வந்த செய்தி நன்றாக உள்ளது” என்று கூறினான். (எசேக்கியா இதனைச் சொன்னான். ஏனென்றால், அவன், “நான் அரசனாக இருக்கும்போது தொல்லைகள் இல்லாமல் சமாதானம் இருக்கும்” என்று எண்ணினான்).

வெளி 9

ஐந்தாம் எக்காளம் முதலாவது ஆபத்தை ஆரம்பித்து வைக்கிறது

ஐந்தாம் தூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது ஒரு நட்சத்திரம் ஆகாயத்திலிருந்து மண்ணில் விழுந்ததைக் கண்டேன். அதற்குப் பாதாள உலகத்துக்குச் செல்லும் வழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது. அந்த நட்சத்திரம் பாதாள உலகத்தின் வழியைத் திறந்தது. பெரிய சூளையில் இருந்து புகை வருவது போன்று பாதாளத்தில் இருந்து புகை வந்தது. அப்புகையால் சூரியனும் ஆகாயமும் இருண்டது.

அப்புகையில் இருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டு பூமியின் மேல் பறந்து வந்தன. அவற்றுக்குத் தேளுக்கு ஒப்பான வல்லமை கொடுக்கப்பட்டது. பூமியில் உள்ள புல்லையோ செடி கொடிகளையோ, மரத்தையோ சேதமாக்கக்கூடாது என்று வெட்டுக்கிளிகளுக்கு ஆணை இருந்தது. தேவனுடைய முத்திரையைத் தம் நெற்றியில் தாங்காத மனிதர்களை மாத்திரம் சேதப்படுத்த அவ்வெட்டுக் கிளிகளுக்கு உத்தரவு இருந்தது. மக்களுக்கு ஐந்து மாதங்கள் தொந்தரவு தருமாறு வெட்டுக்கிளிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கு மனிதரைக் கொல்லும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை. மக்களுக்கு ஏற்பட்ட வலியானது தேளால் கொட்டப்பட்ட மக்கள் பெறும் வலிபோன்றிருந்தது. அத்தகைய நாட்களில் மக்கள் செத்துப்போவதற்குரிய வழியைத் தேடுவார்கள். ஆனால் அவர்களால் முடியாது. அவர்கள் சாக விரும்பினாலும் சாவானது அவர்களிடமிருந்து ஒளிந்துகொள்ளும்.

வெட்டுக்கிளிகள், போருக்குத் தயார் செய்யப்பட்ட குதிரைகளைப்போல இருந்தன. அவற்றின் தலைகளின் மேல் பொன்மயமான கிரீடங்கள் போன்றவை இருந்தன. அவை மனித முகங்களையும், பெண்களின் கூந்தலைப்போல நீண்ட தலை மயிரையும், சிங்கத்தினுடையதைப் போன்ற பற்களையும் கொண்டிருந்தன. அவற்றின் மார்புகள் இரும்புக் கவசங்களைப்போல் இருந்தன. அவற்றின் சிறகுகளிலிருந்து புறப்படும் ஓசையானது யுத்தகளத்தில் நுழையும் குதிரைகள் பூட்டிய ரதங்களின் இரைச்சலைப்போல இருந்தது. 10 அந்த வெட்டுக்கிளிகளுக்குத் தேள்களுக்கிருப்பதைப் போன்ற கொடுக்குகள் இருந்தன. ஐந்து மாத காலத்து வலியுண்டாகக் காரணமாக இருக்கும் சக்தி, அவற்றின் வால்களில் இருந்தது. 11 பாதாளத்தின் தூதனை அவை அரசனாகக் கொண்டிருந்தன. அவனுடைய பெயரானது எபிரேய மொழியில் அபெத்தோன் [a] என்று அழைக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் அவன் பெயர் அப்பொல்லியோன் என்று அழைக்கப்படுகிறது.

12 முதலாம் ஆபத்து கடந்துபோயிற்று. ஆனாலும் எச்சரிக்கையாயிருங்கள். இன்னும் இரண்டு ஆபத்துக்கள் வர இருக்கின்றன.

ஆறாவது எக்காள தொனி

13 ஆறாவது தேவதூதன் தன் எக்காளத்தை ஊதினான். அப்போது தேவனுக்கு முன்பாக இருந்த பொற்பீடத்தின் நான்கு கொம்புகளிலுமிருந்து ஒரு சத்தம் வருவதைக் கேட்டேன். 14 பிறகு அச்சத்தம் அந்த ஆறாம் தூதனிடம் “ஐபிராத் என்னும் நதிக்கரையில் கட்டப்பட்டிருக்கிற நான்கு தூதர்களையும் அவிழ்த்து விடு” என்று சொல்லக் கேட்டேன். 15 எனவே, அந்த ஆண்டுக்கும், அந்த மாதத்துக்கும், நாளுக்கும், மணிக்கும் ஆயத்தமாக்கப்பட்டிருந்த அந்த நான்கு தூதர்களும் விடுவிக்கப்பட்டார்கள். உலகில் உள்ள மக்களில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொல்லும்படிக்கு அவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். 16 அவர்களது படையில் குதிரைகளின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் கேள்விப்பட்டேன். அவை இருபது கோடி ஆகும்.

17 குதிரைகளையும் அதன்மேல் வீற்றிருந்தவர்களையும் நான் எனது தரிசனத்தில் கண்டேன். அவர்கள் நெருப்பைப்போல சிவந்த நிறமும், நீல நிறமும், கந்தகம் போன்ற மஞ்சள் நிறமுமான மார்புக் கவசங்களை அணிந்திருந்தனர். அக்குதிரைகளின் தலைகள் சிங்கத்தின் தலைகளைப் போன்று விளங்கின. அக்குதிரைகளின் வாயில் இருந்து நெருப்பும், புகையும், கந்தகமும் வெளி வந்தன. 18 குதிரையின் வாயில் இருந்து வெளி வந்த புகையாலும் நெருப்பாலும், கந்தகத்தாலும் உலகில் உள்ள மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொல்லப்பட்டார்கள். 19 அக்குதிரைகளின் பலமானது அவற்றின் வாயிலும் வாலிலும் இருந்தது. அவற்றின் வால்கள் பாம்புகளைப் போன்று இருந்தது. அவற்றில் மனிதரைக் கடிக்கும் தலைகளும் இருந்தன.

20 பிறகு எஞ்சிய மனிதர்கள் கைகளால் அவர்கள் செய்த விக்கிரகங்கள் பற்றி தம் மனதை மாற்றிக்கொள்ளவில்லை. பொன் வெள்ளி, செம்பு, கல், மரம் போன்றவற்றால் செய்யப்பட்ட, பார்க்கவோ, கேட்கவோ, நடக்கவோ செய்யாத பேய்களையும் விக்கிரகங்களையும் வழிபடுவதை அவர்கள் நிறுத்தவில்லை. (அவ்வுருவங்கள் பார்க்கவோ கேட்கவோ நடக்கவோ முடியாதவைகள்). 21 இம்மக்கள் தம் இதயத்தையும், வாழ்வையும் மாற்றிக்கொள்ளவில்லை. இவர்கள் மற்றவர்களைக் கொல்லும் வழக்கத்தையும் விடவில்லை. தம் தீயமந்திரங்கள், பாலியல் பாவங்கள், திருட்டு வேலைகள் போன்றவற்றையும் விடவில்லை.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center