Print Page Options
Previous Prev Day Next DayNext

M’Cheyne Bible Reading Plan

The classic M'Cheyne plan--read the Old Testament, New Testament, and Psalms or Gospels every day.
Duration: 365 days
Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)
Version
உபாகமம் 7

இஸ்ரவேலர், தேவனின் விசேஷ ஜனங்கள்

“உங்கள் விருப்பத்திற்கேற்ப சுதந்திரமாக வாழப்போகின்ற இந்த தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். உங்களுக்காக உங்களைவிடப் பெரியவர்களும், பலசாலிகளுமான ஏத்தியர், கிர்காசியர், எமோரியர், கானானியர், பெரிசியர், ஏவியர், எபூசியர் ஆகிய ஏழு நாட்டினர்களையும் உங்களுக்கு முன்பாகவே துரத்துவார். உங்கள் தேவனாகிய கர்த்தர் அந்த ஏழு நாட்டினரையும் உங்களுக்குக் கீழே கட்டுப்பட வைப்பார். அவர்களை நீங்கள் தோற்கடிப்பீர்கள். அவர்களை முழுவதுமாக நீங்கள் அழித்துவிட வேண்டும். அவர்களிடம் எவ்வித ஒப்பந்தமும் செய்யாதீர்கள். அவர்களிடம் இரக்கம் காட்டாதீர்கள். அவர்களில் எவரையும் மணந்துகொள்ளாதீர்கள். நீங்கள் மட்டுமின்றி உங்கள் மகன்களையோ மகள்களையோ அந்த ஜனங்களைச் சார்ந்தவர்களில் ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கக் கூடாது. ஏனென்றால் அந்த ஜனங்கள் உங்கள் பிள்ளைகளை என்னைப் பின்பற்றுவதிலிருந்து திசைதிருப்பி விடுவார்கள். பின்பு உங்கள் பிள்ளைகள் மற்ற பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்வார்கள். அதனால், கர்த்தர் உங்கள்மீது கடுமையாக கோபங்கொள்ள நேரிடும். அவர் உங்களை விரைவில் அழித்துவிடுவார்.

பொய்த் தெய்வங்களை அழித்துவிடுங்கள்

“நீங்கள் அந்தப் பகைவர்களுக்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், அவர்களின் பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய ஞாபகார்த்தக் கற்களை உடைத்துவிடுங்கள். அவர்களது அஷெரா கோவில் கம்பங்களை வெட்டி வீழ்த்தி, அவர்களது சிலைகளைத் தீயிலிட்டு அழித்துவிடுங்கள்! ஏனென்றால் நீங்கள் எல்லோரும் கர்த்தருடைய சொந்த ஜனங்கள். இந்தப் பூமியில் உள்ள எல்லா ஜனங்களிலிருந்தும் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களைத் தேர்ந்தெடுத்து தமக்கு விசேஷமான ஜனங்களாக ஆக்கினார். ஏன் கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்தி தேர்ந்தெடுத்தார்? மற்ற ஜனங்களைவிட நீங்கள் அதிகமானவர்கள் என்பதால் அல்ல, மற்ற எல்லா ஜனங்களையும்விட நீங்கள் மிகக் குறைவானவர்களே! ஆனால், கர்த்தர் தமது பெரிய வல்லமையினால் எகிப்திலிருந்து உங்களை மீட்டு வந்தார். அவர் உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்தார். எகிப்து நாட்டு மன்னனாகிய பார்வோனின் கட்டுப்பாட்டிலிருந்து உங்களை கர்த்தர் விடுவித்தார். ஏனென்றால் கர்த்தர் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற விரும்பினார்.

“ஆகையால், உங்கள் தேவனாகிய கர்த்தர் ஒருவரே தேவன் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் அவரிடம் முழு நம்பிக்கை கொள்ளலாம்! அவர் தமது உடன்படிக்கையிலிருந்து விலகமாட்டார். யாரெல்லாம் அவரிடம் அன்பு வைத்து, அவரது கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ அவர்களுக்கெல்லாம் தேவன் தமது அன்பையும், அருளையும் பொழிவார். உங்களிடம் மட்டுமின்றி, உங்களின் ஆயிரம் தலைமுறைகளுக்கும் அவர் தமது அன்பையும் அருளையும் தருவார். 10 ஆனால், அவரை வெறுக்கின்றவர்களை கர்த்தர் தண்டிப்பார். அவர்களை அழித்துவிடுவார். அவர்களைத் தண்டிப்பதில் சிறிதும் தயவு காட்டமாட்டார். 11 எனவே நான் இன்று கொடுக்கும் நமது தேவனுடைய கட்டளைகளையும், கற்பனைகளையும், நியாயங்களையும் நீங்கள் எச்சரிக்கையுடன் பின்பற்றவேண்டும்.

12 “உன்னோடு செய்த உடன்படிக்கையின்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்கள் மீது அன்பு செலுத்த வேண்டுமென்றால் இந்த சட்டங்களை நீ கவனமாகப் பின்பற்றி அவைகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும். இதைத் தேவன் உங்கள் முற்பிதாக்களுடன் உறுதி செய்துள்ளார். 13 தேவன் உங்கள்மீது அன்பு செலுத்தி உங்களை ஆசீர்வதிப்பார். உங்கள் தேசத்தை தேவன் வளர்ச்சியடையச் செய்வார். உங்கள் பிள்ளைகளை தேவன் ஆசீர்வதிப்பார். உங்கள் வயல்வெளிகளை வள மாக்குவார். உன் நிலத்தில் தானியங்களையும், புதிய திராட்சைரசத்தையும், எண்ணெயையும் தேவன் தந்தருளுவார். உங்கள் பசுக்களையும், கன்றுகளையும், ஆடுகளையும், ஆட்டுக்குட்டிகளையும் தேவன் ஆசீர்வதிப்பார். கொடுப்பேன் என்று உங்கள் முற்பிதாக்களுக்கு அவர் வாக்களித்த அந்த தேசத்தில் அவர் உங்களுக்கு எல்லா வகையான ஆசீர்வாதங்களையும் தந்தருளுவார்.

14 “மற்ற எல்லா ஜனங்களை விடவும் நீங்கள் தேவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். ஒவ்வொரு கணவனும் மனைவியும் குழந்தைச் செல்வம் பெறுவீர்கள். உங்கள் மாடுகளும் கன்றுகளைப் பெறும். 15 உங்களிடம் உள்ள எல்லா நோய்களையும் கர்த்தர் நீக்கிவிடுவார். உங்களுக்குத் தெரிந்துள்ள எகிப்தியர்களின் கொடிய நோய்களில் ஒன்று கூட உங்கள் மீது வந்துவிடாமல் கர்த்தர் காத்துக்கொள்வார். ஆனால் உங்கள் எதிரிகளுக்கு அவ்வித நோய்கள் பிடிக்குமாறு செய்வார். 16 உங்கள் தேவனாகிய கர்த்தருடைய உதவியோடு தோற்கடித்த எல்லா எதிரிகளையும் அழித்துவிட வேண்டும். அவர்களுக்காக வருத்தப்படாதீர்கள். அவர்களது பொய்த் தெய்வங்களை தொழுதுகொள்ளாதீர்கள். ஏனென்றால் அவை உங்களைப் பிடிக்கும் கண்ணியாகிவிடும். அவை உங்கள் வாழ்வை நாசமாக்கிவிடும்.

கர்த்தர் அவரது ஜனங்களுக்கு உதவுவதாக வாக்களிக்கிறார்

17 “‘நம்மைவிட நம் எதிரிகள் பெரியவர்கள். நாம் எப்படி அவர்களைத் துரத்திவிடுவது’ என்று உங்கள் மனதிற்குள் நீங்களே சொல்லிக்கொள்ளாதீர்கள். 18 நீங்கள் அவர்களைக் கண்டு சிறிதும் பயப்படத் தேவையில்லை. அன்று எகிப்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் பார்வோனுக்கும் எகிப்தின் அனைத்து ஜனங்களுக்கும் செய்ததை நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். 19 அவர்களுக்கு தேவன் செய்த பெரிய இடையூறுகளை நீங்கள் பார்த்தீர்கள். தேவன் செய்த அற்புதச் செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள். எகிப்திலிருந்து உங்களை மீட்க கர்த்தர் தமது பலத்த கைகளையும் ஓங்கிய புயத்தையும் பயன்படுத்தியதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். உங்கள் தேவனாகிய கர்த்தர் மீண்டும் அதே ஆற்றலைப் பயன்படுத்தி, நீங்கள் பயப்படுகின்ற அனைத்து ஜனங்களுக்கு எதிராகவும் அப்படியே செய்வார்.

20 “அவ்வாறு செய்தபின்பும், மீதியுள்ளவர்களான உங்களுக்குத் தப்பி ஒளிந்து கொள்பவர்களையும் கண்டுபிடித்து அழித்துவிடுவதற்கு உங்கள் தேவனாகிய கர்த்தர் குளவிகளை அனுப்புவார். தேவன் அவர்கள் அனைவரையும் அழித்துவிடுவார். 21 அவர்களைக் கண்டு பயப்படாதீர்கள். ஏனென்றால், உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுடன் இருக்கின்றார். அவர் வல்லமையும் பயங்கரமும் கொண்ட தேவனாவார். 22 உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்கள் தேசத்தை விட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் துரத்திவிடுவார். நீங்கள் அவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் அழித்துவிட வேண்டாம். நீங்கள் அப்படிச்செய்தால் காட்டு மிருகங்கள் உங்களைச் சுற்றி எண்ணிக்கையில் பெருகிவிடும். 23 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களின் எதிரிகளை உங்களிடம் தோற்கச் செய்வார். அவர்கள் அழியும் வரையில் அவர்களைத் திணறச் செய்வார். 24 அவர்களது இராஜாக்கள் உங்களிடம் தோற்றுப்போக கர்த்தர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் அவர்களை அழித்துவிடுவீர்கள்! உலகம் அவர்கள் வாழ்ந்ததை மறந்துவிடும். அவர்களில் ஒருவனும் உங்களைத் தடுத்து நிறுத்த முடியாது. அவர்கள் அனைவரையும் நீங்கள் அழித்துவிடுவீர்கள்.

25 “நீங்கள் அவர்களது தெய்வங்களின் சிலைகளைத் தீயிலிட்டுக் கொளுத்திவிட வேண்டும். நீங்கள் அந்தச் சிலைகளில் உள்ள வெள்ளி அல்லது தங்கத்தின் மீது சிறிதளவும் ஆசை கொள்ளாமலும், எடுத்துக்கொள்ளாமலும் இருக்க வேண்டும். அவர்களின் வெள்ளி அல்லது தங்கத்தை நீங்கள் எடுத்துக்கொண்டால் அது உங்களை சிக்க வைத்து, உங்கள் வாழ்க்கையை நாசமாக்கிவிடும். ஏனென்றால் உங்கள் தேவனாகிய கர்த்தர் அவற்றை அருவெருத்து வெறுப்பவர் ஆவார். 26 எனவே, அங்கு அருவெருக்கத்தக்க விக்கிரகங்களை நீங்கள் உங்கள் வீட்டுக்குள் கொண்டுவரக்கூடாது, நீங்களும் அவற்றைக் கண்டிப்பாக வெறுத்து ஒதுக்கவேண்டும். அவை அனைத்தையும் அழித்துவிட வேண்டும்!”

சங்கீதம் 90

புத்தகம் 4

(சங்கீதம் 90-106)

தேவனுடைய மனிதனாகிய மோசேயின் ஜெபம்

90 ஆண்டவரே, என்றென்றும் எப்போதும் நீரே எங்கள் புகலிடம்.
தேவனே, பர்வதங்கள் பிறக்கும்முன்பும், பூமியும் உலகமும் உருவாக்கப்படும் முன்பும் நீரே தேவன்.
    தேவனே, நீர் எப்போதும் இருந்தவர், நீர் எப்போதும் இருக்கும் தேவன்!

நீர் உலகில் ஜனங்களைக் கொண்டுவந்தீர்,
    நீர் அவர்களை மீண்டும் தூளாக மாற்றுகிறீர்.
ஓராயிரம் ஆண்டுகள் உமக்கு முந்திய நாளைப் போலவும்
    கடந்த இரவைப் போலவும் இருக்கும்.
நீர் எங்களைப் பெருக்கித் தள்ளுகிறீர்.
    எங்கள் வாழ்க்கை ஒரு கனவைப் போன்றது, காலையில் நாங்கள் மறைந்து போகிறோம்.
நாங்கள் புல்லைப் போன்றவர்கள்.
    காலையில் புல் வளரும், மாலையில் அது காய்ந்து, வாடிப்போகும்.
தேவனே, நீர் கோபமாயிருக்கும்போது நாங்கள் அழிக்கப்படுவோம்.
    உமது கோபம் எங்களை அச்சுறுத்துகிறது!
எங்கள் பாவங்கள் அனைத்தையும் நீர் அறிகிறீர்.
    தேவனே, எங்கள் இரகசிய பாவங்கள் ஒவ்வொன்றையும் நீர் காண்கிறீர்.
உமது கோபம் எங்கள் வாழ்க்கையை முடிவுறச் செய்யும்.
    காதில் இரகசியமாகச் சொல்லும் சொல்லைப்போன்று எங்கள் உயிர்கள் மறைந்துபோகும்.
10 நாங்கள் எழுபது ஆண்டுகள் வாழக்கூடும்.
    பலமுடையவர்களாயின் எண்பது ஆண்டுகள் வாழலாம்.
எங்கள் வாழ்க்கை கடும் உழைப்பினாலும், நோயினாலும் நிரம்பியவை.
    திடீரென, எங்கள் வாழ்க்கை முடிவுறும்!
    நாங்கள் பறந்து மறைவோம்.
11 தேவனே, உமது கோபத்தின் முழு வல்லமையையும் ஒருவரும் அறியார்.
    ஆனால் தேவனே, எங்கள் பயமும், உம்மிடம் நாங்கள் கொண்டுள்ள மதிப்பும் உமது கோபத்தைப்போன்று பெரியவை.
12 நாங்கள் உண்மையிலேயே ஞானமுடையவர்களாகும்படி
    எங்கள் வாழ்க்கை எத்தனை குறுகியது என்பதை எங்களுக்குக் கற்பியும்.
13 கர்த்தாவே, எங்களிடம் எப்போதும் திரும்பி வாரும்.
    உமது பணியாட்களிடம் இரக்கமாயிரும்.
14 ஒவ்வொரு காலையிலும் உமது அன்பால் எங்களை நிரப்பும்.
    நாங்கள் மகிழ்ந்து எங்கள் வாழ்க்கையில் களிகூரச் செய்யும்.
15 எங்கள் வாழ்க்கையில் மிகுந்த துன்பத்தையும் குழப்பங்களையும் தந்தீர்.
    இப்போது எங்களை சந்தோஷப்படுத்தும்.
16 நீர் செய்யும் அற்புதச் செய்லகளை உமது ஊழியர்கள் காணச்செய்யும்
    உம்முடைய மகிமையை அவர்களின் பிள்ளைகள் காணச்செய்யும்.
17 எங்கள் தேவனாகிய ஆண்டவரே, எங்களிடம் தயவாயிரும்.
    நாங்கள் செய்யும் ஒவ்வொன்றையும் செம்மைப்படுத்தும்.
    தேவனே நாங்கள் செய்யும் எல்லாவற்றிலும் நன்மையை வழங்குவீராக.

ஏசாயா 35

தேவன் தம் ஜனங்களை ஆறுதல்படுத்துவார்

35 வறண்ட வனாந்திரம் மிகுந்த மகிழ்ச்சியைப் பெறும். வனாந்திரம் சந்தோஷம் அடைந்து பூவைப்போல வளரும்.

வனாந்திரம் முழுவதும் பூக்களால் நிறைந்து அதன் மகிழ்ச்சியைக் காட்டத் தொடங்கும். அது பார்ப்பதற்கு வனாந்திரம் மகிழ்ச்சியுடன் ஆடிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றும். அந்த வனாந்திரமானது, லீபனோன் காடுகளைப்போலவும், கர்மேல் மலையைப்போலவும், சாரோன் பள்ளத்தாக்குபோலவும் அழகாக மாறும். இது நிகழும் ஏனென்றால், ஜனங்களனைவரும் கர்த்தருடைய மகிமையைக் காண்பார்கள். நம் தேவனுடைய மேன்மையை ஜனங்கள் காண்பார்கள்.

பலவீனமான கைகளை மீண்டும் பலப்படுத்துங்கள். பலவீனமான முழங்கால்களை பலப்படுத்துங்கள். ஜனங்கள் அஞ்சி குழம்பினார்கள். அந்த ஜனங்களிடம் கூறுங்கள், “பலமாக இருங்கள் அஞ்சவேண்டாம்!” பாருங்கள், உங்கள் தேவன் வருவார். உங்கள் பகைவர்களைத் தண்டிப்பார். அவர் வருவார். உங்களுக்கு விருதினைத் தருவார். கர்த்தர் உங்களைக் காப்பாற்றுவார். குருடர்களின் கண்கள் திறக்கப்படும். செவிடர்களின் காதுகள் திறக்கும். முடவர்கள் மானைப்போல நடனம் ஆடுவார்கள். பேச முடியாத ஜனங்கள் தங்கள் குரலைப் பயன்படுத்தி மகிழ்ச்சிகரமான பாடல்களைப் பாடுவார்கள். வனாந்தரத்தில் நீரூற்று கிளம்பிப் பாயும்போது இது நிகழும். வறண்ட நிலங்களில் நீரூற்றுகள் பாயும். இப்பொழுது ஜனங்கள் கானல் தண்ணீரைப் பார்க்கின்றனர். இது தண்ணீரைப்போல தோன்றும். ஆனால் அந்த நேரத்தில் அங்கே உண்மையான தண்ணீர் குளங்களும் இருக்கும். வறண்ட நிலத்தில் கிணறுகள் இருக்கும். தண்ணீரானது பூமியிலிருந்து பாயும். ஒரு காலத்தில் காட்டு மிருகங்கள் இருந்த இடத்தில் உயரமான நீர்த்தாவரங்கள் வளரும்.

அந்தக் காலத்திலே, அங்கே ஒரு சாலை இருக்கும். இந்த நெடுஞ்சாலை “பரிசுத்தமான சாலை” என்று அழைக்கப்படும். தீயவர்கள் அச்சாலையில் நடக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். தேவனைப் பின்பற்றாத எவரும் அச்சாலையில் போகமாட்டார்கள்.

அந்தச் சாலையின் எவ்வித ஆபத்தும் இருக்காது. ஜனங்களைக் கொல்லுகின்ற சிங்கங்கள் அந்தச் சாலையில் இருக்காது. அந்தச் சாலையில் ஆபத்தைத் தரும் மிருகங்கள் எதுவும் இராது. அந்தச் சாலை தேவனால் காப்பாற்றப்பட்டவர்களுக்கே உரியது.

10 தேவன் அவரது ஜனங்களை விடுதலை செய்வார். அந்த ஜனங்கள் அவரிடம் திரும்பி வருவார்கள். இந்த ஜனங்கள் சீயோனுக்குள் வரும்போது அவர்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். என்றென்றும் ஜனங்கள் மகிழ்ச்சியோடு இருப்பார்கள். அவர்களின் மகிழ்ச்சியானது அவர்களின் தலையில் கிரீடம்போன்று இருக்கும். மகிழ்ச்சியும் சந்தோஷமும் அவர்களை நிரப்பும். துயரமும், துக்கமும் வெகுதூரம் விலகிப்போகும்.

வெளி 5

சிம்மாசனத்தின்மேல் உட்கார்ந்திருப்பவரின் வலதுகைப் பக்கத்தில் எழுதப்பட்ட ஒரு தோல் சுருளைக் கண்டேன். அதில் இருபக்கமும் எழுதப்பட்டிருந்தது. அது மூடி வைக்கப்பட்டு ஏழு முத்திரைகளும் இடப்பட்டிருந்தன. ஒரு சக்தி வாய்ந்த தேவதூதனையும் நான் கண்டேன். அவன் உரத்த குரலில் அழைத்து “இம்முத்திரைகளை உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்துவிடுகிற தகுதி உள்ளவன் யார்?” என்று கேட்டான். ஆனால் பரலோகத்திலோ, பூமியிலோ, பூமிக்கு அடியிலோ இருக்கிற எவரும் இதுவரை அம்முத்திரைகளை உடைத்து திறந்து உள்ளே பார்க்க இயலவில்லை. எவரும் அந்தத் தோல் சுருளைத் திறந்து உள்ளே இருப்பதைப் பார்க்காததால் நான் மிகவும் அழுதேன். ஆனால் முதியவர்களுள் ஒருவர் என்னிடம், “அழாதே! யூதர் குலத்தில் பிறந்த சிங்கமான இயேசு வெற்றி பெற்றார். அவர் தாவீதின் வழி வந்தவர். அவர் ஏழு முத்திரைகளையும் உடைத்து இந்தத் தோல் சுருளைத் திறந்து பார்க்கும் ஆற்றல் உள்ளவர்.”

பிறகு ஒரு ஆட்டுக்குட்டி சிம்மாசனத்தின் மத்தியில் நிற்பதைக் கண்டேன். அதனைச் சுற்றி நான்கு ஜீவன்களும் இருந்தன. மூப்பர்களும் அதனைச் சுற்றி இருந்தனர். அந்த ஆட்டுக்குட்டி கொல்லப்பட்டது போல தோன்றியது. அதற்கு ஏழு கொம்புகளும் ஏழு கண்களும் இருந்தன. அவை தேவனுடைய ஏழு ஆவிகளாகும். அவை உலகமெங்கும் அனுப்பப்பட்டவை. அந்த ஆட்டுக்குட்டி தேவனுடைய வலது கையிலிருந்த தோல் சுருளை எடுத்தது. உடனே உயிர் வாழும் ஜீவன்களும் இருபத்து நான்கு மூப்பர்களும் அந்த ஆட்டுக் குட்டியைப் பணிந்து வணங்கினர். ஒவ்வொருவரிடமும் ஒரு இசைக்கருவி இருந்தது. அதோடு தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் அவர்கள் பிடித்திருந்தனர். அத்தூபவர்க்கங்கள் நிறைந்த பொற்கலசங்கள் தேவனுடைய பரிசுத்தமான மக்களின் பிரார்த்தனைகளைக் குறிக்கின்றன. அவர்கள் அந்த ஆட்டுக்குட்டிக்காகப் புதிய பாடலைப் பாடினர்.

“தோல் சுருளை எடுக்க நீரே தகுதியுள்ளவர்.
    அதன் முத்திரைகளையும் நீரே உடைக்கத்தக்கவர்.
ஏனென்றால் நீர் கொல்லப்பட்டவர்
    உம் குருதியால் தேவனுக்காக மக்களை மீட்டுக்கொண்டவர்.
    அவர்கள் பல்வேறு இனத்தை, மொழியை, நாட்டை, குழுவைச் சேர்ந்தவர்கள்.
10 நீர் நம் தேவனுக்காக ஒரு இராஜ்யத்தையும், ஆசாரியர்களையும் உருவாக்கினீர்.
    அவர்கள் இந்த உலகத்தை ஆளுவார்கள்.”

11 பிறகு நான் பல தூதர்களைப் பார்த்தேன். அவர்களது குரலைக் கேட்டேன். அத் தூதர்கள் சிம்மாசனத்தைச் சூழ்ந்து இருந்தனர். அவர்கள் ஜீவன்களையும், முதியவர்களையும் சூழ்ந்து இருந்தனர். அவர்களின் எண்ணிக்கை ஆயிரம் ஆயிரமாகவும் பத்தாயிரம் பத்தாயிரமாகவும் இருந்தது. 12 அந்தத் தூதர்கள் உரத்த குரலில் கீழ்க்கண்டவாறு பாடினார்கள்.

“கொல்லப்பட்ட இந்த ஆட்டுக்குட்டியானவரே வல்லமையை, செல்வத்தை, ஞானத்தை, பலத்தை, புகழை, மகிமையை,
    பாராட்டுகளைப் பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்.”

13 பிறகு பரலோகத்தில் உள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும், பூமியிலும் கடலிலும் பூமிக்கு அடியிலுள்ள உலகிலுமுள்ள அத்தனை உயிருள்ள ஜீவன்களும் கீழ்க்கண்டவாறு சொல்வதைக் கேட்டேன்.

“சிம்மாசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கும் ஆட்டுக்குட்டியானவருக்கும் பாராட்டுகளும்,
    கனமும், புகழும், அதிகாரமும் சதாகலங்களிலும் உண்டாகட்டும்.”

14 இதைக் கேட்டு அந்த நான்கு உயிருள்ள ஜீவன்களும் “ஆமென்” என்று சொல்லின. மூப்பர்களும் பணிந்து வணங்கினர்.

Tamil Bible: Easy-to-Read Version (ERV-TA)

2008 by World Bible Translation Center